வியாழன், 12 மே, 2016

சொல்லப் படாத, ஆனால் சொல்லியிருக்க வேண்டிய தேர்தல் அறிக்கைகள்!



          இப்படியும் இருக்கலாம் தேர்தல் அறிக்கைகள்.  ஆனால் இருப்பதில்லை.  அவர்கள் வருடாந்திரமாகச் செய்யும் மறைமுக வேலைகளின் அடிப்படையிலேயே அவர்கள் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கிறார்கள்.  அவர்களே அவர்களின்  அறிக்கைதான் சூப்பர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

          நண்பர் 'வளரும் கவிதைகள்' முத்துநிலவன் அவர் தளத்தில் வெளியிட்ட தேர்தல் பதிவு ஒன்றில் தொடர்பதிவாக பதிவிட எங்களையும் அழைத்திருந்தார்.  அவர் சொல்லிய தலைப்புகளில் நாங்கள் பதிவிடவில்லை என்றாலும், அரசியல் / தேர்தல் சம்பந்தப்பட்ட இந்தப் பதிவை அவர் வேண்டுகோளின்படி என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

          ஆண்டாண்டு காலமாக வரும் வழக்கங்கள் மாற்றப்படவேண்டும்.  எங்களின் விருப்பமும், யோசனைகளும் கீழே... 

          இவை  ஷியாம் சுந்தர் ரகுபதி,  சுஜாதா சத்யநாராயணன், முனைவர் சபிதா ராமகிருஷ்ணன், மூத்த குடிமக்கள் ரகுபதி, யெக்னராமன், சுப்பிரமணியம், தொழிலதிபர் பானு முருகன் உள்ளிட்ட உறவுகளிடம் நட்புகளிடமும் கலந்துரையாடித் தயார் செய்யப் பட்டது.

           இதைப் படிக்கும் நண்பர்கள் தங்கள் யோசனைகளையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.  சொன்னதையே திரும்பச் சொல்லாமல் பார்த்துக் கொள்ளவும். 


================================================================


Image result for karuvelam tree images

*          நாட்டின் நிலத்தடி நீர்வளத்தைக் கெடுத்து, மற்ற பயிர்களையும் வளரவிடாமல் செய்வதோடு, காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிக் கொண்டு மனிதனுக்கு மிகப் பெரிய கேடு விளைவிக்கும் வேலிகாத்தான் (சரிதானே கீதாக்கா?)  மரங்களை அதை முற்றிலும் ஒழிக்கும் விதமாக வேரோடு பிடுங்கி ஏறிய முதல் வேலையாக ஆவன செய்வோம்.

*          ஆறுகளின் மணல்களைத் திருடுவோருக்கு மரண தண்டனை.  ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவோம்.  தூர் வாருதல் உள்ளிட்ட உழவாரப்பணிகள் வருடா வருடம் வெளிப்படையாக நடைபெறும்.  அனைவருக்கும் தேவையான அளவு தண்ணீர், குடிநீர் கிடைக்க உறுதி செய்யப்படும்.

Image result for cutting tree images

*         மரம் வெட்டுபவர்கள் - யார் எங்கு வெட்டினாலும் - அனுமதி வாங்கியே வெட்ட வேண்டும்.  தகுந்த காரணங்கள் இல்லாவிட்டால் அனுமதி மறுக்கப்படும். ஒரு மரம் வெட்டப் பட்டால் பதிலாக இரண்டு மரங்கள் நடப்பட்டிருக்க வேண்டும்.

*         அரசு விளம்பரங்கள் அனைத்துப் பத்திரிகைகளுக்கும் ஒரே மாதிரி வழங்கப் படும்.  எங்கும், எதிலும் பாரபட்சம் காட்டப்படாது.  அதிகம் காசு கொடுத்துப் பார்க்கப்படும் கேபிள் / டிஷ் டிவிக்களில் விளம்பரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும்!

*           அனைத்து வகையிலும் இலவசங்கள் முற்றிலுமாக நிறுத்தப் படும்.

                      Image result for engineering colleges images  Image result for engineering colleges images

*           கல்விச் சாலைகளின் கட்டணக் கொள்ளை உடனடியாக நிறுத்தப்படும்.  பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படும்.  அதன் பிறகு(ம்) அதன் தரம் பாதுகாக்கப்படும்.  சரியான ஆசிரியர்கள், ஆய்வகங்கள், உபகரணங்கள், இடங்கள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் இல்லாத பள்ளி, கல்லூரிகளின் அனுமதி ரத்து செய்யப்படும்.  ஒருமுறை ரத்து செய்யப்பட்டால் மூன்று வருடங்களுக்குப் பின்னரே அவர்கள் மறுபடி அனுமதி கோரி விண்ணப்பிக்க முடியும்.  மூன்று வருடங்களுக்கு மேல் சரியான ரிசல்ட் தரமுடியாத கல்விச் சாலைகளின் அனுமதி பறிக்கப்படும்.

                                               Image result for heavy traffic in chennai images    Image result for heavy traffic in chennai images   

*        நாட்டின் வாகனப் போக்குவரத்து கட்டுக்குள் கொண்டுவரப்படும்.  மாதத்தில் 15 நாட்கள் அரசு போக்குவரத்தில்தான் பயணிக்க வேண்டும்.  ஒரு வீட்டுக்கு ஒரு காருக்கு மேல் அனுமதி இல்லை.  அனைத்துக் கட்டிடங்களுக்கும், தெரு விளக்குகளுக்கும் கூட சூரிய ஒளி மின்சாரம் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும்.  வீட்டுக்கு வீடு சூரிய தகடு மின்சாரம்.  கூரை மீது தகடில்லை என்றால் அரசு  எடுத்துக் கொண்டு தகடு பொறுத்தும்.  கட்டணம் அவர்களிடமே வசூலிக்கப்படும்.  தேவைப்படும், சாத்தியப்படும் இடங்களில் காற்றாலை மின்சாரமும் தயாரிக்க ஆவன செய்யப்படும்.
                                              Image result for e waste in chennai images  Image result for e waste in chennai images
*         குப்பை மேலாண்மையில் தனிக் கவனம் செலுத்தப்படும்.  குறிப்பாக ஈ வேஸ்ட் எனப்படும் மின்கழிவுப் பொருட்களின் மேல் அதிக அக்கறை காட்டப்படும்.  அவரவர் குப்பையை அவரவர் வீட்டுக் காம்பவுண்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.  பசுமை உரமாக உபயோகிக்கக் கூடியவை பிற என்று எடை போட்டு பசுமைக்கு விலை பிறவற்றுக்கு சுமை கூலி.  உபயோகித்த பால் கவர் பிளாஸ்டிக் பைகளை தனியாக எடை போட்டு பிளாஸ்டிக் வரி கட்டும் கார்டில் பதிவு செய்து எடுத்துக் கொள்வோம்.  

*          ஆடம்பரமாகச் செய்யப்படும் திருமணங்களுக்கு மிகக் கடுமையான வரி விதிக்கப்படும்.

*          மதுக்கடைகள் முற்றிலும் ஒழிக்கப்படும்.  அதனால் ஏற்படும் வருமான இழப்பை வருமான வரி உள்ளிட்ட வரிகளைக் கடுமையாக வசூலிப்பதன் மூலமும் சரி செய்யப்படும்.  (வருமானந்த்தைப் பெருக்க நேர்மையாக வேறு என்ன வழி இருக்கிறது என்று வாசகர்கள் சொல்லலாம்)

*          எடுத்தவுடன் எம் எல் ஏ ஆவது, முதல்வர் ஆவது போன்ற நடைமுறைகள் நிறுத்தப்படும்.  உள்ளூர் அரசியல், பஞ்சாயத்து அரசியல் என்று படிப்படியாக முன்னேறி வரவேண்டும்.  வேட்பாளருக்கு நிச்சயம் ஒரு குறைந்தபட்சக் கல்வித் தகுதி அவசியம்.  படித்தவர்கள் ஊழல் செய்யமாட்டார்கள் என்பதல்ல...  அதற்கும் கல்வித் தகுதி அவசியம் என்பதால்.  அரசுக்காக வேலை செய்பவர்கள் எல்லோருமே அரசு ஊழியர்களாக்குவது நிறுத்தப்படும். ஏற்கெனவே அரசு ஊழியர்களாக இருப்பவர்களுக்கு அவர்களின் சிறப்பான வேலைத்திறனுக்கு ஊக்க போனஸ் வழங்கப்படும்.  இதன் மூலம் லஞ்சம் தவிர்க்கப் படலாம்.  அதே சமயம் அடிப்படை வேலைகளைக் கூட முடிக்காமல் இருப்பவர்கள் வேலையிலிருந்து நீக்கப் படுவார்கள்.
 
                                Image result for drought hit mumbai cricket ground preparation images   Image result for drought hit mumbai cricket ground preparation images

*           கிரிக்கெட் விளையாட்டுக்கான வருமானத்துக்கு கடும் வரி விதிக்கப்படும்.  வறட்சிக் காலங்களில் தண்ணீர் அதிக அளவு ஆடுகளங்களில் வீண் செய்யப்படும் என்பதால், அந்த நேரங்களில் அந்த விளையாட்டு தடை செய்யப்படும்.

*          திரைப்படத் துறையில் எந்த விஷயத்துக்கும் வரிவிலக்கு கிடையாது.  திரை அரங்குகளில் கட்டணம் வசூலிப்பது மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்படும்.  மீறும் அரங்குகளின் உரிமைகள் உடனடியாகப் பறிக்கப்படும்.

*          கட்சிகளுக்கு பெரிய நிறுவனங்களால் வழங்கப்படும் நன்கொடை 1,000 ரூபாயைத் தாண்டினாலே காசோலையாகத்தான் வழங்கப்பட வேண்டும்.  தேர்தலில் டெபாசிட் இழப்பவர்கள் அடுத்த மூன்று முறைகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

*          எல்லாக் கட்சிகளும் நிறுவனங்கள் போலக் கருதப்பட்டு ROC யில் பதிவு செய்யப்பட வேண்டும்.  இதன் மூலம் அதன் வருமானங்கள் கணக்கில் கொண்டுவரப்படும்.  வேட்பாளர்களுக்கு தேர்தலில்  போட்டியிட - பணியாற்ற குறைந்த பட்ச / அதிக பட்ச வயது வரம்பு கட்டாயம் நிர்ணயிக்கப்பட வேண்டும். 

 
*          தலைவர்களுக்கான பாதுகாப்புப் பிரச்னைகளுக்கு ஆகும் செலவு அவரவர்களின் கணக்கிலேயே வசூலிக்கப்பட வேண்டும்.  எம் எல் ஏ, எம் பி போன்றவர்களுக்கு வழங்கப்படும் இலவச எரிவாயு இணைப்புகள், தொலைபேசி அழைப்புகள், இலவசப் பயண வசதிகள் போன்றவை முற்றிலும் நிறுத்தப்படவேண்டும்.  நாடாளுமண்ட, சட்ட மன்ற உணவகங்களில் வழங்கப்படும் உணவுகள் பாமர மக்களுக்கு வழங்கப்படும் விலையிலேயே வழங்கப்படவேண்டும். 

 
*          ஒரு கட்சியிலிருந்து ஒரு உறுப்பினர் விலக நேர்ந்தால், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதோடு, அவரைத் தேர்ந்தெடுத்தது முதல் ஆன செலவுகளை - சம்பளம் உட்பட - திருப்பிக் கட்ட வேண்டும்.  அதன்பின் மூன்று வருடங்கள் அவர் அரசியலில் எதுவும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். பின்னரே புதுக் கட்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டும்.

Image result for political rallies images


*          மதங்கள், சாதிகள் பெயரில் எந்த ஒரு கட்சிப் பெயரும் இருக்கக் கூடாது.  மாணவர்கள் கல்வி கற்கும் காலங்களில் கண்டிப்பாக அரசியல் விஷயங்களில் தலையிடக் கூடாது.  மாபெரும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள் முற்றிலும் நிறுத்தப்படும்.

*          மதங்களின் பெயரால்,  சாதிகளின் பெயரால், மொழிகளின் பெயரால் உணர்ச்சி வசப்படும் வகையில் பேச மாட்டோம்.  மக்களைத் தூண்ட மாட்டோம்.

*          சுஜாதா சத்யநாராயணன் சொல்கிறார், "சுருக்கமாக சொன்னால் எங்களால் - மக்களால் - வாங்கக் கூடிய விஷயங்களான உணவு, உடைகள், அணிகலன்கள், மருத்துவப் பொருட்கள், தண்ணீர், உப்பு, சிமெண்ட், உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள்,பற்றிய கவலைகளை நாங்கள் பட்டுக் கொள்கிறோம்.  



          ஒரு ஆட்சியாளராக, அரசியல்வாதியாக நீங்கள் செய்ய வேண்டியவை மக்களுக்குத் தேவையான கட்டுமான வசதி, மின் வசதி,  தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட விவசாயம் செய்வதற்கான வசதிகள், அடிப்படை மற்றும் அனைத்துக் கல்வி வசதிகள் சகாயக் கட்டணத்தில்,  சட்டம் ஒழுங்குக் கட்டுப்பாடு மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படும் என்னும் உறுதி, மருத்துவ வசதிகள் சரியானபடி கிடைக்க,  ஆக, இவை எல்லாவற்றுக்குமே
எல்லாவற்றுக்குமே சரியான கட்டமைப்பை உருவாக்குவது உங்கள் கடமை.


          அதாவது,  நீங்கள் உங்கள் வேலையை (மட்டும்) பாருங்கள்.  நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கிறோம்"





படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து.... 

25 கருத்துகள்:

  1. அடேங்கப்பா .இதுக்கு மேல் நாங்க சொல்றதுக்கு என்னாயிருக்கு ?பதிவர்களுக்கு வருடா வருடம் விருது வேண்டுமானால் வழங்கச் சொல்லலாம் :)

    பதிலளிநீக்கு
  2. எம எல் ஏ..எம் பி முதல பொது சேவையில் இருப்பவர்கள் நோய் வாய்ப் பட்டால் அவர்கள் வீட்டருகில் இருக்கும் பொது மருத்துவ மனையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    அயல்நாட்டு மருத்துவமனை என்றால் சொந்த செலவு.

    மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் இருக்கும் பள்ளிகளில் இலவசக் கல்வி.

    பதிலளிநீக்கு
  3. எம எல் ஏ..எம் பி முதல பொது சேவையில் இருப்பவர்கள் நோய் வாய்ப் பட்டால் அவர்கள் வீட்டருகில் இருக்கும் பொது மருத்துவ மனையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    அயல்நாட்டு மருத்துவமனை என்றால் சொந்த செலவு.

    மாணவர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் இருக்கும் பள்ளிகளில் இலவசக் கல்வி.

    பதிலளிநீக்கு
  4. பிரமிப்பான திட்டங்கள் அனைத்தும் அருமை நடந்தால் நலம்தான்....

    பதிலளிநீக்கு
  5. படிக்கப் படிக்கப் பெருமூச்சுதான் வருகிறது நண்பரே
    நடக்கிற காரியமா
    தம +1

    பதிலளிநீக்கு
  6. ///வருமானந்த்தைப் பெருக்க நேர்மையாக வேறு என்ன வழி இருக்கிறது//
    வருமான வரி விற்பணை வரிகளை ஒழுங்காக எல்லோரிடமும் இருந்து வசூலித்தாலே போதும். இங்கு அமெரிக்காவில் உள்ள அனைவரும் வருமான வரிகள் ஒவ்வொருவருடமும் கண்டிப்பா சமர்பிக்கப்பட வேண்டும்

    பதிலளிநீக்கு
  7. ஆங்கிலத்தில் “Brain Storming” என்று சொல்லப்படும் இந்த முறை நல்ல பல யோசனைகள், கருத்துக்கள் வெளிவர உதவியாக இருக்கும். என் சார்பில் சில யோசனைகளை.
    1. மாணவர்கள் +2 முடித்த பின்பு, ஒரு வருடம் கட்டாய இலவச அரசுப்பணி செய்ய வேண்டும். உணவும் பாக்கெட் மணி மட்டும் கொடுக்கலாம். இவர்களை சிறு குழுக்களாகப் பிரித்து அரசு பணியாளர்களுக்கு உதவவும் அவர்களின் “Progress” குறித்த அறிக்கைகள் தயாரித்து அரசுக்கு அனுப்பி “monitoring” செய்யலாம்.
    2. அரசு ஆசிரியர்கள் சங்கம், அரசுப்பணியாளர் சங்கம் ஆகியவைகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு மூலம் அரசுப் பள்ளிகள், அலுவலகங்களின் செயல்பாடுகள், முன்னேற்றம், அலுவலர்களின் ஈடுபாடு குறித்த “Target” கள் வகுக்கப்பட்டு இந்த மாணவர் குழுக்கள் மூலமாக “monitoring” செய்யலாம். நன்றாகச் செயல்படும் ஆசிரியர்கள், அலுவலர்களை ஊக்குவிக்கவும் சரியாக செயல்படாதவர்களை தண்டிக்கவும் இது உதவும்.

    பதிலளிநீக்கு
  8. செம !அட்டகாசமான அருமையான தேர்தல் அறிக்கை ..இதெல்லாம் நடந்தா ஆஹா எவ்ளோ நல்லா இருக்கும் .அதேபோல தேர்தல் கமிஷனும் ஒரு சில நிபந்தனைகளை விதிக்கணும் ..ஒவ்வொரு கட்சியும் பொதுவிடங்களில் ஆளாளுக்கு அருவருக்கத்தக்க விதத்தில் திட்டிகொண்டிருந்தா குறைந்த பட்சம் 10 நாளுக்கு கூட்டத்தில் பேசக்கூடாது .தொடர்ந்து பேசினால் தேர்தலில் நிற்கா தடை போடணும் .சும்மா சில்லறைதனமா நடிகர்களை வைத்து பிரசாரம் செய்யகூடாது ..மைக் சத்தம் இவ்ளோ டெசிபல் தான் இருக்கணும் மருத்துவமனை அருகில் கூட்டம் போடக்கூடாது .எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அனைவரும் பதவியேற்பு விழாவிற்கு வரணும் குறிப்பா எல்லா கட்சி தலைவர்கள் ஒரே மேடையில் அருகருகில் அமரனும் ..ஒண்ணா அமர்ந்து சம பந்தி விருந்து சாப்பிடனும் முக்கியமா ஆளும் எதிர் கட்சி தலைகள் :) ..எலெக்ஷனில் நிற்பதற்கும் வயது வரம்பு வேணும் 58 வயதுக்கு மேற்பட்டோர் cm /pm போஸ்டுக்கு நிற்கவே கூடாது இவங்களும் அரசு ஊழியர்தானே :) ரெஸ்ட் எடுக்கணும் ஒரு வயதுக்குமேலே

    பதிலளிநீக்கு
  9. எல்லாம் நல்லத்தான் இருக்கு.... இதை எப்படி செயல் படுத்துவது... அதற்க்கான வழிமுறை என்ன???

    பதிலளிநீக்கு
  10. எல்லாம் நல்லத்தான் இருக்கு.... இதை எப்படி செயல் படுத்துவது... அதற்க்கான வழிமுறை என்ன???

    பதிலளிநீக்கு
  11. கொடுக்கும் வாக்குறுதிகளை செயல் படுத்த எப்படி ஃபைனான்ஸ் செய்யப்படுகிறது என்பதையாவது குறைந்த பட்சம் அறிவிக்க வேண்டும்தேர்தல் செலவுகளுக்கான பணம் யார் கொடுத்தது எப்படி வந்தது என்பதையும் அறிவிக்க வேண்டும் வாக்குறுதிகளுக்கான காலவறை அறிவிக்கப்பட வேண்டும் இன்னும் என்னவெல்லாமோ தோன்றுகிறது அவைஎல்லாம் utopian dream ஆகத்தான் இருக்கும்

    பதிலளிநீக்கு
  12. முன்கூட்டியே வெளியிட்டிருந்தால் ஏதாவது ஒரு கட்சி இவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்திருக்கும். தாமதமாகிவிட்டது என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. ஆலோசனைகள் அருமை . சிந்த்க்கப் பட வேண்டியவை நானும் இப்படி ஒன்று எழுதநினைத்தேன்.


    அளவுக்கதிகமான ஆடம்பரம் தேவையற்றது என்றாலும் சிலை ஆடம்பரங்களினால் பல பேர் -பூக்காரர் முதல் லைட் ம்யூசிக் வரை பிழைக்கிறார்கள்.ஒரு கோடீஸ்வரர் சிக்கனமாக செலவுசெய்தால் அவர் பணம் வங்கியில்தான் தூங்கும் அல்லவா? தகுதிக்கு மீறிய ஆடம்பரங்கள் அவசியமற்றது

    பதிலளிநீக்கு
  14. அருமையான திட்டங்கள் ...
    இதெல்லாம் நடக்குமா...
    நடக்கும் காலம் பொற்காலமாகுமே....!

    பதிலளிநீக்கு
  15. Mokkai ++. Bayangara Comedy. Nothing is practical and doable!

    பதிலளிநீக்கு
  16. முக்கியமா இந்தப் படிப்பை அரசே ஏற்கும் விஷயம்! அதுக்கு நவோதயா பள்ளிகளை இங்கே வர அனுமதித்தாலே போதுமானது. கிராமங்களில் வசிக்கும் சுப்பனுக்கும், குப்பனுக்கும் அருமையான கல்வி கிடைக்கும். மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வைக் கண்டு பயப்படவே வேண்டாம். மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு கட்டாயமாய்த் தேவை. இதற்கெல்லாம் அவசரச் சட்டமோ, புதிய சட்டமோ கொண்டு வரும் அரசை ஆதரிக்கவே கூடாது. தரமற்ற கல்வியைக் கொடுத்துக் கொண்டு இருக்கும் அரசின் பாடத்திட்டத்தைப் படித்து விட்டு அதன் மூலம் தேர்வுகளில் தகுதி பெறும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு என்றால் பயமாக இருக்கிறது. ஆனால் அரசு இதற்குச் சொல்லும் காரணம் கிராமப்புற மாணவர்களால் தேர்ச்சி பெற முடியாது என்பதே! இதே பாடத்திட்டத்தைத் தானே கிராமத்து மாணவர்களும் படிக்கிறார்கள்? அவர்களால் ஏன் தேர்ச்சி பெற முடியாது? அதற்குத் தக்கவாறு அவர்களின் படிப்புத் திறனை அதிகரிக்க முயலவேண்டும். தேர்வே கூடாது என்று சொல்லக் கூடாது.

    பதிலளிநீக்கு
  17. படிப்பு விஷயத்தில் அரசின் தலையீடும் தனியாரின் தலையீடும் சேர்ந்து கல்வி ஒரு வியாபாரம் ஆனது தான் மிச்சம். யாரும் கல்வியைச் சேவையாக நினைத்துக் கற்றுக் கொடுப்பதில்லை. நம் வாழ்க்கைக்குத் தேவையற்ற பலவற்றைக் கற்கும்படி நேர்கிறது. முதலில் பாடத்திட்டத்தையே மாற்ற வேண்டும். :(

    பதிலளிநீக்கு
  18. குப்பை எல்லாம் இப்போதும் பிரித்துத் தான் போடுகிறோம். எடுத்துச் செல்கையில் சேர்த்துத் தான் எடுத்துச் செல்கின்றனர்! அதற்கு என்ன செய்ய முடியும்? :(

    பதிலளிநீக்கு
  19. மாணவர்கள், மாணவிகள் அனைவருக்கும் +1 படிக்கையில் இருந்தே கட்டாய ராணுவச் சேவையை அறிமுகம் செய்ய வேண்டும். அப்போது தான் நம் நாடு, நம் தேசம் என்னும் உணர்வு இருந்து கொண்டிருக்கும்.

    பதிலளிநீக்கு
  20. //மிகப் பெரிய கேடு விளைவிக்கும் வேலிகாத்தான் (சரிதானே கீதாக்கா?) //

    ஹிஹிஹி, நவராத்திரி, தீபாவளி, கார்த்திகை, கனுவுக்குச் சீர் செய்ய வந்த தம்பியே, வாழ்க, வளர்க! தம்பிகள் சேரச் சேர சீரும் நிறையக் கிடைக்குமே! ஹையா, ஜாலி! :)

    பதிலளிநீக்கு
  21. நல்ல யோசனைகள்.... நடைமுறைப்படுத்த ஒரு அரசியல்வாதியும் தயாராக இருக்கப் போவதில்லை என்பது தான் வருத்தம்.

    பதிலளிநீக்கு
  22. இன்றைய சுயநல அரசியல்வாதிகள் படித்தால் மதுரையில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நேர்ந்த கதிதான். மிகக் கடுமையான ஆனால் மக்களுக்கு அவசியமான நாட்டு முன்னேற்றத்திற்குத் தேவையான பல யோசனைகள் அறிக்கையில் வந்துள்ளது மகிழ்வளிக்கிறது. பெண்கள் முன்னேற்றம் பற்றிய சில யோசனைகளையும், பொய்யான அல்லது மிகைப்படுத்தப்படும் விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்குச் சான்றுபெற்ற பின்னரே விளம்பரங்கள் செய்வது போலும் இன்னும் சில யோசனைகளைச் சேர்க்கலாம். அடுத்த பொதுத் தேர்தல்வரை காத்திருக்காமல், இப்போதே அனைத்துக் கட்சிகளுக்கும் இதை நகலெடுத்து மின்னஞ்சல் செய்ய அனைத்து வலைப்பதிவர்களிடமும் கையெழுத்து வாங்கிச் செயல்படுத்த வேண்டுகிறேன். ”வலைப்பதிவர்களின் தேர்தல் அறிக்கை” என்று கம்பீரமாகச் சொல்லலாம். பாராட்டுகளும் வாழ்த்துகளும் வணக்கங்களும் நண்பர்களே!

    பதிலளிநீக்கு
  23. வாவ்!! வாவ்! மனதில் அடிக்கடித் தோன்றும் அனைத்துக் கருத்துகளும் ஒருமித்து இங்கே!! சூப்பர். மற்றவர்களது கருத்தும் உட்பட்டுவிட்டதால்....வேறு என்ன சொல்ல.... முத்துநிலவன் அண்ணா சொல்வது போல் வலைப்பதிவர்களின் தேர்தல் அறிக்கை என்று கம்பீரமாகச் சொல்லலாம்.....நகல் எடுத்து அனுப்ப முயற்சி செய்யலாமே இல்லையா....

    மிக மிக அருமை.....பாராட்டுகள் வாழ்த்துகள்....

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!