செவ்வாய், 16 ஜனவரி, 2024

சிறுகதை : அப்பாவின் சட்டை - புவனா சந்திரசேகர்

 அப்பாவின் சட்டை

புவனா சந்திரசேகரன்.

சதீஷுக்கு வேலை கிடைத்துவிட்டது. நாளை காலையில் வேலையில் சேரப்போகிறான். பயங்கர சந்தோஷத்துடன் வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தான்.  அடுத்த நாள் போட்டுக் கொள்ள டிரஸ்ஸைத் தேர்ந்தெடுத்து அதைத் தன் மேலே வைத்து, அழகு பார்த்துக் கொண்டிருந்த போது, அப்பா, "சதீஷ், சதீஷ்"என்று குரல் கொடுத்தார்.

"இதோ வந்துட்டேம்பா" என்று சுறுசுறுப்பாக அவர் முன்னே சென்று நின்றான் அந்த சத்புத்திரன்.

"சதீஷ், பக்கத்து வீட்டு அங்கிளை ஹாஸ்பிடலில் சேத்திருந்தாங்க இல்லையா?  இப்போது தான் கொஞ்ச நேரம் முன்னால இறந்து போயிட்டாராம். ஃபோன் வந்தது. ஆன்ட்டி மட்டும் ஹாஸ்பிடலில் தனியா இருக்காங்க. நீ என்ன பண்ணு, உடனே கிளம்பி ஏர்போர்ட்டுக்குப் போ. அவங்க பையன் ஸ்ரீதர் இன்னைக்கு வரான்.  அவனோட ஃப்ளைட் டீடெயில்ஸ் உனக்கு வாட்ஸப் பண்ணறேன்.  நீ அவனைக் கூட்டிட்டு நேரே காவேரி ஹாஸ்பிடலுக்கு வா. நான் இங்கே கொஞ்சம் ஏற்பாடு செஞ்சுட்டு, அங்கே வரேன். இந்த சமயத்தில் நம்ம உதவி அவங்களுக்குத் தேவை" என்று சொல்லி விட்டு மளமளவென்று காரியத்தில் இறங்கினார் அப்பா.

அவர் எப்போதும் அப்படித் தான். சரியான நேரத்தில் தேவையான உதவிகளை  அலட்டிக் கொள்ளாமல் செய்வதில் கெட்டிக்காரர்.

சதீஷுக்கு எப்போதும் அப்பாவை நினைத்துப் பெருமையாக இருக்கும்.

சதீஷ், சென்னை விமான நிலையத்தை அடைந்தான்.  அமெரிக்காவில் ஸியாட்டிலில் வேலை பார்க்கும் பக்கத்து வீட்டு ஸ்ரீதர் வந்து இறங்கினான்.

அவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை சதீஷ் அடைந்தபோது, அப்பாவும் அங்கே இருந்தார்.

தேவையான காகிதங்களில் கையெழுத்து போட்டு விட்டு மருத்துவமனை ஆம்புலன்ஸில் இறந்தவருடைய உடல் ஏற்றப்பட்டது.  வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, நடு ஹாலில் கிடத்தப்பட்டது.

"அங்கிள், என்ன பண்ணனும்? எனக்கு ஒண்ணுமே ஓடலை. கெயிட் பண்ணறீங்களா? " என்று பரிதாபமாக ஸ்ரீதர் கேட்டான்.

"கவலைப்படாதே ஸ்ரீதர், இறுதிக் காரியங்களை முறையா அரேஞ்ச் பண்ணவே இப்பல்லாம் ஒரு ஏஜென்சி இருக்கு. அவங்களுக்கு ஏற்கனவே நான் ஃபோனில் சொல்லிட்டேன். இதோ வந்துருவாங்க. இன்னைக்கே முடிச்சுடலாமா?  எதுத்தாப்பல கோயில் இருக்கு. அதுனால சீக்கிரம் முடிக்கணும்" என்று அப்பா சொல்ல, அவனும் தலையாட்டினான். பாவம், ஸ்ரீதரால் நிம்மதியாக அழக்கூட முடியவில்லை. ஒரே மகனான அவன் மீது பொறுப்புகளும் வேலைகளும் குவிந்தன.

அப்போது தான் வாசலில் அந்த வேன் வந்து நின்றது. வேனை ஓட்டி வந்தவர் ஒரு கசங்கிய ஜிப்பா போட்டிருந்தார், பழைய, நிறம் மங்கிய வேட்டியொன்றைக் கட்டியிருந்தார். அவருடன் இறுதிக் காரியங்களைச் செய்ய ஒரு அய்யரும், சில எடுபிடி ஆட்களும் வந்தனர்.

ஏணியும், கயிறும் கொண்டு வந்திருந்தார்கள். உடலை வைத்துக் கட்டினார்கள்.

இறந்தவரின் உடலின் தலைமாட்டில் விளக்கை ஏற்றி வைத்தார்கள். தேங்காய் ஒன்றை உடைத்து வைத்தார்கள். அய்யர், கர்ண மந்திரம் சொல்லத் தொடங்கினார்.

உடலை அதற்குள் குளிப்பாட்டி ஆடை உடுத்தி விட்டார்கள். நெற்றியில் காசு வைக்கப்பட்டது. வாய்க்கரிசி போட்டு வழியனுப்பினார்கள்.

"ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் 
பேரினை நீக்கிப் பிணமென்று
பேரிட்டுச் சூரையங் காட்டிடைக்
கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்களளே!"
( திருமூலரின் திருமந்திரம்)

எல்லாக் காரியங்களும் வெகு நேர்த்தியாகச் கையாளப்பட்டன. அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டி, வேலைகளைச் செய்து முடித்தது அந்தக் குழு. அந்தப் பழைய வேட்டிக்காரர் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்த்தார். 

எந்த இடத்திலும் எந்தத் தடங்கலும் வராமல் சரியானபடி கையாண்டார்.

"பரவாயில்லை. எல்லாத்துக்கும் இப்போ ஆள் கிடைக்குது. பணத்தைத் தூக்கிப் போட்டா எந்த வேலை செய்யவும் ஆளுங்க தயாரா வந்துடறாங்க.  எல்லாம் நல்லா மேனேஜ் பண்ணிடறாங்க, நமக்கும் ஈஸியா இருக்குன்னு கூப்பிட்டுடறோம். அப்புறம் இவ்வளவு வேணும், அவ்வளவு வேண்ம்னு தகராறு செய்யப் போறாங்க. கட் அன்ட் ரைட்டா இப்பவே  பேசிடுங்க. தகராறு பண்ணப் போறாங்க, ஜாக்கிரதை.  பணத்துக்காக என்ன வேணாலும் செய்யவே ஒரு கூட்டம் இருக்கு" என்று ஒருத்தர் சத்தமாகப் பேசியது எல்லோர் செவிகளிலும் தெளிவாக விழுந்தது.

அந்தப் பழைய வேட்டிக்கார மேனேஜர்,  அப்படிப் பேசியவரை வருத்தத்துடன் பார்த்தார்.

"என்ன தப்பாச் சொல்லிட்டேன்னு எல்லாரும் என்னை மொறைக்கறீங்க?  
இதையெல்லாம் ஒரு தொழிலாச் செஞ்சு பொழைக்கணுமா? காலம் கெட்டுப் போச்சு" என்று அவர் மேலும் சீறினார்.

"எந்த இடத்தில் வந்து என்ன பேசறீங்க? ஸ்ரீதர் இப்போது தான் வெளிநாட்டில் இருந்து வந்து இறங்கிருக்கான். எல்லாத்துக்கும் தனியாளா அவன் அலைஞ்சிருந்தான்னா, எவ்வளவு நேரம் ஆயிருக்கும்?  டெத் சர்ட்டிஃபிகேட் காமிச்சு மயானத்தில் எரிக்க பெர்மிஷன் வாங்கணும். அதுக்கு வேணுங்கற சாமான் எல்லாம் வாங்கிப் போடணும். வெட்டியான் கிட்டப் பேசி இடத்தை ரெடி பண்ணி வைக்கணும். சிதை மூட்ட விறகு, சூடம், எரு வராட்டி எல்லாம் வாங்கிக் கொடுக்கணும்.  ஒரே ஒரு ஃபோன் கால். அதை மட்டும் செஞ்சுட்டு, அலுங்காமக் குலுங்காம நாம வந்துருக்கோம். அத்தனை வேலைகளையும் அவங்க பண்ணி இருக்காங்க.  அவங்களுக்கு நன்றி சொல்லாம இப்படிப் பேசறது நியாயமா? என்னைப் பொருத்தவரை அவங்க எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்கலாம் " என்று சதீஷின் அப்பா சத்தம் போட்டதும்தான் அவர் அடங்கினார்.

"நாங்க அப்படி அநியாயமாக் கேக்க மாட்டோம். நியாயமா எவ்வளவு செலவாகுதோ அதுக்குத் தான் பில் போடுவோம். இந்த சமயத்தில் ஏற்கனவே துக்கப்பட்டு நிக்கறவங்க கிட்டப் பேராசை பிடிச்சு அநியாயமாப் பணம் கேக்கறது மனிதாபிமானமான செயலே இல்லை" என்று அந்த மேனேஜர் கை கூப்பினார்.

அவர் குரலே உடைந்து போயிருந்தது. சதீஷுக்கு அவர் பேசியதைக் கேட்டு வருத்தமாக இருந்தது.

அடுத்த நாள் காலையில் சதீஷ் சந்தோஷமாக வேலைக்குக் கிளம்பினான்.  ஓ. எம். ஆர் பகுதியில் அட்டகாசமாக சிரித்துக் கொண்டு நிற்கும் ஐ. டி. வளாகம் ஒன்றில் நுழைந்தான் சதீஷ்.

"ஹாய் ப்ரோ, வெல்கம், வெல்கம்"  என்று அவனை வரவேற்றது அங்கிருந்த பட்டாம்பூச்சி இளைஞர் கூட்டம். எந்த செயற்கைத்தனமும் இல்லாமல் இயல்பாகப் பேசி நட்போடு பழகும் அந்த உலகம் அவனை அள்ளி அணைத்துத் தங்களுக்குள் சேர்த்துக் கொண்டது.

வேலை கற்றுக் கொள்ள ஆரம்பித்தான். புரிந்து கொண்டு செய்ய ஆரம்பிப்பதற்குள் அன்றைய நாளே முடிந்திருந்தது. இண்டர்காம் ஒலித்தது.

"யூ ஆர் தி நியூ ரெக்ரூட், சதீஷ், ரைட்? கம் அன்ட் மீட் மி இன் மை கேபின். ஐ 
ஆம் வெயிட்டிங் ஃபார் யூ" என்று அவனுடைய பாஸின் குரல் ஒலித்தது.

காலையில் இருந்து அவர் பிஸியாக இருந்ததால் அவரை மட்டும் சதீஷால் சந்திக்க முடியவில்லை. மீதி அனைவரையும் பார்த்துப் பேசினான். அன்று அவருக்கு முக்கியமான மீட்டிங்குகள் நிறைய இருந்ததால், அவருக்கு சதீஷைப் பார்த்துப் பேச நேரம் கிடைக்கவில்லை.

ஒருவிதமான தயக்கத்துடன் தனக்கு எதிரே இருந்த கேபினுக்குள் நுழைந்தான்  சதீஷ். எதிரில் சிரித்தபடி அமர்ந்திருந்த பாஸைப் பார்த்து அப்படியே உறைந்து போனான்.

'இவரா? ஆண்டவனே! நம்ப முடியவில்லையே! ' என்று யோசித்தபடி தன்னெதிரே அமர்ந்திருந்தவரைக் கண் கொட்டாமல் பார்த்தான் சதீஷ்.  வாயில் வார்த்தைகள் எழும்பவில்லை.

"வெல்கம் மிஸ்டர்.சதீஷ். ஐ ஆம் ஆனந்த். யுவர் டீம் லீடர் அன்ட் ஓவர் ஆல் இன் சார்ஜ் ஹியர். முதல் நாள் வேலை அனுபவம் எப்படி இருந்தது? ஐ ஹோப் யு என்ஜாய்ட் யுவர் டே. ஏதாவது உதவி தேவைன்னாத் தயங்காம வந்து கேக்கலாம்.  பாஸ், ஸபார்டினேட் கல்ச்சர்லாம் இங்கு கிடையாது " என்று ஆங்கிலமும், தமிழும் கலந்து கட்டிப் பேசியவரை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டேயிருந்தான் சதீஷ்.

"என்ன ஆச்சு? ஏன் இப்படி பதிலே பேசாம என்னையே பாக்கறீங்க சதீஷ்?  மிஸ்டர்லாம் இனி வேணாம். நாம இனிமேல் கலீக்ஸ். நீங்களும் என்னை ஆனந்த்னே கூப்பிடலாம்"; என்று சொன்னபடி அவன் முகத்தைப் பார்த்த ஆனந்துக்கு ஏதோ புரிவது போல இருந்தது. 
"வெயிட், உங்களை நேத்து அந்த மயானத்தில் பாத்த ஞாபகம் இருக்கே?"

"ஆமாம், நானும் உங்களைப் பாத்தேன். அதுனாலதான் ஸ்டன் ஆகி நிக்கறேன்.  இவ்வளவு நல்ல ஆஃபிஸில் பெரிய லெவலில் வேலை பாக்கற நீங்க எதுக்கு இந்த மாதிரி வேலை பாக்கணும்? என்ன காரணம்னு யோசிச்சேன்"

"ஓகே, நீங்க கேக்கறதுனால சொல்லறேன். பட் இதைப் பத்தி இனிமே யார் 
கிட்டயும், ஏன் என் கிட்டயும் கூட டிஸ்கஸ் பண்ணவேணாம். இது என் 
மனசுக்குள்ள நான் பூட்டி வச்சிருக்கிற பெர்ஸனலான ஒரு விஷயம்.

என்னோட அப்பா, இந்த வேலை செஞ்சுதான் என்னை வளத்தாரு. இதில வர சொற்ப வருமானத்தை வச்சுத்தான் என்னைப் படிக்க வச்சாரு. நான் படிச்சு முடிச்சு வேலையில் சேர்ந்து முதல் மாத சம்பளம் வாங்கிட்டு வீட்டுக்குப் போகும் போது அவர் உயிரோடு இல்லை" என்று சொல்லும் போது ஆனந்தின் குரல் உடைந்து போயிருந்தது.

தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஒரு டம்ளரில் இருந்த தண்ணீரைக் குடித்தார். மேலே பேச ஆரம்பித்தார்.

"அவர் எனக்குன்னு விட்டுப் போனது ஒரு பழைய வேட்டியும் ஒரு ஜிப்பாவும்தான். 
அவர் கிட்டயிருந்து எனக்குக் கிடைச்ச சொத்து அந்த உடை மட்டும்தான்.  அவரோட இறுதிக் காரியங்களில் கலந்துக்க எத்தனை பேர் வந்திருந்தாங்க தெரியுமா? அத்தனை மனிதர்களின் அன்பையும், மரியாதையையும் சம்பாதிச்சு வச்சிருந்தார் அவர்.

அவர் உயிரோடு இருந்தபோது ஒரு மகனா எதுவுமே என்னால செய்ய முடியலை.  அதுனால என்னால முடிஞ்ச போதெல்லாம் அவரோட வேட்டி, ஜிப்பாவைப் போட்டுக்கிட்டு அவரை மாதிரி வாழ முயற்சி செய்யறேன்.  சின்னக் குழந்தைகள் அப்பாவோட சட்டையைப் போட்டுக்கறதையும், பேனாவால மீசை வரைஞ்சுக்கறதையும், அப்பாவோட செருப்பை மாட்டிக்கிட்டு நடக்கறதையும் நாம பாக்கறோம் இல்லையா? அதே மாதிரி தான் இதுவும்.  என்னோட விடுமுறை நாட்களில் என் அப்பாவோட சட்டையைப் போட்டுக்கிட்டு அவரை மாதிரி வாழ நான் முயற்சி செய்யறேன். நிச்சயமா, மேலே இருந்து அவர் பாத்து சந்தோஷப் படுவார்னு நான் நம்பறேன். இப்போ புரியுதா?" என்று கேட்டு விட்டு, சதீஷைப் பார்த்து ஆனந்த் புன்னகைத்தார்.

"இது ஜாதி, மதம், இனம் எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாப் பிரிவினருக்கும் நான் செய்யறேன் உதவி. லீவு நாட்களில் நானே செய்யறேன். மத்த நாட்களில் என்னோட டீம் மேனேஜ் பண்ணுது. இதில் கிடைக்கற வருமானத்தை, அனாதைப் பிணங்களை முறைப்படி எரிக்கவோ, புதைக்கவோ செலவழிக்கிறேன்" என்று சொல்லி முடித்தார் ஆனந்த்.

"நானும் எங்கப்பாவோட சட்டையைப் போட்டுக்கிட்டு நடக்க முயற்சி செய்யறேன் ஆனந்த்"  என்று அவருக்கு உறுதியளித்து விட்டுப் புன்னகையுடன் எழுந்தான் சதீஷ்.

இரண்டு நாட்களில் வாழ்க்கையின் முக்கியமான பாடங்களைக் கற்று விட்ட  
மனநிறைவு சதீஷுக்குக் கிடைத்தது.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

இன்றைய சிறுகதையை எழுதி இருக்கும் திருமதி புவனா சந்திரசேகர் நம் கோமதி அக்காவின் தோழி.  அக்கா சொல்லிதான் அவர் நமக்கு  கதை  அனுப்பி இருக்கிறார்.  திருமதி புவனா சந்திரசேகர் ஏற்கெனவே புத்தகங்கள் வெளியிட்டுள்ள ஒரு பண்பட்ட எழுத்தாளர்.   தன்னைப்பற்றிய குறிப்பில் இப்படி சொல்லி இருக்கிறார்.

வணக்கம். எனது பெயர் புவனா சந்திரசேகரன். நான் ஒரு வளர்ந்து வரும் எழுத்தாளர். என்னுடைய பல புத்தகங்கள் வானதி பதிப்பகம், ஸ்ரீ பதிப்பகம், புஸ்தகா மூலமாக அச்சில் வெளிவந்துள்ளன. பல போட்டிகளில் எனது கதைகள் பரிசுகளை வென்றுள்ளன. தினமலர், கண்மணி, பெண்மணி, தினகரன் மகளிர் மலர், ஆனந்த சந்திரிகை போன்ற  இதழ்களில் என்னுடைய கதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 

எனது தோழி திருமதி. கோமதி அரசுவின் விருப்பப்படி, 

"அப்பாவின் சட்டை" 

என்கிற என்னுடைய  சிறுகதையைத் தங்கள் கவனத்திற்காக ,இந்த மெயிலுடன் இணைப்பாக அனுப்புகிறேன். 

நன்றி, வணக்கம், 

புவனா சந்திரசேகரன்.
= = = = = = =

55 கருத்துகள்:

  1. எங்கள் பிளாகில் முதல் கதை என்று என்னும்போது சாவுக் கதை அல்லாமல் சற்றே மங்களகரமாக ஆரம்பித்திருக்கலாம் என்பது எனது தாழ்ந்த கருத்து.
    Jayakumar​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய கருத்தை இனி நினைவில் வைத்துக் கொள்கிறேன். கதையைப் படித்ததற்கு நன்றி. அடுத்த கதை மங்களகரமான கதையாக இருக்கும்.

      நீக்கு
  2. எந்த வேலையும் தாழ்ந்ததில்லை என்று வலியுறுத்தினாலும் கதை கதையாகத் தான் தோன்றுகிறது. ஆசிரியர் எழுதிய நடை கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது.

    ​sirukathagal.com ஆசிரியர் பட்டியலில் இவரது பெயர
    ​ இல்லை. இவரது கதைகள் அத்தளத்தில் வெளியிடவில்லை என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  3. புவனா சந்திரசேகரன் அவர்களின் கதை மனதை நெகிழ்த்திவிட்டது. கதையினூடே வரும் கருத்துகளும் சிறப்பு. நல்ல மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் என்ற பாசிட்டிவ் கருத்துகள்!

    மிக நன்றாக எழுதியிருக்கிறார். தேர்ந்த எழுத்தாளாராயிற்றே!

    இவரைப் பற்றி முன்னரே தெரியும். பெயர் அறிந்த ஒன்று. என் சித்திப்பாட்டிதான் புத்தகங்கள் வாங்கி வாசிப்பாரே அப்படி அங்கு தெரிந்து கொண்ட பெயர்.

    இவருக்கு நம் ஆதி வெங்கட்டும் பழக்கம். இவரது கதை பற்றி வெங்கட்ஜி தளத்திலும் வந்ததுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. "நானும் எங்கப்பாவோட சட்டையைப் போட்டுக்கிட்டு நடக்க முயற்சி செய்யறேன் ஆனந்த்"//

    நல்லாருக்கு நேர்மறை.

    ஆனந்த், சதீஷ் அப்பாவைப் போன்றவர்களைப் பார்த்து இளைஞர்கள் மோட்டிவேட் ஆவது நல்ல விஷயம் அதைச் சொல்லியிருப்பது அருமை.

    புவனா அவர்களுக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள். மேன்மேலும் நிறைய வெளியீடுகள் வருவதற்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. மங்கலகரமான மகர சங்கராந்தியின் இரண்டாம் நாளில் இப்படியான கதை..

    இதை எதிர்பார்க்க வில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும். எதிர்காலத்தில் நினைவு வைத்துக் கொள்கிறேன். நன்றி🙏💕

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  8. //இந்த சமயத்தில் நம்ம உதவி அவங்களுக்குத் தேவை" என்று சொல்லி விட்டு மளமளவென்று காரியத்தில் இறங்கினார் அப்பா.//

    சந்தோஷமான நிகழ்வுகளில் கூட மாட ஒத்தாசையாக இருப்பதை விட இது போன்ற சமயத்தில் தான் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவி மிகவு அவசியம்.

    அதை உணர்ந்து இருக்கிறேன். எனக்கு என் கணவர் இறைவனடி சேர்ந்த போது இப்படி தான் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் தான் உதவினார்கள். நம் உறவுகள் வரும் முன் அக்கம் பக்கம் தான் முதலில் வருவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா கோமதிக்கா. இந்தச் சமயத்தில் உதவுவதுதான் ஆகச் சிறந்த உதவி. நீங்க சொல்லியிருக்கீங்க உங்கள் நிகழ்வு பற்றி.

      இது மிகச் சிறந்த சமூக, உணர்வு ரீதியான சமூகப் பொறுப்பு.

      இப்படியான உதவிகள் பற்றி எபி பாஸிட்டிவ் செய்திகளிலும் இடம் பெறுவதுண்டே.

      கீதா

      நீக்கு
    2. கதையின் கருவைப் புரிந்து கொண்டதற்கு நன்றி. உங்களுடைய ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது.

      நீக்கு
  9. //எதிரில் சிரித்தபடி அமர்ந்திருந்த பாஸைப் பார்த்து அப்படியே உறைந்து போனான்.//

    எனக்கு இந்த இடத்தில் புரிந்து விட்டது அவர் கசங்கிய ஜிப்பா போட்டு காரியங்களை செய்தவர் என்று.


    //சின்னக் குழந்தைகள் அப்பாவோட சட்டையைப் போட்டுக்கறதையும், பேனாவால மீசை வரைஞ்சுக்கறதையும், அப்பாவோட செருப்பை மாட்டிக்கிட்டு நடக்கறதையும் நாம பாக்கறோம் இல்லையா? அதே மாதிரி தான்//

    மிக அருமையாக சொல்லி விட்டார். அப்பாவின் தொழிலை ஏற்று கொண்டாலும் வருமானம் மட்டும் பார்க்காமல் ஏழைகளுக்கு உதவும் நல்ல உள்ளமும் இருக்கிறது. பாசீடிவ் செய்திகளில் இவர்களை போன்றவர்களை பற்றி எங்கள் ப்ளாக்கில் வந்து இருக்கிறதே!

    //இரண்டு நாட்களில் வாழ்க்கையின் முக்கியமான பாடங்களைக் கற்று விட்ட மனநிறைவு சதீஷுக்குக் கிடைத்தது.//

    வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் இரண்டு கலந்தது தானே!
    சதிஷ் , ஆனந்த போன்ற இளையவர்கள் வாழ்க்கையை புரிந்து கொள்வது எதிர்காலத்துக்கு நல்லது.

    கதை நன்றாக இருக்கிறது புவனா.

    புத்தக வெளியீடு அடுத்த கதை களத்திற்கு தயார் செய்தல் என்று வேலைகளுக்கு இடையே கதை அனுப்பி வைத்தற்கு நன்றி புவனா.
    உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் கதைகளை அனுப்பி வையுங்கள்.

    பதிலளிநீக்கு
  10. கதையின் சில பகுதிகள் காலையில் படிக்க நெருடலை உண்டாக்கியது. ஆனால் அனைத்தும் கலந்ததுதானே வாழ்க்கை.

    கதை சொல்லவரும் சேதி மிக முக்கியம். சமூகத்தில் நம் நிலைமை வேறு, சமூகத்திற்கான கடமை வேறு என்பதை நெகிழும்படிச் சொல்லியிருக்கிறார். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  11. இறப்பின்போது உடனே உதவுவதுதான் மிப் பெரிய உதவி. அப்போ பிரிவினால் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப்போயிருப்பார்கள்.

    எனக்கு பாரதி மணி அவர்களும் தில்லி வெங்கட் அவர்களும் நினைவுக்கு வந்தனர்.

    பதிலளிநீக்கு
  12. அப்பாவின் சட்டை - அருமையான கதை. திருமூலரின் திருமந்திரத்துடன் கதை பயணித்து, சதீஷும் தன் "அப்பாவின் சட்டையை" இடுவேன் என்று சொல்லும் அளவு நல்ல கருத்தைச் சொல்லும் உயர்வான கதை. சொன்னவிதம் மிக நன்று. மனதைத் தொட்டது.

    வாழ்த்துகள்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. புவனா அவர்கள் தன்னை பற்றி அடக்கமாக சொல்லி இருக்கிறார்.
    கணிதத்தில் முதுகலை பட்டத்தாரி , டெல்லியில் வங்கியில் வேலைப்பார்த்து பணி ஓய்வு பெற்றவர்.

    சரித்திர நாவல்கள் , குடும்ப கதைகள், கவிதை எழுதுவது, குழந்தைகளுக்கு கதைகள் என்று எழுதி கொண்டே இருக்கிறார்.




    சென்னையில் நடந்த புத்தககண்காட்சியில் இவரின் வரலாற்று நாவல் ''தென்னவன் பிரம்மராயன்''

    வானதி பதிப்பகத்தின் அரங்கில், டாக்டர் இராமநாதன், வானதி பதிப்பக உரிமையாளர், திரு. காலச் சக்கரம் நரசிம்மா மற்றும் வரலாற்று ஆசிரியர் திரு. ஜெயக்குமார் சுந்தரம் முன்னிலையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும்

    11ம் தேதி வெளியிட்டு இருக்கிறார் "ஆத்திசூடி கதைகள்" , "வேர்கடலை இளவரசன்" சிவபுராணம்,சங்கரபதி கோட்டை
    நான்கு புத்தகங்கள் வெளியீட்டு வந்து இருக்கிறார்.


    எங்கள் வளாகத்தில் நடந்த புதுவருட பிறப்பு விழாவில் குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தினார்கள், அதற்கு புவனா கலந்து கொண்ட எல்லா குழந்தைகளுக்கும் தான் எழுதிய குழந்தை கதைகளை பரிசு அளித்தார்.

    புத்தாண்டு கவிதை வாசித்தார். பன்முக திறமையாளர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாவ்! புவனா அவர்களைப் பற்றி வாசித்ததும் பிரமிப்பாக இருக்கிறது கோமதிக்கா. நீங்கள் சொல்லியிருக்கீங்க. இங்கு அவரது வெளியீடுகள் பற்றிச் சொன்னது புதிய தகவல்.

      கீதா

      நீக்கு
    2. உங்களுடைய அன்பான வார்த்தைகள் ஊக்கம் அளிக்கின்றன. நன்றி🙏💕

      நீக்கு
    3. சகோதரியை நம் குடும்பத்தில் இணைய 'வருக வருக' என வரவேற்கிறேன்.

      நீக்கு
  14. கதைக்கு பொருத்தமாக சார் படம் வைந்து இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  15. ஆமாம் பாஸை பார்த்ததும் சதீஷ் உறைந்து போன இடத்தில் அந்த நபர் முந்தைய நாள் வந்தவர் என்பது ஊகிக்க முடிந்தது.

    படம் நன்றாக இருக்கு கௌ அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துகள்.

    இன்றைய கதை நன்றாக உள்ளது. மறு நாள் வேலையில் சேரும் பரபரப்பில் இருந்தும், பிறருக்கு உதவச்செல்லும் சதீஷின் நல்ல மனம் வாழ்க.

    சதீஷ் மற்றும் அவரின் அப்பாவின் பிறருக்கு உதவும் மனப்பான்மையை சிறப்பாக சொன்னது அருமை. சதீஷ அலுவலக மேளாளர் தன் அப்பாவின் நினைவாக செயல்பட்டு வரும் மனிதாபிமான நல்ல செயல்களை பற்றி குறிப்பிட்டதும் மனது நெகிழ்ந்து போயிற்று. .

    நல்லதொரு கதையை தந்த சகோதரி புவனா சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். இவரின் கதைகளை இனி தொடர்ந்து படிக்கவும் ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    கதைக்குப் பொருத்தமாக ஓவியத்தை தந்த சகோதரர் கௌதமன் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. மனித நேயக்கதை. நன்றாக செல்கிறது. ஆசிரியருக்கு வாழ்த்துகள். கதைக்கு ஏற்ற படமும் அமைத்துக் குடுத்த வரையருக்கும் நன்றி.

    ஆனந்த் போன்ற மனித நேயம் மிக்க மனிதர்கள் வாழட்டும். அவரைத் தொடர இருக்கும் சதீஸ் போற்றுதற்கு உரியவர்.

    பதிலளிநீக்கு
  18. // திருமதி புவனா சந்திரசேகர் ஏற்கெனவே புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.. பண்பட்ட எழுத்தாளர்.. //

    இவர்களைத் தான் அன்றைக்கு கோமதியம்மா அவர்களது இல்லத்தில் சந்தித்தேனோ!..

    பதிலளிநீக்கு
  19. /// அவர் எனக்குன்னு விட்டுப் போனது ஒரு பழைய வேட்டியும் ஒரு ஜிப்பாவும்தான். ///


    நடுத்தர குடும்பங்கள் பலவற்றிலும் இதுதான் நிலைமை..

    பதிலளிநீக்கு
  20. சித்திரச் செல்வர் சித்திரச் செல்வர் தான்!..

    பதிலளிநீக்கு
  21. கௌ அண்ணா உங்களை ஓட்டாம இருக்க முடியலை!!!

    வேஷ்டியும் செம வெள்ளை!!! சுத்தியும் பளிச் னு ஒரு வட்டம் தெரியுதே! எந்தச் சலவைப் பொடியின் சக்தியோ!!!! சொல்லுங்க உங்களுக்கு ஆர்டர் அனுப்பிட்டா போச்சு!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. கதை மனதை கனக்க வைத்தது.

    கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. நல்லதொரு கதை. அவரது மின்னூல்கள் வாசித்திருக்கிறேன். தொடர்ந்து அவரது கதைகள் இங்கே வெளிவர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. நல்ல நடையில் அழகான கதை. டைமிங்தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. அதற்கு கதாசிரியரை குற்றம் சொல்ல முடியாது. எ.பி.ஆசிரியர் குழு கவனித்திருக்கலாம். படம் பொருத்தம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!