சனி, 7 மார்ச், 2020

பொருத்தமான ஜோடி


1) பொருத்தமான நல்ல ஜோடி.  வாழ்த்துவோமே....2) படிப்பு, உழைப்பு, சாதிப்பு. கோத்தர் பழங்குடி இனப்பெண்ணின் ஆசையும், அசுர வளர்ச்சியும்!  (நன்றி ஏகாந்தன் ஸார்)


==============================================================================================

தமிழ் ஆசிரியை கே.வி. ஜெயஸ்ரீயும் சாஹித்யா அகாடமி விருதும்
ரமா ஸ்ரீநிவாசன் 


நாம் மறுபடியும் பெருமையுடன் தலை நிமிர்ந்து உலகுக்கு பிரகடனம் செய்வோம்.  ஆம்.  எங்கள் மண்ணின் மைந்தர் தமிழ் ஆசிரியை கே.வி. ஜெயஸ்ரீ அவர்கள் சாஹித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருது (தமிழ்) 2019க்கு தேர்ந்தெடுக்கப் பட்டு வெற்றியும் பெற்றுள்ளார் என்பதை.கே.வி.ஜெயஸ்ரீ அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தமிழ் ஆசிரியராக பணி புரிகின்றார்.

அவர் மலையாள எழுத்தாளர், மனோஜ் குரூரின் நாவல் “நிலம் பூத்து மலர்ந்த நாள்” என்னும் புத்தகத்தை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார்.  இந்த மொழிபெயர்க்கப்பட்ட  புத்தகம், "நிலம் பூத்து மலர்ந்த நாள்” வம்சி புத்தகக் கம்பெனியால் வெளியிடப் பட்டுள்ளது.

அவர், “இந்து” நாளிதழிற்கு பேட்டியளிக்கையில், தான் மொழி பெயர்க்கும் புத்தகங்கள் யாவுமே தன் அறிவு வேட்கையை சுண்டி இழுத்தவை என்று கூறியிருக்கின்றார்.  மற்றும் “நான் என்றுமே விருதை நினைத்து கதைகளை மொழிப்பெயர்த்ததில்லை.  ஆயின், இந்த சாஹித்ய அகாடமி விருதை என் உழைப்பிற்க்கு கிடைத்த ஒரு மாபெரும் அங்கீகாரமாகவே கருதுகின்றேன்” என்றும் கூறினார்.  இந்த விருதில் பொறிக்கப் பட்ட ஒரு சாஹித்திய அகாடமி செப்புத் தகடுடன் ரூ.50,000/- பரிசும் அடங்கும்.
இது அவருடைய 12ஆவது மொழிபெயர்ப்பாகும்.

இப்பொழுது அவர் I.A.S. அதிகாரி திரு.கே.வி.மோகன் குமாரின் “உஷ்ணராசி” என்னும் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கின்றார்.

இவருடைய பெற்றோர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

இவரை படிக்கத் தூண்டியதே இவரது தாயாரின் தணியாத படிப்பு வேட்கைதான் என்று கூறுகின்றார்.

“நிலம் பூத்து மலர்ந்த நாள்” சமூக பொருளாதார தாக்கமடைந்த திராவிட நாட்டைப் பற்றிய ஒரு பதிவாகும். சங்க காலத்திலிருந்து பல நூற்றாண்டுகளாக திராவிட நாட்டின் செழிக்கும் அழகிய அகண்ட கடல்களைப் பற்றியும், பச்சை பசேலென பரந்து விரிந்த நிலங்களைப் பற்றியும் பேசும் ஒரு தொகுப்பாகும். அது சங்க காலத்தின் கலைஞர்கள் மற்றும் கவிஞர்களை பற்றியும் அவர்களது வாழ்க்கை முறைகளைப் பற்றியும் விரிவாக பேசுகின்றது.

இந்நாவலைப் படித்து, கிரகித்துக் கொண்டு மிக நேர்த்தியாக மொழி
பெயர்த்திருக்கின்றார் ஜெயஸ்ரீ அவர்கள்.

இவை யாவும் தன் வழக்கமான பள்ளியாசிரியை, குடும்பப் பெண் என்னும் பல வர்ணங்களுக்கு நடுவே பூத்தது என்பதுதான் பிரமிப்பையும் வியப்பையும் நம்மிடம் வரவழைக்கின்றது. பெண்களுக்கு “எங்களாலும் முடியும் தம்பி” என்ற காலம் போய் “எங்களால்தான் முடியும் தம்பி” என்ற காலம் வெகு விரைவில் வரும் என்பதை நான் மிக மிகப் பெருமிதத்துடன் இன்று கூறுகின்றேன்.
( + அனைத்துலக பெண்கள் நாள் : மார்ச் 8 எங்கள் வாழ்த்துகள். )

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருந்தாலும் ஜெயஸ்ரீ அவர்கள் சிறிதும் ஆர்ப்பாட்டமும் அலட்டலுமின்றி தன் வழக்கமான கடமைகளை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருகின்றார்.

நமது தமிழக முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்:  “மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் நாவலை தமிழில், 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்ததற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளருமான  ஆசிரியை கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகள்! அவரது இலக்கிய  பணியும், சாதனைகளும் தொடரட்டும்!” என்று வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர், ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், ராமதாஸ் போன்றோர் அவரை வாயார பாராட்டியிருக்கின்றனர்.

"சாகித்ய அகாடமி விருது பெற்ற சாதனைப் பெண்மணி கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகளும்… பாராட்டுக்களும்… 
பாரதியின் சொற்படி பிற மொழிச் சரித்திரங்களை எட்டுத்திக்கிலும் தேடி தமிழில் மொழிபெயர்த்த சாதனைக்கு விருது” என்று தெலுங்கானா கவர்னர், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கூறியுள்ளார்.

முடிவாக, “பெண் என்பவள் பேசா மடந்தையாக இருக்கவும் தெரியும்; பேசாமலேயே தன் செயலால் அணுவைப் பிளக்கவும் தெரியும்” என்று நிரூபிக்கும் வகையில் தமிழகத்திற்கே பெருமை தேடித் தந்த ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி விடை பெறுகின்றேன்.
                

66 கருத்துகள்:

 1. சனிக்கிழமை இரண்டு செய்திகளுமே
  மிக மகிழ்ச்சியைத் தருகின்றன.
  லட்சிய முனைப்போடு ஒரு கலெக்டர், ஒரு டாக்டர்
  இணைந்து ,திருமணம் செய்து நற்காரியங்களைத் தொடங்குகிறார்கள்.
  சிவகுரு அவர்களுக்கும் திருமதி கிருஷ்ண குமாரிக்கும்
  மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். புதிய செய்திகளைப் பகிர்ந்து கொண்ட ஸ்ரீராமுக்கு நன்றி. திருமதி ஜெயஸ்ரீக்கு விருது கிடைத்தது தெரிந்திருந்தாலும் மற்ற விபரங்களை அளித்த ரமா ஸ்ரீநிவாசனுக்கு நன்றியும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 4. மேற்குறித்த இரு செய்திகளுமே மகிழ்ச்சியைத் தருவன....

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
 5. கோத்தகிரி, குந்தி தேவி தனியாகக் குழந்தைகளை
  வளர்த்து உயரிய நன் மக்களாக வளர்த்திருப்பது
  மிகவும் பாராட்டப் பட வேண்டிய செய்தி.
  சிரமப்பட்டு சிறந்த மருத்துவராகத் தேர்ச்சி
  அடைந்திருக்கும் அவர் மகள் வைத்தீஸ்வரி எல்லா நலனும் பெற்று
  மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்.
  மிக அருமையான செய்திகளை அளித்திருக்கும்
  உங்களுக்கும் நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 6. சாகித்ய அகாடமி விருது பெற்ற
  கே. வி. ஜெயஸ்ரீ அவர்கள் மேலும்
  சிறப்பு எய்த வேண்டும்...

  பதிலளிநீக்கு
 7. திருமதி ரமா ஸ்ரீனிவாசன்,
  வாரா வாரம் சிறந்த பகுதிகளை அளித்து
  அதிசயிக்க வைக்கிறார்.
  மொழிபெயர்ப்பின் வழியாக சாஹித்ய அகாடமி
  விருது பெற்ற திருமதி ஜெய ஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகளும் ,
  மேன்மேலும் இதே போல விருதுகள் பெறவேண்டும்
  என்ற விருப்பத்தையும் தெரிவிக்கிறேன்,.
  நன்றி ரமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாமி, உங்கள் பாசிடிவ் உந்துதலுக்கு மிக்க நன்றி. நான் முன் செக்வதே உங்கள் யாவரின் உந்துதலாலும்தான்

   நீக்கு
 8. சிவகுரு கிருஷ்ணபாரதி தம்பதிகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ஸ்ரீமதி.கே.வி.ஜெயஸ்ரீ அவர்களின் வளர்ச்சியை ஓர் சகோதரனாய் நின்று பெருமிதம் கொள்கிறேன் வாழ்க வளமுடன்.

  //பெண்களுக்கு “எங்களாலும் முடியும் தம்பி” என்ற காலம் போய் “எங்களால்தான் முடியும் தம்பி” என்ற காலம் வெகு விரைவில் வரும்//

  எங்களாலும் முடியும் தம்பி இது தன்மீதும் தனது அறிவாற்றலின் மீதும் வைத்துள்ள தன்னம்பிக்கை போற்றுதலுக்குறியது.

  எங்களால்தான் முடியும் தம்பி  இது சற்றே கர்வமான சொற்பிரயோகமாக இருப்பதாக எனது சிற்றறிவுக்கு எட்டுகிறது.

  இது எதிர்கால உரத்த சிந்தனையாளர்களுக்கு அழகல்ல நான் ஆண்பாலினம் என்ற காரணத்துக்காக இதைக் குறிப்பிடவில்லை பெண்ணினமாக பிறந்திருந்தாலும் இவ்வகையே நான் சொல்லியிருக்க கூடும்.

  காரணம் பெண் சுதந்திரம் வேண்டும் என்பதில் நான் பாரதியைக் காட்டிலும் விசால மனம் படைத்தவன்.

  சமீப காலமாக தங்களது எழுத்துகளை கூர்ந்து படித்து வருகிறேன் ஆக்கப்பூர்வமான சிந்தனை முத்துகளை தூவி வருகின்றீர்கள். வாழ்க வளமுடன்

  என்றும் மாறா... மாற இயலா...
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //எங்களால்தான் முடியும் தம்பி இது சற்றே கர்வமான சொற்பிரயோகமாக இருப்பதாக எனது சிற்றறிவுக்கு எட்டுகிறது.// இது சற்றே கர்வமான சொற்பிரயோகமாக இருந்தாலும், ஏன் உபயோகித்தேன் என்றால், எவ்வளவு தூரம் நாங்கள் அழுத்தப் பட்டோம் என்பதை காண்பிப்பதற்காகவே அன்றி வேரு எந்த உள் நோக்கமும் இல்லை. இதைத் தாண்டி உங்கள்
   சிந்திக்க வைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. சாதித்த எழுத்தாளருக்கும் சாதித்துக் கொண்டிருக்கும் அனைத்து மகளிருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
  இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் தங்கள் வலைத்தளம் உட்பட 12 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது பொருத்தமான ஜோடி பதிவும் எமது தளத்தில் தன்னியக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

  உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

  எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

  முக்கிய குறிப்பு: வாசகர்களின் ஆதரவின்றி எந்த இணையத் தளத்தையும் நடத்த முடியாது. அது போல அனைவரும் தங்கள் ஆதரவை எமது வலைத்தளத்துக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இல்லாவிட்டால் எமது திரட்டியும் மூடப்பட வேண்டிய நிலையையே எதிர்நோக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்தவரை ஆதரவு அளிக்கிறோம். எங்கள் தளத்திலும் சுட்டி கொடுத்துள்ளோம்.

   நீக்கு
 11. பாஸிட்டிவ் செய்திகள் இரண்டிலுமே மருத்துவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது ஒரு ஆச்சர்யம்.
  தனக்கு வரப்போகும் மனைவி ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கண்டீஷன் போட்ட கணவர், அதற்கு ஒப்புக் கொண்ட மனைவி, இளம் வயதில் கணவனை இழந்தாலும், திட மனதோடு குழந்தைகளை ஆளாக்கியிருக்கும் குந்தி தேவி, குடும்பத் தலைவி, பள்ளி ஆசிரியை இந்த பொறுப்புகளோடு மொழிபெயர்புக்கு சாஹித்திய அகாடமி விருது வாங்கியிருக்கும் ஜெயஶ்ரீ என அத்தனை பேருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 13. பாஸிடிவ் செய்திகள் இரண்டும் மிக அருமை.
  நல்ல உள்ளம் உடையவர்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  இல்லாதவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்போம் என்பதே மகிழ்ச்சி தரும் விஷயம். வாழ்த்தி வணங்க வேண்டும் இவர்களை.

  பதிலளிநீக்கு
 14. வைத்தீஸ்வரி பெயர் பொருத்தம் . அவர் அம்மாவின் ஆசையை பூர்த்தி செய்ய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. நல்ல செய்திகள்... சாதனைப் பெண்மணி கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 16. ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  மகளிர்தின வாழ்த்துக்கள்.
  கட்டுரை அருமை.

  பதிலளிநீக்கு
 17. தமிழில் எழுத வராது என்று சொல்லிக்கொண்டே,தமிழில் எழுதிக் குவிக்கும் ரமா ஶ்ரீனிவாசனின் சுறுசுறுப்பு வியப்பூட்டுகிறது. மேலும் வளற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பானு, நான் சிறு வயது முதலே, ஆங்கிலத்தில் கதை, கவிதைகள் எழுதியும், பேச்சு போட்டிகள், கட்டுரை போட்டிகள் என்றே பொழுதை கழித்தவள். இப்போது உங்கள் பாராட்டுக்களும் ஊக்கமும்தான் என்னை இன்னும் மேலே கொண்ட் செல்கின்றது.

   நீக்கு
 18. போற்றத்தக்கவர்களைப் பற்றிய சிறப்பான பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 19. நாளை சர்வதேச மகளிர் தினத்துக்கான சிறப்பா இந்தப் பதிவு. காலம்பரவே கேட்க நினைச்சு மறந்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா அவர்களே, சிறிது யோசித்து கூறுங்கள். நாளை ஒரு நாள் மட்டுமா சர்வதேச மகளிர் தினம். ஒவ்வொரு நாளும் மகளின் தினம்தான். அது அவர்களுக்கும் தெரியும். "கேட்டு வாங்கி போட்ட கதை" போல் நாமும் அவர்களிடமிருந்து கேட்டு மகளிர் தினம் என்று ஒன்றை கேட்டு வாங்கிக் கொள்வது போல் ஒரு பாவலா செய்கின்றோம். நாம் இன்றி அசையாது உலகு. ஆயின், ஆண் இன்றி இயங்காள் ஒரு பெண் என்பதுதான் உண்மை. யாவையும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றது.

   நீக்கு
  2. உண்மையாவே பெண்ணில்லாமல் எதுவும் இயங்காது என்பது உண்மைதான். அவள்தான் குடும்பம் என்ற அமைப்பின் ஆணிவேர்

   நீக்கு
  3. என்னைப் பொறுத்தவரை எந்த தினத்தையும் கொண்டாடுவது இல்லை, திருமதி ரமா! இது ஸ்ரீராமின் பதிவுக்காகக் கேட்கப் பட்ட கேள்வி. அவ்வளவே!

   நீக்கு
 20. சப் கலெக்டர் சிவகுரு பிரபாகரன் பெற்ற வரதட்சிணையை நானும் படித்தேன். அவருக்கும் டாக்டர் வைத்தீஸ்வ‌ரிக்கும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற தமிழ் ஆசிரியை கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 21. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  இன்றைய செய்திகள் அனைத்தும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 22. என் கட்டுரை இருக்கட்டும். ஏகாந்தன் சார், வாய் திறக்காமல் அளித்த இரண்டு பாசிடிவ் செய்திகளும் நம்மை நின்று சிந்திக்க வைக்கின்றன. way to go ஏகாந்தன் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் என்ன செய்துவிட்டேன் !
   விகடன் எழுதியதை ஏதோ ஸ்ரீராமின் மேலான பார்வைக்குக் கொண்டு வந்தேன். அதுவும் இரண்டாவது கதைதான். இரண்டு செய்திகளுமல்ல.

   நீக்கு
 23. நல்ல இரு செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி பரிசைப் பெற்றவருக்குப் பாராட்டுகள்.

  எங்களால்தான் முடியும் தம்பீ --- வர வர இந்தப் பெண்ணியவாதிகளின் தவந்தரவு தாங்கமுடியலைடா சாமீ... ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
 24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 25. /“நிலம் பூத்து மலர்ந்த நாள்” சமூக பொருளாதார தாக்கமடைந்த திராவிட நாட்டைப் பற்றிய ஒரு பதிவாகும்.. //

  திராவிட நாடா?.. கேள்விப்பட்டதேயில்லையே! 'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நூலில் அப்படி ஒரு நாடு இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா, என்ன?.. இல்லை, கற்பனையில் பூத்த தேசமா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூல நூலின் ஆசிரியரா, மொழியாக்கம் செய்தவரா, இங்கு இந்த நூல் பற்றி சில குறிப்புகள் கொடுத்துள்ள
   திருமதி ரமா ஸ்ரீநிவாசனதா -- யாருடைய கூற்று சங்க கால 'திராவிட நாடு' பற்றிய சொல்லாடல் என்று தெரியவில்லை.
   தெரிந்தால் நூலை வாங்கி வாசிக்க ஆர்வம் ஏற்படும். திருமதி ரமா ஸ்ரீநிவாசன் இது பற்றிச் சொன்னால் தேவலை.

   நீக்கு
 26. வணக்கம் சகோதரரே

  இவ்வார பாஸிட்டிவ் செய்திகள் நல்ல செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

  சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்கள் கட்டுரையும் மிக அழகாக எழுதியுள்ளார் அவருக்கும் பாராட்டுகள். கட்டுரையில் சாகித்திய அகாடமி பரிசு பெற்றவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்ந்த தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 27. காலை வணக்கம் சகோதரரே

  இன்றைய நாளின் ஞாயறு பதிவு தாமதமாகிறதே.. ஏன் என்ற காரணம் தெரியவில்லை. விரைவில் வெளி வந்தால் சந்தோஷமடைவேன்.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
 28. பதில்கள்
  1. கணினி சரி இல்லாததால் பிரச்னை அக்கா... கேஜிஜியிடம் சொல்லி இருக்கிறேன். விரைவில் வெளியாகும்.

   நீக்கு
 29. அன்பின் சகோதரிகளுக்கு மகளிர் தின வாழ்த்துகள். கமலாமா நானும் காத்திருக்கிறேன். அன்பு வாழ்ததுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரும் அம்மா... விரைவில் வெளியாகும். நெகட்டிவ் இன்னும் சரியாகக் காயவில்லையாம்... ஹா... ஹா.... ஹா...

   நீக்கு
  2. வணக்கம் வல்லி சகோதரி

   தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள். தங்களுக்கும் என் அன்பான மகளிர் தின நல்வாழ்த்துகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 30. சாரி ---- மறந்துட்டேன்! இப்போதான் publish செய்தேன். நேயர்கள் மன்னிக்கவும்!

  பதிலளிநீக்கு
 31. மகளிர்நாளில் சாதனை பெண்களின் தொகுப்பு சிறப்பு அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!