புதன், 17 நவம்பர், 2021

நீங்க எதற்கெல்லாம் பண பரிவர்த்தனை, எவற்றிற்கெல்லாம் டிஜிட்டல் ?

 

நெல்லைத்தமிழன் :

இங்க வளாகத்தில் (பெரும் பணக்கார மார்வாரிகள்) வளரிளம் பெண்கள் முட்டியில் முழுவதும் கிழிந்த ஜீன்ஸ், ஆங்காங்கே நூல்பிரிந்து கிழிந்திருக்கும் ஜீன்ஸ் என்று ஃபேஷன் பைத்தியக்காரத்தனத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி உடையணிவதன் நோக்கமென்ன?

# யாரிடமும் இல்லாதது அல்லது இதுவரை அறிமுகமாகாதது என்ற இருவகைப் பொருள்கள் ஒரு திருப்தியை ஏற்படுத்தும்.  புதிதாக ஏதும் செய்ய சாத்தியம் இல்லாத போது தற்சமயம் அதிகமாகக் காணப்படும் கோர சிகை அலங்காரங்கள் , இறங்கிய தோள்பட்டை துவாரங்கள் கொண்ட மகளிர் ஆடை போன்றவை தலை எடுக்கும்.  இந்தமாதிரியான ஒரு பிறழ்வுதான் டிசைனர்-டார்ன் கிழிசல் உடைகள். மாற்றம் மனித இயல்பாக இருப்பது இதை இயக்குகிறது. விற்பனை சுறுசுறுப்பு அவற்றின் காரணமாகி விடுகிறது. அது மங்கினால் அடுத்த  விபரீதம் வரும்.  பின் மெதுவாக ஃபாஷன் அடுத்த சுழற்சி ஆரம்பமாகி சிகை உச்சிக்குடுமிக்கும் கிழிசல் உடை பஞ்சகச்சம்-மடிசார் கட்டுக்கும் பயணிக்கும்.

& பழங்காலத்து பத்திரிக்கை ஜோக் ஒன்று ஞாபகம் வருகிறது. 

பிச்சைக்காரன் : " அம்மா அன்னபூரணி சோறு போட்டீங்க - நல்லா இருப்பீங்க. போட்டுக்க கிழிஞ்ச சட்டை எதுனாச்சும் இருந்தா கொடுங்க அம்மா"

பிச்சை போட்டவர் : " கிழிஞ்ச சட்டை எதுவும் இல்லையே. எல்லாம் நல்லா இருக்கற பழைய சட்டைகள்தான் இருக்கு. "

பிச்சைக்காரன் : " பரவாயில்லை அதைக் கொடுங்க - நான் கிழிச்சி போட்டுக்கறேன். "

இந்தக் காலத்தில் பிச்சைக்காரர் கிழிஞ்ச டிரஸ் கேட்டால், வீட்டில் உள்ள எல்லா ஜீன்ஸ் சட்டை பாண்ட்களும் அவருக்குக் கிடைத்துவிடும்! 

= = = = =

சென்ற வாரம் எங்களை கேள்விகள் கேட்க மற்றவர்கள் எல்லோரும் மறந்துவிட்டீர்கள். 

அதனால் இப்போ, நாங்க கேட்கிற கேள்விகளுக்கு நீங்க பதில் சொல்லுங்க. 

1) ஒரு வாசகசாலையில், கீழ்க்கண்ட புத்தகங்கள் ஒரு மேஜைமீது உள்ளன. நீங்க எந்தப் புத்தகத்தை முதலில் எடுத்துப் படிப்பீர்கள்? 

அம்புலிமாமா, ஆனந்தவிகடன், குமுதம், கல்கி, குங்குமம், துக்ளக், Readers Digest, Film fare, க்ருஹ ஷோபா, Champak, India Today, வாரமலர் - தினமலர், தினமணி கதிர். 

2) ஒரு டாக்டரின் வரவேற்பறையில், கன்சல்டேசனுக்காக காத்திருக்கிறீர்கள். டாக்டர் ஒவ்வொரு நோயாளியுடனும் அதிக நேரம் எடுத்துககொள்கிறார். நீங்கள் நெடுநேரமாகக் காத்திருந்து, அடுத்து நீங்கள்தான் உள்ளே செல்லவேண்டும் என்ற நிலையில், ஒரு முதியவரை அழைத்துக்கொண்டு, இளம் பெண் ஒருவர் வந்து, உங்களிடம், முதியவரை, உங்களுக்கு முன்னதாக அனுப்ப அனுமதி கேட்கிறார். உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

3) உங்கள் வீட்டுக்கு  gas cylinder கொண்டு வந்து delivery செய்பவருக்கு நீங்க எவ்வளவு ரூபாய் பணம் (Tips) கொடுப்பது வழக்கம்? 

4) கேஸ் சிலிண்டர் கொண்டு வந்து கொடுப்பவரிடம் கொடுக்கும் டிப்ஸ் மட்டுமே நான் பணமாகக் கையாளும் விஷயம். மீதி எல்லாமே டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டுமே. Amazon, FTH Daily, Vegetable shop POS, PayTM, PhonePe என்று எல்லாவற்றிற்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமே. நீங்க எதற்கெல்லாம் பண பரிவர்த்தனை, எவற்றிற்கெல்லாம் டிஜிட்டல் ? 

5) சமீபமாக நீங்க கையாண்ட "நாணயம்"  எது ? ஐம்பது பைசா / ஒரு ரூபாய் / இரண்டு ரூபாய் / ஐந்து ரூபாய் / பத்து ரூபாய்.  (நாணயம் மட்டுமே கணக்கு - ரூபாய் நோட்டு அல்ல) எந்த காரணத்திற்காக உபயோகித்தீர்கள்? 

படம் பார்த்து, கருத்து எழுதுங்கள் :

1) 

2) 

3) 



139 கருத்துகள்:

  1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  2. தீபாவளிக்கு பிறகு வந்த ஒரு வாட்ஸாப் மெஸேஜ், பெங்களூரில் இருக்கும் ஒரு மாலில் ஏகப்பட்ட ஓட்டைகளோடு இருந்த கிழிந்து பனியன் 1500 ரூபாய்க்கு விற்கப்பட்டது என்றது.

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. 1. ஆனந்த விகடன், குமுதம் இவைகளை விரும்பி படித்த காலம் ஒன்று இருந்தது. இப்போது அவையெல்லாம் பெரிதாக கவரவில்லை.
    வாரமலர் நன்றாக இருக்கிறது. அதில் குறுக்கெழுத்து போட்டு விட்டு, ரீடர்ஸ் டைஜெஸ்டில் ஜோக்ஸ் படித்து விட்டு, துக்ளக் தலையங்கம். குருமூர்த்தி பொறுப்பேற்றதும் துக்ளக் இன்னும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடைய அனுபவங்கள் சுவாரசியம். சமீபத்தில் முடிந்த ஒரு தொடரும் அருமை.

      நீக்கு
    2. குருமூர்த்தி பொறுப்பேற்றதில் இருந்து துக்ளக் பத்திரிகையும் வாங்குவதே இல்லை.

      நீக்கு
    3. நீங்கள் வாங்கியிருந்தால்தான் ஆச்சர்யம்

      நீக்கு
  5. 2. அந்த முதியவருக்கு வெயிட் பண்ண முடியாது என்றால் முன்னால் அனுப்ப சொல்லலாம்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    கேள்வி பதில் நன்றாக உள்ளது. அந்த காலத்திலிருந்து பிச்சைகாரர்கள் கிழிந்த டிரஸ் நிறைய போட்டுக் கொண்டாலும், அதையும் சில சமயம் ரொம்ப கிழிசல்களாக இருந்து விட்டால், மானத்தை காப்பதற்காக வேறு கலர் துணி கொண்டு ஒட்டும் போட்டும் அணிவார்கள்.அதுவே அவர்களை அடையாளம் காட்டி விடும். இப்போது நாகரீகத்திற்காக மக்கள் மானத்தை பற்றி கவலையின்றி ஆங்காங்கே கிழிசல்களுடன் வருவதை பார்த்து, அவர்கள் நல்ல உடையுடன்தான் வலம் வருகிறார்கள். ஒருவேளை இந்த நாகரீக மக்களின் கிழிசல்களை தவிர்த்து நல்ல உடைகள் அவர்கள் கை மாறுகிறோதோ என்னவோ..! அப்படியும் இருக்கலாம். காலம் மாறும் போது மறுபடி கிழிசல்களும் மாறும்.:) நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. 3. நான் கடைசியாக 60 ரூபாய் டிப்ஸ் கொடுத்திருக்கிறேன். இப்போதெல்லாம் மருமகள் சிலிண்டர் புக் பண்ணும் பொழுதே பணம் செலுத்தி விடுவதால் டிப்ஸ் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. நான் பணத்தை கையாளுவதே குறைவு. கோவிலில் உண்டியல், தட்டில் போடுவது போன்றவை மட்டுமே டிஜிட்டல் இல்லை.

    பதிலளிநீக்கு
  9. 5. பத்து ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணயம். கோவிலில் தட்டில் போட்டேன்.

    பதிலளிநீக்கு
  10. 1. கிரஹப்பிரவேசத்திற்கு மாட்டை அழைக்க்கிறானோ சிறுவன்?
    2. குளிர்ச்சியான நீர் முடியை குத்திட வைத்து விட்டதோ?
    3. ஃபிங்கர் சிப்ஸ் போல இது ஃபிங்கர் தோசையை?

    பதிலளிநீக்கு
  11. ஃபிங்கர் சிப்ஸ் போல இது ஃபிங்கர் தோசையா?

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    எல்லோரும் இறைவன் அருளால்
    நிறைவாக வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  13. கிழிசல் மஹாத்மியம் எதற்காக என்று தெரியவில்லை.

    இப்பொழுதெல்லாம் பிச்சைக்காரர்கள் அவ்வளவாகத் தென்படாத நிலையில் இவர்கள்
    அந்த வேடத்தைப் போட்டுக் கொள்கிறார்களோ.

    பதிலளிநீக்கு
  14. விகடன் குமுதம் கல்கி,கலைமகள்
    படித்த காலம் இப்போது இல்லை.

    அம்புலிமாமா கூட அளவில் சிறுத்துப்
    பார்த்ததும் மனதுக்கு ஏற்கவில்லை.
    எல்லாமே ஆன்லைனிலும் கிடைக்கின்றனவே.

    பதிலளிநீக்கு
  15. Readers digest எப்பொழுதும் ஈர்க்கும்.
    இந்த ஊரில் வரும் டைஜஸ்ட் சுவாரஸ்யமாக இருக்கிறது.
    துக்ளக் என்றும் சுவாரஸ்யம். மாறவில்லை.

    பதிலளிநீக்கு
  16. இரண்டாவது கேள்விக்கு ,அவசியமானால் அனுமதிக்க வேண்டியதுதான்.

    நாணயமாக இன்னும் உபயோகிப்பது
    ஒரு ரூபாய் ,25 பைசா. சன்னிதியில் வைப்பதற்காக.

    காஸ் கொண்டு வருபவர்க்கு நிறையக்
    கொடுத்து வழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அங்கே இருக்கும் போது சிலிண்டர் விலை
      1200ரூ எட்டி இருந்தது. கொண்டு வருபவர் 100 ஆவது எதிர்பார்ப்பார்.

      நீக்கு
    2. விளக்கம் அளித்ததற்கு நன்றி.

      நீக்கு
  17. மாடும் குழந்தையும் அழகு.

    இந்த சமத்துக் குழந்தை எதையும் சமாளிக்கும்.

    கை தோசை கோலம் போடுவது அழகு.

    பதிலளிநீக்கு
  18. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  19. கிழிந்த உடை கலாச்சாரம் இன்னும் கேவலமாகத்தான் போகும்...

    கேட்டால் நம்மை பழைய பஞ்சாங்கம் என்பார்கள்.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் இனிய காலை/மாலை வணக்கம். நல்வரவும், வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  21. கிழிந்த உடைக்கலாசாரம் எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் நான் சொல்லி யார் கேட்கப் போறாங்க. அதே போல் இளைஞர்களின் தாடியும். நுனியில் கூர்மையாக வரும்படி அனைவரும் தாடி வைத்துக்கொள்கிறார்களே, இதன் காரணம் என்ன? (அடுத்த புதனுக்கான கேள்வி)

    பதிலளிநீக்கு
  22. விகடன், குமுதம், கல்கிக்குப் பறந்து அடித்துக் கொண்ட நாட்களெல்லாம் மலையேறி விட்டன. இப்போ எனில் முதலில் துக்ளக், பின்னர் ரீடர்ஸ் டைஜெஸ்ட், அம்புலி மாமா அதே தரத்தோடு இப்போ வருதா என்ன? பானுமதி சொன்னாப்போல் தினமலர்/வாரமலர் நன்றாக இருக்கும். இங்கே திருச்சியில் வாரமலரை இப்போதெல்லாம் புத்தகமாய்க் கொடுக்காமல் பேப்பரோடு சேர்த்துப் பக்கங்களை இணைக்கின்றனர்.

    பதிலளிநீக்கு
  23. அந்தப் பெரியவருக்குக் காத்திருக்க முடியாத அளவுக்கு அவசரம் எனில் அவரைத் தான் அனுப்பணும்.

    பதிலளிநீக்கு
  24. நாணயங்கள் அடிக்கடி. உம்மாச்சிக்கு வேண்டிண்டு எடுத்து வைப்பது. யாருக்கானும் வெற்றிலை/பாக்குக் கொடுத்தால் அதில் பதினோரு ரூபாய், இருபத்தோரு ரூபாய் என ஒற்றைப்படையாக வைப்போம். ஒரு ரூபாய் வைத்தால் கூட கூடவே நாலணா வைக்கணும் என்பார்கள். ஒன்றேகால் ரூபாய்னு வைக்கச் சொல்லுவார்கள். எப்போ ஸ்வாமிக்கு வேண்டிக் கொண்டாலும் ஒரு ரூபாய் எடுத்து வைப்போம்.கறிகாய், பழங்கள்/பால்காரர், மளிகை சாமான்கள்/காஃபி பவுடர்/மருந்துகள்/வேலை செய்யும் பெண்ணின் சம்பளம் என எல்லாவற்றுக்கும் பணமே பயன்படுத்துகிறோம்.

    பதிலளிநீக்கு
  25. எரிவாய் சிலிண்டருக்குக் கொண்டுவருபவரிடம் பணம் கொடுத்துத் தான் பெற்றுக்கொள்கிறோம். அவருக்கு அநேகமாக 25 ரூபாய் கொடுக்கிறோம். அதைத் தவிர தீபாவளி, பொங்கல், புத்தாண்டு (ஆங்கிலம்) தீபாவளிக்கு நூறு ரூபாய் கொடுத்தால் இப்போல்லாம் வாங்கிக்கறதில்லை. வேண்டாம் சார், நீங்களே வைச்சுக்கோங்கனு ஒரு சிரிப்புடன் திரும்பக் கொடுத்துடுவார். ஆகவே இப்போதெல்லாம் கொடுப்பதே இல்லை.

    பதிலளிநீக்கு
  26. எப்போ எங்கே வெளியே கிளம்பினாலும் ஸ்வாமிக்கு ஒரு ரூபாய் எடுத்து வைச்சுடுவோம். இன்னிக்குக் கூட அப்படி எடுத்து வைச்சுட்டுத் தான் போனோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி சேர்கின்ற பணத்தை எல்லாம் என்ன செய்வீங்க?

      நீக்கு
    2. பிள்ளையாருக்கு வைக்கிற பணத்தைப் பிள்ளையாருக்கும், குலதெய்வம் மாரியம்மனுக்கு வைக்கிற பணத்தை மாரியம்மனுக்குக் கோயில்களுக்குப் போகையில் சாமான்களாக அல்லது அபிஷேஹம்/அர்ச்சனை/பூ, பழங்களுக்குச் செலவு செய்துப்போம். பிள்ளையாரும் அங்கே ஊரில் உள்ள பிள்ளையாருக்கே எடுத்துட்டுப் போவோம். மாரியம்மனுக்கும் அப்படியே. நிறையப் பணம் இருந்தால் கோயிலுக்குத் தேவையான சாமான்களாக பூசாரியைக் கேட்டுக் கொண்டு வாங்கிக் கொடுத்துடுவோம்.

      நீக்கு
  27. குட்டிப் பயல் கோ பூஜை செய்யப் போறாரோ?
    இம்மாதிரித் தண்ணீர் குடிப்பது வெளிநாடுகளில் வழக்கம். இந்தக் குழந்தையும் வெளிநாட்டுக் குழந்தை போல் தான் இருக்கிறது.
    அது என்ன தோசையா? அல்லது ஆம்லெட்டா?

    பதிலளிநீக்கு
  28. ..இந்த மாதிரி உடையணிவதன் நோக்கமென்ன?//

    அதிகாலையில் கேஜிஜி சாரைத் தொந்தரவு செய்யவேண்டிய அவசியமென்ன !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே! அவர் வியாழக்கிழமை காலையில் கேட்ட கேள்வி அது.

      நீக்கு
    2. இதைச் சாக்கிட்டாவது அவர் இணையத்தில் கவர்ச்சிப் படங்களைத் தேடட்டும் என்றுதான் ஹி ஹி ஹி

      நீக்கு
  29. இன்றைய ஃபேஷன் சகிக்க முடியாத அவலம்...

    பதிலளிநீக்கு
  30. முதியவரை முன்னதாக அனுப்புவதில் ஆட்சேபணை இருந்திருக்காது. இருந்தாலும் இந்த மாதிரி அடுத்தவரிடம் கேட்பதே அசிங்கம் (Emergency இல்லாத சமயத்தில்) என்பது என் எண்ணம். மத்தவங்கள்லாம் நர்ஸை ஒரு லுக் விட வந்திருப்பார்களா? First come first served என்ற கான்சப்ட்தான் சரியானது.

    இங்க காய்கறி வாங்கும் இடத்தில், மற்றும் சூப்பர் மார்க்கெட்டில், ஒரு பொருட்களை வாங்கியிருப்பவர், சார்.. நான் இதுக்கு மட்டும் பணம் கொடுத்துட்டுப் போயிடறேன், please allow என்று கேட்கும் விசித்திரம் இந்தியாவில்தான் உண்டு

    பதிலளிநீக்கு
  31. சிலிண்டருக்கு டிப்ஸ் - எனக்கு டிப்ஸ் கொடுப்பதே பிடிக்காது. அது நவ நாகரீகப் பிச்சை, for undeserving souls என்பது என் அபிப்ராயம். ஹோட்டல் வச்சுட்டு, சர்வருக்கு டிப்ஸ் கேட்பதற்குப் பேசாமல், ஹோட்டல் முதலாளியே பிச்சை எடுக்க ஹோட்டல் முன்பு உட்கார்ந்துவிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சர்வருக்குக் கொடுக்கப்படும் tips சர்வர் பைக்குத்தானே போகிறது? இதில் ஏன் முதலாளியை இழுக்கிறீர்கள்?

      நீக்கு
    2. நீ அவன்கிட்ட பிச்சை எடுத்துக்கோ என்று சொல்லி சர்வருக்குச் சம்பளத்தைக் குறைப்பது யார்? - சொல்லுங்க கேஜிஜி சார். முதலாளிதானே 10 ரூபாய் தோசைக்கு 100 ரூபாய் வாங்கறான். அந்த விலைதானே வாடகை, ஆட்கள், அவங்க சம்பளம், தயாரிக்கும் செலவு, அவன் லாபம் 60 சதம் எல்லாத்தையும் அடக்கியது?

      நீக்கு
    3. முதலாளி யாரும் டிப்ஸ் காரணம் காட்டி சர்வர்கள் சம்பளத்தைக் குறைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

      நீக்கு
  32. வாசக சாலைக்குப் போய் புத்தகம் படிப்பதெல்லாம் எனக்குத் தெரிந்து 30 வருடங்களுக்கு மேல் வழக்கொழிந்துவிட்டது.

    எனக்கு இப்போதைய எந்த மேகசின்களிலும் விருப்பம் இல்லை. துக்ளக் கேள்வி பதில், குங்குமத்தின் வித்தியாச அனுபவத் தொடர் இவை தவிர வேறு ஏதாவது இண்டெரெஸ்டிங் ஆர்ட்டிகிள் எந்தப் பத்திரிகையிலாவது வருதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லாம் வரதுனு கூட எனக்குத் தெரியாது!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! புத்தகங்கள் அதாவது வாராந்தரி/மாதாந்தரி எனில் வைதிகஶ்ரீயும் ப்ராமின்ஸ் டுடேயும் புவனேஸ்வரி விஜயமும் தான் வருகின்றன தபாலில்.

      நீக்கு
    2. இங்கே பக்கத்தில் உள்ள ஸ்டோரில் தமிழ்ப் பத்திரிக்கைகள் சில தலைகாட்டும். போன மாதம் ஒரு குமுதம் இதழ் வாங்கியதில் தெரிந்தது அதில் வந்து கொண்டிருக்கும் இரு தொடர்கள்; ‘என் ஜன்னலுக்கு வெளியே..’- மாலன், ‘கடவுளின் குரல்’-ஆர்.என்.ஆர். (மஹா பெரியவாபற்றிய அனுபவங்கள்).
      விகடனில் ‘அ.வெண்ணிலா’ ஏதோ தொடராக எழுதுகிறார் என்று நினைவு.
      மற்றபடி இரண்டிலும் சகிக்கமுடியா மசாலாக்கள், அசடு வழியல்கள்..

      நீக்கு
    3. கருத்துரைகளுக்கு நன்றி.

      நீக்கு
  33. நான், நாணயம் உபயோகிப்பது ஆட்டோ சார்ஜுக்கும் இங்கு வேனில் வரும் ஹாப்காம்ஸ் காய்கறி வாங்கும்போதும்தான். மற்றபடி நாணயத்திற்கு வேலையே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் பக்கம் வரும் hopcoms வண்டியில் POS payment வசதி உண்டு.

      நீக்கு
    2. இங்கயும் உண்டு. ஆனால் நான் போய் வாங்கிவருகிறேன். எனக்குத்தான் கேஷ் தவிர வேறு எதையும் யோசிக்க மாட்டேனே (இந்தியா வந்த பிறகு எனக்கு டெபிட் கார்ட் வைத்துக்கொள்ளவில்லை)

      நீக்கு
    3. நான் கறிவேப்பிலை வாங்குவது கூட ஆன்லைன் cashless transaction மூலமாகத்தான்.

      நீக்கு
  34. நான் எல்லாவற்றிர்க்கும் பணம்தான் கொடுப்பேன் (வேறு பண பரிவர்த்தனைகள் உபயோகித்ததே இல்லை. மனைவிதான் உபயோகிப்பாள்). ஆனால் அனேகமாக எல்லா இடங்களிலும் பணபரிவர்த்தனை இருக்கும், மனைவி கூட இருந்தால் அவளை பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணச் சொல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மனைவி கூட இருந்தால் அவளை பணம் ட்ரான்ஸ்ஃபர் பண்ணச் சொல்வேன்.//க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இங்கேயும் அப்படித்தான். அவர்ட்டே எத்தனையோ தரம் சொல்லிட்டேன், நீங்களும் கணினியில் செய்து பாருங்கனு! ம்ஹூம்! நான் தான் செய்தாகணும். இத்தனை நாழி அதோட மல்லுக்கட்டிட்டு இப்போத் தான் சாப்பிட்டுட்டு வந்திருக்கேன். :)))))

      நீக்கு
    2. நான் பண விஷயங்களில் என்னை involve பண்ணிக்கொள்வதில்லை. கணிணியில் எந்த விதமான பண பரிவர்த்தனைகளும் நான் செய்ததில்லை, செய்யும் உத்தேசமும் இல்லை. எல்லாம் 'அவள்' செயல். ஹா ஹா

      நீக்கு
  35. கேஜிஜி சாருக்கு ஓவியம் வரைவதில் ஆசையா இல்லை சந்தடி சாக்கில் கவர்ச்சிப் படம் போடுவதில் ஆசையா - இதை புதன் கேள்விக்கு அனுப்பிடலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லோரும் திரும்பத் திரும்பச் சொன்னதும் மறுபடி போய்க் கேஜிஜி சார் வரைஞ்சிருப்பதைப் பார்த்தேன். கீழே உட்கார்ந்திருக்கிறவர் முகபாவம் நல்லாவே வந்திருக்கு. :)

      நீக்கு
    2. எதனால, அவர் எங்க பார்க்கிறார் என்றெல்லாம் நான் ஆராய்வதில்லை. ஹிஹி

      நீக்கு
  36. தோசை - குட்டி யானை துதிக்கையைத் தூக்கி டான்ஸ் ஆடுவது போன்று இருக்கு!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  37. (எங்கள் வீட்டில் எந்த இதழும் வாங்குவதில்லை. சென்னைக்குச் சென்றால்....) கல்கி குமுதம் ஆவி எல்லாம் ஈர்க்கவில்லை. வாரமலர் பிடித்திருக்கிறது. அதில் குறுக்கெழுத்து போடுவதுண்டு. அது போல தினமலரில் வரும் குறுக்கெழுத்தும் போடுவதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைக்குச் சென்றால் மட்டுமே ஏதேனும் இதழ்கள் கண்ணில் படும்.

      கீதா

      நீக்கு
  38. முதியவரை உள்ளே செல்லச் சொல்லிவிடுவேன். அவர் உடல் நிலையைப் பொருத்து.

    காஸ் சிலிண்டர் - 20 -30ரூ

    எல்லாமே டிஜிட்டல்தான் (எங்க வீட்டு நிதியமைச்சர் நான் இல்லை!!!!!) டிஜிட்டலில் கொடுக்க முடியாதவை மட்டுமே கேஷ்.

    1 ரூபாய்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைய சொல்ல வேண்டும் என்றால் எனக்கு இந்த டிப்ஸ் கொடுப்பது அறவே பிடிக்காது. ஆனால் சிலிண்டர் போடுபவர் வாங்காமல் போக மாட்டார். ஆர்க்யூமென்ட் செய்வதும் சண்டை போடுவதும் பிடிப்பதில்லை என்பதால் கொடுத்துவிடுவதுண்டு.

      கீதா

      நீக்கு
    2. ஆம், உண்மை. எனக்கு கேஸ் சிலிண்டர் கொண்டு வந்து கொடுப்பவரும், ஒவ்வொரு முறையும் ஏதாவது பிரச்சனை செய்வார்.

      நீக்கு
  39. வர வர நெல்லை அண்ட் ஸ்ரீராம் பொண்ணுங்களை ரொம்ப நோட்டம் விட ஆரம்பிச்சிட்டாங்க!!!!!! ஹாஹாஹா

    ஸ்ரீராம் பாஸ் இருக்கறப்பவே அவங்ககிட்டயும் வேற சொல்லி பாஸ் டோஸ் விட...அதை பதிவும் போட்டு...ஹாஹாஹா

    ஆனா பாருங்க நெல்லைக்கு என்னா பயம் அவர் ஹஸ்பண்டிடம்! இங்க கேள்வி கேக்குற மாதிரி சொல்லி ஆசிரியர்களையும் டெஸ்ட் பண்ணுறார் பாருங்க....ஹாஹாஹாஹா
    எல்லாம் ஹஸ்பண்ட் பாக்க மாட்டார்ன்ற தைரியந்தேன்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர். தீர்ப்பில் உங்கள் கருத்தாகக் குறிப்பிட்டுள்ள "வர வர", "ஆரம்பித்துவிட்டார்கள்" என்ற வார்த்தைகள் எங்களைப் புண்படுத்தும் விதத்தில் இருப்பதால், அதனை மட்டும் நீக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். ஹாஹா

      நீக்கு
    2. உண்மைதான் உண்மையை தவிர வேறொன்றுமில்லை. ஏற்கனவே எப்போதோ ஆரம்பித்திருப்பவைகளை, இப்போதுதான் ஆரம்பித்து இருப்பதாக குற்றம் சாட்டுவதை நானும் வன்மையாக ஆட்சேபிக்கிறேன். ஹா.ஹா.ஹா. (ஆகா.. ஏதோ வக்கிலுக்கு படிக்க ஆசைப்பட்டு நிறைவேறாமல் போனதை, இங்கு வழக்குமன்ற வார்த்தைகளை பார்த்தவுடன் ஏதோ ஒரு தரப்பிற்கு வாதாடும் சந்தர்ப்பம் கிடைக்குமாறு செய்திருப்பதற்கு நன்றி. நன்றி.:) ) ஆனால், இதை படித்தவுடன் யாரேனும் என் மீது வழக்கு தொடுப்பதற்குள் நான் தலைமறைவாகி விடுகிறேன். அதற்கு என் மனம் ஒவ்வாத பட்சத்தில் எப்படியும் நாளை காலையில் மறுபடி இங்கு நானே சரண்டராகி விடுவேன். ஹா.ஹா.ஹா.

      நீக்கு
    3. ஆர்டர், ஆர்டர். ( நான் ஜட்ஜ் ஆவதற்கு ஆசைப்பட்டவன் என்பதை சொல்லிக்கொண்டு - - - )

      நீக்கு
    4. ஹா.ஹா.ஹா. ஆசை கனவுகளை சுமந்தபடி காலம் கடந்து விட்டது. (எனக்குதான் சொல்கிறேன்.)

      நீக்கு
  40. இப்பல்லாம் கிழிஞ்ச துணிகள் தான் ஃபேஷன் விலையும் கூடுதல்!

    இப்பவும் வீட்டுல சொல்றதுண்டு சின்னதா கிழிஞ்ச ட்ரெஸ் போட்டாலே தரித்திரம்னு!

    கீதா

    பதிலளிநீக்கு
  41. புதன் கேள்விகள் -
    1. ஹோட்டல் உணவுப் பண்டங்களின் விலை, பல்வேறு காரணிகளை, Service Tax உட்பட, உள்ளடக்கியது. அப்படி இருக்கும்போது எதற்கு சர்வருக்கு டிப்ஸ் என்ற பிச்சையெடுக்கும் வேலை?
    2. வரிசை என்று ஒன்று இருக்கும்போது, எதற்காக நாம் முன்னுரிமை கேட்க அல்லது வரிசையை ஏமாற்றி முன்னே செல்ல ஆசைப்படுகிறோம்? இந்தக் குணம், பெரிய நாடுகளில் இந்தியாவில்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  42. எல்லாப் பெரிய ஓட்டல்களிலும் டிப்ஸ் கட்டாயம். கொடுக்கலைனா அசிங்கமா, கேவலமாப் பார்ப்பாங்க! :( வெளிநாடுகளில் மொத்தமாக ஆகும் தொகையில் இத்தனை சதவீதம் டிப்ஸ் என்ற கணக்கு உண்டு. முக்கியமாய் அம்பேரிக்காவில்.

    பதிலளிநீக்கு
  43. இந்த சிலிண்டர் கொண்டு வருபவருக்குக் காசு கொடுப்பது குறித்த ஒரு பழைய நினைவு. நாங்க ராஜஸ்தான்/குஜராத்தில் இருந்தவரையிலும் சிலிண்டர் ராணுவ விநியோகம். ராணுவ சப்ளை டெப்போவின் மூலம் வரும். ரங்க்ஸ் அலுவலகத்திற்குச் சென்று சப்ளை டெப்போவிற்குச் சொல்லி அனுப்பி விடுவார். ஒரு மணி நேரத்தில் சிலிண்டர் வந்து விடும். ராணுவ வீரர்களே (சிலிண்டர்கள் விநியோகப் பொறுப்பில் இருப்பவர்கள்) கொண்டு வந்து போட்டுப் பொருத்தியும் கொடுத்துவிடுவார்கள். பின்னர் இரண்டு சிலிண்டர் என்றானதும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போவார்கள். அதன் பின்னர் 96 ஆம் ஆண்டில் சென்னைக்கு மாற்றல் ஆகி வந்ததும் அம்பத்தூரில் இருந்த டியூசிஎஸ்ஸில் சிலிண்டருக்காக விண்ணப்பித்தோம். எங்கள் மாற்றலுக்கான கடிதத்தின் நகல், சிலிண்டரை ராணுவ விநியோகஸ்தரிடம் சமர்ப்பித்து வாங்கிய ரசீது எல்லாவற்றையும் கொடுத்திருந்தோம். இரண்டு சிலிண்டர்கள் வர வேண்டும். ஆனால் உடனே வரலை. சிலிண்டர் டிமான்ட் என்றும் 100 ரூபாய் கொடுத்தால் யாருக்கானும் கொடுக்க வேண்டியதைத் தாற்காலிகமாக எங்களுக்குக் கொடுப்பதாகவும் அங்கே சிலிண்டரை எடுத்துச் செல்லும் நபர் தனியாக வந்து கூறினார். நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை. வரும்போது வரட்டும் என்று சொல்லிவிட்டோம். எப்படியோ மண்ணெண்ணை வாங்கிக் கொண்டு சமையல் நடந்தது. மேலும் மேலும் போய்க் கேட்டதில் வேறு வழியில்லாமலோ என்னமோ சிலிண்டரைக் கொண்டு வந்து போட வந்தார். இரண்டு சிலிண்டர்களும் ஒரே சமயம் வந்திருக்கின்றன. பில் பத்து நாட்கள் முன்னரே தயாராகி இருக்கிறது. பணத்துக்காக இவர் தாமதம் செய்திருப்பது புரிந்தது. இப்போதும் இரண்டு சிலிண்டர்களையும் கொடுத்துவிட்டு நான் உங்களுக்காகக் கேட்டு இரண்டையும் கொண்டு வந்திருக்கேன். ஒரு சிலிண்டருக்கு 50 ரூபாய் வீதம் இரண்டுக்கும் 100 ரூபாய் கொடுத்துடுங்க. என்றார். நான் பில் தயார் ஆன தேதியைச் சுட்டிக் காட்டி ஏற்கெனவே எங்களுக்காக இந்த சிலிண்டர்கள் தயார் நிலையில் இருந்தவற்றை நீங்க தான் கொண்டு வரலை. நான் பணமெல்லாம் கொடுக்க மாட்டேன். இந்தியன் ஆயிலில் புகார் செய்வேன் என்று சொல்லிவிட்டேன். வந்ததே கோபம் அவருக்கு! டக்கென இரண்டையும் தூக்கி வைத்துக்கொண்டு கன்னாபின்னாவெனக் கத்திவிட்டுப் போய்விட்டார். ரங்க்ஸ் வந்ததும் விஷயத்தைச் சொன்னேன். மறுநாள் அவர் அலுவலகத்தில் அவருடைய லெட்டர் பேடில் இருந்து சொந்தக் கையெழுத்தில் எல்லாவற்றையும் விபரமாக எழுதிக் கையெழுத்துப் போட்டு அலுவலக சீலையும் வைத்து அனுப்பி விட்டார். மூன்றாவது நாளே அந்த டியூசிஎஸ்ஸில் சோதனைக்கு வந்து விட்டு விபரம் தெரிந்து கொண்டு குறிப்பிட்ட நபரை அங்கிருந்து மாற்றிவிட்டு எங்களுக்கு உடனே சிலிண்டரைக் கொடுக்கச் சொல்லி உத்தரவும் போட்டிருக்காங்க. இந்த மனிதரே சிலிண்டரை எடுத்துக் கொண்டு கொடுக்கும்படியும் சொன்னதால் அவர் சிலிண்டர்களை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் வராமல் காம்பவுண்டுக்கு வெளியேவே கோலம் போடும் இடத்தில் வைத்துவிட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் சென்றிருக்கிறார். அக்கம்பக்கம் பார்த்தவங்க சொன்னாங்க. பின்னர் பக்கத்து வீட்டுப் பையர்கள் துணையுடன் சிலிண்டர்களை உள்ளே எடுத்து வந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாடி, எம்புட்டுப் பெரிய கருத்துரை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    2. ஆமாம்.. என்னையும் பின் தள்ளி விட்டீர்கள்..ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. விவரமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  44. வணக்கம் சகோதரரே

    சிலிண்டர் கொண்டு தருபவருக்கு நாங்கள் ரூபாய் 30, 40 என தருகிறோம். மேற்கொண்டு சில சமயம் அவர் கேட்டாலும் தகராறு செய்ய முடியாது. இதற்கு பணம் ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி வெளியில் சென்று கொண்டிருக்கும் போதும் சில சமயம் சிலவிடங்களில் கையிலிருந்துதான் பணம் கொடுப்போம். மற்றபடி இப்போது கொரோனா வந்ததிலிருந்து ஆன்லைன் வர்த்தகந்தான்.

    ஒரு ரூபாய், 2, ஐந்து ரூபாய் நாணயங்கள் முன்பு கோவில்களுக்கு செல்லும் போது நிறைய பயன்பட்டது.

    இப்போது புத்தகங்கள் படிக்கும் நேரங்கள் குறுகி விட்டது. அதன் பேரில் ஆவலும் போய் விட்ட மாதிரி தோன்றுகிறது. அதனால் முதலில் எதை எடுப்பது என யோசனைகள்தான் வரும்.

    இரண்டாவதாக வயதானவர் எனும் போது, அதுவும் வேண்டி கேட்டுக் கொள்ளும் போது அவர் முதலில் மருத்துவரை பார்க்கச் செல்லட்டும் என்றுதான் மனிதாபிமான அடிப்படையில் அவரை முதலில் செல்லச் சொல்லுவேன்.

    1ம் படம். நாங்களே சப்பாத்திதான் சாப்பிடுகிறோம். உனக்கும் அதுதான் என்கிறானோ சிறுவன்.

    2.இப்போது இப்படித்தான் கைகளின் உதவியில்லாமல் தண்ணீர் அருந்துகிறார்கள். இனி நானும் இதை பழகிக்கிறேன் என்கிறது அந்த குழந்தை.

    3.தோசைகளை விதவிதமான உருவத்தில் வார்த்து தந்தால்தான் இப்போதைய குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்ஃப் தேசத்தில், தண்ணீர் அருந்துவதற்கு, பட்டன் ப்ரெஸ் பண்ணினால் தண்ணீர் சிறிது மேலே போய் கீழே விழும் (இலுப்புச் சட்டியை கவுத்துப் போட்டதுபோல). அதில் வாய் வைத்துக் குடிக்கணும். தண்ணீர் வீணாகலாம் ஆனால் எச்சில் பிஸினெஸ் கிடையாது. இது அரபிகள் தண்ணீர் குடிக்கும் வழக்கம் போலிருக்கிறது

      நீக்கு
    2. //தோசைகளை விதவிதமான உருவத்தில் வார்த்து தந்தால்தான்// - இதுக்கும் அழகு குறைவான பெண்களை மிக அதிக மேக்கப் போட்டுத் தள்ளிவிடுவதற்கும் சம்பந்தம் உண்டா? ஹாஹா

      நீக்கு
    3. ஹி ஹி - படத்தில் நீங்க பார்ப்பது நான் வார்த்த ரவா தோசை! (எவ்வளவு முயன்றாலும் என்னால் வட்டமாக தோசை வார்க்க இயலாது. ஆனால் நீங்க இங்கே பார்ப்பது மீதி இருந்த மாவை கடைசி தோசையாக நான் வார்த்தது. )

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      பொதுவாகவே கோதுமை மற்றும் கரைத்த தோசைகள் வட்டமாக வராது. அப்படியே வட்டமானாலும்,கொஞ்சம் குண்டாகி விடும். நீங்கள் புது விதமான வடிவத்தில் அழகாகத்தான் வார்த்திருக்கிறீர்கள்.

      நீங்கள் வரைந்த ஓவியத்தையும் இப்போதுதான் கருத்துரைகளை படிக்கும் போது சென்று பார்த்தேன். முதலில் பதிவை படிக்கும் நேரத்தில் பார்க்கவில்லை. மன்னிக்கவும். மிகவும் அழகாக வந்துள்ளது. வரைய வரைய சித்திரம் நம் வசப்படும் என்பதற்கு உங்கள் ஓவியங்கள் ஒரு எடுத்துக்காட்டு. மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. நன்றி. படத்தில் பெரும் பகுதி வெவ்வேறு இடங்களிலிருந்து கடத்தி வரப்பட்டவை. நான் வரைந்தது பத்து சதவிகிதம் மட்டுமே.

      நீக்கு
    6. வணக்கம் நெல்லை தமிழர் சகோதரரே

      ஹா.ஹா.ஹா. எப்படியோ தோசை விரல்களுக்கும், முகத்தின் மேக்கப்பிற்கும் முடி போட்டு விட்டீர்கள்.

      /கல்ஃப் தேசத்தில், தண்ணீர் அருந்துவதற்கு, பட்டன் ப்ரெஸ் பண்ணினால் தண்ணீர் சிறிது மேலே போய் கீழே விழும் (இலுப்புச் சட்டியை கவுத்துப் போட்டதுபோல). அதில் வாய் வைத்துக் குடிக்கணும். தண்ணீர் வீணாகலாம் ஆனால் எச்சில் பிஸினெஸ் கிடையாது/

      இங்குள்ள பெரிய மால்களில் இந்த மாதிரி அனைவரும் தண்ணீர் குடிப்பதை பார்த்திருக்கிறேன். இப்படி எச்சில் அருவருப்பு எவருமே பார்க்காமல் இருக்கிறார்களே என எண்ணம் வரும் போது "தவித்த வாய்க்கு தண்ணீர்" என்ற பழமொழியும் நினைவுக்கு வரும்.:) நாகரீகம் பழகியவர்கள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. ரவா/கோதுமை/கேழ்வரகு போன்ற கரைத்த தோசைகளுக்கு முதலில் பெரிய வட்டமாக அவுட்லைன் போட்டுக்கொண்டு பின்னர் உள்ப்க்கமாய் நிரப்பிக் கொண்டு வந்தீர்களானால் வட்டமாக வந்துடும். :)))) அவுட்லைன் தான் முக்கியம்.

      நீக்கு
  45. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  46. மகன் கிழிசல் இல்லாத ஆனால் கிழிசல் போல வரைந்து இருக்கும் ஜீன்ஸ் வாங்கினான் அதுவே என் பேரனுக்கு பிடிக்கவில்லை.

    முன்பு பெரியவர்கள் கிழிசல் ஆடைகளை அணிய கூடாது என்பார்கள். அது இப்போது நாகரீகமாக மாறி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  47. கெளதமன் சார் வரைந்த ஓவியமும், அவர் தோசைக்கல்லில் ஒவியமாக தோசை வார்த்து இருப்பதும் அருமை.

    பதிலளிநீக்கு
  48. 1. முதலில் அம்புலிமாமா தான் எடுப்பேன் படித்து பல வருடம் ஆகி விட்டது, இப்போது எப்படி இருக்கிறது? யார் ஓவியம் வரைந்து இருக்கிறார்கள் என்று பார்க்க ஆவலாக இருப்பதால்.



    //முதியவரை, உங்களுக்கு முன்னதாக அனுப்ப அனுமதி கேட்கிறார். உங்கள் பதில் என்னவாக இருக்கும்?//

    முதியவரை அழைத்து வந்தவர் இளம்பெண்ணாக இருக்கலாம் ஆனால் முதியவர் நெடுநேரம் காத்து இருக்கமுடியாத நிலை என்பதால் அனுமதி கொடுத்து விடுவேன்.


    மாயவரத்தில் மாடி வீடு அதனால் 50 ரூபாய் கொடுத்தோம் சிலிண்டர் கொண்டு வருபவருக்கு. மதுரையில் பை லைன் கேஸ் அவர்கள் சர்வீஸ் சார்ஜ் என்று 60 ரூபாய் வாங்கி கொள்கிறார்கள் மாதா மாதம்.


    சமீபமாக கையாண்டது நாணயம் 10 ரூபாய் . அதுவும் பக்கத்தில் இருக்கும் ஆலயத்தில் .

    பதிலளிநீக்கு
  49. முதியவரை போக அனுமதிப்பேன்.

    காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் கொடுப்போம்.

    நாணயம் ஐந்து பத்து நாணயங்கள் தினமும் எமது வேலை நிமித்தம் .

    ரீடேஸ்டையஸ் துக்லக்.

    1) அருகில் வந்தால் இடிப்பாயா?

    2) ஆகா! என்ன ருசி.

    3) யானையார் சிறுத்தை புள்ளியுடன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!