செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை :  சந்திப்போம்; பிரிவோம்;மீண்டும் சந்திப்போம் 2/3 - ஜீவி 

சந்திப்போம்; பிரிவோம்;மீண்டும் சந்திப்போம்
ஜீவி 
========================================

சென்றவாரம் : -  1/3  (சுட்டி) 

2/3


நாங்கள்  இருந்தது,  திருநின்றவூர்.   இங்கிருந்து காஞ்சீபுரம் பொல்லாத தூரமில்லை.   ஆனால் ஏனோ இதுவரை வர வாய்க்கவில்லை.

வர வேண்டும், வர வேண்டும் என்று  நெடுநாள் காத்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டேன்.  காஞ்சீபுரத்து மண்ணை மிதித்ததுமே ,  உடலெங்கும் 'ஜிவ்'வென்று  மின்சாரம் ஓடி விட்டுப் போனது போன்ற உணர்வு.  "கைலாசநாதா.. வரம் அருளி காப்பாத்துப்பா.." என்று நிமிர்ந்து கோபுர தரிசனம் செய்தேன்.  

கோயில் இருந்த இடம் நகர்ப்புறச் சந்தடியிலிருந்து  விலகி ஒரு கிராமம் மாதிரி இருந்தது.  




கோயிலுக்குள் நுழைவதற்கு முன்னாலேயே திறந்த வெளியில்
மிகப் பெரிய நந்தி இருந்தது.  'கல்லில் செதுக்கப்பட்டது அல்ல;  பிண்டி மணல் என்ற ஒருவகையான பாறை மண்ணால் ஆன நந்தி;  கோயில் முழுக்கவே பிண்டி மணலால் உருவானது தான்'  என்று சொன்னார்கள்.

 பிரகாரம் தாண்டி கோயிலின்  உள்ளே  நுழைகையில்,  எந்தப் பக்கம் சந்நிதி என்று ஒரு நிமிடம் யோசித்துத் தயங்குகையில்,  "சந்நிதிக்குத் தானே?... இந்தப் பக்கம் வாருங்கள்.." என்று குரல் கேட்டுத் திகைத்துத் திரும்பினேன்.




தூய வெள்ளை  வெளேர் கதரில் வேட்டி;  கைவைத்த பனியனோடு, நெற்றி பூரா பட்டை பட்டையாய்  திருநீறு  துலங்க ஒரு பெரியவர். வயது எழுபதுக்கு மேல் நிச்சயம் இருக்கும்.

அவரைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

 "கோயிலில் மனிதர்களைத் தொழலாகாது," என்று என் சைகையைத் திருத்தியவாறே, "என்ன?.. இப்படி வாருங்கள்" என்று  இடப்பக்கமாக அழைத்துச் சென்றார்.  அங்கே சில படிகள் ஏறியதும், தரையோடு தரையாக ஒரு  சதுர திட்டி வாசல்.  தரையில் தவழ்ந்த வாக்கிலேயே தவழ்ந்து, ஒரு மனிதர் நுழைகிற அளவுக்கு அந்தத் திறப்பு இருந்தது.

"உள்ளே போங்கள்," என்று பெரியவர் சொன்னபடிச் செய்தேன்.  உள்ளே தவழ்ந்த வாக்கில் நுழைந்து  சென்றால்,  சந்நிதியை நின்ற வாக்கில் சுற்றி  வருவதற்கு ஏதுவான  ஓர் ஆள் வலம் வரும் அளவுக்கு ஒரு சின்ன பிரகாரம்.  பிரகாரத்தைச் சுற்றி வந்து பிர்மாண்ட லிங்க வடிவில் இருந்த கைலாசநாதரை மனம் குளிர வழிபட்டேன்.  உடல் நெகிழ்வேற்படுத்துகிற மாதிரியான தரிசனம்.

தரிசனம் முடிந்துத் திரும்பிப் பார்த்தால்,  பெரியவரைக் காணோம். அப்பொழுது தான் திட்டி வாசல் வழியே தவழ்ந்து  உள்ளே அவர் வரவில்லை என்கிற நினைவு வந்தது.  'வெளியே இருப்பார்' என்று எண்ணிக் கொண்டே வெளிவருவதற்கு இன்னொரு பக்கம் இருந்த அந்த  சின்ன திறப்பு வழியே தவழ்ந்து வெளி வந்தேன்.  வெளி வந்ததும்,  பெரியவர் இருக்கிறாரா என்று தான் என் கண்கள் தேடின.

சற்று தூரத்தில் பெரியவர் எனக்காகக் காத்திருக்கிற மாதிரி  நின்று கொண்டிருந்தார்.   என்னைப் பார்த்ததும், "திருப்தியாகத் தரிசனம் ஆயிற்றா?" என்று என் கண்களையே உற்று நோக்கிக் கேட்டார். அவர் கேட்டது, "நான் என்ன பதில் சொல்லப் போகிறேன் என்று எதிர்பார்த்து ஆவலுடன் கேட்ட மாதிரி இருந்தது.

"ஆயிற்று, ஐயா..  கண் குளிர கைலாசநாதர் தரிசனம்  கிடைக்கும் பேறு  பெற்றேன், ஐயா.." என்றேன்.  தொடர்ந்து,  "நீங்கள் தரிசனத்திற்கு உள்ளே வரவில்லையா?"  என்றேன்.

"உள்ளே இருந்தேனே?.. நீங்கள் பார்க்கவில்லை?" என்று என்னையே கேட்டார். 

"இல்லையே?" என்று திகைத்தேன்.  "உள்ளே என்னுடன் வந்தவரைப் பார்க்காமல் தான் வந்து விட்டோமோ' என்ற ஐயம் ஏற்பட்டது. 

"உள்ளே உங்களை  நான் பார்த்தேனே?"  என்றார் பெரியவர்.

"அப்படியா?" என்று மீண்டும் திகைத்தேன்.  "உள்ளே தரிசனம் 
செய்யும் பொழுது என்னை மறந்தேன், ஐயா!  எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருந்தது.  இப்பொழுது அவன் குழந்தையான எனக்கு ஒரு குழந்தையைக் கொடுக்க அருள் புரிந்திருக்கிறான், ஐயா!  அவன் தந்த அந்த ஆனந்தத்திலும், அருளிலும் என்னை மறந்து  அவன் கருணையில் லயித்து விட்டேன்.." என்றேன்.




பெரியவர் புன்னகையுடன் மெய்சிலிர்த்த உணர்வுடன் பேசும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.  மெல்ல சிரித்து விட்டுச் சொன்னார். "அப்படியா?..  குழந்தை பாக்கியம் கொடுத்திருக்கிறாரா?.. அவர் அருளுக்கென்ன குறைச்சல்?" என்றவர், "உங்களுக்கு எந்த ஊர்?" என்று கேட்டார்.

"திருநின்றவூர் ஐயா..  சென்னைக்கு அருகில் இருக்கிறது.."

"அடேடே!  பூசலார் ஊராச்சே!" என்றார் பெரியவர்.

எனக்குப்  புரியவில்லை.  "எந்தப் பூசலார்?..  உங்களுக்கு நண்பரா?"

"அதற்கும் மேலே.  உயிருக்கு உயிரானவன்.  ஒரு தடவை அவன் அழைத்து உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்.  அது நடந்து பல வருஷங்கள் ஆயிற்று.  இருந்தும் நன்கு நினைவிலிருக்கிறது."

"அப்படியா, ஐயா?  ஒருக்கால், அந்தப் பெரியவரை என்  அம்மாவுக்குத் தெரிந்திருக்கலாம்.  என் தாயார் பிறந்தது, என் தந்தையை மணந்தது எல்லாம் அந்த ஊரில் தான்.  அதனால், அம்மாவுக்குத் தெரிந்திருக்கலாம்.."

"நிச்சயம் தெரிந்திருக்கும்.  ஊருக்குப் போனதும் அவரிடம் கேட்டுப் பாருங்கள்.." என்றார்.

"கண்டிப்பாக, ஐயா.   நின்று  கொண்டு பேசுகிறீர்களே?..   இங்கு தாங்கள்  உட்காரலாமா?"

"செய்யலாமே!"  என்ற பெரியவர், என் கைபற்றி, தோள் பிடித்து ஒரு தூணின் கீழ் அமர்ந்தார்.     அவர்  ஸ்பரிசம் பட்டதும் உடலே சிலிர்க்கிற மாதிரியான உணர்வேற்பட்டது எனக்கு. 

பெரியவரே தொடர்ந்தார்.  "அவன்  என்ன செஞ்சான், தெரியுமா?..  திருநின்றவூருக்கு வா,வா என்று நச்சரித்து என்னை  பல தடவை கூப்பிட்டுக் கொண்டே இருந்தான்.  அவன் அழைப்பை தட்ட முடியாத அளவுக்கு எனக்கும் அவன் மேல் பிரியம்.  ஒரு  நாள் அவனுக்காக திருநின்றவூருக்குக் கிளம்பி விட்டேன்.  என்னைக் கண்டதும் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை, அவனுக்கு.."

ஒரு நாள் அவனுடன் இருந்து விட்டு வரலாம் என்றால் 'இங்கேயே தங்கிவிடு;  போகாதே'  என்றான்.  நீங்களே சொல்லுங்கள், எவ்வளவு வேலை எனக்கிருக்கிறது?..  அவனோடேயே,  திருநின்றவூரிலேயே இருக்க வேண்டுமானால் எப்படி?"

அந்த  இரண்டு பெரியவர்களிடமும் நிலவும் நட்பின் ஆழத்தை நினைத்து நெஞ்சுக்குள் வியந்தபடி, "பிறகு என்ன செய்தீர்கள்?" என்று கதை கேட்கும் ஆவலில் கேட்டேன்.

"என்ன செஞ்சேனாவது?..  தீர்மானமாக அவன்  கிட்டே சொல்லி விட்டேன்.  இதோ பார்,  எனக்கு ஏகப்பட்ட ஜோலி.  உன்னோடேயே இருக்க முடியுமா?" என்று அவனிடம் கேட்டேன்.

கோயிலில் அதிக கூட்டமில்லை.  நாலைந்து வெளிநாட்டு டூரிஸ்ட்கள்  காமராவும் கையுமாக வெளிப்புறமும் உள்ளேயும் அலைபாய்ந்து கொண்டிருந்தார்கள்.  நாங்களும் எழுந்து விட்டோம்.

பெரியவரே தொடர்ந்தார்: "அவனுக்கு மிகுந்த ஏக்கமாகப் போய் விட்டது.  என்னைப் பிரியவே அவனுக்கு மனமில்லை.  பரிதாபமாக என்னையே பார்த்தான்.  கடைசியில் அவனைத் தேற்றும்படி ஆகிவிட்டது.  உன் நினைப்பில்,  நெஞ்சில் தான் நான் எப்பொழுதும் இருக்கிறேனே?....  அப்படி இருக்கும் பொழுது நமக்குள் பிரிவேது..   'பிரிவு' என்று நீ நினைப்பதெல்லாம் பொய்யானது..  நானும் நீயும் ஒன்றுதானேப்பா.." என்று அவனைத்  தேற்றினேன்.  கடைசியில் சமாதானம் ஆனவன் மாதிரி, 'ஆமாம்.. என் நெஞ்சில் உன்னுடைய  நினைவுகளாய் நீயே குடிகொண்டிருக்கும் பொழுது நமக்குள் பிரிவேது?' என்று பிரியா விடை கொடுத்தான்.




பேசிக் கொண்டே கோயிலின் உண்டியல் பக்கம் வந்து விட்டோம். உண்டியலைப் பார்த்ததும் தான், 'காசை அதில் போட்டுடு' என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது.   பெரியவரிடம் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்ததில் எல்லாவற்றையும் மறந்திருக்கிறேன்.

உண்டியலுக்குப் பக்கத்தில் வந்ததும், "ஓரு நிமிஷம்.." என்று சொல்லி விட்டு,  சட்டைப் பையில் கை விட்டேன்.

பகீரென்றது.


- தொடரும் -

50 கருத்துகள்:

  1. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. அருமை... கதையோடு கதையாக
    திருக்கோயில் தரிசனம்... பூசலார் புராணம்...

    மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  3. மனம் மேகவெளியில் பறப்பது போல் இருக்கிறது...

    மனமே.. மனமே..
    சொல் மனமே!..
    இன்றைக்கு ஏனிந்த
    ஆனந்தமே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கு ஏனிந்த
      ஆனந்தமே! அது
      என்றைக்கும் இருக்கட்டும்
      இறைவன் துணையிலேயே!

      நீக்கு
  4. நமக்குள் பிரிவேது..
    நம்மிடையே பிரிவு என்ற
    சொல் தான் ஏது!..

    உனக்குள் நானாக
    எனக்குள் நீயாக...
    அன்பே வழி காட்டும்
    ஜோதியாக
    நமக்குள் பிரிவு
    என்பது ஏது!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், துரை ஐயா! ஒன்றில் ஒன்றாய் முகிழ்த்திருக்கும் பொழுது பிரிவு என்பது மாயை தான்!

      நீக்கு
  5. நீயும் நானும்
    எப்போது பிரிந்திருந்தோம்?..
    இப்போது மீண்டும்
    நம்மை நாம் சந்திப்பதற்கு!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த எண்ணம் மனசில் ஊன்றி செயல்பட்டால் அதை விட பெரிய பேறு வேறு ஏது?.. தொடர் வருகைக்கு நன்றி, ஐயா.

      நீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    கதை அருமையாக செல்கிறது. கோவில் படங்களும்,அதனைப் பற்றிய விபரங்களும், பக்திப் பரவசமுமாக கதை நன்றாக உள்ளது. அடுத்த பகுதிக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன். நல்லதொரு கதையை அற்புதமாக நகர்ந்திச் செல்லும் ஜீவி சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, சகோதரி! அடுத்த பகுதியில் மனம் நிறைந்து விடும்.
      கதை நன்றாக இருக்கிறது என்று நீங்கள் அனுபவித்துச் சொன்னதில் எனக்கு அத்தனை சந்தோஷம்! நன்றி.

      நீக்கு
  7. மிகவும் சுவாரசியமாகச் செல்கிறது. கைலாசனைப் புரிந்துகொள்ளக்கூட முடியாத அப்பாவியா? அந்தக் கைலாசனின் ஒரு துளிதான் அவனுக்குக் குழந்தையாகப் பிறக்கப் போகிறதா? அப்படிப் பார்த்தால் யார்தான் இறைவனின் குழந்தை இல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றும் மூன்று விதமான கேள்விகள்.

      இறைவனின் அருகாமையை யாரால் தான் புரிந்து கொள்ள முடிகிறது?.. அஞ்ஞானம் கண்ணைக் கட்டுகிறதே!

      யார் தான் இறைவனின் குழந்தை இல்லை?.. (சிலருக்கு இல்லை, இல்லவே இல்லை!) நியாயமான கேள்வியைத் தான் எழுப்பியிருக்கிறீர்கள்!

      நீக்கு
  8. கைலாசன் உணவு படைப்பான் கச்சி வரதன் வரம் தருவான் என்பதுதானே பொது வழக்கு. ஆசிரியர் கைலாசன் வரம் தருவான் என ஆரம்பித்திலுக்கிறாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரன், அரி என இரண்டாய், இரண்டையும் ஒன்றாக்கி ஹரிஹரனாய் --- நாம் தானே விதவிதமான பெயரைச் சூட்டியிருக்கிறோம்? பெயரில் என்ன இருக்கிறது என்று ஒரு சாராரும், பெயரில் தான் எல்லாமுமிருக்கிறது என்று இன்னொரு சாராரும்..

      நீக்கு
  9. இந்தவாரம் கதைப்பக்கம் ஒதுங்காமல் பூசலாரையும் காஞ்சி மன்னனையும் சுற்றியே கதை வருகிறதே.

    இதை எப்படி அடுத்த வாரத்தில் முடிக்க இயலும்?

    நல்ல தொடராக நீட்டியிருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்பம், நடு, முடிவு என்று எல்லாமும் ஒன்று சேரும் பொழுது ஒரு உரு கிடைத்து விடும், நெல்லை.. :}}

      வாசித்த பொழுது என்னன்ன உணர்வு ஏற்பட்டதோ, அவற்றை எல்லாம் அழகாய் எழுத்தில் வடித்த சான்றாண்மைக்கு நன்றி, நெல்லை.

      நீக்கு
  10. சென்ற வாரக் கதைப் பகுதியையும் இந்த வாரக் கதைப் பகுதியையும் ஒன்றாக இப்போதுதான் படித்தேன். நான் சொல்ல நினைத்த கருத்துகளை எல்லாம் மேலே நம் நண்பர்கள் சொல்லிவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது என்ன புது விதமா இருக்கு? மேடைப் பேச்சாளர்களில் சிலர், நான் சொல்லவந்த கருத்துக்களை எனக்கு முன்பாகப் பேசியவர்கள் குறிப்பிட்டுவிட்டபடியால் என்று ஆரம்பிப்பாங்க. அவை என்ன என்ன கருத்துகள் என்று பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்போர் குழம்புவாங்க.

      தான் கேஜிஜி சார் என்ன என்ன பின்னூட்டங்களை அவர் கருத்துன்னு சொல்றார் எனத் தெரியாம குழம்பிப்போயிருக்கேன்

      நீக்கு
    2. இதையும் சொல்ல நினைத்தேன்!

      நீக்கு
    3. கெளதமன் சார்! நீங்கள் படித்த சென்ற வாரப்பகுதிக்கு ஒரு லிங்க் இங்கே கொடுத்திருந்திருந்தால், இந்தப் பகுதிக்கு மட்டும் வந்தவர்களுக்கு சென்ற பகுதியையும் வாசிக்க செளகரியமாக இருந்திருக்குமே என்ற ஒரு நினைப்பும் மனசில் ஓடியது!...

      நீக்கு
    4. //மேடைப் பேச்சாளர்களில் சிலர்..... //

      ஹஹாஹஹா.. குறும்புக்குப் பெயர் தான் முரளியோ! :))

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்!

    பதிலளிநீக்கு
  12. பெரியவர் வந்தவுடன் அவர் சொல்ல போகும் விஷ்யங்கள் அடுத்து அடுத்து நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. முன்பு ரசித்து படித்த கதை. பூசலநாயனார் பற்றி அம்மாவிடம் கேட்டு பார் என்றதும் நான் முன்பு பின்னூட்டம் என்ன போட்டேன் என்று படிக்க ஆவல் வந்து விட்டது.

    பணத்தை காண்மல் போக வைத்து அவர் விளையாடும் திருவிளையாடலை காண ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நினைவுகள் மனசில் தூங்கிக் கொண்டு தான் இருக்கின்றன.. லேசாக உசுப்பியதும், பட் பட்டென்று செயலூக்க்த்தில் ஒன்றிற்கு ஒன்று கனக்டிவிட்டி ஏற்படுத்திக் கொள்ளும் அற்புதம், இறைவன் தந்த வரம் தான்!

      'ஆடல் காணிரோ? விளையாடல் காணீரோ?.. திருவிளையாடல் காணீரோ?' - என்று மதுரை வீரன் படத்தில்
      நாட்டியப் பேரொளியின் நடனமும் பாடலும் நினைவுக்கு வந்தன, கோமதிம்மா. :}}

      அடுத்த பகுதியில் இந்தக் கதை பற்றிய உங்கள் எல்லா நினைவுகளும் சங்கமித்து விடும்!..

      நீக்கு
  13. என்னைப் பிரியவே அவனுக்கு மனமில்லை. பரிதாபமாக என்னையே பார்த்தான். கடைசியில் அவனைத் தேற்றும்படி ஆகிவிட்டது. உன் நினைப்பில், நெஞ்சில் தான் நான் எப்பொழுதும் இருக்கிறேனே?.... அப்படி இருக்கும் பொழுது நமக்குள் பிரிவேது.. 'பிரிவு' என்று நீ நினைப்பதெல்லாம் பொய்யானது.. நானும் நீயும் ஒன்றுதானேப்பா.." என்று அவனைத் தேற்றினேன். கடைசியில் சமாதானம் ஆனவன் மாதிரி, 'ஆமாம்.. என் நெஞ்சில் உன்னுடைய நினைவுகளாய் நீயே குடிகொண்டிருக்கும் பொழுது நமக்குள் பிரிவேது?' என்று பிரியா விடை கொடுத்தான்.///////இனிய காலை வணக்கம் அனைவருக்கும் அனுபூதி என்று இதைத்தான் சொல்வார்களோ.
    ஈசன் அருகில் வந்தும் நமக்குப் புரிவதில்லை.
    வெள்ளை வேட்டி,பனியன்,விபூதியாக அவர் மனிதனாக வியாபித்து,பூஅலார் கதை வேறு சொல்கிறார்.
    மிக அபூர்வம்.
    ஈசனே உண்டியல் பணத்தையும் ஸ்வீகரித்துக் கொண்டாரோ.
    மிக மிக அருமை.
    கோயில் படங்களும் ,ஒட்டிச் செல்லும் கதையும். மிக நன்றி ஜீவி சார்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவத்தால் அறியும் பட்டறிவு அட்டகாசமான ஒன்று. பசுமரத்தாணி கீறல் போல நிலையாகப் பதிந்து விடும் தான்.
      அதை அழிக்க அதற்கு மாற்றாய் இன்னொரு அனுபூதி என்று
      எது உண்மை என்று புரிந்து கொள்ள முடியாத அவஸ்தையில் தான் மூழ்கிப் போயிருக்கிறோம்..

      வெள்ளை, வேட்டி, பனியன், விபூதியாக -- இந்த கற்பனையே உற்சாகமூட்டுகிறது. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' சிறுகதை படித்திருப்பீர்கள்.

      உண்டியல் பணம்?-- அது ஒரு தனிக்கதை, வல்லிம்மா.

      தொடர்ந்த வாசிப்பனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. இறைவனின் திருவிளையாடல்கள் எஞ்ஞான்றும் அருமை தானே கரந்தையாரே!

      நீக்கு
  15. பதில்கள்
    1. 'பகீரென்றது' என்பதற்கு பதைபதைப்பான இந்த 'அடடா'வா டி.டி.?.. உண்டியலில் போட எடுத்து வந்த பணம் காணவில்லை என்றால் வருத்தமாகத் தான் இருக்கும்.

      நீக்கு
  16. படிச்சேன், கதை முழுவதும் நினைவில் வந்து விட்டது. சரியானு பார்க்க அடுத்த பகுதிக்குக் காத்திருக்கேன். கோமதி மாதிரி எனக்கும் முந்தைய வெளியீட்டின்போது என்ன பதில் சொன்னேன் என யோசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையா?.. சரியா போச்சு.. என் உணர்வுகளல்லவோ எழுத்துக்களாகியிருக்கிறது?..

      அடுத்த பகுதி படித்ததும் இது கற்பனையில் விளைந்த கதையல்ல என்று உங்கள் மனசில் பட்டால் அதை நீங்களே சொன்னால், சரி.. சொல்லுவீர்கள், தானே?...

      நீக்கு
  17. நான் இதுவரை செல்லாத, கண்டிப்பாக தரிசிக்க விரு்ம்பும் தலங்களில் கைலாசநாதர் கோவிலும் ஒன்று. உங்கள் கதையைப் படித்த பிறகு சீக்கிரம் தரிசிக்க வேண்டும் என்று தோ்ன்றுகிறது. சென்ற வாரத்தோடு இதை எப்படி இணைக்கப் போகிறீர்கள் என்று நெ.த.வைப் போலவே எனக்கும் சந்தேகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் இறங்கிக் கோண்டீர்கள் என்றால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தான் இருக்கிறது.
      ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா என்று நிறைய உண்டு. இந்தக் கோயிலுக்கு வெளிநாட்டு டூரிஸ்டுகள் நிறைய விஜயம் செய்கிறார்கள். இந்திய தொல்பொருள் துறையின் பராமரிப்பின் கீழ் இப்பொழுது இருக்கிறது.

      கி.பி. 700 வாக்கில் பல்லவ மன்னன் இராஜசிம்மனால் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்றாம் மகேந்திரவர்மன் காலம் வரை தொடர்ந்திருக்கிறது. கைலாச நாதர் சன்னதிக்கு வெளியே தரையில் தவழ்ந்தவாறே ஒரு ஆள் நுழையக் கூடிய அளைவிலான துவாரத்திற்குள் நுழைந்து சென்று உள்ளே போனதும் நின்றவாக்கில் பிரகாரத்தை சுற்றி வந்து இலிங்க வடிவிலான சிவபெருமானை தரிசித்து அதே மாதிரி தவழ்ந்த வாக்கில் வெளிப்பக்கம் வருவது எந்தக் கோயிலிலும் நாம் உணர்ந்திராத ஒரு தனி அனுபவமாக நிச்சயம் இருக்கும்.

      பிண்டி மணலால் உருவான இந்தக் கோயில் கட்டுமானத்தை காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோயிலும் காணலாம்.

      பின்னூட்டங்களைப் படித்து விடுவது நல்ல பழக்கம். வாசித்த ஒவ்வொருவரும் என்ன சொல்கிறார்கள் என்றூ வாசிப்பதே தனி அனுபவம் தான். ஒருவருக்குத் தோன்றுவது இன்னொருவருக்குத் தோன்றுவதில்லை. ஒன்று போலவே இன்னொருவர் அனுபவமும் இருப்பதில்லை. இருந்தாலும் சிலர் சொல்வது, 'அட, சரி தானே!' என்று தோன்றும்.
      நெல்லை சொன்னது உங்களுக்கு அப்படித் தோன்றியிருப்பதற்குக் காரணம், அவர் யோசித்தது வலுவாக உங்கள் மனசில் பதிந்து விட்டது.

      இப்பொழுது சொல்லுங்கள்: இந்த வார வாசிப்பை சென்ற வார
      பகுதியோடு இணைத்துத் தான் ஆக வேண்டுமா?..

      இல்லை, இணைக்காமலேயே கதையை நிறைவு செய்ய முடியுமா?..

      எப்படி உங்கள் யோசிப்பு இருப்பினும் இரண்டு முறையிலும் எந்த முறை சாத்தியப்பட்டிருக்கிறது என்று அடுத்த வாரம் இறுதிப் பகுதியில் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சரியா?

      வாசித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, பா.வெ.

      நீக்கு
    2. ஜீவி சார்.. தொடர்கதை (தொடரும் என்பதற்கு முன்பு சஸ்பென்ஸ் வைப்பது) ஒரு வகை. ஒவ்வொரு பகுதியும் தனித்துப் படிக்கும்படி எழுதுவது ஒரு வகை.

      இன்றைய பகுதி உங்கள் அனுபவம் என்றுதான் தோன்றியது. கோவில் அனுபவத்தை கதையில் எப்படி உபயோகிக்கப் போகிறீர்கள் என அறியக் காத்திருக்கிறேன்.

      நீக்கு
    3. இன்றைய பகுதி என் அனுபவம் இல்லை, நெல்லை. ஒரு பெரும் தத்துவத்தை கலா ரூபமாக விளக்குவதற்கான ஒரு முயற்சி தான் இது.

      அடுத்த பகுதியில் நீங்கள் நினைத்தால் பின்னூட்டப் பகுதியில் நாம் நிறைய பேசலாம்.

      நீக்கு
    4. வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் வெளிவந்த பொழுது அடுத்த இதழை வாசகர்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற தூண்டுதலுக்காக தொடர்கதைகளை வாராவாரம் அப்படி எதிர்பார்ப்புடன் முடிப்பது வழக்கமாக ஆயிற்று. இந்த வார இந்தப் பகுதி முடிவு போல.

      இதனாலேயே தொடர்கதைகளை நாவல் இல்லை என்ற வரட்டு வாதத்தை முன் வைத்தார் ஜெயமோகன் அவர்கள்.

      நீக்கு
  18. திரு நின்றவூர் என்றதும் என்னைப் பெத்த தாயாரும், எட்டடி ராமரும் நினைவுக்கு
    வந்தனர்.

    பதிலளிநீக்கு
  19. மதுராந்தகம் போலவே திருநின்றவூரிலும் ஏரிகாத்த ராமர் என்று கேள்விப் பட்டிருக்கிறேன, வல்லிம்மா. தாயாரைப் பற்றிச் சொல்லுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் திருநின்ற ஊர் சென்றிருந்ததைப் பற்றி எழுதியபோது வல்லிம்மா, பூசலார் கோவிலில் நிறைமாத உருவில் சீதை சிற்பம் பற்றிச் சொன்ன நினைவு.

      எந்த ஊரிலும் ஆஞ்சநேயர் கோவில் அல்லது சன்னதி இருந்தால் அதன் எதிரே எங்காவது ராமர் கோவில் அல்லது சன்னிதியும் அதுபோல ராமர் கோவிலின் முன் ஆஞ்சநேயர் சன்னிதி இருப்பதையும் விதிவிலக்குகள் இல்லாமல் கண்டிருக்கிறேன்.

      நீங்கள் அவதானித்திருக்கிறீர்களா?

      நீக்கு
    2. ஸ்ரீராமரை துதிக்கும் பொழுது ஆஞ்சனேயரையும் ஸ்ரீராமரிடமிருந்து பிரிந்து விடாமல் சேர்த்துத் துதிப்பது என் வழக்கம்.

      'ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்' கம்ப ராமாயணப் பாடலில் கூட மனசில் லேசான குறை உண்டு. ஆயிரம் இருந்தும் ஆஞ்சநேயரின் நெருக்கம் கூடுதலான சொந்தத்தை ஸ்ரீராமரிடம் ஏற்படுத்தியிருந்தது என்று மனதைத் தேற்றிக் கொள்வேன்.

      நீக்கு
  20. இந்தப்பதிவை படிட்தவுடன் சுவிட்ச் போட்டதுபோல் ஏதோ ஒன்று மனதில் ஓடியது இந்தக்கதை படித்தமத்ரி இருக்கிறது கைலாசநாதர் கோவில் அங்கு வந்த பெரியவர் எலோரும் நினவில் நிழலாடினார்கள்கைலாச நாதர் கோவிலில் பிரகாரத்தின் ஒர் பக்கம்சுமார் இரண்டடி உயரத்தில் இரண்டுக்கு இரண்டு அடியில் அல்லடுஇன்னும்சிரிதாய் ஒருஒட்டை இருக்கும் அதில் இறங்கி சுற்றினால் அதுஇன்னொரு பக்கம் திறக்கும் அதைச் சுற்றி வந்தால் பிறவாமை கிடைக்குமென்பார்கள் நான் சுற்றி இருக்கிறேன் என் உறவினர் ஒருவ்ர் உள்ளே செல்லவும்முடியாமல் வெளியே செல்லவும் முடுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டார் என்னை மிகவும் நொந்து கொண்டார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இது பற்றி எழுதியிருந்தது அப்படியே என் நினைவிலும் இருக்கிறது, ஜிஎம்பீ ஐயா.

      நீக்கு
  21. எழுத்துப் பிழைகள் அதிகம் மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண் பார்வை குறைவு பட்டதில் என்னிடமும் இந்தக் குறை மண்டியிருக்கிறது, ஐயா.

      நீக்கு
  22. பிண்டி மணலில் கோவில். காஞ்சி செல்லும் ஆசை உண்டு - நின்று நிதானமாக தரிசிக்க வாய்ப்பு இது வரை கிடைக்கவில்லை. ஓரிரு முறை அலுவல் சம்பந்தமாகச் சென்றதுண்டு.

    அடடா... சட்டைப்பை காலியா? மேலும் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  23. வாருங்கள், வெங்கட்!

    உண்டியலில் போட எடுத்து வந்த பணம் இல்லை என்றால் யாருக்குத் தான் அதிர்ச்சியாக இருக்காது?.. அதுவும் கதாநாயகன் சூது வாது அறியாத இளம் வயதினன். அம்மா கைப்பிள்ளை. அம்மா சொன்னதை கோட்டை விட்டு விட்ட ஏமாளித்தனமும் சேர பணம் காணவில்லை என்ற நிதர்சன உண்மை மூளைச் செல்களில் பதிய பகீர் என்று ஆகிப் போகிறது.

    இறைவன் இருக்கிறான்.. வாழ்க்கையில் அவ்வளவு அடிபடாத அந்த வாலிபனுக்கு வழி காட்டுவான் என்ற நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது..

    தொடருங்கள். அடுத்த பகுதியில் என்ன நடக்கப் போகிறது என்று தெரிந்து விடும்.

    பதிலளிநீக்கு
  24. கதை நன்கு செல்கிறது. ஆவலுடன் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. சரியான தருணத்தில் வந்திருக்கிறீர்கள், மாதேவி. இது வழக்கமாக நாம் குறிப்படுவது போன்ற கதை அல்ல என்பது அடுத்த பகுதியில் உங்களுக்குப் புரிந்து விடும். தொடர்ந்து வாசித்து விட்டு சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!