வியாழன், 11 ஜனவரி, 2024

கடவுள் என்னும் அதிகாரி

 உங்கள் அதிகாரி நீங்கள் ஒரு நாள் தாமதமாக வந்தால் உங்களை கடுமையாக கோபித்துக் கொள்கிறார் அல்லது உங்களுக்கு தண்டனை தருகிறார். இரண்டு நாள் தாமதமாக வந்தால் உங்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. இது போன்ற அதிகாரிகளை நீங்கள் விரும்புவீர்களா? வெறுப்பீர்களா? 

நாம் ஏனோ அதிகாரிகள் அளவில் தான் கடவுளை வைத்திருக்கிறோம். 

தவறு செய்தால் அவர் தண்டிப்பார். நியாயமான வழிகளுக்கு அவர் ஒன்றும் சொல்ல மாட்டார். சொர்க்கம் என்றாலே அங்கு அழகிகளின் நடனமும், ஆனந்த வாழ்க்கையும், இனிய நறுமணமும் இருக்கும் என்பது போன்ற கற்பனைகள்....   நரகம் என்றால் நீங்கள் எது மிகவும் கொடுமையான விஷயம், ​அல்லது எது வாழ்வில் அனுபவித்த கொடுமையான விஷயம் என்று நினைக்கிறீர்களோ அது நரகத்தில் இருக்கும் என்பது போல சொல்லி வைக்கப்படுகிறீர்கள். ​  "உம்மாச்சி கண்ணைக் குத்திடும்"  "எண்ணெய்க் கொப்பரையில் போட்டு வறுப்பார்கள்"

எவ்வளவு தீவிர ஆத்திகனாக இருந்தாலும் அவன் கடவுள் பூஜை மூன்று கால பூஜை செய்து​, ஒரு கோவிலில் சென்று கடவுளை வழிபட்டு என்று இருந்து வந்தாலும் கூட அவனுக்கு​ம் உள் மனதின் ஆழத்தில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டேதான் இருக்கும்.  கடவுள் இருக்கிறாரா? ஏன் இதுவரைக்கும் ஒரு வாட்டி கூட காட்சி தரவில்லை?   ஒரு மறைமுகமான ஒரு பொருளாக கூட நமக்கு உணர்த்த வில்லையே.... நிஜமாக இருக்கிறாரா? 

விஞ்ஞானத்தை வளர்ப்பவர்கள்​, விஞ்ஞானிகள் கடவுளின் தா​த்​ர்யத்தை அதிகமாக ஏற்றுக் கொள்வதில்லை, நம்புவதில்லை அவர்கள் எல்லாரும் எல்லாவற்றையும் விஞ்ஞான பூர்வமாக விளக்கமு​ற்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் விஞ்ஞான விளக்கம் தருகிறார்கள. ஆனால் அவர்களும் அலுவலகத்துக்கு வந்து அந்த விஞ்ஞான விளக்கங்களை தர முற்படுவதற்கு முன் வீட்டில் சந்தியாவந்தனமோ​, கடவுள் பூஜையோ​, மண்டியிட்டு முழந்தாள் என்று பிரார்த்தனை​யோ செய்து விட்டு வருகிறார்கள் ​அல்லது கண்மூடி ஓரிரு நிமிட மௌன பிரார்த்தனை!

​நாத்திகம் பேசும் அரசியல்வாதிகள், வீட்டில் ஒருவரை பாவமன்னிப்பு கோர கோயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள்.  மஞ்சள் துண்டு அணிந்து பரிகாரம் செய்து பரிகாசம் செய்கிறார்கள்.  தேர்தல் சமயத்தில் காட்டும் பக்தி வேறு வகை நடிப்பு என்றாலும் உள்ளுக்குள் ஒரு உதைப்பு எப்போதும்!  

​இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள்.... இது என்ன ஒரு முரண்..... யாருக்கும் எதிலும் முழுமையாக நம்பிக்கை இல்லை என்று சொல்லலாமா.... 

ஒரு கதை நினைவு இருக்கிறதா?   தாசி வீட்டுக்கு போன ஒருவன் கடவுள் நினைவாக உட்கார்ந்து இருந்தவன் நினைவாகவே இருந்தான். அவன் சொர்க்கத்துக்கு போனான் என்றும், கடவுள் வீட்டுக்கு போனாலும் தாசி ​வீட்டுக்கு போனவன் நினைவாகவே இருந்தான், அவனுக்கு நரகம் ​கிட்டியது என்றும் ஒரு கதை ஒன்று படுத்தி இருக்கிறோம் 

இது இந்த மாதிரி ஆட்களை வைத்து இந்த விஞ்ஞானிகளையும் சாதாரண ஞானிகளையும் இணைத்து சொல்லப்படும் ஒரு கதைக்கான ஒரு பொருளாக கூட இருக்கலாம். ​ இவர்களே யாரேனும் கூட அந்த மாதிரி ஒரு கருத்தை ஏற்படுத்தி இருக்கலாம். 

சங்ககாலத்தில் லஞ்சம் இருந்தது, பழைய காலத்தில் கொலை கொள்ளை இருந்தது என்றால் நம்புகிறோம் .  ஆனால் அந்த காலத்தில் கடவுள் நேரில் வந்தார் என்றால் நம்புவதில்லை ஏன் இதை மட்டும் நம்ப மறுக்கிறோம் கொலையையும் கொள்ளையும் இப்போதும் நாம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம் பார்க்காத ஒன்று, அந்த கடவுள்தான். அவர் ஏன் அப்போது வந்தார்?   இப்போது வரவில்லை ஏதேனும் விளக்கம் உண்டா 

=================================================================================================

முதலில் வேறொரு கவிதையை இங்கு புகுத்தி இருந்தேன்.  திடீரென இந்தப் பழைய கவிதை நினைவுக்கு வந்தது.  நான்கு வருடங்களுக்கு முன் பகிர்ந்தது.  இன்று பொருத்தமாக இருக்குமோ ன்று அதை மீள்பதிவு செய்து விட்டேன்!

கடவுளே
-----------------------------
த்ரேதாயுகம் த்வாபரயுகம்
என்கிறார்கள்
அந்தக் காலத்தில் நான் இருந்தேனா அறியேன்
அந்தக் காலத்தில்
நேரில் வந்தவன் நீ என்கிறார்கள்
கடவுளே என்றழைத்தவனுக்கு
உடனே
கஷ்டம் தீர்த்தாயாம்.
சொல்லக் கேள்வி.
விரல்காட்டி வித்தைகள்
புரிந்து
விந்தைகள் செய்தாயாம்
அப்போதுதான் கஷ்டங்களா?
இப்போதில்லையா?
குன்றம் ஏந்திக் குளிர்மழைக் காத்தவனே
வெயில் மறைத்து வெப்பம் தணிக்க மாட்டாயா?
குன்றம் விலக்கி ஆறு குளம் நிரப்ப மாட்டாயா?
விண்ணுலகம்தான் உன்னுலகமா?
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
மேகங்களின் ஓரங்களில்
தேடுகிறேன்
சரிகை வேட்டியுடன் நீ அங்கு
தென்படுகிறாயா என்று
இருட்டில் ஒருநாள்
ஒளியாய் வருவாய்
என நான்
இன்னமும் காத்திருக்கிறேன்
உனைக் கண்டேனென்று
நீ
விரும்பவில்லை என்றால்
விண்டிலேன் ஒருவரிடமும்
வாயேன்...
நம்பு நம்பு என்று படுத்தாமல்
வந்துவிடேன் ஒருதரம் நேரில்
விஞ்ஞான விளக்கமும்
உன்னோட விளக்கமும்
சரிபாதியாய்
சரியாய்தான் இருக்கிறது
எது நீ? எங்கே நீ?
விஞ்ஞானம் உன்னை மறுக்கிறது
என் ஞானமோ
இரண்டுக்கும் நடுவில் தவிக்கிறது
ப(க)ட்டாடை உடுத்தி
வந்தால்தான் தெய்வமா?
பராரியாய் வந்தால் மாறுவேஷமா?
நீ கொடுப்பதுதானாமே...
கஷ்டங்கள் நானும் வைத்திருக்கிறேன்
கண்ணீரை நாளும் மறைத்திருக்கிறேன்
கடவுளே வா
வந்தென்னை ஒருதரம் சந்தி. 

 ஜூலை 9, 2019



================================================================================================

ஏகாந்தமாய் 


பட்டினப் பிரவேசம் !

முதலில் சோமாலியாபற்றி ஒரு சிறு அறிமுகம் தந்துவிடுகிறேன்.  சோமாலியா என்னும் ஆஃபிரிக்க நாட்டின் தலைநகரான அந்நாட்டின் வடபகுதியில் இருக்கும் மொகதிஷு (Mogadishu. Mogadiscio in Italian), ஒரு முக்கிய துறைமுகமும்கூட. ஒரு காலத்தில் இந்துமகா சமுத்திரத்தின் வழி நடத்தப்பட்ட தங்க ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்திற்கு முக்கிய இடைத் துறைமுகமாக புகழ்பெற்றிருந்தது இது. சோமாலியா என்கிற நாடு, 9 - 13-ஆவது நூற்றாண்டு காலகட்டத்தில், மத்திய கிழக்கின் சுல்தான்கள் வசமிருந்தது. சமீப நூற்றாண்டுகளில் நாட்டின் வடக்குப்பகுதி இத்தாலியர்களிடமும், தெற்குப்பகுதி ஆங்கிலேயர்களிடமும் வசமாக மாட்டியிருந்தன.

பணிப்போர் காலகட்டத்தில், மத்தியகிழக்கைப் பார்த்தவாறு தோதாக
அமைந்திருந்த இந்த ஆஃபிரிக்க நாடு, எதிரிகளான சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவால் உற்று நோக்கப்பட்டதோடு, ரகசியமாக உபயோகப்படுத்தப்பட்டும் வந்திருக்கிறது.

நான் அங்கு போயிருந்த எண்பதுகளின் இறுதி காலகட்டத்தில், முகமது சியாத் பர்ரே (Mohammed Siad Barre) எனும் ராணுவ சர்வாதிகாரியால் ஆளப்பட்டுவந்தது சோமாலியா. பர்ரேயின் கெடுபிடி ஆட்சிக்காலத்தில் (சுமார் 20 வருடம்) நாட்டு மக்கள் சட்ட திட்டத்திற்கு பயந்து வாழ்ந்தார்கள். பொதுவாகவே அப்பாவிகளான அவர்களது மத்தியில், குற்றங்கள் பெரும்பாலும் இல்லை எனலாம்.

தொண்ணூறுகளில் தெற்குப்பகுதியிலிருந்து புறப்பட்ட புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்ட கலகக்காரர்கள், எதியோப்பியா போன்ற சோமாலிய எதிரிகளிடம் ஆயுத உதவிபெற்று, வலுவாகி ஜனாதிபதிக்கு எதிராக உள்நாட்டு கலவரங்களைத் தூண்டினார்கள். அது நாளாக ஆக, இனப்போராக மாற, தாக்குப்பிடிக்க முடியாமல் பர்ரேயின் ஆட்சி வீழ்ந்தது. அடுத்து ஆட்சி ஏற்கும் திறமை எந்த இனத் தலைவரிடமும் காணப்படாததால், மொகதிஷுவில் மத்திய அரசாங்கம் என ஒன்று அமையமுடியவில்லை. மேலைநாடுகளும், ஐ.நா.வும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க, வெவ்வேறு இனத் தலைவர்கள் தங்களுக்குள் போரிட்டுக்கொண்டனர். சோமாலியாவின் அமைதி கெட்டது. பஞ்சம்
செழிக்க ஆரம்பித்தது. ஊர் ரெண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்தானே.. இடையில் புகுந்தது இஸ்லாமியத் தீவிரவாதம். இன ஒழிப்பு, எதிரிகள் அழிப்பு என்கிற சாக்கில் பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பலவருடங்களாக, நாட்டில் நிலையான ஆட்சி இல்லை. வறுமை வாட்ட, தீவிரவாதம் பயமுறுத்த, அகதிகளாக பக்கத்து நாடுகளுக்கு விரட்டப்பட்டார்கள் சோமாலி மக்கள். கொடுமைகள் இன்னும் தொடர்வதால், இப்போதிருக்கும் சோமாலியா இந்தவகையைச் சார்ந்தது. படங்களில் காட்டப்படும் பஞ்சக் காட்சிகளெல்லாம் தொண்ணூறுகளுக்குப் பின் அங்கே அரங்கேற்றப்பட்ட அட்டூழியங்களின் விளைவுகள்.

துரதிருஷ்டவசமாக, ஒரு சபிக்கப்பட்ட ஆஃபிரிக்கப் பிரதேசமாக ஆகிவிட்டிருக்கிறது, ஒருகாலத்தில் அமைதியாக இருந்த அந்த நாடு…
இப்போது நம்ப கதைக்கு வருவோம். அடுத்தநாள் காலையில் நைரோபி ஏர்ப்போர்ட் வந்து, சில மணி நேரத்தில் சோமாலி ஏர்லைன்ஸில் ஏறி அமர்ந்தேன். அதுவே ஒரு அலாதி அனுபவம்தான்.. கென்யா, உகாண்டா போன்று நிறைய இந்தியர்கள் சோமாலியாவில் இல்லை என்று கேள்விப்பட்டிருந்தேன். ஏதாவது இந்திய முகம் தெரிகிறதா, யாராவது ஒன்றிரண்டு பேராவது கென்யாவிலிருந்து சோமாலியா வரலாமே என நினைத்து பார்த்தால், யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை.  நிறையப்பேர் சோமாலிகள்தான். ஓரிரு வெள்ளைநிறத்தவர். இத்தாலியர்கள் எனப் பின்னர் அறிந்தேன். கருப்பாக, மாநிறமாக, குண்டாக இருந்த ஆஃபிரிக்கர்களில் பெண்கள் அதிகம் என்பது ஆச்சர்யமாக இருந்தது.

பழைய போயிங் 737. சிரமப்பட்டு சத்தத்தோடு எழுந்து மேலேறிய சோமாலி ஏர்லைன்ஸ் விமானம், ஒருவழியாக நிதானித்துப் பறந்துகொண்டிருந்தது. பழுப்பு நிறமும், மெலிதான தேகமுமாய் பளிச்சென்ற புன்னகையுடன் சோமாலிப் பணிப்பெண்கள் ஜூஸ்,
கோக் அளித்தவாறு நகர்ந்திருந்தார்கள். சுமார் 1000 கிமீ தூரத்தைக்
கடக்க 2 மணி நேரம். கொஞ்சம் கண்ணயர்ந்திருந்தேனோ..  விமானம் மொகதிஷு ஏர்ப்போர்ட்டில் சற்று நேரத்தில் இறங்கவிருக்கிறது என்கிற சத்தமான அறிவிப்பில் அலர்ட்டானேன்.

ஜன்னல் வழியாகப் பார்க்கையில் ஆகாச நீலம்.. கீழேயும் சிதறியிருந்ததாய்த் தோன்றியது. சில நிமிடங்களில் மீண்டும் திரும்பிய அறிவிப்பு இதோ சில நிமிடங்களில் தரை தொடுதல்..  என்றது. கீழே பார்த்தால்.. நகரத்தின் சுவடு கிடக்கட்டும், தரையையே காணோம். விமானமோ கீழே கீழே எனத் தாழ்ந்து வர அரேபியக் கடலின் அதிரடி நீலம் வயிற்றில் புளியைக் கரைத்தது.  

ஜன்னல்வழி காட்சியெல்லாம் போதும் எனத் தவிர்த்து உள்ளே மற்ற பயணிகளைப் பார்த்தேன். கவனித்தேன். பெண்கள் பலர் கண்மூடி, வாய்முணுமுணுத்துப் பிரார்த்தனையில் இருந்தது பதற்றத்தை அதிகப்படுத்தியது. சோமாலியில் ஏதும் சொன்னார்களா..  சரியாகத்தானே இறங்குகிறது இது எனக் கவலைப்படுகையில், சட்டென்று விமானம் கீழே தொட்டு ஓடுஓடென்று ஓட, ’அல்லாஹூ அக்பர்.. அல் ஹம்துலில்லா!’ என்கிற சோமாலிகளின் அரேபிய கோஷங்கள் குறிப்பாக, சோமாலிப் பெண் பாஸஞ்சர்களிடமிருந்து உற்சாகமாகப் பீரிட்டது. 

சந்தோஷத்தில் அதிர்ந்தவனாய் இப்போது ஜன்னல் வழி கீழே பார்த்தேன். ஒரு ஏர்ப்போர்ட் போன்ற தோற்றமே காணப்படவில்லை. ஏதோ கிராமத்துப் பள்ளிக்கூடம்போல ஓரிரு கட்டடங்கள் தள்ளித் தள்ளித் தென்பட, கொஞ்சம் குறுக்கும் நெடுக்குமாகக் கார்கள் ஓடிக்கொண்டிருக்க சோமாலி ஏர்லைன்ஸ் தன் இடத்தில் போய் நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டது.

உற்சாக சோமாலிகளுக்கு மாறாக, சிந்தனை வசப்பட்டவாறு விமானத்திலிருந்து இறங்கி ஏர்ப்போர்ட் கட்டிடத்துக்குள் நுழைந்தேன். சோமாலி அலுவலர்கள் இப்படி அப்படி என்று கைகாட்ட, கூட வந்தவர்களைத் தொடர்ந்து நானும் உள்ளே சென்று நடந்தேன். செக்-இன் பாக்கேஜ்கள் வரும் பெல்ட்டிற்கு அருகில் வந்து அனைவரும் நின்றோம். நேரம் எடுத்துக்கொண்டு ஆராம்ஸே ஒவ்வொரு பெட்டி, சூட்கேஸ் என வர, வர, எங்களைத் தொட விடாமல் அவர்களே எடுத்து ஒரு மூலையில் அடுக்கினார்கள்  அங்கே. என் மென்பழுப்பு சஃபாரியும், நீல நிற அரிஸ்டோக்ராட்டும் ஸ்லிம்மாக, அவர்களது பெரிசுகளுக்கு இடையில் அப்பாவிகளாய் நிற்கவைக்கப்பட்டன. நான் இன்று மொகதிஷு வருவதாய் எம்பஸிக்கு அனுப்பப்பட்ட அமைச்சரகத்தின் டெலெக்ஸ் மெஸேஜ் மொகதிஷு வந்ததா, எங்கள் எம்பஸியிலிருந்து யாராவது வரவேற்க அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்களா என்று இமிக்ரேஷனுக்கு அந்தப்பக்கம் நோட்டம் விட்டேன். ம்ஹூம்.. இந்திய முகம் எதுவும் தென்படவில்லை…

சூட்கேஸ்களை வாங்கிக்கொண்டு வெளியேற வேண்டும் என்கிற
பாஸெஞ்சர்களின் பரபரப்பில், அந்த இடம் ஒரு குட்டி சந்தையாகி
சலசலத்தது. ஒரு ஆங்கில வார்த்தையும் கேட்கக் கிடைக்கவில்லை.
சில பெண் பயணிகளுக்கிடையே தலையை எப்படியோ நீட்டி அந்த
இளம் இமிக்ரேஷன் அதிகாரியிடம் ”நான் இந்தியன் எம்பசி அஃபீஷியல். இந்தியாவிலிருந்து வருகிறேன். கொஞ்சம் சீக்கிரம் எனது சூட்கேஸ்களை க்ளியர் பண்ணுவீர்களா?” என்று மென்மையாக கேட்டது, அந்தப் பெண்களின் சோமாலி பாஷை கீச்மூச்சுகளிடையே கரைந்து காணாமற்போகுமுன், அந்த இளம் அலுவலர் என்னை வேகமாகப் பார்த்தான். ஒரு தலையாட்டல், ஒரு சிரிப்பு… இப்படி ஏதாவது? ம்ஹூம். தன் வேலையைத் தொடர்ந்தான்.

அதாவது சோமாலிப் பயணிகளின் உருட்டுவதும், சூட்கேஸ்களைத்
திறக்கச் சொல்வதும், உள்ளே கிளறிக் கொட்டுவதுமாயிருந்தான்.  என்னடா இது.. சிஸ்டமில்லா சிஸ்டம்.. இதிலிருந்து வெளியேற எத்தனை நேரம் பிடிக்குமோ? ஏர்ப்போர்ட்டிலிருந்து எம்பசிக்கு ஃபோன் பண்ணமுடியுமா அல்லது நாமே டாக்ஸியைப் பிடித்து ஊருக்குள் நுழைந்துவிடவேண்டியதுதானா.. இதெல்லாம் எப்போது நடக்கும்.. என்பதுதான் நிச்சயமில்லை அப்போது.

ஏர்ப்போர்ட்டில் இறங்கிய அரைமணி நேரத்திலேயே ஒரு அயர்வு ஏற்பட்டிருக்க, என்ன செய்வது எனத் தெரியாமல் ஒரு கணம் திணறினேன். ”ஹலோ !” என்கிற தெளிவான ஆங்கில வார்த்தை கேட்கத் திரும்பிப் பார்த்தேன். ஒரு சோமாலி இளைஞன் நீல சஃபாரியில் சிரித்தவாறு எதிர் நின்றான். எங்கிருந்து வந்தான் யாரிவன் என யோசிக்குமுன், ”யு ஆர் மிஸ்டர்.. இந்தியன் எம்பஸிக்காகத்தானே வந்திருக்கிறீர்கள்!” என்று கிட்டத்தட்ட சரியான ஆங்கிலத்தில் கேட்க, ஆச்சர்யத்தில் குளிர்ந்தேன். ”….நீங்கள் யார்?  தெரியலையே” என்று லேசாக சிரிக்க முயற்சிக்கையில் ” இந்திய எம்பஸியில் வேலைபார்க்கிறேன். உங்களை அழைத்துப்போக வந்திருக்கிறேன்!” என்று கருத்து இருண்டிருந்த வானில் ஒளிக்கீற்றாய்த் தெரிந்தான். ஆண்டவா! ஆஃபிரிக்காவிலும் விடாமல் வந்துவிடுகிறாய்.. என்னே உன் பெருமை.. என்று நினைத்தவாறு அல்லாஹு அக்பர்! என்கிற அரேபிய/சோமாலிய வார்த்தைகளைக் கடன்வாங்கி நம்ப கடவுள்மேலே அவசரமாகப் போட்டேன்!

என் அஃபீஷியல் பாஸ்போர்ட், டிக்கெட் ஆகியவற்றை வாங்கிக்கொண்டவன், ”உங்கள் சூட்கேஸ் எது?” என்று அந்த லக்கேஜ் குவியலைப் பார்த்துக் கேட்டான். ஷயர் முகமது அவனது பெயர். இந்திய தூதரக லோக்கல் ஸ்டாஃப் மெம்பர். காட்டினேன்.

”இவ்வளவு கூட்டமா இருக்கே.. வரிசையாவும் யாரும் நிக்கலை..  டயம் எடுக்கும் போலருக்கு” என்று அவன் காதில்மட்டும் விழும்படி ஆங்கிலத்தில் சொல்ல, என்னை முன்னேறுமாறு கைகாட்டிவிட்டு, சோமாலியில் ஏதோ சத்தம்போட்டு இரண்டு மூன்று பயணிகளை
இடது வலதாகத் தள்ளிவிட்டு பாய்ந்து சென்று என் சூட்கேஸ்களை எடுத்தான். மற்றவர்கள் அவனை முறைக்க, அலட்சியம் செய்து, நேரே இமிக்ரேஷன் அதிகாரி முன் வந்தான். குனிந்து காதில் ஏதோ லோகல் பாஷையில் படபடத்தான். அவன் திடுக்கிட்டதுபோல் என்னைப் பார்த்து.. முன்னே வரும்படி சொல்ல, ஷயர் முகமது அவனது டேபிளில் என் இரண்டு சூட்கேஸ்களையும் தூக்கி வைத்தான். அந்த அதிகாரி ட்ராயரில் இருந்து ஒரு சாக்பீஸை எடுத்து என் சூட்கேஸ்களின்மீது அவசரமாக ‘வட்டம்’ வரைந்தான்!

ஷயர் முகமதுவிடம் ஏதோ சொல்ல, அவன் அதிகாரியின் தோளில் ஒரு தட்டுதட்டி ”ஷுக்ரியா!” என்றுவிட்டு சூட்கேஸ்களுடன் வந்து கூட்டிக்கொண்டு அடுத்தாற்போலிருந்த கேட் டூட்டிமேனிடம் ஏதோ சொல்ல, அவன் எனக்கு ஒரு சல்யூட் அடித்து வாசலைக் காட்டினான். ஷுக்ரியா! என்று நானும் ஃபார்மாலிட்டி காண்பித்து வாசலுக்கு நிம்மதியுடன் வந்து நின்றேன்.

இன்னமும் ஏர்ப்போர்ட் முகப்பு வாசலில் நிற்கிறோம் என்கிற பிரக்ஞை வரவில்லை! லட்சணம் அப்படி. வாசலில் சற்றுத் தள்ளி ஆரஞ்சு, மஞ்சளாக சில ஃபியட் டாக்ஸிகள் (நமது அம்பாஸடர் போன்ற அந்தக்காலத்து Fiat 124) நின்றன. ஷயர் கைகாண்பிக்க, ஒன்று எங்கள் முன் வேகமாக வந்து நின்றது. சாமான்களை டிக்கியில் போட்டு மூடிவிட்டு, அவன் சொன்னான். ”நான் ட்ரைவரிடம் சொல்லிவிட்டேன். வீட்டில் கொண்டுபோய் விட்டுவிடுவான்” என்றான். 

”நான் எப்படி இவனுக்குப் பணம் தருவேன்? சோமாலி கரன்ஸி இல்லையே..” என்று இழுக்க, ”நான் வருகிறேன்.. பார்த்துக்கொள்கிறேன். கவலை வேண்டாம்” என்றான்.

சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த நீலநிற வெஸ்பாவைக் காண்பித்து, ”இது எம்பஸி ஸ்கூட்டர் .. நான் பின்னாலேயே ஓட்டி வருகிறேன். நீங்கள் பதட்டமில்லாமல் போங்கள். டிரைவர் எனக்குத் தெரிந்தவன்” என்றான் ஷயர் முகமது.

சாலை? பத்துப் பதினைந்து நிமிஷம் வரை அப்படி ஒன்றும் தென்படவில்லை. இரண்டு பக்கமும் பெரும்பாலும் அடந்து உயர்ந்த
புதர்கள். காட்டு மரங்கள் சில ஆங்காங்கே. நடுவிலே புழுதியைக் கிளப்பிக்கொண்டு எங்கள் ஃபியட் டாக்ஸி வீரம் காட்டி சீறியது. பின்
கண்ணாடி வழியே ஷயர் வருகிறானா எனப் பார்க்கத் திரும்பினேன்.
வெகுவாகக் கிளம்பியிருந்த புழுதி, ஏதோ மேகவெளியில் என்னை
எமகிங்கரர்கள் இழுத்துப்போவதைப் போன்ற பிரமிப்பைக் கொடுத்தது! மொகதிஷு என்பது ஒரு நகரம் என்றில்லாவிட்டால் பரவாயில்லை.. ஊர்தானே .. பின்னே ரோடு எங்கே என்று பரபரத்தது மனம். கொஞ்ச நேரத்தில் திடீரென டாக்ஸி ஏதோ மலையுச்சிக்குப் போவது போல் மேலேறி, திடீரெனக் கீழே இறங்கி ஓடியது. சில நிமிடங்களில் சாலை தென்பட்டு அதன்மீது ஆனந்தமாக சென்றது டாக்ஸி. எதிரே எந்த வாகனமும் இல்லை. சிலர் ரோட்டரோத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். ஊரின் கட்டிடங்கள் ஒருசில இரு மாடிக் கட்டிட அளவுக்கு உயர்ந்தும், பெரும்பாலான வீடுகள் தகரம் வேயப்பட்ட கட்டிடங்களாய், தாழ்ந்த நிலையில் ஆங்காங்கேயும் தென்பட்டன. திடீரென மேலே உயர்வதும், திடுக்கென கீழே சரிந்து செல்வதுமாய் நீண்டு கொண்டிருந்த சாலை, ஒருவழியாக ஒரு பெரிய பழைய வீட்டின் இரும்பு கேட்டின்முன் எங்களைக்
கொண்டுவந்துவிட்டது. திரும்பிப் பார்க்கையில் ஷயர் முகமது வந்துகொண்டிருந்தான். அருகில் வந்து நிறுத்தி டாக்ஸி ட்ரைவருக்குப் பணம் கொடுத்தான். என் சூட்கேஸ்களை எடுத்துக்கொண்டு மூடியிருந்த இரும்பு கேட்டை பலமாகத் தட்டி சோமாலியில் ’திற!’ என்பதுபோல் கத்தினான். ஒருவன் வந்து திறந்துவிட, உள்ளே இரண்டாகப் பிரிந்து நீண்டது அந்தப் பழையகால சோமாலி வீடு. ஒவ்வொரு பக்கத்திலும் இரண்டு படுக்கை அறைகள், சிறிய ஹால், கிச்சன், பாத்ரூம் என இரு குடும்பங்களுக்காகக் கட்டப்பட்டிருந்தது. அந்த ஊர் ஸ்டாண்டர்ட் படி வசதியான வீடு அது! வலப்புற வீட்டைத் திறந்து சாமான்களை உள்ளே வைத்துவிட்டு, ஒவ்வொரு பகுதியாகக் காண்பித்தான்.  ”எதிரே உள்ளது நமது அக்கௌண்ட்ஸ் ஆஃபீஸரின் வீடு.  குடும்பத்தோடு இருக்கிறார்கள். இது உங்களுடையது” என்றான்.

”எம்பஸி பக்கத்தில்தானே?” என்று கேட்டுவைத்தேன். ”இல்லை.  மூன்று கிமீ. தூரம். இப்போது ஆஃபீஸ் முடிகிற நேரம். நாளை காலையில், மிஸ்டர் தப்லியால்-உடன் (அக்கவுட்டண்ட்) பஸ்ஸில் வந்துவிடுங்கள்” என்றான் ஷயர். பஸ் எதையும் நான் வழியிலே பார்க்கவில்லை. எப்போதாவதுதான் காட்சி தருமோ? நாளை எப்படி விடியுமோ பொழுது? ஆஃபீஸ் எப்படியோ? சோதனை மேல் சோதனைதானோ இனி… என்று கவலைக் கருமேகங்கள் மனவானில் படர ஆரம்பித்திருந்தன.

[ அடுத்த வாரம்]
==================================================================================


நியூஸ் ரூம் 







 



============================================================================================

Face Book ல் பார்த்ததை இங்கு பகிர்கிறேன்.  கலந்து கொள்ளுங்கள்.  வெற்றி பெறுங்கள்.



=================================================================================================



=============================================================================================

டி.எம்.சௌந்தரராஜன் ஆளுமை இருந்த காலத்துக்குப் பிறகு தமிழில் ஒரு குரல்கூட ‘ஆண்குரல்’ இல்லை என்பதை மறந்துவிட வேண்டாம். டிஎம்எஸ் இடத்தை யாரும் இன்னமும் நிரப்பவில்லை, நிரப்பிவிடவும் முடியாது.
திரைஇசை மக்களை வெகுவாக வசீகரிக்கத் துவங்கிய அந்தக்காலத்தில் ஆண்குரல் என்று பி.யூ.சின்னப்பா குரலைச் சொல்லலாம். அதன்பிறகு பெருவாரியானவர்களைக் கவர்ந்த ஆண்குரல்கள் நிறையவே இருந்தன. டிஆர்மகாலிங்கம், சிதம்பரம் ஜெயராமன், திருச்சி லோகநாதன், கண்டசாலா, சீர்காழி கோவிந்தராஜன் என்று நிறைய பேர் இருந்தனர்.
இவர்களுடைய கம்பீரம் ஒருபக்கமிருக்க கொஞ்சம் பெண்மை கலந்து தமிழ்நாட்டையே வசீகரித்த குரல் எம்கேடியுடையது. அவரைச் சார்ந்து வந்த குரல்தான் ஏ.எம்.ராஜாவுடையது. ஏ.எம்.ராஜா இசையமைப்பாளரான பிறகு அவருக்கு மாற்றாக விஸ்வநாதன்-ராமமூர்த்தி கொண்டுவந்த குரல்தான் பி.பி.ஸ்ரீனிவாஸுடையது. பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலுக்கு மாற்றாக வந்தவைதாம் கே.ஜே.ஏசுதாஸ் மற்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் குரல்கள். எஸ்பிபியின் குரலுக்குப் பின்னர் தற்போது வந்திருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட குரல்களும் எஸ்பிபியின் பாணியில் வந்துள்ள குரல்கள்தாமே தவிர ஒன்றுகூட ஆண்குரலுக்குரியவை அல்ல.
இவர்களில் கொஞ்ச காலத்துக்கு ஆண்குரலுடன் வந்த பாடகராக மலேசியா வாசுதேவனைச் சொல்லலாம். வேறு எந்த ஆண் குரலையும் எண்பதுக்குப் பின்னர் தமிழ்த்திரை இசையுலகம் அனுமதிக்கவே இல்லை.
இந்த அனுமதியின்மைக்குக் காரணம் திரை இசை முழுக்க முழுக்க இளையராஜாவின் ஆதிக்கத்தில் இருந்ததுதான்.
அவர் என்னென்ன டிரெண்டைக் கொண்டு வரவேண்டும் என்று நினைத்திருந்தாரோ அந்த டிரெண்டிற்கு ஆண்குரல்கள் தோதுப்படவில்லை போலும். மலையாளத்தில் யார் பாடலைக்கேட்டாலும் ஏசுதாஸ் பாடிய பாடலைப் போலவே இருப்பதுபோல தமிழில் எந்த ஆண்குரல் பாடலும் எஸ்பிபி அவரைத் தொடர்ந்து பிபிஸ்ரீனிவாஸ் அவரைத் தொடரந்து ஏஎம்ராஜா என்ற ஞாபக அடுக்குத் தொடரை நினைவூட்டுவதாகவே அமைந்துவிட்டது. இப்படி அமைந்துவிட்டதை ஒரு துறைக்கு ஏற்பட்ட இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
டிஎம்எஸ்ஸுக்கான வாய்ப்புகள் குறைந்ததையும் அவரைத் தமிழ்த் திரையுலகம் ஒதுக்க ஆரம்பித்ததையும் இளையராஜாவின் வருகைக்கு முற்பட்ட காலத்து விஷயங்களாகத்தான் கொள்ள வேண்டியிருக்கிறது. டிஎம்எஸ்ஸுக்கான வாய்ப்புகள் குறைந்து போவதற்கான ஏற்பாடுகளை டிஎம்எஸ்ஸேதான் ஏற்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்கிறார்கள். குறிப்பாக எம்ஜிஆரைப் பற்றியும் சிவாஜி பற்றியும் அவர் தெரிவித்த கருத்துக்கள்...இருவருமே தன்னால்தான் இத்தனைப் பாப்புலராக இருக்கிறார்கள் என்பதுபோல் அவர் ஊடகத்தில் சொல்லிய விஷயம்தான் இத்தனைக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை சிவாஜி அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரது சுபாவம் அது. யார் தம்மைப்பற்றி என்ன சொல்லியிருந்தாலும் “சொல்லிட்டுப் போறாம்ப்பா. வயித்துப் பொழப்புக்காக என்னத்தையோ சொல்லுவானுங்க. அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கக்கூடாது. அவன் தொழிலைப் பிரமாதமா செய்யறான் இல்லையா. நமக்கு வேண்டியது அவன் தொழில்தானே? அவனையே போடு” என்று சொல்வது சிவாஜியின் சுபாவம்.
எம்ஜிஆர் குணம் வேறு மாதிரியானது. தம்மைப் பற்றித் தவறாக யாராவது ஏதாவது சொன்னது தமது காதுக்கு வந்துவிட்டால் அவர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டிவிட்டு மறுவேலைப் பார்ப்பது எம்ஜிஆரின் சுபாவம். அன்றைய திரையுலகில் இதற்கான சம்பவங்கள் ஏராளம் ஏராளமாக நடந்துள்ளன. பிறகு எம்ஜிஆர் அரசியலில் வெற்றி பெற்றுவிட்டார் என்றதும் இம்மாதிரி தகவல்கள் யாவும் மறைக்கப்பட்டு அவர் பெயரைச் சுற்றி பெரிய ஒளிவட்டம் மட்டுமே பாய்ச்சும்வேலைகளை ஊடகங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டது வேறு விஷயம்.
இளைய தலைமுறையினருக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதனால் இதனை இங்கே குறிப்பிடவேண்டி வந்தது.
இதன் பிறகுதான் டிஎம்எஸ்ஸுக்கு மாற்றாக ஒருத்தரைக் கொண்டுவர எம்ஜிஆர் விரும்ப, அதிர்ஷ்டக்காற்று அல்ல அதிர்ஷ்ட சுனாமியே எஸ்பிபிக்கு அடித்தது. எம்ஜிஆர் சிவாஜியின் கோபத்துக்கு மட்டுமல்ல இன்னமும் பல இசையமைப்பாளர்களின் மற்றும் முக்கியமான பிரதான பின்னணிப் பாடகியின் கோபத்திற்கும் ஆளானார் டிஎம்எஸ் என்று சொல்கிறார்கள். சில பாடல்களை அவருடன் சேர்ந்து டூயட் பாடமாட்டேன் என்று குறிப்பிட்ட பின்னணிப் பாடகி சொல்லிவிட அதற்காகவும் அடித்தது யோகம் எஸ்பிபிக்கு.
அன்னக்கிளியில் அன்னக்கிளி ஒன்னத்தேடுதே பாடலைப்பாடும்போது டிஎம்எஸ் சொல்லிய சில திருத்தங்கள் இளையராஜாவுக்குப் பிடிக்காமல் ஆனால் அன்றைய தினத்தில் வேறு வழியில்லாமல் அந்தப் பாடலை அவர் ரிகார்டிங் செய்தார் என்றும் சொல்கிறார்கள். இம்மாதிரியான டிஎம்எஸ் பற்றிய சில பலவீனங்களான பகுதிகள் உள்ளன. ஆனால் அதற்காக அந்த மகா பாடகரைப்பற்றிய திறமைகளை நாம் குறைத்து மதிப்பிடுதல் ஆகாது. டிஎம்எஸ்ஸுக்கு இணை டிஎம்எஸ்தான். மற்றவர்களின் பாடல் இவர் பாடலுக்கு ஈடாகிவிடாது.
நன்றி: அமுதவன் பக்கங்கள்


பகிர்ந்த [பேஸ்புக் நண்பர் திரு R கந்தசாமி அவர்களுக்கும் நன்றி.

==============================================================================================

பொக்கிஷம் :

யார் இந்த டி கே டி துரைராசன்?  ஜீவி ஸார் சொல்லக்கூடும்.  இவர் எழுதிய வேறு படைப்புகள் என்ன?


Face Book ல் இதைப் பகிர்ந்து 'அசோகனும் ஸ்ரீதேவியும்' என்று தலைப்பிட்டேன்.  சட்டென கண்டு பிடித்து விட்டார்கள்.

மறுபடியும் Face Book ல் இதைப் பகிர்ந்து அபர்ணா நாயுடு என்பது யார் என்று கேட்டதும் ஏகப்பட்ட சுவாரஸ்யமான தகவல்கள் அங்கு பகிரப்பட்டன.  அபர்ணா நாயுடு யார் என்கிற மர்மமும் உடைக்கப்பட்டது.


ஹிஹிஹி....   ப்ளேடு 

நல்ல கேள்விதான்.  தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் 


என்னமா ஒரு ஐடியா...!

கண்டுபிடி..  கண்டுபிடி...  கருணையைக் கண்டுபிடி 

109 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருப்பார் என பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
  2. கடவுள் வந்து என்னை பற்றி ஒரு பதிவெழுதேன் என்று கேட்டுகொண்டாரா? இந்த வாரம் கடவுள் உங்களிடம் வசமாக மாட்டிக்கொண்டார்.
    சுஜாதா ஒரு சிறுகதையில் "கடவுள் இந்த தேதியில் இந்த நேரத்தில் இந்த இடத்தில வருகிறார்" என்று செய்தியை நம்பி மக்கள் கூட அந்த நாளும் சாதாரண நாளாக கடந்து போனதாக கதையை முடித்திருப்பார். அதற்க்கு அவர் தந்த விளக்கம்.
    கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று கூறினால் அது கடவுளாக முடியாது. விடை தெரியாத ஆராய்ச்சியின் முடிவு தான் கடவுள் எனும்போது எப்படி நேரில் காணமுடியும். என்று விளக்கியிருப்பார். இந்த பதில் உங்களை கவிதை கேள்விக்கும் விடையாக அமையும்.
    ஏகாந்தன் சாரின் சோமாலிய பயணம் பற்றிய கட்டுரை கச்சிதம்.
    தீ வாளிகள் இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அந்த வாளிகளில் தண்ணீர் , மற்றும் சில வாளிகளில் மணல் இருக்க வேண்டும். அந்த வாளிகள் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் வரைமுறை இருந்தது. உதாரணமாக வாலியின் அடிப்பாகம் ஒரு கடாய் போன்று இருக்க வேண்டும். தரையில் நிமிர்த்தி வைக்க முடியாது.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுஜாதாவின் அந்தக் கதை நானும் வாசித்திருக்கிறேன்.  என்னிடம் பல சுஜாதா தொகுப்புகள் உண்டு!  எதையோ எங்கோ எழுதப்போய் மனிதனைப் பற்றி எழுதுவதற்கு பதில், பதில் சொல்லாத கடவுள் பற்றி எழுதி விட்டேன்.  அந்தக் கட்டுரையை தட்டிக்கொட்டி ஒட்டி சீராக்கினால் கிரேசி தீவ்ஸ் விடுதலைச் சிலை போல இப்படி வந்து விட்டது!

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. முதல் பகுதியான கடவுளைப் பற்றிய கட்டுரை நன்றாக உள்ளது. கடவுள்.( கட+உள்) யாரென்று நாம் அனைவரும் அறிந்ததே. விண்டவர் கண்டிலர்.
    கண்டவர் விண்டிலர். என்பது போல் காணும் சக்திக்கு அப்பாற்பட்டவர்.

    அதன் தொடர்பான இன்றைய கவிதையும் மிக அருமையாக உள்ளது. ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டவர் விண்டிலர் என்று சொல்வதே தவறு என நான் நினைக்கிறேன். கண்டவர், சொன்னதை நாம் நம்புவதில்லை என்பதுதான் உண்மை. என் ஆன்மீக அனுபவம் என நடந்த ஒன்றைச் சொன்னால், பிறருக்கு அது நம்பிக்கையளிப்பதாக அமையாது. காரணம் நம்மிடம் (மனிதர்களிடம்) இல்லாத பூரண விசுவாசம்.

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      தாங்கள் சொல்வது சரியான உண்மை. பல ஆன்மிக பயணங்களில் ஈடுபாடுடன் கவனம் செலுத்தி அனுபவமூலமாக பக்தியுடன் செயல்பட்டு வரும் தங்களுக்கு தெரியாததா? நான் ஏதோ அவ்வப்போது படித்ததை பகிர்கிறேன். ஆனால் இந்த "கண்டவர்" என்ற வார்த்தையில் பல அர்த்தங்கள் உள்ளன. மனித உடலாக ஜனித்திருக்கும் நம்மில் ஆன்மாவாக உறைந்திருக்கும் பரம் பொருளை பரிபூரணமாக, தமக்கு மிக நெருக்கமானவராக உணர்ந்தவர்கள், அந்த அனுபவத்தை விளக்கமாக சொல்ல முடியாது என்பதையே கண்டவர் விண்டிலர் எனும் பொருளில் கூறியிருப்பதாக பல தெய்வாம்சம் பெற்ற முனிவர்கள், தவசிகள், இறையருள் பெற்ற ஆன்மிக துறவிகள் போன்றவர்களின் வாயிலாக நாம் பல நூல்களில் படித்துள்ளோம். நன்றி சகோதரரே.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. உண்மைதான் கமலா ஹரிஹரன் மேடம். கண்டவரால் அதனைப் பிறர் புரிந்துகொள்ளும்படி விளக்க முடியாது. அதனால் ஒப்பீட்டளவில் அவர்கள் விளக்கும்போது நமக்குக் குழப்பமே மிஞ்சும், தேன் எப்படி இருக்கும் என்பதை எழுத்தில் விளக்கமுடியாத்து போல.

      கல்லிடைக் குறிச்சியில் ஞாயிறு தவிர தினப் வெல்லச் சீடை, உப்புச் சீடை போன்றவைகள் (ஆஞ்சநேயா ஸ்வீட்ஸ்) செய்வார்களாம், அன்றன்றே கொரியர், லாரி முதலியவற்றில் கஸ்டமர்களுக்குச் சென்றுவிடுமாம். பத்தரை மணிக்கு ரெடியாயிடும் என்றார். நாங்கள் 8 1/2க்குச் சென்றிருந்ததால் வாங்க இயலவில்லை. மனோஹரம் வாங்கினேன்.

      நீக்கு
    4. வணக்கம் சகோதரரே

      / கண்டவரால் அதனைப் பிறர் புரிந்துகொள்ளும்படி விளக்க முடியாது. அதனால் ஒப்பீட்டளவில் அவர்கள் விளக்கும்போது நமக்குக் குழப்பமே மிஞ்சும், தேன் எப்படி இருக்கும் என்பதை எழுத்தில் விளக்கமுடியாத்து போல/

      தேன்.. அதிலும் நல்ல தேன்..... நல்ல உவமானம்.

      கல்லிடையில் பட்சணங்கள் வாங்குமிடமெல்லாம் மறந்தே விட்டது. அங்கு சென்றே பல வருடங்கள் ஆகி விட்டது. எங்கள் நாத்தனார் குடும்பத்திற்கு அவர்கள் அனைவரும் நல்ல பழக்கம். நாத்தனார் வீடு குடும்பமாக அங்கிருந்த வரை நாங்கள் அடிக்கடி செல்வோம். இப்போது அவர்கள் குழந்தைகள் சென்னை வாசம். எப்போதோ அவர்கள் அங்கு வந்து செல்வதாக தகவல். அவ்வளவே!! நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    5. கண்டவர் விண்டிலர் விவாதக் குறிப்புகள் அருமை. எனக்கும் அந்தக் குறிப்புகளில் உடன்பாடு.  அந்த வார்த்தையை கவிதைக்காக நான் சீண்டிப் பார்க்க உபயோகப்படுத்திக் கொண்டேன்.

      நீக்கு
    6. எனக்குத் தெரிந்த கல்லிடைக்குறிச்சிக்காரர் சௌதியில் பிஸினெஸ் வைத்திருந்தார். அவர் பசங்களும் அதில் இப்போது ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர் வீடும் சென்னையில் என்று கேள்வி. அவர்தானோ உங்கள் உறவினர் என்பது எனக்குத் தெரியாது

      நீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம். இன்னும் பலரைக் காணோமே..... மார்கழிச் சோம்பலா?

    பதிலளிநீக்கு
  5. இன்றைய பகுதிகள் அனைத்துமே ரசிக்கும்படியும் சிந்திக்கும்படியும் அமைந்திருக்கிறது.

    பிறகுதான் ஒவ்வொன்றைப் பற்றியும் எழுதணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லார் அபிப்பிராயமும் ஓரளவுக்கு பெரும்பாலும் ஒத்துவரும் என்றாலும் வாதத்துக்கு சில குறிப்புகள் பயன்படும்!

      நீக்கு
  6. கடவுள் என நாம் நினைத்திருப்பது யாரை? எதிரே வருபவரிடம் நம்மால் வெட்கமில்லாமல் உண்மைகளைச் சொல்லி மன்னிப்பு வேண்ட முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடவுள் என்று நான் நினைப்பது உருவமில்லாதத சக்தி.  நாராயணன் என்றோ, சிவம் என்றோ இல்லாதது.  பால்வீதி என்பதும் பாற்கடல் என்பதும் ஒத்துவருகிறது பாருங்கள்!

      நீக்கு
    2. ஆவினும் நந்தினியும் ஒத்துப்போவதில்லை என்பதையும்...

      நீக்கு
  7. எதிலுமே பெயர் எழுதி வைத்திருப்பது அதன் உடனடி உபயோகத்தைத் தெரிந்துகொள்வதற்காக. தண்ணீர்த் தொட்டி-குடிநீர். தீ என எழுதியிருக்கும் மணல் வாளி, தண்ணீர் தொட்டி/வாளி, தீயை அணைக்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புன்னகை மன்னன் கமல்.ரேவதி உரையாடல் நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
  8. குறையில்லாத மனிதர் யாரேனும் இருக்க முடியுமா? பிசினெஸ் என்று வரும்போது நீக்கு போக்காகவும், யாருக்காக பிசினெஸ்,கம்பெனி என்பதைப் புரிந்துகொள்ளும் அடிப்படை ஞானமும் வேண்டும்.

    ஒரு ரீடெயில் பிசினெஸ் நடத்தும் கம்பெனியில் ஐடி, அக்கவுன்ட்ஸ், செக்யூரிட்டி, ஹெச் ஆர் என்ற பலவும் சப்போர்ட் யூனிட்தீன். பிசினெஸ் டிவிஷன்கள், அதன் தலைவர்கள்தாம் மிக முக்கியமானவர்கள்.

    இதே டி எம் எஸ், எம் ஜி ஆரைச் சந்தித்து, தலைவரே ஐநூறு ரூபாய் ஒரு பாடலுக்கு என்பது குறைவா இருக்கு, ஆயிரம் இரண்டாயிரம் என அதிகப்படுத்தச் சொல்லக்கூடாதா என்று கேட்டிருந்தால் எப்போதோ அவருக்கு அதிகப் பணம் கிடைக்க ஆரம்பித்திருக்கும், என நான் எப்போதும் எண்ணுவது உண்டு (சிவாஜி இந்த விஷயங்களில் மறந்தும் உதவ மாட்டார் என்பது என் அனுமானம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இதே டி எம் எஸ், எம் ஜி ஆரைச் சந்தித்து, தலைவரே ஐநூறு ரூபாய் ஒரு பாடலுக்கு என்பது குறைவா இருக்கு, ஆயிரம் இரண்டாயிரம் என அதிகப்படுத்தச் சொல்லக்கூடாதா என்று கேட்டிருந்தால் எப்போதோ அவருக்கு அதிகப் பணம் கிடைக்க ஆரம்பித்திருக்கும், //

      உண்மையில் இது நடந்த சம்பவமே.  ஆயிரம் நிலவே வா பாடலை SPB பாடியபின் அப்புறமும் TMS வருவதற்கு தாமதமாக "தாயில்லாமல் நானில்லை" பாடலை SPBயை வைத்து ஒளிபபதிவு செய்தார்களாம்.  ஆனால் கேட்டுப்பார்த்த யாருக்குமே அது திருப்தியைத் தரவில்லையாம்.  அப்புறம் TMS ஐயே அழைத்து பாடகி சொன்னதும் அவர் எம் ஜி ஆரிடம் சம்பளம் கூடாக கேட்டாராம்.  தரப்பப்ட்டதாம்.

      இப்போதுவரை 'தாயில்லாமல் நானில்லை' பாடலின் SPB வெர்ஷனை தேடிக்கொண்டிருக்கிறேன்!

      நீக்கு
  9. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  10. பலவகையிலும் சிறப்பான பதிவு..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  11. கடவுளைத் தரிசித்த அனுபவம் இன்னும் தங்களுக்குக் கிடைக்க வில்லையா ஸ்ரீராம்!?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு தெய்வம் நேரில் வந்தது என்று சில அனுபவங்கள் உண்டு. தெய்வமாக நினைக்கும் அனுபவங்கள்!

      நீக்கு
  12. சோமாலியா என்றதும் ஒட்டிய வயிற்றுடன்கூடிய சோமாலியர்களும், மிடில் ஈஸ்டில் வேலைக்கு வந்துகுமிந்த ஒல்லியான சோமாலியர்களுமே என் நினைவுக்கு வருவார்கள். அதன் பின்னணி புரிந்தது. அவர்கள்தானோ நல்லா இருந்த ஈராக்கையும் கெடுத்தது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈராக் விஷயத்தில் பொல்லாப்பயல் அமெரிக்காவின் ’பங்களிப்பு’ நினைவுக்கு வரவில்லையா!

      நீக்கு
  13. அன்பின் நெல்லை அவர்களை செவ்வாய்க் கிழமை அன்று
    மிகவும் எதிர் பார்த்தேன்....

    பதிலளிநீக்கு
  14. ஸ்ரீராம், முதல் பகுதி interesting. நீங்கள் சொல்லியிருக்கும் விஷயங்கள் எல்லாம் எனக்கும் சிறு வ்யதில் போதிக்கப்பட்டவைதான். ஆனால் வளர்ந்து வந்த போது அறிந்தது அது நம்மை நல்வழிப்படுத்தச் சொல்லப்பட்டவை என்று. பாவம் கடவுள் கடவுளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    நான் கடவுளை மாபெரும் சக்தியாகப் பார்ப்பதால், இப்படியானவற்றுள் மனம் செல்வதில்லை. பரிபூரண நம்பிக்கை. கடவுளைப் பார்ப்பது என்பது அந்த சக்தியை உணர்வதுதானே அல்லாமல் நேரில் அல்ல என்பது என் தனிப்பட்டக் கருத்து. அந்த சக்தியை எங்கு வேண்டுமானாலும் எதில் வேண்டுமானாலும் உணரலாம். நம்முள் இருக்கு அந்த சக்தி ஆனால் அதை நாம் உணர்ந்து அதன் அருகில் செல்வதில்லை என்பதில் என் நம்பிக்கை.

    கோயிலுக்குப் போறதில்லையா என்று கேட்கலாம். போவதுண்டு ஆனால் அர்ச்சனை போன்ற எந்த விஷயமும் செய்வதில்லை. போவேன் மனதுக்குள் அமைதியாக நின்று அல்லது அமர்ந்து கொஞ்சமாச்சும் அந்த நல்ல சக்தி மனதுள் நிரப்பிக் கொண்டு வந்துவிடுவது அவ்வளவுதான். அதே போன்றுதான் பாடல்களைக் கேட்பதும். மனதிற்குள் நல்ல சக்தியை நிரப்பிக் கொள்ள...நன்றி சொல்ல. போற்றிட...என்று ...எந்த எதிர்பாப்பும் கிடையாது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது அத்தனையும் எனக்கும் ஏற்புடையதுதான்.  வேறு வழியின்றி அல்லது சில விஞ்ஞான விளக்கங்களுடன் அவற்றைச் செய்யலாம்.  மர்மம் விடுபடும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறதோ...   இன்னும் சில ஆயிரம் கோடி வருஷங்கள்தான்...!

      நீக்கு
    2. ஹாஹாஹா....விஞ்ஞானமுமே பிரபஞ்ச சக்தியை அடிப்படையாகக் கொண்டதுதானே! அந்த சக்திதான் அதுக்குத்தானே தியானம் மூச்சுப்பயிற்சி செஞ்சு மனதில் அந்த சக்தியை உளவாங்கச் சொல்றாங்க மனம் அமைதிப்படும் போது உணர்ச்சிகளை வெல்லும் போது அமைதி வந்துவிடும்! நிச்சலனம்! எதுவுமே பாதிக்காத நிலை. ஈக்விலிபிரிய நிலை!

      ஆனால் அதை அடைவது அத்தனை சுலபமில்லை. அதனால்தான் நம்மை மீறிய சக்தி!

      கீதா

      நீக்கு
    3. அது சக்தியின் சிறுதுளி எனலாம். இன்னும் இருக்கு மகாசக்தி!

      நீக்கு
  15. விஙானமும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சிலவற்றிற்குப் பதில் கொடுக்கும். சிலவற்றிற்குப் அதுவும் பதில் சொல்ல முடியாது.

    விஞ்ஞானம் பேசினாலும் மருத்துவர்கள் கூட கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே, "நாங்கள் செய்ய முடிந்ததைச் செய்துவிட்டோம், இனி மேலே உள்ளவன் தான்ன்னு மேலே கையைத் தூக்கிக் காடுவதுண்டே! பொறுப்புத் துறப்பு?!! அல்லது நம் சக்தி ஒன்றுமில்லை அதற்கும் மேலே ஒரு சக்தி இருக்கு என்ற நம்பிக்கை,

    நம்பிக்கை இல்லாத மருத்துவர்களும் கூட இயற்கை என்று சொல்வதுண்டு.

    நம்பிக்கை யுடையவர்கள், நம்மை மீறி நடக்கும் விஷயங்களுக்கு, பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்குப் பதிலாகக் கடவுள் என்பதைச் சொல்லிவிடுகிறோம்.

    எனவே பதில் சொல்ல முடியாத பல கேள்விகள் உண்டு அறிவார்த்தமாக யோசித்தால்.
    நம்பிக்கை இல்லாதவர்களையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். அவர்கள் மோசமானவர்கள் என்று லேபிள் வைக்கக் கூடாது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தன்மீது நம்பிக்கையில்லாதவர்கள் தெய்வத்தின் துணையை நாடுவார்களோ!  ஒரு ஆறுதலாக, ஒரு பற்றுக்கோடாக...தன்மீது முழு நம்பிக்கை வைத்திருப்பவர்கள் தெய்வம் துணை நின்றது என்றும் சொல்லிக் கொள்ளலாம்!

      நீக்கு
    2. எனக்கும் இது தோன்றும் ஸ்ரீராம். ஹைஃபைவ்!

      கீதா

      நீக்கு
    3. எல்லாமே நம் நம்பிக்கை சார்ந்ததுதான். இன்னொன்னு சொல்லலாம். தன்னம்பிக்கை கொஞ்சம் அளவுக்கு மேல் போறப்ப ஆணவம் அகங்காரமாக மாறுமே அதைத் தட்டி வைக்க நம்மை மீறிய சக்தி நம்பிக்கை துணை நிற்கும்

      கீதா

      நீக்கு
    4. அது கூட எல்லோருக்கும் அல்ல. கொஞ்சமாவது நியாய உணர்வு இருப்பவர்களுக்கு மட்டும்!

      நீக்கு
  16. ஸ்ரீராம் உங்கள் கவிதை செம. எடுத்துக் கொண்டேன்!

    //விஞ்ஞானம் உன்னை மறுக்கிறது
    என் ஞானமோ
    இரண்டுக்கும் நடுவில் தவிக்கிறது/

    ஆமாம் தவிப்பதற்குக் காரணம் கடவுள் என்றால் ஜீபூம்பா கேட்டதைக் கொடுத்துவிடுவார்....உம்மாச்சி கண்ணைக் குத்துவார்னு வளர்க்கப்படுவதால். பல கதைகள்....பல உருவங்கள் கொடுத்து...குறிப்பிட்ட மதம் என்றில்லை எல்லா மதத்திற்கும் பொருந்தும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் கவிதை பழசுதான் கீதா..  நாலு வருஷங்களுக்கு முன்னாலேயே போட்டதுதான்!

      நீக்கு
    2. ஆமாம் வாசித்த நினைவு வந்தது ஸ்ரீராம் அதைச் சொல்ல நினைத்து மறந்து விட்டேன். "வாசித்த நினைவு இருக்கே என்று. நான் சேமித்து வைத்த டாக்குமெண்டையும் பார்த்தேன் அதில் ஒரு பகுதி ரிப்பேர் ஆன ஹார்ட் டிஸ்கில் மாட்டிக் கொண்டிருக்கு. ...இதில் இருக்கும் டாக்குமென்டில் இல்லை எனவே இதை எடுத்துக் கொண்டுவிட்டேன்!. ஒவ்வொரு வேலையா வந்துதா இப்ப துளசியின் கமென்ட் போட வந்தப்ப பார்த்தேன்...விட்டதை

      கீதா

      நீக்கு
  17. கடவுள் பற்றிய கருத்துக்கள் நன்று.

    சோமாலி பயணம் 'அல்லாகு அக்பர்' நமது கடவுள் மேல் போட்டேன்" ரசனை. ஆபத்தில் கடவுளை எப்படி அழைத்தால் என்ன?

    கிளிக் கூண்டுக்கு கொசு வலை சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  18. ஏகாந்தன் அண்ணா, உங்களின் சோமாலியா என்ட்ரியை அனுபவித்து மனதில்காட்சிகளாய் ஓட்டி வாசித்தேன். Interesting and thrilling! என்ன ஒரு அனுபவம்! என்னவோ நான் தான் சோமாலியாவுல இறங்கின மாதிரி ஓர் உணர்வு.

    என்னவோ உடனே சோமாலியா பார்க்கணும் போல ஓர் உணர்வும் எழுந்தது.

    அப்போதைய ஏர்போர்ட் இப்ப ஓர்ளவு நன்றாக இருக்கு. நெட்டில் படங்கள் பார்த்தேன். ரன்வே சுத்தி கட்டிடங்கள்.

    சுவாரசியமான தொடர். தொடர்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடருங்கள் சோமாலியாவை!

      நீக்கு
    2. ஏற்கனவே படிக்கவில்லையென்றால், சொல்வனம்.காமில் எனது “உலகம் சுற்றிவந்தபோது : சோமாலியா” கட்டுரையை (அக்டோபர் 14, 2016) மேல்விவரங்களுக்காக வாசிக்க முயற்சிக்கவும் !

      நீக்கு
  19. இன்னும் கௌரவக் கொலைகள்!

    போன வருஷம் வெப்பமானா ஆண்டா அப்ப இந்த வருஷம் எப்படியோ குளிரே ரொம்ப இல்லை. ஏப்ரல் மாதம் அதன் பின் எப்படி இருக்கப் போகிறதோ!

    ஜப்பான் நாடு பாவம்! எப்பவும் நடுங்கிக்கிட்டே இருக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜப்பான் மட்டுமா...   இந்தோனேசியாவும் விட்டு விட்டு நடுங்குது...   ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கும் ஆபத்து உண்டாம்...  ஒரு வல்லுநர் வீடியோவில் சொல்லி பயமுறுத்தி வச்சிருக்கார்.

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் நானும் அதைப் பார்த்தேன்! பாருங்க அதை அவர் பயப்படாம சொல்றார் பாருங்க!!!!

      கீதா

      நீக்கு
    3. தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன...!

      நீக்கு
  20. போட்டி அறிவிப்பைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம், ஆனா எவ்வளவு வார்த்தைகள் அல்லது பக்கங்கள் னு குறிப்பிடலையே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கிருந்தததை அபப்டியே காபி பேஸ்ட் பண்ணிட்டேன்.  இந்தக் குறிப்பு அங்கேயே இல்லையோ என்னவோ...

      நீக்கு
    2. கதைக் கரு நல்ல கரு. நமக்கோ உளவியல் கொஞ்சம் புகுந்ததுண்டே அதனால யோசிச்சேன் ஆனா உள்ளதையே இன்னும் முடிக்க வழியக் காணும்...ஸோ இப்போதைக்கு இல்லை புதுசு!

      கீதா

      நீக்கு
  21. உடுமலை நாராயாணன் அவர்களின் மனசு என்ன ஒரு தங்கமான மனசு! எந்தவித ஈகோவும் இல்லாமல், தானாக வந்த வாய்ப்பை சந்தர்ப்பவாதியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல்! வாவ்!

    அந்த வரியை வாசிக்கும் போதே தெரிந்துவிட்டது உதவியாளர் மருதகாசி அவர்களாகத்தான் இருக்கும் என்று

    கீதா

    பதிலளிநீக்கு
  22. டி எம் எஸ் பற்றிய விஷயங்கள் அந்தக் கடைசி வரியை மட்டும் கொள்வோம். அவர் பேசியதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. எப்போதுமே கதாநாயகர்களை மட்டுமே கொண்டாடும் திரை யுலகம் , சமூகம். அதனிடையில் தன்னுடைய திறமையின் மீதான பெருமிதத்தில் வந்த வார்த்தைகள். எத்தனையோ படங்கள் பாடல்களால் ஓடியிருக்கின்றன. எங்குமே இந்த ஈகோ க்ளாஷ் படுத்தும் வேலை இருக்கு பாருங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்னும் பண்ண முடியாது..  அவர் பாடல்களை ரசிப்போம்.  அவ்வப்போது இப்படி படிப்பவற்றை மறப்போம்!

      நீக்கு
  23. டிகேடி துரை ராசன் பெயரை தமிழ்டிஜிட்டல் லைப்ரரி தளத்தில் பார்த்த நினைவு. ஓ அபர்ணா நாயுடு - எழுத்தாளரஆ? பெங்களூர் வாசி போல!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.  சென்னைவாசிதான்.  சி ஆர் கண்ணன்.

      நீக்கு
    2. ஓஹோஒ!! கதையின் தலைப்பைப் பார்த்ததும் அப்படி யூகிச்சேன்

      கீதா

      நீக்கு
  24. சிகரெட் - ஹிஹிஹிஹி

    தண்ணீர் என்று எழுதியிருந்தா நாம பயன்படுத்தும் தண்ணியோன்னு தூக்கிட்டுப் போய்ட்டாங்கனா!!! அதனால ஃபையர்னு வாளி அதுக்குள்ள தண்ணி அல்லது மணல் கூட இருக்குமே! ஸொ தீ அணைக்க அது என்று சொல்ல..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட்!  'அவசரப்பட்டு எடுத்துக்கிட்டு ஓடிடாதேடா...  ஆபத்துக்கு வேணும்'னு அர்த்தம் போல!!!

      நீக்கு
  25. கொட்டாவி - அப்போவே தமிழ்ப்படம்னா இப்படி ஒரு கருத்தா!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. ​//நாத்திகம் பேசும் அரசியல்வாதிகள், வீட்டில் ஒருவரை பாவமன்னிப்பு கோர கோயிலுக்கு அனுப்பி விடுகிறார்கள்//

    நான்கூட திருமதி. துர்க்கா ஸ்டாலினை சொல்றீங்களோ என்று தவறாக நினைத்து விட்டேன்.

    நல்லவேளை மாற்றிக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..   அப்படி சொல்வேனா ஜி?!  ஏற்கெனவே ஆட்டோவில்தான் வருகிறேன்!

      நீக்கு
    2. கில்லர்ஜி சிரித்துவிட்டேன்!!!! எனக்கும் காலையில் டக்கென்று தோன்றியது ஆனால் சொல்வதைத் தவிர்த்துவிட்டேன்...

      கீதா

      நீக்கு
  27. ..என் ஆன்மீக அனுபவம் என நடந்த ஒன்றைச் சொன்னால், பிறருக்கு அது நம்பிக்கையளிப்பதாக அமையாது//

    காரணம் அந்த அனுபவம் உங்களுக்கானது மட்டுமே..

    பதிலளிநீக்கு
  28. இரண்டுக்கும் நடுவில் தவிக்கும் நம் ஞானம் சிறிதாகவேனும் இறைவனை நம்பும் பக்கத்தில் சாய்ந்துதான் நிற்கிறது, பெரும்பான்மையோருக்கு.

    ஸ்ரீராம் உங்களின் முதல் பகுதிதிக்குத் தொடர்புடைய உங்கள் கவிதை அருமை. முன்பே வந்திருக்கிறதோ? முகநூலில் வாசித்திருக்கிறேனோ உங்கள் பக்கத்தில்?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் துளசி ஜி..  முன்பே வந்திருக்கிறது.  பதிவிலேயே சொல்லி இருக்கிறேனே..  முகநூலிலும் பகிர்ந்திருந்தேன் அப்போது.

      நீக்கு
  29. ஏகாந்தன் சார் எழுதியிருக்கும் சோமாலியா அனுபவங்களை வாசித்த போது மனதில் எங்கோ ஒரு வலி தோன்றத்தான் செய்கிறது. குறிப்பாக உலகப் புகழ்பெற்ற அந்தப் படம். பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகளும் இப்படித்தானே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  30. ஆண்குரல் பற்றிய செய்திகள் அரிய தகவல்கள். இளைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லப்பட்டிருந்தாலும், இப்படியும் திரை உலகில் இருந்திருக்கிறது என்று முதிய தலைமுறையில் மெதுவாக அடி எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் எனக்கும் இப்போதுதான் தெரிகிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலசமயங்களில் இப்படி இப்போது சொல்லப்படும் கருத்துகளை எந்த அளவு நம்பலாம் என்றும் தோன்றும்!

      நீக்கு
  31. உடுமலை நாராயாணன் தி கிரேட்!

    சிகரெட் ஜோக் - கடி ஜோக் என்று தமிழில் சொல்வதுண்டே அப்படி இருக்கிறது. கடி ஜோக் என்ற சொல் எல்லாம் இணையம் வந்தபிறகு தான் தெரிந்து கொண்டேன்.

    வாளியில் தண்ணீர் என்று எழுதுவதை விட, இப்படி எழுதினால்தான் அது எதற்காக வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக. சில வாளிகளில் மணலும் வைக்கப்பட்டிருக்கும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். மணலும் வைக்கப்பட்டிருக்கும். பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  32. கலப்புத் திரு௳ணங்கள் பிடிக்கவில்லை என்றால் விலகி இருக்கலாம் பெற்ற மகளைக் கொலை செய்யும் அளவுக்குப் போவதை என்ன சொல்ல?

    புதிய வருடத்தில் நிலநடுக்கங்கள் இயற்கைச் சீற்றங்கள் அதிகமாக இருக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.

    இந்த முறை தமிழ்நாட்டில் மழை தொடர்ந்துகொண்டிருக்கிறது. காலநிலை மாற்றம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலப்புத் திருமணங்கள் கடுப்புத் திருமணங்களாய் அவர்களுக்குப் படுகிறது போல!  இந்த அவலம் காலம் காலமாய் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

      நீக்கு
  33. ஸ்ரீராம், துளசியின் மற்றொருகருத்து சிகரெட் பற்றி அதோடு வேறொன்றும்.. டைப்பினேனே. வெளியிட மறந்திட்டேனா இல்லை ஒளிந்துகொண்டிருக்கா பாருங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  34. துரைசாமி என்ற பெயரில்
    நிறைய எழுத்தாளர்கள்:

    டி. துரைசாமி-- ரா.கி. ரங்கராஜனின் புனைப்பெயர்களில் ஒன்று.
    டி.கே.துரைசாமி-- நகுலன்
    அவர்களின் இயற்பெயர்

    டி.எஸ்.துரைசாமி -- கருங்குயில் குன்றத்துக் கொலை நாவலை எழுதிய பழைய எழுத்தாளர்.

    ஆனா டி.கே.டி. துரைராஜன்?

    தெரியலியே, ஸ்ரீராம்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அச்சச்சோ...  புஸ்ன்னு ஆயிடுச்சே ஜீவி ஸார்...   ஆனாலும் வேறு சில விவரங்கள் கிடைத்தது!

      நீக்கு
    2. அந்தப் பெயரில் எழுத்து சம்பந்தப்பட்ட ஒரு கறுப்பு -- சிவப்பு கட்சிக்காரர் உண்டு.
      ஆனா, ஆயிரம் ஆயிரம் பெண்கள் கதை எழுத்து நடையோ... இவங்கள்லாம் இப்படிலாம் எழுதுவாங்களான்னு சம்பந்தப்படாத நடையா இருக்கு?
      ....

      நீக்கு
    3. ஆமாம்.  நானும் கேள்விப்பட்ட மாதிரி இருக்கு.

      நீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதம்பத்தில் மற்ற பகுதிகளும் வெகு சிறப்பாக உள்ளது. சகோதரர் ஏகாந்தன் அவர்களின் சோமாலியா பயண கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கிறது. அவரின் நகைச்சுவையான கட்டுரையை ரசித்தேன். தொடர்கிறேன்.

    டி. எம். எஸ் அவர்களைப்பற்றிய விபரங்களும் அறிந்தேன். அவரின் கம்பீரமான குரல் யாருக்கும் இல்லையென்பது உறுதிதான்.

    சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் செய்தி அறை பகுதியில் சிலவற்றைதான் என் கைப்பேசியில் வாசிக்க முடிந்தது. பொடி எழுத்துக்களை பெரிதாக்க இயலவில்லை.

    சிறுகதை போட்டிபற்றிய செய்திகளுக்கு மிக்க நன்றி.

    இந்தவாரம் நகைச்சுவை பகுதிகள் அனைத்தையும் ரசித்தேன். குறிப்பாக தமிழ் திரைப்படத்தின் அன்றைய நிலையே அப்படி என்பது மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.

    இன்றைய கதம்பம் அனைத்தும் நன்றாக உள்ளது. தொகுத்து தந்த தங்களுக்கு பாராட்டுக்கள்.

    இப்போதுதான் எல்லாவற்றையும் படித்து ரசித்தேன். அதனால் கருத்து சொல்ல வருவதற்கு தாமதம் ஆகி விட்டது. மன்னிக்கவும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  36. இன்றைய பதிவு நிறைய பேசவும் , சிந்திக்கவும் வைத்து உள்ளது.
    கடவுளை நாம் உணர தான் முடியும் நாம் எப்படி எல்லாம் அவரை சிந்தித்து வைத்து உள்ளமோ அப்படி எல்லாம் நமக்கு காட்சி அளிப்பார், அப்படித்தான் சித்தர்கள், பெரியவர்கள் எல்லோருக்கும் காட்சி அளித்தாக சொல்கிறார்கள்.

    எளிமையான பக்தி அவர் பார்த்துக்குவார், மிகவும் அன்பு கொண்டவர்கள்(சரணடைந்தவ்ரகள்) எல்லாம் அவனே எல்லாம் அவனுக்கே ! என்று கவலை அற்று இருப்பார்கள்.

    நீங்கள் சொல்லுவது போல முதலாளி என்றால் நல்லது செய்தால் முதலாளி நல்லவர், வேலையை சரிவர செய்யவில்லை என்று தண்டித்தால், திட்டினால் அவர் கெட்டவர் ஆகிவிடுவார்.

    கடவுள் நிலையும் அப்படித்தான், எப்போதும் கடவுள் அற்புதங்கள் செய்து கொண்டே இருக்கவேண்டும், நல்லது மட்டுமே செய்யவேண்டும் இல்லையென்றால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? இருந்தால் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்ற கேள்வி எழும் தான் மனதில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நாம் எப்படி எல்லாம் அவரை சிந்தித்து வைத்து உள்ளமோ அப்படி எல்லாம் நமக்கு காட்சி அளிப்பார்//

      உண்மைதான் கோமதி அக்கா.  புரிகிறது.  பெரும்பாலும் மனிதன் தான் சந்தோஷமாக இருக்கும் நேரங்களை விட துன்பமாக இருக்கும் வேளைகளில் மட்டுமே கடவுளை  சிந்திக்கிறான்  அல்லது நிந்திக்கிறான்!

      நீக்கு
  37. பழைய கவிதை இன்று நீங்கள் எழுதிய பதிவுக்கு மிக பொருத்தம். அருமையாக இருக்கிறது. கடவுள் மனிதானக பிறக்க வேண்டும், என்ற கண்ணதாசன் கவிதை நினைவுக்கு வருகிறது. இன்னொரு பாடலும் ''ஆண்டவன் முகத்தைப்பார்கனும் அவனிடம் ஒண்ணே ஒண்ணு கேட்கனும்''

    இப்படி நிறைய கேள்விகள் கேட்பார்கள் என்று தான் நம் உள்ளத்தில் ஒளிந்து கொண்டு இருக்கிறார் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா..  பொருத்தமான பாடல்களை நினைவு கூர்ந்துள்ளீர்கள்.  அதிலும் அந்த ஆண்டவன் முகத்தை பார்க்கணும் பாடல்!

      நீக்கு
  38. //இருண்டிருந்த வானில் ஒளிக்கீற்றாய்த் தெரிந்தான். ஆண்டவா! ஆஃபிரிக்காவிலும் விடாமல் வந்துவிடுகிறாய்.. என்னே உன் பெருமை.. என்று நினைத்தவாறு அல்லாஹு அக்பர்! என்கிற அரேபிய/சோமாலிய வார்த்தைகளைக் கடன்வாங்கி நம்ப கடவுள்மேலே அவசரமாகப் போட்டேன்!//

    சோமாலியா பயணத்திலும் இறைவன் வந்து விட்டார். நம்பிக்கை ஒளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா.. ஹா..  நானும் நினைத்தேன்.  உண்மையில் அந்த வரியைப் படித்ததும்தான் என் பழைய கவிதை நினைவுக்கு வந்து மாற்றினேன்!

      நீக்கு
  39. மற்ற பகுதிகளும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    இன்று உங்கள் (முதல் பதிவு) கடவுளைப் பற்றிய பதிவை படித்ததும், ஏனோ நான் முன்பு விதியைப்பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. அதனால் அதை சற்று சீர்படுத்தி (இதையும் ஒரு பொருட்டாக கருதி வெளியிட வேண்டாமென இதுவரை நினைத்ததை) வெளியிட்டு விட்டேன். சகோதரி கீதாரெங்கன் அவர்கள் , சகோதரர் கில்லர்ஜி அவர்கள் என இருவர் மட்டுமே வந்து அவர்களின் கருத்துரைகளை தந்துள்ளனர். இருவருக்கும் அன்புடனான எனது நன்றி. மற்ற சகோதர சகோதரிகள் என அனைவரையும் அன்புடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் ஊக்கம் நிறைந்த கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புள்ள கமலா அக்கா...  நேற்றே படித்து கருத்திட்டு விட்டேன்.  ஆனால் உங்கள் தளத்தில் என் கமெண்ட்ஸ் ஓடி ஒளிந்து கொண்டு விடுகின்றன.  முன்னரும் சொல்லி இருக்கிறேன்.  இப்போதும் அதே கதை.  மூன்று கமெண்ட்ஸ் இட்ட நினைவு.  ஸ்பாமில் தேடிப் பார்த்தீர்களானால் இந்தப் பதிவுக்கு மட்டுமல்ல, பழைய சில பதிவுகளுக்கான என் கமெண்ட்ஸும் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும்.

      மேலும், 

      மெயில் செக் செய்யவும்.  நான் கொடுத்த மூன்று கமெண்ட்ஸ்களின் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து உங்களுக்கு மெயிலில் இந்தமுறை அனுப்பி விட்டேன் நேற்றே....

      நீக்கு
  41. 'வந்தெனக்கு அருள்பாலி'
    என்று அந்த உங்கள் கவிதை முடிந்திருக்கலாம்.

    ஆனால் வைணவர்களுக்குத் தான்
    ஜீவாத்மா -- பரமாத்மா வித்தியாசமெல்லாம். நம்முள் உறைந்து அவனே நானாகி, நாமாகி....

    'தெய்வத்தின் குரல்' அனுபவித்துப் படித்துப் பாருங்கள். பல நெஞ்சத்துக் குரல்களுக்கு பதில் கிடைக்கும்.

    இறைவனை நம்மிடமிருந்து விடுப்பட்ட தனித்ததொரு உருவாய்ப் பார்க்க பிரயாசைப்படின்...

    ஆத்மார்த்தமாக (அது படமாகத்தான் இருக்கட்டுமே) இறைவன் முன் நின்று மனம் உருக வேண்டிக் கொண்டவுடனேயே
    'நம் கஷ்டங்களை ஒப்படைச்சாச்சு; இனி கவலை இல்லை, எல்லாம் நல்லபடி இருக்கும்' என்று மனப்பாரம் இறங்கிய மாதிரி அடுத்த வேலையில் கவனம் போகிறது பாருங்கள், அங்கு தான் இறைவன்
    இருப்பதான அனுபவத்தை மனசார உணர்கிறோம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்றுக் கொள்கிறேன் ஜீவி ஸார்..  இது 2019 ன் அப்போதிருந்த தாள முடியாத மனவேதனையில் எழுதியது.  இபப்டி எழுதினாலாவது கடுப்பாகி கடவுள் வருகிறானா என்று ஒரு நப்பாசை!!  மற்றபடி ஆழியும் அவனே; ஊழியும் அவனே; செய்பவனும் அவனே; செய்யச் சொல்பவனும் அவனே; செய்யபப்டும் செயலும் அவனே....

      நீக்கு
  42. யுகபாரதி பகிர்ந்து கொண்டதான மருதகாசி பற்றிய தகவல் அச்சு அசலாக அவர் வர்ணித்த மாதிரியே நடந்திருக்காது
    என்பது என் எண்ணம்.

    அதே காலத்தில் நானும் சேலத்தில் வசித்து டி.ஆர். சுந்தரம் அவர்களின் ஆளுமை பற்றி அறிந்திருந்ததினால் இகைச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களிடம் இருந்து இந்த பதில் வரும் என்று ஓரளவு எதிர்பார்த்தேன்.  நிறையபேர் தங்கள் சொந்தக் சரக்கைக் கூட பெரியவா தலையில் ஏற்றி பகிர்வதை -  அதுவும் அவர்கள் எல்லாம் மறைந்த உடன் -நாமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்!

      நீக்கு
  43. கடவுளைப் பற்றிய கருத்துகளும், கவிதையும் சிந்தனையைத் தூண்டுகின்றன ஆயினும் அந்த நம்பிக்கையே நம் வாழ்வுக்கான ஆதாரமாக, மனதுக்கு தைரியத்தையும் அமைதியையும் தருவதாக இருக்கிறது. தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!