11.4.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 15 --- நான் படிச்ச கதை

 நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 15

 

அன்றிலிருந்து தினமும் சாலைக்கிணற்றிலிருந்து காஞ்சீபுரம் தேவப்பெருமாள் திருவாராதனத்திற்கு இளையாழ்வார், தண்ணீர் (திருமஞ்சன தீர்த்தம் என்பதுதான் சரியான வார்த்தை) சமர்ப்பிக்க ஆரம்பித்தார்.

இளையாழ்வாரைக் காணாமல் யாதவப்பிரகாசரின் கோஷ்டி என்ன செய்தது என்பதை அடுத்த பகுதியில் காண்போம் என்று சென்ற வாரம் முடித்திருந்தேன்.

விந்திய மலைச்சரிவில் இளையாழ்வாரையும் கோவிந்த பட்டரையும் எதிர்நோக்கி நின்றுகொண்டிருந்தார் யாதவப் பிரகாசர்.  கோவிந்த பட்டர் மாத்திரம் வருவதைக் கண்டு, இளையாழ்வார் எங்கே என்று கேட்க, கோவிந்த பட்டர், நான் அவரைப் பார்க்கவில்லையே என்றார். உடனே தன் சீடர்களுடன் யாதவப் பிரகாசர், அந்தக் காட்டில் இளையாழ்வாரைத் தேடி எங்கும் காணக்கிடாமையால், என்னவாயிற்றோ தெரியவில்லையே என்ற துக்கத்துடன் தொடர்ந்து எல்லோருடனும் பயணித்து கங்கைக் கரையை அடைந்தார்கள்.

அங்கு தங்கி தினமும் கங்கையில் ஸ்நானம் செய்து, சாஸ்திரம் விதித்தபடி பல்வேறு வேதங்களையும் சூக்தங்களையும் பாராயணம் செய்துகொண்டிருந்தனர். அப்படி இருக்கையில் ஒரு நாள், கோவிந்த பட்டர் அகமர்ஷண சூக்தங்களை அநுஸந்தானம் செய்து கங்கையில் ஸ்நானம் செய்தபோது, அவருடைய கையில் ஒரு லிங்கம் வந்து சேர்ந்தது. யாதவப் பிரகாசர் மற்றும் அவர் சீடர்கள் அனைவரும் ஸ்மார்த்த பிராமணர்கள் (வேதம், அதன் தலைவர் சிவன்) என்பதை நினைவில் வைக்கவேண்டும். கங்கை நதியில் தனக்கு லிங்கம்கிடைத்தது கோவிந்த பட்டரை ஆச்சர்யப்படுத்திற்று. அவர் சந்தோஷத்துடன் அதனை யாதவப் பிரகாசரிடம் காண்பித்தார். யாதவப் பிரகாசர் ஆச்சர்யப்பட்டு, கோவிந்த பட்டரே… நீர் தெய்வாம்சம் பொருந்தியவர் என்று தோன்றுகிறது. அதனால்தான் கங்காஸ்நான பலன் உமக்கு கங்காதரன் வடிவில் வந்து சேர்ந்தது என்று சொல்லியதும் அல்லாமல், அவரிடத்தில் அதிகமான ப்ரீதியையும் வைத்தார்.   

கங்கைக் கரையில் அவர்கள் தை, மாசி மாதங்களில் தங்கியிருந்தனர். தை அமாவஸ்யை மறுநாள் தொடங்கி மாசி அமாவாசை வரையுள்ள காலம் மாக மாஸம் என்று சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் புண்ணிய நதியில் நீராடுவது பாபங்களை அழிக்கும் என்பது சாஸ்திரம். அதனால் மாகஸ்நாநம் செய்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பூரி ஜகந்நாத க்ஷேத்திரம் வந்து பிறகு அஹோபிலம் வழியாக வந்துகொண்டிருந்தபோது, கோவிந்த பட்டர், தனக்கு கங்கை நதியில் கிடைத்த பாணலிங்கத்தை உசிதமான இடத்தில் பிரதிஷ்டை செய்து வருகிறேன் என்று யாதவப் பிரகாசரிடம் அனுமதி வேண்டினார். அவரும், அப்படியே செய்துவாரும் என்று சொல்லிவிட்டு, மற்றவர்களுடன் காஞ்சீபுரம் திரும்பினார்.  

கோவிந்த பட்டரும் மழலை மங்கலம் சென்று அங்கு கங்கையில் தன் கையில் கிடைத்த பாணலிங்கத்தை பொதுமக்கள் உதவியுடன் பிரதிஷ்டை செய்தார். அங்கேயே கோயில் கைங்கர்யங்கள் செய்துகொண்டு வாழ்ந்துவந்தார். 

காளஹஸ்தியில் கோயில் கொண்டிருந்த இறைவன், கோவிந்த பட்டரைத் தன்னுடைய சேவைக்கு அழைத்துகொள்ள எண்ணி,  கோவிந்த பட்டரின் கனவில் தோன்றிச் சொன்னதுமல்லாமல், மழலை மங்கல சிவாலயத்தின் அதிகாரிகளின் கனவிலும் முக்கிய பிரமுகர்கள் கனவிலும் உரைத்தார். இந்தக் காலகட்டத்தில் கோவிந்த பட்டரின் பெயர் ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ என்றே வழங்கப்படலாயிற்று.  

காளஹஸ்தி கோயிலுக்குப் பொறுப்பானவர்கள் தங்கள் கனவில் இறைவன் ஆணையிட்டபடி, மழலை மங்கலத்துக்குச் சென்று உள்ளங்கை கொணர்ந்த நாயனாருக்கு பஹுமானங்கள் சமர்ப்பித்து, காளஹஸ்திக்கு வரவேண்டும் என்று பிரார்த்தித்தனர். அவரும் அதனை ஏற்றுக்கொண்டு காளஹஸ்திக்குச் சென்றார். அங்கு கோயிலுக்கு முத்திரை அதிகாரியாகவும் ஆனார்.

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் கோபுரம்

ஸ்ரீகாளஹஸ்தி கோயில் பறவைப்பார்வை

காளஹஸ்தி கோயில் என்று வரும்போது, அந்தக் கோயிலைப்பற்றிச் சுருக்கமாகவாவது பார்க்கவேண்டும். இந்தக் கோயில் திருப்பதி போகும் வழியில் சுமார் 40 கிமீ தூரத்தில் இருக்கிறது. வேடுவன் கண்ணப்பன் வரலாறு நாம் எல்லோரும் அறிந்ததுதான்.

பொத்தப்பி நாட்டில் உடுப்பூர் என்ற ஊரில் நாகன் என்ற வேடர் குலத் தலைவனுக்கும் அவன் மனைவி தத்தைக்கும், பல ஆண்டுகள் குழந்தை இல்லாமல் முருகன் அருளால் பிறந்தவன் திண்ணன்.  திண்ணனுக்கு போர்ப்பயிற்சி எல்லாம் அளித்து உரிய வயது வந்த பிறகு தன் நாட்டுக்குத் தலைவன் ஆக்கினான் நாகன். 

குலவழக்கப்படி தன் நண்பர்கள் காடன், நாணன் ஆகியோருடன் வேட்டையாடச் சென்றான் திண்ணன்.  வேட்டையின்போது வலையில் சிக்கிய காட்டுப்பன்றி வலையை அறுத்துக்கொண்டு ஓட, விடாது அதனைத் துரத்தி காட்டுப் பன்றியைப் பிடித்தார் திண்ணன். அவரது வலிமை கண்டு நண்பர்கள் மகிழ்ந்தனர். பிறகு களைப்பு மேலிட்டு, வேட்டையாடிய பன்றியைத் துண்டு துண்டாக்கி  பக்குவம் செய்தனர். அருகிலிருந்த மலையைக் கண்ணுற்ற திண்ணன் மனதில் சொல்லவொண்ணாத மகிழ்வு உண்டானது. அது எதனால் என்று நாணனைக் கேட்க, நாணன், இந்த காளத்தி மலையில்தான்  குடுமித்தேவர் என்ற சாமி இருக்கிறார் என்று சொல்ல, அவரைக் கும்பிட இருவரும் மலைமீது ஏறிச் சென்றனர். குடுமித்தேவரை (சிவலிங்கம்) கண்டபோது அதன் மீது பச்சிலைகளும் மலர்களும் இருக்கக் கண்டனர். நாணன், இந்த சிவலிங்கத்தை சிவகோசாரியார் என்பவர் தினமும் பூசை செய்கிறார், தான் முன்பு கண்டிருக்கிறேன் என்று சொல்ல, காட்டில் தனியாக இருக்கும் சிவனுக்கு பசி எடுக்காதா என்று யோசித்து, திண்ணன் நாணனுடன் மலைமீது கீழிறங்கி, காடன் தயார்செய்துவைத்த பன்றிக் கறியையும், அருகே ஓடிக்கொண்டிருந்த பொன்முகலி ஆற்றின் நீரையும் எடுத்துக்கொண்டு மலை மீது ஏறி, வழியில் காட்டுப்பூக்கள் சிலவற்றைப் பறித்துக்கொண்டு குடுமித்தேவர் இடத்தை அடைந்தனர். இடத்தைச் சுத்தம்செய்து நீரை உபயோகித்து சிவலிங்கத்தைச் சுத்தம்செய்து, காட்டுப்பூக்களை அவர் மேல் தூவி, பிறகு பன்றி இறைச்சியை அவருக்கு உணவாக வைத்தனர். திண்ணனுக்கு இறைவன்மீது அபார அன்பு பெருகிவிட்டது.  இரவு அவரைக் காவல் காத்து, பிறகு விடியற்காலையில் அவருக்கு ஏதாவது உணவு எடுத்துக்கொண்டுவரச் சென்றார். அவருடைய நண்பர்கள் காடன் மற்றும் நாணன், இவர் திரும்பவும் ஊருக்கு வராமல் காட்டில் இருப்பது கண்டு வருந்தி, திண்ணனின் பெற்றோரிடம் சொல்லச் சென்றனர். 

இதற்கிடையில் காலையில் ஆகம பூசை செய்யவந்த சிவகோசாரியார், இறைச்சித் துண்டுகள் கிடப்பதைக் கண்டு மனம்வருந்தி, அவற்றைத் தள்ளிச்சுத்தம்செய்து பூசை செய்துவிட்டுச் சென்றார். அன்றைக்கும் வேட்டையாடி இறைச்சியை திண்ணன் குடுமித்தேவருக்கு சமர்ப்பித்தார். மறுநாள் காலையில் வந்த சிவகோசாரியார், யார் இப்படி இறைவன் இடத்தை தினம் அசுத்தம் செய்வது என்று மனம் வெதும்பி, மீண்டும் சுத்தம் செய்து ஆகம் பூசை செய்து அகன்றார். இப்படி சில நாட்கள் நடக்க, சிவகோசாரியாருக்கு மனவருத்தம் அதிகமாகி இரவு தூக்கம் வரவில்லை. அன்று அவர் கனவில் ஈசன் வந்து, நாளை அங்கு மறைந்து நின்று நடப்பதைப் பார் என்று உரைத்தான். 

மறுநாள் திண்ணன், இறைவனுக்குப் படைக்க இறைச்சிகளோடு வந்தபோது, காளத்தி நாதர், தன்னுடைய திருக்கண்ணில் இரத்தம் பெருகுமாறு செய்தார். கையால் துடைத்தும் இரத்தம் தொடர்ந்து பெருகுவதை அறிந்து வருந்தினார். உடனே அவர் மனதில் ‘ஊனுக்கு ஊன்’ என்ற பழமொழி நினைவுக்கு வர, தன்னுடைய ஒரு கண்ணை அம்பினால் அகழ்ந்து எடுத்து காளத்திநாதரின் இரத்தம் பெருகும் கண்ணில் வைக்க, இரத்தம் நின்றது. உதிரம் நின்றதைக் கண்டு திண்ணனுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சந்தோஷத்தில் ஆடினார். 

இறைவன், திண்ணனது அன்பை சிவகோசாரியார் முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்து மற்றொரு கண்ணிலும் உதிரம் பெருகச் செய்தான். இதைக் கண்டு திகைத்த திண்ணன், இதனைச் சரி செய்ய தன்னுடைய இரண்டாவது கண்ணையும் பறித்து இறைவனுக்கு அப்பிவிட நினைத்தார். கண்ணைப் பறித்தால் எங்கு அப்புவது என்று எப்படித் தெரியும்? அதனால் அடையாளத்துக்கு தன் கால் பெருவிரலை இரண்டாவது கண்ணில்வைத்து, அம்பை எடுத்து தன்னுடைய இரண்டாவது கண்ணில் வைக்க, காளத்திநாதர், ’நில்லு கண்ணப்ப’ என்று மூன்று முறை சொல்லி திண்ணனுக்குக் காட்சி கொடுத்தார். இறைவன் திருவருளினால் இழந்த கண்ணை திண்ணன் பெற்றார். 

அன்று முதல் திண்ணன், கண்ணப்ப நாயனார் என்று அழைக்கப்பட்டார். தினமும் பூசை செய்தும் தன்னால்காணமுடியாத இறைவனை , சில நாட்கள்பூசை செய்து திண்ணன் கண்டுவிட்டாரே என்று சிவகோசாரியார் ஆச்சர்யப்பட்டார். பூசை மாத்திரம் இறைவனின் அருகில் நம்மைச் சேர்க்காது. அது மனமொப்பிய அன்புவடிவமான பூசையாக இருக்கும்போதுதான் இறைவனை நம்மிடம் ஈர்க்கிறது என்று புரிந்துகொண்டார் சிவகோசாரியார். 

எண்ணிறைந்த கடவுளருக்கு இடும் உணவு கொண்டு ஊட்டும்

வண்ண எரி வாயின் கண் வைத்தது எனக் காளத்தி

அண்ணலார்க்கு ஆம் பரிசு தாம் சோதித்து அமைப்பதற்குத்

திண்ணனார் திருவாயில் அமைத்தார் ஊன் திரு அமுது 

காளத்திநாதருக்கு, திண்ணன் எப்படி அன்போடு உணவைப் படைத்தான் என்று விளக்கும் பதிகம் இது. சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில், கண்ணப்பநாயனார் புராணத்தில் வரும் பாடல் இது. 

பொருள்: முப்பத்து முக்கோடி தேவர்களுக்குப் படைக்கப்படும் உணவை (இறைச்சியை) எடுத்து, வேள்வித்தீயில் இடுவதுபோல, காளத்திநாதன் வாயில் அன்புடன் படைத்தார். எப்படிப் படைத்தார்? காளத்திநாதனுக்கு உகந்த உணவு இதுதானா என்று தன்னுடைய வாயில் வைத்துச் சுவைத்துப் பார்த்து, இது அவருக்கு ஏற்றது என்று கண்டுகொண்ட பிறகு காளத்திநாதன் திருவாயில் இறைச்சியைப் படைத்தார். 

விளக்கம்: அண்ணலார்க்கு ஆம் பரிசு – காளத்திநாதனுக்கு உகந்த உணவு. திண்ணனார் திருவாயில் அமைத்தார் – தன்னுடைய வாயில் சுவைத்து சரியாக இருக்கிறதா என்று சோதித்தார்.  ஊன் திரு அமுது – இறைச்சி. ஆனால் இறைவனுக்குப் படைக்கப்படுவதால் திருஅமுது ஆயிற்று. வண்ண எரி வாயின் கண் வைத்தது – வேள்வித் தீயில் ஆஹுதி கொடுப்பது போல 

கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பிற் காணும் நேர்பாடு
எண்ணுவர் தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி
உண்ணிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர்
 

பொருள்: ஒரு கண்ணில் ஏற்பட்ட குறை நீங்க தன் கண்ணை எடுத்து அப்பிய திண்ணனார், அன்பர்களுக்குத் தலைவனான சிவபெருமானின் இன்னொரு திருக்கண்ணில் ஏற்பட்ட இடர்ப்பாடு நீங்க, அந்தத் திருக்கண்ணில் தன்னுடைய இடக்காலை ஊன்றி, மனதில் மிகுந்த அன்புடன், ஒரு அம்பினால் திண்ணன் தன் இன்னொரு கண்ணில் வைக்க, அதைப் பொறுக்க இயலாத தேவர்க்கும் தேவரான சிவபெருமான் திகைத்துப்போனார். 

விளக்கம்: ஒரு தனிப் பகழி – ஒரு அம்பு, கண்ணில் ஊன்றத் தரித்திலர் – தன் இன்னொரு கண்ணில் திண்ணன் அம்பை ஊன்ற, பொறுக்க முடியவில்லை-காளத்திநாதனால்  உண்ணிறை விருப்பு-உள்ளார்ந்த விருப்பத்துடன் சேக்கிழார், கண்ணப்ப நாயனார் புராணத்தை 185 பாடல்களால் பாடியுள்ளார். எனக்கு ஒவ்வொரு பாடல்களையும் பொருளுடன் எழுத ஆசை. அதற்கு இடமில்லை. 

பிரபந்தப் பாசுரப் பொருள் என்ற தலைப்பில் இங்கு கண்ணப்ப நாயனார் புராணமா என்று யோசிக்கிறீர்களா? இறைவன் ஒருவனே. அவனை பணத்தாலோ, பூசைகளாலோ இல்லை மந்திரங்களினாலோ மாத்திரம் அடைய இயலாது. உள்ளார்ந்த அன்புடன் கூடிய பக்தி வேண்டும். எந்தப் பாசுரம் ஆனால் என்ன? இல்லை பதிகம் ஆனால் என்ன? நமக்கு அது பக்தி விளையச் செய்யும் என்றால் அவற்றையும் இங்கு கொடுக்கத்தான் ஆசை. ஆனால் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குப் பொருத்தமாக இருக்கவேண்டும். அவ்வளவுதான். 

அடுத்த வாரம் தொடர்வோம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------


நான் படிச்ச கதை

பானுமதி வெங்கடேஸ்வரன்

சமீபத்தில் பிரபலமடைந்த ஒரு கோவிலால் வளர்ந்த ஒரு சிறு ஊர். அதனால் அந்த ஊருக்கு கிடைத்த அனுகூலங்களில் ஒன்றாக அந்த ஊரின் சிறு ரயில் நிலையமும் பெரிதாகிறது. அதற்கு ஒரு ரயிலில் வந்து இறங்கிய குரங்கு ஒன்று அந்த ரயில் நிலையத்தின் நிரந்தர குடியாளாகி விடுகிறது. அதற்கு வானரூ என்று பெயர் வைத்து, அது இறந்ததும், தங்களுக்கு நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் இறந்தது போல அவர்கள் அதன் இறுதிச் சடங்கை நடத்துகிறார்கள். அதனோடு அந்த ரயில் நிலையத்தில் பணி புரிபவர்களின் பந்தம், எளிய மனிதர்களின் பெரிய மனது இவைகளை மிகவும் சிறப்பாக விவரித்திருக்கிறார் எஸ்.ரா. 

 தங்கள் பொறுப்பு

ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் 

சக்கையன் தலையில் கட்டியிருந்த சிவப்புத் துண்டினை அவிழ்த்து கையில் ஏந்தியபடி ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் “வானரூ இறந்து போயிட்டாரு.. தானம் பண்ணுங்க“ என்று கேட்டுக் கொண்டிருந்தான். வானரூ யார் என எவரும் கேட்டுக் கொள்ளவில்லை. 

ஒரு சிலர் சில்லறைக் காசுகளைத் துண்டில் போட்டார்கள். ஒருவர் பேண்ட் பாக்கெட்டிலிருந்து மணிபர்ஸை வெளியே எடுத்துத் திறந்து பார்த்துவிட்டு இல்லை என்று கையை விரித்தார். 

சென்னையிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் வரவில்லை. அதில் நிறையக் கூட்டம் வந்து இறங்கும். அவர்கள் நிச்சயம் வானரூவிற்காகத் தானம் கொடுப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான். வானரூ என்று அவர்கள் அழைத்த குரங்கு காலையில் இறந்து போனது. மனிதர்களைப் போலவே அதற்கும் வயது மூப்பு. சில நாட்களாகவே பாதிக் கண்ணைத் திறந்தபடி சுருண்டுகிடந்தது. இன்று காலை இறந்துவிட்டது. முதலாவது பிளாட்பாரத்திலுள்ள தண்ணீர்த்தொட்டியை ஒட்டிய அரச மரத்தில் அந்தக் குரங்கு வசித்தது. 
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் அக்குரங்கு பயணிகளில் ஒருவரைப் போல ரயிலில் தான் வந்து இறங்கியது. நீண்ட பிளாட்பாரத்தின் முடிவு வரை நடந்து திரிந்தபின்பு அது ரயில் நிலையத்தின் கொடிக்கம்பத்தில் ஏறிக் கொண்டு விளையாட்டுக் காட்டிய நாள் சக்கையன் நினைவில் இருந்தது. ரயில்நிலையத்தில் அலையும் நாயைப் போல, பூனையைப் போல அந்தக் குரங்கும் நிலையவாசிகளில் ஒருவராகியது.


வானரூ பயணிகள் வைத்திருந்த உணவுப்பண்டங்களைப் பிடுங்கிக் கொண்டு போய்க் கழிப்பறைச் சுவரில் அமர்ந்து சாப்பிடுவதைக் கண்டிருக்கிறான். சில பயணிகளின் துணிப்பைகளை, வாழைப்பழங்களை, பூமாலைகளை அது பிடுங்கிச் சென்றிருக்கிறது. தனது கழுத்தில் பூமாலையைத் தானே சூடிக் கொண்டு அக்குரங்கு பிளாட்பாரத்தில் சுற்றிய போது பயணிகளில் சிலர் அதை வணங்கினார்கள்.

வானரூ என அதற்குப் பெயர் வைத்தவன் பொன்னுதுரை. ஒரு நாள் ரயில்வே போலீஸ்காரனின் தொப்பியை பிடுங்கிக் கொண்டு போன போது “வானரூ குடுத்துரும். கேட்கிறவிதமா கேட்கணும்“ என்று பொன்னுதுரை சொன்னான். அவர்கள் குரங்கின் பின்னால் கையேந்திபடியே ஒடினார்கள்.


வானரூ போலீஸ்காரரின் தொப்பியைத் தரவில்லை. தனது தலையில் அணிந்து கொண்டு சிவப்பு ஒடு வேய்ந்த ஸ்டேஷன் மாஸ்டர் அறையின் மேல் நடந்து வேடிக்கை காட்டியது. தொப்பியைப் பல்லால் கடித்துத் தின்ன முயன்றது. பின்பு ரயில்வே தண்டவாளத்தில் வீசி எறிந்தது.

அந்த ரயில் நிலையம் புகழ்பெற்ற கோவில் ஒன்றின் அருகிலிருந்தது. ஆகவே செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்குபவர்களின் எண்ணிக்கை திரளாக இருக்கும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் கோவில் இவ்வளவு புகழ்பெறவில்லை. ஆனால் திடீரெனப் புகழ்பெறத் துவங்கி வடமாநிலங்களில் இருந்து கூடப் பக்தர்கள் வந்து குவிய ஆரம்பித்தார்கள்.

அதன்காரணமாக அந்த ஊரில் புதிய லாட்ஜ்கள். உணவகங்கள். பூக்கடைகள். டீக்கடைகள் பெருகிப் போயின. ஒரு நாளைக்கு ஐம்பது பேருக்குள் வந்து போய்க் கொண்டிருந்த ரயில் நிலையம் ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்து போகுமிடமாகியது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ரயில் நிலையத்தையும் விரிவு படுத்திவிட்டார்கள். இரண்டு பிளாட்பாரங்கள் இருந்த ரயில் நிலையத்தில் புதிதாக இரண்டு பிளாட்பாரங்கள் உருவாக்கப்பட்டதுடன் அதிவேக ரயில்கள் நிற்கும் வசதியும் ஏற்படுத்தபட்டது.

சக்கையன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ரயில் நிலையத்தின் போர்ட்டராக இருந்தான். அப்போது இரண்டே போர்ட்டர்கள் தான் வேலையில் இருந்தார்கள். இன்றைக்கு எட்டு பேர் இருக்கிறார்கள். அதுவும் நாலாவது பிளாட்பாரத்திலிருந்து படிக்கட்டுகள் மூலம் தான் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வர முடியும் என்பதால் சுமை தூக்குபவர்களின் உதவி அவசியம்.

வானரூ, ரயில் நிலையமே தனக்குத் தான் சொந்தம் என்பது போலச் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தது. வாழைப்பழத்தை தின்றுவிட்டு அதன் தோலை வானை நோக்கி வீசியடித்தது. அவர்கள் விரட்டும் போது கண் இமைக்கும் நேரத்தில் தாவி உயரத்திற்குப் போய்விடும். வேடிக்கை செய்வதில் அதற்கு விருப்பம் அதிகம். ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் புகுந்து காகிதம் எதையாவது தூக்கிப் போய்விடும். தன்னை விரட்ட முயற்சிப்பவர்களைப் பல்லிளித்து முறைப்பது அதன் வழக்கம்.

தொல்லை தரும் அக்குரங்கை ரயில் நிலையத்திலிருந்து துரத்தியடிக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் புகார் அளித்திருக்கிறார்கள். ரயில்வே காவலர்களும் அதற்காகப் போராடினார்கள். ஆனால் முடியவில்லை.

ஒருமுறை மயக்கமருந்து கலந்த ஊசியைப் போட்டு அதை மயங்க வைக்க முயன்றும் தோல்வியுற்றார்கள். அதற்காக வந்திருந்த கால்நடை மருத்துவரின் மீது வானரூ கல்லை எறிந்த போது அது மனிதர்கள் கோபத்தை வெளிப்படுத்துவது போலவே உக்கிரமாக இருந்தது. 

ரயில்வே கேண்டீன் நடத்தும் கணேசன் மீதமான உணவுகளை வானரூவிற்குக் கொடுக்கத் துவங்கிய பிறகு அது பயணிகளின் உணவுப்பொருட்களைப் பிடுங்குவதில்லை. தாகம் எடுத்த நேரங்களில் ரயில் நிலைய தண்ணீர் குழாயை திருகி தண்ணீர் குடிக்கப் பழகியிருந்தது.

வடக்கிலிருந்து வரும் ரயில் பெட்டியின் மீது தாவி அமர்ந்து ரயிலோடு கொஞ்ச தூரம் பயணம் சென்று பின்பு தாவி ரயில்வே கேட்டில் நிற்பதை வழக்கமாக வைத்திருந்தது.

ரயில்வே பிளாட்பாரத்தில் உறங்குகிறவர்களின் செருப்பை எடுத்துப் போய் மரத்தில் தொங்க விட்டது. பிளாட்பாரத்தைத் தூய்மை செய்யும் மங்கம்மாள் அதனைத் தனது சொந்த மகனைப் போல நடத்தினாள். “இப்படி வந்து உட்காருய்யா“ என்று அவள் அழைத்தால் வானரூ அருகில் வந்து அமர்ந்து கொள்ளும். வெற்றிலை போட்டபடியே அவள் தனது வீட்டுக்கதைகளை, கடந்தகால நினைவுகளை வானரூவிடம் பகிர்ந்து கொள்வாள். வானரூ செய்யும் சேஷ்டைகளை ரசிப்பாள். அந்த ரயில் நிலையத்தில் வாழும் ஒருவராக வானரூவை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

மழைக்காலத்தில் வானரூவின் இயல்பு மாறிவிடும். அதற்கு இடிச்சப்தம் கேட்டால் பிடிக்காது. அது போன்ற நாட்களில் ஸ்டேஷன் மாஸ்டர் அறைக்குள் வந்து ஒடுங்கி நிற்கும். தொடர்ந்து மழை பெய்யும் நாட்களில் அது மழையை வெறுப்பதைக் காட்டுவது போலப் பற்களை இறுக்கியபடி நிற்கும். வெயில் கண்டால் ஆனந்தம் கொண்டுவிடும். வெளிச்சத்தை அள்ளிக்குடிக்க முயல்வது போலக் கைகளை நீட்டும். விளையாடும்.

யாரோ ஒரு சிறுமி பிளாட்பாரத்தில் விட்டுப் போன பிளாஸ்டிக் பொம்மை ஒன்றை கையில் வைத்துக் கொண்டு சில நாட்கள் வானரூ விளையாடிக் கொண்டேயிருந்தது. அந்தப் பொம்மையை மரத்தின் உச்சிக்கே கொண்டு போய் வைத்துக் கொண்டது. பின்பு ஒரு நாள் அதனை வீசி எறிந்துவிட்டது. எதனால் அப்படி வீசி எறிந்தது எனத் தெரியவில்லை. 

மனிதர்களைப் போலவே வயது மூப்பு குரங்கினையும் பாதிக்கும் என்பதைச் சக்கையன் கண்கூடாகப் பார்த்தான். பிளாட்பாரத்தில் வானரூ நடக்கும் போது தளர்ந்த வயசாளி செல்வது போல மாறியது. முன்பு தேங்காய் முடியை அது லாவகமாக உடைப்பதைப் பார்த்திருக்கிறான். இப்போது அது தேங்காய் முடியை உடைக்க முடியாமல் உருட்டி விளையாடியது. மனிதர்களைப் போலவே அதற்கும் சுவை திரிந்துவிட்டது. பளுப்பேறிய அதன் கண்கள் மங்கிவிட்டதைப் போலச் சதா காற்றில் கைகளை அசைத்துக் கொண்டிருந்தது.

அதுவும் கடந்த ஐந்தாறு நாட்களாக வானரூ தலையை ஒருபக்கம் சாய்த்தபடி சோர்வாகக் கழிப்பறை தகரத்தின் மீது அமர்ந்திருந்தது. சாப்பிடக் கொடுத்த எந்த உணவையும் எடுக்கவில்லை. சில நேரம் முற்றிய வெயில்பட இரும்பு பெஞ்சில் சுருண்டு படுத்துக்கிடந்தது.

இதனைக் கண்ட கேண்டீன் கணேசன் சொன்னார் “சாகப்போற நாளு குரங்குக்கு  முன்னாடியே தெரிஞ்சிரும். அது சாப்பிடாம கிடந்து செத்துப் போகும்னு கேள்வி பட்டிருக்கிறேன்“. அவர் சொன்னது நிஜம் என்பது போலவே வானரூ உணவை விலக்கிப் படுத்தே கிடந்தது. 

மங்கம்மாள் ஒருநாள் அதனருகில் சென்று தனது கைகளால் தடவிவிட்ட போது அதன் உடல் நடுங்கியது. நோயுற்ற கைக்குழந்தைக்குப் பிசைந்த உணவை ஊட்டிவிடுவது போல அவள் இட்லியை பிய்த்து எடுத்து “இதை மட்டும்  சாப்பிடுய்யா“ என்று ஊட்ட முயன்றாள். குரங்கு வாயைத் திறக்கவில்லை. ஆனால் அதன் கண்களில் நீர் கசிந்தது. அவள் குரங்கின் நெற்றியை தடவிவிட்டபடி “சொகமாயிரும்“ என மனதிற்குள் ஏதோ பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள்.

இதன் மறுநாள் வானரூ இறந்து போனது.


யார் முதலில் பார்த்தார்கள் என்று தெரியவில்லை. வானரூ செத்துப் போயிருச்சி என்ற தகவல் வந்த போது சக்கையன் இரண்டாவது பிளாட்பாரத்தில் இருந்தான். அவசரமாக முதல் பிளாட்பாரத்திற்கு வந்து பார்த்தபோது தண்ணீர்தொட்டியருகே குரங்கு இறந்து கிடந்தது. ஒடுங்கிய முகம். ஒரு கண்ணில் பாதித் திறந்திருந்தது. மறு கண் மூடியிருந்தது. அசைவற்ற அதன் உடலை சக்கையன் தொட்டுப்பார்த்தான். ரயில்பெட்டிகளில் தாவியோடிய அதன் விளையாட்டுதனம் நினைவில் வந்து போனது.

மங்கம்மாள் எங்கே போனாள் என்று தான் சக்கையன் முதலில் தேடினாள். அவளால் இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாது. மனது உடைந்து போய்விடுவாள். மங்கம்மாள் விடுப்பு எடுத்துக் கொண்டு மகள் ஊருக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள்.

கேண்டீன் நடத்தும் கணேசனிடம் தகவல் சொன்ன போது அவர் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லும்படி சொன்னார். இதற்குள் தகவல் அறிந்த ஆட்டோ ஒட்டுனர்கள். பக்கத்து டீக்கடை நடத்துபவர், ரயில் நிலைய பேப்பர்கடை நடத்துபவர், போளி விற்பவர் எனப் பலரும் பிளாட்பாரத்தில் திரண்டிருந்தார்கள்.

போர்ட்டர்களில் சிலர் இறந்த குரங்கை குப்பை வண்டியில் அள்ளிக் கொண்டு போய்ப் போட வேண்டும் என்று பேசிக் கொண்டார்கள். செத்துகிடந்த நாய்களை அப்படித் தானே அப்புறப்படுத்துகிறார்கள் என்றார் பேப்பர் கடை நடத்துகிறவர்.

ஆனால் கேண்டீன் நடத்தும் கணேசன் அதனை ஏற்கவில்லை

“நாம தான் வானரூவை அடக்கம் பண்ணணும். “ என்றார்.

சக்கையனும் அதற்கு ஒத்துக் கொண்டான். பாடைகட்டி மனிதர்களைப் போலச் சுடுகாட்டிற்குக் கொண்டு போய்ப் புதைக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தார்கள்.

“நான் ஒரு பட்டுத்துண்டு வாங்கிட்டு வந்து சாத்துறேன்“ என்றான் போர்ட்டர் சேகர்.

“நான் பாடைரெடி பண்ணுறேன்“ என்றான் திரவியம்.

சக்கையன் வசூல் பண்ணி காசு சேர்த்துக் கொடுப்பதாகச் சொன்னான். ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஐம்பது ரூபாய் கொடுத்தார். அத்தோடு "ரெண்டு மணி எக்ஸ்பிரஸ் வர்றதுக்குள்ளே பாடி எடுத்துருங்க." என்று ஆலோசனையும் சொன்னார்.

ரயில்வே காவலர் முத்துசாமி குரங்கின் இறப்பு என்றாலும் அதைப் பற்றிய தகவல்களை நாம் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று சொல்லி வயது மூப்பின் காரணமாகக் குரங்கு இறந்துவிட்டது. அதைப் பார்த்தவர்கள் பெயர் என்று சக்கையன், சேகர், திரவியம் பெயர்களை எழுதிக் கொண்டார். பின்பு தனது பங்கிற்கு இருபது ரூபாய் பணம் கொடுத்தார்.

பயணிகளில் ஒருவராக இருந்த வெள்ளைவேஷ்டி சட்டை அணிந்த மனிதர் மட்டும் “குரங்கு செத்துக்கிடப்பது நோய் பரவுவதற்குக் காரணமாகிவிடும். உடனே அதைக் கிளியர் பண்ணுங்க“ என்று ஸ்டேஷன் மாஸ்டரிடம் சப்தமிட்டார்.

“அந்தக் குரங்கு ரொம்ப நாளா இங்கே இருந்துச்சி சார்“ என்றார் ஸ்டேஷன் மாஸ்டர்.

“அதுக்காகச் செத்த குரங்கை வச்சி பூஜை பண்ணுவீங்களா“ எனக்கேட்டார் அந்த நபர்.

“அரை மணி நேரத்தில அடக்கம் பண்ண கொண்டுட்டு போயிடுவாங்க“ என்று ஸ்டேஷன் மாஸ்டர் உறுதி அளித்தபிறகே அந்த நபர் வெளியேறிப் போனார்.

இறந்தவர்களைக் குளிப்பாட்டுவது போல வானரூவை குளிக்க வைக்க வேண்டுமா எனச் சக்கையனுக்குத் தெரியவில்லை. திரவியம் அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி வானரூவை தூக்கிச் சிமெண்ட் பெஞ்சில் படுக்க வைத்தான். சேகர் வாங்கிவந்திருந்த பட்டுத்துண்டினை அதன் தலையில் சுற்றிவிட்டான். சக்கையன் வசூல் செய்த பணத்தில் சந்தனம் ஊது பத்தி, ரோஜா மாலை வாங்கி வந்திருந்தான். சந்தனத்தைத் தனது கையாலே வானரூவின் உடலில் பூசினான். மயிர் அடர்ந்த உடலில் சந்தனம் லேசாக ஒட்டியது. பின்பு ரோஜா மாலை அணிவித்தான். வானரூவின் தோற்றம் விநோதமாக இருந்தது.

பயணிகளில் சிலர் சிமெண்ட் பெஞ்சில் வைக்கபட்ட வானரூவிற்கு அஞ்சலி செலுத்தினார்கள். திரவியம் பாடையைத் தயார் செய்தான். சக்கையன் ஒரு நாவிதரை வரவழைத்திருந்தான். அவர் பிளாட்பாரத்தின் ஒரத்தில் உட்கார வைத்து சக்கையனுக்கு மொட்டை அடித்துவிட்டார். மழிக்கபட்ட தலையுடன் சக்கையன் வந்து நிற்பதைப் பார்த்த ரயில் நிலைய பணியாளர் பார்வதி கண்கலங்கிப் போனாள்.

“யக்கா …இதுக்கு நெத்திக்காசு வைக்கணுமா" எனப் பார்வதியிடம் கேட்டான் சக்கையன்.

வைக்க வேண்டும் என்று தலையாட்டினாள் பார்வதி. ஒற்றை ரூபாய் நாணயத்தை அதன் நெற்றியில் ஒட்டவைக்க முயன்றான். அது நிற்கவில்லை. சந்தனம் தொட்டு நெற்றிக்காசை ஒட்டினான்.

அது ஒற்றைக் குரங்கு. எங்கிருந்தோ அந்த ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அவர்களுடனே வாழ ஆரம்பித்து அங்கேயே தனது வாழ்வை முடித்துக் கொண்டுவிட்டது. இறந்தபின்பு மனிதன், குரங்கு என்று பேதமில்லை. இறந்த மனிதனை நினைவு கொள்வதற்கு அவன் குடும்பமாவது இருக்கும். இறந்த விலங்குகளுக்கு அதுவும் கிடையாது என்று பார்வதி நினைத்துக் கொண்டாள். 

வடக்கிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்தது. ரயில் பெட்டியிலிருந்து களைத்த முகத்துடன், கசங்கிய உடைகளுடன் ஆட்கள் இறங்கினார்கள். வழக்கத்தை விடவும் இருமடங்கு அதிகப் பயணிகள். திடீரெனப் பிளாட்பாரம் பரபரப்பாகியது. சிமெண்ட் பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்த வானரூவின் உடலை எவரும் கண்டுகொள்ளவில்லை.


சேகரும் சக்கையனும் பாடையின் முன்பக்கம் பிடித்துக் கொண்டார்கள். பின்பக்கம் பாடையைப் பிடிப்பதற்கு இன்னொரு ஆள் தேவைப்பட்ட போது பார்வதி தானே தூக்கி வருவதாகச் சொன்னாள். அவர்கள் நான்கு பேருமாகப் பாடையை ரயில்வே பிளாட்பாரத்தில் தூக்கிச் சென்றார்கள். விளையாட்டுதனங்களைக் கைவிட்ட வானரூ வானைப் பார்த்தபடி பாடையில் போய்க் கொண்டிருந்தது. அவர்கள் இறந்த குழந்தையைக் கொண்டு போவது போன்று மெதுவாக நடந்தார்கள்.

ரயில்வே பிளாட்பாரத்தை விட்டு இறங்கி கிழக்கே அவர்கள் நடக்கத் துவங்கிய போது நான்காவது பிளாட்பாரத்தை நோக்கி ஒரு கூட்ஸ் ரயில் வரும் சப்தம் கேட்டது. அவர்கள் இடுகாட்டில் வானரூவை புதைத்துவிட்டுத் திரும்பிய போது மணி மூன்றாகி இருந்தது. குடும்பத்தில் ஒருவரை அடக்கம் செய்து திரும்பியது போல அவர்கள் பசியை மறந்து துயர முகத்துடன் திரும்பினார்கள். கேண்டியன் கணேசன் அவர்களைச் சாப்பிட்டுப் போகும்படியாகச் சொன்னார். ஆனால் அவர்களில் எவரும் சாப்பிடவில்லை. 

ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உதிர்ந்து கிடந்த ரோஜா இதழ்களை ஒரு காகம் கொத்திக் கொண்டிருந்தது.

நாளை மங்கம்மாள் வந்தால் பெருங்குரலெடுத்து அழுவாள். தான் இல்லாமல் போய்விட்டோமே எனத் தலையில் அடித்துக் கொள்வாள். நெருங்கிப் பழகிய உயிரை பறிகொடுப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும். என நினைத்தபடியே சக்கையன் தனது வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.


தலையை மொட்டையடித்துக் கொண்டு நிற்கும் சக்கையனைப் பார்த்த அவனது மனைவி குழப்பமான முகத்துடன் கேட்டாள்.

“என்ன இப்படி வந்து நிக்குறீங்க, வேலைக்குப் போகலையா“

“தெரிஞ்சவர் ஒருத்தர் இறந்துட்டார். அதான் காரியத்துக்குப் போயிட்டு வர்றேன்"

“அதுக்கு நீங்க எதுக்கு மொட்டை போட்டீங்க"

“அவருக்கு உறவுனு யாருமில்லை". என்றபடியே குளிப்பதற்காகச் சென்றான்.

சக்கையன் மனைவி கோபமாகத் திட்டிக் கொண்டிருப்பது கேட்டது. சக்கையன் தலையில் பச்சைத் தண்ணீரை ஊற்றியபோது வானரூவின் விளையாட்டுதனங்கள் மனதில் தோன்றி மறைந்தன. 

“ஆறுமணி எக்ஸ்பிரஸ் வர்றதுக்குள்ளே ஸ்டேஷன் போனா தான் நூறு ரூபாயாவது பாக்க முடியும். இல்லேண்ணா கடன் கேட்டு எவன்கிட்டயாவது கையேந்தி நிற்க வேண்டியது வரும்" என்ற எண்ணமும் மனதில் தோன்றியது.

வானரூ இப்படி எவரிடமும் கடன் கேட்டதில்லை. கையேந்தியதில்லை.

“என்ன பொழப்பு ….நம்ம பொழப்பு“ எனச் சுய வருத்தம் கொண்டபடி சக்கையன் அவசர அவசரமாகக் குளிக்கத் துவங்கினான். 

https://www.youtube.com/watch?v=fvDobnR2g8s

40 கருத்துகள்:

  1. கோவிந்த பட்டர் - கங்கையில் சிவலிங்கம் - காளஹஸ்தி தொடர்பான விஷயங்கள் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தது, நெல்லை.

    கண்ணப்பனார் வரலாறும், சேக்கிழாரொம் பெரிய புராணத்தில் கண்ணப்பநாயனார் புராணம் பற்றி எங்கள் தமிழ் ஆசிரியை சங்கரவடிவேலு ஆர்வமுள்ளவர்களுக்குத் தனியாக உணர்வுபூர்வமாகச் சொல்லிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. அதில் நானும். அருமையான தமிழ் ஆசிரியை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன். ஆசிரியை பெயர் சர்க்கரைவடிவேலுவா இல்லை சக்கரவடிவேலுவா?

      நீக்கு
  2. இறைவன் ஒருவனே. அவனை பணத்தாலோ, பூசைகளாலோ இல்லை மந்திரங்களினாலோ மாத்திரம் அடைய இயலாது. உள்ளார்ந்த அன்புடன் கூடிய பக்தி வேண்டும். எந்தப் பாசுரம் ஆனால் என்ன? இல்லை பதிகம் ஆனால் என்ன?//

    டிட்டோ, நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்திதான் நோக்கம். மற்றபடி இறை உருவங்களெல்லாம் அதற்குத் துணை செய்பவை மட்டுமே.

      நீக்கு
  3. "உள்ளங்கை கொணர்ந்த நாயனார்" வரலாற்றைத் தெரிந்து கொண்டேன்.
    /உடனே தன் சீடர்களுடன் யாதவப் பிரகாசர், அந்தக் காட்டில் இளையாழ்வாரைத் தேடி எங்கும் காணக்கிடாமையால், என்னவாயிற்றோ தெரியவில்லையே என்ற துக்கத்துடன்/
    கொலை செய்யும் எண்ணத்துடன் இருந்த யாதவப்ரகாசருக்குத் துக்கமா? ஏன்? வாய்ப்பு நழுவிப் போனது என்றா?
    மழலைமங்கலம் எங்கே உள்ளது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளார்ந்த நோக்கம், பிறகு வெளிப்பார்வைக்கு சோகம் என எடுத்துக்கொள்ளலாம். யாதவப் பிரகாசர் வரலாறு முழுமையும் இந்தத் தொடரில் வரும்.

      தற்போது மதுர மங்கலம்

      நீக்கு
    2. காஞ்சீபுரத்திலிருந்து சுமார் இருபது கிமீ. எம்பார் அவர்களின் ஊர்.

      நீக்கு
  4. காளஹஸ்தி கோவிலுக்குச் சில வருஷங்கள் ...சில என்று சொல்ல முடியாது பல வருஷங்கள் முன்னர் சென்றிருக்கிறேன். நிழலான நினைவுகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்களும் சுமார் இருபது வருடங்கள் முன்பு சென்றதுதான்.

      நீக்கு
  5. நெல்லை எனக்கு ஒரே ஒரு டவுட்.....யாதவப்பிரகாசர், இளையாழ்வாரைக் கொல்ல நினைத்தவர். ஆனால் இங்கு காணவில்லை என்றதும் வருந்துவதாக வருகிறது. அப்படி நான் வாசித்திருக்கிறேனா என்ற யோசனையும் வந்தது. ஒரு வேளை நான்வாசித்த புத்தகத்தில் இதைச் சொல்லவில்லையோ என்றும் தோன்றுகிறது. இல்லை நான் மறந்துவிட்டேனோ? அலல்து ஒவ்வொரு வெர்ஷன்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவரைக் கொல்லக்கூடிய அளவு, அவர் இளையாழ்வார் தான் சொல்லும் அர்த்த விளக்கங்களைத் திருத்துவதனால் ஏற்பட்ட கோபம், ஆங்காரம். அதே சமயம் மற்றவர்கள் முன்னால் தானும் சோகமாக முகத்தை வைத்துக்கொள்ளவேண்டிய நிலை... என்பது என் புரிதல். ஆனால் யாதவப்பிரகாசரின் நூல் இல்லாமல் துறவறம் இல்லை. பிறகு வரும்.

      நீக்கு
  6. வீடியோ மூலம் கதை அறிமுகம் புதிய முயற்சியோ எ.பிக்கு? பானுமதி வெங்கடேஸ்வரன் நன்றாகக் கதைக் கருவை விளக்கியிருந்தார். பாசம் என்றால் அது உறவுகளுக்கு மட்டும் கட்டுப்பட்டதல்ல.
    அது எல்லைகளைத் தாண்டியும் செல்லும்.
    ஒரு குரங்குக்கும் அந்த பாசம் கிடைக்க முடியும். நல்ல கருத்து.

    பதிலளிநீக்கு
  7. பானுக்கா, நீங்கள் பகிர்ந்திருக்கும் எஸ் ராவின் கதை நன்றாக இருக்கிறது. உண்மையிலேயே எளிய மனிதர்கள் பிற உயிர்களிடம் காட்டும் அன்பு மிகவுமே வியக்க வைக்கும். நாம் செய்ய யோசிக்கும் செயல்களை எல்லாம் அவர்கள் சர்வ சாதாரணமாகச் செய்வார்கள் அதுவும் முழு அன்போடு, ஈடுபாடோடு.

    இக்கதையும் அதற்கு ஓர் உதாரணம்

    கீதா

    பதிலளிநீக்கு
  8. கதை நன்றாக இருக்கிறது என்றாலும், எழுதிய விதத்தில் என்னவோ ஒரு சின்ன குறை அல்லது சில விஷயங்கள் கோர்வையாக இல்லையோ? இல்லை அது என்னவென்று சொல்ல முடியலை என்னால்.

    நான் ஒன்றி வாசித்தேன் என்பது வேறு விஷயம்.

    அக்கா காணொளியில் நீங்க கடைசில சொல்வது அதை அப்படியே டிட்டோ செய்வதோடு கூடவே

    விலங்கின் மீதான அன்பு என்றோ, மனித நேயம் என்றோ சொல்வதற்கும் மேலாக, நீங்கள் சொன்னது போல் ஓர் உயிர் அடுத்த உயிருக்குக் காட்டுவது. அந்த உயிர்/ஆன்மாவுக்குக் கொடுக்கும் மரியாதை, அன்பு. வெளித்தோற்றம் தான் வேறு. உள்ளிருக்கும் ஆன்மாவுக்கு எந்த சமூகப்பாகுபாடுகளும் கிடையாதில்லையா... அப்படியும் அதைச் சொல்லலாமோ? இந்தத் தத்துவத்தை, நம்மைவிட பெரும்பான்மை எளிய மனிதர்களிடம் காணலாம். இது என்னுடைய தனிப்பட்ட பார்வை.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. பத்திரிகைகளில் கதைப் பிரசிரங்களைப் பார்த்தவர்கள் தானே நாம்?
    கதையின் தலைப்பையும் அந்தக் கதையை எழுதியவரின் பெயரையும் போடுவதில் ஒரு அழகு வேண்டும்.

    கதையின் பெயரை கொஞ்சம் பெரிய எழுத்துக்களிலும் எழுதியவரின் பெயரை அதற்குக் கீழே கொஞ்சம் சிறிய எழுத்துக்களில் போட்டால் அழகாக இருக்கும். ஆசிரியர் என்ற வார்த்தை தேவையில்லாதது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. இதெல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை என்றே தோன்றுகிறது. வணிக நோக்கம் கொண்ட இதழ்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் காணப்படுகிற அழைப்பிதழ்கள் இவற்றில்
      மட்டும் தான் இந்த பெரிய எழுத்து சின்ன எழுத்து மிகப் பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

      நீக்கு
    3. எபியை வார இதழ் தோற்றத்தில் கொண்டு வர நீண்ட நெடிய கனவு எனக்குண்டு. அதற்கு என்னாலான முயற்சிகளை ரொம்ப காலமாக மேற்கொண்டு வருகிறேன்.

      என் கதைகளை எபிக்கு அனுப்புகையிலேயே இந்த மாதிரி பிரசுர தோற்றச் சிறப்புகளை மேற்கொள்வதுண்டு.
      இந்த விஷயங்களில் அசகாய சூரரான ஸ்ரீராமும் சரியான புரிதலோடு
      அதற்கு ஈடு கொடுத்து பிரசுரம் செய்வதுண்டு.

      இன்றைய வியாழன் அப்படியெல்லாம் பட்ட பாடின் பிரதிபலிப்பு தான் என்று நான் நினைத்து கொண்டிருக்கையில் வியாழன் மட்டுமில்லை செவ்வாய், வெள்ளி என்று எபியை ஒரு பத்திரிகை தோற்றத்தில் வெளியிடுவதில் ஸ்ரீராம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதில் எனக்கு ஈடு இணையில்லாத பெருமிதம் உள்ளூர உண்டு.

      எங்களுக்கிடையேயான வாட்ஸாப் பரிமாறல் கூட வாசிப்பதையெல்லாம் எப்படி எபிக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்ற கோணத்திலேயே இருக்கும்.

      செழிப்பாக பூத்துக் குலுங்கும் இன்றைய எபியின் சிறப்பான தோற்றப் பொலிவுக்கு போட்ட உரமும் பலரின் உழைப்பும் பெரும் பெருமை வாய்ந்தது, ஸார்.

      நீக்கு
  10. /// கோவிந்த பட்டரின் பெயர் ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார்’ என்றே வழங்கப்படலாயிற்று...///
    அறியாத தகவல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் வரலாறு முழுவதும் இந்தத் தொடரில் வரும் துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  11. கண்ணப்ப நாயனார் புராணம்...
    புண்ணியம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிகங்களையும் அர்த்தத்தையும் படிக்க முடிந்ததா?

      நீக்கு
  12. விஷயமறிந்த ஒரு நிபுணருக்கு நிகராக சரளமாக நெல்லை அவர்கள் எழுதுகிற பாணி மிக நன்றாக இருக்கிறது. ரசித்துப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராமன் சார். குறைகள் இருப்பின் எழுத்த் தயங்காதீர்கள்.

      நீக்கு
  13. கண்ணாடி இல்லாததால்
    வாசிப்பதில் சிரமம்..

    நான் என்ன செய்வது!?..

    ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன்
    ரசித்த கதையைப் படிக்க
    முடியவில்லை...

    பதிலளிநீக்கு
  14. சிரமத்துடன் கதையை
    வாசித்து விட்டேன்...

    அதுவும் ஒரு ஆன்மா...
    அதுவும் இறைவன் திருவடிகளில்
    இளைப்பாறட்டும்...

    பதிலளிநீக்கு
  15. ​இடிந்து விழுந்த காளஹஸ்தி கோயிலின் கோபுரத்தை திரும்ப கட்டிவிட்டார்களா?
    ஆழ்வாரும் நாயன்மாரும் ஒன்றே, பக்தி மார்க்கத்தை பெருமை படுத்தியதால். கண்ணப்ப நாயனாரின் கதை அறிந்த ஒன்று. ஆயினும் இட்டதற்கு நன்றி. காரணம் அன்புடன் படைக்கும் எவ்வுணவாயினும் இறைவன் ஏற்றுக்கொள்வான், என்பது இறைச்சி உண்பவர்களை கொலை செய்யும் தீவிர வாதிகளுக்கு ஒரு அறிவுரையாக அமையும்.
    பா வெ அவர்களுக்கு நன்றி. வித்தியாசமான முறையில் வீடியோ விமரிசனம் செய்தமைக்கு பாராட்டுகள்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். பதிவை ரசித்ததற்கு நன்றி. எனக்கு ரசிக்கும்படி இருப்பதைத்தான் நான் பகிர நினைக்கிறேன்.

      //இறைச்சி உண்பவர்களை கொலை செய்யும் தீவிர வாதிகளுக்கு// இது அரசியல். சிறுபான்மையினர் என்ற போர்வையில் அதீதமாக காங்கிரஸ் ஆட்சியில் அடக்கி வைக்கப்பட்டவர்களுக்கு தற்போதுள்ள ஆட்சியில் மூச்சுவிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தீவிரவாதிகள் என்றாலே யார் என்பதை சிறு குழந்தைகூட அறியும் காலத்தில், அடக்கி வைத்திருந்த உணர்வுக்காக இந்த மாதிரி தவறுகளைச் செய்பவர்களையும் சட்டம் கடுமையாக கவனிக்கணும்.

      நீக்கு
  16. ​கதையில் வரும் ஸ்டேஷன் மேல்மருவத்தூர் போன்று வளர்ந்த ஒன்று. மதுராந்தகம் ராமர் கோயில் பக்கத்தில். செவ்வாடை பக்தர்கள் தினமும் வந்திறங்கும் ஸ்டேஷன். எக்ஸ்பிரஸ் ட்ரைன்கள் போலும் நின்று செல்லும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
  17. கண்ணப்ப நாயனார் கதை - எத்தனை முறை படித்தாலும் ஒரு வித சிலிர்ப்பு. எப்படிப்பட்ட பக்தி அவருடையது என்று வியக்க வைக்கும். தொடர்கிறேன்.

    எஸ். ரா. கதை - பிடித்திருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட் நாகராஜ் சார்.... இப்படிப்பட்ட பக்திபூர்வமான நிகழ்வுகளைப் படிக்கும்போது எனக்கும் சிலிர்க்கும். இப்போ நம்மிடம் அவ்வளவு உணர்வு பூர்வமான பக்தி இல்லையா இல்லை நாம் அப்படிப்பட்டவர்களை கவனிப்பதில்லையா என்று சந்தேகம் வரும்.

      நீக்கு
  18. எஸ்.ரா.வின் இந்தக் கதை முன்னர் படிச்சதில்லை. இப்போத் தான் படிச்சேன். பானுமதியின் விமரிசனமும் கேட்கவில்லை. பின்னர் வந்து கேட்கிறேன்.

    நெல்லையின் யாதவப்ரகாசர் பற்றிய தொடரும் அதை ஒட்டிய காளஹஸ்தி கோயில் கண்னப்ப நாயனார் பற்றிய பதிகங்கள் விளக்கங்கள் எல்லாமும் சிறப்பு. நல்ல சிரத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் நெல்லை விவரித்து வருகிறார். என்றாலும் யாதவப்ரகாசர் பற்றிப் படிக்கையில் பலருக்கும் கோபம் வரும் அவர் மேல். பின்னாட்களில் அவர் ஸ்ரீராமானுஜருக்கே சீடராகவும் ஆகிவிடுவார் என்பது தான் ஹைலைட் என நினைக்கிறேன்.

    காளஹஸ்தி கோயில் பல முறைகள் போயிருக்கோம். அநேகமாகத் திருமலை/திருப்பதி போயிட்டுத் திரும்பும்போதெல்லாம் காளஹஸ்தி போயிட்டு அங்கிருந்து வீட்டுக்குச் செல்வோம். அங்கே போயிட்டு வேறே எங்கேயும் போகக் கூடாது என்பார்கள். ஆகையால் கடைசியில் காளஹஸ்தி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம். குரு பரம்பரை நூல்களில் அவரை யாதவப் பிரகாசன், அவன் என்றெல்லாம்தான் எழுதியிருக்கிறார்கள். ஆனால் நான் அப்படி எழுதவில்லை. இராமானுஜருக்கு சிறிய வயதில் குரு ஸ்தானத்தில் இருந்திருக்கிறார். நிறையப் படித்த அறிஞர் என்பதெல்லாம் அவருடைய சிறப்புகள்.

      காளஹஸ்தி போய்விட்டு ஏன் வேற எங்கேயும் போகக்கூடாது என்கிறார்கள்? காரணம் சொல்றீங்களா?

      நீக்கு
  19. கீதா ரங்கன்... எத்தனையோ வேலைகளுக்கு இடையில் இந்த மாதிரி படங்களையெல்லாம் தயார் பண்ணியிருக்கீங்க. பாராட்டுகள். நீங்க பல்துறை வித்தகி.

    பதிலளிநீக்கு
  20. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

  21. //கங்கை நதியில் தனக்கு லிங்கம்கிடைத்தது கோவிந்த பட்டரை ஆச்சர்யப்படுத்திற்று.//

    கோவிந்த பட்டரிடம் சிவலிங்கம் வந்த காரணம்
    யாதவப் பிரகாசர் சொல்லி விட்டார்.
    கோவிந்த பட்டர் தெய்வாம்சம் பொருந்தியவர் தான். உண்மையான பக்தி செலுத்துவரிடம் இறைவன் வந்து விட்டார்.

    ‘உள்ளங்கை கொணர்ந்த நாயனார் இந்த வரலாறு அறிந்து இருக்கவில்லை. தகவலுக்கு நன்றி நெல்லை.

    பதிலளிநீக்கு
  22. கண்ணப்ப நாயனார் கதையை என் பேத்திக்கு சொல்வேன் அவளுக்கு சிறு வயதில் கதைகள் கேட்டபது பிடிக்கும்.
    திண்ணன் பேர் காரணம் குழந்தையை கையில் எடுக்கும் போது திண் என்று இருந்தான் குழந்தை அதனால் திண்ணன் என்று சொல்லும் போது திண் என்று திரும்ப சொல்லி சிரிப்பாள். அவள் அந்த கதையை நமக்கு திரும்ப சொல்லும் போது திண் என்று சொல்லி சிரிப்பாள் அவளுக்கு அந்த பேர் மிகவும் பிடித்து இருந்தது.

    கண்ணப்ப நாயனார் வரலாறு படங்கள் காளஹஸ்தி கோயில் படங்கள்
    தேவார பதிகம் அதன் விளக்கம் எல்லாம் அருமை.

    //இறைவன் ஒருவனே. அவனை பணத்தாலோ, பூசைகளாலோ இல்லை மந்திரங்களினாலோ மாத்திரம் அடைய இயலாது. உள்ளார்ந்த அன்புடன் கூடிய பக்தி வேண்டும். //

    உண்மை. நன்றாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  23. பானுமதி வெங்கடேஸ்வரன்பகிர்ந்த கதை நன்றாக இருக்கிறது. கதைகளுக்கு படங்கள் பொருத்தமாய் அமைத்து கொடுத்த கீதாவுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    வான்ரூ பெயர் வைத்த பொன்னுதுரை, பிரியம் காட்டிய மங்கம்மாள்
    என்று கதை பாத்திரங்கள் எல்லாம் அன்பான மனிதர்கள்.
    நீண்ட நாள் பழகி விட்டால் அவைகளை மறக்க முடியாது.

    பானுமதி வெங்கடேஸ்வரன் கதை சொல்லும் காணொளியும் பார்த்தேன், கேட்டேன். நன்றாக சொல்கிறார்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!