செவ்வாய், 17 மார்ச், 2020

கேட்டு வாங்கிப்போடும் கதை : செவ்வந்தி - துரை செல்வராஜூ 



செவ்வந்தி


துரை செல்வராஜூ 

=========


செந்தூரச் சாந்தாகச் சிவந்திருந்த கீழ் வானிலிருந்து 
கோபக் கனலுடன் எழுந்த சூரியன் உச்சியில் நின்று உக்ர தாண்டவம் ஆடுவதற்குச் சற்று முந்தைய நேரம்...

முற்பகல் மணி பதினொன்று...

அந்தத் தெரு ஆளரவமின்றிக் கிடந்தது..  ஆனாலும் இது குடும்பங்கள் விளங்கும் தெரு தான்..

ஏதோ ஒரு காரணமாக இன்றைக்கென்று ஒரு குஞ்சு குளுவானையும் காணோம்...

தெருப்புழுதியை அளைந்து விளையாடுவதற்குக் கூட மனமில்லாத கீழைக் காற்று - ஏதோ ஒன்றுக்குஅச்சாரம் வாங்கிக் கொண்டதைப் போல அமைதியாக இருந்தது...

தெருக்கோடியில் வடக்கு பார்த்ததாக ஒரு கோயில்..  பழைமையான கோயில்... அதுவும் காளியம்மன் கோயில்...

ஊருக்குப் புதுசாக யார் வந்தாலும் அவங்க கண்ணுல முதல்ல தென்படுறது காளியம்மன் கோயில் தான்...

இந்த வட்டாரத்திலேயே மிக மிக உக்ரம் கொண்ட காளி இவள்...

இந்தத் தெருவுக்கே இவளால் தான் பெயர்...

ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் என்றிருந்தாலும் ஜனங்கள் காளியாத்தா கோயில்..ன்னு தான் சொல்லுவாங்க...

பேரு தான் காளியாத்தா!...

நேர்ல நின்னு நிமிர்ந்து பார்த்தா நெடு.. நெடு..ன்னு வளர்ந்த இருபது வயசுப் பொண்ணு மாதிரி இருப்பா...

அப்படியே கால்...ல கும்புட்டு விழுந்தா கூடப் பொறந்த பொறப்பு மாதிரி சிரிச்ச முகத்தோட கூடவே வருவா!...

அப்படியாகப்பட்ட காளியம்மன் முகத்தை நேர்..ல பார்க்க பயந்துகிட்ட ஜனங்க கோயில் வாசல்..ல இருந்து இருபதடி தூரத்தில சந்நிதிய மறைச்சு நட்ட நடுவா வேப்பங்கன்னு நட்டு வச்சாங்க...

அந்த வேப்ப மரம் குடை மாதிரி பெருசா வளர்ந்து இப்போ கோயிலை மறைச்சுக்கிட்டு நிக்குது...

ஆக - தெருவில் எங்கிருந்தும் காளியம்மன் சந்நிதியைப் பார்க்க முடியாது..  கோயில் வாசலுக்குப் போனால் தான் காளியம்மனின் தரிசனம்...

இப்படியான தெருவில் வடக்கு தெற்காக இந்தப் பக்கம் அம்பது வீடு..  அந்தப் பக்கம் நாற்பத்தஞ்சு வீடு... நடுவால சாமியார் மடம்...

இந்த சாமியார் மடம் அந்தக் காலத்துல அன்ன சத்திரம்..

இந்த ஊர் வழியா போற வர்ற சனங்க இருந்து பசியாறிட்டுப் போகட்டும்..ன்னு யாரோ புண்ணியவான் கட்டி வைச்சது...

காலம் போன காலத்துல பரதேசிகள் தங்குற மடம் ஆனது...

அதுக்கப்புறம் திண்ணைத் தூங்கிப் பசங்களோட மடம் ஆகி இப்போ அதுவுமில்லாம யாரோ பெரிய புள்ளியோட சொந்த இடம்..ன்னு
ஆகிப் போச்சு...

இதப் பத்தியெல்லாம் கவலையில்லாம -

'' யார் எப்படிப் போனா என்ன!.. நமக்கெதுக்கு ஊர்வம்பு?..'' -ன்னு அந்த வீட்டுக்குத் தெற்கால இருந்த செம்பருத்திச் செடிக்கிட்ட சுருட்டிக்கிட்டுக் கிடந்தது அந்தத் தெருவோட காவல் நாய்...

அந்த வீடு.. அந்த வீடு... ன்னா அது எந்த வீடு?...

அந்த வீடு... ந்னு சொல்றது இதோ இந்த பழைய ஓட்டு வீட்டைத் தான்...

வீட்டோட தலை வாசலில் தாழ்வாரத்தின் இறக்கத்தில் சுண்ணாம்புப்
பொட்டுகளுடன் திருகு கள்ளியும் அதனோட்டு பூளைப் பூஞ்செடியும்....

இந்தப் பூளைச் செடியும் திருகு கள்ளியும் போன வருசத்துக்கு முந்துன மாட்டுப் பொங்கலோட கட்டி வைச்சது...

போன வருசம் அதை மாற்றிக் கட்டியிருக்கணும்...  ஆனா.. கட்டி வைக்கலை.. அதுக்கான தோது அமையலை..

இந்தப் பக்கம் சிமெண்ட் சாய்மானத்தோட படுக்கைத் திண்ணை..

அந்தப் பக்கமா பத்துப் பதினைஞ்சு பேர் உட்கார்ந்து பேசும்படிக்கு அகலமா உபசாரத் திண்ணை...

அந்தத் திண்ணைக்கு நடுவா செவுத்துல மூனுக்கு ரெண்டு அகலத்துல சன்னல்...  அது முழுதும் தூசியும் தும்பும்... ஒரே அழுக்கு...

சன்னலுக்கு உள்ளாற மடக்கு கதவு தாழ்ப்பாள்...  அந்தச் சன்னலத் தெறந்தே பல மாசம் ஆச்சு..

சன்னல் கதவுங்க நெருப்புல கரிஞ்ச மாதிரி...

கரிஞ்ச மாதிரி... என்ன.. கரிஞ்ச மாதிரி!..

நெருப்புல எரிஞ்ச கதவுங்க தான்...  சன்னல் கம்பி எல்லாங்கூட கரிப்புகை...  அன்று நடந்த கோரத்திற்கு சாட்சியாக...

அத்தோட தெருப்புழுதி.. ஒட்டடை... எட்டுக்கால் பூச்சி வலை...  அதற்காக யாரும் இல்லாத வீடு என்று ஆகி விடாது...

இருக்காங்க... அந்தக் கிழவியும் அதோட மகனும்..

இவங்களைத் தேடித்தான் அவள் வந்து கொண்டிருக்கிறாள்...

இந்தக் கையில் ஒரு பெட்டி.. அந்தக் கையில் ஒரு குடை..  குடை நிழலும் அவளோடு தான் வருகின்றது...

ஆனால் அவள் குடையைப் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரி தெரியவில்லை...  ஒருவேளை தோளில் பொருத்திக் கொள்கிற மாதிரி ஏதாவது இருக்குமோ!..  ஒன்றும் சரியாகப் புலப்படவில்லை..

கொலுசுகளின் சலசலப்பைக் கேட்டு அரைகுறையாகக் கண்விழித்தது
அங்கே சுருட்டிக் கொண்டு கிடந்த நாய்..

அந்த நாய் கண் விழித்த வேளையில் அதுவரைக்கும் சும்மா இருந்த காற்று சுழற்றிக் கொண்டு அடித்து - அவள் வரும் வழியைச் சுத்தப்படுத்தியது...

என்னடா.. இது?... - திடுக்கிட்ட நாய் அகலக் கண் விழித்துப் பார்த்தது..

அவ்வளவு தான் .. அந்த விநாடியில் அதன் சப்த நாடிகளும் ஒடுங்கிப் போயின..

வாய் விட்டு அலறுவதற்கும் பயந்ததாக அடங்கிக் கிடந்த தெருவைக் குறுக்காகப் பாய்ந்து கடந்து ஓடியே போனது..

அடி மேல் அடியெடுத்து வைத்து வந்த அவள் அந்தத்  வாசல் நடையில் மெல்ல அடியெடுத்து வைத்தாள்...

'' ஒரு கோலம் கூடப் போட வில்லையே!... ''

'' நல்ல காரியம் நடக்கும்போது தானே கோலம் எல்லாம் போடுவாங்க!... ''

தனக்குள் அவள் சிரித்துக் கொண்டாள்..

'' வாம்மா!... உனக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்!... ''  - என்று சொல்லி வணங்கியபடி நிலைப்படியில் இருந்த மனைத் தேவதை விடை பெற்றுக் கொண்டது...

புன்னகையுடன் அவள் நிலைப்படியில் கால் வைத்தபோது மடேர்.. - என்ற சத்தத்துடன் தாழ்ப்பாள் கழன்று விழுந்தது...

உடனே உள்ளேயிருந்து -  '' யாரது?..'' - என்ற கேள்வியும் எழுந்தது...

'' நான் தான்!.. ''

'' நான் தான்..னா?... ''

'' செவ்வந்தி!... நான் மல்லிகாவோட தங்கச்சி... சின்னம்மா மக!... ''

'' அவ எங்கியோ வெளியூர்..ல இருக்குறதா சொன்னாங்களே!.. ''

'' அதெல்லாம் இல்லை... இங்கே தான் இருக்கேன்..  பக்கத்திலயே தான் இருக்கேன்!... ''

'' இப்பவாவது வந்து பார்க்கணும்..னு தோணிச்சே!... ''

'' எல்லாத்துக்கும் நேரம் கூடி வரவேணாமா?..  இப்போ தான் நேரம் வந்திருக்கு!....  அதான் நானே புறப்பட்டு வந்துட்டேன்!... ''

'' ம்... அவளுந்தான் பாதியில போய்ச் சேர்ந்தா..   வீடு விருத்தியாம்சமே இல்லாமப் போச்சு!... ''

பிலாக்கணத்துடன் கிழவி வாசலுக்கு வரவும் அவளுக்குப் பின்னால் அவன் - கிழவியின் மகன்...

பாதியில் போய்ச் சேர்ந்ததாக சொல்லப்பட்ட மல்லிகாவின் புருசன்...  செவ்வந்தியைக் கண்டதும் முகமெல்லாம் புன்னகை ஆனான்...

'' அதுக்குத் தானே நான் வந்திருக்கேன்!...''

'' வா.. வா.. நீயாவது வந்து விளக்கு ஏத்தி வை!... ''

'' ஏத்திட்டாப் போச்சு!.. '' - என்றபடி கிழவியின் மகனைப் பார்த்தாள்..

அவனோ - தன்னையும் மதித்து ஒருத்தி பார்க்கின்றாளே!.. - என்று
தேன் குடித்த நரி ஆனான்..

தலை வாசல் கதவைத் திறந்ததும் இடப்புறமாகத்தான் அந்த அறை..
கரி பிடித்த சன்னலைக் கொண்ட அதே அறை...

பத்து மாசத்துக்கு முன்னால ஆத்தாளும் மகனுமாச் சேர்ந்து
அந்த மல்லிகாவின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைக்க

அவள் அலறியபடி முற்றத்திலிருந்து வாசலுக்கு ஓடி வந்தாள்...

அவளை வாசலுக்குப் போகவிடாமல் தடுத்து இந்த அறைக்குள் தள்ளி
கதவைச் சாத்த அவள் இங்கேயே எரிந்து - வெந்து தணிந்த விறகானாள்...

இந்தச் சம்பவமெல்லாம் பிறருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

கறை படிந்த - கதை படிந்த அந்த அறையைச் சுட்டிக் காட்டித் தான் வந்தவள் கேட்டாள் ...

'' இந்த அறைக்குள்ளா என்ன இருக்கு?... நான் போயி சேலை மாத்திக்கவா!... ''

'' ஆமா!... இது என்ன சேட்டு வூட்டுப் பொண்ணாட்டம்...  தொள.. தொளன்னு உடுப்பு?..  வேற சேலை மாத்திக்கலாம் தான்...   ஆனா...
இந்த அறையத் தான் நாங்க தொறக்குறதே இல்லையே!... ''

கிழவியிடமிருந்து பதில் வந்தது..

'' ஏன்?.. ''

'' இந்த அறைக்குள்ள தானே உங்க அக்கா தீய வெச்சிக்கிட்டு!...  ம்... அதைப் பத்தி எல்லாம் இப்போ ஏன் பேசுவானேன்?... ''

'' இருக்கட்டும் .. இருக்கட்டும்... அப்புறமா பேசிக்கலாம்...  இருந்தாலும் எனக்கு எல்லாந்தெரியும்!...  நான் உள்ளே போயி சேலையை மாத்திக்கிட்டு வந்துடறேன்!... ''

- என்றபடி மூடிக் கிடந்த அறைக்குள் அவளாக நுழைந்தாள்..

கண் முன்னால் அந்த அறைக்குள் செவ்வந்தி நுழைந்ததைக் கண்டு அதிர்ந்த கிழவி -

'' ஏன்டா சின்னவனே!.. எப்படிடா.. அந்தப் பொண்ணு உள்ளே நுழைஞ்சா?..''  - என்றாள்...

'' அவ கதவைத் திறந்துகிட்டு போனதைத்தான் நான் பார்த்தேனே!.. '' -  என்று சொல்லி முடிப்பதற்குள் -

அந்த அறையினுள்ளிருந்து மின்னலாக வெளியே வந்தாள் செவ்வந்தி...

அவளைக் கண்டு திடுக்கிட்ட கிழவியும் அவள் மகனும் நாலடி பின்னால் நகர்ந்தனர்...

இப்போ தானே இவள் உள்ளே போனாள்!...  அதற்குள் எப்படி - அதுவும் எரிஞ்சு போன மல்லிகா கட்டியிருந்த அதே சேலையைக் கட்டிக்கிட்டு வெளியே வர்றா!?..

திடுக்கிட்ட கிழவியும் அவள் மகனும் நாலடி பின்னால் நகர்ந்தனர்..

தொண்டைக் குழி காய்ந்து போனது..  ஈரக்குலை இடும் சத்தம் காதுகளில் கேட்டது...  பெருங்குடலுக்குள் பாம்பு புகுந்து நெளிவது மாதிரி இருந்தது...

'' சேலையில என்னைப் பார்த்தால் எங்க அக்கா மாதிரியே இருப்பேனாம்!... ''

பெருமை தாளவில்லை - செவ்வந்திக்கு.. வாய் விட்டுச் சிரித்தாள்...

ஆ!.. இதென்ன வாய்க்குள்?... ஏகப்பட்ட கோரைப் பற்கள்!...

நெற்றியில் வியர்வையைத் துடைத்துக் கொண்டான் அவன்...

'' அம்மா தான் சொல்லி விட்டா... உன்னைத்தான் கேட்டுக்கிட்டு இருக்காங்க...  பிடிச்சிருந்தா சொல்லு முடிச்சிடுவோம்..ன்னு!..

அதுக்கென்னம்மா.. நானே எல்லாத்தையும் பேசி முடிச்சிட்டு வந்துடறேன்..  ன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்!... ''

செவ்வந்தி சிரித்தாள்...

கிழவியும் கிழவி மகனும் இருதலைக் கொள்ளி எறும்பானார்கள்...

யார்... றா இவள்!... பேயா?... பிசாசா?... பிரம்ம ராட்சசியா?..  இவ்வளவு நேரங்கழித்து நடுக்கத்துடன் யோசித்தார்கள்...

'' ஏய்... கிழவி திங்கிறதுக்கு என்னடி வைச்சிருக்கே!... ''

செவ்வந்தியிடமிருந்து அதிகாரம் தூள் பறந்தது...

'' ஏ..ஏ.. என்னது?... என்ன கேட்டே!.. ''

-  செவ்வந்தியை ஏறிட்டு நோக்கினாள் கிழவி..  கிழவிக்கு காதுக்குள் இரத்தம் கசிகிற மாதிரி இருந்தது...

'' நான் ஒன்னும் கேக்கலையே!.. '' - செவ்வந்தி வியந்தாள்...

'' நாந்தான் உங்களுக்கு..ன்னு கொண்டு வந்திருக்கேன்!... ''

- என்றபடி அந்தப் பெட்டியை எடுத்து நீட்டினாள்..

நடுக்கத்துடன் அதை வாங்கித் திறந்தான் கிழவி மகன்...
அதனுள் வேட்டி சேலையுடன் தூக்கு வாளி ஒன்று...

'' இதான் வேட்டி.. கோடி வேட்டி... அந்தப் பாத்திரத்தில உங்களுக்குப்
பிடிச்ச குழம்பு.. நண்டுக் குழம்பு!... தெறந்து பாருங்க.... ம்!... ''

கிழவி மகன் தூக்கு வாளியைத் திறந்தான்.. அதற்குள் குடலும் கும்பியும்... அழுகிய சதைத் திரளுடன் எலும்புத் துண்டுகள் சிலவும்...

கடும் துர்நாற்றம்.. அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று கொந்தளித்துக் கொண்டு மேலே வந்தது...

'' அன்னைக்கு மல்லிகாவைப் பார்த்து நீதானடா சொன்னே!..  உன்னைப் பார்த்தாலே வாந்தி வருது.. ன்னு!... ''

'' அவ நகையும் நட்டுமா சீர் வரிசையோட வந்தப்போ உனக்கு வாந்தி வரலையா?... ''

'' அவ மாலையுங் கழுத்துமா மகாலக்ஷ்மி மாதிரி வந்தப்போ உனக்கு வாந்தி வரலையா?.. ''

'' அவ முகத்தோட முகம் வச்சி ரகசியம் பேசுனப்போ உனக்கு பேதி வரலையா?... ''

'' வந்துடும்... இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் வந்துடும்!... ''

'' டேய்.. சின்னவனே!.. அந்த கட்டை விளக்கமாத்தை எடு!.. '' - கிழவி அலறினாள்..

'' அது எதுக்கு?.. ''  - என்றபடி புன்னகைத்த செவ்வந்தி உதடுகளைக் குவித்து மெல்ல ஊதினாள்...

அருகே கிடந்த விளக்குமாறு மேலெழுந்து பறந்து பத்தடிக்கு அப்பால் போய் விழுந்தது...

'' அடே... அன்னைக்கே சொன்னேன்..  அரையுங் கொறையுமா எதையும் செய்யாதே..ன்னு!.. ''

'' இன்னைக்குப் பார்த்தியா... வருசங்கூட திரும்பலை..  பழி வாங்குறதுக்கு..ன்னு உரு மாறி வந்திருக்கா!...  அன்னைக்கு மிதிச்ச மிதியை சரியா மிதிச்சிருந்தா இன்னைக்கு இப்படி வந்திருப்பாளா?... ''

'' சரியா மிதிக்கத்தானே நான் வந்திருக்கேன்!... '' - மீண்டும் சிரித்தாள்
செவ்வந்தி..

சடாரென அங்கிருந்து தப்பியோட முயற்சித்தான் கிழவி மகன்...

'' எங்கேடா ஓடுறே!...  அக்கினிக் கொழுந்து மேலெல்லாம் பற்றி எரிய
மல்லிகா ஓடுனப்போ அவளத் தப்பிக்க விட்டீங்களா?... ''

தன்னிச்சையாய் செவ்வந்தியின் கை நீண்டு வளர்ந்து அவனது இருப்பு வேட்டியைப் பற்றியிழுக்க தலைகுப்புற விழுந்தான்...

'' நம்பி வந்தவளாச்சே..ன்னு பார்க்காம அவள என்னவெல்லாம் செஞ்சே!... ''

கால் விரல் நுனியால் புரட்டிப் போட்டு எற்றி உதைத்தாள்..

கூடத்தின் மூலையில் போய் விழுந்த கிழவி மகன் -  அடி வயிற்றிலிருந்து குரலெடுத்து அலறினான்....

'' யாராவது வாங்களேன்!.. வந்து காப்பாத்துங்களேன்!... ''

'' அன்னைக்கு எங்க அக்கா துடிதுடிச்சப்போ யாராவது வந்தாங்களா?...
இல்லையே!... இன்னைக்கும் அப்படித்தான் யாரும் வரமாட்டாங்க!....
நீ வெட்டியா சத்தம் போட்டு களைச்சுப் போயிடாதே!... ''

'' சின்னவனே!.. பயப்படாம எந்திரிச்சு அப்படியே நெஞ்சில ஓங்கி மிதிடா!.. ''
கிழவி கோபாவேசத்துடன் கத்தினாள்...

'' ம்.... இதுக்குத் தான் இவ்ளோ நேரமா காத்திருந்தேன்!..  அன்னைக்கும் இந்த வார்த்தை தானே வந்தது..  பொண்ணுக்குப் பொண்ணு தான் எதிரி..ங்கறதை நிரூபிச்சிட்டே!..  நெஞ்சே இல்லாத உனக்கெல்லாம் எதுக்குடி நெஞ்சு?... ''

வலக்கையை நீட்டி கிழவியின் கூந்தலைப் பிடித்து இழுத்த செவ்வந்தி
கிழவியைக் கீழே தள்ளி அவளது நெஞ்சுக் கூட்டில் காலை வைத்தாள்...

ஈரமற்று இருந்த நெஞ்செலும்புகள் அப்படியே நொறுங்கிப் போயின...

வாயிலும் மூக்கிலும் குருதி வழிய உலகில் தொலைந்த பொருளானாள் கிழவி...

நடப்பதைக் கண்டு அதிர்ந்த கிழவியின் மகன் கையெடுத்துக் கும்பிட்டான்...

'' நீ யாரா இருந்தாலும் சரி... நாஞ் சொல்றதைக் கொஞ்சம் கேளு...  உனக்கு என்ன வேணும்...னாலும் படையல் போடுறேன்...  தயவு செஞ்சு என்னைய மன்னிச்சு விட்டுடு!... ''

'' படையல் எனக்கு!.. மன்னிப்பு உனக்கா?...  பண்றதெல்லாம் பண்ணிட்டுப் படையலா போடுறே!,, படையல்!...  பாவி.. உன்னோட படையலைக் கொண்டு போயி படுகுழியில போடு!..  செய்றதையெல்லாம் செஞ்சுட்டு மன்னிப்பா கேக்குறே மன்னிப்பு?..  மானங் கெட்டவனே!... எங்கிட்டே மன்னிப்பே கிடையாது.. தெரியுமா?.. ''

'' என்னமோ அறிவு கெட்டுப் போய் செஞ்சுட்டேன்... என்னைய விட்டுடும்மா!.. ''

'' அம்மாவா!.. அம்மா..ன்னா என்னவெல்லாம் அர்த்தம்.. ன்னு தெரியுமாடா!.. ''

'' என்னைய விட்டுடு... என்னைய விட்டுடு!... '' - கதறி அழுதான் கிழவி மகன்..

'' மாட்டேன்.. டா!... விட மாட்டேன்..டா!.. ''

செவ்வந்தியின் கண்களில் இருந்து தீப்பொறிகள் பறந்தன..

'' என்னைக்கு மல்லிகாவை ஓங்கி அறைஞ்சு செவிப்பறையைக் கிழிச்சியோ..  அன்னைக்கே எங்காதும் அடைபட்டுப் போச்சுடா!... ''

காளியாகி நின்றிருந்த செவ்வந்தியின் கைவிரல் நகங்கள் நீண்டு வளர்ந்தன..

பார்த்துக் கொண்டிருந்த கிழவி மகனின் கண்களில் இருந்து குருதி வழிந்தது...

'' கையெடுத்துக் கும்பிட்டாளே...  மல்லிகா...
கால்..ல விழுந்து கதறினாளே.. மல்லிகா!.. ''

'' பொண்ணு ஒரு பூவு... ன்னு நெனைக்காம
அவளை எப்படியெல்லாம் சித்ரவதை செஞ்சே!. ''.

'' அதுக்குத் தாண்டா வந்திருக்கேன்!...
அந்த ஆணி வேரை அறுக்கத் தாண்டா வந்திருக்கேன்!... ''

'' பசுங்குருத்து....ன்னும் பார்க்காம பாழும் நெருப்பை வச்சியே!..
பார்க்கிறியா!... இப்போ.... பார்க்கிறியா?... ''

செவ்வந்தியின் செம்பளத் திருமுகத்தில் சிங்கத்தின் பற்கள்...

'' ஆ!.. '' - என்றலறினான்... அவனது விழிகள் பிதுங்கி விழுந்தன...

அவனை அப்படியே அந்தரத்தில் ஏற்றிக் கிடத்தினாள் செவ்வந்தி...

அவளது கோரப் பற்கள் அவனது குரல்வளையில் பதிந்த வேளையில்
அவளது இடக்கரம் அவனது உயிர் நிலையைப் பிய்த்து எறிந்தது..

வயிற்றைத் துளைத்துக் கொண்டு
உள்ளே புகுந்திருந்த செங்காந்தள் விரல்கள்
இருதயத்தைப் பிடுங்கிக் கொண்டு வெளியே வந்திருந்தன...

கையும் காலும் விலுக்... விலுக்... என்று இழுத்துக் கொள்ள
சரீரம் துடியாய்த் துடித்து கீழே விழுந்து அடங்கியது...

எங்கும் அமைதி...





தன்னைத் தானே புன்னகையுடன்
நோக்கிக் கொண்டாள் செவ்வந்தி...

மேலெல்லாம் இரத்தத் துளிகள்...

மெல்லிய புன்னகை ஒன்று மலர்ந்திட
மேலிருந்த ரத்தத்துளிகள் எல்லாம் அவளோடு கலந்தன...

ரக்த பீஜனின் குருதியைக் குடித்த
இவளுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்!...

அந்த வீட்டின் குல தெய்வமாகிய கன்னி நல்லாள்
விளக்கு மாடத்திலிருந்து வெளியே வந்தாள்..

'' இன்று தான் என் மனத்துயர் தீர்ந்தது!..
இனி நான் செய்யட்டும் அம்மா!.. ''

- என்றபடி வந்து வணங்கி நின்றாள்...

 '' என்னுடன் வந்து விடு!... ''

மீண்டும் புன்னகைத்த செவ்வந்தி
கற்பூரம் என காற்றோடு காற்றாகக் கலந்தாள்...

அந்த வீட்டுக் குல தெய்வமும் அவளோடு கலந்த வேளையில்
அந்த வீடு முழுவதும் மல்லிகையின் வாசம் கமழ்ந்தது..
.

82 கருத்துகள்:

  1. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்...   வணக்கம்.  மறுபடி வழக்கம்போல காலையில் உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. இன்று எனது கதையைப் பதிவு செய்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் நன்றி.   ஆதரவு தொடரட்டும்.  நட்பு வளரட்டும்.

      நீக்கு
  4. இன்றைய கதையை முதலில் வாசித்ததும் அன்பின் ஸ்ரீராம் அவர்கள் என்னிடம் கேட்டார்...

    இந்தக் கதையை எப்படி justify செய்வீர்கள் - என்று!..

    சட்டம் தவறினாலும்
    தர்மம் தவறுவதே இல்லை...

    கண் முன்னே காட்சிகள் விரிகின்றன...
    நாம் தான் உணர்ந்து கொள்வதில்லை...

    அடாது செய்தவனும் சரி...
    அடாது சொன்னவனும் சரி...
    படாத பாடு பட்டுத்தான் தீர்கிறார்கள்...

    ஓராண்டுக்கு முன் எந்த ஒரு காரணமும் இன்றி என்னை சிறுமைப் படுத்தினான் பீஹாரி ஒருவன்...

    சென்ற ஞாயிறன்று அவனைக் கண்டேன் -
    இடது கை ஒடிந்து கட்டுப் போட்ட நிலையில்..

    இதில் எனக்கொரு மகிழ்ச்சியும் இல்லை...

    ஆனாலும் அவனிடம் இது எப்படி ஆயிற்று என்று கேட்டு விட்டுத் தான் வந்தேன்...

    தர்மம் பிழை பொறுப்பதில்லை...

    தர்மத்தை நாம் காப்பாற்றினால்
    தர்மம் நம்மைக் காப்பாற்றும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்று.   இந்த பதில் அப்போதே நினைத்ததா?   அப்புறம் அவரைச் சந்தித்த பிறகு தோன்றியதா?

      நீக்கு
    2. இப்போது இந்தக் கதையை இங்கே படித்ததும் தோன்றியது...

      நீக்கு
    3. இப்போதெல்லாம் தெய்வம் அன்றே கொன்றுவிடுகிறது என்பதை நானும் உணர்ந்து இருக்கிறேன். இந்தக் கதையை எதற்கு சரியானதா இல்லையா என நியாயப்படுத்தணும்? இப்போதும்/எப்போதும் இத்தகைய மனிதர்கள் இருந்தே வருகின்றனர்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் எழுதிய கதை நன்றாக இருக்கும். இதோ படித்து விட்டு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. அன்பு துரை , ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
    அப்பப்பா. உடல்,மனம் அதிர வந்தாள் பத்ரகாளி அம்மா.
    செங்குருதி பாயும் சிவப்பெழுத்து.
    எல்லா இடத்திலும் தாயே நீ வந்தால் இல்லை ஒரு பிழை.
    அருமையான உரை. அருமையான நடை.
    சிறப்பைச் சொல்ல மொழி இல்லை. வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா...   இனிய காலை வணக்கம்.

      நீக்கு
    2. இந்தக் கையில் ஒரு பெட்டி.. அந்தக் கையில் ஒரு குடை.. குடை நிழலும் அவளோடு தான் வருகின்றது...

      ஆனால் அவள் குடையைப் பிடித்துக் கொண்டிருக்கிற மாதிரி தெரியவில்லை... ஒருவேளை தோளில் பொருத்திக் கொள்கிற மாதிரி ஏதாவது இருக்குமோ!.//அம்பிகை நேரில் வந்தாள். நீதி பிழைக்க அன்னை வந்தாள்.

      நீக்கு
    3. சீரிய சிங்கம்.. அதனை
      உள்ளத்திலும் எண்ணத்திலும்
      கொண்டிருக்கும் தங்கம்!...

      வல்லியம்மா அவர்களுக்கு நல்வரவு...

      செந்தீயாய் வந்தாள் செவ்வாடைக்காரி...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    4. அடாது செய்தவனும் சரி...
      அடாது சொன்னவனும் சரி...
      படாத பாடு பட்டுத்தான் தீர்கிறார்கள்..//////அப்படியே நடக்கட்டும்.

      நீக்கு
    5. அன்பு துரை,
      கிராம வளம் நிறைந்த சொற்கள், அந்தத் திண்ணை,நிலையில் சொருகின பூ, கரிந்த ஜன்னல்
      ஏற்கனவே இருள் சூழ்ந்தவீட்டில் ,அன்னை அருள் கூர்ந்து அவர்களைக் கீறி நரகேற்றினாள்.

      இவள் உலகெங்கும் வர வேண்டும். தர்மம் தழைக்க அல்லாதோரை அழிக்க வேண்டும்.
      மிக மிக நன்றி மா. இன்னும் இந்தக் கதையின் பாதிப்பிலிருந்து விடுபட முடியவில்லை.
      அன்னையே சரணம்.

      நீக்கு
  7. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். துரையின் கதையா இன்று?

    பதிலளிநீக்கு
  8. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். சாது மிரண்டு விட்டதே! கதையைப் படிக்கையில் மெய் சிலிர்த்தது. உடம்பெல்லாம் புல்லரித்தது. ஊழித்தாண்டவம் ஆடிய காளி இங்கேயும் வந்து விட்டாள்! நல்லதொரு தண்டனை!

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    அருமையான கதை. படிக்கும் போதே மெய் சிலிர்த்து படித்தேன். தெய்வம் நின்று கொல்லும் என்ற வாக்குப்படி, அந்த ஊரில் வசித்து தன் குழந்தைகளாகிய மக்களை காக்கும் குணம் கொண்ட காளியம்மன் சதிகாரர்களை கொல்லும் போது, அந்த மகிஷனை அழித்த மகிஷாசூரமர்த்தினியாய் என் கண்களுக்குள் காட்சி விரிய, முடிவின் போது கண்கள் பனித்து குளமாகின.

    அருமையான தங்களுக்கே உரித்தான நடையுடன் அன்னை பராசக்தியின் தர்ம நிலை நாட்டிய கதை மிகவும் நன்றாக உள்ளது. இது கதையாக கூற மனம் ஒப்பவில்லை. தெய்வத்தின் உணமை மனப்பாங்கை, ஒருவர் செய்த பாபத்திற்கு பதிலாக காலம் வரும் போது அவர்களுக்கு தகுந்த தண்டனை தரும் அறவழியை, அதற்காக தெய்வத்திற்குள் எழும் ஒரு உத்வேகத்தை நிரூபணம் செய்யும் செயலாகப்பட்டது.

    காலத்தாலும் மறக்காத நினைவு பெட்டகமாய் உங்களின் இந்த எழுத்துக்கள் என் மனதில் என்றும் வீற்றிருக்கும். இந்தச் செவ்வாயில் அதுவும் அதிகாலையில் எந்த கோவிலுக்கும் போகாமல், அந்த அம்மனை நேரில் கண்டு தரிசித்த அளவுக்கு பக்தி பரவசமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அம்மனை நேரில் கண்டு தரிசித்த அளவுக்கு..//

      தங்கள் அன்பின் கருத்துரைக்கு
      தலை வணங்குகிறேன்...

      எல்லாம் அவள் செயல்!...

      அவள் வருவாள்...
      வந்தே தீர்வாள்!...

      நீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. கதையைப் மெல்லப் படிப்பேன்.
    மேலோட்டமாகப் பார்த்தால்...செந்நாக்கு வெளியே தொங்க மிரளவைக்கும் படம்! கருத்துப்பக்கம் திரும்பினால்.. ’இப்போதெல்லாம் தெய்வம் அன்றே கொன்றுவிடுகிறது’ ஜிஎஸ்-ஸின் பயங்கரக் கமெண்ட். அன்றே கொன்றுவிடுகிறதா.. மனிதன் ஓவராகத் தப்புத்தண்டா செய்கிறானா, தண்டிக்க யாருமில்லை என்று? நிலைமை படுமோசமாகும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> மனிதன் ஓவராகத் தப்புத்தண்டா செய்கிறானா, தண்டிக்க யாருமில்லை என்று!...<<<

      ஆமாம் என்று ஒற்றை வார்த்தையில் ஏதும் சொல்ல முடியவில்லை...

      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. இந்த மாதிரி கிழவிகளும், மகன்களும் பரவிக்கிடக்கிறார்கள் நாட்டில். மகா காளி ஆவேசமாகப் புகுந்து ஒரு பிடி பிடித்தால்.. 1/4 பகுதி ஜனத்தொகைக் காணாமற்போகும்..

      நீக்கு
    3. ஏகாந்தன், எனக்குத் தெரிந்து இப்போதெல்லாம் உடனுக்குடன் தண்டனை கிடைப்பதாகவே தெரிகிறது. இதற்குப் பல உதாரணங்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனால் பொதுவெளியில் சிலவற்றைச் சொல்ல முடியாது.

      நீக்கு
    4. @ கீதா சாம்பசிவம்: உங்களது கருத்தை நான் விமரிசிக்கவில்லை. அப்படி நடப்பது உங்கள் கவனத்துக்கு வந்திருக்கிறது என்பதால் சொல்கிறீர்கள். சரிதான். குற்றப்பின்னணி கொண்ட சில சுற்றுப்புறத்து மனிதர்களை, அவர்கள் வாழ்வை நன்றாக அலசவேண்டியிருக்கிறது, சம்பவங்களை உற்றுக் கவனிக்கவேண்டியிருக்கிறது. பொதுவாக, நிறைய அவதானித்தால்தான் ஏதோ கொஞ்சமாவது புரிகிறது.

      நீக்கு
    5. ஏகாந்தன், விமரிசித்தால் தப்பு ஏதும் இல்லை. ஆகவே தாராளமாகச் சொல்லலாம். நான் கவனித்தவரை தண்டனைகள் கிடைக்கின்றன. இதற்கு உதாரணமாக எனக்குத் தொண்ணூறுகளில் நடந்த ஒரு சம்பவம்! அப்போத்தான் ஜாம்நகர் போயிருக்கோம். ராஜஸ்தானில் ராஜவாழ்க்கை/மாளிகை வாழ்க்கை வாழ்ந்தோம். அதே பதவின்னாலும் ஜாம்நகரில் வீடெல்லாம் அவ்வளவு நன்றாக இல்லை. மனமே இல்லாமல் அங்கே இருந்த ஒரு நாள் ஏதோ கோபத்தில் அன்னிக்குச் சாப்பாடு வேண்டாம்னு கொண்டு போய்க் கொட்டினேன். பொதுவாக நான் எவ்வளவு கோபமாக இருந்தாலும் சாப்பாட்டில் காட்டமாட்டேன். குழந்தைகளையும் அப்படியே சொல்லிக் கொடுத்து வளர்த்தேன். ஆனால் அன்று! அனைவருக்கும் அதிர்ச்சி! மறுநாளே நாங்கள் ஒரு விசேஷத்துக்காகச் சென்னை செல்ல ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜாம்நகரில் இருந்து போரிவிலி போய் மைத்துனன் வீட்டில் தங்கி அங்கிருந்து சென்னை செல்ல வேண்டும். மும்பை வெள்ளம் காரணமாக ஜாம்நகரில் நாங்க ஏறிய வண்டி மறுநாள் அதிகாலையே பால்கரில் நின்றுவிட்டது. முதல்நாள் மதியம் சாப்பிட்டது தான்! அன்று முழுவதும் சாப்பாடே இல்லை. பசி உயிர் போகும் பசி! ஆனால் அந்தக் கூட்டத்தில் சரியாக உணவு கிடைக்கவில்லை. எப்படியோ அந்த ரயிலை விட்டு வெளியே வந்து குழந்தைகளுடன் ஓர் ஆட்டோ பிடித்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டே போரிவிலி வந்தோம். மும்பைக்கு அதான் எங்களின் முதல் பயணம்! உண்மையில் அன்று ஒரு ஆட்டு ஆட்டி வைத்தது. அவ்வளவு வேதனையிலும், மனக்கவலையிலும் மனமார நான் சாப்பாடைத் தூக்கிப் போட்டது தப்பு என உருகி உருகி வேண்டிக்கொண்டேன். சஷ்டி கவசம் வழி நடத்தியது. போரிவிலி வந்து மைத்துனனையும் கண்டு பிடித்தோம். ஆம், விலாசமோ, தொலைபேசி எண்ணோ தெரியாது! நான் செய்த தப்புக்காக எனக்கு ஒரு நாள் உணவு இல்லை என ஆச்சு! குடிக்கத் தண்ணீருக்கும் கஷ்டம்! எங்கே பார்த்தாலும் தண்ணீர்! ஆனால் குடிநீராகக் குடிக்க எதுவும் இல்லை. கண்ட நீரையும் குடிக்க பயம்! இது நம்புகிறவர்களுக்கு மட்டும்! இதை எல்லாம் ஏற்கெனவே எழுதி இருக்கேன். இப்படிப் பல நிகழ்வுகள் சொல்லலாம்.

      நீக்கு
    6. உங்களுக்கு பதில் உடனே தரப்பட்டிருக்கிறது. அறிவுறுத்துதல் உடனே நிகழ்ந்திருக்கிறது. இப்படி சிலருக்கு ஆகலாம். ஆகியிருக்கலாம்..

      நீக்கு
  12. கதையை படித்தவுடன் நினைத்ததை கமலா சொல்லி விட்டார்கள்.செவ்வாய் கிழமை துர்க்கை வழி பாடு செய்வேன். துர்க்கை நேரில் வந்தது போல் இருந்தது. அம்மனின் படமும் பார்த்தவுடன் மேனி சிலிர்த்து விட்டது.
    ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் என்றவுடன் எனக்கு சிவகாசியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவில் நினைவும், அந்த ஊரில் நடைபெறும் பத்ரகாளி அம்மன் திருவிழாவும் நினைவுக்கு வந்து விட்டது. பங்குனி மாதம் தான் பத்ரகாளி அம்மன் திருவிழா என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவகாசியில் பங்குனித் திருவிழா நெருங்கி வருகின்றது...

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  13. ' //வாம்மா!... உனக்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தேன்!... '' - என்று சொல்லி வணங்கியபடி நிலைப்படியில் இருந்த மனைத் தேவதை விடை பெற்றுக் கொண்டது...//

    வந்தாள் அன்னை, தந்தாள் தண்டனை இப்படி தீங்கு செய்பவர்களை தண்டித்தால் பயம் இருக்கும் தப்பு செய்பவர்களுக்கு.

    //அந்த வீட்டின் குல தெய்வமாகிய கன்னி நல்லாள்
    விளக்கு மாடத்திலிருந்து வெளியே வந்தாள்..//

    கெட்டவர்கள் வீட்டில் அம்மன் வந்து பலி வாங்கும் வரை இருந்தார்களா?
    கெட்டவர்களுக்கும் நேரம் காலம் இருக்கிறது தண்டனை அடைய என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> கெட்டவர்கள் வீட்டில் அம்மன் வந்து பலி வாங்கும் வரை இருந்தார்களா?..<<<

      மனைத் தெய்வமும் குல தெய்வமும் நீங்கி விட்டால் அந்த இடம் அப்போதே வீணாகி விடும் ...
      அதைத் தான் அந்தக் காலத்தில் குட்டிச் சுவர் என்பார்கள்...

      கெட்டவர்களுக்கும் நேரம் காலம் இருக்கிறது தண்டனை அடைய என்பது உண்மையே...

      தங்களுடைய இந்தக் கருத்துரைக்கு எனது தளத்தில் பதில் தருகிறேன்...

      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  14. //சட்டம் தவறினாலும்
    தர்மம் தவறுவதே இல்லை...//

    நிர்பயா வழக்கில் தர்மம் தவறாமல் இருக்க வேண்டும் என்று நினைகிறது மனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கான சோறும் நீரும் இன்னும் பாக்கி இருக்கின்றன... அவ்வளவே..

      தூக்கமின்றித் தவிப்பதே அந்தப் பாவிகளுக்குத் தண்டனை...
      அதுவே அவர்களை ஒழுங்காத வளர்க்கத் தவறிய பெற்றோர்களுக்கும் தண்டனை...

      நீக்கு
    2. எங்கே! நிர்பயா வழக்கில் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடி விட்டனர். இதற்கெல்லாம் பின்னால் இருந்து உதவி செய்வது யார் என்பதும் புரியவில்லை! தர்மதேவதை கண்ணை மூடிக்கொண்டு விட்டாளோ?

      நீக்கு
    3. //ஏகாந்தன், எனக்குத் தெரிந்து இப்போதெல்லாம் உடனுக்குடன் தண்டனை கிடைப்பதாகவே தெரிகிறது. இதற்குப் பல உதாரணங்கள் என்னிடம் இருக்கின்றன.// -கர்ர்ர்ர்ர்ர்.... நிர்பயா என்னாச்சு.....

      நீக்கு
    4. நிர்பயா கொலையாளிகள் அரசியல் ஆதரவுடன் இருக்கின்றனர். இப்போது சர்வதேச நீதிமன்றத்தை நாடியதோடு அல்லாமல் அவர்களில் ஒருத்தன் அன்று தான் தில்லியிலேயே இருந்ததில்லை என்கின்றான். நிச்சயமாய்க் கடவுள் தண்டிப்பார்.

      நீக்கு
  15. //தர்மம் பிழை பொறுப்பதில்லை...

    தர்மத்தை நாம் காப்பாற்றினால்
    தர்மம் நம்மைக் காப்பாற்றும்....//

    நீங்கள் சொல்வது சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்மோ ரக்ஷதி ரக்ஷித - என்பது வேத வாக்கு என்று படித்திருக்கிறேன்...

      இந்த தர்மம் என்பது இடத்து இடம் பொருள் வேறுபடும்...
      இதைப் பற்றி நிறைய பேசலாம்... நிறைய எழுதலாம்...

      தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி

      நீக்கு
  16. படித்து வாசித்து முடித்தும் ..இன்னும் படபடப்பு குறையவில்லை ...

    இத்தைகைய வாசிப்பு அனுபவத்திற்கு நன்றி துரை அண்ணா ..

    ரணியனின் வதம் போல
    மனித உரு கொண்ட
    ராட்சனின் வதம் முடித்து
    செந்நிறத்தில்
    நம்மை காக்கும் காளியாத்தா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அனுபிரேம்..

      கருணையே வடிவான காளி அனைவரையும் காத்தருள்வாளாக...
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
    2. என்னாதூஊ படபடக்கிதோ அனுவுக்கு?:)... ஹையோ எனக்கு எப்போ படபடக்கப் போகுதோ?:) இப்போ படிக்கவும் முடியவில்லை படபடக்கவும் முடியல்லியே:)

      நீக்கு
  17. நல்லவர்களுக்கு செய்யும் துரோகத்துக்கு நிகழ்காலத்திலையே காலம் உணர்த்தும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      தங்கள் சொல்வது முற்றிலும் உண்மை...
      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  18. இந்தக் கதையை எப்படி justify செய்வீர்கள் HALUCINATIONS எல்லாம் ஜஸ்டிஃபை செய்யக் கூடியது அல்ல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  19. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி.

      நீக்கு
  20. வழக்கம் போல் மீண்டும் ஒரு கிராமத்துக் கதை. நீங்களும் என்னைப்  போல் அடிப்படையில் கிராமத்தை நேசிக்கும் ஒரு கிராம வாசியோ? அழகான வர்ணனை. கிராமத்து கோயிலும், வீடும் அப்படியே கண்முன் விரிகின்றன.  இனிமையாக சென்று கொண்டிருக்கும் கதையின் போக்கு மாறி, பயமும், பக்தியும் கொள்ள வைத்து முடிகிறது கதை. தமிழ் உங்களுக்கு வசப்படுகிறது ஐயா. என்னுடைய ஒரே குறை இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டிய கதையை சுருக்கமாக முடித்து விட்டீர்களே என்பதுதான். அம்பிகையே நேரில் வந்து அசுர வதம் செய்கிறாள் என்றால், அப்படி மல்லிகா அடைந்த துயரங்கள் என்ன என்பதை எழுதியிருக்கலாம். நீங்கள் எங்கள் ப்ளாகோடு நின்று விடாமல் வெளி உலகிற்கும் செல்ல வேண்டும். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதென்ன என்னைப்போல என ஒருமையில் சொல்லிட்டீங்க பானு அக்கா:)... அதிராவையும்போல என சொல்லியிருக்கோணுமாக்கும்:)..

      நீக்கு
    2. @ Bhanumathy Venkateswaran

      >>> நீங்கள் எங்கள் ப்ளாகோடு நின்று விடாமல் வெளி உலகிற்கும் செல்ல வேண்டும்...<<<

      ஸ்ரீராம் அவர்களும் இப்படித்தான் சொல்கிறார்...

      எபியும் அன்பின் நண்பர்களும்!..
      எனக்கு இதுவே போதும் என்றிருக்கின்றது...

      நீக்கு
  21. செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
    வெண் பஞ்சு மேகம் நீ கோலம் போடூஊஉ....

    பின்புதான் கோலம் போடுவேன்ன்ன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      தங்கள் கருத்துரைக்குக் காத்திருக்கின்றேன்...

      நீக்கு
  22. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது கேட்டு வாங்கிப்போடும் கதை : செவ்வந்தி – துரை செல்வராஜூ பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  23. அழகான கிராமத்து நிழலில் கதை ஆரம்பம். திடீரென அதிரடி சூடு பிடித்து கட்டிவைத்தது நெஞ்சம் பதைத்தது என்ன விறுவிறுப்பு செவ்வந்தி காளியாத்தா அடித்த அடி செம அடிதான்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. >>> காளியாத்தா அடித்த அடி செம அடிதான்...<<

      அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  24. இப்படியெல்லாம் நடக்குமா என்ற கேள்வி எழாதோருக்குத் தான் இந்தக் கதை.
    அப்படியானோருக்கு ஏதோ ஒரு விதத்தில் செய்கிற அநியாயங்களுக்கு பயம் வந்தால் சரி.
    இந்த பயமுறுத்தல் கூட இல்லை என்றால் நட்ட்கிற அட்டூழியங்களுக்கு அளவே இல்லாது போய் விடும்.
    வினை விதைத்தவன் வினை அறுப்பது இருக்கத் தான் இருக்கிறது.
    இப்படிக் கொஞ்சம், அப்படிக் கொஞ்சம் என்று அநியாயங்களுக்கான அழிவு சகல மட்டங்களிலும் நடக்கட்டும்.
    வையகம் வாழ 'தப்பு செய்கிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள்' என்ற மூதுரை வாய்மொழிகள் உண்மையாகட்டும்.
    நன்னெறி தர்மம் வாழ எழுதுகோல் தூக்கிய அன்பு துரையவர்களுக்கு வாழ்த்துக்கள்..
    உங்கள் எழுத்துக்கள் சிறக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  25. நேர்ல நின்னு நிமிர்ந்து பார்த்தா நெடு.. நெடு..ன்னு வளர்ந்த இருபது வயசுப் பொண்ணு மாதிரி இருப்பா...

    அந்த நாய் கண் விழித்த வேளையில் அதுவரைக்கும் சும்மா இருந்த காற்று சுழற்றிக் கொண்டு அடித்து - அவள் வரும் வழியைச் சுத்தப்படுத்தியது...

    தொண்டைக் குழி காய்ந்து போனது.. ஈரக்குலை இடும் சத்தம் காதுகளில் கேட்டது... பெருங்குடலுக்குள் பாம்பு புகுந்து நெளிவது மாதிரி இருந்தது...

    --- எழுதி வடிவெடுத்து உருப் பெறப் போகிற கதை அங்கங்கே நின்று நிதானித்து வரிகளாய் தன்னையே சமைத்துக் கொண்ட அதிசயங்கள்..




    பதிலளிநீக்கு
  26. //இந்தப் பக்கம் சிமெண்ட் சாய்மானத்தோட படுக்கைத் திண்ணை..

    அந்தப் பக்கமா பத்துப் பதினைஞ்சு பேர் உட்கார்ந்து பேசும்படிக்கு அகலமா உபசாரத் திண்ணை... //

    ஆஹா.. அக்கால கிராம வீடுகளில் எதிரும் புதிருமா இருக்கற ரெட்டைத் திண்ணைகளின் பெயர்கள் இவை தானா?
    அல்லது இதற்காகத் தானா?.

    எவ்வளவு அனுபவித்து எழுதுகிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  27. கதை முழுவதும் ஒரே மூச்சில் படித்து முடித்ததும் மனசில் பட்டது இதான்:

    காளியாக நின்றிருந்த செவ்வந்தியை மானிட ஜென்மங்களோடு பதிலுக்கு பதில் பேச விட்டிருக்கக் கூடாது.

    வேலை முடிந்தது என்று கறாராக கதையை முடிக்க வேண்டிய இடத்தில் நறுக்குத் தெறித்தாற் போல முடித்திருந்தால்
    கதையாக வடிவெடுத்த கருத்துக்கான எஃபெக்ட் இன்னும் கூடியிருக்கும்.

    வாழ்த்துக்கள், ஐயா.

    பதிலளிநீக்கு
  28. துரை செல்வராஜூ

    //இன்றைய கதையை....

    தர்மம் நம்மைக் காப்பாற்றும்...//

    உங்களின் கதைக்கான முன்னுரை போலவான இந்த விளக்கத்தை இப்பொழுது தான் பார்த்தேன்.

    'தர்மம் வாழ எழுதுகோல் தூக்கிய அன்பு துரையவர்களுக்கு..' என்ற வார்த்தைகள் தன்னிச்சையாக என்னிலிருந்து வெளிப்பட்ட வரிகள்
    என்பதை நினைக்கும் பொழுது மனம் நெகிழ்கிறது.

    'கதையை வாசித்தவரின் உணர்வு போலவே எழுதியவரின் மன உணர்வும் இருந்திருக்கிறது' என்பது அசாதரணமான விஷயம்.

    மனதை விரோதித்துக் கொண்டு எழுதுவதும் பேசுவதும் ரொம்ப சுலபம்.

    மனம் போலவே எழுத்துகள் அமைவது சத்யவான்களுக்குத் தான் சாத்தியம்.

    உங்கள் மன உணர்வுகளை வெளிக்காட்டாது இந்தக் கதையின் பின்னூட்டங்களுக்கு பின்னுரையாக இதை ஆக்கியிருந்திருந்தீர்கள் என்றால் இன்னும் பிரமாதமாக இருந்திருக்கும்.

    வாழ்த்துக்கள், அன்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ சார் கதை ஒவ்வொன்றும் ஒன்றை விட ஒன்று விஞ்சிக்கொண்டே செல்கிறது.  ஜீவி ஸார்...   நீங்கள் சொல்வது போல அவரது எழுத்துகளில் சத்தியம் மிளிர்கிறது.  மனதிலிருந்து வரும் வார்த்தைகள் எழுத்துகளாகின்றன...

      நீக்கு
    2. அன்பின் ஜீவி ஐயா.. தங்களது கருத்துரைகளுக்காக எனது தளத்தில் தனியாக பதிவு ஒன்றைத் தருகிறேன்..

      தங்கள் அன்பினுக்கு நெஞ்சார்ந்த நன்றி.. மகிழ்ச்சி..

      நீக்கு
  29. அருமையான படைப்பு

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Yaripavanan Sir, இப்பொழுதுதான் நான் ஸ்ரீராமிற்கு ஒரு கொரோனா வைரஸ் பற்றிய கட்டுரையையும் ஒரு அர்த்தமுள்ள காணொலியையும் மெல் வழியாக அனுப்பியுள்ளேன். அவர் வெளியிடும்போது மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

      நீக்கு
  30. //ஒரு குஞ்சு குளுவானையும் காணோம்...//
    அது குருமன் இல்லையோ? குளுவான் எனப் புதுசாச் சொல்லிட்டீங்க:))

    //தேன் குடித்த நரி ஆனான்..//
    ஹா ஹா ஹா கர்ர்ர்:)) நரிக்கு தேன் குடிக்கத் தெரியுமோ?:)) என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:)).

    // பெருங்குடலுக்குள் பாம்பு புகுந்து நெளிவது மாதிரி இருந்தது...
    //

    ஹையோ ஹையோ ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா..

      குஞ்சு குளுவான் என்பதே எங்கள் பக்கத்தில் வழக்கம்...

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  31. //'' ஏய்... கிழவி திங்கிறதுக்கு என்னடி வைச்சிருக்கே!... ''
    //
    ஹா ஹா ஹா தேன் குடிச்ச நரி இப்போ என்ன ஆகப்போகுதோ?:))..

    படிச்சிட்டேன் கதையை, ஆஹா அருமை, துரை அண்ணனோடு சேர்ந்து நானும் கிழவியின் மகனைக் கும்மி எடுத்திட்டேன்.. அருமை, இப்படித்தான் ஒவ்வொரு கொடுமை நடக்கும் வீட்டிலும் குலதெய்வம் புறப்பட்டுப் போய் துவைச்சுப் பிழிஞ்செடுக்கோணும்.. அப்போதான் பயம் வந்து., தவறு செய்யாத அப்பாவிப் பெண்களை மதிப்பார்கள்..

    இன்னும் கொஞ்சம் தூக்கித் தூக்கி அடிச்சிருக்கலாமோ கிழவியின் மகனை.. என இருக்கு.. என் ஆவேஷம் அடங்கவில்லை இன்னும்...:)) ஹா ஹா ஹா... நல்லா எழுதியிருக்கிறிங்க துரை அண்ணன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவேசம் அடங்காத அதிரா...

      இந்த அடி அடித்தது போதும்...
      மாண்டு போனவனின் மண்டையைப் பிளந்து ஆகப் போவது என்ன?..

      தவறு செய்தவர்கள் சட்டத்தால் தண்டிக்கப் படாமல் தப்பித்தாலும் தர்மத்திடம் தப்பிக்க் முடிவதில்லை...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  32. வித்தியாசமான கதைக்களம்.
    அருமையான கதை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  33. துரை செல்வராஜ் சார், "தெய்வம் நின்று கொல்லும்" என்பது உங்கள் மயிர் கூச்ச்ரிக்கும் கதையிலிருந்து நிச்சயமாக தெரிகின்றது. ஆயின், கீதா அவர்கள் சொன்னது போல், இன்றைய சூழ்நிலையில் "தெய்வம் அன்றே கொல்கின்றது" என்பதும் அனுபவம் வாயிலாக தெரிகின்றது. அவர்கள் கூறுவது போல், எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் பொது மையங்களில் எழுதக் கூடாது என்பதால் வாய் மூடி இருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      தெய்வம் தண்டிப்பதை எல்லாம் நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை...

      நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை..

      அறம் பிழைத்தார்க்கு அறமே கூற்றாகும் என்பது மட்டும் உண்மை...

      அன்பின் கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  34. நல்ல கதை. இப்படி பல முறை வரவேண்டியிருக்கிறது மா காளி. வந்தால் மகிழ்ச்சி தான்.

    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!