திங்கள், 19 ஜூலை, 2021

'திங்க'க்கிழமை - காஞ்சீபுரம் இட்லி -  நெல்லைத்தமிழன் ரெஸிப்பி

 நாங்க சென்னைல இருந்தபோது ஒருநாள் காஞ்சீபுரம் யாத்திரைக்குச் சென்றிருந்தோம். ஒரு நாளில் 12 வைணவ திவ்யதேசக் கோவில்களை தரிசனம் செய்யலாம்.  காலையில் பொங்கல், கொத்ஸு (7 மணிக்கு), மதியம் கலந்த சாதம், பிறகு இரவு திரும்பும் சமயத்தில் தையல் இலையில் காஞ்சீபுரம் இட்லியும் மிளகாய்ப்பொடியும் தந்தார்கள். பலப் பல வருடங்களுக்குப் பிறகு (40 வருடங்கள்) காஞ்சீபுரம் இட்லி சாப்பிட்டேன். அதை அவர்கள் ரொம்பவும் டிரெடிஷனல் முறையில் செய்திருந்தார்கள்.  (குடலைக்குள் மாவை வைத்து பல மணி நேரங்கள் வேக வைத்து, வட்டமாக 1 இஞ்ச் தடிமனில் கட் பண்ணி அதனை இரண்டாக வெட்டித் தந்திருந்தார்கள், ஆளுக்கு 3)

என் மனைவியும் அவ்வப்போது செய்வாள். ஆனால் அதற்கு ரசிகன் நான் மட்டும்தான். பசங்களுக்கு மிளகு, சுக்குலாம் போட்டால் பிடிப்பதில்லை.  திங்கக்கிழமை பதிவுக்கு போட்டோல்லாம் எடுத்துக்கறேன் என்று சொல்லி எடுத்துவைத்தேன்.  இது சென்ற டிசம்பர் 10ம் தேதி செய்தது.


இப்போ இதன் செய்முறை.


தேவையானவை

 

இட்லி புழுங்கரிசி 1 கப்

தோசைப் பச்சரிசி 1 கப்

முழு உளுந்து 1 கப்

வெந்தயம் 1/4 தேக்கரண்டி


சுக்கு 1 துண்டு  (ஆனால் நாங்கள் இஞ்சி உபயோகித்தோம்)

மிளகு 1 1/2 மேசைக்கரண்டி

சீரகம் 1 தேக்கரண்டி

பெருங்காயம் 1 1/2 தேக்கரண்டி

கருவேப்பிலை 2 ஆர்க்

முந்திரிப்பருப்பு 1 மேசைக்கரண்டி

நெய் - தாளிக்க


செய்முறை


1.  அரிசியையும் உளுந்தையும் (அதனுடன் வெந்தயம்) தனித்தனியாக நன்றாக களைந்து, 4 மணி நேரம் ஊறவைக்கணும்.   உளுந்து வெந்தயத்தை நன்றாக வழுமூன அரைக்கணும். பிறகு அதில் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து அரைக்கணும். அரிசி கரகரன்னு அரைபடும், ஆனால் உளுந்து வெந்தயம் ரொம்ப வழுமூன அரைந்திருக்கும். இதனுடன் தேவையான உப்பைச் சேர்த்து 8 மணி நேரம் வைத்து பொங்கவைக்கவும்.


2. கடாயில் நெய்யில்,மிளகு வறுக்கவும். வெடித்தவுடன் முந்திரிப்பருப்பு சேர்க்கவும். பிறகு கருவேப்பிலை, சீரகம், இஞ்சி சேர்க்கவும். பிறகு கடைசியில் பெருங்காயப்பொடி தூவி, அடுப்பை அணைத்துவிடவும்.


3. இதனை மாவில் கலந்துவிடவும்.  முந்திரிப்பருப்பு போன்றவை கறுத்துவிடக்கூடாது. அல்லது ஒவ்வொன்றையும் பொரித்தவுடன் தட்டில் கொட்டிக்கொள்ளலாம். பிறகு எல்லாவற்றையும் சேர்த்து மாவில் கலந்துவிடலாம்.


3. சாதாரணமா இட்லி வார்ப்பதைப் போல வார்க்கணும்.






அதற்கு அப்புறமும் மனைவி செய்திருக்கிறாள். ஆனால் அதில் ஒரு டிரிக் செய்வதைப் பார்த்தேன். மாவின் ஒரு போர்ஷனில் எனக்கு காஞ்சீபுரம் இட்லிக்கு உண்டானதையும், இன்னொரு போர்ஷனில் பசங்களுக்காக கொத்தமல்லி மற்றும் அவங்களுக்குப் பிடித்ததைப் போட்டு புதுவித கொத்தமல்லி இட்லியாகவும் கொடுத்துவிடுகிறாள்.


காஞ்சீபுரம் இட்லி (என்னைப் பொறுத்தவரையில்) சூப்பரோ சூப்பர்.  நாங்க யாத்திரைலாம் போகும்போது, இரயிலில், மறுநாள் சாயந்திர உணவாக காஞ்சீபுரம் இட்லியும் மிளகாய்ப்பொடி எண்ணெயும் கொடுப்பார்கள். எனக்கு பொதுவா இட்லி மிளகாய்ப்பொடி இப்போல்லாம் நெஞ்சைக் கரிக்கும், ஆனாலும் சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும்.   யாத்திரைனு சொன்னதும் எனக்கு நாங்கள் வழக்கமாகச் செல்லும் திருவல்லிக்கேணி யாத்திரை ஆர்கனைசர்கள் நினைவுக்கு வருகின்றனர். அவங்க, உணவைப் பொறுத்த மட்டில், எவ்வளவு வேணும்னாலும் தருவாங்க, என்ன ஒண்ணு, மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றைத் தவிர எதையும் வீணாக்கக்கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருப்பாங்க. காஞ்சீபுரம் இட்லி, எனக்கு நான் சென்ற யாத்திரைகளை நினைவுபடுத்துகிறது.  அந்த யாத்திரைல, மேல்கோட்டை கேசரின்னு ஒரு நாள் மாலை தேநீருடன் தருவாங்க. ரொம்ப ருசியா இருக்கும். அதையும் ஒரு நாள் செய்து திங்கக் கிழமை பதிவுக்கு அனுப்புகிறேன்.


நீங்களும் இந்தச் சுலபமான காஞ்சீபுரம் இட்லியைச் செய்துபாருங்கள்.

79 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  2. காஞ்சீபுரம் இட்லி செய்முறை குறிப்புகளும் படங்களும் அருமை.
    சிலர் கிண்ணம், டம்ளார் என்று வாழை இலையில் நெய் தடவிவிட்டு வேக வைத்து எடுப்பார்கள்.

    //மாவின் ஒரு போர்ஷனில் எனக்கு காஞ்சீபுரம் இட்லிக்கு உண்டானதையும், இன்னொரு போர்ஷனில் பசங்களுக்காக கொத்தமல்லி மற்றும் அவங்களுக்குப் பிடித்ததைப் போட்டு புதுவித கொத்தமல்லி இட்லியாகவும் கொடுத்துவிடுகிறாள்.//

    நல்ல யோசனை.

    முன்பு அடை செய்தாள் கண்வருக்கு காரம் வேண்டும், குழந்தைகளுக்கு காரம் மற்றும் வெங்காயம் வேண்டாம் என்பார்கள். அடை மாவு அரைத்தால் இப்படித்தான் இரண்டு பிரிவாக மாவை தனி தனியாக எடுத்து வைத்து கொண்டு காரம், வெங்காயம் போட்டும், காரம், வெங்காயம் இல்லாமாலும் என்றும் செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சமையலில் ஈடுபடும்போது வெங்காயம் பூண்டு இல்லாமல் மாமியாருக்கு எடுத்து வைத்து விடுவது உண்டு!

      நீக்கு
    2. வாங்க கோமது மேடம். நான் முன்பு மாமனார் மாமியாருக்கு நான் செய்யும் அவியலோ கூட்டோ கொண்டுபோகும்போது அவங்களுக்கு இன்னும் அதிகமா காயை குழைய வைப்பேன். அவங்களுக்கு புடலங்காய் போடக்கூடாது. மத்தவங்களுக்கு புடலை உண்டு. மச்சின்னுக்கு தயிர் கிடையாது (அவன் வீகன்).

      என் பெயனுக்கு வெங்காயம் பிடிக்காது. இன்று கொஞ்சமா வெங் போட்டு, சப்பாத்தி, மசால் செய்து அனுப்பியிருக்கேன். இரவு வந்துதான் சொல்லுவான் தேறினதா இல்லையா என்று.

      நீக்கு
    3. எங்க வீட்டில் அடைக்கு முருங்கைக்கீரை, பறங்கிக் கொட்டை, வெந்தயக்கீரை, மற்றக் கீரை வகைகள், வாழைப்பூ, முட்டைக்கோஸ் எனப் போட்டுப் பண்ணுவோம். எப்போவானும் வெங்காயம்/அதிலும் சின்ன வெங்காயம். ஆனால் பையர்/பெண் இருவருக்குமே வெங்காயம் போட்டால் பிடிக்காது. :)))) எங்களுக்கு மட்டும் போட்டுப்போம்.

      நீக்கு
    4. அடைக்கு, நீங்கள் சொல்லியுள்ள முருங்கைக்கீரை, பறங்கிக்கொட்டை, வெந்தயக்கீரை, வாழைபூ, முட்டைக்கோஸ் இதெல்லாம் போட்டதே இல்லை. எப்பவாச்சும் கீரை அடை ஒன்று சாப்பிடுவேன். அவ்ளோதான். அடையை, வெங்காயத்தை வட்ட வட்டமாகத் திருத்தி, அதை அடை மாவில் முக்கி தவாவில் போட்டு, வட்டமான அடையாக வரவைத்து (நிறைய வெங்காய வட்டங்களை முக்கி எடுக்கவேண்டும்) செய்து சாப்பிடுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

      நீக்கு
  3. முன்பு அடை செய்தால் கணவருக்கு

    பதிலளிநீக்கு
  4. நாங்கள் இரண்டு நாள் காஞ்சீபுரத்தில் தங்கி திவ்ய தேசங்களை தரிசனம் செய்தோம்.
    பாடல்பெற்ற சிவன் தலங்களையும் தரிசனம் செய்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஞ்சியில் தங்கி பல கோவில் தரிசனங்களை முடித்துக்கொண்டு விடலாம். சாப்பிடவும் நிறைய ஹோட்டல்கள் உண்டு.

      நீக்கு
  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் நோயின்றி நல் ஆரோக்கியத்தோடு
    இருக்க இறைவன் அருள் வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... வணக்கம். நோயிலிருந்து அனைவரும் மீள இறைவனைப் பிரார்த்திப்போம்.

      நீக்கு
  6. //மேல்கோட்டை கேசரி//

    ஏதோ அரசியல்வாதி பெயர் மாதிரி இருக்கிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஹா..  அதுவும் ஆந்திர அரசியயவாதி!  கேசரின்னா சிங்கம்தானே?

      நீக்கு
    2. மேல்கோட்டையில் கோவில் கொண்டிருப்பதும் நர கேசரிதான். நரசிங்கம்.
      :)))
      ஒரு மலையில் இருப்பார்.

      நீக்கு
    3. மேல்கோட்டை போயிட்டு வந்திருக்கேன். பட்டாசாரியார் வீட்டிலிருந்து சாம்பார் சாதம்/தயிர் சாதம் கொண்டு வந்து சாப்பிடக் கொடுத்தார்கள். ஆனால் மேல்கோட்டைக் கேசரி கேள்விப்படலை. மலையில் இருக்கும் நரசிம்மரைப் பார்க்க முடியலை. வெயில் வந்துவிட்டது. மாலையில் போகலாம்னா இரவு வண்டிக்குப் பயணச்சீட்டு. ஆகையால் திரும்பிட்டோம். அதே மாதிரி தொட்டமளூரில் ஏரிக்கரையில் உள்ள நரசிம்மரையும் பார்க்கவில்லை. :( தொட்டமளூர் நாலைந்து முறை போனோம்.

      நீக்கு
    4. நாங்க யாத்திரை செல்லும்போது அங்குள்ள பட்டாச்சார்யார் (யாத்திரைக்கு அவரும் வருவார்) ஒரு தடவை டிஃபனாகச் செய்வார்.

      அலைந்து திரிந்து, அல்லது நம் பசியைப் பொறுத்து, சில சமயம், நாம் சாப்பிட்டது கூடுதல் சுவையுடன் இருப்பதுபோலும் தெரியலாம் கீசா மேடம்

      நீக்கு
    5. என்ன கில்லர்ஜி... அரசியல் நடிகர் நினைவுதானா? எங்கள் சமூகத்தில், முன்பெல்லாம், பெண் பார்க்கச் சென்றால் உடனே வரும் விருந்தினர்களுக்கு கேசரி பஜ்ஜி செய்து தருவார்கள். சிலர், திருமண முடிவுக்கு முன்பு சாப்பிடாமலும் இருப்பார்கள்.

      நீக்கு
  7. மிக அருமையான காஞ்சீபுரம் இட்லி.

    நல்ல செய்முறையோடு குடலை இட்லி
    மாதிரியே அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் மா.

    முன்பெல்லாம் பாட்டிக்கு கோயிலிலிருந்தே பிரசாதமாக
    வரும்.
    அப்படியே அந்த மணம் இன்னும் நினைவில்.
    யூடியூபிலும்
    அவர்கள் கோவிலில் செய்வதைப் பார்த்தேன்.
    அண்டாவில் வேக வைத்து
    எடுத்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... எனக்கும் காஞ்சீபுரத்தில் இந்தப் பிரசாதம் வாங்கவேணும் என்று ரொம்ப நாளாக ஆசை. இன்னும் வாய்ப்பு வரலை.

      இதுபோல அக்கார அடிசிலும் நான் காணொளியில் பார்த்திருக்கேன்.

      இன்னொரு காணொளியில் (திருச்சி கேடரர்), ஐயங்கார் அக்கார அடிசில் செய்முறை என்று சொல்லி, கடைசியில் பாலில் மைதாவைக் கரைத்து அதையும் சேர்த்துக் கிளறவேண்டும், அப்படித்தான் நாங்கள் செய்வோம் என்று சொல்லி வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டார்.

      நீக்கு
  8. சரியான அளவுகள். பிரமாதமாக வந்திருக்கிறது.
    மெத் மெத்தென்று இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    உங்கள் மனைவிக்கு நல் வாழ்த்துகள். அதை அருமையாகப்
    பதிவிட்ட உங்களுக்கும் பாராட்டுகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வல்லிம்மா... ரொம்ப நல்லா இருந்ததால்தான் நான் எபிக்கு அனுப்பினேன் (ஆனால் நான் செய்தால், கொஞ்சம் ஏடாகூடமாக இருந்தாலும் அனுப்பிடுவேன்)

      நீக்கு
  9. நாங்கள் செய்யும் போது தயிர் ஒரு பங்கு, வெண்ணெய்
    ஒரு பங்கும் சேர்த்துக் கொள்வோம்.
    பாட்டியின் கைப் பக்குவதில் புளித்த மாவை
    ஒரு பாத்திரத்திரத்தில் கொட்டி,
    இட்லி பாத்திரத்தில் வைத்து
    நிறைய நேரம் வேகவிட்டு எடுப்போம்.
    அதை அப்படியே வாழை இலையில்
    கவிழ்த்து ,
    தோசை திருப்பியால் பாளம் பாளமாக எடுத்துக் கொள்வோம்.

    தொட்டுக்க புளி,பச்சை மிளகாய்,சிவப்பு மிளகாய்,
    பெருங்காயம் துளி வெல்லம் வைத்து அரைத்த துகையல்.
    அமிர்தமாக இருக்கும்.
    எனக்கு அந்தப் பக்குவம் இன்னும் கைவரவில்லை.
    மிக நன்றி மா. இப்படிச் செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சைட் டிஷ் சூப்பராக இருக்கும் போலிருக்கிறதே. ஒரு முறை ட்ரை பண்ணுகிறேன்.

      நீக்கு
    2. ஆமாம் பானுமா. நன்றாக இருக்கும்.

      நீக்கு
    3. இந்த சைட் டிஷ் வித்தியாசமா இருக்கே... செய்து பார்க்கிறேன் வல்லிம்மா.

      பெங்களூர்ல வற்றல் மிளகாய் சரியா செட் ஆறதில்லை. சில சமயம் காரம் ரொம்பத் தூக்கலா இருக்கு (நான் ஒரு தடவை சிறிய வற்றலும், அதன் காரத்திற்காக வாங்கி, அவ்வளவு காரம் மனுஷன் சாப்பிட முடியாதுன்னு உபயோகிக்கலை). அதனால மிளகாய் காரம் சில நேரங்களில் அதிகமாயிடுது.

      நீக்கு

  10. கேள்விபட்டு இருக்கின்றேன் ஆனால் இதுவரை சாப்பிட்டதில்லை. எனக்கு ரெகுலர் இட்லி வித் இட்லி சாம்பார் என்றால்தான் சாப்பிடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செங்கோட்டை எங்க இருக்கு...காஞ்சீபுரம் எங்க இருக்கு.... தமிழகத்தில் ரொம்ப வருடம் இருந்திருந்தால்தான் வாய்ப்பு கிடைத்திருக்கும் மதுரைத்தமிழன் துரை. எப்பவாச்சும் வாய்ப்பு வரும்போது சாப்பிட்டுப் பாருங்கள்.

      நீக்கு


    2. காஞ்சிபுரம் சென்று இருக்கின்றேன் ஒரு தடவை ஆனால் இட்டலி சாப்பிடும் வாய்ப்புகிடைக்கவில்லை, காஞ்சி மடத்து சென்று பெரியாவாளிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி இருக்கின்றேன். அவரும் ஆசிர்வதித்து பூ கொடுத்து இருக்கிறார். என் வாழ்க்கையில் காலில் விழுந்து ஆசிர் வாதம் வாங்கியது அவரிடம் மட்டுமே நான் யார் காலிலும் விழ்ந்து இது வரை ஆசிர்வாதம் வாங்கியது இல்லை அவரை தவிர்த்து ஏன் என் அம்மால் அப்பாவிடம் கூட ஆசிர்வாதம் வாங்கியதில்லை அவரின் மீதுள்ள மதிப்ப்பு யாரிடமும் எனக்கு வந்ததில்லை அவரை அடுத்து வந்த பெரியவர்களிடம் கிஞ்சம் கூட மதிப்பே இருந்ததில்லை.... அதுமட்டுலமல்ல அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின் மடத்தில் தரும் இலவச சாப்பாடையும் சாப்பிட்டு இருக்கின்றேன் அதுவௌம் கடைசி நேரத்தில் சென்றாலும் மடத்தில் உள்ளவர்கள் இருந்ததை மகிழ்வோடு தந்தனர். 26 வருடங்களுக்குப் பின்னும் இன்னும் பசுமையாக மதில் இருக்கிறது

      நீக்கு
    3. மதுரைத்தமிழர் சொன்ன மாதிரி எங்களுக்கும் ஒரு முறை தேனம்பாக்கத்தில் கடைசி நேரத்தில் போனப்போ இருந்ததைச் சுவையாகக் கொடுத்தார்கள். அந்த மாதிரி உணவே தனி ருசி தான்.

      நீக்கு
    4. எதுக்கும் ப்ராப்தம் இருக்கணும்.

      பொதுவா இறைவனுக்குக் கண்டருளச் செய்த பிரசாதங்கள் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    5. மதுரைத் தமிழன் கொடுத்துவைத்தவர்.

      நீக்கு
  11. நான் காஞ்சிபுரம் இட்லியை தொன்னையில் வார்ப்பேன். நாட்டு மருந்து கடைகளில் தொன்னை கிடைக்கும். மற்றபடி செய்முறை இதேதான். தொட்டுக் கொள்ள கொத்துமல்லி சட்னி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் நல்ல ஐடியாவாக இருக்கே பா.வெ. மேடம்... இதனை ஒரு தடவை முயற்சிக்க வேண்டியதுதான். ஆனால் தளிகைக்காக நேரமாகாதோ?

      கொத்துமல்லிச் சட்டினி, எனக்கு ரவா இட்லியுடன் (அதாவது புளி, வற்றல் மிளகாய், கொத்துமல்லி, உளுந்து, பெருங்காயம் உப்பு, வறுத்து அரைப்பது) எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

      நீக்கு
    2. இங்கே அநேகமாக மளிகைக்கடைகளிலும் தொன்னை, கோலமாவு, காவி போன்றவை கிடைக்கும்.

      நீக்கு
  12. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நாள் இனிமையாகவே அமைந்தது கமலா ஹரிஹரன் மேடம். இந்த ஏ2பி ல, ஏதோ ஆஃபர்ல லெஃப்ட் அண்ட் ரைட்டாக நிறைய இனிப்புகள் நேற்று வாங்கினோம் (தட்டையும் கூட). காலையில் சாப்பிட்டேன். பையனுக்குத்தான், இவ்வளவு ஸ்வீட் நான் சாப்பிடவே கூடாதுன்னு எண்ணம்.

      நீக்கு
    2. என் தம்பி கங்கோத்ரியில் ஆன்லைனில் ஆர்டர் பண்ணி மிக்சரும் ஷுகர்ஃப்ரீ மைசூர்ப்பாகும் வாங்கி வந்திருந்தார். மிக்சர் பழசு! :( மைசூர்ப்பாகு நன்றாய் இருந்தது. நாங்க உணவுப்பொருட்கள், பிட்சா, டிஃபன், சாப்பாடு என எதுவுமே ஆன்லைனில் ஆர்டர் பண்ணுவதே இல்லை.

      நீக்கு
    3. தட்டை இங்கே சாப்பாடு கொடுக்கும் உஷா மாமி முதல்நாள் சொன்னால் மறுநாளே பண்ணிக் கொடுக்கிறார்.நன்றாக இருக்கிறது. அதைத் தான் வாங்கிக்கறோம். வாங்கியும் கொடுக்கிறோம்.

      நீக்கு
    4. அந்த உஷா மாமி இருப்பது உங்க வளாகத்திலா இல்லை திருவரங்கத்திலா? என் மனைவிக்கு தட்டை ரொம்பப் பிடிக்கும். அங்க வரும் வாய்ப்பு இருந்தால் முந்தின தினமே அவரைப் பண்ணச் சொல்லி வாங்கிக்கொள்வேன்.

      நீக்கு
    5. எங்க வளாகத்திலே இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இங்கே பக்கத்தில் எங்க குடியிருப்பு வளாகத்தின் பின்பக்கம் உள்ள கீதாபுரத்தில் இருக்காங்க. நடந்து செல்லும் தூரம் தான். அந்த மாமி சமையல், டிஃபனை விட பக்ஷணங்கள் நன்றாக இருக்கின்றன. ஆனால் போளி தான் சொதப்பல். ரவா கேசரியை மைதாவில் உள்ளே வைத்து இட்டு போளி என நாமகரணம் செய்துட்டார். ஓரங்களெல்லாம் மாவு வேகாமல் மொறுமொறுனும் இல்லாமல் வெடக்குனு இருந்தது. ஓரங்களைப் பிய்த்துவிட்டுச் சாப்பிட்டேன். :(

      நீக்கு
    6. மானேஜ்மென்ட் படித்த ஒரு பெண் காடரிங் செய்வதாக விளம்பரம் அனுப்பி இருந்தார். விளம்பரம் பார்த்தால் ரொம்பவே ஈர்த்தது. தொலைபேசியில் பேசினப்போவும் ரொம்ப இனிமையாக நன்றாகப் பேசினார். வயது 35க்குள் இருக்கும். அம்மா ஆரம்பித்து நடத்தி வந்ததை இவர் பெரிசு படுத்தப் போவதாகவும் அதுக்குத் தன் படிப்பையும் பயன்படுத்திக் கொள்வதாயும் சொன்னார். சரினு ஆனியன் ஊத்தப்பம், தோசை, சட்னி சாம்பார் சொல்லி இருந்தோம். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆனியன் ஊத்தப்பம் என்னும் பெயரில் ஒரு மாவுப் பொருள் வேகாத வெங்காயத்தோடு வந்திருக்க, தோசை என்னும் பெயரில் இரண்டு இஞ்ச் கனத்தில் அதே மாதிரி உள்ளே எல்லாம் வேகாமல் வெளியே கறுப்பாக ஒரு பொருளும் வந்தது. சட்னி என்னும் பெயரில் ஒரு ஸ்பூன் தேங்காய்ச் சட்னியில் ஒரு முழுக்கிண்ணம் நீரை விட்டு விளாவி அது ஒரு ஒரு ஸ்பூன் இரண்டு பாக்கெட். மத்தியான ரசத்தில் ஜீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து சாம்பார் என்னும் பெயரில் நீரைத் தாராளமாக விளாவி ஒரூ பொருள், காரச்சட்னி என்னும் பெயரில் வேகாத தக்காளித்துண்டுகள் மிதக்கச் சிவப்பாக ஒரு பொருள். அப்படியே தூக்கி எறிந்தேன். அவர் மட்டும் கஷ்டப்பட்டு அந்த ஊத்தப்பத்தைச் சாப்பிட்டார். :( அந்தப் பெண்ணை இனிமே இங்கே வராதே என்று சொல்லி விட்டோம்.

      நீக்கு
  13. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

    இன்றைய திங்களுக்கு அருமையான காஞ்சிபுரம் இட்லியை அழகான படங்களுடனும், செய்முறைகளுடனும் தந்துள்ளீர்கள். அளவுகள் துல்லியமாக உள்ளன. எங்கள் வீட்டில் எனக்கு மட்டுந்தான் சாதாரண இட்லியென்றால் மிக விருப்பம். மற்றவர்களுக்கு எப்போதும் தோசைதான் அதி விருப்பம். இந்த முறைப்படி நானும் எப்போதாவது ரவா இட்லி, இந்த மாதிரி இட்லி என சாதாரண இட்லி தட்டுக்களில் செய்திருக்கிறேன். அப்போது வீட்டில் அனைவருக்குமே ஒரளவு பிடித்தமானதாக இருந்தது. அதில் சேர்க்கப்படும் இஞ்சி, மிளகுக்கு ஒன்றும் சொல்லவில்லை.

    பிரம்பு குடலையில் வாழை இலை வைத்து செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி காணொளிகளையும் நிறைய பார்த்துள்ளேன். அப்போதெல்லாம் அதன் சரியான ருசிக்கு இப்படியெல்லாம் கஸ்டபட வேண்டுமோவென நினைத்துக் கொள்வேன்.தவிரவும் அந்த மாதிரியான பாத்திரங்களுக்கு எங்கே போவது..? இனி உங்கள் சரியான அளவின்படி, செய்முறைகளின்படி நார்மல் இட்லி தட்டுக்களில் செய்து பார்க்கிறேன். அழகாக விபரமாக தந்திருக்கும் பகிர்வுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம்... எனக்கு மி.பொடி தடவின மெத் மெத் இட்லி, அதுவும் மி.பொடி தடவி 8 மணி நேரத்திற்குப் பிறகு சாப்பிட ரொம்பப் பிடிக்கும். ஆனா இப்போல்லாம் காரம் ஜாஸ்தி சாப்பிட்டால் என்னவோ ரொம்ப டயர்டாக உணர்கிறேன்.

      நீக்கு
  14. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்.. வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  15. சுற்றுலா செல்வது போல் நிலைமை மாறணும்.,. இதே போல் செய்து கொண்டு போகணும்.. ம்... ம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க திண்டுக்கல் தனபாலன். நீங்க எழுதினதைப் படித்தவுடன், எனக்கு, திருப்பதி மலையில் நடந்து ஏறும்போது, சிலர், புளியோதரை வாளியையும் தூக்கிக் கொண்டு ஏறி, காலி கோபுரம் பக்கம் நிறுத்தி, சாப்பிட்டுட்டு பிறகு ஏறுவதைப் பார்த்தது நினைவுக்கு வந்துவிட்டது.

      சுற்றுலா செல்வதெற்கெல்லாம் (பயமில்லாமல் செல்ல) இன்னும் பத்து மாதங்களாவது ஆகும் என்று தோன்றுகிறது

      நீக்கு
  16. மதியம் நெருங்குகிறது... காலை வணக்கம் அனைவருக்கும்.

    காஞ்சீபுரம் இட்லி... மனைவியை இன்னொருமுறை செய்யச் சொல்லணும்.

    பதிலளிநீக்கு
  17. காஞ்சிபுரம் இட்லி சென்னையில் இருந்தவரை வாரம் ஒரு நாள் பண்ணினது உண்டு. ஒரு நாள் இந்தப் பாரம்பரிய முறையிலும் மறுநாள் அதில் பட்டாணி ஊற வைத்தது அல்லது பச்சைப்பட்டாணி, காரட், தேங்காய்க்கீற்றுகள் போட்டுப் பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து வார்ப்பேன். இப்போல்லாம் அதிகம் போணி ஆவதில்லை என்பதால் செய்வது இல்லை. பாரம்பரிய முறையில் பண்ணும்போது கட்டாயமாய்ச் சுக்குப் போடுவேன். சுக்கைப் பொடி பண்ணிப் போட்டு நெய்யைக் காய்ச்சி அதன் மேல் விட்டுவிட்டுப் பின்னர் இட்லி வார்க்கையில் மற்ற சாமான்களையும் சேர்த்து வார்ப்பது உண்டு. தொட்டுக்க அநேகமா கொத்சு தான். எப்போவானும் சட்னி! சட்னி அவ்வளவா இதற்கு ஒத்துப் போவதில்லை. வல்லி சொன்ன மிளகாய்ச் சட்னி தவிர்த்து. இது மதுரையில் பிரபலம். அங்கே சம்பந்தமூர்த்தித் தெருவில் இட்லி போட்டுக் கொண்டிருந்த ஒரு மாமா இதை இட்லி, தோசைக்குத் தொட்டுக்கக் கொடுப்பார். நம்மவருக்கு இந்தச் சட்னி என்றால் உயிர். மதுரை போனால் உடனே தம்பி வாங்கி வந்துடுவான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பாட்டு விஷயத்துக்கு உங்கள் பின்னூட்டம் ரொம்பவே ஃபேமஸ். நிறைய விஷயங்களோடு எழுதறீங்க. நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.

      வெறும் இட்லிக்கு வல்லிம்மா சொன்ன சட்னி சூப்பரா இருக்கும். காஞ்சீபுரம் இட்லிக்கு எப்படி இருக்கும்னு தெரியலை

      நீக்கு
    2. அன்னிக்கே அரைச்சு அன்னிக்கே வார்க்கும் தோசைக்கு இந்த மிளகாய்ச் சட்னியோடு சாப்பிட்டுப் பாருங்க நெல்லை.

      நீக்கு
    3. இரு நாட்களில் மனைவியைப் பண்ணச் சொல்கிறேன்.

      நீக்கு
  18. காஞ்சிபுரத்தில் வரதராஜர் சந்நிதியில் காலை வேளையில் வெளியே வைத்துத் தெரியாமல் காஞ்சிபுரம் இட்லிப் பிரசாதம் (மடப்பள்ளியில் இருந்து வந்தது) கொடுப்பார்கள். அலுவலர்களுக்குத் தெரியாமல் சாப்பிடச் சொல்லுவார்கள். நாம் விலைக்கு வாங்க வேண்டுமெனில் முன்னெல்லாம் மடப்பள்ளியில் சொல்லி வைச்சு வாங்கி இருக்கோம். இப்போல்லாம் பிரசாத ஸ்டால் தான். அதில் டென்டர் விட்டு எடுத்திருக்கும் ஒப்பந்ததாரர் மூலம் வருவது தான் பிரசாதம் என்னும் பெயரில் கொடுக்கப்படும். ஆகவே வாங்குவதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு வரதராஜர் சன்னிதியில் தரும் காஞ்சீபுர இட்லி பிரசாதம் சாப்பிட ஆசை உண்டு. எப்போ வாய்ப்பு வருமோ (உள்ளூர்ல இருந்தபோதே வாய்ப்பில்லை. இப்போ எப்படியோ)

      எல்லாக் கோவில்களிலும் பிரசாத ஸ்டால் என்பது வியாபார ஸ்தலமாக ஆகிவிட்டது. சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் வந்திருந்தபோது தாயார் சன்னிதி முன்பு, பிரசாதம் விற்றார்கள் (அது கோவில் பிரசாதம் என்றே சொன்னார்கள்) என்னவோ வாங்கும் எண்ணம் வரவில்லை (பெரிய கருடன் சன்னிதி பகுதியில் இருக்கும் ஸ்டால், வியாபாரத் தலம்)

      நீக்கு
    2. திருப்புல்லாணியில் மட்டும் பாயசம் பிரசாதம் மடப்பள்ளியில் இருந்து நேரே வாங்கிக்கலாம். ஆனால் அலுவலகத்தில் சொல்லிட்டு 50 ரூபாயோ 100 ரூபாயோ சீட்டு வாங்கிக்கணும். சுடச் சுடக் கொடுப்பாங்க. நன்றாக இருக்கும்.

      நீக்கு
  19. அருமையான ரெசிபி. இந்த வகை இட்லியை நாங்கள் விநாயகர் சதுர்த்தியின் பொழுது கொழுக்கட்டை, மோதகத்துடன் வைத்து பூஜை செய்வோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வானம்பாடி.... கொழுக்கட்டை மோதகம்.... ம்ம்ம்... சாப்பிட்டு ரொம்ப மாதங்களாகிவிட்டது.

      நீக்கு
  20. சென்னையில் இருந்தவரை நினைச்சால் காஞ்சிபுரம் கிளம்பிப் போவோம். மடத்திலேயே சாப்பிட்டுவிட்டுக் கோயில்களைச் சுற்றுவோம். ஒரு முறை சுற்றுலா ஒருங்கிணைப்பாளரும் காஞ்சிபுரம் அழைத்துச் சென்றார். நல்ல அருமையான ஓட்டலில் டிஃபன் வாங்கிக் கொடுத்தார். சாப்பாடும் அருமை! சின்னக் காஞ்சிபுரத்தில் சந்நிதித் தெருவிலேயே காஞ்சி காட்டன் புடைவைகளும் எடுத்திருக்கேன். அநேகமாய்க் கல்யாணம் ஆனதிலிருந்து காஞ்சிபுரம் போய்க் கொண்டும்/வந்து கொண்டும் இருந்தோம். இப்போத் தான் பத்து வருஷங்களாகப் போகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் காஞ்சீபுரம் மடத்துக்கே முதல் முறையாக அத்தி வரதர் சேவிக்கப் போனபோதுதான் சென்றிருந்தேன் (அப்போ பரமாச்சார்யார், புதுப்பெரியவா பிருந்தாவனங்கள்தாம் இருந்தன.ம்ம்ம்ம்)

      நீக்கு
    2. கல்யாணம் ஆனதிலே இருந்து 2011 ஆம் ஆண்டு வரை காஞ்சீபுரம் போவதும், வருவதுமா இருந்திருக்கோம். மடத்துக்கும் நிறையத் தரம் போயிருக்கோம். அது சாதாரண ஓட்டுக் கொட்டகையா இருந்தப்போ இருந்து இப்போதுள்ள கட்டிடம் வரை பார்த்திருக்கோம்.

      நீக்கு
    3. எனக்கு ப்ராப்தம் இல்லை. மடத்தில் நீலகண்டன் அவர்கள் மேனேஜராக இருந்தபோது, அவர் பையனுடன் மேட்டூரிலிருந்து செல்வதாக இருந்ததும் ப்ராப்தம் இன்மையால் நடக்கலை

      நீக்கு
  21. எங்க குழந்தைங்களுக்குக் காஞ்சிபுரம் இட்லி பண்ணிக் கொடுத்தால் போனால் போகுதுனு ஒண்ணோ/இரண்டோ சாப்பிடுவாங்க. அதுவும் பையர் தான். பெண் கொஞ்சம் யோசிப்பாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா...வீட்டுக்கு வீடு வாசப்படி... எங்க வீட்டுல மட்டும் என்ன வித்தியாசமா? எனக்குப் பிடித்த டிரெடிஷனல் உணவு பலதும் பசங்களுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை.

      நீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. காஞ்சீபுரம் குடலை இட்லி - ஆஹா... சுவை மிகுந்த்து. நானும் சுவைத்திருக்கிறேன். வீட்டிலும் செய்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தில்லி வெங்கட்... தில்லியில் யாரேனும் நண்பர்கள் வீட்டில் செய்வார்களா? (இல்லை அங்கெல்லாம் அனேகமா எல்லோருமே சப்பாத்தி சப்ஜிதானா?)

      நீக்கு
    2. தில்லி நண்பர்கள் வீடுகளில் செய்வதில்லை. திருவரங்கத்தில் சுவைத்திருக்கிறேன்.

      அனேகமாக எல்லோரும் சப்பாத்தி சப்ஜி - ஹாஹா... இல்லை! தென்னிந்திய உணவுகளும் உண்டு நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  24. காஞ்சீபுரம் இட்லி போணியே ஆகலை போல இருக்கே! ஜாலியா இருக்கு. ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! ஆடுவோம், பாடுவோம், கொண்டாடுவோம்! :)))))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போல்லாம் எபில, வியாழன், புதன் ரசிகர்கள் ரொம்ப அதிகமாக ஆயிட்டாங்க. இல்லையா கீசா மேடம்?

      ஒருவேளை, கீசா மேடத்துக்கு உடம்பு சரியில்லைனு சொன்னாங்களே.. பாவம் அவங்களே எல்லாத்தையும் எடுத்துக்கட்டும் என்று எல்லோரும் நினைத்துவிட்டார்களோ?

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், எனக்கு எதுக்கு உங்க காஞ்சிபுரம் இட்லி! சூடாய்ச் சாப்பிடணும் எனக்கு! ஆறினால் பிடிக்காது. :)))))

      நீக்கு
    3. எனக்கு எல்லாமே அடுப்பிலருந்து இறக்கின க்ஷணம் சாப்பிடணும். சாப்பிடும்போது யாரும் தொந்தரவுபடுத்தக் கூடாது. உணவை ருசித்துத்தான் சாப்பிடுவேன்.

      நீக்கு
  25. ருசியான செய்முறை. எங்கள் பிறந்த வீட்டில் பெயர்போனது. இரண்டு இட்லி அனுப்புங்கள். மானஸீகமாகச் சாப்பிட்டுவிட்டேன். நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சி அம்மா... ஆர்வத்துடன் வந்து பின்னூட்டமிட்டதுக்கு நன்றி.

      அது சரி... நீங்க வளவனூர், திருவண்ணாமலை... இதுல காஞ்சீபுரம் எங்க வந்தது? ஹாஹா

      நீக்கு
  26. காஞ்சிபுரம் இட்லி சூப்பர்.

    நான் மிளகு,இஞ்சி போட்டு செய்திருக்கிறேன்
    முந்திரிப்பு பருப்பு போட்டதில்லை.
    எங்கள்அம்மாஇஞ்சி,பச்சைமிளகாய்,சின்னவெங்காயம்,கறிவேப்பிலை போட்டு செய்வார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி மாதேவி. என்னைப் பொறுத்தவரைல முந்திரிப்பருப்பு அவசியமில்லை. நாங்கள் இட்லியில் வெங்காயம் சேர்ப்பதில்லை

      நீக்கு
  27. காஞ்சிபுரத்து இட்லியைப் பற்றிக் கேள்விப் பட்டது தான்.. மற்றபடிக்கு இதுவரையிலும் சாப்பிட்டதில்லை...

    மிகவும் தாமதமாக வந்திருக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேற்று நானும் ரொம்பவே பிசியாயிட்டேன் துரை செல்வராஜு சார்.

      காஞ்சீபுர கோவில் தரிசனம் வாய்க்கும்போது மறக்காதீங்க

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!