திங்கள், 5 டிசம்பர், 2016

திங்கக்கிழமை 161205 :: அடை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


தோசை சம்பந்தமாக எதுக்குப் பதிவு என்று நினைத்தேன். எங்கள் பிளாக்கே, தோசை புராணத்தை விரிவாக 4 பகுதிகளாக 2014ல் வெளியிட்டிருக்கிறார்களே. அதுக்கும் மேலயா? ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக வித்தியாச தோசைகளை ஸ்ரீராம் எழுதியதைப் படித்ததும், நாம பண்ணுற அடையைப் பற்றி எழுதலாமே என்று தோன்றியது. பொதுவா, தோசை மாவு அரைக்க Bachelors (கல்யாணம் ஆகி, மனைவி குழந்தைகள் வெளியூரில் இருந்தால், தமிழில் “பேச்சு இலர்”) கொஞ்சம், சலிச்சுப்பாங்க. இப்போல்லாம் தோசை மாவு (இட்லி மாவு, ஆப்பம் மாவு.. கடைலயே கிடைக்குது. துபாய்ல நான் காஞ்சீபுரம் இட்லி மாவுகூடப் பார்த்திருக்கிறேன். ஆனா அதுக்கும் காஞ்சீபுரம் இட்லிக்கும் க்ஷணப் பொருத்தம் கிடையாது. (‘அட.. ஒரு flowல வந்துடுச்சு. க்ஷணப் பொருத்தத்துக்கு என்ன அர்த்தம்?’). எங்க ஊர்லகூட நிறைய பிராண்டுகள் உண்டு. ஒரு பாக்கெட்டுல 20 இட்லி வரும். ஒரு பாக்கெட் வாங்கினா 3 நாளைக்கு ஆச்சு. இதுமாதிரி, பாரிஸ்லயும் இந்தியக் கடைகள்ல பார்த்திருக்கேன். ஆனா அதன் விலை, எங்க ஊர்ல விக்கறதைவிட 4 மடங்கு விலை. ஆனால் பொதுவா வெளியிடங்களில் அடை மாவு கிடைப்பதில்லை.  தோசை மாவோ அடை மாவோ.. நம்மளே தயார் பண்ணுவது ரொம்ப சுலபம். கூடுதல் சுத்தமாக இருக்கும்.

அடை மாவு சுலபமாத் தயார் செய்யத் தேவையானவை. இட்லி அரிசி 2 கிண்ணம்,  முழு உளுந்து தோலியோடோ அல்லது தோலியில்லாமலோ அரை கப், கடலைப் பருப்பு அரை கப், துவரம் பருப்பு அரை கப், 3 சிவப்பு மிளகாய் வற்றல், 2 பச்சை மிளகாய், 4-5 ஆர்க் கருவேப்பிலை, கொஞ்சம் கட்டிப் பெருங்காயம் மற்றும் உப்பு.

இட்லி அரிசியையும், 3 சிவப்பு மிளகாய் வற்றலையும், தண்ணீர் சேர்த்து ஊறவிடவும். பருப்புகள் எல்லாவற்றையும், பெருங்காயம் சேர்த்துத் தண்ணீரில் ஊறவிடவும். பொதுவா 2 மணிநேரம் ஊறினாலே போதும்.

 


ஊறின அரிசி + மி.வற்றலை மிக்சியில் அரைக்கவும். அரைக்க ரொம்பக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொண்டால் போதும்.   ஊறின பருப்பைக் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். ரொம்ப மாவாகணும்னு அவசியமில்லை. நான், ஊறின பருப்பில் கொஞ்சம் தவிர, மீதமுள்ளவற்றை நல்லா அரைச்சுப்பேன். மீதியுள்ள பருப்பை ஒரு சுத்து மற்றும் சுத்தி எடுத்துக்கொள்வேன். அப்புறம் கருவேப்பிலை இலைகளையும் 2 பச்சை மிளகாயையும் மிக்சில ரெண்டு சுத்து சுத்தி எடுத்துறவேண்டியதுதான். மூணையும் ஒரு பாத்திரத்தில் போட்டுத், தேவையான உப்பு சேர்த்துக் கையால் நல்லாக் கலந்துக்க வேண்டியதுதான்.  உடனே அடை பண்ணக் கொஞ்சம் மாவை எடுத்துவச்சுட்டு, மீதியைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடவேண்டியதுதான்.





எனக்கு அடைமாவு அரைத்த உடனேயே அடை பண்ணிச் சாப்பிடப் பிடிக்கும். சிலருக்குப் புளித்த அடைதான் பிடிக்கும். இப்போ வெங்காயத்தை வைத்து நான் வித்தியாசமாகப் பண்ணின அடையைப் பார்க்கலாம்.  வெங்காயத்தைக் குறுக்குவாக்கில் வட்ட வடிவில் பஜ்ஜிக்குத் திருத்திக்கொள்வதுபோல் திருத்திக்கவும். அதை அடைமாவில் தோய்த்து ஒவ்வொன்றாக கடாயில்   அடை வடிவத்துக்கு வட்டமாகப் பரத்தவும். அப்புறம் மேல எண்ணெய் விட்டு நல்லா வெந்தபின் திருப்பிப்போட்டு அடை மாதிரி எடுக்கவேண்டியதுதான். இதுக்கு கொஞ்சம் பெரிய அளவு வெங்காயம் நல்லா இருக்கும்.  கேரட் துருவி அடை மாவில் கலந்து கேரட் அடையும் செய்யலாம். எனக்கு வெறும் அடையும், இந்த மாதிரிச் செய்த வெங்காய அடையும் ரொம்பப் பிடிக்கும்.















அடைக்கு நிஜமாவே ஒன்றுமே தொட்டுக்கொள்ளத் தேவையில்லை. பொதுவா, அடைக்கு  நெய்+மண்டை வெல்லம் காம்பினேஷனும், இட்லி மிளகாய்ப் பொடியும் நல்லா இருக்கும். இட்லி மிளகாய்ப்பொடிக்கு செக்கு நல்லெண்ணை விட்டுக்கொண்டால் வாசனையா இருக்கும். மற்ற நல்லெண்ணெய் பாக்கெட்ல பூதக்கண்ணாடி வச்சுப் பார்த்தா 30% நல்லெண்ணெய் (உண்மையைப் போட்டிருந்தான்னா) என்று இருக்கும். ஏன்னா அதுல பாரஃபின் போன்ற பெட்’ரோலியப் பொருட்களைக் கலந்துவிடுகிறார்கள்.  1 ¾-2 கிலோ எள், கொஞ்சம் கருப்பட்டி அப்புறம் மின்சாரம், உழைப்பு, விளம்பரம் போன்ற செலவுகள் சேர்த்தால், தூய்மையான நல்லெண்ணெய் விலை 1 லிட்டர் 280ரூபாய்க்குக் குறைந்து கொடுக்க முடியாது என்று படித்திருக்கிறேன்.

Bachellors..-- தேவையான பொருட்களைப் பற்றி ரொம்ப அலட்டிக்க வேண்டாம். நான் பாசிப்பருப்பு (தோலுள்ளது), கொஞ்சம் நிலக்கடலை இருந்தால் அது என்று மற்றவற்றையும் சேர்த்து அரைத்துள்ளேன். ஆனால், அளவு, அரிசி 2 கப், பருப்பெல்லாம் சேர்த்து 1 ½ கப். ஜாம்பவான்கள், பாசிப்பருப்புன்னா பெசரட்டு, அது அடை இல்லைன்னு பயமுறுத்துவாங்க. எதுன்னா என்ன. உள்ள போனாச் சரிதான்.


அன்புடன்,

நெல்லைத்தமிழன்.

25 கருத்துகள்:

  1. நான் அடைக்ககு மாவு அரைத்து அதில் தக்காளி துண்டி வெங்காயம் மற்றும் ஸ்பீனஸ் என்ற கீரை அல்லது முருங்காய் ஐலை போட்டு பண்ணுவேன் ஒன்றி தின்னாலே வயிறு நிறைந்துவிடும் நிறைய புரோட்டின் இதில் உண்டு

    பதிலளிநீக்கு
  2. அடை நன்றாக இருக்கிறது . வெங்காய அடை பார்க்க அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. வெங்காய அடை. அருமையான குறிப்பு.

    பதிலளிநீக்கு
  4. வெங்காய ஸ்லைஸ் போட்ட அடை!! அட!! இது வேக நேரம் பிடிக்குமோ?
    //க்ஷணப் பொருத்தத்துக்கு என்ன அர்த்தம்?’//
    க்ஷணப் பொருத்தம் ஜாதக பொருத்தமான கணப் பொருத்ததிலிருந்து மருவி வந்திருக்கலாம்!!

    பதிலளிநீக்கு
  5. க்ஷணப் பொருத்தம்....dead end என்று சொல்வது போலத்தான் :)

    பதிலளிநீக்கு
  6. க்ஷணம் என்றால் அந்த நொடி அப்படியென்றால் பொருத்தம் for a very short time என்று பொருள் சொல்லலாம் தோசை அடை எல்லாம் அரைத்த மாவுதானே

    பதிலளிநீக்கு
  7. வித்யாசமான டிசைனில் வெங்காய அடை .... பகிர்வுக்கு நன்றிகள். :)

    இந்த அடை வேகுவதற்கு மிகவும் நாழியாகும் என நினைக்கிறேன்.

    புதிய மாவில் செய்த முதல் நாள் அடை ஒரு டேஸ்ட்தான் என்றாலும், புளித்த மாவில் செய்யும் புளிச்சமா அடைக்கு அது ஈடாகுமோ என நான் அடிக்கடி எனக்குள் நினைத்துக்கொள்வது உண்டு.

    மறுநாள் செய்யும் புளிச்சமா அடையும், அதற்கு மறுநாள் போடும் குணுக்குகளும் சாப்பிடக் கொடுத்து வைத்திருக்கணுமே .... ஸ்வாமீ. அதையெல்லாம் சாப்பிட்டால் சொர்க்கலோக சுகத்திற்கு மேல் அல்லவா கிடைக்கக்கூடும். :)

    http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
    *அடடா என்ன அழகு ! ...... ’அடை’யைத் தின்னு பழகு!!*

    இதுவரை வெற்றிகரமான 295 பின்னூட்டங்களுடன் காட்சியளிக்கிறது ..... :)

    இருப்பினும் உங்களால் முதல் 200 பின்னூட்டங்களை மட்டுமே அங்கு படிக்க இயலும். :(

    பதிலளிநீக்கு
  8. உளுந்து அதிகமாய் போட்டிருந்தாலும் அடை என்னவோ பார்ப்பதற்கு சூப்பராக தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  9. அடை எனக்கும் பிடித்தமானது. அவ்வப்போது செய்வதுண்டு.

    நீங்கள் சொன்ன விதத்தில் செய்து பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. வீட்லெ மஸூர்டாலும் இருக்கும். அதையும் போட்டுச் செய்வேன். இந்த வட்ட வடிவ வெங்காயம் பார்க்க அழகாக இருக்கு. இப்படியும் பண்ணி கொடுத்தால் இதென்ன இன்னிக்கு புதுசு? யார் எழுதின ரிஸிப்பி என்ற கேள்வியுடன் சாப்பிடுவார்கள். நம்ம நெல்லைத் தமிழன் என்றால் ஓஹோ நீ அங்கெல்லாம் கூட சிலவில்லாமல் போறாப்போல இருக்கு. இந்தா இன்னொரு அடை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  11. 'நன்றி ஸ்ரீராம், எங்கள் பிளாக்.. வெளியிட்டமைக்கு

    நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் துரை

    நன்றி கோமதி அரசு மேடம்

    நன்றி திண்டுக்கல் தனபாலன். நடிகர் சிங்கமுத்துவையும் வடிவேலுவையும் நினைவுகூற வைத்துவிட்டீர்கள்.

    நன்றி ராமலக்ஷ்மி அவர்களே

    நன்றி மிடில்கிளாஸ் மாதவி அவர்களே

    நன்றி அனுராதா பிரேம்குமார் அவர்களுக்கு

    நன்றி பகவான்'ஜி

    நன்றி ஜி.எம்.பி ஐயா... என்ன 'அரைத்த மாவுதானே'ன்னு சொல்லிட்டீங்க. 500/1000 மாதிரி, இதனையும் தடை செய்துவிட்டால், எல்லாத் தாய்மார்களும் பொங்கிவிடுவார்களே.

    நன்றி அசோகன் குப்புசாமி அவர்களுக்கு

    நன்றி கோபு சார். நீங்கள் அடையைப் பிரித்துமேய்ந்துவிட்டீர்கள். உங்களைப் போல் எழுதணும்னா, காபி/பேஸ்ட்தான் செய்யணும். எனக்கு தனிப்பட்ட முறையில், தோசை/அடை போன்றவற்றைத் தனியாகச் சாப்பிடப் பிடிக்காது. மோர் சாதம், இட்லி மிளகாய்ப்பொடி அதோடு, முறுகலான தோசையோ அடையோ எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    நன்றி மனோ சாமினாதன் அவர்களே... வெங்காய ஸ்லைசில் அடை ரொம்ப நல்லா இருக்கும். நான் எண்ணெய் நிறைய விடமாட்டேன். எண்ணெய் விட்டு வார்த்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

    நன்றி வெங்கட். கொஞ்சம் வேலை ஜாஸ்தி.. ஆனால் ஒரு அடை சாப்பிட்டாலும் நிறைவா இருக்கும்.

    காமாட்சி மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. படிக்க சந்தோஷமாத்தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  12. அடை! ரொம்பப் பிடிக்கும் உங்கள் ரெசிப்பி போலவும். அப்புறம் இஷ்டம் போலவும், கைக்கு அகப்பட்டதை எல்லாம் போட்டு ஏதேதோ பெயர் சொல்லிக் கொண்டு செய்வது....மகன் இங்கிருந்தவரை எல்லாம் விதம் விதமாகச் செய்ததுண்டு. முருங்கைக் கீரை, வேறு கீரைகள், கொத்தமல்லி போட்டு, புதினா போட்டு என்று..குறிப்பாக எனக்கும் மகனுக்கும் கண்டிப்பாக வெங்காயம் வேண்டும். பொடியாகத் திருத்திப் போட்டும், நீங்கள் செய்வது போல் வட்டவட்ட வில்லையாகவும், அல்லது மாவை ஊற்றிவிட்டுத் தேய்த்துவிட்டு அதன் மேல் வெங்காயத்தைத் தூவி அல்லது வட்டங்களை அடுக்கி அமுக்கியும் செய்வதுண்டு...நாளைக்கு அடைதான் டிஃபன்....

    நெல்லைத்தமிழன் தவலை அடை/வடை செய்வதுண்டா

    கீதா

    பதிலளிநீக்கு
  13. தில்லையகத்து கீதா ரங்கன் - நன்றி. நிறையபேர், தவலை அடைனா, சோம்பு அது இது என்று நாட்டுக்கோட்டை செட்டியார் பாணியில் ரெசிப்பி போடுகிறார்கள். இல்லைனா, மசால் வடையை, தவலை அடைன்னு போடறாங்க. ஏதானும் கேட்டால், இதுதான் எங்கள் வழக்கம் அப்படிங்கறாங்க. நான் வெகு விரைவில் தவலடை (இப்படித்தான் சொல்லுவோம்) செய்து எழுதுகிறேன். எனக்கு ரொம்பப் பிடித்த ஒன்று. அந்தக் காலத்தில் (75கள்ல, நான் 5-6 வகுப்பின்போது) திருனெல்வேலி ஜங்ஷன்ல தெருவில் இரண்டு இடத்தில் செய்து விற்பார்கள். எனக்குத் தெரிந்து அதில் வெங்காயம் போன்றவைகளைச் சேர்க்கமாட்டார்கள். தவலடை பொரிப்பது. தோசைக்கல்லிலோ, இலுப்புச்சட்டியிலோ வார்ப்பது அல்ல. (இல்லை.. நாங்க எப்போதும் செய்வோம் என்று சொன்னால், நான் செய்து பார்க்காமல், நேரே சாப்பிட வந்துவிடுகிறேன்)

    பதிலளிநீக்கு
  14. ம்ம்ம்ம்ம், அடைக்குக் கடலைப்பருப்பையும், உளுத்தம்பருப்பையும் இன்னும் குறைக்கணும். திருநெல்வேலிப்பக்கம் கல்லிடைக்குறிச்சிக்காரங்க (என் தம்பி மனைவி இன்னும் சிலர்) அடைக்கு உ.பருப்பே சேர்க்க மாட்டாங்க. அடை ஆறிப் போச்சு! தாமதமா வந்திருக்கேன். இங்கே வெங்காய வில்லைகளில் அடைமாவை ஊற்றி தோசைக்கல்லில் எடுத்திருப்பதைப் போல் வட மாநிலங்களில் கத்திரி வில்லையில் கடலைமாவு, மசாலாக்கலவையை ஊற்றி வேக விட்டு எடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  15. அப்புறம் தவலை வடை, தவலை அடை இரண்டுமே செய்திருக்கேன். தென் மாவட்டங்களில் மாப்பிள்ளை வந்தால் அன்று தவலை வடையும் கோதுமை அல்வாவும் தான் சிறப்பு உணவாக இருக்கும். :)

    பதிலளிநீக்கு
  16. http://geetha-sambasivam.blogspot.com/2010/07/blog-post.html
    இது எங்க வீட்டில் தவலை வடை செய்யும் முறை

    http://geetha-sambasivam.blogspot.com/2013/12/blog-post_6.html

    இங்கே தவலை அடை செய்முறை. வெண்கல உருளி அல்லது வெண்கலப்பானையில் செய்வார்கள். எங்க அம்மா பின்னாட்களில் தோசைக்கல்லிலேயே செய்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  17. இன்றைக்குத்தான் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன் கீதா மேடம். உங்களுக்கு அடை பிடிக்காததால்தான் இந்தப் பக்கம் வரலையோன்னு நினைச்சேன். எப்போதும்போல் பெரிய பின்னூட்டமாக இடுவதற்கு அமெரிக்கா போய்த்தான் வேளை வந்திருக்கிறது போலிருக்கிறது. நன்றி.

    கத்தரிவில்லையில் மாவு சேர்த்து வேகவைப்பது கேள்விப்பட்டதில்லை. ஒருதடவை செஞ்சு பார்க்கிறேன். நானும் உங்களை மாதிரி கத்தரிக்காய் (கைக்காத) ரசிகன்.

    நான் ரெண்டு நாளுக்கு முன்னால் தவலடை பண்ணினேன். உங்கள் தவலை அடையில் (தவலடைல படம் இருக்கு) ஒரு படத்தையும் காணோமே.. எப்படி இருக்கும்னு, எப்படித் தெரியும்? இப்போத்தான் உங்கள் தவலடை ரெசிப்பி பார்த்தேன். (பரவால்லை... நல்லாவே இருக்கு. உங்களளவுக்கு எனக்கு வரவில்லை).

    தென் மாவட்டக் கதை இருக்கட்டும். உங்கள் பகுதியில் மாப்பிள்ளை வந்தால் எது சிறப்பு உணவு? (கேசரி என்று சொல்லிவிடாதீர்கள்)

    பதிலளிநீக்கு
  18. @நெல்லைத் தமிழன், நானும் தென்பாண்டி நாடு தானே! மதுரைக்காரி, எங்க வீட்டிலேயும் மாப்பிள்ளை சிறப்பு உணவு தவ்லை வடை தான்! :) கேசரி தஞ்சைப்பக்கம் தான் நினைச்சால் உடனே பண்ணுவாங்க. அந்தப் பழக்கத்தில் எனக்கும் கேசரி தான் அடிக்கடி பண்ண வேண்டி இருக்கு! :) தவலை வடை படம் இருந்திருக்கணும்! போட மறந்திருப்பேன். பார்க்கிறேன் தவலை அடையும் பண்ணி இருக்கேன். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. :)

    பதிலளிநீக்கு
  19. நீங்க எழுதின அன்னிக்கே இந்தப் பதிவைப் பார்த்தாலும் ஜெயலலிதா பற்றிய செய்தியால் அன்று முழுவதும் தொலைக்காட்சியைத் தான் பார்த்துட்டு இருந்தோம். :) இரண்டு, மூன்று நாட்களில் கிளம்பணுமே! ஆகவே ஒரே கவலை!

    பதிலளிநீக்கு
  20. தவலை அடைக்குப் படம் சேர்க்க மறந்திருக்கேன். தவலை வடை நான் செய்யும்போது எடுத்த படம்.

    பதிலளிநீக்கு
  21. அம்பத்தூர் வீட்டுச் சமையலறையில் எடுத்த படம். :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!