திங்கள், 17 மே, 2021

'திங்க'க்கிழமை :  தே மி.பொடியும் எரிவுள்ளி சாம்பாரும் - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி 

  ஹாய்.. என் உடன் பிறவா சகோதர, சகோதரிகளுக்கு அன்பான வணக்கங்கள். நீண்ட நாட்(மாதங்)(வருடங்)களுக்கு மேலாக இந்த திங்களன்று பதிவில் வராமலிருந்த  நான் இன்று வந்திருக்கிறேன். இது அனேகமாக அனைவருமே அறிந்த உணவுதான். இருப்பினும்  எனக்கு தெரிந்த வகையில் சொல்லியுள்ளேன். ஏற்கனவே இதை செய்து,போர் அடிக்கும் வரை சுவைத்தவர்களுக்கும், இல்லை, இது புதிதாக சற்று மாறுபாடாக உள்ளது என்பவர்களுக்கும் என் பணிவான நன்றிகள். 🙏. 


தேங்காய் மிளகாய் பொடியும், சிகப்பு வர மிளகாய் மோர் குழம்பு. (அல்லது) எரிவுள்ளி சாம்பார். 

தேங்காய் மிளகாய் பொடிக்கு வறுக்க தேவையான சாமான்கள்...  தேங்காய்..  -1. உடைத்து துருவி வைத்துக் கொள்ளவும்
சிகப்பு மிளகாய் - 15.அல்லது 20. ஆனால், காரத்தின் தன்மை பொறுத்து அளவை நீங்கள் கூட்டி, குறைத்து எடுத்துக் கொள்ளவும். 

உ. பருப்பு - 3. டேபிள் ஸ்பூன். 
க. பருப்பு - 3. டேபிள் ஸ்பூன். 
கடுகு-1. டேபிள் ஸ்பூன்.
புளி- ஒரு பெரிய கோலி அளவு. 
தாளிக்க - நல்லெண்ணெய் கொஞ்சம் நான்கைந்து ஸ்பூன்கள். 
பெருங்காயம்- கட்டி என்றால் சிறிதளவு. பொடி என்றால் சிறு ஸ்பூனில் பாதியளவு.

மேற்கூறிய சாமான்களை கடாயில் எண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு, (கடைசியில் பெருங்காயத்தை வறுக்கவும்.) ஆற வைத்தப் பின் அதே கடாயில் தேங்காயையும் சற்றே ஒன்று போல் சிவக்க வறுத்துக் கொண்டு இதையெல்லாம் நன்கு ஆறியதும், முதலில் மிக்ஸியில் வறுத்ததை புளியுடன் தேவையான உப்புச் சேர்த்து,, பொடி செய்து கொண்டு பின் வறுத்த தேங்காயையும் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்துக் கொள்ளவும். வறுக்க தேவையான சாமான்கள் வட்ட வியூகத்தில் காத்திருக்கின்றன


எல்லாவற்றையும் சேர்த்து வறுத்து முடித்ததும், குழம்பிய மனநிலையில் அடுத்ததை எதிர்நோக்கி காத்திருப்பவை. 


வறுத்த சாமான்களை பொடிப்பதற்கு  ஆற வைத்ததும், அடுத்து தைரியமாக களமிறங்கிய துருவிய தேங்காய்ப்பூ. 


நமக்காக அனலில் வறுபட்டு கொண்டிருக்கும்  தியாக உள்ளம் கொண்ட தேங்காய்ப்பூ. 


இறுதியில், அனலில் வறுபட்டு, மிக்ஸியில் உடைபட்டு முழு வடிவம் பெற்றதுடன்,  "தேங்காய் மிளகாய் பொடி" என்ற நாமகரணமும் சூட்டிக் கொண்டவை. இனி சிகப்பு மோர் குழம்பு. (அல்லது) எரிவுள்ளி சாம்பார். 

இதற்கு கொஞ்சம் புளித்த கெட்டி மோரை நான்கு டம்ளர் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மஞ்சள் தூள் சேர்த்து தேவையான உப்பும் போட்டு  1 சிறிய ஸ்பூன் அளவு கடுகை தாளித்து வைக்கவும். 

இதற்கு வறுக்க தேவையான சாமான்கள்.. 

சிகப்பு வர மிளகாய் - 10. 11 இதுவும் காரத்தின் தன்மை பொறுத்து எடுத்துக் கொள்ளவும். 
வெந்தயம் - 1 கொஞ்சம் பெரிதான டேபிள் ஸ்பூன்.
கடுகு - சிறிதளவு. 
தனியா, அல்லது கொத்தமல்லி விரை-2. டேபிள் ஸ்பூன்.
உ.பருப்பு-1 டேபிள் ஸ்பூன்.
க.பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்.
துருவிய தேங்காய்ப்பூ -1 தேக்கரண்டி.
கறிவேப்பிலை ஒரு  நான்கு ஈர்க்கு. தாளிக்க தேங்காய் எண்ணெய். அல்லது நல்லெண்ணெய். 

முதலில், மிளகாய், பருப்புக்கள்
கடுகு, தனியா, வெந்தயம், அனைத்தையும் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். 

வறுத்ததை ஒரு தட்டில் கொட்டி ஆறுவதற்கு வைத்தப் பின்னர்
 அதே கடாயில், தேங்காய்ப்பூவை போட்டு லேசாக வறுக்கவும். 


அத்துடன் கறிவேப்பிலையையும் அலம்பி சேர்த்து புரட்டினாற் போல வறுத்துக் கொண்டு ஆறிய பிறகு அனைத்தையும் சேர்த்து, மிக்சியில் நன்றாக அரைத்து, அரைத்த விழுதை தயாரித்து வைத்த மோரில் கலந்து, அடுப்பை சிம்மில் வைத்து, அதில் இதை ஏற்றி, லேசாக கொதிக்க விடவும். கொதித்து நன்கு வெந்தய வாசனை வரும் போது 1  ஸ்பூன் அரிசி மாவை நீரில் கலந்து மோர் குழம்புடன்  விட்டு சிறிது பொங்கி வரும் போது, பெருங்காய தூள் சேர்த்து 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு கீழே இறக்கி விடவும். 


வறுத்தது அனைத்தையும் சேர்த்து அரைத்த விழுது. 


தயாரித்து வைத்த மோரில் கலந்த கலவை... நான் கறிவேப்பிலை அன்று வீட்டில் சற்று புதிதாக இல்லாததால் அப்படியே கிள்ளிப்போட்டு சேர்த்துள்ளேன். எப்போதும் கூட்டு, சாம்பார், இந்த மாதிரி மோர் குழம்புக்கு என  அரைக்கும் போது, அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து விட்டு விடுவேன். வாசனையாகவும் இருக்கும். அது வீணாகாமல் உடம்புக்கும் நல்லது. சற்று கொதிக்கும் போது கலந்து விட சிறிது அரிசிமாவு. இது விடுவதால் கொதித்த குழம்பு ஆறியதும் நீர்த்துப் போகாமல், சற்று சேர்ந்தாற் போல இருக்கும். விருப்பமில்லாதவர்கள் விட வேண்டாம். (கவனிக்க....) 


இறுதியில் முழு வடிவமடைந்த எரிவுள்ளி சாம்பார். இத்துடன் சிகப்பு பூசணி(பறங்கிக்காய்,) வெண்பூசணி, (தடியங்காய்) முருங்கைக்காய், வெண்டைக்காய் கத்திரிக்காய், சேனை, குடமிளகாய் என எதை வேண்டுமானாலும் கொஞ்சம் நீள சைசில் பெரிதாக நறுக்கி அதற்குத் தகுந்த உப்பு, மஞ்சள்தூள் கலந்து முதலிலேயே வேக வைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம். மோரிலும் ஊறிய பின் இந்த காய்கள்  சுவைபட இருக்கும்.
 

இந்த இரண்டு ரெசிபிக்கும் என்ன சம்பந்தம் என நீங்கள் நினைக்கலாம். சூடான சாதத்தில்  நல்லெண்ணெய்  விட்டு வேண்டிய அளவு தேங்காய் மிளகாய் பொடி போட்டு கலந்து கொண்டு, தொட்டுக் கொள்ள இந்த எரிவுள்ளி சாம்பாரையும்  கூடவே விட்டுக்கொண்டால், ஒரு கை கவளம் எப்போதையும் விட திருப்தியுடன் சாப்பிட முடியும். இதனுடன் சேர்ந்து இருக்கும் காய்கள் போதவில்லை. . அப்படியும் தொட்டுக் கொள்ள ஏதாவது வேண்டுமென்பவர்கள் சுட்ட அப்பளத்தையும் சுட்டு வைத்துக் கொண்டு, இதனுடன் சேர்த்து சாப்பிட்டால், எப்போதையும் விட கண்டிப்பாக இரண்டு கை கவளத்திற்கும் மேலாக உண்ணலாம். தினமும்  சாம்பார், ரசம், காய்கறிகள் என சாப்பிடும் போது நடுவில் இது ஒரு  வித்தியாசமான உணவாக இருக்கும். இந்த வெயிலுக்கு இது  கொஞ்சமும் பொருத்தமில்லை என்பவர்கள் மழை/குளிர் காலத்தில் செய்து பார்க்கலாம். 


 
சுவைக்காக சுட்ட அப்பளங்கள். பொரித்ததுதான்  பிடிக்கும் என்றால் பொரித்து வைத்துக் கொண்டும் சாப்பிடலாம்.
 

இந்த தேங்காய் மிளகாய் பொடியும் செய்வதை பொறுத்து ஒரு மாதத்திற்கும் வைத்துக் கொள்ளலாம். இந்த வெயிலுக்கு வெறும். தயிர் / மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள உகந்தது. இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். நீங்களும் முயற்சித்து பாருங்களேன். இது வரை அனைவரும் என் விளக்கமான சமையல் குறிப்புகளை கேட்டதற்கு நன்றி.. 🙏. 

73 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் நோய் பயமில்லாமல் வாழும்
  காலம் விரைவில் வர வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய  காலை வணக்கம் வல்லிம்மா..   வாங்க...  இணைந்து  அனைவரும் சேர்ந்தே பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. தேங்காய் மிளகாய்ப் பொடி நன்றாகச் சிவப்பாகச் சிறப்பாக வந்திருக்கிறது.

  வெகு அருமையாகப் படங்களுடன் கொடுத்திருப்பதே ஒரு இலக்கணம்.
  இப்படித்தான் இருக்க வேண்டும்.
  உப்பு எங்கே என்று பார்த்தேன்.
  நான் தான் உப்பு சேர்க்க மறப்பேன்.
  அன்பின் கமலா அருமையான மிளகாய்ப் பொடி.
  சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
  நன்றியும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும், அன்பான நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி

   பதிவையும் படங்களையும் சிறப்பாக உள்ளதெனக் கூறி பாராட்டுதல் தந்தமைக்கு மிக்க நன்றி. ஆமாம்.. சாதத்தில் இதை கலந்து சாப்பிடும் போது நன்றாக இருக்கும்.அனுபவ ரீதியாக உணர்ந்து கருத்து சொன்னதற்கு நன்றிம்மா... இந்த கருத்தை எப்படியோ விட்டு விட்டேன். மன்னிக்கவும். உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 3. ஓ.!! கடைசியில் உப்பு சேர்த்திருக்கிறீர்கள்.
  மன்னிக்கணும் மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் அருமையான கருத்துப் பகிர்வினுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   எதற்கு மன்னிப்பெல்லாம் சகோதரி.? தங்கள் கருத்துக்கள் மகிழ்வை தருகின்றன. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 4. முதலில் உள்ள பொடியை கேரளத்தில் சம்மந்திப்பொடி என்று சொல்வார்கள்.இரண்டாவதாக சொன்ன எரிஉள்ளி சாம்பாரில் உள்ளியையே காணோம். பருப்பு (துவரம் பருப்பு) இல்லாமல் சாம்பரா என்று கீதா மாமி சண்டைக்கு வருவார்கள். பெயரை மாற்றினால் தேவலை.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை ஒரு வகை மோர்க்குழம்பு என்றே நான் நினைத்தேன். பெயர்
   வேறாகச் சொல்லுவார்களோ.

   நீக்கு
  2. வல்லி, இதுக்கு வேறே பெயர் தான். என் மனதிலும் இருக்கு. வரலை. கொஞ்சம் ஆழமாய்ச் சிந்திக்கணும். இப்போ சிந்திக்கும் மனோநிலை இல்லை.

   @ஜேகே அண்ணா, நான் சாம்பாரே என்னிக்காவது இட்லிக்கோ, தோசைக்கோ தேவைப்படும் அன்று ரொம்ப யோசித்துக் கொஞ்சம் போல் வைப்பேன். அதோடு மோர் சாம்பார் என ஒரு சாம்பாரும் உண்டு.

   நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   துவரம் பருப்பு வேக வைத்து மசித்தும் இதில் இறுதியில் சேர்த்துக் கொள்ளலாம்.ஆனால் சுவை சற்று மாறுபடும். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 5. இரண்டாவது எரிவுள்ளி சாம்பார்,
  அம்மா செய்வார். அப்படியொரு மணம் நாசியில் நிரம்பும். மெந்தியம் வறுத்த உடன் வரும் வாசனை சொல்லி முடியாது.

  தனியாவும், மிளகாயும், பருப்புகளும் சேரும்போது

  அந்த சாம்பாருக்கு அலாதி மணம். அஷற்குத் தொட்டுக் கொள்ள
  பொரித்த அப்பளம் உண்டு.
  பூசணிக்காய்த் தான் முக்கால் வாசி.

  இல்லாவிட்டால் கொத்தவரங்காய்.

  மீண்டும் படங்களுக்கும் கூடவே வரும் வாசகங்களுக்கும்
  பாராட்டுகள்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வறுத்து அரைத்த மோர்க்குழம்பை நாங்க மறுபடி கொதிக்க விட்டதில்லை. மற்றபடி இம்முறையில் செய்திருக்கோம். நானும் ஏதோ ஓர் பதிவில் பகிர்ந்த நினைவு. எதுக்கோ தொட்டுக்கப் பண்ணினேன். நினைவில் வரலை.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வல்லி சகோதரி.

   வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

   வறுத்து அரைத்தாலும், பச்சை மோரோடு கலந்து வெந்தயம் வாசனை வருவதற்கு கரண்டியால் கலக்கி விட்டவாறு ஒரு கொதி வர வைப்பேன்.தங்கள் முறையும் நன்று. நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 6. தேங்காய் மிளகாய் பொடி செய்து அதிக நாட்களாகி விட்டது. படங்களோடு செய்முறை சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே எங்க வீட்டில் செலவாகாது என்பதால் பண்ணுவதில்லை. மாமியார்/மாமனார் இருந்தவரை அடிக்கடி பண்ணி இருக்கோம்.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். படங்களை சிறப்பித்தமைக்கும் மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  எங்கெங்கும் சூழ்க இறையருள்...

  பதிலளிநீக்கு
 8. துவையல், பருப்பு பொடி போன்றவைகளுக்கு இந்த எரிவுள்ளிதான் நல்ல காம்பினேஷன்(நாங்கள் இதை மோர்குழம்பு என்போம்) ஆண்டு கூட வடு மாங்காயும் இருந்தால் ஓகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டாங்கர் பச்சடி தான் துவையல், பொடி வகைகளுக்கு எனக்குப் பிடித்தமானது.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வடு மாங்காயும் இதனுடன் ருசிக்கு ஏற்றாற்போலிருக்கும். நன்றி.

   ஆமாம்.. உண்மைதான் கீதா சகோதரி. டாங்கர் பச்சடியும் இதற்கெல்லாம் மிகவும் பொருத்தமானதுதான். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 9. //ஒரு கை கவளம் எப்போதையும் விட திருப்தியுடன் சாப்பிட முடியும்...//
  //எப்போதையும் விட கண்டிப்பாக இரண்டு கை கவளத்திற்கும் மேலாக உண்ணலாம்//எடையை எப்படி குறைப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் சொன்னால் எப்படி?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாம் எடை குறைக்கணும்னு நினைத்தால் போதாது. மத்தவங்களுக்கும் ஆவலைத் தூண்டிவிடக் கூடாது. ஆனா பா.வெ மேடம், இனிப்பு செய்முறைகளைப் பகிர்ந்து மத்தவங்களோட தவத்தைக் கலைக்கறாங்களே.. நியாயமாரே

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   வித்தியாசமாக இப்படி உண்ணும் அன்றைய தினம் வேறு எதிலாவது எடை குறைப்பில் சற்று கவனம் செலுத்தி விடலாம் என நினைத்து எழுதினேன். கருத்துக்கு நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. //ஆனா பா.வெ மேடம், இனிப்பு செய்முறைகளைப் பகிர்ந்து மத்தவங்களோட தவத்தைக் கலைக்கறாங்களே.. நியாயமாரே//ஹாஹா! இப்போது கூட ஒரு இனிப்பு ரெசிபி எழுதிக் கொண்டிருகிறேன்.;)

   நீக்கு
 10. கிளிப் பிள்ளைக்குச் சொல்வது போல அழகான விவரக் குறிப்புகள்... படங்களைப் பார்த்து பசியாறிக் கொள்ள வேண்டியது தான்...

  ஏனெனில் இங்குள்ள சமையலறை பங்களா தேஷி மூர்க்கனின் ஆக்கிரமிப்பில் உள்ளது..

  அவன் முந்திக் கொண்டால் அவனுக்கு.. நான் முந்திக் கொண்டாலும் அவனுக்குத் தான்!.. .

  அவன் முந்திக் கொண்டால் அன்றைக்கு சமையல் செய்ய மாட்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. :(

   நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் அன்பான நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அங்கு உங்கள் சமையல் செய்வதன் நிலை புரிகிறது. கீதா சாம்பசிவம் சகோதரி சொல்வது போல் எனக்கும் வருத்தமாக உள்ளது. இந்த மாதிரி உணவு தயாரிப்பதில் உள்ள சிக்கலான நிலைகள் மாற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. அன்பின் கீதா அக்கா மற்றும் சகோதரி கமலா அவர்களது அன்பினுக்கு நன்றி...

   நீக்கு
 11. என்னவொரு படிபடியான செய்முறை விளக்கம்... அருமை... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஊக்கம் தந்த கருத்துரைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 12. சமையல் குறிப்பும் படங்களும் அருமை இந்த தோங்காயை பொடியை அரைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது சிறிது நீர் வீட்டு கலந்தால் தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள இன்ஸ்டன் துவையல் ரெடி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆமாம்.. வேண்டிய அளவு பொடி யுடன் நீர் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொண்டால் அந்த தேங்காய் துவையலும் அனைத்திற்கும் நன்றாக இருக்கும். உங்களின் அருமையான மாற்று யோசனைக்கும் நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 13. இன்று கமலா ஹரிஹரன் மேடம் செய்முறை ரொம்ப நன்றாக வந்துள்ளது.

  அவருக்கு, ஒரு செய்முறை மட்டும் எழுத கஷ்டமாக இருக்கும்னு நினைக்கிறேன் (அவங்க தளத்துல இடுகை கொஞ்சம் நீளமாக இருப்பதுபோல). மின்னூல் சிறப்பிதழில் 4 செய்முறை, இங்கு இரண்டு செய்முறை. (கொஞ்சம் விட்டிருந்தால், சேப்பங்கிழங்கு ரோஸ்ட், கொத்தவரை பருப்புசிலி இரண்டையும்கூட சேர்த்துவிட்டிருப்பார் ஹாஹா)

  இருந்தாலும் இரண்டுமே, நெல்லைப் பகுதிக்குச் சொந்தமான உணவு வகைகள்.

  மிக அருமை. சுலபமாகப் புரிந்துகொள்ளும்படி எழுதியிருக்காங்க. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப்பகிர்வினுக்கும் பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உண்மை.. அன்றைய தினம் நான் அப்பத்தை சுட்ட வலி கண்டு ... வேறெந்த காய்கறிகளும் என் கண்களில் படாமல் தப்பித்து விட்டன...:)

   தங்கள் அன்பான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் மீண்டும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 14. இந்த தேங்காய் மிளகாய்பொடி, என் பெரியம்மா வீட்டில்தான் சாப்பிட்டிருக்கிறேன் (அவங்களுக்கு திருவனந்தபுரத்திலிருந்து நிறைய தேங்காய்கள் வரும்). ரொம்ப நல்லா இருக்கும்.

  நான் இப்போ இட்லி மிளகாய்பொடியை விட்டுவிட்டேன். தேங்காய் மிளகாய்பொடி ஆவலைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் உங்கள் இந்த உணவு குறித்த சுவையான நினைவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தேங்காய் மிளகாய் பொடி நன்றாக உள்ளதென கூறியமைக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 15. எரிவுள்ளி குழம்பு, புளி மோர்க்குழம்பு இதுக்கெல்லாம் நீர்விடும் காய்கறிகளை தானாகப் போடக்கூடாதுன்னு சொல்லுவாங்களே. மோர்க்குழம்பில் முருங்கைக்காயா? அட ஈஸ்வரா என்று வைணவனைச் சொல்ல வச்சிட்டீங்களே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நீர் சக்தி மிகுந்த காய்கறிகளை கவனமாக கம்மியாக நீர் விட்டு வேக வைத்த பின் இதில் சேர்க்கலாம். வறுப்பதுடன் சேரும் க.ப.உ.ப போன்ற பொருட்களினால் அவ்வளவாக குழம்பு நீர்த்துப் போகாது. என்னைப் பொறுத்த வரை எல்லா தெய்வங்களும் ஒன்றுதான்.:) உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 16. ஹை கமலாக்கா எங்க ஊர் ரெசிப்பியா!! ஹா ஹா ஹா ஹா எங்க ஊர்ன்னு சொன்னதும் எல்லாரும் சண்டைக்கு வந்துடுவாங்களோ?!!!

  தே மி பொ எங்க வீட்டுல இல்லாம இருக்கவே இருக்காது. சாதாரண மி பொ இருந்தாலும் தே மி பொ கண்டிப்பாக இருக்கும். நல்ல ரெசிப்பி.

  எரிவுள்ளி சாம்பார் சூப்பர் ரெசிப்பி கமலாக்கா...நல்லா வந்திருக்கு.  எரிவுளி குழம்பில் பொதுவாக தனியா க ப உ ப சேர்க்க மாட்டாங்க. வெந்தயம், மி வ வறுத்து தேங்காய் வறுக்காம அரைத்துச் சேர்ப்பாங்க புளித் தண்ணீரில் தான் கொதிக்கவிட்டு புளித்த மோர் கலப்பது. இருபுளிக் குழம்புதான் - புளித்த மோர் ப்ளஸ் புளித்தண்ணியும் சேர்ப்பதால் - நாளடைவில் எரிவுளி என்று ஆனது என்று சொல்லிக் கேள்வி.

  நீங்கள் செய்திருக்கும் எரிவுளி சாம்பார் குழம்பு என் அத்தை வீட்டில் செய்து அங்கு கற்றுக் கொண்டேன். அவங்கதான் எரிவுளியில் தனியா உ ப க ப போட்டுச் செய்து நான் முதல் முறை சாப்பிட்டது. எங்கள் பிறந்த வீட்டில் இது செய்ததில்லை. அத்தை வீட்டில் கற்றேன். (திருநெல்வேலி தான்) அரிசி மாவு கரைத்துவிடாமல் செய்வாங்க.

  உளுந்து சாதம் செய்தாலும், தேங்காய் துவையல் செய்தாலும், இந்தக் குழம்பும் செய்வாங்க. ரொம்ப நாளாகிவிட்டது இக்குழம்பும், தே மி பொடி செய்தும். நினைவுபடுத்திட்டீங்க மிக்க நன்றி கமலாக்கா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் எப்போவுமே சாம்பார், வத்தல் குழம்பு, மோர்க்குழம்பு, பொரிச்ச குழம்பு கூட்டு வகைகள் எதுக்கும் மாவு கரைத்தே விட மாட்டேன். உண்மையான ருசியை அது கெடுக்கிறது என்பது என் எண்ணம்.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.

   உங்கள் நினைவுகளை சுவைபட கூறியது மகிழ்வாக உள்ளது. பொதுவாக தே.மி. பொடி ஒரு ருசியான பதார்த்தம். எங்கள் வீட்டிலும், அவ்வப்போது நிரந்தரமாக தங்கும். உங்கள் வீட்டு செய்முறைகளை சொன்னதற்கும், நினைவு கூர்ந்தமைக்கும் மிக்க நன்றிகள். நானும் என் புகுந்த வீட்டிற்கு வந்த பின் கற்ற குறிப்புகள்தான் இந்த எரிவுள்ளி சாம்பார். எங்கள் பெரிய நாத்தனார் (கல்லிடைகுறிச்சி) அடிக்கடி இதை செய்வார்கள். இப்படி ஒரு சில மாறுதல்களுடன் நானும் செய்து வருகிறேன். உங்கள் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

   நானும் வறுத்து அரைத்த சாம்பார், மோர் கெட்டியாகவே அமையும் மோர் குழம்பு, போன்றவற்றிக்கு அரிசிமாவு விடுவதில்லை. சமையல் பதார்த்தத்தின் இறுதியில் நீர்க்க வரும் பக்குவமாக தோன்றும் போது கொஞ்சம் அரிசிமாவு கரைத்து கலப்பேன். இல்லையென்றால் வறுக்கும் சாமான்களுடன் சிறிது அரிசியையும் கலந்து வறுத்து விட்டால், அதுவும் தனி ருசியை கொடுக்கும். ஒவ்வொன்றும் ஒரு விதம், ஒவ்வொருவர் பக்குவமும் ஒரு விதம். அதனால்தான் நான் தேவையென்றால் அரிசி மாவு கலந்து கொள்ளவும் என குறிப்பில் கூறியுள்ளேன். உங்கள் அன்பான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 17. எரிவுளி சாம்பார் குழம்பில் தேங்காய் நீங்க போட்டிருப்பது போல (வாணலியில் வறுக்கும் படம்) அந்த அளவு அதாவது கிட்டத்த்டட்ட 1/4 - 1/3 கப் தேங்காய் (அத்தை கொஞ்சம் கூடுதலே வைப்பார். எங்க வீட்டிலயும் தான்) சேர்ப்பது....அக்கா டைப்போ வந்துவிட்டதா? அளவில் தேங்காய் ஒரு தேக்கரண்டின்னு சொல்லியிருப்பதால் கேட்கிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நான் எல்லாமே கண்ணளவுதான் சகோதரி.அப்படியே பழகி விட்டது. அதனால் குறிப்பிட்ட அளவு சொல்லத் தெரியவில்லை. தேங்காய் இன்னமும் கூட வைக்கலாம். அம்மா வீட்டில் தேங்காய் பஞ்சமே கிடையாது. எதற்கும் நிறைய சேர்ப்பார்கள். அதை கூடுதலாக சேர்க்கும் போது அதன் ருசியே அலாதியாக இருக்கும். இங்கு வீட்டிலேயே சிலருக்கு அதிகம் சேர்த்தால் ஒத்துக் கொள்ளாது என்பார்கள். உங்கள் கருத்துப்படி கொஞ்சம் அதிகம் சேர்த்தால் நன்றாகத்தான் இருக்கும். கருத்துக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 18. தே.மி.பொ. - கலக்கல்!

  எரிவுள்ளி குழம்பு - சுவை! தே.மி.பொ., எரிவுள்ளி குழம்பு மற்றும் சுட்ட அப்பளம் - செம Combination!

  சிறப்பான சமையல் குறிப்புகள் - தந்த கமலா ஹரிஹரன் ஜி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தே.மி.பொடி,மற்றும் எரிவுள்ளி சாம்பார் உணவு வகைகள் எல்லாமே பொருத்தமான காம்பினேஷனுடன் நன்றாக உள்ளதென பாராட்டி வாழ்த்தியமைக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள் சகோதரரே.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 19. பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் அன்பான பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 20. Kamalamma, recipe looks yummy! Thanks for sharing.The way you explained even the minute details is so pleasing!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   சமையல் பதிவை ரசித்துப்படித்து தந்த அன்பான கருத்து கண்டு மகிழ்ச்சி. மிக்க நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 21. படத்துடன் விளக்கியவிதம் அருமை...அம்மணிக்குக் காட்டியுள்ளேன்..இவ்வாரம் அரங்கேரச் சாத்தியம் என எண்ணுகிறேன்..வாழ்த்துகளுடன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்கள் வீட்டில் இவ்விரண்டு சமையல் குறிப்புகளையும் செய்து சுவைப்பதாக, ஊக்கம் நிறைந்த கருத்து தந்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

   தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும், கருத்துக்கும் என் பணிவான நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 22. வணக்கம் ஸ்ரீராம் சகோதரரே

  இந்தப்பதிவை எ.பியில் பதிந்து என்னை மகிழ்வடையச் செய்த உங்களுக்கும். எ.பி ஆசிரியர்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றிகள்.

  இன்று என் சமையல் ரெசிப்பிக்கு வந்து கருத்துக்கள் தந்து பாராட்டிய அனைவருக்கும் என் பணிவான நன்றிகள். என் மனதின் வேதனைகளுக்கிடையே நான் உங்கள் அனைவருக்கும் சரியாக பதிலாக அளிக்கவில்லையோ என எனக்கு வருத்தமாக உள்ளது. அப்படியே உங்கள் அனைவருக்கும் தோன்றினாலும் என்னை மன்னித்துக் கொள்ளவும்.

  விரைவில் இதிலிருந்து என்னை சமாதானப்படுத்திக் கொண்டு மீண்டு வருவேன். சனிக்கிழமை பதிவில் எனக்கு ஆறுதலாக பதில் கூறிய சகோதர சகோதரிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்படி ஒரு அன்பான வலைத்தள உறவுகளை தந்த ஆண்டவனுக்கும் எப்போதும் என் நன்றிகள்.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 23. அன்பின் சகோதரி கமலா ஹரிஹரன் அவர்கள் மீள இயலாத் துயரில் இருந்து மீண்டு இங்கே வந்தது அவரது பண்பாட்டினைக் காட்டுகின்றது...

  காலம் தான் தங்கள் அனைவரது துயரையும் மாற்ற வல்லது.. தைரியமாக இருக்க வேண்டும்...

  எல்லாம் இறைவனின் திருக்கரங்களில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்களுடைய அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோ. உங்களது தைரியமான வார்த்தைகள் மன ஆறுதலை தருகிறது. என்ன செய்வது? அனைத்தும் அவன் செயல்தான். உலக மக்கள் அனைவருக்கும் நடப்பவைகளை நல்லதாக என்றுமே வழி நின்று நடத்திட அவன் அருளைத்தான் வேண்டி நிற்கிறேன். அவன்தான் மக்கள் அனைவரையும் இந்தப் பிணியிலிருந்து, துயரிலிருந்து காக்க வேண்டும். 🙏.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  2. சகோ துரை அவர்கள் சொன்னவுடன் சனிக்கிழமை பதிவை வாசித்தேன் செய்தி தெரிந்து வருத்தம் அடைந்தேன்.

   நீங்கள் சொல்வது போல் இறைவன் தான் இந்த பிணியிலிருந்து, துயரிலிருந்து காக்க வேண்டும்.

   நீக்கு
  3. வணக்கம் சகோதரி

   உங்கள் ஆறுதலான கருத்துரைக்கு நன்றி சகோதரி. பதிவுலகந்தான் என் மன ஆறுதலுக்கு மருந்து. அதனால் இதிலிருந்து அங்கு வந்து ஆண்டவன் அருளோடு சிறிது சிறிதாக மீண்டு வர முயற்சிக்கிறேன். இறைவனைதான் எப்போதும் நம்பி இருக்கிறேன். உங்கள் ஆறுதலான பதிலுக்கு மிக்க நன்றி சகோதரி.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 24. தேங்காய் மிளகாய்ப் பொடியில் நான் கொஞ்சம் வெள்ளை எள்ளு சேர்ப்பேன் Immunity boostingக்காக . எரி உள்ளி சாம்பார் புது மாதிரி இருக்கு . செய்து பார்க்கணும் கறிவேப்பிலை எல்லாம் வாங்கி ஒரு மாசமாச்சு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்கள் செய்முறையும் நன்றாக உள்ளது. எள்ளின் சுவையுடனும் தே.மி. பொடி நன்றாக இருக்கும். எரிவுள்ளியை செய்து பார்க்கிறேன் என்றமைக்கு மிக்க சந்தோஷம். அன்றைய தினம் எனக்கும் கறிவேப்பிலை புதிதாக வீட்டில் இல்லை. ஆன்லைன் வர்த்தகத்தில் காய்கறிகள், சாமான்கள் என வாழ்க்கை ஓடிக் கொண்டுள்ளது. தங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 25. தேங்காய் பொடி அடிக்கடி செய்வோம். பயணத்திற்கு கொண்டு போவதற்கு வசதி.
  வறுத்து அரைத்த மோர் குழம்பும் நான் செய்வேன். மோர் குழம்பில் அரிசுமாவு மட்டும் கலக்க மாட்டேன். அருமை.

  வரமிளகாய், துவரம்பருப்பு, சீரகம், மல்லி வறுத்து மோர் ரசம் என்று செய்வேன் அதற்கும் சுட்ட அப்பளம் தான். உடல் நலம் இல்லாமல் வாய் கசப்பு இருந்தால் மோர் ரசம் சாப்பிட்டால் வாய் கசப்பு சரியாகிவிடும். வயிற்று தொந்திரவு இருந்தாலும் சரியாகி விடும்.
  படங்களும், செய்முறையை சொன்ன விதமும் நன்றாக இருக்கிறது.
  சுட்ட அப்பளம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் நல்லதொரு கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தே.மி.பொடியும், மோர் குழம்பும் நீங்களும் அடிக்கடி செய்வது குறித்து மிகவும் சந்தோஷம். அதனால்தான் பொதுவாக இது அனைவரும் அறிந்த சமையல்தான் என பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

   தாங்கள் சொல்லும் மோர் ரசமும் நன்றாக இருக்கும். நானும் செய்வேன். அதைக்குறித்து தந்த தகவல்களுக்கு மிக்க நன்றி. சுட்ட அப்பளம் படங்கள், மற்றும் செய்முறை விளக்கங்கள் நன்றாக இருப்பதாக சொன்னதற்கு மிக்க மகிழ்ச்சியுடன் கூடிய நன்றிகள்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 26. நான் உங்களை காணவில்லையே என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிந்து கொண்டேன். மனது மிகவும் வருந்துகிறது.

  உங்கள் குடும்பதினருக்கும், உங்கள் சகோதர்ர் குடும்பத்திற்கும் இறைவன் ஆறுதல் தர வேண்டும்.

  எனக்கும் என் பெரியப்பா மகன் இறந்து விட்டார். கேள்விபடும் விஷயங்கள் மனதுக்கு வேதனை அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கமலக்கா இப்போதுதான் செய்தி அறிகிறேன். மனம் வருத்தம் அடைந்தது. உங்களுக்கு என்ன ஆறுதல் சொல்ல என்று தெரியவில்லை. உங்கள் சகோதரர் குடும்பத்திற்கு இறைவன் எல்லா வல்லமையும் தந்திட பிரார்த்தனைகள்.

   கோமதிக்கா உங்கள் பெரியப்பா மகன் மறைவுக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்.

   ஆமாம் கேள்விப்படும் விஷயங்கள் எதுவுமே நன்றாக இல்லை.

   கீதா

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   உங்கள் ஆறுதலான பதில்கள் மனதின் வலிகளுக்கு மருந்தாக உள்ளது. என்ன செய்வது? உடனே அங்கு செல்ல முடியாத நிலைமை..மனவலியை தாங்க இயலாமல் தவிக்கிறேன். இறைவன்தான் எதையும் தாங்கும் மன வலிமை தர வேண்டும். உங்கள் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி.

   உங்கள் பெரியப்பாவின் மகன் தவறிய செய்தி கேட்டும் மனம் கலங்கி வருத்தமடைகிறேன். உங்களுக்கும், அவர் குடும்பத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். இப்போதுள்ள கால கட்டத்தில் உறவுகளை இழக்கும் போது மனம் அடையும் வேதனை சொல்லி மாளாது. ஏன் இப்படி இறைவன் சோதனைகளை தருகிறான் என வருத்தமாக உள்ளது. சீக்கிரமாக இந்த நிலை மாற பிரார்த்திக்கிறேன்.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  3. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

   உங்கள் ஆறுதலான பதில் என் மனவலியை சற்று குறைக்கிறது. என்ன செய்வது? மன்னியுடன் தினமும் கைப்பேசியில் பேசி ஆறுதல் அளித்து. வருகிறேன்.மாறி,மாறி ஆறுதலும், தேறுதலும் பகிர்ந்து கொள்கிறோம். இப்படி ஒரு நிலைமையை இறைவன் கொடுப்பான் என கனவிலும் நினைக்கவில்லை. என்னவோ மனமும்/உடலும் சோர்ந்தே உள்ளது.

   சகோதரி கோமதி அரசு அவர்கள் பகிர்ந்த கருத்துரையும் மன வருத்தத்தை தருகிறது.நீங்கள் சொல்வது உண்மை.. இப்போது எந்த விஷயங்களும் நம்மை பயமுறுத்துகிறது. இருப்பினும் இறைவனைதான் தஞ்சம் அடைகிறோம்.அவன்தான் மக்களை காப்பாற்ற வேண்டும். ஆறுதல் சொன்னதற்கு மனமார்ந்த நன்றி.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
  4. கமலா ஹரிஹரன்,கோமதி அரசு இருவரும் ஆறுதல் அடைய வேண்டுகிறேன்.

   நீக்கு
  5. வணக்கம் சகோதரி

   உங்கள் அன்பான ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி சகோதரி.

   அன்புடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 27. ஒவ்வொரு உதிரி பாகங்களுக்குமான வர்ணனை அபாரம். தேங்காய் மிளகாய்ப் பொடி ஆவலை தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரரே

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   சமையல் பதிவை ரசித்துப்படித்து தந்த தங்களது ஊக்கம் மிகுந்த கருத்துரைகள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. தங்களுடைய அன்பான பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 28. நல்ல சமையல் குறிப்புகள். படங்களும் அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் சகோதரி

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   உங்களது பாராட்டுக்கள் கண்டு மனம் மகிழ்ந்தேன். மிக்க நன்றி சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!