புதன், 12 பிப்ரவரி, 2020

புதன் 200212 :: உங்கள் முதல் மாத சம்பளத்தை என்ன செய்தீங்க?


ஏஞ்சல் :    1,சமீபத்தில் உங்கள் மனதை வருத்தப்படுத்திய புகைப்படம் எது ?எனக்கு இந்த படத்தை பார்த்ததும் வேதனை மிஞ்சியது :(https://www.cnet.com/news/amazon-launches-new-alexa-device-for-kids-but-privacy-issues-will-still-scare-some-parents/ 

# அவ்வப்போது அகாரணமாக பொது இடங்களில் அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளும் நபர்களின் படங்கள்.

& வேதனை தரும் விஷயங்கள் எதையும் நான் நினைவில் வைத்திருப்பதில்லை. கனி இருப்பக் காய் கவர்ந்தற்று. 

2, உங்களுக்கு  மேலுள்ள அலெக்ஸ்சா கிடைச்சா அதுகிட்ட என்ன கேள்வி கேட்பீங்க ?

# என் வசமுள்ள அலெக்ஸாவிடம் பொது அறிவுத் தகவல்கள் நிறைய கேட்கிறோம். 

& அலெக்சா ! ஏஞ்சல் கேட்கப்போகும் அடுத்த பத்துக் கேள்விகள் என்ன? அலெக்சா பதில் சொல்லுமா? 


3, உங்கள் முதல் மாத சம்பளத்தை என்ன செய்தீங்க :) ? ஐ மீன் எவ்ளோ சேமிச்சிங்க எவ்ளோ செலவு பண்ணினீங்க ?

* அப்படியே அப்பாவிடம் தந்து விட்டேன்.  அவர் என்ன செய்தார், எவ்வளவு சேமித்தார் என்று கேட்டுக் கொள்ளவில்லை!  எனக்கு செலவுக்கு 130 ரூபாய் தந்தார்!  

# என் முதல் மாத முழு சம்பளம் ரூ 69.   (ஜூன் 1956). சிறு தொகை கூட சேமிக்க வழியில்லாத நிலை.

& நான் வேலையில் சேர்ந்தது டிசம்பர் 9, 1971. முதன்முதலாக தொழிலகத்திலிருந்து எனக்குக் கொடுக்கப்பட்டது ஏழு ரூபாய்கள். முதல் மாத சம்பளம் கொடுக்கப்படுவதற்கு முன்பே, 1971 ஆம் ஆண்டு நான் எடுக்காமல் விட்ட ஒரு நாள் கேஷுவல் லீவுக்கான என்கேஷ்மெண்ட் தொகை அது. அதை செலவழிக்காமல் கவருடனேயே பல வருடங்கள் வைத்திருந்தேன். டிசம்பர் மாத சம்பளமாக ஜனவரி பத்தாம் தேதி,  நூற்று எட்டு ரூபாய் வந்தது என்று ஞாபகம். என் செலவுக்காக ஐம்பது ரூபாய் எடுத்துக்கொண்டு, மீதியை அண்ணனிடம் கொடுத்தேன். ஐம்பது ரூபாயில், முப்பது ரூபாய்தான் செலவு செய்தேன். 
                 
4, இப்போதெல்லாம் எல்லாரும் ஸில்லி (SILLY )விஷயத்துக்குலாம் CHILLI சாப்பிட்ட விளைவை தருகிறார்களே ? இதன் காரணம் என்ன ?இப்போதெல்லாம் பொறுமை என்பது குறைந்துவிட்டதா ?

# நவீன வாழ்க்கை தரும் மன அழுத்தம் ?

& இன்றைய மனிதர்களின் Value system மாறிவிட்டதுதான் காரணமோ? 

5, இன்னமும் நம் சென்னை வீதியில் கல் உப்பு தள்ளு  வண்டியில் விற்கிறார்களா ?

*  எனக்குத் தெரிந்தவரை  இல்லை!

# அவ்வப்போது சைகிளில் கல் உப்பு கூவி விற்கப் படுகிறது.

& வீதியில் தள்ளு  வண்டி விற்பனையாளர்களைப் பார்த்து ரொம்ப வருடங்களாகி விட்டன. சைக்கிளில் கொண்டுவந்து கீரை விற்பவர்களை மட்டும் சில சமயங்களில் பார்த்திருக்கிறேன். 


6, ஒருவரை காதலித்து பின்பு பிரிந்தபின்  அசிங்கப்படுத்தி பொதுவெளியில் பேசுவது எங்க நாட்டு வழக்கம் .பொய்யென்று 
மறுக்க முடியாது யாராலும் :)  பிரிதலையும் புரிதலோடு பிரிந்து  அழுக்கை வீசி அசிங்கப்படுத்தாதது வெளிநாட்டு வழக்கம் .ஒரே உலகில் வாழ்கிறோம் ஏன் இத்தனை வேறுபாடு ?

 # மேற்கத்திய நாட்டு நடப்பு பற்றி ஊகம் மட்டுமே சாத்தியம். 
"காதல்" எனப்படும் சொல்லின் உண்மைப் பொருள் அறியாமலே ஈர்ப்பு வசப்படுவதனால் பற்பல குழப்பங்கள் உண்டாகின்றன. 

7, யாரோ செய்த பாவத்துக்கு சம்பந்தமேயில்லா வேற யாரோ எதுக்கு தண்டனை அனுபவிக்கனும் ? (கொரோனா )

 # யாரோ செய்த பாபம் அல்ல. கிருமிகள் தம் இயல்புப்படி இருப்பதால்தான் பிரச்சினை.

8, பிரக்ஞை என்பது எப்பவுமே நம்முள்  அமைதியா உறங்கி தேவைப்படும் நேரத்தில் எழும்புவதா ? இல்லை திடீரென உதிப்பதா ? 

 # எப்போதும் இருப்பதுதான். திடீர் எதுவுமில்லை. 

& பிரக்ஞை என்றால், consciousness / சுயஉணர்வு என்பதுதானே? அப்படி என்றால், அது நாம் உறங்கும்போது உறங்கி, கண் விழித்த சிலநொடிகளில் திரும்பவும் வந்து நம்மைப் பிடித்துக்கொள்ளும் உணர்வு. 

9, நல்லதும் கெட்டதும் ஒரே உள்ளத்திலிருந்து வெளிப்படுதே ? இது எப்படி சாத்தியம் ?

# ஆசை, சினம், அறிவு, அனுபவம் இவற்றின் வெளிப்பாடு நம் செயல்கள். அவை நல்லதென்றும் அல்லாததென்றும் அடுத்தவர்களால் நிர்ணயிக்கப் படுகின்றன. 
   

இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
இதயம் ஒன்று தான்

பெருமை வரும் சிறுமை வரும் பிறவி ஒன்று தான்
பிறவி ஒன்று தான்

வறுமை வரும் செழுமை வரும் வாழ்க்கை ஒன்று தான்
வாழ்க்கை ஒன்று தான்


இளமை வரும் முதுமை வரும்
உடலும் ஒன்று தான்

தனிமை வரும் துணையும் வரும் பயணம் ஒன்றுதான்
பயணம் ஒன்றுதான்.......   (கவிஞர் கண்ணதாசன்) 


                 
10, உண்மையாகவே பேய் பிசாசு  இருக்காங்களா  ? இல்லை எல்லாம் நம்முடைய மன கணிப்பா ?        உண்மையா பேய் இருந்தா துர்சம்பவங்கள் நடக்கும்போது அவர்கள் மக்களை காப்பாற்றலாமே ? மேலும் மனுஷர்கள் கெட்டது செய்யும்போது நங்குன்னு தலையில் கொட்டி திருத்தலாமே ? இதெல்லாம் அவங்க ஏன் செய்யவில்லை ?

# பேய் பிசாசுகள் உண்மை யெனில் அவை கோடிக்கணக்கில் இருக்க வேண்டும். அப்படியானால் ஏதோ ஓரிரண்டு எங்கோ ஓரிடத்தில் யாரோ ஒருவருக்குக் காணக் கிடைப்பது ஏற்கும்படியாக இல்லை. 

& பேய், பிசாசுகளை - கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர். 
மனுஷர்கள் கெட்டது செய்யும்போது நங்குன்னு தலையில் கொட்டி திருத்தலாமே" பேய் அடிச்சா கெட்டது செய்த மனிதன் உயிரை விட்டு, பேய் ஆகிவிடுவானே! 
     
நெல்லைத்தமிழன் :   

1. நடுநிலை என்று சொல்வதின் உண்மையான அர்த்தம் என்ன? ஜால்ரா பத்திரிகைலாம் நடுநிலை பத்திரிகை என்று கூசாமல் சொல்லிக்கறாங்களே.  

# நடுநிலை என்றால் ஒருபக்கச் சார்பு இன்றி முழு உண்மையை உணர்வதும் உரைப்பதுமாகும்.  செயல்முறையில் பத்திரிகை முதலான ஊடகங்களுக்கு இது அசாத்தியம். 

& நடுநிலை என்றால், யார் பைசா கொடுக்கிறார்களோ அவர்கள் பக்க நியாயத்தை எழுதுவது. 

2. நல்ல அல்லது முக்கிய நாட்களில் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட வேண்டும் என நினைப்பதில் சுயநலம் பொதிந்திருக்கா? 

* இந்தக்காலத்தில் எதிர்பார்ப்பில்லாத பக்தி இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

# சுயநலம் என்பது வெறுக்கத் தக்கதல்ல. அதன் தாக்கம் பிறர்க்கு இடராகாமலிருக்க வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு. 


3. தஞ்சைக்காரங்க என அங்கு வழி வழியாக இருப்பவர்களின் முன்னோர் இராஜராஜ சோழனிடம் பேசி பணி புரிந்த வாய்ப்புக் கொண்டிருந்திருக்கலாம் என எண்ணி பெருமிதப் பட்டிருப்பார்களா?

 # அப்படிப் பார்த்தால் பெருமை கொள்ள எல்லா ஊர்க்காரர்களுக்கும் ஒரு ஹீரோ இருப்பார்.  "காவிரித் தண்ணீர்" எனப் பெருமிதம் பேசுவது போலவே தாமிரவருணி, கோதாவரி பெருமை பேசுபவர்களையும் பார்த்திருக்கிறேன். 

& அரண்மனை வேலை என்பது அந்தக் காலத்து Government Job. அதில் பெருமைகொள்ள என்ன இருக்கு? 

 
பானுமதி வெங்கடேஸ்வரன் : 

உங்களால் எத்தனை மணி நேரம் அல்லது மணித்துளிகள் செல்ஃபோனை தொடாமல் இருக்க முடியும்?(அழைப்பு அல்லது மெசேஜ் வரும் வரை என்று சொன்னால் மைனஸ் மார்க்)

# என் ரெகார்ட் வெறும் ஆறுமணி நேரம்.

& நான் எல்லா நாட்களிலும் இரவு பத்துமணி முதல், காலை நான்கு மணி வரை செல்போனைத் தொடமாட்டேன். 


கதையில் சாப்பாட்டு சமாசாரம் எழுதினால் ரசிப்பீர்களா? லா.ச.ரா.வும், சிவசங்கரியும் இதற்காக நிறைய விமர்சிக்கப்பட்டார்கள்.

*  சிலர் ரசிப்பார்... சிலர் மறுப்பார்... நான் சிரித்துக்கொண்டே ரசிக்கின்றேன்.  கடுப்படிப்பார்...   பகிஷ்கரிப்பார்...  அவர் படித்துக்கொண்டே தாண்டிடுவார்....!

# ரசனையாக "ஏ" சமாசாரங்கள் தவிர  எதுபற்றி எழுதினாலும்ரசிக்கலாம்.
    
ஜீவா, கார்த்தி இந்த இருவரில் லோக்கல் பையன் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறவர் யார்?

*கார்த்தி?

# இதற்கு பதில் சொல்லும் தகுதி எனக்கில்லை.

& இருவரில் கார்த்தி முகத்தில்தான் ரௌடி 'களை' அதிகம். லோக்கல் பையன் பாத்திரத்துக்கு அவர்தான் பொருந்துகிறார்! 

உங்களுக்குப் பிடித்த நட்சத்திரத்தின் படத்திற்கு செல்கிறீர்கள். படமும் நல்ல படம் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட படம். அப்போது உங்கள் அருகில் வந்து அமர்கின்றவர்களில் யார் உங்களை அதிகம் எரிச்சலூட்டுவார்?

a).சிறு குழந்தையை தூக்கிக்கொண்டு வருகிறவர்கள்
b). அந்த நடிகரின் ரசிகர்கள்
c). தண்ணி பார்ட்டி ஆசாமி
d). ஏற்கனவே படத்தை பார்த்து விட்டு பின்னால் வரப்போவதை சொல்லிக்கொண்டே இருப்பவர்.

*   b) தவிர மற்றவர்கள்.

# c மற்றும்  d.

& a, c 

இதுதான் நான் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட மோசமான பாடம் என்கிறார்களே? மோசமான பாடத்தை ஏன் கற்றுக் கொள்ள வேண்டும்? அல்லது இது வார்த்தைப் பிழையோ?

 # வார்த்தைப் பிழைதான். எதிர்கொண்ட மிக மோசமான விஷயம் என்று இருக்க வேண்டும்.


சமையல் தாரகை அதிரா :
     
1. எந்த ஒரு நல்ல விசயத்துக்கும் வலது கால், கையைத்தான் உபயோகிக்க வேண்டும் என்பது ஏன்? நம் உடம்பின் அத்தனை உறுப்புக்களும் நமக்கு முக்கியமானவைதானே..
                        
                                
$ எதிர் வரிசையில் இருப்பவருடன் கை குலுக்க, 
கூட நடப்பவருடன் தோள் இடிக்காமலிருக்க, ஆயுதங்கள் உரசாமலிருக்க...

& இந்த பதிலை, என்னுடைய இடது கை ஆள்காட்டி விரலால் மட்டும் தட்டச்சு செய்திருக்கிறேன். ஏதாவது மாற்றம் தெரிகிறதா? அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இரண்டு கைகளையும் கூடுமானவரை எல்லாவற்றுக்கும் பயன்படுத்துங்கள் என்று. அப்போதான் தன்னம்பிக்கை வளருமாம்! மூளை சுறுசுறுப்பாக இயங்குமாம்! 

ஆனால் நடக்கும்போது மட்டும் ஒரே காலால் நடக்கமுடியாது! 

# இடது கைக்கு என ஒரு விசேஷ ஒதுக்கீடு இருப்பதனால் இருக்கும்.
                  
2. முதலைக் கண்ணீர் வடிக்காதே என்பார்களே.. அப்படி என்றால் என்ன?
                       
                          
$ முதலையின் உடம்பில் சேரும் உப்பு அதன் கண்ணீராக வெளிவருமாம்பார்ப்போருக்கு முதலை அழுவது போலிருந்தாலும் உண்மை அதுவல்லவே..

&
(அனுதாபத்திற்கு உரிய ஒரு விஷயத்தில்) மனப்பூர்வமான வருத்தம் இல்லாமல் வருந்துவதாகக் காட்டி வெளிப்படுத்தும் போலிக் கண்ணீர் அல்லது செய்கை.

# முதலையின் கண்களிலிருந்து கண்ணீர் வருவதில்லை என பலமாக நம்பப் படுவதால் கண்ணீர் கண்டவிடத்து அது அசலாக இருக்க முடியாது என்பதால் இருக்கும்.
                         
3. படிச்சால் போதும் என்கிறார்களே... படிப்பிருந்தால் மட்டும் எல்லோருக்கும் நல்ல வாழ்வு கிடைக்குமோ?
                      $ படித்தால் மட்டும் போதுமா என்றும்தான் கேட்கிறார்கள்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
                      
 # படிச்சா மட்டும் போதுமா என்று தான் பரவலாகக் கேட்பார்கள். நல்வாழ்வை விரும்புபவர் படிக்கக் கூட இல்லை என்றால் சிரம அளவு எகிறும்தானே.
  
4. உப்பு உடலுக்கு நல்லதல்ல என்கின்றனர், ஆனா ஏன் உப்புக்கிருக்கும் மரியாதை, சீனி புளிக்கெல்லாம் இல்லை?
                   $ அமிர்தமே ஆனாலும் அளவுக்கு. மிஞ்சினால் நஞ்சு எனக் கேட்டதில்லையா?

& உப்புக்கு மரியாதையா! நான் சீனிக்குதான் மரியாதை கொடுப்பது வழக்கம்! 

# ஆதியில் கிரேக்கர்கள் படைவீரர் சம்பளத்தை உப்பாக அளந்ததால் ஸாலரி எனப் பட்டதாகச் சொல்கிறார்கள். 
ருசிக்கு முதலிடம் தந்து இனிப்பைத் தவிர்த்தால் உப்பில்லாப் பண்டம் குப்பைக்குப் போகிறது என்பதால் உப்பு மதிக்கப் படுகிறது.

                        
5. நாம் வெளி நாட்டு உணவுகளை நம் வீட்டில் செய்கிறோம், ஆனா அப்படி வெளிநாட்டவர் யாரும் நம் இடியப்பம் புட்டு இட்டலி தோசை எதையும் செய்ததாகவே அறியவில்லையே, ஆனா விரும்பிச் சாப்பிடுகிறார்கள் .. என்ன காரணமாக இருக்கும்?.
                             
$ வெளிநாட்டு உணவுகளில், ஊற வைத்து கல்லுரலில் அரைத்து, புளிக்க வைத்துப் பின் தயரிக்கப்படும் வகைகளில் எத்தனை வீட்டில் செய்கிறீர்கள்? 
இம்மாதிரி அவர்களும் நாம் தயாரிப்பதை விரும்பி சாப்பிடலாம்.

& நம்ம உணவு வகைகள் தயாரிக்கப்படும் process கடினமானது. மனிதனால் மட்டுமே சரியான விகிதத்தில் எல்லாம் கலந்து, கைப் பக்குவமாக, குறைந்த செலவில் செய்ய முடியும். அந்த தொழில் நுணுக்கம் வெளி நாட்டுக்காரர்களால் எளிதில் செய்துவிட முடியாது.

 # இது குறித்து நம் ஊகங்கள் தவறானவையாக இருக்கும்.

                             
6. எப்பவும் அடுத்தவர்களைக் குறை கூறுவதும், அடுத்தவர்கள் பற்றியே பேசுவதுமாக இருப்போர் எப்படிப் பட்டவர்கள்?... அதுவும் ஒருவித மனநிலைக் குறைபாடாக எடுக்கலாமோ?..


    
$ நிச்சயமாக.


& பொதுவாக நாம் என்னவாக இருக்கிறோமோ - அதைத்தான் நாம் மற்றவர்களிடம் பார்க்கிறோம். The observer is the observed. ஏகாந்தன் இதை விளக்கிக் கூறுவார் என்று நினைக்கிறேன். 

துரியோதனனின் பார்வை, தர்மரின் பார்வை - ஒரே உலகத்தை வெவ்வேறு கோணங்களில் பார்த்தார்கள் அல்லவா - அதுபோல. 

# சாதாரண மனித இயல்பின் பிரதிநிதிகள் தாம்.  மனக் குறைபாடெல்லாம் ஏதுமில்லை. டிபிகல் மனித மனம்.

                      ========================================

ஆப்ரஹாம் லிங்கனும், சார்லஸ் டார்வின் (Theory of evolution) இருவருமே பெப்ரவரி பன்னிரெண்டாம் தேதி பிறந்தவர்கள். அது மட்டும் அல்ல, இருவருமே 1809 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்! 

பெப்ரவரி பன்னிரெண்டாம் தேதியில் பிறந்தவர்கள் பலர், தங்கள் துறையில், உச்சத்தைத் தொட்டவர்கள். 

மூன்று என்ற எண் சிறப்பு பெறுவது, வருடத்தின் Feb 19 to March 20, மற்றும் Nov 21 to Dec 20. இந்தக் காலகட்டத்தில் பிறந்தவர்கள் (3,12,21,30) வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொண்டு முன்னுக்கு வருவார்கள். 

மூன்றாம் எண்ணை பிறந்த எண்ணாக கொண்டு பிறந்த பெண்கள் அழகானவர்களாகவும், ஆளுமை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். 

( கொஞ்சம் சிறிய எழுத்துகளில் சொல்கிறேன். மூன்றாம் தேதி பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் மன நலன் பாதிக்கப்பட்டு சற்று துன்புறுவார்கள் என்று சொல்கிறார்கள். சரியா தவறா என்று தெரியவில்லை) 


எந்த மாதத்திலும் 3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள், விடாமுயற்சியுடன் உழைப்பவர்கள். ஆன்மீக நாட்டம் அவர்களிடம் அதிகம் இருக்கும். அவர்களுக்கு எதிரிகள் பலர் இருப்பார்கள். ஆனால், எதிரிகளையும் சமாளித்து, தன் வயப்படுத்திகொள்ளும் சாமர்த்தியம் இவர்களுக்கு உண்டு. 

நீதிக்குத் தலை வணங்குவார்கள். ஆனால் பல சமயங்களில் சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிப்பார்கள். 

வாரத்தின் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகள் இவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள். 

பிறந்த தேதியின் கூட்டுத் தொகை மூன்று, ஆறு, ஒன்பது என்ற எண் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் நல்ல நட்பு கொள்வார்கள். 

====================================

மீண்டும் அடுத்த புதன்கிழமை சந்திப்போம்

====================================110 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. காலை வணக்கம்! அடேடே என்ன அதிசயம்! நெ த முதல் ஆள்!

   நீக்கு
  2. ஆஆஆ இது என்ன அதிரசம் சே..சே டங்கு ஸ்லிப்பாகுதே அதிசயம்.. நெல்லைத்தமிழன் தான் 1ஸ்ட்டூ எனத் தெரிஞ்சிருந்தால் நான் முந்தியிருப்பேனே:)).. ஜம்ப் ஆகலாம் எனத்தான் முழிச்சிருந்தேன் ஆனா என் கொம்பியூட்டர் ஆன்ரி, என் தமிழைத் தூக்கிட்டா திடீரென.. அதனால திரும்ப ரீ ஸ்ராட் பண்ணி வர அலுப்பாக இருந்தமையால் விட்டுப்போட்டு ஸ்லீப்புக்குப் போயிட்டேன்...

   நீக்கு
 2. தள்ளுவண்டி விற்பனையாளர்களை நிறைய நான் இருக்கும் பகுதியில் பார்க்கிறேன். தக்காளி, வெண்டைக்காய், பழங்கள் போன்றவை தனித்தனியான தள்ளுவண்டியில் வருகின்றன. பெரும்பாலும் கிலோ 20 ரூபாய், ஆனால் நல்ல குவாலிட்டி என்று எழுதினால் யாருக்கேனும் காதில் புகை வருமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. FTH daily app மூலம் ஆர்டர் செய்தால், இன்றைய விலை, லோகல் தக்காளி= பதினான்கு ரூபாய், வெண்டைக்காய் கிலோ நாற்பத்தெட்டு ரூபாய். வீட்டுக்கு இலவச டெலிவரி.

   நீக்கு
  2. எனக்கெல்லாம் கண்ணெதிரே பார்த்துப் பொறுக்கி வாங்கினால் தான் திருப்தி. அந்த வகையில் இங்கே வால்மார்ட், விவசாயிகளின் சந்தை, ஸ்ப்ரவுட்ஸ் எனப்படும் பெரிய வணிக வளாகங்கள், (இங்கே எல்லாமே ஆர்கானிக் என்று சொல்லுவதால் விலை அதிகம்) போன்ற இடங்களில் காய்கள், பழங்கள் என எல்லாமே பொறுக்கி வாங்கலாம்.

   நீக்கு
  3. எனக்கும் காய், பழங்கள் போன்றவை நானே வாங்குவதுதான் பிடிக்கும்.

   இங்க டோக்கன் பைல போட்டு பால் வாங்குவது, பிக் பேஸ்கட்லான்லைன்ல ஆர்டர்பண்ணி அதிகாலைல காய்கறி மற்ற எல்லாம் டெலிவரி வாங்கிக்கறது என்றெல்லாம் சிஸ்டம் இருக்கு. அப்படி எல்லாம் பண்ண ஆரம்பித்தால் அங்க இங்க நடப்பதே குறைந்துவிடாதோ?

   நான் எதுக்கும் நடந்து சென்று வாங்குவது எனச் செய்கிறேன்.

   நீக்கு
  4. பசுபசுவென கடைகளில் நேரே பார்த்து வாங்குவதே தனி சுவாரஸ்யம்.  வாங்கவேண்டும் என்று போகாவிட்டாலும்கூட, இது மாதிரி கடைகளை பார்த்தால் தானாக வாங்கத் தோன்றும்!

   நீக்கு
 3. அரண்மணை வேலையில் பெருமை கொள்ள என்ன இருக்கா?- இது என்ன பதில்? ஒருவேளை நீங்களே பெரிய ஆட்களிடம் நேரடியாகப் பணிபெரிந்திருந்தால், நான் எம்ஜிஆரிடம் நேரடியாகப் பேசும் வாய்ப்புகள் பெற்றவன், சின்ன வயதிலிருந்தே முகேஷ் அம்பானியிடம் பணிபுரிந்தேன் என்றெல்லாம் பெருமைகொள்ள மாட்டீர்களா?

  செல்போனின் ஆவரேஜ் உபயோகிக்கும் நேரத்தை 3மணியிலிருந்து 2 மணிக்கும் குறைவாக உபயோகிக்க முயற்சிக்கிறேன். பெரும்பாலும் இரவு 9 மணிக்குமேல் உபயோகிக்க மாட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எம்ஜியார், அம்பானி எல்லோரும் நம்மைப்போன்ற மனிதர்கள்தானே? அவர்களிடம் பணிபுரிந்திருந்தால், அதனால் நமக்கோ அவர்களுக்கோ என்ன பெருமை? பணிபுரிந்தோம். சம்பளம் கொடுத்தார்கள் என்றால் - அதோடு கணக்கு சரி.

   நீக்கு
  2. என்ன இப்படி சப்புனு சொல்லிட்டீங்க. அந்த மாதிரி ஆளுமைகள் அருகில் இருந்து பணி புரிவது சாதாரணமாகப் போயிட்டுதா? அப்புறம் ஏன் செல்ஃபி மோகம், பிரபலங்களோடு படம் எடுத்துக்கறது போன்றதெல்லாம் இருக்கு?

   நீக்கு
  3. நான் காலை ஒரு தரம் அலைபேசியில் முக்கியமான தகவல்கள் இருக்கானு பார்ப்பேன். பின்னர் மதியம் ஒரு தரம். இரவு படுக்கும் முன்னர் ஒருதரம். எட்டரை மணிக்கு அப்புறமா யாரானும் அலைபேசி வழியாக் கூப்பிட்டால் தவிர அலைபேசியைக் காலை வரை எடுப்பதில்லை. ஒரு சிலர் இரவெல்லாம் முகநூல், வாட்சப் சாட்டிங் என்று செய்கிறார்கள். அதெல்லாம் நமக்கு ஒத்து வராத விஷயம். தூக்கம் வராவிட்டால் கூட, நமக்கு "உள்ளத்தில் நல்ல உள்ளம், உறங்காது!" என்று சமாதானம் செய்து கொண்டு படுத்துக் கொண்டே இருப்பேன். :))))

   நீக்கு
  4. இறைவா.... அந்த உறங்காதுக்கு அர்த்தம் வேறயாச்சே. தெரிந்தே தவறுதலா இந்த கீசா மேடம் பயன்படுத்தறாங்களே..

   அது சரி... மோசமான உள்ளங்கள்தாம் உறங்குமா? க.தா தவறா எழுதியிருக்கிறாரே! இது புதன் கேள்வி.

   நீக்கு
  5. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது ..... இது நல்ல சமாதானம்!

   நீக்கு
  6. அதே க.தா 'தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே ' என்றும் பாடினார்!

   நீக்கு
 4. இரவு வரும் பகலும் வரும் .... அருமையான பாடலைக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஶ்ரீராம் இதனை வெள்ளியில் வெளியிடுவாரா?

  பதிலளிநீக்கு
 5. பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 6. கேள்வி பதில்கள் ரசிக்க வைத்தன ஜி

  பதிலளிநீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்தநாள் இனிமை நிறைந்த பொன்னாளாக அமையவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. இன்னமும் விரிவாக படித்து விட்டு பிறகு வருகிறேன் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. எத்தனை.. எத்தனை கோணங்களில் இருந்து கேள்விகள்!...

  அத்தனைக்கும் அழகான பதில்கள்...

  நானெல்லாம் கேள்வி கேட்க சிறப்பு பயிற்சி பெற வேண்டும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆக, பதில் சொல்ல பயிற்சி தேவையில்லை என்கிறீர்கள்!

   நீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 10. கேள்விகள், பதில்கள் எல்லாம் மிக நன்றாக இருக்கிறது.
  பாடல் பகிர்வு அருமை. பிடித்த பாடல்.

  அலெக்சா ! ஏஞ்சல் கேட்கப்போகும் அடுத்த பத்துக் கேள்விகள் என்ன? அலெக்சா பதில் சொல்லுமா?//

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இந்த வாரம் ஸ்ரீராமும் பதில் சொல்லுவதில் பங்கேற்றிருக்கிறாரே! எல்லாக் கேள்விகளும் பதில்களும் ரசிக்கும்படி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 12. இந்த முதல் மாதச் சம்பள விஷயத்தில் எனக்கும் ஓர் அனுபவம். மாதம் முடிந்து சம்பளப்பட்டியலில் கையெழுத்துப் போட்டு வாங்கும் முன்னரே, டி.ஏ. உயர்த்தி இருந்ததை அந்த மாதத்துக்குக் கணக்கிட்டு எனக்குக் கொடுத்தார்கள். 27 ரூ. அதற்குப்பின்னரே மாசச் சம்பளம் 250 ரூ. 25 ரூ பிடித்துக்கொண்டு 225 ரூ கொடுத்தார்கள். வானத்தில் மிதந்தேன். அப்போவே கல்யாணம் ஆகி இருந்ததால் நம்ம ரங்க்ஸுக்கு ஒரு ஃபௌன்டன் பேனா வாங்கிச் சென்று கொடுத்துத் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டேன். பேனா 15 ரூ. அந்தக் காலத்தில் 15 ரூக்கு வெள்ளி, தங்கம் வாங்கலாம்! 10 ரூபாய்க்குப் பிறந்த குழந்தைக்கு மோதிரம் வாங்கிப் போடுவார்கள். :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எது? ஏன்? பத்து ரூபாய்க்குக் குழந்தை பிறந்ததினாலா!

   நீக்கு
  2. // & பொதுவாக நாம் என்னவாக இருக்கிறோமோ - அதைத்தான் நாம் மற்றவர்களிடம் பார்க்கிறோம். The observer is the observed. ஏகாந்தன் இதை விளக்கிக் கூறுவார் என்று நினைக்கிறேன். //

   நீக்கு
  3. பார்த்தேன்.. காலையிலேயே இதை!
   பார்த்துவிட்டு நடக்க ஆரம்பித்தவன், பார்த்துக்கொண்டே நடந்தேன். எதிரிலேதான் எத்தனை, எத்தனை முகங்கள், வடிவங்கள். அனைத்திலும் எதை நாடுகிறேன்? எதைத் தேடுகிறேன்? என்ன காணக் கிடைக்கிறது? அட, இந்த ’நான்’-ஆ.. முகமும் நானே. அகமும் நானே. முன்னும் பின்னும் எல்லாம் நானே..

   சீண்டிவிட்டுவிட்டீர்கள்! என்ன செய்வது, நீளமாகத்தான் போகிறது..தொடர்கிறேன்.

   ’To observe’-என்றால் என்ன என்று புரிகிறதா? - எனக் கேட்கிறார் ஒரு உரையாடலில், ஜேகே (ஜே.கிருஷ்ணமூர்த்தி). அதற்கு ’to be attentive’ என்று பொருள். அதாவது ஒன்றை ஆர்வத்தோடு கவனித்தல். Not trying to concentrate. அது வேறு. To concentrate என்றால் ’உங்கள் மனம் அங்கே இல்லை; உங்கள் முயற்சியினால் அதைப் பிடித்து அங்கே இருத்த நீங்கள் முயற்சிக்கிறீர்கள்’ என்பது அர்த்தம். அது இல்லை இது. இங்கே நாம் சொல்வது ’to be attentive’. to something To be attentive to something pleasing, wonderful, precious.. to lose oneself in, to become one with that.. உன்னதமான ஒன்றை விரும்பி, ஆர்வமாகப் பார்த்தல் அல்லது (as the case may be) கேட்டல், கவனித்தல்.. அதிலேயே ஆழ்ந்துவிடல் எனப் பொருள். To be attentive என்பது இதுதான்.
   இரவும் நிலவும் கலந்த ஒரு பொழுதில் நாம் தனிமையில்.. அப்போது நம் கண்கள் அந்த நிலாவைப் பார்க்கின்றன. ஆஹா என்ன ஒரு அழகு என்கிறது மனம் ஒரு கணம்.. தொடர்ந்து பார்வை, லயிப்பு, பார்வையாளர் தன்னை இழத்தல். ஒரு கட்டத்தில் அந்த நிலவு மட்டுமே இருக்கிறது. வேறேதுமில்லை. பார்த்தவன் எங்கே? நிலவோடு நிலவாகிவிட்டான்..
   ஒரு உன்னத இசையைத் தற்செயலாகக் கேட்க நேர்கையில், நம்மையே மறந்து சில கணங்களாவது அதில் ஆழ்ந்துவிடுகிறோமல்லவா? அப்போது ’தன்னை’ இழந்துவிடல் நிகழ்கிறது. அங்கே இசை ஒன்றே இருந்தது. அனுபவிப்பவர் ’இல்லை’ என்கின்ற ‘வேறொரு’ நிலை.. அப்படி ஒரு அனுபவம் நிகழ்கையில் நாம்
   யூஜி-க்கு (UG Krishnamurthi) ஒருமுறை இந்த அனுபவம் -அக தரிசனம்- bar ஒன்றில் நிகழ்ந்ததாக சொல்லியிருக்கிறார்.

   காலையில் ‘the observer is the observed' ஏன் சிக்கியது? ஜேகே-யைப் படித்துவிட்டுத் தூங்கினீர்களா!

   நீக்கு
  4. அற்புதமான விளக்கம். இதைத்தான் எதிர்பார்த்தேன். மிக்க நன்றி. அப்பப்போ ஜே கே வருவார். நினைவில் எதையாவது உணர்த்தி உள்ளேயே கரைந்து போவார்.

   நீக்கு
  5. ஜேகே பற்றிப் படிச்சதும் என்னோட ஜேகே புத்தகம் படிக்கும் ஆவல் வந்து விட்டது. இந்தியாவுக்கு எப்போப் போவோம்னு இருக்கு.

   ஹிஹிஹி, ஏகாந்தன் சார், என் அப்பா சொந்தக்காரர் குழந்தைக்குப் பத்து ரூபாய்க்கு மோதிரம் வாங்கிப் போட்டார். அந்த நினைவு! ஆனால் வார்த்தைகள் முன்பின்னாக வந்திருக்கு! ஆனாலும்
   யாருமே கவனிக்கலை உங்களைத் தவிர! இஃகி,இஃகி,இஃகி!

   என்னோட பங்குக்கு நானும் ஒண்ணு சொல்லணுமே. நீங்க ஒரு இடத்தில் யு.ஜி. கிருஷ்ணமூர்த்தினு சொல்லி இருக்கீங்க. ஜேகேயைத் தானே! அல்லது அப்படி ஒருத்தர் இருந்தாரா?

   நீக்கு
  6. UGK பற்றி எப்பொழுதோ கேள்விப்பட்டிருக்கிறேன். JK யை விட இருபத்துமூன்று வயது இளையவர் என்று இன்று தெரிந்துகொண்டேன். JK பேச்சுக்கும் UGK பேச்சுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு என்று தெரிந்துகொண்டேன். ஆனால், UGK புத்தகங்கள் எதுவும் இதுவரைப் படித்ததில்லை.

   நீக்கு
  7. நல்லகாலம்.. கேட்டீர்களே சந்தேகத்தை!
   அதிகம் அறியப்படாதவர், இந்த U.G.Krisnamurthi. இவரும் இந்திய ஞானிகள் வரிசையில் வருபவரே - ஆனால் மரபு வழியிலல்ல என்பது கவனிக்கவேண்டியது. பலவருடங்களுக்கு முன் ஒரு நாள் டெல்லியில், ’The Sunday Observer’ எனும் ஆங்கில வார இதழைப் புரட்டிக்கொண்டிருந்தேன். நாட்டின் முக்கியமான அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், வெளிநாட்டு பத்திரிக்கைக்காரர்கள் என எழுதும், டெல்லியின் மதிக்கப்பட்ட ஆங்கில இதழ். (இப்போது நின்றுவிட்டது). அதில் ஒரு பக்கத்தை அந்த ஞாயிறில் புரட்ட.. இந்த யூஜி. 'The anti-guru Guru!' என்பதுபோன்ற தலைப்பு. பெரிய கட்டுரை. அப்போதிலிருந்து தேடினேன். அவர் பெயரில் எதுவும் வெளியானதாக ஒன்றும் தெரியவில்லை. உலகப்புகழ்பெற்ற ‘Penguin’ தங்களின் ‘தத்துவஞானிகள்’ வரிசையில் அப்போதே ஜே.கிருஷ்ணமூர்த்தியைக் கொண்டாடி புத்தகங்கள் வெளியிட்டிருந்தது. யூஜி-யைப்பற்றி ஒன்றும் கிடைக்கவில்லை. அதற்கப்புறம் இங்கும் அங்குமாக சில தகவல்கள் என்பதோடு சரி. 2000-க்குப் பிறகு புத்தகங்கள், அவரது உரையாடல்களின் அடிப்படையில், ஆங்கிலத்திலும், ஸ்பேனிஷிலும் வெளிவந்தன. கண்ணதாசன் பதிப்பகம் தமிழில், ஜேகே-யையும், யூஜி-யையும் (நன்றாக மொழியாக்கம் செய்து -இது மிகவும் முக்கியம் -) வெளியிட்டுள்ளது.

   நீக்கு
  8. தகவல்கள அளித்ததற்கு நன்றி.

   நீக்கு
 13. பதில்கள்
  1. மார்னிங், ஈவினிங் என்று கீசா மேடம் குழப்பறாங்க. 8 மணி நேரம் கழித்து வரேன் என்று எழுதினால் போதாதோ?

   நீக்கு
  2. @நெல்லை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னோட நேரத்தைச் சொல்றேன்னு கூடத் தெரியாமல் இருக்கீங்க! எங்களுக்கு இப்போக் காலம்பர ஏழு மணி ஆக இன்னும் 8 நிமிடங்கள்!

   நீக்கு
  3. நெல்லைக்குத் தெரியாதா! தெரிந்துதான் வம்பு செய்கிறார்!

   நீக்கு
 14. கண்ணதாசன் வரிகளோடு, கேள்விகள் பதில்கள் எல்லாம் அருமை...

  பதிலளிநீக்கு
 15. இனிய நாளுக்கான வாழ்த்துகள்.அத்தனை கேள்விகளும் அருமை. பதில்களும் ரசிக்கும்படி இருந்தன. ஊஞ்சல் சாதனை படைத்திருக்கிறார். கேள்வி கேட்காமலியே வாழப் பழகி விட்ட வளர்ப்பு. சொன்னதைச் செய்தவரகள். மற்றவர்களின் கேள்விகள் சுவையாக இருக்கின்றன!. 30 பற்றிய கணிப்பு, (சின்ன எழுத்துகள்) நிஜமாகியதை இருவரிடம் கண்டிருக்கிறேன.:( எல்லோரும் நலமுடன் இருக்கப் பிரார்ததனைகள்.

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. புரிந்துகொண்டோம். ஊஞ்சல் அல்ல, ஏஞ்சல். ஓ கே !

   நீக்கு
  2. முதல் சம்பளம் சுவை கூட்டியது.ஏழு ரூபாய்க்கு உதவிக்கு ஆள் கிடைத்த காலம்
   இருந்தது. 60 ரூபாய் சம்பளம் சிங்கத்துக்கு 1956 இல்.
   பாட்டியிடம் கொடுத்து தினம் 1 ரூபாய் வாங்கிக் கொள்வாராம்:)
   நான் வேலைக்குப் போனபோது கிடைத்த 400 ரூபாயில்
   மாமியாருக்குப் புடவை வாங்க முடிந்தது. தேவேந்த்ரா ,உமாராணி என்ற
   புடவை ,9 கஜம் 180 ரூபாய்:)

   நீக்கு
 17. சென்ற வாரம் கேள்விகள் கேட்காததை ஈடு கட்டும் விதமாக இன்று கேள்வி மழை பொழிந்து விட்டோம் போலிருக்கிறதோ? எனிவே நல்ல கேள்விகள்,அதற்கு சுவாரஸ்யமான பதில்கள். 

  பதிலளிநீக்கு
 18. நான் என்னுடைய முதல் சம்பளம் ரூ.150இல் என் அக்கா பையனுக்கும், பெண்ணுக்கும் திருச்சி கிருஷ்ணா ரெடிமேட் ஹாலில்(அப்போது திருச்சியில் இருந்ததால்) டிரஸ் வாங்கிக் கொடுத்தேன்.  மஸ்கட் சென்று முதல் சம்பளம் வாங்கிய நாளும் எங்கள் திருமண நாளும் ஒன்றே. சம்பளக்கவரை அப்படியே கணவரிடம் கொடுத்து விட்டேன். அவரிடம் கேட்டு அதிலிருந்து ஸ்வாமிக்கு பணம் எடுத்து வைத்தேன். 

  பதிலளிநீக்கு
 19. //சுயநலம் என்பது வெறுக்கத் தக்கதல்ல. அதன் தாக்கம் பிறர்க்கு இடராகாமலிருக்க வேண்டுமென்பதே எதிர்பார்ப்பு. // கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. சுயநலமாக இருக்க ஆரம்பித்து விட்டால் ஒரு ஸ்டேஜுக்குபி பிறகு நம்முடைய சுயநலம் பிறருக்கு இடர் தருவதை நாம் உணர மாட்டோம். தன் சந்தோஷத்திற்காக சிகரெட் பிடிப்பவர்கள் passive smokers பற்றி நினைத்துப் பார்ப்பார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் புகை பிடிப்பது சுய'நலமா'?

   நீக்கு
  2. புகை பிடிப்பதால் தனக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், டென்ஷன் போகும் இன்னும் என்னென்னவோ கர்மாந்திரம் தனக்கு என்று நம்பித்தானே புகைக்கிறார்கள்? இல்லை சமூகப்பணியாற்றவா?

   நீக்கு
  3. அது சுயத்திற்கு 'நலம்' சேர்க்கின்ற விஷயமா என்றுதான் யோசிக்கிறேன்.

   நீக்கு
  4. //புகை பிடிப்பதால் தனக்கு புத்துணர்ச்சி கிடைக்கும், டென்ஷன் போகும் இன்னும் என்னென்னவோ கர்மாந்திரம் தனக்கு என்று நம்பித்தானே புகைக்கிறார்கள்?//

   உன்னால் முடியும் தம்பியில் ஜனகராஜ் சொல்வார்..."எம் ஜி ஆர் செத்துப் போயிட்டாரேன்னு குடிக்கறேன்பா..."  "ஓ...   அதுக்கு முன்னால குடிச்சதில்லையா?" "அதுக்கு முன்னால காமாராஜ் செத்துப் போயிட்டாருன்னு குடிச்சேன்பா..."

   ஆகா, அவர்களுக்கு ஒரு காரணம் வேண்டும்.  அவ்வளவுதான்!

   நீக்கு
  5. ஹா ஹா ! (அப்போ, 1969 to 1987 அண்ணாதுரை செத்ததுக்கு ஜனகராஜ் வருந்தவில்லையா! )

   நீக்கு
 20. சென்னையில் இருந்தபொழுது அசோக் நகரில் தினமும் காலை ஏழு மணிக்கு ஒருவர் சைக்கிளில் இடியாப்பம் விற்றுக் கொண்டு செல்வார். 'டியாப்ப' என்று ஓசை மட்டும் வரும், அவருடைய வாய் அசையாது, ஓசையும் வித்தியாசமாக இருக்கும்.  பிறகுதான் தெரிந்தது, அவர் தன்னுடைய குரலை பதிவு செய்து, அதை ஒலிக்கச் செய்கிறார் என்று. அவர் மட்டும் இல்லை, பழைய பட்டுப் புடவைகளை மாற்றிக் கொள்ளலாம், சாணை பிடிக்கிறது போன்றவைகளும் யூ.எஸ்.பி. போர்டில்தான் ஒலிக்கின்றன. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே சேச்சே, இங்கே இல்லை, ஸ்ரீரங்கத்திலும் ஒருவர் தினம் காலை "இடியாப்பம்" விற்கிறார். அவர் சொல்லுவதை என்னவெல்லாமோ புரிந்து கொண்டு கடைசியில் அது இடியாப்பம் எனக் கண்டு பிடித்தோம். தள்ளுவண்டிகளில் கொத்துமல்லிக்கட்டுகள், தக்காளிக்குவியல்கள், வெங்காயக்குவியல்கள் என வரும். கூடைக்காரிகளும் வருவார்கள். ஆனால் வளாகத்தில் கீழேயே கார் ஷெட்டுக்கு வெளியே இருப்பார்கள். பாதுகாவலர் இன்டர்காம் மூலம் தெரிவிப்பார். கீழே போய் வாங்கிக்கணும்.

   நீக்கு
  2. பாதுகாவலர் இன்டர்காம் மூலம் தெரிவிப்பார். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்! நான் இருக்கும் குடியிருப்பில் அப்படி எல்லாம் சொல்வதற்கு பாதுகாவலருக்கு அனுமதி இல்லை.

   நீக்கு
  3. எங்கள் ஏரியாவில் ஒருவர் இடியாப்பம்- வடகறி விற்கிறாராம்.   தேங்காய்ப்பாலும் தருகிறாராம்.   இதுவரை கண்ணில் பட்டதில்லை!  மற்றவர்கள் சொல்லக் கேள்வி!

   நீக்கு
  4. முப்பது வருடங்களுக்கு முன்பு, குரோம்பேட்டை பகுதியில் அதிகாலையில், ஒருவர் சைக்கிளில் மெதுவாக வந்தபடி, " புட்டு, இடியாப்போம் " என்று கூவுவார். பார்த்திருக்கிறேன்.

   நீக்கு
  5. நாங்கள் திருமங்கலத்தில் இருந்த போது காலையில் சைக்கிளில், ஒருவர் இப்படித்தான் இடியாப்பம் என்பதை ஏதோ புரியாத மொழியில், விற்றபடி செல்வார். அவர் என்ன விற்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ரொம்ப மாதங்களாகியது.

   /எங்கள் ஏரியாவில் ஒருவர் இடியாப்பம்- வடகறி விற்கிறாராம். தேங்காய்ப்பாலும் தருகிறாராம். இதுவரை கண்ணில் பட்டதில்லை! மற்றவர்கள் சொல்லக் கேள்வி!/

   ஆகா.. கண்ணில் படாமல் விற்கிறாரா? பயமாக உள்ளதே..! ஹா. ஹா. ஹா. "இது எங்க ஏரியா.. உள்ளே வராதே" என்றொரு பாடல் உள்ளது போல் நினைவுக்கு வருகிறது. ஹா. ஹா. ஹா.

   நீக்கு
 21. மூன்றாம் எண் காரர்களைப் பற்றி நீங்கள் சிறிய எழுத்தில் கொடுத்திருப்பது எனக்கு புதிதாக இருக்கிறது. நான் கவனித்த வரையில் மூத்த மகன், மகள், மூத்த மருமகள், ஒரே மகன் போன்றவர்கள் மூன்றாம்  எண் அல்லது ஏழாம் எண் காரர்களாக இருப்பார்கள். மூத்த குழந்தைகளாக இல்லா விட்டாலும் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்கிறவர்களாக இருப்பார்கள். அம்மாவிடம் அதிக அன்பு கொண்டவர்கள். அது மட்டுமல்ல, தாய் நாடு, தாய் மொழி, தன் இனம் இவற்றின் மீதும் பற்று அதிகம் இருக்கும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வழக்கம் போல் பெட்டகத்தில் சேமித்து வைத்துக் கொள்கிறேன். நன்றி.

   நீக்கு
  2. நான் மூன்றாம் எண் இல்லை. ஆனால் மூத்த மருமகள் என்பதோடு சின்ன வயசில் இருந்தே பொறுப்புக்களும் இருந்து வந்தன. பானுமதி சொல்லி இருக்கும் மற்றவையும் அம்மாவிடம் அன்பு, தாய்நாட்டுப் பற்று எல்லாமும் பொருந்துகின்றன. என்ன ஒரு விஷயம்னா சமயத்தில் தேசப்பற்று ஜாஸ்தியாகி ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சுடுது. :)))))

   நீக்கு
  3. // சமயத்தில் தேசப்பற்று ஜாஸ்தியாகி ரத்தம் கொதிக்க ஆரம்பிச்சுடுது. :)))))// தேசப்பற்று ஜாஸ்தி ஆனால், ரத்தம் ஏன் கொதிக்கணும்!

   நீக்கு
  4. இதுக்குக் காலம்பரக் கொடுத்த பதில் போவதற்குள் கணினி சார்ஜ் இல்லாமல் தானாகவே அணைந்து விட்டது! க்ர்ர்ர்ர்ர்ர்! தேசபக்தி ஜாஸ்தியான உணர்ச்சிப் பெருக்கு அதிகம் ஆகி ரத்தம் கொதிக்காதோ? அதைத் தான் சொன்னேன்.

   நீக்கு
 22. இந்த முறை, கேள்விகளும் பதில்களும் என... போஸ்ட் களை கட்டியிருக்கிறது... அனைத்தும் ரசிக்கும்படியாக இருக்கின்றன...

  //
  7, யாரோ செய்த பாவத்துக்கு சம்பந்தமேயில்லா வேற யாரோ எதுக்கு தண்டனை அனுபவிக்கனும் ? (கொரோனா )//

  இதுக்குப் பதில் - நம் கர்மா என வராதோ?... மிக நல்லவர்களாக இருப்பினம் இப்பிறப்பில், ஆனா கொடுமையான துன்பங்களை அனுபவிப்பார்கள்.. அதேபோல கெட்ட காரியங்கள் பல செய்து அடுத்தவர்கள் சாபத்துக்கு ஆளாவார்கள்.. ஆனா மிக நல்ல வாழ்க்கையில் இருப்பார்கள்.. இவை எல்லாம் முன்வினைப் பயன்கள்தானே?.. இது சமயம் சம்பந்தப்பட்டதோ இல்லையெல்லோ?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன் வினைப் பயன் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

   நீக்கு
 23. ஓ இன்று 3ம் நம்பர் சாஸ்திரம்..

  நான் அறிஞ்சு, இவர்கள் அமைதியானவர்களாக இருப்பார்கள், கொஞ்சம் முன்கோபம் வரும்.. பிடிவாதமாகவும் இருப்பார்களாம் ஆனா உள்ளே நிறைய அன்பு இருக்கும்... உதவி மனப்பான்மை மிக்கவர்கள்.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில்கள் ஒவ்வொன்றும் சுவாரஸ்யமாக இருந்தது. அதை விட கருத்துரைகள் இன்னும் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. எல்லாவற்றையும் படித்து பார்க்க (மனதில் ஏற்றிக் கொள்ள) ஒரு நாள் போதாது என தோன்றுகிறது. அவ்வளவு விஷயங்கள்... அழகான கேள்விகளை கேட்டவர்களுக்கும், அருமையான பதில்களை தந்த எ. பி ஆசிரியர்கள் அனைவருக்கும். அதற்கு பொருத்தமாக தத்தம் கருத்துக்களை உணர்த்திச் சென்றவர்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 25. விரிவான கருத்துரைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 26. //மூத்த மருமகள் என்பதோடு சின்ன வயசில் இருந்தே பொறுப்புக்களும் இருந்து வந்தன.//   
  //அம்மாவிடம் அன்பு, தாய்நாட்டுப் பற்று எல்லாமும் பொருந்துகின்றன.// இந்த காரணங்களினால்தான் நீங்கள் மூன்றாம் எண்காரராக இருப்பீர்கள் என்று நினைத்தேன். உங்கள் பிறந்த தேதி, மாதம், வருடம் இவற்றை கூட்டிப் பாருங்கள், மூன்று வந்தாலும் வரலாம், இல்லையென்றால் ஏழு.     

  பதிலளிநீக்கு
 27. கௌதமன் ஜி, அடுத்த வாரத்துக்கான கேள்விகள்.
  1, நினைவுகள்,கனவுகள், நனவுகளுக்குள்
  வாழ்க்கை நகருகிறது. இந்த மூன்றில் எது
  உயர்ந்தது? Practically.

  2, இந்த வயதில் படிப்பு,இந்த வயதில் திருமணம்,
  இந்த வயதில் ஆன்மீகம், என்று வரையிறுப்பது எதனால்.?

  3,இந்த வரையப்பட்ட வளையத்திற்கு வெளியே
  இருப்பவர்களுக்கு மரியாதை மறுக்கப் படுகிறதா?


  பதிலளிநீக்கு
 28. 1.தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மராட்டி, ஹிந்தி என அனைத்து மொழிகளும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏற்ப மாறுவது ஏன்? உதாரணமாகச் சென்னைத் தமிழ் என முன்னெல்லாம் தனியே இருந்தது. இப்போது அதிகம் இல்லை வெளிமாநிலத்தவரின் வரவால். அதே போல் மதுரைத்தமிழ், திருநெல்வேலித்தமிழ், நாகர்கோயில் தமிழ், பாலக்காட்டுத் தமிழ், ஆற்காடு தமிழ் என்றெல்லாம் இருப்பது போல் மற்ற மொழிகளிலும் உண்டு. அதற்கு என்ன காரணம்?

  2. நீங்கள் பார்த்தவரைக்கும் நல்ல சுத்தமான செந்தமிழ் எங்கே பேசுகிறார்கள்? செந்தமிழில் பேசினால் புரிந்து கொள்பவர்கள் உண்டா?

  3. எல்லா சமையல் நிகழ்ச்சிகளிலும், "இப்போ, வந்து, பார்த்தீங்கன்னா!" மிளகாய்க்கு அதிகக் காரம் இருந்தா கொஞ்சமா எடுங்க, வந்து பார்த்தீங்கன்னா இதுக்குத் தக்காளி கொஞ்சமாச் சேர்க்கணும். வந்து, பார்த்தீங்கன்னா! என்றே சொல்லுவது ஏன்?

  4. ஊடகப் பேச்சாளர்கள் பேசும்போது தடுமாறுவது ஏன்? ஒரு நிகழ்ச்சியைப் படம் பிடிக்கச் சென்றால் அவர்களால் தடுமாறாமல் பேசவே முடியவில்லை. ஒரே பதட்டமும், கை, கால் ஆட்டங்களும் அதிகம் இருக்கும். வந்து, வந்து, என்றே சொல்லுவார்கள். இதுக்கெல்லாம் பயிற்சி கொடுத்த பின்னர் அனுப்ப மாட்டாங்களா? ஹிஹி, யாருங்க அங்கே ஊடகங்களில் கேட்கணும்,இங்கே ஏன் கேட்கிறேனு சொல்றது? நம்ம எ.பி. ஆ"சிரி"யர்களுக்குத் தெரியாததே இல்லையாக்கும்.

  பதிலளிநீக்கு
 29. இந்தக் காலத்தில் நடக்கும் முறை கெட்ட காதல், பழி வாங்குதல் போன்றவற்றைப் பார்த்தால் அந்தக் காலத்தில் பதினைந்து வயதுக்குள் பெண்ணுக்கும், இருபது வயதுக்குள் ஆணுக்கும் திருமணம் செய்தது நல்ல விஷயம் எனத் தோன்றுகிறது. உங்கள் கருத்து?

  வட மாநிலங்களில் இப்போதும் அநேகமாகப் பெண் +2 முடித்ததும் திருமணம் நடத்திவிடுகிறார்கள். அதற்குப் பின்னர் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். நான் சொல்லுவது மத்தியதர, கீழ் மத்தியதரக் குடும்பங்களில்! இதனால் ஆண், பெண் மனதளவில் நெருங்கித் தங்கள் அகங்காரத்தைக் குறைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் அனுசரித்து வளைந்து கொடுத்க்டு வாழ முடியும் என்பது என் தனிப்பட்ட கருத்து! இதைக் குறித்த உங்கள் கருத்து என்ன?

  பதிலளிநீக்கு
 30. 1, உங்கள் வாழ்க்கையில்   மிக  முக்கியமான நபர் யார் ??கட்டாயம் ஒருவரை மட்டுமே சொல்லணும் :)
  2, உங்களை சுற்றி நிறையபேர் இருந்தா பிடிக்குமா ? அல்லது ஓரிரண்டு பேர் மட்டும் இருந்தால் பிடிக்குமா ?    இந்த இரண்டில் எது உங்களுக்கு அதிக சந்தோஷத்தை தரும் ?
  3, நம்மால் நம்மையே நேசிக்க இயலுமா ?  
  4, பெர்சனல் ஸ்பேஸ் என்பது மனிதர்களுக்கு மிக முக்கியம் என்பது எனது கருத்து .இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கறீங்க ?
  5, ஒரு மனிதனை சமுதாயம் எந்த அளவுக்கு பண்பாளனாக / பண்பாளியாக  உருவாக்க இயலும் ?
  6, சமுதாய கட்டமைப்பு எந்த அளவில் இப்போ இருக்கு ? வளர்கிறதா ? அல்லது தேய்கிறதா ?
  7, நம் மக்கள் அடக்கடவுளே என்று சொல்றதைபோல் கடவுள் பேச்ச்சுவாக்கில் என்ன சொல்வார் :))  ? 
  8, மோதிரக்கையால் குட்டு வாங்கினா நல்லா வலிக்கும் ஆனா வாங்கினாலும் மோதிரக்கையால் குட்டு என்பது பொருந்தவில்லையே எப்படின்னு விளக்கவும் ?
  9, இலையுதிர் காலம் ரோட்டோரம் காய்ந்த இலை  சருகுகளை பார்த்ததும் கூட்டி அள்ள  தோணும் எனக்கு ..இது என்ன மாதிரி மனநிலை ? இப்படி உங்களுக்கும் தோன்றியிருக்கா ?
  10, மெய் ,மெய்மை இரண்டும் ஒன்றா ? 

  பதிலளிநீக்கு
 31. அஆவ் !!! வல்லிமாவும் கீதாக்காவும் நிறைய கேள்வி கேட்டிருக்காங்க .இது தெரியாம நானும் கூடையை தூக்கிட்டு  வந்துட்டேன் ..@கௌதமன் சார் வேணும்னா இரண்டு பாகமா பிரிச்சி என் கேள்விகளை ஒரு வாரம் தள்ளி வைங்க :)

  பதிலளிநீக்கு
 32. நான் என்ன கேள்வி கேக்கபோறேன்னு எனக்கே கணினி முன்னால் அமர்ந்து டைப்பும் வரைக்கும் தெரியாதே :)) அலெக்ஸ்சா fail ஆகிடும் என் பற்றிய கேள்விக்கு :)) 

  பதிலளிநீக்கு
 33. ஏஞ்சல் சொல்றாப்போல் கணினி முன்னாடி அமர்ந்ததும் தான் கேள்விகளே கண்ணெதிரில் தோன்றும். எனக்கும் இன்னமும் நிறையக் கேள்விகள் பாக்கி. ஆனால் ஏற்கெனவே அதிகமா இருப்பதால் இத்தோடு நிறுத்திக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 34. கேள்விகளும் பதில்களும் இந்த வாரம் கொஞ்சம் அதிகம் போல! கடந்த வாரத்தில் கேள்விகள் குறைவு என்பதால் இன்று ஈடுசெய்து விட்டார்கள்! :)

  சுவையான கேள்விகளும் பதில்களும். இம்முறை ஸ்ரீராமும் பதில் சொல்லி இருக்கிறார் போல! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். நன்றி. கேள்விகளுக்கு அதே வாரத்தில் நாங்க பதில் சொல்லாமல் விட்டால், கேட்டவர்களே மறந்துவிடுகிறார்கள். அதனால் பதிவு நீளமானாலும் பரவாயில்லை என்று பதிலளித்து விடுகிறோம்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!