திங்கள், 19 டிசம்பர், 2016

"திங்க"க்கிழமை 161219 :: கத்தரி பாசிப்பருப்புக் கூட்டு - நெல்லைத்தமிழன் ரெஸிப்பிசாப்பாட்டில் எனக்கு என்ன விருப்பமோ அதைத்தான் நான் பண்ணுவேன். அதுலயும் ஒருதடவை செய்துபார்த்து எனக்குப் பிடித்திருந்தால் (அதன் மீதான ஆசை தீரவில்லையானால்) அந்த வாரத்திலேயே இரண்டாவது முறையும் செய்துவிடுவேன். (இந்நிலையில் இருந்தால் நானெல்லாம் தொடர்ந்து சுயம்பாகம் செய்வேனா தெரியாது..  நீங்கள் சுறுசுறுப்பு நெல்லை...) 

பெரும்பாலும் 2-3 தடவை சாப்பிட்டாச்சுன்னா அதுல எனக்கு இருக்கற ஆசை அப்போதைக்குப் போய்விடும். (ஒரே ஐட்டத்தையே எதற்கு தொடர்ந்து இரண்டு மூன்று முறை எல்லாம் செய்கிறீர்கள்?  இடைவெளி விட்டுச் செய்ய வேண்டியதுதானே!!)  

அடுத்ததா அந்த ஐட்டத்தைச் செய்வதற்குப் பல மாதங்கள் ஆகிவிடும். நானாக செய்துபார்ப்பதே ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறைதான். மத்த சமயத்துல ஹோட்டல்தான். (ஓ... என் முதல் பிராக்கெட் கமெண்ட்டுக்கு பதில் இங்கே இருக்கோ!)  அதைவிட்டால் பெரும்பாலும் நான் பழங்கள் சாப்பிட்டுவிடுவேன். என் ஹஸ்பண்டுக்கு இப்படி நான் உணவு விஷயத்தில் செலெக்டிவ் ஆகவும், ஒழுங்கான உணவுமுறை மேற்கொள்ளாததும் பிடிக்காது. பேச்சலர் வாழ்க்கையே குறைந்தபட்சம் உணவிலாவது ஒரு ஒழுங்குமுறைக்கு உட்படாத வாழ்க்கைதானே.  நான் சமீபத்தில் செய்த கத்தரி பாசிப்பருப்புக் கூட்டு செய்முறை இந்த வாரத்தின் திங்கக் கிழமைப் பதிவாக.

கத்தரியில் செய்யும் எந்த உணவும், கத்தரி நல்லா இல்லைனா ருசிக்காது. இங்கு பத்து வகைகளுக்கும் மேல் கத்தரி கிடைக்கும். பச்சைல ஒரு 4 வகை, வயலெட்டில் ஒரு 6 வகை, பி.டி கத்தரி பெரியது – இதுக்கு தோல் ரொம்ப மினு மினுப்பா கண்ணாடில வச்சுப் பண்ணி பாலிஷ் போட்டமாதிரி இருக்கும் - இது கைக்கவே கைக்காது - ஒரு கத்தரியே ஒரு குடும்பச் சமையலுக்குப் போதும் – ஆனால் ருசி இருக்காது, வெள்ளை கலர் கத்தரி, வயலெட்டும் வெள்ளையும் கலந்த கத்தரி (எனக்கு சின்னச் சின்னதா, நல்ல வயலெட் நிறத்தில், கெட்டிக் காம்புடன் இருக்கும் கத்தரி ரொம்பப் பிடிக்கும் நெல்லை...) என்று பல வகைகள். அதுல சிலது எப்போவும் கைக்காது (கசப்பு இல்லை. ஆனால் ஒரு மாதிரி இருப்பதைத்தான் கைப்பது என்று எழுதியிருக்கேன்). அதுனால, நல்ல கத்தரி ரொம்ப முக்கியம்.
இதற்குத் தேவை ¼ கிலோ கத்தரி, ½ கப் பாசிப்பருப்பு (தோலில்லாதது).  வறுத்து அரைப்பதற்கு, வற்றல் மிளகாய் 2, மிளகு 20 (அல்லது 10), உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி, 2 மேசைக்கரண்டி தேங்காய்த் துருவல்.  தாளிப்பதற்கு, எப்போதும்போல் கருவேப்பிலை 1 ஆர்க்கும் கொஞ்சம் கடுகும்.
முதல்ல, பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும். உடனேயே, கடாயில், எண்ணெய் விடாமல், கொடுத்துள்ள வற்றல் மிளகாய், மிளகு, உளுத்தம்பருப்பு, தேங்காய்த் துருவலை வறுத்துக்கொள்ளவும். இது ஆறவேண்டும்.
குக்கரைத் திறப்பதற்குப் பத்து நிமிடம் முன்பு, கத்தரியைப் பெரிய தான்களாகத் திருத்தி, கொஞ்சம் தண்ணீர் உள்ள பாத்திரத்தில் இட்டு கொதிக்கவைக்கவும். தண்ணீர் காயின் அளவுக்குக் கொஞ்சம் குறைவாக இருந்தால் போதும். இப்போ, வறுத்தவைகளை, மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.  5 நிமிடத்தில் ஓரளவு கத்தரி வெந்துவிடும்.  இதோட, அரைத்த மிக்ஸைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். அப்போவே குக்கரைத் திறந்து வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்த்துவிடலாம். 4 நிமிடம் குறைந்த அனலில் கொதித்தால் போதுமானது.  அப்புறம், கடுகு, கருவேப்பிலையைத் தாளித்துச் சேர்த்துவிடவேண்டியதுதான்.
பாசிப்பருப்பு போடறதுனால, அடி பிடிக்காம அப்பப்போ கிளறிவிடவேண்டியிருக்கும்.


 
எனக்கு கத்தரி பாசிப்பருப்பு கூட்டு, சாதம் + நெய் போதும். இருந்தாலும் அன்னைக்கு வாழைக்காய் சீவல் கரேமது பண்ணினேன்.  நிறைய வாழைக்காய் தான் போட்டு வெந்தயக் குழம்பும் பண்ணினேன்.  வாழைக்காய் சீவல் கரேமதுக்கு, தோலியை எடுத்துவிட்டு, நல்ல முரட்டு வாழைக்காயை சீவிக்கணும். அப்புறம், கடாயில், கடுகு, உளுத்தம்பருப்பு, கருவேப்பிலை தாளித்துவிட்டு, அதிலேயே மெல்லிதாகச் சீவின வாழைக்காயையும் போட்டு, தேவையான உப்பு, கொஞ்சம் பெருங்காயப்பொடி போட்டு வதக்கவேண்டியதுதான். எவ்வளவு எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்திருக்கிறோமோ அவ்வளவு நல்லா இருக்கும்.

26 கருத்துகள்:

 1. கத்தரிக்காய் ரசவாங்கி செய்முறையை போல இருக்கிறது என்ன அதில் கடலைப்பருப்ப்பு போட்டு செய்வோம் ஆனால் இதில் பாசிப்பருப்பு போட்டு இருக்கிங்க போல இருக்கு இந்த முறையை செய்து பார்த்துவிட வேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
 2. நன்றாக இருக்கிறது கூட்டு.
  வாழைக்காய் சீவல் கரேமதும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. கத்தரி எனக்குப் பிடிக்காது என்பதால் அதில் செய்து பார்க்கும் எண்ணம் ஏற்படுவது இல்லை

  பதிலளிநீக்கு
 4. இதைக் கத்தரிக்காய்ப் பொரிச்ச குழம்புனு சொல்வோம். ரசவாங்கி செய்முறை வேறே மாதிரி இருக்கும். அதுக்குக் கொஞ்சம் நீர்க்கப் புளி விடுவாங்க. தஞ்சைப்பக்கம் புளி விட்டு வறுத்து அரைத்த கூட்டையே ரசவாங்கினு சொல்வாங்க. கத்திரிக்காய் தவிரப் பூஷணிக்காயிலும் ரசவாங்கிங்கற கூட்டு செய்வாங்க. வாழைக்காய்ச் சீவிக் கரேமுது செய்கையில் கொஞ்சம் போல் மிளகாய்ப் பொடியும் போட்டுக்கலாம். :)

  பதிலளிநீக்கு
 5. வாழைக்காயில் வெந்தயக் குழம்பு செய்ததில்லை. வறுத்து அரைத்து துவரம்பருப்புச் சேர்த்துக் கூட்டுக் குழம்பு செய்வோம்.

  பதிலளிநீக்கு
 6. http://sivamgss.blogspot.com/2010/10/blog-post_02.html
  கத்திரிக்காய் சாப்பிட முடியாத நிலைமை குறித்த ஒரு புலம்பல்! :)

  பதிலளிநீக்கு
 7. 'நன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம் - வெளியிட்டமைக்கு. நீங்கள் வெளியிடும்போது, பிராக்கெட்டில் நீங்கள் கமென்ட் பண்ணுவது நல்லா இருக்கு. முடிந்தவரை தொடருங்கள்.

  நன்றி ஜம்புலிங்கம் ஐயா, கரந்தை ஜெயக்குமார் அவர்கள்.

  அவர்கள் உண்மைகள் - உங்க கிட்ட இருந்து ரசவாங்கி பின்னூட்டம் எதிர்பார்க்கவில்லை. மதுரைத் தமிழன் சமையல் கில்லாடிதான்.

  நன்றி கில்லர்ஜி.

  நன்றி திண்டுக்கல் தனபாலன்.

  நன்றி அசோகன் குப்புசாமி அவர்களுக்கு

  நன்றி கோமதி அரசு மேடம்.

  நன்றி ஜி.எம்.பி ஐயா.. கத்தரியை உணவிலிருந்து கத்தரிக்கலாமா?

  நன்றி கீதா மேடம். வாழைக்காய் சீவிக் கரேமதில், நீங்கள் சொல்வதுபோல் மிளகாய்ப்பொடி போட்டால் நல்லாத்தான் இருக்கும். வாழைக்காயில் வெந்தயக் குழம்பு ரொம்ப நல்லா இருக்கும். எனக்கு வெந்தயக் குழம்புன்னா, ஒண்ணு வெண்டைக்காய்த்தான் இல்லைனா வாழைக்காய்த் தான். அப்போதான், மோர் சாதத்துக்கு ஒவ்வொரு தானாப் போட்டுக்கொண்டு சாப்பிட நல்லா இருக்கும் (பசங்களுக்குக் கையில் போடும்போது ஒவ்வொரு வாய்க்கும் ஒரு தானோடு குழம்பு விடுவேன்).

  பதிலளிநீக்கு
 8. படங்களும், செய்திகளும், செய்முறை குறிப்புகளும் வழக்கம்போல அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  -oOo-

  இங்கு திருச்சி அருகே ஐயம்பாளையம் என்ற கிராமத்தில் விளையும் கத்திரிக்காய் மிகவும் ருசியாக இருக்கும். அதுபோன்ற ருசியான கத்திரிக்காயில் நிறைய தேங்காய் துருவல் போட்டு செய்த பொரிச்சகூட்டு மட்டுமே நான் விரும்பி சாப்பிடுவேன். அதுவும் இந்த பொரிச்சக்கூட்டு, சின்ன வெங்காயம் போட்டு செய்த காரசாரமான வற்றல் குழம்பு சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள தேவாமிர்தமாக இருக்கும்.

  மற்றபடி கத்தரிக்காயை எண்ணெய்க்கறியாக, குழம்புத்தானாக எனு வேறு எந்த ரூபத்தில் செய்தாலும் நான் அதனைத் தொடுவது இல்லை.

  பதிலளிநீக்கு
 9. துபாய் சென்றிருந்தபோது அங்குள்ள காய்கறிகள் விற்கும் சூப்பர் மார்க்கெட்டில் உலகின் பலநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 20 வகையான கத்திரிக்காய்களை வரிசையாக அடுத்தடுத்து அடுக்கி வைத்திருந்தார்கள்.

  அதில் ஒரு கத்திரிக்காய் மிகவும் பிரும்மாண்ட சைஸில் இருந்தது. அந்த ஒரே கத்திரிக்காய் மட்டுமே சுமார் இரண்டு கிலோ இருக்கும். :)))))

  பதிலளிநீக்கு
 10. அருமையான சமையல் வழிகாட்டல்

  பதிலளிநீக்கு
 11. #என் ஹஸ்பண்டுக்கு#?
  அதானே பார்த்தேன் ,நெல்லைத் 'தமிழனால்'எப்படி இவ்வளவு ரெசிபிக்களை சொல்ல முடிகிறது என்று :)

  பதிலளிநீக்கு
 12. அட! நம்ம வீட்டு ரெசிப்பி!! நெல்லை! ஹிஹிஹி!!! இதை எங்கள் பாட்டி புளியில்லா பொரிச்ச கூட்டு என்பார். இதில் புளி விட்டுச் செய்தால் புளியிட்ட பொரிச்ச கூட்டு என்பார்.

  இன்றுதான் தளத்திற்கு வந்தேன்...பார்த்தால் நானும் இதையே தான் செய்திருந்தேன்!!!! அட! என்று சொல்லிக் கொண்டேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீ எனக்கும் குட்டி குட்டிக் கத்தரிக்காய் காம்புடன் அதுதான் ரொம்பப் பிடிக்கும். இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்....ஸ்டஃப்ட் கத்தரிக்காய் முதல், பொடி தூவி செய்வது வரை...

  பதிலளிநீக்கு
 14. கோபு சார்.. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. சிலவற்றைப் படித்துவிட்டால், எங்கே படித்தேன் என்பதுதான் மறந்துபோகுமே தவிர, விஷயம் ஞாபகத்திலேயே இருக்கும். ஐயம்பாளையம் கத்தரிக்காய், ராமா கஃபே-டிபன், நியூ மதுரா ஹோட்டல் சாப்பாடு (4 வடக்கு ஆண்டார் வீதி), அப்புறம் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கடையில் ஸ்பெஷல் பெருங்காயம் (உங்களின் அடையைத் தின்று பழகு இடுகையில் எழுதியிருந்தது).

  துபாய் 2 கிலோ கத்தரி பின்னூட்டம் - இதுக்காக, என்னுடைய ஆல்பத்தைப் புரட்டி, 2 படம் எடுத்தேன் (பெரிய கத்தரி). அதுவும் தவிர, மிகப்பெரிய வாழைப்பழம், தேங்காய் படம்லாம் எடுத்துவச்சிருக்கேன். ஆமாம், ஐயம்பாளையம் கத்தரிக்காய் ரசிகருக்கு, அந்த 20 வகைக் கத்திரிக்காயில் என்ன ஆர்வம் இருக்கமுடியும்?

  பதிலளிநீக்கு
 15. 'நன்றி ஜீவலிங்கம்.

  பகவான்'ஜி - ரெசிப்பில்லாம் கலந்து கட்டி வருவது. என் ஹஸ்பண்ட் சொல்லிக்கொடுத்தது மட்டுமல்ல. பின்னூட்டத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. தில்லையகத்து கீதா ரங்கன் - பின்னூட்டத்திற்கு நன்றி. நீங்களும் இதே ரெசிப்பிதான் என்பதை அறிந்து மகிழ்ச்சி. குட்டி குட்டி கத்தரியாக இருந்தாலும், சில வகைகள்தான் கைப்பதில்லை. அதைக் கண்டுபிடித்துவிட்டால் அப்புறம் அதே வகைதான் வாங்க சௌகரியமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 17. கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு இது. நீங்க கூட்டாக பண்ணிவிட்டீர்கள். காய் கொஞ்சமாக இருந்தால் குழம்பா மாறிவிடும். நிறைய இருந்தால் கூட்டுதான். நான் ஒரு தக்காளியையும் வதக்கி அரைப்பதில் சேர்ப்பேன். கலர்ஃபுல். டேஸ்ட்ஃபுல். ஜமாய்க்கரீஙகோ!!!!!!!!! மிகவும் பிடித்தது. அன்புடன்

  பதிலளிநீக்கு
 18. கத்திரிககாய் கூட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும்...

  பதிலளிநீக்கு
 19. நன்றி ராமலக்ஷ்மி அவர்களுக்கு

  காமாட்சி மேடம்.. நன்றி... பெரியவர்களின் பின்னூட்டம் மகிழ்ச்சி தருகிறது

  நன்றி பரிவை குமார்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!