வியாழன், 30 ஜூன், 2016

160630 :: எப்படி ..... எப்புடி ..... எப்பூடி!

 

நேற்றைய பதிவின் மூன்று கேள்விகளுக்கு பதில்களை இங்கே பார்ப்போம்.

வினா ஒன்று :

இதைக்  கொஞ்சம் கஷ்டமாகவே தேர்ந்தெடுத்தேன்.
முதல் கேள்வியிலேயே சிந்தனை செலுத்தி, அடுத்ததற்குப் போகாமல் இருக்கின்றார்களா அல்லது தெரியாததை விட்டு, தெரிந்த கேள்விகள் பக்கம் நகர்கிறார்களா என்று  தெரிந்துகொள்ள ஆவல்.

பெரும்பான்மை வாசகர்கள் மூன்றையும் முயன்றிருக்கிறார்கள்.

முதல் கருத்து உரைத்த ... ஸ்ரீமலையப்பன் போற்றுதலுக்கு உரியவர். மூன்றையும் முயன்று, முதல் ஆளாக தன கருத்தை கூறியிருக்கிறார்.

அவர் கூறிய இரண்டாம் புதிரின் விடை சரியான விடைக்கு மிக அருகாமையில் .

மாதவன் கூறிய 'அனதர் ' பதில் மிகவும் சரி.

அதற்குப் பின்  ஆனந்தராஜா விஜயராகவன் (அதாங்க நம்ம ஆவி!) மாதவன் இருவரும் கலக்குக் கலக்கென்று கலக்கியிருக்கிறார்கள். இருவரின் விடாமுயற்சியையும் மனமாரப் பாராட்டுகின்றோம்.

கீதாசா  லேட் ஆக வந்ததால் இரண்டாம் புதிரின் சரியான விடையை முதலில் கூறுகின்ற வாய்ப்பை தவறவிட்டார்.
கமெண்ட் மாடரேஷன் இந்தப் புதிர்களுக்கு தேவையில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இது பரிசுப்போட்டி அல்ல.

நெல்லைத்தமிழன், ஹுஸைனம்மா, மாடிப்படி மாது எல்லோரும் முயற்சி செய்துள்ளனர். அவர்களின் ஊக்கத்திற்கு எங்கள் பாராட்டுகள்.

 பல கோணங்களிலும் முயன்று பலவகை பதில்களையும் பொருத்திப் பார்த்த எல்லோருக்கும் நூற்றுக்கு நூறு.

வாழ்க வளமுடன்!

சரி சரி  இப்போ எங்கள் பதில்கள்.

எப்படி !
1) A I J Q Y 
விளக்கம் : நியூமராலஜி. மேற்கண்ட எல்லா எழுத்துகளுக்கும் , உரிய எண் ஒன்றேதான். (ஒன்று)

எப்புடி !
2) TODAY IS TODAY; TOMORROW IS ANOTHER DAY. 
விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கின்றேன். எல்லோரும் ஏற்கெனவே கூறிவிட்டீர்கள்.

எப்பூடி !
3)    K  Z  R  E D. 
அட என்னங்க நீங்க எல்லாம்! இவ்வளவு டீ வி விளம்பரங்கள் பார்க்கறீங்க,
Dக்கு முன்னாடி  Eவரும் என்று கூடவா தெரியலை?

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!
       

புதன், 29 ஜூன், 2016

செவ்வாய், 28 ஜூன், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: மாற்றம்





          அவரின் தளம் அநன்யாவின் எண்ண அலைகள்.

          சுவாரஸ்யமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.  நகைச்சுவை ஸ்பெஷலிஸ்ட்.  சென்ற வருடத்துக்குப் பிறகு பிளாக்கில் அவர் எழுதவில்லை.    ஆனால் ஃபேஸ்புக்கில் மிகவும் பிஸி!


          இந்தக் கதை பற்றிய அவர் கருத்தும், தொடர்ந்து அவர் படைப்பும்...



========================================================================



- அநன்யா வீடு மாற்றும் மும்முரத்தில் இருப்பதால் முன்னுரை தராததற்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறார்! -


========================================================================

மாற்றம்  


அநன்யா மகாதேவன்

     ”வீடு பெருக்கி துடைக்கிறதுக்காம்மா 600 கேக்கறீங்க?” என்றேன். ”அங்கே ஒரு வீட்டுல செய்யறேன் அவங்க 800 குடுக்கறாங்கம்மா” என்றாள்.சென்னையில் ஆள் கிடைப்பதே அரிது, ”பாத்திரமெல்லாம்?”
 என்றாள்.

”வேண்டாம்மா, அது நானே பாத்துப்பேன்” என்றேன். ”வெறுமனே பெருக்கி துடைக்கணும்மா, 500 ரூபாய் தரேன்”


”இப்பச்சரி, ஆனா நான் செய்யறதை பாத்துட்டு 3 மாசம் கழிச்சு 600 தாங்க” என்றாள்.


அரை மணி வேலைதானே? அதுவும் சிறிய வீடு தான். எதுக்கு 600 எல்லாம்? என்று நினைத்துக்கொண்டேன்.

     8 மணிக்கு சமயல் முடித்துவிட்டு வேலைக்கு ஓடவேண்டும். பழைய வீட்டில் ரொம்ப அவஸ்தை. ”ஆகட்டும்மா” என்று சொல்லி வைத்தேன்.

     சுமார் 65 வயதிருக்கும். முழுவதும் நரைத்த முடி, மூக்கின் இரண்டு புறமும் பேசரி அணிந்து, காலை 5.30க்கு சிரிக்கும் கண்களுடன் ஆஜர் ஆகி விடுவாள்.அரை மணி நேரம் வேலை செய்கிறாள்.

     முதலில் கூடம், பின்னர் சமயலறை, பிறகு இரண்டு அறைகளையும் சுத்தமாக நன்றாகக் குனிந்து இரண்டு கைகளாலும் விளக்குமாற்றை பிடித்துக் கொண்டு பெருக்கி,அழகாக அழுத்தி மாப்பைக் கொண்டு துடைக்கிறாள் அந்த மூதாட்டி.  சில சமயம் 5.45, சில சமயம் 6.00 மணிக்கு வந்தாலும் நேரத்துக்கு வேலையை முடித்துக்கொண்டு அனாவஸ்ய பேச்சில்லாமல், குப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவாள்.

     ”வெறும்பாலு குடிக்க மாட்டேய்ன். கொஞ்சமா சர்க்கரை போட்டு ஒரு சொட்டு காப்பித்தண்ணி ஊத்துங்க ” என்று தனக்கு வேண்டியதை சொன்னாள். அப்படியே தரேம்மா என்றேன். காபி தருவாத ஒன்றும் பேசவில்லை. ஒரு வேளை கொடுக்கவில்லையென்றால் கேட்கவும் மாட்டாள். அவள் வந்தால் அவளுக்கு காப்பி கொடுக்க வேண்டுமே என்ற உந்துதலில் 5/.15க்கே எழ ஆரம்பித்தேன்.

     எனக்கு ஜுரமாக இருந்ததை உணர்ந்து நான்கு நாள் வழக்கமான வேலைகளுடன், பாத்திரங்களை சத்தமில்லாமல் தேய்த்துவிட்டு மேடை துடைத்துவிட்டுப் போனாள்.

     அவள் கால்கள் மூப்பினால் கோணி இருந்தன. ஒரு நாள் நான் கால்களை கவனிப்பதைக் கண்டு,”கட்டட வேலை செஞ்சு செஞ்சு காலெல்லாம் திராணியில்லாம போச்சும்மா, ரொம்ப வலிக்கிது” என்றாள்.

     வேலைக்கு வர ஆரம்பித்த ஒரு வாரத்தில், ”5 நாள் கரூர் போறேய்ன். வரமாட்டேய்ன்” என்றாள் . சிவுக்கென்றது. 5 நாளா? என்று ஆச்சர்யமும் அதிருப்தியும் காட்டிவிட்டு, சரிம்மா என்று சிரித்து வைத்தேன்.

     டாண் என்று 5வது நாள் ஆஜர் ஆகிவிட்டாள். அவ்வப்போது ”ஃப்ரிஜ்ஜுக்கு பின்னாடி தூசி இருக்கும்மா” என்றேன். பெருக்கும்போது கூடவே நடந்தேன். கீழேயுள்ளவற்றை எடுத்து நீக்கி உதவி செய்தேன். இல்லாவிட்டால் அப்படியே பெருக்கிவிடுகிறாள். அடியில் தூசி குப்பை எல்லாம் அப்படியே இருக்கும்.

     தினமும் 5.45க்கு வந்துவிட்டு 6.15க்கு கிளம்பி விடுவதால் எதுவும் பேசமுடியவில்லை. ஒரு நாள் கொஞ்சம் லேட்டாக வரச்சொன்னேன். 11.00 மணிக்கு வந்தாள். ”எனக்கு பசங்க இல்லே, ஒரே பொண்ணு தேன்.. என் பொண்ணுவயித்து பேத்தியை நாந்தேன் படிக்கவைக்கிறேய்ன். மாப்பிள்ளை சரியில்லைம்மா, குடிக்கிறாய்ன், அதேன் நானே அவளை எடுத்துட்டு வந்துட்டேய்ன். இங்கே தேன் படிச்சா, பெரியமனுசி ஆயிடும்ன்னு தோணிச்சு, அதான் கொண்டு என் பொண்ணு கிட்டே கரூர்ல விட்டேய்ய்ன். நானே சம்பாரிச்சு காசு சேத்து அவளை படிக்க வெக்கிறேய்ன்” என்றாள்.வீட்டுக்கு வீடு கஷ்டமும் வேதனையும் இருக்குமே. இவர்களுக்கு இது போல என்றெண்ணிக்கொண்டேன்.

     ”பேத்தியை ஆஸ்டல்ல சேர்த்திருக்கேன். கொஞ்சங்கொஞ்சமா காசு சேத்துருக்கேய்ன். 30000 கேக்குறாய்ங்கே. காசை மாப்பிள்ளைகிட்டே குடுத்தா குடிச்சிப்புடுவாய்ன். அதேன் நானே கரூருக்குப் போய் கட்டிட்டு வந்தேய்ன்” என்றாள்.

     அன்று முதல் தேதி. கண்களில் எதிர்ப்பார்ப்புடன் வந்தாள். 500 ரூபாய் நோட்டுடன் 100 ரூபாய் நோட்டும் கொடுத்தேன். அவள் கண்கள் பனித்து, நன்றி என்றன.  

     என்ன பெரிய வேலைக்கு மதிப்பு? மனிதர்களுக்குத்தான் மதிப்பு அவசியமாகிறது.

திங்கள், 27 ஜூன், 2016

"திங்க"க்கிழமை 160627 :: புளிச்சகீரைப் பொடி



ஒரு கட்டு புளிச்சக்கீரை அல்லது கோங்கூரா.





தண்டு, காம்பு இவற்றை நீக்கி இலை மட்டும் எடுத்துக் கொள்க.

ஒரிரண்டு முறை நல்ல நீரில் கழுவி உதறி எடுத்து ஒரு வெள்ளைத் துணியில் வாடும் வரை 10/12 மணி நேரம் ஆறப் போடவும்.

பின் கத்தரி அல்லது கத்தியால் நறுக்குக.





இதை ஒரு வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்த பின் வாணலியில் மீண்டும் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயம் சிவப்பு மிளகாய் சிறிது புளி(!) இவற்றுடன் உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு போட்டு வறுக்கவும்.


ஆறிய பின் மிக்ஸியிலிட்டு அரைத்த பின் வதக்கி வைத்த இலை உப்பு சேர்த்து கலக்கி எடுக்கவும்.




பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடாகும் போதே மிளகாய்த் தூள் மஞ்சள் பொடி சேர்த்துப் புரட்டி ஆறிய பின் பாட்டிலில் எடுத்து வைக்கலாம்.






பூண்டு பிரியர்கள் உறித்த பூண்டுப் பல் வேண்டிய அளவு வதக்கியோ வதக்காமலோ சேர்ப்பதுண்டு.

மிக்ஸியில் கலந்ததை பாட்டிலில் போட்ட பின் காய்ச்சி ஆற வைத்த எண்ணெய் மேலாக ஊற்றி வைத்தால் பூசணம் வராது.

சாதத்துடன் கலந்து அல்லது உப்புமாவில் இருந்து பூரி வரை எல்லா உணவுக்கும் ஏற்ற பக்க வாத்தியம்.










நன்றி கேஜி, நன்றி புவனா.

ஞாயிறு, 26 ஜூன், 2016

சனி, 25 ஜூன், 2016

பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்



1)  இயற்கையோடு இயைந்த வாழ்வு.  ஹரி - ஆஷா போல வாழ விருப்பம்.
 





2)  துப்புரவுத் தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 84 பேர் ஒருங்கிணைந்து ரத்த தானம் தொடர்ந்து செய்து வருகின்றனர். இவர்கள் சேவை மனப்பான்மையோடு, அழைப்பின்பேரில் எப்போதும், எங்கும் சென்று ரத்த தானம் அளித்து வருகின்றனர்.  இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் டி . ஆர். சீனிவாசன்.....
 

3)  நண்பேன்டா..!  வர்ஷினி.
 


4)  கல்லுடைப்பிலிருந்து கம்பியூட்டருக்கு... கிராமத்தலைவி நவ்ரோதி.
 


5)  பாராட்டுகள் சென்னை போலீஸ்.
 


6)  சிறு வயதிலேயே உதவும் எண்ணம்.. எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை...  மீரா வசிஷ்ட்.
 


7)  அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிவது என்பது...  சென்னையை அடுத்த, நல்லம்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை கிருஷ்ணவேணி.





8)  மகத்தான மனிதம்.  நன்றி வெங்கட்.



வியாழன், 23 ஜூன், 2016

வேற ஜாதிப் பையன்!

      
சமையலறையில், பின்னால் ஏதோ நிழலாடியது.    இப்படி பூனை மாதிரி வருவது யார் என்று அமிர்தத்திற்கு நன்றாகத் தெரியும். மகள் அகிலாவாகத்தான் இருக்கும். 

அகிலா திருச்சியில் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி, (பி எஸ் சி இறுதியாண்டு) படிப்பவள். விடுமுறைக்கு வந்திருக்கின்றாள். அநேகமாக, சத்தமில்லாமல் வந்து, பின்னாலிருந்து கண்ணைப்  பொத்துவாள்.  'நான் யார் என்று சொல்லு பார்ப்போம்.' 

'வேற யாரு? என்னுடைய போக்கிரிப் பொண்ணு!' என்று கூறியபடி, பொத்திய கைகளை விலக்கி, அகிலாவைத் திரும்பிப் பார்த்து, பெருமையுடன் புன்னகை செய்வாள் அமிர்தம்.  
    
   

இன்று அப்படி எதுவும் நிகழவில்லை. 

"அம்மா" 

"என்னம்மா அகிலா?" 

"உன்கிட்ட ஒண்ணு சொல்லப்  போறேன். " 

"ஒண்ணு என்ன? ஒன்பது வேண்டுமானாலும் சொல்லு. கேட்டுக்கறேன். " 

"அதெல்லாம் இல்லை - ஒன்னே ஒண்ணுதான். " 

"சரி. சொல்லு. " 

" நான் ஒருத்தரை லவ் பண்றேன்." 

"என்ன?" என்று கேட்டவாறே அவசரமாகத் திரும்பிய அமிர்தத்தின் கையில், இறக்கிவைத்த சூடான பால் பாத்திரம் சுட்டுவிட்டது. " ஆ " என்று அலறிவிட்டாள் அமிர்தம். 

"அம்மா நீ இந்த அளவுக்கு அஃபெக்ட் ஆயிடுவே என்று நினைக்கலை. சாரிம்மா. நான் அப்புறமா உன்கிட்ட பேசறேன்." 

"அகிலா  இரு இரு நான் அஃபெக்ட் ஆனதுக்கு நீ சொன்ன விஷயம் காரணம் இல்லை. திரும்பும்பொழுது, சூடான பால் பாத்திரம் கையில் பட்டுடுச்சு. அதனால்தான் அலறினேன். " 

"நல்ல வேளை - அப்பா வீட்டில் இல்லை. இருந்திருந்தால், உன் குரல் கேட்டவுடன் ஓடோடி வந்து, என்னைப்  பார்த்து, 'அடி பாதகி! என்ன செய்தாய் என் அன்பு மனைவியை ' என்று என்னைப் பார்த்து சத்தம் போட்டிருப்பார் அம்மா!" 

அமிர்தம் அடக்க முடியாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். "யாரு உன் அப்பாவா!   நான் அலறினால் உடனே ஓடி வருவார் என்பது சரி. ஆனால்,வந்து  என்ன சொல்லுவார் தெரியுமா? 'அமிர்தம் - ஏன் இப்படி பேய் போல அலறி, கொழந்தைய பயமுறுத்துறே?' இப்படித்தான் சொல்லுவார்!" 

"சரி. சமையலறையை  விட்டு வெளியே வா அம்மா. நான் மெடிக்கல்  கப்  போர்டிலிருந்து பர்னால் எடுத்துவந்து உன் கைக்குப் போட்டுவிடறேன்." 

               ஹாலில், அமிர்தத்தை ஒரு  நாற்காலியில்  உட்காரவைத்து, கைக்கு பர்னால் போட்டு விட்டாள் அகிலா. 

கை எரிச்சல் குறைந்ததும், அமிர்தம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள். 

"அந்தப் பையன் பெயர் என்ன?" 

" மங்கள்." 

" அது என்ன மங்கள், திங்கள் என்றெல்லாம் பெயர்!  நம்ம ஜாதி இல்லையா?" 

" இல்லை." 

" அட ராகவா! "

" அதுக்கு ஏன் இப்போ அப்பாவைக் கூப்பிடுகிறாய்? அதுவும் பெயர் சொல்லிக்  கூப்பிடறே !"

" அவரை எங்கே கூப்பிட்டேன்? நான் சொன்ன ராகவன் வேற. ஆனால் உன் அப்பாவுக்கு நிச்சயம் இந்த விஷயம் பிடிக்காது. ஒப்புக்கொள்ளவே மாட்டார். சரி. அந்தப் பையன் என்ன ஜாதி?"

"தெரியலை. தெரிஞ்சிக்கவும் முயற்சி பண்ணலை."

" போட்டோ இருக்கா?" 

அகிலா போட்டோவை, தன் கைப்பையிலிருந்து எடுத்துக் காட்டினாள். 
"ரொம்ப  சின்ன வயசா இருக்கும் போலிருக்கு!"

"அம்மா இது அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த போட்டோ. இது நல்லா இருக்குன்னு சொல்லி, நான் கேட்டப்ப இதைக் கொடுத்தார்." 

"என்னுடைய  அண்ணன் பையன் ராஜு இவனைவிட  நல்லா இருக்கான். அவன்  பேச்சை  எடுத்தாலே  நீ அவன் ஒரு மக்கு. ஏதோ நட்டாமுட்டி வேலை செய்துகொண்டு, ஊர் சுற்றும் சோம்பேறி என்று சொல்வாய்." 

" நான் சொல்றது இருக்கட்டும். நீயே சொல்லு. உன் கல்யாண வயசுல, ராஜு மாதிரி ஒருத்தனைப் பார்த்திருந்தா நீ கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியிருப்பியா அம்மா?" 

" இதோ பாரு இந்தமாதிரி சிச்சுவேஷன் அந்தக் காலகட்டத்தில் இல்லை. அப்போதைய நிலைமைக்கும், இப்போதைய நிலைமைக்கும் முடிச்சுப்போட  முடியாது."

"நான் கேட்ட கேள்விக்கு, இன்னும் நீ பதிலை சொல்லவில்லை. ராஜு மாதிரி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிக்க நீ சம்மதித்திருப்பாயா?"

" நான் மாட்டேன். " 

"அப்போ உங்க பொண்ணு மட்டும் எப்படி சம்மதிப்பா?" 

"ஓஹோ! சரி. மங்களுக்கு சொத்து பத்து நிலம் நீச்சு எல்லாம் ஏதாவது இருக்கா? "  

" ஏதோ கொஞ்சம் இருக்குன்னு நினைக்கிறேன். சரியா, விவரமா தெரியலை."

" எந்த ஊரு? "

" சொந்த ஊரு அஹ்மத்நகர், மகாராஷ்டிரா என்று  சொன்னார். "

" தமிழ் தெரியாதா?" 

" தமிழ் பேசத் தெரியும். தமிழ்  எழுதப் படிக்கத் தெரியாது. "

" என்ன வேலை?" 

" அவரு ஐ டி கம்பெனில  பிராஜக்ட்  லீடரா  இருக்காரும்மா " 

" அப்பிடீன்னா - அது பெரிய வேலையா?" 

"அப்படித்தான் வெச்சிக்கோயேன்."

" காலம்  பூரா உன்னைக் கண் கலங்காமல் வைத்துக் காப்பாற்றுவானா?" 

" நான் எதற்குமே கண் கலங்கமாட்டேன் அம்மா!" 

" சரி. ராஜூவைத்தான்  உனக்குப் பிடிக்கலை. மக்குன்னு சொல்லி ஒதுக்கிட்டே. உங்க  அப்பாவின்  தங்கச்சி  - உன்னுடைய  லலிதா அத்தையின் பையனையாவது கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா? அவன் மக்கு  இல்லையே. சூப்பர் இன்டெலிஜென்ட். நல்ல வேலையிலே இருக்கான். " 

" யாரு? தாமோதரனா? அம்மா என்னுடைய  மாமாவின் மக்குப்  பையனையாவது  பொறுத்துக்கலாம். ஆனா அத்தைப் பையன் .....  ஐயோ - என்னால ஒரு மணி நேரம் கூட பொறுத்துக்கொள்ள முடியாது. எப்போ வாய் திறந்தாலும் ஒரே சுயதம்பட்டம். டாம்  டாம்  தாமோதரன் - ச்சே - எங்கேயாவது நாம் சொல்வது எதையாவது காது கொடுத்துக் கேட்பானா? எப்போ பாரு  நான் இப்படிப்  பண்ணுவேன் அப்படிப் பண்ணுவேன், இப்படி சொல்லிட்டேன், அப்படி சொல்லிட்டேன் என்று தன்னைப் பற்றியே  உயர்வாகப்  பேசிக் கொள்வான். அந்த டமார சத்தத்திலேயே எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும்!"

"அப்போ மங்கள்  என்று  உறுதி செய்துவிட்டாய்."

"ஆமாம் அம்மா - உனக்கு இந்தக் கல்யாணத்தில் ஆட்சேபணை எதுவும் இல்லைதானே? சம்மதம்தானே?"

"உன்னுடைய  அப்பா என்ன சொல்லுவாரோ, சம்மதிப்பாரா என்று தெரியவில்லை. அவருடைய  அபிப்பிராயம்  என்ன என்று தெரிந்துதான் நான் எதுவும் சொல்லமுடியும். அவர் தாமோதரன் தனக்கு மாப்பிள்ளையாக வந்தால், நன்றாக இருக்கும் என்று அபிப்பிராயம் வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்."

"அம்மா. அப்பா மார்க்கெட்டிலிருந்து வந்தவுடன் நான்  லைப்ரரிக்குப்  போயிடறேன். நீ அப்பாகிட்ட பேசி அவருடைய சம்மதத்தை வாங்கிவிடு. இப்போ சமையலறைக்குப் போய் எனக்கு உன்னுடைய ஸ்பெஷல் காபி போட்டுக்கொடு. " 

"சரி அகிலா. அது என்ன ஸ்பெஷல் காபி? நான்  எப்பவும் போடறது ஒரே காபிதானே! "

"உனக்கு வேணா அது ஸ்பெஷல் இல்லாம இருக்கலாம். நீ போடறது காபியே இல்லை. ஒரிஜினல்! ஒரிஜினல் தேவாம்ருதம்! நீ போடற மாதிரி காபி, இதுவரை நான் இந்த ஈரேழு பதினான்கு உலகிலும் குடித்ததில்லை!"

" ஆமாம் - இவ எல்லா லோகத்தையும் சுத்தி வந்தவ!"

இருவரும் சிரிக்கிறார்கள். 

ராகவன் உள்ளே வந்துகொண்டே , "என்ன அம்மாவும் பொண்ணும் ரொம்ப சந்தோஷமா பேசிச் சிரிச்சுகிட்டு இருக்கீங்க! ஏதாவது சந்தோஷ சமாச்சாரமா?"

" ஆங்  - அது வந்துங்க ... ஆமாம்  ... சந்தோஷ ..... "

" அம்மா நீ போய் முதலில் மூன்று ஸ்பெஷல் காபி போட்டு எடுத்துகிட்டு வா. குடித்துவிட்டு, நான் லைப்ரரிக்குப் போகணும்."

"ஆமாம் அகிலா. அதுதான் சரி." 

அம்மா காபியுடன் வரும்வரை அகிலா லைப்ரரி புத்தகத்தைத் தேடுவது போல பரபரவென்று அலைந்து தேடிக்கொண்டிருந்தாள். காபி வந்ததும் புத்தகம் கிடைத்துவிட்டது. 

காபியைக் குடித்துவிட்டு, "அம்மா - நான் லைப்ரரி போயிட்டு வறேன்" என்று சொல்லியபடி வெளியில் சென்றாள். 

********************
"என்னங்க - சந்தோஷ சமாச்சாரம் சொல்ல  வந்தேனே - என்ன என்று தெரியுமா?" 

"தெரியலையே! என்ன அது?"

" கேட்டு, அதிர்ச்சி அடஞ்சிடாதீங்க. நம்ம அகிலா ஒருத்தரை லவ் செய்யறாளாம். கல்யாணம் பண்ணிக்கொண்டால்  அவனைத்தான் செய்துகொள்வேன் என்று உறுதியா சொல்றா."

"இதையா சந்தோஷ சமாச்சாரம்னு சொன்னே! இதுக்கா சிரிச்சுகிட்டு இருந்தீங்க !" 

" நாங்க சிரிச்சது, காபி விஷயமா. ஆனா இந்த சீரியஸ் விஷயம் பத்திப்  பேசி , நான் உங்க சம்மதத்தை வாங்கணும்னு அகிலா நெனக்கிறா." 

அகிலாவிடம் அமிர்தம் கேட்ட  பல கேள்விகளையே ராகவன், அமிர்தத்திடம்  கேட்கிறார். அகிலா சொன்ன பதில்களை, அமிர்தம் ராகவனுக்குச் சொலகிறாள். 

"தாமோதரனைக் கூடவா வேண்டாம் என்று சொல்கிறாள்!" எங்கே அந்த மங்கள் போட்டோவைக்  காட்டு!"

போட்டோவைப் பார்க்கிறார். 

"ஹூம் இந்தக் காலத்துப் பசங்க எல்லாம் எதை வெச்சு எப்படி லவ்வுல விழறாங்கன்னு தெரியலை."

" சரிங்க - உங்க அபிப்பிராயம் என்ன? அதைச் சொல்லுங்க."

" நீ ஏற்கெனவே ஏதாவது முடிவு எடுத்திருப்பே. நீ எடுக்கின்ற முடிவுகள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும். நீ என்ன நெனக்கிற  சொல்லு."

"அகிலா அவளுடைய அத்தை பையனையோ, மாமா பையனையோ கல்யாணம் பண்ணிக்க  விரும்பலை என்பது, எனக்கு வருத்தம்தான். ஆனால், அவளுடைய சந்தோஷம்தான் நமக்கு முக்கியம். பையனுக்குப் பொண்ணைப் புடிச்சிருக்கு; பொண்ணுக்குப் பையனைப் புடிச்சிருக்குன்னா அது போதும். எனக்கு சம்மதம்தான். " 

"சரி - அப்போ அகிலாவிடம் அவள் வந்தவுடன் நம்ம சம்மதத்தை சொல்லிடலாம். - நீ போய் சமையல் வேலையை கவனி." 

அமிர்தம் சமயலறைக்குள் சந்தோஷமாக நுழைந்தாள். 

******************** 

அகிலாவின் கைப்பேசி , "அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு ... " என்று முதலமைச்சர் குரலில் மெலிதாக ஒலித்தது. லைப்ரரியில் எல்லோரும் திரும்பிப்பார்த்தனர். 

அவசரமாக கைப்பேசியை எடுத்த அகிலா கேட்டாள் ,
 " என்ன அப்பா?"
" அம்மா சம்மதிச்சுட்டா "
   
    

*********************************************** 



புதன், 22 ஜூன், 2016

தியேட்டர் நினைவுகள் 4 :: அக்னி நட்சத்திரம் - "இன்று போய் நேற்று வா..."



          அதே சினிப்ரியா காம்ப்ளெக்ஸ்.  

          அக்னி நட்சத்திரம் படம் வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருந்தது.  ஏற்கெனவே நான் சொல்லியிருப்பது போல ஒரே ஒரு படத்தைத் தவிர வேறு எந்தப் படத்தையும் முதல் நாளே சென்று பார்த்ததில்லை.  அந்த ஒரு படம் கூட, ஒரு ஆர்வத்தில்  என் அக்காவும், என் மாமாவும் ரிசர்வ் செய்து அழைத்துக் கொண்டு போனதால் பார்த்தது.. 




          எங்கள் நண்பர் சுகுமார் பற்றி முன்னரே கதைத்திருக்கிறேன்.  இந்த 'அக்னி நட்சத்திரம்' படம் பற்றி ஊரெல்லாம் ஒரே பேச்சாயிருந்ததா..  மணிரத்னம் என்றால் ஒரு கிரேஸ் இருந்தது.  இவர் தன் உதவியாளர் பாலனை விட்டு வார இறுதிக்கு டிக்கெட் ரிசர்வ் செய்யச் சொல்லி விட்டார்.  நான், சுகுமார், இன்னொரு நண்பன்.  இந்த இன்னொரு நண்பன் அதிகமாக படம் பார்க்காதவன்.  அதற்கு அவன் மதமும் காரணம்.  சாதாரணமாகவே எதையும் ஒரு எள்ளலாகவே பேசுபவன்.  பின்னாளில் இவனால் சில கசப்பான அனுபவங்கள் உண்டாயின.  அது வேறு கதை.


Image result for inside a cinema theatre in chennai images


          மாலை ஆறு மணிக்குப் படம்.  ஃபர்ஸ்ட் ஷோ என்று அழைப்பார்கள்.  ஆறரை மணிக்கு மெயின் பிக்சர் தொடங்குவார்கள்.  அதுவரை விளம்பரங்கள், செய்திப் படம் என்று ஓடும்.    சுகுமார் டீவி மெக்கானிக்காகக் கோலோச்சிக் கொண்டிருந்த காலம்.  அங்கிங்கு என அலைச்சல் அதிகம்.  அவருக்கு எதையும் கடைசி நிமிடத்தில் செய்தே வழக்கம்.  ஆனாலும் நல்லவேளை அன்று ஆறேகால் மணிக்குத் தியேட்டரை அடைந்து விட்டோம்.  டிக்கெட் கிழிப்பவர் அலட்சியமாக சூயிங் கம் மென்றுகொண்டே கிழித்து - டிக்கெட்டைத்தான் - உள்ளே அனுப்பினார்.  இடம் கண்டுபிடித்து அமர்ந்தோம்.  கூட்டம் சேர்ந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு வரிசையும் முற்றுகை இடப்பட்டுக் கொண்டிருந்தது.

          டார்ச் லைட்டுடன் தியேட்டர்ட்காரர் ஒருவர், உடன் ஒரு துணையுடன் உள்ளே வந்தார்.  படம் தொடங்கி இருந்தது.  சுகப்ரியாவின் இதமான குளிரில் படத்தில் மூழ்கத் தொடங்கியிருந்த எங்களை எழுப்பினார் அவர்.

 
          "கொஞ்சம் வெளியில் வாங்க"

          "ஏன்?" என்றார் சுகுமார்.  அவர்தானே எங்கள் சீனியர்!

          "வாங்க..." என்றவாறு எங்களை வெளியே இழுத்த - அழைத்த - அவர்கள் வெளியே வந்ததும் டிக்கெட்டில் டார்ச் அடித்து எங்களைப் படிக்கச் சொன்னார்.  நாங்கள் முறைத்தவாறு "என்ன?" என்று கேட்டோம்.

           "தேதியைப் பார்த்தீங்களா?  இது நேற்றைய தேதிக்கான டிக்கெட்... இன்றைக்கு வந்தால் எப்படி?  உங்கள் ஸீட்டில் இன்று உட்காரவேண்டியவர்கள் வந்து சொன்ன பிறகுதான் எங்களுக்கே தெரிந்தது..  போங்க..." என்று துரத்தி விட்டார். 




          அசட்டுத்தனமாக உணர்ந்தோம்.  



          சுகுமார் இதை அவமானமாக நினைத்தார்   அவர் உதவியாளர் பாலன் வார இறுதி நாள் என்பதால் டிக்கெட் கிடைக்காததால் முந்தைய தினத்துக்குச் செய்திருந்திருக்கிறார்.  (பின்னர் கேட்டபோது "நான் உங்களிடம் அன்னிக்கே சொன்னேனே ஸார்" என்றார்.  இவர்தான் அதை கவனத்தில் வைக்கவில்லை!).  வேறு டிக்கெட் அங்கேயே வாங்கலாம் என்றால் படம் ஹவுஸ் ஃ புல்.  அதையும் கேட்டுப்பார்த்தார்.  அத்தனை பேர்கள் முன்னிலையில் வெளியேற்றப்பட்ட கடுப்பு அவருக்கு.  'காசு கொடுத்து விடுகிறோம்..  தனியாக நாலு மடக்கு நாற்காலியாவது போடுங்கள்' என்றார்.  ஊ...ஹூம்!


          தியேட்டர்க்காரர்கள் நான்கைந்து பேர்கள் வெளியில் நின்றிருந்த எங்களையே பார்த்துக் கொண்டிருந்ததை பொறுக்காத சுகுமார் அடுத்த விபரீத முடிவை எடுத்தார்.   சினிப்ரியா, மினிப்ரியா, சுகப்ரியா மூன்று தியேட்டர்களில் சினிப்ரியாதான் மூத்த தியேட்டர், பெரிய தியேட்டர்.  அங்கு என்ன படம் ஓடுகிறது என்று பார்த்தால் 'குரு சிஷ்யன்' ஓடிக் கொண்டிருந்தது.  அதற்கு டிக்கெட் வாங்கிவரச் சொல்லிப் பணத்தைக் கொடுத்தார்.   நாங்கள் வேண்டாம், வேண்டாம் என்று மறுக்க, தியேட்டர்க்காரப் பையன் ஒருவனே சென்று அங்கு டிக்கெட் வாங்கி வந்து கொடுத்தான்.




          இப்போது மற்ற பல படங்களோடு ஒப்பிடுகையில் குரு சிஷ்யனின் காமெடியை கொஞ்சமாவது ரசிக்க முடிகிறது.  ஆனால், தவறு எங்களுடையதாயினும், அவமதிக்கப்பட்டது போன்ற எங்கள் அன்றைய மன நிலையில் 'குரு சிஷ்யன்' அன்று எங்களுக்கு ரசிக்கவில்லை.  கடுப்புதான் வந்தது.  போதாக்குறைக்கு அந்த என்  இன்னொரு நண்பன் கிண்டலான விமர்சனங்களை எடுத்து வீட்டுக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தான்.  







பாதியிலேயே - இடைவேளை விடும் முன்னரே எழுந்து வந்து விட்டோம்.

செவ்வாய், 21 ஜூன், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: பிரமி



          எங்களின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் கற்றலும் கேட்டலும் தளம் வைத்திருக்கும் ராஜி எனப்படும் ரேவதி வெங்கட் அவர்களின் படைப்பு.   

          இப்போதெல்லாம் வலைத்தளத்தில் அவர் எழுதுவதில்லை என்றாலும் ஃபேஸ்புக்கில் சுறுசுறுப்பாகச் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.    வெண்பா எழுதுவார்.

          கதை பிறந்த கதை பற்றிய அவர் எழுத்துகளுக்குப் பின் அவர் படைப்பு.

 ========================================================================
கதை பிறந்த கதை :


ஒரு நாள் இரயிலில் பயணம் செய்ய நடைமேடையில் காத்துக் கொண்டிருந்த ஒரு மதிய வேளையில் கூட்டமற்று இருந்த அந்த இடத்தின் ஒரு பெஞ்சில் பள்ளிச் சீருடையில் பதின்ம வயதுப் பையனும் பெண்ணும் மிக நெருங்கி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பள்ளிக்குச் சென்றிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அவர்களின் பெற்றோரைப் பற்றி நினைத்துப் பார்த்தேன்.


அதற்கு நான் கேள்விப்பட்ட ஒரு சம்பவத்தையும் இதையும் பிணைத்து கற்பனையும் கலந்து நான் எழுதியதே இந்தக் கதை 

==========================================================================






பிரமிளா



 ரேவதி வெங்கட் 





அது பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றில் அடியெடுத்து வைத்த காலம்.பத்தாம் வகுப்பில் நான்,கல்யாணி,பிரமிளா,கீதா நால்வரும் ஒரே வகுப்புப்பிரிவு என்பதால் பதினொன்றில் ஒரே பெஞ்சைத் தேர்வு செய்து கொண்டோம்.முதலில் கீதாவும் பின்னர் நானும் எனக்குப் பக்கத்தில் பிரமிளாவும் அவளுக்கு அடுத்து கல்யாணியும் என்று அமர்ந்திருப்போம்.பேச்சுக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் அளவே இருக்காது.


கீதா எப்போதும் பாட்டு மட்டுமே உலகம் என்றிருப்பவள்.ஸ்கூலில் நடக்கும் பாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் அது பற்றி பேசுவதுமே அவளுக்கு போதுமானது என்பதால் தேர்ச்சி அடையும்  அளவில் படித்தால் போதும் என்று எண்ணுபவள்.


நான்,கல்யாணி,பிரமிளா மூவரும் முதலிடத்தைப் பிடிப்பதில் நாட்டம் கொண்டவர்கள்.எனக்கும் கல்யாணிக்கும் பிரமிளா ஒரு சவாலாகவே இருந்தாள் என்று சொல்லலாம்.அதிக பட்சம் நானோ கல்யாணியோ ஓரிரு முறைதான் அவளை தாண்டியிருப்போம்.


ஒரு நாள் வகுப்பில் பிரமிளா வழக்கத்துக்கு மாறாக பாடத்தைக் கூட கவனிக்காமல் மிகுந்த உற்சாகத்தில் இருந்தாள்


“என்னடி!ரொம்ப உற்சாகமா இருக்கறாப்புல தெரியுது? “ என்று கல்யாணி ஆர்வம் தாங்காமல் கேட்டாள்
மத்தியானம் சாப்பாட்டு நேரத்துல சொல்றேன்” என்றாள் சற்றே பீடிகையுடன்.கொஞ்சம் வெட்கம் கலந்திருக்கிறதோ என்று எனக்கு சற்று சந்தேகம்


சாப்பாடு இன்னிக்கு க்ளாசில் வேண்டாம்.லைப்ரரி பின்னாடி போயிடலாம்” என்றாள்
கீதா எப்போதும் போல் மோர் சாதம் மாவடு எடுத்து வந்திருந்தாள்.இதற்காக எங்கள் மூவரைத்  தவிர வகுப்பு மொத்தம் அவளை தயிர் சாதம் என்ற நாமகரணம் சூட்டி அழைத்தது.கீதா இதற்கெல்லாம் கவலைப் படவோ அவமானப் படவோ மாட்டாள்.சொல்லப் போனால் எனக்கும் தயிர் சாதம் மாவடு நல்ல மதிய உணவு என்றே தோன்றும்.


எலுமிச்சை சாதத்தை ஒரு வாய் போட்டுக் கொண்டே “என்ன இன்னிக்கு வித்தியாசமா இருக்க?என்னவோ சொல்றேன்னயே “ என்று கல்யாணி ஆர்வம் தாங்காமல் ஆரம்பித்தாள்
என் டப்பாவில் இருந்த தக்காளி சாதம் பிரமிளா சொல்லப் போகும் விஷயத்தின் ஆர்வத்திற்கு சமமாக வாய்க்குள் இறங்கியது.


கீதாவோ ப்படியும் சொல்லத்தான போகிறாள் என்ற அலட்சியத்துடன் மோருஞ்சாத்தை மாவடுவுடன் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தாள்.


பிரமிளா டப்பாவைத் திறக்காமல் அதன் மேல் என்னவோ கிறுக்கிக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்தது அவள் இயல்புக்கு பொருந்தாமல் எங்களை ஒருவரையொருவர் பார்க்க வைத்தது.


” என்னடி!அவ கேக்கறா? நீ என்னவோ பேசாம உக்காந்திருக்க?” என்றேன் நான்


“இல்ல ராஜி ! எப்பிடி சொல்றதுன்னு தெரியலை.வந்து....”


“ பெல்லடிக்கறதுக்கு முன்னாடி சொல்லிடுவதானே ?” என்றாள் கீதா


“ நான் லவ் பண்றேன்” பளிச்சென்று உடைத்தாள்


கீதா வாயருகே கொண்டு போன தயிர் சாதத்தை அப்படியே வைத்துக் கொண்டு ஆ வென்று பார்த்தாள். நானும் கல்யாணியும் பீதியாய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்


“என்னடி உளறல்? ஏதோ எவனோ எவளையோ சைட்டடிக்கறத பத்தி வம்பு சொல்லுவயா இருக்கும்னு பாத்தா..”


”இல்லடி நெஜமாதான்.”


”சரி யாரைன்னு சொல்லித் தொலை” என்றாள் கல்யாணி கடுப்பாய்.


எங்க ஒண்ணு விட்ட அத்தை பையந்தான் .இந்த தடவ லீவுக்கு ஊருக்கு வந்திருந்தான்.ஏற்கனவே ஊர்ல திருவிழாக்கு போயிருந்தப்பலாம் பாத்திருக்கம்.ஆனா இப்பதான் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு லவ் பண்றம்”


“ப்ரமி! இதெல்லாம் படிக்கற வயசுல சரியா வராதுடி.வேணாம்.விட்டுடு” என்றேன்


“இதெல்லாம் ஒரு கவர்ச்சிதாண்டி. வாழ்க்கைல இதெல்லாம் தாண்டி எவ்வளவோ இருக்கு” என்று தன் பங்குக்கு கல்யாணி அரற்றினாள்


கீதாவோ பயத்தின் உச்சத்திலிருந்தாள்


அதனுடன் பெல்லடிக்க என்னவென்று சொல்ல முடியாத உணர்வுடன் எல்லோரும் வகுப்பறை சென்றோம்.அதன் பின் அன்று பிரமிளா மட்டுமல்ல நாங்கள் நால்வருமே வகுப்பை கவனிக்கவில்லை
அடுத்து வந்த மாதாந்திர தேர்வில் பிரமிளாவை நானும் கல்யாணியும் தாண்டியிருந்தோம். மதிப்பெண் அட்டையை  வாங்கும்போது நானும் கல்யாணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். இருவர் மனதிலும் பிரமிளாவின் எண்ணமே ஓடியது.


நாட்கள் ஓடிக் கொண்டிருந்தது.ஓரிரு முறை பிரமிளாவை நாங்கள் கண்டித்ததை அவள் விரும்பவில்லை.
இந்த நேரத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ஆரம்பித்து, காலத்துடன் அந்த வருடம் போட்டியிட ஆரம்பிக்க அவரவருக்கும் பேச கூட நேரமில்லாது மதிய உணவு நேரம்  கூட சுருங்கி, வகுப்பை விட்டு வெளியில் சாப்பிட தடை வந்து இந்த விஷயம் கிட்டத்தட்ட கவனத்திற்கு அப்பாற்பட்ட விஷயமாக எங்கள் மூவருக்கும் ஆனது.


ஆனால் நாங்கள் எதிர்பாரா வண்ணம் இது ஒரு நாள் பூதாகாரம் எடுத்தது.பன்னிரண்டாம் வகுப்பு அரையாண்டில் முதல் முறையாக பிரமிளா கணக்கில் தோல்வி அடைந்தாள்.


என்ன ஏது என்று அவளை நாங்கள் விசாரிக்கையில் அவள் எங்களை விட்டு ஒதுங்க விரும்பினாள்.
அத்துடன் முடிந்திருந்தால் கூட பரவாயில்லை.பொதுத் தேர்விற்கு முதல் நாள் ஒரு கலந்தாய்வு போல இருந்த வகுப்பின் முடிவில் பிரமிளா எங்களை சந்தித்து பேச விரும்பினாள்
“என்னடி! எப்பிடி படிச்சிருக்க?”

ராஜி! நான்... நான்...”


”என்ன சொல்லு ப்ரமி! “ என்றாள் கல்யாணி


அவள் சொன்னது எங்களுக்குள் பெரிய இடியையே இறக்கியது


பிரமிளா என்ன சொல்லப் போகிறாள் என்று அவளையே பார்த்துக் கொண்டு நாங்கள் மூவரும் பொறுமை காத்தோம்


“எனக்கு ..எனக்கு ..இந்த மாசம்...பீரியட்ஸ் வர்ல” என்றாள் நடுக்கமான குரலில்


“அதனாலென்ன?உனக்கு எப்பயுமே அப்டியும் இப்டியுமாத்தானே இருக்கும்? இதுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன்?பரீட்சை சமயத்துல இது வேற ஒரு தொந்தரவுன்னு யோசிக்கறயா? “ என்று கீது அப்பாவித்தனமான ஒரு கேள்வி கேட்டாள்


நானும் கல்யாணியும் லேசான கலக்கத்துடனும் அப்படி எல்லாம் இருக்காது, இருக்கக் கூடாதே என்ற கவலையுடனும் அவளைப் பார்த்தோம்.


ஆனால் எது இருக்கக் கூடாது என நினைத்தோமோ அதை அவள் சொல்லியே விட்டாள்


”போன மாசம் ஒரு நாள்...” என்று அவள் கூறியதை நான் என் வாழ் நாளிலிருந்தே எடுக்க முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும்


கீதா என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலின் தண்ணீர் மொத்தத்தையும் ஒரே மூச்சில் குடித்து தன்னை நிலைப்படுத்த முயன்றாள்


சொல்லி முடித்தவளோ அழுது கொண்டிருக்க நானும் கல்யாணியும் என்ன செய்வதென்றே தெரியாமல் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தோம்.


முதலில் சுதாரித்தது கல்யாணிதான்


“சரி.இப்ப அழுது என்ன ப்ரயோஜனம்? அப்ப புத்தி எங்க போச்சு.சொன்னப்பவாவது காது கொடுத்து கேட்டயா? என்று கத்தினாள்


”இப்ப என்ன செய்யறது” என்றாள் கீதா வெகுளியாய்


“இப்ப அவளைக் கத்தி என்னடி ஆகப் போறது?பேசாம அவங்க வீட்டில சொல்ல சொல்லிடலாம்” என்றேன்


“அறிவிருக்கா உனக்கு? மக்கு.மட சாம்பிராணி. நாளைக்கு பரீட்சையை வச்சுக்கிட்டு இன்னிக்கு போயி அவ வீட்டுல சொன்னா அவ வாழ்க்கையே போயிடும்” என்று என்னையும் காய்ச்சினாள் கல்யாணி
”வேற என்ன செய்ய?” என்று நானும் கண்களில் குளம் கட்ட ஆரம்பிக்க, கல்யாணி இன்னும் உச்சஸ்தாயிக்குப் போனாள்


“ஏண்டி ! நீ எதுக்குடி இப்ப ஒப்பாரி ஆரம்பிக்கற? நாளைக்கு பரிட்சையை வச்சுக்கிட்டு எல்லாம் கூத்தடிங்கடி” என்று தன் அதிர்ச்சியை எங்களிடம் கொட்டிக் கொண்டிருந்தாள்


சிறிது நேர அமைதிக்குப் பின் கல்யாணியே ப்ரமியைத் தேற்றி “இப்ப பேசாம மூஞ்சி அலம்பிண்டு வீட்டுக்குப் போ.பரீட்சைக்குப் படி.எல்லா பரீட்சையும் முடிஞ்சப்பறம் பாத்துக்கலாம். எழுந்திரு வா” என்றாள்


வாசலுக்கு வந்த போது ப்ரமியை அழைத்துச் செல்ல வந்திருந்த அவளின் அப்பா வெள்ளந்தியாய்ச் சிரித்து “என்னம்மா!எல்லாரும் பரிட்சைக்கு ரெடியாய்ட்டீங்களா ?” என்று கேட்க எனக்கு வயிற்றைப் பிசைந்து கொண்டு கண்ணில் வெளிப்பட, கல்யாணி என் கையை சமிஞ்யையாய் பிடித்தாள்.கீதா எங்களுக்குப் பின்னே புதைந்தாள்


வீட்டிற்குப் போனதும் என் பேயறைந்த முகம் பார்த்த அம்மா கேட்டவுடன் தாங்கமுடியாமல் கொட்டி விட்டேன். ”சரி பரீட்சைக்கப்பறம் அவளை சொல்ல சொல்லிக்கலாம்” என்று அம்மாவும் சமாதானம் செய்து அப்போதைக்கு முடிந்தது.


தேர்வுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகுப்பில் அமர்ந்து எழுத வேண்டியிருந்ததால் முடிந்த பிறகு கலந்தாலோசிக்கும்போதுதான்  பார்க்கும்படி ஆயிற்று.ஆனால் அதற்கு பிரமி வராமலே எங்களுக்கு முன்பே சென்று கொண்டிருந்ததால் அவளை பார்க்கவே முடியாமல் போனது.


விடுமுறையிலும் ஆளுக்கு ஒரு திக்கு செல்ல பரீட்சை முடிவு வெளிவரும் நாளும் வந்தது.லேசாக நாங்கள் பயந்தபடி ப்ரமி அதில் தோல்வியுற்றாள்.வீடு தேடி சென்று பார்க்க அந்த வயதில் பயமாக இருந்தது.


வருடங்கள் உருண்டோடி எனக்குத் திருமணாமாகி பிள்ளை பிறப்புக்கு வந்த போது என்னைப் பார்க்க கீதா வந்திருந்தாள்.திருமணமாகி டெல்லியிலிருப்பதாகவும், கல்யாணி மாமாவின் பையனை மணமுடித்து அதே டெல்லியில் வசிப்பதாகவும் கூறினாள்.தயிர் சாதம் மாவடுவின் அடையாளமற்று டெல்லி வாழ் வாழ்வின் அடையாளங்களைச் சுமந்திருந்தாள்.


“ப்ரமியைப் பாத்தயா? அவளைப் பத்தி ஏதாவது தெரியுமா?” என்றாள்


“ஒருமுறை போனேன் .அவ அம்மாதான் இருந்தாங்க.வேலைக்குப் போயிருக்கான்னு சொன்னங்க.எப்ப வருவா? எப்ப பாக்க முடியும்னு கேட்டேன்.அவங்க சரியா சொல்லல. நாம பாக்கறதை அவங்க விரும்பலையோன்னு தோணுச்சு.அதுக்கப்பறம் போகலை.


நீ இசைக் ல்லூரியில படிச்சயே.இப்ப என்ன பண்ணிண்டிருக்க”


“பாட்டு கூத்தெல்லாம் வேணாம்னு எங்காத்துக்காரரும் மாமியாரும் சொல்லிட்டாங்க.இப்ப அதெல்லாம் எதுவுமில்லை “ என்று சொல்லியபடி கிளம்பிய கீதாவைப் பார்க்க கஷ்டமாக இருந்தது.தயிர் சாதம் மாவடுவே அவளை சந்தோஷமாக வைத்திருந்ததாக எனக்குப் பட்டது.


இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு நாள் அம்மாவிடமிருந்து ஃபோன். ”உனக்கு ஒரு கல்யாணப் பத்திரிக்கை நம்மாத்து அட்ரஸ்க்கு வந்திருக்கு.யார்கிட்டேருந்து தெரியுமா?” என்றாள்


 “எங்கேருந்தும்மா வந்துருக்கு?”


“யார்கிட்டேருந்து வந்துருக்குன்னு கேளு.பத்திரிக்கை தபால்ல லாம் வரல. நேர்ல வந்து குடுத்துட்டு போனா”


“சரிம்மா.உன் சஸ்பென்ஸ் போதும்.யார் குடுத்தா? யாருக்கு கல்யாணம்?”


“பிரமிளாக்கு கல்யாணம்டி.அவளே நேரில வந்து குடுத்துட்டுப் போனா”


“யாரு?ப்ரமிளாவா? “ பரபரத்தேன் .” அவளே வந்தாளாமா? அவளை நீ பாத்தியா? பத்திரிக்கை குடுக்கும் போது அவ முகத்தை பாத்தியா? சந்தோஷமா இருந்தாளாம்மா? 

“ நீ உன் கல்யாணத்தின் போது புது மனுஷாள் கூட எப்பிடி இருக்கப் போறோம்னு விளக்கெண்ணெய் குடிச்சாப்புல முகத்தை வச்சிருந்தயே,அதை விட சந்தோஷமாவே இருந்தா எல்லாம்” அந்தப் பக்கத்தில் அம்மாவின் கடுப்பு நன்றாகவே புரிந்தது.


போஸ்ட்டில் அம்மா அனுப்பி வைத்த பத்திரிக்கையைப் பார்த்தேன்.என் இருபத்தைந்தாவது வயதில் நான் அப்படி ஒரு விலையுயர்ந்த பத்திரிக்கையை நாலைந்து தரம் பார்த்திருந்தால் அதிகம்.  ஆர்வமாக மணமகனின் பெயரைப் பார்த்தேன்.சதீஷ் குமார் என்று போட்டிருந்தது.அவனா? எனக்கு அவன் பெயர் தெரியாது.பெயரின் பக்கத்தில் பிரமாதமான படிப்பும் அதைச் சார்ந்த உத்தியோகமும் போட்டிருப்பதைப் பார்த்தால் அவனில்லையோ என்று சந்தேகம் வந்தது.


சில சந்தர்ப்பங்களின் பொருட்டு தஞ்சாவூரில் நடந்த அந்த கல்யாணத்திற்கு நான் போக இயலாமல் போனது.ஆனால் நான் போகாமல் இருந்ததைத்தான் பிரமிளா விரும்பினாள் என்றும் அவள்  தன்  நல் வாழ்க்கைப் பாதையின் அடையாளத்தை எனக்கு தெரிவிக்கவே பத்திரிக்கை அனுப்பி இருப்பதையும் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.


சரியாக ஒரு வருடத்திற்குப் பின் உடல் நலம் சரியில்லாத உறவினர் ஒருவரை பார்க்க நான் அந்த ஹாஸ்பிடலுக்கு சென்றேன்.பார்த்து விட்டு வெளியில் நடந்து வரும்போது பிரமியின் அம்மாவைச் சந்தித்தேன்.என்னைப் பார்த்ததும் அவர் முகம் வெளுப்பதைப் புரிந்து கொண்டாலும் ப்ரமியைப் பற்றி அறியும் உந்துதல் அதிகமாயிருந்தது.


“என்னம்மா !எப்பிடி இருக்கீங்க? என்னைத் தெரியுதா? நாந்தான் ராஜி!ப்ரமி எப்பிடி இருக்கா ? எங்க இருக்கா?”


பக்கத்து அறையின் உள்ளிருந்து வந்த பெண் இதைக் கேட்டு “ நீங்க அவ சினேகிதியா? நான் அவ நாத்தனார்.அவளுக்கு நேத்துதான் இங்க பொண்ணு பொறந்திருக்கு” என்றார்


“வாங்க” என்றபடி உள்ளே கூட்டிப் போனார். நீ...ண்ட இடைவெளிக்குப் பின் ப்ரமியின் சந்திப்பு.என்னைப் பார்த்ததும் ஆச்சர்யத்தில் பூரித்து முகம் மலர்வாள் என்ற எதிர்பார்ப்பில் நெருங்கினேன்.அவள் முகம் திகைத்து கடுகடுவென மாறியது. நான் அதிர்ந்து போனேன்.ஆனாலும் காரணமும் உடனே புரிந்து போனது.


“இவங்க ப்ரமி ஃப்ரண்டாம்” என்று ப்ரமியின் கணவனுக்கு அந்தப் பெண் அறிமுகம் செய்தாள்.கையில் வைத்திருந்த குழந்தையை என்னிடம் காட்டியபடி அவன் சிரித்தான்.குழந்தையும் கூட சிரித்தாற் போலிருந்தது.ஆனால் என் ப்ரமி என்னைப் பார்த்து ......


சற்று நேரம் பேசிக் கொண்டிருந்த போது அவளின் கண்களில் தெரிந்த தவிப்பின் அர்த்தம் எனக்கு நன்றாகவே  புரிந்தது..இறுதியாக ஒருமுறை ப்ரமியை நோக்கினேன். ஆமாம். நான்  இனி அவளை பார்ப்பதில்லை என தீர்மானித்தேன்.அவள் கடந்த கால வாழ்வின் கசப்பை நினைவூட்டும்படி நான் அவளைச் சந்தித்தோ பேசியோ அவளது இனிமையான வாழ்வின் நல்ல பக்கங்களுக்குள் போக முயற்சித்து அவளை நோகடிக்க மாட்டேன்.


வெளியில் வந்தேன்.என் ஜாதகத்தில், இனி ப்ரமியை நேருக்கு நேர் முட்டிக் கொள்வது போல் பார்த்தாலும் எனக்கு அவளைத் தெரியாது என்று எழுதினேன்.