24.4.26

தன்னலம் இல்லா தலைவர்கள் பிறப்பார் ஆயிரத்தில் ஒரு நாளில்... 

SIR Form பற்றி நான் சரியாகப் படிக்காமல் வைத்திருந்த எண்ணங்கள் தவறு என்று கடந்த இரண்டு மூன்று நாட்களில் தெரிந்தது.

எப்படியும் வாக்களிக்க விட்டு விடுவார்கள் என்று எண்ணியிருந்த எண்ணம் நடக்கவில்லை.  ஆதார் காட்டிக் கொள்ளலாம், வேறு எதையோ ஒன்றை காட்டிக் கொள்ளலாம், நம் பெயர் லிஸ்ட்டில் இருப்பதுதானே என்று எண்ணியிருந்தேன்.  இங்கு இப்போது இருக்கும் வீட்டுப்பக்கம் வந்த வாக்குச்சீட்டு ஊழியர்கள் சரியாகச் சொல்லவில்லை.  நானும் முனைந்து விசாரிக்கவில்லை.  இப்போது கேட்டபோது / பார்த்தபோது எங்கள் பெயரே பட்டியலில் இல்லை என்பதைக் கண்டு உள்ளம் பூரித்தோம்!  (அவ்வ்வ்வ்வ்வ்)

இடையில் இன்னொரு கூத்தும் நடந்தது.  இளையவன் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தான்.  அதற்கு உறுதிப்படுத்தும் விசாரணைக்கான போலீஸ் விசாரணைதான் கடுப்படிக்கும் காமெடி. போனில் பேசிய போலீஸ் அதிகாரி முகவரி, அதற்கான அத்தாட்சிகள் உள்ளிட்ட கேள்விகள் கேட்டு விட்டு பின்னர் பேசுவதாகக் கூறித் தொடர்பைத் துண்டித்தார்.  இரண்டு நாட்கள் கழித்து மறுபடி பேசியவர் கேட்ட டாகுமெண்ட்ஸ் எங்களை திகைப்பிலாழ்த்தின என்றால் மிகையில்லை!

அதெல்லாம் தேவை இல்லை என்று எங்களுக்கு புரிகிறது.  ஆனால் காரியம் நடக்க வேண்டுமே என்று வீரியம் காட்டவும் முடியவில்லை!

அவர் கேட்ட ஆவணங்கள்.. (ஆணவங்கள்) பையன் சம்பந்தப்பட்ட ஆதார், பான்கார்ட் போன்றவை.  பிறப்புச் சான்றிதழ், மார்க் லிஸ்ட், மாற்றுச் சான்றிதழ் (TC), வாக்காளர் அடையாள அட்டை  இத்யாதிகளுடன்..

அவன் அப்பாவின், அதாவது என் ஆதார், பான், மாற்றுச் சான்றிதழ் (TC), மார்க் லிஸ்ட், ஓய்வு பெற்ற சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, 

பாஸின் (அம்மாவின்) இதேபோன்ற சான்றிதழ்கள்..   அப்புறம் ரேஷன் கார்ட்.

எனக்கென ஏதாவது வேலை போட்டு தரப்போகிறாரா?  இவருக்கெலாம் அடிப்படையே தெரியவில்லையே என்று ஆதங்கமாக இருந்ததது.  ரூல்ஸை மதிக்கிறோம் என்கிற பெயரில் கடுப்பேத்துவது.  ஆயினும் விதிகள் அப்படி சொல்லவில்லையே..  இதே பதிமூன்று வருடங்களுக்கு முன் பெரியவனுக்கு பாஸ்போர்ட் வாங்கும்போது எளிதாக சட்டென்று ஜஸ்ட் லைக் தாட் வாங்கி விட்டோம்.

எங்களுடைய வாக்காளர் அட்டையைத் தேடி எடுத்து விட்டோம்.  அப்போதுதான் இந்த வாக்களிக்கும் விஷயங்கள் பற்றியும் பேச்சு வார்த்தைகள் நடந்தது.  இளையவனின் வாக்காளர் அட்டை மட்டும் காணோம்,.  எனக்கு இரண்டு இருந்தது!!  எது நடப்பில் இருக்கிறது என்று தெரியவில்லை.  (பின்னர்தானே தெரிந்தது? இரண்டுமே நடப்பில் இல்லையென்று!) நடுவில் பழைய வீடு ஏரியாவின் கவுன்சிலர் எங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்களை வாங்கி இணையத்தில் அதற்குரிய பக்கத்தில் சோதித்து எங்கள் பெயர்களெல்லாம் இல்லை என்று சொல்ல, இளையவன் தானேயும் சோதித்து அதே தகவலை உறுதி படுத்திக் கொண்டான்.

காவல் அதிகாரியிடம் இந்தத் தகவலைச் சொன்னபோது அவர் சொன்னது, "அப்ளை பண்ணுங்க..  கிடைச்சதும் சொல்லுங்க.."

"லூஸுல விடு, அதிகபட்சம் ஒரு வாரமோ 15 நாட்களுக்குள்ளோ அவர்கள் நம் சம்பந்தப்பட்ட இந்த ஒப்புதலை அனுப்ப வேண்டும் என்று விதி இருக்கிறது.  எதை வைத்து அவர் ரிஜெக்ட் செய்வார்..  நாம் கிளெயிம் செய்யலாம்" என்று சொன்னேன்.  ஆனாலும் தயக்கம் இருக்கும்தானே...

அப்புறம் ஒருவழியாய் இவனை ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டார் அந்த அதிகாரி.  ஒவ்வொன்றையும் தீவிரமாக ஆராய்ந்தாராம்.  பாஸின் பெயர் பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில் வேறு பெயராக இருக்கிறதே..  இப்போது நீங்கள் வேறு பெயர் கொடுத்திருக்கிறீர்களே.. இவர்தான் அவர் என்று எப்படி நம்புவது என்று கேட்டிருக்கிறார்.  மகன் ஸ்ட்டேஷனிலிருந்து அலைபேச, நாங்கள் இங்கே அலைபாய்ந்தோம்.  எங்கள் கல்யாண அழைப்பிதழ், பாஸின் அப்பா இறந்ததும் எடுக்கப்பட்ட வாரிசு சான்றிதழில் ஆதாரம் இருக்க அதை வாட்ஸாப்பில் அனுப்பினோம்.

அவர் அடுத்த கேள்வி கேட்டார்.  "அம்மாவின் பெற்றோர் இருக்கிறார்களா?"

அம்மா அதாவது பாட்டி இருக்கிறார்.  தாத்தா இல்லை என்றதும் தாத்தாவின் டெத் சர்டிபிகேட் இருக்கா?" என்று கேட்டிருக்கிறார்.

"விடு..  அவன் மட்டும் ரிஜெக்ட் செய்யட்டும் பார்க்கலாம்..  இதெல்லாம் காரணமே இல்லை" என்று மகனிடம் போனில் சொன்னேன்.  அவனுக்குமே தெரிந்திருந்ததுதான்.

ஒருவழியாய் தன் விசாரணைகளை முடித்துக் கொண்ட அந்த அதிகாரி "பார்த்து பண்ணிட்டு போங்க" என்றாராம்.

இதற்கு நடுவில் "ஒரு 15 நாட்களுக்கு முன்னால் சொல்லி இருந்தால் கூட நானே உங்கள் பெயரை எல்லாம் இங்கே வைத்து இணையத்தில் ஏற்றி இருப்பேன்" என்று ஆதங்கப் பட்டார் பழைய வார்டு கவுன்சிலர்.

என்ன சொல்லி என்ன வோட்டு போடவில்லை.  பாஸ்போர்ட் அனுபவமும் புதுமை!

=======================================================================================================

தினமணி கதிர் நாவல் போட்டி முடிவார்கள் பற்றிய நடுவர்கள் கருத்திலிருந்து துமிலன், கொத்தமங்கலம் சுப்புவின் கருத்துகள் இங்கே...

துமிலன் 

அமரர் கல்கியும் நானும் மட்டுமே விகடனுடன் தொடர்பு கொண்டிருந்தஆரம்ப நாட்களில் அவர் சில  மாதங்கள் அரசியல் பிரசாரத்திற்காக வெளியூர்ப் பயணம் செய்வார்; சில மாதங்கள் சிறைக்கும் பயணமாவார். நான்தான் விகட னுக்கு வரும் எல்லாக் கதைகளையும், நாவல்களையும் படித்துப் பார்ப்பது வழக்கம்.

என்னிடமுள்ள ஒரு கெட்ட பழக்கம் கல்கிக்கு நன்றகத் தெரியும் தான் ஒரு கதை பாக்கி விடாமல், அதிலும் ஒரு வரி விடாமல் படித்துப் பார்த்துவிடுவேன்!

இப்படி எல்லாவற்றையும் படித்துப் பார்க்க வேண்டுமென்ற சபதம் 'கதிர்' நாவல் போட்டிக்கு வந்திருந்த நாவல்களைப் பார்த்ததும் மீண்டும் என்னுள்ளே எழுந்தது; படித்துப் பார்த்தேன்.

போட்டிக்கு வந்திருந்த நாவல்களில் நூற்றுக்குத் தொண்ணூற்றெட்டு சதவிகிதம் காதலையே, காதல் ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.  இவற்றில் சில முறைப் பெண், முறைப் பிள்ளை காதல் கதைகள். சில ஒருவன் ஒருத்தியையோ, அல்லது ஒருத்தி ஒருவனையோ கண்டதும் காதல் கொள்ளும் கதைகள்.  சில  ஒருவன் நான்கு பெண்களையோ, அல்லது ஒரு பெண் நான்கு வாலிபர்களையோ காதலிக்கும் கதை.

சுமார் முப்பது கதைகளில் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனுக்கும் ஒரு மாணவிக்கும் இடையே காதல் தோன்றுகிறது. அது அநேகமாக, கல்லூரிப் பேச்சுப் போட்டியின் போதோ, அல்லது வாசகசாலைகளில் சத்திக்கும்போதோ அது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துவிடுகிறது - பெட் ரோல்கூடத் தேவையில்லாமல்!

இப்படியெல்லாம் எழுதி உங்களுக்குக் கிசுகிசு மூட்ட நான்
விரும்பவில்லை. உண்மையில் இதை எழுத என் கைகூசுகிறது: மனம் வருந்துகிறது.  என்னுடன்வேலை செய்த என் சகாக்களிடமும் நான் இப்படித்தான் கூறுவேன்.  நிறைய புத்தகங்களைப் படிக்கச் சொல்லி வற்புறுத்துவேன்.  நாவல்களாயிருந்தாலும், சிறுகதைகளாயிருந்தாலும் இன்றைய வாழ்க்கையை, முடிந்தால் 1974-ம் வருடத்திய ஜனவரி மாதத்திய வாழ்ககை நிலைமையை அடிப்படையாக் கொண்டவையாக இருக்க வேண்டுமென்றும், ஏதாவது ஒரு கருத்து அவற்றில் புகுத்தப்பட்டாக வேண்டுமென்றும் நினைப்பவன் நான். காதலின் ஏமாற்றங்கள், கணவன் - மனைவி பரஸ்பர சந்தேகங்கள். குடும்பச் சிக்கல்கள் போன்றவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்ட எழுதுவது இக் காலத்திற்குப் பொருத்தமல்ல.

இந்த நாவல் போட்டியில் கலந்து கொண்ட இன்னும் சிலர், "நான் தற்காலத்திற்கேற்ப நியூ வேவ் நாவலை எழுதியுள்ளேன்!"  என்று தெரிவித்திருக்கிறார்கள்.  நியூவேவ் என்றால் விரசமானவை,  படுக்கையறைக்காட்சிகளைப் பற்றி எழுதுவது என்று அவர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நல்ல கருத்துக்கள், நல்ல படிப்பினை, அல்லது விஷய போதனை உள்ளவையாயிருந்தால் விரசமான அம்சங்கள் இருந்தாலும் அவை படிக்கக் கூடியவை என்று நான் சொல்வேன்.

உதாரணமாக ஹெரால்ட் ராபின்சன் என்ற அமெரிக்க ஆசிரியரின் நாவல்களில் சுமார் ஐம்பது பக்கத்துக்கு ஒன்று வீதம் மன்மத லீலைகள் விதம் விதமாக அடிபடும். ஆனால், அவற்றை மறைத்துக் கொண்டு கதையும் விறுவிறுப்பாக ஓடும்,. நாவலில் நாம் அமெரிக்க  'பெட்ஸி ' என்ற அவரது நாவலில் நாம் அமெரிக்க மோட்டார் தொழிலைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொள்கிறோம்..  ஹெய்லியின் ஏர்போர்ட் போன்ற நாவல்களிலிருந்து ஆகாய விமானங்களை பற்றி தெரிந்து கொள்கிறோம்.

தினமணி கதிர் நாவல் போட்டியில் பரிசுக்கு உரியனவாக தெரிந்தெடுக்கப்பட்டிருக்கும் மூன்று நாவல்கள் பற்றிய எனது அபிப்ராயம்.  

அவளுக்கென்று ஓர் இதயம்

இந்த நாவலில் அமைந்துள்ள உரையாடல், நடை எல்லாம் "நான் நூற்றுக்கு நூறு ஒரிஜினல்' என்று பறையறிவிக்கின்றன.செட்டிநாட்டைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நாவலில் -------------அல்லாத சில கிராமிய மக்களும் புகைப்படம் ----------- காட்டப்பட்டிருக்கிறார்கள்.

லங்காரி 

இது எனக்கு மிகவும் பிடிக்கிறது.  காரணம் இதன் ஆசிரியர் நாள்தோறும் பார்த்த ஆனால் பழகியிராத ஒரு பிரிவினரைப் பற்றி கதை புனைந்திருக்கிறார்.  சில இடங்களில் ஒரு கேமிராவையும், சில ஒளிப்பதிவுக் கருவிகளையும் வைத்துக்கொண்டே போனால் இது ஒரு திரைப்படமாகிவிடக் கூடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

கதையில் ஒரு நாகரீகக் கோடீஸ்வர குடும்பத்தைப் புகுத்தி கதையை கருத்துள்ளதாகவும் செய்திருக்கிறார். நடை சரளமாகவும், ஜிலுஜிலுவென்றும் இருக்கிறது.

துருவங்கள் சந்தித்தபோது..

இது பெண்களை பற்றி -----------பார்க்கும் பெணகளைப் பற்றி -------  பெண்மணியால் எழுதப்பட்ட அழகிய நாவல்.  இதில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது ஒரு தனிச்சிறப்பு. 

கொத்தமங்கலம் சுப்பு

நான் இடைவிடாமல் பத்திரிகைகள் படிப்பவன்.   விகடன், குமுதம் கதிர் துக்ளக் போன்ற பத்திரிகைகளில் வரும் கதை, கட்டுரைகளைக்  கூடியவரையில் படிப்பவன்.  ஆயினும் தொடர்கதைகளைத் தொடர்ந்து படிப்பவன் என்று சொல்லிக் கொள்ள முடியாது.  பொன்னியின் செல்வன், வாஷிங்டனில் திருமணம், நவகாளி யாத்திரை,  ஸ்ரீமான் சுதர்சனம், துப்பறியும் சாம்பு, பெண் மனம் போன்றவைதான் நான் தொடர்ந்து படித்த தொடர்கதைகள்.

எனக்குச் சேர்ந்தாற்போல பல நாவல்களைப் படிக்கும் பாக்கியம்  தினமணி கதிர் நாவல் போட்டியில்தான் கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனிலும்,  தினமணி கதிரிலும் நாவல், சிறுகதைப் போட்டிகளுக்கு நடுவராக இருந்த முறையில்  ஏராளமான நாவல், சிறுகதைகளை படித்திருக்கிறேன்.  காலத்தின் வேகம் எழுத்தை எப்படியெல்லாம் மாற்றுகிறது என்பதை இப் போட்டியில்  கண்டேன், ரசித்தேன்.  புதுமை என்ற பேரால் எழுத்தாளர்களின் மனதில் அடிக்கும் புயலையும் இந்நாவல்  போட்டியில் பார்த்தேன்.

சொல்லி வைத்தாற்போல பெரும்பான்மையான நாவலாசிரியர்கள் இப்போட்டியில் 'நியூ வேவ்' என்ற புதிய சாயத்தை தங்கள் கதைகளில் பூசப் பார்த்திருக்கிறார்கள்.  இத்தனை வயதற்குமேல் இந்த நியூ வேவ் என்ன செய்து விடப்போகிறது படித்து ரசிப்போம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் நியூ வேவைக் காணவே காணோம். தமிழ் மக்களின் பண்பாடு அத்தனை ஆசிரியர்களின் கைகளையும் இறுக்கிக் கட்டி விட்டதைக் கண்டேன்.  புதுப் பாதையில் போகவும் முடியவில்லை; பழைய பாதையை விடவும் முடியவில்லை - திண்டாடியிருக்கிறார்கள்.

ஒழுக்கம் கெட்டவர்கள் ஆண். பெண் ஆகிய இரு தரப்பிலும் பல கதைகளில் வருகிறார்கள்.  அவர்களில் பலர் தாயாகவும் இருக்கிறார்கள்.  என் உள்ளம் பல இடங்களின் படிக்க முடியாமல் துடித்தது.  ஒரு கதையில் மனோதத்துவ முறையில் ஒரு பையனை வளராமலே செய்து. மன வளர்ச்சி இல்லாத குழந்தையாக ஆக்கி, உலகத்தில் எல்லோரும் அயோக்கியர்கள், தான் இங்கு இருக்க வேண்டாம் என்று அந்தப் பையன் தற்கொலை செய்து கொள்வதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

உலகம் அவ்வளவு கெட்டதல்ல. நெருப்பு வைத்துப் பல குடிசைகள் எரிக்கப்பட்டன; அத்தனையும் புது வீடுகளாக மாறிவிட்டன. வெறுப்பை விதைத்தால் அது பிறரையும் வாழவைக்காது; விதைப்பவனையும் வாழ வைக்காது. அந்த ஒரே காரணத்தால் அந்தக் கதை எனக்குப்  பிடிக்கவில்லை.

எனக்குத் தெரிந்தவரை வெறுப்பை விதைத்த கவிஞர்கள் எழுத்தாளர்கள் யாரும் நிம்மதியாக வாழவில்லை.  பம்பாயில் என் நண்பர் ஒருவர் வெறுப்பையே மூலதனமாக வைத்து ஓர் ஆங்கிலப் பத்திரிகை நடத்தினார்.  பத்திரிகை  ரொம்பவும் பிரசித்தமாயிருந்தது.அதைப் படிக்காதவர்கள் கிடையாது.  நானும் ஒரு இதழ் படித்தேன்.  பிறகு  வெறுப்பைப் படிக்கக் கூடாது என்று நிறுத்திக்கொண்டேன்.   கடைசியில் அவருக்கும் நிமமதியில்லை. 

சீனிமா வாடை பல நாவல்களில் அடிக்கிறது.  சிலர் சினிமாவை நினைத்துக் கொண்டே எழுதி இருக்கிறார்கள்.  முதல் பரிசைப் பெற்றுள்ள கதையில் கூட கடைசிப் பகுதியில் ஒரு ரேஸ்  ஒரு சேஸ், ஒரு மிராக்கிள் செய்ய ஆசிரியர் முயன்றிருக்கிறார்.  சினிமாக் கலைஞர்களான நாங்கள் 'கிளைமாக்ஸ்' என்ற பகுதிக்காகப் பல மாதங்கள் ஆராய்கிறோம்.  படத்தை எடுத்துப் பார்த்து வெட்டுகிறோம்.  அவ்வளவு அக்கறையோடு ஒரு நாவலை முடிவு தேதிக்குள் எழுதி முடித்து விட முடியாது.  படிப்பவர்களைக் காட்டிலும் சினிமா பார்ப்பவர்கள் அதிகம்.   நம் கதையில் சினிமாவில் வரும் ஒரு காட்சி திரும்ப வந்துவிட்டால் உடனே கதை புளித்துப் போய்விடுகிறது.  முதற் பரிசு பெற்றுள்ள கதையில் சினிமாவை ஆசிரியர் புகுத்தியிருக்கும் பகுதியைத் தவிர மற்ற பகுதிகள் எல்லாம் இப்போ நினைத்தாலும் என் கண்முன் சினிமாப் படமாக  ஓடுகின்றன.  

சந்தைப்பேட்டை வாழைப்பழக் கடைக்காரனும், செவந்தி நிற்பதும், பிறகு மச்சான் வருவதும், ஆச்சிமாரிடத்தில் அவன் பழம் விற்பதும் மறக்க முடியாத காட்சிகள்.  அவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறார்.

இரண்டாம் பரிசு பெற்றுள்ள கதையில் நரிக் குறவருடைய வாழ்க்கை அப்படியே சித்தரிக்கப் பட்டுள்ளது என்று கூறிவிட முடியாது. பெயர்கன்கூட அத்தனையும் நாடோடிகளின் பெயர்கள் அல்ல. ஆனால் காடை பிடிப்பது. கௌதாரி பிடிப்பது, வேட்டைக்குப் போவது,  அம்மி பொளிவது. பொன்னியம்மன் கோயில் திருவிழா, வைசூரி வந்த வீட்டில் எடுத்துக்கொள்ளும் எச்சரிக்கைகள் ஆகியவையெல்லாம் அருமை, அருமை!

மூன்றாம் பரிசு பெற்றுள்ள கதையில் தாய்-தந்தையரின் தவறுகள் அனைத்தையும் நினைத்து வருந்தும் கதாநாயகனை பார்த்து அவனுடைய பாட்டி சாமி கும்பிட்டு விட்டுப் போகச் சொல்கிறாள். அவன் பாட்டியையே கும்பிடுகிறான். அதைப் படித்ததும் என் கண்களில் நீர் துளிர்த்தது. சுப்பு என்னும் பெண்ணின் பாத்திரப் படைப்பு மிக நல்ல படைப்பு.

=======================================================================================

மு மேத்தா கவிதைகள் 

மு. மேத்தா (Mu. Metha) (முகமது மேத்தா, பிறந்தது செப்டம்பர் 5, 1945) பெரியகுளத்தில் பிறந்தார். இவர் சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்த கவிஞர்களுள் இவரும் ஒருவராவார்.

இவர் எழுதிய நூலான ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.

உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர்.

இவரது முதற் கவிதைத்தொகுப்பு 'கண்ணீர்ப் பூக்கள்'. காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, புதினம், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும். இவரது "சோழ நிலா" என்னும் வரலாற்றுப் புதினம் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும். இவர் திரைப்படத் துறையிலும் பாடல்கள் எழுதி வருகிறார்


ஆகாயத்திற்கு அடுத்தவர்
ஒருவருக்கும் தெரியாமல் 
ரகசியமாய் உன்னிடம் கொண்டுவந்து 
சேர்த்துவிடும் 
என்னை இந்தக் கடிதம்!
எந்த ஊரில் இருந்தாலென்ன.... 
என் கடிதத்தை நீ
தொட்டவுடன் சிலிர்க்கும் எனக்கு!

எழுத்துக்களைப் பார்க்கிறாய் நீ 
இந்த எழுத்துக்களின் வழியே 
உன்னை 
எட்டிப் பார்க்கிறேன் நான்!


ஞாயிற்றுக்கிழமைகள்.. 

வருவாயா நீ ?
பூங்கொத்து வேண்டாம் 
வாடாமல் இருக்கும் உன் வார்த்தைகள்...
காற்று உன் வீட்டுக் கதவுகளை 
அசைக்கும்போதெல்லாம் 
நினைவுபடுத்திக் கொள்... 
உன் இதயத்தை அசைக்க 
நான் எடுத்த முயற்சிகளை!
ஒவ்வொரு தடவையும் 
நீ பார்த்த பார்வைகளைத் 
தொகுத்து வைத்திருக்கிறேன் ஆல்பமாக
வாரந்தோறும் வந்து போகின்றன
புகை வண்டியில் 
உன்னை வழியனுப்பும்போது 
கேட்பேன். 
"இப்போதாவது என்னை 
என்னிடம் விட்டுச் செல்!"
அவசியம் அனுப்பிவை 
உன் திருமண அழைப்பிதழை... 
பரிசு விழுந்தது யாருக்கென்று 
பார்த்துக் கொள்கிறேன்!

==========================================================================================================

1967 ல் சென்னை எப்படி இருந்தது?  ஏற்கனவே 'அந்தக் கால' சென்னையை இன்னொரு வீடியோவில் சுற்றிக் காண்பித்த V. ஸ்ரீராம் அதன் வரவேற்பைப் பார்த்து அடுத்து செய்த காணொளி!  


===========================================================================

நாகேஷ் 1  :  கிரேசி மோகனும் வாலியும் நாகேஷ் பற்றி 


======================================================================================

நாகேஷ் 2 :  ஊர்வசி நாகேஷ் பற்றி...


======================================================================================

அனு அகர்வால் கதை போல வேறொரு தன்னம்பிக்கைக் கதை.

Ray was born in Toronto to an Indian Bengali Hindu father and a Polish Catholic mother. and grew up in the suburb of Etobicoke. She spoke Polish with her maternal grandmother and watched movies of Federico Fellini and Satyajit Ray with her cinephile dad.  During her childhood she spent some time in Calcutta.


வ்வொரு நாளும் நான் புதிதாகப் பிறக்கிற மாதிரி உணர்கிறேன். விடிகிற ஒவ்வொரு பொழுதுக்கும் நன்றி..."

மரணத்தின் வாசல் வரை பார்த்து விட்ட தருவாயிலும் கலங்காமல் பேசு கிறார் மாடலும் நடிகையுமான லிசா ரே.

16 வயதிலேயே முன்னணி மாடலாகி புகழின் உச்சத்துக்குப் போன லிசா, நடிகையாகவும் உயரம் தொட்டவர்.

38 வயது லிசாவுக்கு கேன்சர்! 'மல்ட் டிபுள் மைலோமா' என்கிற வினோத மான அந்தப் புற்றுநோய், எலும்புகளை சிறுகச்சிறுக சிதைத்து, ரத்தம் சுண்ட வைத்து, எதிர்ப்புசக்தியை அறவே நீக்குகிற அளவுக்கு அசுரத்தனமானது. உலகம் முழுவதும் தினமும் ஆயிரம் பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நோயின் தீவிரத்தைப் பொறுத்தே மீதமி ருக்கிற வாழ்க்கை தீர்மானிக்கப்படும். நல்லவேளையாக லிசாவுக்கு இன்னும்
நாள் குறிக்கப்படவில்லை.

மிகச்சரியாக இரண்டு வருடங் களுக்கு முன்... தன் அம்மாவின் அஸ்தியைக் கரைக்க, கன்யாகுமரி போய் விட்டு, பூர்வீகமான டொரன்டோ திரும்பியவருக்கு உட லில் திடீர் மாற்றங்கள்.

"ரொம்ப களைப்பா இருந்தது. யாருக்குத்தான் களைப்பு இல்லைனு அலட்சியமா இருந்துட்டேன் வழக்கமா ஒரு முறை சொன்னாலே வசனங்களைப் பிடிச்சுக்கிற என்னால, அதைப் படிக்கிறதுலயும் சிரமம் உண்டானது. களைப்புக்கான மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கிட்டும் சரியாகலை. இது வேற ஏதோனு உள்ளுணர்வு சொன்னது" என்கிற லிசாவுக்கு அன்று தொடங்கிய மருத்துவமனை பயணம் இன்று வரை.. ஏகப்பட்ட மருத்துவர்கள், எக்கச்சக்க பரிசோதனைகள்... 

கடைசியாக இடுப்பில் டிரில்லிங் செய்து எடுக்கப்பட்ட எலும்பை வைத்து பயாப்சி செய்தததில், லிசாவுக்கு 'மல்ட்டிபுள் மைலோமா' என்பது உறுதியானது. 

"ஒரு பக்கம் கீமோதெரபி... இன் னொரு பக்கம் ஷூட்டிங், புதுப் பட வாய்ப்புகள்... ஸ்டீராய்டு மாத்திரை, மருந்துகள் எடுத்துக்கிட்டதால், என் முகம் ஊதிப் போய் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போச்சு. என்னை நோக்கி வித்தியாசமான பார்வைகள்... இனியும் என் நோயை மறைக்க வேண்டியதில்லைனு அதை பகிரங்கமா சொன்னேன். கேன்சர் கிளப்ல என்னை ஐக்கியப்படுத்திக் கிட்டேன். 'குக்கிங் வித் ஸ்டெல்லா' படத்தோட ப்ரீமியருக்காக டொரன்டோ ஃபிலிம் ஃபெஸ்டிவல் போனபோது, என் ரசிகர்கள்கிட்டருந்தும், என்னை மாதிரியே கேன்சரால பாதிக்கப்பட்ட வங்ககிட்டருந்தும் எனக்குக் கிடைச்ச வரவேற்பும், ஆதரவும் உருக வச்சிருச்சு " என்கிற லிசா, சோகங்களைக் கூட சுகமாக்கிக் கொள்கிற வித்தை தெரிந்தவர்.

"கேன்சர் ட்ரீட்மென்ட்ல தலைல உள்ள முடி மொத்தத்தையும் இழந் தாகணும். ஒருநாள் எனக்கும் அந்த நிலை வந்தது. நல்லவேளையா, ஏற் கனவே 'வாட்டர்' பட கேரக்டருக்காக முடியை இழந்த அனுபவம் உண்டுங் கிறதால, ரெண்டாவது முறை அதை இழக்கறது பெரிய சோகமா தெரியலை " என்கிறார் நகைச்சுவையாக.

துன்பம் வரும் போது விலகி ஓடுகிற உறவுகள் சகஜம் அந்த விஷயத்தில் லிசா அதிர்ஷ்டசாலி. புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட பிறகும், இன்று வரை அவருக்குத் தோள் கொடுத்து நிற்பவர் அவரது காதலர் மார்க்.

''மூணு வருஷமா நாங்க ஃப் ரெண்ட்ஸ். இப்ப காதலர். கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க லாம்னு இருக்கோம்" என்கிற லிசா வுக்கு சமீபத்தில்தான் ஸ்டெம்செல் டிரான்ஸ்பிளான்ட் சிகிச்சை முடிந்தி ருக்கிறது.உடல் இயக்கங்கள் சீரான பிறகு கல்யாணம், குழந்தைகள் என நிறைய ஆசைகள் வைத்திருக்கிறார். அதற்கு முன் அவசரத் திட்டம் ஒன்றும் இருக்கிறது.

அது... மல்ட்டிபுள் மைலோமா பற்றிய விழிப்புணர்வுப் பிரசாரம்!

குங்குமம் ஜூன் 2010  - ஆர். வைதேகி

================== =====================================================================

முக்கியமான விஷயம் ஒன்று..!!



===============================================================================================

குமுதம் முதல் இதழ் வரலாறு...

வினோ மோகன் - மதியமர் பேஸ்புக் 

கடுமையாக மழை பெய்துக்கொண்டு இருந்தது..

வீட்டில் அத்தனை காரியங்களையும் கவனித்து கொண்டிருந்த மஞ்சன் என்கிற காரியஸ்தர் மழையில் வங்கியில் இருந்து வீட்டு செலவுக்கு பணம் எடுக்க போனவர் திரும்பவில்லை. வீட்டில் இருந்த எஸ் ஏ பி அவர்களுக்கு நிலைக்கொள்ளவில்லை.
இந்த கொட்டும் மழையில் அவரை வங்கிக்கு அனுப்பியது தவறோ? என்று எண்ணினார்.

மஞ்சன் காரியஸ்தான். ஆனால் அண்ணன் என்று தான் அவரை எஸ் ஏ பி அழைத்து வந்தார்.

அவரது அன்னை தன் பிள்ளை படும் பாட்டைக்கண்டு மஞ்சன் பத்திரமாக திரும்பி விடுவார்.

கவலை வேண்டாம் என்று ஆறுதல் கூறினார்..

அம்மாவின் கூற்றுப்படியே சற்று நேரத்தில் மஞ்சன் வங்கியில் எடுத்த 500 ரூபாய் பணத்தோடு திரும்பி விட்டார்..

ஆனால் மஞ்சனின் முகத்தில் ஏதோ ஒரு வருத்தம் தெரிந்தது.

மவுனமாகவே இருந்தார்..

சற்று நேரம் சென்ற பின் எஸ் ஏ பி அமைதியாக இருந்து விட்டு மஞ்சண்ணா! என்ன விஷயம்? என்று கேட்க,

கொட்டி தீர்த்து விட்டார் காரியஸ்தர்.

எந்த நாளும் இல்லாத திருநாளாக அன்று வங்கி அதிகாரி ஒரு கேள்வி கேட்டு விட்டார்.

அவர் கேட்க கூடாது தான்.

ஆனால் கேட்டு விட்டார்.

எப்போதும் உங்கள் செட்டியார் கணக்கில் இருந்து பணம் எடுக்கிறார்.

கணக்கில் ஒரு முறை கூட பணம் போடுவதில்லை.

ஏன் அவர் சம்பாதிப்பது இல்லையா? என்று கேட்டிருக்கிறார்.

அந்த கேள்வி ஒரு வகையான குத்தல்..

ஒரு தனிப்பட்ட எஸ் ஏ பியை கேலி செய்யும் பேச்சு அல்ல.

நகரத்தார் இனத்தை சேர்ந்த ஒருவர் இப்படியும் உட்கார்ந்து சாப்பிடுவாரோ என்று தொனிக்கும் படியான குத்தல்.

அது காரியஸ்தர் மஞ்சனை வெகுவாக பாதித்து இருக்கிறது.

அந்த வங்கி அதிகாரியின் கேலி எஸ் ஏ பியை உறுத்தவில்லை.

ஆனால் காரியஸ்தர் மஞ்சண்ணனை அந்த வங்கி அதிகாரியின் குத்தல் உறுத்தியிருக்கிறது என்பது எஸ் ஏ பிக்கு வருத்தத்தை தந்தது.
வெகு நேரம் யோசித்தார்.

வக்கீலுக்கு படித்திருக்கிறார்.ஆனால் அந்த தொழிலில் நாட்டமில்லை.
வேறு என்ன செய்ய?

எழுத்தில், இலக்கியத்தில் மிகுந்த நாட்டம் இருக்கிறது.

தன்னுடன் கல்லூரியில் படித்த பார்த்த சாரதியை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்த முடிவு செய்கிறார்.

அன்னை, மனைவி.. இருவர் சம்மதத்தையும் பெறுகிறார்.

முனைப்புடன் காரியத்தில் இறங்குகிறார்.

அந்த வங்கி அதிகாரி குத்தலாக உங்கள் செட்டியாருக்கு சம்பாதிக்க தெரியாதா? என்று கேட்டது 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்.

அதே ஆண்டில் நவம்பர் 15 ஆம் நாள் குமுதம் முதல் இதழ் வெளி வந்தது.
நினைத்ததை முடிப்பவன் என்று எஸ் ஏ பி அவர்களையும் அழைக்கலாம்.
குமுதத்தின் முதல் இதழின் அட்டை படத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன்.

இந்த தகவல் 1994 ஆம் ஆண்டு குமுதம் இதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது.
இந்த செய்தி வெளியான இதழை எனக்கு கொடுத்து உதவியவர் முகநூல் நண்பர் திரு.சந்தானம் அவர்கள்..

அப்புறம் இந்த முதல் இதழ் குமுதத்தை யாரேனும் பத்திரமாக வைத்திருந்தால் குமுதம் அலுவலகத்திற்கு அனுப்பி 100 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று 1967-68ஆம் ஆண்டு வாக்கில் குமுதத்தில் ஒரு அறிவிப்பு வந்தது.

இரண்டு பேர் அட்டை படம் இல்லாத குமுதத்தை அனுப்பினார்கள்.

ஒருவர் mint condition இல் அந்த முதல் இதழை அனுப்பினார்.  அவருக்கே 100 ரூபாய் பரிசு கிடைத்தது.

அப்போது ராஜமுத்திரை வெளி வந்துக்கொண்டு இருந்தது..

அதற்கு ஒரு அத்தியாயத்திற்கு 100 ரூபாய் சன்மாணம் திரு. சாண்டில்யன் அவர்களுக்கு அனுப்பி கொண்டிருந்தார்களாம் குமுதத்தில் இருந்து.

நன்றி JKC சார், ஜீவி சார்.

=======================================================================================

சாண்டில்யன் மாஸ் காட்சிகள்

தப்பவே முடியாத இலி ஆஸுவின் ராஜ்ஜியத்திலிருந்து தப்பிக்க திட்டமிடும் இளஞ்செழியன்.  அவனைப் பற்றி அறியாத இலி ஆஸுவின் வளர்ப்பு மகள் அலீமா..

.....மூன்று நாட்களுக்குள் நான் இங்கு சிறையில் கிடக்கும்  வர்த்தகர்களைப் பார்க்க முடியுமா?" என்றான்.

"நீங்கள் பார்ப்பது கஷ்டம்."

"ஏன்?"

"நீங்கள் மதம் மாறிய பிறகுதான் அவர்களை விடுவிக்க உத்தேசித்திருக்கிறான் மன்னன். சிறைச்சாலைப் பகுதிக்கு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. தவிர நாளையிலிருந்து நீங்கள் மதகுருவின் பாதுகாப்பில் இருப்பீர்கள்."

"மதகுருவின் பாதுகாப்பிலா?"

"ஆம்."

"சரி சரி. அது கிடக்கட்டும். நீயாவது அவர்களைப்​ பார்க்க முடியுமா?"

"முடியும்."

"சரி, வெளியிலிருக்கும் ஹிப்பலாஸைக் கூப்பிடு"

அறைக் கதவைத் திறந்து கொண்டு ஹிப்பலாஸை அழைக்க அலீமா வெளியே சென்றதும் மஞ்சத்தின் பஞ்சணையில் உட்கார்ந்து கொண்ட படைத் தலைவன் கண்கள் ஏதோ ஒரு உலகத்துக்கு அவன் புத்தி சென்று விட்டதை வலியுறுத்தின. அறைக்குள் திரும்பி வந்த அலீமா படைத்தலைவன் கண்கள் மயக்க நிலையில் இருப்பதைக் கவனித்து அவன் பெரும் பீதிக்குள்ளாகியிருப்பதாக நினைத் தாள். 

ஆனால் ஹிப்பலாஸ் மட்டும் கணப்பொழுதில் புரிந்து கொண்டான். படைத்தலைவன் புத்தியில் ஏதோ பயங்கரத் திட்டமொன்று உருவாகிறதென்று. அந்த நினைப்பின் விளைவால் அலீமா படைத்தலைவனை நெருங்க முயன்றதை யும் அவள் கையைப் பிடித்து நிறுத்திய ஹிப்பலாஸ், ஏதும் பேச அது சமயமல்லவென்பதைத் தன் பார்வையாலும் குறிப்பிட்டான் 

அவளுக்கு. அப்பொழுதும் ஏதும் புரியாத்தால் அவன் அவள் காதுக்கருகில் குனிந்து, "படைத் தலைவர் ஏதோ யோசிக்கிறார், பேச வேண்டாம்" என்று ரகசியமாகச் சொன்னான்.

அதைக் கேட்டதும் ஹிப்பலாஸைத் திரும்பி நோக்கிய அலீமாவின் விழிகளில் வியப்பு மிதமிஞ்சி நின்றது. "படைத் தலைவரா இவர்!.." என்று தட்டுத் தடுமாறிக் கேட்டாள் அலீமா.

"தமிழகத்தின் பெரும் படைத் தலைவர்களில் ஒருவர்" என்று விளக்கினான் ஹிப்பலாஸ்.

அலீமாவுக்கு அப்பொழுதுதான் மெள்ள மெள்ள உண்மை விளங்கலாயிற்று. பெரும் ஆபத்துக்களைச் சமாளிக்கக் கூடிய ஒருவர், கொள்ளையர் கண்களிலும், ஏன் இலி-ஆஸுவின் கண்களில்கூட ஓரளவு மண்ணைத் தூவக் கூடிய திறமை வாய்ந்த ஒருவர், சாதாரண மனிதராயிருக்க முடியாது என்று தான் நினைத்தது சரியாகி விட்டதை நினைத்து, பெரிதும் பூரிப்படைந்து விட்டாள். 

படைத் தலைவன் பேசிய சமயங்களிலெல்லாம், அவனிடம் காணப் பட்ட ஒரு கம்பீரம், அவன் நடையிலிருந்த ஒரு பெரும் தோரணை, பகல் வேளையில் அவன் சதா கோட்டைப் பகுதிகளையும் மலைப் பிராந்தியங்களையும் வெறித்து வெறித்துப் பார்த்த காரணம், எல்லாமே அலீமாவுக்குப் பொருள் தந்தன. அவன் கண்கள் மங்கிக் கிடந்த அந்தச் சமயத்திலும், முகத்தின் ஒளியும் மயங்கிவிட்ட அந்தச் சில நிமிஷங்களிலும் முகத்தின் கம்பீரமோ கண்களின் அழகோ சிறிதும் குறைவு படாததை அலீமா கவனித்து உலகத்தின் பெரிய அறிவாளியொருவன் முன்னிலையில் தான் இருப்பதை உணர்ந்தாள். (இந்த வரி அவர் கதைகளில் அடிக்கடி வரும்!) 

சில நிமிஷங்களுக்குப் பிறகு மௌனத்தை உதறிப் பேச முற்பட்ட படைத்தலைவனின் குரல் சர்வ சாதாரண நிலையை அடைந்து விட்டதைக் கவனித்த அலீமா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில், அவனுக்குள்ள திறமையைக் கண்டு பிரமித்தாள்.

சில நிமிடங்களிலேயே தான் அடுத்த இரண்டு மூன்று தினங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறையை நிர்ணயித்துக் கொண்ட இளஞ்செழியன் ஹிப்பலாஸை அழைத்து சில கட்டளைகளை திட்டமாக பிறப்பித்தான்.........
========================================================================================

பாஹே  பக்கம் 


==========================================================================================

தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம் என்பது சுயநலக்கூட்டம்...

1980 களில் விவித்பாரதியில் காலை 8.30 க்கு அடிக்கடி ஒலிபரப்பு செய்யப்பட்ட பாடல் இது

முதன் முதலாக மதிய உணவு திட்டத்திற்கு ஒரு லட் ச ரூபாய் நிதி உதவி செய்ததை பாராட்டிய கர்மவீரர் காமராஜர் அத்திட்டத்ததிற்கு சிவாஜிகணேசன் அவர்களது பெயரை சூட்ட் நினைத்த செய்தியை வெளிப்படுத்திய இந்து நாளிதழ்.

"கொடுத்து" வைத்து, வாழவும் வைத்தவர் .சிங்கப்பூர் சிறுநீரக மருத்க்குவ மனைக்கு 16/12/1974ல் ரூ 45ஆயிரம் கொடுத்தார்
1975லிருந்து 1961வரை பம்பாயில் நாடகங்கள் நடத்தி குழந்தைகளின் கல்விச் செலவிற்க்கு ரூ 5லட்சம் கொடுத்தார்
1953ம் ஆண்டு நவம்பர் மாதம் புயல் நிவாரண நிதி யாக தெரு தெருவாக பராசக்தி பட வசனங்களை பேசி ரூ 12,000/_கொடுத்தார்
1966ஆகஸ்ட் மாதம் சென்னையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டபோது ரூ 10ஆயிரம் கொடுத்தார்1971ல் இராணுவ வீரர்கள் முகாமில் சிவாஜியும் கமலா அம்மையாரும் இரத்த தானம் செய்து தனது ரசிகர்கள் இடம் இருந்து பெருந்தொகை வசூல் செய்து கொடுத்தார் கதர் படை வீரர்கள் நிதிக்காக குல்கர்னி அவர்களிடம் 3/12/1974ல் ரூ 50,000/_கொடுத்தார் 1972ல் கோவையில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் பலியான க்குடும்பத்திற்க்கு தலா ரூ 5ஆயிரம் கொடுத்தார்சிவாஜி. எழுபதுகளின் துவக்கத்தில் வறுமையின் பிடியில் சிக்கி வாடிய கக்கன் மற்றும் அவரது குடும்பத்துக்கு நிதியளித்து உதவ எண்ணிய நடிகர்திலகம் சிவாஜி, அதற்காக, தான் அப்போது நடத்திவந்த 'தங்கப்பதக்கம்' நாடகத்தினை சென்னைக்கு வெளியே பெரிய நகரமொன்றில் நடத்த திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் இறங்கினார். தான் சார்ந்திருந்த காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களில் ஒருவரும், பல ஆண்டுகளாக அமைச்சராக இருந்தவருமான கக்கன் அவர்களுக்காக நடத்தப்படும் நாடகத்துக்கு பெருந்தலைவர் தலைமையேற்றால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி அவரை அணுக, சாதாரணமாக இதுபோன்ற நாடக விழாக்களில் கலந்துகொள்ளும் பழக்கமில்லாத பெருந்தலைவர், கக்கன் அவர்களுக்காகவும் நடிகர் திலகத்துக்காகவும் வேண்டுகோளை ஏற்றார். நாடகம் கோவையில் நடந்தது. நாடகக்கலைஞர்களை சென்னையிலிருந்து அழைத்துச்சென்று திரும்பக் கொண்டு வந்து சேர்ப்பது, அவர்களின் சம்பளம், அரங்க வாடகை, நாடக செட்களுக்கான லாரிவாடகை, விளம்பரச்செலவு என அனைத்துச் செலவுகளையும் நடிகர்திலகமே ஏற்றுக்கொண்டார். அபூர்வமாக தங்கள் நகரில் நடிகர்திலகம் பங்கேற்று நடிக்கும் நாடகம், அதுவும் பெருந்தலைவர் தலைமையில் நடக்க இருப்பதையறிந்த ரசிகர்களும் பொதுமக்களும், இந்த அரிய வாய்ப்பைத்தவற விடக்கூடாதென்று பெரும் கூட்டமாகத் திரண்டு வந்தனர். வசூல் குவிந்தது. நாடகத்துக்கான மொத்தச்செலவையும் நடிகர்திலகம் ஏற்றுக்கொண்டதால், நாடகத்தில் வசூலான தொகை முழுவதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்காக, மேடையிலேயே தலைவர் கரங்களால் வழங்கப்பட்டது. நடிகர்திலகத்தின் இந்த சீரிய சேவையைப் பாராட்டி அவருக்கு பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் ஒரு தங்கப்பதக்கத்தினை பரிசாக அளித்தார். தலைவர் அளித்த அந்தப்பதக்கத்தையும் நடிகர்திலகம் விழாவில் ஏலம் விட்டார். அங்கிருந்த உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் அதை 10,000 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார். (அன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் எழுநூறு ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரத்தையும் கூட கக்கன் அவர்களுக்கே வழங்கிவிட்டார் நடிகர்திலகம். நன்றி தெரிவித்துப்பேசிய கக்கன், "பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் சொக்கத் தங்கம்" என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.

=======================================================================================

62 கருத்துகள்:

  1. இன்றைக்கு நிறைவாக நிறைய விஷயங்கள் கதம்பமாக வந்திருக்கிறது. பிறகுதான் முழுமையாகப் படிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  நடைப்பயிற்சி, யோகா எல்லாம் முடிச்சுட்டு மெதுவா வாங்க..!

      நீக்கு
  2. கடவுச்சீட்டு..... எப்போதும் ஏதாவது ரூபாய் கிடைக்குமா என எதிர்பார்க்கும் அரசு அலுவலர்களைக் கண்டால் அசிங்கமாக இருக்கிறது. இவங்கள்லாம், அவங்க பசங்களுக்கு மோசமான உதாரணங்கள்.

    எனக்கு முதல் கடவுச்சீட்டுக்கு போலீஸ் விசாரணை (வெரிஃபிகேஷன்) க்கு பெருங்களத்தூருக்கு வரலை என்றதும் தாம்பரம் காவல் நிலையத்துக்குச் சென்றேன். காரணம்லாம் கேட்ட ஸ்டேஷன் இன்சார்ஜ் முகமது அலி என்பவர், வாழ்த்துகளைத் தெரிவித்து அவரே எல்லாவற்றையும் அனுப்பிவிடுகிறேன் எனச் சொல்லி அனுப்பினார். அவர்களிலும் பலர் நல்லவர்கள், இளைஞர்களின் வேலை, கல்வி என்றால் கனிவு கொள்வர் என எண்ணத் தூண்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..  இப்படியும் சிலர்.  ஆனால் நான் சொல்லி இருக்கும் அனுபவத்தில்தான் பலர்.  லூசு, முட்டாள் போன்ற தடித்த வார்த்தைகள் மனதில் தோன்றினாலும் ஒன்றும் சொல்ல முடியாத நிலை!

      நீக்கு
  3. போட்டிக்கான நாவல்களைத் தேர்ந்தெடுப்பது கடினமான வேலை. ஒவ்வொருவர் ரசனையும் வேறுபடும். இருந்தாலும் நனுவர் குழு நல்லா தேர்ந்தெடுத்திருப்பார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்.

    விடுதலை சம்பந்தமான போராட்டங்களில் ஈடுபட்டு வேலைக்கு பங்க் அடித்ததனால்தானே வாசன் அவர்களுக்கும் கல்கி அவர்களுக்கும் கருத்து வேறுபாடு தோன்றி, விகடனை விட்டு விலகியது?

    இருவர் செயலும் சரியானதுதான். எது மிகச் சரி என்று சொல்வது கடினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். .  இருவரும் (உண்மையில் மூவர்) இரண்டு பக்கம் இழுத்தாலும், மெஜாரிட்டி ஒத்துப்போன கருத்துகள் அடிப்படையில் தெரிவு செய்திருப்பார்கள்.  நம் செல்லப்பா ஸார் சிறுகதைப் போட்டிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட நடுவர்கள்தான்.

      கல்கி - வாசன் சம்பவத்தில் நீங்கள் சொல்லி இருப்பது சரி.

      நீக்கு
  4. அடடா! ஓட்டுப் போட முடியாமல் போயிற்றா?ஜனநாயகக் கடமையாற்ற முடியாமல் போனதற்கு வருந்துகின்றேன்.
    பாஸ்போர்ட் போலீஸ் வெரிஃபிகேஷன் செய்தி படித்ததும் கோபம்தான் வருகின்றது. இலஞ்சம் வாங்குவதற்கு எவ்வளவு வழிகள் நாட்டில்? என்றுதான் இந்த அராஜகம் ஒழியுமோ? இந்த நபர் சொன்ன அட்ரஸில் வசிக்கிறாரா என்று செக் செய்வதுதான் போலீஸின் வேலை. இதற்கு எதுக்கு டிசியும் மார்க் ஷீட்டும்? போதாக்குறைக்கு அப்பா அம்மாவோட திருமண சர்ட்டிஃபிகேட் முதற்கொண்டு கேட்கிறாரென்றால் என்ன செய்வது? அரசாங்க இணையதளத்தில் இந்த வேலைக்கு இந்த டாக்யுமெண்ட்ஸ்தான் தேவை என்று லிஸ்ட் வெளியிட வேண்டும். அப்பத்தான் இந்த அட்ராஸிட்டியெல்லாம் கொஞ்சமாவது குறையும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா ஸார்...  தேவையான லிஸ்ட் கிடைக்கிறது.  அதை எல்லாம் நமக்கு காரியம் நலல்ப்படி முடிய வேண்டும் என்பதால் அந்த நேரம் அங்கே பேசமுடியவில்லை.  நாங்கள் வாக்களிக்க முடியாமல் போனதற்கு நாங்களே காரணம்.  முதலிலேயே இன்னும் கொஞ்சம் விழிப்புடன் இருந்திருக்க வேண்டும்!

      நீக்கு
  5. நாகேஷ் பற்றிய செய்திகள் ரசிக்கும் வண்ணம் இருந்தது. அவர் நிஜமாகவே ஒரு "Once in a century" நடிகர். அசாத்திய திறமைகள் நிறைந்தவர். போதிய ரெகக்னிஷன் அவருக்குக் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் எனக்கும் மட்டுமல்ல, நிறைய பேர்களுக்கு அதுதான் தோன்றும்.   

      நீக்கு
  6. சிவாஜி விளம்பரமில்லாமல் எவ்வளவோ தர்மங்கள் செய்தவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கக்கன் குடும்பத்துக்கு அவர் செய்தது சாலச்சிறந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். பல இடங்களில் நானும் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி சிதறல்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. தாங்கள் அனைவரும் ஓட்டுப் போட இயலாமல் போனது வருத்தந்தான். பாஸ்போர்ட் பெறுவதற்கு உண்டான விசாரனைகள் திகைக்க வைக்கிறது. இப்படியெல்லாமா அத்தாட்சிகளை கேட்பார்கள்? என்னவோ ஒன்றும் சரியில்லை. அனைத்தும் பணம் படுத்தும் பாடு. வேறு என்ன சொல்வது..?

    இன்றைய பகுதியில் பிற அனைத்தும் முத்துச் சிதறல்கள்தாம். படித்து ரசித்தேன். மகளுடன் காலையிலேயே பல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருப்பதால் பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..  அங்கே போய் பல்கலைக் காட்டணுமா!  பார்த்து...  

      பணம் பெறுவது ஒன்றே குறி.  கடமையைச் செய்யக் கூட லஞ்சம்!  இதுதான் இந்தியா.

      நீக்கு
  9. போலீஸ் கேட்டது காமெடி ஸ்ரீராம். எதுக்கு உங்க மற்றும் பாஸின் இத்தனை விவரங்கள். பெயர் கேப்பாங்க ஓகெ....ஆனா மத்ததெல்லாம்...சிரிப்புதான் வருது. அவருக்குத் தெரியலையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா..  எங்களுக்கும் சிரிப்பு ஒரு பக்கம், கடுப்பு ஒரு பக்கம்.  திகைப்பு தானும் உள்ளே வர வாக்களிக்க வரிசையில் நின்ற டி ஆர் ஆர் மாதிரி காத்திருந்தது!

      நீக்கு
  10. "பார்த்து போட்டு வாங்கற காசுக்கு" நல்லா வேலை செய்திருக்கிறார் அந்த போலீஸ்!!!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'எங்களை இந்த பாடு படுத்தியதற்கு நீங்கதான் எங்களுக்கு காசு கொடுக்கணும்' என்று சொல்லி இருப்பதுதானே' என்று ஜோக்காக மகனைக் கேட்டேன் - சொல்ல முடியாதுதான்!  இதெல்லாம் இல்லாமல் சட்டென்று முடித்திருந்தால் நமக்கே கொடுக்கத் தோன்றி இருக்கும்.

      நீக்கு
  11. நாவல் எல்லாம் வாசிக்கும் ஆர்வம், வாசிப்பது கொஞ்சம் கஷ்டம் என்றாலும் ஆஹா!!! என்று தோன்றியது.

    காதல் எப்பவுமே சப்ஜெக்ட் போல! மாறாதோ?

    குடும்பச் சிக்கல்கள் போன்றவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்ட எழுதுவது இக் காலத்திற்குப் பொருத்தமல்ல.//

    எந்த வருடத்தில் இது?

    ஆனால் இப்பவும் வாழ்க்கை முறை பற்றி சில எழுதினால்தான் இக்காலகட்டத்தின் வாழ்க்கை முறை தெரியவரும் இல்லையா? ஆனால் இப்பவும் பழைய காலகட்டத்தின் கருவை எழுதுவது சரிவராதுதான். இல்லைனா அத்தலைமுறையிலிருந்து இப்ப எப்படி மாறியிருக்கு என்று கொண்டு வரலாம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துமிலனே வருடம் சொல்லி இருக்கிறாரே...  1974. 

      உலகிலேயே பதினோரு கருக்கள்தான் கதை எழுத என்று ஏதோ அறிஞர் சொன்னதாக நம் சுஜாதா சொல்லி இருந்தாரே ...  யார் எந்தக் கதை எழுதினாலும் அதற்கான ரெபரென்ஸை  நாம் நம் மஹாபாரதத்தில் காட்ட முடியும்!

      நீக்கு
  12. அட! பரிசு பெற்றவர்களில் முதல் பரிசு பெற்றவர் மற்றும் மூன்றாம் பரிசு பெற்றவர்கள் பெயர்கள் பரிச்சயமாக இருக்கின்றன. ஜோதிர்லதா கிரிஜா பிரபலம்

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கொத்தமங்கலம் சுப்புவும் அதே மூன்று நாவல்களைச் சொல்லியிருக்கிறாரா? இருவரின் பார்வையும் வித்தியாசமாக இருக்கு இல்லையஆ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிதான் இருக்கும் இல்லையா?  நியூ வேவ் பற்றி இருவருமே சொல்லி இருக்கிறார்கள்.

      நீக்கு
  14. மேத்தா அவர்களின் கவிதைகளை ரொம்ப ரொம்ப ரசித்தேன், ஸ்ரீராம்! இரண்டாவதில் சின்ன சோகம் இருந்தாலும்.

    கல்லூரிக் காலத்தில் நான் எழுதியவை (தோழியின் செயல்பாடுகளை வைத்து!!!) நினைவுக்கு வந்தன. எங்கு போச்சோ எல்லாமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு மேத்தா கவிதைகள் பிடிக்கும்.  அவரின் 'கண்ணீர்ப் பூக்கள்' நான் வாங்கி வைத்திருந்தேன்.  என் தங்கைக்கும் இவர் கவிதைகள் ரொம்பப் பிடிக்கும்.

      நீக்கு
  15. சிவாஜியின் பிறருக்கு உதவும் மனம் கண்டு நெகிழ்ந்தது. விளம்பரம் தேடாமல் செய்த பெரு முயற்சி அது.

    பதிலளிநீக்கு
  16. இயற்கையின் இது.... ரொம்ப நல்லா எழுதியிருக்கார் ரொம்பவும் ரசிக்கும்படி இருந்தது.

    ஶ்ரீராமுக்கு, படிக்கும்படி இருந்ததா எனச் சந்தேகம் வரும்.

    கண்ணே நீ... யில் ன உபயோகித்திருக்கிறார். கன்னலே நீ யதில் சாறும் நான் என ஏன் எழுத மறந்தார் என யோசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தமாக புரியவில்லை.  எது என்று ரெஃபரென்ஸ் சொல்லி சொன்னால் புண்ணியமாய்ப் போகும்!

      எது படிக்கும்படி இருந்ததா எனச் சந்தேகம் ?

      நீக்கு
    2. அப்பாடி..  அப்பாவின் கவிதையா?  
      நானுமே கொஞ்சம் சிரமப்பட்டுதான் படிக்கணும்!

      நீக்கு
  17. ஆவணங்கள் சமர்ப்பிப்பதில் ஆணவக்கொலையே நிகழும் போலயே....

    பதிலளிநீக்கு
  18. கவிஞர் மீரா, மு. மேத்தா ( முகமது மேத்தா எனப் பின்னரே தெரிந்தது. எனினும், கவிதை ரசனைக்கு அது முக்கியமல்ல) ஆகியோர் கவிதைகளை என் இளம்பிராயத்தில் கவனித்திருக்கிறேன். சற்றே ஆச்சரியப்பட்டிருக்கிறேன் ! சுஜாதாவும் இவர்கள் கவிதைகளைப்பற்றி தன் ’கற்றதும் பெற்றதும்’-ல் குறிப்பிட்டிருப்பதைப் பின்னாட்களில் கண்டேன்.
    மேத்தாவின் சிறு கவிதை நூலொன்று -தலைப்பு நினைவிலில்லை- என்னிடம் இருந்தது. காணாமற்போனது. யாரெடுத்தாரோ.. யாரெடுத்தாரோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏகாந்தன் ஸார்...   கண்ணீர்ப் பூக்களைத்தானே சொல்கிறீர்கள்?  எனக்கு அப்போது ரொம்பப் பிடித்த புத்தகம் அது.

      நீக்கு
  19. நாகேஷ் பற்றிய இரு வீடியோக்களும் அவரது நகைச்சுவை மற்றும் நடிப்பு பத்தி சொல்வது மிகையல்ல. உண்மையிலேயே மகளிர் மட்டும் படத்துல நாகேஷ்தான் பின்னியிருப்பார் அது அத்தனை எளிதல்ல..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நினைவு தெரிந்த நாளிலிருந்தே நாகேஷின் பரம ரசிகன்.

      நீக்கு
    2. மீ டூ....படம் பார்க்கிறேனோ இல்லையோ காமெடி சீன்ஸ் பார்க்கக் கிடைத்தா பார்த்துவிடுவேன்!

      கீதா

      நீக்கு
  20. சிவாஜியைப் பற்றிய விஷயம் நெகிழ்ச்சிய அடைய வைத்தது. சத்தமில்லாமல் ஆர்பாட்டமில்லாமல் எவ்வளவு செய்திருக்கிறார்!!!! தங்கம் தான்

    கீதா

    பதிலளிநீக்கு
  21. புற்று நோய் பற்றி சிலர் தங்கள் அனுபவங்களை எழுதியதை வாசிக்கும் போதெல்லாம் ஹப்பா என்ன ஒரு மனோதைரியம் என்று தோன்றும்.

    அட! பாலிஷ் அம்மாவின் அஸ்தியைக் கரைக்க கன்னியாகுமரி வரை வந்திருக்கிறாரே!! எப்படி இங்கு கனெக்ட் ஆகியிருக்கிறார்! அப்பா மூலம்?

    காதலர் மார்க் கிற்கு 100 மார்க் கொடுத்திடலாமா ஸ்ரீராம்!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 2010 ல் எழுதபப்ட்டிருக்கு 16 வருடங்கள் ஆகிடுச்சே...

      கீதா

      நீக்கு
    2. ஆமாம்.  இப்பவும் சௌக்யமாக இருக்கிறார் என்று விக்கி விக்காமல் சொல்கிறது!

      நீக்கு
    3. நல்ல விஷயம்! ஹப்பா நல்லாருக்கட்டும்

      கீதா

      நீக்கு
    4. விக்கி சொல்லிருக்கிறதே அவர் சௌக்யமாக இருக்கிறார் என்று.....பாவம் கான்சர் என்பது எவ்வளவு கொடிய நோய் அது எப்படி உருக்குலைய வைக்கும்னு...அதான் பாவம் அவர் நலலருக்கணும்னு

      நேரில் பார்த்திருக்கிறேன் எங்க வீட்டில் அதனால்...

      கீதா

      நீக்கு
  22. ஹாஹாஹா அனுஷ்! அட அனுஷ் இங்கு ஹோட்டல் நடத்துகிறாரா! அப்ப ஸ்ரீராம் ஏன் இங்க வரப்ப ஏன் விசிட் கொடுக்கலை!!

    நெல்லை போகமாட்டார் தெரியும் ஆனா ஒரு வேளை ஸ்ரீராமுக்கு எப்படி கவுன்டர் கொடுக்கலாம்ங்கறதுகககவே போனாலும் போவார்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் நடிக்க வருவதற்கு முன்! அப்போ நடத்தினார் போல...  'சிங்கம்' படம் வந்த நேரத்தில் வந்த செய்தி. 

      நீக்கு
    2. ஓ! பழசா...இப்ப இருக்குமா? நெட்ல தேடினா போச்சு!

      கீதா

      நீக்கு
  23. ஸ்ரீராம், அடுத்தப்ல தமனா பாட்டிதிறந்திருக்கும் நகைக்கடை பத்தியும் போட்டிடுங்க! நெல்லைக்காக!!!!!!!!

    நீங்க தமனாவோட நகைக்கடைக்குப் போய் ஏதாச்சும் வாங்கறா மாதிரி போய் பார்த்து வந்து counter கொடுங்க நெல்லைக்கு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமன்னா நகைக்கடை வைத்திருக்கிறாரா? அட... எங்கே நெல்லையிலா?

      நீக்கு
    2. ஆமா! அட! என்ன ஸ்ரீராம் உங்களுக்கே இது தெரியாம போச்சா... ஜுஹு தாரா சாலையில், 'தமன்னா ஃபைன் ஜூவல்லரி' (Tamannaah Fine Jewellery) பிரத்யேகமான தங்கம், வைர நகைகள் விற்கும் கடையாம்!!!

      நெல்லைக்குத் தெரியும் பாருங்க

      கீதா

      நீக்கு
  24. குமுதம் முதல் இதழ் வரலாறு - சுவாரசியம். ஜெ கே அண்ணா மத்யமர்ல இருக்கிறாரா? ஜீவி அண்ணாவும்?

    கீதா

    பதிலளிநீக்கு
  25. பாஹே அவர்களின் கவிதை ரசித்தேன் ஸ்ரீராம்.

    இந்த முறை எழுத்தை வாசிக்க முடிந்தது

    கீதா

    பதிலளிநீக்கு
  26. சிவாஜி - பாட்டு சூப்பர் ஸ்ரீராம் இப்பதான் கேட்கிறேன் மனதில் டக்கென்று ஒட்டும் மெட்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நிமிஷம் சிவாஜியா எம்ஜிஆரா ன்னு ....ஆரம்க ஸ்டெப்ஸ்

      கீதா

      நீக்கு
  27. எல்லாப் பகுதியும் பார்த்திருக்க்றேனா...!! ஹிஹிஹி..ஏதாச்சும் விட்டுப் போயிருக்கா...

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!