வியாழன், 13 மே, 2021

தண்டவாளத்துண்டு

 மதியம் சாப்பாட்டு நேரமாகட்டும், இல்லை மாலை வீடு செல்லும் நேரமாகட்டும்..   ஒரு மாதிரி களைத்துப்போன மன நிலையில் இருக்கும்போது மடித்துக் கட்டிய வேட்டி, மேல் பொத்தான் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில் வெள்ளை சட்டையுடன் கன்னியப்பன் மெதுவாக நடந்து செல்லும்போது சட்டென மனதில் ஒரு உற்சாகமும் சுறுசுறுப்பும் வரும்.

யார் கன்னியப்பன்?  ஏன் உற்சாகம்?

கன்னியப்பன் பள்ளி மணி அடிப்பவர்.  

உடனே வெளியிலிருக்கும் புத்தகங்களை அள்ளி பைக்குள் திணித்துக்கொள்ள ஆரம்பிப்போம்.  அப்படித் திணித்துக் கொள்ள ஆரம்பிப்பதைப் பார்க்கும் மற்ற மாணவர்களும் மணி அடிக்கப் போகிறது என்பதை உணர்ந்து விடுவார்கள்!  சமயங்களில் வாத்தியாரும் அதே மனநிலையில் இருப்பார்.  சமயங்களில் ரொம்பக் கடுப்பானால்,  "எல்லோரும் உட்காருங்கள்.  பத்து நிமிஷம் க்ளாஸ் உண்டு" என்று உட்கார வைத்து விடுவார்!  எல்லோரும் வீட்டுக்கு கலைந்து செல்வதை ஏக்கத்துடன் பார்த்தபடி அமர்ந்திருப்போம்!  கடுப்பாய் இருப்போம்.  

இதே நிலை வேறு சமயங்களிலும் ஏற்படும்.  ஏதாவது ஒரு வகுப்பு சளசளவென பேசியபடி இருப்பதை,  தாண்டிச் செல்லும் தலைமை ஆசிரியர் கவனித்து விட்டால் சமயங்களில் அவரும் 'எல்லா வகுப்புகளும் கலைந்துபோன பிறகு நீங்கள் கிளம்புங்கள்.  அதுவும் காம்பௌண்ட் கேட் தாண்டும்வரை வரிசையில் செல்லவேண்டும் என்று கட்டளை இட்டு விடுவார்.  அதற்கு காவல் கையில் பெரிய பிரம்புடன்  'பீட்டி' மாஸ்டர் எட்வின், அல்லது மார்ட்டின்!

காலை முதல்மணி என்பது டண்டண்டண் டண்டண்டண் டண்டண்டண் என்று தொடர்ந்து அடிக்கப்பட்டு ஒரு நொடி இடைவெளி விட்டு ஒரு அடி அடித்து நிறுத்துவார் கன்னியப்பன்.

சைக்கிளிலோ, நடந்தோ பள்ளிக்குள் வந்து கொண்டிருபப்வர்கள் பரபரப்படைவார்கள்; பதட்டமடைவார்கள்.

அந்த தண்டவாளத்துண்டைப் பார்த்தால் எனக்கு  ரயில் ஞாபகம் வந்ததில்லை.  எனக்கு அது பள்ளி மணிதான்.  ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைப் பார்த்தாலும் பள்ளி மணி ஞாபகம் வந்ததில்லை!  பள்ளிக்கு வெகு அருகிலேயே ரயில் நிலையம்.

எத்தனை பள்ளிகளில் தண்டவாளத்துண்டு பள்ளி மணியாக இருந்திருக்கிறது..?  கை தூக்குங்கள்!   ஒரு பெரிய சுத்தியல் வைத்து மணி அடிப்பார்கள்.  கன்னியப்பனைத் தவிர வேறு யாரும் மணி அடித்து நான் பார்த்ததில்லை.  அதாவது அவர் லீவு போட்டு பார்த்ததில்லை.  ஒவ்வொரு பீரியட் முடிவதற்கு ஒற்றை மணி.  மதிய உணவு இடைவேளைக்கும், மாலை பள்ளி விடுவதற்கும் மறுபடி தொடர்மணி!  மின்சார மணி எல்லாம் பிற்பாடு வந்தது என்று நினைக்கிறேன்.

ஏதாவது துர்சம்பவ நிகழ்வின் சமயங்களில் தலைமை ஆசிரியர் தன் அறையிலிருந்து மைக்கில் அறிவிப்பார்..  "ஒரு வருத்தத்துக்குரிய செய்தி..." என்று தொடங்கி, விஷயத்தைச் சொல்லி, "இப்போது ஒரு மணி அடிக்கும்.  எல்லோரும் சப்தம் செய்யாமல் அவரவர் வகுப்புக்கு வெளியே வந்து வரிசையில் நில்லுங்கள்.  அடுத்த மணி அடித்ததும் முதலில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் சப்தம் செய்யாமல் வரிசையில் வெளியே செல்ல வேண்டும்.  பின்னர் பிரிட்டோ ஹால் மாணவர்கள், பின்னர் டான்போஸ்க்கோ ஹால் மாணவர்கள் ..." என்று வரிசையை அறிவிப்பார்.  அதே போல சப்தம் செய்யாமல் வரிசையில் வெளியேறுவோம்.  வெளியில் கிரௌண்டுக்கு வந்தும் கூட பேச, குழும விடமாட்டார்கள் 'பீட்டி' மாஸ்டர்கள்!

காலாண்டு, அரையாண்டு, முழுத்தேர்வு சமயங்களில் இதே மணி வேறு விதமாய் ஒலிக்கும்.  வழக்கம்போல தொடங்கும்போது " டண்டண்டண் டண்டண்டண்.."  இது லேசாய் வயிற்றில் புளியைக் கரைக்கும்.  அப்புறம் ஒவ்வொரு அரைமணிக்கும் ஒரு மணி.  முதல் அரைமணியில் ஒரு மணி, இரண்டாவது அரைமணியில் இரண்டுமணி, மூன்றாவதில் மூன்று...   இப்படி.  அது ஒலிக்க, ஒலிக்க திக்திக்கென்று இருக்கும்.  கடைசியில் மணி அடிக்கும் முன்னர் ஒரு ஒற்றை மணி மறுபடி அடித்தால் இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் இருக்கிறது என்று அர்த்தம்.  உடனே மேற்பார்வை ஆசிரியர்கள் விடைத்தாளை நூல்கொண்டு கட்டச் சொல்வார்கள்.  ஐந்து நிமிடம் கழித்து நாங்கோ, ஐந்தோ மணி அடித்தால் உடனே விடைத்தாள்கள் கைகளிலிருந்து பிடுங்கப்படும்.

தண்டவாளத்துண்டை பள்ளி மணியாய் வைத்திருந்தது போல எத்தனை பேர்களுக்கு எப்போது பெஞ்ச், டெஸ்க் கிடைத்தது என்பதும் சுவாரஸ்யமான கேள்வியாய் இருக்கக் கூடும்.  மூன்றாவதும் நான்காவதும் பெஞ்ச் இருந்ததது.  ஐந்தாம் ஆறாம் வகுப்பு வெறும் தரை.  ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு நீள நீளமான பலகைகளில் அமரவேண்டும்.  ஒன்பதாம் வகுப்பில்தான் டெஸ்க்குடன் கூடிய பெஞ்ச்!  அப்போது அரை டிராயரை விட்டுவிட்டு முழு சராய்க்கு வரவேண்டும்!  பெரியவர்களாகி விட்டோம்!  சீனியர்ஸ்!

டெஸ்க் - பெஞ்ச்....  அதுவே  ஒரு அந்தஸ்து போல உணர்வோம்.  டெஸ்குக்குள் பையை வைத்துக் கொள்வது ஒரு பெருமை.  சமயங்களில் வீட்டுக்கு எடுத்துச் செல்லத் தேவை இல்லாத புத்தகங்களை டெஸ்க்கிலேயே வைத்து விட்டு பெருமையாக வருவதும் உண்டு!

பெரிய கேட்டுக்குள் வந்து உள்ளே சின்ன கேட் வரை சைக்கிளில் வரலாம்.  பின்னர் இறங்கி சைக்கிளை தள்ளிக் கொண்டுதான் செல்ல வேண்டும். காலை இருக்கும் இந்தக் கட்டுப்பாடு பெரும்பாலும் மாலைகளில் கவனிக்காது விடப்படும்.  சைக்கிள் இருப்பதே ஒரு அந்தஸ்து! அப்புறம் புத்தகங்களை வைத்துக்கொள்ள அலுமினியப்பெட்டி வைத்திருப்பவர்கள் சற்றே வசதியானவர்கள்!

தஞ்சையில் எங்கள் பள்ளி மூன்று பெரிய பள்ளிகளில் ஒன்று.  எல்லோருக்கும் அவங்க அப்பா அம்மா, அவங்க வீடு, அவங்க ஊர், அவங்க ஏரியா போல அவங்க பள்ளியும் பெருமைதான்.  விளையாட்டிலும் எங்கள் பள்ளி பல சாம்பியன்களைக் கொண்டிருந்தது.  மற்ற பள்ளி விளையாட்டுத் திடல்களில் போட்டி நடக்கும் நேரங்களில் தலைமை ஆசிரியர் கடைசி இரண்டு வகுப்புகள் இல்லை என்று சொல்லி எங்களை அங்கு செல்ல அனுமதிப்பார்.  எங்கள் பள்ளியின் ஆஸ்தான ஐஸ் விற்பவர் முதற்கொண்டு இந்த கன்னியப்பன் வரை அங்கு கூடி ஆரவாரித்து உற்சாகப்படுத்துவோம்.  கன்னியப்பன் கூட விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவதை நாங்கள் அதிசயமாகப் பார்ப்போம்.  அவர்தான் அங்கு நிரந்தரம், நாங்கள் வந்து இளைப்பாறிச் செல்லும் பறவைகள் என்பதை உணராமல்!

இதெல்லாம் 'பள்ளிகளில் தண்டவாளத்துண்டு மணியாய்...'  என்கிற ஒரு ஒற்றைவரி கிளப்பிய நினைவலைகள்...

அப்போதைய எங்கள் பள்ளி நாட்கள் விளையாட்டோடு பின்னிப் பிணைந்தவை.  வாரத்தில் இரண்டு அல்லது மூன்று விளையாட்டு பீரியட்கள் இருக்கும்.  மாலை பள்ளி முடிந்ததும் விரும்பினால் பள்ளி மைதானத்திலேயே விளையாடி விட்டுச் செல்லலாம்.  பள்ளியில் இருக்கும் விளையாட்டுப் பொருட்களை உபயோகித்துக் கொள்ளலாம். சாவியைப் பெற்றுக்கொண்டு அந்த அறைக்குச் சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருக்கும் நோட்டில் எழுதிக் கையெழுத்திட்டு, விளையாடி முடித்து பொறுப்பாக ஒப்படைத்துச் செல்லவேண்டும்.  தீநுண்மி கால பள்ளி அனுபவத்தை விடுங்கள்.  அதற்கு முந்தைய காலகட்டத்தில் கூட இதெல்லாம் இருந்ததா தெரியாது.  பள்ளி முடிந்ததும் நேராக சென்று டியூஷன்.  அப்புறம் வேறு வகுப்புகள்... 

==================================================================================================


தாண்டிச் செல்கையில் 
என்னைப் பார்த்துப் 
புன்னகைக்கிறது 
நான் குடியிருந்த வீடு.
'பார்க்காமல் 
இருக்க இயலவில்லை இல்லை?'
என்றது.

'ஆம்..   
முப்பது வருடங்கள் 
இணைந்திருந்த இடம் ஆச்சே..
ஆனால் நீ 
நிறம் மாறி விட்டாய் '
என்றேன்...

'இருக்கலாம்..
ஆனால் 
உன்னுடன் இருந்தது போல இல்லை '
என்று அது 
சொல்வதாய் நினைத்துக் கொண்டே 
கடக்கிறேன்

=========================================================================================================

தினமலர் சொல்கிறார்கள் பகுதியிலிருந்து....

அப்பாவின் எழுத்துக்கு இப்போதும் வரவேற்பு!


'மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு' போன்ற பல நாவல்களை எழுதிய, 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற, கி.ஜானகி ராமன் பற்றி, அவர் மகள் உமா சங்கரி: 

"திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பா, துவக்கத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். அதன் பின், 'ஆல் இந்தியா ரேடியோவில்' பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நவீன தமிழ் இலக்கிய பரப்பில், அழுத்தமாக தடம் பதித்தவர் அப்பா. அவரின் ஒவ்வொரு நாவலிலும், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். முக்கிய முடிவுகள் எடுக்கும் பெண்களாகவே அவரது கதாபாத்திரங்கள் அமைந்திருந்தன.என்னுடன் பிறந்தது இரண்டு அண்ணன்கள். நான் கடைக்குட்டி. அதனால், என் மீது அப்பா மிகுந்த பாசம் வைத்திருந்தார்.

'முதுமை வரை இருக்கக் கூடாது; பிறருக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது' என அடிக்கடி சொல்லும் அப்பா, அதுபோலவே, முதுமை அடையும் முன்பே மறைந்து விட்டார்.

குடும்ப உறவுகளில் இருந்து அப்பா எப்போதும் விலகி இருந்ததில்லை. குடும்பத்தில் அனைவருடனும் அவர் பிரியமாகவே இருப்பார். அவரின் நாவல்களில் குடும்ப உறவு மற்றும் சமூக உறவுகளே எழுத்து பொருட்களாக இருந்தன. எழுத்தாளர்கள், அவர்களின் கற்பனை உலகில் சஞ்சரிக்க, கொஞ்சம் தனிமையான இடத்தை விரும்புவர். அதுபோலவே, அப்பாவும், சென்னையில் இருக்கும் போது, வீட்டின் மாடியில் நீண்ட நேரம் எழுதிக் கொண்டிருப்பார். டில்லியில் இருக்கும் போது, வீடு சின்ன வீடு என்பதால், அலுவலகத்தில் நீண்ட நேரம் அமர்ந்து எழுதிக் கொண்டிருப்பார்.

புரட்சிப் பெண்கள் பற்றி பல நாவல்களை எழுதிய அப்பாவுக்கு, அவர் மகளான என் காதல் - கலப்பு திருமணத்தை முதலில் ஏற்க மனம் இல்லை. அவரால் எங்கள் கல்யாணத்தை எளிதில் ஏற்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தின் முதல் கலப்பு திருமணம் என்னுடையது.நீண்ட காலத்திற்கு பிறகே, எங்கள் திருமணத்தை அவர் ஏற்றார். அவரை விட என் தாய்க்கு, என் திருமணத்தை ஏற்பதில் கஷ்டம் இருந்தது. அவரை, தந்தை தான் சமாதானப்படுத்தினார்.

மூச்சுக்குழல் அழற்சி பிரச்னையால் அப்பா இறந்து விட்டார். எனினும் அவரது நாவல்கள் இன்னமும் பேசப்படுகின்றன. அவரின் நாவல்களை பேசு பொருட்களாக வைத்து, ஏராளமான இளைஞர்கள் விவாதம் செய்கின்றனர்.
அவரின் எழுத்துகளை இப்போதைய இளைஞர்கள் பாராட்டுவது தான் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது. மனிதர்களின் அடிப்படை உணர்ச்சிகளை பற்றி எழுதியதால் தான், அப்பாவின் எழுத்துகள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்றன. இன்னமும் அவரின் எழுத்தும், அந்த நடையும் படிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்கின்றன. பிரபல எழுத்தாளரின் மகளாக இருந்த போதிலும், எனக்கு கதை எழுதத் தெரியாது. அவர் இருக்கும் போதும், இறந்த பிறகும் அதை முயற்சிக்கவில்லை!

=================================================================================================

சென்ற வாரங்களில் குமுதம் பற்றியும், எஸ் ஏ பி பற்றியும் பேசி வந்தோம்.  கீதா அக்கா பிளாக்கில் கூட எஸ் ஏ பி பற்றி பேச்சு வந்தது.   இந்நிலையில் கடந்த ஞாயிறன்று பேஸ்புக்கில் உண்மைத்தமிழன் பகிர்ந்த இந்தத் தகவல்  வருத்தமான செய்தியைச் சொன்னது.குமுதம்’ எஸ்.ஏ.பி. கோதை அண்ணாமலை ஆச்சி மறைவு
குமுதம் நிறுவனர் மற்றும் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை அவர்களின் மனைவியும் குமுதம் இயக்குநர்களில் ஒருவருமாக இருந்த திருமதி.கோதை அண்ணாமலை் இன்று காலை சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 92. கடந்த ஒரு வாரமாய் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்
1947ஆம் வருடம் அவரது கணவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை ஆசிரியராக இருந்து நிறுவிய குமுதம் இதழின் வளர்ச்சிக்கு ஆரம்பக் காலங்களிலிருந்து இறுதிவரை உறுதுணையாக இருந்தவர். எழுத்தின் மீதும் வாசிப்பின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
1994ல் எஸ்.ஏ.பி. அண்ணாமலையின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் டாக்டர் எஸ்.ஏ.பி.ஜவஹர் பழனியப்பன் குமுதம் இதழுக்கு பொறுப்பேற்றார்.
அவருக்கும் குமுதம் ஆசிரியர் குழுவுக்கும் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கி வந்தவர் திருமதி. கோதை ஆச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி கோதை ஆச்சிக்கு ஒரு மகன். இரண்டு மகள்கள்.
கோதை ஆச்சியின் மகன் டாக்டர் எஸ்.ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் பிரபலமான இதய நோய் சிகிச்சை மருத்துவராக இருக்கிறார்.
தந்தையின் கனவுகள் மெய்ப்பட குமுதம் பணிகளையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்,
மகள் விஜயலட்சுமி அழகப்பன் மைசூரில் வசிக்கிறார்.
மற்றொரு மகளான எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கிருஷ்ணா சிதம்பரம் சென்னையில் வசிக்கிறார்.
=======================================================================================================

முன்னர் எப்போதோ வாட்ஸாப்பில் வந்த இரண்டு ஜோக்ஸ்....இது போல ஆப்டிகல் இல்லுஷன் முன்னர் நிறைய வரும்.  ஒரு ஜீசஸ் படம் இதில் பிரபலம்.  இதில் உங்களுக்கு வலதுபக்கம் முகம் தெரிகிறதா?

=============================================================================================

142 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் . வரும் எல்லா நாட்களும்
  இறைவன் கருணையோடு அமைதி ஆரோக்கியம்
  சேர்ந்து இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.  

   நீக்கு
 2. பள்ளி நாட்கள் ...மிக இனியவை.
  நீங்கள் சொல்லி இருக்கும் தண்டவாள மணி எங்கள் பள்ளியில் இருக்கவில்லை.

  ஒரு பெரிய வட்ட வெண்கல டிஸ்கஸ் இருக்கும்.
  அதில் மேலேயே தொங்கியபடி. கட்டை இருக்கும்.

  கன்யாஸ்த்ரீகள் பள்ளி. அதனால் பள்ளி மணி அடிப்பதும் அவர்களில்
  ஒருவர்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் பள்ளியும் கிரிஸ்துவப் பள்ளிதான்.  தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி!

   நீக்கு
 3. ஜீசஸ் வரவில்லை:)
  அதென்ன அந்தப் பெண் யார் நீ ஆவியா?:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் ஜீசஸ் வரமாட்டார்.  அது வேறு படம்.  இதில் வண்ணமயமாக ஒரு பெண்தான் தெரிவார்.

   நீக்கு
  2. AHAA...அதுதான் வண்ணப் பெண் தெரிந்தாரா...கண் தெரியவில்லை
   என்று நினைத்தேன்.!!!

   நீக்கு
  3. ஓ..   அப்போ உங்களுக்கு 'காட்சி அளித்திருக்கிறார்'!!

   நீக்கு
  4. எனக்கும் வண்ணமயமான அழகான பெண் தெரிந்தார். வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரே வந்தாள்...

   நீக்கு
  5. பொட்டில்ஙாத பெண்தான் வண்ணத்தமிழ் பெண்ணாக உங்களுக்குத் தெரிந்தது ஆச்சர்யம்

   நீக்கு
  6. எனக்கும் வ்ணமயமான அழகான பெண் தெரிந்தார்!!!!! கண்ணெதிரே தோன்றினாள்! கனிமுகத்தைக் காட்டினாள்! ஏமாற்றிப் போய்விட்டாள்!

   கீதா

   நீக்கு
  7. ஆஹா யாரந்த தேவதை யார் அந்த தேவதை என்று பாட வைத்து விட்டீர்கள் பானு அக்காவும், கீதாவும்!  

   நீக்கு
  8. நவீன தமிழ்ப் பெண் நெல்லை!

   நீக்கு
  9. பக்கத்திலேயே இருக்கும் வெற்றுப் பகுதியைதான் பார்க்க வேண்டும் என்றில்லை.  எதிரே சுவரையோ, மேலே சுவரையோ பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.

   நீக்கு
  10. //எதிரே சுவரையோ, மேலே சுவரையோ பார்த்தால் இன்னும் தெளிவாகத் தெரியும்.// ம்ஹூம்! சுவற்றில் எதுவும் தெரியவில்லை. 

   நீக்கு
  11. எனக்குத் தெரிகிறதே...   சொல்லப்போனால் சுவரில் கொஞ்ச நேரம் நிலைத்துத் தெரிகிறது!

   நீக்கு
 4. வாய் விட்டு சிரிங்க சிரிக்க வைக்கிறது. நன்றி மா.

  பதிலளிநீக்கு
 5. திருமதி எஸ் ஏ பி பற்றிய செய்திகள் சுவாரஸ்யம்.
  கிருஷ்ணா சிதம்பரம் கதைகள் எழுதி இருக்கிறாறோ?
  மறந்து விட்டது.
  ஜவஹர் பழனியப்பனிடம் குமுதம் ஏன் இது
  போல மாறிவிட்டது என்று கேட வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடிப்படையில் ஜ.ப மருத்துவர்.  பத்திரிகை ஞானம் ரத்தத்தில் இருந்தாலும் முனைப்பு கம்மியாக இருந்திருக்கும்.  நடுவில் பார்த்தசாரதி வழக்கு குழப்பமும் சேர்ந்திருக்கும்.

   நீக்கு
 6. ஏதேனும் சாதாரண விஷயத்தை ஶ்ரீராம் எழுதும்போது அது எவ்வளவு நினைவலைகளைத் தூண்டிவிடுகிறது.

  நல்ல எழுத்து. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி...   இது பாராட்டுதானே?   நன்றி நெல்லை!

   நீக்கு
  2. என் பசங்களிடம் அல்லது மனைவியிடம் பாராட்டு தெரிவித்தால், நிஜமாவே அவங்க சந்தேகப்படுவாங்க, இதில் உள்குத்து இருக்கான்னு. நம்ம ராசி அப்படி.

   தண்டவாளம், பெஞ்ச் கிளப்பிய நினைவலைகளை எழுதுகிறேன். விளையாட்டு பீரியட், சைக்கிள்... என்ன என்னவோ நினைவலைகள்.

   நீக்கு
  3. நன்றி.   அப்படி  தூண்டப்படவேண்டும் என்பதுதான் என் நோக்கமும்.  இதில் ஆரம்ப வரிகளாகச் சேர்ந்திருந்த வரிகளை பின்னர் தண்டவாளத்துக்காக நீக்கி விட்டேன்.  அது பள்ளியின் சூழல் பற்றியது.

   நீக்கு
 7. அனைவருக்கும் காலை வணக்கம்

  பதிலளிநீக்கு
 8. கிச்சன் இன்சார்ஜ் ஆக இருந்துகொண்டு ருசியான சாப்பாட்டு வகைகளைத் தயாரித்து நிறைய கஸ்டமர்களை ஹோட்டலுக்கு வருவதற்குக் காரணமாக இருந்தவருக்கும், தன் ஹோட்டலின் உணவைப்பற்றி நிறைவாக, திறமையாக விளம்பரப்படுத்தி, ஹோட்டலையும் அழகாக்கி இன்னும் நிறைய கஸ்டமர்களை அலைபோல் வரச்செய்து ஹோட்டல் இன்னும் புகழ் பெற உதவிய ஹோட்டல் மேனேஜருக்கும் உள்ள வேறுபாடுதான் எஸ் ஏ பி அவர்களுக்கும், விளம்பர விற்பனை மேனேஜராக இருந்த பார்த்தசாரதிக்கும் உள்ள வேறுபாடு.

  இருவரும் குமுத்த்தின் வெற்றிக்குக் காரணம் என்றாலும் எஸ் ஏ பி டீம் இல்லையேல் குமுதம் இல்லை.

  ஜவஹருக்கு நிகழ்ந்தது அநீதி. இதனால் கண்ட பலன் குமுதம் பத்திரிகையைச் சாகடித்ததுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை.  நிலைமையை கிச்சனை சம்பந்தப்படுத்தி அழகாக விளக்கி விட்டீர்கள்!

   நீக்கு
 9. தி.ஜானகிராமன் சாரின் இன்னோரு பக்கம்!!
  நூறு வயது ஆகி இருக்கும் அவருக்கு.
  அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பிடித்த எழுத்தாளர் ...எனக்கும் பிடித்தவர்.

  மகளின் திருமணத்தை ஏற்கவில்லையா. அடடே.
  புது செய்தி.அப்புறம் ஏற்றார் என்பது மகிழ்ச்சி.
  எங்கள் லஸ் சர்ச் ரோடிற்கே வந்திருக்கிறார் என்பது பின்னாட்களில்
  தெரிந்தது.
  அப்போதெல்லாம் நான் இவர் கதைகளைப் படித்ததில்லை.

  அவர் கதையில் வரும் ஆமருவியப்பன்(உயிர்த்தேன்)
  நிஜமாகவே சிற்பம் செதுக்குபவர்.
  அவரையும் பார்த்திருக்கிறேன்.
  என் முகனூல் தோழியின் மாமனார்.
  எல்லாம் மயிலை நினைவுகள்.
  அருமையாகப் பதிந்திருக்கிறீர்கள் ஸ்ரீராம். நன்றி.

  பதிலளிநீக்கு
 10. ஆப்டிகல் இல்யூஷன் - ரொம்பவே ஆச்சர்யம்.. டாக்டர் ஷாலினி... ஒன்றைப்பற்றி (இங்க எழுதமுடியாது) விளக்கும்போது, அது வெறும் எண்ணத்தில்தான் இருக்கு என்பார். ரொம்ப யோசித்தால் உண்மை.

  நம்ம மைன்ட் எவ்வளவு அதிசயங்களைக் கொண்டதோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்குமுன் நான் எப்போதோ இதே போல வெளியிட்ட ஜீசஸ் படம் பார்த்த நினைவு இருக்கிறதோ?

   நீக்கு
  2. இல்லையே.. மீண்டும் வெளியிடுங்கள்.

   நீக்கு
  3. அப்படியா...   விரைவில் வெளியிடுகிறேன்.

   நீக்கு
  4. @ நெல்லை

   டாக்டர் ஷாலினி ஒன்றைப் பற்றி..
   (இங்கே எழுத முடியாது,)

   ஆனாலும் இந்த நெல்லைக்கு இருக்கற குறும்பு இருக்கே! ஒண்ணு விடாம எல்லாத்தையும் படிச்சிடறார்.. எதை, எங்கே, எப்படி ஆப்ட்டா எடுத்தாளனுன்னும் நன்னாத் தெரியும்! ஆனா அப்பப்ப படிக்கணும்.. எல்லாம் மறந்து போய்ட்றதுன்னு சும்மாக்காச்சும் சொல்லுவார் . :))

   நீக்கு
 11. பரீட்சை பற்றிய பயங்களைப் புதுப்பித்து விட்டீர்கள்.
  முடிக்கும் நேரம் வரும் படபடப்பு, நூல் டெஸ்கில் வைப்பது. மற்றவர்கள்
  முகங்களைப் பார்ப்பது, எழுதும் பேப்பர்களை வாங்கி
  எழுதிக்கொண்டே இருக்கும் தோழி!!

  பரீட்சை எழும்போது வந்து சத்தாய்க்கும் இருமல்,
  ஒன் சிட்டிங்க் என்று அழைக்கப்படும்
  அரை நாள்லீவு எத்தனை நினைவுகளைக் கொண்டு வந்து விட்டீர்கள்
  ஸ்ரீராம். மிக அற்புதமான எழுத்து உங்களுடையது.
  இத்தனைக்கும் நான் படித்த காலத்துக்கும் உங்களுக்கும் இடையே பெரிய இடைவெளி.
  சில விஷயங்கள் மாறுவதில்லை!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொசுக் பொசுக்கென எழுந்து பேப்பர் வாங்கி வாங்கி எழுதும் சில நண்பர்கள் நமக்கு, அல்லது எனக்கு  மிகவும் திகிலூட்டுவார்கள்!  பேப்பரில் மார்ஜின் நிறைய விட்டு, வரிகளுக்கிடையே நிறைய இடைவெளி விட்டு எழுதுவார்கள்.  பெரும்பாலும் பேப்பர்கள் பள்ளியிலேயே கொடுத்து விடுவார்கள்.  மிக மிகச் சில சமயங்களில் நாம் கொண்டு போக வேண்டும்!  அப்புறம் கேள்வித்தாளிலேயே  விடை எழுதிக் கொடுக்கும் முறையும் வந்ததது.  அதில் ஒரு நிம்மதி.  கேள்வித்தாளை வீட்டில் காட்டித் திட்டு வாங்க வேண்டாம்!!!   எனக்கு செபாஸ்டின் என்றொரு தமிழாசிரியர் இருந்தார்.  ஸ்கேல் வைத்து பதிலை அளந்து மதிப்பெண் போடுவார்!!!  

   ஆம், பரீட்சை நாளில் அரைநாள் விடுமுறை கிடைக்கும்.  ஆனால் அனுபவிக்க முடியாது.  அடுத்த பரீட்சைக்கான பயம் மனம் முழுவதும் நிறைந்திருக்கும்!!!

   நன்றிம்மா.

   நீக்கு
 12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...   வாங்க...    உங்கள் மெயில் ஐடி மாறிவிட்டதா?

   நீக்கு
 13. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 14. எத்தனை பள்ளிகளில் தண்டவாளத்துண்டு பள்ளி மணியாக இருந்திருக்கிறது..? கை தூக்குங்கள்! //

  நான் படித்த பள்ளிகளில் இரும்பால் செய்த கனமான வட்டமான தோசைக்கல் போல இருக்கும் மணி அடிப்பது. கனமான சுத்தியல் அதை வைத்து தான் அடிப்பார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே...   கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான்.  தண்டவாளதுண்டிலிருந்து  வெட்டப்பட்டதுதானோ என்னவோ அதுவும்!

   நீக்கு
 15. பள்ளி பருவ நினைவுகள் அருமை. குட்டையாக இருப்பதால் முன் பெஞ்சில் அமர வேண்டும், யாரிடமும் பேச முடியாது கவனித்து கொண்டு இருப்பார் ஆசிரியர்.

  //சமயங்களில் வீட்டுக்கு எடுத்துச் செல்லத் தேவை இல்லாத புத்தகங்களை டெஸ்க்கிலேயே வைத்து விட்டு பெருமையாக வருவதும் உண்டு!//

  அப்படி குடையை மறந்து வைத்து விட்டு வந்துவிட்டேன். மறுநாள் காலை விரைவில் போய் பார்த்தும் கிடைக்கவில்லை குடை. வாட்ச்மேனிடம் கேட்டால் பார்க்கவில்லை பாப்பா என்றார்.

  11 வது படிக்கும் போது விளையாட்டு பீரியட்களை மற்ற ஆசிரியர்கள் வாங்கி கொண்டால் மாலை பள்ளி முடிந்ததும் விளையாட்டு ஆசிரியர் பிடித்துக் கொள்வார். எல்லோரையும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்கள் விளையாடிய பின்பே விடுவார் வீட்டுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் குட்டையுமில்லை, நெட்டையுமில்லை.  நடுவில் அமர்ந்திருப்பேன்.  கேள்விகள் கேட்கப்படும் பெரும்பாலும் பின்வரிசை மாட்டும்.  அவ்வப்போது என் திருட்டு முழியைப் பார்த்து என்னையும் கேட்பார்.  அப்புறம் எப்படி ஆக்ஷன் கொடுப்பது என்று கற்றுக்கொண்டேன்.  ரொம்பத் தெரிந்தது போல முந்திரிக்கொட்டை மாதிரி நான் நான் என்று நிறைய கைகள் உயர்ந்தால் நாமும் உயர்த்தலாம்.  சில கைகளே உயர்ந்தால் உயர்த்தப்பட்ட கைகளை சற்றே கேலியுடன் பார்க்க வேண்டும்!!!  ஆனால் என் வள்ளல் தெரியாதவரா ஆசிரியர்!  எத்தனைமுறை முட்டி போட்டிருப்பேன்!


   நல்லவேளை நான் எதையும் மறந்து வைத்ததுமில்லை, தொலைத்ததுமில்லை!

   நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 16. வீடு பேசும் கவிதை அருமை.
  அதுவும் நம்மளை நினைக்கும். நாமும் அதை நினைப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுவும் நம்மை மிஸ் செய்வது போல நினைத்துக் கொள்வதில் ஒரு சுகம், தற்பெருமை!  நன்றிம்மா!

   நீக்கு
 17. பழைய வீட்டுடன் பேசிய கவிதை அருமை.

  தன் அப்பாவைப் பற்றி மகள் சொன்னது படித்தேன்.

  //முதுமை வரை இருக்கக் கூடாது; பிறருக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாது' என அடிக்கடி சொல்லும் அப்பா, அதுபோலவே, முதுமை அடையும் முன்பே மறைந்து விட்டார்//

  சிலருக்கு அவர்கள் நினைத்தது போலவே மரணம் கிடைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிடைக்கிறது. ஆனாலும் அது அவர்கள் கையில் இல்லை!

   நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 18. ஜோக்ஸ் இரண்டும் சிரிக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 19. பள்ளி மணி நினைவுகள் அருமை! எங்கள் பள்ளியிலும்  தண்டவாளத்துண்டுதான் மணியாக இருந்தது. அதை ராமசாமி, நாகலிங்கம்  என்ற இரண்டு பேரில் யாராவது ஒருவர் அடிப்பார்கள்.
  இதில் ராமசாமி ஸ்நேகமானவர், கன்னியப்பன் நேர் எதிர். எப்போதும் கடுகடுவென்றிருப்பார். ராமசாமி எப்போதும் நீல சட்டைதான் அணிவார். சில சமயம் ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்க சர்குலர் கொண்டு வரும்பொழுது விடுமுறை பற்றிய  அறிவிப்பாக இருந்தால் எங்களிடம் ஜாடையில் சொல்வார். அதனால் அவர் சர்குலர் கொண்டு வந்தாலே என்ன விஷயம் என்று நாங்கள் ஜாடையில் கேட்போம். 
  பின்னாளில் மணிக்கு பதிலாக பெரிய காலிங் பெல் வைத்து அது ஒலியெழுப்பும். ஒரு சில சமயங்களில் அது வேலை செய்யாமல் மணி அடிக்கப் பட்ட பொழுது அதிசயமாக இருந்தது. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பானு அக்கா....  கன்னியப்பன் என்கிற பெயர் உங்கள் மனதில் பதிந்துவிட்டது போல!  நாகலிங்கத்துக்கு கன்னியப்பன் பெயரைக் கொடுத்து விட்டீர்கள்.

   நீக்கு
  2. ஹிஹி! முதலில் கன்னியப்பன் என்று எழுதி விட்டேன். பிறகுதான் அவர் பெயர் நாகலிங்கம் என்பது நினைவிற்கு வந்தது. எப்போதும் நீல சட்டையே அணிந்து கொண்டிருக்கும் ராமசாமியின் பெயர் நீலமேகம் என்று ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். 

   நீக்கு
 20. அலுமினிய பெட்டி வைத்துக் கொள்வது அந்தஸ்துதான். கொஞ்சம் அந்தஸ்து குறைந்தவர்கள் தகர பெட்டி வைத்துக் கொள்வார்கள். என்னிடம் கூட சாக்லேட் கலர் பெட்டி ஒன்று இருந்தது. ஏதாவது எழுத வேண்டுமென்றால் டமால்,டமால் என்று மாணவர்கள் எழுப்பும் சப்தம் ஆசிரியர்களுக்கு எரிச்சலூட்டும். அதன் பிறகு பிளாஸ்டிக் பாஸ்கெட். நான் ஒரு சிவப்பு நிற பிளாஸ்டிக் பாஸ்கெட் வைத்திருந்தேன். அதில் பேனா வைத்துக் கொள்வது கொஞ்சம் கஷ்டம். அப்படியே போட்டால் இங்க் லீக் ஆகி, புத்தகங்கள்  வீணாகும். இல்லையென்றால் கீழே விழுந்து விடும். எனவே கண்டிப்பாக ஒரு பென்சில் பாக்ஸ் வேண்டும். ராக்கெட், கிடார், போன்ற வடிவங்களில் பென்சில் பாக்ஸ் வைத்திருந்தேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //டமால்,டமால் என்று மாணவர்கள் எழுப்பும் சப்தம் ஆசிரியர்களுக்கு எரிச்சலூட்டும்.//

   ஆம்.  அப்படியே போர்ட் பக்கமிருந்து திரும்பி பிரம்பால் மேஜையில் பெரிய சத்தமொன்று எழுப்புவார்.  எங்கள் பள்ளியில் கேபி என்று ஒரு ஆசிரியர் இருந்தார்.   குண்டாக தொப்பையுடன் சற்றே குள்ளமாக இருப்பார்.  வகுப்பு வாசலில் நின்று வேறொரு ஆசிரியருடன் அவர் பேசிக்கொண்டிருக்க, நாங்கள் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தால் திடீரென திடுதிடுவென ஓடிவந்து முன்னால் இருக்கும் டெஸ்க்கை எட்டி உதைப்பார்!  பெரிய கோபமெல்லாம் கிடையாது...   சும்மா பயமுறுத்த!

   நீக்கு
 21. நான் 4-5வது படித்த பள்ளியில் (பூலான்குறிச்சி), தண்டவாளத்துண்டுதான். காலையில் நானும் (மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எங்கப்பா), என் பள்ளி தலைமை ஆசிரியர் பையன் குமாரும் வேகமாகச் சென்று ஹெட்மாஸ்டர் ரூமில் உள்ள சுத்தியலை எடுத்து பள்ளி மணியை அடிப்போம். ஹெட்மாஸ்டர் அறைக்குள் இருவரும் சேர்ந்துதான் செல்வோம். அந்த ரூமில் முழு எலும்புக்கூடு வைத்திருந்தார்கள். ஒரு தடவை போட்டியில் நான் எடுத்த சுத்தியல் அவன் கையிலோ மண்டையிலோ பட்டு பிரச்சனை ஆகிவிட்டது. நான் கொஞ்சம் வால்தனம் உள்ளவன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியர், மேல் நிலைப்பள்ளிக்கு ஒரு தலைமை ஆசிரியரா?  எங்களுக்கு பள்ளி மணி அடிக்கவேண்டும் என்று ஆசை இருந்தாலும் மாணவர் யாரும் அடித்ததில்லை.

   நீக்கு
  2. அப்போல்லம் 5வது வரை ஒரு பள்ளிக்கூடம். 6-11 இன்னொரு பள்ளிக்கூடம். அதுதான் உயர்நிலைப்பள்ளி. 78லதானே +2 வந்தது.

   நீக்கு
  3. அப்படிச் சொன்னால் சரிதான்.  ஆனால் ஒரே காம்பௌண்டில் இருக்கும் பள்ளி என்றால் ஒரு தலைமை ஆசிரியர்தானே இருப்பர்?

   நீக்கு
  4. எங்க பள்ளி மதுரையில் ஓசிபிஎம். ஒரே காம்பவுண்டுக்குள் தான். மான்டிசோரி இரண்டு வகுப்புகள் அப்போ இருந்தன. ப்ரீகேஜி இரண்டு+யுகேஜி இரண்டு. அப்போல்லாம் மான்டிசோரி 1, மான்டிசோரி 2 எனச் சொல்வார்கள். அதன் பின்னர் ஒன்றிலிருந்து ஐந்து வகுப்பு வரை பிரைமரி பள்ளி. அதன் ஹெட்மாஸ்டர் தனி. ஆறிலிருந்து எட்டு வரை செகன்டரி இதன் ஹெட்மாஸ்டர் தனி, மற்ற ஒன்பதிலிருந்து பதினோரு வகுப்புக்களுக்குப் பிரின்சிபல். இவங்க மொத்தப் பள்ளியின் நிர்வாகத்தையும் சேர்த்தே கவனித்தாலும் இவங்களுக்கு உதவத் தான் மற்ற இரு ஹெட்மாஸ்டர்கள்/மிஸ்ட்ரஸ்கள். எல்லோரும் ஒரே காம்பவுண்டுக்குள் இருக்கும் ஒரே நிர்வாகத்தின் கீழே வரும் பள்ளி தான். கிட்டத்தட்ட கேந்திரிய வித்யாலயா போன்ற அமைப்பு! கேந்திரிய வித்யாலயாவில் மான்டிசோரி இல்லாமல் ஒன்றாம் வகுப்பில் இருந்து பனிரண்டாம் வகுப்பு வரை இருக்கும்.நான் படித்த வருஷம் தான் மதுரை கேந்திரிய வித்யாலயாவில் முதல் முதல் பத்தாம் வகுப்பிற்குப் பின்னர் பதினோராம் வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இப்போதுள்ள பத்தாவது எஸ் எஸ் எல்சி. என்பது போல் கேந்திரிய வித்யாலயாவில் அந்நாட்களிலேயே பத்தாம் வகுப்பைத் தான் எஸ்.எஸ்.எல்.சி. என்பார்கள். பின்னர் பதினொன்று, பனிரண்டு. இந்தக் குழப்பத்தினால் கலவரம் அடைந்தே என் அப்பா என்னை அருகிலுள்ள ஓசிபிஎம்மில் சேர்த்தார். அங்கிருந்து நடை தூரத்தில் தான் கேந்திரிய வித்யாலயா இருந்தது/இப்போவும் அங்கேயே இருக்குனு நினைக்கிறேன்.

   நீக்கு
 22. //பொசுக் பொசுக்கென எழுந்து பேப்பர் வாங்கி வாங்கி எழுதும் சில நண்பர்கள் நமக்கு, அல்லது எனக்கு  மிகவும் திகிலூட்டுவார்கள்!// எனக்கு அப்படியெல்லாம்  நேர்ந்ததில்லை. குறைவாக எழுதி, நிறைய மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். ஏனென்றால் நிறைய பேப்பர்கள் வாங்கும் மாணவிகள் நிறைய மார்க்குகள் வாங்கு வார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அடிஷனல் சீட் வாங்குவதற்குள் அவர்கள் போடும் ஸீன் தாங்காது. தொண்டையை செருமிக் கொள்வார்கள், தாவணியை சரி செய்து கொள்வார்கள், எழுதிக் கொண்டே இருப்பார்கள்.. அப்பப்பா! 
  என்னுடன் முமலா பீபி என்று ஒரு பெண் படித்தாள். 'ஹம்டி டம்டி சாட் ஆன் எ வால்' என்னும் நர்சரி ரைமை யாரவது சொன்னாலே எனக்கு அவள் நினைவுதான் வரும். முட்டை போன்ற முகம், முட்டை  போன்ற உடல், முட்டை முட்டையாக எழுதுவாள். ஒரு பக்கத்தில் எட்டு வரிகள் மட்டுமே எழுதுவாள், அதனால் நிறைய அடிஷனல் சீட் வாங்குவாள். 
  எகனாமிக்சில் நிறைய பக்கங்கள் எழுத வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் அதில் கூட என்னால் இருபத்திரெண்டு பக்கங்களுக்கு மேல் எழுத முடிந்ததில்லை. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  அவர்கள் அடிஷனல் ஷீட் வாங்குவதே ஸீன் போடுவது போலதான் இருக்கும்!

   நீக்கு
 23. என்னை கல்லூரி செல்லும்வரை ஏழையாக (எளிமை என்ற பெயரில்) வளர்த்தார்கள். 5வது படிக்கும்போது என் அப்பா ஸ்கூல் டீச்சர் என்னிடம், என்னடா ஒட்டுப்போட்ட டிராயரைப் போட்டுக்கிட்டு இருக்க.. ஹெட் மாஸ்டர் பையன் நல்லா டிரஸ் பண்ணிக்க வேண்டாமா என்று கேட்டதற்கு, பெரிய மனிதன் போல, டிரெஸ்ல என்ன இருக்கு டீச்சர், நல்லா படிக்கறதுதானே முக்கியம் என்று சொன்னது நினைவில் இருக்கு.

  ஆனால் பள்ளிக்காலம், ஒருவனின் உடை, அந்தஸ்து, சாதி, மதம் இவற்றைப் பற்றி நினையாமல் நண்பர்களுடன் இருந்த பொற்காலம் அல்லவா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக.  அரசியல், சாதி, மதம் என்கிற மாச்சர்யங்கள் இல்லாமல் பழகிய காலம்.

   நீக்கு
 24. நான் எட்டாவது, தாளவாடியில் படித்தேன். அப்கோ கிளாஸ் லீடரைத் தேர்ந்தெடுக்க கிளாஸில் தேர்தல் வைத்தார்கள். அப்போ பிராமின், நான் பிராமின், தெலுங்கு என்ற பாகுபாடு இருந்தது நினைவில் இருக்கு. கோல்மால் செய்து லீடரானேன் (முதல் சாய்ஸ், இரண்டாம் சாய்ஸ் என்று இருந்ததை, புத்திசாலித்தனமா புரிந்துகொண்டு பெண்கள் பக்கம் இருந்த நண்பி லக்ஷ்மியிடம் அவர்கள் பகுதியில் முடிந்தவரை இரண்டாவது சாய்சாக என்பெயரைப் போடச் சொல்லி (முதல் சாய்சா பெண்கள் சார்பா நின்னவளுக்குத்தான் வாக்களிப்பாங்க), மொத்த வாக்கில் முதலாக வந்துவிட்டேன். கிளாஸில் 15 பேர்கள் என நினைவு.

  பள்ளியில் கன்னட, தமிழ் பாகுபாடும் இருந்தது. அதனால் விரைவில் கன்னடம் பேசக் கற்றுக்கொண்டுவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை கோல்மால் என்று சொல்ல முடியாது!   புத்திசாலித்தனமான அணுகுமுறை என்று சொல்லலாம்!

   நீக்கு
 25. எட்டாவது வரை உள்ள நான் படித்த பள்ளியிலும் தண்டவாளத் துண்டு தான்... ஏழாவது எட்டாவது வகுப்பில் கிளாஸ் லீடருக்கும், இதில் மணி அடிக்க வாய்ப்பு கிடைக்கும்... நானும் எனது இசைத் திறமையை காட்டியுள்ளேன் (!) பள்ளியை சுற்றியுள்ள பல வீடுகளுக்கும் இந்த ஒலியே கடிகாரம்...

  கவிதை வரிகள், ஜோக்ஸ் அருமை... வலதுபக்கம் முகம் அவங்க தானே...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலதுபக்க முகம் அவரென்றால் எவர்?  அவர்தான் என்றால் அவரில்லை!!!  நன்றி DD.

   நீக்கு
  2. டி.டி.. உங்கள் ஊர் செயிண்ட் மேரீஸ்
   ஹைஸ்கூலில் தான் ஏழாவது, எட்டாவது வகுபபுகள் வாசித்தேன்.
   தமிழாசிரியர் பூவராகன் மிக நேர்தியாக அந்த இளம் வயதில் தமிழின் அழகை மனத்தில் பதிய வைத்தவர். இன்றும் நினைவில் நிற்கிறார்.

   நீக்கு
  3. 1955, 1956. ஆண்டுகள் அவை.

   நீக்கு
  4. என் காலத்திலும் அதே மாதிரி தண்டவாளத்துண்டு தான்.

   மனம் தோய்ந்த விவரிப்பு!..
   ஒரு வித பரவசத்தோடையே வாசித்தேன்..

   நீக்கு
 26. திருமதி உமா சங்கரி சொல்லும்,

  'நவீன தமிழ் இலக்கிய பரப்பில்..'

  -- அப்படீன்னா என்ன ஸ்ரீராம்?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியலியே ஸார்...   எனக்கு தெரியலியே...    இலக்கியம் என்றாலே எனக்கு என்ன என்று தெரியாது...  இதில் நவீன தமிழ் இலக்கிய அதிலும் இலக்கிய பரப்பு...     ஊ... ஹூம்!

   நீக்கு
  2. ஹ்ஹ்ஹஹா.

   சும்மாச் சொல்லாதீங்க... எவ்வளவு அழகா வியாழக்கிழமை பகுதிகளை அமைக்கிறீங்க.. உங்களுக்குத் தெரியாத விஷயம் கூட ஒண்ணு இருக்குமா என்ன?

   அடுத்த வியாழனில் கூட இது தான் ஜீவி கேட்ட நவீன தமிழ் இலக்கிய பரப்புன்னு எதையானும் எடுத்துப் போடாலும் போட்டுடுவீங்க..
   இருக்கவே இருக்காங்க,வரிசையாய்
   ஜெமோ, சாருன்னு நிறையவே..
   அப்படி நீங்க போட்டாலும்.. 'வணிக எழுத்துன்னா என்ன ஸ்ரீராம்?: என்று கேட்க, ஒரு கேள்வியை ரெடியா வைச்சிருக்கேன். தெரியுமா?

   நீக்கு
  3. //என் காதல் - கலப்பு திருமணத்தை ஏற்க முதலில் மனம் வரவில்லை..//

   உமா சங்கரி அவர்களே!

   இப்படித் தான் உங்கள் தாத்தா தியாகராஜ சாஸ்திரிகள் உங்கள் அப்பாவின் அம்மா வந்தாள் கதையை
   வாசித்துத் தெரிந்து மிகவும் மனம் நொந்து சோர்ந்து போனார்.

   திஜா கதையின் நிகழ்விடத்தை, களத்தையாவது மாற்றிச் சொல்லியிருக்கலாம். அப்படிச் செய்யாதது அவரின் தவறு தான்.

   நீக்கு
  4. ஓ... அப்படி ஒன்று இருக்கா?

   நீக்கு
 27. பள்ளி மணி ஓசை வாழ்வில் மறக்க இயலா ஓசை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  நன்றி நண்பரே...   நீங்கள் இப்போதும் அந்த மணியோசையிட் கேட்டுக் கொண்டுதான் இருப்பீர்கள்...

   நீக்கு
 28. கோதை ஆச்சியார் மறைவு பற்றி இப்பொழுது தான் அறிகிறேன்.

  ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.. நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்!

   நீக்கு
 29. எஸ்.ஏ.பி. அவர்கள் பற்றி நான் பூவனம் தளத்தில் எழுதியதை (எழுத்தாளர் திலகம் எஸ்.ஏ.பி)
  தமிழ்வாணனின் இளைய மகனார் ரவி
  அவர்கள் பிரிண்ட் எடுத்து ஆச்சியாரிடம் சேர்ப்பித்திருக்கிறார்.
  அந்தக் கட்டுரை முழுவதையும் படித்து விட்டு, ஆச்சியார், "இவரை நான் பார்க்க வேண்டுமே!" என்றாராம். இதை ரவி தமிழ்வாணன் என்னிடமும் தெருவித்திருந்தார். ஆனால் ஆச்சியாரை நேரில் சந்திக்க முடியாமலேயே போய்விட்டது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.. சந்தித்திருக்கலாம். அதுவும் ஒரு அனுபவமாயிருந்திருக்கும்.

   நீக்கு
 30. எங்கள் பள்ளியில் தோசைக்கல்/சுத்தியல்! பின்னாட்களில் மின்சார மணி! நீளமாக அடித்தால் பள்ளி நேரம் முடிந்து விட்டது எனப் பொருள். காலையில் கொஞ்ச நேரம் அடித்தபின்னர் நிறுத்தி நிதானமாக 3 மணி அடிப்பார்கள். அப்போ எல்லோரும் பள்ளி மைதானத்தில் பொது அசெம்பிளி ப்ரேயருக்கு வரணும் எனப் பொருள். இரண்டு மணி எனில் அவரவர் வகுப்பில். ஒரே மணி எனில் மாடியில் அசெம்பிளி ஹாலில் ப்ரேயர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தோசைக்கல்லா? சத்தம் பள்ளி முழுவதும் கேட்குமா? சிறு சிறு மாற்றங்களில் எத்தனை நடைமுறை மாற்றங்கள்....

   நீக்கு
  2. //எங்கள் பள்ளியில் தோசைக்கல்/சுத்தியல்! // - ஓ.. பெண்கள் பள்ளி என்றால் அவர்கள் தொழிலை நினைவுபடுத்தும்விதமாக தோசைக்கல், ஆண்கள் பள்ளி என்றால், அவர்கள் உலகம் சுற்றப் பிறந்தவர்கள் என்பதை உணர்த்தும் விதமாக தண்டவாளத் துண்டு... இப்படி புரிந்துகொள்ளலாமா கீசா மேடம்?

   நீக்கு
 31. கூடப் படித்தவர்கள் பெயரெல்லாம் நினைவில் இருந்தாலும் யாரையும் கண்டுபிடிக்க முடியலை. எங்க பள்ளியும் கிறிஸ்தவப் பள்ளி தான். எங்களுக்கும் இரண்டென்ன, 3 தலைமை ஆசிரியர்கள் உண்டு. பிரைமரி பள்ளிக்கு ஒருவர், செகண்டரி பள்ளிக்கு ஒருவர், ஹைஸ்கூலுக்கு ஒருவர். இதில் ஹைஸ்கூல் தலைமை ஆசிரியர் மொத்தப் பள்ளிக்கும் பொறுப்பாளரும் கூட! இவர்களைத் தவிர்த்து உதவித் தலைமை ஆசிரியர், பள்ளியின் காசாளர், போன்றவர்களும் ஆசிரியர்களிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இப்போவும் பள்ளி அங்கேயே இருந்தாலும் இப்போதைய நடைமுறை தெரியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டு மூன்று தலைமையாசிரியர்கள் ஆச்சர்யம். எனக்கு நிறைய நண்பர்கள் பெயரும் அவர்களின் அப்போதைய முகங்களும் இப்போதும் நினைவில் இருக்கின்றன..

   நீக்கு
 32. தி.ஜா.ரா. மகள் சொன்னதை ஏற்கெனவே படிச்சிருக்கேன். அவர் திருமணம் பற்றியும் கேள்விப் பட்டிருக்கேன். பழைய வீட்டை எப்போவும் மறக்க முடியாதுதான்! குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அவர்கள் மனைவியின் மறைவு குறித்துக் கேள்விப் படலை. அவங்க இல்லைனே நினைச்சேன். ஜவஹர் பழனியப்பனுக்கு நடந்தது அராஜகம்/அக்கிரமம். என்னவோ குமுதம்ங்கற பேரிலே அவர் பெயர் ஒப்புக்குத் தான் இருக்கு என்பதை இப்போது புதுசாக் குமுதம் படிக்கிறவங்களுக்கு வேணாத் தெரியாமல் இருக்கலாம். பழைய வாசகர்கள் நன்கு அறிவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். நீதிமன்ளம் வாயிலாக நீதி கிட்டியது. திஜாரா பெண் சமாச்சாரம் எனக்குப் புதிது.

   நீக்கு
 33. வாட்சப் ஜோக்குகள் எனக்கும் வந்தன. மூக்குப் புள்ளியைப் பார்த்துட்டு எதைப் பார்த்தாலும் ஒண்ணுமே தெரியலை. பேய், பிசாசு எல்லாம் என்னைப் பார்த்து பயப்படுதுங்களோ என்னமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள். தெரியும்.

   நீக்கு
  2. ம்ஹூம், எல்லாம் என்னைக் கண்டு பயந்து ஓடுதுங்க போல! :(

   நீக்கு
 34. பள்ளிக்காலம் என்பது ஒரு கவலையில்லாக்காலம்.என்னுடைய பள்ளிக்காலமும் அப்படித்தான் இருந்தது.

  ஒன்று முதல் மூன்று வரை குப்பைத்தொட்டி பள்ளி (முனிசிபல் ஸ்கூல்), நான்கு ஐந்து வகுப்புகள் R C பள்ளி, first form முதல் third form வரை ஆர்யன் செகண்டரி ஸ்கூல், மீண்டும் 9 ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை செயின்ட் ஜோசப் ஹை ஸ்கூல்.

  ஒவ்வொரு பள்ளியிலும் ஓரோர் அனுபவங்கள். வித்யாசமான நடைமுறைகள்என்று அனுபவித்தல். 

  முனிசிபல் ஸ்கூலில் அசெம்பிளி கிடையாது. ஆனால் டீச்சர் என்னை கைபிடித்து கூட்டி செல்வார். R C பள்ளியில் முதல் வகுப்பில் 5 நிமிடம் பிரார்த்தனை.ஆர்யன்  செகண்டரி ஸ்கூலில் வெள்ளிக்கிழமை மதியம் பஜனை மற்றும் முடிவில் சர்க்கரை பொங்கல் போன்ற பிரசாதங்கள் உண்டு. செயின்ட் ஜோசப் பள்ளியில் காலை அசெம்பிளி மற்றும் பொது பிராத்தனை, உபதேசம் உண்டு.

   ஆக அது ஒரு கனாக் காலம்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவுகளைத் தூண்டி விட்டேனா? கவிதை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே JC sir...

   நீக்கு
  2. நான் கடலூர் திருச்சி திருவனந்தபுரம் என்று பல ஊர்களில் பல வீடுகளில்(போர்சன், தனி வீடு, மாடி வீடு) என்று குடியிருந்திருந்தாலும் ஒரு முறை காலி செய்த பின் பின்னர் அவ்வீடு பக்கம் செல்லவில்லை என்பதால் கவிதை ஏனோ ஈர்க்கவில்லை. ஆனால் தற்போது இருக்கும் சொந்த வீட்டை பிரியும் போது துக்கம் உண்டாகுமோ என்னவோ. ஏன் எனில் 30 வருடமாக புழங்கிய பழகிய வீடு ஆயிற்றே.

   Jayakumar

   நீக்கு
  3. ஓ..  நன்றி JC சார்..   சாதாரணமாக  குறிப்பிடுவீர்களே என்று கேட்டேன்.

   நீக்கு
  4. எனக்கு நினைவு தெரிய ஆரம்பித்த புதுசில் நாங்க முதல் முதல் குடி இருந்த (தம்பி பிறந்த வருஷம். அந்த வருஷம் தான் அப்பா சேதுபதி பள்ளியில் சேர்ந்தார்.) மதுரை கழுதை அக்ரஹாரம் எனப்படும் மேலப்பாண்டியன் அகழித் தெரு வீட்டில் இருந்து அதன் பின்னர் இருந்த வடுகக் காவல் கூடத் தெரு வீடு, மேலாவணி மூலவீதி வீடு, வடக்குக் கிருஷ்ணன் கோயில் தெரு(இங்கே இருக்கையில் தான் எனக்குக் கல்யாணம் ஆனது.) அதன் பின்னர் அப்பா மாறிச் சென்ற தலை விரிச்சான் சந்து வீடு ஆகிய எல்லா வீடுகளும் அதன் அனுபவங்களும் நன்றாக நினைவில்! எழுபதுகளின் கடைசியில் அப்பா அந்த வீட்டைக் காலி செய்யாமலேயே சென்னை ஆழ்வார்ப்பேட்டை அண்ணா வீட்டிற்கும்/மதுரைக்குமாய்ப் பயணம் செய்து கொண்டிருந்தார். பின்னர் 81 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றதும் (அப்போல்லாம் 58 வயது) கொஞ்ச நாட்களில் மதுரை வீட்டிக் காலை செய்து விட்டு சென்னைக்கே வந்துவிட்டார். சோமசுந்தரம் காலனி வீடு அப்பா தலைவிரிச்சான் சந்தில் இருக்கையில் அவர் பள்ளி நாட்களின் கடைசியில் கட்டியது. ஆனால் ஐந்தாறு வருஷங்களுக்குள் எங்களுக்கு யாருக்கும் சொல்லாமலே அதை விற்று விட்டார். அன்றிலிருந்து மதுரை ஓர் கனவாகி விட்டது. :(((((

   நீக்கு
 35. பள்ளிக்கூட மணி தண்டவாளத் துண்டு அது வள்ளியூரில் ஒரு சின்ன அரசுப்பள்ளியில் படித்தப்ப ஒரு இரும்பு கம்பி இரும்பு தட்டு தொங்கும் அதில் அடிப்பாங்க அது தண்டவாளமா தெரியாது அப்ப அதெல்லாம் நோட் செய்ததே இல்லை...

  அப்புறம் நாகர்கோவில் பள்ளியில் படித்த போது அதெ பெரிய பெண்கள் பள்ளி எனவே சைக்கிள் பெல்லிற்கு தொண்டை கட்டினால் போல அடிக்கும்!! அப்படித்தான் நினைவு..

  என்றாலும் பள்ளியின் நினைவுகள் பல எழுந்தன.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாங்கள் அந்த தண்டவாளத்துண்டை நெருங்கி நின்று ஆராய்வோம். தலைமையாசிரியர் ஃபாதர் அமலநாதர் சிரித்துக் கொண்டே கனந்து செல்வார்.

   நீக்கு
 36. ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க ஸ்ரீராம்...பள்ளி பெல்..நினைவுகள்

  கீதா

  பதிலளிநீக்கு
 37. கவிதை சூப்பர் ஸ்ரீராம். எனக்கும் பொருந்திப் போகிறது!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். எல்லோருக்கும் பொருந்தும். நன்றி கீதா.

   நீக்கு
 38. தி ஜா, எஸ் ஏ பி பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். ஜவஹர் திரும்பவும் பவர் பெற்றுவிட்டார் இல்லையோ? அப்படி ஒரு கட்டுரை வாசித்த நினைவு.

  கீதா

  பதிலளிநீக்கு
 39. ஜோக் ரசித்தேன்! ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
 40. குடியிருந்த இடமும் அலுவலகம் சேர்ந்தாற் போல இருந்து வீடு மட்டும் மாற்றி தினம் தினம் அலுவலகம் போகும் பொழுது முன்பு குடியிருந்த வீட்டுப் பக்கம் பார்வை போகும் பழைய நினைவுகள் கிளறும் தான்.
  உங்கள் கவிதையை உணர முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. நன்றி ஸார்... தூரத்திலிருந்து பழைய வீடு என்னை 'அருகில் வரமாட்டாயா?' என்று கேட்பது போலிருக்கும்!

   நீக்கு
 41. திஜ மகள் தங்கள் கல்யாணத்தை அப்பாவால் ஏற்கமுடியலை என்று சொல்லியிருப்பது.....பொதுவாகவே பெரும்பான்மையோர் புரட்சிகரமாக எழுதுபவர்கள், பேசுபவர்கள் தங்கள் வாழ்க்கையில் அப்படி நடப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாகத்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது ஒரு சில விதிவிலக்குகள் தவிர.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுஜாதாவுக்கும் அந்த அனுபவம் உண்டு. இயற்கைதானே கீதா? கற்பனை வேறு; நிஜம் வேறு.

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம்....சுஜாதாவுக்கும் உண்டு...

   கீதா

   நீக்கு
  3. கதை எழுதுபவர்கள், பொது வாசகர்களுக்குப் பிடிக்கணும் என்ற நிர்பந்தத்திலும், தன்னைப் பிடிக்கணும் என்ற எண்ணத்திலும் எழுதுவாங்க. ஆனால் ஒவ்வொருவருக்கும் அவருக்கு என்று ஒரு குணம் உண்டு. எழுத்தாளர் சுஜாதாவை அவரது மனைவி, பழமையான குணத்துக்குச் சொந்தக்காரர் என்று சொன்னதைப் போல.

   பிராமண எதிர்ப்புன்னு பேசறவங்க, தங்கள் ஆடிட்டர், மருத்துவர் என்று எல்லாத்துக்கும் பிராமணர்களையே நம்புவாங்க. கோவில் கூடாதுன்னு சொல்றவங்க வீட்டுல மட்டும் கோவில், பூஜை எல்லாமே இருக்கும். தாலி என்பது அடக்குமுறைன்னு எழுதிட்டு, மனைவிக்கு தாலி கட்டுவாங்க. பொதுவெளில பேசுவது வேறு, தங்கள் நம்பிக்கை வேறு என்பது எல்லாருக்கும்தான்.

   நீக்கு
  4. பொதுவாக புரட்சி, புதுமை எல்லாம் மற்றவர்களுக்குதான்!

   நீக்கு
 42. பழைய வீட்டோடு பேசும் கவிதை சிறப்பு. வீட்டை விட்டு வந்ததும், ஏனோ அந்நியமாகி விடுகிறோம். தி.ஜானகிராமன் நினைவுகள் சுகம். அவர் மட்டுமில்லை, சுஜாதாவிற்கு கூட அவர் மகன் ஒரு கொரியன் பெண்ணை மணந்து கொண்டதை ஏற்றுக் கொள்வது கடினமாகத்தான் இருந்ததாம். 
  இந்த வாய் விட்டு சிரிச்சா ஜோக் விதம் விதமாக வந்து விட்டது. 
  இந்த பின்னூட்டத்தை காலையிலேயே டைப் செய்து விட்டேன், போஸ்ட் பண்ண மறந்து விட்டேன். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுஜாதாவின் இளைய மகன் கேசவ பிரசாத் மணந்துகொண்டது ஜப்பானிய பெண்ணை. வசிப்பது அமெரிக்காவில். மணமாகமலே இருந்த இரண்டாவது பையன் ரெங்க பிரசாத், சில வருடங்களுக்கு முன் ஒரு பஞ்சாபிப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறார் எனப் படித்தேன்..

   நீக்கு
  2. //மணமாகமலே இருந்த இரண்டாவது பையன் //மணமாகாமலே இருந்த மூத்த மகன் என்று வந்திருக்க வேண்டுமோ? 

   நீக்கு
  3. ஜப்பானியப் பெண் என்பது சரி.  பஞ்சாபிப் பெண் சுஜாதா மறைவுக்குப் பின்னா என்று நினைவில்லை!

   நீக்கு
  4. மணமாகாமலே இருந்த மூத்த பையன் என்பதே சரி!
   கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் அப்பாவைக் கவலைப்படவைத்த அவர், அப்பாவின் மறைவுக்குப் பிறகே பஞ்சாபிப் பெண்ணைக் கண்டுபிடித்தார்!

   நீக்கு
 43. தண்டவாள நினைவுகள் நன்று. எங்கள் பள்ளியிலும் ஒரு தண்டவாளத் துண்டு தான் இருந்தது. ஆனால் விரைவிலேயே மாற்றப்பட்டது என்று நினைவு.

  மற்ற பகுதிகளும் நன்று.

  பதிலளிநீக்கு
 44. தினமலரில் வந்தால், எல்லாம் சரியாகத்தான் இருக்கவேண்டுமா? கட்டுரையில் ’கி.ஜானகிராமன்’ என்றிருக்கிறதே.. உங்களுக்கும் இது சரியாகத்தான் படுகிறதா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினமலரில் வரும் 'சொல்கிறார்கள்' என்கிற இந்தப் பகுதி மற்ற பத்திரிகையில் வருவதை எடுத்துக் போடுகிறார்கள்.  ஆனால் அவர்களுக்கு க்ரெடிட் கொடுப்பதில்லை என்பதை சில சம்பவங்கள் மூலம் அறிந்தேன்.  இதையும் முன்பே சிலமுறை சொல்லி இருக்கிறேன்.  கி ஜானகிராமன் என்பது கம்பாஸிடர் தவறாக இருக்கும்!

   நீக்கு
  2. கம்பாஸிடரோ, கம்பவுண்டரோ! கவனிக்காதிருந்தால், கிரா போல, இவர் கிஜா ஆகிவிடுவார்!

   நீக்கு
 45. அனைவருக்கும் முகம் மலர அன்பான மாலை வணக்கங்கள் ! தொற்று நீங்கி, அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  தங்கள் பதிவு, என் பள்ளி நாட்களுக்கு என்னை இட்டு சென்றது. பள்ளி நாட்களும் , கள்ளம் கபடமற்ற பால்ய ஸ்நேகமும், நல்லாசிரியர் பெருமக்களும், கவலை என்னவென்று அறியாமல் வளர்த்தெடுத்த பெற்றோரும் என் நினைவில் வந்து செல்கின்றனர். இப்பொழுது நினைத்தால் நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என தோன்றுகிறது. திரும்ப கிடைக்காத பால்யம். பால்ய நட்பின் ஏக்கத்தில் ஒரு கவிதை எழுதி பதிவிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் பொழுது படித்து கருத்து சொல்லுங்கள்.

  அப்பொழுதெல்லாம், இன்று போல வசதிகள் அதிகம் இல்லை. மன உளைச்சலும் இல்லை. இன்று பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பு என்னை கவலையில் ஆழ்த்துகிறது. நம் பிள்ளைகள் எப்பொழுதும் போல பள்ளிக்கு சென்று விளையாடி, படித்து மகிழும் காலத்திற்காக காத்திருக்கிறேன்.அனைவரின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வானம்பாடி.   தொற்று இந்த உலகை விட்டு முற்றிலும் நீங்க பிரார்த்திப்போம்.  பதிவை ரசித்ததற்கு நன்றி.   உங்கள் பக்கம் வந்தேன்.  கவிதையைக் காணோமே...

   நீக்கு
  2. கவிதை சென்ற வருடம் எழுதியது. sep 2020 சென்று பார்க்கவும்

   நீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
 46. வீடு கவிதை அருமை. நாம் குடியிருந்த வீடு எப்பொழுதும் தனித்துவம் தான். நான் பிறந்ததிலிருந்து வாழ்ந்த வீடு எனக்கு மிகப் பிடிக்கும். அந்த வீடு தந்த மகிழ்ச்சியான நினைவுகளும், பின் வீடு மாற்றி சென்ற பின் அது கொடுத்த நெகிழ்வும் என் நினைவுகளில் உண்டு. நாங்கள் வீடு மாற்றி சென்ற சில காலங்கள் வரை, தினமும் பள்ளி சென்று வரும் பொழுது அந்த வீட்டை கடக்கையில், என் கால்கள் தானாக அங்கு செல்லும். பின் பூட்டிய வீட்டினைக் கண்டு சுயநினைவு வரும். இன்று பள்ளியையும், பழைய வீட்டினையும் நினைக்க வைத்ததற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  அதுவும் என்னைப்போல அந்த வீட்டில் 28 வருடங்கள் குடி இருந்திருந்தால் அந்த உணர்வும் தனி!    நன்றி வானம்பாடி.

   நீக்கு
 47. தண்டவாளத் துண்டு
  பாசம் என்ற
  பாடம் சொன்ன
  பவளமல்லிச் செண்டு...

  தண்டவாளத் துண்டு
  அன்பு தந்து
  பண்பு தந்த
  தங்க நிலாத் துண்டு..

  தண்டவாளத் துண்டு
  சாதிபேதம் ஏதுமின்றி
  உப்பு மாங்கா கொண்டு தந்த
  பொன் நிறத்து வண்டு..

  தண்டவாளத் துண்டு
  பொங்கி வரும் காவிரியாய்
  பூத்திருக்கும் தாமரையாய்
  அறிவு தந்த குன்று!..

  பதிலளிநீக்கு
 48. கிராமத்துப்பள்ளியிலும், புதுக்கோட்டை அரசுப்பள்ளியிலும் தண்டவாளம்தான் கிடுகிடுத்தது எங்களுக்கு. அரசுப்பள்ளியின் ஹெட்மாஸ்டர் சங்கர நாராயணன் ஒரு டெர்ரர்.. கையில் பிரம்பாயுதம்.. அடி பின்னிடுவார் பின்னி ! கடைசி பெஞ்சு கசடுகளுக்குத் தேவைப்பட்டது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி..   நடு பெஞ்சிலிருந்து நானும் வாங்கி இருக்கிறேன்!

   நீக்கு
 49. நெகடிவை பதினஞ்சு நொடி உத்துப்பாத்த பின் பக்கத்துல பாத்தா படத்தின் பாஸிடிவ் பிம்பம் சில நொடி வந்து போகுது.. அதான் ஜீஸஸா?

  பதிலளிநீக்கு

 50. மூன்றடி உயர மர ஸ்டாண்டில் தோசைக் கல் அளவில் இரும்புக் கல் தொங்கும். அதன் மேலேயே இருக்கும் ஒரு இரும்புக் கம்பி. மணி வைத்திருக்கும் வராந்தாவை ஒட்டி இரண்டு வகுப்பறைகள் உண்டு. அதிலிருக்கும் ஸீனியர் மாணவிகளில் ஒருவருக்கே அந்த பொறுப்பு கொடுக்கப்படும். பள்ளி விடுதியில் வசிக்கும் மாணவியையே தேர்வு செய்வார்கள். நாங்களும் சீனியராகிய போது 11,12_ஆம் வகுப்புகள் அந்த இரு வகுப்பறைகளிலேயே அமைந்தது. சரஸ்வதி எனும் மாணவி இரண்டு வருடங்கள் அந்தப் பொறுப்பில் இருந்தார். மணி அடிக்க ஆசைப்படும் எங்களில் சிலர் அவரிடம் அவ்வப்போது சான்ஸ் கேட்டு பெற்றுக் கொள்வோம்:). அதில் நானும் உண்டு. /முதல்மணி என்பது டண்டண்டண் டண்டண்டண் டண்டண்டண் என்று தொடர்ந்து அடிக்கப்பட்டு ஒரு நொடி இடைவெளி விட்டு ஒரு அடி அடித்து../ முதல் மணி போல் கடைசி மணியும் அப்படியே. டண்டண்டண் முடித்து ஒரு நொடி விட்டு விட்டு டண்............ டண்........... டண்............ என அடித்து முடிக்கையில் ஆனந்தமாய் இருக்கும் :)). கேட்கையிலேயே கிலி பிடிக்க வைக்கிற.., தேர்வு சமயங்களில் ஐந்து நிமிடமே உள்ளது என்பதை அறிவிக்க.. ஒலிக்கும் “ஒற்றை மணி” வழக்கம் எங்கள் பள்ளியிலும் உண்டு.

  பெஞ்ச் கேஜி வகுப்பிலிருந்தே உண்டு. மூடித் திறக்கும் பெஞ்ச் வசதி எட்டாம் வகுப்புக்கு மேல் கடைசி வரிசைகளில் மட்டும் இருக்கும்.

  பள்ளி முடிந்து கேம்ஸ் விளையாட அனுமதி, பொருட்களை உபயோகித்து விட்டுத் திரும்ப வைக்கும் வசதி இவையும் இருந்தன.

  வீடு கவிதை அருமை.

  தொகுப்பு நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!