செவ்வாய், 19 ஜூலை, 2022

​சிறுகதை : மஹாபாஷ்யம் 2/2 - மொழிமாற்றம் - ஜெயக்குமார் சந்திரசேகர்.

 

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

மஹா பாஷ்யம்

பாகம் -2 (நிறைவு)

மொழியாக்கம் 

ஜெயக்குமார் சந்திரசேகரன்

முன்கதைச் சுருக்கம்:

பதஞ்சலி முனிவர் வியாகரணத்திற்கு பாஷ்யம் போதித்தல் - ஒரு சிஷ்யன் செய்த தவறு - அனைத்து   சிஷ்யர்களையும் சாம்பலாக்குதல் -  ஒளிந்து இருந்து பாஷ்யம் படித்த கந்தர்வனை ராட்சஷன் ஆக்குதல் - ராட்சஷன் பிராமணனுக்கு பாஷ்யம் போதித்தல் - பிராமணன் பசி உறக்கம் தாகம் வராதிருக்க சாப்பிட்ட மருந்தின் எதிர்வினை - ஆற்றில் முகம் கழுவும்போது நீண்ட உறக்கத்தில் ஆழ்தல்.

சுட்டி

மகா பாஷ்யம்-1 

இப்படி நதியின் கரையில் பிராமணன் நீண்ட உறக்கத்தில் படுத்து விட்டார்.  அவ்வமயம் அங்கு குளித்துக் கொண்டிருந்த ஒரு சூத்ர பெண் (பெண்ணின்  பெயர் பத்ரா என்று இருக்கட்டும். கதை முழுதும் சூத்ர பெண் என்றே ஆசிரியர் குறிப்பிடுவது இக்காலத்தில் வெறுப்பு தோன்றும் வார்த்தையாக இருக்கும்.) பிராமணன் விழுவதைக் கண்டாள். அடுத்து சென்று நோக்கியபோது பிராமணன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை அறிந்தாள். காற்றும் வெயிலும் கொண்டு பிராமணன் நதிக் கரையில் கிடப்பது சரியல்ல என்று அவளுக்குத் தோன்றியது. அப்பெண் அப்பிரதேசத்தில்  பிரபலமாக இருந்த ஒரு சூத்ரக் கனவானுடைய மகள் ஆவாள். அவளுடைய வீடு நதிக்குப் பக்கத்தில் தான் இருந்தது. வீட்டிற்குச் சென்று நான்கு ஆட்களைக் கூட்டிவருமாறு தன் தோழிகளை அனுப்பி ஆட்களை வரவழைத்தாள். ஆட்கள் பிராமணனைக்  கொண்டு வந்து ஒரு நல்ல அறையில் கட்டிலில் கிடத்தினர். 

பல நாழிகை நேரம் கழிந்தும் பிராமணன் கண் விழிக்கவில்லை. இத்தகைய உறக்கத்தைக் கண்டு அப்பெண் பயந்து போனாள். நடந்த காரியங்கள் முழுவதையும் தந்தையிடம் தெரிவித்தாள். அவர் உடனே ஆள் அனுப்பி வைத்தியரை வரவழைத்தார். 

வைத்தியர் வந்து பரிசோதித்து விட்டுஇவர் நல்ல உறக்கத்தில்தான் இருக்கிறார். வேறு ஒன்றும் இல்லை. எப்போது உறக்கம் உணர்வார் என்று தெரியாது. சில நாட்கள் பிடிக்கலாம். எப்படியானாலும் தினமும் மூன்று வேளை அன்ன லேபனம் (சோறும் மருந்தும் அரைத்து தேகம் முழுதும் பூசுவது) செய்தல் வேண்டும். எத்தனை நாள் உறங்கியாலும் வேறு ஏது குழப்பமும் உண்டாகாது. உறக்கம் தீர்ந்து எழும்போது உண்டாகும் அசதி, களைப்பு முதலியவை அன்ன லேபனம் கொண்டு மட்டுப்படும். ஆகவே அவ்வாறு செய்வீர்என்று சொல்லிச் சென்றார். 

பிரபுவும் அவ்வாறே செய்யுமாறு மகளைப் பணித்தார். பத்ராவும் மிக்க மகிழ்ச்சியுடன் அன்ன லேபனம் மற்றும் சிசுருட்சைகள் யாவையும் மிக்க சிரத்தையுடன் செய்து பிராமணனின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தாள். 

ஆறு மாதம் கழிந்தது. பிராமணன் உறக்கம் தீர்ந்து கண் விழித்தார். கண் விழித்தவுடன் அவருக்கு வந்த முதல் கவலை ஆலிலைக் கட்டு என்ன ஆனதோ என்பது தான். உடன் நதிக்கரைக்குச் சென்றார். அவர் செல்வதைக் கண்ட பத்ரா ஆட்களை விளித்து அவர் எங்கு போகிறார், என்ன செய்கிறார் என்பதைக் கண்டு வருமாறு ஏவினாள். அவர்களும் பிராமணரின் பின்னே சென்றனர். நதிக்கரையில் ஒரு பசு  ஆலிலைகளை தின்று கொண்டிருந்தது.

பிராமணன், பசு தின்று எஞ்சிய ஆலிலைகளை எடுத்து கட்டி வைத்துக் கொண்டார். “பசு யாருடையது?” என்று பிராமணர், ஆட்களிடம் விசாரித்தார். அவர்கள்நம் பிரபுவுடையது தான்என்று பதில் அளித்தனர். எனவே பிராமணர் ஆட்களைக் கொண்டு அந்த பசுவையும் ஒட்டிக் கொண்டு பிரபுவின் வீட்டை அடைந்தார். அன்று இரவு அங்கு தங்கி மறுநாள் காலை அங்கிருந்து போகலாம் என்று தீர்மானித்தார். 

வீட்டை அடைந்தபோது பத்ரா அவரை வரவேற்று வணங்கி மரியாதைகள் செய்து இருத்தினாள். பிராமணர் இதுவரை நடந்த கதைகள் முழுவதும் சொன்னார். அவ்வாறே பத்ராவும் கடந்த ஆறு மாதக் கதையை சொன்னாள். பிராமணருக்கு பத்ராவின் சேவையால் தான்,  தான் உயிர் பிழைத்திருப்பது புரிந்தது. இப்படியாக அவர்களின் புரிதலும், சிநேகமும் கூடுதல் ஆகியது. 

ஆலிலை தின்ற பசுவை தனியே ஓர் கொட்டிலில் கட்டி அதனைப்  பார்த்துக்கொண்டனர். பிராமணர் பத்ராவின் வீட்டிலேயே அன்றிரவு தங்கினார். பத்ராவும் அவருக்கு வேண்டிய பணிவிடைகள் மற்றும் ஆகாரம் முதலியவற்றைக் கவனித்துக் கொண்டாள். 

அடுத்த நாள் காலை பிராமணர் எழுந்து பசுக் கொட்டிலுக்குச் சென்றார். பசு தின்று இருந்த ஆலிலைகள் எல்லாம் ஒரு சேதமும் இன்றி, இரவு இட்ட சாணத்தில் கிடந்தன. அவற்றைக் கழுவி எடுத்து தன்னிடம் இருந்த ஆலிலைகளையும் சேர்த்து வரிசைப்படி அடுக்கி கட்டிக் கொண்டார். 

ஆலிலைகள் பல நாட்கள் கழிந்தும், பசு தின்றும் வாடாமல் கேடு கொள்ளாமல் இருந்தது ஆச்சரியம் தான். இது கந்தர்வன் கை கொண்டு எழுதியதாலோ, அல்லது மஹரிஷியின் பாஷ்யத்தின் மஹிமையாலோ, அல்லது தெய்வ கிருபையினாலோ என்று சரியாக அறிய முடியவில்லை. அவை கேடில்லாமல் கிடைத்தது பாக்கியம் தான். 

பத்ராவிடம் சொல்லிவிட்டு யாத்திரையை தொடரலாம் என்று தீர்மானித்து பத்ராவை கூப்பிட்டுநான் இங்கு வந்து 6 மாதம் ஆகிறது. இங்கிருந்து போக நான் தீர்மானித்திருக்கிறேன். இத்தனையும் காலம் என்னை வேண்டிய வண்ணம் சிசுருஷை செய்து என்னை ரட்சித்தாய். என் உயிரைக் காப்பாற்றினாய். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் பிரதி உபகாரம் எதுவும் செய்யாமல் போனால் நான் நன்றி மறந்தவன் ஆவேன். உன்னுடைய விருப்பம் எதுவோ அதைக் கூறவும். அவ்விருப்பதை என்னால் முடிந்த அளவு நிறைவேற்ற அனுக்கிரகம் செய்வேன். என்னுடைய அனுக்கிரகம் பிழையானதில்லை. என்னால் இதற்கு மேல் உனக்கு வேறு எதுவும் செய்ய முடியாது. ஆகையால் நீ உன் விருப்பத்தை தயக்கம் இன்றி சொல்வாயாகஎன்று கூறினார். 

பத்ரா அவரைத் தொழுது வணங்கிசுவாமி, ஒரு மகாபுருஷனுடைய பாத சிசுருஷை செய்து என்னுடைய ஜென்ம பலன் கிடைக்கப் பெற்றேன். இனி வேறு எந்த புருஷனுக்கும் சிசுருஷை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே தாங்கள் என்னைத் தங்களுடைய மனைவியாக ஏற்று தங்களுடைய ஆயுட்காலம் முழுதும் தங்களுக்கு பணிவிடை செய்ய, என்னை ஆசிர்வதிக்கக் கோருகிறேன். இதற்கு மேல் எனக்கு வேறு எந்த அனுக்கிரகமும் வேண்டாம். இந்த அனுக்கிரகம் கிடைத்தால் நான் ஜென்ம சாபல்யம் அடைவேன்.” என்றாள். 

இப்பிரகாரம் அவள் கூறிய விருப்பதைக் கேட்ட பிராமணனுக்குச் சங்கடம் வந்தது. ‘கஷ்டம், இந்த சம்சார சாகர சுகங்களை விட்டு சன்யாசம் கொள்ள, தக்க குருவைத் தேடி  அலைபவன் நான். இவளைத் திருமணம் செய்வது எப்படி? ஆனால் உயிர் காத்த இவளுடைய பிரார்த்தனையையும் நிராகரிக்க முடியவில்லை. நாலாமது வர்ணத்தில் பட்ட இவளை விவாஹம் செய்ய வேண்டுமெனில் பிராமணன் ஆகிய நான் பிராமண, க்ஷத்ரிய, வைசிய பெண்களை முறைப்படித் திருமணம் செய்த பின்பே சூத்திர கன்னிகையை நான்காவதாக மணம் செய்ய முடியும் என்றல்லவா சாஸ்திரம் விதிக்கிறது. ஒரு விவாகமும் வேண்டாம் என்றிருந்த எனக்கு நான்கு விவாகம் கழிக்க வேண்டியிருக்கிறதே! ஆண்டவா இது என்ன சோதனைஒரு விதத்தில் இதுவும் எனக்கு ஒரு பாடமாக அமையும். குடும்ப ஜீவிதம் என்பது ஏட்டுப் படிப்பினால் வருவதல்ல. அனுபவத்தால் உணர்வது. அந்த ஜீவிதத்தின் விரக்தி உணர்ந்தாலே சன்யாசம் சிறக்கும் என்று கடவுள் போதிக்கிறார் போலும்என்ற சிந்தனை அவர் மனதில் ஓடியது. 

ஆகையால் இவளுடைய விருப்பத்தையும் அனுசரித்து பின்னர் நம்முடைய விருப்பத்தையும் நிறைவேற்றலாம், வேறு வழி இல்லைஎன்று எண்ணிபத்ரா, உன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியது என் கடமை. ஆனால் ஒரு சின்ன தடங்கல் உள்ளது. பிராமணன், சூத்ர கன்னிகையை விவாகம் செய்ய வேண்டும் என்றால் பிராமண, க்ஷத்ரிய, வைசிய கன்னிகைகளை மணம் புரிந்த பின்னரே விவாகம் செய்ய முடியும். இவ்வாறாக சாஸ்திரம் கூறுகிறது. ஆகையால் நான் சென்று மூன்று குலத்துப் பெண்களை மணம் புரிந்தபின் இங்கு வந்து உன்னையும் விவாகம் செய்து கொள்கிறேன். அது வரை நீ பொறுத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு இருப்பாயா?” என்று சொன்னார். 

இதைக் கேட்ட பத்ராசாஸ்திர விதியை மீறி விவாகம் செய்ய எனக்கு நிர்ப்பந்தமில்லை. தாங்கள் என்னுடைய வேண்டுகோளை கட்டாயம் நிறைவேற்றுவீர்கள் என்ற விசுவாசம் எனக்கு உண்டு. ஆகவே எத்தனை நாட்கள் ஆனாலும் தங்களுக்காகக் காத்திருப்பேன்”. என்றாள். “அப்படியே ஆகட்டும்என்று சொல்லி பிராமணர் ஆலிலைக் கட்டையும் எடுத்துக் கொண்டு அவருடைய சொந்த வீட்டிற்குத் திரும்பினார். 

அவ்வாறு சொந்த வீட்டிற்குச் சென்ற பிராமணர் பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, குலங்களில் இருந்து ஓரோர் கன்னிகையை மணந்தபின் சூத்திரகுல கன்னிகை பத்ராவையும் முறைப்படி அக்னி சாட்சியாய் மணம் புரிந்து கொண்டார். 

காலக்கிரமத்தில் நான்கு மனைவியரும் நான்கு ஆண்மக்களைப் பெற்றெடுத்தனர். புத்திரர்களுக்கு அந்த அந்த வயசில் செய்ய வேண்டிய காரியங்களை முறைப்படி செய்து அவர்களுக்குச் சகல சாஸ்திரங்களையும் நூல்களையும் முறையாகப் படிப்பித்தார். மஹா பாஷ்யமும் போதித்தார். சூத்ர பெண்ணின் புத்திரனுக்கு மட்டும் அவனைத் தனியே மறைவிடம் உண்டாக்கி  இருத்தி உபதேசம் செய்தார். மேலும் அவன் படித்த வேதம், மற்றும் பாஷ்யம் ஆகியவற்றை பரம்பரையாக வேதம் கற்போருக்கு அல்லாது வேறு யாருக்கும் கற்பிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வைத்தார். 

அவருடைய நான்கு புத்திரர்களில் பிராமண மனைவிக்குப் பிறந்தவர் வரருஷி, க்ஷத்ரிய மனைவிக்குப் பிறந்தவர் மஹாராஜா விக்கிரமாதித்தன், வைசிய மனைவிக்குப் பிறந்தவர் பிரசித்தி பெற்ற விக்ரமாதித்தனின் மந்திரி பட்டி, சூத்ர மனைவிக்குப் பிறந்தவர் மஹா வித்துவானாய பர்த்ருஹரி என்று அறியவும்.   

                  
                              வரருஷி                           பர்த்ருஹரி
 

இவ்வாறு புத்திரர்களை நல்ல யோக்கியராயும், புத்திசாலிகளாயும்வளர்த்திய பின் அப்பிராமணர், கடைசி விருப்பமான சன்யாசம் கொள்ள புறப்பட்டார். பல தேசங்களிலும் சஞ்சரித்து கடைசியில் ஸ்ரீகந்தபாதாச்சாரியரிடம் சன்யாச தீட்சை பெற்று சன்யாசியாகி பிரம்ம தியானம் செய்துகொண்டு பத்ரி ஆஸ்ரமத்தில் இருந்தார்

கேரள ஆச்சார்ய குரு மகா சங்கராச்சாரியாரின் கோவிந்தசாமி என்னும் சீடன்  யோகீச்வர சிரோன்மணியாய இந்த உத்தம பிராமணன் தான் என்பதை அறிந்தீர்கள் என்றால் அவருடைய யோக்யதையைக் குறித்து வேறு ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. 

பறைச்சி பெற்ற பன்னிரு குலம்பிரசித்தமானது என்பது தெரியும் அல்லவா? அதன் முதல்வன் வரருஷி என்பதும் உங்களுக்குத் தெரியும். விக்ரமாதித்தன், பட்டி ஆகியோரது கதை சாமான்யருக்கும் தெரிந்தது தான். சமஸ்கிரிதத்தில் அநேகம் கிரந்தங்கள் வியாகரணம் வேதாந்தம் சம்பந்தமாக இவர்கள் எழுதியுள்ளனர். 

வரருஷி எழுதிய சில நூல்கள்: வார்திகம், ப்ராக்ருதப்ரவேசம், தனபஞ்சகம் முதலியன. 

பட்டி,பட்டி காவியம்என்ற ராமாயணம் எழுதியுள்ளார். 

பர்த்ருஹரி சதகத்ரயம்,  ஹரிதீபிகம், வாக்யபதீயம், மற்றும் பல கிரந்தங்கள் இயற்றியுள்ளார். 

பிரசித்தமான அமருசதகமும் பர்த்ருஹரி இயற்றியது என்று பண்டிதர்கள் கூறுவர். 

இவர்கள் வாழ்ந்த காலத்தில் மகரிஷி பதஞ்சலியைக் காண விரும்பினர் என்றாலும் பதஞ்சலி மேலுலகம் சென்று விட்டதால் இயலவில்லை. 

மஹாபாஷ்யம் ஐதீகம் முற்றுப் பெற்றது.

23 கருத்துகள்:

  1. மொழிபெயர்ப்புக் கதைகளை ஆர்வத்துடன் பகிரும் ஜெயக்குமார் சாருக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. நான் இதுவரை இந்தக் கதையைப் படித்ததில்லை. நன்றாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கதையின் முதல் பகுதி(சென்ற வார கதை) சங்கரவிஜயத்தில் வருவது போல் இருக்கிறது. இரண்டாம் பகுதி இப்போதுதான் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. பானுமதி வெங்கடேஸ்வரன்19 ஜூலை, 2022 அன்று 7:52 AM

    பெயரோடு பதிந்த கருத்து வெளியாகவில்லை, பெயரில்லாமல் பதிந்த கருத்து வந்து விட்டது...!? என்ன கொடுமை!!

    பதிலளிநீக்கு
  5. கதை சுவாரஸ்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கங்களுடன்..

    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  7. இப்படியும் பிறப்பா...? அடப்பாவிகளா...

    பதிலளிநீக்கு
  8. என் மனதில் ஊடாடிக் கொண்டிருந்த பல சந்தேகங்கள் தெளிவாகின..

    நிறைவேறிய காதல் நல்லது..

    பதிலளிநீக்கு
  9. இதை எல்லாம் சங்கர விஜயம்/விக்ரமாதித்தன் கதை/பர்த்ருஹரி கதை ஆகியவற்றில் ஏற்கெனவே படிச்சிருக்கேன். பகிர்வுக்கு நன்றி. பிராமணர் நான்கு பெண்களை மணந்த கதையில் உள்ள முக்கியமான சில விஷயங்கள் விடுப்பட்டிருக்கின்றன. இப்போ எழுதப் போனால் பெரிசாகிவிடும். பின்னர் ஒரு முறை பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. சிருங்கார சதகம், நீதி சதகம், வைராக்கிய சதகம் ஆகியவையும் பர்த்ருஹரியினால் எழுதப்பட்டவை! நால்வரிலும் பர்த்ருஹரி தான் பிரபலமானவராக இருந்தார். இந்தக் கதைப்படி பிராமணரை விரும்பும் பெண் சூத்ரஜாதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சரியான கதைப்படி வைஸ்யப் பெண் தான் அவரைக் காப்பாற்றி மணமும் செய்து கொள்ள விரும்புவாள். பெண் ஒருத்தி என்னைக் கல்யாணம் செய்து கொள் என ஒரு ஆணிடம் கேட்டால் அவன் அதை மறுக்கக் கூடாது என்பது அப்போதைய சித்தாந்தம் அதிலும் பிராமணர்கள் பிரம்ம தேஜஸுடன் இருப்பதைப் பார்த்தால் பெண்கள் அவன் மூலம் தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார்கள் எனச் சொல்லப் படுகிறது. அதன்படியே வைஸ்யப் பெண்ணை மணந்து கொள்ள மறுத்த பிராமணன் பேரில் அந்தப் பெண்ணின் தகப்பன் வழக்குப் போட்டு அரசவைக்குப் போக பிராமணனைப் பார்த்த அரசன் தன் பெண்ணிற்கு ஏற்ற மணாளன் என நினைக்க, அங்கே ஆலோசனை சொல்ல வந்த மந்திரி தன் பெண்ணைக் கொடுக்கணும் என நினைக்க, மணந்தால் நாலு வர்ணத்தவரையும் மணக்க வேண்டும் என்பதால் நான்காவது வர்ணத்துப் பெண்ணைத் தேடிப் பிடித்து மணந்ததாகவும் சொல்வார்கள். இவர்களுக்கு ஆளுக்கு ஒரு ஆண்மகன் பிறக்கவும் அவரவர் தகுதிக்கு ஏற்பக் கல்வி கற்பித்து அவர்களை அவரவர் வேலைகளில் ஈடுபடச் செய்துவிட்டு அந்த பிராமணன் சந்நியாசம் வாங்கிக் கொண்டு பத்ரிகாசிரமம் போய்விடுவார். அவர் தான் கோவிந்த பகவத்பாதர். ஆதி சங்கரரின் குரு.விக்கிரம சஹாப்தம் ஆரம்பித்ததும் அப்போது தான். இது குறித்த கல்வெட்டு தில்லியில் குதுப்மினாரில் ஓர் அறிவிப்புப் பலகை போல் யாராலும் லட்சியம் செய்யாமல் வீணாகக் காண முடியும். விக்ரம சஹாப்தம் ஆரம்பித்த ஆண்டு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் பின்னர் வெளிநாடு சென்று வெற்றி கொண்ட மன்னன் சாலிவாஹனன். அவனுடைய சஹாப்தம் ஆரம்பித்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  11. இது குறித்து எழுத நிறைய இருக்கிறது. ஒரு பதிவெல்லாம் போதாது, பல பதிவுகள் போடும்படி இருக்கும். இந்த பிராமணன் தான் சந்திரசர்மா என அழைக்கப்பட்டான் எனவும் பூர்வாசிரமத்தில் பதஞ்சலி முனிவரும் இந்த பிராமணனே எனவும் ஒரு கூற்று உண்டு. பிரமராக்ஷஸுக்குத் தக்க மாணாக்கன் கிடைக்காமல் அவன் அப்படியே திரிந்ததைப் பார்த்த பதஞ்சலி பிராமணன் ஒருவனாக உஜ்ஜயினி நகரில் அவதரித்ததாகச் சொல்லுவார்கள். சிலர் காஷ்மீர் என்றும் சொல்வார்கள் நர்மதா நதிக்கரையில் அரச மரத்தில் (இங்கே ஆலமரம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.) குடி இருந்து பிரமராக்ஷஸிடம் அதே அரச மரத்தில் உட்கார்ந்த வண்ணம் பாடம் கேட்டு அவற்றைத் தன் ரத்தத்தால் அரசிலைக்காம்பு மூலம் அரசிலைகளிலேயே எழுதினார் என்பார்கள். பசி, தாகம், தூக்கம் இல்லாமல் எழுதினதால் எழுதி முடிச்சதும் அங்கேயே தூங்க ஆடு வந்து ஒரு பகுதி அரசிலைகளைத் தின்று விட்டதாகவும் அவை கிடைக்கவே இல்லை எனவும் கதைப்படி வரும். ஆனால் இங்கே ப்சு மாடு சாப்பிட்டதாகவும் அதன் சாணத்தின் மூலம் எல்லாப் பாடங்களும் எழுதப்பட்ட ஆலிலை கிடைத்ததாகவும் சொல்லப் பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் படித்த கதையை மாற்றாமல் அப்படியே எழுதியுள்ளேன். ஐதீகம் வாய் வழி பகிரப்பட்டு வரும்போது திரிபுகள் ஏற்படுவது சாதாரணம். நீங்கள் படித்தது ஒரு திரிபு. நான் படித்தது வேறு திரிபு. உங்கள் விளக்கம் மற்றவர்களுக்கும் கதையை புரியவைக்கும். விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. நான் படிச்சது திரிபுனு சொல்ல முடியலை. அதிலிருந்து மற்றத் திரிபுகள் வந்திருக்கலாமோ என நினைக்கிறேன். மற்றபடி நீங்கள் சொல்வதற்கும் நான் சொல்லி இருப்பதற்கும் அதிகம் வித்தியாசம் ஏதும் இல்லை. பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை, பர்த்ருஹரியின் கதை, சாலிவாஹனன் வந்த கதைனு நான் படிச்சிருக்கேன். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துத் தான் மேலே உள்ளவை எழுதினேன். இவை எல்லாமும் என் சின்ன வயசில் மதுரையில் ஓர் நூலகத்தில் இருந்து எடுத்துப் படிச்சிருக்கேன். அது தெற்காவணி மூலவீதியில் இருந்தது. உண்மையில் பழைய மண்டபம். புத்தகங்கள் பல்லாயிரக்கணக்காகப் பல்வேறு வருடங்களில் வெளி வந்தவை எல்லாமும் அங்கே கிடைத்தன. அப்போதெல்லாம் இந்தப் படிப்பு ஒன்றே என் மனதுக்கு ஆறுதல் பொழுதுபோக்கு என இருந்தது. வடுவூர் துரைசாமி ஐயங்கார், வை.மு. கோதைநாயகி, ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர். ரங்கராஜூ ஆகியோரின் நாவல்கள்! அது ஒரு பொற்காலம்!

      நீக்கு
  12. கதையைப் படித்து பின்னூட்டம் தந்தவர் யாவருக்கும் நன்றி. இதன் தொடர் உண்டு. வரருக்ஷி யின் கதை விரைவில் வரலாம்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    ஐதீக மாலை தொகுப்பிலிருந்த கதை அருமை. இக்கதை மொழிபெயர்ப்பு மாதிரியே தெரியவில்லை அவ்வளவு கனகச்சிதமாக மொழி பெயர்த்து நன்றாக புரிய வைத்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டுக்கள். இரண்டு வார கதைகளையும் இன்றுதான் சேர்த்துப் படித்தேன். இரண்டுக்குமே கருத்துரைகளில் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் தந்த விளக்கங்களும் படித்தேன். நன்றாக உள்ளது. பல நூல் விஷயங்களை ஆர்வத்துடன் கற்று தேர்ந்த இருவருக்கும் என் பணிவான வணக்கங்கள். நன்றிகள்.
    சற்று உடல் நலமின்மையால் இன்றைய தாமதத்திற்கு மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. சுவாரசியமான கதை. மொழி பெயர்ப்பு அருமை ஜெயகுமார் சந்திரசேகரன் ஸார். அதுவும் அக்கால வழக்குகள் உள்ளக் கதை. உங்கள் பொறுமை என்னை மிகவும் வியப்படைய வைக்கிறது. வாழ்த்துகள் சார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. கதை...கதையாய் கொள்கிறேன். வேறு எதுவும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கதை அல்ல என்பதோடு நானும் நிறுத்திக்கிறேன்.

      நீக்கு
  16. இக் கதையை இப்பொழுதுதான் படித்து அறிகிறேன் . சுவாரஸ்யமான கதை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!