சனி, 14 மார்ச், 2020

பாஸிட்டிவ் டாக்டர்



1)  சின்னவயதிலேயே குழந்தைகளுக்கு இவைகளை சொல்லிக்கொடுப்பதும், வழக்கப்படுத்துவதும் நல்ல செயல்.  

பறவை இனங்களின் தாகத்தை போக்கும் முயற்சியில், திருப்பூர் மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், களம் இறங்கி இருக்கிறார்கள்.இதற்காக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து அகன்ற களிமண், எவர்சில்வர் பாத்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.






2)  ஏழை குடும்பத்தில் பிறந்து, 12 வயதில் பெற்றோரை இழந்து, டாக்டர் ஆக வேண்டும் என்ற மன உறுதியுடன், நன்றாக படித்து, இந்திய ராணுவத்தில் டாக்டராக பணியாற்றும் கிருஷ்ணவேணி: 



கரூர் மாவட்டம், சமத்துவபுரம் தான் சொந்த ஊர். அப்பா, வெற்றிலை வியாபாரம் செய்து வந்தார். எனக்கு ஓர் அண்ணன் இருக்கிறார். எனக்கு, 12 வயதாக இருக்கும் போது, எச்.ஐ.வி., நோய் பாதிப்பு ஏற்பட்டு, பெற்றோர் இறந்து விட்டனர்.பாட்டியின் கவனிப்பில், நானும், அண்ணனும் வளர்ந்து வந்தோம். இரண்டாண்டில் பாட்டி இறந்ததும், உறவினர்கள் யாருமே இல்லாத நிலை ஏற்பட்டது. நான் நல்லா படிப்பேன். அதனால், என்னை படிக்க வைக்க, கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து, அண்ணன் சம்பாதித்தார்.பத்தாம் வகுப்பு படித்த போது தான், எங்கள் பெற்றோர் இறந்ததன் காரணத்தை அறிய முடிந்தது. அவர்களுக்கு நேர்ந்தது போல, வேறு யாருக்கும் வரக் கூடாது என நினைத்து, டாக்டராக வேண்டும் என, முடிவு செய்தேன். அதற்காக, கடினமாக படித்தேன். பத்தாம் வகுப்பில், பள்ளியின் இரண்டாவது மாணவியாக வந்தேன்.

பிளஸ் 2 வில், 1,200 மதிப்பெண்ணுக்கு, 1,144 மதிப்பெண் எடுத்தேன். மருத்துவம் படிக்க, 'கட் - ஆப்' மதிப்பெண், 197 வேண்டும். 0.5 மார்க் குறைந்ததால், அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்க, 'சீட்' கிடைக்கவில்லை. நடிகர் சிவகுமார் நடத்தி வரும், 'அகரம்' பவுண்டேஷன் பற்றி கேள்விப்பட்டு, அவர்களை அணுகினேன்; நிதியுதவி அளித்தனர்.அதுபோல, முகம் தெரியாத பலர், பல விதங்களில் உதவி செய்ததால், டாக்டர் ஆகி விட்டேன். இந்திய ராணுவத்தில், டாக்டர் வேலைக்கு விண்ணப்பித்தேன். 'மெடிக்கல் டெஸ்ட், பிட்னஸ் டெஸ்ட்' போன்ற அனைத்திலும் தேர்வாகி, வேலை கிடைத்த பிறகு தான், அண்ணனிடமே சொன்னேன்.

பத்து ஆண்டுகளாக, பல காரணங்களால் கல்லாகிப் போயிருந்த என் அண்ணன் முகத்தில், அன்று தான் சிரிப்பை பார்த்தேன். எனக்காக, பத்தாண்டுகளாக, ஏகப்பட்ட சிரமங்களையும், துன்பங்களையும் அனுபவித்த அண்ணனுக்கு, திருமணம் செய்து வைத்துள்ளேன்.'ராணுவம் எல்லாம் வேண்டாம்; எப்பவும் என் கூடவே இருக்க வேண்டும்' என கூறி, வேலையை விடச் சொன்னார். நான் விளக்கி கூறினேன்; ஏற்றுக் கொண்டார். என்னைப் போல உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என, படிக்கும் போதே முடிவு செய்து விட்டேன். அதனால், தேவைப்படுவோருக்கு உதவுகிறேன்; கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்துகிறேன். குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்க விரும்புகிறேன். சமூகத்தால் ஒதுக்கப்பட்டோருக்கு, கல்வி தான் மேன்மையைத் தரும் என்பதை அறிந்து, பிறருக்கும் சொல்கிறேன்!  (நன்றி தினமலர்)

=====================================================================================================


சஜங்கர் அரண்மனை அல்லது மழைக்கால அரண்மனை
ரமா ஸ்ரீநிவாசன் 


“ஒரு நினைவு என்பது நம் மனதில் புதையுண்டிருக்கும் ஒரு புதையல். அதைச் சுற்றிதான் நம் நினைவு சின்னங்கள் வைத்துப் பாதுகாக்கப் படுகின்றன” --  பேரறிஞர் தாமஸ் பூலர்.

ஒவ்வொரு அரண்மனைக்கும் தன்னுடைய மன்னரைப் பற்றியும், அவருடைய குடும்பத்தைப் பற்றியும், அவருடைய மக்களைப் பற்றியும் ஒரு அழியாக் கதை இருக்கும்.

அந்த வரிசையில் வருவதுதான் சஜங்கர் அரண்மனை என்பதும். இந்த அரண்மனையானது மேவாரின் வீர மஹாராணா சஜன் சிங் (1859-1884) அவர்களால் தொடங்கப் பட்டதால் அவர் பெயர் கொண்டே திகழ்கின்றது. 

பாதி முடியும் தருவாயில் மஹாரானா சஜன் சிங் 1884ல் இயற்கை எய்தியதால்,  அவரது வாரிசு மஹாராணா ஃபடே சிங் அவர்களால் முழுமையாக கட்டி முடிக்கப் பட்டது.




இந்த அரண்மனை ஆரவல்லி மலைத் தொடரின் உச்சியில் பன்ஸ்தாரா மலை உச்சியில் உதய்பூரிலிருந்து 5 km தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 3100 அடி உயரத்தில் இருக்கின்றது.



மிக உச்சியில் இருப்பதால், இந்த அரண்மனையிலிருந்து மேகக் கூட்டங்களையும் மழைக் கோப்பான காலநிலையின் அற்புதத்தையும் நிதானமாக ரசிக்கலாம்.




இந்த அரண்மனையிலிருந்து படே சாகர் ஏரியையும், நகர அரண்மனை என்னும் அம் மன்னரின் புராதன அரண்மனையையும் கிளி கொஞ்ச ரசிக்கலாம்.

இந்த அரண்மனையின் விசேஷம் என்னவென்றால், இது முழுமையாக வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளது.

இவ்வரண்மனையின் அடித்தளம் அழகிய பூக்களும் இலைகளும் செதுக்கப் பட்ட பளிங்குத் தூண்களின் மேல் நிற்கின்றது.

சுவர்கள் சுண்ணாம்பு சாந்துக் கலவையால் பூசப் பட்டுள்ளன.



ஒரு பிரம்மாண்டமான நடுவாந்திர மண்டபத்திலிருந்து சித்திர வேலைப்பாடுடைய படிகள் மேலே செல்ல, சுற்றிலும் உக்கிராண அறைகளும், பொழுதுபோக்கு அறைகளும் கட்டப் பட்டுள்ளன.

அரண்மனையைச் சுற்றியுள்ள குவி மாடங்களும் நீருற்றுக்களும் நேர்த்தியான ராஜஸ்தானிய கட்டிட வேலைப்பாட்டின் அற்புதங்களாகத் திகழ்கின்றன.

சஜங்கர் அரண்மனையின் கதை : இவ்வரண்மனை மேவாரின் வீர மஹாராணா சஜன் சிங் (1859-1884) அவர்களால் தொடங்கப் பட்டது. உதய்ப்பூர் நகரத்தின் மேன்மையான கலாச்சாரத்தை வளர்க்கவும், போற்றவும் அவர் அசாதாரண பங்களித்தார் என்றால் அது மிகையாகாது.

அந்நாளைய மன்னரின், மக்கள் சேவையை இந்த அரண்மனையின் கட்டமைப்பிலிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு சொட்டு மழை நீரும் ஒவ்வொரு மாடியின் மேல் கட்டப் பட்டிருக்கும் தொட்டியில் சேகரிக்கப் பட்டு மக்களுக்கும் அரண்மனை உபயோகத்திற்கும் அளிக்கப் பட்டது. இதைத் தாண்டியும் விழும் மழை நீர் கட்டிடத்திலேயே அமைக்கப் பட்ட குழாய்கள் வழியாக நிலத்தடி நீர் தொட்டிகளைச் சென்றடைந்து சேகரிக்கப் பட்டது.  1,95,500 லிட்டர் நீர் வரை  சேமிக்கப் பட்டு, அரண்மனைவாசிகளின் தேவைக்கு உபயோகிக்கப்பட்டு வந்தது என்பதை அவ்வரண்மனையில் வரலாறு மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்கின்றோம்.

இதில் ஆச்சரியத்திற்கும் வியப்பிற்குமான செய்தி என்னவென்றால், இன்று வரை இந்த அரண்மனையில் எந்த பழுது பார்க்கும் வேலையோ பராமரிக்கும் வேலையோ நடை பெற்றதில்லை என்பதுதான்.




இவ்விதத்தில், இந்த கட்டமைப்பின் சூத்திரமே இன்றைய கட்டிட வல்லுனர்களுக்கு ஒரு மிகப் பெரிய புதிராக இருக்கின்றது என்பதுதான் உண்மை.

மஹாரானா சஜன் சிங்கும் மஹாராணா ஃபடே சிங்கும் அணைகளையும், சாலைகளையும், நீர் நிலைகளையும் கட்டடப் பணிகளையும் செவ்வனே தொடங்கி முடிக்கவும் முடித்தார்கள் என்பதற்கு இந்த ஒரு அரண்மனையே சாட்சியாகும்.

19ஆம் நூற்றாண்டில் மஹாரானா சஜன் சிங்கின் தலைமையில் உதய்ப்பூர் இந்தியாவின் இரண்டாவது நகராட்சியாக முடி சூட்டப் பட்டது. விக்டோரியா ராணியின் முடி சூட்டு விழா நவம்பர் 1881ல் கொண்டாடப் பட்ட போது, மஹாராணா சஜன் சிங்கிற்கு “கிராண்ட் கமாண்டர் ஆப் தெ ஸ்டார் ஆப் இந்தியா” என்ற பட்டம் ரிப்பன் துரையால் சூட்டப் பட்டது.

சஜங்கர் அரண்மனையின் அருகில் மிக அழகு கொஞ்சும் படே சாகர் ஏரியும், ஏரி அரண்மனை, நகர அரண்மனை மற்றும் சஜங்கர் உயிரியல் பூங்கா ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்கள்.




சஜங்கர் அரண்மனையை பற்றிய சுவாரசியமான தகவல்கள் 

1. சூரிய அஸ்தமனக் காட்சி இந்த அரண்மனையின் ஒரு தவற விடக் கூடாத ஒன்றாகும். அஸ்தமனத்தின் போது, அரண்மனை முழுதாக ஒரு பொன்னிற ஆரஞ்சு வர்ணத்தில் மூழ்கப் படுவதை பார்ப்பதற்கு தெய்வீகமாக இருக்கும்.

2. “ஆக்டபசி” என்ற ஜேம்ஸ் பாண்ட் ஆங்கில படத்தில் இந்த அரண்மனைதான் ஆப்கானிய இளவரசின் தங்குமிடமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.

3. இந்த அரண்மனை தினம் இரவுகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு ஒரு தேவலோகம் போல் மாறுபட்டு காணப் படுகின்றது.  சஜங்கர் அரண்மனையை சுற்றி பார்க்க செல்லும்போது, மனதில் கொள்ள வேண்டிய முக்கிய விவரங்கள் :

அ. உங்கள் புகைப்பட கேமராவை மறக்காமல் எடுத்துச் சென்று அங்கு காணப்படும் ஆச்சரியத்திற்குரிய இயற்கைக் காட்சிகளை படம் பிடித்து மகிழுங்கள்.

ஆ.  இங்கு தட்ப வெட்ப நிலை மிகவும் வெப்பமாகவும் அதே சமயம் ஈரப்பதம் மிக்கதாகவும் இருப்பதால் நல்ல வசதியான காட்டன் உடைகளையும் ஷூக்களையும் அணிந்து கொள்ளுங்கள்.  இந்த மொத்த அரண்மனையையும் பார்த்து முடிப்பதற்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும்.  

இ. தப்பித் தவறி கூட சப்புக் கொட்டும் சுவையான உணவுகளை உண்ணாமல் கோட்டை விட்டு விடாதீர்கள்.

ஈ. அருகில் உள்ள ஏனைய கோவில்களுக்கும் போட்டிங் சுற்றுப் பயணங்களுக்கும் சென்று மகிழுங்கள். 

உ. இவை யாவையையும் மிக எளிதாக உதய்ப்பூர் சுற்றுப் பயணத் தொகுப்புகள் அரசு வழியாகவோ அல்லது தனியார் இயக்கங்கள் வழியாகவோ வழங்குகின்றன. அவைகளை அணுகி உங்கள் சுற்றுலா பயணத்தை சுவையுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

நண்பர்களே, பிரபல திரைப்பட பாடல் போல், “என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்; ஏன் கையை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்”.  பொன்னான இந்திய நாட்டின் பிரமிக்கவும், அதிசயிக்கவும் வைக்கும் அனைத்து இடங்களையும் முதலில் கண்டு களியுங்கள். பின்னர், வெளி நாடுகளுக்கு படையெடுங்கள் என்று கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

43 கருத்துகள்:

  1. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும்...

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதே குறளை முன்பு ஒரு முறை பகிர்ந்திருக்கிறீர்களோ? நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் நினைவு கூர்வதில் தவறில்லைதான்.

      நீக்கு
  2. சஜங்கர் அரண்மனையைப் பற்றிய தகவல்கள் வியப்பூட்டுகின்றன...

    அதன் கட்டுமானத்தின் நுட்பம் இன்றைக்கும் கட்டிட வல்லுனர்களுக்கு மிகப்பெரிய புதிர் என்ற வரிகள் வேறு வேறு சிந்தனைகளைத் தூண்டி விடுகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இது வரை செல்லவில்லை துரை சார். எனது ஆணையர் (Chief Commissioner) தன் அக்கா மகன் திருமணத்திற்காக உதயப்பூர் சென்றபோது அங்கு சென்றுள்ளார். அவர்கள் புகைப்படங்களை கண்டவுடன் நம் பிளாகில் எழுதி நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற ஒரு உத்வேகத்தில் உடனே கட்டுரையாக்கி விட்டேன். இன்றைய கட்டிட வல்லுனர்கள் (theoretical) புத்தக ஞானம் உள்ளவர்கள். அன்றய வல்லுனர்கள் விழுந்து புரண்டு வாழ்க்கை கல்வியாக கற்று கொண்டவர்கள் என்று எனக்கு தோன்றுகின்றது.

      நீக்கு
  3. அனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். உதய்பூருக்கு எழுபதுகளில் சென்றோம். மூன்று நாட்கள் தங்கி இருந்தோம். நகரத்தில் உள்ள அரண்மனையில் பக்த மீராபாய் தன் கைகளால் எழுதிய பஜன் பாடல்கள் அடங்கிய சுவடிகளைக் காட்சிக்கு வைத்திருப்பார்கள். ஹிந்தி தெரிந்தவர்களால் எளிதில் படிக்க முடியும். ஏரிக்குள்ளே இருக்கும் அரண்மனையின் ஒரு பகுதி அப்போதே நக்ஷத்திர விடுதியாக ஆகி இருந்தது. இன்னொரு பகுதியில் அரச குடும்பத்தார் இருந்தனர். இரண்டாம் முறையாக ராஜஸ்தான் போனப்போ உதயப்பூர் போக முடியலை.

    பதிலளிநீக்கு
  4. கிருஷ்ணவேணியின் உள்ள உறுதியை பாராட்டுவோம்.

    அரண்மணையை காணத்தூண்டும் எழுத்தின் வலிமை வாழ்த்துகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  5. ராணுவ மருத்துவர் குறித்த செய்தி புத்தம்புதியது. அவருக்கும் அவருடைய உன்னதமான கருத்துகளுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. ரமா ஸ்ரீநிவாசனின் சுருக்கமான கட்டுரை எல்லாவிஷயங்களையும் தொட்டுச் செல்கிறது.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    குழந்தைகள் செய்திருக்கும் பறவை வீடுகள், குடிதண்ணீர்
    குடிக்க ஏற்பாடுகள் மிக அருமை.
    போற்றப்பட வேண்டிய குடும்பம் கிருஷ்ணவேணியுடையது.
    அவர் அண்ணனின் தியாகம் அளப்பரியது.
    இந்த ஒரு தீவிர லட்சியம் ,அவரை இந்த உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது.

    மேலும் மேலும் வளம் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. சஜ்ஜன்பூர் அரண்மனை , விவரங்கள்
    மிக அருமை.
    அதுவும் தண்ணீர் சேமித்த வரலாறு
    வியக்க வைக்கிறது.
    கண்களுக்கும் விருந்து.
    படைத்த ரமா ஸ்ரீனிவாசனுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லி மாமி, "நீரின்றி விளங்காது உலகம்" என்ற வாசகத்திற்கேற்ப அன்றே தண்ணீரை சேமிக்கும் வரலாறு ஆரம்பித்து விட்டது. நடுவில் வந்த நாம்தான் அதை அற்யாதது போல் நடித்து வீண் செய்தோம். இதோ இப்போது அனுபவிக்கின்றோம்.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

    இவ்வார பாஸிட்டிவ் செய்திகள் நல்ல செய்திகள்.

    பறவைகளுக்கு குடிநீர் வைத்து தொண்டு செய்யும். குழந்தைச் செல்வங்களை வாழ்த்துவோம்.

    மன உறுதியுடன் படித்து மருத்துவராகி இருக்கும் கிருஷ்ணவேணி அவர்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அன்புக்கு அடையாளமாக இருந்த அவரது அண்ணனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் கட்டுரை மிக நன்றாக உள்ளது.அரண்மனை பற்றிய விரிவுகள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன். சஜங்கர் அரண்மனை குறித்து அவர் எழுதியிருக்கும் கட்டுரை படிக்க ஸ்வாரஸ்யமாக இருப்பதுடன் எப்போது இதையெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற ஆவலையும் தூண்டி விடும் வண்ணமாக உள்ளது. இதைப் படிக்க தந்த சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும்தான் கமலா அவர்களே. வீட்டில் வயது முதிர்ந்தவர் (ஏன் மாமியார்) உள்ளதால் வெளி மாநில பிரயாணம் எல்லாம் மிக மிக கடினம். ஆயினும் எழுதியாவது தீர்த்துக் கொள்ளலாம் என்று எழுதி விட்டேன். நாம் இருவரும் சென்று சஜங்கர் அரண்மனையை காண இறைவனை வேண்டுவோம்.

      நீக்கு
  10. அனைவருக்கும் காலை வணக்கம். கிருஷ்ணவேணியை பாராட்டுகிறோம். நிஜமான பாசமலரான அவருடைய அண்ணனுக்கு வணக்கங்கள்.
    பறவைகளுக்கு உணவும்,நீரும் வழங்கும் பள்ளிக் குழந்தைகள் வாழ்க!

    பதிலளிநீக்கு
  11. சஜ்ஜன்பூர் அரண்மனை பற்றிய விவரங்கள் தெளிவு! புகைப்படத்தில் இருப்பது ரமாவும்,ஶ்ரீனிவாசனும் இல்லை என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை பானு. அவர் என் ஆணையரும் அவர்து துணைவியாரும். எங்களுக்கு மிகவும் நெருங்கிய குடும்பம்.

      நீக்கு
  12. //என்னைப் போல உதவி தேவைப்படுவோருக்கு உதவ வேண்டும் என, படிக்கும் போதே முடிவு செய்து விட்டேன். அதனால், தேவைப்படுவோருக்கு உதவுகிறேன்; கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்துகிறேன்// இதைதான் social responsibility என்கிறோம். இந்த நுட்பம் இவருக்கு இவ்வளவு இளம் பருவத்தில் வந்ததற்கு காரணம் ஒரு மன வலி என்பதுதான் வருந்த தக்கது. என்னும் இனி அவர் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  14. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் சிறப்பு.

    சாஜன் கட்(ர்) பற்றி நானும் எனது பக்கத்தில் எழுதியதுண்டு. நினைவூட்டும் விதமாக இங்கே அதன் சுட்டி...

    http://venkatnagaraj.blogspot.com/2018/07/blog-post_25.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார், உங்கள் சுட்டிக்குள் சென்று படித்தேன். 2018லேயே உங்களுக்கு அவ்வரண்மனையை காணும் அதிர்ஷ்டம் கிட்டி விட்டது. நாங்கள் இன்னும் காத்திருக்கின்றோம். நாங்களும் செல்வோம் என்று நம்புகின்றேன்.

      நீக்கு
    2. அட? ஆமாம் இல்ல? வெங்கட் இன்னும் விரிவாக எழுதிப் படித்த நினைவும் இருக்கு! அங்கே தானே பாதாம் மில்க் ஷேக் சாப்பிட்டீங்க வெங்கட்? இதுக்காகவே ராஜஸ்தான் போகணும் போல இருக்கு! :)

      நீக்கு
  15. அகரம் மேலும் சிறக்கட்டும்...

    சஜங்கர் அரண்மனையின் தகவல்கள் வியக்க வைக்கின்றன...

    மழை நீர் சேகரிப்பு மற்றும் பயன்பாடு, மிகவும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களே வியக்க வைக்கும்போது, பார்த்தால் எப்படி இருக்கும். போய் வாருங்கள் சார். மகிழ்ந்து திரும்பி வந்து எங்களுக்கெல்லாம் கதை சொல்லி மகிழ்வியுங்கள்.

      நீக்கு
  16. பல்சுவை தொகுப்பு அருமை.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 14 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது பாஸிட்டிவ் டாக்டர் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    பதிலளிநீக்கு
  17. அருமையான அரண்மனை. பார்க்கவேண்டிய இடம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் சார். எழுதி எழுதி நன்றாக தேர்ச்சி பெற்று வருகின்றேன்.

      நீக்கு
  18. @ ரமா ஸ்ரீனிவாசன்:

    நீங்கள் கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டியிருக்கும் நபர் Thomas Fuller என்று நினைக்கிறேன். இப்படி ஒரு வெளிநாட்டுப் பிரபலத்தைக் குறிப்பிட நேர்கையில், அவரது பெயரை தமிழில் எழுதுவதோடு, ஆங்கிலத்திலும் brackets-ல் தந்துவிடுங்கள். இல்லாவிடில் வாசகர்கள், ஆளாளுக்கு தவறாக மனதில் உச்சரித்துப் பார்க்க வாய்ப்புண்டு!

    தாமஸ் ஃபு(ல்)லரின் காலத்திற்கேற்ற ஒரு ‘quote’ இங்கே :

    "ஆரோக்யம் மதிக்கப்படுவதில்லை - வியாதி கிட்ட நெருங்கும் வரை..!"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருத்தங்களுக்கு நன்றி ஏகாந்தன் சார். நம் பிளாக் ஒரு குடும்பம் போல் செயல் படுகின்றது என்பது ஒரு உண்மையான வாக்கு. நீங்கள் வெகு சுலபமாக என்னை கிண்டல் செய்திருக்கலாம். ஆனால் வெகு சிரத்தையுடன் என் தவறுகளை சுட்டி காட்டி திருத்துகின்றீர்கள். மிக்க நன்றி. அங்குதான் நீங்களும் இந்த பிளாகின் மற்றவரும் தனித்து நிற்கின்றீர்கள்.

      நீக்கு
    2. எல்லோரும் படிக்கும் ஒரு கட்டுரை இன்னும் சரியாக அமைந்தால் நன்றாக இருக்குமே என்கிற சிந்தனையில்தான் எழுதினேன்.
      கிண்டல் செய்வது இன்றைய நோக்கமல்ல- சில சமயங்களில் எபி குடும்பத்தினரோடு விளையாடுவதுண்டு என்றாலும்!

      நீக்கு
  19. இன்னொன்று குறிப்பிட மறந்தேன்: அந்த வாரிசு Maharana Fateh Singh -பெயரின் சரியான உச்சரிப்பு ’ஃப(த்)தே சிங்’. ‘ஃபடே சிங்’ அல்ல.

    பதிலளிநீக்கு
  20. இரண்டு செய்திகளும் மிக அருமை.
    பறவைகளின் தாகம் தீர்க்கும் குழந்தைகள், ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
    டாகடர் கிருஷ்ணவேணிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  21. சஜங்கர் அரண்மனையின் கதை அருமை.

    //ஒவ்வொரு சொட்டு மழை நீரும் ஒவ்வொரு மாடியின் மேல் கட்டப் பட்டிருக்கும் தொட்டியில் சேகரிக்கப் பட்டு மக்களுக்கும் அரண்மனை உபயோகத்திற்கும் அளிக்கப் பட்டது. இதைத் தாண்டியும் விழும் மழை நீர் கட்டிடத்திலேயே அமைக்கப் பட்ட குழாய்கள் வழியாக நிலத்தடி நீர் தொட்டிகளைச் சென்றடைந்து சேகரிக்கப் பட்டது. 1,95,500 லிட்டர் நீர் வரை சேமிக்கப் பட்டு, அரண்மனைவாசிகளின் தேவைக்கு உபயோகிக்கப்பட்டு வந்தது என்பதை அவ்வரண்மனையில் வரலாறு மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறிந்து கொள்கின்றோம்.//

    அரண்மனையில் மழை நீர் சேகரிப்பு மனதை கவர்ந்து விட்டது. இப்படி குடியிருப்புகள் எல்லாம் மழை நீரை சேகரித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

    அருமையான கட்டுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அவர்களே, நாம்தான் குழாயை திறந்து விட்டு தண்ணீர் கொட்ட கொட்ட பல் தேய்க்கும் வர்கம் ஆயிற்றே. "என்று தணியும் இந்த சுதந்திர தாகம்" போல "என்று மாறும் இந்த மூடர்களின் வழக்கம்" என்று பாட வேண்டியதுதான்.




      நீக்கு
  22. மற்றொரு செய்தியை இங்கு முன் வைக்கின்றேன். என் இரண்டாவது பெண் பூனா சிம்பயாஸிஸ் சட்டக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கின்றாள். இப்போது அங்கு corona virus தாக்கம் அதிகரித்து விட்டதால் அரசே விடுமுறை கொடுத்து அனைத்து மாணவர்களையும் வீடு செல்ல உத்தரவிட்டிருக்கின்றது. நாள வருகின்றாள். நிம்மதியாக இருக்கின்றது. இதை மேற் கோளாகக் கொண்டு யாவரும் மிக protected மற்றும் ஜாக்கிரதையாகவும் இருந்து கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  23. அன்பு ரமா, குழந்தை நலமாக இருக்கட்டும். இங்கேயும் பள்ளிகளும்,கல்லூரிகளும் மூடி வருகிறார்கள்.
    இந்தியாவிலிருந்து வந்து படிக்கும் மாணவர்கள் அவதி இல்லாமல் சென்று வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
    மருத்துவர்களுக்கு இன்னும் அதிகக் கவனமும்
    இறைவன் அருளும் வேண்டும்.
    சீக்கிரமே இந்த வைரஸ் உலகத்தைத் தன் பிடியில் இருந்து விடுவிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  24. இனிய நேர்மறையான செய்திகளை பகிர்ந்ததற்கு நன்றி ஸ்ரீராம். இயற்கையை காக்க குழந்தைகள் செய்யும் முயற்சியில் அவர்களுக்காக நாமும் இணைய வேண்டும்.

    மருத்துவர் கிருஷ்ணவேணி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். இத்தனை தடைகளையும் தாண்டி சீரிய நோக்கோடு மருத்துவராகப் பணியாற்றும் அவரை வியந்து வணங்குகிறேன். அவரின் அண்ணனுக்கும் நன்றி சொல்லவேண்டும். அகரம் சூர்யாவிற்கும் உதவிய பலருக்கும்.

    சஜன்பூர் அரண்மனை அழகும் வியப்பும்! நீங்கள் சொல்வது சரிதான் நானும் நினைப்பதுண்டு நம்ம ஊரிலேயே எத்தனை இடங்கள் ! அதுவும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் பல இருக்கின்றன!



    பதிலளிநீக்கு
  25. இந்திய ராணுவத்தில் டாக்டராக பணியாற்றும் கிருஷ்ணவேணி அவர்கள், ஏனையோருக்கு முன்மாதிரி.
    அவரைப் பாராட்டுவதோடு, மற்றைய சாதனையாளர்களையும் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!