வெள்ளி, 21 மே, 2021

வெள்ளி வீடியோ : ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் எனை கத்தி இல்லாமல் கொய்யும்...

 பானு அக்காவின் நேயர் விருப்பத்தில் கல்யாண அகதிகள் படத்திலிருந்து ஒரு பாடல்.. 

1985 ல் வெளிவந்த இந்தத் திரைப்படத்தைத் தயாரித்து இயக்கி இருப்பவர் கேபி.  நாசருக்கு இதுதான் முதல் படமாம்.  சரிதா முக்கிய பாத்திரத்தில்.

வி எஸ் நரசிம்மன் இசையில் அருணா குழுவினர் பாடியுள்ள "வரவேண்டும் பெண்ணே வரவேண்டும் ..  உன் வலது காலை எடுத்து" எனும் வைரமுத்து எழுதிய பாடல்...


ஆச்சா... இப்போது என் விருப்பத்துக்கு வருகிறேன்..

பழைய பாடல்கள்தான் என்றில்லை... சில புதிய பாடல்களும் மனதில் நின்றுவிடும். எப்போது கேட்டாலும் அலுக்காது. இத்தனைக்கும் புகழ்பெற்ற பாடகர்கள் யாரும் இல்லை!

புதிய பாடல் என்று நான் சொன்னாலும் இது 2004 ல் வெளிவந்த படம். இருங்க.. அடிக்க வராதீங்க... அதுவே எனக்கு புதிய படம்தான்! அழகிய தீயே... பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் அவரும் கௌரவப் பாத்திரத்தில் நடிக்க, அவரது ஆஸ்தான இயக்குனர் ராதா மோகன் இயக்கி இருக்கும் படம். வசனங்கள் விஜி. இந்த விஜி பின்னாளில் படமும் இயக்கி இருக்கிறார்.

இசை ரமேஷ் விநாயகம். இந்தப் பாடலைப் பாடி இருப்பவரும் அவரே. பாடலை எழுதியவர்? யாரென்றே தெரியாது! இதற்காக படத்தையே தேர்ந்தெடுத்து ஓட்டிப்பார்த்தாலும் பாடல்கள் எழுதியவர் யாரென்றே போடவில்லை. என்ன காரணமோ!

ராதா மோகன் படங்கள் என்றால் எப்போதுமே நம்பிப் பார்க்கலாம். இதுவும் மிகவும் சுவாரஸ்யமான படம். அழகான பிரசன்னா, அழகான நவ்யா நாயர்... அவர்களுக்குள் அரும்பும் காதல்... காதலில் எப்போதுமே ஈகோ கூடாது. அதையெல்லாம் தாண்டி காதல் வெளிப்படும் நேரம் சுவாரஸ்யம்.

பிரசன்னாவின் நடனம் இதமாக இருக்கும். ஒரு நாய்க்குட்டி வேறு வரும். படத்தில் பிரசன்னாவின் சைக்கிளுக்கு பாக்கியலட்சுமி என்று பெயர் என்று நினைக்கிறேன். ஒரு அவசரத் தேவைக்கு உயிரான அந்த சைக்கிளை பிரசன்னா விற்று விடுவார். அவ்வப்போது அது கண்ணில் படும்போதெல்லாம் ஏக்கப் பெருமூச்சு விடுவார்!

பிரசன்னா தான் காதல் கொண்ட நேரத்தைதான் பாடலாகப் பாடுகிறார். அழகிய காட்சி. அழகிய பிரசன்னா, நவ்யா நாயர், அழகிய பாடல், அழகிய குரல்... அழகிய தீயே!


விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே
பூ போன்ற கன்னி தேன்
அவள் பேர் சொல்லி தித்தித்தேன்
அது ஏன் என்று யோசித்தேன்
அட நான் எங்கு சுவாசித்தேன்
காதோடு மெளனங்கள்
இசை வார்க்கின்ற நேரங்கள்
பசி நீர் தூக்கம் இல்லாமல்
உயிர் வாழ்கின்ற மாயங்கள்
அலைகடலாய் இருந்த மனம்
துளி துளியாய் சிதறியதே
ஐம்புலனும், என் மனமும்
எனக்கெதிராய் செயல்படுதே
விழி காண முடியாத மாற்றம்
அதை மூடி மறைக்கின்ற தோற்றம்
ஒரு மெளன புயல் வீசுதே
அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யே

கேட்காத ஓசைகள்
இதழ் தாண்டாத வார்த்தைகள
இமை ஆடாத பார்வைகள்
இவை நான் கொண்ட மாற்றங்கள்
சொல் என்னும் ஓர் நெஞ்சம்
இனி நில் என ஓர் நெஞ்சம்
எதிர்பார்க்காமல் என் வாழ்வில்
ஒரு போர்க்காலம் ஆரம்பம்
இருதயமே துடிக்கிறதா
துடிப்பது போல் நடிக்கிறதா
உரைத்திடவா மறைத்திடவா
ரகசியமாய் தவித்திடவா
ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல் கொய்யும்
இதில் மீள வழி உள்ளதே
இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யே....

விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ யே

ஒலியின்றி உதடுகள் பேசும்
பெறும் புயலென வெளிவரும் சுவாசம்
ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்
இது அதிசய அனுபவம் ஓ யே

பெண்ணை சந்தித்தேன்
அவள் நட்பை யாசித்தேன்
அவள் பண்பை நேசித்தேன்
வேறென்ன நான் சொல்ல ஓ யே


70 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இரண்டாவது பாடலைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன். முதல் பாடல் கேட்ட நினைவே இல்லை.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 3. இரண்டு பாடல்களும் கேட்டேன். இரண்டு பாடல்களும் மிக நன்றாக இருக்கிறது.

  இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்டு இருக்கிறேன். என் மகன் பாடுவான். அவனுக்கு பிடித்த பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அக்கா.   எங்கள் வீட்டிலும் உறவுகளிலும் அனைவருக்குமே மிகவும் பிடித்த பாடல் அது.

   நீக்கு
 4. அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  தொற்றில்லா உலகம் இறைவன் அருளால் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைந்து பிரார்த்திப்போம். வாங்க வல்லிம்மா.. வணக்கம்.

   நீக்கு
 5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தும்மினாலோ இருமினாலோ தொற்று சுமார் 30 அடி வரை பரவுமாம். ஆகவே அனைவரும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கப் பிரார்த்திக்கிறோம். தொற்று முற்றிலும் குறைந்து நம் இஷ்டத்துக்குத் தும்மிக் கொண்டோ, இருமிக் கொண்டோ இருக்கவேண்டும் எனவும் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த நாள் விரைவில் வரட்டும். பிரார்த்திப்போம். வாங்க கீதா அக்கா.. வணக்கம்.

   நீக்கு
 6. கல்யாண அகதிகள் படம் மிக மிக ரசித்துப் பார்த்த படம்.
  அனைவரும் நன்றாக நடித்திருப்பார்கள்.

  வரவேண்டும் பாடல் இசை இனிமை. பொருளும் இனிமை.

  பதிலளிநீக்கு
 7. "கல்யாண அகதிகள்" படத்தில் பெண்கள் விடுதிக்குத் திரும்பி வரும் சரிதா பேசும் வசனம் தானே சில ஆண்டுகள் முன்னர் எங்கெங்கும் பரவியது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பானுமதியின் கருத்துரையிலிருந்து அந்தப் படம் தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.

   நீக்கு
 8. ''விவாகத்தையே விவாகரத்து செய்தவர்கள்
  நாங்கள்''
  நடப்பதெல்லாம் நல்லதாக இருக்கும்.
  பாசிட்டிவ் செய்திகள் நிறைந்த பாடல்.
  அனைத்து நடிகைகளும் இளவயதுப்
  பெண்களாக அழகாக இருக்கிறார்கள்.
  இசையால் ஒன்று கூடி வெல்லும்
  மகளிர் அணி. தேர்ந்தெடுத்த பானுவுக்கும்,
  பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. யூ டியூபில் சென்று தான் பார்க்க முடிந்தது இந்தப் பாடல்.
  அடுத்தது விழிகளின் அருகினில் வானம்.
  அவ்வளவு இனிமையான பாடலை இயற்றியவர் யாரோ!

  இசையும் ரமேஷ் வினாயகம் குரலும்
  மிக இனிமை.
  படப்பிடிப்பும் நளினமான நடிப்பும் இந்தப் படத்துக்கு உயிர் நாடி. ராதா மோகனின்
  மற்ற படங்களும் நன்றாக இருக்கும்.

  ''மொழியின்றி உதடுகள் பேசும்
  பெரும் புயலென வெளி வரும் ஸ்வாசம்''
  ஒவ்வொரு வரியையும் அனுபவிக்கலாம்.
  எழுதிய புலவருக்கு பாராட்டுகள்.
  மிக மிக நன்றி மா ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதிலும் நடிப்பவர்களின் இளமை பாடலுக்கு உயிரூட்டுகிறது அம்மா..

   நீக்கு
 10. எழுதியவரும் ரமேஷ் வினாயகமே. இப்போது தான்
  கண்டுபிடித்தேன்.

  பதிலளிநீக்கு
 11. இரு பாடல்களுமே கேட்டிருக்கிறேன் ஸ்ரீராம்...இரண்டாவது படமும் பார்த்திருக்கிறேன் ரொம்ப டீசண்டான படம். ராதாமோஹன் என்பதால் பார்த்தேன். நானும் மகனும் எல்லாம் வீட்டில் தான். ஆனால் ரொம்ப லேட்டாகப் பார்த்தோம் 6, 7 வருடங்கள் கழித்து!!!!!

  நல்ல படம். பாடல் ரமேஷ் விநாயகமே எழுதியிருக்கிறாரோ? அப்படித்தான் தோன்றுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
 12. ஸ்ரீராம் முதல் வீடியோ வரலையே. யுட்யூபில் கேட்டேன்....

  நான் ரொம்ப நாள் கழித்து வலைக்கு வரேன் என்று பானுக்கா எனக்காகப் பாடினாங்க அன்று!!!! ஹா ஹா ஹா

  அந்தப்பாடலும் பிடிக்கும்.

  இரு பாடல்களுமே ரசித்தேன் ஸ்ரீராம்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வீடியோ வரவில்லையா? வேறு லிங்க் தரமுடிகிறதா பார்க்கிறேன் கீதா.

   நீக்கு
  2. நானும் சொல்லி இருந்தேன். வீடியோ Video Unavailable என்று வருவதைச் சொல்லிக் காப்பி, பேஸ்டும் பண்ணி இருந்தேன். அதையும் இன்னொரு கருத்துரையையும் காணவே காணோம்! இதெல்லாம் கூடவா காணாமல் போகும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
 13. ரமேஷ் வினாயகம் நல்ல திறமையானவர். அவர் முதன் முதல் வெளியிட்ட பிரதித்வனி பக்தி ஆல்பமில் எல்லாப் பாடல்களுமே பாடியவர் நம்ம பாடும் நிலாவாக்கும்!!!! என் தம்பி எஸ்பிபி விசிறி அவரைப் போலவே பாட முயற்சிப்பவன் அவன் தான் எனக்கு அறிமுகம் செய்தான். அதாவது பாடலாக!

  ரமேஷும் எஸ் பி பியைத்தான் முதலில் சந்தித்திருக்கிறார் என்றும் சொல்லிக் கேட்டேன்.

  நல்ல திறமையானவர்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரதித்வனி கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது. பார்க்க வேண்டும்.

   நீக்கு
 14. நான் விரும்பி கேட்ட பாடலை பகிர்ந்ததற்கு நன்றி. நீ....ண்....ட.... வருடங்களுக்குப் பிறகு கேட்கிறேன். இந்தப் பாடலில் கிடார் பிரதான இடம் பிடித்திருக்கிறது இல்லையா? இனிமை. இரண்டாவது பாடலும் மிகவும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 15. ஒரு மேடை நிகழ்ச்சியில் தன்னுடைய உதவியாளராக இருந்த நரசிம்மனை அறிமுகப் படுத்திய இளையராஜா,"மிகவும் திறமையான இவரை இயக்குனர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்" என்று அறிவிக்க கே.பி. அவருக்கு வாய்ப்பளித்தார். ஆனால் பெரிதாக வளர்ந்ததாக தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 16. ரமேஷ் விநாயகம் இன்னும் பல நல்ல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். "அவருக்கு இருக்கும் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை" என்று ஸ்ரீனிவாஸ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூறினார்.

  பதிலளிநீக்கு
 17. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 18. கல்யாண அகதிகள் படம் நன்றாக இருந்தாலும் ஓடவில்லை அந்த தோல்வியில் மனம் உடைந்த பாலச்சந்தர் சுஜாதாவிடம், "ஐ தாட் ஐ மேட் எ குட் பிலிம் நீங்கள் பார்த்து விட்டு சொல்லுங்கள்" என்றாராம் சுஜாதா அந்த படத்தை பார்த்து விட்டு, "நிறைய சினிமா பார்ப்பவர்கள் ஆண்கள் தான் என்று ஒரு ஸ்டாடிஸ்டிக்ஸ் சொல்லுகிறது அவர்களின் காலரை பிடித்து உண்மையை சொல்லியிருக்க வேண்டாம்' என்று எழுதியிருந்தார். ஒரு ஹிந்து பெண் கிருத்துவ பையனை காதலிப்பதாக வரும். திருமணம் என்று வரும் பொழுது அவள் மதம் மாற வேண்டும் என்று வற்புறுத்தப்பட அவள் காதலை துறப்பதாக படம் முடியும். படம் நன்றாக தான் இருக்கும் சிலருக்கு பிடிக்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.. படித்த மாதிரியும் இருக்கிறது. ஆனால் கேபி மனம் உடையும் டைப் எல்லாம் இல்லையே... !

   நீக்கு
  2. எனக்குத் தெரிஞ்சு இந்தப் படம் ஒண்ணு தான் சமூகத்துக்கு கேபி செய்த சேவையாக இருக்க முடியும். :)))))) வக்கிரமான கருத்துகள் கொண்ட அவர் படங்கள் ஓடியபோது அதனாலேயே இது அதிகம் ஓடி இருக்காது. சொல்லி இருப்பது வேறே யாரேனுமாக இருந்தால் கவனிக்கப்பட்டிருக்குமோ?

   நீக்கு
 19. ராதா மோகன் படங்கள் எல்லாமே மிகவும் தரமாக நல்ல நகைச்சுவை இழையோட இருக்கும் குடும்பத்தோடு பார்க்க முடியும். சினிமா உலகத்தை நிலைக்களனாக கொண்டு எடுக்கப்பட்ட அவருடைய இந்த படத்தில் பிரசன்னாா, வெள்ளித்திரையில் பிரித்திவிராஜ், உப்புக்கருவாடு படத்தில் கருணாகரன் மூன்று பேருக்குமே திரைப்படத்தில் சந்திரன் என்று தான் பெயர் மூன்று பேருமே இயக்குனராக முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 20. YouTube சென்று முதல் பாடல் கேட்டேன்... "மணமகளே மருமகளே வா வா" பாடல் ஞாபகம் வந்தவுடன் பாதியில் ஓடி வந்து விட்டேன்...

  கத்தி இல்லாமல் கொய்யும் என்பதால், இரண்டாவது பாடல் எப்போதும் உற்சாகம் தரும்...! வேறென்ன நான் சொல்ல... ஓ... யே...

  பதிலளிநீக்கு
 21. //விவாஹத்தை விவாஹரத்து செய்த அழகிய கூட்டமிது//

  பச்சைச்தமிழன் எழுதிய அற்புத வரிகள். வைரமுத்து நாடு கடத்தப்பட வேண்டியவன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டகரடப்பா இன்னும் பழையபடிக்கு வாயைத் திறந்து வைக்காமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கின்றது...

   நீக்கு
  2. இன்னும் அஞ்சு வருஷமிருக்கே. வாயைத் திறக்கும். தாயையும் பழிக்கும்..

   நீக்கு
 22. முதல் பாடல் கேட்டதுண்டு.. இரண்டாவது பாடல் இப்போதுதான் கேட்கிறேன். நன்றாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 23. ராதா மோஹனின் இந்தப் படத்தில் நவ்யா செமையா நடிச்சிருப்பாங்க. நல்ல திறமையான நடிகையும் கூட. செலக்ட்டிவாகத்தான் படம் பண்ணியிருக்காங்க.

  பிரசன்னாவும் நல்லா பண்ணியிருப்பார். நல்ல நடிகர் தான் ஆனால் வாய்ப்பு சரியாக அமையவில்லை.

  ராதாமோஹனின் படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னொரு காணாமல் போன கருத்து பிரசன்னாவைப் பற்றி. இந்தப் படத்தில் அவர் குண்டாக இருப்பதாகவும் எழுதி இருந்தேன்! எங்கே அது???????????????????????

   நீக்கு
 24. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொற்று குறைந்து வரும் நாட்களில் நல்ல செய்திகள் கேட்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  கல்யாண அகதிகள் படம் மிகவும் பிடிக்கும். இந்த பாடலும் பிடிக்கும். சரிதாவின் கதாபாத்திரம் அருமையாக சித்தரிக்கப் பட்டிருக்கும். நம் மனதில் எழும் கேள்விகள் அவர் வாயிலாக கேட்பது உணர்பூர்வமாய் இருந்தது. 22 வருடங்கள் முன்பு கல்லூரி படிக்கும் பொழுது தூர்தர்ஷனில் பார்த்த படம்.

  பதிலளிநீக்கு
 25. இரண்டாவது பாடலும் அருமை. பாடல்கள் பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 26. இந்தப் படத்தைப் பார்த்ததில்லை... பாடல்களை மட்டும் எப்போதோ கேட்டிருக்கின்றேன்...

  பதிலளிநீக்கு
 27. முதல் பாடலின் இணைப்பு கிடைக்க வில்லை... இரண்டாவது பாடலைக் கேட்டிருக்கின்றேன்.. இது ஒருவித இனிமை தான் என்றாலும் இதுவும் கடந்து போய் விடுகின்றது...

  பதிலளிநீக்கு
 28. இரண்டு பாடல்களும் நல்ல பாடல்கள். அலைபேசி வழி கேட்டு ரசித்தேன். இப்போது மீண்டும் வந்து கணினி வழி கருத்தினை பதிவு செய்கிறேன்.

  பதிலளிநீக்கு
 29. வைரத்தை நாடு கடத்தவேண்டும் என ஒருவர் இப்படிச் சொல்லிவிட்டாரே.. என்னதான் அந்த வரிகள் என முதல் பாடலைத் தேடினேன். ஆனால் எதிர்வந்தது 1967-ன் வாலி:

  குயிலாக நான் இருந்தென்ன
  குரலாக நீ வர வேண்டும்
  பாட்டாக நான் இருந்தென்ன
  பொருளாக நீ வர வேண்டும்
  வர வேண்டும் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வர வேண்டும்.. வர வேண்டும் - என்று வஞ்சியை வரவேற்று அழைத்தது அந்தக் காலம்...

   நஞ்சினை அழைப்பது இந்தக் காலம்..

   நீக்கு
 30. முதல் பாட்டில் தமாஇருக்குறது நாலே முக்கால் சொச்சம் வரிகள்..

  அதுக்குள்ளே எத்தனை அற்புதமான அர்த்தங்கள்?.. வலது காலை எடுத்து வைத்து வந்த பாட்டு அப்படியே வழுக்கி விழுந்து விடுகிறது... விவாஹமே ரத்தான பிறகு கணவன் என்ற பதம்/ இதம் மட்டும் எதற்காகவாம்?..

  இருட்டுக்குள் சன்னலைத் திறந்து வைக்கிறது ஒரு மட மயில் (!)..

  எதற்கு.. விடியலுக்காகவா?..

  இருக்கும்.. இருக்கும்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ..விவாஹமே ரத்தான பிறகு கணவன் என்ற பதம்/ இதம் மட்டும் எதற்காகவாம்?..//

   புத்தியும் ரத்தாகியிருக்கும் !

   நீக்கு
 31. முதல் பாடல் வீடியோ இப்போது இங்கேயே பார்க்க முடிகிறதா என்று யாராவது சொல்லவும்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யூ ட்யூப் போகச் சோம்பலா இருந்தது. இப்போது இங்கேயே வந்தே விட்டது!

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!