சனி, 1 மே, 2021

வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வோருக்கு டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள்.

 

50 ரூபாய்க்கு  எதிர்ப்பு சக்தி  பெட்டகம்!


= = = = 

வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வோருக்கு டாக்டர்கள் கூறும் ஆலோசனைகள்

சென்னை: 'கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்' என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மூன்று வாரங்களாக கட்டுக்கடங்காத வகையில் கொரோனா தொற்று பரவி வருகிறது.நாள்தோறும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சம் தொட்டு வருகிறது. சுகாதாரத்துறை தகவலின்படி மாநிலம் முழுதும் 1.05 லட்சம் பேர் சிகிச்சையில்உள்ளனர்.இந்த எண்ணிக்கை ஓரிரு வாரங்களில் இரு மடங்காகும் எனஅஞ்சப்படுகிறது. அந்த அளவுக்கு மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் வேகமாக நிரம்பிவருகின்றன.

இதனால் லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் கடந்தாண்டை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது.இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவெனில் தொற்றால் பாதிக்கப்படுவோரில் ஐந்தில் நால்வருக்கு லேசான அறிகுறிகளே காணப்படுகின்றன.இதனால் அவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்.

சளி காய்ச்சல் குறைவாக உள்ளவர்களும் அறிகுறிகளே இல்லாமல் உள்ளவர்களும் மருத்துவ மனைகளை நாடத் தேவையில்லை.அதே நேரம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நாள்பட்ட சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புடையவர்கள் டாக்டர்களின் அறிவுரை பெற்றுதான் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.அதற்கும் வீடுகளில் தனி அறை மற்றும் தனி கழிப்பறை வசதி இருத்தல் அவசியம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் புற்றுநோயாளிகள் எய்ட்ஸ் நோயாளிகள் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்பவர்களுக்கு ஆரோக்கிய உணவு அவசியம். அவர்களது அறைகளை துாய்மைப்படுத்த கிருமி நாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.கொரோனா பாதித்தவர்களுக்கு தேவையான மருந்துகள் கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி முகக் கவசம் ஆகியவை போதிய அளவில் வைத்திருக்க வேண்டும்.

முககவசங்களை ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். பல்ஸ், ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர் ஆகியவற்றை வைத்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கையுறைகள்; இரண்டு முக கவசங்கள்  அணிவது அவசியம். நோயாளியின் அறையில் இருக்கும்போது கதவு ஜன்னல்களை திறந்து வைத்தல் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

= = = = 

இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியுதவி : கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு.

புதுடில்லி: கொரோனா தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் சார்பில் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அதன் சிஇஓ சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா 2வது அலை காரணமாக பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.52 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நேற்று ஒரேநாளில் 2,812 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். பல மாநிலங்களில் மருந்து பொருட்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது. ஆனாலும், தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது டுவிட்டர் பக்கத்தில், ‛இந்தியாவில் மோசமடைந்து வரும் கொரோனா நெருக்கடியை கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ.135 கோடி நிதியை வழங்குகிறது. மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் இந்தியாவுக்கு 135 கோடி ரூபாய் நிதியை அளிக்கிறது,' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

= = = = 
மதுரையின் முதல் பெண் டாக்டர் ஆர் எஸ் பத்மாவதி . நூறாவது பிறந்தநாள் கொண்டாடினார். 

மதுரையின் முதல் பெண் டாக்டர் ஆர் எஸ் பத்மாவதி . 1950ல் மதுரை நகராட்சியில் பணியில் சேர்ந்தார் . 1971ல் தான் மதுரை மாநகராட்சி ஆனது . டாக்டர் பத்மாவதி 100வது பிற ந்த நாளை கொண்டாடுகிறார் . தெம்பாக எழுந்து நடக்கிறார்,ஆர்வமாக செய்திதாள்களை படிக்கிறார் , டிவி பார்க்கிறார், அழகாக பாடுகிறார் , தனக்கு தேவையான வேலைகளை செய்து கொள்கிறார் . பல பெண் டாக்டர்களுக்கு ரோல் மாடலாக இருக்கின்ற பத்மாவதியிடம் பேசிய போது அவர் காலகட்டத்தில் நடந்த சுவராசியமான தகவல்களை பகிர்ந்துகொண்டார் . பெண்கள் படிக்க ஆசைப்பட்டு பள்ளிக்கு கிளம்பினால் , புத்தகங்களை கிணற்றில் வீசுவிடும் காலம் அது . அப்போது பத்மாவதி அப்பா டாக்டர் சுந்தர்ராஜன் தன் பெண் குழந்தைக்கு நல்ல எதிர்காலம் உருவாக்கி தர வேண்டும் என விரும்பினார் . பத்மாவதியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என 15 வயதில் குடும்பத்தினர் கட்டாயப்படுத்தினர் . அப்பா மட்டும் இவருக்கு புத்தங்களை வாங்கி கொடுத்து படிக்க சொல்லி ஊக்கப்படுத்தினார் . தான் பிறந்த போது அப்பா தனக்காக எழுதிய பாட்டை அழகாக பாடி காட்டுகிறார். 


= = = = 
கொரோனா நிதிக்கு ரூ.2 லட்சம்! ::  பீடி தொழிலாளிக்கு பாராட்டு. 

புதுடில்லி : கேரளாவில், பீடி சுற்றும் தொழிலாளியான, மாற்றுத் திறனாளி ஒருவர், தன் சேமிப்பில் இருந்த, 2 லட்சம் ரூபாயை, முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியதற்கு, சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

கேரளாவில் உள்ள கண்ணுார் மாவட்டத்தில் வசிக்கும், பீடித் தொழிலாளியான, ஜனார்த்தனன், தன் சேமிப்பில் இருந்து, 2 லட்சம் ரூபாயை, முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இது குறித்து, ஜனார்த்தனன் கூறியதாவது: கேரள அரசுக்கு, கொரோனா தடுப்பூசி மருந்து, ஒரு, 'டோஸ்' 400 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளதாக, 'டிவி'யில் செய்தி வந்தது. அதைப் பார்த்ததும், இது, அரசுக்கு மிகப் பெரிய சுமையாக இருக்கும் என, வருந்தினேன். அன்று இரவு முழுதும் துாங்கவில்லை.

காலையில், நேராக வங்கிக்குச் சென்று, என் சேமிப்பு கணக்கில் வைத்திருந்த, 2 லட்சம் ரூபாயை எடுத்து, முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கினேன். அதன்பின் தான் மனது அமைதியானது. என் சேமிப்பில், மிச்சம், 850 ரூபாய் தான் இருந்தது. வங்கி அதிகாரிகள், 'பாடுபட்டு சேமித்ததை இழக்க வேண்டாம்' என, என்னை தடுத்தனர்.


அதற்கு நான், 'மாற்றுத் திறனாளிக்கான ஓய்வூதியமும், பீடித் தொழிலும் இருக்கும் வரை, கஷ்டப்பட மாட்டேன்' என, கூறி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தி, சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏராளமானோர், முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்து, அதன் விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயன், கல்வித் துறை அமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளிட்டோர், ஜனார்த்தனனின் தன்னலம் கருதா சேவையை பாராட்டியுள்ளனர்.

= = = = = = = = 

அறிவோம் என்.எஸ்.என்.ஐ.எஸ்., 
விளையாட்டுக்களை விரும்பாத இளைஞர்களே இல்லை எனலாம்! அத்தகைய விளையாட்டே அவர்களது தொழில்துறையாக அமைந்தால் யாருக்குத்தான் மகிழ்ச்சியாக இருக்காது?

ஆம், விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்பும் மாணவர்களுக்காக செயல்படும் ஒரு முக்கிய கல்வி நிறுவனம் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள, என்.எஸ்.என்.ஐ.எஸ்.,!


முக்கியத்துவம்:

மத்திய விளையாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 1961ம் ஆண்டு பட்டியாலாவில் துவங்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமே ‘நேதாஜி சுபாஷ் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்போர்ட்ஸ்’ (என்.எஸ்.என்.ஐ.எஸ்.,). ஆசியக் கண்டத்திலேயே விளையாட்டு படிப்புகளுக்கான கல்வி நிறுவனங்களுள் மிகப் பெரியது என்று பெயர் பெற்றுள்ள என்.எஸ்.என்.ஐ.எஸ்., சர்வதேச போட்டிகளுக்குத் திறமையான பயிற்சியாளர்களை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. 


பிரதான படிப்புகள்

* டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங்

* எம்.எஸ்சி., இன் ஸ்போர்ட்ஸ் கோச்சிங்

* ஸ்கில் டெவலப்மெண்ட் கோர்ஸ்

* சர்டிபிகேட் கோர்ஸ்

* பி.ஜி., டிப்ளமா இன் ஸ்போர்ட்ஸ் மெடிசன்


முக்கிய துறைகள்

ஸ்போர்ட்ஸ் மெடிசன், எக்சர்சைஸ் பிசியாலஜி, ஸ்போர்ட்ஸ் பயோகெமிஸ்ட்ரி, ஸ்போர்ட்ஸ் ஆந்த்ரபாலஜி, ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி, ஸ்போர்ட்ஸ் நியூட்ரீஷியன், ஜென்ரல் தியரி அண்ட் மெதட்ஸ் ஆப் டிரைனிங், பயோமெகானிக்ஸ்


உள்கட்டமைப்பு வசதிகள்

இந்தியாவின் பிற பகுதியைச் சேர்ந்த மாணவர்களும் பயன்பெறும் வகையில் விடுதிகள், நூலகம், அருங்காட்சியகம், தேர்ந்த ஆசிரியர்கள், விளையாட்டு திடல் என அனைத்து வசதிகளும் நிறைந்த சிறந்த கல்வி நிறுவனமாக திகழ்கிறது. குறிப்பாக, பாட்மிண்டன் கோர்ட், பேஸ்கட் பால் கோர்ட், பாக்ஸிங் ரிங்,  பில்லர்ட்ஸ் ரூம், ஜிம்னாசியம், ஹாண்ட் பால் கோர்ட், ஜூடோ ஹால், சாவ்நா அறை, ஸ்டீம், குயாஷ் கோர்ட், டேபிள் டென்னிஸ் ஹால், வாலிபால் ஹால், ரெஸ்ட்லிங் ஹால், வெய்ட்லிப்டிங் ஹால், ஸ்ட்ரென்த் டிரைனிங் ஹால் ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளது.


வாய்ப்புகள்

இங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு விளையாட்டு வீரருக்குத் தேவையான உடல்வாகு மட்டுமின்றி விளையாட்டு தொடர்பாகத் தெரிந்திருக்க வேண்டிய யுக்திகள், வரலாறுகள் மற்றும் உளவியல் புரிதல்கள் ஆகிய பயிற்சிகளும் சிறந்த முறையில் வழங்கப்படுவதால், விளையாட்டுத் துறை சார்ந்த அடிப்படைகள் அனைத்தையும் கற்றுத் தேரும் வாய்ப்பினை பெறுகிறார்கள். 


மாணவர்கள், தேவையான யுக்திகளை அறிந்து, தேசிய, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். உடல் நலத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில், அரசு மற்றும் தனியார் விளையாட்டு துறைகளில் பயிற்சியாளராகவும் பணி வாய்ப்பினை பெறலாம். சுயமாக விளையாட்டு பயிற்சி மையங்களை துவங்கலாம்.


விபரங்களுக்கு: https://nsnis.org/

= = = = = = = =

கோவாக்சின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது: அமெரிக்க மருத்துவ நிபுணர் பாஸி. 

புதுடில்லி: கோவாக்சின் தடுப்பூசி, 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்வதாக அமெரிக்க மருத்துவ நிபுணர் ஆண்டனி பாஸி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகராகவும், பெருந்தொற்று நிபுணராகவும் உள்ள டாக்டர் ஆண்டனி பாஸி, கான்பரன்ஸ் கால் மூலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் கிடைத்த தரவுகளின்படி, இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி, கொரோனாவின் 617 உருமாறிய கொரோனா வகைகளை வீரியமிழக்க செய்கிறது. எனவே இந்தியாவின் உண்மையான கஷ்டங்களை பார்க்கும் போதும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் கொரோனாவுக்கு எதிரான ஒரே வழிமுறை என்பது தெரியவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா நோய்த்தொற்று தொடர்பான வெள்ளை மாளிகையின் சீனியர் ஆலோசகர் ஆண்டி ஸ்லாவிட் கூறுகையில், ‛தடுப்பூசி உற்பத்தியை இந்தியா துரிதப்படுத்த, அதிகப்படுத்த தடுப்பூசி மூலபொருட்களை இந்தியாவிற்கு அனுப்பவுள்ளோம். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்தியாவின் இந்தத் துயரச் சூழ்நிலையில் உதவிகரமாக இருக்கவே விரும்புகிறோம். சிகிச்சைப்பொருட்கள், பிபிஇ கிட்கள், வென்டிலேட்டர்கள், போன்றவற்றை அனுப்ப உள்ளோம்.

அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல திறன் படைத்தது. உலகின் பல பகுதிகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனங்களிடமிருந்து போதிய தடுப்பூசிகள் கிடைக்கின்றன,' என்றார்.

= = = = =

சோப்பு முக்கியம் பாப்பா. 

கொரோனா வைரசை தடுக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் கிருமிநீக்கி திரவத்தை கைகளில் பூசுவது நல்லது. ஆனால், இத்தகைய கிருமிநீக்கிகளால் 'நொரோ வைரஸ்' என்ற கிருமியை தடுக்க முடிவதில்லை.

அண்மையில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், மருத்துவ மையங்களுக்கு வாயுத் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளின் வரத்து நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.

இதற்குக் காரணம், கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க குழந்தைகளுக்கு பெற்றோர், 'ஹேண்ட் சானிடைசர்' திரவங்களை நம்பியிருப்பதே என மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். நியூசிலாந்து மற்றும் தைவான் போன்ற நாடுகளிலும் தற்போது நொரோ வைரஸ் தொற்றுகளால் குழந்தைகளுக்கு வாயுத் தொல்லை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை அதிகரித்துள்ளன.

ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்கள் கொரோனா வைரசை தடுத்தாலும், நொரோ போன்ற சில வைரஸ்களை அவ்வளவாகத் தடுப்பதில்லை. இதற்கு என்ன மாற்று? சோப்பினால் கைகளுக்கு சோப்பு போட்டு, 20 விநாடிகளுக்கும் குறையாமல் ஊறவைத்த பிறகு தண்ணீரால் கை கழுவுவது மட்டுமே நொரோ வைரசை போக்க உதவும். எனவே, ஆஸ்திரேலிய மருத்துவர்கள், மீண்டும் சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த துவங்கியுள்ளனர்.

= = = = 


= = = = =

20 டன் நிவாரண பொருட்கள் ரஷ்யாவில் இருந்து வருகை. 

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உட்பட, 20 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள், ரஷ்யாவில் இருந்து, வந்து சேர்ந்தன.


கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாட்டில் மிகத் தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிகளின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வைரஸ் பரவலைத் தடுக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு உதவுவதற்கு பல நாடுகள் முன்வந்துள்ளன.வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடியை, தொலைபேசியில் அழைத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், நேற்று முன்தினம் பேசினார்.

இந்நிலையில், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வென்டிலேட்டர்கள், மருந்துகள் உட்பட, 20 டன் மருத்துவப் பொருட்கள், ரஷ்யாவில் இருந்து, இரண்டு விமானங்களில், டில்லிக்கு நேற்று வந்து சேர்ந்தன.'ஸ்புட்னிக் வி தடுப்பூசி மருந்துகள், மே முதல் வாரத்தில் இருந்து வரத் துவங்கும். மேலும், இந்தியாவில் அதை தயாரிப்பது குறித்தும் ஆராயப்படுகிறது' என, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிகோலே குதஷேவ் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து, 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் நேற்று, டில்லி வந்து சேர்ந்தன.ஆக்சிஜன் வினியோகத்துக்கு தேவையான காலி கன்டெய்னர்களை, சிங்கப்பூர், துபாயில் இருந்து, இந்திய விமானப் படை விமானங்கள் எடுத்து வந்துள்ளன. நேற்று மட்டும், 12 கன்டெய்னர்கள் வந்து சேர்ந்தன.

= = = = 

31 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அநேகமாக முழுக்க முழுக்கக் கொரோனாத் தொற்று குறித்த அரிய தகவல்கள் நிறைந்திருக்கும் பதிவுக்கு நன்றி. டாக்டர் பத்மாவதி பற்றிக் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்தது இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைந்து பிரார்த்திப்போம் கீதா அக்கா...   வாங்க..  வணக்கம்.

   நீக்கு
 2. செய்திகள் அதிகம் எனினும், அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  நோயின் பயமில்லாமல் அனைவரையும் இறைவன் காக்க வேண்டும்.

  சில காரணங்களால் மீண்டும் காலையில் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இணைந்து பிரார்த்திப்போம்.  வாங்க வல்லிம்மா..  வணக்கம்.

   சில காரணங்களால்???

   நீக்கு
 4. அனைவருக்கும் அன்பின் வணக்கம்...
  நலம் எங்கும் சூழ்க...

  பதிலளிநீக்கு
 5. கொடும் தொற்று நீங்குவதற்கும் மக்கள் நோய் இன்றி பயமின்றி வாழ்வதற்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக...

  பதிலளிநீக்கு
 6. இன்றைய செய்திகள் அனைத்தும் அருமை. ஆனால் ரொம்ப நெடியதாக இருக்கு. ஓரிரண்டைத் தவிர்த்திருக்கலாம்

  முக கவசங்கம் - கண்ணில் பட்ட தட்டச்சுப் பிழை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கு என்று பார்த்து சரி செய்யலாம்.  அது காபி பேஸ்ட் என்பதால் அவர்களே  தவறு செய்திருக்கலாம்!

   நீக்கு
 7. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .

  பயனுள்ள செய்திகள். டாக்டர் பத்மாவதி பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி! அரசு சொல்லும் அனைத்தையும் மக்கள் தங்கள் நலனுக்காக கடைபிடிப்பது அவசியம். திரும்ப திரும்ப சொன்னாலும், மாஸ்க் போடாமல், குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வெளியில் செல்வதை பார்க்கும் போது நெஞ்சு பதைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் மலர்ச்சி எங்களுக்கும் மலர்ச்சியைத் தருகிறது.  வாருங்கள் வானம்பாடி..   இணைந்து பிரார்த்திப்போம்.  நன்றி.

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை வணக்கங்கள்!

  பதிலளிநீக்கு
 9. விளையாட்டு வீரர்கள் இந்தப் பேரிடருக்காக நன்கொடை கொடுப்பது அதிகரித்து வருவது பாராட்டக்கூடிய விஷயம். ஆனால் எல்லா வகை உதவிகளிலும் பீடித்தொழில் செய்யும் மாற்றுத்தொழிலாளி ஜனார்த்தனன் தான் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணத்தைக் கொடுத்தது மனதை நெகிழ வைத்து விட்டது.
  என்.எஸ்.என்.ஐ.எஸ் பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பானவை!கொரோனா பற்றிய அனைத்துத் தகவல்கள் மிகவும் உபயோகமானவை!

  பதிலளிநீக்கு
 10. சற்றே சங்கடங்கள்,வலிகள் உஷ்ண மாறுதல்களால்
  ஸ்ரீராம். கண்கள் பாதிக்கப் படுகின்றன.
  நல்ல செய்திகளை இப்போது படிக்கும்போது மனதுக்கு ஆறுதல். நம் மதுரை
  பெண்டாக்டர் நூறாண்டு பூரணம் செய்து இன்னும் தெளிவாகப் பேசுகிறார்.

  உன்னதமான சேவை. தெம்பூட்டும் செய்தி.

  கிரிக்கெட் வீரர்கள். கேரள ஜனார்த்தனன்,
  கூகிள் நிறுவனம்,
  ரஷ்ய உதவி எல்லாமே நல்ல பாசிட்டிவ் செய்திகள்.

  தினப்படி வேண்டாத செய்திகள் காதில் விழுவதற்கு
  மாறாக இன்று நல்லவைகளைப்
  படிக்க நேர்ந்தது ஒரு பூஸ்ட். நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ...    கவனம் அம்மா.  ஒய்வு கொடுங்கள் கண்களுக்கு.

   கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 11. //வங்கி அதிகாரிகள், 'பாடுபட்டு சேமித்ததை இழக்க வேண்டாம்' என, என்னை தடுத்தனர்//

  இதுதான் படித்தவனின் பண்பாடு.

  பதிலளிநீக்கு
 12. கோவிட் 19 -ன் புதுமுகமான ’Brazil-variant’-ஐயும் இந்திய கோவாக்ஸின் செயலிழக்கச்செய்கிறது என்கிறது லேட்டஸ்ட் மெடிக்கல் கௌன்சில் (ஐசிஎம்ஆர்) ரிப்போர்ட். பாரத் பயோடெக் தயாரித்த வேக்ஸீன் சூப்பர்தான். சந்தேகமில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் மதிப்பிற்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வியப்புதான்.  மகிழ்ச்சிதான்.

   நீக்கு
  2. செய்தித் தொகுப்புதான் டீ.வி பேப்பர் மாதிரி இல்லாமல் வேறு மாதிரியாக நேர்மறைச் செய்திகள் அருமையாக உள்ளது

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. கொரோனாவில் பாதிக்கப்படுபவர்கள் எந்த நிலையில் வீட்டிலிருந்தே சிகிச்சை மேற்கொள்ளலாம் போன்ற செய்திகள், கொரோனா வந்து பாதித்தவர்களுக்கு உபகாரமாக விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி, மனித நேயம் மிக்கவர்கள் தங்கள் பணத்தை கொடுப்பது என நல்ல செய்திகளையும் இன்று சொன்னமைக்கு மிக்க நன்றி. நூறாண்டு நிறைவு பெறும் டாக்டர் பத்மாவதி அவர்களின் பேட்டியும் நன்றாக உள்ளது. வெளி நாடுகளும் இந்தியாவுக்கு உதவி செய்வது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இந்த கொரோனா சீக்கிரமாக மேலும் பரவாமல் நம்மை விட்டு அகல அனைவரும் பிரார்த்தனை செய்வோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  காலையில் இங்கு நெட் பிரச்சனையால் வழக்கப்படி வர இயலவில்லை. வருந்துகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால் என்ன, பரவாயில்லை.  நன்றி கமலா அக்கா.

   நீக்கு
 14. அனைத்து செய்திகளும் அருமை.
  மனிதநேயம் உள்ள மக்கள் உதவுகிறார்கள்.
  மதுரை முதல் பெண் மருத்துவர் பேட்டி பார்த்தேன்.
  அவர்களை பார்க்கும் போதும் அவர்கள் பேசுவதை கேட்கும் போதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.அவர்களுக்கு வணக்கங்கள் ! வாழ்க வளமுடன்.
  எல்லா நாடுகளும் உதவி வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து அனைவரும் நலமாக இருக்க வேண்டும் இறைவன் அருளால்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!