வியாழன், 18 அக்டோபர், 2018

உங்கள் சட்டைப் பையில் என்ன இருக்கிறது?
அம்மா காத்திருக்கிறாள் 

"அம்மா..   வெள்ளரிப்பிஞ்சு..."  மாலதி கையைக் கிள்ளினாள் மஞ்சு.  

"ஒரு கட்டு வாங்குங்களேன்.."  மாலதி சண்முகத்தைப் பார்த்தாள்.

"இன்னும் கொஞ்ச நேரத்தில் எங்காவது நிறுத்திச் சாப்பிடவேண்டும்..   இப்பப்போயி இதைச் சாப்பிட்டா..?"  சண்முகம் எரிச்சலுடன் மகளையும் மனைவியையும் பார்த்தான்.  மகன் இதை எதையும் கவனிக்காமல் மொபைலில் மூழ்கி இருந்தான்.

"அது எங்க பிரச்னைப்பா...  இதை வாங்குங்க...  அதையும் பார்த்துக்கலாம்..."  என்றாள் மஞ்சு.

காலை வண்டி வைத்துக்கொண்டு சண்முகம், சண்முத்தின் தம்பி அறிவு, இருவர் மனைவிமார்கள், சண்முகத்தின் மகன் ராஜா, மகள் மஞ்சு ,  எல்லோரும் கிளம்பி  வந்து கொண்டிருந்தனர்.

இன்னும் குறைந்தது ஐந்து மணி நேர பிரயாணம் பாக்கி இருந்தது.

வழியெங்கும் கண்ணில் படுவதை எல்லாம் வாங்கி கொண்டிருந்தனர் குழந்தைகள். 

ஆட்சேபித்த சண்முகத்தை "ஆமாம்..  இப்படி ஒண்ணா சேர்ந்து எப்ப கிளம்பி இருக்கோம்...   சும்மா இருங்க" என்று அடக்கினாள் மனைவி மாலதி.

"ஆபீஸ்ல லீவு சொல்லிட்டியாடா?"  தம்பியிடம் கேட்டான் சண்முகம்.

"ம்ம்ம்..  பின்ன?"

"எத்தனை நாள்?"

"குறிப்பா எதுவும் சொல்லலை"

"மொபைல்ல என்னடா பார்க்கறே?"  சண்முகத்தின் தம்பி மகன் கார்த்தி கேட்டான்.

"போனவாரம் ரிலீஸான படம்டா..."  ராஜா மொபைலிலிருந்து கண்ணெடுக்காமல் பதில் சொன்னான்.

கார் ஸ்டீரியோவில் ஏ ஆர் ரெஹ்மான் ஓடிக்கொண்டிருந்தது.

ஒரு மணி நேரம் கழித்து ஓரளவு பெரிய ஊர் ஒன்றில் நல்ல ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு முடிந்தது.

"அக்கா...  அதோ அந்தப் பொண்ணு போட்டிருக்கற ட்ரெஸ்ஸைப் பாருங்க...  இதே மாதிரிதான் எங்க மதினி பொண்ணு கல்யாணத்துல...."

போன வாரம் சென்று வந்த கல்யாணம், ஊரில் பார்த்த மால் என்று இரு பெண்களுக்கிடையே பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.  

மஞ்சு தோழியுடன் போனில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

அண்ணனும் தம்பியும் ஷேர்மார்கெட் பற்றி அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தார்கள். 

ஒருவழியாய் ஊர் வந்து சேர்ந்தது.

ஏ ஆர் ரஹ்மானை அணைத்தான் சண்முகம். 

எல்லோரும் மௌனமானார்கள்.  ஒரு இறுக்கமான அமைதி.

வண்டியை விட்டு இறங்கியபோது சுப்பிரமணி எதிரில் வேகமாக வந்தார்.

"அய்யர் அவசரப்படுத்திக்கிட்டே இருக்காரு...  டயமாச்சு...   உங்களுக்காகததான் எடுக்காம காத்திருக்கோம்...  சீக்கிரம் வாங்க...   முகதரிசனமாவது கிடைக்கட்டுமேன்னுதான்..."

உள்ளே நுழையும் இவர்களை பார்த்ததும் செத்துப்போன சண்முகத்தின் அம்மா உடலுக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்து  அழுகை வெடித்துக் கிளம்பியது.  

============================================================================================================


சுப்ரமணிய ராஜு எழுத்திலிருந்து சில வரிகள்...-  எதையோ கீழ போட்டு மிதிச்சுட்டு நடக்கற நடை.  (காதலை மறக்க நினைக்கும் பெண்)

-  ரொம்ப அழகா இருப்பா.  தக்காளி அவ மாதிரி சிவப்பா இருக்கும்.

-  பி யூ ஸி வரைக்கும் படிச்சுட்டு வீட்டுல கண்ணாடி முன்னால நின்னுண்டிருக்கா...  (கல்யாணத்துக்குக் காத்திருக்கும் இரண்டு பெண்களில் இளையவள்) 

-  அப்பா ரிட்டையர் ஆகி, சம்பளம் பென்ஷன் ஆகி, ராத்திரியில் தயிர் மோர் ஆச்சு.   உடனே கஷ்டம் எல்லோருக்கும் ரொம்பப் பெரிசா தெரிய ஆரம்பிச்சுது.  (வேலையில்லா மகனிடம் எதிர்பார்ப்பு) 

-  அவன்கிட்ட எப்பவும் ஏதாவது ஒரு மெஸேஜ் இருக்கும். (அந்த வேலையில்லா மகனின் வெட்டி பந்தா)

-  இவன்கிட்ட யாரும் எதிர்த்துப் பேசமாட்டாங்க...  பேசினா உனக்கு என்ன தெரியும்ங்கற மாதிரி அவனை முட்டாளாக்கி கிழிகிழின்னு கிழிச்சுடுவான். 

-  கல்யாணி அம்மாளுக்கு புருஷன் இல்லையே ஒழிய புருஷம் இருந்தது.

-  பக்கத்தில் வருபவனின் தோளில் கைபோட்டுக்கொண்டு அவன் மனம் புண்படாமல் அவனை முட்டாளாக்கத் தெரிந்தவன்.  (புத்திசாலியின் விவரணம்)

-  நான் உன்னைக் காதலிக்கிறேன்.  இது உனக்குத் தெரியவில்லையா?  இல்லை நடிக்கிறாயா?  Please, say that you love me.  சொல்ல மாட்டாய்.  நீ உன்னைக் காதலிக்கிறாய், என்னைவிட!  விட்டுக்கொடுத்துப் பேச உன்னால் முடியாது.  எந்நாளும் முடியாது.  அதைச் சொல்லி விட்டால் உனக்கு உன் Ego போய்விடும்.  ஒரு தடவை உன்னை அம்மாதிரி பேசவைக்கக் கூடாது என்னும் உன் sub - conscious ஐ நீ தடுத்து நிறுத்தி வைக்கிறாய்.  இதனாலேயே நான் உன்னை அதிகம் விரும்புகிறேன்.  யோசிப்பதை விட்டேன்.  உன் புத்திசாலித்தனங்களைக் கழற்றிவிட்டு வெறும் ராஜாராமனாக வாயேன்.  மாட்டாய்.  நான் அங்கே மணலில் என் மனசுக்குள் ராஜாராமன் ராஜாராமன் ராஜாராமன் என்று என் மனசுக்குள் ஸ்ரீ ராமஜெயம் எழுதிக் கொண்டிருந்தேனே, உனக்குத் தெரியுமா?


-  சாந்திக்கு சண்டை போட ஒரு அம்மா வேண்டும் என்பது இல்லை.  யாராவது வேண்டும்!  (மாமியார் மருமகள்)

-  திடீர்னு ஒருநாள் உங்கப்பா வந்தார்.  உலகம் அழியும்போது குதிரைமேல வர்ற கல்கி மாதிரி (இரண்டாம் தாரம்)

-  "வாழ்க்கயில உன்னை மாதிரி ஒரு பிரச்னையும் இல்லாதவனால்தான் பாலிட்டிக்ஸ், சொஸைட்டி, எகனாமிக்ஸ் பத்தியெல்லாம் பேசிண்டிருக்க முடியும்..."  

"..எது வேற?  உலகம் முழுக்க புனருத்தாரணம் பண்ணிடுவேன்னு சொல்லிட்டு பக்கத்துல ஒருத்தனைப் பட்டினியா வெச்சுக்கறதா?  அப்புறம் வீட்டை சரியா கவனிக்கறதுகூட கிடையாது.  மொதல்ல பர்ஸனல் லைப்ல சரியா இல்லாதவனெல்லாம் இலக்கியம், சமூகம்னு பேசவே கூடாதும்பேன் நான்.."  (கணவனின் முதல் தார பொறுப்பில்லாத மகனிடம் அவனைவிட நான்கு வயதே பெரிய இளைய தாரம்)


=========================================================================================================


மூத்த பதிவர் பட்டாபிராமன் ஸார் தனது சிந்தனைச்சிதறல் தளத்தில் இந்த யானைப்படம் வரைந்திருக்கிறார்.  பென்சில் ஓவியம்.   மவுத்தார்கனில் ஹிந்தி, தமிழ் என நிறைய பாடல்கள் இசைத்து வலையேற்றி வருகிறார்.  ஓவியங்களும் வரைவார்.  இந்த யானைப்படத்தை வரைந்து வெளியிட்டிருக்கிறார்.  படம் பற்றிய சிந்தனைகளை இங்கும் பகிரலாம், அவர் தளத்திலும் பகிரலாம்.  சந்தோஷப்படுவார்.

எனது பின்னூட்டத்துக்கு அவரின் பதில் பின்னூட்டம் கீழே...

இந்த படத்தை வரைந்த எனக்கு எதுவும் தோன்றவில்லை. ஆனால் உங்கள் பார்வையில் இவ்வளவு தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். இதுதான் படைப்பாளிக்கும் விமர்சனம் செய்பவர்களுக்கும் உள்ள வேறுபாடு.  பாராட்டுக்கள்.  நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.  இந்த யானை மனிதர்களால் துன்புறுத்தப்பட்டு சங்கிலியால் கட்டி வைக்கப்பட்ட யானை. பாவம் பல மனிதர்களை போல தங்கள் மீது தொடுக்கப்படும் வன்முறைகளை எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ள ஒரு வாயில்லா பிராணி.


==============================================================================================================


அதிரா என் படம் ஏன் போடவில்லை என்று நேற்று கேட்டிருக்கிறார்.  அதற்கு நெல்லையின் பதில் கச்சிதம் / உண்மை!!!    இதோ நான் (நெல்லை சொல்லியிருக்கும் வண்ணம்!)
===========================================================================================================


கீழ்க்காணும் லிஸ்ட்டுடன் இப்போது பதஞ்சலியின் 'திவ்யதாரா' தலைவலித்தைலம் ரோலான் ஒன்றும்!=========================================================================================================

65 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 2. அம்மா காத்திருக்கிறாள்...

  ஒன்றும்சொல்வதற்கில்லை.. எனினும் அப்புறமாக வருகிறேன்...

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை வணக்கமும், ஆயுத பூஜை வாழ்த்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் பானு அக்கா. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

   நீக்கு
 4. நன்றி ஸ்ரீராம் .
  யானைக்கு மதம் பிடிக்கும் வரை சாதுவான பிராணி.

  மதம் பிடித்தால் அது எல்லாவற்றையும் ஹதம் (அழித்து)செய்து விடும்.

  அதுபோல்தான் மனிதர்களும் மதத்தை பிடித்துக்கொண்டால் மதம் கொண்ட யானையாக மாறி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள்

  ஆனால் மதத்தை பின்பற்றினால் மட்டுமே மத நல்லிணக்கம் அங்கு நிலவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி பட்டாபிராமன் ஸார். வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள்.

   நீக்கு
 5. அது அம்மாவின் மரணத்துக்கான பயணமா ?

  இன்றைய உண்மைநிலை நானும் இதை கண்டு இருக்கிறேன்.

  பாசம் என்பதில் பொருள் அர்த்தமில்லாத காலமாகி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி... ஆமாம். கேள்விப்பட்ட ஒன்றைதான் வரிகளாக்கினேன்!

   நீக்கு
 6. சுப்ரமண்ய ராஜு படித்ததில்லை. படிக்கத் தூண்டுகிறது நீங்கள் எடுத்துக் காட்டிய வரிகள்..,..

  பதிலளிநீக்கு
 7. சட்டைப் பை பெரும்பாலும் காலி. அலுவலகம் செல்லும்போது அடையாள அட்டை மட்டும். பேனா கூட வைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை. அலுவலகத்தில் வைத்து விடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சட்டைப்பை காலியாக இருந்தால் நல்லாதான் இருக்கும். எனக்கென்னவோ பாதுகாப்பு குறைவாக இருப்பதாகத் தோன்றும்.

   நீக்கு
 8. உங்கள் சட்டை பையில் என்ன இருக்கிறது என்ற தலைப்பை படித்த்தும் கலைவாணர் பற்றியோ என்று நினியத்தேன்.
  கலைவாணர் படத்தில் இந்த வசனம் வரும்.

  மற்றவர்களைப்பற்றி குறை சொல்லிக் கொண்டு இருப்பவரிடம் உன் சட்டைப்பையில் என்ன இருக்கிறது என்று கேட்பார் கலைவாணர், கேட்கபட்டவர் சொல்ல திணறுவார். உன் சட்டைபையில் என்ன இருக்கு என்று கேட்டால் தெரியவில்லை, மற்றவர்களைப் பற்றி எல்லாம் தெரிந்த மாதிரி எப்படி பேசமுடிகிறது என்று கேட்பார்.


  அம்மாவின் மரணத்திறகு போகும் போது உள்ள பயணத்தில் இந்த அளவா மக்கள் போக்கு இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலைவாணர் அப்படிச் சொன்னதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். பயணம் - நிஜம் கலந்த கற்பனை. நன்றி அக்கா.

   நீக்கு
 9. பள்ளிக்கு போகிற படமா? ஸ்ரீராம் படம்.
  தலைவாரி பூச்சூடி பாடசாலைக்கு போகிற படம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோமதி அக்கா!

   பள்ளிக்குப் போகும் காலத்துக்கும் முந்தைய...

   நீக்கு
 10. அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.
  ஆயுதபூஜை வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துகள் அக்கா.

   நீக்கு
 11. யானைபடமும் அதற்கு நீங்கள் சொன்னதும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அக்கா. யானை படம் பார்த்து உங்கள் மனதில் தோன்றியதென்ன என்று சொல்வீர்கள் என்று பார்த்தேன்.

   நீக்கு
  2. யானை முதிய யானை போல் தெரிகிறது.
   அதன் கண்ணில் சோகம் தெரியுது.
   நீங்கள் சொல்வது போல் உண்மையான அன்பை தேடுதோ?
   சர்க்கஸ் என்ற மலையாள படத்தில் சர்க்கஸ் கம்பெனி நஷ்டத்தில் ஓடும் கடன் ஆகி விடும் அதனால் ஒரு யானையை விற்பார்கள் அதை பார்த்து கொண்டவரும், யானையும் ஒருவரை ஒருவர் பிரிய முடியாமல் அழுவார்கள்.

   நீக்கு
  3. சர்க்கஸ் என்றொரு மலையாளப்படமா? விருது பெட்ரா படமோ?

   நீக்கு
  4. தெரியவில்லை, நேற்று அதன் தமிழ் பதிப்பு பார்த்தேன். சர்க்கஸ் நடத்துபவர்கள் கஷ்ட நஷ்டம், அன்பு, பாசம் என்று கதை போகும் விருது பெற்று இருக்கலாம். ஜோக்கர் கஷ்டத்திலும் சிரிக்கனும் பிறரை சிரிக்க வைக்க அவன் சோகத்தை மறைக்க வேண்டும் என்று சொல்கிறது கதை.

   நீக்கு
  5. ஒரு யானையை காட்டில் பிடித்து அதை பழக்கும் வரை அது அனுபவிக்கும் கொடுமைகளை 55 ஆண்டுகளுக்கு முன்பே நேரில் கண்டவன் நான்.என்ன செய்வது இதே துன்பத்தைத்தான் ஆப்ரிக்க பழங்குடியினர் அமெரிக்கர்களிடம் பல்லாண்டுகாலம் அனுபவித்தார்கள்.தங்கள் சுயநலத்திற்காக கொடிய விலங்குகளை விட கேவலமான மனித மிருகங்கள் சக மனிதர்களை கொடுமைப்படுத்துவதும் சிறுமைப்படுத்துவதும் ஆண்டாண்டு காலமாக தொடரும் அவலம். இதற்க்கு முடிவேயில்லை.

   நீக்கு
 12. அருமையான தொகுப்பு. குறிப்பாக முதல் பதிவு, யானை ஓவியம், of course தங்களின் pic.

  சட்டை பாக்கெட் காலி

  பதிலளிநீக்கு
 13. காலையில் 6:10கே படித்துவிட்டேன். முதல் கதை மனதைப் பாதித்தது. அதனால் உடனே பின்னூட்டம் இடலை. வாழ்க்கையின் நிதர்சனம் சுயநலம்தானே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நெல்லைத்தமிழன். படித்த நேரத்தை துல்லியமாகச் சொல்கிறீர்கள்....

   நீக்கு
 14. பட்டாபிராமன் சார் வரைந்த யானை படமும் உங்கள் கருத்தும் இரு நாட்களுக்கு முன் கஜேந்திர மோக்ஷம் நடந்ததாகச் சொல்லப்படும் கோவிலின் (அத்தாழநல்லூர்) யானையைப் பார்த்தபோது நினைத்ததை மனதுள் மீண்டும் கொண்டுவந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அத்தாழநல்லூர்... புஷ்கரம் சென்று வரும் வழியில் நவதிருப்பதி தரிசனமா?

   நீக்கு
  2. 4 கைலாசங்கள் (நவ கைலாசத்தில்), ப்ரம்மதேசம், அத்தாழநல்லூர், மன்னார்கோவில், கிருஷ்ணாபுரம், கல்லிடைக்குறிச்சி கோவில், நவ திருப்பதியில் நத்தம் தவிர, மற்ற கோவில் தரிசனம் கிடைத்தது. புஷ்கரம் இரு இடங்களில் தாமிரவருணியில்...

   அத்தாழநல்லூர் கோவில் யானை இடுப்புப் பகுதியில் பெரிய காயத்துடன் இருந்தது. கோவில் யானைகள் என்று நாம் கொண்டாடினாலும், கிட்டத்தட்ட நாம் அவைகளுக்கு தண்டனை கொடுப்பதைப்போல்தானே... ஒரு ஆறுதல், அவைகள் இறைவனுக்குச் சேவை செய்வதால் அடுத்த ஜென்மம் மிக நன்றாக இருக்கும் என்ற ஆறுதல்தான்.

   நீக்கு
 15. நல்ல தொகுப்பு! அம்மா இறந்தது அவர்களுக்குத் தெரியாதா?
  யானை சற்று மெலிந்து இருக்கிறது. கண்களில் கொஞ்சம் பயம்.
  தி.ஜானகிராமனும், சாவியும் கலந்தார் போல் நடை சுப்பிரமண்ய ராஜுவிற்கு. கதையின் நடுவிலிருந்து எடுத்து பகிர்ந்திருப்பதால் தொடர்பு இல்லாமல் இருக்கிறது.
  பையில் என்ன இருக்கிறது என்பதை ஏற்கனவே முக நூலில் படித்த நினைவு. மொத்தத்தில் ஸ்வாரஸ்யமான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பானு அக்கா... தெரியாமல் இல்லை. விஷயம் கேள்விப்பட்டு வருவதால்தானே முக தரிசனமாவது கிடைக்கட்டும் என்று காத்திருக்கிறார்கள்...என்று அமைத்திருக்கிறேன்.

   சுப்ரமணிய ராஜு தொகுப்பின் வரிகள் வெவ்வேறு சிறுகதைகளிலிருந்து எடுக்கப்பட்ட வரிகள் அவை.

   நீக்கு
 16. ///உள்ளே நுழையும் இவர்களை பார்த்ததும் செத்துப்போன சண்முகத்தின் அம்மா உடலுக்கு அருகில் அமர்ந்திருந்தவர்களிடமிருந்து அழுகை வெடித்துக் கிளம்பியது.///

  இந்தக் கதையை சத்தியமாக என்னால ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.. என்னதான் அன்பு பாசம் இல்லாத ஆட்களாக இருப்பினும், ஒரு மரண வீட்டுக்குப் போகும்போது நிட்சயம் இப்படி இருக்கும் வாய்ப்புக் குறைவே.. மனதுக்கு கஸ்டமாக இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்தக் கதையை சத்தியமாக என்னால ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..//

   அதிரா... கதைக்கு கையுண்டா காலுண்டா என்று விட்டு விடவேண்டியதுதான்!

   நீக்கு
  2. அதிரா - உண்மை, நாம் நினைப்பதைவிட வித்தியாசமானது. இதற்கும் அன்பு/பாசத்துக்கும் முடிச்சுப் போடக்கூடாது. சொந்த அப்பா போய்விட்டார் என்றாலும், நாம் அங்கு போய்ச்சேரும்வரை மனதில் வருத்தம் இருந்தாலும் உணவில் கவனம் செல்லும், நம் குழந்தைகளுக்கு நம் வருத்தத்தை கொடுக்கமாட்டோம், அவங்க நல்லா சாப்பிட்டாங்களா என்று பார்ப்போம், துக்க வீட்டிற்குச் சென்றபிறகு கொஞ்ச நேரத்தில் நாம் சாப்பிடுவோம். இதுதான் இயல்பு, உலக நடைமுறை.

   நீக்கு
 17. //அதிரா என் படம் ஏன் போடவில்லை என்று நேற்று கேட்டிருக்கிறார். அதற்கு நெல்லையின் பதில் கச்சிதம் / உண்மை!!! இதோ நான் (நெல்லை சொல்லியிருக்கும் வண்ணம்!)//

  யாரூஊஊஊஊஊ இந்தப் பொம்பிளைப்பிள்ளை ஹா ஹா ஹா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //யாரூஊஊஊஊஊ இந்தப் பொம்பிளைப்பிள்ளை ஹா ஹா ஹா..//

   சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் சும்மா தளத்திலேயே வெளியிடப்பட்ட என் புகைப்படமாக்கும்!

   நீக்கு
  2. ஓஓ அப்போ இது அம்பத்தூஊஊஉ ஒரு வருடத்துக்கு முந்தின படமோ?:) ஹா ஹா ஹா ஶ்ரீராம் ஓடாதீங்கோ:)

   நீக்கு
 18. பூஸ்குட்டி இப்போ பொக்கட்டில ஏறியிருக்கோ ஹா ஹா ஹா..

  அது சரி ஒரு குட்டிப் பொக்கட்டில் சொக்கலேட் கூட வச்சிருப்பீங்களோ அவ்வ்வ்வ்வ்வ்....

  பதிலளிநீக்கு
 19. அம்மாக்கள் எல்லா இடங்களிலும் காத்திருக்கிறார்கள்தான்/

  பதிலளிநீக்கு
 20. கதை ..சிலர்க்கு அந்த மகன்களின் நடவடிக்கை ஏற்க முடியாமல் போகலாம் .ஆனால் இதுதான் நிதர்சனம் .போலியான அழுகையைவிட இயல்பாயிருப்பது பிடிச்சிருக்கு ...அவங்க ஒரே ஊரில் அம்மாவின் அருகில் இருந்திருந்தா வேறுவிதமான காட்சி அமைந்திருக்கும் . மகன்களுக்கு சோகம் துக்கம் இல்லைன்னுலாம் முடிவுக்கு வர இயலாது .அம்மாவின் நினைவுகளை அசைபோட்டு பிரயாணித்திருக்கலாம் ஆகவே அழுகை துக்கம் .அது வெளிப்பட சில நாட்களாகும் .
  இன்னொன்னும் சொல்லணும் 2 decades வெளிநாட்டு வாழ்க்கை எனக்கும் இப்படி பல அனுபவங்களை கொடுத்திருக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துக்கத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக பசிக்கும் என்றும் சொல்வார்கள். அல்லது மனா இறுக்கத்தில் இருப்பவர்களுக்கு... நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 21. /- கல்யாணி அம்மாளுக்கு புருஷன் இல்லையே ஒழிய புருஷம் இருந்தது.//
  பாலகுமாரன் கதை மாந்தர்கள் சிலர் இப்படித்தான்
  //
  - ரொம்ப அழகா இருப்பா. தக்காளி அவ மாதிரி சிவப்பா இருக்கும்.//

  ஹா ஹா சூப்பர் :) மனதிற்கினியவளை தக்காளிக்கு ஒப்பிட்டது .

  //மொதல்ல பர்ஸனல் லைப்ல சரியா இல்லாதவனெல்லாம் இலக்கியம், சமூகம்னு பேசவே கூடாதும்பேன் நான்//
  பாலசந்தர் பட நாயகி போல இருக்கிறார் இவர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாலகுமாரனின் அத்யந்த நண்பர் சுப்ரமணிய ராஜு. அவருக்கு மிகவும் பிடித்த டைரக்டர் கே பாலச்சந்தர்!!! நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 22. பட்டாபி சாரின் யானைப்படம் நேற்றே பார்த்து மனதை என்னமோ செய்தது அதன் கூர்மையான பார்வை .பின்னூட்டம் அங்கே கொடுத்திட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த யானை என்னையும் பாதித்ததால்தான் இங்கே பகிர்ந்தேன்.

   நீக்கு
 23. ஹாண்ட் பேகில் எவ்ளோ வேணும்னாலும் அடைக்கலாம் ஆனா பாக்கெட்டில் ரோல் on பேனா சாக்லேட் இவ்ளவுமா ???
  ஹாஹா அந்த பூஸ் எட்டிப்பார்பது போல் சமீபத்தில் டி ஷர்ட்டில் இருந்து ஆடு எட்டிப்பார்க்கும் படம் பார்த்தேன்
  https://www.uniqueusthings.com/shefa55-sf5y7?checkout=cart

  பதிலளிநீக்கு
 24. என் கைப்பையில் அட்ரஸ் புக் பேனாக்கள் மினி டைரி ,டிஸ்யூ பேப்பர் ,குட்டி சீப்பு காயின்ஸ் போடும் மினி பர்ஸ் என்னோட டெபிட்கார்ட்ஸ் நோட்பேட் ,வீட்டு சாவி இவ்ளோதான் இருக்கு

  பதிலளிநீக்கு
 25. ஹாஹா ஸ்ரீராம் சின்னவயசு படம் ஸோ கியூட் :)
  நியூட்டனின் விதியை gravitational force between the object and the Earth. // அப்போவே விளக்கறார் ஸ்ரீராம் படத்தில் ஹாஹா

  பதிலளிநீக்கு
 26. மனதைப் பாதித்த உண்மைக் கதை! யானை! வெள்ளிக்கிழமைப் பதிவில் யானைனு நீங்களும் ஏஞ்சலும் பேசி இருப்பதைப் பார்த்துட்டு ஓடி வந்தேன். யானையின் சோகமும், இறந்த தாயின் நிராதரவான நிலையும் மனதைப் பிசைகிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!