சனி, 17 ஜூலை, 2021

சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியம்

 

சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியம் 

குமாரபாளையம் : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்தப்பட வேண்டிய ஊசி மருந்து இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக பெற்றோர் தகவல் தெரிவித்தனர்.


சிறுமி மித்ராவின் தந்தை சதீஷ்குமார் கூறியதாவது; எங்கள் மகள் மித்ரா தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். இவரது சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஊசி மருந்து தேவைப்பட்டது. இதன் விலை 16 கோடி ரூபாய். இதை இந்தியாவில் இறக்குமதி செய்ய 6 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்று கூறினர்.


பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம் 16 கோடி ரூபாய் சேர்ந்து விட்டது. இறக்குமதி வரியை ரத்து செய்தால் மட்டுமே இந்த மருந்து எங்கள் மகளுக்கு கிடைக்கும் எனும் நிலை இருந்து வந்தது. பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்கள் அதிகாரிகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தோம்.

தற்போது இறக்குமதி வரி 6 கோடி ரூபாயை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக போன் மூலம் தகவல் தெரிவித்தனர். இதற்கான கடிதம் அனுப்பி வைக்கப்படும் எனவும் கூறினர். பெங்களூரு மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனை மூலமாக மருந்து ஆர்டர் செய்வோம். ஓரிரு நாட்களில் மருந்து கிடைத்ததும் மித்ராவுக்கு அந்த மருந்து செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

=====================================================================================================

அவிநாசி: "என் பிள்ளைக்கு 'சீட்' கேட்டு போனோம். இல்லைன்னு சொல்லிட்டாங்க; எப்படியாவது ஒரு 'சீட்' வாங்கித்தாங்க..."தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க தான் இப்படியான சிபாரிசுடன் பெற்றோர்கள் வரிசை கட்டுகின்றனர். இது, இயல்புதானே... என்றாலும், அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு இத்தனை மவுசு என்பது தான் விஷயமே.

===============================================================================================


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என். சொக்கன் - Facebook post on 14-07-2021. 

அந்தக் கிராமத்துப் பெண்ணுக்கு 62 வயது. அன்பானவர், நல்ல அறிவுள்ளவர். ஆனால், அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.

ஒருநாள், அவர் தன்னுடைய 12 வயதுப் பேத்தியை அழைக்கிறார், ‘கண்ணு, எனக்கு இந்தக் கதையைப் படிச்சுக் காட்டு’ என்று கேட்டுக்கொள்கிறார்.

‘பாட்டி, இது கதை இல்லை, தொடர்கதை’ என்கிறார் அந்தச் சிறுமி. ‘ஒவ்வொரு வாரமும் வரும்.’

‘ஆமாம் கண்ணு, ஒவ்வொரு வாரமும் நீ எனக்கு இதைப் படிச்சுக்காட்டு’ என்கிறார் பாட்டி.

‘சரி’ என்று கதையைப் படிக்கத் தொடங்குகிறார் பேத்தி. அதைப் பாட்டி கூர்ந்து கவனிக்கிறார்.

அதன்பிறகு, ஒவ்வொரு புதன்கிழமையும் அந்த வார இதழ் வருகிறது. அதைப் பேத்தி படிக்கிறார், பாட்டி கேட்கிறார்.

அந்த நேரத்தில், பக்கத்துக் கிராமத்தில் ஒரு திருமண விழா. பேத்தி அந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளச் செல்கிறார், அங்கேயே சில நாட்கள் தங்கிவிடுகிறார்.

வழக்கம்போல், புதன்கிழமை வருகிறது, வார இதழும் வருகிறது, அதில் தொடர்கதையும் இருக்கிறது, ஆனால், அதைப் படித்துக்காட்டப் பேத்தி பக்கத்தில் இல்லை.

பாட்டிக்கோ ஆவல் தாங்கவில்லை, அந்தக் கதையில் அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளத் துடிக்கிறார், புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கிறார், அதில் இருக்கும் எழுத்துகள் அவருக்குத் தெரிகின்றன, ஆனால், அவை சொல்லவருவது என்ன என்று தெரியவில்லை, தன்னுடைய விரல்களுக்குப் படிக்கத் தெரியாதா என்கிற ஏக்கத்துடன் அந்த எழுத்துகளை வருடிப்பார்க்கிறார், தவிக்கிறார்.

வெள்ளிக்கிழமை, பேத்தி திரும்பி வருகிறார். அவரைப் பார்த்ததும், பாட்டிக்கு ஒரே அழுகை, ‘கண்ணு, நான் இந்தக் கதையைப் படிக்க ஆசைப்பட்டேன், ஆனா, என்னால படிக்கமுடியலையே’ என்று தேம்புகிறார்.

அன்று, அவர் ஒரு தீர்மானம் எடுக்கிறார். ‘நான் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளப்போகிறேன்.’

பேத்தி சிரிக்கிறார். ‘பாட்டி, இத்தனை வயசுக்கப்புறம் நீங்க எப்படிப் பள்ளிக்கூடத்துக்குப் போவீங்க?’

‘நான் பள்ளிக்கூடத்துக்குப் போகப்போறதில்லை. உன்கிட்ட கத்துக்கப்போறேன்’ என்கிறார் பாட்டி. ‘ஆனா ஆவன்னாவில ஆரம்பிச்சு எல்லாத்தையும் சொல்லிக்கொடு. நான் கத்துக்கறேன். அப்புறமா நானே எல்லாக் கதையையும் படிச்சுக்குவேன்.’

இப்படித் துணிவோடு பேசியபோதும், எழுதப் படிக்கக் கற்றுக்கொள்வது அவருக்கு எளிதாக இருக்கவில்லை. ஆனால், அவர் கடுமையாக உழைக்கிறார், தொடர்ந்து படித்துப் படித்து, எழுதி எழுதிப் பயிற்சி எடுக்கிறார், மூன்று மாதத்தில் எழுதப் படிக்கத் தெரிந்துகொள்கிறார், சரஸ்வதி பூஜையன்று பேத்தியை நாற்காலியில் உட்காரவைத்து அவருடைய காலைத் தொட்டு வணங்குகிறார், ‘நான் கும்பிடுவது என் பேத்தியை இல்லை, என் வாத்தியாரம்மாவை’ என்கிறார்.

புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் சுதா மூர்த்தி தன்னுடைய பாட்டி கிரிஷ்தக்கா-வுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்த கதைதான் இது. நமக்கு இது தெரியவில்லையே என்கிற ஏக்கமும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற துடிப்பும் வந்துவிட்டால் மற்ற தடைகளெல்லாம் ஒரு பொருட்டா என்ன!

22 கருத்துகள்:

 1. சிறுமி நலமுடன் வாழ பிரார்த்திப்போம்.

  பாட்டியின் முயற்சி பாராட்டுக்குறியது.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 3. சிறுமி மித்ரா வாழ்க வளமுடன்
  வாழ்க நலமுடன்!

  அவிநாசி அரசு பள்ளி இப்படி நல்ல பள்ளி என்று தெரிகிறது.
  தங்கள் சொத்த பணத்தில் சாலை பள்ளத்தை சரி செய்த தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள்.

  //புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் சுதா மூர்த்தி தன்னுடைய பாட்டி கிரிஷ்தக்கா-வுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்த கதைதான் இது//

  நல்ல தகவல்.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  இறைவன் அருளால் நோய் நொடி இல்லாத
  வாழ்வு தொடர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. சிறுமி மித்ராவுக்கு மருந்து கிடைத்ததும்,
  அதற்கு வரி விலக்கு கிடைத்ததும் மிக மிக மகிழ்ச்சி தரும்
  செய்தி. அவள் வளர்ந்து எல்லோருக்கும் நன்மை செய்வாள்.
  நல்ல உள்ளங்களுக்குப்
  பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 6. அந்த அரசு பள்ளி மாதிரி இன்னும் நிறைய
  பள்ளிகள் வரவேண்டும்.
  எல்லாக் குழந்தைகளும் நல் வாழ்வு பெற வேண்டும்.
  பாராட்டுகள்.

  தினசரி செய்தியாக ஓய்வு பெற்ற
  பின்னும் சாலைப் பள்ளங்களைச் சீர் செய்யும் தம்பதிகளுக்கு
  மனம் நிறை வாழ்த்துகள் .
  இது போலக் கேள்விப்பட்டதே இல்லை.

  வாழ்க வளமுடன். மிக நன்றி கௌதமன் ஜி.

  பதிலளிநீக்கு
 7. அந்தப் பாட்டியின் பேத்தி சுதா மூர்த்தி அவர்கள் என்றால் அதிசயமே இல்லை.
  இத்தனை முனைப்புள்ள பாட்டிக்கு இது போன்ற நல்ல அருமையான
  வாரிசுதான் வந்திருக்கிறார்.
  அருமையான செய்தி. வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. குழந்தை மித்ராவுக்கு நல்லபடியாக மருந்து கிடைத்ததற்கும், அதுவும் வரி விலக்குடன் கிடைத்திருப்பதற்கும் வாழ்த்துகள். குழந்தை நல்லபடியாக குணமாகி சீரும், சிறப்புமாக வாழ வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. வித்தியாசமான பாஸிட்டிவ் செய்திகள். சிறுமி மித்ராவும், அவளைப் போல இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வேறு சிலரும் பயனடையும் வண்ணம் மருந்திற்கு வரியை தள்ளுபடி செய்திருக்கும் மத்திய அரசை பாராட்டலாம்.
  படிக்க கற்றுக் கொண்ட பாட்டியை பற்றி படிக்க ஆரம்பித்த பொழுது சுதா மூர்த்தியின் கதை போல இருக்கிறதே என்று தோன்றியது. அதேதான்!
  அரசுப் பள்ளியின் தரம் உயர்ந்தது குறித்து மகிழ்ச்சி.
  சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போன்றவையும் சிறப்பாக செயல்படுபவை.

  பதிலளிநீக்கு
 11. அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 12. மகிழ்ச்சியான செய்திகள்... எழுதப் படிக்கக் கற்றுக்கொண்ட நிகழ்வு சிறப்பு...

  பதிலளிநீக்கு
 13. சுதாமூர்த்தியின் பாட்டி பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தேன். அரசுப்பள்ளி நன்றாகச் செயல்படுவதும் அதில் சேர சிபாரிசுகள் வாங்கிச் செல்வதும் பாராட்டத்தக்க ஒன்று. சென்னையில் சில மாநகராட்சிப் பள்ளிகளும் சிறப்பாகச் செயல்படுவதாய்ச் சொல்லுவார்கள். பள்ளங்களை மூடிய தம்பதிகள் அற்புதமானவர்கள். சிறுமிக்கு ஊசிக்கான இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்பட்டதை தினசரிகளில் பார்த்தேன். மத்திய அரசுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. மித்ராவுக்கான ஊசி மருந்துக்கு இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்பட்டது தினமலரில் வாசித்தது தான்...

  நல்லபடியாக மருந்து செலுத்தப்பட்டு விரைவில் குணம் அடைவதற்கு வேண்டிக் கொள்வோம்...

  பதிலளிநீக்கு
 15. இதழ்களில் படித்த செய்திகள். போற்றத்தக்க மனிதர்கள். அரசும்கூட.

  பதிலளிநீக்கு
 16. சிறுமி மித்ரா குணமடையப் பிரார்த்திப்போம். அரசுப் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு ஒரு முன் உதாரணம். திருவாரூர் தம்பதியர் செய்திருக்கும் சேவை போற்றுதலுக்குரியது. கடைசித் தகவல் ஃபேஸ்புக்கிலும் வாசித்தேன். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. மூன்று தகவல்களுமே சிறப்பு. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!