செவ்வாய், 4 மே, 2021

சிறுகதை  : உயிரிலே கலந்தவள் - அபிநயா

 

அபியின் படைப்புகள்.  இது நான் அவ்வப்போது செல்லும் தளம்.  அபிநயா என்பவர் தான் படித்த புத்தகங்கள் பற்றி, தன் அனுபவங்கள் பற்றி எல்லாம் எழுதுவார்.  அவ்வப்போது சில கதைகளும் எழுதுவார்.  இந்தக் கதையும் அவர் தளத்தில் வெளியானதுதான்.  ஏப்ரல் மூன்றாம் தேதி வெளியான இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது.  அவர் அனுமதியுடன் அதை இங்கு பகிர்கிறேன்.

உயிரிலே கலந்தவள்

- அபிநயா -

காலை ஏழுமணிக்கே கண்விழித்து, முதல்வேலையாக தன் பக்கத்துவீட்டு உயிர் தோழியான கமலியைக் காணச் சென்றுவிட்டாள் லில்லி. பக்கத்து வீடு என்பதால் தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் மட்டுமே அவரவர் வீடு செல்வர். மற்றபடி, 5 வயது லில்லியும் 3 வயது கமலியும் இணைபிரியா தோழிகள். 7 வயது மகள் பூந்தளிரும் 5 வயது மகள் லில்லியும் பூவிழிராஜன் பூங்கொடி தம்பதியர் பெற்ற இரண்டு தங்கங்கள். பூவிழிராஜன் கூலிவேலை செய்ய, பூங்கொடி இல்லத்தரசியாக கோலோச்சுகிறாள்.

“வாடா லில்லிகுட்டி கமலி பாப்பா இன்னும் எழுந்துக்கலை. அவ எழுந்துக்குறதுகுள்ள நாம போய் பால் வாங்கிட்டு வரலாம் வா” என்று கமலியின் பெரிய அக்கா செவ்வந்தி அவளைத் தூக்கிக்கொண்டு பால் பூத்திற்குச் சென்றாள். கமலிக்கு ஒரு வயதாகியிருக்கும் நிலையில், உடல்நலக்கேட்டால் அவள் தந்தை முத்தழகன் தவறியிருக்க; நர்சிங் படித்த தாய் முல்லையோ ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து தன் மாமியாரின் உதவியுடன் 3 பெண் குழந்தைகளையும் வளர்க்கிறாள். பால் வாங்கிக்கொண்டு வந்தபோது கமலி தூங்கி எழுந்துவிட்டிருந்தாள். லில்லியை அவளுடன் விளையாடவிட்டுவிட்டு செவ்வந்தி அவள் முதல் தங்கை ரோஜாவுடன் பள்ளிக்கு கிளம்பினாள்.

காலையில் தொடங்கிய அவர்களின் விளையாட்டு மதியம் ஒருமணிக்கு கமலியின் பாட்டி குறிஞ்சி உணவு உண்ண அழைத்தபோதுதான் முடிவுக்கு வந்தது. சாதத்தில் சர்க்கரைக் கலந்து சாப்பிட வேண்டுமென்று கமலி அடம்பிடிக்க, லில்லி அவளை கேலி செய்து சிரித்தாள். லில்லியையும் பாட்டி சாப்பிடச்சொல்ல, அவள் தன் வீட்டிற்கு போய் சாப்பிட்டு வருவதாக சொல்லிவிட்டு ஓடினாள். வீட்டிற்கு வந்தவள் கமலி சாதத்திற்கு சர்க்கரைக் கேட்டதை தாய் பூங்கொடியிடம் சொல்லிச் சிரித்தபடி சாப்பிட்டு முடித்தாள்.

மீண்டும் தொடங்கிய விளையாட்டில் சிறிதுநேரத்திலேயே செவ்வந்தியும் ரோஜாவும் சேர்ந்துகொள்ள, இரவுவரை அவர்களின் அட்டகாசம் தொடர்ந்தது. ஒருகட்டத்திற்குமேல் பொறுக்கமுடியாத கமலியின் பாட்டி தன் மூன்று பேத்திகளின் கண்களில் துளியோண்டு அமர்தாஞ்சலத்தைத் தடவ, அவர்கள் அழுதுகொண்டே உறங்கிவிட்டனர். அவர்கள் உறங்கிய பின்னரே வீட்டிற்கு வந்த லில்லியும் எப்போதடா காலை வரும் கமலியைப் பார்க்க என்று நினைத்தபடி உறங்கினாள்.

இப்படியே இரண்டு வருடங்களும் பசுமையாகக் கழிய, ஒருநாள் கமலியின் குடும்பம் அவர்கள் வீட்டைக் காலி செய்துகொண்டிருந்தனர். லில்லியால் அவர்களின் பிரிவைத் தாங்கமுடியவில்லை. கண்களில் ஏக்கம்வழியப் பார்த்திருந்தாள். இயல்பிலேயே லில்லிக்கும் கமலிக்கும் அபார ஞாபகசக்தி இருந்ததால் இந்த இரண்டு வருட நட்பும் அதன் நினைவுகளும் அவர்களின் இதயத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. பொருட்களனைத்தும் பேக் செய்துவிட்டதால் ரோஜா லில்லியின் கரும்பலகையைக் கேட்டாள். மறுக்காமல் லில்லி எடுத்துவந்து தந்தாள். அவர்கள் காலி செய்த சில மாதங்களிலேயே லில்லியின் குடும்பமும் காலி செய்துவிட, இரு குடும்பத்திற்கும் சில வருடங்கள் தொடர்பில்லாமல் போயிற்று.

லில்லி எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது கமலி தன் அன்னையுடன் லில்லியைக் காண வீட்டிற்கு வந்தாள். “இந்தக் கமலி பாப்பா லில்லியைப் பார்த்தே ஆகனும்னு அடம்பிடிச்சது. நீங்க இங்க பக்கத்து தெருவில்தான் இருக்கிங்கன்னு கேள்விபட்டேன். அதுதான் வந்தோம்” என்றாள் முல்லை. பூங்கொடி சிரித்தபடி அவர்களுக்கு தேநீர் கொடுத்தாள். “லில்லிக்கும் கமலின்னா கொள்ளைப் பிரியம். இன்னும் மறக்காம அவளைப் பற்றியே பேசிட்டிருப்பா” என்று தன் மகளின் தலையைச் செல்லமாகக் கோதினாள் பூங்கொடி. லில்லிக்கும் கமலிக்கும் தங்கள் நட்பை நினைத்துப் பெருமையாக இருந்தது.

பேசுவதற்கு நிறைய இருந்தாலும் இருவரையும் வெட்கம் தடுத்தது. புதிதாகப் பார்ப்பதுபோல் ஓர் உணர்வு. சிறிதுநேரத்தில் கமலி கிளம்பிவிட, லில்லிக்கு துக்கமாக இருந்தது. அதன்பிறகு பலவருடங்கள் தோழியர் இருவரும் சந்திக்கவே முடியவில்லை. லில்லி பள்ளிப்படிப்பும், பட்டப்படிப்பும் முடித்துவிட்டு வேலைக்கு செல்கிறாள். ஊடகத்துறையில் ஒளித்திருத்துபவரான முகிலரசனுடன் திருமணமாகியிருந்தது. 

லில்லியால் கமலியை மறக்கமுடியவில்லை. தன் நண்பர்கள் அனைவரிடமும் கமலியுடனான நட்பைச் சொல்லி மகிழ்வாள். வாடகை வீட்டில் வசித்ததால் ஊர் மாறி ஊர் சென்றதில் மறுபடியும் சந்திக்கமுடியவில்லை. முகவரியைத் தொலைத்தவர்களால் அகத்தில் மலர்ந்த நட்பைத் தொலைக்கமுடியவில்லை. கமலி என்ற பெயரைக் கேட்டாலே லில்லி அவர்களின் பின்னணியை விசாரித்துவிட்டுதான் மறுவேலை பார்ப்பாள்.

சிறுவயது தோழி கமலியின்மீது வைத்துவிட்ட அலாதி பாசத்தினாலேயே லில்லிக்கு தன் அலுவலகத் தோழியான கமலியை ரொம்ப பிடிக்கும். அவள் என்ன தவறு செய்தாலும் அவளை மன்னித்து அப்படியே ஏற்றுக்கொள்வாள். முகநூலில் கமலியின் விவரங்களைப் பகிர்ந்தும் கமலியைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. தன் தோழி கமலி எங்கேயோ சந்தோஷமாக இருக்கிறாள். எப்படியாவது அவளைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்ற நினைப்போடு லில்லி தன் நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தாள். தாய் வீட்டில் சிறிது நாட்கள் தங்கிவிட்டுச் செல்லலாமென்று வந்திருந்த வேளையில் ஒருநாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. லில்லி நிதானமாக எழுந்து தன் வேலைகளை முடித்துவிட்டு காலை உணவையும் உண்டுவிட்டு டீவி பார்ப்பதும், அலைபேசியில் தன் கணவனுடன் சேட் செய்வதுமாக  நேரத்தை நகர்த்திக்கொண்டிருந்தாள். தந்தை பூவிழிராஜன் காலையிலேயே வெளியே சென்றுவிட்டிருக்க, தாய் பூங்கொடியும் லில்லியும் மட்டுமே வீட்டிலிருந்தனர். பூந்தளிரை விழுப்புரத்தில் தனியார் அலுவலகத்தில் பெரிய பதவியிலிருக்கும் பூவண்ணனுக்கு மணமுடித்திருந்தனர். மதியம் ஒருமணிக்குமேல் “லில்லியம்மா,” என்று அழைத்தபடி சிலர் உள்ளே வந்தனர். யாரோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் போல என்று லில்லி தன் அறையில் அமர்ந்தபடி நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே அவர்கள் லில்லியின் அறைக்கே வந்துவிட்டிருந்தனர்.

“லில்லி, என்னை யார்னு தெரியுதா?” என்று கேட்டவளை லில்லி சற்றுநேரம் உற்றுநோக்கிவிட்டு தெரியவில்லை என்றாள். ”நாந்தான் ரோஜா கமலியின் அக்கா” என்றதும் லில்லியால் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. இன்ப அதிர்ச்சி தாக்கியதில் சந்தோஷத்தின் உச்சத்திலிருந்தாள். “வாங்க அக்கா. எப்படி இருக்கிங்க?” “நல்லா இருக்கேன். நீ எப்படிமா இருக்க? இவன் என் தம்பி கணியமுதன். இவங்க என் குழந்தைகள்” என்று ரோஜா தன்னுடன் வந்தவர்களை அறிமுகபடுத்தினாள். லில்லிக்கு கணியமுதனைத் தெரியாதபோதும் அவர்களின் உறவுக்காரனாக இருப்பான் போல என்று எண்ணிக்கொண்டு ஒரு ஹாய் சொல்லிவைத்தாள். ”அம்மா வரலையா அக்கா?” “அவங்களுக்கு கொஞ்சம் வேலைம்மா. இன்னொருநாள் வரேன்னு சொன்னாங்க.”

ரோஜா லில்லியின் படிப்பு மற்றும் வேலைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கும்பொழுதே கணியமுதன் செவ்வந்திக்கும் ஃபோன் செய்ய, அவளும் தன் குழந்தைகளுடன் ஆவலாய் லில்லியைக் காண வந்தாள். அவர்களையும் லில்லி அன்போடு உபசரித்தாள். இத்தனை வருடம் கழித்தும் தன் கமலியின் குடும்பம் அவள்மேல் அதே நேசத்துடன் இருப்பதை எண்ணி பெருமையாக இருந்தது லில்லிக்கு. அவர்களைப் பற்றி கேட்டபோது இங்குதான் பக்கத்து தெருவில் அவர்களது மாமியார் வீடு என்றனர். எங்கெங்கோ அலைந்துவிட்டு மறுபடியும் பக்கத்து பக்கத்து தெருவிலிருந்தும் இத்தனை வருடம் பார்க்கமுடியவில்லை என்பதைச் சொல்லிச் சிரித்துக்கொண்டனர். ”நேத்து அம்மாவை கோவிலில் பார்த்தேன்மா. அதுதான் அவங்ககிட்ட வீடு எங்கேன்னு கேட்டேன். இங்கேயே இருந்ததால இன்னைக்கே உன்னைப் பார்க்கலாம்னு வந்தோம்” என்றாள் ரோஜா.

“நீ ரொம்ப வருஷமா தேடிட்டு இருந்த உன் தோழியை உன்கிட்ட கொண்டுவந்து சேர்த்துட்டேன் பார்த்தியா?” என்று சிரித்தாள் லில்லியின் தாய் பூங்கொடி. அனைவரும் சிரிக்க, நேரம் அழகாக கழிந்தது. ”கமலி எங்கே அக்கா? அவ ஏன் வரலை? என்னை மறந்துட்டாளா?” லில்லியின் ஆர்வத்தைப் பார்த்த ரோஜா சிரித்துக்கொண்டே, “அவ உன்னை மறக்குறதா? நீ வேறம்மா. அவ உன்னைப்பத்தி பேசாத நாளே இல்லை. அவளை தஞ்சாவூரில் கட்டிக்கொடுத்திருக்கோம். இன்னும் இரண்டு வாரம் கழிச்சு இங்க வருவா” என்றாள். “பாட்டி எப்படி இருக்காங்க அக்கா?” “பாட்டி இறந்துட்டாங்க” என்றான் கணியமுதன்.

“நான் கமலியை எங்கெல்லாமோ தேடினேன். முகநூலில் அவள் விவரங்களைப் பகிர்ந்தேன். ஆனால் முழுத் தோல்வி எனக்கு.” அதற்கு கணியமுதன், “கமலியும் அப்படித்தான். ஏதோ ஒருவிதத்தில் அவளைக் கவரும் பெண்களிடமெல்லாம் அவர்கள் பெயர் லில்லியா எனக் கேட்பாள். உங்களைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். வார்த்தையே வரவில்லை. அப்புறம் எனக்கு ஒரு காதலியிருக்கா. இன்னும் சில மாதங்களில் கல்யாணம். அவகிட்டையும் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கேன். அவளுமே உங்களைத் தேடினா. இப்போ அவகிட்ட சொன்னா ரொம்ப சந்தோஷப்படுவா” என்றான். இவன் ஏன் இவ்வளவு ஆர்வமாக பேசுகிறான்? இவனை நான் இதற்கு முன் பார்த்ததாக நினைவே இல்லையே. இவனுக்கு எப்படி என்னைப்பற்றி தெரியும்? எப்படி என்னைப் பிடிக்கிறது? ஒருவேளை கமலி சொல்லியிருப்பாளோ என்று நினைத்துக்கொண்டாள் லில்லி.

அனைவருக்கும் சிற்றுண்டி எடுத்து வந்தாள் பூங்கொடி.  “கமலி ஃபோன் நம்பர் இருக்கா? தரமுடியுமா?” லில்லி ஆவலாய் கேட்டாள். கணியமுதன் எண்களைச் சொல்ல, அதை  சந்தோஷமாகவே தன் அலைபேசியில் பதிவு செய்துகொண்டாள். அதற்குமேல் லில்லியின் முழுகவணம் அவர்களிடத்தில் இல்லை. வெளியே கேட்பதற்கு மட்டும் பதில் உரைத்தாலும், உள்ளுக்குள் கமலியிடம் பேசும் தருணத்தைப்பற்றி கற்பனை செய்துகொண்டிருந்தாள். தன் குரலைக் கேட்டதும் கமலி எப்படி ரியாக்ட் செய்வாள். அவளிடம் என்ன பேசலாம்? என்று யோசித்தாள். “எல்லோரும் ஒருநாள் வெளியே சென்று வரலாம்” என்று செவ்வந்தி சொன்னபோது கமலியும் இங்க வரட்டும் சேர்ந்து போகலாம் என்றுவிட்டாள். “ஒருநாள் எங்க வீட்டுக்கு வாம்மா” என்று ரோஜா அழைத்தபோது கமலியுடன் அவர்கள் வீட்டில் செலவழிக்கப்போகும் நேரங்களை எண்ணி மகிழ்ந்தாள்.

பூங்கொடியிடம் சொல்லிவிட்டு கமலியின் குடும்பம் வாசலுக்குச் சென்றுவிட கணியமுதன் மட்டும் லில்லியின் அறையில் தேங்கிநின்றான். “லில்லி, நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லனும். யார்கிட்டையும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க. உங்க அம்மா அப்பாகிட்ட கூட சொல்லக்கூடாது” என்று தயக்கமாகச் சொல்ல, லில்லிக்கு படபடப்பாக இருந்தது. “என்ன? என்ன சொல்லணும்?” என்றாள் பயத்துடன். “அது. வந்து. இப்போ கணியமுதன்தான் கமலி” என்றான். அவளுக்கு புரியவில்லை என்றாலும் ஏதோ விவரீதம் என்றுமட்டும் உள்ளுணர்வு சொல்லியது.

“என்ன சொல்றீங்க. எனக்கு புரியலை.” “கமலிதான்மா கணியமுதனா மாறியிருக்கா.” அப்பொழுதும் அவளால் முழுவதுமாக புரிந்துகொள்ளமுடியவில்லை. ஒருவேளை கமலி இறந்துவிட்டாளா? அவள் ஆவி இவனுள் புகுந்துவிட்டதா? என்று நினைத்துக்கொண்டு, “ஏன் அப்படி?” எனக் கேட்டாள். “மருத்துவர்கள் ஆண்களுக்கான அறிகுறிகள்தான் அதிகம் தெரிகிறது. அதனால் அப்படி மாறிவிடுவதுதான் நல்லது என்றார்கள். எத்தனையோ மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகே இந்த முடிவு” என்றபோதுதான் அவன் சொன்னதன் பொருள் புரிந்து அதிர்ந்தாள். உடல் நடுங்கியது. தன்னைச் சுதாரித்துக்கொண்டு அவனை நன்றாக பார்த்தாள். அவளால் எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவள் கண்களுக்கு அவன் ஒரு ஆணாக மட்டுமே தெரிந்தான்.கிட்டதட்ட 20 வருடங்களுக்குமேல் கடந்துவிட்டதால் லில்லிக்கு கமலியின் முகம் நினைவிலில்லை. அவள் பெயரும் அவளுடன் பழகிய நினைவுகளும் இதயத்தில் பதிந்த அளவு முகமோ சாயலோ பதியவில்லை.

திருநிறைச் செல்வி, திருமதி என்றெல்லாம் அழைக்கப்பட வேண்டிய என் கமலி திருநம்பியாக மாறிவிட்டாளா? கடவுளே என்ன கொடுமை இது? உள்ளுக்குள் வருந்தினாலும் மேலே விசாரித்தாள். “அப்போ கமலியைத் தஞ்சாவூரில் கட்டிக்கொடுத்திருப்பதாகச் சொன்னது?” ”அது. இந்த ஊர் உலகத்துக்கு. எங்க பேர் கெட்டுடக்கூடாதுன்னு அப்படி சொல்லி வெச்சுருக்காங்க. என்னால் உன்னிடம் பொய் சொல்லமுடியவில்லை. உனக்கு மட்டும் நான் என்னைக்கும் கமலிதான். உன்னைப் பார்த்ததும் கமலியா உன்னை அப்படியே கட்டிப்பிடிச்சிக்கணும் போல இருந்தது. நீ என்னைத் தேடினதைப் பற்றி தெரிஞ்சதும் கண் கலங்கிடிச்சு. ஆனா கணியமுதனா என்னால் எதையும் வெளிப்படுத்தமுடியலை.” “அப்போ நீங்க தந்த நம்பர்?” “அது என் நம்பர்தான்.” “நிஜமாவா?” “ஆமாம்மா. வேணும்னா அழைத்துப்பார்.”

சொல்லியவன் சாதாரணமாகக் கிளம்பிவிட, கேட்டவளோ பித்துப்பிடித்தவள் போல் அப்படியே அசையாமல் அமர்ந்துவிட்டாள். மேலே யோசிக்கவே பயமாக இருந்தது. இப்போ என்ன செய்வது? என்ற கவலை வேறு. தாய் பூங்கொடி அவளை சாப்பிட அழைத்தபோதுதான் சுயநினைவிற்கு வந்தவள் பாத்ரூமிற்குச் சென்று வெடித்து அழுதாள். நூற்றில் ஒன்றாக இது பொய்யாக இருக்கக்கூடாதா? கமலி என்னிடம் சும்மா விளையாடினேன் என்று சொல்லமாட்டாளா என்ற நப்பாசையில் வெளியே வந்து வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு அவன் கொடுத்த கமலியின் எண்ணிற்கு அழைத்தாள்.

கணியமுதன்தான் எடுத்தான். “சொல்லும்மா. இப்போ நம்புறியா?” “ம். என்னோட பழகிய நிகழ்வுகள் ஏதாவது ஞாபகம் இருக்கா?” “ஓ! இருக்கே!” “என்ன அது?” “நாம சின்ன வயசுல விளையாடும்போது கதவு லாக் பண்ணிட்டு திறக்கத் தெரியாம விழிச்சோம். கதவை ரொம்பநேரமா தட்டினோம். உங்க அப்பா வந்து சுவறேறி குதிச்சு திறந்துவிட்டு நம்மளை திட்டினார்.” இதற்குமேல் என்ன இருக்கிறது? என்னவென்று விசாரிப்பது? எப்படிப்பட்ட நிகழ்வு இது. எனக்கும் கமலிக்கும் மட்டுமான தனிப்பட்ட நிகழ்வு. இத்தனை வருடமானாலும் மறக்கமுடியாத நினைவு. அதை இவன் குரலில் கேட்கும்படி நேர்ந்துவிட்ட கொடுமையை என்னவென்று சொல்வது?  எங்கேயோ இருந்த தோழியைப் பக்கத்தில் காட்டிவிட்டு, என்பால் அவள் கொண்ட நேசத்தை நிறம் மாறாமல் திருப்பிக்கொடுத்துவிட்டு அதை முழுவதுமாக அனுபவிக்கமுடியாமல் செய்துவிட்டாயே விதியே! என்று வெதும்பினாள்.

”உன்னைப் பார்த்ததை எனக்கு தெரிந்த அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தேன். என் வருங்கால மனைவி மலர்விழியிடமும் சொல்லிவிட்டேன். அவ உன்னைப் பார்க்க துடிக்கிறா. அப்புறம் எனக்கு தெரிஞ்ச ஒரு அக்காகிட்ட சொன்னேன். அவங்க என்னடா சின்ன வயசு தோழிய பார்த்த சந்தோஷக்களை அப்படியே உன் முகத்துல சொட்டுதேன்னு சொல்லி சிரிச்சாங்க” என்று சந்தோஷித்தான். லில்லியால் அவன் சந்தோஷத்தில் கலந்துகொள்ளமுடியாமல் வெறும் ம் சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். “நானும்தான் என் நண்பர்களிடம் சொல்ல நினைத்திருந்தேன். ஆனா இப்போ என்னன்னு சொல்றது? சின்ன வயசு தோழி கிடைச்ச சந்தோஷத்தை சொல்றதா? அவ இப்படி ஆகிவிட்ட வருத்தத்தை சொல்றதா? எதுவுமே வேண்டாம் என்று விட்டுவிட்டாள். என் கமலி எங்கேயோ ரொம்ப சந்தோஷமா இருக்கான்னு நினைச்சேனே! இப்படியாகுறவர எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாளோ! யார் யாரெல்லாம் அவளைக் கேலி செஞ்சியிருப்பாங்களோ! அந்த நேரத்தில் நான் அவ பக்கத்தில் இல்லாமல் போனேனே!” என்று நினைத்து அழுதாள்.

லில்லியால் அந்த தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. கமலிக்கும் கணியமுதனிற்குமிடையில் அவள் மனம் ஊசலாடிக்கொண்டிருந்தது. இரண்டு மூன்றுமுறை கணியமுதனும் மலர்விழியும் லில்லியின் வீட்டிற்கு வந்து அவளைப் பார்த்தனர். கணியமுதன் சொன்னதைப் போல் மலர்விழிக்கும் லில்லியைப் பார்த்ததில் சந்தோஷமே.

கணியமுதனைப் பற்றி தெரிந்துகொள்ள லில்லி மலர்விழியிடம் தனியாக அலைபேசியில் பேச நினைக்க, கணியமுதனும் மலர்விழியின் எண்ணைக் கொடுத்தான்.. அந்த அலைபேசி உரையாடலில் கணியமுதனின் பதினைந்தாவது வயதில்தான் அனைத்து அறுவைச் சிகிச்சைகளும் நடந்தது. மலர்விழிமேல்கொண்ட அலாதி காதலே கணியமுதனின் இந்த மாற்றத்திற்குக் காரணமென்று மலர்விழி சொல்ல, லில்லி கொதித்துப்போனாள். வேறு வழியில்லாமல் நடந்ததாக இதுவரை நினைத்திருந்தது வேண்டுமென்றே நடந்ததாக மலர்விழி சொல்வதை லில்லியால் ஏற்கமுடியவில்லை. “அப்படி அவளும் அவள் காதலும்தான் முக்கியமென்றால் அதன்பிறகு என்னை ஏன் சந்திக்க வேண்டும்? என்னை ஏன் இப்படி இரண்டிற்குமிடையில் தவிக்கவிட வேண்டும்? என் கமலி எங்கேயோ இருக்கான்னு நான் நிம்மதியா இருந்திருப்பேனே! அவன் காதல் என் நட்பை மறைச்சுடுச்சா? சே இவன் என் கமலி இல்லை! என் கமலியாக இருந்தால் இப்படி செய்வாளா?” என்று மனதிற்குள் கோபம் கொண்டாள்.

அதன்பின் வந்த நாட்களில் லில்லி கணியமுதனிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்க்க நினைத்தாள். பேசுவதைத் தவிர்த்தபோதும் லில்லியால் கமலியை மறக்கமுடியவில்லை. கமலி மட்டும் இருந்திருந்தால் இப்படியா வீட்டிலிருப்போம்? எப்படியெல்லாம் அரட்டையடிப்போம், ஊர் சுற்றுவோம், கடைக்குப்போவோம் என்று வருந்தினாள். லில்லியொன்றும் திருநம்பி திருநங்கைகளை தவறாக நினைக்கும் ரகமல்ல. சகமனிதர்களாக அவர்களை நடத்த வேண்டும். அவர்கள் மனம் கோணாமல் பழக வேண்டுமென்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால் கமலியின் இடத்தில் கணியமுதனை வைத்துப்பார்க்க அவளுக்கு மனம் வரவில்லை. கமலிமேல் வைத்திருக்கும் அதே நேசத்தை கணியமுதன் மேல் வைக்கவும் முடியவில்லை. நன்கு யோசித்து ஒரு முடிவிற்கு வந்தாள் லில்லி. அது. கமலியையும் கணியமுதனையும் தனித்தனியாக பிரிப்பது என்று!

கணியமுதனை போனில் அழைத்தாள். பரஸ்பர நலம் விசாரிப்பிற்கு பின் “கணியமுதன், நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” “கேளும்மா.” “நீங்க மலர்விழிக்காகவும் அவங்கமேல வெச்சிருக்க அன்புக்காகவும்தான் இப்படி மாறிட்டீங்களா?”  “இல்லம்மா எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. அவளும் அப்படித்தான் நினைச்சிருக்கா. ஆனா நான் மருத்துவர் சொல்றதைக் கேட்டுதான் இப்படி செஞ்சேன். வேற எந்த காரணமும் இல்லைம்மா.” லில்லிக்கு யார் சொல்வது உண்மை என்றே கண்டுபிடிக்கமுடியவில்லை. இதைப் பற்றி மேலே ஆராயவும் அவளுக்கு பிடிக்கவில்லை. அதை அப்படியே விட்டுவிட்டாள். அவள்தான் புது முடிவை எடுத்துவிட்டாளே! அதை கணியமுதனின் மனதை புண்படுத்தாமல் சொல்ல வேண்டுமே என்ற யோசனை மட்டும்தான் அவளுக்கு.

“கணியமுதன், நான் ஒன்னு சொன்னா தவறா நினைச்சிக்கமாட்டீங்களே?” “சொல்லும்மா.” “அது. நான் கமலிமேல் நிறைய அன்பு வெச்சுருக்கேன். அவ என் தேவதை. இத்தனை வருஷமா என் கமலி எங்கேயோ சந்தோஷமா இருக்கான்னு நினைச்சிட்டு இருந்தேன். மன்னிச்சிடுங்க கணியமுதன். உங்களை என்னால் கமலியாக நினைத்துப்பார்க்கமுடியவில்லை. உங்களை நான் கணியமுதன் என்ற புதிய நண்பனாக நிச்சயம் ஏற்கிறேன். ஆனால் உங்களை கமலியாக நினைக்கவோ அல்லது அவள்மேல் வைத்திருக்கும் அதே அளவு பிரியத்தை உங்கள்மீது வைப்பதோ என்னால் முடியாது. என் கமலிக்குன்னு ஒரு தனி இடம் இதயத்தில் இருக்கு. அது அவளுக்கு மட்டும்தான். நா சொன்னது தவறா இருந்தா மறுபடியும் மன்னிப்பு கேட்டுக்கறேன்.” “பரவாயில்லைமா நீ கமலிமேல் எவ்வளவு பாசம் வெச்சுருக்கன்னு புரியுது. அந்த பாசம்தான் உன்னை இப்படி பேசவைக்குது. நீ என்னை எப்படி நினைத்தாலும் எனக்கு பரவாயில்லை. உன்னைப் பார்த்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சி. உன் நட்பு மட்டும் இருந்தால் அதுவே போதும்” என்றான். அவனுக்கும் அவள் மனநிலை நன்கு புரிந்தது. கமலியாக இருந்த தன் மேல் அவள் கொண்ட அலாதி அன்பை நினைத்து கண்கள் கலங்கியது.

சிறிதுநேரம் பேசிவிட்டு மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டுவிட்டு அலைபேசியை அணைத்தாள். மீண்டும் கமலியின் நினைவில் ஒரு பாட்டம் அழுது தீர்த்தவள், கமலியையும் கணியமுதனையும் தனித்தனியாக பிரித்தாள். கணியமுதனை தன் புதிய நண்பன் என்று இதயத்திற்கு கட்டளைப் பிறப்பித்தவள், கமலியைத் தன் உயிரில் கலந்து கரைத்துவிட்டிருந்தாள். இனி அவள் இயல்பாக இருப்பாள். கணியமுதனுடன் சாதாரணமாக பேசி பழகுவாள். அவளைப் பொறுத்தவரை கணியமுதன் என்ற நண்பன் வேறு. உயிரோடு உயிராய் கலந்துவிட்ட அவள் தோழி கமலி  வேறு!

49 கருத்துகள்:

 1. காலை வணக்கம். கதையை வாசித்து விட்டு அப்புறம் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  ஜீவி சாருக்கும் ஸ்ரீராமுக்கும் இந்த நாள் இனிய நாளாக
  இருக்கட்டும்.
  தொற்று இல்லாத நாட்களை இறைவன் அருள வேண்டும்.
  எல்லோரின் மனக் கிலேசத்தையும் இறைவன்
  போக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா..  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 3. புது விதமான கதை. பூக்களின் பெயர்களிலே
  தோழிகள். சில சமயம் குழம்பிவிட்டது.
  கொஞ்சம் மாற்றி வைத்திருகலாம்.
  கமலி லில்லி தோழிகளின் நட்பு
  விவரிக்க முடியாத மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
  கம்லி கனியமுதனாக மாறியதில் தவறில்லை.

  அதை லில்லியால் ஏற்றுக் கொள்ள முடியாததும் புரிகிறது.

  அதைப் பிரித்துப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை
  லில்லி அடைந்ததே சிறப்பு.
  வித்தியாசமான கரு. மனம் நிறை வாழ்த்துகள் அபிநயாவுக்கு.

  புதிய கோணத்தில் கதை கொடுத்ததற்கு ஸ்ரீராமுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் வல்லிம்மா. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஸ்ரீராம். எபிக்கு புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள். பிரார்த்தனைகள். கொஞ்சம் நல்ல செய்தியாக வட மாநிலங்களில் தொற்று குறைவதாகச் சொல்கிறார்கள். அது அப்படியே உண்மையாகி முற்றிலும் குறையப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 7. வித்தியாசமான கதைக்கரு. ஆனால் கணியமுதன், என் தம்பி என அறிமுகம் செய்யும்போதே மனசில் ஏதோ தோன்றினாலும் இதை எதிர்பார்க்கவில்லை. நீண்ட கதை. நிறையக் கதாபாத்திரங்கள். ரேவதி சொல்கிறாப்போல் பெயர்கள் மனதில் பதியவும் இல்லை. கமலி/லில்லி தவிர்த்து மற்றப் பெயர்கள் எல்லாமே கொஞ்சம் யாரு/என்னனு யோசிக்க வைக்கிறது. அதோடு உரையாடல் இல்லாமல் இருப்பதாலும் கொஞ்சம் கட்டுரை படிப்பது போல் தோன்றுகிறது. எனினும் இதுவரை யாரும் தொடாத ஓர் கதைக்கரு. லில்லியின் மனம் முதலில் ஏற்காவிட்டாலும் பின்னர் புரிந்து கொண்டு கமலியைக் கொன்றுவிட்டுக் கணியமுதனை நண்பனாக ஏற்றது சிறப்பு. எல்லாவற்றிலும் சிறப்பு என்னவெனில் கமலியின் குடும்பத்தினர் அவள் மாற்றத்தை முற்றிலும் ஏற்றுக் கொண்டு வீட்டோடு அவளை வைத்திருப்பதும், திருமணம் செய்ய நினைப்பதும் தான்.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 9. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 10. //கமலியின் பாட்டி தன் மூன்று பேத்திகளின் கண்களில் துளியோண்டு அமர்தாஞ்சலத்தைத் தடவ, அவர்கள் அழுதுகொண்டே உறங்கிவிட்டனர். //
  புது செய்தியாக இருக்கிறது.

  செவ்வந்தி, ரோஜா இருவரின் அன்பான அரவணைப்பில் கமலிகணியமுதன் இருப்பது மகிழ்ச்சி.

  //திருநம்பி திருநங்கைகளை தவறாக நினைக்கும் ரகமல்ல. சகமனிதர்களாக அவர்களை நடத்த வேண்டும். அவர்கள் மனம் கோணாமல் பழக வேண்டுமென்பதெல்லாம் அவளுக்குத் தெரிந்துதான் இருந்தது. ஆனால் கமலியின் இடத்தில் கணியமுதனை வைத்துப்பார்க்க அவளுக்கு மனம் வரவில்லை.//

  சிறு வயது தோழி கமலியின் நினைவுகளை எப்படி மறக்க முடியும்? என்றும் லில்லியின் நினைவுகளில் வாழ்வாள் கமலி.

  லில்லியின் புது நட்பும் தொடரட்டும்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் மாமியார் என் பெரிய நாத்தனாருக்கும், என் கணவருக்கும் கண்ணில் சின்ன வெங்காயத்தைப் பிழிந்து விடுவார்களாம். சொல்லுவாங்க! இத்தனைக்கும் அப்போல்லாம் அதிகக் குழந்தைகள் இல்லை. ஆனாலும் இவங்க தொந்திரவு தாங்கலைனு இப்படிச் செய்வாங்களாம்.

   நீக்கு
  2. இப்படியெல்லாம் செய்வார்கள் என்று இப்போதுதான் கேள்வி படுகிறேன்.

   நீக்கு
 11. அனைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்..

  பதிலளிநீக்கு
 13. இந்தக் கதையின் வாசிப்பு தமிழ்ப் பெயர்களின் மீது தீராத காதலை
  ஏற்படுத்தியிருக்கிறது

  கனியமுதனா? கணியமுதனா?

  ஆதிப் பதிவில் (மூலப் பதிவில்)
  சரி பார்த்துச் சொல்லுங்களேன், ஸ்ரீ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுகதையின் அத்தனை பெயர்களுமே நிரடல். கதையின் போக்கைத் தடை செய்கின்றன.

   நீக்கு
 14. பெயரிலிருந்த தமிழ் ஆர்வம், கதை சொல்லலில் இல்லாமல் போனது ஆச்சரியமே..

  கணவனுடன் சேட் செய்தவாறு
  ரியாக்ட்
  நம்பர்
  கதவை லாக்

  -- என்று அங்கங்கே ஆங்கிலப் பதப் பிரயோகங்கள்..

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் முகம் மலர அன்பான காலை வணக்கங்கள் ! தொற்று நீங்கி, அனைவரும் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் .

  வித்யாசமான நல்ல கதை! வாழ்வில் ஏற்படும் ஒரு எதிர்பாராத மாற்றமும் , அதன் விளைவு ஏற்படுத்தும் தாக்கமும் விளக்கிய விதம் அருமை. எனக்கும் பெயர்கள் சற்று குழப்பியது. பூப்போன்ற மனதினை பிரதிபலிக்கின்றதோ பெயர்கள்? குறிஞ்சி என்கிற பெயரை படித்த போது அரிதான ஏதோ ஒன்றை சொல்லப்போகிறார் என நினைத்தேன். சுபமாக முடித்தது மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
 16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. அழகான குட்டியூண்டு கதை. அந்தக் குட்டியூண்டு குட்டிக் கதையில் ஆழப்பதிந்த அன்பின் அடிச்சுவடு. அது சிதையுண்டு சின்னாப்பின்னப்பட்ட அவலம். எவ்வளவு நேர்த்தியாகச் சொல்லியிருக்க வேண்டிய கற்பனை?.. என்ன ஆச்சு, தெரியவில்லை..

  பதிலளிநீக்கு
 18. லில்லி, கமலி, பூந்தளிர், பூபதி ராஜன், பூங்கொடி, செவ்வந்தி, முத்தழகன், முல்லை,
  ரோஜா, குறிஞ்சி (மூதாட்டியாரின் பெயராக்கும்!) முகிலரசன், பூவண்ணன், மலர்விழி

  ஒரு சின்ன ஆய்வு:

  ஒரு கதாபாத்திரம் மட்டும் பெயர் சூட்டப்படாமல் தப்பித்தார். வாசகர்கள் யாராவது கண்டுபிடித்துத் தான் சொல்லுங்களேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்தடிக்குப் பத்தடியான ஒரு சின்ன அறை. அந்த அறையில் பதினைந்து பேர் குறுக்கும் நெடுக்குமாக உலாவிக் கொண்டிருந்தால் அறையில் நடப்பதை கவனிப்பதற்கு இடையூறாக இருக்கும், இல்லையா?

   அந்த அறை போன்றதே ஒரு சிறுகதைக்கான விவரிப்புக் களம். இத்தனை பேருக்குப் பெயர் சூட்டி உலாவ விட்டது தான் கதையின் நேர்படக் கூறு விவரிப்புக்கு இடையூறாகப் போய்விட்டது. எந்தப் பெயர் முக்கியம், எந்தப் பெயர் முக்கியமில்லை என்று வாசிக்கும் நேரத்தில் கவனத்தில் கொள்ள முடியாமல் தடுத்து விட்டது. இரண்டு மூன்று கதாபாத்திரங்களுக்கு மட்டும் பெயர் சூட்டி கவனத்தை சிதறடிக்காமல் இருந்திருப்பின் கதை சொன்னதின் நேர்த்தி கூடியிருக்கும்.

   நீக்கு
  2. ரோஜாவின் குழந்தைகளுக்குத் தான் பெயர் சூட்டவில்லைனு நினைக்கிறேன்.

   நீக்கு
  3. இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு ஈஸியான விஷயம் அல்ல. நானே ஒரு பேப்பரில் வரிசையாக ஒவ்வொரு பெயரையும் எழுதிக் கொண்டு தான் இங்கு வரிசை படுத்தியிருக்கிறேன். திமுதிமுன்னு அத்தனை பெயர்கள்.
   கதாசிரியர்க்குக் கூட எந்தப் பெயரை விட்டோம் என்று டக்கென்று சொல்ல முடியாது.
   அப்படி விட்டதும் நல்லதுக்குத் தான். இல்லேன்னா அந்தப் பெயர் ஒன்று பெயர்ச் சுமையைக் கூட்டியிருக்கும். :))

   நீக்கு
  4. முல்லையின் மாமியாரோ? என் கணிப்பும் தவறாக இருக்கலாம். கதையை மறுபடி வரி பிசகாமல் படிக்க வைத்தமைக்கு நன்றி சகோதரரே.

   நீக்கு
 19. ஹலோ அபி!!!! ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்தும் உங்கள் எழுத்தை வாசித்தும்.

  இன்று எபி யில் உங்கள் கதை!! ரொம்ப வித்தியாசமான கதைக்கரு. அழகான கதைக் கரு. நல்லா எழுதியிருக்கீங்க அபி பாராட்டுகள்.

  திருநங்கைகள் தான் அதிகம் பேசப்படுபவர்கள். திருநம்பிகள் பேசப்படுவதில்லை.

  நல்ல படைப்பு! வாழ்த்துகள் பாராட்டுகள் அபி..முடிவு நல்லாருக்கு

  கீதா

  பதிலளிநீக்கு
 20. அபி இதே கதையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றிப் பாருங்களேன்....கொஞ்சம் ஆறப் போட்டுவிட்டு மீண்டும் எடுத்து வாசித்துப்பார்த்தால் உங்களுக்கே மெருகேற்றத் தோன்றும். இது ஒரு சின்ன பரிந்துரைதான். உங்களால் முடியும் என்பதால் அதுவும் நீங்கள் அதிகமாக வாசிக்கக் கூடியவர் என்பதால் இந்தப் பரிந்துரை!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 21. கணியமுதன் என் தம்பி என்பதை வாசித்த போதே கொஞ்சம் என் மனம் பக் பக் என்றது...ஏனென்றால் கதையில் பக்கத்துவீட்டு கமலிக்கு இரு சகோதரிகள்...மூன்று பேர் தான்....இவர்கள் வரும் போது கமலி வராமல் இருப்பாளா? என்றும் தோன்றியது...தம்பி என்றதும் என் மனம் பக் பக் என்றது ஏன் தெரியுமா? ஹா ஹா ஹா வேறு ஒன்றுமில்லை..

  நானும் திருநர் கதை ஆனால் கன்டென்ட் வேறு....எழுதி வழக்கம் போல பல மாதங்களாய் சில வருடங்களாய் எனலாம்...ஆறிக் கொண்டிருக்கிறது. முடிவு மனதில் இருந்தாலும் முடிக்காமல் தொடர்ந்து எழுத முடியாமல் அப்படியெ இருக்கிறது. நான் நேரில் கண்ட, பழகிய, மற்றும் பேட்டி எடுத்த திருநங்கைகள், ப்ளஸ் ஒரு திருநம்பி இப்படி அதை வைத்து திருநர்களைப் பற்றிய கதை...அவர்களின் மன நிலை சமூகம் இப்படிப் போகும்...

  எப்போ எழுதி முடிப்பேன் என்று தெரியவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால் கொஞ்சம் கணியமுதன் என்றதும் ஊகித்துவிட்டேன்...ஆனால் முடிவு யூகிக்க முடியவில்லை. நல்ல முடிவு..வித்தியாசமான முடிவு..அபி!

   பொதுவாக திருநங்கைகள் குறித்தெனும் பேசுவாங்க திருநம்பி அதிகம் பேசப்படுவதில்லை என்பதால் என் கதையிலும் திருநம்பி வருவார்.

   நீங்களும் அதைச் சொன்னதற்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

   கமலியையே நினைத்திருக்கும் லில்லிக்கு கமலியோடு சுதந்திரமாக இருப்பது போல் மருத்துவ உதவியால் உருமாற்றம் அடைந்த கணியமுதனொடு? அந்த இடத்தில் அந்த பாயின்ட் எனக்கு மிகவும் பிடித்தது. அதுதான் என் எண்ண ஒட்டமும்...

   வாழ்த்துகள் அபி

   கீதா

   நீக்கு
 22. கணியமுதனாகும் வரை கமல் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள்! மனம் வேதனைப்பட்டது. பாவம் இப்படியானவர்கள்.
  ஆனால் கணியமுதனுக்கும் ஒரு வாழ்க்கை கிடைக்கிறதே நல்ல விஷயம்.

  முடிவு அருமை

  பாராட்டுகள், வாழ்த்துகள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 23. ஸ்ரீராம், அபியின் தளம் சென்று ரொம்ப நாளாகிவிட்டது. எனவே இந்த நல்ல வித்தியாசமான கதையை இங்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

  கீதா

  பதிலளிநீக்கு
 24. நல்லதொரு கோணம்..
  வித்தியாசமான கதை...
  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 25. அபி! என்னடா இது பெரும்பான்மையோர் இங்கு அதிகப் பெயர்கள் குழப்புகிறது என்று சொல்லியிருப்பதைப் பார்த்து எபி வாசகர்கள் எல்லாருக்கும் வயசாயிடுச்சுன்னு கணக்குப் போட்டுடாதீங்க!!! ஹாஹாஹா நானும் அதைச்சொல்லவந்தேன் ஹிஹிஹிஹி!!

  கீதா

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் சகோதரி

  தாங்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது. அழகான பெயர்கள். (அதுவும் மலர்களின் பெயர்கள்.) அருமையான கதையோட்டத்துடன் படிக்க நன்றாக உள்ளது.முடிவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். மேலும் பல கதைகள் எழுதிட மனப்பூர்வமான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 27. குழந்தை மன ப்ரியத்தின் தொடர்ச்சியை பெரியவர் ஆன பின்பும் நிலைத்திருக்கும் நிலையை நெகிழ்வாக
  படம் பிடித்துக் காட்டிய கதாசிரியருக்கு
  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 28. சிநேகிதியை சினேகிதனாக பார்ப்பது கஷ்டம்.. ஒரு மாறுதலை கௌரவமாக ஏற்றுக் கொண்ட குடும்பம். கதை புதுமாதிரியனது. நன்று. அன்புடன்

  பதிலளிநீக்கு
 29. எ.பி.க்கு வருகை தந்திருக்கும் புதிய எழுத்தாளருக்கு நல்  வாழ்த்துகள். தேர்ந்த எழுத்தாளர்கள் கூட தொடுவதற்கு யோசிக்கும் கரு. சிறுகதை என்பதற்கு பாத்திரங்கள் அதிகம். பெயரும் சற்று குழப்புகிறது. மற்றபடி நம்பிக்கை அளிக்கக்கூடிய எழுத்து. 

  பதிலளிநீக்கு
 30. கத்தி மேல் நடப்பது போன்ற கதையை எடுத்துக் கொண்டு அழகாக முடித்திருக்கும் ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம். வணக்கம். எல்லாருக்கும் வணக்கம். இந்த பதிவையும் கருத்துக்களையும் பார்த்ததில் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கொஞ்சநாளா வேலை பளு காரணமா மனசு பாரமா இருந்தது. இப்போ இதைப் படிச்சப்போ ரொம்ப லேசா இருக்கு. நன்றி. நன்றி. பெயர்கள் பற்றிய கருத்துக்களையும் இனிமையாகவே எடுத்துக்கொண்டேன். அதைப் படிக்கையில் இதழ்கடையில் சிரிப்பே மலர்ந்தது. கண்டிப்பா இந்தக் கதையை மெருகேற்றும்போது குறைச்சிடலாம். பூவில் ஆரம்பித்த பெயர் பூக்களே நிறைந்திருக்கட்டும் என்று வைத்தது. ஏன் குறிஞ்சி மூதாட்டிக்கு இருக்கக்கூடாதா? அவரும் ஒரு காலத்தில் இளம்பெண்ணாய் இருந்தவர்தானே. எப்பவுமே மூதாட்டிக்கு அன்னம்மா பொன்னம்மாவே இருக்கனுமா? அதான் ஒரு மாறுதல். என்னங்க செய்யறது அழகான மணமான பெயர்களை தூக்கி எறிய மனசு வரலை. அதான் வாரி இரைச்சிட்டேன். இந்த பெயர்கள் உங்க வாசிக்கும் கவனத்தைத் தடுத்திருந்தா மன்னித்துவிடுங்க. இந்த கதையிலிருக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் பெயர் சொல்லும் பாத்திரங்களாக இருக்கட்டுமே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இதழ்கடையில் சிரிப்பே மலர்ந்தது..//

   //ஏன் குறிஞ்சி மூதாட்டிக்கு இருக்கக்கூடாதா?//

   என் மனம் ஒன்றிய பின்னூட்டங்கள் உங்களைக் கவர்ந்ததில் சந்தோஷம்.

   நீக்கு
 32. இந்த கதையை வெளியிட்ட ஸ்ரீராம் சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அபிநயா..    எங்கே வராமல் இருந்து விடுவீர்களோ என்று பார்த்தேன்.  இனி வரும் காலங்களில் எங்கள் பிளாக் செவ்வாய்க்கிழமைக்கென்று தனியாக கதைகள் உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாமா?

   நீக்கு
 33. வித்தியாசமான கதை. எங்கள் பிலாகில் இது வெளியாவது பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!