ஞாயிறு, 7 ஜனவரி, 2024

நான் தரிசனம் செய்த கோயில்கள் – ஐந்து துவாரகைகள் யாத்திரை – பகுதி 01 நெல்லைத்தமிழன்

 

நான் தரிசனம் செய்த கோயில்கள் ஐந்து துவாரகைகள் யாத்திரை பகுதி 01

முகவுரை

2024 ஆண்டு ஞாயிறு பதிவுகளாக, நான் சென்றுவந்த பஞ்சத்வாரகா யாத்திரையைப் பற்றி எழுத நினைத்திருக்கிறேன். இந்த யாத்திரைக்கு நான் இருமுறை சென்றிருக்கிறேன் (2020 மற்றும் 2022). 

நான் எப்போதும் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒருவருடைய குழுவோடுதான் யாத்திரை செல்வேன். இந்த யாத்திரையும் அவர் குழுவோடுதான் சென்றேன். பொதுவாக அஹோபிலம் யாத்திரை, முக்திநாத் யாத்திரை மற்றும் சோளிங்கர் ஆகியவையே கடினமானதாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் ஐந்து துவாரகைகள் யாத்திரை என்பது பல்வேறு பட்ட மாநிலங்களைக் கடந்து செல்வதாலும் தொடர்ந்த பேருந்துப் பிரயாணத்தினாலும் சோர்வை உண்டாக்குவதாக இருக்கும் என்று யாத்திரை நடத்துபவர் சொல்வார். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. காலை 4 மணிக்கு ஒரு இடத்தை அடைந்தால், சிறிது நேரத்திலேயே குளித்துவிட்டு 7 மணிக்கு கோயிலுக்குச் செல்லவேண்டும், மதியம் உணவு, 2 மணிக்கு மேல் அந்த ஊரை விட்டுக் கிளம்புவது என்று தொடர்ந்து பிரயாணம் இருக்கும்.

ஒரு இடத்தில் முழுநாள் இருந்தால், மதியம் மற்றும் இரவு முழு உணவாக இருக்கும். பிரயாணங்களாக இருந்தால் கதம்ப சாதம், பொங்கல், தயிர் சாதம் என்று ஏதாவது, கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து, ஏதாவது நல்ல பெட்ரோல் பங்க் அருகில் பேருந்தை நிறுத்தி அனைவருக்கும் தருவார்கள். கோவில் தரிசனம் செய்துவிட்டு வருவதற்கு மதியம் 1 மணி ஆகிவிடும் என்று தோன்றினால், காலையில் சிறிய உணவு என்ற வகையில் ஏதாவது தருவார்கள். இவர்களுடன் நான் சென்ற யாத்திரை ஒன்றிலும் உணவுப் பிரச்சனையோ, இல்லை உணவினால் பிரச்சனையோ ஏற்பட்டதில்லை. தரிசனத்திற்கும் ஒரு குறைவும் ஏற்பட்டதில்லை.  

தங்கும் இடங்களின் அசௌகரியங்கள், பயணத்தினால் ஏற்படும் அலைச்சல் ஆகியன மாத்திரமே பிரச்சனையாகத் தோன்றும். தினமும் காலை 6 மணிக்கும், மாலை 4 மணி சுமாருக்கும் காபி/டீ/பால் கொடுத்துவிடுவார்கள். அதுபோல மாலையில் நிச்சயம் ஒரு இனிப்பும், காரமும் தருவார்கள். அதனால் வெளியில் சாப்பிடணும் என்ற தேவையே இருக்காது. அப்படி வெளியில் நாம் சாப்பிடுவதை (அவர்கள் அனுமதி இல்லாமல் சிறுதீனிகளை) விரும்ப மாட்டார்கள். வழியில் உடல்நிலைப் பிரச்சனை வந்தால் எல்லா யாத்ரீகர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால்.

இந்த துவாரகை யாத்திரையில் சென்னையில் மதியம் புறப்பட்டு, மறுநாள் மாலை வதோதராவை அடைந்தோம். பிறகு பஞ்சத் துவாரகை யாத்திரை பேருந்தில் துவங்கிற்று. இதுபோல, யாத்திரையின் முடிவில் தில்லியை அடைந்தோம். அங்குள்ள சில இடங்களைப் பார்த்துவிட்டு, இரவு தில்லியில் புறப்பட்டு, மூன்றாம் நாள் காலையில் சென்னை வந்து சேர்ந்தோம். யாத்திரை முழுவதுமே, அதாவது வதோதராவில் தொடங்கி, தில்லி வந்துசேர்ந்தது வரை பேருந்துப் பயணம்தான்.

பஞ்சத் துவாரகை யாத்திரையில், டாக்கூர் துவாரகை, கோமதி துவாரகை (துவாரகீஷ். இந்த இடத்திலிருந்துதான் ஸ்ரீகிருஷ்ணர் ஆட்சி செய்தார்), ருக்மணி கோவில் (துர்வாசரிடமிருந்து பெற்ற சாபத்தால், கிருஷ்ணருடன் தங்காமல், இந்த இடத்தில்தான் தங்கினாராம்), Bபேட் துவாரகா (இங்குதான் கிருஷ்ணரின் இருப்பிடம் அமைந்திருந்தது. இங்குதான் குசேலர் கிருஷ்ணரைச் சந்திக்க அவலுடன் வந்தார்), மூலத் துவாரகா (மதுராவிலிருந்து புறப்பட்டு, இந்த இடத்தில்தான் கிருஷ்ணர் தன் அரசாட்சியை முதலில் நிலைநிறுத்தினாராம். வட இந்திய பக்தர்கள் ஐந்து துவாரகைகளையும் தரிசிக்க, முதலில் மூல் துவாரகாவிலிருந்துதான் யாத்திரையை ஆரம்பிப்பார்கள்), பிறகு போர்பந்தர் அருகில் இருக்கும் சுதாமா (குசேலர்) பிறப்பிடம், காந்தி பிறந்த வீடு இவைகளைப் பார்த்த பிறகு, சோம்நாத் (இங்கு புகழ்பெற்ற சோம்நாத் கோவில், கிருஷ்ணர் உடல் தகனம் செய்யப்பட்ட பிரபாஸ் நதிக்கரை, சோம்நாத்திலிருந்து சில கிமீ தொலைவில் இருக்கும் விராவல் என்ற இடம், இங்குதான் வேடன் ஒருவனால் கிருஷ்ணர் இந்த உலகை விட்டுப் பிரிவது). 

சோம்நாத்திற்குப் பிறகு அகமதாபாத் சென்று அங்கிருக்கும் கோவில்களைத் தரிசனம் செய்த பிறகு, சபர்மதி ஆஸ்ரமம் (இங்குதான் காந்தி தன்னை நிலைநிறுத்திக்கொண்ட பிறகு, வசித்துவந்தார்), பிறகு அகமதாபாத்திலிருந்து நெடிய பேருந்து பிரயாணத்திற்குப் பிறகு நாத் துவாரகா என்று அழைக்கப்படும் ஸ்ரீநாத் துவாரகா, பிறகு அங்கிருந்து கங்க்ரோலி துவாரகா (இது பஞ்சத் துவாரகாவில் முக்கியமான கோவில். துவாரகீஷ் என்றும் அழைக்கப்படுகிறது), பிறகு புஷ்கர்.  புஷ்கர் முக்தி தரும் ஏழு நகரங்களுள் ஒன்று. அங்கிருக்கும் நீர்நிலையில் குளிப்பதுதான் முக்கியம். புஷ்கர் ஏரியில் புனித நீராடுவதுதான் யாத்திரைகளிலேயே தலைசிறந்தது என்று சொல்கிறார்கள். அங்குதான் பிரம்மாவிற்கான ஒரே கோவில் உள்ளது. புஷ்கரிலுள்ள கோவில்களைத் தரிசனம் செய்த பிறகு, அந்த ஊரிலிருந்து புறப்பட்டு, ஜெய்ப்பூர் வழியாக ஆக்ராவை அடைந்தோம்.  

ஆக்ராவில் தாஜ்மஹல் மற்றும் ஆக்ரா கோட்டையைப் பார்த்த பிறகு, மதியம் அங்கிருந்து புறப்பட்டு யமுனை நதிக்கரையில் இருக்கும் கோகுலம் (ஸ்ரீகிருஷ்ணர் வளர்ந்த இடம்), கோவர்தனம், இரவு மதுரா (கிருஷ்ணர் பிறந்த சிறைச்சாலை) தரிசனத்திற்குப் பிறகு, இரவு விருந்தாவனத்தை அடைந்து, மறுநாள், பிருந்தாவனத்தில் பல்வேறு கோவில்களைத் தரிசித்துவிட்டு, கிருஷ்ணர் வாழ்வோடு கூடிய இடங்களைப் பார்த்த பிறகு,  குருக்ஷேத்திரம் சென்றோம். அங்கிருக்கும் ப்ரம்ம சரோவரில் குளித்த பிறகு, போர் நடந்த குருக்ஷேத்திரத்திற்குச் சென்றோம், பிறகு பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த இடம். குருக்ஷேத்திரத்திலிருந்து புறப்பட்டு தில்லியை அடைந்தோம். இரவு ஓய்விற்குப் பிறகு மறுநாள் காலையில் தில்லியில் சில இடங்களைப் பார்த்த பிறகு, இரவு தில்லி இரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கிய பயணம்.

ஒரு பத்தியில் சென்ற இடங்களின் வரிசைகளைச் சொல்லிவிட்டாலும் யாத்திரை சுமார் 12 தினங்கள். 8 நாட்களில் யாத்திரைக்கான பிரயாணம்.

இந்த யாத்திரையில் நாங்கள் சென்றிருந்த இடங்களின் சுருக்கமான படத் தொகுப்புதான் இந்த வாரமும் வரும் வாரமும். அதற்குப் பிறகு வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.







புகழ்பெற்ற சோம்நாத் கோவில் (பலத்த பாதுகாப்புடன்)

ஸ்ரீகிருஷ்ணர், வேடனால் கொல்லப்பட்ட இடம், விராவல். 




ஸ்ரீநாத்துவாரகை ஸ்ரீநாத்ஜி கோவில் பிரசாதங்கள். 




புஷ்கரில் தென் இந்தியப் பாணியில் அமைந்துள்ள விஷ்ணு கோவில்

புஷ்கரிலிருந்து கிளம்பி ஜெய்ப்பூர் வழியாக எங்கள் யாத்திரை தொடர்ந்ததுஅதனை வரும் வாரத்தில் பார்க்கலாம். (முகவுரையே நீண்டுக்கிட்டுப் போகுதே)

(தொடரும்) 

35 கருத்துகள்:

  1. தென் இந்திய பாணி கோவில் படம் மிஸ்ஸிங்

    பதிலளிநீக்கு
  2. ஒவ்வொரு இடத்தின் பெருமையும் மனதில் பதிகிறது. இந்த இடங்களை எல்லாம் பார்த்து வர கொடுத்து வைத்திருக்க வேண்டும்! (நானும் கொடுத்துதான் சென்று வந்தேன் என்று சொல்வீர்கள்!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். இரு முறை சென்றிருக்கிறேன். வாய்ப்பு வரும்

      நீக்கு
  3. பாதிப்பதிவு சாப்பாட்டு விஷயத்லே போய்ட்டாலும் மீதி விவரங்கள், படங்கள் எல்லாம் ரொம்ப பிடித்திருந்தது நெல்லை.
    தெரிந்திராத விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் இந்த வயசிலேயும் எனக்கு அதீத ஆர்வம். கேட்கணுமா? பஞ்சத்வாரகா ஆரம்பப் பகுதி துவக்கத்திலேயே அட்டகாசம். தொடர்ந்து எழுதி ஜமாயுங்கள் நெல்லை. ஞாயிறு எப்போ வரும்ன்னு காத்திருப்பேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்... நெடும் பயணங்களில் சாப்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இருந்தாலும் இது கோவில் உலாதான்

      நீக்கு
  4. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஜர் வச்சிட்டுப் போயிட்டாங்களே.. பொங்கல் பண்ணவா இல்லை இட்லி தோசையா?

      நீக்கு
  5. பஞ்ச துவாரகை யாத்திரை முகவுரை வரப்போகும் கட்டுரைகளின் முன்னோடியாக சிறப்பாக உள்ளது. அதே போல் படங்களும். ட்ரைலர் என்ற முறையில் ok . தொடரட்டும் பதிவுகள்.
    Jayakumar

    பதிலளிநீக்கு
  6. பஞ்ச துவாரகை தரிசனம் விவரங்கள் அருமை. படங்களும் மிக அருமையாக இருக்கிறது.
    அனைத்து படங்களும் நேரில் தரிசனம் செய்த உணர்வை தருகிறது. நன்றி.

    நாங்கள் குருக்ஷேத்திரத்தில் இரவு ஒளி , ஒலி காட்சிகள் பார்த்தோம்.
    பீஷ்மர் அம்பு படுக்கையில் இருக்கும் போது தாகத்து தண்ணீர் கேட்பது அதை அர்ச்சுணன் அம்பால் வரவழைத்து கொடுக்கும் காட்சி மிக நன்றாக காட்டினார்கள்.

    போர் காட்சிகளை அப்படியே விவரமாய் காட்சி அமைத்து இருக்கும் அருங்காட்சியகம் போய் பார்த்தோம். இவை நினைவுகளில் வந்து போகிறது. இவை எல்லாம் நீங்கள் தொடர்ந்து சொல்வீர்கள் படங்களுடன்.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம். நான் இருமுறையும் பகலில்தான் குருக்ஷேத்திரத்தில் இருந்தேன். நெல்லை from நெல்லை

      நீக்கு
  7. அன்பின் பிரார்த்தனைகளுடன்..

    திருமலையில் இருந்து -
    துரை. செல்வரா ஜூ

    பதிலளிநீக்கு
  8. யாரும் தேடவில்லை என்று நினைக்கின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகிழ்ச்சி..
      நெல்லை அவர்களுக்கு நன்றி..

      நீக்கு
    2. வெளியூர்ப் பயணத்தில் என்று புதன் பதிவில் சொல்லி விட்டீர்கள்.
      உங்கள் தளத்தில் கருத்துக்களை வெலியிடவில்லை. அதனால் ஊரிலிருந்து திரும்பவில்லை என்று தெரிந்து கொண்டோம்.

      நீக்கு
    3. சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்டேன்..

      அனைத்தும் நலமே..

      நீக்கு
  9. வரப்பிரசாதம்..
    வரம் பிரசாதம்..

    அன்புடன்,
    துரை செல்வராஜூ

    பதிலளிநீக்கு
  10. யாத்திரை விளக்கம் சுவாரஸ்யமாக இருந்தது.
    படங்கள் மிகவும் அழகாக, தெளிவாக இருக்கிறது.
    தொடர்ந்து வருகிறேன்.....

    பதிலளிநீக்கு
  11. அப்படி வெளியில் நாம் சாப்பிடுவதை (அவர்கள் அனுமதி இல்லாமல் சிறுதீனிகளை) விரும்ப மாட்டார்கள். வழியில் உடல்நிலைப் பிரச்சனை வந்தால் எல்லா யாத்ரீகர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால்.//

    மிக் மிக நல்ல விஷயம். நெல்லை

    நேற்று வரவே முடியலை....நேரம் டைட்.

    இப்பவும் இனிதான் முழுசும் வாசிக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  12. புஷ்கர் குளம்னு நினைச்சேன் அப்படித்தான் என் மாமி சொல்வார். பிரம்மா கோயில்தான் நினைவுக்கு வரும். ஆனா பெரிய ஏரி என்று தெரிகிறது, நெல்லை.

    சோம்நாத் கோயில் வாவ்! ரொம்ப ஈர்க்கிறது. இது போல கிட்டத்த்டட்ட இங்கு தலக்காடு கோயில் கொஞ்சம் வடிவமைப்பு அப்படித் தெரிகிறது.

    படங்கள் எல்லாம் அட்டகாசம். பேருந்துப் பயணம் சிரமம் தான். எனக்குக் கொஞ்சம் அல்ல ரொம்பவெ சிரமம்...ஜன்னல் கிடைக்கலைனா!!!! ஹாஹா

    சபர்மதி ஆஸ்ரம் சூப்பர். எனக்கு குருஷேத்திரம் அந்த பூமி பார்க்க வேண்டும் எப்படி இருக்கும் என்று ஆசை உண்டு.

    சூப்பர் முன்னோட்டம்.

    விவரங்களும் அருமை, நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குருக்ஷேத்ரம்... இப்போ ரொம்ப டெவலப்மென்ட். கொஞ்ச வருடத்தில் கான்க்ரீட் காடுதான்

      நீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. . அழகான படங்களும் விபரங்களுமாய் நல்ல பதிவு. பஞ்ச துவாரகா யாத்திரையின் முதல் பகுதியே சுவாரஸ்யமாக இருக்கிறது. இங்கெல்லாம் செல்லும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதென்பது கடினம்தான். நீங்கள் சென்ற கோவில் சுற்றுலா யாத்திரைகளை உங்கள் விளக்கமான பதிவுகளின் வாயிலாக நாங்களும் சென்று தரிசிக்கிறோம்.

    உங்கள் எழுத்து நடைக்கென்று ஓர் ஈர்ப்பு சக்தி உள்ளது. அது எங்களை கயிறாக கட்டி உங்களுடனேயே நீங்கள் சென்ற கோவில்கள், அதன் அதிசய அபூர்வங்களை அனை தையும் சுற்றிப் பார்க்க வைத்து விடும். அதற்காக அந்த இறைவனுக்கும் உங்களுக்கும் என் நன்றி.
    தாமதமாக தங்கள் பதிவுக்கு வந்துள்ளேன். மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். நெல்லையில் கல்லிடைக்குறிச்சி முதற்கொண்டு பல இடங்களுக்குப் பயணித்தேன். உங்க ஊர் என்னன்னு சொல்லலையே

      நீக்கு
    2. நல்லது. பெங்களூர் திரும்பியாச்சா? கல்லிடையில் எங்கெல்லாம் சென்றீர்கள்? ஆதிவராக மூர்த்தியை சந்தித்தீர்களா?

      என் புகுந்த வீடு கல்லிடை யென்று முன்பே ஒரு பதிவில் சொல்லியுள்ளேனே..! :))) ஆனால், திருமணம் முடிந்த பின் தொடர்ந்து பதினைந்து வருடகாலம் வாழ்ந்ததென்னவோ சென்னைவாசியாகத்தான். நன்றி.

      நீக்கு
    3. கல்லிடை ஆதிவராஹரை தரிசித்தேன் (நெல்லையில் பெரும்பாலான கோவில்களில் சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் தரிசிக்கச் செல்ல முடியும்... இது எனக்குக் கொஞ்சம் இடைஞ்சல்தான்). அதுவும் தவிர, ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ் (இரண்டு கடைகள்) மனோஹரம், பயத்தம்பருப்பு/ரவா/லாடுகள், புழுங்கரிசி முருக்கு (மனைவிக்கு. அவள் அதில் எண்ணெய் அதிகம் இருக்கிறது என்று சொன்னாள்), அரிசி அப்பளாம்லாம் வாங்கினேன். அதற்கு முன்பு பிரம்மதேசம், அத்தாழநல்லூர், மன்னார்கோயில் போன்ற இடங்களுக்கும், நவ திருப்பதியில் இரண்டு கோவில்கள் தவிர்த்து மற்றவற்றிர்க்கும் சென்றிருந்தோம்.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      தாங்கள் பல இடங்களுக்கு சென்று வந்தமைக்கு மிக்க சந்தோஷம். கல்லிடை சென்று ஆதிவராஹரை இப்போதுதான் என் மகனும், மருமகளும் தங்கள் இறை சுற்றுலாவில் தரிசித்து வந்தார்கள். அதனால்தான் நினைவாக கேட்டேன். தாங்களும் ஆதிவராஹ மூர்த்தியை தரிசனம் செய்தது மகிழ்ச்சியே..

      புழுங்கல் அரிசி முறுக்கு எப்போதுமே பச்சரிசி முறுக்கை விட அதிகமாக எண்ணெய் குடிக்கும். ஆனால் சுவையும் இந்த முறுக்குத்தான் அதிகம். நீங்கள் சொன்னதும் எங்கள் அம்மா செய்யும், சுவையான புழுங்கல் அரிசி முறுக்கு நினைவுக்கு வருகிறது. அவ்வளவு அற்புதமாக முறுக்கு சுற்றுவார்.அந்தப் பக்குவம் எனக்கு இன்னமும் பிடிபடவில்லை.

      நானும் நவதிருப்பதி கோவில்களுக்கு சென்று வர ஆவலாக உள்ளேன். நல்லபடியாக சமயம் கிடைக்கட்டும். என் கருத்துக்கு உடனே பதில் தந்தமைக்கு நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!