திங்கள், 4 பிப்ரவரி, 2019

திங்கக்கிழமை : கொத்துமல்லி தொக்கு - பானுமதி வெங்கடேஸ்வரன்


கொத்துமல்லி தொக்கு

தேவையான பொருள்கள்:

கொத்துமல்லி கட்டு(பெரியது)   --- 1

சிவப்பு மிளகாய்  ---  4 அல்லது 5

புளி --- ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு

உளுத்தம் பருப்பு  ---  1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்  --- ஒரு சிறு கட்டி 
 
உப்பு ---  தேவையான அளவு 

தாளிக்க: 
எண்ணெய்
கடுகு 
உளுத்தம் பருப்பு 

செய்முறை:

கொத்துமல்லி வாங்கியவுடன் வேரை நறுக்கி களைந்து விட்டு, நன்றாக கழுவி, வடியவிட்டு, ஒரு சுத்தமான துணியில் போட்டு வைத்து விடுங்கள். 



வாணலியை அடுப்பில் வைத்து, புளி, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் இவைகளை வறுத்துக் கொள்ளவும். இவை ஆறியவுடன் மிக்சியில் இட்டு போடி செய்து கொள்ளவும். அதோடு 
கொத்தமல்லியை சேர்த்து தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் பொழுதே உப்பையும் சேர்த்து விடலாம்.



பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அரைத்த விழுதை போட்டு கிளறி, இறக்கி, ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். 



கல்லுரல்,இரும்பு உலக்கை போன்றவை புழக்கத்தில் இருந்த பொழுது கொத்து மல்லியை அரைக்காமல், வதக்கி, புளி, மி.வற்றல், உ.பருப்பு இவைகளோடு சேர்த்து கல்லுரலில் இட்டு இடித்து வைத்துக் கொள்வார்கள். அது கெட்டியாக இருக்கும். 



மோர் சாதத்திற்கும், தோசைக்கும் நல்ல காம்பினேஷன். சூடான சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். 



கொத்துமல்லி குளுமை என்பதால் ஜலதோஷம், இருமல் போன்றவை இருக்கும் பொழுது சாப்பிட வேண்டாம். 


 

44 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! தொடரும் அனைவருக்கும்..
    வல்லிமாவுக்கு குட் ஈவினிங்க்!!!
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை இன்று பானுக்காவின் கொ தொ வா வரேன்...தை அம்மாவாசை ...கொஞ்சம் மெதுவா வரேன் ஆஜர் வைச்சாச்சு..

      கீதா

      நீக்கு
    2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

      நீக்கு
    3. அதே தை மகோதய அமாவாசைதான் எனது தாமதத்துக்கும் காரணம்!

      நீக்கு
  2. yesterday prepared this one. Thanks Banumathi. Will come afterwards Today amavasai velai.

    பதிலளிநீக்கு
  3. இதைத் தண்ணீர் சேர்க்காமலேயே அரைத்தால் சில நாட்கள்/ஒரு மாதமாவது வைத்துக்கொள்ளலாம். நான் கொஞ்சம் கொத்துமல்லியையும் வதக்கிப்பேன். ஈரம் போயிடும்.

    பதிலளிநீக்கு
  4. தொக்கை சுடச் சுடக் கொடுத்திட்டீங்களே. சில சமயம் ஶ்ரீராம் ஆறவச்சுத்தானே வெளியிடுவார்.

    பிறகு வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தது. சூடான சாத்த்தில் நல்லெண்ணெயோட இதனைச் சேர்த்துச் சாப்பிட்டால் எனக்கு துவும் வேணாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லைத்தமிழன்... அதென்ன சுடச்சுட....? மெதுவா வாங்க...

      நீக்கு
    2. ஓ... ஃபோட்டோவில் தேதி பார்த்துச் சொல்கிறீர்கள்!!

      நீக்கு
  5. இட்லியும் கொத்தமல்லிச் சட்னியும் சரியான கூட்டணி... அதிகமாக இரண்டு இட்லிகள் சாப்பிடலாம்!..

    கொத்தமல்லி உடலுக்கு மிகவும் நல்லது.. எளிய செய்முறையில் மனம் கவர்ந்த ஒன்று.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை சார்... இது சட்னி இல்லை... தொக்கு. ஓரிரு நாட்களில் செஞ்சு பார்த்திடுங்க

      நீக்கு
    2. படித்ததென்னவோ கொத்தமல்லித் தொக்கு தான்...

      கருத்துரையிடும் போது சட்னியாகி விட்டது...

      நேற்று net pack முடிந்து விட்டது..
      எல்லாம் அடுத்தடுத்த நிலைக்குப் போய் விட்டார்கள்.. என்னிடம் இன்னும் பழங்கால router தான்..

      அதற்கு charge ஏஏற்றுவதற்காக 35 + 35 கி.மீ தொலைவுக்குச் செந்று வந்தேன்... இரவு 11 மணி ஆகி விட்டது.. திரும்ப 3.30 க்கு எழுந்து
      எனது பதிவை ஒழுங்கு செய்து வெளியிட்டு விட்டு எ.பிக்கு வந்தேன்..

      கொத்தமல்லி தொக்கு- இப்படியும் கதையின் தலைப்பு.. ஆகா என்று இருந்தது.. படிக்கும் போது தான் இன்று திங்கக் கிழமை நினைவுக்கு வந்தது...

      இன்னும் store ஒழுங்காக வில்லை.. அதற்குள் அந்தக் கணக்கு இந்தக் கணக்கு என்று குடைச்சல்...

      எல்லாம் அபிராமியின் செயல் என்று நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன...

      நீக்கு
    3. பதிவை ஒழுங்காப் படிக்காம கருத்து சொல்ல வந்துட்டதா யாரும் நெனைக்க மாட்டீங்க..ந்னு எனக்குத் தெரியும்...

      நீக்கு
  6. இடித்து வைத்துக்கொள்வது இன்னும் யம்மி. மோர் சாதம், அடை, தோசைக்கு அட்டஹாசமான காம்பினேஷன்

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம் அனைவருக்கும்.

    சகோதரி பானுமதியின் கொத்தமல்லி தொக்கு செய்முறை படங்களுடன் அருமையாய் வந்துள்ளது. நானும் இப்படித்தான் செய்வேன். ஆனால் மறுபடியும் அரைத்ததை வதக்கினதில்லை. இனி இம்முறையில் செய்து பார்க்கிறேன்.அன்றே உபயோகித்து காலிசெய்து விடுதென்றால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைக்கலாம். இரு தினங்களுக்கு வைத்து கொண்டால் கொத்தமல்லியின் ஈரத்திலேயே கெட்டியாய் அரைத்து விட்டால் நன்றாக இருக்கும். ஆனாலும் உரலில் இடித்து நம் அம்மா காலத்தில் கு. சா. பெ இல்லாமலேயே வாரங்களுக்கும் மேலாக வைத்திருந்த நினைவுகளும் வருகின்றன. சகோதரியின் செய்முறை மிகவும் நன்றாக இருந்தது. பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் வதக்கிதான் தொக்கு செய்வோம். நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. //கொத்தமல்லி தொக்கு செய்முறை படங்களுடன் அருமையாய் வந்துள்ளது.// படங்களை நான் அட்டாச்மெண்ட் ஆக இணைத்து அனுப்பி விடுவேன். அவைகளை பொருத்தமான இடத்தில் போட்டு வெளியிடும் ஸ்ரீராமுக்கு நன்றி.

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம்..
    பானுமா வெகு அழகாகச் செய்திருக்கிறீர்கள்.
    நான்
    கொத்துமல்லியும் சேர்த்தே வதக்கி,
    தண்ணீர் விடாமல் ட்ரை மிக்சியில் ககரவென்று அரைத்துக் கொள்வேன்,.
    சுவையான கொத்துமல்லித் தொக்கு.
    எல்லாவற்றோடும் ஒத்துப் போகும்.

    பதிலளிநீக்கு
  9. புதினா தொக்கு சுவை எனக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  10. அரைத்து விட்டு வதக்கலாம் என்பதைக் குறித்துக் கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  11. இதை 10 நாளைக்கு ஒருமுறை நான் செய்வேன்! அனைவருக்கும் பிடிக்கும். பெருங்காயம் போடுவதில்லை - ஜீரணத்திற்கும் வாசனைககும் கொத்தமல்லியே போதும் என்ற கஞ்சத்தனம்!! :))
    நான் புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து மற்ற சாமான்களோடு அரைத்து விடுவேன்... வறுத்து அரைத்தால் சில சமயங்களில் புளி தனித்தனியே கடிபடுகிறது... ஏதாவது ஐடியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகிமா நானும் பெரும்பாலும் பெருங்காயம் போடுவதில்லை. அது போட்டாலும் கொ ம தான் டாமினேட் செய்யும்..ஹா ஹா ஹா ஹா

      மிகிமா நான் என் மகனுக்கு கொடுத்து விடும் போது புளியை வறுத்துதான் அரைப்பேன். புளியை சின்ன சின்ன இதழ்களாகப் பிரித்துக் கொண்டு வறுத்துவிட்டு ஆறியதும் முதலில் புளியை கல் உப்புடன் போட்டு மிக்ஸியில் பொடித்துக் கொண்டு விடுவேன். அப்புறம் பருப்புகள் போட்டு பொடித்தல். இதுலயே புளி நன்றாகப் பொடிந்துவிடும். அப்புறம் கொ ம அல்லது புதினா....

      கீதா

      நீக்கு
  12. பானுக்கா உங்கள் செய்முறையே தான் நானும் செய்வது. ஆனால் தண்ணீர் அதிகம் சேர்ப்பதில்லை. நீங்க சொல்லிருக்காப்லதான் மத்தபடி. என் மாமியார் சில சமயம் க ப வும் வறுத்துக் கொள்வார். பருப்பு மி வ, பெருங்காயம் எல்லாம் நன்றாகப் பொடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கட் பண்ணி வைத்திருக்கும் கொத்தமல்லியை போட்டு அரைத்து ஸ்பூனால் கிளறி கிளறி விட்டு கெட்டியாக அரைத்து ..நல்லெண்ணையில் தாளித்து வதக்கி கெட்டியாக கொஞ்சம் எண்ணெய் பிரியும் அளவு வதக்கி வைத்துவிடுவது. கொத்தமல்லியையும் கொஞ்சம் வதக்கிக் கொண்டு அரைத்தால் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. அப்புறமும் வதக்குவேன்...மகனுக்கும் செஞ்சு கொடுத்துவிட்டேன்...கரெக்டா அவன் புறப்படற அன்னிக்குத்தான் கொத்துமல்லி தொக்கும் புதினா தொக்கும் செஞ்சேன். அதுவும் எண்ணை வழியாம இருக்க எல்லாம் ட்ரையாக வதக்கி பொடி பண்ணி எண்ணை கொஞ்சமா கலந்து வதக்கி கொடுதேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனால் தண்ணீர் அதிகம் சேர்ப்பதில்லை.// நானும் தண்ணீர் அதிகம் சேர்க்காமல்தான் அரைப்பேன். இந்த முறை தண்ணீர் தெளித்த பொழுது கொஞ்சம் அதிகமாய் விட்டது.

      நீக்கு
  13. கொ தொ பார்த்ததும் நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். அழுகை வந்துவிட்டது. என் அம்மா நினைவு. மிக மிக நன்றாகச் செய்வார். சொந்தபந்தங்கள் என் தம்பி எல்லோருக்கும் போகும்.
    என் அம்மா வீட்டில் மிக்ஸியில் அரைத்ததே இல்லை. கல்லுரலில் போட்டு இடித்துதான் செய்வார். நானும் அவருடன் இடித்ததுண்டு. என் அம்மா கொத்தமல்லி சீசனில் வாங்கி வேர் மட்டும் எடுத்துவிட்டு நன்றாகக் கழுவி துணியில் பரத்தி வைத்துவிடுவார். தண்ணீர் அத்தனையும் போன பிறகும் ஈரமில்லாமல் ஒற்றி ஒற்றி எடுத்து சின்ன சின்னதாகக் கட் செய்து கொண்டு முதலில் கொஞ்சம் வாணலியில் நல்லெண்ணை வைத்து இதை அதில் போட்டு பிரட்டி எடுத்துவிடுவார். அப்புறம் பருப்ப, மி வ, கொஞ்சம் பெருங்காயம் வறுத்து உப்பையும், புளியையும் தனிதனியாக வெறும் வாணலியில் பிரட்டி எடுப்பார் எடுத்து இவற்றை எல்லாம், முதலில் உப்பையும் புளியையும் போட்டு இடித்துவிட்டு அப்புறம் பருப்பு, மிவ எல்லாம் போட்டு இடித்துவிட்டு அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக பிரட்டிய கொ ம போட்டு இடித்து இடித்து நல்ல கெட்டியாக கை படாமல் கரண்டியால் எடுத்து பாட்டிலில் அல்லது ப்ளாஸ்டிக் கவரில் போட்டு உள்நாட்டு வெளிநாட்டு உறவுகளுக்குப் போகும். அவர்கள் வரும் போது.... நானும் ஊருக்குச் சென்ற போதெல்லாம் அவருக்கு இடித்துக் கொடுப்பேன். ஆனால் நான் அவருக்கு செஞ்சு கொடுப்பேனே அல்லாமல் அவரிடம் வாங்கவே மாட்டேன். உடம்பாலும் பணத்தாலும் கஷ்டப்பட்டவர் என்பதால். பொடிகளும் போகும்...பலருக்கும். ஆனால் வீட்டில் திட்டு வாங்கிக் கொள்வார். பணம் கஷ்டப்பட்டு வருது...நாமளே கஷ்டப்பட்டுட்டுருக்கோம்..ஊருக்கே விநியோகம் பண்ற என்று அப்பா கோபித்துக் கொள்வார். இன்னும் பல....என்னென்னவோ நினைவுகள்...இன்று கொ தொ பார்த்ததும்...என் அம்மா மாங்கு மாங்குனு நிறைய இடிப்பது...நினைவுக்கு வந்து அழுகையே வந்துவிட்டது...

    சமீபத்தில் கூட என் கஸின்ஸ் எல்லாம் அத்தை மாதிரி/மாமி மாதிரி செய்ய வராதுடி....எவ்வளவு செஞ்சு செஞ்சுகொடுப்பா எங்க எல்லாருக்கும்னு சொல்லிக் கொண்டார்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா! உங்களை வருத்தப்பட வைத்து விட்டேனா?? ஆனால் இன்று அமாவாசையாக இருப்பதால் மூத்தோர்களை நினைவு கூற வேண்டிய தினம், ஏதோ ஒரு வகையில் உங்கள் அம்மாவை நினைவு கூற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளலாமா?

      நீக்கு
    2. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி.

      உங்களைப் போல் எனக்கும் இன்று காலை எ.பியில் கொத்தமல்லி தொக்கைப் பார்த்ததும், எங்கள் அம்மா, பாட்டி நினைவு வந்து கண்கள் தழும்பி விட்டது உங்களுக்கும் அதே நினைவு வந்தது கண்டு உடன் பதிலளிக்கிறேன். எங்கள் பாட்டி அப்படித்தான் கொத்தமல்லி சீசன் வரும் சமயம் நிறைய வாங்கி வந்து மேற்படி சாமான்கள் வறுத்து, அலம்பி நன்றாக காய வைத்த கொத்தமல்லி தழைகளை கெட்டியாக உரலில் இடித்து சிறு சிறு உருண்டைகளாக செய்து பாட்டில் போட்டு வைப்பார்கள். சாதத்தில் போட்டு கலந்தும் சாப்பிடலாம். மோர் சாதத்திற்கு நல்ல துணை. இட்லி தோசைக்கு அப்போது கொஞ்சம் நீர் விட்டு கரைத்து சட்னி மாதிரி செய்தும் தொட்டுக் கொள்ளலாம். அப்போதுள்ள பொருட்களின் தரத்தால், நிறைய நாட்களுக்கு கெட்டு போகாமல் இருக்கும். நாங்கள் அப்போது சமயத்தில் மாலை காப்பி குடிக்கும்போது கூட காரசாரமாக அதை வெறுமனே சாப்பிட்டு விட்டு குடிப்போம். நான் மாடி வீடு அல்லாது கீழ்தளத்தில் குடியிருந்த சமயங்களில் இந்த மாதிரி கொத்தமல்லி துவையல் இடித்து வைத்து கொண்டு உபயோகித்து கொண்டிருந்தேன். மாடி வீடு, தற்போது அடுக்கு மாடி வீடுகளில் வந்த பின் உரலுக்கு எங்கே போவது? உரலை திருமங்கலத்திலேயே விட்டு விட்டு வந்தாகி விட்டது. சின்ன இரும்பு உலக்கை மட்டும் பரணில் தூங்குகிறது. நல்ல மலரும் நினைவுகள். சகோதரி பானுமதி சொல்வது போல் இன்றைய அமாவாசையில் மூத்தோர் நினைவுகளும் கூட.. நன்றி இன்றைய பதிவுக்கு.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. ரொம்ப வீக் ஆயிட்டீங்க கீதா... அதுதான் அடிக்கடி அழுகையில் ஸோக் ஆயிடறீங்க...!!!!

      நீக்கு
  14. நானும் இதே முறையில் செய்வேன் ...எல்லாருக்கும் விருப்பமான உணவு...

    பதிலளிநீக்கு
  15. கொ தொ அல்லது பு தொ மற்றொரு முறை....பருப்புகள் இல்லாமல் கொ ம அல்லது புதினா வை புளி, உப்பு மி வ (அல்லது ப மி போட்டும் செய்யலாம் அதுவும் நன்றாக இருக்கு...) வேண்டும் என்றால் பெருங்காயம் எல்லாம் போட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொண்டுவிட்டு வானலியில் நல்லெண்ணை விட்டு கடுகு மட்டும் தாளித்து அரைத்ததைப் போட்டு கொஞ்சம் மஞ்சப்பொடியும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். கடைசியில் வெறும் வானலியில் வெந்தயத்தை வறுத்து பொடித்து அந்தப் பொடியையும் சேர்த்து வதக்கனும். எண்ணை பிரியும் வரை வதக்கிவிடனும். இந்த டேஸ்டும் அபாரமா இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. தொக்குன்னா தொக்குதான்!
    அதற்குள் கொத்துமல்லியோ
    இஞ்சியோ, தக்காளியோ
    எது உட்கார்ந்திருந்தாலும் சரி..
    தோசைக்குள், அடைக்குள்
    ஆசையாகச் சுருட்டி
    தள்ளிடவேண்டியதுதான் உள்ளே !

    பதிலளிநீக்கு
  17. நான் வதக்கிட்டு அரைப்பேன். அப்பவே சாப்பிடுறதா இருந்தால் தேங்காய் சேர்த்து அரைப்பேன்

    பதிலளிநீக்கு
  18. தொக்கு செய்முறை அருமை. படங்களுடன் படி படியாக சொன்னது அருமை.
    நாங்கள் தண்ணீர் விடாமல், கொத்தமல்லியை கொஞ்சம் எண்ணெயில் வதக்கி இடித்து விடுவோம்.
    அதை தவணபுளி என்போம்.

    பதிலளிநீக்கு
  19. அருமையான கொத்தமல்லித் தொக்கு... நான் இவற்றோடு தேங்காயும் செர்த்து வாட்டி அரைப்பேன்ன் அது சட்னியாம்.. அரைச்சுப் போட்டு வாட்டியிருக்கிறீங்க தேங்காய் சேர்க்காமல் இது தொக்கு..

    எனக்கொரு நண்பி சொன்னா.. பழப்புளியைக் கரைத்து காச்ச வேண்டும்.. கொதித்து வரும்போது, கொத்தமல்லியை குட்டியாக நறுக்கி உப்புடன் இதில் சேர்த்து நன்கு வற்ற விட்டு எடுத்தால் அதுவும் ஒருவகை தொக்கு.. நீண்ட நாள் இருக்கும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!