Tuesday, December 13, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: திருப்பம்     இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் மூத்த பதிவரான திருமதி கோமதி அரசு மேடம் அவர்களின் கதை இடம்பெறுகிறது.
 

     அவரின் தளம் திருமதி பக்கங்கள்.


     நான் நேரில் சந்தித்துள்ள பதிவர்களில் ஒருவர்!  முன்னர் ஒருமுறை திருக்கடையூர் சென்றபோது மயிலையில் இறங்கி பஸ் மாறும்போது மேடத்தின் நினைவு வந்தது.  அவர்கள் அப்போது அங்குதான் இருந்தார்கள்.  அதைப் பற்றி அவர்கள் தளத்திலும் குறிப்பிட்டபோது, சொல்லியிருக்கலாமே என்றார்கள்.

     தற்சமயம் மதுரையில் வசிக்கிறார்கள்.  திரு திருநாவுக்கரசு அவர்கள் கல்லூரி ஒன்றில் ப்ரொபஸராக இருந்து ஒய்வு பெற்றவர்.  சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளர்.  அழகாகப் படங்கள் வரைபவர்.  கோமதி மேடமும் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொண்டவர்.  புகைப்பட வல்லுநர்களில் ஒருவர்.  கோவில்களையும், இயற்கைக்கு காட்சிகளையும் அடுக்கடுக்காகப் படங்கள் எடுத்துக் பகிர்வார்.  இந்தப் புலிகளுக்குப் பிறந்த இவர்களின் மகன் சாக்பீஸிலேயே ஒரு கோவில் செய்திருக்கிறார்.  அவர் பதிவொன்றில் இது பற்றிய விவரம் சொல்லியிருக்கிறார் கோமதி அரசு மேடம்.  நாங்கள் நேரிலேயே அந்தக் கோவிலையும் பார்த்தோம்.


     கதை பற்றிய அவரின் முன்னுரையைத் தொடர்ந்து அவரின் படைப்பு தொடர்கிறது...====================================================================


முன்னுரை :-
 

நான் 2009 ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி  வலைத்தளம்  ஆரம்பித்தேன். என் குழந்தைகளிடமிருந்து கற்றுக் கொண்டு  வலைத்தளத்தில் எழுத ஆரம்பித்தேன்.
 

ஜூன் மாதம் எழுதக் கற்றுக் கொண்டு  அக்டோபர் மாதம்  போட்டியில் கலந்து கொள்வது  என்பது  குருட்டு தைரியம்.


ஆனால்  அதில் ஒரு வேடிக்கை என்னவென்றால்  கதையை கேட்டு இருந்த சர்வேஷனுக்கு அனுப்பாமல்  என் தளத்திலேயே வைத்துக் கொண்டது. போட்டி கதைகள் ஒவ்வொன்றாக வரும் போது என் கதையைப் பற்றி ஒன்றும் வரவில்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
 
போட்டி முடிவுகள் வந்தன  . பரிசு வராது என்று தெரிந்தாலும் முடிவுகளையும், கலந்து கொண்டவர்கள் பெயர் பட்டியலையும் பார்த்த போது என் பெயர் இடம் பெறவில்லை  என்பது தெரிந்தது.
 
 
 அப்புறம் தான் என் தவறு புரிந்தது கதை கேட்டவருக்கு நான் அனுப்பி வைக்க வேண்டும் என்பது. (தமிழ்மணத்திற்கு மட்டும் அனுப்பிவிட்டு இருந்தேன்.)

வலைச்சரத்தில்  அந்த கதையை   இரண்டொரு ஆசிரியர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

”எங்கள் பிளாக் ” ஸ்ரீராம் என்னிடம் கதை கேட்ட போது குட்டிக்கதைதான் எழுதி இருக்கிறேன் என்று சொன்னேன் அனுப்பி வைக்க சொன்னார். 
படித்து விட்டு சிரிக்காதீர்கள் . ”திருப்பம்” என்ற தலைப்பில் கதை இருக்க வேண்டும் முடிவு ”நச்” இருக்க வேண்டும் என்பதால் இப்படி.

இந்த கதையை கேட்டு வாங்கிய ஸ்ரீராமுக்கு நன்றி. படிக்க போகும் உங்களுக்கும் நன்றி.


====================================================================

திருப்பம்


கோமதி அரசு .

(சர்வேசன் 500-’நச்’னு ஒரு கதை 2009 போட்டிக்கு)
சிவநேசனின் வீடு அன்று காலை முதலே ஒரே பரபரப்பாய் இருந்தது. அவர் மகனுக்குப் பெண் பார்க்கப் போகிறார்கள்.  அவர், "குறித்த நேரத்தில் நாம் பெண் வீட்டில் இருக்க வேண்டும். கால தாமதம் செய்யாமல் கிளம்புங்கள்" என்று தன் மனைவி மகன்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

ஆம்! அவருக்கு இரண்டு மகன்கள். அவர் மனைவி பட்டுப் புடவையில் வைரநகைகள் மின்ன பூரணி என்ற பெயருக்கேற்றாற்போல் பூரண கலசம்போல்
வந்தார்.  தன் மனைவி பூரணியைப் பார்த்த சிவநேசன் ஒரு கணம் மெய்ம்மறந்து ரசித்துவிட்டு குறும்பாய் "இப்போது நாம் நம் மகனுக்குப் பெண் பார்க்கப் போகிறோம்" என்று நினைவூட்டினார்.

பூரணியும் வெட்கத்தால் சிவந்து "சரி, சரி"  என்று சொல்லி, பூ, பழம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு காரில் ஏறினார்கள்.

காரில் போகும்போது தன் மகன்களைப் பெருமிதமாய்ப் பார்த்துக்கொண்டார் பூரணி.அழகு, படிப்பு, நல்ல வேலை, நல்ல குணம் நிரம்பிய தன் மகனுக்கு நல்ல மனைவியாய் பார்க்கும் பெண் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

பெண்வீட்டை அடைந்தனர்.

பெண்வீட்டு வாசலில் அழகாய்ச் செம்மண் இட்டுக் கோலம் போட்டிருந்தார்கள்.  வரவேற்பறையில் வெண்கல உருளியில் பலவித மலர்களால் அலங்கரித்திருந்தனர்.  பெண்வீட்டார் சிவநேசனின் குடும்பத்தாருக்கு நல்ல வரவேற்பளித்தார்கள். சிவநேசனின் மனதில் பெண்வீட்டைப் பற்றிய மதிப்பீடு உயர்ந்துகொண்டிருந்தது.


வீட்டின் உள்ளே மூக்கை உறுத்தாத ஊதுவத்தியின் நறுமணம்.


சிறு ஒலியில் காயத்திரி மந்திரம் பின்னணியில் ஒலிக்க, எல்லோரும் அமர, உறவின்ர்களின் அறிமுகப்படலம் நடந்தது. பிறகு இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலையைப் பற்றிப்

பேச்சு வந்தது.  அப்போது அதில் கலந்துகொண்ட சேகரின் அணுகுமுறை, நேர்மறையான சிந்தனைகள் ஆகியவற்றை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பூங்குழலிக்குப் பிடித்தது.

பெண்வீட்டில் உள்ள வயதில் மூத்தவர், பெண்ணைப் பார்த்துவிடலாம் எனப் பேச, பெண் அழைத்துவரப்பட்டாள்.  பெண்ணைப் பார்த்தவுடனேயே அனைவருக்கும் பிடித்துவிட்டது.  பெண்ணின் உயரம்,பெண் நடந்துவந்த விதம், புன்சிரிப்புடன் அனைவரையும் வணங்கிய பாங்கு எல்லாம் பிடித்திருந்தது.


பூங்குழலியைத் தன் மகனுக்குத் திருமணம் செய்யப் பூரணி முடிவெடுத்துவிட்டார்.  தன் கணவனைத் தனியாக அழைத்துத் 'தன் மகனுக்குப் பிடித்திருக்கிறதா' எனக் கேட்டு, 'பிடித்திருந்தால் பெண்வீட்டாரிடம் முடிவு தெரிவித்துவிடுவோம்' என்று கூறினார்.  சிவநேசன் தன் மகன்களிடம் கேட்டார்,பெண் எப்படி என்று. 


கல்யாணப் பையன் சங்கர், பெண் பிடித்திருக்கிறது என்றான்.  தம்பி சேகரும் பெண் நன்றாக இருக்கிறார் என்று தன் கருத்தைச் சொன்னான். சிவநேசன் பெண்ணின் தந்தையிடம் எங்களுக்குப் பூரண சம்மதம்.எப்போது நிச்சயம் செய்வது என்று கேட்டார். பெண்ணின் கருத்தைக் கேட்க பெண்ணின் அப்பா உள்ளே போனார்.

வெளியில் வரும்போது தயங்கித் தயங்கிப் பெண்ணிற்கு சேகரைததான் பிடித்திருக்கிறதாம் என்று சொன்னார்.

53 comments:

'நெல்லைத் தமிழன் said...

ரோஜாவை நினைவுகூற வைத்துவிட்டீர்கள். பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணுடன், சுமாராக இருக்கும் அவளின் தோழிகள் இருப்பர் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். பையனோட அவரின் தம்பியையும் கூட்டிச் செல்வதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
எதிர்பாராத திருப்பம்தான்

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழ் மணம் ஓட்டுப் பட்டைக்கு என்னவாயிற்று நண்பரே
தம பட்டை வெளிப்படவே மறுக்கிறது
சில சமயம் காணாமல் போய்விடுகிறது

திண்டுக்கல் தனபாலன் said...

’நச்’னு ஒரு திருப்பம்...

திண்டுக்கல் தனபாலன் said...

கரந்தை ஜெயக்குமார் அய்யா அவர்களுக்கு : தமிழ்மணம் ஓட்டை போட்டு விட்டு கருத்துரை போடுங்கள்... ஏன் என்றால் கருத்துரை போட்ட பின் தளம் https://...என்று மாறி விடும்... ஓட்டுப்பட்டை இருக்காது...

rajalakshmi paramasivam said...

எதிர்பாராத திருப்பம் . பெண் பார்க்கும் நிகழ்ச்சியை கண் முன் நிறுத்தி விட்டார் திருமதி கோமதி. பாராட்டுக்கள் கோமதி. பகிர்ந்து கொண்ட ஸ்ரீராம் சாருக்கு நன்றி.

Bagawanjee KA said...

செத்தாண்டா சேகர் என்று நினிக்க முடியவில்லை :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பிறகு இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலையைப் பற்றிப்
பேச்சு வந்தது. அப்போது அதில் கலந்துகொண்ட சேகரின் அணுகுமுறை, நேர்மறையான சிந்தனைகள் ஆகியவற்றை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பூங்குழலிக்குப் பிடித்தது.//

இந்த வரிகளைப் படித்து முடித்ததும், கதையின் தலைப்பையும் வைத்து சற்றே நான் யோசித்ததும், சேகர் இரண்டாவது மகனாகத்தான் இருக்கணும் என இந்தக்கதையின் முடிவினை என்னால் யூகிக்க முடிந்து விட்டது.

ஓர் மிக சிறிய சம்பவத்தை சிறப்பாகக் கொண்டு வந்து கதையாக்கி எதிர்பாராததோர் திருப்பத்துடன் முடித்துள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

பெண் பார்க்கும் படலத்தில் நாம் மிகவும் உஷாராகவே இருக்க வேண்டும். மணப் பெண்ணைவிட ஓர் அழகியை அவள் அருகில் நிற்க வைக்கக்கூடாது. இவளுக்கு அவ(ள்)லக்ஷணம் என்று தோன்றிவிடும், எனச் சொல்வார்கள்.

இதற்கு உதாரணமாக நெல்லைத் தமிழன் சொல்லியுள்ள ’ரோஜா’ திரைப்படம் எனக்கும் அடிக்கடி நினைவுக்கு வருவது உண்டு.

இங்கு இந்தக்கதையில் மாப்பிள்ளை விஷயத்தில், மணப்பெண்ணின் மனதில் ஓர் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது. எப்படியோ தன் மனதில் பட்டதை, வெட்கப்பட்டு கூச்சப்பட்டு மறைக்காமல், தன் பெற்றோரிடம் பளிச்சென்று சொல்லிவிட்ட, மணப்பெண்ணைப் பாராட்டத்தான் வேண்டியுள்ளது.

பிறகு என்னென்ன நடந்திருக்கும் (அந்த சம்பந்தம் கல்யாணத்தில் முடிந்திருக்குமா இல்லையா) என்பதை அவரவர்கள் யூகத்துக்கு விட்டுள்ளதும் நல்லதுதான்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

கிட்டத்தட்ட இதே போல ஆனால் முற்றிலும் வேறாக ஓர் நிகழ்ச்சி எங்கள் உறவினர்
வீட்டிலும் நடந்துள்ளது. அதைப்பற்றியும் கொஞ்சம் நான் சொல்லி விடுகிறேன்.

தனக்குப் பெண் பார்க்க வேண்டி அண்ணன் மட்டுமே தன் பெற்றோர்களுடன் சென்றிருந்தார். அந்தப் பெண் அந்தப்பிள்ளையை ஏதோ அவளுக்கு மனதில் தோன்றிய சில காரணங்களால் பிடிக்கவில்லை என தைர்யமாகச் சொல்லி ரிஜக்ட் செய்து விட்டாள். புறப்பட்டு விட்டார்கள்.

அந்தப்பிள்ளைக்கு திருமண வயதில் ஓர் தம்பி இருக்கிறார் என்பதெல்லாம் அந்தப் பெண்ணுக்கு சத்தியமாகத் தெரியாது.

பெண் பார்க்க வந்திருந்த அந்தப் பையனுக்கு, சீக்கரமாக வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தும் விட்டது.

இந்தப்பெண்ணுக்கு மட்டும் திருமணம் தாமதமாகிக்கொண்டே இருந்தது.

ஒருசில வருடங்களுக்குப்பின் ஒரு நாள் ஒரு ஜாதகம் வந்து பொருத்தமாக இருந்து, இந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

அந்தப் பெண் மணந்துகொண்ட மாப்பிள்ளைப் பிள்ளையாண்டான் யாரென்றால், ஏற்கனவே இவளைப்பெண் பார்க்க வந்து இவளால் ரிஜக்ட் செய்யப்பட்டவரின் சொந்தத் தம்பி மட்டுமே.

இதன்பின் அந்தக்குடும்பத்தில் இவர்கள் ஒருவரையொருவர் எப்படித்தான் ஃபேஸ் செய்ய முடியுமோ என நான் நினைத்துக்கொண்டேன்.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்லுகிறார்கள். இன்னாருக்கு இன்னார் என்று என்றோ, எங்கோ, யாராலோ முடிவு செய்யப்பட்டுள்ளது போலும். யார் தாலியை யார் கட்ட முடியும் என்றும்கூட சொல்லுவார்கள்.

இதெல்லாம் ஆங்காங்கே எதிர்பாராமல் நடக்கும் அபூர்வ நிகழ்வுகளே. ஆச்சர்யப்பட ஏதும் இல்லைதான்.

கோமதி அரசு said...

வணக்கம், சென்னையில் மழை, புயல், மின் தடை இவ்வளவு இருந்தும் என் கதை குறிப்பிட்ட தேதியில் எங்கள் ப்ளாக்கில் இடம்பெற்றதற்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் நெல்லைதமிழன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி. எங்கள் அக்காவை பெண்பார்க்க தம்பிகள் மற்றும், அம்மா,அப்பாவுடன் தான் வந்தார்கள் என் அக்காள் கணவர். எல்லோர் சம்மதமும் கிடைக்க வேண்டும் என்ற ஆவல்தான் காரணம்.

Madhavan Srinivasagopalan said...

// வணக்கம், சென்னையில் மழை, புயல், மின் தடை இவ்வளவு இருந்தும் என் கதை குறிப்பிட்ட தேதியில் //

'எங்கள்'வலைதளத்தின் சிறப்புகளில் அதுவும் ஒன்றே !
# எனக்கும் தெரியும் அதன் ரகசியம்

கோமதி அரசு said...

வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ராஜலக்ஷ்மிபரமசிவம், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பகவான் ஜி , வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.
கதையின் முடிவை கண்டுபிடித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.


போட்டியில் சுருக்கமாய், முடிவு நச் என்று இருக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்கள். அதனால் முடிவு இப்படி கொடுத்தேன்.

பிறகு என்னென்ன நடந்திருக்கும் (அந்த சம்பந்தம் கல்யாணத்தில் முடிந்திருக்குமா இல்லையா) என்பதை அவரவர்கள் யூகத்துக்கு விட்டுள்ளதும் நல்லதுதான்.//

மீண்டும் இந்த கதையை விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்து எழுதவே இல்லை.

//திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்லுகிறார்கள். இன்னாருக்கு இன்னார் என்று என்றோ, எங்கோ, யாராலோ முடிவு செய்யப்பட்டுள்ளது போலும். யார் தாலியை யார் கட்ட முடியும் என்றும்கூட சொல்லுவார்கள்.

இதெல்லாம் ஆங்காங்கே எதிர்பாராமல் நடக்கும் அபூர்வ நிகழ்வுகளே. ஆச்சர்யப்பட ஏதும் இல்லைதான்.//

எனக்கு தெரிந்தவர் ஒருவர் குடும்பத்திலும் நீங்கள் சொல்வது போல் தங்கை அண்ணனை, அக்காள் தம்பியை திருமணம் செய்து இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சார்.

கோமதி அரசு said...

வணக்கம் மாதவன் , வாழ்க வளமுடன்.
//'எங்கள்'வலைதளத்தின் சிறப்புகளில் அதுவும் ஒன்றே !
# எனக்கும் தெரியும் அதன் ரகசியம்//

ஓ! அப்படியா?
கதையைப் பற்றி கருத்து சொல்லவில்லையே?

Madhavan Srinivasagopalan said...

// கதையைப் பற்றி கருத்து சொல்லவில்லையே? //
கதை பற்றிய .கருத்தா... ? நல்லவேளை, எனக்குத் தம்பி இல்லை.. :-)

G.M Balasubramaniam said...

ஆங்கிலத்தில் you can not marry another man"s wife என்னும் சொல் வழக்கு உண்டு.

middleclassmadhavi said...

'நச்'னு ஒரு கதை போட்டிக்குத் தகுந்தவாறு! நல்லாயிருந்தது!!

கரந்தை ஜெயக்குமார் said...

வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கு நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

தம வாக்களித்து விட்டேன்
வலைச் சித்தர் வாழ்க

கோமதி அரசு said...

வணக்கம் மாதவன் , வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பாலசுப்பிரமணியம் சார், வாழ்க வளமுடன். நீங்கள் சொன்ன கருத்து போல் கோபாலகிருஷ்ணன் சாரும் சொல்லி இருந்தார். உங்கள் கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் மாதவி, வாழ்க வளமுடன். உங்கள் கருத்துக்கு நன்றி.

Ramani S said...

சொல்லிச் சென்ற விதமும்
திருப்பம் என்ற தலைப்புக்கு ஏற்றார்ப்போல
எதிர்பாராதிருப்பமும் அருமை
வாழ்த்துக்களுடன்...

காமாட்சி said...

பெண்கள் இருவர் சற்று முன்பின் அழகிருந்தால் சின்னவளை பிள்ளை வீட்டாரின் முன் வரவே விடமாட்டார்கள். இன்னொருபெண் இருக்கிராள் என்றும் சொல்ல மாட்டார்கள். கலியாணம் நடக்கும்போது
இப்படி இன்னொரு பெண் இருக்கிராள் என்று சொல்லக்கூட இல்லை என்று மனஸ்தாபப் படுகிறவர்களும் உண்டு.
நேர் மாறாகப் பெண்ணே தம்பியைப் பிடித்திருக்கிறது என்று சொல்லுமளவிற்கு தைரியமுள்ள ஒரு பெண்ணை உருவகப்படுத்தியுள்ள உங்களுக்குப் பாராட்டுதல்கள். ஆனாலும் அந்தப் பெண்ணிற்குச் சில ஸவால்கள் காத்திருக்கும். தம்பியே வேண்டாமென்றுகூடச் சொல்லலாம். இன்னொரு பெண்ணைக் குறிப்பிடாத மாதிரி தம்பிகளும் பெண் பார்க்கப் போவது அபூர்வம்தான். வாணிராணியில் இருந்தது.அது தமாஷிற்கு.
அதற்கென்ன சின்னவனுக்கே செய்து கொள்வோம். பெரியவனுக்கு இன்னும் சிறந்த பெண் அமையப் பிராப்தமோ என்னவோ நடக்கட்டும் என்று பெற்றோர்கள் முடிவு செய்து பண்புள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கதையின் முடிவை நான் உருவகப்படுத்திக் கொண்டேன். நச் என்ற கதையானாலும், எவ்வளவோ பல கதைகளை மனம் உருவகப்படுத்த,கற்பனைசெய்ய,மலரும் நினைவுகளை உருவகப்படுத்த உதவியது. ஸ்ரீராம் அவர்களுக்கும், உங்களுக்கும் மிக்க நன்றி. அன்புடன்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை. பாராட்டுகள் கோமதிம்மா.....

Dr B Jambulingam said...

கடைசி பத்தி கதையையே திருப்பிவிட்டது. கோமதி அரசு அவர்களின் பதிவுகளை அவ்வப்போது படித்து வருகிறேன். கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

Bhanumathy Venkateswaran said...

சாதாரணமாக பெண் பார்க்கும் நிகழ்ச்சியை பெண் வீட்டாரின் பார்வையில்தான் பெரும்பாலானோர் பதிவு செய்வார்கள். ஆனால் நீங்கள் பிள்ளை வீட்டாரின் பார்வையில் விவரித்துள்ள விதம் அருமை! தலைப்பிற்கு ஏற்றார் போல் நச்சென்ற கதை. பாராட்டுக்கள்!

கோமதி அரசு said...

வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் காமாட்சியம்மா, வாழ்க வளமுடன்.
நீங்கள் சொல்வது போல் வேறு இரு முடிவுகள் வைத்து இருந்தேன் அதை பகிரவில்லை. மனதில் தோன்றிய பல கதைகளை பகிருங்கள் நாங்களும் படிக்கிறோம்.
உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் வெங்கட், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி.

கோமதி அரசு said...

வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி.

மனோ சாமிநாதன் said...

கதையை சொல்லிச் சென்ற விதம் அழகு, கோமதி!
ஆண்கள் தான் இப்படி பார்க்கப்போன பெண்னை விட்டு, அங்கேயே வேறொரு பெண்ணை பிடித்திருக்கிற‌து என்று சொல்வதை சினிமா, உண்மை நிகழ்ச்சிகள், கதைகளில் என்று பார்த்திருக்கிறேன். இப்போது தான் பெண்ணும் அது போல செய்வதைப்பார்க்கிறேன்!

கோமதி அரசு said...

வணக்கம் மனோ சாமிநாதன் , வாழ்கவளமுடன்
ஒரு திருப்பம் தானே இந்த கதை. உங்கள்
கருத்துக்கு நன்றி.

Angelin said...

எதிர்பாரா திருப்பம் ..இப்படி திடீர்னு திருப்பம் வச்சா மாப்பிள்ளை வீட்டாருக்கு எப்படி இருந்திருக்கும் !!
கோமதி அக்கா எதை செய்தாலும் நேர்த்தியா இருக்கும் இந்த கதையும் அப்படிதான் ஊதுபத்தி வாசனையும் காயத்ரி மந்திரமும் கேட்டார் போலிருக்கு கதையை வாசிக்கும்போது

கோமதி அரசு said...

வணக்கம் ஏஞ்சல் , வாழ்க வளமுடன்.
ஊதுபத்தி வாசமும், காயத்ரி மந்திரமும் கேட்குதா? மகிழ்ச்சி.
உங்கள் கருத்துக்கு நன்றி.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

புயலுக்குப் பின்னே அமைதி என்று சொல்வார்கள். இங்கே புயலுக்குப் பின்னே சரிவர மின்சாரம் சப்ளாய் இல்லாததால் இப்பொழுது தான் கோமதி அரசு அவர்களின் இந்த குட்டிக்கதையை படிக்க வாய்ப்பு கிடைத்தது.

என்னதான் கதை எழுதுவது பலருக்குக் கைவந்த கலையாக இருந்தாலும், இந்த ".." '...' குறியீடுகளை மிகச்சரியாகப் போடுவது சிலரே. இதில் கோமதி அரசு வல்லுனராக இருக்கிறார். பத்திரிகைகளில் பிரசுரமாகும் கதைகளை வெகு உன்னிப்பாக வாசித்ததினால் விளைந்த ஞானம் இது என்று தெரிகிறது.

'பிறகு இப்பொழுது உலகம் முழுவதும் உள்ள பொருளாதார மந்த நிலையைப் பற்றிப்
பேச்சு வந்தது. அப்போது அதில் கலந்துகொண்ட சேகரின் அணுகுமுறை, நேர்மறையான சிந்தனைகள் ஆகியவற்றை உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்த பூங்குழலிக்குப் பிடித்தது'-- என்று பூங்குழலியின் மன ஈடுபாட்டை கதையின் நட்ட நடுவிலேயே கோடிக்காட்டி, கதையின் இறுதி முடிவுக்கு கதைப் பாதியிலேயே பாதை போட்ட அழகைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

அண்ணன்-தம்பிகள் தனித்தனியே பெண் பார்க்கப் போய் 'நீ பார்த்த பெண்ணை நான் பார்க்கவில்லை' என்று பாட்டுப் பாடிய திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்தது. இந்தக் கதையிலோ, சகோதரர்கள் இருவரும் சேர்ந்து போயும் யாருக்கு யார் அமைய வேண்டுமோ அப்படி அமைந்ததில் பிற்காலத்து நலன் சம்பந்தப்பட்ட ஏதோ அர்த்தம் இருப்பதாக மட்டும் எனக்குத் தோன்றுகிறது.

முடிவு எப்படியோ, ஒரு பக்கக் கதை நன்றாக வந்திருக்கிறது. கோமதி அரசுவுக்குப் பாராட்டுகள்.

கோமதி அரசு said...

வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
நானும் நினைத்தேன் சார், மின்சாரம் வந்தபின் உங்கள் கருத்து வரும் என்று. உங்கள் விரிவான பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி சார்.

Thulasidharan V Thillaiakathu said...

கதை சூப்பர் கோமதி சகோ/அக்கா. வாசிக்கும் போது நடுவில் வந்த, "சேகரின் கருத்துகளைப் பெண்ணிற்குப் பிடித்ததாகச் சொல்லி வந்த போதே திருப்பம் அதுவாகத்தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தது என்றாலும் அப்படிச் சொல்லுவதற்குப் பெண்ணிற்குத் தைரியம் வேண்டும் பெற்றோரும் அதைக் கேட்க வேண்டும் அப்படியான ஃபார்வேர்ட் திங்கிங்க் சித்தரிப்பு அருமை....

அருமை வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் எங்கள் ப்ளாகிற்கும் வாழ்த்துகள் நன்றி கோமதி சகோ/அக்கா அவர்களின் கதையை இங்குப் பகிர்ந்தமைக்கு.

கோமதி அரசு said...

வணக்கம் துளசிதரன், கீதா , வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

முடிவை ஊகிக்க முடியவில்லை. ஏனெனில் சேகர் பெயர் மட்டுமே குறிப்பிட்டிருந்தார். கடைசியில் தான் கல்யாணப் பிள்ளையின் பெயரே வந்தது. அப்போது புரிந்து விட்டது.

கோமதி அரசு said...

வணக்கம் கீதா, வாழ்கவளமுடன்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Bhanumathy Venkateswaran said...

Why there is no updates after this? I rather we are waiting.

Geetha Sambasivam said...

இன்னும் மின்சாரமும் இணையமும் வரலைனு நினைக்கிறேன்.

kg gouthaman said...

Bhanumathy Venkateswaran said...
Why there is no updates after this? I rather we are waiting.

1) Storm
2) No power supply.
3) Even when there is power, no net.
4) 4 of the editors in chennai. 2 out of the 4 are busy attending music concerts.
5) We have exceeded our target of 285 blog posts for this year!!!
these are the main reasons for our silence and not chinnammaa or periyammaa!

பரிவை சே.குமார் said...

அருமையான கதை அம்மா...
வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

வணக்கம் குமார், வாழ்க வளமுடன்.
உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!