யாராவது சொல்லுங்க..
துரை செல்வராஜூ
' இந்த நேரத்தில் கதவைத் தட்டுவது யார்!... '
கேலக்ஸியை நோக்கினால் 5:45 என்றது...
" அண்ணா ஜீ!... "
இந்தப் பாலைவனச் சோலையில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க நிறுவனம்... பெரிய சமையற் கூடத்தை உடையது.. தரமான உணவு வகைகளுக்கும் சிறப்பான சேவைக்கும் பெயர் பெற்றது..
நிறுவனத்தின் பங்களிப்புகளில் ஒன்றாக அரசுத் துறையின் அலுவலர் உணவகத்தில் எனது பணி..
இது இப்படியிருக்க - விடியற்காலையில் டிரைவர் சீனிவாசலு என்னைத் தேடி வந்திருக்கிறானே!... எதற்கு?..
கம்பெனிக்கு புதிதாக வருபவர்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வருவதும் நாட்டுக்குத் திரும்பிச் செல்பவர்களை மூட்டை முடிச்சுகளுடன் விமான நிலையத்தில் கொண்டு சேர்ப்பதும் சீனிவாசலுவின் வேலை...
அவனுக்கு சொந்த ஊர் திருப்பதிக்கு முன்பாக ஒரு கிராமம்... அதனால் தமிழையும் ஓரளவுக்குக் கலந்து கட்டி அடிப்பான்..
எதற்காக வந்திருக்கிறான்!?.. - யோசித்தபடி கதவைத் திறந்தேன்...
முகமெல்லாம் புன்னகையாக நின்றிருந்தான்.. அவனுக்குப் பின்னால் மழையில் நனைந்த கோழிக் குஞ்சாக இளைஞன் ஒருவன்...
" நமஸ்காரம் அண்ணா!.. இந்தப் பையன் ஒங்க ஊர்லேருந்து வந்திருக்கான்.. "
" எங்க ஊரா!?... " - திகைத்தேன்..
" ஒங்க ரூம்..லே இருக்கச் சொல்லிருக்கு கிருஷ்ணா சார்.. " - சீனிவாசலுவின் புன்னகை இன்னும் கொஞ்சம் விரிந்தது..
" உள்ளே வாங்க தம்பி.. " - அறைக்குள் அழைத்தேன்..
' விடியற்காலையில் வந்து சேர்ந்திருக்கின்றானே... என்ன சாப்பிட்டானோ?.. ' - என்ற சிந்தனையுடன், " டீ குடிக்கிறீங்களா?.. " - என்றேன்...
" டீயா!.. இட்லி உப்புமா.. டிபனே ஆச்சி.. டைம் பாரு அண்ணா!.. "
சீனிவாசலு சிரித்தான்..
அவன் சொல்வதைப் போல கீழ்தளத்தில் ஐந்து மணிக்கே உணவகம் திறந்திருப்பார்கள்...
" ஓகே அண்ணா!.. நான் அப்புறமா வர்றேன்.. கம்பெனி சிஸ்டம் எல்லாம் சொல்லிக் கொடுங்கோ!.. " சீனிவாசலு நகர்ந்தான்..
இவனது பாஸ்போர்ட்டுடன் வேறு சில பேப்பர்களும் அவன் கையில் இருந்தன..
" எந்த ஊர் நீங்க?... "
" தஞ்சாவூர்... " - என்றான் அந்த வாலிபன்..
" தஞ்சாவூரா?..." - எனக்கு ஆச்சர்யம்..
" பட்டுக்கோட்டைக்கு பக்கத்தில.. " ஊரின் பெயரைச் சொன்னான்...
அந்த ஊர் புஞ்சைக் காடு என்றாலும் நல்ல வளமான பூமி... கடற்கரை அங்கிருந்து நாலைந்து மைல்தான்... ஊரைச் சுற்றித் தென்னந்தோப்பு... கொஞ்சம் பொறுப்பாக பாடுபட்டால் போதும்... வெளிநாட்டுக்கெல்லாம் பெட்டி கட்ட வேண்டிய அவசியமே இல்லை..
ஆனாலும் என்ன பிரச்னையோ.. பாவம்..
பாலைவனத்தைத் தேடிப் பறந்து வந்திருக்கிறான்...
எனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டான் போலிருக்கிறது...
" பதினஞ்சு ஏக்கர் தென்னந்தோப்பும் கஜா புயல்..ல சிக்கி சின்னா பின்னமாப் போச்சு... கஷ்டத்தோட கஷ்டமா சாகுபடிய மறுபடி எடுத்து செஞ்சோம்... அக்காவுக்கு நல்ல இடத்துல மாப்பிள்ளை வந்ததால வந்த விலைக்கு பாதித் தோப்பை வித்துட்டு கல்யாணத்தை நடத்துனோம்... ரெண்டு மூனு வருசம் இங்கே கஷ்டப்பட்டா ஓரளவுக்கு நல்லாயிருக்கும்..ன்னு வந்திருக்கேன்... "
அவனாகவே விவரித்தான்...
" என்ன படிச்சிருக்கீங்க?.. "
" ப்ளஸ் டூ முடிச்சிட்டு ஏசி மெக்கானிசம் பாஸ் பண்ணியிருக்கேன்... "
" இங்கே என்னவா வந்திருக்கீங்க?.. " " கிளீனர்!.. "
" அடப் பாவமே!... " - என்றிருந்தது...
" அங்கே போனதுக்கு அப்புறம் வேறு வேலைக்கு மாறிக்கலாம்..ன்னு ஏஜென்ஸில சொன்னாங்க... "
" சரி.. பார்க்கலாம்... உங்களுக்கு அக்காமா வர்றதுக்கு ... "
இடைமறித்துக் கேட்டான்...
" அக்காமா... ன்னா.. என்னங்க? "
" இன்னும் ஒரு வாரத்துல உங்களுக்கு மெடிக்கல் செக்கப்... அது ஓகே ஆனதும் போலீஸ்..ல கை ரேகை பதிவு ஆகும்... அதுக்கு அப்புறம் இந்த நாட்ல வேலை செய்றதுக்கான அனுமதியை அரசாங்கம் கொடுக்கும்.. அதுக்குப் பேர் தான் அக்காமா... இங்க்லீஷ்..ல Civil Id Card ன்னு சொல்றது.. அந்த அடையாள அட்டை கொடுத்ததுக்கு அப்புறம் அது இல்லாம வெளியில வரக் கூடாது... இதெல்லாம் முடியறதுக்கு ஒரு மாசம் ஆகும்... அது வரைக்கும் தனியா எங்கேயும் போக வேணாம்... டீ காபி.. வேணும்..ன்னா கீழே ரெஸ்ட்டாரண்ட்ல எந்நேரமும் கிடைக்கும்.. எதிர்..ல இருக்குற கட்டில்..ல படுத்துக்குங்க... நைட் ஷிப்ட் பார்த்துட்டு வந்திருக்கிறேன்... கொஞ்ச நேரம் தூங்கறேன்... " - என்றபடி கேம்ப் கிளீனருக்கு போன் செய்து விவரம் சொன்னேன்...
சற்று நேரத்தில் கட்டிலுக்கு மெத்தை விரிப்பு தலையணை போர்வை எல்லாம் வந்து சேர்ந்தன...
" வீட்டுக்குப் பேசறீங்களா?.. " - என்றபடி செல்போனை நீட்டினேன்...
நன்றி அவனது கண்களில் மின்னியது..
பேசிக் கொண்டிருந்தபோதே - " சார்... நீங்க எந்த ஊருங்க?.. " - என்றான்..
சொன்னேன்...
" இங்கே தஞ்சாவூர் சார்.. ஒருத்தர் இருக்காங்க... அவங்க கூட தான் தங்கியிருக்கேன்... நீங்க கவலப்படாம இருங்க அப்பா!.. " - என்று பேசி முடித்து விட்டு போனைக் கொடுத்தான்...
" நன்றிங்க சார்!... "
" உங்க பேரைக் கேக்கவேயில்லை... "
" சந்தான மூர்த்தி... " - புன்னகைத்தான்...
" எம்பேரு சாமிநாதன்!..."
அசதியுடன் கண்ணயர்ந்தேன்...
அடுத்த ஒன்றரை மாதத்தில் மருத்துவமனை உணவகத்தில் வேலை கிடைத்தது சந்தான மூர்த்திக்கு..
அங்கே ஸ்டோர்கீப்பர் சந்தோஷ் தெரிந்தவன்...
" நல்ல பையன்.. கொஞ்சம் பார்த்துக் கொள்.. " - என்று சொல்லி வைத்தேன்...
சந்தான மூர்த்தியை Nurses Cafeteria வுக்கு அனுப்பி இருப்பதையும் அங்கு தமிழ் தெரிந்த பாலக்காட்டு மாதவனும் இருப்பதாகச் சொன்னதோடு 5 to 5 என்று வேலை நேரத்தையும் சொன்னான் சந்தோஷ்...
நல்லதுதான்.. தினசரி நாலு மணி நேரம் Overtime... வேலை அதிகம் இருக்காது... Nurseகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளையே சாப்பிட்டுக் கொள்ளலாம்...
மருத்துவமனையின் நர்ஸ்களில் 90 சதவீதம் தெய்வ தேசத்தின் தேன் மலர்கள்... நல்ல மனம் உடைய அவர்கள் மாத முடிவில் உணவகப் பணியாளர்களுக்கு ஒரு தொகையை அன்பளிப்பாகத் தருவதுண்டு... உடல் நலம் சரியில்லை என்றால் அன்புடன் கவனித்து மருந்து மாத்திரைகளுடன் இரண்டு மூன்று நாட்களுக்கு விடுப்பும் வாங்கித் தருவார்கள்...
பணியிடை நேரத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாகப் பேசிப் பழக - அது காதலாகிக் கனிந்து கல்யாணத்தில் முடிந்த ஆச்சர்யங்களும் அவ்வப்போது...
' சரி... இனி புத்தியைக் கொண்டு பிழைத்துக் கொள்வான்.. '- என்று நினைத்துக் கொண்டேன்..
இப்படியான நிலையில் ஒருநாள் - " வேறொரு அறைக்குப் போகிறேன்.." - என்றபடி தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டான்...
அவனைப் பற்றிய நினைவுகள் குறைந்திருந்த போதுதான் அவனை மறுபடியும் பார்த்தேன்...
அன்றைக்கு காலை எட்டு மணியளவில் கீழே உணவகத்துக்கு இறங்கியபோது எதிரில் நின்றிருந்தான் சந்தான மூர்த்தி..
" என்ன வேலைக்குப் போக வில்லையா!.. "
எனது கேள்விக்குப் பதிலாக - நேற்று முன் தினம் நடந்ததை விவரித்தான்...
மருத்துவமனை வளாகத்தில் பொது ஊழியர்கள் தமக்கு சம்பந்தமில்லாத இடங்களில் நடமாடக்கூடாது.. அப்படியான இடத்தை இவன் கடந்திருக்கிறான்.. அதுவும் கையில் ஒரு பையோடு.. அந்தப் பை நோயாளிகளுக்கு மருந்துப் பொருட்களை வைத்துக் கொடுப்பதற்கானது... சுகாதாரத் துறையின் முத்திரையோடு கூடியது..
மருத்துவமனையின் அலுவலர் ஒருவர் இவனைக் கண்டதும் கூப்பிட்டு விசாரிக்கவும் நடுங்கி விட்டான்...
கையில் இருந்த பையைச் சோதித்ததில் அதனுள் இவனுக்கு சற்றும் சம்பந்தமில்லாத மருந்துகள்... அவ்வளவு தான்... பிரச்னையாகி விட்டது...
விசாரணையில் - எப்படியோ கிடைத்த மருந்துப் பொருட்கள் சிலவற்றை இவனிடம் கொடுத்து தனது இருப்பிடத்தில் கொடுக்கச்
சொல்லியிருக்கின்றான் பொது துப்புரவு வேலை செய்யும் ஒருவன்...
பொதுவாக மருத்துவ மனை வளாகங்களில் பல்வேறு துறைகளிலும் வேலை செய்யும் கீழ்நிலைப் பணியாளர்களில் ஓய்வு நேரங்களில் ஒருவருக்கொருவர் பேசிப் பழகி நட்பு கொள்வதுண்டு.. ஒரு சில நேரத்தில் நன்மையாகும் நட்பு சமயத்தில் நட்டாற்றில் முடிவதும் உண்டு...
இவன் விஷயத்தில் பங்ளாதேஷியின் நட்பு கேடாய் முடிந்திருக்கிறது..
மருந்துகளைக் களவாடிக் கொடுத்தவன் அடுத்தடுத்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்குள் சிக்கிக் கொண்டான்..
சந்தான மூர்த்திக்கோ நாட்டிற்குள் வந்து மூன்று மாதம் கூட ஆகாத நிலையில் - என்ன என்று புரியாமல் தவறு செய்து விட்டான்.. - என , அவன் மீது இரக்கம் கொண்ட நர்ஸுகள் சிலர் மேலிடத்தில் எடுத்துப் பேசியதால் இவன் மன்னிக்கப் பட்டதுடன் மருத்துவ மனையின் உணவகப் பணியில் இருந்து நீக்கப்பட்டான்...
இப்போது வேறு இடத்துக்குப் போகும் வரை வேலை நீக்கம் என்ற நிலையில் இருக்கிறான்.. மறுபடி வேலைக்குப் போகும் வரை சம்பளம் கிடைக்காது...
நடந்ததைச் சொல்லி விட்டு என் முகத்தைப் பார்த்தான்...
" எவனோ ஒருவன் எதையோ கொடுத்து என் இடத்தில் கொண்டு வந்து கொடு என்றால் யோசிக்க வேண்டாமா?.. " - கோபத்துடன் கேட்டேன்...
பதில் இல்லை..
" இனியாவது நல்லபடியாக நடந்து கொள்!.. " - சொல்லி விட்டு அவனைக் கடந்தேன்...
அப்புறம்தான் வேறொருவர் வழியாக விஷயம் தெரிந்தது.. மருந்து களவாடியவனோடு சேர்ந்து தவறான வழிக்கு பழகி விட்டான்.. பங்ளாதேஷி விரித்த வலையில் இவன் விழுந்து விட்டான்!.. - என்பது...
அடுத்த சில நாட்களில் சந்தான மூர்த்தியைக் கடுமையாக எச்சரித்த நிர்வாகம் - நகர்ப்புறத்தில் இருந்து வெகு தூரத்தில் பாலைவனத்தில் இருக்கும் உணவுக் கூடத்துக்கு அவனைப் பெட்டி படுக்கைகளுடன் அனுப்பி வைத்தது..
ஆனால் அவன் அங்கு சென்றும் திருந்தவில்லை என்று பேசிக் கொண்டார்கள்..
அத்துடன் அவனை மறந்து விட்டாலும் காற்றில் வந்த சேதி ஒன்றைக் கேட்டு பரிதாபம் தான் மேலிட்டது..
அருகில் இருந்து
சொல்லிக் கொடுத்தால்
உலகம் புரியாதா!..
கவியரசரின் வைர வரிகள் காதில் ஒலித்தன..
அவனை திரும்பவும் இங்கே அழைத்து அருகில் வைத்து புத்திமதி சொல்லித் திருத்தலாமா!..
திருத்தலாம்தான்!...
ஆனால் மோகம் முற்றிய நிலையில் இருக்கும் அவன் - உங்க வேலையப் பார்த்துக்கிட்டுப் போங்க!.. - என்று சொல்லி விட்டால்?..
எச்சரிக்கை மணியும் சேர்ந்து ஒலித்தது..
குழம்பினேன்... அலட்சியமாக ஒதுங்க முடியவில்லை...
நேற்று ஊரிலிருந்து அழைப்பு.. புதிய எண்... யாராக இருக்கும்!..
" நான் சந்தானத்தோட அப்பா பேசறேங்க!.. "
திடுக்கிட்டேன்...
" நல்லா இருக்கீங்களா தம்பி!.. சந்தானம் ரெண்டு மூணு மாசம் வரைக்கும் பணம் அனுப்புனான்... அடிக்கடி பேசினான்... இப்போ ஆறேழு மாசமா அது மாதிரி இல்லீங்க.. அவன் எங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும்... அப்படித்தாங்க.. வேண்டிக்கிட்டு இருக்குறோம்... வந்த புதுசுல உங்க கூட தங்கியிருக்கிறதா சொல்லி இருந்தான்.. இப்போ உங்களோட இல்லை.. ன்னு நெனைக்கிறேன்... ரெண்டு நாள் கழிச்சு போன் பண்றேன்.. அவன் எப்படி இருந்தாலும் சரி.. என்ன வெவரம்..ன்னு சொல்லுங்க... பதினாறு வயசில மேழி பிடிச்சவன்..ங்க நான்.. என் கை அவ்வளோ சீக்கிரம் ஓஞ்சிடாது... நல்ல மரமோ முள்ளு மரமோ அது முளைக்கிறப்பவே மண்ணைப் பொளந்துகிட்டு தான் வருது .. ஆனாலும் மண்ணு மரத்தை கை விட்டுடுறதில்லே.. அது மாதிரி எல்லாத்தையும் தாங்கிக்குவேன்... நல்லது தம்பி... உங்ககிட்ட பேசுனதுல மனசு பாரம் கொறஞ்சிருக்கு!... மறுபடி பேசுவோம்!.. "
கண்கள் கலங்கி விட்டன எனக்கு...
" மகனைப் பற்றி சொல்லிடுங்க!.. " என்கிறாரே...
" சொல்லி விடலாமா!.. என்ன சொல்வது?.. எதைச் சொல்வது?..
எப்படிச் சொல்வது?.. யாராவது எனக்குச் சொல்லுங்களேன்!.. "
ஃஃஃ
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் இன்றும் என்றும் ஆரோக்கியத்துடன்
இருக்க வேண்டும் .இறைவன் அருள வேண்டும்.
வாங்க வல்லிம்மா.. வணக்கம்.
நீக்குவாங்க, வணக்கம்!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்க எங்கெங்கும்..
வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..
வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம்.
நீக்குவணக்கம்.
நீக்குஇன்று எனது ஆக்கத்தினை பதிவு செய்து ஊக்கம் அளித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் திரு. KGG அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...
பதிலளிநீக்குநன்றியைப் பரிமாறிக் கொள்வோம்!
நீக்குநன்றி.
நீக்குஇன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...
பதிலளிநீக்குஅதே... அதே...
நீக்குவரவேற்போம்.
நீக்குஅன்பின் துரை,
பதிலளிநீக்குதெளிவான கதைப் போக்கு. என்னவெல்லாம் நடக்கிறது மா.
அந்தப் பையனை இப்படி கெடுத்தது யார்.
இளம் வயதில் உருப்படியில்லாமல் செய்து விட்டார்களே.
அந்தத் தந்தையை நினைத்து மனம் உருகு கிறது.
என்ன செய்வது:(
தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குபிழைக்க வந்த இடத்தில் இப்படியாக சறுக்கி விழுந்தோர் ஏராளம்.. தங்களது கருத்துரைக்கு நன்றியம்மா..
வெவரம்..ன்னு சொல்லுங்க... பதினாறு வயசில மேழி பிடிச்சவன்..ங்க நான்.. என் கை அவ்வளோ சீக்கிரம் ஓஞ்சிடாது... நல்ல மரமோ முள்ளு மரமோ அது முளைக்கிறப்பவே மண்ணைப் பொளந்துகிட்டு தான் வருது .. ஆனாலும் மண்ணு மரத்தை கை விட்டுடுறதில்லே.. அது மாதிரி எல்லாத்தையும் தாங்கிக்குவேன்...///
பதிலளிநீக்குபெத்த மனம் பித்து. என்ன சொல்லி இந்தத் தந்தையைத் தேற்றுவது!!!
இந்த தந்தையை என்ன சொல்லித் தேற்றுவது.. அதுதான் எனக்கும் புரிய வில்லை...
நீக்குதகாத வழியில் சென்று கொண்டிருக்கும் சந்தானம் விரைவில் திருந்தி வரட்டும்..
கௌதமன் ஜியின் படம் மிக அருமை.
பதிலளிநீக்குபதிவிட்ட ஸ்ரீராமுக்கும் வாழ்த்துகள்.
நன்றி.
நீக்குஅழகான படத்தை நதிவில் சேர்த்த திரு. Kgg அவர்களுக்கு நன்றி...
நீக்குஇப்படியான நிலையில் ஒருநாள் - " வேறொரு அறைக்குப் போகிறேன்.." - என்றபடி தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டான்.../////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
பதிலளிநீக்குஇதுதான் தப்பு நடக்கக் காரணம். நல்லவர்களோடு
இருந்திருந்தால் தவறு நடந்திருக்காது.
ஆனால் யாருக்கு யார் பொறுப்பேற்பது?
விதி வழி செல்லும் மனம்.
// விதி வழி செல்லும் மனம்..//
நீக்குநீங்கள் சொல்வது சரி.. நாம் ஒன்றும் செய்ய இயலாது... வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியம்மா..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம். வாழ்க வளமுடன்!
நீக்குவாழ்க வையகம்..
நீக்குவாழ்க வளமுடன்..
கதை படித்து முடித்தவுடன் மனம் பாரம் ஆகி விட்டது.
பதிலளிநீக்குஇதில் என்ன சொல்வது! மனம் முழுவதும் ஊரில் அவர் குடும்பத்தை நினைத்து . அப்பாவின் வருத்தமான பேச்சை கேட்டு மனம் கலங்கி போகிறது.
//அருகில் இருந்து
சொல்லிக் கொடுத்தால்
உலகம் புரியாதா!..
கவியரசரின் வைர வரிகள் காதில் ஒலித்தன..//
அருமை.
தகப்பனுக்கு புத்தி சொன்ன சாமிநாதனுடன் இருந்து இருந்தால் நல்லபடியாக இருந்து இருப்பார், சந்தான மூர்த்தி.
வெளிநாட்டு வேலையில் எத்தனை கஷ்டங்கள் .
கதை சொன்ன விதம் அருமை, கதைக்கு பொருத்தமான படம் கெளதமன் சார் வரைந்து இருக்கிறார் .
நன்றி.
நீக்கு@ கோமதி அரசு
நீக்கு// கதை சொன்ன விதம் அருமை..//
தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வெளிநாட்டு வேலை என்பதில் எவ்வளவு பொறுப்பாக இருக்கவேண்டும். அழுகிய காய்கறிகளோடு சேர்ந்தால், அழுகுவது ஒன்றுதான் வழி.
பதிலளிநீக்குவிதி வசத்தால், நல்லது செய்கிறோம் என்று இத்தகையவர்களுக்கு ரெக்கமன்டேஷன் செய்தால் நம் பெயரையும் கூடவே சேர்ந்து கெடுத்துவிடுவார்கள்.
ஒரு சில கேஸ்களில் நான் இரக்கம் காட்டி (சம்பந்தமில்லாதவருக்கு), என் சர்வ வல்லமை பொருந்தி பாஸிடம் சொல்லும்போது, அதன் பின்னணி உனக்குத் தெரியாது என்று சிலவற்றைக் கோடி காண்பிப்பார்.
நல்ல வாய்ப்பையும் கெடுத்துக்கொண்டு வாழ்க்கையை அழிவு நோக்கிச் செலுத்துபவரை...என்ன சொல்வது? புத்தி கர்மானுசாரணை
நல்ல நிகழ்வு. பாராட்டுகள்.
To, நெல்லைத்தமிழர்
நீக்குகணினி ஓரிடத்தில், நான் வேறிடத்தில் இருப்பினும் அலைபேசியில் (மெமோவில்) பதிவுகள் எழுதி வைத்து இருக்கிறேன். அலைபேசி சற்று பழுது இதன் காரணமாக அலைபேசியில் வெளியிட இயலாநிலை.
விசாரிப்புக்கு நன்றி தமிழரே... விரைவில் தருகிறேன் பதிவுகளை...
அன்பின் நெல்லை..
நீக்குஇங்கே இதெல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குவளைகுடாவில் இப்படி எத்தனையோ கதாபாத்திரங்கள் உலவுகின்றது.
பதிலளிநீக்குஎல்லாம் விதியின் வழி
அன்பின் ஜி..
நீக்குதாங்கள் அறியாததா.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக... வருக...
நீக்குவணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
பதிலளிநீக்குகதை படித்ததும் மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது. ஊரில் அந்த பையனின் அப்பா எவ்வளவு நம்பிக்கையோடு கண் காணாத வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்திருப்பார். அத்தனை நம்பிக்கையையும், முதலில் வெளி நாட்டுக்கு வந்த போது தனக்கிருந்த தன்னம்பிக்கையையும், சிதைத்துக் கொள்ள அந்த பையனுக்கு மனது எப்படி வந்ததோ? எல்லாம் விதி செய்த சதிதான்...
கவிரசரின் வார்த்தைகளோடு உதாரணம் அருமை. மனநெகிழ்வை உண்டாக்கிய கதை. இனி அந்த தந்தைக்கு உண்மையை தெரிவிப்பது எப்படி? சிரமந்தான்....!
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
// எல்லாம் விதி செய்த சதி தான்..//
நீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வணக்கம் கெளதமன் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரர் துரை செல்வராஜ் அவர்களின் இன்றைய கதைக்கு நீங்கள் வரைந்த ஓவியம் பொருத்தமாகவும் அழகாகவும் உள்ளது. ரசித்தேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குதங்களது அன்பினுக்கு மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குஅன்பின் நண்பர்களுக்கு வணக்கம்...
பதிலளிநீக்குதங்களது ஆதரவிற்கு மகிழ்ச்சி.
மதியத்துக்கு மேல் வருகின்றேன்..
நன்றி..
பதில் சொல்வது சிரமம் தான்...
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
வேதனை தான். நல்ல வழிகள் இருக்கும் போது தவறான வழியில் பயணித்து தனக்கே கேடு விளைவித்துக் கொள்பவர்களை என்ன சொல்ல.
பதிலளிநீக்குகேஜிஜி அவர்களின் ஓவியம் நன்று.
நன்றி.
நீக்குஅன்பின் வெங்கட்..
நீக்குதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நடந்த/நடக்கும்/இனியும் நடக்கப் போகும் ஒன்று. கெட்ட வழியில் செல்வதற்கு அரை வினாடி கூட ஆகாது. ஆனால் திருந்தவேண்டும் என நினைத்தால் தான் முடியும். அந்தப் பையன் இந்தப் புதைகுழியிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பெற்றவரிடம் பிள்ளையைப் பற்றிய உண்மையைச் சொல்வதே நல்லது.
பதிலளிநீக்குகௌதமன் அவர்களின் ஓவியமும் அருமை. நல்லதொரு படிப்பினையைத் தரும் கதை. பொதுவாக சுபமான முடிவுகளையே தரும் துரை இதில் முடிவை நாம் யூகிக்கும்படி செய்திருக்கார். இதுவும் பொருந்தியே வருகிறது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு// பெற்றவரிடம் பிள்ளையைப் பற்றிய உண்மையைச் சொல்வதே நல்லது...//
நீக்குஅன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..
கேட்டதை, தெரிந்ததை, பார்த்ததை அப்படி அப்படியே எழுதுவதில் ஒரு கதைக்கான சரியான உருவம் கிடைக்காமல் போய் விடுகிறது என்பதற்கு இந்தக் கதையும் ஒரு உதாரணம்.
பதிலளிநீக்குஅதனால் வாசிப்பவர் எதிர்பார்க்காத வகையில் வடிவங்கள் கொள்ள தவறி விட்டது.
தலைப்பு ஜோர்.
நிஜத்தில் நடந்த விஷயங்களை கதையாக்கும் பொழுது கதையின் போக்குக்கு ஏற்ப நடக்காத விஷயங்களையும் சரிவிகிதத்தில் கலந்து கதைக்கு சுவை கூட்ட வேண்டும். இது ரஸவாத வித்தை. முயற்சி எடுத்து லேசில் திருப்தி ஏற்பட்டு விடாமல் பழக வேண்டும்.
நீக்குபழகப் பழக சித்திக்கும்.
அன்பின் அண்ணா..
நீக்குஇந்தக் கருத்து எனக்குப் புரியவில்லை..
கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் விளங்கிக் கொள்வேன்..
தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
சந்தானத்தை உங்களுக்குத் தெரியும் போலிருக்கு. பின்னூட்டங்களில் அந்த பையன் பற்றி நிறைய சொல்லியிருக்கிறீர்கள். அதற்கு கதை உருவம் கொடுத்தாலே இது முழுமையான கதையாகி விடும், தம்பி.
நீக்குவாழ்த்துக்கள்.
அன்பின் அண்ணா..
நீக்குஇள்மையின் தலைவாசலில் தடுக்கி விழாமல் ஒரு சிலரே எளிதாகக் கடந்து விடுகின்றனர்..
சந்தானம் திருந்தி விட்டான்.. இனி எப்போதும் போல பொறுப்புள்ளவனாக இருப்பான்...
தங்களது கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...
இது கதையல்ல நிஜம் என்பது தெரிகிறது. சிலர் பாதை தவறி செல்கிறார்கள் என்பது தெரிந்தாலும், நம்மால் அவர்களுக்கு உதவ முடியாது. ஊரில் இருக்கும் அந்த தந்தை எதையோ யூகித்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது. சந்தான மூர்த்தியிடம் பேசிப் பார்க்கலாம்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
நீக்குசந்தானம் பொறுப்பிள்ளவன் தான்.. எனவே அவனிடம் பேசிப் பார்க்கலாம்...
தங்கள் கருத்துரைக்கு நன்றி..
சிலர் இப்படி மாறிப்போவது வேதனைதான்
பதிலளிநீக்குதங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..
நீக்குவெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் இருவகை குடும்பத்திறாகாகவே ஓடாக உழைப்பவர்கள்.
பதிலளிநீக்குகூடாத சிநேகத்தால் கெட்டு அழிவோர்கள். இப் பையன்தானே திருந்தினால்தான் உண்டு.
தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
நீக்குஇந்த்ப் பைய்ன் நிச்சயம் திருந்தி விடுவான்..
அன்பின் கருத்துரைக்கு நன்றி..
அருமையான கதை. வெளிநாடு காட்டும் மாய பிம்பத்தில் மயங்கி, வழி மாறும் மகனும், இங்கே மீதமுள்ள நிலத்தில் தன் உழைப்பை நம்பி வாழும் தந்தையின் மனோதிடமும், ஏக்கமும் நெகிழ்ச்சியாக இருந்தது. தாய் தந்தையை நோகடிக்காமல், சந்தான மூர்த்தி திருந்தி, நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்பின் வானம்பாடி..
நீக்குதங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... சந்தான மூர்த்தி விரைவில் மனம் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை இருக்கின்றது...
அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...