29.12.25

"திங்க"க்கிழமை  :   வெங்காய வடகறி (உசிலி)    -  ஸ்ரீராம் 

பாஸ் இன்னொரு ஐட்டம் செய்தார்.  அதைப் பற்றி ஒரு திங்களில் கதைக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

'அந்த நாள் எந்த நாளோ' என்று ஏக்கத்துடன் பார்(கா)த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி! அது இந்த நாள்தான்! ("யோவ்... நாங்க எங்கப்பா கேட்டோம்?" என்று நீங்கள் குரல் கொடுப்பது என் காதில் விழவில்லை!)

ஒருநாள் ஏதோ பார்த்துக் கொண்டிருக்கும்போது எங்கேயோ பார்த்த ரெசிப்பி ஒன்றை பாஸுக்கு அனுப்பினேன்.  அவரும் அதைப் படித்த உடனேயே அடுத்த சந்தர்ப்பத்தில் உற்சாகத்துடன் செய்தார் செய்து கொடுத்தார்..   வெங்காயம் அவருக்குப் பிடிக்காது என்றாலும் எங்களுக்காக செய்து கொடுத்தார்.   அவருமே கொஞ்சம் சுவைத்துப் பார்த்துவிட்டு ரசித்தார் என்பதை நான் சொல்ல மாட்டேனே...  அதற்கு அப்புறம் மூன்று முறை செய்தாயிற்று.  மறுபடி மறுபடி செய்து சாப்பிடத் தோன்றுகிறது.

வெங்காயத்தை மட்டுமே ஒரே காயாக போட்டு கறியா என்று எனக்கும் முதலில் தோன்றியதுதான்.  மற்ற காய்களுக்கு பக்கவாத்தியம்  வாசிப்பது மட்டும்தானே அதன் வேலை!

அப்போது வெங்காயம் என்முன் வந்தது!

"சிங்கத்தை காட்டுல பார்த்திருப்பீங்க, ஜூல கூண்டுல பார்த்திருப்பீங்க..."  வசனம் கேட்டிருப்பீங்க...

அதுபோல "வெங்காயத்தை குழம்புல போட்டுருப்பீங்க..  கூட்டுல போட்டுருப்பீங்க...  வதக்கல்ல போட்டுருப்பீங்க.. சட்னியில் போட்டுருப்பீங்க..   ஏன் அரைச்சு கூட விட்டுருப்பீங்க...  ஆனா அதையே மெயின் காயா வச்சு கறி செஞ்சுருக்கீங்களா..  செஞ்சுருக்கீங்களா...  செஞ்சுருக்கீங்களா....  சாப்பிட்டுப் பார்த்தா ஸூப்பர் டேஸ்ட்டுடா" என்று ஈஸ்வர சிங்கம் சூர்யா குரலிலேயே அடித்துச் சொல்லுவது போல இருந்ததது.  ஆம் அவ்வளவு சுவையாக இருந்தது.



இதற்கு தேவையான பொருட்கள் வெங்காயம், அளவான பெரிய சைஸில் நான்கு, ரொம்பப் பெரிதாக இருந்தால் மூன்று.  கடலைப் பருப்பும், துவரம்பருப்பும் சேர்ந்து ஒரு மான்பிடி அல்லது ஒரு டம்ளர், சிவப்பு மிளகாய் அவரவர்கள் காரத்துக்கேற்ப - (நாங்கள் வெங்காயம் தித்திக்கும் என்பதால் பத்து மிளகாய் வைத்தோம்), தேவையான உப்பு, பெருங்காயம், நல்லெண்ணெய் அல்லது கோல்டுவின்னர் சுமார் ஐந்து டேபிள் ஸ்பூன்,, கடுகு, உளுத்தம்பருப்பு,  மூன்று ஸ்பூன் தேங்காய்த் துருவல், கொத்துமல்லி.

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு இரண்டையும் அரைமணிநேரம் ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கவும். அரைமணி ஊறியபின் அதை எடுத்து லேசாக தண்ணீர் தெளித்து மிக்சியில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.  தனியே வைத்து விடுவோம்.

நான்கு வெங்காயத்தையும் பொடியாக இல்லாமல் நீளவாக்கில் கொஞ்சம் பெரியதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்ததும் வெங்காயத்தை அதில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து, கருக்காமல் பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.  அதை அப்படியே ஓரமாக எடுத்து தனியாக வைக்கவும்.

மறுபடி வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் இட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து, அரைத்த பருப்பு விழுதை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் பிரட்டவும்.  பருப்பு நன்றாக வெந்ததும் பொலபொல என்று வரும்.  அந்த நேரத்தில் அடுப்பிலிருந்து இறக்கும் நேரம் தேங்காய்த்துருவல் மூன்று ஸ்பூன் அதில் போட்டு, ஒரு திருப்பு திருப்பி விட்டு, அடுப்பை சிம்மில் வைத்து, வதக்கிய வெங்காயத்தை அதில் போட்டு நன்றாக சேர்த்து விட்டு, கடைசியாக நறுக்கிய கொத்துமல்லித் தழைகளை அதில் தூவி இறக்கவும்.










ஸூப்பரா இருக்குங்க...   அவ்வளவுதான் சொல்வேன்.  செஞ்சு பாருங்க..  சாப்பிட்டு பாருங்க... கருத்து சொல்லுங்க...

"வெங்காய உசிலி கையோடு அள்ளி வாயினில் சுவைப்பதும் சுவைதானே... சமையல் எப்போதும் தொடர்கதைதான்... முடிவே இல்லாதது..."

பி. கு :  புகைப்படங்கள் யாவும் பாஸே எடுத்தது.

37 கருத்துகள்:

  1. ​இதைத்தான் "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் முடிந்தது" என்று சொல்வார்களோ? மசால் வடை (ஆம வடை) க்கு தயார் செய்து வடை தட்டிப்போடாமல் எண்ணையில் பிரட்டி எடுத்தால் "யுரேகா" What a good boy am I ஒரு பதிவுக்கு மேட்டர் கிடைத்துவிட்டது என்று குதிக்கலாம். ஹா ஹா ஹா. கோவிச்சுக்காதீங்க எல்லாம் ஒரு கலாய்ப்பு தான்.

    வடகறி என்றால் மசாலா, முக்கியமாக சோம்பு சேர்க்கப்படும். உசிலி ஆவியில் வேக வைத்தது தாளிப்பது தானே?


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC Sir ...   இது குரங்கு பிடிக்கப்போய் பிள்ளையார் வந்த கதை என்று சொல்லலாமா?  எண்ணிய எண்ணியாங்கெய்தினோம்.  சுவைதான் எதிர்பாராமல் பிள்ளையாராய் வாய்த்தது!

      வடகறி - உசிலி நீங்கள் சொல்வது சரிதான்.  சின்ன வயதிலிருந்தே வாழைப்பூ வடகறி என்றே சொல்லி பழக்கமே தவிர உசிலி என்று சொன்னதில்லை.  பீன்ஸ் உசிலி என்று பாஸ் செய்தபோது "ச்சீ...   இது வடகறி..   நாங்கள் வாழைப்பூ போட்டு செய்வோம்" என்றேன்.  அப்புறம் அவருக்கும் வாழைப்பூ பழகி விட்டது.  எனக்கும் உசிலி பழகி விட்டது! நானும் கிண்டி முருடி பவனில் வடகறி சாப்பிட்டு இறும்பூதெய்தினேன்!

      நீக்கு
    2. //சின்ன வயதிலிருந்தே வாழைப்பூ வடகறி என்றே சொல்லி பழக்கமே தவிர உசிலி என்று சொன்னதில்லை.// ஆச்சர்யம், வாத்யாரே! ஒரே நகரத்துக்குள் எவ்வளவு வித்யாசம்! எங்கள் வீட்டில்/மொத்த உறவில் வடகறி என்றாலே ஆட்டுக்கறி மாட்டுக்கறி ரேஞ்சில் முகம் சுளிப்பார்கள். அது உண்மையில் என்ன என்று ஒருவரும் சுவைத்திலர் என்பதுதான் முக்கிய காமெடி/சோகம்! நானும் இதுவரை இந்தியாவில் சுவைத்ததில்லை. இங்கு வந்து, ஒருவர் என் வடகறி பற்றிய அறிவுக்கண்ணை திறந்துவைத்து வாழ்வில் ஒளியேற்றினார்.

      நீக்கு
    3. ஒளியேற்றினார் என்று சொல்வதைவிட சுவையேற்றினார் என்று சொல்லலாமோ...   செட்தோசை வடகறி காம்பினேஷன் இருக்கு பாருங்க...  ஆஹா..  ஆனால் மசாலா அளவாக இருக்க வேண்டும்.  நாவை வெட்டுவது போல அள்ளிப் போட்டிருக்கக் கூடாது!

      நீக்கு
    4. ஹாஹஹா திவாமா....அதேதான் எங்க வூட்டிலும். எனக்கு சென்னைக்கு வந்தபிறகுதான் இதெல்லாமே அறிமுகம். ஆனால் சுவைத்த பின் கேட்கணுமா....(பெரியவங்க இல்லாதப்ப) நம் வீட்டில் வெங்காயம் பூண்டு சேர்ப்பதால் பிரச்சனை இருக்கலை. விதம் விதமா முயற்சி செய்ததுண்டு.

      ஊரில் இருந்த வரை சின்ன வெங்காயம் சாம்பார் தனியாக அடுப்பு வைத்து, தனியாகப் பாத்திரம் வைத்து , கொட்டிலில் தனி இடம் பார்த்து வைத்து, ஏதேனும் முகூர்த்த நாள் பார்த்துச் செய்து தருவாங்க அந்த நாளும் வந்திடாதோன்னு நாங்க மெயினா நான் பறக்காவட்டியா காத்திருப்பேன்...!!!!!

      கீதா

      நீக்கு
    5. ஆனால் மசாலா அளவாக இருக்க வேண்டும். நாவை வெட்டுவது போல அள்ளிப் போட்டிருக்கக் கூடாது!//

      யெஸ்...

      அதனால வீட்டில் செய்துவிடுவது நலல்துன்னு செஞ்சுடுவேன் சில ஹோட்டல்களில் மசாலா தூக்கலா இருக்கும்...

      கீதா

      நீக்கு
  2. காலை வணக்கம், வாத்யாரே!
    வெங்காய உசிலி ரெசிபி சூப்பர்! மணம் இங்கே வருகிறது; மனம் அங்கே பறக்கிறது :-) படங்களும் பசியைத்தூண்டும் வகையில் அருமை.

    That said, வடகறி என்று கிளைம் பண்ணுவது கொஞ்சம் அதிகம்; -பூண்டு, சோம்பு போன்ற,வீட்டுப்பெரியர்கள் பார்த்தால் உதைக்கக்கூடிய -இன்னும் சில மசாலா சமாச்சாரங்கள் இல்லாதபடியால் :-)

    My two cents: கடலை பருப்புக்கு பதிலாக பட்டாணி பருப்பு உபயோகித்துப் பார்க்கலாம். ஆதென்டிக் சைதாப்பேட்டை வடகறியில் பயன்படுவதும் அதுவே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாத்யார்..  வணக்கம்.  நீங்கள் சொல்லி இருக்கும் முதல் குறிப்புக்கு JKC க்கு நான் கொடுத்திருக்கும் பதிலைக் காண்க!! 

      இரண்டாவது குறிப்புக்கு என் பதில், "Try பண்ணிட்டா போச்சு!"

      நீக்கு
  3. பட்டாணி பருப்பு has a mild nuttier and sweeter flavor; fyi. Good for masal vadai too.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. and also for adai. it gives more crispiness.

      நீக்கு
    2. மனதில் குறித்துக் கொண்டேன். தைரியம் வரும்போது பாஸிடம் கட்டாயம் சொல்லி விடுவேன் என்று நீங்கள் தாராளமாக நம்பலாம்.

      நீக்கு
    3. யெஸ்ஸு...பட்டாணிப்பருப்புதான் எங்க ஊர்ல பருப்பு வடைக்குப் போடுவாங்க....திருவனந்தபுரத்திலும்...கேரளத்திலும் கிடைக்கும்.

      சென்னையில் இருந்தவரை பட்டாணிப்பருப்பு அண்ணாச்சி கடைகளில் கிடைத்தது வாங்கிச் செய்வேன். அடைக்கும் கூட சூப்பரா இருக்கும். ஊர்ப்பழக்கம்.

      ஆனால் இங்கு கிடைப்பதில்லை. தேடித் தேடி....ம்ஹூம்....

      கீதா

      நீக்கு
    4. பாருங்க ஜெ கெ அண்ணாவும் சொல்லிருக்கார். யெஸ்ஸு அதேதான்...

      கீதா

      நீக்கு
  4. வெங்காய பருப்பு உசிலியா? இந்த மாதிரித் தோன்றியதே இல்லை.

    நல்ல வடைக்கு தயார் செய்வது போன்ற மாவு. நிச்சயம் செய்து சாப்பிட ஆசை. என் வீட்டு பாஸ், குறைந்த அளவில், அதாவது ஒரு வெங்காயம் வைத்துச் செய்யச் சொல்லணும்... செய்வாரா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது பிறிதொரு நாளில் செய்யலாம்,  இது இதற்காகவே செய்யப்பட்டது.  நீங்களும் முயற்சிக்கலாம் - வெங்காயம் சாப்பிடுவீர்கள் என்றால்!

      வாங்க நெல்லை..

      நீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அந்த எளிமையின் இனிமையை சுவைத்திருக்கிறேன்.  சர்க்கரை கிடைக்காமல் குடித்த வெல்ல காபி பிடித்தது அப்போது.  தேங்காய் போடாமல் கரியடுப்பில் வதக்கிய கீரை...  

      அது சரி...  வெறும் வெங்காயக்கறியா...   அது என்ன?

      நீக்கு
    2. //வெங்காயத்தை மட்டுமே ஒரே காயாக போட்டு கறியா என்று எனக்கும் முதலில் தோன்றியதுதான். // இதேதான்! சும்மா கடுகு உளுந்து கடலை பருப்பு தாளித்து, வெங்காயத்துண்டுகளை உப்பு, கறி பொடி போட்டு வதக்கி etc ... வேறு காய் லேது :-)

      நீக்கு
    3. சரி...   புரிந்து கொண்டேன்..   ஆனால் ஏன் மூலப் பின்னூட்டத்தை காணாமல் போக்கி விட்டீர்கள்?

      நீக்கு
    4. இந்த தளத்தில் யாரும் சொந்த வாழ்வின் அன்றைய/இன்றைய செல்வ நிலை குறித்து பேசுவதில்லை என்னும் அருங்குணத்தை போஸ்ட் செய்த உடன் உணர்ந்தேன்; எனவே நீக்கிவிட்டேன்.

      நீக்கு
    5. இல்லை குரு..    அடிக்கடி பேசி இருக்கிறோம். நான் இன்று சொல்லி இருக்கும் விஷயமும் முன்னரே சொல்லி இருக்கிறேன்.  இருபது தேதி வருவதற்குள்ளாகவே என் அப்பாவின் பர்ஸ் எடையிழந்த கதை சொல்லி இருக்கிறேன்.  எங்கள் சேமிப்பு என்னும் பேரில் நடந்தவைகளை சொல்லி இருக்கிறேன்.  கேஜிஜி கூட தங்கள் இளமைப்பருவத்தை அவ்வப்போது சொல்லி இருக்கிறார்.

      அப்புறம், பழசை  மறந்து விடுவது அருங்குணமா என்ன!!  வ பு அ?

      நீக்கு
  6. ​மலையாளிகள் உள்ளிக்கறி என்று செய்வது, சின்ன வெங்காயத்தை நறுக்கி தேங்காய் துருவலுடன் (நிறைய), பச்சை மிளகாய் இவற்றை வாணலியில் கொஞ்சம் வறுத்து மிக்ஸியிஸ்/அம்மியில் சும்மா ஒரு கொரகொரப்பாக ஒட்டி கொஞ்சம் தேங்காய் எண்ணெய் போட்டு செய்வர். சட்னி தான் பொட்டுக்கடலை இல்லாதது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்னியை கறி என்று சொல்வதை அன்புடன் ஆட்சேபிக்கிறேன்!

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள் அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.+

      நீக்கு
  8. "யோவ்... நாங்க எங்கப்பா கேட்டோம்?" என்று நீங்கள் குரல் கொடுப்பது என் காதில் விழவில்லை!)//

    ஹிஹிஹிஹி நாங்க எங்க குரல் கொடுத்தோம்? கொடுத்தாதானே காதில் விழும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...   நீங்க கொடுக்கலைன்னா ..மத்தவங்க கொடுத்திருப்பாங்களே...!!

      நீக்கு
  9. வெங்காய உசிலி!!!!

    ரொம்பப் பிடித்த ஒன்று. நம் வீட்டில்.

    ரொம்ப நல்லா வந்திருக்கு ஸ்ரீராம். பார்க்கவே சாப்பிடத் தூண்டுது. லபக்!

    நீங்க தலைப்பில் சொன்னது போல என் மகனும் இதை வடகறி என்பான்.

    ஆனால் கண்டிப்பாக வடைகறி உசிலியானதும் உண்டு. வெங்காயப் பருப்புசிலி என்று செய்ததும் உண்டு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... எதையுமே நீங்க விட்டு வைப்பதில்லை போல...

      நீக்கு
  10. மறுபடி மறுபடி செய்து சாப்பிடத் தோன்றுகிறது.//

    யெஸ்ஸு....பாருங்க நான் செய்யறப்ப படம் எடுக்காம விட்டதில் உங்களுக்கு ஒரு திங்க பதிவு தேறியது!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    /பாஸ் இன்னொரு ஐட்டம் செய்தார். அதைப் பற்றி ஒரு திங்களில் கதைக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

    'அந்த நாள் எந்த நாளோ' என்று ஏக்கத்துடன் பார்(கா)த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு நற்செய்தி! அது இந்த நாள்தான்! ("யோவ்... நாங்க எங்கப்பா கேட்டோம்?" என்று நீங்கள் குரல் கொடுப்பது என் காதில் விழவில்லை!)/

    அப்படி கேட்டது.. அது நான்தான் என நினைக்கிறேன். நீங்கள் அதை மறந்தா(மறுத்தா)லும், நான் மறக்கவில்லை. அதனால் இந்த வெங்காய பககோடாவை, உசிலியை, வடகறியை ரசித்தேன். ஆனால், உடனே செய்து இன்றே சுவைக்க இயலாது என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன். நாளை வைகுண்ட ஏகாதசி அல்லவா..? பிறிதொரு நாள் கண்டிப்பாக செய்து சுவைக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா...  மெதுவா செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க..  நீங்க அது என்ன என்று சொல்லுங்கன்னு கேட்டிருந்தீங்கதான்..இப்போ நாங்க எங்கே அப்படி கேட்டோம்னு கேட்டதுல உங்க குரல் இல்லைன்னுதான் நினைக்கறேன்!  ஹிஹிஹி...

      நீக்கு
  12. ஸ்ரீராம் சூர்யா வசனமும்...உங்க வசனமும் படித்து சிரித்துவிட்டேன்.

    வெங்காயப் பொரியல் (மற்ற காய்களைத் தேங்கா போட்டு செய்வோமே அதேதான்...) செஞ்சுருப்பீங்கன்னு நினைக்கிறேன்....இல்லைனா செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  13. சாப்பிட்டுப் பார்த்தா ஸூப்பர் டேஸ்ட்டுடா" என்று ஈஸ்வர சிங்கம் சூர்யா குரலிலேயே அடித்துச் சொல்லுவது போல இருந்ததது. //

    ஹாஹாஹாஹா....

    ஸ்ரீராம், கறிவேப்பிலை சேர்க்கலையா இல்லை பருப்போடு அரைச்சிட்டாங்களா?

    கறிவேப்பிலை சேர்த்தால் அதுவும் தனி மணத்துடன் நல்லா இருக்கும்...

    நான் தேங்காய் சேர்த்தும் சேர்க்காமலும் செய்வதுண்டு. பெரும்பாலும் தேங்காய் சேர்க்காமல்.

    அவ்வளவு டேஸ்டா இருக்கும். இதே சைசில்தான் நறுக்கிக் கொள்வதுண்டு வெங்காயத்தை...

    இன்னொரு முறையில் செய்ததுண்டு. அதுவும் டேஸ்டாக இருக்கும்...அடுத்த முறை செய்யும் போது படம் எடுக்க முயற்சி செய்கிறேன். அது வெகு காலையிலேயே அவசரம் அவசகமாக 7 மணிக்குள் ஆக வேண்டும் என்று செய்வதால் படம் எடுக்க முடியறதில்லை பல ரெசிப்பிகள்.

    இனி சனி ஞாயிறில் செஞ்சு படம் எடுக்கணும்.

    அந்த மற்றொரு முறை...பருப்போடு வெங்காயத்தை சேர்த்து தண்ணி சேர்க்காம அரைத்துவிட்டு உசிலிப்பது. கடைசியில் தேங்காய் சேர்த்து புரட்டிடணும்.

    இதுவும் நல்லாருக்கு ஸ்ரீராம்.

    கீதா





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி முயற்சித்ததில்லை.  வெங்காயத்தை சேர்த்து அரைத்து விட்டு அப்புறம் வெங்காயத்தை காயாக போட்டுமா?

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!