திங்கள், 14 செப்டம்பர், 2020

"திங்க"க்கிழமை :  மலாய் மேத்தி கார்ன் - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 


மலாய் மேத்தி கார்ன் 
இது என் மருமகளின் கைவண்ணம்.



தேவையான பொருள்கள்: 

சோளக்கதிர் - 1
வெந்தயக் கீரை (ஆய்ந்தது) - ஒரு கப் அல்லது ஒரு கையளவு 
தக்காளி - 3 அல்லது 4
பெரிய வெங்காயம் - சிறியது 3, பெரியதாக இருந்தால் 1
முந்திரி - 6
காரப்  பொடி  - 1 டீ ஸ்பூன் 
தனியாய் பொடி - 1 டீ ஸ்பூன் 
உப்பு                     -  1 டீ ஸ்பூன் 
பாலாடை அல்லது பிரெஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன் 



செய்முறை:

முதலில் சோளக்கதிரை குக்கரில் அப்படியே வேக வைத்து பின்னர் உதிர்த்துக் கொள்ளவும்.

பின்னர் அதனுடன் வெந்தயக் கீரையை, உப்பு  சேர்த்து  வாணலியில் பிரட்டிக் கொள்ளவும். 



நறுக்கிய தக்காளி, வெங்காயம் இவைகளோடு முந்திரி பருப்பு சேர்த்து வதக்கி, ஆறியவுடன் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 

அடுத்தாக வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி, சோம்பு அல்லது சீரகம் தாளித்து, அரைத்த தக்காளி, வெங்காய, மு.பருப்பு விழுதினை சேர்த்து, அதோடு காரப்பொடி, தனியா பொடி, உப்பு சேர்த்து தேவையானால் இன்னும் கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து  கொதிக்க  விடுங்கள். பச்சை வாசனை போனதும் ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் கார்ன்,வெந்தயக் கீரை கலவையை சேர்த்து, மூன்று நிமிடம் கொதிக்க விடவும். அடுப்பை அனைத்து விட்டு ஃபிரெஷ் க்ரீம் அல்லது பாலாடையை சேர்க்கவும். 



செய்வதற்கு சுலபமான, சுவையான சைட் டிஷ் ஆன இது சப்பாத்தி, பூரி, ஜீரா ரைஸ் இவைகளோடு சாப்பிட நன்றாக இருக்கும்.   

=====


======

52 கருத்துகள்:

  1. சுலபமாக இருக்கிறதே... படங்கள் அழகாக இருக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் ஸ்ரீராமுக்கும்
    வாழ்த்துகள். கணினி பழுது பார்க்கப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.

    அனைவரின் ஆரோக்கியம் சிறக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான புகைப்படங்களுடன்
    வெளியாகி இருக்கும் மலாய் கார்ன் செய்முறை
    மிக அழகு.
    பானுமதி வெங்கடேஸ்வரனின் மருமகளுக்கு வாழ்த்துகள்.
    கட்டாயம் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவரின் வாழ்விலும் இனிமை சூழட்டும். எல்லோரும் பிரச்னைகள் அகன்று இயல்பான, ஆரோக்கியமான சந்தோஷமான வாழ்க்கை வாழப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. பேபி கார்ன் எனப்படும் குட்டி மக்காச்சோளத்தில் இதை அதிகம் பண்ணுவாங்க. ஆனால் இங்கே பேபி கார்ன் அவ்வளவாக் கிடைப்பதில்லை. அம்பேரிக்காவில் கிடைக்கும். வடக்கேயும் கிடைக்கும். அப்படியே நறுக்கிப் பண்ணலாம். நம்ம வீட்டில் நம்மவருக்குப் பிடிக்காது. எங்கேயானும் சாப்பிட்டால் தான் உண்டு. செய்முறையும் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன. வாழ்த்துகள் பானுமதியின் மருமகளுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெங்களூரிலும் பேபி கார்ன் கிடைக்கிறது.

      நீக்கு
    2. இது பேபி கார்ன் சீசன் போலிருக்கு. நேற்று சூப்பர்மார்க்கெட்டில் ஏராளம் பார்த்தேன். இங்கும் நிறைய வருகிறது.

      நீக்கு
    3. நன்றி கீதா அக்கா. பேபிகார்ன் சென்னையிலும் கிடைக்கும். ஶ்ரீரங்கத்தில் கிடைக்கவில்லையோ என்னவோ, திருச்சியில் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில், கிடைக்கலாம். தில்லை நகர், கன்டோன்மென்ட் பகுதிகளில் கிடைக்கலாம்.

      நீக்கு
  6. மொரே இடிபாடுகள் எனக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் என்னனு தெரியாமல் இருந்தது. இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மின் நிலா புதுத்தகவல்கள் மிகச் சிறப்பு.
    இங்காஸ் பற்றியும் மாயன் பற்றியும் செய்யப்படும் ஆராய்ச்சிகள் மிகச் சிறப்பானவை. இங்கே புகைப்படத்தில் இருக்கும்
    மொரே இடிபாடுகள்
    பார்ப்பதற்கே மன வருத்தத்தைத் தருகின்றன.
    எத்தனையோ செழிப்பான நாகரீகங்கள்
    இருந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். காலச்சுவடுகள் மனதை கனக்க வைக்கின்றன.

      நீக்கு
    2. மொரே இடிபாடுகள் பற்றி கீதா அக்கா,வல்லி அக்கா இருவருமே எழுதியிருக்கிறார்கள். உடனே படித்து விட வேண்டியதுதான்.

      நீக்கு
  8. மலாய் கார்ன் இன்னைக்கே பண்ணிடலாம். மேத்தி சேர்ப்பது சந்தேகம். நிறைய கிடைக்குது. கையளவைப் போட்ட பிறகு மீதியை என்ன செய்வது? இந்தக் காரணத்தினால் இதுவரை வாங்கலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கசூரி மேத்தி வாங்கி - கொஞ்சமா போடுங்க.

      நீக்கு
    2. வெந்தயக்கீரையை என்ன செய்வது என்பது ஒரு கவலையா? வெந்தயக்கீரையை நன்கு ஆய்ந்து கழுவிவிட்டு சாம்பாரில் போடலாம். ஆய்ந்து நறுக்கிக் கழுவிய கீரையில் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துச் சிறிது நேரம் வைத்து விட்டு கோதுமை மாவில் கொஞ்சம் போல் உப்புச் சேர்த்துக் கீரையைப் போட்டு நன்கு கெட்டியாகப் பிசைந்து பூரி பண்ணலாம். மேதி பராந்தா பண்ணலாம். உருளைக்கிழங்கோடு இம்மாதிரி நறுக்கி உப்புச் சேர்த்த கீரையைப் போட்டு சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளும் கறி பண்ணலாம். பஜியா பண்ணும்போது மற்றக் கீரைகளோடு வெந்தயக்கீரையையும் சேர்க்கலாம் அல்லது அதை மட்டும் தனியாகப் போட்டு பஜியா பண்ணலாம். பருப்பு உசிலி பண்ணலாம். வெந்தயக்கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துச் சிறிது நேரம் ஊற வைத்துப் பின்னர் வாணலியில் கடுகு, உபருப்பு, மிவத்தல் தாளித்துக் கொண்டு கீரையைப் பிழிந்து போட்டுக் கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கிளறி(உப்பு ஏற்கெனவே போட்டுட்டோம்)த் தேங்காய்த் துருவலோடு சேர்த்து நன்கு கிளறிச் சாப்பாட்டில் தொட்டுக்கலாம். இங்கே கிடைக்கலையேனு வருத்தமா இருக்கு. சாத்தாரத் தெரு போகணும். அதுக்காகவே மாமாவை அனுப்புவதில்லை. இருக்கிறதை வைச்சு ஒப்பேத்திட்டு இருக்கோம்.

      நீக்கு
    3. நான் நறுக்கிக் கழுவி உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வைத்தால் சில நிமிடங்கள் கழித்து எடுத்துப் பிழிந்தால் இரண்டு கட்டுக்கீரைக்குக் கையளவே கிடைக்கும். அப்படியே போட மாட்டேன்.

      நீக்கு
    4. குஜராத்தில் பண்ணும் "உந்தியா" எனப்படும் சப்ஜிக்கு இம்மாதிரி வெந்தயக்கீரையைக் கடலைமாவோடு உப்பு, காரம், மசாலாப்பொடி, ஓமம் சேர்த்துப் பிசைந்து எண்ணெயில் பகோடா மாதிரிப் போட்டுக் கடைசியில் சேர்ப்பார்கள். இதை மட்டுமே போட்டுத் தக்காளி சேர்த்து க்ரேவி பண்ணுவார்கள். வெந்தயக்கீரையோடு பட்டாணி சேர்த்து சாதம் பண்ணுவார்கள்.

      நீக்கு
    5. கீசா மேடம் சொல்லியிருக்கிற ஒன்றுமே எனக்கு சாப்பிடப் பிடிக்காது (ஆனா நிச்சயம் பசங்களுக்குப் பிடிக்கும்). எத்தனை விதமா சொல்றாங்க. இந்த வெந்தயக் கீரையை வைத்து இனிப்புல எதுவும் பண்ணமுடியாதா? ஹாஹா

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம். அட! நம்ம ரெசிபி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // அட! நம்ம ரெசிபி!// நாளையும் உங்க ராஜ்ஜியம்தான்.

      நீக்கு
    2. Oho, tomorrow's story Banumathi எழுதியதா? அடிச்சு விடுங்க! வாழ்த்துகள்.

      நீக்கு
    3. என்ன இது? சஸ்பென்ஸை இப்படி போட்டு உடைத்து விட்டீர்கள்.? அவங்க வலைத்தளம் பேருக்கு பொருத்தமாக இருக்கட்டுமென்றா?

      நீக்கு
  10. //கையளவைப் போட்ட பிறகு மீதியை என்ன செய்வது?// நெல்லை நெல்லை,இப்படி ஒரு சந்தேகமா? மிச்சத்தை சுண்டலாக செய்யுங்கள், அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு நாள் இதே மேத்தி கார்னை பண்ண வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலமே வாழ்க...

    பதிலளிநீக்கு
  12. பால் பிடித்து சற்றே இறுகிய கதிர் தான் நம்மவர்களுக்கு விருப்பம். முற்றி விட்டால் பொறிப்பதற்குத் தான் ஆகும்... மற்றபடிக்கு மாவு தான் பிரதானம்...

    இங்கே கிடைப்பது டின்களில் இனிப்பு நீருடன் அடைக்கப்பட்ட இளஞ் சோள முத்துகள் (Sweet corn).. இதை நன்றாகக் கழுவினால் தான் நமது பக்குவத்துக்கு ஒத்து வரும்...

    பதிலளிநீக்கு
  13. மடல்களால் போர்த்தப்பட்டிருக்கும் கதிர் முத்துகளுக்குள் இரசாயனங்கள் ஊடுருவுவதில்லை என்கிறார்கள்..

    பூச்சிகளால் துளைக்கப்பட்ட சோளக் கதிரைப் பார்த்திருக்கின்றீர்களா!...

    மற்ற காய்களுக்குள் பூச்சி புழுக்கள் இருப்பதைப் போல சோளக் கதிரினுள் இருப்பதில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதிர் முத்துகளுக்கு இயற்கை அணிவித்த மாஸ்க் = மடல்கள்.

      நீக்கு
  14. மலாய் மேத்தி கார்ன் பார்க்கவே அழகு.

    மருமகளின் கைவண்ணம் அருமை.
    செய்முறை படங்களும் செய்முறையும் குறிப்பும் அருமை.

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் மாலை வணக்கங்கள். இன்று சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் வெளியிட்டுள்ள இந்த ரெசிபி நன்றாக உள்ளது. படங்கள், செய்முறை விளக்கங்கள் அனைத்தும் அசத்தலாக இருக்கிறது. அருமையான பகிர்வினை எ.பிக்குத் தந்த அவர் மருமகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வை எங்களுக்கு தந்த உங்களுக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. நான் எழுதி அனுப்பியிருந்த இந்த சமையல் குறிப்பை வெளியிட்ட எ.பிக்கும், கருத்துரையிட்ட எல்லோருக்கும் நன்றி. வேறு சில வேலைகளில் இருந்ததால் தாமதமாக நன்றி கூறியிருக்கிறேன். 

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!