வியாழன், 22 ஜூலை, 2021

கல்யாண சாப்பாடு போட வா ...

 "உங்களுக்கு சொந்த வீடு இருக்கா"

"இருக்கு..  ஆனால் இங்கே இல்லை..  தஞ்சாவூர்ல இருக்கு..."

"எவ்ளோ கிரௌண்ட்?"

"ஒண்ணே ஒண்ணுதான்...   எதித்தாப்போல ஃபுட்பால் கிரௌண்ட் மட்டும் இருக்கு...  பக்கத்தில் ஸ்கூல் இருக்கு பாருங்க.."

"இல்லை..   உங்க வீடு எவ்ளோ கிரௌண்ட்னு கேட்டேன்..."

"ஆமாம்..  கிரௌண்ட் ஃப்ளோர், அப்புறம் மாடிலயும் ஃப்ளோர் இருக்கு.."

"சீதா இங்கே பாரேன்..  இவருக்கு நான் என்ன கேட்கறேன்னு புரியலை..  சாரே...  எனக்கு தேனில ஒரு வீடு இருக்கு.. நல்ல பெரிய வீடு.   இதோ இருக்காரே..  இவர் என் மச்சினர்..   இவருக்கு பழனில ஒரு வீடு இருக்கு..   என் மகன் கூட பழனில வீடு வச்சிருக்கான்... என் மகன் சிங்கப்பூர்ல இருக்கான்  "

ஓ..   அப்படிக் கேக்கறீங்களா...   எங்க வீட்டில வீட்டுக்கு வீடு யு எஸ், லண்டன், ஆஸ்திரேலியா, ஏன் சின்னாள கூடன்னு உலகம் பூரா இருக்கற நாடுகள்ல வேலை பார்க்கறாங்க...  இதோ இருக்காரே..   இவர் எங்க மாமா...  இவருக்கு பூந்தமல்லில வீடு இருக்கு...  பெரிய வீடுன்னு சொல்ல முடியாது...  ஆனா சின்ன வீடு கிடையாது!  இதோ, இவர் மாப்பிள்ளைப் பையனோட தாய்மாமா...   மடிப்பாக்கத்துல வீடு வச்சிருக்கார்.  அப்பார்ட்மெண்ட்.  அதோ என் தங்கச்சி இருக்காளே..  அவளுக்கு க்ரோம்பேட்டைல வீடு இருக்கு.  அவள் மாமனார் பல்லாவரத்துல ரெண்டு வீடு வச்சிருக்கார்.  நோ நோ அப்படிப் பார்க்காதீங்க..   வீடு வாங்கி வாடகைக்கு விட்டிருக்கார்."

"சார் நகைச்சுவையா பேசறார்...  இவ்வளவு நேரம் நல்லாதானே பேசிக்கிட்டிருந்தோம்?"

"நகைச்சுவையாய் பேசினா சாருக்குப் பிடிக்காது போல...  ஆமாம்..  அதுதான் நானும் சொல்றேன்..  இவ்வளவு நேரம் பேச்சு நல்லாதானே போச்சு?"

"இல்லை சாரே..   உங்களுக்கு இங்கே சென்னைல வீடு இருக்கான்னு கேட்டேனே.."

"அதான் சென்னைல இல்லை..  தஞ்சாவூர்ல இருக்குன்னேனே.."

"அதோட டாகுமெண்ட் இருக்கா?  என்ன எழுந்துட்டீங்க"

"நீங்க சொத்து மதிப்பு போடவந்திருக்கீங்களா?  கல்யாணம் பேச வந்திருக்கீங்களா?"

"இல்லை..  நீங்க கோச்சுக்கக்கக் கூடாது.  அதுல அர்த்தம் இல்ல..  எங்க பொண்ணு வாழப்போற இடம் நல்லாயிருக்கணும்னு நாங்க நினைக்கறது தப்பா?  நான் பொண்ணோட தாய்மாமா..."

"இருந்துட்டுப் போங்க..   அதுக்கு நான் என்ன சொல்லப் போறேன்?  ஆனா மாப்பிள்ளை வீட்டு கிட்ட இப்படிப் பேசி நான் பார்த்ததில்லை..  நான் என்ன பொய்யா சொல்றேன்..  இப்போதான் பொண்ணு பார்த்தப்புறம் ரெண்டாவது வாட்டி பார்க்கறோம்..  இப்படியா பேசுவீங்க... ஏதோ, மாப்பிள்ளை எங்க வேலை பார்க்கறார்னு பேசினோம், அவர் சம்பளம் என்ன, எப்படி எப்படி உயரும், கம்பெனி மாறுவாரான்னு எல்லாம் பேசினோம்..  அது ஓகே,"

"பொண்ண குடுக்கறவங்க நாலையும் விசாரிச்சுதான் கொடுப்பாங்க..  இப்போ நாங்க சொல்லலை.. எங்கங்க வீடு இருக்குன்னு.."

"நானும்தான் சொன்னேன்.  அதெல்லாம் பொண்ணுக்கா?"

"சேச்சே...   இல்லை..  அதெல்லாம் பொண்ணோட  சொந்தக்காரங்க வீடு.."

"அப்போ நானும்தான் சொந்தக் காரங்க வீடு லிஸ்ட் கொடுத்தேனே..  பொண்ணுக்கு என்ன கொடுப்பீங்க?"

"அது என் சிஸ்டர் தன்னால முடிஞ்சதைக் கொடுப்பாங்க..."

"நல்லது..   அதை முன்னாலேயே அவங்க சொல்லிட்டாங்க.. .. நாங்களும் சரின்னோம்.  இப்போ நீங்க வந்து எங்க வீட்டு டாகுமெண்ட் கேட்டா எப்படி?"

"இது மாப்பிள்ளை வீடா?"

"இல்லை..  இது மாப்பிளையோட மாமா ..   அதாவது என் வீடு.  சொந்த வீடு"

"அதுதான்...  மாப்பிள்ளை வீட்டை நாங்க பார்க்கணும்.."

"அவர் வேற ஏரியாவுல இருக்கார்.  உங்க வசதிக்காக இங்கே வச்சு உங்களை சந்திக்கிறார்... "

"இல்லை..  நாங்கள் அவர் இருக்கும் வீட்டையும் பார்க்கணும்.."

"அது வாடகை வீடுங்க...   அதைப் பார்த்து என்ன பண்ணுவீங்க..  அவங்கதான் இங்கே இருக்காங்க,  நீங்களும் பார்த்துட்டீங்களே"

"சீதா..  சார் கிட்ட நீயும் சொல்லேன்..   அம்மா மாதவி..   நீயும் சொல்லு.."

"ஏங்க...  அவங்க இருக்கற வீட்டைப் பார்த்துட்டு ஊருக்குப் போகலாம்னு இருக்கோம்"

"ஏன்?"

"சும்மா..   பார்க்கக் கூடாதா?"

"ஆச்சர்யமா இருக்கு..   புதுசா இருக்கு.  என்ன அர்த்தமோ..  சரி பார்த்துட்டுப் போங்க..   நீங்க திரும்பி ஊருக்குக் கிளம்பும்போது அங்கே போயிட்டு அப்புறம் போங்க...."

"மாப்பிள்ளை..  நாங்க கிளம்பும்போது நீங்களும் அப்பாவும் எங்க கூட வாங்க..  வீட்டைக் காட்டணும்ல..."

*************

"ன்ன..   அன்னிக்கி அந்த வீட்டைப் பார்க்கணும்னீங்களே..   பார்த்தீங்களா?"

"பார்த்தோம்.."

"சந்தேகப்படற மாதிரி அங்கே ஏதும் இருந்ததா? "

"சேச்சே..   என்ன கேக்கறீங்க? அப்படின்னா?."

"அங்கே இன்னொரு குடும்பம் இருக்கான்னு அக்கம்பக்கத்துல கூட கேட்டுப் பார்த்திருக்கலாம் நீங்க.."

"சேச்சே..   நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க...  மாமா ஏதும் தப்பாய் பேசி இருந்தா மன்னிச்சுடுங்க...  அவருக்கு எங்க மேல ரொம்பப் பிரியம் ஜாஸ்தி.."

"அப்படித் தெரியலியே..  இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் சில வரன் விட்டுட்டு போயிடுவாங்க..."

"எங்களுக்காக மாமாவை தப்பா எடுத்துக்காதீங்க..  நாங்க ஏன் அந்த வீட்டைப் பார்த்தோம்னா..."

"தெரியுது..  வீட்டில் என்னென்ன பொருள் இருக்குன்னு பார்த்துட்டு இல்லாத பொருள் எல்லாம் வாங்கி கொடுக்க...   அதானே..?"

"அதற்கெல்லாம் தயங்க மாட்டோம்..  வாங்கிடுவோம்.   இப்ப இல்லேன்னாலும் ஒண்ணொண்ணா அப்புறம் வாங்கி கொடுப்போம்..."

"ஒண்ணொண்ணா..?   அப்புறமாவா?  சரிதான்.  ஆனா நீங்க சரியா பார்க்கலைன்னா நான் லிஸ்ட் அனுப்பிடறேன்..."

"அது பேசிக்கலாம்..  நிச்சயகார்த்தம் எப்போ வச்சுக்கலாம்...    இருங்க அண்ணா பேசறார்..."

"ஹலோ..   நான் பொண்ணோட மாமா பேசறேன்..   அடுத்த வாரம் நீங்க நம்ம ஊருக்கு வர்றீங்களா?  வரும்போது அப்படியே அந்த தஞ்சாவூர்ல சொன்னீங்களே..  சொந்த வீடு..  அதோட டாகுமெண்ட்டோட ஒரு காபி...    ஹலோ..   ஹலோ..  ஃபோனை வச்சுட்டார் போல"

=======================================================================================================

கதையில் வரும் நாயகியைப் பற்றியோ, அல்லது ஒரு பெண்ணைப்ப்பற்றியோ அதன் படைப்பாளிகள் விதம் விதமாக வர்ணிப்பார்கள்.  ஸ்ரீநிவாஸா என்கிற பெயரில் எழுதிய மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் 1928  எழுதிய 'சுப்பண்ணா' எனும் தனது நாவலில் அதன் நாயகி லலிதாவைப் பற்றி இப்படி வர்ணிக்கிறார்.  இவர் 1983 ஆம் வருடம் ஞானபீட விருது வாங்கியவர்.


"எனக்குத் தகுதி இருந்தால் லலிதாம்மாளை வர்ணிக்க வேண்டும்.  கவிகள் 'மாதர் வர்ணனை' என்று எழுதும்போது, ஒருவேளை மனிதன் பெண்கள் விஷயத்தில் காட்டவேண்டிய மரியாதையைக் மீற வைக்கிறதென்பது என் துணிவு.   ஐயா, கவி!  எதனைச் சிருங்கார ரசத்தின் இருப்பிடமென்று காமுகஅவஸ்தையில் நீ பிரமித்து, உன்னைப் போன்ற காமுகர்களுக்காக வர்ணித்துக் கூறுகிறாயோ,  அந்தத் தனங்கள் இரண்டையும் உலகமாதா உன்னையும் என்னையும் போன்ற ஆயிரம் அற்ப ஜீவன்களைக் காபபதற்காகத் தரித்துள்ளாள்.... விட புருடனைப் போல இதனை வர்ணிக்க உன்னிடம் எவ்வளவு அற்பத்தனம் இருக்கவேண்டும்?  உன் தாயின் உடல் உறுப்புகளை இவ்விதம் நீ வர்ணிப்பாயா?

பெண் ஆசைக்குரியவளாக எப்படி ஆவாளோ, அதற்கும் சற்று மேலாகவே தாயாவாள்.  நீ யாரை உன் மனைவி என்றழைப்பாயோ, அவள் கூட உன் தேவைக்காக ஒரு சமயத்தில் மனைவியைப்போல நடந்து கொண்டாலும் இதயத்தில் உன்னை ஒரு மகவாக பாவிப்பாள்.

நன் ஒரு கவியல்ல.  எந்த ஒரு பெண்ணின் விஷயத்திலாயினும் சரி, வடிவத்தின் அழகு கொஞ்ச கால மட்டில் அழகாக இருக்கலாம்.  பிறகு நமக்குத் தெரிவது வர்ணிக்கத் தெரியாத பெண்மைக்குரிய உயர் தன்மை.

ஆயிரம் தடவைகளில் நாம் பார்த்திருக்கும் அந்த அன்பு, அந்தத் தயை, அந்த இரக்கம், அவள் காட்டும் ஆர்வம் , அவள் செய்யும் ஒவ்வொன்றிலும் உள்ள ஒரு தனிப் பண்பு,  அவளிடம் காணும் மென்மை எல்லாம் ஒரே வார்த்தையில் 'பெண்மை' எனலாம்.  வர்ணிப்பதாயின் லலிதம்மாளைக் குறித்து நான் இதனையே சொல்லவேண்டும்"

========================================================================================================


"இருளில் புரண்டு கொண்டிருந்தது நதி...."  இது நான் படித்த புத்தகத்தில் இடையில் வந்த எஸ்ராவின் ஒரு வரி.   இது உங்களுக்குள் என்ன சிந்தனையைத் தூண்டுகிறது?

====================================================================================================

பொக்கிஷம் 

திமுக தலைமையில் இரண்டாம் முறை ஆட்சி அமைந்தபோது குமுதத்தில் வந்த கார்ட்டூன்கள்!

இப்பவும்......


இருவர்!


சுத்துதே சுத்துதே பூமி...  

===================================================================================================

காரைச் சொந்தம் கொண்டாடுகிறதா இந்தக் காக்கை!  வெற்றிலையை வாயில் அடக்கிய மாமா போல போஸ் கொடுக்கிறது!

====================================================================================================


ஸ்விக்கியில் மரம் ஆர்டர் போட்டதோ...
டார்ச் லைட்டிலிருந்து 
இலக்கு நோக்கிப் பாயும் ஒளி போல 
மேகச் சுவர் மூடி 
குவியமாய் 
மரத்தை மட்டும் 
நோக்கிப் பாயும் சூரியக் கதிர்கள்!

கட்டிடங்களுக்கு வேண்டாம் 

பச்சையம் தயாரித்து 
உயிர் வாழ 
இடையில் நிற்கும் 
அந்த ஒற்றை மரத்துக்கு மட்டும் சூரியன் சப்ளை!

========================================================================================================

என் பெரும்பாலான சனிக்கிழமைகளில் இதுதான் காலை உணவு!  சூடான இளகிய வெண்பொங்கல், கத்திரிக்காய் கொத்ஸு!

======================================================================================================

முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்ல நமக்குண்டு பண்பாடு...!  முன்னோர் சொன்னதில் அர்த்தமுள்ளது!

தேர்தலுக்கு முன்!


தேர்தலுக்குப் பின்!

154 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

    எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. கத்திரிக்காய் கொத்சும் பொங்கலும் வெகு ஜோர்.
    இங்கேயும் பொங்கல் ஃபேவரிட் மெனு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு முன்னர் அப்படி கிடையாது. இப்போது சில வருடங்களாக வீட்டில் செய்தால் பிடிக்கிறது!

      நீக்கு
  3. முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் அல்ல. 'கேட்டுக்கோடி உருமி மேளம்.

    பதிலளிநீக்கு
  4. தமிழ்வாணன் வருமுன் காக்க சொல்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்! ஆனால் இருவேறு சந்தர்ப்பங்களில் அவர் எழுதிய கட்டுரையின் தலைப்புகள் அவை!

      நீக்கு
    2. உண்மைதான்..நல்ல தேர்வு ஸ்ரீராம்.

      நீக்கு
  5. மரத்தை நோக்கிப் பாயும் ஒளி.
    கவிதையும் படமும் மிக அருமை.

    பார்த்ததும் பாடச் சொல்லும்
    கதிரவன். அருமை.

    பதிலளிநீக்கு
  6. கா க்ஹா கர்ர்ர்ர்.
    இந்தக் கார் என் மேடை.
    நான் பாட நீ கேள். நல்ல படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்ற மாதம் அபார்ட்மெண்ட் தண்ணீர் மோட்டார் பழுதடைந்து விட்டது. கிணற்றிலிருந்து அதை எடுத்து பழுது பார்த்து, வேறு புதிய மோட்டார் பொருத்தினோம். அப்போது பக்கத்துக்கு காம்பௌண்டில் கண்ட காட்சி!​

      நீக்கு
    2. கிணறு? போர் போடவில்லையா? கிணற்றுத்தண்ணீர் அத்தனை குடும்பங்களுக்கும் போதுமா?

      நீக்கு
    3. உறை இறக்கி, கிணற்றுக்குள் மோட்டார். அதை போர் என்றுதான் சொல்லவேண்டும்.

      நீக்கு
    4. ம்ம்ம்ம், எங்க வீட்டில் போர் போட்டப்போப் பார்த்திருக்கேன். போர்வெல் என்பது தனி. கிணறும் இருந்தது வீடு கட்டும்போது வெட்டிய கிணறு. அதிலும் பத்து உறை இறக்கி இருந்தோம். 40 அடிக்குத் தண்ணீர் இருந்தது. என்றாலும் அக்கம்பக்கம் குடியிருப்பு வளாகங்கள் பெருகியதால் மாமா போர் போட்டார். 300 அடி என்று பேச்சு! 200 அடியிலேயே தண்ணீர் பெருகி வர 220 க்கு மேல் போக முடியலை. லாரியில் வந்து ஒரே நாளில் போட்டுச் செல்லும் போர் அல்ல. மாடுகட்டி உழுவது போல் மனிதரை வைத்து நான்கு நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே சென்று ஐந்தாம் நாள் மாலையில் நீர்ப் பிரவாகம்! விளக்கேற்றி ஆரத்தி எல்லாம் எடுக்கச் சொன்னார் போர் போட்ட தொழிலாளி. நான் கூடவே கேசரியும் பண்ணிக் கொடுத்தேன்.

      நீக்கு
    5. நாங்க வீட்டை விட்டுக் கிளம்பியதும் இந்த போரில் தான் மணல் மூடித் தண்ணீர் வராமல் இருக்க அப்போக் கொஞ்சம் வேலை செய்து போரில் உறை இறக்கினார்கள். அது ஒரு 20 அடி. ஆகக்கிட்டத்தட்ட 240 அடிக்கு போர் போட்டிருந்தோம். இப்போக் குடியிருப்பு வளாகம் கட்டுகையில் பில்டர் 500 அடிக்கு 2 போர் போட்டிருப்பதாய்ச் சொன்னார்.

      நீக்கு
  7. மதுவின் கொடுமை ஆட்டம் போட்ட காலம் மறுபடியும் வந்துவிட்டதா.

    நாங்கள் சென்னைக்கு மாற்றலாகி வந்த போது எமர்ஜென்சி
    இருந்தது.

    மாமனார் தினம் ஒரு செய்தி கொண்டுவார்.
    மது விலக்கைக் கொண்டாடும் காந்தியவாதிகள்
    அவருக்குத் தோழர்கள். நாங்களும் கேட்போம்.

    இதே திமுக ஆட்டம் முடிந்தது என்று.

    அந்தக் கார்ட்டூனில் அந்த அம்மாவின் வயிற்றெரிச்சல்
    என்னமாக வெளிப்படுகிறது!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா..  ஹா...   இவர்கள் அறிவிக்கும் இலவசங்களால் நிதி நிலைமையை சீராக்க டாஸ்மாக் ஒன்றுதான் வருமான வழி என்று ஆகிவிட்டது.

      நீக்கு

  8. "இருளில் புரண்டு கொண்டிருந்தது நதி....///////////////நதி புரளுமா என்ன. பொங்கி ஓடும்.
    இல்லையானால் நிதான நடை போடும்.
    தூக்கமில்லாத நதி புரள சந்தர்ப்பம் கிடையாது.
    எனக்குத் தோன்றியது இதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ம்ம்ம்...    தூக்கமில்லாத நதி..   இது நல்ல கற்பனைம்மா...

      நீக்கு
    2. நன்றி ஸ்ரீராம்.
      அவர் எழுத்தை ஒரே ஒரு வருடம் தான் படித்தேன்.
      பிறகு ரசிக்கவில்லை.

      நீக்கு
    3. நன்றிம்மா..   அவர் எழுத்துகளில் சிலவற்றை ரசிக்கலாம்.  தனிப்பட்டமுறையில் அவர் மனப்போக்கு நிறையபேருக்குப் பிடிக்காது!   எல்லாவற்றையும் படித்து, ஒவ்வொன்றையும் தொட்டு கருத்து சொல்லி விட்டர்கள்.  நன்றி அம்மா.

      நீக்கு
    4. நதி இரவு நேரத்தில் புரளாது. தூங்கும் என்பார்கள். அதனால் தான் நதிகளில் இரவு ஸ்நானம் கூடாது எனவும் நதிகளில் இரவு நேரத்தில் இறங்குவது கூடாது எனவும் சொல்வார்கள். இதைப் பற்றிய ஓர் கதை ஆழ் மனதில் இருக்கு! நினைவில் வரச்சே சொல்றேன்.

      நீக்கு
    5. எஸ்.ரா.வை ஆரம்பக்காலத்தில் விகடனில் ஆதரித்தப்போப் படிச்சது தான். அப்போவே என்னமோ தெரியலை! பிடிக்கலை. அதே போல் பாலகுமாரனும்! அவரோட அப்பம், வடை, தயிர்சாதம்! விகடனில் வந்தப்போப் படிச்சதைப் பாதியிலே விட்டுட்டேன். அப்புறமாப் படிக்கலை.

      நீக்கு
    6. நதி எப்படி தூங்கும்? இரவில் போய் சுழலில் மாட்டவேண்டாம் என்பதற்காகச் சொல்லியிருப்பார்கள்! கதை நினைவு வந்ததும் சொல்லுங்க..

      நீக்கு
    7. ஆரம்ப எஸ்ரா எனக்கும் பிடித்திருந்தது. துணையெழுத்து.

      நீக்கு
  9. //////////////////////ஆயிரம் தடவைகளில் நாம் பார்த்திருக்கும் அந்த அன்பு, அந்தத் தயை, அந்த இரக்கம், அவள் காட்டும் ஆர்வம் , அவள் செய்யும் ஒவ்வொன்றிலும் உள்ள ஒரு தனிப் பண்பு, அவளிடம் காணும் மென்மை எல்லாம் ஒரே வார்த்தையில் 'பெண்மை' எனலாம். வர்ணிப்பதாயின் லலிதம்மாளைக் குறித்து நான் இதனையே சொல்லவேண்டும்"////////////////////////


    மிக நன்றி ஸ்ரீராம். ஸ்ரீ மாஸ்தி வெங்கடேசன் அவர்களின் வார்த்தைகளில் பழமையும்
    உண்மையும் ,நன்மையும் பூரித்து வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  நன்றி அம்மா.  இந்த மாதிரி சைவ, உத்தமமான எழுத்துகளையும் அன்று வாசகர்கள் படித்திருக்கிறார்கள்.

      நீக்கு
  10. மாமாவின் வாயால் கெட்ட கல்யாணம்.
    தலை சுத்துகிறது.
    இந்த மாதிரி மனுஷர்கள் இருந்தால்
    திருமணங்கள் நடக்குமா.????

    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :-)) நல்லவேளையாக கெடவில்லை.. அவரை அலட்சியம் செய்து நல்லபடி தொடர்கிறது!

      நீக்கு
    2. இப்போ எல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் மட்டுமல்ல, சுற்றத்தாரும் இப்படி எல்லாம்/இன்னும் அதிகமாய்க் கேள்விகள் கேட்பதால் எனக்கு ஆச்சரியமாக இல்லை. எங்க பிள்ளைக்கு நாங்க பெண் பார்க்கும்போதே இவை தொடங்கி விட்டன.

      நீக்கு
    3. ஓ! இது தொடருமா? நான் சரியாகப் படிக்கவில்லை. படிக்கிறேன்.

      நீக்கு
    4. இதுபோன்ற வழக்கங்கள் தொடரும்!!! இங்கு இது அவ்வளவுதான்!

      நீக்கு
  11. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா அக்கா.. வாங்க.. உங்க கால் பிரச்னை முற்றிலும் குணமாகப் பிரார்த்தனைகள்.

      நீக்கு
  12. பெண்ணைப் பற்றிய மாஸ்தி ஶ்ரீவெங்கடேசனின் வர்ணனைகள் மனதுக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் கொடுத்தது. ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழைகள்! தட்டச்சிலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். கவனிக்கவில்லை. அப்புறம் பார்க்கிறேன்.

      நீக்கு
    2. கண்ணில் பட்ட வரை திருத்தி உள்ளேன்.

      நீக்கு
  13. கார்ட்டூன்கள் உண்மையை எடுத்துச் சொல்கின்றன. இப்போதும் இதே நிலைமை தானே! டாஸ்மாக் கடைகளுக்குப் போலீஸ் பாதுகாப்பு, தடுப்பு ஊசி போட்டுக்க வருபவர்களைக் கவனிக்காத அலட்சியப் போக்கு! இதானே நடப்பு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. ஆமாம்.. இப்பவும் பொருந்தும் காட்சிகள்.

      நீக்கு
  14. காக்காய் ஜலதோஷத்தினால் உப்புத் தண்ணீரில் வாய் கொப்புளிக்குதோனு நினைச்சேன். மரத்துக்கு மட்டும் வெயிலைப் பாய்ச்சும் சூரியனின் சாமர்த்தியத்தைப் பயணங்களில் நிறையப் பார்த்து வியந்திருக்கேன். அந்தச் சமயம் கீழே இறங்கிப் பார்த்தோமானால் அகண்ட பிரபஞ்சமும் அதன் கீழ் நாம் எத்தனை சிறியவர்கள் என்பதையும் உணர்ந்து மனமும் தேகமும் சிலிர்க்கும்.

    பதிலளிநீக்கு
  15. வெண் பொங்கல் அத்தனை ஒண்ணும் பிடித்தது இல்லைனாலும் கத்திரிக்காய் கொத்சோடு சாப்பிடப் பிடிக்கும். அரிசி உப்புமாவும். ஆனால் இங்கே பொங்கல் பண்ணினால் நோ கொத்சு! அரிசி உப்புமாவுக்கே தடா! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொங்கல் நல்லபடி அமைந்தால் கொத்ஸுவோடு சுகமே!

      நீக்கு
    2. ..இங்கே பொங்கல் பண்ணினால், நோ கொத்சு! அரிசி உப்புமாவுக்கே தடா! //

      இட்லி, பொங்கல், அரிசி உப்புமாவுக்கெல்லாம் வரிசையாகத் தடா போடுங்கள்.. பிஸ்ஸா, பர்கரை சீஸை பெய்ண்ட் போல் தடவித்தடவி உள்ளே தள்ளிக்கொண்டு வெள்ளைக்காரனுக்கு இணையாக வாழ்வதாகப் பெருமைப் படுங்கள்! கலர்,கலராக மாத்திரைகளையும் கூடவே உள்ளே போகட்டும். மெடிக்கல் இன்ஷுரன்ஸ் ப்ரிமியம் கட்ட மறக்கக்கூடாது. டாக்டருக்காக ஒருத்தர் தனியாக சம்பாதிப்பது உத்தமம். வாழ்க்கைதான் .. ஆஹா.. என்ன ஒரு சுகம்!

      நீக்கு
    3. ஒரு சுழற்சியில் எல்லா சுவாரஸ்யங்களும் அலுத்து, பிடித்து என மாறி மாறி வரும்!

      நீக்கு
    4. @ஏகாந்தன், முந்தைய சில திங்கட்கிழமைப் பதிவுகளிலும், வியாழக்கிழமைப் பதிவுகளிலும் பிட்சா பற்றிய பேச்சு வந்தப்போ நான் பிட்சாவுக்கு எதிராகக் கருத்துரை சொல்லி இருப்பேன். நீங்க படித்ததில்லை போல! போகட்டும்! அரிசி உப்புமாவுக்குத் தடா என்றதுமே பிட்சா, பர்கர் தானா நினைவுக்கு வரணும்? தோசை, அடை, சேவை, இட்லி, ரவா உப்புமா, ரவா/சேமியா கிச்சடி, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, ஜவ்வரிசி உப்புமா, புளி உப்புமா, புளிப் பொங்கல் இதெல்லாம் நினைவில் வரக்கூடாதோ? இத்தனை இருக்கையில் நாங்க பிட்சா பர்கரா வாங்கப் போறோம். உணவுப் பொருட்களை ஆன்லைனிலோ ஓட்டல்களிலோ பிட்சா ஹட், பிட்சா பங்களா போன்றவற்றில் ஆர்டர் செய்தோ இன்று வரை சாப்பிட்டதில்லை. அதுக்காகப் பிட்சா சாப்பிடலைனு அர்த்தமும் இல்லை. அம்பேரிக்காவில் இருக்கிறச்சே பெண் வீட்டிலும்/பையர் வீட்டிலும் சாப்பிட்டிருக்கோம். இங்கே இந்தியாவில் ஒரே ஒரு முறை தவிர்த்துச் சாப்பிட்டதே இல்லை. நாங்க இன்னமும் வத்தக்குழம்பு, துவையல், கூட்டு, பச்சடி என்று தேடிச் சாப்பிடும் ரகம்.

      நீக்கு
    5. அரிசி உப்புமா என்றால் எப்போதுமே நம்ம ரங்க்ஸுக்குப் பிடிக்காது. வேண்டாம்னு சொல்லிடுவார். அதே ரவா உப்புமா என்றால் சாப்பிடுவார். நேற்றிரவு ரவா உப்புமா தான் புளிச்ச மோர் விட்டு நல்லெண்ணெயில் தாளித்து!

      நீக்கு
    6. வேறு வழியில்லாமல் தான் வெளியில் வாங்கறோமே தவிர்த்து வெளியில் வாங்கிச் சாப்பிடும் பழக்கமே குறைவு தான்! முன்னெல்லாம் இந்தப் பிட்சா கூட நான் வீட்டிலேயே பண்ணித் தந்திருக்கேன் குழந்தைகளுக்கு.

      நீக்கு
    7. @ கீதா சாம்பசிவம்: ..இத்தனை இருக்கையில் நாங்க பிட்சா பர்கரா வாங்கப் போறோம். //

      அடடா! நான் உங்களை பர்சனலாக குறிப்பிட்டு அதைச் சொல்லவில்லை. இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது இப்போதெல்லாம் வாழ்க்கை சிலருக்கு என்பதாக, பொதுவாகச் சொன்னதுதான் அது.

      நீங்கள் பாரம்பர்ய சமையலில் நம்பிக்கை உள்ளவர், செய்பவர், உண்டு வருபவர் என்பதெல்லாம்தான் நன்றாகத் தெரிந்த விஷயமாச்சே!

      நீக்கு
  16. தமிழ்வாணன் தீர்க்கதரிசி தான் அவர் சொந்த விஷயங்களைத் தவிர்த்து!

    பதிலளிநீக்கு
  17. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  18. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமையான நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  20. ..வர்ணிப்பதாயின் லலிதம்மாளைக் குறித்து நான் இதனையே சொல்லவேண்டும்"//

    ரொம்பக் கஷ்டபட்டிருக்கார் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் என்பதுபோல் ஆக்கப்பட்டிருக்கிறது இங்கே! ஆனால் அவரது கன்னட ஒரிஜினல் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். மிகவும் மதிக்கப்படும் கன்னட ஆளுமை - ’மாஸ்தி, கன்னடத்தின் ஆஸ்தி’ என்கிறார்கள் இங்கே! ஏகப்பட்ட கன்னட நூல்களோடு, ஆங்கிலத்திலும் படைத்தவர் ஐயங்கார்.

    அவரது படைப்பை, தமிழில் ’ஆக்குகிறேன்’ என்று, கன்னடத்தின் நளினம் தெரியாத ஏதோ ஒரு தமிழ் அசடு உப்புமா கிண்டியிருக்கக்கூடும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொழிபெயர்ப்பில் வார்த்தைகள் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் கருத்து அதுதானே!

      நீக்கு
  21. ..உங்களுக்கு சொந்த வீடு இருக்கா"//

    கால்கேட் விளம்பரம் நினைவில்.. ‘உங்கள் பேஸ்ட்டில் உப்பு இருக்கா!’

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாங்க்ல எவ்வளவு பாலன்ஸ் இருக்கு? அப்பா அம்மா கூடவே இருப்பாங்களா? ஆன்சைட் வாய்ப்பு உண்டா? போன்றவையும் உண்டு.

      நீக்கு
    2. தமிழ்ச் சேனல்கள் பக்கம் தலைகாட்டாததால் விபரம் தெரியாமப் போச்சு!

      நீக்கு
    3. சேனல் தேவையில்லை. சும்மா மாட்ரிமோனியல் பக்கத்தை மேய்ந்து பாருங்கள்!

      நீக்கு
    4. //பாங்க்ல எவ்வளவு பாலன்ஸ் இருக்கு? அப்பா அம்மா கூடவே இருப்பாங்களா? ஆன்சைட் வாய்ப்பு உண்டா? // இன்னமும் நிறைய கேள்விகள்.... சொந்த வீடு இருப்பது கட்டாயம். பெண் சொல்லும் இடத்திற்கு வேலை மாற்றிக்கொள்வது அதைவிடக் கட்டாயம். இதுவரை கேட்காத கேள்வி... சமையல் பண்ணத் தெரியுமா, பெண்ணைச் சமையல் செய்யச்சொல்லி தொந்தரவு செய்யக்கூடாது.. வீட்டு வேலைக்கு உதவியாளரை நியமிப்பீங்களா.....

      நீக்கு
    5. கேட்டிருக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்!!!

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. முதல் பெண் கொடுக்கும் உரையாடல் ரசித்தேன். இந்த மாதிரி நெருங்கிய, அல்லது வேண்டாத சொந்தங்களின் இடையூறுகளினால்,பல திருமணங்கள் நின்று விடும் அபாயம் வரும். ஆனாலும் இப்படி முன்னெச்சரிக்கையுடன் தீர விசாரித்து பெண்ணை கொடுப்பது இப்போதுள்ள காலத்தில் பழக்கமாகி விட்டது.

    காக்கையின் போஸ் நன்றாக உள்ளது. காரின் உள்ளேதான் நாம் அமர்ந்து கொள்ள தப்பித்தவறி கூட இந்த மனிதர்கள் அழைக்க மாட்டார்கள். காரின் மேலாவது அமரக் கிடைத்த நம் இந்த சுதந்திரத்தை கொஞ்ச நேரமாவது அனுபவிக்கலாமென தன் சொந்தங்களை கூவி அழைக்கிறதோ.. ?
    பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்ணைப் பெற்றவர்கள் கேட்பதைவிட உடன்வரும் உற்றார் கேட்கும் கேள்விகள்தான் அதிகம். அதிலும் ஒரு சாமர்த்தியம் உண்டுதானே? போகும் தூரம் வரை போகலாம். எப்போது வேண்டுமானாலும் பின்வாங்கலாம்!

      நீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    பொக்கிஷம் எப்போதும் பொருந்தும்படியான கருத்துள்ள ஜோக்ஸ்.

    மழை சூழ்ந்த மேகங்களுக்கு இடையே மாட்டிக் கொண்டிருந்தாலும், மரங்களுக்கு மட்டும் சூரியன் ஒளி தந்த விதத்தைப் பற்றிய கவிதை அருமை. ரசித்தேன்.

    இளகிய வெண் பொங்கல், கத்திரிக்காய் கொத்ஸுதுவுடன் பார்க்க சாப்பிட தூண்டும்படி உள்ளது. எனக்கும் பொங்கல் பிடிக்கும். இந்த மாதிரி கத்திரிக்காய் கொத்ஸு இல்லாவிடினும், புதினா,கொத்தமல்லி சட்னியுடன், கடந்த செவ்வாயன்று முதல் ஆடிச் செவ்வாய் என இந்த வெண்பொங்கல்தான் எங்கள் வீட்டிலும்.

    தமிழ்வாணனின் கட்டுரை தலைப்புக்களை அர்த்தமுள்ளதாக பொருத்தியிருப்பது நன்றாக உள்ளது. இன்றைய அழகான கதம்ப பகிர்வினுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம்போலவே விரிவான கருத்துரைக்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. நன்றி..அப்படியா.. ? நான் இன்று தமிழ் இரண்டாம் தேர்வு வினாத்தாளில் வருவது போல் கருத்தை சுருக்கி தந்திருப்பதாக சந்தோஷம் அடைந்தேனே..இல்லையா? ஹா ஹா. ஹா.

      நீக்கு
    3. இருபது மார்க் கேள்வி பதினைந்து மார்க் கேள்விபதிலாகி இருக்கிறது!!! ஆனால. உங்கள் வழக்கத்தை மாற்றவேண்டாம் கமலா அக்கா.. நீங்கள் தரும் உற்சாகம் எங்களுக்கெல்லாம் குறைய வேண்டாம்.

      நீக்கு
  24. கல்யாண சாப்பாடு எந்த ஊரிலுள்ள வீட்டில்...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும்போல பெண் ஊரில்தான் இருக்கும் DD.

      நீக்கு
    2. சிலர் பிள்ளை வீட்டில் திருமணம் செய்வார்கள். செலவும் பிள்ளை வீட்டினருடையதாக இருக்கும்.

      நீக்கு
    3. ஆமாம். கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
    4. என் நண்பனுக்கு, அவன் ஹிந்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்லியதால், அவன் பெற்றோர் ரொம்பவே அசிரத்தையாக அவனுக்குப் பெண் பார்த்தனர். (அப்பா, இரண்டாவது மனைவி கிறிஸ்துவர் என்பதால் அவருக்கு ஜால்ரா). திருமணத்துக்கும், அந்தப் பெண் வீட்டு வழக்கப்படி, முழுச் செலவும் மாப்பிள்ளையுடையது என்று சொல்லிவிட்டார்களாம். திருமணத்துக்குப் பிறகு நொந்துகொண்டே அவன் என்னிடம் சொன்னான்.

      நீக்கு
    5. ஓரொரு வீட்டில் ஓரொரு வழக்கம் போல...

      நீக்கு
  25. எங்கேயும் எப்போதும் தாய் மாமன்கள் செய்யும் அளப்பறையே தனி தான். அதுவும் பெண்ணுடைய தாய் மாமன் என்றால் சொல்லவே வேண்டாம். 

    இருளில் புரண்டுகொண்டிருந்தது நதி 
    அடுத்த வரியாக எனக்கு தோன்றியது 

    அலைகளால் தழுவ முயன்றது கடல். 

    பொங்கல் சாப்பிடும் தட்டை போட்டோ எடுக்கக்கூடாது. போட்டோ எடுக்கும் முன் எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

    காரை இவ்வளவு சுத்தமாக கழுவி இருக்கிறார். நாமும் கொஞ்சம் போட்டு வைப்போம் என்று நினைத்ததோ காக்கை. 

    மேகம் மறைத்தால் என்ன 
    என் நண்பன் அங்கு உண்டோ? 
    என எட்டிப்பார்க்கும் 
    சூரியன்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொங்கல் சாப்பிடும் தட்டை போட்டோ எடுக்கக் கூடாதா? அல்லது சாப்பிடும் தட்டையே போட்டோ எடுக்கக் கூடாதா? ஏன்?

      நதியைத்தேடி வருமோ கடல்?

      நன்றி ஜெயக்குமார் ஸார்.

      நீக்கு
    2. நதியைத்தேடி வருமோ கடல்?

      வரும். இங்கு கேரளத்தில் பல உப்பங்கழிகள் உண்டு. அவற்றின் பெயர் காயல். அது போல் tide வரும்போதும் கடல் நீர் ஆற்றில் புகும்.

       Jayakumar

      நீக்கு
  26. சொந்த வீடு இருக்கா?
    இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  27. It's all in the game. Proceed பண்ணவும், தட்டிக் கழிக்கவும் ஒரு காரணம் வேண்டாமா?
    அந்த காலத்தில் பூர்வீக சொத்து இருக்கிறதா என்று பார்த்தார்கள். இப்போது வீடு. பையன் வெளிநாட்டில், இங்கே அவன் பெற்றோர்கள் வசித்த வீடு (சொந்த வீடுதான்) சிறியதாக இருக்கிறது என்று அந்த வரன் வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவும் என்னவோ உண்மைதான் என்றாலும், இங்கே பையனைப் பார்த்து முழு வந்த பிறகுதானே வந்தார்கள்!

      நீக்கு
  28. விட புரதனைப் போல இதனை வர்ணிக்க உன்னிடம் எவ்வளவு அற்பத்தனம் இருக்கவேண்டும்? உன் தாயின் உடல் உறுப்புகளை இவ்விதம் நீ வர்ணிப்பாயா?// நியாயமான கேள்வி.
    மாஸ்தி வெங்கடேச ஐயங்காரை ஒரு முறை குமுதத்திற்காக சுஜாதா பேட்டி எடுத்திருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...  அப்படியா?  என்னிடமுள்ள அவர் புத்தகங்களில் இருக்கிறதா என்று தேடிப்பார்க்கிறேன்.

      நீக்கு
  29. இருளில் புரண்டு கொண்டிருந்தது நதி
    அதற்கும் இன்சோமினியாவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேயோ எப்போவோ படிச்சிருக்கேன். நள்ளிரவில் நதி நீரைத் தொட அது சிலிர்த்துக்கொள்ளத் தொட்டவருக்கு நதி தூங்கும் இரவில் அதை எழுப்பக் கூடாது எனச் சொன்னது நினைவில் வரும்.எங்கே? எப்போ? படிச்சேன்? ஆடி மாதத்திலும் நதியில் ஸ்நானம் பண்ண மாட்டார்கள். நதிக்கு அப்போது மாத விலக்கு ஏற்படுவதாக ஐதீகம். பலரும் புட்டுப் பண்ணி நதிக்கரையில் கருகமணி, பிச்சோலை, வளையல்கள் புதுத்துணியோடு சமர்ப்பிப்பார்கள். இது குறித்தும் விரிவாக எழுதணும்! என்னத்தை எழுதப் போறேனோ? :(

      நீக்கு
  30. புதிதாக கார் வாங்கியிருக்கிறீர்களோ என்று நினைத்தேன்.
    கதிரவனின் இப்படிப்பட்ட தோற்றத்தை நானும் ரசித்திருக்கிறேன். வானம் காட்டும் வர்ண‌ஜாலம் என்று தனியாக ஒரு போல்டரில் புகைப்படங்களை சேமித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்..  ஆம்..   என்னிடமும் நிறைய இருக்கின்றன.  இந்த மாதிரி அற்புதக் காட்சிகளை கிட்டத்தட்ட அனைவரும் கண்டிருப்பார்கள்.

      நீக்கு
  31. அனைவருக்கும் முகம் மலர இனிய மாலை வணக்கங்கள்! எல்லோரும் நலமாய் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  32. கதம்பம் எப்பொழுதும் போல அருமை! மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் பெண்மையை போற்றும் வர்ணனை அழகு.
    முன்பொரு காலத்தில் மாப்பிள்ளை வீட்டாரின் அலப்பறை. இப்பொழுது பெண்வீட்டாரின் முறை போல.
    இருளில் புரண்டுகொண்டிருந்தது நதி.

    விடியலுக்காய் கேட்டது அதன் ஸ்ருதி

    (ஸ்டாலினின் விடியல் அல்ல)

    பதிலளிநீக்கு
  33. யாரும் இது வரை தொடாத விஷயங்களைத் தொட்டுப் பார்ப்போம்:

    சின்னாளக் கூடவா? அப்படீன்னா? எந்த தேசத்தில் இருக்கிறது ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
  34. சோகங்கள் நம் மனத்தை ஆட்கொள்வது
    மேகங்கள் வானை மறைத்தாலும்,
    ஞான ஒளியாய் ஞாயிறின் கீற்று,
    மரங்களின் (நம் மனங்களில்) மேல் பட்டு ஒளிரும்!

    பதிலளிநீக்கு
  35. எங்கள் வீட்டிலும் பெரும்பாலும் சனிக்கிழமை பொங்கல் செய்து பெருமாளுக்கு பூஜை. தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் அல்லது தக்காளி சட்னி. விசேஷ நாள் என்றால் சர்க்கரைப் பொங்கலுடன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு கொழுக்கட்டை செய்து(தந்தால்) சாப்பிட ஆசை.

      நீக்கு
  36. அந்த பெண் பார்க்கும் படலத்தை கதை போலச் சொன்ன முயற்சி நன்றாக இருந்தது. இனிமே வியாழக்கிழமையும் ஒரு கதை படிக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி விடுங்கள். எபிக்கு எடுப்பாய் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார். உரையாடலாகவே அமைத்திருந்தது பற்றி யாரேனும் சொல்கிறார்களா என்ற(ம்) (எதிர்) பார்த்தேன்.

      நீக்கு
    2. உரையாடலாக அமைந்ததை நான் கவனிச்சேன் ஶ்ரீராம். என்னோட சொந்தப் பிரச்னைகளின் அழுத்தத்தில் அதைச் சொல்லவில்லை. பிவிஆர் மற்றும் அருணா/அபயா ஆகியோரும் கதைகளை உரையாடல்களிலேயே நகர்த்துவார்கள்.

      நீக்கு
  37. நகைச்சுவை இப்பொழுதும் பொருந்துகிறது. இவர்கள் ஆட்சி என்றால் எப்பொழுதும் இதே தான்.

    பதிலளிநீக்கு
  38. பு. பி.யின் கோபாலய்யங்கார் அப்படி என்றால். மாஸ்தி இப்படியா? இருந்தாலும் குழாயடி கூப்பாடு போல அடுக்கியிருக்க வேண்டாம்.

    மாஸ்தியின் படைப்புகளை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் கூடியிருக்கிறது.

    யாராவது வாசித்திருந்தால் அவரது உன்னத படைப்பாங்களைக் குறிப்பிடுங்கள்.. அதற்கு பர்த்தியாய் காண்டேகரின் அட்டகாச எழுத்தோவியங்களை நான் பரிந்துரைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  39. இருளில் புரண்டு கொண்டிருந்த நேரத்தும் மேலாடை நழுவி விடாமல் கவனம் கொண்டிருந்தாள் நதி நல்லாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நதியின் மேலாடை? என்னவாக இருக்கும்?

      நீக்கு
    2. விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
      வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்.

      நதிக்கு?

      நீக்கு
    3. விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம் மாதிரி,

      நதிக்கு மேலாடை புதுப்புனல் நுரைகள் என்று சொல்லலாமா ?

      விண்ணும் மழை மேகம் என்று ஒன்று வந்தால்தான் அதை மேலாடையாக போட்டுக் கொள்வது போல்.அதன் பயனால் தன் கரை புரண்டோடும் நுரைகளை நதி நீரும் தன் மேலாடையாக பாவிக்குமோ ..

      ஏதோ எனக்குத் தோன்றியதை உளறி விட்டேன். மன்னிக்கவும்.

      நீக்கு
    4. புதுப் புனல் நுரை!!

      ஆஹா.. எக்ஸெலெண்ட்..

      நீக்கு
    5. வணக்கம் ஜீவி சகோதரரே

      ஏதோ எனக்குத் தோன்றியதை சொன்னதை ஆமோதித்ததற்கு என் பணிவான நன்றிகள் சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    6. ஆனால் புதுப்புனல் பொங்காத நேரத்து?.

      நீக்கு
    7. இருளில் புரண்டு கொண்டிருந்தது நதி....

      ----- எனக்கெம்னவோ இதை கற்பனையாகவே நினைக்கத் தோன்றவில்லை.

      நதியின் உள் ஆழத்தை உற்று நோக்கினால் அந்தப் புரளல் அதன் உயிர்ப்பாய் மனசில் பரவி பரவசம் கொள்ளச் செய்கிறது.

      அவரது கதைகளில் கூட எஸ்.ரா. வெகு சாதாரணமாய் சொல்வது போலிருக்கும் சில வரிகள் யோசிக்கையில் நம்மை உன்மத்தம் அடையச் செய்யும் ஆற்றல் மிக்கவை.

      இதை பாலகுமாரனிடமும் நான் உணர்ந்திருக்கிறேன்.

      நீக்கு
    8. வணக்கம் சகோதரரே.

      ஆகா.. இந்தக் கேள்வியும் சரிதான்..

      வானம் மழை மேகம் (எப்போதும் சூழும் மேகங்களின்றி நீலவானமாகவும் இருக்கிறதே..) தோன்றும் போதுதான் மேலாடையாக பாவித்து அணிவதைப்போல், நதி நீருக்கும் ஒரு மேலாடையாக அதன் நுரைகளை கற்பனை செய்தேன். மேலும்,மற்ற சமயங்களில் அதன் ஆடைகளை அது காலத்திற்கேற்ப நவீன மாதிரியாக அணிந்து கொள்ளும் எனவும் கற்பனை செய்ய வேண்டியதுதான்.:)

      இயற்கைக்கு அவரவர் கற்பனைக்கேற்றவாறு வளைந்து தரும் குணத்தை அதைப் படைத்தவன் தந்திருப்பதால்தானே நாம் காணும் உலகில் நாம் போற்றும் ஏராளமான கவிஞர்களும் தோன்றியுள்ளார்கள்.

      மறுபடியும் எனக்குத் தோன்றுவதைத்தான் சொல்கிறேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    9. ந்தியை நிறைய பார்ப்பவர்களுக்கும் ந்தியோடே உறவாடியவர்களுக்கும் தெரிந்திருக்கணும்.

      ந்திக்கு மேலாடை வெங்காயத் தாமரை. அது இல்லாத ந்தியே இருக்காது.

      நீக்கு
    10. இரவில் நதி புரள்வது கற்பனை என்றால் மேலாடையும் கற்பனையே.

      நதியைப் பெண்ணாக உருவகிக்கும் போது மேலாடை இல்லாமல் இருக்கக் கூடாது என்ற பதட்டத்தில் மேலாடை வந்தது.

      இந்த நேரத்தில் ஜெயகாந்தனின் 'போர்வை' கதை நினைவுக்கு வருகிறது.

      யாராவது வாசித்திருக்கிறீர்களா?

      நீக்கு
  40. அந்த நாட்களில் மது அரக்கன் என்பார்கள்.

    இந்த நாட்களிலோ அந்த அரக்கன், அன்பான ராட்சசியாய் மலர்ந்த வித்தை எங்ஙனம் சாத்தியமாயிற்று?

    தெரிந்தவர்கள் சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெஜாரிட்டி உபயோகிப்பாளர்கள்!

      நீக்கு
    2. காலமாற்றம்தான். இவன் சிகரெட் பிடிப்பான் என்று சொன்னாலே கெட்ட பையன் என்று அர்த்தம். குடிப்பான் என்றால் அயோக்கியன், கூட சேரக்கூடாது என்று என் சிறு வயதுக் காலத்தில் இருந்தது.

      கணிணியில் 88களில் வேலை பார்க்கும்போது, what is this? IT fieldல டிரிங்ஸ் கிடையாதா என்ற ஆச்சர்யப் பார்வை. 2000ல்... ஹே... இவன் பார்ட்டிக்கு லாயக்கில்லை என்ற ஏளனப் பார்வை... இப்போது... வேறு கிரகவாசியாகப் பார்ப்பார்கள்..

      காலமாற்றம்

      நீக்கு
  41. ஒளி போல
    மரத்தை மட்டும்
    ஒற்றை மரத்தை நோக்கி
    சூரியன் (இரண்டு இடங்களில்)

    ஆக்கபூர்வமான கற்பனை. இருப்பினும் கவிதையாய் மனசில் புரள்வதற்கு கொஞ்சம் கூட சிரமப்பட்டிருக்கலாமோ என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மரம் இரண்டு இடங்களில் வருகிறதே...

      நீக்கு
    2. யோசிக்கக் கூடாது. அந்த ஒரே கண்டிஷன் தான்.

      மரம் என்பதற்கு மாற்றுச் சொல் ஒன்று சொல்லுங்
      களேன்.

      நீக்கு
    3. ஒற்றை இலக்காய் 
      மரத்தை நோக்கிப் பாயும் 
      சூரியக்கதிர்!

      நீக்கு
    4. சூரியனுக்கு கதிரவன் போல ---

      மரத்திற்கு மாற்றுச் சொல்?..

      நீக்கு
    5. விருட்சம் என்று சொல்லலாம். தமிழ் இல்லை என்பார்கள்!

      நீக்கு
    6. தரு என்பது அழகான மாற்றுச் சொல்.

      நீக்கு
  42. இன்னாளைய மாமாக்களுக்கு இன்னும் கூடவான கிரக்கம் வேண்டியிருக்கு.

    ஸ்வீட் பீடா, ஜர்தா பீடா என்றெல்லாந் விதவித சரக்குகளை அதக்கிக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்புறம் மாவா என்று ஒன்று உண்டாம்...

      நீக்கு
    2. மாவா ஜர்தா பீடாவில் தூவப்படும் ஒரு உபப் பொருள் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. விவரம் சரியாய்த் தெரியாது. எனக்கு வந்த ஒரு ஆட்டோக்காரர் தான் முன்பு மாவா வியாபாரம் செய்ததாய் சொன்னார்.

      நீக்கு
    4. இது என்ன மாவானு தெரியலை ஶ்ரீராம். பொதுவாக வடக்கே எல்லாம் பாலைக் காய்ச்சிச் சுண்ட வைத்துச் சர்க்கரை சேர்க்காமல் வைத்திருப்பதை மாவா என்பார்கள். ஒருசிலர் மாவா ரபடி என்றும் சொல்வது உண்டு. பீடாவிலும் இதைச் சேர்ப்பவர்கள் உண்டு. மாவா எனில் பாலைக் காய்ச்சிச் சுண்ட வைத்த சர்க்கரை இல்லாத் திரட்டுப் பால்.

      நீக்கு
  43. எஸ்ரா ஸ்பெஷலான நம் கவனத்திற்கு
    உரியவர்.
    தாவரங்களின் உரையாடல்
    புலிக்கட்டம்
    வெறும் பிரார்த்தனை
    காந்தியோடு பேசுவேன்
    ஷெர்லி அப்படித்தான்
    பாதியில் முடிந்த படம்
    பிடாரனின் மகன்

    -- போன்ற குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கதைகள் நிறைய இருக்கின்றன. இதில் முதலில் குறிப்பிட்டது மெட்டா ஃபிஸிக்ஸ் வகைத்தானது.

    அவரது 'யாமம்' குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய புதினம்.

    ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத நான்கு கதைகளை ஒன்று சேர்த்த அற்புத கற்பனை அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாமம்.. அப்பா கலெக்ஷனில் பார்த்தேனோ... பார்க்கிறேன்.

      நீக்கு
  44. கல்யாண சாப்பாடு சூப்பர்.

    பதிலளிநீக்கு
  45. பல்சுவைப் பகிர்வு நன்று. பொக்கிஷப் படங்களும்!

    பதிலளிநீக்கு
  46. பெண் வீட்டார் கேட்கும் கேள்விகளில் முக்கியமானது சொந்த வீடு இருக்கா? அடுத்து வெளி நாடு போக வாய்ப்பு உண்டா? வெளி நாட்டில் வேலை, சொந்த வீடு மாமியார், மாமனார் மகனிடம் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாதவர்களா? இது தான் இப்போதைய முக்கிய கேள்விகள் ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொந்த வீடு கடனில் வாங்கியது என்றால் கையில் செலவுக்கு எவ்வளவு இருக்கும். எங்கள் பெண்ணுக்கு சமையல் தெரியாது. தினமும் வீட்டில் சமைக்க முடியாது... இன்னும் பல

      நீக்கு
    2. பெண் சம்பாதிப்பதில் குறிப்பிட்ட அளவு எங்களுக்கு தந்துவிடுவாள்.  அவள் அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அடிக்கடி இங்கு வந்து விடுவாள் ஓகேயா என்றும் கேட்கப்பட்டது.

      நீக்கு
  47. உங்கள் கவிதை, நீங்கள் பகிர்ந்த சூரியன் படம் மற்றும் தகவல்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு
  48. பெரிய பையனுக்காக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தெலுங்கு கம்மா நாயுடு பெண்களின் அம்மாக்கள் பேசுவதைக் கேட்க வேண்டும். :D பலப் பல கதைகள் எழுதலாம். வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுகிறார்களே, பையனுக்கு என்ன வியாதி? என்று ஒரு அம்மா கேட்டார்... போனை கட் செய்து விட்டு குளித்து உடம்போடு மனதையும் கழுவிக் கொண்டு வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கேள்வியை நாங்களும் சந்தித்தோம்.  ஆனால் குளிக்கவில்லை!

      நீக்கு
  49. இருளில் புரண்டு கொண்டிருந்தது நதி...

    காலையில் குளிக்கையில் அவள் அழுத கண்ணீரும்,

    மாலையில் கழுவிய வியர்வையும் பாரமாய் அழுத்த...

    நிலவில்லாத வானத்தின் கீழ்...

    இருளில் புரண்டு கொண்டிருந்தது நதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சர்ய வருகைக்கும் அழகான கவிதைக்கும் நன்றி சு.  எண்ணங்களைக் கேட்டால் அதையே ஈற்றடியாய்க் கொண்டு கவிதையே எழுதியது சிறப்பு.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!