Tuesday, December 27, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: ராஜாவும் தொழிலதிபர்தான்


     இந்த வார "கேட்டு  வாங்கிப் போடும் கதை" பகுதியில் பதிவர் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் படைப்பு இடம் பெறுகிறது.
     அவரின் தளம் Arattai.

     சுவாரஸ்யமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.  விஷ்ணு - ராசி கேரக்டர்களை உருவாக்கி, நகைச்சுவை எழுத்தில் மிளிர்பவர்.   பலரை அவரவர் வாழ்க்கையில் மேலே ஏற்றிவிடும் ஏணி வேலையைச் செய்து ஓய்வு பெற்றவர்.  ஆசிரியர்!

     அவரது முன்னுரையைத் தொடர்ந்து அவரின் படைப்பு இடம்பெறுகிறது.


======================================================================
திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் தளத்தில் என் கதை வெளியாவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என் எழுத்துப் பலரின்  பார்வைக்கு, சென்றடைய  உதவும் உங்களுக்கு என் நன்றிகள் பல.

கதையைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை:

'ராஜாவும் தொழிலதிபர் தான் ' ஒரு உண்மை நிகழ்வை மையமாக வைத்து புனையப்பட்ட கதை .சென்னை அடையாறிலுள்ள  புற்றுநோய் சேவை மையத்திற்கு ஒரு முறை  சென்றிருந்தேன்.  அங்கே  'ராஜா ' போன்ற ஒருவரை சந்திக்க நேர்ந்தது.  அவர் என்னை ஆச்சர்யப்படுத்தினார். ஆச்சர்யத்தை கதையாக்கி விட்டேன். ராஜாவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான , கற்பனைக் கதாபாத்திரமே 'கைலாசம்'.
 
'Joy of Giving' மாதத்தையொட்டி  எழுதப்பட்டது இக்கதை.
 
கதையைப் படித்து உங்கள் மேலான கருத்தை  சொல்லுங்கள்.

வெளியிடும் ஸ்ரீராம் அவர்களுக்கும், படிக்கும்,கருத்திடும் நண்பர்கள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் நன்றிகள்.

இப்படிக்கு,
ராஜலஷ்மிபரமசிவம்.
http://rajalakshmiparamasivam.blogspot.com
=====================================================================ராஜாவும் தொழிலதிபர் தான்.
 ராஜலக்ஷ்மி பரமசிவம் 

 
கைலாசம்  தன்  பெரிய படகு போன்ற 'டோயோடா' காரை  அந்த சேவை மையத்தின் முன் நிறுத்தி விட்டு, கார் கதவைத் திறந்து கொண்டு மையத்தின் உள்ளே சென்றார்.  மிக உயர்ந்த பிராண்டட் பேண்டும், சட்டையும், படகுக் காரும்  அவர்  மிகப் பெரிய பணக்காரர் என்பதை பறை சாற்றியது.

 
திருப்பூரில்  தொழிலதிபரான  கைலாசம், கம்பீர நடையுடன்  உள்ளே காப்பாளர் அறைக்கு சென்றார்.


புற்று நோய் சேவை மையத்தின் காப்பாளர், கிருஷ்ணன், கண்ணைக் கூசும், பளீர் வேட்டி, சட்டையுடன், அன்றைய காலை அலுவல்களை  கவனித்துக் கொண்டிருந்தார். பின்புலத்தில்  சூலமங்கல சகோதரிகள் மெல்லியக் குரலில்  " காக்க காக்க கனகவேல் காக்க " என்று பாடிக் கொண்டிருந்தார்கள்.

 
" டொக் ,டொக் " கதவு தட்டும் சத்தம்.


ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன்   தலையை நிமிர்த்தாமலே , "எஸ் கம் இன் "  சொல்லவும், கதவைத் திறந்து கொண்டு  கைலாசம் உள்ளே நுழைந்தார். கைலாசம் போட்டிருந்த உயர் ரக செண்டின் மணம் கிருஷ்ணனை   நிமிர வைத்தது.

 
" வாங்க! எப்படி இருக்கிறீர்கள் கைலாசம் சார்வருடத்திற்கு ஒரு முறை அத்திப் பூத்தாற் போல் வருகிறீர்கள்"

 
" நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? தொழிற்சாலை வேலை விஷயமாக அவ்வப்போது சென்னை வருகிறேன். ஆனால் நேரமே கிடைக்கவில்லை.  மையத்தை  விரிவு படுத்தும் வேலை மும்மரமாக நடக்கிறது போல் இருக்கிறதே"  என்று ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே சொன்னார் கைலாசம்.

 
" உங்களைப் போன்றவர்களின்  நல்ல மனசு தான்  இதற்குக் காரணம்" என்று சொல்லிக் கொண்டே மணியைத் தட்டி, பியுனை வரவழைத்து,  'ஜில்'லென்று  எலுமிச்சை ஜுஸ்  கொண்டு வரச் சொன்னார் கிருஷ்ணன் 
புற்று நோய் சேவை மையம் விஸ்தாரமாக எட்டு ஏக்கர் பரப்பளவில்  இயங்கிக் கொண்டிருந்தது. பல ஏழைப் புற்று நோயாளிகளுக்குத் தஞ்சம் அளித்துக் கொண்டு அமைதியாக இருந்தது.  மையத்திலேயே காய்கறிகள், கீரை, தேங்காய், எலுமிச்சை  என்று எல்லாம் விளைந்து கொண்டிருந்தது.  அவை மையத்தில் நோயாளிகளுக்கு உணவிற்கு உபயோகமானது.  இதற்கெல்லாம் கிருஷ்ணனின்  திறமையான தன்னலமற்ற நிர்வாகம் தான் காரணம்.


இது எல்லோருக்கும் தெரியும்.

 
அதை மனதில் கொண்டு கைலாசம் ," என்னைப் போன்றவர்களால் அல்ல, உங்களைப் போன்றவர்களால் தான், சேவை மையம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது கிருஷ்ணன் சார் " என்று சொல்லிக் கொண்டே தன் சட்டைப் பையில் வைத்திருந்த  " பத்து லக்ஷத்திற்கான " செக்  ஒன்றை டேபிளில்  வைத்தார் . 

"எங்களால் என்ன  பணம் மட்டுமே கொடுக்க முடிகிறது. நீங்கள் தான் அதைத் திறமையாக செயல் படுத்துகிறீர்கள் "என்று அவர் சொன்னாலும் , ' நான் கொடுக்கும் பணம் தான் முக்கியக் காரணம்' என்ற தொனி இருந்தது  அவர் பேச்சில்..


கிருஷ்ணன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார் .' பணக்காரர்களுக்கே உரிய  கர்வம்' என்று அவர் மனம் சொல்லியது. அதனால் என்ன?   மையத்திற்குப் பணம் வருகிறதே என்று சகித்துக் கொள்ள வேண்டியது தான் என்று சிரித்து வைத்தார்.


பியூன்  அப்போது ஜுஸ் கொண்டு வந்து வைக்கவும்இருவரும் ஜுஸ் குடித்துக்கொண்டே, சொந்த வாழ்க்கைப் பக்கம் பேச்சுத் திரும்பியது. கைலாசத்திற்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டுப் போனது.


" மகனும் மகளும் அமெரிக்காவில்  டாலரில் லட்சம் லட்சமாக  சம்பாதிக்கிறார்கள்என்  தொழிற்சாலையிலும்  ஓரளவு லாபம் வருகிறது.  வருமானவரி  எக்கச்சக்கமாக கட்ட வேண்டியிருக்கிறது.  அதை ஓரளவிற்காவது குறைக்கலாம் என்று தான் ஒவ்வொரு வருடமும், லட்சம்  லட்சமாக இங்கே தானம்  கொடுக்க வேண்டியிருக்கிறது.  அதை  என் அம்மாவின் நினைவு தினத்தை  ஒட்டி கொடுக்கிறேன்." என்று அலுத்துக் கொண்டார். கைலாசத்தின் தாய் கேன்சரில் தான் இறந்து போனார்.


மனக் கசப்புடன் தான் பணம் கொடுக்கிறார் கைலாசம் என்று புரிந்தது கிருஷ்ணனுக்கு.  அரசாங்கத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டார் மனதுள். 'வருமானவரிக்காகத் தான் இவரைப் போன்றவர்கள்  மனதில் , சேவை மையங்கள்  நினைவிற்கு வருகிறது.' என்று கிருஷ்ணனின்  மனம்  சொல்லியது.

 
பிறகு சிரித்துக் கொண்டே, " கொஞ்சம் பொறுங்கள் கைலாசம். உங்களுக்கு  ரசீது தருகிறேன்" என்று தன் முன்னால் இருந்த கணினியை, கிருஷ்ணன்  தட்ட ஆரம்பிக்கவும், கதவு மீண்டும்


" டொக், டொக்."


" கம் இன் "


உள்ளே நுழைந்த மனிதனைப் பார்த்ததும் கைலாசத்திற்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.


" என் காரைப் பார்த்து இங்கே  வந்தாயா?   நீயாக வந்து என் காரில் மேல் விழுந்து விட்டு, இப்போது ஒரு தரித்திரக் கூட்டத்தையே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயாஎவ்வளவு பணம் பறிப்பதாக உத்தேசம்?" என்று சகட்டு மேனிக்குக் கத்த ஆரம்பிக்கவும்,

 
கிருஷ்ணன் இடை மறித்து ," சார், சார் கோபப்படாதீர்கள்.  ராஜா  என்னைப் பார்க்க வந்திருக்கிறார். " என்றார்.


'ராஜாவாம் ராஜா . பேர் தான் ராஜா . தொழில் என்னவோ செருப்புத் தைப்பது. பேர் மட்டும் ராஜாவாக இருந்தால் ஆச்சாஇதிலொன்னும் குறைச்சலில்லை' என்று கைலாசம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே
" முதலில் உட்கார் ராஜா. என்ன ஆச்சு ? ஏன் சார் உன் மேல் கோபப் படுகிறார்? " என்று கிருஷ்ணன் கேட்கவும், கிழிந்த லுங்கியும், அழுக்கு முண்டா பனியனும்  அணிந்திருந்த ராஜா  உட்கார மறுத்து நின்று கொண்டேயிருந்தார்.


" ஒண்ணுமில்லே சார். சார் காரில் வரும் போது, நான் தான் தெரியாமல் அவர் கார் மேல் விழப் பார்த்தேன். நல்ல வேளை, சார் காரை நிறுத்தி விட்டார். பசி மயக்கம் சார்.அதான் விழப் போனேன். நேற்றிலிருந்து ஒண்ணுமே சாப்பிடவில்லை. இப்போ தான் என்னிடம் நூற்றிஐம்பது  ருபாய் கடன் வாங்கிப் போன கபாலி  பணத்தைக் கொடுத்தான்.  என் நாஷ்டாவை முடிச்சிட்டு எப்பவும் கொடுக்கிற  நூறு ரூபாயைக் கொடுத்துட்டுப்  போலாம்னு வந்தேன் சார் ." என்று கிருஷ்ணனிடம் அழுக்கான நூறு ரூபாயை நீட்டினார்  ராஜா 


திரும்பி கைலாசத்தைப் பார்த்து ," சார், நான் ஏழை தான் சார். ஆனால் பணம் பறிப்பவன் இல்லை சார். என்  அம்மா கேன்சரில் தான் செத்துப் போச்சு.  காசு இருந்திருந்தா அம்மாவைக் காப்பாத்தியிருக்கலாமோ என்னமோ .. வேற யாரும் காசில்லாமல் செத்துப் போயிடக் கூடாது.  அதனால் மாசாமாசம், நூறு ருபாய்  சாரிடம் மையத்தின் செல்விற்காகக் கொடுத்துடுவேன். என்னால் முடிஞ்சது, அவ்வளவு தான்.  அதுக்குத் தான் வந்தேன் சார்.  நீதான் என்னை தப்பா  நினைச்சுட்டே.  மன்னிச்சிக்கோ."  சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருக்காமல், கிருஷ்ணனுக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு ராஜா போய் விட்டார்.


கைலாசத்தின் மனதில் இருந்த 'தான் பணக்காரன், தொழிலதிபர்என்கிற அகங்காரம் போன இடம் தெரியாமல் போனது.  " நான் கொடுத்த பத்து லட்சத்தை விட சாப்பாட்டுக்குக்  கஷ்டப்பட்டாலும்  உதவ வேண்டும் என்று ராஜா கொடுத்த  நூறு ரூபாய் விஸ்வருபம் எடுத்தது கைலாசத்தின்  மனதில்  "ராஜாவும் தொழிலதிபர் தான் . என்ன  என்னுடையது அவர் தொழிற்சாலையை விடவும் சற்றே பெரிது அவ்வளவு தான் " என்று நினைத்துக் கொண்டே  ராஜா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் கைலாசம்.


கைலாசம் தானாக  தன்னிலைக்கு வரட்டும் என்று கிருஷ்ணன் அமைதியாக அமர்ந்திருந்தார்.               ------------------------------------------------------------------------------

41 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
ராஜா தொழிலதிபர் அல்ல மாமனிதர்
தம +1

வெங்கட் நாகராஜ் said...

அருமையான கதை. 100 ரூபாய் மதிப்பு பத்து லட்சத்தினை விட பல மடங்கு..... கைலாசம் போன்றவர்களுக்கு புரிந்தால் நல்லது!

சிறப்பான கதைப் பகிர்வுக்கு நன்றி. கதாசிரியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

திண்டுக்கல் தனபாலன் said...

சரியான அடி...!

மனோ சாமிநாதன் said...

நூறு ரூபாயாக இருந்தாலும் அன்புடன் கொடுக்கும் தானம் அது ஒரு லட்சத்திற்கு சமானம் என்பதை க்தாசிரியரர் ராஜலக்ஷ்மி பரமசிவம் அழகாக எழுதியிருக்கிறார்! அவருக்கு இனிய வாழ்த்துக்கள்!

middleclassmadhavi said...

super!

Ramani S said...

மிக மிக அற்புதமான கதையைக்
கேட்டு வாங்கிப் போட்டமைக்கு
உங்க்களுக்கும்

கதை புணைந்த சகோதரிக்கும்
மனமாரந்த நல்வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

பார்வைக்கு ராஜா குசேலனாகவும், கைலாசம் குபேரனாக தெரியலாம்.

ஏழ்மையிலும் நேர்மையான கொடை வள்ளல் குணம் கொண்ட ராஜாவின் மனஸு அந்தக் கைலாஸ மலையைவிடவும் உயர்ந்ததாக இந்தச் சிறுகதையில் காட்டப்பட்டுள்ளது.

சிந்திக்க வைக்கும் மிகச்சிறப்பான கதையாக இது அமைந்துவிட்டது.

பகவான் பக்தனிடம் கேட்பது பொன்னோ பொருளோ அல்ல. உள்ளம் உருகி, உண்மையான பக்தி சிரத்தையுடன் ஒரு காய்ந்த துளஸியை அர்ப்பணித்தாலும் ஏற்றுக்கொண்டு அருள் புரியக் காத்திருக்கிறான்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

தன் கணவரான சுதாமா என்ற குசேலர் மூலம் தனது கிழிந்ததோர் அழுக்குப் புடவைத் தலைப்பினில் முடிந்து, சுதாமாவின் பத்னி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கொஞ்சமாக அவல் கொடுத்தனுப்புகிறாள்.

தனக்காக எதுவுமே ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்கத்தெரியாத பரம பவித்ரமான பக்தரான சுதாமா இடுப்பினில் தொங்கும் அந்த அழுக்கு வஸ்திரத்தைத் தானே கேட்டு வாங்கி, அதிலிருந்து கொஞ்சூண்டு அவலை பேரின்பத்துடன் ஸ்ரீ கிருஷ்ணன் தன் வாயில் போட்டுக்கொள்ள, சுதாமாவின் குடும்ப தாரித்ரம் விலகி விடுகிறது.

சமீபகாலமாக ஓர் பிரபல உபன்யாசகர் வாயிலாக ஸ்ரீமத் பாகவத உபந்யாசங்கள் கேட்டு லயித்து மகிழ்ந்து வருகிறேன். நேற்று இரவுதான், மீண்டும் இந்த குசேலர் கதையினை அந்தப் பிரவசனத்தில் கேட்டு மனமுருகி எனக்குள் அழுதுகொண்டேன்.

தனக்கு என்று எப்போதுமே எதுவுமே கேட்க விரும்பாத ஸாத்வீகரும், பரம பக்தருமான சுதாமாவை மட்டுமே நம்பியுள்ள அவரின் குடும்பத்தார் கஷ்டப்படக்கூடாது என நினைத்தே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் உதவிகள் செய்துள்ளார்.

ஆத்ம சாக்ஷாத்காரத்தையும், ஞானத்தை அடைந்து விட்ட சுதாமா, தன் குடும்ப வறுமைகள் நீக்கி சுபிக்ஷம் ஏற்பட்ட பிறகும், அந்த செல்வங்களில் எதையும் தான் அனுபவிக்காமல், அவற்றில் எந்தவொரு ஈடுபாடும் காட்டாமல், தன் வழக்கப்படி ஓர் மரத்தடியில் தன்னுடைய அழுக்கு ஆடைகளுடனும், ஒட்டிய வயிற்றுடனும், பகவத் பஜனம் செய்து, அதிலேயே பரம சந்தோஷங்களை நிம்மதியாக அனுபவித்தாராம்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதே குசேலர் கதையினை ஏற்கனவே ஒரு பிரவசனம் மூலம் கேட்டிருக்கிறேன். அவர் வேறு மாதிரி கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருந்தார். அதனை என் பதிவு ஒன்றிலும் உபயோகித்துக்கொண்டிருந்தேன்.

தலைப்பு: ’மழலைகள் உலகம் மகத்தானது’

இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

இந்தக்கதையினைப் படித்ததும் இதில் வரும் ’ராஜா’ என்ற கதாபாத்திரம் எனக்கு அந்த சுதாமா என்ற குசேலரையே நினைவு படுத்தியது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

நியாயமாகவும் நேர்மையாகவும் சம்பாதித்த தன் பணத்திலிருந்து, ஒரு நற்காரியத்திற்கு, ஒரே ஒரு ரூபாயை எடுத்துத் தரும் ஏழையானவன் செய்யும் தர்மமானது, ஊரார் பணத்தைக் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, அதில் ஓர் பங்காக திருப்பதி போன்ற பெரிய கோயில்களின் உண்டியல்களில் போடப்படும், கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணத்தைவிட, மிக உயர்ந்ததாகும் என்ற கருத்தினையும் இந்தக்கதை நமக்கு வலியுறுத்திச் சொல்லுகிறது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் மிகவும் கருத்தாழம் கொண்ட சிறுகதையைப் படைத்துள்ள கதாசிரியர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

கதைக்கருவும், அதனை எழுதியுள்ள அவரின் பாணியும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

கதாசிரியர் சாமான்யமானவரா என்ன?

சிறந்த சிறுகதை விமர்சகருக்கான “கீதா விருது” பெற்றவர் ஆச்சே :)

Ref Link: http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html

இந்தக்கதையினை இங்கு வெளியிட்டுப் படிக்க வாய்ப்பளித்த ‘எங்கள் ப்ளாக் - ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்களுக்கும் என் நன்றிகள்.

-oOo-

கோமதி அரசு said...

ராஜா உள்ளத்தில் உயர்ந்து விட்டார். வறுமையிலும் செம்மை என்று சொல்வது போல் ராஜாவின் குணநலன் இருக்கிறது.
அருமையான செய்தியை சொன்ன கதை.
வாழ்த்துக்கள் ராஜலக்ஷ்மி பரசிவம் அவர்களுக்கு.
உங்களுக்கு நன்றிகள்.

rajalakshmi paramasivam said...

ஸ்ரீராம் அவர்களுக்கு,

இன்று வேறு சில வேலைகளுக்கிடையே மாட்டிக் கொண்டதால் , வலைப் பக்கம் இப்பொழுது தான் வந்தேன். அட.....என் கதை. என் கதையைப் பிரசுரித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் சார். படித்துக் கருத்திட்ட நண்பர்களுக்கும், கருத்திடும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

rajalakshmi paramasivam said...

@கரந்தை ஜெயக்குமார் சார் அவர்களுக்கு,
என் கதையைப் படித்துப் பாராட்டியதற்கு நன்றிகள் பல.

rajalakshmi paramasivam said...

@வெங்கட் நாகராஜ் ஜி,
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி. சில சமயங்களில் பணம் அதன் மதிப்பை இழந்து விடும் என்பதே உண்மை. உங்கள் கருத்துக்கும், பாராட்டிற்கும் நன்றிகள் பல.

rajalakshmi paramasivam said...

@ திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு,

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தனபாலன் சார்.

rajalakshmi paramasivam said...

@ மனோ மேடம் ,
உங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி மேடம்.

rajalakshmi paramasivam said...

@middle class madhavi அவர்களுக்கு,
உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி மேடம்.

rajalakshmi paramasivam said...

@ ரமணி சார் அவர்களுக்கு,
உங்கள் வருகைக்கும், மனம் திறந்த பாராட்டிற்கும், மனம் நிறைந்த நன்றிகள் பல சார்.

rajalakshmi paramasivam said...

@திரு. கோபு சார் அவர்களுக்கு,
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சார்.
கதாநாயகன் ராஜா மனதளவில் குபேரன் என்பதை, குசேலர் கதையை சொல்லி நீங்கள் விளக்கி இருப்பது என் கதைக்குக் கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக உணர்கிறேன். அதற்காக என் நன்றி.

//ஒவ்வொருவரையும் சிந்திக்க வைக்கும் மிகவும் கருத்தாழம் கொண்ட சிறுகதையைப் படைத்துள்ள கதாசிரியர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.//
கதைக்கருவும், அதனை எழுதியுள்ள அவரின் பாணியும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.//
உங்கள் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோபு சார்.

//கதாசிரியர் சாமான்யமானவரா என்ன?//
நான் மிக மிக சாதாரனமானவள். உங்களைப் போன்றவர்கள் கொடுக்கிற ஊக்கம் தான் என்னை கொஞ்சம் எழுத வைத்துக் கொண்டிருக்கிறது.அது தான் உண்மை.

//சிறந்த சிறுகதை விமர்சகருக்கான “கீதா விருது” பெற்றவர் ஆச்சே :)//
நீங்கள் கொடுத்த விருதுக்கு மீண்டும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் கோபு சார்.

rajalakshmi paramasivam said...

உங்கள் மீள் வருகைகளுக்கு மிக்க நன்றி கோபு சார். உங்கள் கருத்துக்கள் என்னை மகிழ்விப்பதொடு அல்லாமல் என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றன.நன்றிகள் பலப்பல கோபு சார்.

rajalakshmi paramasivam said...

@ கோமதி அரசு அவர்களுக்கு,
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி கோமதி.என் கதையின் கருத்தை," வறுமையில் செம்மை " என்று அழகாய் வர்ணித்ததற்கு ஸ்பெஷல் நன்றிகள் கோமதி.

காமாட்சி said...

கர்வமில்லை. உதவி. பெரிய பணமில்லை,தாய்ப்பாசம், உண்மை இவனொருவன். உயர்ந்தகார்,செருக்கு மிக்க பணம்,கவர்மென்ட் ரூலினால் தப்பிக்க தருமம்,வருமானவரியில் ஓரளவு கொடுப்பதற்குப் பகட்டு வேறு, இருவித குணசித்திரம். ராஜாவும் ஒரு தொழிலதிபர்தான் என்று உணர்ந்து கொண்டானே போகட்டும்,அதுவரையிலாவது புத்தி வர ஆரம்பித்துள்ளதே. ராஜலக்ஷ்மி பாராட்டுக்களைப் பிடி. கான்ஸர் பீடிக்கப்பட்ட ஏழைகளுக்கு முடிந்த உதவியைச் செய்என்ற செய்தியும் இழையோடுகிறது. கதைகள் வாழ்க அன்புடன்

G.M Balasubramaniam said...

மனதைத்தொடும் நிகழ்வுகள் கதையாகப் புனையப்படும்போது சிறக்கிறதுபணம் என்ன பணம் மனம் அல்லவா முக்கியம் வாழ்த்துகள்

rajalakshmi paramasivam said...

@காமாட்சி அம்மா அவர்களுக்கு,

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அம்மா.கதையில் இழையோடும் செய்தியைப் படம் பிடித்துக் காட்டியதற்கு நன்றிகள் பல காமாட்சிம்மா.

நன்றி.

rajalakshmi paramasivam said...

@ thiru GM Balasubramanaiam அவர்களுக்கு,
என் கதையைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி பாலு சார்.

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான கதை! மனமிருந்தால் மார்கமுண்டு, ஏழைக்கேத்த எள்ளுருண்டையின் உயர்வைச் சொல்லிய கதை!! எந்தவித நன்மையையோ, சேவையையோ செய்தாலும் மனமுவந்து மகிழ்வுடன் செய்ய வேண்டும் என்பதையும், செய்வதில் சுயநலம் இல்லாது இருக்க வேண்டும் என்பதையும் சொல்லும் கதை! அருமை!!! சகோதரிக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள். எங்கள் ப்ளாகிற்கு நன்றி!!

Dr B Jambulingam said...

சிறிய நிகழ்வினை கதையின் கருவாக அமைத்து, படைத்துள்ள விதம் அருமை. கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

rajalakshmi paramasivam said...

@Dr. Jambulingam அவர்களுக்கு,
உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சார்.

Bagawanjee KA said...

மனிதாபிமானி என்று வேண்டுமானால் ராஜாவை சொல்லுங்கள் ,தொழில் அதிபர் என்று சிறுமைப் படுத்தணுமா:)

rajalakshmi paramasivam said...

@Bagawanjee
அட.....இப்படி ஒரு கோணமா ! நீங்கள் படித்து ரசித்ததற்கு மிக்க நன்றி பகவான்ஜி.

Bhanumathy Venkateswaran said...

உதவி செய்வதில் குவான்டிட்டி ஐ விட குவாலிட்டி தான் முக்கியம் என்னும் கருத்தை வலியுறுத்திய கதாசிரியருக்கு பாராட்டுக்கள்!

கே. பி. ஜனா... said...

நல்லதொரு கருத்தை உள்ளடக்கிய அருமையான கதை. பாராட்டுக்கள்.

Angelin said...

Nice story akka. This story reminds me of the poor widow parable from BIBLE who gave meagre offering of 2 little coins .in this story kailasam gave out of his wealth where as krishnan gave out of his poverty .such sacrifices and offerings mean more to God.

rajalakshmi paramasivam said...

@Bhanumathy vekatesan @Angelin, @ஜனா,

eன் கதையைப் படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

Angelin said...

Aah. .sorry I've typed krishnan instead of Raja. .just got carried away after reading about kuselar krishnan comments by Gopu sir...Raja Rajaa thaan

Angelin said...

Nice story akka. This story reminds me of the poor widow parable from BIBLE who gave meagre offering of 2 little coins .in this story kailasam gave out of his wealth where as Raja gave out of his poverty .such sacrifices and offerings mean more to God.

Asokan Kuppusamy said...

Good story

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான கருப்பொருள்
சிறந்த கதை
பாராட்டுகள்

ஜீவி said...

அருமையான கரு. தேர்ந்த எழுத்தாளப் புலமையை வெளிப்படுத்தும் நடை. வாழ்த்துக்கள், சகோதரி!

கதையின் கடைசி பகுதியில் தான் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்திருக்கலாம்.
ராஜா அந்த அழுக்கடைந்த நூறு ரூபாயை கிருஷ்ணனிடக் கொடுத்து விட்டு தான் வந்த வேலை முடிந்தது என்னும் உணர்வில் போய்விடுவதாகவும் காட்டி விட்டு, ராஜாவைப் பற்றிய உண்மைகளை கிருஷ்ணன் கைலாசத்திடம் சொல்வதாகவும் வெளிப்படுத்தியிருந்தால் ராஜாவின் பாத்திரம் இன்னும் உயரத்திற்குப் போயிருக்கும். ஆக, கைலாசத்தைப் பார்த்து "நான் ஏழை தான் சார்...." என்ற ராஜாவின் நேர்முக விளக்கத்தைத் தவிர்த்திருக்கலாம்.

ராஜா போன்ற உயர்ந்த குணமுள்ளவர் யாருக்கும் எதையும் விளக்கிச் சொன்னால் கூட தாங்கள் செய்யும் உன்னத செயல்களுக்கு ஏதாவது தன்னல அர்த்தம் நேர்ந்து விடப்போகுமோ என்று நெகிழ்ந்து ஏதோ இரைவன் தனக்கு இட்ட பணி போல சமூகத்திற்கான தன் தொண்டை இயல்பாகச் செய்கிறார்கள். நமக்குத் தான் அவர்கள் செய்யும் செயல்கள் உன்னதமாகப் படுகிறதே தவிர அவர்களின் இயல்பு அதுவாகவே இருக்கிறது.

'நெல்லைத் தமிழன் said...

கதை நல்லா இருந்தது. பாராட்டுக்கள். எப்போதும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாது கொடுக்கவேண்டும். அத்தகைய மன'நிலையில் இல்லாமல் கொடுப்பது பலன் தராது. கொடுத்தவற்றைப் பிறரிடம் சொல்வது கூட, கொடுத்ததனால் கிடைக்கும் பலனில் பெரும்பகுதியை அழித்துவிடும். பலன் கருதாது, அன்பினால் கொடுப்பது மிகச் சிறந்தது.

துளசி இலையை வைத்ததும் தராசு நிமிர்ந்த கதைதான் நமக்குத் தெரியுமே. கொடுக்கும் பணத்துக்கு மதிப்பில்லை. கொடுக்கும் முறைக்கு, அந்த எண்ணத்துக்குத்தான் மதிப்பு. எளிய ஏழை 1 ரூ உண்டியலில் செலுத்துவதற்கும் விஜய் மால்யா 25 லட்சம் செலுத்துவதற்கும் வித்யாசம் உண்டல்லவா?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!