வெள்ளி, 19 மார்ச், 2021

வெள்ளி வீடியோ : பண்பாடு என்பார்கள் சிலரே - இதில் பெண்பாடு கண்டோர்கள் எவரே

 உன் குழந்தைகளும்

என் குழந்தைகளும்

நம் குழந்தைகளோடு

விளையாடிக் கொண்டிருக்கின்றன

என்றொரு கவிதை உண்டு. படித்த நினைவு இருக்கிறது. ஆனால் யார் எழுதியது என்று நினைவில்லை. இந்த வரிகள் கூட எவ்வளவு பழசு என்று தெரியாது. ஏனென்றால் 1968 ல் அமெரிக்காவில் வெளிவந்த ஆங்கிலப்படம் (பின்னே அங்கே தெலுங்குப் படமா எடுப்பார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது!) Yours, Mine and Ours. அதிலிருந்து கூட வந்திருக்கலாம்.

இந்த ஆங்கிலப் படத்தைக் 'கட்டிப்பிடித்து' தமிழிலும் கன்னடத்திலும், தெலுங்கிலும் ஒரு படம் ஒரே நேரத்தில் உருவானது. அது 1980 ஆம் வருடம். இந்தப் படத்தின் மூலம் நடிகை லட்சுமி தனது படம் இயக்கும் ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

பாலச்சந்தர் ('அகர முதல எழுத்தெல்லாம்...' கலாகேந்திரா) தயாரிப்பு மற்றும் மேற்பார்வையில் விசுவின் வசனத்தில் உருவான படம் மழலைப்பட்டாளம். உதவி இயக்குனர் டி பி கஜேந்திரன். இவர் பின்னாட்களில் தனியாகவே படங்கள் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் வசனம் எழுதி புகழ் பெற்றதன் மூலம் 'கேபி பள்ளி'யில் தன்னை இணைத்துக்கொண்டார் விசு. பின்னர் பல படங்கள் இருவரும் இணைந்து செய்திருக்கின்றனர்.

மழலைப்பட்டாளம் ரசித்துப் பார்த்த படங்களில் ஒன்று. விஷ்ணுவர்தனும் சுமித்ராவும் இணைந்து நடித்த இந்தப் படத்துக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். விஷ்ணுவர்தனுக்கு டெல்லி கணேஷ் குரல் கொடுத்திருப்பார்.

குழந்தைகள் விஷமம் சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும் என்று இவர்கள் எடுத்துள்ள காட்சிகளில் விஷமங்கள் அதிகப்ரசங்கித்தனமாய் சற்று ஓவராகவே இருக்கும்.

விஷ்ணுவர்தன், சுமித்ரா இருவரும் இணைய நினைக்கும்போது இருவர் குழந்தைகளாலும் வரும் பிரச்னைகளும், ஒரு குழுவும் மற்றொரு குழுவும் முறைத்துக் கொண்டு நிற்பதும், சுமித்ராவுக்கு எதிராக விஷ்ணுவர்தன் குழந்தைகள், விஷ்ணுவர்தனுக்கு எதிராக சுமித்ராவின் குழந்தைகள் செய்யும் சதிச் செயல்களும், வழக்கம்போல கடைசியில் ஒவ்வொருவராக இணைவதும், பொதுப் பிரச்னையில் ஒன்று சேர்வதும் சுவாரஸ்யம்.

கண்ணதாசன் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். டைட்டில் ஸாங் (எங்க பிள்ளை தங்க பிள்ளை) ரொம்பச் சுமார் (எஸ் பி பி தான்!) 'தள்ளுமாடல் வண்டி இது தள்ளி விடுங்க' ரசனையான பாடல்.

ஆனால் இன்று பகிரப்போகும் இந்தப் பாடல் மெலடி வகை.. எஸ் பி பி - வாணி ஜெயராம் குரலில் கௌரி மனோகரி ராகத்திலேயே அமைந்த பாடல். கதாநாயகன் பெயரும் கௌரி மனோகரிதான்! எழுத்தாளர்.

பகிர்வதற்காக பாடலைக் கேட்டபோது ஏதோ குறை தெரிந்தது. சரணங்களின் தொடக்க வரியை இரண்டுமுறை பாடுவார்கள். அதற்காக கொஞ்ச நேரம் தேடிப்பார்த்தேன். எலலவற்றிலும் முதல்முறை பாடுவதை கட் செய்தே இருக்கிறது.

மிகவும் ரசிக்க வைக்கும் பாடல் வரிகள். பண்பாடு என்பார்கள் சிலரே; இதில் பெண்பாடு கண்டோர்கள் இவரே... வயதோடு வந்தாலும் காதல்.. அது வயதாகி வந்தாலும் காதல் (இந்த இடத்தில எஸ் பி பி குரல்!), என் பேரில் சுகமான ராகம்...

அனுபவித்து எழுதி இருக்கிறார் கவியரசர்.


கௌரி மனோகரியை கண்டேன்
ஒரு ஆடவன் வடிவத்திலே
பருவங்கள் சென்றாலும் கண்ணன்
அவன் கவிராஜ சங்கீத மன்னன்
அவன் கவிராஜ சங்கீத மன்னன்

என் பேரில் சுகமான ராகம்
ஒரு ஸ்ரீதேவி சந்திக்கும் யோகம்
என் பேரில் சுகமான ராகம்
ஒரு ஸ்ரீதேவி சந்திக்கும் யோகம்
நீ மழை நாளில் விளையாடும் மேகம்
என்ன வயதென்று தோன்றாத வேதம்

கௌரி மனோகரியை கண்டேன்
ஒரு காரிகை வடிவத்திலே
பருவங்கள் சென்றாலும் ராதை
அவள் கவி ராஜ சங்கீத மேதை

மாறாத செல்வங்கள் தாய்மை - அவை
ஆனாலும் என் உள்ளம் ஊமை
கண் முன்பு அழகான ஆண்மை - நான்
கல் அல்ல கனிவான பெண்மை
பண்பாடு என்பார்கள் சிலரே - இதில்
பெண்பாடு கண்டோர்கள் எவரே
என் பாடு நான் தானே அறிவேன் - உயர்
அன்போடு மனம் போல இணைவேன்

மலை மீது அடித்தாலும் காற்று - அது
கடல் மீது தவழ்ந்தாலும் காற்று
வயதோடு வந்தாலும் காதல் - அது
வயதாகி வந்தாலும் காதல்
உலகத்தில் சில நூறு எழுத்து - ஆனால்
உறவுக்கு பல கோடி கருத்து
உன் வாழ்வை நீயாக நடத்து - இதில்
ஊரென்ன சொன்னாலும் திருத்து

49 கருத்துகள்:

  1. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்..

    வாழ்க குறள்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
    நலம் வாழ்க எங்கெங்கும்..

    பதிலளிநீக்கு
  3. கௌரி மனோகரி என்ற வார்த்தையைப் படித்ததுமே எனக்கு இந்தப் பாடல்தான் மனதில் ஒலித்தது. நல்ல பகிர்வு.

    இன்னும் மழலைப்பட்டாளம் படம் பார்த்ததில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.. மழலைப்பட்டாளம் தாராளமா ஒருதரம் பார்க்கலாம்.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  5. மழலைப்பட்டாளம் படம் பார்த்திருக்கேன். எண்பதுகளிலேயே! எங்கே, எப்போனு நினைவில் இல்லை. ஏனெனில் அப்போது இருந்த குடும்பச் சூழ்நிலை அந்த மாதிரி.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. இந்த பாட்டு கேட்டு இருக்கிறேன் . படம் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.
    தள்ளு மாடல் வண்டி பாடலும் இதில் தானா? அதுவும் அடிக்கடி வானெலியில் வைப்பதை கேட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. வாணி ஜெயராம் குரல் அற்புதமானது ஏனோ அவருக்கு அதிகமான பாடல்கள் கிடைக்கவில்லை.
    (அதாவது பி.சுசீலா, எஸ்.ஜானகி அளவுக்கு....)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர் ஜி..  தமிழர் என்பதால் கொடுக்கவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?!

      நன்றி ஜி.

      நீக்கு
  9. ..இந்த வரிகள் கூட எவ்வளவு பழசு என்று தெரியாது.//

    ஒரு 40+ வருஷப் பழசுதான்! யாரும் எழுதவில்லை. வாயால் அவுத்துவிட்டதுதான். ஆங்கில வர்ஷனில் ஆரம்பத்தில் இப்படிக் கேட்கக் கிடைத்தது:

    Your children and my children
    Are playing with our children !

    சமூக ஒழுக்க மதிப்பீடுகள் கேஷுவலாக, காவு வாங்கப்பட்டு வெகுநாளாகின்றன. இன்னும் மோசமாகத்தான் போகும். இளித்துத் திரிவர் ஆணும் பெண்ணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதாவது படம் வெளியான ஆண்டிலிருந்து நாற்பது வருஷம்?  ஏனெனில் பாடம் வெளியாகிய நாற்பது வருஷங்கள் ஆகி விட்டதே!  ஒழுக்கம் என்கிற வார்த்தையை அகராதியிலிருந்து எடுக்கப் போவதாகக் கேள்வி!

      நீக்கு
    2. நல்லொழுக்கம் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டு
      வெகு காலம் ஆகின்றதே...

      அது தெரியாதா!?..

      நீக்கு
    3. பள்ளிகளிலிருந்து அப்படி பெயர் இருந்த வகுப்பையே எடுத்து விட்டார்களே..

      நீக்கு
    4. அதனால் தானே
      கஸ்மால காசனுங்களும்
      சூரத்து டமாருங்களும்
      தமிழ்நாட்டுக்கு வழிகாட்ட (!) வேண்டிய சூழ்நிலை...

      நீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... வணக்கம்.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  11. வாணியும் பாலசுப்ரமணியமும் பாடியிருக்கிறார்கள் நன்றாக. முதன் முதலாகக் கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன். அருமையான குரல்களில் பாடல் நன்றாக இருக்கும். வரிகள் நினைவில்லை. தங்கள் பதிவில் படித்து அதையும் ரசித்தேன். வெள்ளியில் பகிரும் பாடல்களின் படத்தைப் பற்றிய செய்திகளை துல்லியமான பதிவாக வெளியிடுவது நன்றாக உள்ளது.

    இந்தப்படம் தொலைக்காட்சியில் (தொலைக்காட்சி மூலமாகத்தான் நிறைய படங்கள் பார்த்துள்ளேன்.) பார்த்துள்ளேன். படக்கதை அவ்வளவாக நினைவில்லை என்றாலும், நீங்கள் பதிவில் சொன்ன படத்தின் கதையும். பகிர்ந்த பாடலையும் கேட்ட பின் நினைவுக்கு வந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. // வயதோடு வந்தாலும் காதல்.. அது வயதாகி வந்தாலும் காதல் (இந்த இடத்தில எஸ் பி பி குரல்!) //

    சட்டென்று மனதில் கீழ்க்கண்ட பாடல் கேட்க ஆரம்பித்து விட்டது :-

    வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதது...
    மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே அறியாதது...
    அழகான மனைவி அன்பான துணைவி
    அமைந்தாலே பேரின்பமே...
    மடிமீது துயில சரசங்கள் பயில
    மோகங்கள் ஆரம்பமே...
    நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி...
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி...
    சந்தோஷ சாம்ராஜ்யமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அதுவும் ஒத்த கருத்துடைய நல்ல பாடல்.

      நன்றி DD.

      நீக்கு
  14. பாடல் பார்த்த நினைவு. படமும் சில காட்சிகள் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. இனிமையான பாடல். பல முறை கேட்டிருக்கிறேன். படம் என்னால் ரசிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பானு அக்கா.   குழந்தைகளின் கொட்டம் அளவுக்கதிகமாகக் காட்டப்பட்டிருக்கும்.  அதனாலா?

      நீக்கு
  16. இந்தப் பாடலைக் கேட்டிருக்கின்றேன்..
    படம் பார்த்ததில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதகமில்லை.  பாடலை ரசித்தால் போதும் - என்னைப்பொறுத்தவரை!

      நீக்கு
  17. அன்பு ஸ்ரீராம். மிக அருமையான பாடலுக்கு நன்றி.

    நல்ல குரல்களில் இனிமையாகப் பாடப்பட்டு, படமும் எடுத்திருக்கிறார்கள்.

    இந்தப் படம் ஷூட்டிங்க் எங்கள் வீட்டுக்கு எதிரில் டி சில்வா சாலையில்
    நடிகை தேவிகா வீட்டில் எடுத்தார்கள்.
    தள்ளு மாடல் வண்டி பாடலும் எடுக்க நடிகை
    லக்ஷ்மியும் வந்திருந்தார்.:)
    சுமித்ரா இதில் மணமாகாதவராக வருவார். தன் அக்காவோ அண்ணாவோ
    அவர்கள் குழந்தைகளை வளர்ப்பார் என்று நினைக்கிறேன்,

    மிகமிக சிறந்த பாடல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   ஷூட்டிங்கே உங்கள் வீட்டுக்கருகில்தான் எடுத்தார்களா?  சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.

      நீக்கு
  18. ''கௌரி மனோஹரி துணை இருப்பாள்
    கல்யாணி மணாளன் கை கொடுப்பான்,
    சரஸ்வதி என் நாவில் குடியிருப்பாள்
    சத்தியமே ஜெயிக்கும்''
    பாடல் அகத்தியர் படம் நினைவுக்கு வந்தது.
    அருமையான படம் பாடல் செய்திகளுடன்
    இன்னுமொரு நல்ல வெள்ளிப் பதிவு. வாழ்த்துகள்
    ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..   சீர்காழி, டி எம் எஸ் குரலில் "வென்றிடுவேன்..  இந்த அனைத்தையும் நாதத்தால் வென்றிடுவேன்" பாடல்...

      நீக்கு
    2. பாடல்களில் பயணிப்பது ஒரு சுகமான அனுபவம் .ஏனோ அது எனக்கு இளமைக்கால பரிசாகவே அமைந்து விட்டது.குடும்ப சூழ்நிலை டில் பணிக்கு செல்லும் பரப்பில் நேரம் எட்ட்டாக்கனி யாகி விட்ட துர்பாக்யம்.இதில் அண்ணன் குறிப்பிட்ட வயதோடு வந்தாலும் காதல்,வயதாகி வந்தாலும் காதல் என்ற வராமலே போன காதலை பற்றிய வரிகளும்,குரலும்,பாவமும் என்னை இளம் பிராயதுக்கு இட்டுச்சென்றது.
      பாடலின் முதல் வரி,கதாநாயகன் பெயரும்,பாடல் அமைந்த இராகமும் என்பது சிறு வயதில் நான் அறிந்து தெரிந்து கொண்ட செவிச்செல்வம்.
      நல்ல பாடல்,நல்ல பதிவு.

      நீக்கு
  19. நல்ல அமைதியான அழகிய பாட்டு.. கேட்டிருக்கிறேன்.

    //உன் குழந்தைகளும்
    என் குழந்தைகளும்
    நம் குழந்தைகளோடு
    விளையாடிக் கொண்டிருக்கின்றன //

    நானும் எங்கோ படிச்ச கவிதை.. சின்ன விசயம்தான் ஆனா அதை 3 வரியில் கவிதையாக்கிய விதம் அருமை.

    என்ன இன்று ஒரு பாட்டுடன் மேடையைக் காலி பண்ணிப்போட்டு, வீட்டுக்கு ஓடிவிட்டீங்க ஸ்ரீராம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பாடல் என்றாலும் நல்ல பாடல் இல்லையா!   அதுதான்!   நேரமும் இல்லை அதிரா...  நன்றி.c

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!