செவ்வாய், 20 டிசம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: வீடு



     எங்களின் இந்த வார "கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் இடம்பெறுவது சகோதரி ஏஞ்சலின் எழுதிய கதை.
     அவரின் தளம் காகித பூக்கள்.

     சகோதரி ஏஞ்சலின் நான்கு கால் செல்லங்களிடம் அன்பு கொண்டவர்.  எங்கள் ப்ளாக்கில் நான் எழுதிய நாய்மனம் கதையைப் படித்து விட்டு இவர் எழுதிய பின்னூட்டம்தான் எனக்குத் தெரிந்து முதல்!  மிகவும் உருகி எழுதி இருந்தார்.  படிக்கவே மனம் இல்லை என்று எழுதி இருந்தார்.

     இப்போதெல்லாம் வலைப் பக்கம் மிகவும் அளவாகவே எழுதுகிறார்.  ஃபேஸ்புக்கில் சுறுசுறுப்பாக இருந்தார்.  அங்கும் காணோம்.  ஒரு வழியாய் அவரைப் பிடித்துக் கதை கேட்டு வாங்கிப் போட்டிருக்கிறேன்!
     தொடர்வது அவரின் முன்னுரையை.  அப்புறம் அவர் எழுதிய கதை.


===============================================================



கேட்டுவாங்கிப்போடும் பகுதிக்காக என்னையும் அன்போடு அபார  நம்பிக்கை வைத்து கதை எழுதித்தருமாறு கேட்டுக்கொண்டதற்கு மிக்க நன்றி எங்கள் பிளாக் ஸ்ரீராம் சகோ ..

முன்னுரை 
==========

சிறுவயதில் வீட்டில் ஆடு மாடு கோழி மற்றும் பல செல்லங்களை வளர்த்து அவற்றோடு பழகியதாலோ என்னவோ எதையும் நாலுகால்களின்  மன எண்ண  ஓட்டமாகவே எனக்கு யோசிக்க தோன்றும் .அப்படி எங்கள்  ரோட்டில் சுற்றித்திரிந்த பூனை வாயிருந்தா இப்படி யோசித்திருக்கும், பேசியிருக்கும் என நினைத்து எழுதியது .


இங்கே இங்கிலாந்தில் பலவகை மனிதர்கள்.  சிலர் நாய் பூனைகளுக்காகவே சொத்தை எழுதி வைத்தவர்கள் ..சிலர் ஆசைப்பட்டு வாங்குவது பின்னர் வீடு மாறிச்செல்லும்போது வாயில்லா ஜீவன்களை அங்கேயே விட்டு செல்வது .சிலர் தங்கள் மன வக்கிரங்களை இந்த வாயில்லா ஜீவன்களிடம் காட்டுவது, சிலர் சாகும்வரை இந்த ஜீவன்களை பராமரிப்பது என பல வகை மனிதர்கள்.  


தினமும் வாக்கிங் செல்லும்போது ஒரு பெரியவரை சந்திப்பேன்.   அவருடன் மார்லி என்ற நாய் துணையாய் செல்லும்.  அந்த பெரியவர் wildlife rescue வை சேர்ந்தவர்.  அவர் சொன்னார் மார்லி ஒரு பிரிட்டிஷ் குடும்பத்தாரால் வளர்க்கப்பட்டு வந்ததாம். 


அவர்களுக்கு கோபம் வரும்போது குடிக்க விஸ்கி கிடைக்காதபோது இதை அடிப்பார்களாம்.  அல்லது இருட்டு அறையில் பூட்டி வைப்பார்களாம் ..பக்கத்து வீட்டிலிருப்போர் rspca வில் கம்ப்ளெயிண்ட் தரவும் இந்த மார்லியை மீட்டு  இவரிடம் கொடுத்தார்களாம்.  என்னிடம் அவர் பேசும்போது அவர் சொல்வதை கேட்டு முன்னங்காலால் தனது தலை மீது வைத்து காட்டியது மார்லி . "மார்லி நீ  இப்போ சந்தோஷமா இருக்கிறாயா?"  என்று அவர் கேட்கவும், இரு கரம் கூப்பி அவரை வணங்குவதுபோல் காட்டியது.

மேலும் அவர் சொன்னார்,  சில நேரங்களில் வயதானவர்கள் மரணமடைந்துவிட்டால் அவர்கள்  வீட்டு செல்லங்களின் நிலை பரிதாபத்துக்குரியது.  pdsa இறந்தவரின் உறவினர்களை கேட்பார்கள் இந்த பூனை  /நாயை நீங்க வளர்க்கிறீர்களா என்று . அவர்கள் மாட்டேன் என்றால் மெர்சி கில்லிங்தான் :(

இதற்காகவே சிலர் அவர்கள் மறைவிற்குப் பின்னும் இச்செல்லங்களுக்கு இன்சூரன்ஸ் செய்து வைப்பார்கள்.   அப்போது  pdsa அல்லது RSPCA அந்த பணத்தை வைத்து இந்த ஜீவன்களை பராமரிக்கும்.  இப்போது இந்த கதை நாயகி மல்ட்டிக்கு  எங்க வீட்டில் அடைக்கலம் கொடுத்தாச்சு .


அது எங்க வீட்டில் நிம்மதியா தூங்குவதை பார்த்தபோது எனக்கு மனதே வலித்தது வீடில்லா ஒருவர் தனக்கு இருப்பிடம் கிடைச்சதும் எப்படி நிம்மதியா உறங்கியிருப்பார் என்பதை இதை பார்த்து உணர்ந்தேன் ..


இப்போ வீட்டுக்குள்ளே போவோமா ...


================================================================




வீடு 
====
 ஏஞ்சல் 
 
 
 
நானும் எத்தனை நாள்தான் இப்படியே சொந்தமாக ஒரு வீடு இல்லாமல் கிடைக்குமிடத்தில் கூடாரமடிப்பது? .அதுவும் இப்போதெல்லாம் வயதாவதாலோ என்னவோ, உடல்நிலை அடிக்கடி சுகமில்லாமல் போகிறது.  அம்மாவும் சொந்தமாக வீடு வாங்கவில்லை.  


அவர் மறைவுக்குப்பின் நான் குடியிருந்தவீட்டை விட்டு வெளியேறும் நிலை. வேறொருவர் அந்த வீட்டை வாங்கியதால் நான் அங்கு தங்க முடியவில்லை ..  எனக்கு மிக அவசரமாக தங்குவதற்கு வீடு ஒன்று வேண்டும்.  


உரிமையாளர்கள் இருந்தாலும் பரவாயில்லை.   நான் ஒரு அறையில் இருந்துகொள்வேன்.

தினமும் உணவு தேடி அலைந்து களைத்துப்போகிறேன்.  மனிதரில் பலவிதம் சிலர் மோசம்...   சிலர் மிக மோசம்.  ஆனால்  குடிகாரர்கள் மட்டும் மிக தாராளமானவர்கள்!  உணவை ரோட்டோரம் வீசி சென்று விடுவார்கள்.  அம்மா இறந்தபின்பு பசித்தபோது முதல்முறையாக ரோட்டோரம் கிடந்த சிக்கன் துண்டுகள், சிப்ஸ் தான் எனது பசியை  தீர்த்தது.  அப்படியே ஒவ்வொரு நாளும் கிடைத்ததை சாப்பிடுவேன். 


இரவு நேரங்களில்தான் வெளி வருவேன்.  பகலில் வாகனங்கள் அதிகம் செல்வதால் வெளியில் வராமல் புதர்களில் ஒளிந்திருப்பேன்.  சில சிறுவர்கள் கல்லால் அடிப்பார்கள்.  சிலர் ஏன்தான் இத்தனை வேகமாக காரோட்டுகிறார்களோ .?  இதற்கு பயந்தே நான் புதர்களில் இருப்பேன்.  சிலநேரம் பகலில் பசிக்கும்போது குப்பைத்தொட்டியில் மறைவில் இருந்து உணவு தேடுவேன்.

அப்போது பார்த்ததுதான் இந்த குடும்பம் அம்மா அப்பா மகள்.  மகள் எப்பவும் ரோட்டில் இருக்கும்.   பூனைகளை கண்டதும் தொட்டு விளையாடுவார்.  அவரது பெற்றோர் சிரித்துக்கொண்டே பார்ப்பார்கள்.  அவர் அருகில் செல்ல ஆசைதான்!  ஆனால் எனக்கு பயமாக இருக்கும் .

தினமும் பார்க்கிறேன் இவர்களை..  அன்பான குடும்பம் போலிருக்கு.  நிச்சயம் ஒருநாள்  என்னையும் தொட்டு விளையாடுவார் அச் சிறுபெண் .  ஆனால் எனது உடலெல்லாம் புண்களாயிருக்கு...  தொடுவாரா என்னையும் ...   :( 

எனது அம்மா இருந்தவரை என்னை அன்போடு கவனித்தார்கள்.  இருக்க இடம் இல்லாததால் குப்பை கூளங்களில் படுத்து உடலெங்கும் தெள்ளுப்பூச்சி வந்து விட்டது என்ன செய்ய :(

.ஒரு நாள் அந்த குடும்பத்தலைவர் குப்பை தொட்டியை எடுத்து வர தோட்டக் கதவை திறந்து வைத்தார்.  நான்  மெதுவாக அவர்கள் பின் தோட்டத்தில் நுழைந்து விட்டேன் .

சில நாட்கள் பின்பு ....

அவர்கள் வீட்டு சிறுபெண் என்னிடம் பழகி விட்டார்.  யாருக்கும் தெரியாமல் எனக்கு தோட்டம் வந்து உணவு தருகிறார்.  அவர்கள் வீட்டிலும் ஒரு பூனை இருக்கிறது.  அதன் பெயர்  ஜெசியாம்.  எப்போதும் என்னை முறைத்தே  பார்க்கிறது.  அது பார்க்க மிக அழகாக சுத்தமாக இருக்கிறது.  நானும்  ஒரு காலத்தில் அம்மா வீட்டில் இப்படித்தான்  இருந்தேன்.   அம்மா சாமி கிட்ட போகலைன்னா நானும்  சுத்தமாக அழகாகவே இருந்திருப்பேன் என்று மனதில் நினைத்துக்கொண்டேன் .


இன்னும் சில நாட்கள் பிறகு ....

ஹையா ஜாலி!  அந்த பெண்ணின் அம்மாவும் இப்போதெல்லாம் எனக்கு உணவு தருகிறார்.  ஆனால் எதோ தயக்கம் போல என்னை தொட மாட்டார். 
ஒருநாள் அவர்கள் கிச்சன் பின் கதவு திறந்திருந்தது. நான் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டேன்.  
 
 



அவர் சமைத்து கொண்டிருந்தார்.  என்னை பார்த்ததில் அதிர்ச்சியோ தெரியலை.  ஆனால் என்னை துரத்தவில்லை.   என்ன நினைத்தாரோ, என்னிடம் கனிவுடன் பேசினார்.   உணவும் தந்தார்.  அங்கேயே ஒரு மூலையில் படுத்துவிட்டேன். அவர் என்னை துரத்தவில்லை.  ஆனால்  இரவு 10 மணிக்கு கதவை திறந்து என்னை வெளியே அனுப்பி விட்டார்.  
 
 



எனக்கு துக்கமாக இருந்தது.  அவர் சமைக்கும்போது சன்னலின் வெளிப்பக்கம் இருந்து பார்த்தேன்.  இது தினமும் தொடர்ந்தது.  'ஒருவேளை ஏதாவது பரிசுப் பொருள்எதிர்பார்க்கிறரா அம்மா' என்று நினைத்தேன்.  இரண்டு சுண்டெலிகளை பிடித்து பின் கதவு முன் வைத்து காத்திருந்தேன்.  
 
 
 



காலை கதவை திறக்கும்போது ப்ளெசென்ட் சர்ப்ரைசாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.  காலை கதவைதிறந்தவர் வீல் என்று அலறிவிட்டார்.  எலியை பார்த்து யாராவது  பயப்படுவார்களா!!!   அவர் சத்தம் கேட்டு  ஓடிவந்த அப்பா அந்த எலிகளை தோட்டத்தில் புதரில் விட்டுவிட்டார்.  அவர்களுக்கு எலி பிடிக்கவில்லை போலும்.  அடுத்தமுறை பெரிய புறாக்குஞ்சை பிடித்து கொடுக்கணும் .. 

ஆனாலும் நான்  கதவுக்கு வெளியே உக்கார்ந்திருப்பேன்.  காலை கதவு திறந்ததும் உள்ளே ஓடிவிடுவேன்.  அந்த பெண் என்னை மடியில் வைத்துக்கொள்வார்.  நானும் அவரை அணைத்துக்கொள்வேன்.  
 
 
 



அவருக்கு எதோ எக்ஸ்சாமாம்  அவரது அம்மாவிடம் சொல்வது கேட்டது  //அம்மா இந்த பூனையை மடியில் வைத்தால்  ஸ்ட்ரெஸ் எல்லாம் போவது போன்ற உணர்வு .நான் படிக்கும்போது மட்டும் என்னுடன் இருக்கட்டும் .// உங்களுக்கு தெரியுமா அந்த அக்கா பரிட்சையில் முதல் மதிப்பெண்ணாம்.  எனக்கு மட்டுமே தெரியும் அந்த வசூல் ராஜா கட்டிப்புடி வைத்தியம் மகிமைதான்.  நான் தான் ஸ்ட்ரெஸ் ரிலீவர் அவருக்கு .

அம்மாவும் அக்கா சந்தோஷமே முக்கியம் என விட்டு விட்டார்.  அவரின் அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார் .  இப்படியே தினமும் இரவில் மட்டும் என்னை வெளியே விடுவார்கள்.  பகலில் நான் மேசை கீழே படுத்து தூங்குவேன்.  ஒரு நாள் அவர்கள் சோபாவில் உறங்கினேன்.  மிக மென்மையாக கதகதப்பாக இருந்தது.

ஒரு நாள் எனக்கு உடலுக்கு மிகவும் முடியாமற்போனது.  வெளியில் இரவு விடும் போது அந்த பெண்ணின் அம்மா அழுதாற்போலிருந்து.  எனக்குத் தெரியும்,  இரவு நேரங்களில் என்னை வெளியே விடும்போது அவர் தினமும் அழுகிறார்.  அன்று ஏதோ கணவரிடம் பேசினார்.  அவரும் சரி என தலையசைத்தார்.

இரவு சோபாவில் ஒரு துணியை விரித்து என்னை படுக்க வைத்தார் இந்த புது அம்மா .

எத்தனை சந்தோஷம் தெரியுமா?  எத்தனை காலம்  கழித்து ஒரு வீட்டில் பாதுகாப்பாக உறங்கினேன்...  இப்போதெல்லாம் தினமும் உறங்குகிறேன். அவர்கள் வீட்டு பூனை மட்டும் அடிக்கடி என்னை அடித்துவிட்டு செல்லும்.  பரவாயில்லை என்று விட்டு விடுவேன் ..

அவர்கள் ஜெசியை தூக்கிக் கொஞ்சும்போது, என்னையும் அப்படி என்று  கொஞ்சுவார்கள் என ஏக்கத்துடன் நினைப்பேன்.  எனக்கு பெயர் இன்னும் வைக்கவில்லை.  தற்சமயம் மல்ட்டி என்று கூப்பிடுகிறார்கள்.  பல நிறங்கள் என் உடலில் இருப்பதால் இந்த பெயராம்..

பெயரில் என்ன இருக்கு? எனக்கு ஒரு வீடு கிடைத்து விட்டது ..


இப்போதெல்லாம் மிக சந்தோஷமாக இருக்கிறேன்.  அம்மா என் தலையை தடவி விட்டார்.  என்னைக் குளிப்பாட்டி பவுடர் போட்டு  விட்டார்.  எனது புண்களெல்லாம் ஆறி வருகிறது ..
 ..
என்  புது அம்மா பெயர் ஏஞ்சல்.  அப்பா ஜேம்ஸ், அக்கா பெயர் ஷாரன்.  தங்கச்சி பெயர் ஜெஸ்ஸி ..

புது வீடும் அன்பான உறவுகளும் கிடைத்ததில் அளவில்லா சந்தோஷத்தில் நான் இருக்கின்றேன்.  இனி மேல் குப்பைத்தொட்டிகளை தேட வேண்டாம். வாகனங்களை பார்த்து பயப்படவேண்டியதில்லை.

யாரும் கல்லெடுத்து அடிப்பார்களோ என்று அஞ்ச வேண்டியதில்லை. நிம்மதியாக உறங்க ஒரு இருப்பிடம்  நல்ல வீடு கிடைத்துவிட்டது மல்ட்டிக்கு...

85 கருத்துகள்:

  1. அன்பு மல்ட்டி. நீ இனிமேல் நன்றாக இருப்பாய். அம்மா ஏஞ்சல், அக்கா, அப்பா, ஜெஸ்ஸி எல்லோரும் மிக நல்லவர்கள். நீ வாழும் காலம் இனிதாகக் கழியும். அன்பு ஏஞ்சலுக்கும் குடும்பத்துக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைச் சொல்லு. அன்பு முத்தங்கள்.

    பதிலளிநீக்கு
  2. கதை வித்தியாசமான பார்வையில். ரசிக்கும்படி இருந்தது. சக மனிதர்களிடம் காட்டமுடியாத அன்பை இந்த ஜீவன்களிடம் காட்டுகிறார்களே என்று ஆச்சரியம் (பொதுவா. பலர் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துபவர்கள்)
    நாய், பூனைகள் எதிர்பார்ப்பின்றி முழு அன்பு செலுத்துவதால் அவைகளை வளர்க்க ஆசைப்படுகிறார்கள் போலிருக்கிறது. ஹஸ்பண்ட் மறைந்தபோதும், கூட வளர்த்த நாய் இருக்கிறதே என்று ஆறுதல் அடைபவர்களையும், என்னுடைய நாய் (அவர்கள் இப்படிக் குறிப்பிடுவதில்லை. பெயரைத்தான் உபயோகப்படுத்துவார்கள்) இருப்பதால் எங்கு வரணும்னாலும் இரண்டுபேராத்தான் வருவோம், அதற்கும் இடம் சௌகரியமாக இருக்கணும் என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன். ஆச்சரியம்தான், தன்நலம் மிக்க இந்த உலகத்தில்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    ஐயா

    கேட்டு வாங்கிய கதைகளை ஒரு நூலாக வெளிந்தால் சிறப்பு தொடருகிறேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வாயில்லா ஜீவன்களின் பார்வையில் இருந்து ஒரு கதை
    மனம்தொட்ட கதை
    நன்றி நண்பரே
    எழுத்தாளர் பாராட்டிற்குரியவர்
    பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  5. ஏஞ்சல் எப்படி இருக்கிறீர்கள்!!! எவ்வளவு நாளாச்சு??!! வாங்கப்பா ப்ளீஸ்... முதலில் எங்கள் ப்ளாகிற்கு நன்றிகள் ஏஞ்சலைப் பிடித்து இழுத்து இங்குக் கொண்டு விட்டதற்கு!!!!!

    கதையை மிகவும் ஸ்வாசித்து, நானும் மல்டியுயாகி, ரசித்து ஏஞ்சல் குடும்பத்துடன் இருப்பது போலவே வாசித்தேன்....

    முதலில் முன்னுரையில் மார்லியைப் பற்றிச் சொன்னது மிகவும் மனதை வேதனைப்படுத்தியது. அப்படியே மல்டியின் வேதனையைப் பார்த்து மனம் வேதனைப்பட்டு படித்துக் கொண்டே வரும் போது...ஹப்பா ஏஞ்சலின் வீட்டுக்கு வந்துருச்சா இனி பயமில்லை என்று தோன்றி விட்டது! மனம் மகிழ்வானது. நானும், மகனும் அப்படித்தானே செல்லங்கள் பேசுவது போல, (டாக்டர் டூ லிட்டில்) நிறைய நினைத்துப் பரிமாறிக் கொள்வோம்....எழுதியும் வைத்திருக்கிறேன்...வாசித்துக் கொண்டே வரும் போது
    //காலை கதவை திறக்கும்போது ப்ளெசென்ட் சர்ப்ரைசாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். காலை கதவைதிறந்தவர் வீல் என்று அலறிவிட்டார். எலியை பார்த்து யாராவது பயப்படுவார்களா!!! அவர் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பா அந்த எலிகளை தோட்டத்தில் புதரில் விட்டுவிட்டார். அவர்களுக்கு எலி பிடிக்கவில்லை போலும். அடுத்தமுறை பெரிய புறாக்குஞ்சை பிடித்து கொடுக்கணும் .. //

    அப்புறம் அந்தக் கட்டிப்புடி வைத்தியம்!!!! சிரித்துவிட்டேன்....அதுவும் சத்தமாக...வீட்டில் எல்லோரும் சரி கீதாவுக்கு என்னவோ ஆகிடுச்சு என்று சொல்லிச் சிரித்துக் கொண்டார்கள்....சிரிக்கட்டும் எனக்கென்ன...என் உலகம் எனக்கு....

    ஸோ நம்ம செல்லங்கள் குடும்பத்தில் புது வரவு!! மல்டி வெல்கம்!! பாவம் ஒரு வழியாக ஏன்சலினிடம் அகதியாக வந்து இப்போது அதற்கு நல்ல வாழ்வு கிடைத்துவிட்டது! ஹாட்ஸ் ஆஃப் டு மல்டியின் பெற்றோர் மற்றும் அக்கா ஷாரன்!!

    ஏஞ்சல் வாழ்த்துக்கள்!! (கொஞ்சம் வெயிட் குறைந்திருக்கிறது போல இருக்கே.. யூ லுக் குட்!! தாங்க்ஸ் டு பாலியோ டயட்??!!!!)

    எங்கள் ப்ளாகிற்கும் வாழ்த்துக்கள்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. யாரும் கல்லெடுத்து அடிப்பார்களோ என்று அஞ்ச வேண்டியதில்லை..நாய்கள் செய்த பாவம் என்னவோ ?இப்படி அஞ்சும் படி மனிதன் நடந்து கொள்கிறானே :)

    பதிலளிநீக்கு
  7. //எங்க வீட்டில் நிம்மதியா தூங்குவதை பார்த்தபோது எனக்கு மனதே வலித்தது வீடில்லா ஒருவர் தனக்கு இருப்பிடம் கிடைச்சதும் எப்படி நிம்மதியா உறங்கியிருப்பார் என்பதை இதை பார்த்து உணர்ந்தேன் ..//

    அருமையாக சொன்னீர்கள்.கிறிஸ்துமஸ் சமயம் தேவனின் அன்பான பரிசு அழகான அன்பான குடும்பம் கிடைத்துவிட்டது மல்டிக்கு. சுகமாய் நோய்நொடி இல்லாமல் இருக்கட்டும். பழைய அம்மாவிடம் இருந்தபோது இருந்த தேக மினு மினுப்பு வரட்டும்.

    வாழ்த்துக்கள் ஏஞ்சல்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் பரிணாமம் அதுவும் பிராணிகளிடம் வியக்க வைக்கின்றது.இது போல எத்தனை பரிசு யாருக்கு கொடுத்துச்சோ மல்டி,அந்த புண்ணியத்தில் உங்கள் குடும்பத்தில் ஒருவராகிவிட்டது.வாழ்க வாழ்க.மிகவும் ரசிக்கும் படியான எழுத்துநடை.படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  9. மல்ட்டிக்கு உண்மையில் அதிர்ஷ்டம்தான் உங்க அன்பு கிடைத்தது. மிக அருமையா மல்டியின் கோணத்தில் எழுதியிருக்கீங்க அஞ்சு. கீப் இட் அப். மல்டிக்கு கட்டிபுடி வைத்தியம் கூட தெரிஞ்சிருச்சே...ஜெசியும் ப்ரெண்ட் ஆயிட்டா மல்டி ஹப்பி.

    பதிலளிநீக்கு
  10. பெரிய பெரிய ஜாம்பவான்கள் எழுதிய இடத்தில நானும் எனது கதையும் ..மிக்க சந்தோஷமும் நன்றிகளும் எங்கள் பிளாக் மற்றும் சகோதரர் ஸ்ரீராம் .ஆமாம் நான் நீண்ட நெடும் இடைவெளி விட்டுவிட்டேன் மீண்டும் வரும் ஜனவரி முதல் வலைப்பூவில் எழுத துவங்குவேன் ...basically i am a soft hearted person .நல்லா உற்சாகமா எழுதும் மனநிலை வரும்போது எதையாவது மன வருத்தமளிக்கும் செய்தி படித்து நத்தையாய் சுருங்கிவிடுவேன் ..அதனால்தான் வலைப்பூவில் பெரிய இடைவெளி ..என்னை ஊக்குவித்து மீண்டும் எழுத வைத்ததற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  11. அன்பு வல்லிம்மாவுக்கும் லவ் அண்ட் ஹக்ஸ் from me
    அழகான பின்னூட்டத்துக்கு அதுவும் முதலாக வந்து பின்னூட்டமளித்ததற்கு மிக்க நன்றி வல்லிம்மா

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் அழகான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி சகோதரர் நெல்லை தமிழன் .உங்கள் ரெசிப்பிக்கள் எல்லாமே சூப்பர் டேஸ்டி ..ஒன்னுவிடாம செய்திடறேன் இப்போல்லாம் ...நம் நாட்டில் இருந்த வரைக்கும் எதையும் செய்ய ஒரு தயக்கம் இருந்தது இங்கே வெளிநாட்டு வாழ்க்கை எனக்கு பலவற்றை எளிதாக்கியிருக்கு நான் எல்லா சாரிட்டி ஆர்கனைசேஷனிலும் இருக்கேன் மனிதர்களுக்கும் முடிந்த வரை உதவி செயகிறேன் இங்கே ..
    நீங்க சொன்னதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகின்றது எங்கள் ஆலயத்தில் ஒரு பெண்மணியின் இறுதி பயணத்தின் போது அவரது கணவர் எங்கள் பாதிரியாரிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார் அது ..//எனது மனைவியின் சவப்பெட்டிக்கு அருகில் எங்கள் dani வரணும் ஏனென்றால் அவருக்கு மிகவும் பிடித்த செல்லம் //

    கிறிஸ்தவ ஆலயங்களில் இப்படி அனுமதிக்க மாட்டார்கள் ஆனால் எங்கள் ரெவரென்ட் மிகவும் நல்லவர் அந்த நாலு கால் செல்லத்தையும் அனுமதித்தார் .. இந்த ஜீவன்கள் எதிர்பார்ப்பின்றி அன்பை பொழிவதே முக்கிய காரணம் எனலாம் .இங்கே இங்கிலாந்தில் pets உரிமையாளருடன் சேர்ந்து தங்க தனி ஹாலிடே காட்டேஜ்களும் உண்டு

    பதிலளிநீக்கு
  13. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சகோதரர் ரூபன்

    பதிலளிநீக்கு
  14. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் அண்ணா .
    நான் வேறொரு கதையும் எழுதி வைத்திருந்தேன் என் மகளுக்கு இதுதான் ரொம்ப பிடித்தது ஆகவே இதை அனுப்பினேன் ..மிக்க நன்றி தமிழ் மண வாக்கிற்கும்

    பதிலளிநீக்கு
  15. ஹா ஹா :) ஆமாம் சகோ தனபாலன் ..எப்படியோ வீட்டில் நுழைந்து விட்டாள் ..வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  16. கதாசிரியரும் என் அன்புக்குரிய சகோதரியுமான ‘ஏஞ்சலின்’ அவர்களை நீண்ட நாட்களுக்குப்பின், அழகான புஷ்டியான பூனைக்குட்டி போன்ற, புகைப்படத்தின் மூலம் இங்கு பார்த்ததில், மனதுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது. :)))))

    >>>>>

    பதிலளிநீக்கு
  17. @geetha and thulasi anna :))

    ஹா ஹா மிகவும் ரசித்து இருக்கிறீர்கள் கீதா ..வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிகள் ..நாமெல்லாம் ரெண்டு காலோட நடக்கும் நாலுகால் உள்ளங்கள் :))ஒரே மாதிரி சிந்தனை நமக்கு high five :) ஒரு நாள் சன்னல் வழியே பார்க்கிறேன் தோட்டத்தில் மகள் கொடியில் இருந்து துணிகளை எடுக்கிறாள் இந்த மல்டி அவள் தோளில் குரங்கு போல கழுத்தை இறுக்கி பிடித்திருக்கு :)

    இந்த கதையை பேச்சு தமிழில் ஷாரனுக்கு வாசித்து காட்டினேன் தேம்பி தேம்பி அழுதாள் ..

    மார்லி இன்னமும் தினமும் வாக் செல்லும்போது வெகு தூரத்தில் என்னை பார்த்தாலும் அதன் ஓனரிடம் சிக்னல் கொடுக்கும் staffordshire Bull Terrier
    வெரைட்டி அது ..
    சில விஷயங்களை கேள்விப்பட்டா மனசு நொறுங்கிடும் ..இது போல எத்தனையோ ஸ்டோரீஸ் இருக்கு ..நான் முன்பு ப்லாகில் போட்டேன் ஒரு மஸ்கொவி வாத்து .அது கூட யாரோ எடுத்து வந்து canal பக்கம் விட்டிருக்காங்க ..சில பிள்ளைங்க அதை எட்டி உதைப்பாங்க அப்போ அது பறக்க முடியாம தவிக்குமாம் அதை பார்த்த மாலி ஓனர் காப்பாற்றி வேறொரு நல்ல இடத்தில கொண்டு விட்ருக்கார் .இப்படி நிறைய சம்பவங்கள் இருக்கு ..மீண்டும் 2017 முதல் வலைப்பூ பக்கம் வருவேன் :)
    யெஸ் பேலியோ மற்றும் க்ளூட்டன் free lifestyle நிறைய மாற்றம் என்னிடம் ஏற்படுத்தியிருக்கு
    முன்பெல்லாம் அதிகம் படபடப்பு வரும் கோபம் வரும் அழுகை வரும் அதெல்லாம் இல்லாம தெளிவா இருக்கேன் மிக்க நன்றி கீதா ..


    பதிலளிநீக்கு
  18. பொதுவாக வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற பிராணிகளிடமும், அதைக்கொஞ்சிக்கொண்டு வளர்ப்பவர்களிடமும் எனக்கு ஏனோ கொஞ்சமும் ஈடுபாடு கிடையாது. அதுபோலவே தெருவில் சுற்றித் திரியும் நாய்களிடமும் எனக்கு மிகுந்த வெறுப்பு மட்டுமே வருவது உண்டு. என் சொந்த அனுபவத்திலேயேயும், எனக்குத்தெரிந்த தூரத்து உறவினர்கள் + நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகத் துயரமான அனுபவங்களினாலும் இதற்கெல்லாம் அடிப்படையாக பல்வேறு காரணங்கள் என்னிடம், உண்டு. அதையெல்லாம் இங்கு இப்போது விரிவாக விளக்கிச் சொல்ல நான் விரும்பவில்லை.

    அப்பேற்பட்ட என்னையே இந்தக் கதை சற்றே மனம் கலங்க வைத்துள்ளது. அதுவே இந்தக் கதாசிரியர் அவர்களின் வெற்றி என நாம் எடுத்துக்கொள்ளலாம்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  19. நாய் ஒன்று தன் எண்ணங்களையும், தனக்கு ஏற்படும் அன்றாட சோதனைகள் + மன வேதனைகள் பற்றியெல்லாம், தன் மனம் திறந்து பேசுவதுபோல இந்தக்கதை மிக அழகாக யோசித்து எழுதப்பட்டுள்ளது.

    கதாசிரியர் சக மனிதர்களிடமும், பிராணிகளிடமும் பாசமும் நேசமும், கருணை உள்ளமும் கொண்ட தங்கமான மனஸு உள்ளவர் என்பது எனக்கு ஏற்கனவே மிகவும் நன்றாகவே தெரியும். எதைப்பற்றியும் நன்றாக சுவாரஸ்யமாக எழுதக்கூடிய எழுத்தாளர் என்பதும் தெரியும். அவர் சிறுகதையும்கூட எழுதுவார் என்பது எனக்கு இப்போதுதான் முதன்முதலாகத் தெரிய வருகிறது. என்னால் மிகவும் மகிழ்ச்சியாக உணர முடிகிறது.

    கதையும், கதையின் கருத்தும், அவர் அதைச் சொல்லியுள்ள விதமும், எழுதியுள்ள பாணியும் என்னை மிகவும் வியக்க வைக்கிறது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  20. @Bagawanjee வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜீ ..

    பதிலளிநீக்கு
  21. கதாசிரியர் அவர்களிடம் அவர்களின் வித்யாசமான அழகான புகைப்படத்துடன், கதையை வாங்கி இங்கு ’எங்கள் ப்ளாக்’கில் பிரசுரம் செய்து, பார்க்கவும் படிக்கவும் வாய்ப்பளித்த என் அருமை நண்பர் ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  22. @Gomathy arasu வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி அன்பு கோமதி அக்கா ..
    இப்போ பழைய மினுமினுப்பு வந்துவிட்டது ஜெஸியும் கட்டிபுடிச்சி விளையாடி அவவ்போது நைசா கடிச்சி பொறாமையையும் காட்டும்

    பதிலளிநீக்கு
  23. @aatchi வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி அன்பு தங்கை ஆச்சி

    பதிலளிநீக்கு
  24. வாவ் கதையும் அதன் கருவும் அதில் மறைந்திருக்கும் அன்பும், இரக்கமும், மனிதநேயமும் அருமை ஏஞ்சல். உங்கள் புகைப்படன்களை இட்டு கதை ஆரம்பித்த விதம் இந்தக்கதை சொந்தக்கதை எனும் நெருக்கத்தினை உணர்த்திசெல்கின்றது. புகைப்படத்தில் உள்ளம் நிறைந்து அழகாய் மலந்து சிரிக்கும் ஏஞ்சலைகண்டதில் மகிழ்ச்சி. இன்னும் எழுதுங்கள்பா.

    ஏஞ்சலை தேடிப்பிடித்து கதை வாங்கிப்போட்ட எங்கள் பிளாக்குக்கு பாராட்டுகள். இச்சேவைகள் என்றும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  25. @asokan kuppusaamy வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர் அசோகன் குப்புசாமி .

    பதிலளிநீக்கு
  26. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா ..நீங்களும் பிளாக் பக்கம் அப்டேட்ஸ் செய்து ரொம்ப நாளாச்சுன்னு நினைக்கிறேன் வாங்க நாமெல்லாம் ஜனவரி முதல் மீண்டும் துவங்குவோம்

    பதிலளிநீக்கு
  27. வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா ..எனக்கு எல்லா உயிர்களிடத்தும் அன்பு உண்டு .சுண்டெலி முதல் பெரிய அனிமல்ஸ் வரை எல்லாமே பிடிக்கும் :)சிறுகதை எழுத வைத்தவர் ஸ்ரீராம் சகோ தான் அவருக்கு மனமார்ந்த நன்றிகள்
    எனது அதிர்ஷ்டம் மகளும் கணவரும் அதே அலை வரிசையில் அமைந்தது .அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  28. @nishanthi prabakaran வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நிஷா ..நிச்சயம் ஜனவரி முதல் மீண்டும் எழுத துவங்குவேன் ..

    பதிலளிநீக்கு
  29. @Vai.Gopu anna //கதாசிரியர் சக மனிதர்களிடமும், பிராணிகளிடமும் பாசமும் நேசமும், கருணை உள்ளமும் கொண்ட தங்கமான மனஸு உள்ளவர் என்பது எனக்கு ஏற்கனவே மிகவும் நன்றாகவே தெரியும்.//மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  30. செல்லங்களை வளர்க்கும்போது மகிழ்ச்சிதான் ஆனால் அவற்றின் மறைவுக்குப் பின் வேறு செல்லங்களின் மேல் மனம் ஒட்டுவதில்லையே

    பதிலளிநீக்கு
  31. @ G.M.Balasubramaniyan sir ..வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஐயா .நீங்க சொல்வது முற்றிலும் உண்மை
    சிலர் மிக கட்டுப்பாட்டுடன் இருக்காங்க ஆனா மனசு கேக்க மாட்டேங்குதே ஸபல்ப்ட்டு மீண்டும் வளர்க்க தோணும் எங்களுக்கு ..நாங்க முதல் வளர்த்த pet ஒரு ரஷ்யன் ஹாம்ஸ்டர் அதன் வாழ்வு நாள் 3 வருஷம்தான் அது தெரியாம வாங்கி வந்து சரியா 2 வருடம் 10 மாதத்தில்அது போனபோது இனிமே வீட்டில் வளர்க்கவே கூடாதுன்னு நினைச்சோம் ஆனா மகளுக்காக தான் ஜெசியை கொண்டாந்தோம் இப்போ மல்டி :)

    பதிலளிநீக்கு
  32. என்னுடைய மகளின் தோழி, சாரா எனும் பெயர், மகளும் அவளும் கிண்டர்கார்டனில் இருந்து இப்போது வரை நல்ல நட்பு, உயிர்த்தோழிகள். அவள் பிறக்கும் போதே அவள் வீட்டில் ஒரு குட்டிப்பூனை வளர்த்தார்கள். என் மகளும் அவர்கள் வீட்டில் வளர்த்ததால் இருவருக்கும் அது பெட் செல்லம். அவள் வீட்டார் எங்கேனும் செல்லும் போது அதை கவனிப்பது, உணவளிப்பது எல்லாம் மகள் தான். எங்க வீட்டிலும் இப்படி ஏதேனும் வளர்ப்போம் என கேட்டால் எனக்கு அதை பராமரிக்க நேரம் இல்லை என்பதனால் நீங்கள் வளர்ந்த பின் வளர்த்து கொள்ளுங்கள் என சொல்லி இப்போது வீட்டில் ஹாலில் மீன் தொட்டி மட்டும் தான் அனுமதித்துள்ளேன்.அதனால் அந்த பூனைக்குட்டியை இவளும் தன் செல்ல பெட்டாக வளர்த்தாள். கிட்டத்தட்ட 15 வருடம்.போன வருடம் அந்த பூனை செத்து போனது. அழுகை எனில் அப்படி ஒரு அழுகை. மனிதர்கள் இறப்பில் கூட அப்படி யாரும் அழுது நான் பார்க்கவில்லை. கிட்டதட்ட ஒருவாரம் எதிலும் ஈடுபாடில்லாமல், பூனை போனதை பற்றியே மாறி மாறி பேசுவதும் மேசேஜ் எழுதுவதுமாய் ஆளையாள் கட்டிப்பிடித்து துக்கம்.
    கொடுத்து வைத்த் பூனைக்குட்டி தானே

    பதிலளிநீக்கு
  33. @nishanthi அன்புடன் வீட்டில் ஒருவர் போல வளர்த்த ஜீவன்கள் நம்மை விட்டு செல்லும்போது ஏற்படும் துன்பம் வார்த்தையால் வடிக்க முடியாதது நிஷா ..9 வருஷம் வளர்த்த தோட்டத்து pond மீன் கடந்த மாதம் இறந்தது அதற்கு பிறவியில் இடுப்பு பாகம் வளைந்தாற்போல் இருக்கும் ஆனால் என்னை பார்த்து நீந்தி வரும் .அன்று முழுதும் அழுகைதான் நான் .பிள்ளைங்களுக்கு இங்கே வெளிநாட்டில் வளர்ப்புப்பிராணிகள் மீது அதீத அன்புண்டு நிஷா

    பதிலளிநீக்கு
  34. Enna solvatune therla angel.multi,jessie kodutu vachavanga.oru azaghana family kidachurukku.hugs dear angel b/w u looks like a angel

    பதிலளிநீக்கு
  35. @menaga அன்பான அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மேனகா :)

    பதிலளிநீக்கு
  36. ஜிஎம்பி சார் சொல்லி இருப்பது போல் எங்களுக்கு எங்கள் மோதி எங்களை விட்டுப் பிரிந்த பின்னர் வேறு ஒரு செல்லத்தின் மேல் மனம் ஒட்டவில்லை! :( ஒவ்வொரு வருடமும் டிசம்பர் பதினாறாம் தேதி அதை நினைத்துக் கொள்வோம். :( அருமையாக ஒரு வாயில்லாப் பிராணியின் பார்வையில் பார்த்து உணர்ந்து எழுதப்பட்ட கதை.

    பதிலளிநீக்கு
  37. @ Geetha sambasivam madam ..வருகைக்கும் அன்பான பின்னூட்டத்திற்கும் நன்றி கீதா மேடம் ..உண்மைதான் ஒரு ஜீவன் மேலே அன்பு வச்சி அதை இழக்கும்போது ஏற்படும் மனக்கஷ்டம் சொல்லவே முடியாத ஒன்று .எங்க வீட்ல வளர்க்காத பிராணிகள் இல்லைன்னலாம் சென்னையில் ..ரொம்ப கட்டுப்பாடோடத்தான் ஜெர்மனில இருந்தோம் இங்கே இங்கிலாந்து வந்து மகள் வளர்ந்ததும் அவளுக்குன்னுதான் ஹாம்ஸ்டர் ஜெசி எல்லாம் வந்திட்டாங்க ....சின்ன வயசில் இருந்தே பிராணிகள் மேல் பிரியம் அது கடவுள் புண்ணியத்தில் இன்னமும் தொடருது ..மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  38. தாமதமாகிவிட்டது. அரையாண்டுத் தேர்வுகள் நடக்கிறது இல்லையா...அதான் என்னால் கீதா அனுப்பியதும் கருத்து சொல்ல முடியவில்லை. மாலையில்தான் வாசிக்க முடிந்தது.

    ஏஞ்சல் சகோ தங்களை மீண்டும் இங்கு பார்ப்பதற்கு மிக்க மிக்க மகிழ்ச்சி! கீதாவும் நானும் பேசும் போது உங்களைப் பற்றி நினைத்து பதிவு ஒன்றுமே இல்லையே என்று பேசிக் கொள்வது உண்டு. மீண்டும் வந்தமைக்கு எங்கள் ப்ளாகிற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

    கதையை ஏதோ அப்படியே அருகில் இருந்து நம் எல்லோருடனும் மல்டி பேசுவது, புலம்புவது, தனது கதையை நம்முடன் பகிர்ந்து கொள்வது போன்று இருக்கிறது. நாம் நம் நண்பர்கள், உறவினர்களிடத்தில் நமது வருத்தங்கள், உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது போன்று...அருமை சகோ...

    நன்றி எங்கள்ப்ளாக்!

    பதிலளிநீக்கு
  39. ஜீவகாருண்யமுள்ள பெண்ணே உனக்கும், உன் உண்மைக் கதைக்கும் என் வாழ்த்துகள்.மல்டிக்கு வீடு கிடைத்ததே அது ஸாதாரண வீடு இல்லை. நினைத்து நினைத்து ஸம்பவங்களை அசை போடுகிறேன். எம்மாதிரியான குடும்பத்தில் மல்டிக்கு இருப்பிடம்? வயதானவர்களுக்குக் கூட இம்மாதிரி இருப்பிடம் வேண்டும். 40 வருஷங்களுக்குமுன் எங்கள் வீட்டில் காட்மாண்டுவில் முக்தி நாத்திலிருன்து ஒரு நல்ல ஸோம் என்ற குட்டி பப்பி வந்தது. நான் ஆக்ஷேபணை செய்துதான் வளர்க்க ஒப்புக்கொண்டேன். 5 குழந்தைகளை வளர்த்த அலுப்பு. ஸோம் என் சொன்னபடியெல்லாம் கேட்கும். பசங்களைப்போல் கண்டிப்புடன் வளர்த்தேன்
    2 வருஷம் இருந்தது.. ஒருநாள் யாரோ திருடிக்கொண்டு போய்விட்டார்கள். யாவரும் எவ்வளவு துக்கித்தோம். இன்றும் நி்னைத்தால் கஷ்டம்தான் உயர்ந்த ஜாதி மல்டிகலர் புஸுபுஸு பப்பி. யாவரையும் அன்புடன் அரவணைக்கும் இயல்பு. எனக்கு உடல் நலமில்லை. இல்லாவிட்டால் இன்னும் எழுதுவேன். அஞ்சு உனக்கும்,ஸ்ரீராமிர்க்கும் பாராட்டுதல்கள்.நல்லதொரு குடும்பம். பல்கலைக்கழகம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  40. மல்ட்டி ஆணா பெண்ணா? எதுவா இருந்தால் என்ன? உங்க நல்ல மனசுக்கு மல்ட்டி சந்தோஷமா இருக்கட்டும். பெருமைக்காக இல்லை, நான் எழுதிய நான்சி கதை ஞாபகம் வந்தது.

    பதிலளிநீக்கு
  41. மல்ட்டி, ஏஞ்சலிடம் அல்லவா சேர்ந்திருக்கிறாய்..வாழ்க்கை சொர்க்கம் தான்.

    ஏஞ்சல், you are an angel! looking very cute! கதை மிக அருமை..மல்ட்டியின் பார்வையில். எலி கொண்டுவந்ததைச் சொன்னது..ஆஹா! அருமையான சிந்தனை. நல்ல வேலை, புறாக்குஞ்சைக் கொண்டுவருவதற்குள் வீட்டில் சேர்த்துக் கொண்டீர்கள். :))
    எங்கள் பெரியம்மா வீட்டில் ஒரு நாய் இருந்தது.tuffy. hum aapke hain kaun tuffy மாதிரியே இருக்கும்...அருகில் போக பயந்தாலும் அது இறந்தவுடன் வருத்தமாக இருந்தது.
    பிள்ளைகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். எனக்கும் ஆசைதான்..ஆனால் வேலை கருதி, இன்னும் சில ஆண்டுகள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
    வாழ்த்துகள் ஏஞ்சல். ஸ்ரீராம் சகோவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  42. "Thulasidharan annaa

    மிக்க சந்தோஷம் துளசி அண்ணா ..நான் நலமா இருக்கேன் ..காலை நேரத்தில் வாலண்டியரிங் மற்றும் தினமும் நடை பிறகு மகளுடன் படிக்கும்போது அமர்வது என நேரமே இல்லாமற்போனது ..முகப்புத்தகத்தில் தமிங்கிலீஷ் கமெண்ட்ஸ் போட்டு ஓடிடுவேன் பிளாக் பக்கம் நிச்சயம் அடுத்த ஆண்டு நிறைய பதிவு போட இருக்கேன் ..தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ..இந்த மல்ட்டி ரொம்பவே அன்பான பூனை ..கண்ணாடி glazed விண்டோ வழியே அதன் பார்வையை பார்த்தீர்களா ..எனக்கு மனசெல்லாம் வலிக்கும் எப்படியோ எங்களை சமாதானப்படுத்தி வீட்ல நுழைஞ்சிட்டா

    பதிலளிநீக்கு
  43. @காமாட்சியம்மா
    தங்கள் அன்பான பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் .முன்பு உங்க வலைப்பூவில் சொன்ன நினைவு இருக்கு ..சில நேரத்தில் மனதுக்கு துக்கமாகிடும் இல்லையா நம்ம பொருளை யாரோ திருடிவிடும்போது ..அந்த பப்பியின் மனதும் உங்களை தேடியிருக்கும் ..
    மிக்க மகிழ்ச்சி அம்மா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்

    பதிலளிநீக்கு
  44. @ Karthick saravanan வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தம்பி கார்த்திக் ..
    உண்மையில் நானும் இன்று நான்சி கதை பற்றி நினைத்தேன் ..
    கடந்த வருடம் என்று தலைப்பிட்டு //இந்த கதை நிறைய பேரை அழ வைத்ததின்னு சொன்னிங்க //அதுவும் நினைவு வந்தது :) அழுத வாங்கலில் நானும் ஒருத்தியாச்சே :)

    மல்ட்டி spayed பெண் பூனை ஆனால் மைக்ரோ சிப்பிங் செய்யலை அது செய்திருந்த ஓனர் யார்துன்னு கண்டு பிடிச்சிருக்கலாம் ..அதென்னவென்றால் நியூட்டரிங் இலவசம் மைக்ரோ சிப்பிங் 18 பவுண்ட் இங்கே அதனால் நிறைய பேர் சிப்பிங் செயறதில்லை

    பதிலளிநீக்கு
  45. @Grace .வருகைக்கும் அன்பான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கிரேஸ் ..ஏற்கனவே எங்க ஜெசி புறா குஞ்சு கொண்டு வந்திருக்கு ..இவங்க அட்டகாசம்லாம் சம்மர்லதான் அணில் உட்பட கிப்டா கிடைக்கும் :)

    நிறைய moth வண்ணத்துப்பூச்சி எல்லாம் வந்திருக்கு எனக்கு :)

    பிள்ளைங்களுக்கு ஏதாவது ஒரு pet வாங்கி கொடுங்க கிரேஸ் ..பல விதங்களில் அவை உதவும் ஸ்ட்ரெஸ் ரிலீவர்ஸ் இந்த வளர்ப்பு பிராணிகள் .
    ஊரில் நிறைய டாக்ஸ் வளர்த்து அவை இன்னும் நீங்க நினைவா இருக்கு நெஞ்சில் சில கஷ்டங்கள் இருக்கு pets வளர்ப்பில் ஆனா அதையும் மீறி ஒரு சந்தோசம் அதிகமாவே கிடைக்குது ..thanks dear.

    பதிலளிநீக்கு
  46. வித்தியாசமான களம், வித்தியாசமான பார்வை. பாராட்டுக்கள்.
    இந்த கதையை படித்த பொழுது என் தயார் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. நாங்கள் குடியிருந்த வீட்டில் நிறைய தெரு நாய்கள் வந்து தாங்கும். நான் அவற்றிக்கு உணவிடுவேன். ஒரு மழை காலத்தில் அந்த நாய்களுள் ஒன்று குட்டிகள் ஈன்றிருந்தது. நல்ல மழை பெய்து கொண்டிருந்த ஒரு இரவில் மின்சாரமும் போய் விட்டது. என் அம்மாவோ கையில் எமெர்ஜென்சி விளக்கை தூக்கிக் கொண்டு, மழையை பொறுப்படுத்தாமல் கொல்லை புறம் சென்றார். என்னவென்று விசாரித்தால்,"பாவம்டி, ஒரு நாய் பிரசவித்திருக்கிறது. இந்த மழையில் என்ன செய்யும்? அதான் சாரல் அடிக்காமல் மறைப்பு வைத்து விட்டு வந்தேன்" என்றார். அம்மாவின் ஈர மனது இப்போது இன்னும் நன்றாக புரிகிறது.

    பதிலளிநீக்கு
  47. இங்கே எங்கள் ப்ளாகையும் பாராட்ட விரும்புகிறேன். சிறுகதை என்னும் வடிவமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் தேடித் தேடி சிறுகதைகளை வெளியிடும் எங்கள் ப்ளாக், அதற்காக முயற்சி செய்யும் ஸ்ரீராம் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! ஸ்ரீராமுக்கு 'சிறுகதை காவலர்' என்னும் பட்டம் கொடுக்கலாமா என்று கூட தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  48. இங்கே எங்கள் ப்ளாகையும் பாராட்ட விரும்புகிறேன். சிறுகதை என்னும் வடிவமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் தேடித் தேடி சிறுகதைகளை வெளியிடும் எங்கள் ப்ளாக், அதற்காக முயற்சி செய்யும் ஸ்ரீராம் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! ஸ்ரீராமுக்கு 'சிறுகதை காவலர்' என்னும் பட்டம் கொடுக்கலாமா என்று கூட தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  49. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  50. ///எதுவானாலும் தயங்காம எழுதுங்க!/// இது இதுதான் எனக்கு இங்கு ரொம்பப் பிடிச்சிருக்கு:), முன்னங்கால் பின்னங்கால் எல்லாம் ரைப் அடிக்க:) மெதுவாக தயக்கத்தோடு எட்டிப் பார்த்த எனக்கு, இதைப் பார்த்ததும் பூட்ஸ் குடிச்சதுபோலாச்சு:). ஏன் தெரியுமோ, என் நாக்குத்தான் எப்பவுமே எனக்கு எதிரி:), இங்கு இனி நான் என்ன எழுதினாலும் ஆரும் திட்ட முடியாதெல்லோ...:) எதுக்கும் முன்னெச்சரிக்கையா அஞ்சூஊஊஊஊஊஊ என் முன்னங்கால் வலது கையை இறுக்கப் பிடிச்சுக்கொள்ளுங்கோ, கொமெண்ட்ஸ் போட்டிட்டு ஓடிடுறேன்.

    நான் சொன்னேன், என் வாய் சொல்லுக் கேட்காது கண்டபடி எழுதிடுவேன் வேணாம் எதுக்கு வம்பு என, ஆனா அஞ்சுதான் இல்ல நீங்க வந்தாலே சந்தோசம் என “சும்மா இருந்த சங்கை(என்னை) ஊதிக்கெடுத்திட்டா... இனி என் எழுத்தை தாங்கித்தான் ஆகோணும்...

    எத்தனையோ பதவிப் பெயரோடு இப்போ அஞ்சு “கதாசிரியர்” ஆகிட்டா.. வாழ்க ... வளர்க.... இக்கதையின் கதாநாயகி... அதாவது மல்ட்டி போலதான் அஞ்சுவும் ஒரு மல்ட்டி வுமன்:) வெரி சொறி டங்கு ஸ்லிப் ஆச்சு “மல்ட்டி கேள்”..

    பதிலளிநீக்கு
  51. ////கேட்டுவாங்கிப்போடும் பகுதிக்காக என்னையும் அன்போடு அபார நம்பிக்கை வைத்து ///// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவர் சொன்னாரா??? சொன்னாரா? அபார நம்பிக்கை என சொன்னாரா??? ச்ச்ச்ச்சும்மா ச்சும்ம்மா தம்பட்டம் அடிக்கப்பிடாது:)) இனிக் கஸ்டம்தான் அஞ்சுட நிலைமை.. அதிரா வந்திட்டனெல்லோ:))


    /////அப்போது பார்த்ததுதான் இந்த குடும்பம் அம்மா அப்பா மகள். மகள் எப்பவும் ரோட்டில் இருக்கும். பூனைகளை கண்டதும் தொட்டு விளையாடுவார். //// ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இனி நான் அ வில இருந்து திரும்ப அஞ்சுவுக்கு டமில் படிப்பிக்கோணும்... [எனக்கு டமில்ல “டி” ஆக்கும்... நம்மள நாமளேதானே புகழோணும் அடுத்தவங்களோ பிகழுவினம்?:)]] மகள் எப்பவுமே ரோட்டிலேதான் இருப்பா என்பதுபோல இருக்கு வசனம்.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு புள்ளி போட்டீங்க???:)

    பதிலளிநீக்கு
  52. ////காலை கதவை திறக்கும்போது ப்ளெசென்ட் சர்ப்ரைசாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். காலை கதவைதிறந்தவர் வீல் என்று அலறிவிட்டார். எலியை பார்த்து யாராவது பயப்படுவார்களா!!! /// ஹாஹாஹா ஹாஆஆ மீனுக்கெல்லாம் பயம்போல, ஒருக்கால் இதுபற்றி றிசேஜ் ஆரம்பிக்கோணும்:)

    /// தங்கச்சி பெயர் ஜெஸ்ஸி ../// ஓ.. எப்பூடி கரெக்ட்டா சொல்றீங்க மல்ட்டி??? எனக்கு பேர்த் சேர்ட்டிபிகேட் வேணும்.. ஏனெனில் மல்ட்டியை பார்த்தால் ஜங்கா இருக்கிறா... அவட நியூ மம்மியைப்போலவே:)..

    ///அவர்கள் வீட்டு பூனை மட்டும் அடிக்கடி என்னை அடித்துவிட்டு செல்லும். பரவாயில்லை என்று விட்டு விடுவேன் ..///// ஹா ஹா ஹா சூப்பர்ர் மம்மியைப் போலவேதான் புது மகளும்...

    பதிலளிநீக்கு
  53. ////Angelin said...
    @nishanthi prabakaran வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி நிஷா ..நிச்சயம் ஜனவரி முதல் மீண்டும் எழுத துவங்குவேன் .///// Ohhh my கடவுளே... இதென்ன வலையுலகுக்கு வர இருக்கும் சோதனை:) இது நாட்டுக்கு நல்லதில்லையே:)).. ஹா ஹா ஹா ஆரம்பியுங்கோ அஞ்சு... 2011 காலப்பகுதியை மீண்டும் உருவாக்கோணும் என எனக்கும் ஆசைதான்... ஆனா பேஸ்புக் தான் இடையில் எல்லோர் எழுத்தையும் தடைப்பண்ணியது...

    பதிலளிநீக்கு
  54. .முடிவுரைக்கு:) வந்திட்டேன்ன்.. அஞ்சுவை எப்பவும் திட்டுவேன், ஏசுவேன் ஆனா மிகவும் ரசிப்பேன், அதுபோலத்தான் மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க அஞ்சு, படம் பார்ப்பதுபோல இருக்கு .. உண்மைச் சம்பவமும் அதை எழுதிய விதம் மனதைக் கவருது, வாழ்த்துக்கள்... புளொக்கை தூசு தட்டுங்கோ.

    கொமெண்ட்ஸ் போட்டு நீண்ட காலங்கள் ஆனதால், கை எங்கு வைக்கிறேன் கால் எங்கு வைக்கிறேன் என்றே தெரியல்ல.. அங்கு அடிபட்டு இங்கடிபட்டு தட்டுத்தடுமாறி, பாஸ்வேர்ட் போட்டு உள்ளே நுழைஞ்சிட்டேன்ன்... மீண்டும் சந்திப்போம், மிக்க மகிழ்ச்சி. தமிழ்மணம் கூட பாஸ்வேர்ட் மறந்திட்டேன், வோட் போட முடியேல்லை. அம்முலு, கீதா, கோபு அண்ணன் மற்றும் எல்லோரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு இங்கு.

    பதிலளிநீக்கு
  55. athira said...

    //கோபு அண்ணன் மற்றும் எல்லோரையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு இங்கு.//

    வாங்கோ அதிரா ! நல்லா செளக்யமா சந்தோஷமா ஜாலியா இருக்கீங்களா? எனக்கும் எங்கட அதிராவை நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட நாட்களுக்குப்பின் இங்கு பார்த்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. :)

    இங்கு காட்டப்பட்டுள்ள பூனைகளைப் பார்த்ததும் எனக்கு உடனே அதிரடி அதிரா ஞாபகம்தான் வந்தது.

    அதிரடி, அலம்பல், அட்டகாச அதிராவும், பிரித்தானியா மஹாராணியாரின் ஒரே வாரிசும் ..... அதாவது என்றும் ஸ்வீட் சிக்ஸ்டீனுமாகிய உங்களிடமிருந்து, அஞ்சுவால் களவாடப்பட்ட பூனைகளாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழும்பியது.

    தங்களின் வருகைக்கும், என்னை இன்னும் நினைவில் வைத்துள்ளதற்கும் மிக்க நன்றி, அதிரா. :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ நான் உங்களுக்கு தபால்காரர் மூலம் அனுப்பிய பேர்த்டே விஷஸ் கிடைக்கல்லியோ??? இருங்கோ வாறேன்ன்ன், அனைத்துக்கும் காரணம், இந்த மல்ட்டியை ஓடிப்போய்த் தூக்கி வந்து வீட்டுக்குள் ஒளிச்சுப் போட்டு, ஏதோ தான் தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லித் திரியும் மீன்குஞ்சுதேன்ன்ன்ன்... சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ச்ச்ச் மீ ரொம்ப நல்ல பொண்ணு சின்ன்ஸ்ஸ் சிக்ஸ் இயேர்ஸ்ஸ்ஸ்... எஸ்கேப்ப்ப்:)

      நீக்கு
  56. FLASH NEWS:-
    =============

    http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

    இதற்கிடையில் நம் அதிரடி அதிராவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருப்பதாகவும், அதுவும் இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் ஜெர்மனியிலிருந்து கசிந்துள்ள மணிமணியான கிசுகிசுத்தகவல் ஒன்று தெரிவிக்கிறது. :)))))

    http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க நியாஆபக சக்தியைக் கண்டு நான் வியக்கிறேன்ன்ன்ன் ஹா ஹா ஹா ...

      நீக்கு
  57. Reply

    வை.கோபாலகிருஷ்ணன்December 21, 2016 at 11:51 AM

    /////அதிரடி, அலம்பல், அட்டகாச அதிராவும், பிரித்தானியா மஹாராணியாரின் ஒரே வாரிசும் ...///// அச்சச்சோஓஓ இதைத் த்ட்டிக் கேட்க இங்கின ஆருமே இல்லயோ??? நான் காணாமல் போன ஒரு வருசத்துள் கோபு அண்ணனுக்கு நிறைய வயசாயிட்டுதுபோல இருக்கே... இலக்கணப் பிழையா எழுதுறார்ர்ர்... அதாவது பிரித்தானியா மகாராணியின் வாரிசு அல்ல, ஒரே பேத்தியாக்கும்... க்கும்.... க்கும்ம்ம்:)

    பதிலளிநீக்கு
  58. @Gopu anna நிறைய பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்கணும் ஆனாலும் இதை முதலில் சொல்லிடறேன் கோபு அண்ணா ஒரு சிறு திருத்தம் ஜெர்மன் தகவலில் அது பேர குழந்தைகள் ..grand children

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ எதுக்கு இவ தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு நடத்துறா... இருங்கோ வைக்கிறேன் வெடி.....

      நீக்கு
  59. //.முடிவுரைக்கு:) வந்திட்டேன்ன்.. அஞ்சுவை எப்பவும் திட்டுவேன், ஏசுவேன் ஆனா மிகவும் ரசிப்பேன், அதுபோலத்தான் மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க அஞ்சு, படம் பார்ப்பதுபோல இருக்கு .. உண்மைச் சம்பவமும் அதை எழுதிய விதம் மனதைக் கவருது, வாழ்த்துக்கள்... புளொக்கை தூசு தட்டுங்கோ.///மிக்க நன்றி அதிரா நான் சொன்னதும் கையில் விடாம இறுக்கப்பிடித்திருந்த பொன்னியின் செல்வனையும் வைத்துவிட்டு ஓடோடி வந்து அட்டகாசம் அதகளம் செய்து விட்டு இந்த இடத்தை கலகலப்பாக்கியதற்கு மிக்க நன்றி அதிராவ் ..

    பதிலளிநீக்கு
  60. @Athira அந்த புள்ளி மேட்டருக்கு வருவோம் ..இந்த கதை நான் 2 மாதங்களுக்கு முன்பே ஓவர்னைட் மிக அவசரமாக வேலை பளுவில் தட்டி விட்டேன் அடுத்தது மீண்டும் வாசிக்க கூட இல்லை ..முக்கியமான விஷயம் புள்ளி வைக்க வேண்டிய இடங்களில் வைக்கவேயில்லை :)) பாவம் ஸ்ரீராம் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கார் எடிட் செய்யும்போது என்று நினைக்கிறேன்
    அடுத்த முறை கவனமுடன் எழுதறேன் ..நீங்க இருந்தா ஒரு சப்போர்ட் இருப்பது போன்ற உணர்வு ஆகவே அடிக்கடி இப்படி வந்துட்டு போங்க :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாதூஊஊஉ சப்போர்ட்டாஆ ??? விடுங்கோ மீ தேம்ஸ்க்குப் போயிடுறேன்ன்ன்ன்

      நீக்கு
  61. @பானுமதி வெங்கடேஸ்வரன் ..

    வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக நன்றிங்க ///.இங்கே எங்கள் ப்ளாகையும் பாராட்ட விரும்புகிறேன். சிறுகதை என்னும் வடிவமே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் தேடித் தேடி சிறுகதைகளை வெளியிடும் எங்கள் ப்ளாக், அதற்காக முயற்சி செய்யும் ஸ்ரீராம் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! ஸ்ரீராமுக்கு 'சிறுகதை காவலர்' என்னும் பட்டம் கொடுக்கலாமா என்று கூட தோன்றுகிறது. ///நானும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன் .

    பதிலளிநீக்கு
  62. @பானுமதி வெங்கடேஸ்வரன் ..
    கேட்கவே அவ்ளோ சந்தோஷமா இருக்கு .தாயன்பு அதுதான் ..எங்கம்மாவும் அப்படிதான் ரோட்டில் ஏதாவது நாலுகால் ஜீவன்கள் கொஞ்சம்வயிரு பெரிதா இருந்தா போதும் ,,வாயும் வயிறுமா இருக்குன்னு பிஸ்கட் வாங்கி போடுவாங்க ..தாயன்புக்கு மனிதர் விலங்கு என வித்தியாசம் தெரியாதுங்க ..உங்கள் பின்னூட்டத்தை படிச்சப்போ அம்மாவின் நினைவு வந்து சென்றது எனக்கும் ..

    பதிலளிநீக்கு
  63. Angelin said...

    @Gopu anna நிறைய பின்னூட்டங்களுக்கு பதில் கொடுக்கணும் ஆனாலும் இதை முதலில் சொல்லிடறேன். கோபு அண்ணா ஒரு சிறு திருத்தம் ஜெர்மன் தகவலில் அது பேர குழந்தைகள் ..grand children//

    இதை நம் அதிராவும் மேலே தன் பின்னூட்டம் ஒன்றில் ஒத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதாவது வாரிசு அல்ல ..... பேத்தியாக்கும் எனச் சொல்லியிருக்கிறார்கள். :))))))

    எனக்கு இதில் எப்போதுமே சந்தேகம் உண்டு. அதாவது அவர்களின் வயது 16 or 61 என்பதில். நானும் இரண்டுக்கும் சராசரியாக 16 + 61 = 77/2 = 38.5 அல்லது 39 இருக்கும் என தீர்மானம் செய்து வைத்துக்கொண்டிருந்தேன் ... அதுவும் ஓர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது மேலும் 4 ஆண்டுகள் ஆகி விட்டதால் 39 + 4 = 43 ஆகவும் இருக்கலாம்.

    ஆனால் அதிராவுடன் ஒரே நாட்டில் வசித்துக்கொண்டு, அடிக்கடி அவர்களை நேரில் சந்தித்து வரும் நீங்கள் சொல்வதைப்பார்த்தால், அவங்களுக்கு வயது 16ம் அல்ல.... 61ம் அல்ல.... 121 ஆகத்தான் இருக்கணும் என நினைக்கத்தோன்றுகிறது. மொத்தத்தில் ஒரே குயப்பமாக உள்ளது. :)

    அதிரா இங்கு மீண்டும் வருவதற்குள் நானும் இங்கிருந்து எஸ்கேப் ஆகிக்கொள்கிறேன்.

    எனக்கு எதற்கு அநாவஸ்யமான ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்? :)))))

    அன்புடன் கோபு அண்ணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது ரொம்ம்ம்ம்ம்ப ஓவரூஉ சொல்லிட்டேன் ஆமா... உங்கள் குயப்பம் தெளியாமல் இருக்கோணும் என திருப்பரங்குன்றத்து வ்டமேற்கு மூலையில் இருக்கும் வள்ளிக்கு வைரத் தோடு போடுவேன் என நேர்த்தி வச்சுட்டேன்ன்... எங்கிட்டயேவா...

      நீக்கு
  64. http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html

    SWEET SIXTEEN [இனிப்பான பதினாறு]

    இதிலும் நம் அதிராவின் சுவையான பல பின்னூட்டங்கள் உள்ளன.

    பதிலளிநீக்கு
  65. //சிலர் தங்கள் மன வக்கிரங்களை இந்த வாயில்லா ஜீவன்களிடம் காட்டுவது//

    தங்களின் முன்னுரையில், மனிதர்களின் இந்த நாய் குணத்தையும்கூட விட்டுவிடாமல், மிகவும் நாசூக்காகக் குறிப்பிட்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்கதாக உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  66. கதை நகர்வு நன்று
    அருமையான கதை

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  67. @ JEEVALINGAM KASIRAJAN ..வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  68. வித்யாசமான கோணத்தில் யோசித்து எழுதியகதை. சூப்பன். எந்தப் பகுதியை பாராட்டி சொல்வது.. வரிக்கு வரி அட்டகாச எழுத்து.. ஐந்தறிவு பிராணிகளுக்கும் மனசும் அதில் அன்பு பாசம் நேசம் சோகம் என்ற உணர்ச்சிகளும் நிறையவே இருக்குதான். நான் லேட்டாக பதிவு படிக்க வந்ததில் ஒருவசதி. மற்றவர்களின் சவாரஸ்யமான பின்னூட்டங்களையும் படித்து ரசிக்க முடியுது.இதைத்திருக்கும் படங்கள் கூடுதல் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  69. இந்தக்கதை ரொம்ப நல்லா இருக்குது. எங்க வீட்லயும் ரெண்டு நாய்கள் வளர்க்கிறோம்
    நாய்கள்னு சொன்னா பசங்க சண்டைக்கே வருவாங்க. பேரு சொல்லித்தான் கூப்பிடணும்.

    பதிலளிநீக்கு
  70. @ ஸ்ரத்தா ஸபுரி ...

    ஸ்ரத்தா ஸபுரி
    வருகைக்கும் கதையை ரசித்து பாராட்டியதற்க்கும் மிக்க நன்றிங்க ..
    ஓரிரண்டு பதிவு எங்க ஜெஸி பேசுவது போல எழுதியிருக்கேன்..இதுவரைக்கும் சிறுகதைன்னு எழுதாத என்னையும் எழுத வைத்த பெருமை எங்கள் பிளாக் சகோதரர் ஸ்ரீராம் அவரையே சேரும் ..
    சில நேரம் பதிவில் சொல்ல மறந்ததெல்லாம் பின்னூட்டத்தில் சொல்லிவிடுவேன் :)

    பதிலளிநீக்கு
  71. @ shamaine bosco

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க ..
    உங்க வீட்ல வாலாட்டும் செல்லமா :) நாங்க நம்ம ஊரில் இருந்தா வளர்த்திருப்போம் இங்கே அவற்றை டெய்லி வாக் கொண்டு போகணும் அதனால்தான் மியாவ் செல்லத்தை வளர்க்க ஆரம்பித்தோம் ..என் பொன்னும் அப்படிதான் ஜெசியை தங்கச்சி போல நினைச்சி விளையாடுவா கிறிஸ்துமஸுக்கு கிப்ட் வாங்கி வச்சிருக்கா ரெண்டு மியாவ்ஸுக்கும்..

    இந்த கதையில் விட்டுப்போனது நான் மல்டிக்கு செய்த ட்ரீட்மெண்ட்ஸ் ..அதெல்லாம் சேர்த்தா இன்னொரு கதை எழுதலாம் ..மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  72. @athira miyaaaaaav ///எதுவானாலும் தயங்காம எழுதுங்க!/// இது இதுதான் எனக்கு இங்கு ரொம்பப் பிடிச்சிருக்கு:), முன்னங்கால் பின்னங்கால் எல்லாம் ரைப் அடிக்க:) மெதுவாக தயக்கத்தோடு எட்டிப் பார்த்த எனக்கு, இதைப் பார்த்ததும் பூட்ஸ் குடிச்சதுபோலாச்சு:). ஏன் தெரியுமோ, என் நாக்குத்தான் எப்பவுமே எனக்கு எதிரி:), இங்கு இனி நான் என்ன எழுதினாலும் ஆரும் திட்ட முடியாதெல்லோ...:) //
    கர்ர்ர்ர் கர்ர்ர்ர் ..அது பூட்ஸ் இல்லை பூஸ்ட்
    நீங்க சொன்ன பூட்ஸ் டோராவின் ப்ரண்டு மரத்தில் தாவி தாவி போகுமே அவர்தான் :))))

    பதிலளிநீக்கு
  73. இந்த ரெண்டுகால் குண்டு பூனை athira miyaav மேலே கோர்ட் கேஸ் போடுங்க எல்லாரும் தூங்கினதுக்கப்புறம் வந்து அட்டகாசம் பண்ணிட்டு போயிருக்கு பிளாக் ஆடுது பாருங்க

    பதிலளிநீக்கு
  74. படங்களுடன் கதை சுவாரசியமா சொல்லி இருக்கிங்க. என்னைப்பொறுத்தவரை பெட் அனிமல்ஸ் மேல வெறுப்போ விருப்போ கிடையாது. ஒரு புக்ல மேனகா காந்தி எழுதியிருந்த விஷயம்தான் நினைப்புல வருது.. அவங்க ப்ளூக்ராஸ்ல மெம்பர். பிராணிகளை வதைப்பது சட்டப்படி குற்றம்னு கோபமா பேசுவாங்க. அதுக பேசமட்டும்தானே முடியாது மனசு ஆசைபாசம் அன்பு எல்லாமே இருக்குமே. குட்டியை யாரானும் தூக்க வந்தா எப்படி குரைத்து கத்தி அமர்க்களம் பண்ணிவிடும். நாம என்னதான் வேளா வேளைக்கு சாப்பாடு போட்டு நல்லபடியா பாத்துகிட்டாலும் அதுங்க கூட்டத்தோட கலந்திருப்பதைத்தானே அதுங்க விரும்பும்
    . உதாரணத்துக்கு.. நம்ம குழந்தைய பத்து நாய்களுக்கு நடுவால நம்மால வளற விட முடியுமா. நம்ம சந்தோஷத்துக்காக அந்த வாயில்லா ஜீவனை அவங்க கூட்டத்துலேந்து பிரிச்சுவந்து வளர்ப்பது சரியில்லைனு அவங்க சொல்லி இருந்தாங்க....யோசிச்சு பாத்தா அதுகூட சரிதானோன்னு தோணுது..

    பதிலளிநீக்கு
  75. முன்னமே வாசித்தேன்... கருத்திட்ட ஞாபகம் இல்லை...
    இன்று மீண்டும் வந்தேன்... அருமை... அருமையான கதை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  76. @ பரிவை சே.குமார்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  77. @ சிப்பிக்குள் முத்து...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க .I agree with menaga GANDHI ..but we humans have occupied their places where would they go. .Especially dogs and cats. .I would never keep birds as pets. .they are supposed to live in wild and free. .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!