செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

காற்றினிலே 6 / 6 :: துரை செல்வராஜு

 

முந்தைய பகுதிகள் சுட்டி : பகுதி 1, பகுதி 2 , பகுதி 3, பகுதி 4 , பகுதி 5 

நிறை நிலா நெற்றி மட்டத்துக்கு வந்திருந்தது..

உருமாறியிருந்த வங்காளி தரையில் கிடந்தான்..

அவனது தொண்டைக் குழியில் உடைவாளின் நுனியைப்  பதிந்திருந்த அவந்திகா சீறினாள்..

" எங்கேயடா அது?.. "

" எது!.. "

" நாக ரத்னம்!.. அவன் அன்றைக்கு வீசியபோது தாவிப் பிடித்தாயே அது!.."

" தெரியாது.. "

" அது கை மாறிய விதம் எனக்குத் தெரியும்!.. "

" எனக்கு எதுவும் தெரியாது.. "

" இப்போது தெரியும் பார்!.. " - என்றபடி அவன் நெஞ்சில் ஓங்கி மிதித்தாள் அவந்திகா..

வங்காளியின் கண்கள் பிதுங்கிட மூக்கின் வழியே ரத்தம் பீறிட்டது..

" சொல்கிறேன்.. சொல்கிறேன்.. "

"  ம்.. சீக்கிரம்!.. "

" சொன்னால் என்னை விட்டு விடுவாயா?.. "

" ம்ஹூம்!.. "

" அப்படியானால் அதை நீயே தேடி எடுத்துக் கொள்.. அதற்காக - நீ என் மீது கை வைத்தால்!.. "

" நான்தான்  காலை வைத்திருக்கிறேனே!.. "

" என்னை நீ ஜெயிக்க முடியாது.. நான் பரகாய ப்ரவேசம் கற்றவன்!.."

" நான் அதை முறியடிக்கக் கற்றவள்.. தோற்கப் பிறந்தவன் நீ!.. "

" வேறொரு பிரேதத்தில் நுழைவேன்..  மீண்டும் மீண்டும் வருவேன்.. என் தலைவனைக் கொன்ற உன்னை சும்மா விட மாட்டேன்!.. "  - கத்தினான் அந்த முரடன்..

" ஏய்.. உன்னால் என்னை எதுவும் செய்ய  முடியாது!.. நீயாக உன் உயிரைப் பிரித்து உடலைக் கழற்றிக் கொண்டால்தான் பரகாயப் பிரவேசம் செய்ய முடியும்.. நான் பிரித்தால் நீ எனக்கு அடிமை!.. நிரந்தர அடிமை!.. " - கர்ஜித்த  அவந்திகா இடக்கையை உயர்த்திச் சொடுக்கினாள்..

சொடுக்கிய கையில் சின்னஞ்சிறிய சிழிழ் வந்தமர்ந்தது.. அத்துடன் விடுதியின் மதிற்சுவரின் முண்டத் தலை பொம்மைக்குள் குடியிருக்கும் ஆவியும் எதிரில் வந்து நின்றது.

" கேள்.. இன்னும் சில விநாடிகளில் இவனது உயிர் பறிக்கப்படும்.. எஞ்சி இருப்பதை நீயும் உன் சகாக்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்.. "

" நன்றியம்மா!.. "

" மித்ரா!.. இவனது உயிர் வெளியேறும் போது அதைப் பிடித்து இந்தச் சிமிழில் அடைத்து மகிஷாசுரமர்த்தனி ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயிலை நோக்கி வீசி விடு!.. "

" உத்தரவு!.. "

அதற்கு மேல் ஒரு நொடியும் தாமதிக்க வில்லை அவந்திகா..

" எத்தனை எத்தனை இளந் தளிர்களை நாசம் செய்திருக்கின்றாய் நீ!... உனக்கு இந்த ஒரு மரணம் போதாது.. ஆனாலும் ஒழிந்து போ!.."

அவனது நெஞ்சக் கூட்டில் மறுபடியும் ஓங்கி மிதித்தாள்..

* ஹா.. " பெரிதாக அலறினான்..

' நற.. நற.. ' என்று எலும்புகள் நொறுங்கின.. உள்ளிருந்த இதயம் அறுந்து விழுந்தது..  கொடூரனின் உயிரும் பிரிந்தது..

பிரிந்த உயிரை சிறை பிடித்த மித்ரா அதைச் சிமிழில் அடைத்து கோயிலை நோக்கி வீசி எறிந்தாள் .. 

ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியின் எல்லையில் சுழன்றிருந்த அக்னி வளையம் அதை அப்படியே ஆகர்ஷித்துக் கொண்டது.. அக்னியில் விழுந்த சிழிழ் - ' படீர்.. ' என்று வெடித்துச் சிதறிட முரடனின் உயிர் கருகி ஒழிந்தது..

கண்முன்னே அவனது சடலம் கரைந்து கொண்டிருந்த போது -  பல நூறு ஆண்டுகளாக அவந்திகா தேடித் தவமிருந்த ரத்னக்கல் - இற்று விழுந்த  இதயத்தின் உள்ளிருந்து ரத்தத்துடன் கலந்து மேலே வந்தது!..

அதனை அப்படியே உள்ளங்கையில் ஏந்திக் கொண்ட அவந்திகா முகம் மலர்ந்தவளாக - கண்களுக்கு மேலாக உயர்த்திப் பார்த்தாள்... தலைக்கு மேல் வந்திருந்த நிறை நிலாவின் ஒளியில் செக்கச் செவேலென ஒளிர்ந்தது நாக ரத்னம்..

எங்கிருந்தோ ஒரு தேவதை பொற் கிண்ணத்தில் பசும் பாலைக் கொண்டு வந்தது.. ரத்தினக் கல்லை பாலில் நீராட்டிய அவந்திகா அதை அப்படியே நெற்றிச் சுட்டியில் பதித்துக் கொண்டாள்..

காற்றில் மிதந்து வந்த பூமாலைகள் அவந்திகா ஸ்ரீஷாந்தினியின் கழுத்திலும் மித்ரா சுபாஷினியின் கழுத்திலும் விழுந்தன..

" ஓம் சக்தி ஓம்.. துர்கா பரமேஸ்வர்யை போற்றி!.. " 

ஸ்ரீ துர்கையின் சந்நிதி நோக்கி கை கூப்பி வணங்கினர்..

" பனிமலைச் சாரலில் கங்கைக் கரையினில் தொட்டு - பொன் விளையும் களத்தில் காவிரிக் கரையினில் வெற்றிக் கனியைப் பறித்திருக்கின்றோம்!.. "

மித்ரா பிரமித்தாள்..

" மித்ரா.. இந்த மண்ணும் இந்த மண்ணின் மங்கையரும் பறிக்க வேண்டிய கனிகள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன.. அவற்றுக்கெல்லாம் துர்கா பரமேஸ்வரி தான்  துணையிருக்க வேண்டும்!.. "

அவந்திகா விழிகளை மூடி பிரார்த்தித்துக் கொண்டாள்..

சட்டென மித்ரா கேட்டாள்.. " இத்தனை களேபரத்தில் இளவரசர் எங்கே!.. "

அவந்திகா சுட்டிக் காட்டிய இடத்தில் ஒளி படர்ந்தது.. அங்கே ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த  விஜய் - நித்திரை கலைந்ததைப் போல் எழுந்தான்.. அதீதமான சூழ்நிலையைக் கண்டு அதிர்ந்தான்.. வியந்தான்..

" ஆர்த்தி!.. என்ன இது?.. " - விஜய் கேள்வியை  முடிப்பதற்குள் -  ஸ்ரீ விக்ரமாதித்ய வருண்குமார் - என, உரு மாறிக் கொண்டிருந்தான்..

அவந்திகா ஸ்ரீஷாந்தினி கனிவுடன் வருண் குமாரின் கையைப் பற்றி அழுத்தினாள்..

அவனது மார்பினில் சாய்ந்து கொண்டாள்..

அங்கே மித்ராவின் காதலனும் காத்துக் கொண்டிருக்கின்றான்..

அடுத்தது அனைவரது நல்வாழ்த்துகளுடன் கல்யாண வைபவம் தான் என்ற மகிழ்ச்சி அங்கே நிலவியது..

மித்ரா சுபாஷினியின் முகத்தில் புன்னகை... வெள்ளைப் புறா என, உரு மாறினாள்..

நடப்பதைப் பார்த்து வியப்பின் எல்லையில் இருந்த வருணையும் புறாவாக மாற்றிய அவந்திகா ஸ்ரீ ஷாந்தினி தானும் புறா என வடிவம் கொண்டாள்..

புறாக்கள் உற்சாகத்துடன் புறப்பட்ட  வேளையில் -

விடுதியின் வரவேற்புக் கூடத்தில் - தனது பணியினைத் தொடங்கியிருந்தாள் நீலு..

'ஒன்றும் சொல்லாமல் எங்கே போனான் இந்த வங்காளி?.. நேற்று சாயங்காலம் வந்த காதல் ஜோடி இன்னும் இறங்கி வரவே இல்லையே!.. ' - என்று நினைத்தவள் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள்..

காவல் கூண்டின் பெரியவர் கையை உயர்த்தி -  " நீலு.. வணக்கம்.. மா!.. " - என்றார்..

" வணக்கம் தாத்தா!.. " - புன்னகைத்தாள் நீலு..

வடக்கு எல்லையில் காவிரி ஆற்றில் நீராடிக் களித்த புறாக்கள் அருகிருந்த வெற்றிவேல் முருகனின் ஆலயத்தை வலம் செய்து வணங்கின..

ஸ்ரீ உஜ்ஜயினியை நோக்கி சிறகசைத்தன..

கீழ் வானம் சிவந்து கொண்டிருந்தது..

ஃஃஃ

சுபம்..

94 கருத்துகள்:

  1. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு..

    வாழ்க குறள் நெறி..

    பதிலளிநீக்கு
  2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

    காற்றினிலே.. தொடரின் நிறைவுப் பகுதியைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்

    அழகிய சித்திரத்தால் அழகு செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  4. அன்பின் வானத்தில் புறாக்கள் பறக்கின்ற அழகே அழகு..

    வாழ்க அன்பும் அறமும்!..

    பதிலளிநீக்கு
  5. சுபமான முடிவு திருமணம் நிகழ்ந்ததில் மகிழ்ச்சி. வாழ்க வையகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி ...
      தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். ஆஹா! மதிய வணக்கமும் கூட! நெல்லை வந்து கேட்பாரே! அனைவர் வாழ்விலும் தொற்று நீங்கி ஆரோக்கியமும் மன மகிழ்ச்சியும்மேலோங்கப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  7. வித்தியாசமான கதை. முன் ஜென்மத்துப் பகைவனைக் கண்டு பிடித்து அன்னையின் அருளால் கூண்டோடு ஒழித்தது சிறப்பு. நீலுவைப் பற்றி எதுவுமே சொல்லலையே? நான் ஏதோ எதிர்பார்த்திருந்தேன். புறாக்கள் பறக்கும் காட்சியைக் கண் முன்னே கொணர்ந்த கேஜிஜிக்கு நன்றியும் பாராட்டுகளும். முதல் படம் இம்முறை சுமார் ரகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி. முதல் படம் எவ்வளவோ மணி நேரம் செலவிட்டும் - நான் விரும்பிய effect கொண்டுவர இயலவில்லை.

      நீக்கு
    2. வெளிப்படையாகக் கருத்துச் சொன்னதுக்கு வருந்திக் கொண்டிருந்தேன். உங்கள் கருத்து அதை நீக்கி விட்டது. _/\_

      நீக்கு
    3. அதனால் என்ன பரவாயில்லை. மேம்போக்காக எல்லாம் அற்புதம் - பிரமாதம் என்று ஒப்புக்குச் சொல்லாமல், மனதில் தோன்றிய கருத்தை பதிவு செய்வது சரியான நிலைதான்.

      நீக்கு
    4. முதல் படத்தை, ஜனவரி 20 ஆம் தேதி, காலை எட்டரை மணியிலிருந்து, மதியம் 12.30 வரை நேரம் செலவழித்து உருவாக்கினேன். ஆனால் - எனக்கும் அந்தப் படம் ஏனோ ஒரு உறுத்தல் கொடுத்துக்கொண்டே இருந்தது. உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு, அந்தப் படம் உருவான ஒவ்வொரு கட்டத்தையும் அனுப்புகிறேன். பாருங்கள்.

      நீக்கு
    5. பாராட்டுக்கு நன்றி. முதல் படம் எவ்வளவோ மணி நேரம் செலவிட்டும் - நான் விரும்பிய effect கொண்டுவர இயலவில்லை.//

      புரிந்தது அண்ணா. அண்ணா கணினிக்கு உங்கள் கற்பனை புரியவில்லை அதுக்கு அம்புட்டுத்தான் தெரியுமோ!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    6. //நீலுவைப் பற்றி எதுவுமே சொல்லலையே?//

      கீதாக்கா எனக்கும் இதே...

      கீதா

      நீக்கு
    7. முதல் பதிவிலே போய்ப் பார்த்தேன். நீலு தான் நேபாளப் பெண். வரவேற்றவள். அவள் இங்கேயோ புறாவாகப் பறக்கிறாள். பின்னே எப்படி மறுபடி ஓட்டலில் வரவேற்பில்? குழப்பம்!

      நீக்கு
    8. //புறாக்கள் உற்சாகத்துடன் புறப்பட்ட வேளையில் -

      விடுதியின் வரவேற்புக் கூடத்தில் - தனது பணியினைத் தொடங்கியிருந்தாள் நீலு.// இங்கே பறக்கும் புறாக்களில் ஒன்றான மித்ராதானே நீலு என முதல் அத்தியாயத்தில் வருது? அவள் எப்படி அதே நேரத்தில் வரவேற்பறையில் இருக்க முடியும்? ரொம்பக் கேள்வி கேட்டுக் குழப்பறேனோ? :(

      நீக்கு
    9. இரண்டாம் அத்தியாயப்படி விஜய்யும் சாகக் கிடந்திருக்கான். கூடவே விடுதியின் பணியாளும். விஜய் எப்படி குற்றுயிராய் ஆனான் என்பது மூன்றாவது அத்தியாயத்தில் வருதானு பார்க்கிறேன்.

      நீக்கு
    10. மூன்றில் விஜய் பற்றிய தகவலே இல்லை என்பதோடு ரத்தினக்கல்லும் தலைவனிடம் இல்லை. அவனே தன்னுடைய ஊழியர் ஒருவரிடம் தூக்கி எறிந்து விடுகிறான்.

      நீக்கு
    11. நான்கில் விஜயும் வங்காளியும் குற்றுயிரான காரணம் புரிகிறது. கதையின் முக்கியக் கருவே வங்காளியாக வந்திருக்கும் தலைவனை/அல்லது ரத்தினக்கல்லை வாங்கிய தலைவனின் ஊழியனைப் பழி வாங்குவது! இல்லையா? அப்பாடா!

      நீக்கு
    12. ஐந்தாவதையும் மறுபடி ஒரு நோட்டம் விட்டுக் கொண்டேன்.

      நீக்கு
    13. மறுபடியும் ரிவிஷன் பண்ணினதும் கதை புரிந்தது. :)))))

      நீக்கு
    14. @கௌதமன் சார், நீங்க வரைந்திருக்கும் முதல் படத்தின் நிகழ்வை அப்படியே இடப்பக்கம் கொண்டு வந்திருந்தீர்களானால் அவந்திகாவின் கோப ஸ்வரூபத்தையும், கொடியவனின் முகத்தையும் காட்டி இருக்க முடியுமோ? அதே போல் மித்ராவும் நன்கு தெரியும்படி வரைந்திருக்கலாமோ?

      நீக்கு
    15. அப்படி வரையலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்குப்பின் மற்ற கதைகளுக்கு படம் வரைவாத்தில் மும்முரமாக இருந்ததால் - இதைப் பற்றி மறந்துபோய்விட்டேன். அதற்குப் பின் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து தொடர்ந்து பல தடங்கல்கள் - வீட்டு வேலைகளையும் பார்க்கவேண்டிய கட்டாயம்.

      நீக்கு
    16. அப்பப்பா!...

      பதிலுக்குப் பதில் - பதிலுக்குப் பதில் என்று இருந்தால் நான் எப்படி கதைக்குள் வரும் சந்தேகத்துக்குப் பதில் கொடுப்பது?...

      மேலே வந்திருக்கும் சந்தேகங்களை இக்கதைக்கான பாராட்டுகளாக எடுத்துக் கொள்கின்றேன்...

      எல்லாவற்றுக்குமான விளக்கங்களை வழக்கம் போல தஞ்சையம்பதியில்

      சித்திரச் செல்வர் அவர்கள் மிகவும் உழைத்திருக்கின்றார்..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    தொற்று இல்லா வாழ்வு தொடர வேண்டும் இறைவன்
    அருளால்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல முடிவு. மூன்று புறாக்களும் நான்காவது
    நீலு வைத் தேடிப் பறக்கும் அழகு. திரு கௌதமன் ஜியின்
    கைவண்ணத்தில்
    அருமையாகப் பறக்கின்றன.

    காத்திருந்து பழி வாங்கிய இரண்டு பெண்களுக்கும்
    வாழ்த்துகள்.

    தொடர்ந்து சுவை குன்றாமல் தொடுத்த கதை
    சிறப்பு. அன்பின் துரை செல்வராஜுவுக்கும்
    அவர் கற்பனை வண்ணங்களுக்கும் இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    பதிவிட்ட எங்கள் ப்ளாகுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் பாராட்டும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

      நீக்கு
  10. அத்துடன் விடுதியின் மதிற்சுவரின் முண்டத் தலை பொம்மைக்குள் குடியிருக்கும் ஆவியும் எதிரில் வந்து நின்றது.//

    இந்த பொம்மைதானே ஆர்த்தியும் விஜயும் நுழைந்த போது நாக்கைச் சுழற்றியது!

    நீலு - புரிந்தது இப்போது...நினைவுக்கு வந்துவிட்டாள். மித்ராவாகவே இருந்ததால் நீலு டக்கென்று நினைவுக்கு வரவில்லை!!!

    சுபமாக முடிந்துவிட்டது!!

    மித்ரா புறாவாக உருமாறினவள் காத்திருக்கும் காதலன்....இப்போது நீலுவாக வரவேற்பரையில்....அவளின் காதலன் இப்பிறவியில் யார்? ...ஆர்த்தியும் விஜயும் மட்டும் புறாக்களாக மீண்டும் உஜ்ஜயினி நோக்கி போகின்றனர்....அவர்கள் ஆர்த்தியும் விஜயுமாக அங்கு சென்றதும் மாறுவார்களா?

    இப்படியான உருமாற்றம் அமானுஷ்ய விஷயங்களைப் பற்றி எனக்குத் தெரியாததால் குழப்பமோ எனக்கு?!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே! நானும் கேட்க நினைச்ச கேள்வி. நீலுவுக்கு ஏன் முன் ஜென்ம நினைவெல்லாம் வரலை? மித்ராவின் ஜோடி எப்போ அவளுடன் சேருவார்? உஜ்ஜயினி போன புறாக்கள் அங்கே போனதும் உரு மாறி விடுவார்களா?

      நீக்கு
    2. கீதா அக்கா/ தங்கை கீதா இருவராலும் கதைக் களம் பரபரப்பு.. இதற்கெல்லாம் விடையை வழக்கம் போல தஞ்சையம்பதியில் காண்க..

      நமக்கும் பொழுது போக வேண்டும் அல்லவா!..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  11. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்.

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  12. கௌ அண்ணா முதல் படத்தை விட இரண்டாவது படம் அட்டகாசம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்க்கா... உங்க வீட்டு விருந்தில் மோர்சாதம் அருமை.

      நீக்கு
    2. நெல்லை ஹையோ எனக்குப் புரியலை போங்க...கௌ அண்ணா இதுக்கு என்ன அர்த்தம் நிஜமாகவே புரியலை...நான் சொன்னதில் என்ன குறையோ?!!!

      ஆனா ஹையோ ஹையோ நெல்லை மோர்சாதமும் சொதப்பும் இது தெரியாதாக்கும்!!! ஹூம்...

      கீதா

      நீக்கு
  13. ஸ்ரீ உஜ்ஜயினியை நோக்கி சிறகசைத்த புறாக்கள் நேரே போய்ச் சேர்ந்திருக்கக் கூடாதா?...

    வழியில் ஏன் தரையிறங்கின?..

    அடுத்த கதையில் அதைச் சொல்லப் போகிறீர்களா, தம்பீ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உஜ்ஜயினியை நோக்கிச் சென்ற புறாக்கள் எங்கே தரையிறங்கியதாகத் தம்பி குறிப்பிட்டிருக்கார் என அலசி ஆராய்ந்தும் புலப்படவே இல்லை. :(

      நீக்கு
    2. இதைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.. ஆனாலும் கைத் தொலைபேசியின் சிறிய கருத்துப் பெட்டிக்குள் தட்டச்சு செய்வது சற்றே சிரமமாக இருக்கின்றது..

      கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக இதே கதை தான்..

      ஜீவி அண்ணா, கீதாக்கா இருவரது சந்தேகங்களுக்கும் தஞ்சையம்பதியில் விளக்கம் வர இருக்கின்றது.

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  14. வங்காளியைக் காணவில்லை// வங்காளி கொலை செய்யப்பட்டிருக்கிறான் அதாவது தற்போதைய காலப்படி. இல்லையா?

    துரை அண்ணா இதைத் தொடர்ந்து எழுத இரண்டாவது அத்தியாயம் நீங்கள் எழுதலாம் அண்ணா. இவெஸ்டிகேஷன் ஸ்டைலில்..

    அப்போது எப்படி மரணம் நிகழ்ந்தது என்ற ரீதியில் போகும் போது இந்த பார்ட் சொல்லி....

    என் டைப் என்றால் இவெஸ்டிகேஷனில் - அறிவியலான உளவியலும், துப்பறியும் போது சொல்லப்படும் இந்த அமானுஷயமும் கலந்து கட்டி என்று!!!! ஹிஹிஹிஹி அண்ணா நான் ஓடிவிடுகிறேன்.... !!!!

    ஒரு வேளை நான் எதிர்பார்த்த முடிவு வேறாக இருந்ததாலோ!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகின்றேன்... அடுத்த சில வாரங்களில் வருகின்றேன்..

      இதுவும் ஒரு கோணமாகத் தான் இருக்கின்றது..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  15. எந்தக் குறையும் வைக்காமல் Fantacy. கதைகள் எப்படியிருக்க வேண்டுமோ அப்படி எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.

    ஒரு குழந்தை மாதிரி ரசித்தேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அண்ணா...
      தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  16. துரை செல்வராஜு சார்....நான் தொடரை முழுமையாகப் படித்தேன்.

    ஒவ்வொரு வாரமும் விவரிப்பு அழகாக இருந்தாலும், கதையில் நிறைய ஓப்பன் ends..முழுமையில்லை. ஆனாலும் எந்த கருவை எடுத்துக்கொண்டு, அதனை உஜ்ஜயினி மாகாளியுடன் தொடர்புபடுத்தி (பாளையங்கோட்டைல உச்சினிமாகாளி கோவில் உண்டு. தெற்கில் நிறைய இந்த மாதிரி கோவில்கள். இந்த அம்மன் கோவில்களெல்லாம் உஜ்ஜயினியிலிருந்து வந்தவர்கள் ஆரம்பித்த கோவில்கள்) வாழ்க்கையில் எவ்வளவு கசப்பான பக்கங்களை அனுபவித்து, வீடு நாடு இழந்து, உறவினர்களைத் தீக்கு பலிகொடுத்து அதன் வேதனையை மனதில் தாங்கி... தமிழகத்துக்கும் கலாபக் காலம் நிகழவில்லையா? பன்னீராயிரம் மக்கள் தற்போது தென்னந்தோப்பாக இருக்கும் பகுதியில் மதம் மாற மறுத்ததற்காக வெட்டிக் கொல்லப்பட்டனர். ரஜபுதன மேர்வார் பெண்கள் அடைந்த துன்பத்திற்கு அளவேயில்லை.

    நாமோ சரித்திரம் என்ற பெயரில் அசோகர் மரம் நட்டார் குளம் வெட்டினார் என்றும், அக்பர் இந்து இஸ்லாமிய ஒற்றுமையை வளர்த்தார் என்றும், ஔரங்கசேப் குல்லா விற்று பணம் பண்ணினார் என்றும் படித்து சரித்திரத்தை புதுவித நாவல்போல் படிக்கிறோம்.

    தமிழகத்திலும் வடவரின் மத ஆதிக்கத்தால் அதனைப் பரப்புபவர்கள் அரசரால் தண்டிக்கப்பட்ட வரலாறைக் காண்கிறோம். பாரத்த்திலும் நிறைய போர்கள் உண்டு, யுகங்களாக. ஆனால் பெண்கள் அபலைகள் சம்பந்தமில்லார்கள் மதிப்புடன் நடத்தப்பட்டனர். இவர்களுக்குத் துன்பம் விளைவித்தால் அது தீர்க்கமுடியாத பிரம்மஹத்தி தோஷம் என்பது நம் நம்பிக்கை.

    இப்போதுள்ள வரலாறை, கலாபக் காலங்களில் ஒடுக்கி கோரமாக அழிக்கப்பட்டவர்களில் அடுத்தடுத்த வாரிசுகள் படித்தால் அவர்கள் இரத்தம் கொதித்து இந்தியாவே பொசுங்கிவிடும்.

    இந்தப் பின்னணியில்தான் கதை என்பதும், உஜ்ஜயினி அவர்களில் ஓரிருவரை ஒடுக்குவதான உருவகமாகவும் நாவலைப் புரிந்துகொள்கிறேன்.

    நல்ல களம், வர்ணணைகள் நிகழ்வுகள் நன்று... ஆனாலும் இன்னும் ரொம்பவே நன்றாகச் செதுக்கியிருக்கலாம்.

    சரித,திரத்தில் பலவும் ஓப்பன் எண்டாகத்தான் இருக்க முடியும். ஒவ்வொரு பாத்திரத்தின் கதியை விளக்க முடியாது. அதனைப் புரிந்துகொள்கிறேன். அதில் தவறில்லை. ஆனால் புனை கதையில் அப்படி இருக்க முடியாது.

    மொடரில் சில ஓவியங்கள் பண்ண எடுத்துக்கொண்ட கௌதமன் அவர்களின் முயற்சி பாராட்டுதலுக்குரியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நான் ஏதோ எதிர்பார்த்திருந்தேன்.// மேலே நான் என்னோட கருத்திலும் இதைத் தான் மறைமுகமாய்க் குறிப்பிட்டிருந்தேன். சப்பென்று முடிந்துவிட்டாற்போல் ஓர் உணர்வு. காலையில் அதைக் குறிப்பிட்டுப் போட்ட கருத்துரையை வெளியிடுவதற்குள்ளாக இணையப் பிரச்னை. சேமிக்காமல் மூடிட்டேன். அதில் இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருந்தேன்.

      நீக்கு
    2. @ நெல்லை.
      // கதையில் நிறைய ஓப்பன் ends..முழுமையில்லை.. //

      இந்த வரிகள் எனக்குப் புரிய வில்லை.. இதன் அர்த்தத்தை யாராவது சொன்னால் நல்லது..

      அன்பின் நெல்லை...

      தங்களது கருத்திற்காகவே இன்னும் சில பதிவுகள் எழுதலாம்.. பதிவில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் கருத்துகள் பலவும் உண்மையானவை..
      ஆனால் சம்பந்தப்பட்ட இனத்தவர்களுக்கு மிகவும் கசப்பானவை..

      தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. கதை முழுமையாக முடியவில்லை என்கிறார். சிலவற்றின் புதிர்கள் விடுபட்டாலும் பல விடுபடவில்லையே!

      நீக்கு
    4. ஓ!..

      வெள்ளிக்கிழமை பதிவினைப் பாருங்கள்..

      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  17. இதைவிட நிறைய எழுதணும்.. அந்தக் காலத்தின் கோர முகத்தைப் பற்றி...

    ஆனாலும் சரித,திரத்தில் நாம் புரிந்துகொள்ளவேண்டியது, வேற்றான் நம்மை அழிக்க நம்மில் சிலர் இடம் கொடுத்ததினாலேயே நிகழ்ந்தது.

    தமிழகத்தின் தற்போதைய அத்தகைய உடன் பிறந்தே கொல்லும்்வியாதிகளைப் பற்றி எழுதினால் அரசியலாயிடும். நாம் இந்தியர்கள் தமிழர்கள். வெளியிலிருந்து இந்த மண்ணில் வந்த கலாச்சாரம் வேறுதான்.. எப்போதும் இந்தியர்களுக்கும் அதற்கும் சம்பந்தம் வந்முவிட முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ நெல்லை..

      // எப்போதும் இந்தியர்களுக்கும் அதற்கும் சம்பந்தம் வந்து விட முடியாது..//

      உண்மை.. உண்மை..
      பாரத புத்திரர்களுக்கும் மேற்கத்திய கலாச்சாரத்திற்கும் சம்பந்தம் வந்து விட முடியாது..

      நன்றி.. நன்றி..

      நீக்கு
  18. தி. கீதா சகோ என்னவோ இன்வெஸ்டிகேஷன், துப்பறியும் என்றெல்லாம் சொல்கிறார்களே என்று பார்த்தால் நீங்களோ வரலாற்று உண்மைகள் என்று...

    ஒரு கதை என்பது அவரவருக்குப் பிடித்தமானதைப் பார்க்கும் மாயக் கண்ணாடியா நெல்லை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி அண்ணா நெல்லை சொல்வதும் விஷயம் இருக்கு அதாவது துரை அண்ணா எடுத்துக் கொண்ட கரு. துரை அண்ணா இதைப் பற்றி பல விஷயங்கள் இலை மறை காயாகச் சொல்வதுண்டு. அவர் தளத்தில், இங்கு கருத்துரைகளிலும். அதாவது வரலாறு சார்ந்து. அதனால் நெல்லையும் அதைச் சொல்லியிருக்கிறார். எனவே இருவருமே சொல்லியிருப்பது முந்தைய கால நிகழ்வுகளின் அடிப்படையில்.

      அதே போன்று எனக்கு அமானுஷ்ய விஷயங்களைப் பற்றியும் அத்தனை அறிவு இல்லை. அதை அறிந்து கொள்ளும் விதத்தில்தான் துரை அண்ணாவிடம் நான் கேட்பது.

      இங்கு நான் சொல்வது இன்றைய காலகட்டத்தின் படி எனக்குத் தெரிந்ததன்படி. எனக்கு நேற்றைய நிகழ்வுகள் பற்றி அதிக அறிவு கிடையாது. அதனால் நான் அதில் போகலை.

      எனக்குக் கதையின் முடிவு வரிகளில் சில இப்போதைய காலகட்டத்தில் இருப்பதால் தோன்றியது.

      இது முதல் பகுதி....//நேபாளத்தில் இருந்து இங்கு உணவகப் பணிக்கு வந்திருப்பவள் - நீலு ஷிவ்பகதூர்..//

      இப்பொதைய பகுதி //விடுதியின் வரவேற்புக் கூடத்தில் - தனது பணியினைத் தொடங்கியிருந்தாள் நீலு..//

      //'ஒன்றும் சொல்லாமல் எங்கே போனான் இந்த வங்காளி?.. நேற்று சாயங்காலம் வந்த காதல் ஜோடி இன்னும் இறங்கி வரவே இல்லையே!.. ' - என்று நினைத்தவள் மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டாள்..//

      வங்காளியைக் காணவில்லை என்று நீலு நினைக்கிறாள். ஆனால் அதற்கு மேலே உள்ள பகுதியில் வரும்வ் வரி..

      //' நற.. நற.. ' என்று எலும்புகள் நொறுங்கின.. உள்ளிருந்த இதயம் அறுந்து விழுந்தது.. கொடூரனின் உயிரும் பிரிந்தது..//

      அப்போது அந்த வங்காளி இறந்துவிட்டானா அல்லது அவனை, தான் கொன்றுவிட்டதாக அவந்திகாவாக இருக்கும் ஆர்த்தி நினைக்கிறாளா? நீலு புன்னகைத்துக் கொள்வதால் நீலுவும் அப்படி நினைக்கிறாளா? இங்குதான் என் மனம் உளவியலைச் சிந்திக்கிறது. வங்காளி இறந்துவிட்டானா அலல்து அது அவந்திகாவாக இருக்கும் ஆர்த்தியின் மனநிலையா...

      அதனால் வங்காளி உயிருடன் இல்லை என்றால்
      தற்போதைய சூழலில் நீலு அதை அறியும் போது போலீசுக்குச் சொல்வாளா இல்லையா? போலீஸ் வந்தால் இன்வெஸ்டிகேஷன் வரத்தானே செய்யும்?

      அந்த ரீதியில் நான் சொன்னது. அல்லாமல் இக்கதையைப் பற்றி அல்ல. இதன் தொடர்ச்சியாக துரை அண்ணாவே எழுதலாம் என்ற ஆர்வத்தில் சொன்னது.

      என்னை ஈர்க்கக் கூடிய ஒரு சப்ஜெக்ட் இன்வெஸ்டிகேஷன். அதில் ஒரு பகுதியான உளவியல் மற்றும் அதனால் குற்றவியல், இன்வெஸ்டிகேஷன். அமெரிக்காவின் எஃப்பிஐ - அங்கு கொலை செய்து சிறையில் இருக்கும் குற்றவாளிகளை அவர்கள் ஏன் கொலை செய்தார்கள் பின்னணி என்ன என்று உளவியல் படி அவர்களை ஆராய்ந்து ஒரு சீரிஸே போட்டிருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

      நம்மூரிலும் குற்றம் செய்பவர்களை இப்படி ஆராயும் பகுதி உண்டு.

      கதையின் முடிவுப் பகுதியை அப்படி யதார்த்தத்தில் சிந்தித்ததால் தோன்றியது. எனக்கு இதன் அடிப்படையில் அடுத்த பகுதியாகக் கதை மனதில் தோன்றுகிறதுதான். ஆனால் அது துரை அண்ணா எடுத்துக் கொண்ட கதைக் களத்தையும், கருவையும் சிதைத்துவிடும். அதனாலேயேதான் அண்ணவையே நீங்கள் எழுதலாம் என்று சொல்லியிருக்கிறேன்.

      ஜஸ்ட் நெல்லையின் மனதில் எழுந்த கருத்து அது. அது போல் என் மனதில் எழுந்த கருத்து அவ்வளவே. அல்லாமல் வேறு விதத்தில் அல்ல ஜீவி அண்ணா.

      கீதா

      நீக்கு
    2. கதையின் முடிவுப் பகுதியை அப்படி யதார்த்தத்தில் சிந்தித்ததால் தோன்றியது. எனக்கு இதன் அடிப்படையில் அடுத்த பகுதியாகக் கதை மனதில் தோன்றுகிறதுதான். //

      ஒரு உளவியல் சார்ந்த ஒரு நிகழ்வு 7 வருடங்களுக்கு முன் அறிய நேர்ந்தது. வேறு சிலவும் அறிந்திருக்கிறேன் என்றாலும் இதை நான் கதையாக எழுதத் தோன்றி எழுதி அதற்குச் சில விஷயங்கள் தேவைப்பட்டதால் (வழக்கு, குற்றவியல், சட்டம், உளவியல் மருத்துவம் என்று) தேடத் தொடங்கி அது வழக்கம் போல் பாதியில் நிற்கிறது. க்ரைம், இன்வெஸ்டிகேஷன் கதை. அதை முடிக்கும் மனநிலையில் இப்போது நான் இல்லை!!!!!

      அதிகம் சொல்ல முடியாது பொதுவெளியில். எனவே ஊர், பெயர், எதுவும் சொல்லாமல் சொல்கிறேன்...பருவ வயதுப் பெண் ஓரிரு கொலைகள் செய்ய, அவள் தன் நிலையிலிருந்து நழுவி கிட்டத்த்ட்ட இங்கு துரை அண்ணா, (நெல்லை சொல்லியிருப்பது போல் வரலாறு சார்ந்த - ) சொல்லியிருப்பது போல் அவள் தன்னை ஒரு பண்டைய ஒரு அரசப் பெண்ணாக நினைத்து அப்படியே பேசி, தான் பழிவாங்க நிறையப் பேர் உள்ளனர் என்பது போல், தான் அவள் பிறவி என்பது போல்....அப்படி ஒரு குற்றம் செய்த போது சிசிடிவி கேமராவில் சிக்கிட ஆனால் அதன் பின் யதார்த்த நிலையில் பருவப் பெண்ணாக... பிடிபட்ட போது யதார்த்த நிலையில். பருவ வயதுப் பெண் யதார்த்தமும், தான் மாறும் மந நிலையும் மாறி மாறி அவள் பேசிட...குழப்பம்.

      அவளின் பின்னணியை இன்வெஸ்டிகேட் செய்த போது அறிந்தவை அவளது தற்போதைய வாழ்க்கை பெற்றோர் எல்லாம். அது மனதில் எழுந்ததால் அப்படியான ஒரு சிந்தனையைத்தான் கருத்தில் சொல்லியிருந்தேன்.

      எனக்குப் பிறவிகள் பற்றியும் அதிக அறிவு கிடையாது. (இதற்கும் சுஜாதா சொல்லியிருந்த அறிவியல்படியான ஒரு விஷயத்தைத்தான் எடுத்துக் கொண்டேன்) அதனால்தான் துரை அண்ணாவிடம் நான் எழுப்பிய கேள்விகள். அந்த பதில்கள் எனக்கு என் கதையைத் தொடர உதவுமே என்ற ரீதியிலும். அப்படியாச்சும் நான் அக்கதையை எழுதி முடிப்பேனோ என்ற நப்பாசையில்!!! ஹாஹாஹாஹா

      கீதா

      நீக்கு
    3. ஹஹ்ஹ்ஹா..

      எவ்வளவு பெரிய விளக்கம் பாருங்கள்.
      ஒவ்வொருவர் நினைப்புக்கும் ஏற்ப ஒரு கதை இருக்க வேண்டும் என்பதெல்லாம் எதிர்பார்ப்பு தான். கதாசிரியர் என்ன நினைத்து இந்தக் கதையைப் புனைந்தார் என்பது தான் முக்கியமாகிப் போகிறது. இல்லையா?

      ஒரு கதையின் மூலம் கதாசிரியர் நம்மிடம் உரையாடுகிறார்.
      அந்த உரையாடலை நம்மிடம் நிகழ்த்துவதற்கு அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஊடகம் அவர் எழுதும் கதை.

      ஆக அவர் கதை தான் தம்மிடம் பேசுகிறதே தவிர நேரிடையாக அவர் அல்ல.

      இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் உரையாடலாக அவர் நம்மிடம் பேச வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாய் இருக்கிறது. என்ன செய்ய?

      சொல்லுங்கள்.

      ஒவ்வொருவர் நினைப்பதையும் ஒரே கதையில் அடக்கி விட முடியுமா என்ன? முடியாது என்பதால் தான் சிலவற்றை நம் கற்பனைக்கும், யூகங்களுக்கும் விட்டு விடுகிறார்.

      சரியா?..

      நீக்கு
    4. தங்களது கருத்துகளை எல்லாம் ஒருங்கு திரட்டி -

      தனித்தனியாக எனது விளக்கங்களைத் தருகின்றேன்..

      சற்றே அவகாசம் வேண்டும்..
      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  20. கதையை நிறைவு செய்த விதம் அருமை.

    மீண்டும் முழுமையாக கதையை படிக்க வேண்டும்.
    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    மதுரையிலும் நிறைய இடங்களில் உஜ்ஜயினி காளி கோவில் இருக்கிறது.

    படங்கள் நன்றாக இருக்கிறது.

    //வடக்கு எல்லையில் காவிரி ஆற்றில் நீராடிக் களித்த புறாக்கள் அருகிருந்த வெற்றிவேல் முருகனின் ஆலயத்தை வலம் செய்து வணங்கின..

    ஸ்ரீ உஜ்ஜயினியை நோக்கி சிறகசைத்தன..//

    நீல வானமும்,வெள்ளைப்புறாக்களும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கோமதிஅரசு..

      // மீண்டும் முழுமையாக கதையை படிக்க வேண்டும்.
      பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.. //

      தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  21. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

    விடிவதற்கு முன்பாக (2:00) எழுந்தது.. இப்போது திருக்கோயில் தரிசனத்தில்..

    மதியத்தில் சந்திப்போம்..
    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா துரை அண்ணா நல்ல தரிசனம் கிடைத்திடட்டும்!

      வந்து பார்த்தீங்கனா உங்களுக்குக் குழப்பத்துல தலை சுத்திடப் போகுது! "ஜெய் துர்கா! இந்தப் புள்ளைங்க நம்ம அவந்திகாவை என்ன பாடுபடுத்தியிருக்கு. இந்தப் புள்ளை நம்ம அவந்திகாவை சரியாவே புரிஞ்சுக்கலையோ என்னென்னமோ பேசியிருக்கு' ன்னு!!! ஹாஹாஹா...

      நல்ல தரிசனம் முடிச்சு வாங்க....நான் அப்புறம் வர முடியுமா தெரியலை பார்க்கிறேன்...

      கீதா

      நீக்கு
  22. இன்று திருவிழா போல இருக்கின்றது.. மிகவும் மகிழ்ச்சி..

    நெல்லை அவர்கள களத்தில் இறங்கி இருக்கின்றாரே!..

    எல்லா கருத்துகளுக்கும் பதில் சொல்கின்றேன்..

    சற்று அவகாசம் தாருங்கள்..

    மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  23. தற்போது ஸ்ரீ தையல் நாயகி சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரன் திருக்கோயிலில்!..

    அனைவருக்காகவும் பிரார்த்தனையில்..

    ஓம் நம சிவாய..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வைத்திய நாதன், தையல்நாயகி அனைவரையும் நலமோடு வைக்க வேண்டும்.
      அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
    2. செவ்வாய்க் கிழமை அதுவுமாக நல்ல கூட்டம்... நெரிசல்.. கூட்டமும் தாமாக ஒழுங்கமைவில் இருக்க வில்லை..

      இருப்பினும் நல்ல முறையில் தரிசனம் ஆயிற்று..

      தங்களது அன்பின் கருத்துக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  24. கமலா ஹரிஹரனுக்கு உடம்பு இன்னும் சரியாகலையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவங்க விரைவில் குணமாகி, பதிவுகள் போடணும்..பின்னூட்டத்தில் ஐக்கியமாகணும். அவங்க நலத்துக்குப் ப்ரார்த்தனைகள்

      நீக்கு
    2. எனக்கும் கவலையச்க இருக்கின்றது.. விரைவில் நலமடைய வேண்டிக் கொள்வோம்..

      நீக்கு
  25. அதெல்லாம் சரி. இப்போத்தான் எதிரிகள் யாரும் இல்லையே? ஏன் புறாவாக உருமாறி உஜ்ஜயினிக்குப் பறக்க வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே!..

      நானும் யோசித்துக் கொண்டு தான் இருந்தேன்.. இங்கிருந்து உஜ்ஜயினி வெகு தூரம்.. முன்பதிவு இல்லாமல் ரயிலில் போக முடியாது..

      புறாக்கள் என்று ஆகிவிட்டால் பிரச்னையே இல்லை..

      தங்கு தடையின்றி பறந்து செல்லலாம்...

      அக்கா அவர்களின் சந்தேகத்துக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. அப்பாடா! அலசி ஆராய்ந்து துவைத்துக்காயப் போட்டாச்சு. வரேன். நாளைக்கு மெதுவா! நேரம் இருந்தா ஆறரைக்குள் வரலாம். :)))))

    பதிலளிநீக்கு
  27. சகோ கமலா ஹரிஹரன் அவர்கள் நலம் பெற வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  28. @ பானுமதி வெங்கடேஸ்வரன்

    // நேற்று கருத்து கூற முடியாததால் இன்று எழுதுகிறேன். துரை செல்வராசு அவர்களின் கதை மூன்று வாரங்கள் தான் படித்தேன். எனக்கு அமானுஷ்யம், பாம்பு போன்ற விஷயங்களில் கொஞ்சம் பயம், அதனால் தொடரவில்லை. படித்தவரை புதிய களத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்று தோன்றியது...

    இதில் பயங்கரம் என்று ஒன்றுமே இல்லையே..

    தன்னைக் காத்துக் கொள்ளப் போராடுகின்றாள் வீரமங்கை.. அதில் வெற்றியும் பெறுகின்றாள்

    கதை அவ்வளவே.. இடையில் தனக்கு உரிமையானதை கோபத்துடன் மீட்டெடுக்கின்றாள்..

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    பதிலளிநீக்கு
  29. விறுவிறுப்பான கதை சுபமான முடிவு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  30. கதையின் நிறைவுப் பகுதி நன்று. மொத்தமாக மீண்டும் இன்னும் ஒரு முறை படிக்க வேண்டும். துரை செல்வராஜூ ஐயாவின் கதைகளைத் தொகுத்து புத்தகமாக, குறைந்தபட்சம் மின்புத்தகமாகவாது தொகுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி வெங்கட்..

      தங்களது கருத்தைப் பற்றி யோசிக்கின்றேன்..

      அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!