செவ்வாய், 6 டிசம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: மறுவீடு     இந்த வார எங்களின் 'கேட்டு வாங்கிப் போடும் கதை' பகுதியில் இடம்பெறுவது தோழி / சகோதரி ஹுஸைனம்மாவின் படைப்பு.


     அவர் தளம் ஹுஸைனம்மா.

     தனது அனுபவங்களையும், குடும்பத்தில் நடக்கும் கலாட்டாக்கள் பற்றியும் சுவாரஸ்யமாய் எழுதக் கூடியவர்.   விஞ்ஞான, ஆராய்ச்சிக்கட்டுரைகளை அதற்கான லிங்க்குகளுடன் பகிர்வார்.  ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக  இருந்திருக்கிறார். அப்புறம் ஒரு பாலிடெக்னிக்கிலும் பணிபுரிந்திருக்கிறார்.  திருநெல்வேலிக்காரர்.  எளிமையானவர்.  இயல்பானவர். 

     ஒவ்வொருவராக கதை கேட்டுக் கொண்டிருந்ததில் பழைய நண்பர்களான இவர்கள் எல்லாம் விட்டுப்போயிற்று.  இப்போது பார்த்து கேட்டதும் "நீங்கள் எப்போது கேட்பீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன்" என்று சொன்னதும் மனதில்  மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை.  இப்படி நண்பர்களை பெற என்ன தவம் செய்தோம்?


     நன்றி தோழி.  

    
     வழக்கம்போல அவர் முன்னுரையைத் தெடர்ந்து அவரின் படைப்பு...


=======================================================================


அன்புள்ள ஸ்ரீராம் சார் அவர்களுக்கு,

ஒவ்வொரு முறை கே.வா.க. படிக்கும்போதும் என் கதையும் இதில் வர வேண்டும் என்று ஆசையாக இருக்கும். எப்போது கேட்பீர்கள் எனக் காத்திருந்தேன்!!  மிகவும் மகிழ்ச்சியுடன் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதை பிறந்த கதை: 


 நெருங்கிய சொந்ததில் நடந்த இக்கதையை என் வலைப்பூவில் எழுத ஆசையாக இருந்தாலும், கதையில் சம்பந்தப்பட்டவர்கள் என் வலைப்பூவை வாசிப்பார்கள் என்பதால் அதில் இக்கதையைப் பதிய முடியாத நிலை. 'Pen Name" வச்சு எழுதினாலும், யாருன்னு கண்டுபிடிச்சுட்டாங்க!! 


நெருங்கிய சொந்ததில் நடந்த இகதையை எழுத ஆசையாக இருந்தாலும், கதையில் சம்பந்தப்பட்டவர்கள் என் வலைப்பூவை வாசிப்பார்கள் என்பதால் என் வலைப்பூவில் இக்கதையைப் பதிய முடியாத நிலை. 'Pen Name" வச்சு எழுதினாலும், யாருன்னு கண்டுபிடிச்சுட்டாங்க!! ஆகையால், 2013-ம் ஆண்டு மார்ச் மாதம்  அமீரகத் தமிழ் மன்றம் ஆண்டு விழா மலரில் பிரசுரிக்கக் கதை கேட்டபோது இக்கதையை எழுதி அனுப்பினேன். பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது மனநிறைவைத் தந்தது. எங்கள் ஊர் வழக்கில் எழுதியுள்ளதால் புரிவதில் சற்று சிரமம் இருக்கலாம். எனினும் இக்கதையில் வரும் சம்பவங்கள் எல்லா ஊரிலும் பொதுவாக நடப்பவைதான் என்பதால், மொழி வழக்கு கதையைப் புரியத் தடையாக இருக்காது என நம்புகிறேன்!!

சுமாராக 25 வருடங்களுக்கு முன் நடந்த கதை என்றாலும், அக்கதை இன்றும் தொடர்கதையாகத்தான் உள்ளது. மாற்றங்கள் ஓரளவு வரத்தொடங்கியுள்ளன. 


இனி கதை.... 


அன்புடன்
ஹுஸைனம்மா ======================================================
மறுவீடு’

எழுதியவர்: ஹுஸைனம்மா

(சில வார்த்தை விளக்கங்கள்:

களரி – விருந்து

கலம் –உணவுண்ணும் பெரிய தட்டு

தெருவூடு, அங்ஙனம் – முன் ஹால், நடு ஹால்)

களரி பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. ரஸாக் பாயின் கடைசித் தங்கை கல்யாணம் முடிந்து, ஏழாம்

நாள் பெண் வீட்டாரால் மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கப்படும் மறுவீடு களரி விருந்துதான் இன்ற நடந்துகொண்டிருப்பது.

300 கலம் பேசியிருந்தார்கள். 400-ல் பேச்சு ஆரம்பித்து, கடைசியில் 300 என்று பேசி முடிவானது. ஒரு கலத்திற்கு நான்கு பேர் வீதம் 1200 பேர். மாப்பிள்ளை வீடு பெரிய குடும்பம்; அப்ப விருந்தும் பெரிசாத்தானே இருக்கும்!! இதுதவிர பெண்வீட்டு வகையறாக்களையும் சேர்த்துக் கொள்ளணும். அப்படி இப்படின்னு மொத்தம் 450 கலம் என்று சொல்லி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே ஆகிவிட்ட ஆஸ்தான சமையல்காரரான வாவன்னாதான் சமையல்.

ஊர்வழக்கப்படி கல்யாணம், விருந்து எல்லாமே வீடுகளில்தான் நடக்கும். மண்டபமெல்லாம் கிடையாது.  வீடு சிறிதென்றாலும் கவலைப்படத் தேவையில்லை. இருபுறமுள்ள அண்டை வீட்டு வாசல்களையும் சேர்த்து போடப்பட்டிருக்கும் பந்தலில், மேடை போட்டு நடக்கும் நிக்காஹ்வில்
ஆண்கள் கலந்துகொள்வார்கள். வீட்டினுள் பெண்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் நடக்கும்.


விருந்து எத்தனை ஆயிரம் பேருக்கு என்றாலும் வீட்டில்தான். தன் வீட்டில் கல்யாணம் அல்லது வேறு விசேஷங்கள் வருகிறது என்றால், வட்டாரத்திலுள்ள (அண்டை) வீடுகளை, அதையொட்டிய விருந்துகள் நடத்த ஏதுவாக, அவசியப்படும்போது பயன்படுத்திக்கொள்ளும் ‘பிறப்புரிமை’ ஊரில்
ஒவ்வொருவருக்கும் உண்டு.  யாரும் பொதுவாக மறுப்பதில்லை, தங்கள் வீட்டிலும் விசேஷங்கள் வருமன்றோ!!

டிவி, டைனிங் டேபிள், சோபா கலாச்சாரம் பரவாத 20 ஆண்டுகளுக்கு முன்பான காலம் என்பதால், வீட்டில், ‘தெருவூடு’ மற்றும் ‘அங்ஙனம்’ பகுதிகளைச் சட்டென்று காலிசெய்து கொடுப்பதும் எளிது.

ஒரே சமயத்தில் ஐந்தாறு வீடுகளில் சாப்பாடு பரிமாறப்படுவதால், கடகடவென்று விருந்து முடிந்துவிடும்.  வீடு மட்டுமல்ல, அரிசி களைய, மட்டன் சுத்தம் செய்வது போன்ற விருந்து சமையல் உதவிக்கு, மற்றும் விருந்தில் பரிமாறவும் வருபவர்களில் உறவினர்களோடு, வட்டாரத்தினரும்
இருப்பார்கள். வாடகைக்கு எடுக்கப்பட்ட ஜமுக்காளங்களை விரித்து, அதில் வரும் மக்கள் நன்னாங்கு பேராக வட்டமாக அமர, ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு ’கலம்’ வைக்கப்படும். நெய்ச்சோறு, மட்டன் குழம்பு, தாளிச்சா என்று ஒரே மெனு.  மட்டன் குழம்பு ஒருமுறை மட்டுமே பரிமாறப்படும்; சோறு, தாளிச்சா தேவைக்கு கேட்டு வாங்கிக்கலாம். 4 பேர் ஒரே தட்டில் அமர்ந்து பகிர்ந்து உண்பதால், உணவு வீணாகாது.

ஊரில் எங்கு விருந்தென்றாலும், “வாசல் ஆட்கள்” (பிச்சைக்காரர்கள்) கணிசமாக வருவர்.

வழக்கமாக வாசலில் வருபவர்களைப் பிரத்தியேகமாக விருந்தன்று வரச்சொல்லும் வழக்கமுமுண்டு ஊரில். அழைப்பு இல்லாவிட்டாலும், பந்தல் போட்ட வீடுகளைக் கண்டு வருபவர்களும் ஆக, ஒரு தனிபந்தி நடத்துமளவு கூட்டம் சேர்ந்துவிடும். இவற்றில் எதுவுமே வலியோர்-எளியோர் பார்த்து மாறாத, ஊருக்கே பொதுவான பழக்கங்கள்.

விருந்துக்கான சமையல் முழுதும் எதிர்வீடான தானாமூனா வீட்டு முற்றத்தில் நடந்து முடிந்திருந்தது. நேற்றிரவு முதல் சமையல்காரக் குழுவினர் ராஜ்யம்தான் அங்கே. அந்த வீட்டு வாசல் திண்ணையில் இரந்துண்பவர்களின் கூட்டம் நிறைந்திருந்தது. அவர்களில் சிலர், வீட்டினுள் பந்திக்கான உணவு, பாத்திரங்கள் எடுக்கவோ வேறு வேலைகளுக்கோ பரபரப்பாகப் போய்க்கொண்டிருப்பவர்கள்,

வருகிறவர்களிடம், ”எம்மா, கொஞ்சானம் சோறு தாயேன். நான் வாங்கிட்டுப் போயிர்றேன்..” என்று கேட்க, சிலர் பதிலே சொல்லாமல் போக, சிலர் “களரி முடிஞ்சப்போறவு தர்றன்னு சொல்றனா, கேக்காம நீஞ்சொன்னதயே சொல்லிட்டுருக்க..?” என அதட்டினர். அவர்களும் பந்தி முடிந்தால்தான் தங்களுக்கு உணவு என்பதையுணர்ந்து அமைதியாகினர். அவர்களிடையே இருந்த ‘கெழுத்தி’ மட்டும் நிறுத்தாமல், ஒவ்வொருவரையும் வழிமறித்து “யம்மா சோறு தாயம்மா” என்று திரும்பத் திரும்பச் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தான்.  ஆரம்பத்தில் பொறுமையாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தவர்கள்கூட, அவனது தொடர்ந்த நச்சரிப்பால் கோபப்பட்டு அதட்டல் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

சோறு போடும் வீட்டுக்காரர்களிடம் “இன்னிக்கு கெழுத்திமீன் வைக்கலையா?” என்று கேட்பதால், இவனுக்கு இந்தப் பெயர். சில பெத்தும்மாக்கள் இடக்காக, “யேஏஏன்.... நீ ஆத்துல கெழுத்தி பிடிச்சுட்டு வாயன், ஆக்கித் தாரன்”  என்று வெட்டுவார்கள். சிலர், “தர்றத வாங்கிட்டுப் போ பேசாம” என்று சத்தம் போடுவார்கள். வாட்டசாட்டமான இளைஞன் என்றாலும், மனவளர்ச்சி இல்லாததால் இரத்தல் தொழில்!!  பேரேன்ன, ஊரென்ன எதுவும் தெரியாது. ஊரில் இரக்கமுள்ள மனிதர்களுக்குப் பஞ்சம் இல்லாததால், அவன் பாடு கஷ்டமில்லாமல் கழிந்தது.

ஆண்கள் சாப்பிட்டு முடிந்து, பெண்கள் சாப்பாடு ஆரம்பித்திருந்தது. பரிமாறுவதற்கு வீட்டுப்பெண்கள் களம் இறங்கினார்கள். ரஸாக் பாயின் அடுத்த வீடான மோவன்னா வீட்டில் பெண்கள் முதல் பந்தி நடந்துகொண்டிருந்தது. பெண்கள் வரவர, அடுத்தடுத்த வீடுகளில் அமரவைக்க ஏற்பாடுகளை ஆண்கள்
பார்த்துக் கொண்டனர்.

ரஸாக் பாய், தன் வீட்டில் உள்ளறையில் அமர்ந்து, கையிருப்புத் தொகையை எண்ணிக் கொண்டிருந்தார். இருபதாயிரம்தான் இருந்தது. மீண்டும் எண்ணினார். அதே இருபதாயிரம்தான்.

இன்னொரு முறையும் எண்ணத் துவங்க, அந்நேரம் பந்திக்குப் பரிமாற, கூடுதல் பாத்திரங்கள் எடுக்க வந்த அவரது மனைவி ஐபாம்மா அதைப் பார்த்துவிட்டு, ”திரும்பத் திரும்ப எண்ணுனா மட்டும் கூடிறவாப் போவுது?  அதெல்லாம் ரப்பு பரக்கத்தாக்கித் தருவான். இன்னும் சோறு திங்காம இங்ஙன என்ன செஞ்சுகிட்டிருக்கியோ? போங்கோ, போய் மைம்பாத்து வூட்டுல கலம் வக்க நின்ன ஆம்புளைய சாப்பிடுறா. அங்க போயி நீங்களும் ரெண்டு பருக்கைய தின்னுங்கோ” என்று சொல்லிக்கொண்டே மின்னலாய் மறைந்தாள்.

பெரிய பெருமூச்சுடன் அவளைப் பார்த்துக்கொண்டே, பணப்பையை மூடி பீரோவில் வைத்து மூடி சாவியைத் தொங்க விட்டார். மகராசி, மணமுடித்து வந்த நாள்முதல் தன்னோடு சேர்ந்து இவளும் சுமையைத் தாங்கிக் கொள்கிறாள். மூன்று தங்கைகளையும் படிக்க வைத்து, இருவரைத் திருமணம் செய்வித்து, மாப்பிள்ளைகளை வெளிநாடு கூட்டிச் சென்று வேலைவாங்கிக் கொடுத்து, சீர்செனத்திகளை வருடாவருடம் செய்து வருவதில் எந்தக் குறையும் வைத்ததில்லை. இதோ, கடைசித் தங்கையையும்  ஆசிரியர் படிப்பு படிக்க வைத்து, டெபாஸிட் கட்டி வேலையும் வாங்கிக் கொடுத்து, திருமணமும் முடித்தாகிவிட்டது. இதோடு பொறுப்பு முடிந்தது என்று இருக்க முடியாது, இனியும் என்னென்ன எதிர்பார்ப்புகள் உண்டோ அதையும் நிறைவேற்ற வேண்டும். சின்னக் குறை வைத்தாலும், ’தங்கச்சின்னுதானே இளப்பம் உனக்கு, இதுவே ஒம்புள்ளன்னா இப்பிடி இருப்பியா?’ என்று பாய்வதற்கென உறவிலேயே ஆட்கள் உண்டு.

அடுத்து, தான் பெற்ற பெண்மக்கள் மூன்றையும் கரையேற்ற வேண்டும். இத்தனை வருட சவூதி சம்பாத்தியம் தங்கைகளுக்கு; இனி சம்பாதிப்பவை மகள்களுக்கு!! காதடைக்கும் பசியைக்கூட உணராமல், யோசனையாய் அமர்ந்திருந்தவரை, காதரின் குரல் எழுப்பியது. “காக்கா! சமயக்காரர் ஒங்கள ஒடனே வரச்சொன்னாரு”. இந்நேரத்தில் சமையல்காரர் தன்னை கூப்பிடவேண்டிய அவசியம் என்னவாயிருக்கும் எனக் குழம்பியவாறு வேகமாகப் படியிறங்கினார்.

தானாமூனா வீட்டுப் படியேறியவரை கெழுத்தியின் குரல் வழிமறித்தது. “இன்னாங்கோ, கொஞ்சம் சோறு தாங்களங்கோ”. அவனைத் திரும்பிப் பார்த்து, “கொஞ்சம் பொறுப்பா, இப்ப பொம்பளைக சாப்பிட்டு முடிச்சதும், தருவாங்க” என்று சொல்லியவாறு உள்ளே விரைந்தார்.  பிரபல சமையல்காரர் ”வாவன்னா”தான் சமையல். வளவூட்டில், பலகை போட்டு அமர்ந்திருந்தார் வாவன்னா. சுற்றி, அவரது உதவியாளர்கள். மட்டுமல்ல, சில பெரியவர்களும். அவர்களின் கவலை தோய்ந்த முகத்தைக் கண்டதும், ரஸாக் பாய்க்குப் பதற்றமானது. “வாவன்னா காக்கா, என்னாச்சு?”

“காக்கா, நீங்க எல்லாஞ்சேத்து 450 கலந்தானே சொன்னியோ? இப்பம் கணக்கு தப்புது. பொம்பளயக் கலம் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு. ஆனா, சோறு காணாமப் போயிடுச்சு”

உணவுப் பற்றாக்குறை என்றதும், கைகால் பதறி, வேர்வை ஊற்ற ஆரம்பித்தது. “என்ன வாவன்னா காக்கா இப்பிடிச் சொல்றியோ?” என்று பரிதாபமாகக் கேட்டார். அவரது பதற்றத்தைக் கண்டதும் அருகிலிருந்த இன்னொரு பலகையை எடுத்துக் கொடுத்து, அதில் அவரை அமரச் செய்தார் வாவன்னா.

அதற்குள் விவரமறிந்து அங்கு வந்த ஐபாம்மாவின் அண்ணண் அஹமது, “வே, என்னவே இப்பிடிச் சொல்றீரு? நம்மூடுகள்ல சாப்பாடு எப்புமும் மிஞ்சத்தானே செய்யும்? எப்படிவே காணாமப் போச்சு?” என்று உரிமையாய் அதட்டினார்.

“ஏங்கோ, நாஞ்சொல்ற லிஸ்ட்படி என்னிக்குங்கோ சாமான முழுசா வாங்கிருக்கியோ? எப்புமும் கொஞ்சம் கொறச்சுதானே வாங்குறது? மிஞ்சினாலும் பரவால்லை, இப்பிடி ஆயிடக்கூடாதுன்னுதானவே நான், பொம்பளையோ சொல்லைக் கேட்டு சாமான் அளவையைக் குறைக்காதீயோன்னு படம்படமா அடிச்சுக்குவேன். இப்பத் தெரியுதா?”

“வே, இப்பும் ஒண்ணும் குறைக்காமத்தானே வாங்கிருக்கு. அப்பிடியே குறைச்சாலும் அரிசி, கறி அளவையா கொறைப்பா? எதோ நெய், எண்ணெய் அளவத்தானே குறைப்பாளுவ பொம்பளேளுவோ?”

“இன்ன பாருங்கோ, ஆம்புளயக் கலம் நாம கணக்கு போட்டது சம்பந்தக்கார வகைக்கு 200-ம், நம்ம வகைக்கு 100. அதே மாதிரி பொம்பள கலம் அங்க 100, நமக்கு 50. ஆனா, ஆம்பளக் கலமே இதுவரை மொத்தம் 350 எண்ணம் போயிருக்கு. இதில சம்பந்த வூடு வகை அவுக சொன்ன மாதிரி 200 வரல, 250 வந்திருக்கு. “

சம்பந்த வகைகளின் வருகையை கணக்கு வைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த மச்சினன் செய்யது, “ஆமா மச்சான். இன்னிக்கு வந்ததுல மாப்பிள்ள வூடே 250 கலம்” என்று உறுதி செய்தான்.

”ச்சேரி, மொத்தம் 350 ஆம்பளக் கலம்னாலும், மீதி 100 கலம் சாப்பாடு இருக்கணுமவே? அதவச்சு பொம்பளயக் கலத்த முடிக்கலாம்லவே?”

“ம்க்கும்.. எங்க, அதான் களரி வூடுன்னா, ஒடன்னே வூட்டுப் பொம்பளய தூக்குவாளி தூக்கிட்டு வந்துர்றாளே? அவரவர் சம்பந்தக்காரருக்குக் கொடுக்கணும், புள்ளையளுக்குப் பள்ளீயோடத்துக்குக் கொடுத்துவுடணும், வராத சமைஞ்ச புள்ளையளுக்குக் கொடுத்துவுடணும் என்னமாவது சொல்லிகிட்டு தூக்குவாளி தூக்குனாத்தானே நம்மூட்டுப் பொம்பளயளுக்கு தின்னச் சோறு செமிக்கும். நான் இருந்தா, களரி முடியாம தரமாட்டேன்னு கண்டிசனாச் சொல்லீர்வேன். கறிச்சட்டி இறக்கி வச்சதும், குளிச்சி, தொழுதுட்டு வரலாம்னு கொஞ்சம் நவுண்டு போனேன். அதுக்குள்ள நம்ம பயலுவள்ட்ட கேட்டா... இவனுவளுக்கு என்னத் தெரியும்.. குடுத்திருக்கானுவோ... வெவரங்கெட்டவனுவோ...”

அவரது உதவியாளர்,”தூக்குவாளி தூக்குனது ஒரு பத்தம்பது கலந்தான் இருக்கும் காக்கா.. ரொம்பவெல்லாம் கொடுக்கல..” என்று பழிவிழாமல் பாதுகாத்தார்.

ரஸாக் பாய் அவசரமாக, “பேசிகிட்டேருந்தா ஆவுமா... இப்பம் என்ன செய்யறது காக்கா? ஆட்கள் கலத்துல உக்காந்திருக்காங்களே, சாப்பாட்டுக்கு என்னச் செய்ய?” என்றார் கலக்கத்துடன்.

வாவன்னா காக்கா திரும்பி, ரஸாக் பாயிடம், “பயப்படாதீயோ. நான் வெவரஞ் சொல்லத்தான் ஒங்களக் கூப்புட்டேன். ஆம்பளயக் கலம் 300 தாண்ட ஆரம்பிச்சதுமே, இப்படித்தான் ஆவும்னு தெரிஞ்சிபோச்சு...  அந்தாக்குல ஒரு சோத்துச்சட்டிய அடுப்புல ஏத்திட்டேன்...  அரிசி போட்டாச்ச்சு..  இப்பம் வடிச்சு விளம்ப ஆரம்பிச்சிடலாம்...  தாளிசாவை பெருக்கியாச்சு.  கறிக்கும் தேங்காய் மசாலா சேத்து கொதிச்சுட்டிருக்கு...  சமாளிச்சிடலாம். ”

மைத்துனர் அஹமது, ”இதென்ன அநியாயமா இருக்கு?  மாப்பிள்ளை வூட்டு சாயிதாவுல 300 கலம்தானே கணக்கு? இப்பம் இப்புடி செய்றாளே? மாப்புள்ள வீடுன்னா ஒரு வரமொற இல்லாம போய்கிட்டிருக்கு ஊர்ல!”

அங்கு நின்றிருந்த உறவுக்காரர் ஒருவர்,”தளியன்னா வூட்டுச் சம்பந்தங்கும்போதே நெனச்சேன். இப்புடித்தான் கூடக்குறைய ஆளுவள கூப்புட்ருவா.  எங்க தாத்த மருமகளோட மைனி மகளத்தான் அந்த
வூட்ல மூத்த மவனுக்குக் கொடுத்திருக்கு.  அந்தக் கல்யாணத்துலயும் இப்பிடித்தான் மறுவூட்ல சாப்பாடு காணாமப் போச்சு.” என்று எடுத்துவிட.. ரஸாக் பாயின் பதற்றம் கூடிப்போனது.

“காக்கா, அப்ப பொம்பளயக் கலமும் கூடக்கொறயத்தான வரும்.  எப்பிடி சமாளிக்க?”

”இப்பும்தான் பொம்பளக் கலம் இஷ்டார்ட் ஆயிருக்கு. அதெல்லாம் எல்லாம் நல்லபடியா முடியும்.  வெசனப்படாதீயோ.  நீங்க வெளியே போய் வர்றவுகள கவனிங்கோ.. நாங்க பாத்துக்கறோம்..”

தொங்கிய முகத்துடன் ரஸாக் பாய் வாசல் நோக்கிச் செல்லலானார். திட்டமிட்டதைவிட கூடுதலாகிப் போன உணவுச் செலவும், மேற்கொண்டு செய்ய வேண்டிய சீர்களும், செய்முறைகளும் என எல்லாம் சேர்த்துப் பயமுறுத்தியது. கறிக்கடைக்காரர், அரிசிக்கடை, ஏன் பந்தல்காரருக்கே இனிதான் கணக்கு முடிக்கணும். கையிருப்பு வெறும் இருபதினாயிரம் கொண்டு எல்லாவற்றையும் எப்படிச் சமாளிப்பது?

சம்பந்தக்காரர் மேல் கோபமாக வந்தது. என்ன கோபம் வந்தாலும், வெளியே காட்ட முடியாதே. தங்கை வாழப்போகும் வீடல்லவா? ஏற்கனவே வரதட்சணைப் பேச்சின்போது, ’ பெத்த மவளவிட, ஒடம்பொறப்புன்னா இன்னும் ஒருபடி கூடவுல்லா செய்யணும் நீங்க?’ என்று சொல்லியே ஐம்பதாயிரத்தைக் கறந்தவரல்லவா மாப்பிளையைப் பெத்த மகராசன்.

தவிப்போடு வாசலுக்கு விரைந்தவரைச் சட்டென வழிமறித்தான் கெழுத்தி . “இன்னங்கோ, கொஞ்சானம் சோறு தாங்களேங்கோ... எம்புட்டு நேரமா கேக்கறன்..”

இத்தனை நேரம் கொப்பளித்துக் கொண்டிருந்த கோபம், எரிச்சல், அவமானம், தவிப்பு எல்லாமாக ஒருசேரப் பொங்கிவந்ததில், வடிகாலாகக் கிடைத்தவனைப் பளாரென அறைந்தார்!! பார்த்துக் கொண்டிருந்த ஜனம் முழுதும் தாமே அறை வாங்கியதுபோல அதிர்ந்து நின்றனர்.

மறுநாள்...

”நல்லாச் சாப்பிடுப்பா... நேத்து ரொம்ப நேரம் பசியோட இருந்த போலருக்கு.... இன்னிக்கு கெழுத்திய தேடிப்பிடிச்சு வாங்கிட்டு வந்தாக...  மனசு குளிரச் சாப்பிடுப்பா”

ஐபாம்மா சொன்ன எதையும் காதில் வாங்காதவனாக வேகவேகமாகச் சோற்றை வாரித் தின்றான் கெழுத்தி.

39 கருத்துகள்:

 1. விருந்து எத்தனை ஆயிரம் பேருக்கு என்றாலும் வீட்டில்தான். தன் வீட்டில் கல்யாணம் அல்லது வேறு விசேஷங்கள் வருகிறது என்றால், வட்டாரத்திலுள்ள (அண்டை) வீடுகளை, அதையொட்டிய விருந்துகள் நடத்த ஏதுவாக, அவசியப்படும்போது பயன்படுத்திக்கொள்ளும் ‘பிறப்புரிமை’ ஊரில்
  ஒவ்வொருவருக்கும் உண்டு. யாரும் பொதுவாக மறுப்பதில்லை, தங்கள் வீட்டிலும் விசேஷங்கள் வருமன்றோ!!//

  அந்தக்கால மக்களின் பண்புகளை அழகாய் சொல்லி இருக்கிறார்.
  கணவனின் கோபத்திற்கு வடிகாலன கெழுத்திக்கு மறுநாள் கெழுத்திக்கு பிடித்த கெழுத்தி சமைத்து கொடுத்த ஐபாம்மா, கெழுத்தி பாத்திரம் அருமை.

  பன்முகதிறமையாளர். அவரின் கதையை பகிர்ந்தமைக்கு நன்றி.
  ஹுஸைனம்மாவிற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. கெழுத்தி சாப்பிட்ட பின்தான்,எனக்கே சாப்பிட்ட நிறைவு வந்தது :)

  பதிலளிநீக்கு
 3. புதிதான கதைக் களன் ஆனாலும் கண் முன்னே காட்சிகள் விரிந்தன...நல்ல கதை!!

  பதிலளிநீக்கு
 4. புதிய கதைக்களன். திருமணம் என்பது எப்படி பணத்தை முன்னிறுத்தி நடக்கிறது என்பதை எங்கள் வட்டார வழக்கில் சொல்கிறது. 'வாசல் ஆட்கள்', 'இரந்துண்ணுபவர்கள்' - நல்ல பழகு தமிழ். 'விளம்புவது' என்பது மலையாளத் தமிழர்கள் சொல் (பரிமாறுவதற்கு). மனிதனின் இரக்க குணத்தையும், exploit பண்ணும் குணத்தையும், கூட்டுறவாகப் பழகும் இனப் பழக்கத்தையும் நன்றாகச் சொல்லிச் செல்கிறது. ஒரு தட்டில், பலர் உண்பது என்பது அராபிய வழக்கம். அதுவே நம் ஊரிலும் இருக்கிறது என்பது புதிய செய்தி. கதையாசிரியருக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 5. வித்தியாசமான கதை அறை வாங்கியதற்குப் பரிகாரம் அடுத்த நாள் கெழுத்தியுடன் சாப்பாடு ....!

  பதிலளிநீக்கு
 6. 'ஊருல கல்யாணம், மாருல சந்தனம்' என்று ஒரு சொலவடை உண்டு. மற்றவர் வீட்டு திருமணத்தில் நாம் நடந்து கொள்வதற்கும், நம் வீட்டு திருமணத்தில் நாம் நடந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. காரணம் சூழலும், அது கொடுக்கும் அழுத்தமும். கெழுத்தியைப் போல யாரோ ஒரு அப்பாவி அதற்கு பலியாவார்கள். சிறப்பான படைப்பு.

  பதிலளிநீக்கு
 7. அட! தின்னவேலி வட்டார வழக்குகள். கதை அருமை. கெழுத்தி மனதை நிறைத்துவிட்டான்!!

  வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கதாசிரியருக்கும் பகிர்ந்த எங்கள் ப்ளாகிற்கும்

  பதிலளிநீக்கு
 8. வித்தியாசமான மொழிநடையில் அமைந்த, மனதை ஈர்த்த பதிவு. ஆசிரியருக்கு பாராட்டுகள். வாங்கிப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அடடா... கோபத்தில் கெழுத்தியை அறைந்து விட்டாரா...

  அடுத்த நாள் அவருக்கு உணவு கொடுத்ததாக முடித்திருப்பது மனதுக்கு நிம்மதியைத் தந்தது.

  கோபம் தான் பலருக்கும் எதிரி.

  நல்ல கதை. பாராட்டுகள் ஹுசைனம்மா....

  பதிலளிநீக்கு
 10. ”எங்கள் ப்ளாக்”குக்கு மிக்க நன்றி!! சரியாகக் கதை பதிவு செய்த நாளன்றும், அடுத்த நாட்களும் பிஸியாகிவிட்டேன்... உடன் பதிலளிக்க முடியாமைக்கு மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு


 11. //கரந்தை ஜெயக்குமார் said... //

  நன்றி சார். ஆம், எங்கள் ஊர் மொழி வழக்கு ரொம்ப வித்தியாசமாக இருக்கும்...

  பதிலளிநீக்கு
 12. //நெல்லைத் தமிழன் said...//
  நன்றி ஐயா.

  //'விளம்புவது' என்பது மலையாளத் தமிழர்கள் சொல் (பரிமாறுவதற்கு)//

  ஆனால், இந்தச் சொல், எங்கள் ஊரில் தொன்று தொட்டே வழங்கப்படுகின்றது. கேரளாவுக்கு வெகுஅருகில் உள்ள ஊருமல்ல... :-)

  //ஒரு தட்டில், பலர் உண்பது என்பது அராபிய வழக்கம்.//

  இப்பழக்கமும், தமிழகத்தில் பல முஸ்லிம் ஊர்களிலும் காணப்படும் ஒன்றாகும். என் முன்னோர்கள் காலம் தொட்டே இவ்வழக்கம் எங்கள் ஊரில் உண்டு. என் இளமைப் பருவத்தில், என் வயதையொத்தவர்கள், இதை “கெட்ட பழக்கமாக”க் கண்டோம்... ஆனால், பழமையின் அருமை உணர்ந்து மீட்டு எடுக்கும் இக்கால கட்டத்தில், இப்பழக்கத்தையும் விரும்பி செயல்படுத்துகின்றனர்.

  பதிலளிநீக்கு

 13. /Bhanumathy Venkateswaran said... //

  //காரணம் சூழலும், அது கொடுக்கும் அழுத்தமும். கெழுத்தியைப் போல யாரோ ஒரு அப்பாவி அதற்கு பலியாவார்கள்.//

  ஆம், அந்த அறை விழுவதை நான் கண்ணால் கண்டேன். அந்த அதிர்ச்சி இன்றும் என்னிடம் உள்ளது.

  திருமணத்தை ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக மட்டுமே அறிந்திருந்த நான், பெண்குழந்தைகளின் திருமணம் இத்தனை பிரச்னைகள் ஏற்படுத்தும் என்பதை உணர ஆரம்பித்தது அப்போதுதான். எட்டாங்க்ளாஸோ, பத்தாங்க்ளாஸோ படிச்சுகிட்டிருந்தேன் அப்போ...

  பதிலளிநீக்கு
 14. //Thulasidharan V Thillaiakathu said... //

  பாராட்டுக்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 15. //வெங்கட் நாகராஜ் said... //

  நன்றி வெங்கட் தம்பி!

  பதிலளிநீக்கு
 16. இப்படி வரிசையாகப் பின்னூட்டங்கள் போட்டு எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது!! எனது வலைப்பூவில் அதிகம் எழுதிய போது இப்படி எழுதியது.... அதற்குப் பிறகு இப்போதுதான்... நன்றி “எங்கள் ப்ளாக்”!!

  நான் வரிசையாகப் பின்னூட்டம் எழுதியதில், உங்கள் வலைப்பூவுக்கே சந்தேகம் வந்து, இரண்டு மூன்று பின்னூட்டங்களுக்குப் பின், “நீ ரோபாட் இல்லை” என நிரூபி என்று அதன்பிறகான ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் கேட்க ஆரம்பித்துவிட்டது!! :-D

  பதிலளிநீக்கு
 17. வட்டார வழக்குச் சொற்களுடனும் திருமணப்பழக்க வழக்கங்களையும் வைத்து மிக அழகாய் ஒரு கதையை சொல்லியிருக்கிறீர்கள் ஹுஸைனம்மா! இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 18. என்ன ஆச்சு? புது பதிவுகளைக் காணோம்?

  பதிலளிநீக்கு
 19. அருமையான கதை ஹுஸைனம்மா. பெண்ணைப்பெற்றவன் படும் பாடும் அவனது வருத்தம் அறியாமல் நடந்துகொள்ளும் மட மனிதர்களுமாய் கண் முன்னே நிறுத்தி விட்டீர்கள்.

  கிராமங்களில் இன்றும் தூக்குவாளியில் சாப்பாடு எடுத்துச்செல்வது, முஹூர்த்தம் முடியும் வரை பந்தலில் அமர்ந்து முடிந்ததும் உடனே வீட்டுக்குக் கிளம்பிச்சென்று விட்டு, விருந்துக்கு ஆட்கள் வந்து அழைத்தால்தான் செல்வது, அதுவும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்தால்தான் செல்வது என சிலர் வைத்திருக்கும் பழக்கங்கள் இருக்கே.. அப்பப்பா!!! ஏற்கனவே இருக்கும் வேலைப்பளு போதாதென்று இவர்களால் கூடுதலாக்கப்படும் அலைச்சலால் விழா நடக்கும் வீட்டினர் நொந்து நூடுல்ஸாகி விடுவர்.

  பதிலளிநீக்கு
 20. இயலாமை கோபமாக வெளிப்பட்டுவிடுகிறது நடுத்தர மக்களிடம்! பின்னர் அதற்கு மன்னிப்பு கோருகின்றனர்! வட்டார பாஷை புதிதாக இருந்தாலும் அருமையான கதை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 21. எங்கள் வீட்டில் மன்வாரா என்னும்பெண்மணிவேலை செய்து கொண்டிருந்தாள்.இம்மாதியான ஸம்பவங்கள் சொல்வாள். அவள் மாப்பிள்ளைக்கு டௌரி பாக்கியைக் கொடுப்பதற்காக வேலை செய்கிறேனென்பாள். இந்தக்கதையின் பேச்சு வழக்கு மிகவும் பிடித்திருந்தது. நம்பக்கங்களிலும்இதேபோல பெண் வீட்டாருக்கு கஷ்டம் கொடுப்பவர்களும் உண்டு. கிராமங்களில் சாப்பிடவே பத்துமுறை ஒவ்வொருவரையும் கூப்பிடவேண்டும். டவுன் ஸைடில் பந்திக்கு முந்திக்கோ என்று தானாக சாப்பிட்டு விட்டு ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.அருமையானகதை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 22. அருமையான சிறப்பான கதை...
  வட்டார வழக்கில் கதை வாசிப்பது ஒரு சுகம்...

  பதிலளிநீக்கு
 23. அமைதிக்கா!! மிக்க நன்றிக்கா....

  //கிராமங்களில் இன்றும் தூக்குவாளியில் சாப்பாடு எடுத்துச்செல்வது, முஹூர்த்தம் முடியும் வரை பந்தலில் அமர்ந்து முடிந்ததும் உடனே வீட்டுக்குக் கிளம்பிச்சென்று விட்டு, விருந்துக்கு ஆட்கள் வந்து அழைத்தால்தான் செல்வது//

  இதெல்லாம் மத்த கிராமங்களிலும் உண்டா!!??? நான் எங்கூர்ல மட்டுந்தான் இந்த அநியாயம் நடக்குதுன்னு நெனச்சுகிட்டிருந்தேன்...

  என் திருமணம் நடந்த வருடத்தில், ஊர்க்கூட்டம் போட்டு, நிறைய கட்டுப்பாடுகள் கொண்டுவந்தார்கள். ஆனால், மெல்ல மெல்ல மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்றாகிவிட்டது!! மிகச் சில ஒன்றிரண்டு மட்டும் இன்னும் பழைய முறைக்கு மாறவில்லை. அதில், இந்த மதிய விருந்துக்கு மீண்டும் போய் அழைப்பதை நிறுத்தியது - பெரிய ரிலீஃப் அது!!

  பதிலளிநீக்கு


 24. //காமாட்சி said... //

  ஆம், வீடுகளிலும் கடைகளிலும் வேலை பார்க்கும் பெண்களின் சம்பளம் இந்த மாதிரி செலவுக்குத்தான் ஆகிறது.

  // கிராமங்களில் சாப்பிடவே பத்துமுறை ஒவ்வொருவரையும் கூப்பிடவேண்டும்//

  மேலும், கல்யாணப் பத்திரிகை கொடுக்கும்போதே சாப்பிட வாங்க என்று வலியுறுத்த வேண்டும். அதே போல, மருமகள் வழி உறவில் விசேஷம் என்றால், சம்பந்தி வீட்டினர் வந்து தம்மோடு அழைத்துச் செல்ல வேண்டும். வராதவர்களுக்கு உணவு அனுப்ப வேண்டும்.... இதெயெல்லாம் பார்க்கும்போது, நல்ல வேளை நான் திருமணம் செய்தது வெளியூரில் என்று ஒரு நிம்மதி வரும்.

  பதிலளிநீக்கு
 25. /பரிவை சே.குமார் said... //

  நன்றி!!

  //Angelin said... //

  மிகவும் நன்றி ஏஞ்சல்!

  பதிலளிநீக்கு
 26. வட்டார வழக்குடன், தொன்று தொட்டு வரும் வழக்கங்களையும் அறியத் தரும் அருமையான கதை. முடிவு நெகிழ்வு. வீட்டு விசேஷங்களுக்காக முற்றத்திலிருக்கும் பக்கத்து வீட்டுச் சுவரை அகற்றி மீண்டும் கட்டிக் கொடுப்பார்கள் எங்கள் வீட்டில். தெருவில் நான்கைந்து வீடுகள் வரை அடைத்துப் பந்தல் இருக்கும். பாத்திரங்கள் கழுவும் இடத்தை அங்கனம் என்போம். இக்கதையை புத்தகத்திலேயே வாசிக்கக் காத்திருந்தேன். எனக்கான பிரதி இன்னும் நண்பரிடமே உள்ளது. பெங்களூரில்தான். மீண்டும் நினைவுபடுத்தி விரைவில் வாங்க வேண்டும். முந்தைய அமீரக இதழ் நாடு விட்டு நாடு விரைவில் கைக்கு வந்தது :).

  வாழ்த்துகள் ஹுஸைனம்மா!

  பகிர்வுக்கு நன்றி, ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!