செவ்வாய், 23 ஜனவரி, 2024

சிறுகதை : உன்னைத் தானே.. -- துரை செல்வராஜூ

 உன்னைத் தானே..

துரை செல்வராஜூ

*** *** *** *** *** ***

' உன்னைத் தானே தஞ்சம் என்று.. '

கைத்தல பேசியை உசுப்பிய தங்கமணி -

" சொல்லு வசந்தி.. " - என்றாள்..

" அக்கா.. ரெண்டு நாளா சின்னவனுக்கு போன் பண்றேன்.. எடுக்கவே இல்லை... போன் ல ஏதும் கோளாறா?.. "

சின்னவன் எனப்படுபவன் கதிரவன்.. 

வசந்தியானவள்  தங்கமணியின் தங்கை.. கொஞ்சம்  துடுக்கானவள்.. திருச்சியில் வசிக்கின்றாள்.. 

அக்காவைப் பார்க்க வேண்டும் என்றால் மயிலாடுதுறை வண்டியையோ திருவாரூர் வண்டியையோ பிடித்து ஒரு மணி நேரத்தில் இங்கு வந்து விடுவாள்.. அதான் ரெட்டை வழி மின் தடம்.. மணிக்கு ஒரு வண்டி ன்னு ஆகி விட்டதே!.. 

அவ்வப்போது கைத்தல பேசியில் கதிரவனோடு பேசுகின்றேன் என்று செவிகளைச் சூடாக்கிக் கொள்வது வழக்கம்..

பெரியவனுக்குப் பிறகு ஒன்றரை வருடத்தில் பிறந்தவன்.. ஞாயிற்றுக் கிழமை பிறந்ததால் கதிரவன் - கதிர்..

குழந்தை பிறந்ததும் தன் கைகளில் ஏந்தியவள் நான்கு வருடங்கள் கழித்துத் தான் இறக்கி விட்டாள்.. அவனை வளர்த்து ஆளாக்கியவள் வசந்தி தான்!..

" சின்னவனுக்கா போன் செஞ்சே?.. "

" ஆமா!.. எங்கே அவன்?.. "

"  கோயிலுக்குப் போயிருக்கான்.. அவந்தான் மாலை போட்டுக்க விரதம் இருக்கானே.. " 

மாலை போட்டுக் கொண்டு விரதம் இருப்பது தான் தெரியும்.. மாலை போட்டுக் கொள்வதற்கே விரதமா!... ஆச்சர்யம்.. ஆனாலும்  அதுதான் முறை..

" மாலையா.. ஐயப்பன் கோயிலுக்கா!.. "

" ஆமா!.."

" அதுக்காக போன் எடுக்கக் கூடாதுன்னு இருக்கா?.. "

" அதுல தேவையில்லாத குப்பை எல்லாம் வருதுன்னு.. தூக்கி ஒரு ஓரமா போட்டுட்டான்!... "

"  இதுக்கு முன்னாலயும் வந்தது குப்பை தானே..  இப்ப மட்டும் என்ன நல்ல புத்தி?.. "

" இனிமேயாவது நல்ல புத்தி இருக்கட்டுமே ன்னு தான்.. "

" நெட்டைக் கழட்டி வீசிட்டு சாதாரணமா வைச்சுக்கணும்..

" வரட்டும்.. சொல்றேன்!.. "

" அதுசரி.. கார்த்திகைக்குத் தான் இன்னும் ரெண்டு நாள் இருக்கே..  அதுக்குள்ள என்ன அவசரம்?.. கண்டதையும் ஆக்கித் தின்னுட்டு அப்பறமா மாலை போட்டுக்க வேண்டியது தானே... " 

" கன்னிச்சாமியா போறதுனால கார்த்திகைக்கு முன்னாலயே சுத்த பத்தமா இருக்கணும் ன்னு.. "

" யார் சொன்னது?.. "

" நம்ம ஊர் வாத்தியார் சாமி.. "

" வாத்யார் சாமி தான் பெரிய ஊருக்குப் போய்ட்டாரே.. "

" வாத்யார் பெரிய ஊருக்குப் போய்ட்டாலும் அவர் மகன் தான் ஏழெட்டு வருசமா  குருசாமியா இருக்காரே.. "

" அவரு சொன்னாராக்கும்.. "

" அவங்க அப்பா மாதிரியே  இவர் கிட்டயும் கடுஞ் சட்டதிட்டம் .. "

" கம்ப்யூட்டர் காலத்துல இருந்துக்கிட்டு இந்த மாதிரியெல்லாம் ஏன் பண்றீங்க..  மால போட்டமா ..  கோய்லுக்குப் போனமா.. சாமியக் கும்பிட்டோமா.. திரும்பி வந்து ஜாலியா இருந்தமா.. ன்னு இல்லாம.. "

" அது அவங்க அவங்க  சம்பிரதாயம்.. வாத்யார் மகனோடயும் தான் ஆறேழு வருசமா  ஜனங்க மலைக்கு போய்ட்டு வர்றாங்களே!.. ". 

" ஏன்.. ஒரு வாரம் மட்டும் வெரதம் இருந்துட்டு கோய்லுக்குப் போய்ட்டு வர்றவங்க இல்லையா அக்கா?.. "

" நாஞ் சொல்றது விரதம் .. நீ  சொல்றது வெரதம்..  பெய்ற மழையில பச்சைப் பானையை வைக்கிறதுக்கும் சுட்ட  பானையை வைக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கில்லே!.. "

தங்கமணியிடம் சிரிப்பு..

" ம்க்கும்.. சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. ஐயப்பன் கோயில் மாலை போடறதுக்கு அத்தான் ஒன்னும் சொல்லலையா?.. "

" எங் கல்யாணத்தோடத் தான் சாமியாவது  பூதமாவது ன்னு.. ஆடிக்கிட்டு இருந்தாரு..  இப்போ ஆறேழு மாசமா ஒருத்தருக்கும் தெரியாம பஸ் ஏறி அந்த ஊர் கோயிலுக்கும் இந்த ஊர் கோயிலுக்கும் போய்க்கிட்டு இருந்தாரு.. போன வாரத்தில இருந்து உள்ளூர் கோயிலுக்கும் போக ஆரம்பிச்சுட்டாரு.. எந்த விரதத்தையும் விட்டு வைக்கறதில்லை!.. "
 
" அத்தானுக்கு நாடி நரம்பு வெலவெலத்துப் போயிருக்கும்.. "

எதிர் முனையில் வசந்தியின் சிரிப்புச் சத்தம்..

' புருசனைக் குறை சொல்றதாவது?.. ' -   தங்கமணிக்குக்  கோபம் வந்தது..

"  நீ  முதல்ல சிரிக்காம பேசு .. எதுக்காக சின்னவனுக்கு போன் செஞ்சே?.. " 

" ரெண்டு வருசத்துக்கு முன்னாலயே அவனுக்கு  கலியாணம்  ஆகி இருக்கணும்.. "

" ...... " 

- தங்கமணியிடம் மௌனம்..

"  கூடப் படிச்சவன் எல்லாம் கலியாணம் கட்டி புள்ள குட்டியோட இருக்கறப்போ இவன புடிச்சி வெரதம்.. அது இது.. கன்னிச் சாமி கறுப்புச் சாமி ன்னு அனுப்பி வைக்கிறியே.."

" அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும் ன்னு எனக்கு மட்டும் ஆசை  இல்லையா.. நல்ல நேரம் கூடி வரணுமே.. நாலு நாளைக்கு முன்னால  ஐயப்ப சாமி கனாவுல வந்து மலைக்கு வா.. ன்னு கூப்புட்டாறாம்... "

" இதென்ன புதுக்கதை!.. ஐயப்ப சாமி கனாவுல வந்து கூப்புட்டாறா?.. "

" சொல்றதைக் கேளு.. பொழுது விடிஞ்சதும் என்கிட்ட சொன்னான்.. நான் உங்க அத்தான கையக் காட்டி விட்டேன்... "

" ஆடு கோழி முட்டை ன்னு வளைச்சி கட்றவர் அத்தான்... வீட்டோட விரதம் இருக்கப் போறதா சொன்னதும்  சாமி ஆடியிருப்பாரே!.. "

" அதான் இப்ப ஆறேழு மாசமா திருந்திட்டார் ன்னு சொல்றேனே.. அதெல்லாம் ரொம்பவும் குறைச்சாச்சு!... "

" அது என்ன ரகசியம் ன்னு தான் சொல்லேன் அக்கா!.. "

" அது வேறொன்னும் இல்லை...  ஜூன் மாசத்துல ஒருநாள் அவங்க ஆபீஸ் ஆளுங்க நாலு பேர் ஏதோ பணப் பிரச்சனை ல கையும் களவுமா மாட்டிக்கிட்டாங்க.. அதிர்ஷ்டம் என்னன்னா.. மே மாசம் தான் அந்த செக்‌ஷன் ல இருந்து உங்க அத்தான் மாறி இருந்தார்.. "

" நல்லவேளை!.. "

" அன்னைக்கு வந்த நாலு பேர்ல ஒருத்தருக்கு எங்க குல தெய்வத்தோட பேராம்... அவரு திரும்பி போறப்ப ஒரு பார்வை   பார்த்திருக்கார்.. அத்தான் ஆடிப் போய்ட்டாராம்.. "

" ம்ம்.. "

" அன்னிக்கு விடியக் காலை எங் கனவுல முறுக்கு மீசையும்  
வீச்சரிவாளுமா சாமி.. வந்து நிக்குது.. எழுந்திரிச்சி இவர்கிட்ட சொன்னதும் பயந்துட்டார்.. மறுநாள் காலைல எல்லாருமா ஓடுனோம் குல தெய்வம் கோயிலுக்கு!.. " 

" அது எங்கே இருக்கு?.. "

" திருநவேலிக்கிட்ட... "

" அவ்வளவு தூரத்திலயா?.."

" என்னை கல்யாணம் கட்டினப்போ கூட குல தெய்வம் கோயிலுக்கு கூட்டிட்டுப் போகலை.. நாப்பது வருசத்துக்கு அப்புறமா இப்போ தான் வழி தெறந்திருக்கு!.. "

தங்கமணி பரவசத்துடன் சொன்னாள்..

இத்தனையும் நடந்திருக்கே.. என்று - வசந்தியிடம் ஆச்சரியம்..

" அப்போ ஆரம்பிச்சது தான்  இவங்களுக்கு பக்தி!.. இருந்தாலும் கனாவுல இன்னும் சாமி வரலையே ன்னு மனசுக்குள்ளே குறை.. "
 
" இவ்வளவு நடந்திருக்கு.. என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே!.. "

" உனக்கு தெரிஞ்சிருந்தா  தான்  நீ  ஊர் பூரா டமாரம் போட்டிருப்பியே.. "

" அதுவும் சரி தான்!.. "

" அது இருக்கட்டும்..  நீ எதுக்கு போன் செஞ்சே.. அதச் சொல்லு!.. "

" அதுவா.. எங் கொழுந்தனாரோட பொண்டாட்டி  ஒரு  ஜாதகம்  கொடுத்திருக்காங்க..  போட்டோவும் வந்திருக்கு.. பொண்ணுக்கு இருபத்து நாலு வயசு.. செவப்பு நெறம்.. பேங்க்ல வேலை செய்றா.. ஒரு தம்பி மட்டும்.. சின்னவன வளர்த்த பாசம்.. அவங்கிட்ட முதல் ல சொல்லலாமே ன்னு தான்.. "
" உறவுக்காரப் பொண்ணா?.. "

" ஆமா.. அவங்களுக்கு ஏதோ சொந்தமாம்!.. "

" அப்படியா.. அதெல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம்.. இப்போ அவன் நல்லபடியா விரதம் இருக்கட்டும்.. "

" என்னமோ அக்கா.. கதிர் நல்லபடியா இருக்கட்டும்.. நான் சும்மா ஏதோ கேலி பண்ணி பேசிட்டேன்.. மனசுல வச்சிக்காம மன்னிச்சுடுங்க.. எந்த மனசு எப்போ மாறும்.. எப்படி மாறும் ன்னு யாருக்குத் தெரியும்?.. ஏதோ கதிருக்கு சீக்கிரம் நல்லது நடந்தா சரி.. கன்னிச்சாமி வந்ததும் சொல்லுக்கா.. நான் அப்புறமா பேசறேன்.. "

" சரி வசந்தி!.. மச்சினரக் கேட்டதாச் சொல்லு.. நாலு நாளைக்கு  இருக்கற மாதிரி பசங்கள அழைச்சிக்கிட்டு வா!..  "

31 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு..

    குறள் வாழ்க..

    பதிலளிநீக்கு
  3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அன்பு நெஞ்சங்களுக்கு நல்வரவு..

    பதிலளிநீக்கு
  4. இன்று எனது கதையினைப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் கண் கவரும் படத்துடன் எழிலூட்டிய சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

    பதிலளிநீக்கு
  5. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.

    கதை நன்றாக உள்ளது. எது எப்படி நடக்க வேண்டுமோ அது அப்படியே நடந்தேறும் என்பதை சுட்டிக் காட்டும் கதை. பாராட்டுக்கள்

    பூஜை, கடவுள், விரதம் என மனம் திருந்திய அந்த குடும்பத்தலைவர் மகனுக்கு கூடமாட, அவரின் விரதத்திற்கும் பங்கம் ஏதும் தராமல் மாறியது இறைவன் செயல்.

    கதிரவன் சபரிமலைக்கு பக்தியுடன் மாலை போட்டுக் கொண்ட வேளை, நல்ல பெண்ணாக அமைந்து ஒரு சுபயோக சுப தினத்தில் மணமாலை சூடிக் கொள்ளும் நேரமாக அமையட்டும். இறைவனின் ஆசிர்வாதங்கள் நல்லபடியாக கிடைக்கட்டும். நல்லதொரு கதைப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கதைக்குப் பொருத்தமாக இளம் பெண்ணின் படம் நன்றாக உள்ளது. பொருத்தமாக தேர்வு செய்த கௌதமன் சகோதரருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் ஆறுதலான கருத்தும் மிகவும் ஆறுதலாக இருக்கின்றன..

      யாருக்கு எது நேரும் என்று ஆண்டவனே அறிவதுண்டு..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    2. /// கதிரவன் சபரி மலைக்கு பக்தியுடன் மாலை போட்டுக் கொண்ட வேளை, நல்ல பெண்ணாக அமைந்து ஒரு சுபயோக சுப தினத்தில் மணமாலை சூடிக் கொள்ளும் நேரமாக அமையட்டும். ///

      எல்லாம் அவன் செயல்..

      நீக்கு
  7. /// கதைக்குப் பொருத்தமாக இளம் பெண்ணின் படத்தைப் பொருத்தமாக தேர்வு செய்த கௌதமன் சகோதரருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்..///

    வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  8. " நாஞ் சொல்றது விரதம் .. நீ சொல்றது வெரதம்.. //

    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். கதையை பேச்சிலேயே தொடர்ந்து சொல்லி உரையாடல்களிலேயே கருத்துகளையும் சொல்லி நகர்த்திய கதை அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  9. பொருத்தமான படம் வரைந்திருகும் கேஜிஜி சாருக்கும் வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. வரைந்தது அல்ல .. பொருத்தியது.

      நீக்கு
    2. அன்பின் வருகையும் அழகான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி துளசிதரன்..

      நீக்கு
  10. யதார்த்தமான பேச்சு வழக்கில் கதையை நகர்த்திச் சென்றது அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ஜி..

      நீக்கு
  11. அக்கா தங்கை உரையாடலில் கதை சொன்னது அருமை.
    நிறைய விஷயங்கள் பேசி கொண்டார்கள்.
    பழக்க , வழக்கத்தில் மாற்றம், குலதெய்வ வழிபாடு, ஐயப்ப சாமி விரதம், கனவில் சாமி வருவது என்று சங்கிலி பின்னலாக அழகாய் கதையை கொண்டு போய் கார்த்தியின் திருமணத்தில் நிறைவு செய்து விட்டீர்கள்.

    //என்னை கல்யாணம் கட்டினப்போ கூட குல தெய்வம் கோயிலுக்கு கூட்டிட்டுப் போகலை.. நாப்பது வருசத்துக்கு அப்புறமா இப்போ தான் வழி தெறந்திருக்கு!.//

    வழி தெறந்து கதிரவனின் வாழ்வில் ஒளி வீச செய்து விட்டது.

    கல்யாண பெண் நன்றாக இருக்கிறார் , சார் வரைந்த ஓவியத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி. ஆனால் நான் வரைந்தது அல்ல - வேறு தளத்தில் இருந்த படத்தை தட்டிக் கொட்டி இங்கே பொருத்தியுள்ளேன்.

      நீக்கு
    2. /// வழி தெறந்து கதிரவனின் வாழ்வில் ஒளி வீச செய்து விட்டது.. ///

      தங்கள் அன்பின் வருகையும் அழகான கருத்தும் மகிழ்ச்சி..
      நன்றி ..

      நீக்கு
    3. /// வேறு தளத்தில் இருந்த படத்தை தட்டிக் கொட்டி இங்கே பொருத்தியுள்ளேன்.. ///

      சித்திரச் செல்வர் அவர்களது திறமையே திறமை..

      நீக்கு
  12. கதையின் இயல்பான உரையாடல்கள் கவர்ந்தது.

    படம் இறக்குமதி போலிருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      நெல்லை அவர்களுக்கு
      நன்றி ..

      நீக்கு
  13. கைத்தொலைபேசி உரையாடலில் நகரும் கதை அருமை.
    ஐயப்ப சாமீ நம்பிக்கையுடன் அவர்கள் விருப்பம் நிறைவேறட்டும்.

    இறக்குமதி படமாக இருந்தாலும் கதைக்கு நல்ல பொருத்தமான படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      மாதேவி
      அவர்களுக்கு
      நன்றி ..

      நீக்கு
  14. துரை அண்ணா, உரையாடல்கள் வழி கதை நகர்கிறது. இரு பெண்கள் அதுவும் சகோதரிகள் பேசிக் கொள்வது இயல்பு. ஒரு சில உரையாடல்கள் உங்களை நினைவுபடுத்தியது அந்தக் கதாபாத்திரமாக!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான்..

      தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
      சகோ அவர்களுக்கு
      நன்றி ..

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!