திங்கள், 20 ஜூலை, 2020

"திங்க"க்கிழமை :  பீன்ஸ் பருப்பு உசிலி - ரமா ஸ்ரீநிவாசன் ரெஸிப்பி 

பீன்ஸ் பருப்புசிலி
ரமா ஸ்ரீநிவாசன் 


பருப்புசிலி என்பது நம் வீடுகளில் பெரியவர்கள் அடிக்கடி சமைக்கும்
சுவையான பண்டமாகும்.  இக்காலத்தின் வேகத்தையும் பணி புரியும்
பெண்களின் அவசரத்தையும் மனதில் கொண்டு இப் பண்டம் இந்நாட்களில்
விருந்துகளுக்கு மட்டுமே கொண்டாடப்படும் ஓர் அரிய உணவாக மாறி
விட்டது!

இந்த கோவிட்டின் வேண்டா வருகையினால் யாவரும் வீடடங்கி
இருக்கும் நிலையில் ஏதோ வித்தியாசமாக சமைப்போமென்று என் அம்மா
கற்று கொடுத்தாற் போல் சமைத்தேன். அருமையாக வந்தது. கடவுள்
சித்தம் என் அதிர்ஷ்டம்.

வேண்டிய பொருட்கள் : (நான் மூன்று பேருக்கு அளவு கூறியுள்ளேன்)

பீன்ஸ் : ¼ கிலோ

துவரம்பருப்பு : ஒரு காபி டவராவில் ¾ பங்கு. (நல்ல சுடும் நீரில் ½ மணி நேரம் ஊற வைக்கவும்)

சிவப்பு மிளகாய் : 5 (இவைகளையும் து.பருப்புடன் ஊற வைக்கவும்)
உப்பு : தேவைக்கேற்ப
பெருங்காயம் : ஓர் சிட்டிகை
மஞ்சள் பொடி : ஓர் சிட்டிகை
கருவேப்பிலை : 10 இலைகள்
எண்ணெய்  : 6 டீஸ்பூன்கள்

செய்முறை :

எங்கள் வீட்டில் பெரியவர்கள் உள்ளதால், பீன்ஸை முதலில் குக்கரில்
நன்றாக வேக வைத்து வடி தட்டில் வடி கட்டி வைத்து விட்டேன். நீங்கள்
உங்கள் சௌகரியத்திற்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.



பின்னர் நன்றாக ஊறிய துவரம்பருப்பையும் மிளகாய்களையும் சிறிது
நீர் சேர்த்து நன்கு மசிய அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள். மிகவும் நீர்க்க
இருக்கக் கூடாது.

இப்போது, வாணலியை அடுப்பில் வைத்து, சிறிது சுட்ட பின் இரண்டு
டீஸ்பூன்கள் எண்ணெயை விட்டு சிறிது கடுகு, ½ ஸ்பூன் உளுத்தம்பருப்பு
ஆகியவை சேர்த்து பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். அதற்குள் கடுகும்
வெடித்து விடும்.

இப்போது வாணலியில் மேலும் இரண்டு டீஸ்பூன்கள் எண்ணெய் சேர்த்து
அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாகக் கிளறவும். முதலில்
வாணலியின் பக்கங்களில் ஒட்டிக் கொண்டாலும், சிறிது சிறிதாக வேக வேக
சரியாகி விடும். இவ்விழுது நன்றாக வேக, அதை நன்றாக கிளறி விட்டு ஒரு
கரண்டியை வைத்து தட்டைப் போட்டு மூடி விடவும். ஐந்து நிமிடங்கள்
வெந்த பின் தட்டை எடுத்து விட்டுக் கிளறவும். விழுதாக இருந்தது சிறிது உதிர ஆரம்பிக்கும். மறுபடியும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கரண்டி, தட்டை வைத்து மூடி விடவும். பிறகு பார்த்தால், விழுது
பொலபொலவென எண்ணெய்ப் பசையுடன் மணலைப் போல் உதிர்ந்திருக்கும்.
சிறிது கையிலெடுத்து அழுத்திப் பார்த்தால் கையில் ஒட்டாமல் விழும்.
இப்போது நன்றாக வெந்து விட்டதென்பது தெரியும்.



இச்சமயம் வடி கட்டி வைத்திருக்கின்ற பீன்ஸ்ஸை ஒவ்வொரு
பிடியாக எடுத்து சிறிது அமுக்கி பிழிந்தால் உள்ளிருக்கும் நீர் வடிந்து விடும்.
இவ்வாறு ஒவ்வொரு பிடியாக எடுத்து விழுதுடன் கலக்கவும்.



வேண்டிய அளவு உப்பு, ஒரு சிட்டிகை பெருங்காயம், ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி மூன்றையும் சேர்த்து, பீன்ஸை நன்றாகக் கிளறவும். யாவும்
ஒன்று சேர்ந்த பின்னர், நல்ல பச்சை பசேல் என்றிருக்கும் கருவேப்பிலையை
சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும். சுவைத்துப் பாருங்கள்.
அருமையாக இருக்கும்.



எங்கள் வீட்டில் இதற்கு தோதாக பரங்கிக் காயோ அல்லது
வெங்காயமோ சேர்த்து வற்றல் குழம்பு சமைத்து, மிளகு ரசம் வைத்து
உண்போம்.



70 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம். எல்லா நாட்களும் வளம் மட்டுமே காண வாழ்த்ததுகள். ரமா ஶ்ரீ யின் பருப்புசிலி நன்றாக வந்திருக்கு. பாரத சத்து நிறைந்த அகற்ற அமுது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. என் மனைவிக்கு பிடித்தது அதனால் என்னவோ எனக்கு அதிகம் பிடிக்காது இந்த உசிலி.....

    பதிலளிநீக்கு
  3. வத்தல் குழம்பு வைத்தால் அப்போது கண்ணை மூடிக் கொண்டு சாப்பிட்டுவிடுவேன்

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஏறி ஏறிப் பயமுறுத்தும் கொரோனாவின் தாக்கம் குறைய வேண்டும். ஆண்டவனுக்கு இன்னும் சோதித்துப்பார்க்கும் எண்ணம் போலும். மேலும் மேலும் சோதிக்கிறான். தொடர்ந்து விடாமல் பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
  5. ரமாஸ்ரீநிவாசன் செய்திருக்காப்போல் நானும் துவரம்பருப்பில் தான் பருப்பு உசிலி பண்ணுவேன். இட்லித்தட்டில் வேக வைக்கும் பழக்கமும் இல்லை. இதே போல் எண்ணெய் ஊற்றித் தான் பருப்பு உசிலியை உசிலிப்பேன். நன்றாக மொறுமொறுவென வரும். ஆனால் காய்களைக் குக்கரில் வேக வைப்பதே இல்லை. சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு தவிர்த்த மற்றக் காய்களைச் சேனைக்கிழங்கு உள்பட நேரடியாகவே வேக வைக்கிறேன். குக்கர் வாங்கின புதுசில் கூட்டெல்லாம் அதிலேயே பண்ணி இருக்கேன் தான். பின்னர் தான் தெரிந்தது அதெல்லாம் உடல் நலத்துக்குச் சரியல்ல என்பது. அதோடு காய்கள் குக்கரில் வேக வைப்பதால் நிறம் மாறிவிடுகிறது. அலுமினியம் சட்டியில் ஓரிரு முட்டை நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு நறுக்கிய காய்களை அலம்பி அதில் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு பின் மஞ்சள் பொடி சேர்த்து வேகவைத்துக்கொண்டு பாதி வெந்ததும் தேவையான உப்புச் சேர்ப்பேன். உசிலிக்கும் அரைக்கும்போதே தேவையானால் மஞ்சள் பொடி சேர்த்துவிடுவேன். ஆனால் துவரம்பருப்புக்கு மஞ்சள் பொடி சேர்க்க வேண்டாம். அடை, வடைனு எதிலே சேர்த்தாலும் அதுவே நிறத்தைக் கொடுத்துவிடும். தோசைக்குக் கூட ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பை உளுந்தோடு சேர்த்து ஊறவைத்து அரைத்தால் தோசை பொன்னிறமாக வரும்.

    பதிலளிநீக்கு
  6. அமாவாசை வேலைகள் காத்திருக்கின்றன. பின்னர் வரேன்.

    பதிலளிநீக்கு
  7. செய்முறை விளக்கவுரை அருமை மேடம்

    பதிலளிநீக்கு
  8. பருப்புசிலி செய்முறை நன்று. படம் மாறி வந்துள்ளது

    பதிலளிநீக்கு
  9. திருமணங்களில் கேடர்ர்களால் செய்யப்படும் போலி பருப்புசிலி எனக்குப் பிடிப்பதில்லை.

    நாங்கள், வாழைப்பூ, பீன்ஸ், கொத்தவரை, புடலை போன்றவற்றில் பருப்புசிலி செய்வோம். அடை, குனுக்கு, பருப்புசிலி எல்லாம் ஒரே ஃபேமிலி என்று பசங்க சொல்லி, வெகு அபூர்வமாகத்தான் செய்யச் சொல்லுவார்கள்.

    நீங்க, பெரியவர்கள் இருப்பதால் நன்கு தளிகைப்பண்ணியுள்ளீர்கள். வென்னீரில் கொதிக்க வைத்து, குளிர் நீர் ஊற்றினால் கடைகளில் செய்வதைப்போல நிறம் மாறாது. காய் கொதிக்க வைத்த நீரை வீணாக்காது உபயோகிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம வீட்டில் அடை, வடை, பருப்பு உசிலி எல்லாவற்றிற்கும் துவரம்பருப்புத் தான். கடலைப்பருப்பு உசிலிக்குச் சேர்ப்பதே இல்லை. உளுந்து வடை தட்டினால் கூட ஸ்ராத்த தினம் தவிர்த்து மற்ற நாட்கள் உளுந்தோடு கொஞ்சம் துவரம்பருப்பும், கடலைப்பருப்பும் சேர்த்தே அரைத்து வடை தட்டுவேன். ஆனால் அதிகம் போடக் கூடாது. கால் கிலோ உளுத்தம்பருப்பு எனில் ஒரு டேபிள் ஸ்பூன் துவரம்பருப்பும், இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பும் போதுமானது. துவரம்பருப்பு மொறுமொறுப்பும் நிறமும் கொடுக்கும்.

      நீக்கு
    2. பெரியவர்களால் பெரியவர்களிடமிருந்து கற்று கொண்டேன் சார்.

      நீக்கு
  10. அனைவருக்கும் அன்பின் வணக்கம்....

    பதிலளிநீக்கு
  11. நேற்று எளியேனின் வளாகத்தில்
    மணத்தக்காளி வற்றல் குழம்பு..

    இன்று ஆடி அமாவாசை...

    பதிலளிநீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவாக சகோதரி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களின் தயாரிப்பான பீன்ஸ் உசிலி படங்கள், செய்முறைகளுடன் நன்றாக உள்ளது. நானும் இப்படித்தான் செய்வேன். அவசர நேரத்தில் இட்லி தட்டில் பருப்பு விழுதை வேக வைத்து உசிலி செய்வேன். அழகான செய்முறையை தந்த சகோதரிக்கு பாராட்டுகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. பருப்பு உசிலி all time favourite. நேற்று மகன் கொத்தவரைக்காய், வாழைப்பூ இரண்டுமே வாங்கி வந்தான். ஏதாவது ஒன்றில் ப.உசிலி செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைப்பூ ப.உசிலி out of the world Banu.

      நீக்கு
    2. வாழைப்பூ வடைகறி என்பது என்ன?

      நீக்கு
    3. பொதுவாக முன்பெல்லாம் சென்னையில் முதல் நாள் மீந்த வடைகள், போண்டாக்கள், பஜ்ஜிகள் எல்லாவற்றையும் போட்டு முதல்நாள் மிஞ்சிய சாம்பார், குருமாவையும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு வடகறி என்னும் பெயரில் இட்லி, தோசை, சப்பாத்திக்குக் கொடுப்பார்கள். இதை நான் அறுபதுகளின் கடைசியிலேயே பார்த்திருக்கேன். ஆனால் பின்னர் மசால் வடை (சோம்பு, மசாலா சாமான்கள் போட்டு அரைத்தது) தனியாகப் பண்ணித் தக்காளி, வெங்காயம் குழம்பு மாதிரிப் பண்ணி அதில் இந்த வடையை உதிர்த்துப் போட்டுத் தனியாகப் பண்ண ஆரம்பித்து அதுவும் பிரபலம் ஆகி வீடுகளிலும் இதைப் பண்ண ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட கோஃப்தா மாதிரித் தான். ஆனால் தமிழ்நாட்டில் வடகறி என்பார்கள். இதில் வெங்காயம், பூண்டு அற்றும் காரமும் அதிகமாக இருக்கும். எனக்குப் பிடிக்காது. நல்லவேளையாக ரங்க்ஸுக்கும் பிடிக்காது என்பதால் பண்ணுவதே இல்லை. என் மன்னி இது செய்வதில் ஸ்பெஷலிஸ்ட். எங்க குழந்தைகள் இந்தியா வரும்போதெல்லாம் பண்ணிக் கொடுப்பார். ஆனால் வாழைப்பூவில் வடகறி பண்ணிப் பார்க்கவில்லை. பகோடா குருமா என்பதும் கிட்டத்தட்ட இது போல் தான்.

      நீக்கு
  15. நானும் துவரம் பருப்பில்தான் ப.உசிலி செய்வேன். சில சமயங்களில் க.பருப்பும் சேர்ப்பதுண்டு. ஆனால் மைய அரைக்க மாட்டேன். கொரகொரப்பாகத்தான் அரைப்பேன். அரைத்த விழுது, காய் இரண்டையுமே ஆவியில் வேகவைத்து(குக்கர், இட்லி தட்டு, மைக்ரோவேவ் அவன் என்று எதில் வேண்டுமானாலும் வேக வைக்கலாம்) அது ஆறியதும் மீண்டும் மிக்ஸியில் போட்டு ஒரு ஓட்டு ஓட்டினால் கட்டியில்லாமல் பொலபொலவென்று உதிர்ந்து விடும். பின்னர் வாணலியில் கடுகு,உ.பருப்பு, கறிவேப்பிலையோடு உசிலிக்க வேண்டியதுதான். இந்த முறையில் எண்ணெய் அதிகம் தேவைப்படாது. கட்டிப்பெருங்காயம் என்றால் பருப்பு அரைக்கும் பொழுதே சேர்த்து விடுவேன், பெருங்காயப் பொடி என்றால் உசிலிக்கும் பொழுது சேர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆவியில் எல்லாம் வேக வைத்தால் அப்புறமா என்னை ஆவியில் வேக வைச்சுடுவாங்க. ஆதலால் அப்படி எல்லாம் வேக வைத்து உசிலிப்பதே இல்லை. எண்ணெய் விட்டு மொறுமொறு என்று தான். உளுத்தம்பூரணம் கொழுக்கட்டைக்குப் பண்ணினால் கூட என் மாமியார் உளுந்தை உப்புக்காரம் போட்டு அரைத்துவிட்டு எண்ணெய் விட்டுத் தாளித்து அதில் தான் உதிர்ப்பார். வேகவிட்டுக் கொட்டிப் பின் உதிர்ப்பது இல்லை. சேவைக்கும் அம்மிணிக் கொழுக்கட்டை எல்லாவற்றிற்கும் தாளிதத்தில் உதிர்ப்பது தான். அம்மிணிக்கொழுக்கட்டை இவருக்குப் பிடிக்காது. சேவையில் போட்டால் நான் தான் சாப்பிடணும்.

      நீக்கு
    2. //ஆவியில் எல்லாம் வேக வைத்தால் அப்புறமா என்னை ஆவியில் வேக வைச்சுடுவாங்க//. எங்கள் வீட்டிலும் அதே கதை கீதா.

      நீக்கு
  16. பீன்ஸ் மிகவும் பிடிக்கும்... செய்முறை விளக்கம் அருமை...

    பதிலளிநீக்கு
  17. தட்டை பீன்ஸை விட உருண்டை பீன்ஸ் நன்றாக இருக்கும். மிக்சட் வெஜிடபுள் சப்பாத்திக்குப் பண்ணினால் உருண்டை பீன்ஸ் தான் நன்றாக ருசியாக இருக்கும். அதில் உள்ளே இருக்கும் பருப்புகள் அருமையா இருக்கும். நாங்க ஜாம்நகரில் இருந்தப்போ தோட்டத்தில் போட்டிருந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நாங்க ஜாம்நகரில் இருந்தப்போ // கீசா மேடத்துக்கு என்ன ஆச்சு. அம்பத்தூரில் இருந்தப்போ என்று எழுத மறந்துட்டாங்களா? அதிலும், "அம்பத்தூரில் எங்க வீட்டில்" என்று எழுதி, தற்போதைய ஓனரின் வயிற்றில் புளியைக் கரைப்பாரே..

      நீக்கு
    2. இஃகி,இஃகி,இஃகி, ராஜஸ்தானில் நசிராபாதில் மால் ரோடு வீட்டில் கூடப் போட்டிருக்கோமே! அங்கே தான் மயில்கள் நிஜம்ம்மாகவே ஆட, கிளிகள் கொஞ்ச, குயில்கள் கூவ, புறாக்கள் "பக்"பக்"எனச் சொல்லக் குருவிகள் கீச்சென்று கத்த இயற்கையோடு இயைந்த குடித்தனம். முயல்குட்டிகள் அங்குமிங்கும் ஓட எங்க பையரும், பக்கத்து பங்களா மேஜர் பையருமாகத் துரத்திக்கொண்டு ஓடுவார்கள். சொர்க்கம்! அங்கே லானில் உட்கார்ந்து கொண்டு எல்லாத்தையும் பார்த்து ரசிக்கலாம்.

      நீக்கு
    3. ஆஹா! ராஜஸ்தானில் ஒட்டகமும் பாலைவனமும்தான் இருக்கும் என்று நினைத்திருந்தேன். பூலோக சொர்க்கமும் அங்கு உள்ளதா!

      நீக்கு
    4. இவ்வளவு வருஷமா ராஜஸ்தானை தெரியாமக்கூட இருந்திடலாம். கீசா மேடத்தைத் தெரியாமல் இருக்கலாமா? எனக்குத் தெரிந்து அவர் இருந்த ஊர்கள் எல்லாமே சொர்க்கம் என்றுதான் சொல்லுவார். குறையே சொல்லமாட்டார். என்ன ஒண்ணு, அங்க வாழ்ந்த வீட்டைக்கூட, இப்போதும் தன் சொந்த வீடு (ன்னுதான்) சொல்லுவார். ஹா ஹா

      நீக்கு
    5. @கௌதமன், என்னோட ஆரம்பகாலப் பதிவுகளைப் படித்தால் அதிகம் ஜாம்நகர், நசிராபாத், அரவங்காடு போன்றவை பற்றியே வரும். எல்லாம் மறக்க முடியாத நினைவுகள். அதிலும் நசிராபாதைப் போன்றதொரு சொர்க்கம் வேறே இல்லை. எங்கள் குழந்தைகளுக்கும் பிடித்த இடம்.

      நீக்கு
    6. அம்பத்தூரில் தான் சொந்த வீடு. ஆனாலும் ராஜஸ்தான், ஜாம்நகர்(குஜராத்) அரவங்காடு இங்கெல்லாம் ராணுவக்குடியிருப்பு என்றாலும் பெரிய பெரிய பங்களாக்கள். சுற்றிலும் தோட்டம், துரவு, பணியாளர்களுக்கான குடியிருப்புக்கள், அந்தக் காலத்துக் குதிரை லாயம் என சுமார் ஐந்தாறு கிரவுண்டு அளவில் பரந்து விரிந்திருக்கும். அங்கே சுற்றி வந்தாலே போதும் நடைப்பயிற்சி ஆகிவிடும். நான் லானைச் சுற்றி வருவேன். அதுவே பெரிய இடமாக இருக்கும். ஜாம்நகரில் வீட்டிற்கும் வெளி வாசல் கேட்டிற்கும் இருக்கும் இடத்தில் நடந்தாலே போதும். நசிராபாதிலும் அப்படித்தான். வீட்டு வாயிலில் இருந்து வெளியே சாலைக்குப் போகப் பத்து நிமிஷம் ஆகும். அரவங்காட்டில் உச்சியில் அமர்ந்த வண்ணம் கீழே அரவங்காடு ரயில் நிலையத்தில் நடப்பனவற்றை எல்லாம் பார்க்கலாம். வீட்டுக்குள் மேகங்கள் கூட்டமாக வந்து கொஞ்சுவதைப் பற்றிப் பலமுறை எழுதிட்டேன்.

      நீக்கு
  18. மின் நிலா காலையிலேயே வந்துவிட்டதானு பார்க்க மறந்துட்டேன். அவசரம். அப்புறமாத்தான் இன்னிக்கு அமாவாசையே, சூரியனோடு சேர்ந்தே வந்துடுமேனு தோணித்து. ஆனால் வர முடியலை, இப்போத் தான் பார்த்தேன், படித்தேன், ரசித்தேன். கேஜிஜியின் புத்தக விமரிசனம் நன்று.

    பதிலளிநீக்கு
  19. நன்றாக வந்திருக்கிறது . வாழ்த்துக்கள் நான் பருப்பு உசிலியை பயத்தம் பருப்பில் செய்வேன் . துவரம்பருப்பு முடிந்த வரை தவிர்த்து வருவதால்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசிப்பருப்பை உப்புக்காரம், பெருங்காயம் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொண்டு இட்லித்தட்டில் வேகவிட்டு எடுத்தால் பன் மாதிரி உப்பிக் கொண்டு வரும். அதைத் துண்டங்களாகப் போட்டுத் தாளித்துச் சாப்பிடலாம். வெங்காயப் பிரியர்கள் வெங்காயம் சேர்த்து வதக்கிச் சாப்பிடலாம்.

      பாசிப்பருப்பு+உளுத்தம்பருப்பு சம அளவில் நனைத்து இரண்டு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொண்டு இட்லி வார்க்கலாம். இட்லி நன்றாகவே வரும். ஆனால் நம்ம வீட்டில் போணி ஆவதில்லை. :) அந்த மாவில் காரட், தேங்காய்த் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டு குடலை இட்லி மாதிரியும் பண்ணலாம்.

      நீக்கு
    2. // அந்த மாவில் காரட், தேங்காய்த் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டு குடலை இட்லி மாதிரியும் பண்ணலாம்.// யாருடைய குடலை இட்லி மாதிரி பண்ணலாம்?

      நீக்கு
  20. உசிலின்னா.....

    அது...

    வாழைப்பூ உசிலிதான்...  

    எங்கம்மா எனக்கு அதுதான் கொடுத்தாங்க...    அப்படியே சாப்பிடுவேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழைப்பூவில் ஒவ்வொரு பூவிலும் கள்ளன் எடுத்து கஷ்டப்படறதைப் பார்த்த பிறகும் வாழைப்பூ பருப்புசிலில ஆசை வரும்ன்றீங்க?

      சுலப பருப்புசிலி பீன்ஸ் பருப்புசிலிதான். இல்லைனா கேப்சிகம் அல்லது புடலை.

      நீக்கு
    2. பீன்ஸை எனக்கு எந்த வடிவத்திலும் பிடிக்காது நெல்லை...   கள்ளன் எடுப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?  

      நீக்கு
    3. அதானே! கள்ளன் எடுப்பது ஒண்ணும் கஷ்டமில்லை.

      நீக்கு
    4. அப்படியும் கள்ளன்களை பிடிப்பது கஸ்டமாக இருந்தால், கணேஷின் அலுவலகத்தில் (வசந்திடம் கேட்காமலோ, அல்லது சுஜாதாவிடம் கேட்டோ) அசிஸ்டென்ட் பணியில் சேர்ந்தால் போயிற்று. சரிதானே..!

      நீக்கு
    5. பீன்ஸ், கொத்தவரைனா சதக் சதக் னு திருத்தலாம். வாழைப்பூல ஒவ்வொரு பூவா கள்ளன் எடுக்கணும். (சுலபம்னு கீசா மேடம் சொல்றாங்க. ஆனா அவங்க ஊர்லதான் வாழைப்பூ விக்கறவங்க, கள்ளனை எடுத்துட்டு அப்படியே முழுப்பூவை விற்பனை செய்வதைப் பார்த்தோம்). அது ஒரு கஷ்டமான வேலை. அதுபோலவே கீரையை ஆய்வதும் (எங்க வீட்டுல ஒவ்வொரு இலையா ரெண்டு பக்கமும் பார்த்து, பூச்சிலாம் இல்லையான்னு செக் பண்ணி ஆய்வாங்க. இப்போல்லாம் நான் உதவி செய்யறேன்).

      நீக்கு
    6. @ கமலா ஹரிஹரன் மேடம் - சுலபமான வேலை 'வசந்த்'தாக இருப்பதுதான். துப்புத்துலக்கப் போகும் இடத்தில் 18 வயசுப் பெண்களைப் பார்த்துப் பல்லிளிக்கலாம். ஓவியர் ஜெவுக்கும் கஷ்டமான படங்கள் போடுவதைவிட, அந்தப் பதினெட்டை வித விதமாக படம் போடுவது என்றால் அல்வா மாதிரி இருக்கும்.

      நீக்கு
    7. ஏன், விவேக்-ரூபலாவிடம் கொடுக்கக் கூடாதோ!!

      நீக்கு
    8. /பீன்ஸ், கொத்தவரைனா சதக் சதக் னு/ இந்த ஒன்றை வைத்தே கள்ளன் எங்கிருக்கிறார் என யார் வேண்டுமானாலும் துப்புத்துலக்கி சுலபமாக கண்டு பிடித்து விடலாம். (ஏன் ரூபலா மட்டும் கூட போதும்.) ஹா.ஹா.ஹா.

      நானெல்லாம், கொஞ்சம் பொடி உப்பை உள்ளங்கைகளில் தேய்த்துக் கொண்டு வாழைப்பூவை ஆய்வேன். கள்ளன் இருப்பிடம் சுலபமாக கண்களுக்கு தெரிந்து விடும். கொஞ்ச நேரத்தில் ஈசியாக கள்ளன்களை அகற்றி விடலாம். ஆனால் கீரை ஆயும் போது கொஞ்சம் பொறுமை அவசியம். இல்லாவிடில் புல்,பூண்டுகள் அதனுடன் கலந்து விடும்.

      நீக்கு
    9. அதேதான்...    கொத்தாகக் கையில் எடுத்துக்கொண்டு எண்ணெய் தொட்ட உள்ளங்கையால் அதன் முனைகளை கலைத்தது விட்டால் மூக்கும் முழியுமாக கள்ளன்கள் வெளிப்பட்டு விழிப்பார்கள்.  அபப்டியே டக்டக்கென்று பிடுங்கிப்போட வேண்டியதுதான்!  கட்ட கடைசியாக இலேசாக மிஞ்சும் வாழைப்பூவை அப்படியே சாப்பிட்டு விடுவேன்!

      நீக்கு
    10. ஆமாம்.. நீங்கள் சொல்வது போல், எண்ணெயை கையில் தடவிக் கொண்டும், பொடி உப்பைத் தொட்டுக் கொண்டும் கள்ளன்களை சுலபமாக எடுத்துவிடலாம். இங்கு வாழைப்பூ தமிழ் நாட்டில் இருப்பது போல் எங்கள் ஏரியாவில் கிடைக்கவில்லை. அங்கு பூவின் வாசம் நன்றாக இருக்கும். முன்னர் இங்கு வாங்கிய ஒன்று அப்படியே கசப்பு சுவை வந்து எறிய வேண்டியதாக போய் விட்டது அதன் துவர்ப்புதான் உசிலிக்கு சுவை கூட்டும்.

      நீக்கு
    11. ஒரு தரம் தெரியாத்தனமாக் கள்ளன் எடுத்த வாழைப்பூவை வாங்கி வந்துட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். கள்ளன் எடுத்துவிட்டால் உள்ளே கறுத்துவிடும். ஆகவே கள்ளன் எடுக்காத வாழைப்பூவை வாங்கியே சமைக்கணும். கள்ளன் எடுப்பது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. நல்லெண்ணெயை இரண்டு கைகளிலும் நன்றாகத் தடவிக்கொண்டு பூவைப் பிரித்து உள்ளங்கைகளில் தேய்த்தால் தனியாக எட்டிப்பார்க்கும். நீக்கிடலாம்.

      நீக்கு
  21. நல்லதொறு செய்முறை..செய்து பார்க்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  22. மின் நிலாவில் என் மின் நூல்களின் விளம்பரம் வெளியிட்டதோடு 'கோடையும், எடையும்' என்னும் என் மின் நூலுக்கு விமர்சனமும் எழுதி என்னை கௌரவித்ததற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  23. பீன்ஸ் பருப்புசிலி அருமை.
    பீன்ஸ் வேகவைத்த தண்ணீரை வடிகட்டினால் சத்து போய்விடுமே!
    அதை வயதானவர்களுக்கு ஒரு தக்காளி சேர்த்து சூப் மாதிரி மிளகுத்தூள் போட்டு கொடுக்கலாம். வெங்காயம் சேர்ப்பார்கள் என்றால் சேர்க்கலாம்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. மின் நிலா படங்கள் சேர்ப்பு நன்றாக இருக்கிறது, பானுமதி வெங்கடேஷ்வரன் மின்னூல்களுக்கு வாழ்த்துக்கள்.
    இட்டிலி கவிதைகள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. மின்னூல் விமர்சனமும் அருமை

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் சகோதரரே

    மின்நிலா அழகான பூக்களின் படங்களுடன் நன்றாக உள்ளது. வாரம் சார்ந்த பதிவுகளுக்கு இடையிடையே உங்கள் அனுபவங்கள், கதை, உங்களின் மின்னூல்கள், சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் மின்னூல் பற்றி என தகவல்கள் தந்திருப்பது படிக்க விறுவிறுப்பாக உள்ளது. சகோதரியின் மின்னூலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இட்லி கவிதைகள் ஒவ்வொன்றும் அருமை. மிகவும் ரசித்தேன். ஞாயறின் அழகான இரு படங்கள், இருமலர்கள் படம் என அனைத்துமே அழகாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  27. மின் நிலாவின் புது பக்கங்கள் அருமை.
    இட்டிலி கவிதை புது விதம்.

    பானுமதி வெங்கடேஸ்வரனின் புது மின்னூல்களின் அறிமுகம் சுவை.
    மேலும் மேலும் எல்லோர் நூல்களும் வெளிவர
    வாழ்த்துகள்.

    வண்ணப் படங்கள் இடையிடையே தலைகாட்டி
    படிக்கும் நேரத்தை அலங்கரிக்கின்றன.

    மின் நிலா மேலும் வளர்ந்து ,
    அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  28. அவ்வப்போது வீட்டில் செய்வதுண்டு - கொத்தவரங்காய், வாழைப்பூ, பீன்ஸ் என விதம் விதமாக.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!