வெள்ளி, 5 ஜனவரி, 2024

வெள்ளி வீடியோ : காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் என்னாளும்.. ஏக்கம் உள்ளாடும்....

 ஒவ்வொரு சீசனில் ஒவ்வொரு பாடல் என்பது போல இந்தப் பாடல் திடீரென புகழ்பெற ஆரம்பித்தது.  எனக்குத் தெரிந்து முதலில் விஜய் டிவியில்தான் இந்தப் பாடல் காலை 5.50 க்கு ஒளிபரப்பாகும்.  

பாடலை இயற்றி, இசையமைத்து பாடி இருப்பவர் கங்கை அமரன்.

மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே 
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே 
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே 
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே 
வரம் தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே 
வரம் தரும் அன்னையே வணங்கினோம் உன்னையே 
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே 
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே   

ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே 
நதி காய நேராமல் நீரூற்று தாயே நன்னிலம் பார்த்து நீயே 
எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே 
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே 
என் வளமான தாயே 
பசி தாகம் காணாமல் பசியாற்று தாயே 
ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே 
இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே    -(மலர் போல)   

புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ 
புவி மீது இறை ஞானம் எமை என்றும் ஆள 
பொன் குறையாமல் வாழ 
அருளோடு பொருள் சேர்ந்து அறிவோடு ஞானம் 
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும் 
அது திரளாக வேண்டும் 
பல வீடு பல நாடு பல தேசம் என்று 
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே 
உறவோடு மகிழ்வோடு எமை மாற்று தாயே  


============================================================================================

1979 ல் வெளிவந்த அகல்விளக்கு திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்.  கங்கை அமரன் பாடலுக்கு இசை இளையராஜா.  இந்தப் பாடல் சுமனேச ரஞ்சனி ராகத்தை அடிப்படையாகக் கொண்டது என்கிறது விக்கி.  அப்படி ஒரு ராகத்தை நான் கேள்விப்பட்டதில்லை.

கே ஜே யேசுதாஸ் -  ஷைலஜா  குரல்களில் ஒலிக்கும் இந்தப் பாடல் ஒரு  சோகத்துடன் ஒலிக்கும்.

விஜயகாந்துக்கு இது இரண்டாவது படம்.   முதல் படம் இனிக்கும் இளமை.  முதல் மூன்று நான்கு படங்கள் விஜயகாந்துக்கு பாக்ஸ் ஆபீஸ் தோல்விதான்.    முன்னதாக 'என் கேள்விக்கென்ன பதில்' என்கிற படத்தில் ரஜினியின் தம்பியாக நடிக்கும் வாய்ப்பை பி. மாதவன் கொடுத்திருந்திருக்கிறார்.  இவரது பெர்ஃபார்மன்ஸ் சரியில்லை என்று ரஜினியின் சகோதரர் இவரை  கழட்டி விட்டாராம்.

இந்தப் பாடல் இளையராஜா இசையில் முதலில் கன்னடத்தில் எஸ் பி பாலசுப்ரமணியம் - எஸ் ஜானகி குரலில் 'மாது தப்படா மகா என்கிற படத்தில் இடம்பெற்று, அதனை தமிழுக்கும் கொண்டு வந்திருந்திருக்கிறார்.
கன்னடப்பாடலைக் கேட்க இங்கே க்ளிக்கி கேட்கலாம்.  அது காதல் பாடல்.  வித்தியாசமாய் இருக்கும்.    தமிழில்தான் ஏனோ ஒரு மென்மையான சோகம்   இழையோடும்.அது அந்த ராகத்தின் குணமோ என்னவோ!

ஆரம்ப ஹம்மிங் முடிந்ததும் இளையராஜா கொடுக்கும் ஒரு இசை..  அதைத்தவிர பாடல் முழுவதும் அவரின் பின்னணி இசை இளையராஜா இளையராஜாதான் என்று சொல்லும்!  ஆண்குரல் முடிக்கும்போதே பெண்குரல் ஓவர்லாப் ஆகி தொடங்கும்.  விஜயகாந்த எவ்வளவு ஒல்லியாக இருக்கிறார் பாருங்கள்..

ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏதோ...

ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏதோ

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும் ம்... ம்...
வான் வெளி எங்கும் என் காதல் கீதம்
வாழும் நாள் வேண்டும் ம்... ம்...
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும் சேரும் நாள் வேண்டும்

ஏதோ நினைவுகள்
கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே....

நாடிய சொந்தம் நான் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம் ம்... ம்...
நாளொரு வண்ணம் நான் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம் ம்... ம்...
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் என்னாளும்.. ஏக்கம் உள்ளாடும்....
ஏதோ......
நினைவுகள்...
கனவுகள்.....
மனதிலே...
மலருதே...
காவேரி ஊற்றாகவே....  காற்றோடு காற்றாகவே...

57 கருத்துகள்:

  1. முதல் பாட்டு கேட்டிருக்கிறேன்.
    'எளியோரை மகிழ்வாக்க வழிகாட்டு தாயே --
    வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே' --
    மனத்தில் ஆழப்பதிந்து நெகிழ்ச்சியூட்டிய வரிகள்.
    'தாயே..தாயே' என்று விளித்துப் பாடுவதால் ஒருகால் பாண்டிட்சேரி அன்னையைக் குதித்த பாடலாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  2. ரஜினியின் சகோதரர் கழட்டி விட்டாராம் --
    ஒரு பட ஆக்கம் என்றால் யார் யாரெல்லாம் தலையிடுகிறார்கள், பாருங்கள். ஒருகால் பட பாகஸ்தராக இருந்திருப்பாரோ, அவர்? .. அரசியலில் மட்டுமல்ல, எல்லாத் துறைகளிலும் சொந்தங்கள் சேர்ந்தே வளப்பமடைந்திருக்கிறார்கள் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எப்போதும் சொல்வது போல அந்தத் தகவல் எந்த அளவு உண்மையோ...

      நீக்கு
  3. கன்னடப்பாடலைக் கிளிக்கிப் பார்க்க ஆசை கொண்டேன்.
    வழியில்லாது போயிற்று.

    பதிலளிநீக்கு
  4. மு.வ--வின் பெற்றமனம் திரைப்படமாகிதிருப்பது தெரியும்.
    அகல்விளக்கு என்றதும் வரதராசனார் நினைவுக்கு வந்தார்.
    கன்னடத்திலிருந்து தமிழிற்கு என்பதினால் மு.வ.-வின் கதையாக இருக்காது என்று தீர்மானமாயிற்று.

    பதிலளிநீக்கு
  5. தனிக்கலரில் சுட்டி இல்லாததால் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.
    ஸாரி.. தட்டிக் கேட்டேன். ஆ! அனுபவம் புதுமை.
    'அவரிடம்' கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...  தனி கலர் கொடுத்து எடுபடவில்லை!  அதனால்தான் ஃபான்ட் சைஸ் பெரிதாக வைத்தேன்!

      நீக்கு
    2. மறுபடி சென்று பார்த்தபோது மற்ற எழுத்துகள் நீலத்திலும் இது கறுப்பிலும் இருக்கிறதே..  தனி கலர்தானே?

      நீக்கு
    3. 'உன் கண் உன்னை ஏமாற்றுனால்... டடடா.. டடடா.. டட்டட்டா' என்று பழைய சினிமாப் பாடல் ஒன்று உண்டு, தெரியுமோ??...

      நீக்கு
  6. 'ஏதோ நினைவுகள்'
    பல தடவைகள் தேனாய் வந்து பாய்ந்து பழகிப்போன பாடல்.
    'மாரினில் நானும் மாறாமல் சேர்வது' தான் என்னவென்று தெரியவில்லை. யாரையாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவளும் மறுக்காமல், அவனும் வேறு யாரையும் நாடாமல் என்று அர்த்தம் கொள்ளலாம்.

      நீக்கு
    2. இந்தப் பாடலைப் பல முறை ஹாஸ்டல் வாழ்க்கையின்போது கேட்டிருக்கிறேன். அது ஒரு கனாக் காலம்.

      மார்பினில் நானும் மாறாமல் தேடும் தாளம் தான் வேண்டும் என்பதுதான் பாடல் வரி. இவளின் நினைவில் அவன் மார்பு ரிதமிக் ஆகத் துடிப்பதை இவள் உணர்கிறாள். அதனால்தானோ என்னவோ தூக்கிய அவளை உடலோடு ஒட்டி கீழிறக்க ரொம்ப நேரமாவதுபோல ஸ்லோ மோஷனில் காண்பிக்கிறார்கள்.

      நீக்கு
    3. அவனும் 'அந்த நேரத்தில்' வேறு யாரையும்.. என்று கொள்ளலாம். ஏன்னா, ஆம்பிளைங்களைத் தான் இந்த விஷயத்தில் மாற்றுப் பார்வை பார்க்கிறது
      தொன்றுத் தொட்ட வழக்கமா இருக்கு..

      நீக்கு
    4. நெல்லை சொல்லி இருக்கும் வரிகள் பொருத்தமாக இருக்கும் போல தெரிகிறது. தூக்கி விட்டு ஸ்லோ மோஷனில் இயக்குவது நல்ல கற்பனை!

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவருக்கும் கடவுள் துணையாக இருக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. ஒரு 'ஒருமாதிரி'யான பின்னூட்டம் மட்டும் வெளியாகவில்லை போலிருக்கு.. ஹி..ஹி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்னூட்டம் எதுவும் மிஸ் ஆகவில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. ஆமாம், ஸ்ரீராம்.
      சேர்ந்திடக் கண்டேன்.

      நீக்கு
    3. ஆமாம், ஸ்ரீராம்.
      சேர்ந்திடக் கண்டேன்.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    முதல் பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்போதுதான் கேட்கிறேன்.

    இரண்டாவது பாடல் அடிக்கடி வானொலியில் கேட்டிருக்கிறேன். இதுவரை ஏதோ சோகப் பாடல் என்றுதான் நினைத்திருந்தேன். வரிகளும் அதன் ராகமும் அப்படித்தான் தோன்றும். இந்தப் படத்தை பற்றி அறிந்ததில்லை. தகவல்களுக்கு நன்றி. இதன் கன்னட பாடலும் கேட்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல் என்றாலே சோகம்தானோ என்னவோ!  ஹா..  ஹா.. ஹா..   நன்றி கமலா அக்கா.

      நீக்கு
    2. ஶ்ரீராம் ஏன் இப்படி எழுதியிருக்கார்? காதலின் முடிவு பிரிவு அல்லது திருமணம். அல்லது காதலிக்கும்போது வீட்டிற்குத் தெரியாமல் சுற்றிவிட்டு, அன்று பிரிவதால் ஏற்படும் சோகம். ஆக மொத்தம் எந்த முடிவு என்றாலும் சோகம் என்று ஶ்ரீராம் நினைக்கிறாரா?

      நீக்கு
    3. // ஶ்ரீராம் ஏன் இப்படி எழுதியிருக்கார்? //

      சும்மா ஜாலிக்கு எழுதினாலும் நெல்லை..  அதில் கொஞ்சம் உண்மையும் ஊடாடுகிறது!  காதல் மட்டுமல்ல எல்லா திருமணமும் பொறுமை என்னும் ஊஞ்சலில்தான் ஆடுகிறது!

      நீக்கு
  11. கன்னடப் பாடலின் வரிகள் இன்னும் நன்றாக இருக்கிறது. (புரிந்தவரை). காதல் காட்சியும் வரிகளும் இன்னும் டீசன்டாக எடுக்கப்பட்டிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழன் என்னிக்குமே எதிலுமே மேலோட்டமானவனில்லை என்பதைக் காலம் தொடர்ந்து கணித்துக் கொண்டு தான் இருக்கிறது.

      நீக்கு
    2. இங்கு தமிழ், கன்னடம் முக்கியமில்லை! அதாவது மொழி பெரிதில்லை. இசை!

      நீக்கு
  12. முதல் பாடல் கேட்டதாக நினைவு இல்லை.

    இரண்டாவது பாடல் பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாடல் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தொலைக்காட்சியில் அறிமுகமான பாடல் ஜி.

      நீக்கு
  13. ஸ்ரீராம், முதல் பாடல் நிறைய கேட்டிருக்கிறேன் . அதன் வரிகள் ரொம்ப பிடிக்கும் . கங்கை அமரன் பாண்டிச்சேரி அன்னையின் பக்தராக ஆனபின் எழுதிய பாடல் .ரொம்ப சிம்பிள் பாடல் வரிகள் எல்லாம் சிம்பிள் .எல்லோருக்கும் ரீச் ஆகும் வகையில் இசை அமைப்பு

    கீதா

    பதிலளிநீக்கு
  14. இரண்டாவது பாட்டு ரொம்ப ரொம்ப ரொம்பப் பிடித்த பாட்டு, ஸ்‌ரீராம். சுமனேச ரஞ்சனி ஆமாம். இந்தப் பாட்டு முதன் முதல்ல கேட்டப்ப ரொம்ப ரொம்பக் கவர்ந்து ஆஹா என்ன ஒரு ராகம்பா....என்ன ராகம்னு டக்குனு ராகம் கண்டுபிடிக்க முடியலை. ஆனா சந்திரகௌன்ஸ் சில வரிகளில் எட்டிப் பார்க்கிறதே ஆனா அந்த ராகம் இல்லை....ஆனா அப்ப தெரியவில்லை. ஆனா இதே போல நம்ம எம் எஸ் வி த கிரேட் கூட போட்டிருக்கிறாரே - ஒரு நாள் இரவு -

    நம்ம கர்னாட்டிகா சகோதரர்கள் சசிகிரண் மற்றும் அவர் கஸின் கணேஷ் சேர்ந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மேல் பாடிய ஒரு பாடல் "பார்த்தசாரதி அவன் பாதமே கதி" மதுகௌன்ஸ் என்று தெரிந்து கொண்டு மீண்டும் அட பழகிய ராகம் போல் இருக்கிறதே என்று நான் கேட்டு ஏகலைவியாகக் கற்றுக் கொண்டேன்.
    அப்ப ஃபெமிலியர் ராகம் - ஏதோ நினைவுகள்....கனவுகள் (எனக்கும் பொருந்திருச்சோ) தேடினேன் அப்ப தெரிந்து கொண்டேன்
    சுமனேஸ ரஞ்சனி அல்லது சமுத்திரப்பிரியா என்று இங்கு சொல்லப்படும் ராகம் ஹிந்துஸ்தானி இசையில் மதுகௌன்ஸ் என்று. அப்பதான் நம்ம சுத்த தன்யாசி ராகத்தின் ஸ்வரத்தில் ம 1 அதை ம 2 ஆக்கிப் பாடினா இந்த ராகம் என்பதும் தெரிந்து கொண்டேன்.

    சங்கீதத்தில் இப்படி ராக ஆராய்ச்சி, ஸ்வரங்கள் ஆராய்ச்சி என்று மகனோடு சேர்ந்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு அது ஒரு காலம் அவன் வீணையில் எடுத்து வாசிப்பான் நான் ராகம் ஆரோகணம் அவரோகணம் சொல்ல சொல்ல ....

    இப்ப அவனும் இங்கு இல்லை ரொம்ப பிஸி...இடையில் ரெண்டு வருஷம் முன்ன கூட பாட்டு டிஸ்கஷன் ரொம்ப நேரம் நீண்டதுண்டு ஃபோனில் கொரோனா சமயத்தில். இப்ப இல்லை. மீண்டும் தொடங்குவோமான்னு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

    இன்னும் இளையராஜா பாடல்கள் இந்த ராகத்தில் உண்டு. டக்கென்று வரிகள் கிடைக்கவில்லை படமும் தெரியாதே. நினைவுக்குக் கொண்டு வந்து இங்கு சொல்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செம கமெண்ட் கீதா..  சுத்தி வளைச்சு எல்லாத்தையும் கவர் செய்து அடிச்சிருக்கீங்க...   ஒருமுறை கண்ணா சுகமா பாட்டு கேட்டு விட்டேன்!

      நீக்கு
  15. ஆராய்ச்சி செஞ்சப்ப எழுதி வைத்திருந்தேன். தேடி எடுத்து நினைவுக்கு வந்துவிட்டது - நலம் வாழ எந்நாளும் வாழ்த்துகள், ஓ வானம்பாடி (இதில் இளையராஜா மெட்டு போடுவார்....சிவாஜி படம் போல!!! ஓ வானம்பாடி மட்டும் அந்த இரு வார்த்தைகள் மட்டும்தான் தெரியும் அதை வைச்சு தேடினப்பதான் இந்த சீன் வந்து இப்படி ஒரு படமா என்று தெரிந்து கொண்டேன். லிங்க் தரேன் பார்த்துட்டு சிரிப்பீங்க ஸ்ரீராம்.
    https://www.youtube.com/watch?v=F1PAXbl8hiA

    கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி....
    உன்னை எதிர்பார்த்தேன் - இந்தப் பாட்டுல முதல் சரணம் ஸ்வர்ணலதான்னு நினைக்கிறேன். இரண்டாவது சரணத்துல நிலா என்ட்ரி....செமையா இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணா சுகமாவாவது அட ஆமாம்னு சொல்ல வைக்குது.  உன்னை எதிர்பார்த்தேன் ஆச்சர்யம்.

      நீக்கு
    2. எம் எஸ் வி செமையா போட்டிருக்கிறார் அந்தப் பாட்டு. ஏதோ நினைவுக்ள் கேட்டப்ப க சு கி சு அதுதான் நினைவுக்கு வந்தது. அது போல இருக்கே என்று. அது சந்திரகௌன்ஸ் நு நினைச்சிருந்த வேளையில்...

      உன்னை எதிர்பார்த்தேன் பாட்டு ரொம்ப சொல்ல முடியாது...கொஞ்சம் அது அதைச் சார்ந்ததுன்னு சொல்லலாம். ரொம்ப அத்தெண்டிக்கானா ஒரு நாள், ஏதோ நினைவுகள்....கண்ணம்மா, ஓ வானம்பாடி ....

      கர்நாடிகா சகோதரர்கள் பாடின தமிழ் கிருதி பார்த்தசாரதின்னு தொடங்கும் ஆனா உன் பாதமே கதின்னு வரி இல்லை..கற்றுக் கொண்ட பாடல் ஆனா மறந்துவிட்டது. அது எழுதி வைச்சிருந்ததை காணலை. நெட்டிலும் கிடைக்கலை. ரொம்ப நல்லாருக்கும்.

      கீதா

      நீக்கு
    3. எனக்கு ஆச்சரியமான விஷயம், நான் அறிந்தவரை எம் எஸ் விக்கு இயற்கையாக அமைந்த சங்கீத ஞானம். இவ்வளவு அழகான ராகத்தில் ஒரு நாள் இரவு....நான் ரொம்ப வியந்த விஷயம். அது போல அவர் அமைத்த பல ராகங்கள். அவர் தனக்கு ராகம் பற்றித் தெரியாது என்று சொல்வார் என்று வாசித்ததுண்டு . அதிசய ராகம் பாடலில் முதல் சரணம் வரை உள்ள ராகம் மகதி - பாலமுரளி உருவாக்கிய ராகத்தை அவரே, எம் எஸ் வி அந்தப் படத்தின் கதைக்கேற்ப பாடலின் ராகங்களும் முரணாக இருக்க வேண்டும்னு விரும்பியதால் தான் உருவாக்கிய மகதியை கொடுத்ததாக அவரும், எம் எஸ் வியும் சொல்லியிருக்கிறார்கள். நிஜமாகவே எந்தவித பெரிய பின்புலமும் இல்லாமல் எப்படி அழகான ராகங்களைக் கையாண்டார் என்பது ஆச்சரியமான விஷயம்.

      கீதா

      நீக்கு
    4. ஆம். அதிசய ராகம் பாடல் சரித்திரம் தெரியும். எம் எஸ் வி யின் வீச்சு தனி.

      நீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. முதல் பாடல் அடிக்கடி கேட்கும் பாடல்.
    காலையில் விஜய் டி.வியில் கேட்பேன் முன்பு.

    என் மலர்கள் பதிவில் போட நினைத்து போடவில்லை என்றேன். இன்று உங்கள் தளத்தில் கேட்டு விட்டேன்.

    எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நடந்த புதுவருட விழாவில் மெல்லிசை குழுவிடம் விரும்பி கேட்டார்கள் இந்த பாட்டை. விஜயகாந்துக்கு அஞ்சலி போல அவர்படப்பாடல்கள் பாடினார்கள். அருமையான இனிமையான பாடல் இந்த பாடல்.

    இந்த படம் பார்த்தது இல்லை. ஷோபாவும் விஜயகாந்தும் நடித்து இருக்கிறார்கள் பார்க்க வேண்டும். ரேடியோவில் கேட்ட போது சோக பாடலோ என்று நினைத்தேன், காணொளி மகிழ்ச்சியாக பாடும் பாடல் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அங்கு கமெண்ட் போட்ட உடன்தான் இந்த வாரம் இங்கு அந்தப் பாடலைப் பகிர்ந்து விடலாம் என்று முடிவு செய்தேன்!

      நீக்கு

  18. கன்னட பாடல் கேட்டேன்.(சராதாவின் கனவு பாடல்.) இனிமையான பாடல்தான்.

    //தமிழில்தான் ஏனோ ஒரு மென்மையான சோகம் இழையோடும்.//

    ஆமாம், நீங்கள் சொல்வது போல தமிழ் பாட்டில் தான் சோகம் இழையோடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெம்போ தான் காரணம் என்று கீதா ரெங்கன் சொல்லி இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.

      நீக்கு
  19. ஸ்ரீராம் கன்னடப் பாட்டும் கேட்டேன். எனக்கு அதில் எஸ்பிபி , ஜானகி பாடுவது கொஞ்சம் டெம்போ கூடுதல் என்பதால் சந்தோஷமா இருக்கோ..எக்ஸ்பிரஷனும்......ஆனால் ஆரம்பத்தில் வரும் இசை ஈர்க்கவில்லை .

    தமிழ்ல் ஆரம்ப ஹம்மிங்க் நன்றாக இருக்கும்... எனக்கு இரண்டுமே பிடித்தது. ஒரு வேளை தாஸேட்டன் குரலினால் அப்படி சோகம் தெரியுதோ! தமிழில் ஜானகி குரல் வித்தியாசமாக இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னொரு காரணம் தமிழ்ப்பாடல்தான் நாம் முதலில் கேட்டோம்.  இப்போதான் கன்னடப் பாடல் கேட்கிறோம்.  பர்ஸ்ட் இஸ் தி பெஸ்ட் இல்லையா?!

      நீக்கு
    2. ஆமாம் அதுவும் சொல்ல நினைத்து விட்டுப் போன ஒன்று. அதே ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன்...

      கீதா

      நீக்கு
  20. முதல் பாடல் கேட்டதில்லை.

    இரண்டாவது கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!