1.11.25

94 வயது பேப்பர் தாத்தா - சண்முகசுந்தரம் மற்றும் நான் படிச்ச கதை

 

இந்திய ரயில்வேயில் 'பயோ டாய்லெட்' புரட்சி: தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருக்கும் அதிசய பாக்டீரியாக்கள்

இந்திய ரயில்வே அதன் தூய்மைப் பயணத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் மனிதக் கழிவுகள் சேர்வதைத் தடுக்க, உயிரி-கழிப்பறைகள் (Bio-Toilets) எனும் புதுமையான அமைப்பை இந்திய ரயில்வே வெற்றிகரமாகப் பயன்படுத்தியுள்ளது. தினமும் சுமார் 1.97 கோடி பயணிகளுக்குச் சேவை செய்யும் 3.33 லட்சத்திற்கும் அதிகமான உயிரி-கழிப்பறைகள் தற்போது ரயில்வே நெட்வொர்க் முழுவதும் நிறுவப்பட்டுள்ளன.
இந்தத் தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது?
பாக்டீரியாக்களின் பங்கு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்ட இந்தச் சூழல் நட்பு கழிப்பறைகள், காற்றில்லா பாக்டீரியாக்களை (Anaerobic Bacteria) பயன்படுத்துகின்றன.
கழிவு சுத்திகரிப்பு: இந்த பாக்டீரியாக்கள் மனிதக் கழிவுகளை வெறும் 6 முதல் 8 மணி நேரத்திற்குள் ஜீரணித்து, அதைத் துர்நாற்றமற்ற, தீங்கற்ற நீர் (Water), மீத்தேன் (Methane) மற்றும் கார்பன் டை ஆக்சைடு (Carbon Dioxide) ஆக மாற்றுகின்றன.
சுத்தமான வெளியேற்றம்: கழிவுகள் நேரடியாக தண்டவாளங்களில் விழாமல் தடுக்கப்படுவதுடன், வெளியேற்றப்படும் நீர் குளோரினேஷன் செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட பின்னரே தண்டவாளத்தில் விடப்படுகிறது.
முக்கிய நன்மைகள்:
*சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல்: பாரம்பரிய கழிப்பறைகள் தண்டவாளங்களில் கழிவுகளைச் சேகரித்து, சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளை உருவாக்கின.
*உயிரி-கழிப்பறைகள் இந்தச் சிக்கலை முழுமையாகத் தீர்த்து, தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்களைச் சுத்தமாகவும், துர்நாற்றமின்றியும் வைத்திருக்க உதவுகின்றன.
*தண்டவாளப் பாதுகாப்பு: மனிதக் கழிவுகளில் உள்ள இரசாயனங்கள் தண்டவாளங்களின் உலோகத்தை அரிக்கக்கூடியவை. புதிய முறை தண்டவாளங்கள் சேதமடைவதைத் தடுக்கிறது.
நீர் சேமிப்பு: வந்தே பாரத் போன்ற நவீன எல்.ஹெச்.பி (LHB) பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ள வெற்றிட அடிப்படையிலான உயிரி-கழிப்பறைகள் (Vacuum Bio-Toilet Systems), ஒரு முறைக்கு அரை லிட்டர் நீரை மட்டுமே பயன்படுத்துவதால், நீர் பயன்பாடு வெகுவாகக் குறைகிறது.
சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு: மனிதக் கழிவுகளை நேரடியாக சுத்தம் செய்யும் கடினமான பணியிலிருந்து ஊழியர்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
இந்திய ரயில்வேயின் இந்த முன்னெடுப்பு, சுத்தமான ரயில் பயணத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாகும், மேலும் இது தூய்மை இந்தியா (Swachh Bharat) திட்டத்திற்குப் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.

- Railway News -

============================================================================================

'டிஜிட்டல்'மயமாகும் ஒரு கோடி ஓலைச்சுவடிகள்; மத்திய அரசின் 'ஞான பாரதம்' திட்டத்தில் பணி துவக்கம்

நாட்டில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் காகிதச் சுவடிகளை, 'டிஜிட்டல்' ஆவணமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.  நம் நாட்டில், பல நுாறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கோடிக்கும் அதிகமான ஓலைச்சுவடிகள் மற்றும் கையெழுத்து சுவடிகள் உள்ளன.  தத்துவம், அறிவியல், மருத்துவம், இலக்கியம், வழிபாடுகள், சடங்குகள், கணிதம், ஜோதிடம், வாஸ்து மற்றும் கலைகள் உள்ளிட்டவை தொடர்பாக அவை எழுதப்பட்டுள்ளன. நாடு சுதந்திரம் அடையும் முன், தேசத் தலைவர்கள் எழுதிய கடிதங்கள், கட்டுரைகள் போன்றவையும் உள்ளன.  இந்த விலை மதிப்பில்லாத பொக்கிஷங்கள், நம் நாட்டின் பன்முகத் தன்மைக்கான சான்றுகளாகவும், அறிவின் கருவூலமாகவும் உள்ளன. அவற்றை பாதுகாப்பது சவால் நிறைந்ததாக உள்ளது.  எனவே, சக்தி வாய்ந்த 'ஸ்கேனர்'களின் வாயிலாக அவற்றை ஸ்கேன் செய்து, டிஜிட்டல் ஆவணங்களாக மாற்றி, சர்வரில் பாதுகாப்பது மற்றும் உலகில் உள்ள அனைவரும் அணுகும் வகையில் பரவலாக்குவது போன்றவற்றுக்காக, 'ஞான பாரதம்' என்ற திட்டத்தை மத்திய கலாசார துறை அறிவித்துள்ளது.  இதன்படி, நாட்டில் உள்ள பழமையான சுவடிகள் அடையாளம் காணப்படுவதுடன், அவை சேகரிக்கப்பட்டு, பாரம்பரிய அறிவு சொத்தாக மாற்றப்பட உள்ளன. இப்பணிக்காக, அதிக திறன் வாய்ந்த முப்பரிமாண கேமராக்கள் உள்ளிட்ட சாதனங்களும் வாங்கப்பட்டுள்ளன.  ஸ்கேன் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவேற்றும் முன், அவற்றின் உண்மை தன்மையை ஆராய்ந்து, வல்லுனர் குழு சான்றளிக்கும்.  மேலும், ஆவணங்களை படித்தறியவும், எடுத்துரைக்கவும், துறை சார்ந்த வல்லுனர்கள், ஆய்வாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.  மேலும், பல்வேறு விதமான ஆவணங்களை கையாள்வது குறித்து, இளைஞர்களுக்கு பயிற்சியும் தரப்பட உள்ளது.  இந்த பணிகளை மேற்கொள்ள, 20 முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்துள்ளது; மேலும், 10 நிறுவனங்களை இப்பணியில் இணைக்கவும் திட்டமிட்டுள்ளது.  முதற்கட்டமாக, சென்னையில் உள்ள கீழ்திசை சுவடிகள் நுாலகம், கொல்கட்டாவின் ஏசியடிக் சொசைட்டி, ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலை, பிரயாக்ராஜில் உள்ள ஹிந்தி சாகித்ய சம்மேளனம் போன்றவற்றின் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளன.  

கீழ்திசை சுவடிகள் நுாலகம்  சென்னை கோட்டூர்புரம், அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின் ஏழாவது மாடியில் இயங்கும் சென்னை கீழ்திசை சுவடிகள் நுாலகத்தில், தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்ட 50,580 பனை ஓலை சுவடிகள், 22,134 காகித கையெழுத்து பிரதிகள் மற்றும் 25,373 குறிப்பு புத்தகங்கள் உள்ளன. கணிதம், வானியல், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, வேதம், ஆகமம், கட்டடக்கலை, இசை, சிற்பம், நுண்கலைகள், வரலாறு, இலக்கணம், இலக்கியம் உள்ளிட்ட துறை சார்ந்தவை இந்த ஆவணங்கள். ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கர்னல் காலின் மெக்கன்சி, சி.பி.பிரவுன் மற்றும் பேராசிரியர் பிக்போர்டு போன்றோரால் சேகரிக்கப்பட்டவை; தமிழக தொல்லியல் மற்றும் கல்வித் துறைகளின் சார்பில் பாதுகாக்கப்படுகின்றன.

===============================================================================================

94 வயது பேப்பர் தாத்தா - சண்முகசுந்தரம்

ந்தச் சுறுசுறுப்பான வேலையை 94 வயது தாத்தா ஒருவர் செய்து வருகிறார்.அவர் பெயர் — சண்முகசுந்தரம்.  சென்னை கோபாலபுரம் பகுதியில்தான் அவர் பேப்பர் போடும் “ஏரியா.”ராயப்பேட்டைச் சேர்ந்த இவர், தன்னை “சண்முகம்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும், பகுதி முழுவதும் “பேப்பர் தாத்தா” என்றே அனைவரும் அழைக்கிறார்கள்.  பத்தாம் வகுப்பு வரை படித்த இவர், மோட்டார் வாகனத் தொழிலில் ஐம்பது ஆண்டுகள் பணியாற்றியவர். பின்னர் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அந்தத் தொழிலை விட்டுவிட்டார்.  அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது, கோபாலபுரத்தில் பேப்பர் போடும் வேலை இருப்பதை அறிந்தார்.“அது சிறுவர்கள் செய்யும் வேலை” என்றவர்களுக்கு அவர் அளித்த பதில் —

“ஏன் நான் செய்யக்கூடாது? உண்மையாக, நேர்மையாக உழைத்து சாப்பிடணும். அது எந்தத் தொழிலாக இருந்தாலும் பரவாயில்லை.”  அவ்வாறே அவர் 2000ஆம் ஆண்டிலிருந்து பேப்பர் போட்டு வருகிறார் — இப்போது 25 ஆண்டுகள் ஆகிறது.

2000 ஆம் ஆண்டு முதல் பேப்பர் போட்டு வருகிறார் 25 வருடமாகிவிட்டது,பேப்பர் போடுவதுடன், பால் பாக்கெட் போட்டால் இன்னும் கொஞ்சம் கூடுதல் வருமானம் கிடைக்குமே என்று ஒருவர் கூறியதும் 'போட்டுட்டா போச்சு' என்று வீடு வீடாக பால் பாக்கெட்டும் போடுகிறார்,பகலில் சும்மாதானப்பா இருக்க ஒரு வழிபாட்டு மண்டபத்தை பொறுப்பாளரா இருந்து பார்த்துக்கமுடியுமா? சம்பளம் தர்ரோம் என்ற போது 'பார்த்துக்கிட்டா போச்சு' என்று அதையும் பார்த்துக் கொள்கிறார்.  

அதிகாலை 3 மணிக்கே எழுந்து, மண்டபத்தைத் தயார் செய்து சிறு வழிபாடு நடத்தி முடித்துவிடுகிறார்.அதன்பின் பால் பாக்கெட் விநியோகம்,பேப்பர் விநியோகம் என்று எந்திரம் போல செயல்படுகிறார்.  வீட்டிற்கு வந்து மனைவி லட்சுமிக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து, பிறகு மீண்டும் மண்டபத்திற்குச் சென்றுவிடுகிறார் அங்குதான் ஓய்வு, உறக்கம், அனைத்தும் —இதுதான் சண்முகத்தின் அன்றாட வாழ்க்கை.ஒரு நாளும் கடமையில் தவறியதில்லை.  “உடம்பில் பிரச்சனை ஏதும் இல்லை. எங்கே போனாலும் என் சைக்கிள்லதான் செல்கிறேன்,” என்று பெருமையாகச் சொல்கிறார்.  மகனும் மகள்களும் பேரன்களும் அனைவரும் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள் ஒடினது போதும் உட்காருங்கள் என்று கூறினாலும்,நான் அதை காதில் போட்டுக் கொள்வதில்லை.  “நானே உழைத்து சம்பாதித்த காசுல சாப்பிடறதுதான் எனக்கு சந்தோஷமா இருக்கு,”என்று உறுதியாகப் பேசுகிறார்.  “நான் பேப்பர் போடுற வீடுகளில் எத்தனையோ அதிகாரிகள், 'ஒரு கையெழுத்து போடு, முதியோர் பென்ஷன் வாங்கித்தர்றேன்' என்பார்கள். ஆனால், அதுவும் உழைக்காம வாங்குற காசு மாதிரி தோணும். அதனால இதுவரை வேண்டாம்னு இருந்துட்டேன்,”என்று நிதானமாகச் சொல்லும் சண்முகசுந்தரம் —பேப்பர் தாத்தா மட்டும் அல்ல, வைராக்கியத் தாத்தாவும் கூட.  அவரிடம் தொலைபேசி கிடையாது.ஆகையால் அவரை வாழ்த்த நினைத்தால் —மனதார இருக்கும் இடத்தில் இருந்தே வாழ்த்திக் கொள்ளுங்கள்.  -எல்.முருகராஜ்

===============================================================================================

நான் ரசித்த கதை - நினைப்பு - சிவசங்கரி

பானுமதி வெங்கடேஸ்வரன்


சிவசங்கரி அவர்கள் 1970, 80,90 களில் கோலோச்சிய எழுத்தாளர், பல விருதுகளை பெற்றிருக்கிறார் என்பதையெல்லாம் நான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம், எல்லோருக்குமே தெரியும். 'Knit India through literature' என்று இந்தியா முழுவதும் இருக்கும் பிரபல எழுத்தாளர்களை சந்தித்து, அவர்களின் படைப்புகளை தமிழில் கொண்டு வந்ததை மிகப் பெரிய சாதனை எனலாம். தன் சுய சரிதத்தை சூர்ய வம்சம் என்ற பெயரில் இரண்டு தொகுதிகளாக எழுதியிருக்கிறார்.

தற்பொழுது எழுதாவிட்டாலும் எழுத்தாளர்களுக்கு நிறைய பரிசுகள் தந்து ஊக்குவிக்கிறார்.

எனக்கு அவருடைய நாவல்களை விட, சிறுகதைகள் அதிகம் பிடிக்கும். நாவல்களில் அதிரசம் செய்வது எப்படி? மட்டர் பனீர் செய்வது எப்படி? பட்டீக் பெயிண்டிங் செய்வது எப்படி போன்ற அவருக்கு தெரிந்த விஷயங்கள் வரும். சிறுகதைகள் அப்படி அல்ல, நச்சென்று இருக்கும்.

சமீபத்தில் புஸ்தகாவில் அவருடைய 'தெய்வம் நின்று கொல்லும்' என்னும் சிறுகதை தொகுதியில் படித்த 'நினைப்பு' என்னும் சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது.

காதல் மனைவி கேன்சரில் இறந்து விடுகிறாள். மனைவியை இழந்த இளம் கணவனின் நினைவுகளில் அவள் எப்படி நிறைந்திருக்கிறாள்? என்பதுதான் கரு. அதை வெளிப்படுத்த அவர் எடுத்துக் கொண்டிருக்கும் களம்தான் ரொம்பவே வித்தியாசமானது.
சென்னையிலிருந்து திருச்சி வரை இருக்கும் ஹைவேதான் கதைக்களம்.
கதாநாயகன் சத்யா ஒரு நாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வரும் பொழுது திருச்சியிலிருந்து வந்திருக்கும் அவன் மாமனாரும், மாமியாரும் மறைந்து போன தங்கள் மகள் நினைவாக அவள் படித்த கல்லூரிக்கு கீழ் தளத்தில்
  லேப், முதல் தளத்தில் லைப்ரரியோடு ஒரு கட்டிடம்  கட்டுவதற்கான செலவை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும், அதற்கான காசோலையை கல்லூரி டிரஸ்ட் மெம்பர்களிடம் அகிலாவின் பிறந்த நாளன்று கொடுக்க இருப்பதாகவும், அன்று அவனும் அவர்களோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டுக்கொள்ள, சென்னையிலிருந்து திருச்சிக்கு காரில் செல்கிறான்.

அப்படி காரில் பயணிக்கும் பொழுது வரும் ஒவ்வொரு முக்கியமான இடமும் அவனுக்கு இறந்து போன மனைவியை நினைவு படுத்துகிறது.

விளக்குகளில்  ஜொலிக்கும் விமான நிலையத்தை கடக்கும் பொழுது, தான் ஒவ்வொரு முறை விமானத்தில் எங்காவது செல்லும் பொழுதும், திரும்பி வரும் பொழுதும் அகாலமாக இருந்தால் கூட தன்னை வழியனுப்பும், எதிர் கொண்டழைக்கவும் அகிலா வந்தது இவனுக்கு நினைவுக்கு வருகிறது.

அதைத் தாண்டி காட்டாங்குளத்தூர் சிவானந்த சரஸ்வதி சேவாஸ்ரமத்தை கடக்கும் பொழுது அகிலாவின் ஒவ்வொரு பிறந்த நாளென்றும் அங்கு இருக்கும் எல்லோருக்கும் புத்தாடை வாங்கி பரிசளிப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

அதைத் தாண்டி வேடந்தாங்கல் என்ற பெயர் பலகையை பார்த்ததும் அகிலாவோடு அவள் ஆசைப்பட்டதற்காக ஒரு முறை வேடந்தாங்கல் உள்ளே சென்றது நினைவுக்கு வர, காரை திருப்பி வேடந்தாங்கலுக்குள் செல்கிறான். அகிலாவோடு சென்றபோது கோடைகாலமாக இருந்ததால் ஏரிகள் வறண்டு கிடந்தன பறவைகள் எதுவும் இல்லை ஏரிக்குள் ஒரு எருமை மாடு மேய்ந்து  கொண்டிருந்தது.  ஆனால், இப்பொழுது அக்டோபர் மாதம் என்பதால் ஏரிகள் நிரம்பி இருக்க, நிறைய பறவைகள்.

அதைத் தாண்டி மதுராந்தகத்தைக் கடக்கும் பொழுது அகிலா ஒருமுறை, "இங்கிருக்கும் ராமர் கோவிலுக்குச் சென்று இருக்கிறீர்களா?" என்று கேட்க, அவன், "இல்லை" என்று கூறியதும் அவள், "இந்த முறை போகலாம் வாங்க" என்று அவனை அழைத்துச் செல்கிறாள். 

அது மாலை நேரம் கோவில் இருட்டாகத்தான் இருக்கிறது கர்ப்பக்கிரகத்தில் மட்டும் ஒரு விளக்கு மினுக் மினுக்கென்று என்று எரிந்து கொண்டிருக்கிறது. அங்கிருந்து பட்டாச்சாரியார் போதுமான வருமானம் இல்லாததால் கஷ்ட ஜீவனம் என்று சொல்கிறார் உடனே தன் கையில் இருக்கும் ஆயிரக்கணக்கான பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்து, "நீங்கள் எல்லோரும் வேஷ்டி வாங்கி கொள்ளுங்கள், எண்ணெய் வாங்கி சுவாமிக்கும்  விளக்கேற்றுங்கள். மாதா மாதம் நான் பணம் அனுப்புகிறேன் விளக்கு ஏற்றி வையுங்கள்" என்று அகிலா சொன்னது நினைவுக்கு வருகிறது.

அதைத்தாண்டி உளுந்தூர்பேட்டை, வாலிகண்டாபுரம், பெரம்பலூர் எல்லாம் தாண்டி ஸ்ரீரங்கம் அடைகிறார்கள். அங்கிருக்கும்  காவேரி பாலத்தில் ஒரு பக்கம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலும் இன்னொரு பக்கம் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவில்  கோபுரமும் கண்களில் படுகிறது. அவன் அந்த பாலத்தில் உட்கார்ந்து கொள்கிறான்.

ஒருமுறை, அவர்கள் இதைப் போல அங்கு வந்த பொழுது அகிலா, "ஆரிரண்டும் காவிரியாம் அதன் நடுவில் ஸ்ரீரங்கம், சாமி  ரெண்டு கையாலே தந்த சீதனமோ" என்று எங்க அம்மா நீலாம்பரியில் அப்படியே குழைஞ்சு பாடுவாங்க நல்லா இருக்கும். நமக்குக் குழந்தை பிறந்தாலும் நான் அதுதான் பாடுவேன்னு" சொல்லி இருப்பாள். 

எங்கே? அதுதான் நடக்கவே இல்லையே..? என்று நினைத்தவன் கண்களில் கரகரவென நீர் வழியும்.

மாமனார் வீட்டுக்குப் போவதற்கு நேரம் ஆகிவிட்டது என்று உணர்ந்து கிளம்புவான் அங்கே மாமனாரும் மாமியாரும் அவனை வரவேற்பார்கள். அவன் மாமியார் காபி கொடுத்து விட்டு, "கல்யாணமான இந்த ரெண்டு வருஷத்துல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் எப்போதும் வருவீங்க இப்ப தனியா வருவதை நெனச்சா.." என்று குரல் கம்ம பேசத் தொடங்குவார்.

உடனே அவன் சட்டென்று எழுந்து, "நான் குளித்துவிட்டு வருகிறேன் நேரம் ஆகிவிடும்" என்று மாடிக்குச் செல்வான்.  அங்கு போனதும் செல்போனை கீழே வைத்து விட்டது நினைவுக்கு வரும். அதை எடுப்பதற்காகப் படிகளில் இறங்க கால் வைத்த பொழுது மாமியார் மாமனாரிடம் பேசிக் கொண்டிருப்பது காதில் விழும் "என்னங்க இவருக்கு கொஞ்சம் கூட அகிலா ஞாபகமே இல்லையே? நம்ப பொண்ண சாக கொடுத்துவிட்டு ஒவ்வொரு நிமிஷமும் அவளையே நினைச்சுட்டு கலங்கி இருக்கோம், இவருக்கானா கொஞ்சம் கூட அவ நினைப்பே இல்லையே?" என்பார். 

அவன் கீழே இறங்காமல் அப்படியே திரும்பி விடுவான் என்று கதை முடியும். அவன் அகிலாவை மறக்கவே இல்லை. ஆனால் அவனுடைய மாமியாரின் நினைப்பு வேறு மாதிரியாக இருக்கிறது என்பதை நினைப்பு என்று அழகாக ஒரு பெயரிட்டு எப்படி இந்த இரண்டு நினைவுகளும் மாறி இருக்கின்றன, ஒன்றுக்கு ஒன்று எதிராக இருக்கின்றன, என்று அழகாக எழுதியிருக்கிறார்.

இதில் அவருடைய கவனிப்பு மிகவும் ரசனைக்குறியதாக இருந்தது.  ஒரு ஹைவேயில் இரண்டு ஊர்களுக்கு இடையே வரும் முக்கியமான இடங்களைக் குறிப்பிட்டு அதையே ஒரு கதையாகவும் கோர்த்திருந்த  விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும்   சென்னைக்கும் திருச்சிக்கும் நிறைய தடவை காரிலும் பஸ்ஸிலும் பயணப்படும் என்னைப் போன்றவர்களால்  இந்தக் கதையோடு நன்றாக ஒன்ற முடியும்.

இந்தக் கதையை நான் யூடியூபிலும் சொல்லி இருக்கிறேன் கேட்டு விட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்.



29 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம். நான் தான் முதல் போணியா? ஐயா வாங்க! அம்மா வாங்க! நான் சொல்லியிருக்கும் கதையை கேட்டு விட்டு சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  2. 93 வயதாகும் பேப்பர் தாத்தா சண்முக சுந்தரம் அவர்களின் வைராக்கியமும், உறுதியும் வியக்க வைக்கின்றன. வணங்குகிறேன் __/\__. அவரை இறுதி வரை ஆரோக்கியமாக கடவுள் வைத்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரார்த்திப்போம்.  உதாரணமாகக் கொள்வோம்!

      நீக்கு
  3. ஓலைச் சுவடிகளை டிஜிட்டல் வடிவில் சேமிக்கும் பழக்கம் இப்போது தொடங்கியது அல்ல. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பே எங்கள் தாத்தா வீட்டில் இருந்த ஓலைச்சுவடிகளை எங்கள் மாமா மகன் ஓலைச்சுவடிகளை டிஜிட்டல் வடிவில் சேகரிக்கும் இடத்தில் கொடுக்க, அவர்கள் கணிணியில் சேமித்துக் கொண்டு சுவடிகளை திருப்பிக் கொடுத்தார்கள். அப்போதுதான் அவை கந்தபுராண சுவடிகள் என்று தெரிந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   உங்களிடம் அந்த ஓலைச்சுவடிகள் இன்னமும் இருக்கிறது என்று சொல்லுங்கள்.  யாரால் எழுதப்பட்டது?  நாம் இப்போது பழக்கத்தில் வைத்திருக்கும் தமிழா?  வித்தியாசமானதா?

      நீக்கு
  4. ​ஒரு விதத்தில் 95 வயதிலும் உழைத்து சாப்பிடும் பெரியவர். போற்றற்குரிய குணம். ஆனால் வசதிகள் இருந்தும், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அன்புடன் கவனித்து கொள்ளும் வாய்ப்பிருந்தும் வேலை இல்லா இளைஞர்களின் வாய்ப்பை தட்டிப் பறிக்கிறாரோ என்ற ஐயமும் எழுகிறது. இவ்வாறு நினைக்க காரணம் கோவிடினால் வேலையிழந்த எனது மைத்துனர் உடல் நிலை சரியானபின் வேலை தேடினார். சென்ற இடங்களில் எல்லாம் வயது 60 ஆகி விட்டது என்று கூறி வேலை தர மறுத்துள்ளனர். சுய தொழில் செய்யவும் திறமையும் இல்லை. நான் தான் மாதா மாதம் கொஞ்சம் உதவுகிறேன். முதியவர் பற்றிய செய்தி ஏற்கனவே இப்பகுதியில் வந்த ஒன்றாகத் தோன்றுகிறது.

    எனக்கு சிறிது ஒய்வு கொடுத்த பா வெ மாடத்திற்கு நன்றி. சிவசங்கரியின் சிறப்பு நம்மை கதைக்குள் கொண்டு சென்று ஒரு கதையை நேரில் காணும் அனுபவம் போல் ஆக்கிவிடுவார். கதைசுருக்கத்தில் அதை அனுபவிக்க முடியவில்லை. இந்த ஒன்றிய அனுபவத்திற்காக ஒன்றோ இரண்டோ quotes கொடுத்திருக்கலாம் என்பது எனது கருத்து.
    கதை ஆசிரியருடன் ஒன்றி கதையை வாசிக்கும் அனுபவமே தனி.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க JKC ஸார்... இது மாதிரி வேளைகளில் ஒருவரின் வாய்ப்பை தட்டிப் பறிப்பது என்று சொல்ல முடியாது. உதாரணமாக எங்கள் ஏரியாவில் மாடி ஏறி பேப்பர் போட அலுப்புப்பட்டு கீழேயே வீசி விட்டு சென்று கொண்டிருந்த இளைஞன் அப்புறம் அதுவும் முடியாது என்று சொல்லி விட்டான். சரியான ஆள் இல்லாததால் எங்கள் வீட்டுக்கு பேப்பர் போடும் வழக்கம் நின்றது. எங்கள் அபார்ட்மென்ட்டில் லிப்ட் கிடையாது.

      நீக்கு
    2. ​தரைத்தளத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மெயில் பாக்ஸ்/பேப்பர் பாக்ஸ் வைக்கவில்லையா?

      Jayakumar

      நீக்கு
    3. இல்லை.  வைத்த தபால் பெட்டியையே லவட்டிக் கொண்டு போய்விட்டார்கள்!

      நீக்கு
    4. ஒரு கனத்த அட்டையில் செய்து வைக்கலாம். யாரும் எடுக்க வாய்ப்பில்லை. நாங்கள் சென்னையில் இருந்த காலத்தில் ஒரு பொது குடித்தனத்தில் நான் அவ்வாறு செய்து வைத்தேன். பல வருடங்களுக்குப் மேலாக பயனுள்ளதாக இருந்தது.

      நீக்கு
    5. சில இடங்களில் சில மனிதர்கள், சில அனுபவங்கள்!

      நீக்கு
    6. ஜெயகாந்தன் அவர்களின் கதை தலைப்பு சில நேரங்களில், சில மனிதர்களோடு, சில அனுபவங்களும் ஒத்துப் போகிறது. :)) கதைகளும், வாழ்க்கையுடனான மறுபிறவிகள்தாமே..!

      நீக்கு
    7. ஹா..  ஹா..  ஹா..  கரெக்ட்டா கண்டுபிடிச்சீங்க...

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை. ரயில்வே முன்னேற்றம், தூய்மை இந்தியா பணிகள் மகிழ்வை தருகிறது. 94வயதிலும், தன் உழைப்பால் வாழும் முதியவருக்கு பாராட்டுக்கள். நல்ல ஆரோக்கியத்தை அவருக்கு இதுநாள் வரை தந்த இறைவன் இனி தொடர்ந்து தர வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். இந்தச் செய்தி இங்கு முன்பே படித்ததாக நினைவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மறந்திருப்பீர்களோ என்று அவரை உங்களுக்கு நினைவு படுத்தினேன்!  ஹா..  ஹா..  ஹா...  இது இதை மறுப்படியும் பகிர்ந்த செய்தித்தாளின் குற்றம்!

      நீக்கு
    2. சனிதோறும் படிக்கும் பாஸிடிவ் செய்திகள் அதன்பின் வரும் சில நாட்களில் மறந்து போகலாம். ஆனால் இங்கே அடுத்த முறை அதை வாசிக்கும் போது நினைவுக்கு வந்து விடுகிறது. இது நம் நினைவின் குற்றம். ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. பஞ்சதந்திரம் கமல் மாதிரி உங்களை பாராட்டறேன்.  நீங்கதான் நாகேஷ்!

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய கதை பகிர்வும் அருமை. சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் பார்வையில் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய கதை நன்றாக உள்ளது சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் எழுதிய கதையின் முன்னுரையே படிக்க நன்றாக உள்ளது. கதையை ஒலிநாடாவிலும் கேட்டு விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அக்கா சசிக்கு சிவசங்கரி மிகவும் பிடித்த்த்த எழுத்தாளர்.  இப்போது இந்தக் கதையின் சுட்டியை எனக்கு தேடி கொடு என்று படுத்துகிறார்.  இந்த பானு அக்க்காவை சொல்லணும்!!!

      நீக்கு
    2. ஸ்ரீராம், நானும் தேடுகிறேன். கிடைத்ததும் தருகிறேன்.

      கீதா

      நீக்கு
  8. ரயில்வேயின் 'பயோ டாய்லெட்' புரட்சி மிக நல்ல விஷயம்.

    அதே சமயம் ரயிலில் கழிவறைகளையும் கொஞ்சம் மேம்படுத்தி இன்னும் சுத்தமாக வைக்கலாம். மக்களுக்கும் அறிவு வேண்டும். பல சமயங்களில் கழிவறைக்குள் போய்விட்டு எதையும் தொடவே ரொம்பத் தயக்கமாக அருவருப்பாக இருக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஓலைச்சுவடி நல்ல முயற்சி. ஆனால் இது டிஜிட்டல் ஆக்குவது சில வருடங்களுக்கு முன்பே வந்துவிட்டதே.

    பேப்பர் தாத்தா முன்னரே இங்கு பவனி வந்திருக்கிறார்!!! உதாரணமானவர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. கதை அருமையான கதையாகத் தெரிகிறது. நானும் தேடுகிறேன் இக்கதை வாசிக்கக் கிடைக்குமா என்று. சிவசங்கரியின் எழுத்தில் வாசிக்க.

    பானுக்கா நல்லா சொல்லியிருக்கீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. பாஸிடிவ் செய்தி பகிர்வு அருமை. தன்னபிக்கையோடு உழைத்து சாப்பிடும் சண்முகசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  13. கதை பகிர்வு அருமை.
    பானுமதி நன்றாக சொல்லி இருக்கிறார், கதையை அப்படியே படித்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இப்போது நிறைய பேருக்கு கதை கேட்க ஆசை இருக்கிறது. படிக்க சோம்பல் படுகிறார்கள் நடைபயிற்சியின் போது காதில் மாட்டிக் கொண்டு கதையை கேட்டு விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!