நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 21
பெரிய நம்பி, ஆளவந்தாரிடம் பெற்றுக்கொண்ட ஸ்தோத்ர ரத்னத்தை எடுத்துக்கொண்டு காஞ்சீபுரம் நோக்கிச் சென்ற சில நாட்களில் ஆளவந்தாருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனது. கூட இருந்த சிஷ்யர்களுக்கும், திருவரங்கம் கோயில் பெரியவர்களுக்கும் மனதுக்கு வருத்தமாக இருந்தது.
திருவரங்கம் கோயில் வைகாசி பிரம்மோத்ஸவத்தின் தீர்த்தவாரி அன்று கோயிலுக்குச் சென்று நீராடி, அரங்கநாதரைச் சேவித்தார் ஆளவந்தார். பிறகு மடத்துக்குச் சென்று, முக்கியமான பெரியவர்கள் மற்றும் திருவரங்கம் கோயில் முக்கியஸ்தர்களை வரவழைத்து, தான் செய்திருந்த அபராதங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டினார். பிறகு திருவரங்கப் பெருமாள் அரையர் முதலானவர்களை கோயில் முக்கியஸ்தர்களைடம் காட்டிக்கொடுத்து, 'பெரிய பெருமாளுக்கு ஒரு குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் நடத்திக்கொண்டு போங்கள், எல்லோரையும் அரவணைத்துச் செல்லுங்கள்' என்றார். அவர்களுக்கு இது புதுமையாக இருந்தது.
பிறகு ஆளவந்தார் பத்மாசனத்தில் அமர்ந்து தன்னுடைய ஆச்சார்யரான மணக்கால் நம்பியைத் தியானித்துக்கொண்டு, அவருடைய திருவடி நிலைகளை (ஆச்சர்யரின் பாதம்) தன் முன்னே வைத்துக்கொண்டிருந்தார். கூட இருந்த சீடர்கள் வேதங்களைச் சேவித்தனர். திருவரங்கப் பெருமாள் அரையர், திருக்கோஷ்டியூர் நம்பி முதலானவர்கள் இருக்க, ஆளவந்தார் திருநாட்டுக்கு எழுந்தருளினார். (மறைந்தார்)
வட திருக்காவேரிக் கரையில் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு வடமேற்கில் அமைந்துள்ள படித்துறை அருகில் ஆளவந்தார் பள்ளிப்படுத்தப்பட்டார். அந்தப் படித்துறை பிற்காலத்தில் ஆளவந்தார் படித்துறை என்று வழங்கப்படலாயிற்று. காவிரியில் அவ்வப்போது பெருகும் வெள்ளத்தினால் ஆற்றின் போக்கு மாறி, கரைகள் அழிக்கப்பட்டன. அதனால் தற்போது ஆளவந்தார் திருவரசு என்று குறிப்பிட்டுள்ள இடம்தான் ஆளவந்தார் திருவரசா என்பதில் சந்தேகம்நிலவுகிறது.
ஆளவந்தாருக்கான இறுதிச் சடங்குகள் நடக்க, காவிரிக் கரைக்கு ஆளவந்தாரின் சரம உடல் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையில், பெரியநம்பி காஞ்சீபுரத்தை அடைந்து, திருக்கச்சி நம்பியிடம் ஆளவந்தார் சொன்ன செய்தியைச் சொல்லி பிறகு சாலைக்கிணற்றை நோக்கி பெரிய நம்பி புறப்பட்டார். அங்கு ஸ்தோத்ர ரத்னத்தின் பொருளில் மனம் ஆழ்ந்து அதனை அனுசந்தானம் செய்துகொண்டிருக்கையில், இளையாழ்வார் அவரிடம், இது யாருடைய ஸூக்தி என்று கேட்க, பெரியநம்பியும், இது ஆளவந்தார் இயற்றியது என்று சொல்ல, அவரை அடியேன் சேவித்தல் இயலுமோ என்று கேட்க, என்னுடன் வந்தால் அவரைச் சேவிக்கப் பண்ணுகிறேன் என்று பெரியநம்பி சொன்னார்.
இளையாழ்வார் உடனே திருமஞ்சன தீர்த்தத்தை பெருமாள் சன்னிதியில் சமர்ப்பித்து, பெருமாளிடம் விடைபெற்று பிறகு, திருக்கச்சி நம்பியினிடத்தில் விஷயத்தைச் சொல்லி, ஆளவந்தாரைச் சேவிக்க, தான் பெரிய நம்பியுடன் திருவரங்கம் செல்வதாகச் சொன்னார்.
பெரிய நம்பியும் இளையாழ்வாரும் திருவரங்கத்தை அடையும்போது, காவிரியின் கரையில் பெருந்திரள் கூடியிருந்ததைக் கண்டு என்ன விஷய்ம் என்று கேட்க, வைணவ தர்சனத்தின் தலைவரான ஆளவந்தார் மறைந்த செய்தியைத் தெரிவித்தார்கள்.
பெரிய நம்பிக்கு துக்கம் என்றாலும், ஏற்கனவே ஆளவந்தார் சொல்லியிருக்கிறபடி தன் துக்கத்தை வெளியில் காட்டவில்லை. இளையாழ்வாருக்கோ, தான் ஆளவந்தாரை தரிசிக்க முடியவில்லையே என்று சொல்லவொண்ணா வருத்தம். பெரிய நம்பி, இதனைச் சாக்கிட்டு, இளையாழ்வாரை எல்லோரும் தரிசனம் செய்யட்டும் என்று எண்ணி, ஆளவந்தாரின் சரம திருமேனியைச் சேவிப்போம் என்று சொல்லி இளையாழ்வாரைக் கூட்டிக்கொண்டு அந்த இட த்திற்கு விரைந்தார்.
இளையாழ்வார், ஆளவந்தாரின் சரம திருமேனியை முற்றிலும் சேவித்தபோது, ஆளவந்தாரின் திருக்கரத்தில் மூன்று விரல்கள் மடங்கியிருப்பதைக் கண்டு, இது எதனால் என்று அங்கு இருந்த சீடர்களிடம் கேட்க, அவர்கள், இதுவரை இப்படி இருந்ததில்லை, இப்போதுதான் காண்கிறோம் என்றார்கள். ஆளவந்தாரின் உள்ளத்திலே ஏதாவது நிறைவேறாத ஆசை இருந்திருக்கவேண்டும் என்று யூகித்து, இளையாழ்வார், அவர்களிடத்தில் ஆளவந்தார் முன்பு வியாக்கியானங்களை விரித்துரைக்கும் போது அவருடைய விருப்பமாக ஏதேனும் சொல்லியிருந்தாரா என்று கேட்டார்.
அவர்கள் தங்களுக்கு அதுபற்றி எதுவும் தெரியாது, ஆனால் வியாஸ பராசர மஹரிஷிகளிடத்தில் நன்றியுடன் கூடிய நினைவும், நம்மாழ்வாரிடத்தில் அளவு கடந்த பிரேமையும், விசிஷ்டாத்வைதத்திற்கு ஏற்றபடி பிரம்மஸூத்ரத்திற்கு வியாக்யானம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தன. இவற்றைப் பலமுறை அவர் சொல்லியிருக்கிறார் என்றனர்.
இளையாழ்வார், ஆளவந்தாரின் பரிபூரண கடாக்ஷம் அடியேனுக்கு இருக்குமானால், எம்பெருமானின் அருளும் சேர்ந்தால், ஆளவந்தாரின் இந்த மூன்று ஆசைகளை அடியேன் பூர்த்தி செய்யக் கடவேன் என்று சொல்ல, அந்தக் கணமே ஆளவந்தாரின் மூன்று மடங்கிய விரல்களும் நிமிர்ந்தன.
எல்லோரும் இதனைக் கண்டு ஆச்சர்யப்பட்டனர். ஆளவந்தாரின் அருளுக்குப் பாத்திரமான இவரே அடுத்த வைணவ தர்சனத்தின் தலைவர் என்று தீர்மானித்தனர்.
ஆளவந்தாரின் உடல் காவிரிக் கரையில் திருப்பள்ளிப்படுத்தப்பட்டது.
பிறகு பெரியநம்பி முதலியோர் காவிரியில் ஸ்னானம் செய்து (இதற்குப் பெயர் அவபிரத ஸ்னானம். புனித நீராடல். இது வேள்வியின் இறுதியில் இருக்கலாம். அல்லது ஆச்சார்யார் திருநாட்டுக்கு எழுந்தருளும்போது, அவரது சரம உடலுக்கான சம்ஸ்காரங்கள் முடிந்த பிறகு செய்யும் ஸ்னானம். உங்களுக்குத் தெரியும், நெருங்கிய உறவினர் மறைந்தால், அங்கு நாம் இல்லாதபோதும், செய்தி கேள்விப்பட்ட உடனேயே ஒரு குளியல் போடுவோம். இதுபோலவே வைணவர்களுக்கும், ஆச்சார்யன் மறைந்த செய்தி கேள்விப்பட்டதும்-உடலுக்கான சடங்குகள் முடிந்ததும் ஸ்னானம் செய்யவேண்டும்), அவரவர் திருமாளிகைக்குச் சென்றனர்.
இளையாழ்வாருக்கு, தான் ஆளவந்தாரைச் சேவித்து அவருடன் பேசியிருக்க வாய்ப்பில்லாமல், அவரை அரங்கநாதன் தன்னுடன் அழைத்துக்கொண்டானே என்ற வருத்தம் மிக, மனதைத் திடப்படுத்திக்கொண்டு, திருவரங்கம் கோயிலுக்குச் செல்லாமல், காஞ்சீபுரம் நோக்கி விரைந்தார்.
அங்கு கோயிலுக்குச் சென்று திருக்கச்சி நம்பியிடம் நடந்த விஷயங்களைத் தெரிவித்தார். அவரும் தன்னுடைய ஆச்சார்யார் மறைந்த செய்தியைத் தெரிந்து வருந்தி, அவருக்குத் (மறைந்த ஆச்சார்யருக்கு) தான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்தார்.
திருக்கச்சி நம்பி, இளையாழ்வாரிடம், பேரருளாளர் எல்லாம் அறிந்தவர். அனைத்திலும் வல்லவர். நீங்கள் நினைத்த தைச் செய்தருளுவார், கவலைப்படாதீர்கள் என்றார். இளையாழ்வாரும் மனதைத் தேற்றிக்கொண்டு, பேரருளாளனுக்கு தினமும் திருமஞ்சன கைங்கர்யம் செய்துகொண்டிருந்தார்.
பிறகு நடந்தவற்றை அடுத்த வாரம் காண்போம். இனி இன்றைய பாசுரம்.
இந்தப் பாசுரம் திருவாய்மொழி 7ம் பத்தில் 2ம் திருவாய்மொழ்யின் 4வது பாசுரம். இந்தப் பாசுரத்தில், தலைவி (யாகிய நம்மாழ்வார்), தலைவனாகிய பெரிய பெருமாளிடத்தில் மையலுற்றிருப்பதைக் கண்டு வருந்தி, இவளுக்கு நீ என்ன செய்துவிட்டாய் என்று தலைவியின் தாயார், அரங்கநாதனைக் கேட்பது போன்ற பதிகம் இது.
வட்கிலள் இறையும் `மணிவண்ணா!' என்னும்*
வானமே நோக்கும் மையாக்கும்,*
`உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட*
ஒருவனே!' என்னும் உள்ளுருகும்,*
`கட்கிலீ! உன்னைக் காணுமாறு அருளாய்*
காகுத்தா! கண்ணனே!' என்னும்,*
திட்கொடி மதிள்சூழ் திருவரங்கத்தாய்!*
இவள்திறத்து என் செய்திட்டாயே?
பொருள்: என் மகள் சிறிதும் நாணமில்லாமல் ‘மணிவண்ணா” என்று உன் பெயரை எப்போதும் கூவி அழைக்கிறாள். நீ வானுலகில் இருப்பதனால் எப்போதும் வானத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறாள். எப்போதெல்லாம் உன் நினைவு அதிகமாகிறதோ அப்போது மயங்கி விடுகிறாள். எல்லோரும் அஞ்சத்தக்க அசுரர்களின் உயிரைப் போக்கிய ஒப்பற்றவனே என்று உள்ளம் உருகிக் கதறுகிறாள். பிறர் கண்களுக்குப் புலப்படாதவனே.. ராகவனே.. கண்ணனே.. எனக்குக் காட்சியளித்து அருள் செய்ய மாட்டாயா என்று வேண்டுகிறாள். திடமான கொடிகள் பறக்கும் மதில்களை உடைய திருவரங்கம் கோயிலில் உறையும் எம்பெருமானே, என் மகளுக்கு இப்படிப்பட்ட பித்துப் பிடித்த நிலை உண்டாவதற்கு நீ என்ன செய்துவிட்டாய்?
விளக்கம்: வட்கிலள்-வெட்கமில்லாதவள். கட்கிலீ-பிறர் கண்களுக்குப் புலப்படாதவன். காகுத்தா-ககுத்ஸ்த வம்சத்தில் தோன்றிய ராமன்
திவ்யப் பிரபந்தங்களை பிறருக்குச் சொல்லிக்கொடுப்பதை (கற்றுக்கொடுப்பதை) சந்தை சொல்லுதல் என்பார்கள். பொதுவா மாதத்தில், அமாவாசை அதை அடுத்து வருகிற பிரதமை, பௌர்ணமி அதை அடுத்து வருகிற பிரதமை ஆகிய நான்கு நாட்களில் சொல்லித்தர மாட்டார்கள். திருவாய்மொழி சொல்லிக்கொடுக்க, கற்றுக்கொள்பவர்களுக்கு பஞ்ச சம்ஸ்காரம் ஆகியிருக்க வேண்டும், ஆச்சார்ய சம்பந்தம் இருக்கவேண்டும். முதல் நான்கு நாட்கள் ஓரிரு வார்த்தைகளை ஆசிரியர் கூற கற்றுக்கொள்பவர்கள் மூன்று முறைகள் திருப்பிச் சொல்ல வேண்டும். பிறகு மூன்று நாட்கள் ஒவ்வொரு வரியாகவும், பிறகு இரண்டு நாட்கள் இரண்டு வரிகளாகவும், கடைசி இரண்டு மூன்று நாட்கள் முழுப் பாசுரமும் என்று சந்தை நடக்கும். நாலாயிரமும் முழுமையாகக் கற்றுக்கொள்ள சுமார் ஐந்து ஆறு வருடங்கள் ஆகும். இப்போதெல்லாம் கொஞ்சம் வயதான பிறகுதான் சந்தை (ஆன்லைன்) கற்றுக்கொள்ள வருவதால் இப்படி சந்தை ஆகியும் மனப்பாடம் ஆவதில்லை. எப்படியும் மனப்பாடம் ஆகப்போவதில்லை, புத்தகத்தைப் பார்த்துத்தான் சேவிக்கப் போகிறார்கள் என்பதால், ஒரு வருடத்திலேயே படிக்கச் சொல்லிக்கொடுத்துவிடுகிறார்கள்.
வடதிருக்காவிரியின் தற்போதைய நிலை (2023 ஜனவரியில் எடுத்தது.
இந்தக் கரையில்தான் ஆளவந்தார் படித்துறை இருந்தது. அதன் அருகில் ஆளவந்தார் திருவரசு, பல்வேறு திருவரசுகள் உள்ள வளாகத்தில் இருக்கிறது.
தவராசன் படித்துறை, ஆளவந்தார் படித்துறைக்குக் கீழ் திசையில் இருந்தது. டாஸ்மாக் அன்பர்கள் அங்கு பாட்டில்களை வீசி எறிவதால், அங்கு இருந்த பலகையை, ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருவரசு அருகே கொண்டுவந்து வைத்துள்ளார்கள்.
ஆளவந்தார் திருவரசு
இந்த வளாகத்தில் நிறைய திருவரசுகள் இருக்கின்றன. பல்வேறு ஜீயர்களின் திருவரசுகள். ஓரளவு நன்றாகவே பராமரிக்கிறார்கள் என்றாலும் புல் தரையில் செல்ல கொஞ்சம் யோசனையாக இருந்தது.
அடுத்த வாரம் தொடர்வோமா?...
=================================================================================================
நான் படிச்ச கதை
தாயார் பாதம் - ஜெயமோகன்
- ஸ்ரீராம் -
ராமனும் பாலசுப்ரமணியனும் பேசிக்கொள்கிறார்கள். யார் அவர்கள்? தெரியாது.
ஆனால் பேசுவது அவர்கள் தாத்தா பாட்டி பற்றி. அல்லது ராமனின் பரம்பரை பற்றி.
எல்லோர் வீட்டிலும் நம் தாத்தா பாட்டிகளுக்கு ஒரு வரலாறு, ஒரு கதை
இருக்கும். சில வரலாறுகள் ரொம்பவே ஸ்பெஷல்.

புத்தகத்தின் முதல் பக்கத்தில் 'உண்மை மனிதர்களின் கதைகள்' என்று
இருக்கிறது. 2013 ல் வாங்கியது. அப்போதே முடித்து விட்டேன். நிறைய கதைகள் என்ன கதை என்று நினைவில் இல்லை. முதல் கதை MVV பற்றி என்பது படிக்கும்போதே புரியும். இந்தக் கதை சொல்லும் மனிதர் யார்
என்று தெரியவில்லை. இதற்கு அடுத்த கதை யானை டாக்டர்.
எழுத்தாளர் ராமன் யார் என்றும் தெரியவில்லை. அவர் எழுதியதாகச் சொல்லப்படும் பாட்டி
கதை எது, எங்கு வந்தது என்றும் தெரியவில்லை. ஜெமோதான் ராமனோ? தெரிந்தவர் சொல்லலாம்.
பாட்டி பற்றி சொல்லப்படும் இந்தக் கதை மனதை அசைக்கிறது. தலைப்பு எந்த விதத்தில் பொருந்துகிறது
என்றும் யோசிக்கிறேன்.
எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் ராமனுக்கு மட்டும் பாடாந்திரம் ஏன் சரிவரவில்லை? வயலினாவது வருகிறதா
என்றால் அதுவும் கைவரவில்லை. நெஞ்சு முழுக்க நிரம்பி, தொண்டைக்குழி வரை இசைப்பிரவாகம் இருக்கிறது. ஆனால் வெளிவருவதில்தான் சிக்கல். 'தாத்தா சொல்லிக் கொடுக்காமல் இருந்திருந்தால் வந்திருக்குமோ' என்பதில்
என்ன குறிப்பு? தாத்தாவும் சொல்லிக் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார். அவரிடம் பாடம் பயின்ற மற்ற மாணவர்கள்
தங்கமும் வைரமுமாக ஜொலிக்கிறார்கள். அவ்வளவு பெரிய வித்துவான் மனைவியை ஏன் அப்படி நடத்தினார்? அப்பாவுக்கு பயந்தா?
இந்த தாத்தா பாட்டி, அப்பா அம்மா தலைமுறை வரிசை எனக்கு முதலில் கொஞ்சம் குழப்பியது. பின்னர் புரிந்தது.
விவேகானந்தர் பாறைல தபஸ் பண்ணின ஒரு கன்னிப்பொண்ணோட பாதம் பற்றி வருகிறது. அது பாறையில் ஏற்படும் இயற்கை விளைவு,
பாறையின் மென்மையான பகுதிகள் வழிந்து ஓடிவிடுகின்றன என்பது பாலுவின் கருத்து.
ராமன் 'நடராஜரோட ஒத்தைக்கால் திரும்ப தரையிலே பட்டுதுன்னா ஒரு ஊழி முடிஞ்சு
அண்டசராசரங்களும் அழிஞ்சிரும்னு கதை ... அம்பாளோட எடுத்தபாதம் பட்டா என்ன ஆகும்?'
என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. 'ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல?' என்றார் ராமன். ஒரு கன்னிப்பொண்ணு ஒத்தக்காலிலே
யுகயுகமா தபஸ் பண்றா... அவளோட தபஸோட சின்னமா அந்த காலடித்தடம் மட்டும் அங்கியே
பதிஞ்சிருக்கு. என்று நிலைகுலைந்து போவது அந்தப் பெண்ணுக்காக அல்ல, தன் பாட்டிக்காக என்பது
பின்னால் புரிகிறது. அந்தப் பாட்டியின் வைராக்யம்...
தாத்தாவின் சங்கீதம் பற்றி சொல்லும்போது,
அவரு எந்நேரமும் அதிலே சுதிபாத்தூண்டே இருப்பர். சரியா அமைஞ்சதும் அதோட
சேந்து மெல்ல பாடுவார். பாட்டு எப்பவுமே அவருக்காகத்தான். இப்ப சொன்னேளே, சங்கீதம்
உடம்பிலே இருக்கு, கனெக்ஷன் குடுத்திடலாம்னு. அது அவருதான். அப்பல்லாம் கிராமத்து
அக்ரஹாரம் சத்தமே இல்லாம இருக்கும். ரேடியோ, பிளேட்டு ஒண்ணும் வரலை. அக்ரஹாரத்துக்கு
நடுவிலேயே ஒரு ஓடை போகும். காவேரித்தண்ணி. அந்த சத்தம் எப்பவும் கேட்டுண்டே
இருக்கும். அந்த சுருதிய தம்புராவிலே பிடிப்பர். அதிலே சேந்து பாடுவர்.
மத்தியான்னம் மாமரத்திலே குயில் வந்து ஒக்காந்துண்டு பாடும். அந்த நாதத்தோட
சுருதிய பிடிப்பார். வெளியே கேக்கிற எல்லா சத்தமும் அவருக்கு சங்கீதம்தான்.
அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும். ஊர்த்தண்ணியெல்லாம்
காவேரியா போய் சேந்துக்கற மாதிரி. சரி. காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும்
வந்துண்டிருக்கு.. 'ஊருக்குள்ளே அவருக்கு
புண்ணியாத்மான்னுதான் பேரு.
தாத்தாவின் கோபம், பிரியம், சோகம், சந்தோஷம் எல்லாமே சங்கீதமாகவே வெளிப்படுத்தியிருந்திருக்கிறார்.
பாட்டி - "வத்திப்போன பசு மாதிரி அவ சித்திரம் இருக்கு"
பாட்டியின் குணநலன் : 'அவ ஒக்காந்து நான் பாத்ததே கெடையாது. எப்பவும் வீடு முழுக்க
அலைஞ்சுகிட்டேதான் இருப்பள். வீட்டை விட்டு வெளியே போகமாட்டா. முற்றத்துக்கும்
திண்ணைக்கும் கூட வரமாட்டா.
அப்புறம் என்ன ஆச்சு? "கடைசி இருபது வருஷத்திலே புத்தி
பேதலிச்சு போச்சு. எங்கப்பாவுக்கு கல்யாணமாகி மாட்டுப்பொண்ணு வர்றப்பல்லாம்கூட
நல்லாத்தான் இருந்திருக்கா. பொதுவா பேசறவ இல்ல. எல்லாத்துக்கும் ஒரு மௌனம். "
ஏனாம்? ஒருவேளை இதனால் இருக்குமோ?
"ஆனா பொண்ணுக்கு ஏழு எட்டு வயசானதுக்கு அப்றமும் சொன்ன பவுனைபோட்டு
புக்காத்துக்கு அனுப்ப அவாளாலே முடியலை. அப்பல்லாம் பஞ்ச காலம். வயத்தக் கழுவறதே
பெரிய விஷயம். ஏதோ நம்பிக்கையிலே சொல்லிட்டார். முடியலை. அப்டியே வீட்டுலேயே
வச்சிருந்தர்.
'தாத்தாவோட அப்பா நாலஞ்சுவாட்டி ஆளு சொல்லி அனுப்பியிருக்கார். சரியா பதில்
இல்லை. 'சரிடா, உனக்கு இந்த பொண்ணு இல்லை. உன் ஜாதகத்திலே வேற
எழுதியிருக்குபோல'ன்னு சொல்லிட்டு வண்டி கட்டி நேரா பத்தூர் போய்
எறங்கியிருக்கார். சம்பந்தி அய்யர் எங்கியோ வாழை எலை நறுக்கப் போனவர் ஓடிவந்து கைய கூப்பிண்டு பேசாம நிக்கிறார். இவரு
'அவ்ளவுதான் ஓய். அதை சொல்லிண்டு போகத்தான் வந்தேன்'ன்னு சொல்லிட்டு திருப்பி
வண்டியிலே ஏறி ஒக்காந்துட்டர். அப்ப பாத்தா பின்னாடியே கையிலே ஒரு சின்ன மூட்டையோட
பாட்டி வந்து நிக்கிறா. ஒண்ணுமே சொல்லலை, கண்ணு ரெண்டும் வரைஞ்சு வச்சதுமாதிரி
இருக்கு. இவரு பாத்தார். 'சரி ஏறுடீ கோந்தே'னு தூக்கி ஒக்கார வச்சு
கொண்டாந்துட்டர்.
"ஆனா கடைசி வரைக்கும் பத்தூர் ஆட்கள வீட்டுப்பக்கமே வர விடலை. சீர்
செனத்தி ஒண்ணையுமே வாங்கிக்க மாட்டேன்னுட்டர். பிரசவத்துக்கும் சாவுக்கும்
ஒண்ணுக்கும் வரப்படாதுன்னு பிடிவாதமா சொல்லிட்டர். பலபேரு வந்து சமரசம்
பேசியிருக்கா. 'போனா போகட்டும். திரும்பி வரவேணாம்'னு திட்டவட்டமா சொல்லிட்டர்.
பாட்டியோட அப்பா வந்து தெருவிலே தென்னை மரத்தடியிலே நிக்கிறார். 'கூட்டிண்டு போனா
அப்டியே போயிரும் ஓய்'னு தாத்தாவோட அப்பா சொல்லிட்டார். 'இல்லே, எங்க இருந்தாலும்
புள்ளைகுட்டிகளோட நெறைஞ்சு இருக்கட்டும். ஏழையோட ஆசீர்வாதம் எப்பவும் அவ பின்னாலே
நெழலு மாதிரி இருக்கும்'னு சொல்லிட்டு அழுதிண்டே போனார். அதோட சரி. பிறகு
பாட்டிக்கும் பத்தூருக்கும் சம்பந்தமே இல்லாம ஆச்சு. முப்பது வருசத்திலே பத்தூர்
அக்ரஹாரமே அழிஞ்சுபோச்சு.?
அந்த வருத்தம் அந்த மனசுக்குள் இல்லாமலா போகும்? கடன்பட்ட நெஞ்சம் போல உழைத்திருக்கிறாள் போலும் பாட்டி.
"'எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை
மிச்சமிருக்காது.மாட்டுப்பொண்ணு வேலை பாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு
செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது. அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம்."
-அவ சித்தம்போக்குல இருப்பா. வெடிகாலை
நாலு நாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணி நேரமாகும் குளிச்சு
துவைச்சு வர்றதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு
இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே
மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது
குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்றான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய
போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்..."
"'தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி
இருப்பர். ஒரே ஒருவாட்டி அக்காவுக்கு ஒரு வரன் வந்து அதைப்பத்தி பேசறப்ப இப்டி
பாட்டியப் பத்தி பேச்சு வந்தது. 'ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு
மாதிரி கட்டிண்டுதாண்டா வர்ரா... ஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்'னு மட்டும்
சொன்னார். பாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப
சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை. ஒருநாளைக்கு காலம்பற அம்மா காமிரா உள்ள திறந்தா
சுவர் மூலையிலே சுவரோட ஒட்டி முதுகைகாட்டிண்டு ஒக்காந்திருக்கா. உள்ள போய் என்ன
அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து..."
கதை முடியும்போது உங்கள் மனதில் நிற்பது தாத்தாவா, சங்கீதமா,
தாத்தாவின் அப்பாவா பாட்டியா? தாயாரின் பாதம் எங்கிருந்து
வருகிறது?
படித்து விட்டுச் சொல்லுங்களேன்...


திருவரங்கம் கோயில் வைகாசி பிரம்மோத்ஸவத்தின் தீர்த்தவாரி அன்று கோயிலுக்குச் சென்று நீராடி, அரங்கநாதரைச் சேவித்தார் ஆளவந்தார்.//
பதிலளிநீக்குதிருவரங்கம் இப்பவும் தினமுமே ஜே ஜே என்று இருக்கிறதே அப்ப எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை விரிகிறது. மக்கள் இந்த அளவு இருந்திருக்காவிட்டாலும், சுற்றுலா என்று இருந்திருக்காவிட்டாலும் அதன் புனிதம் இன்னும் ஒருவித மணத்தோடு இருந்திருக்குமோ! ஒரு time machine ல போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வருகிறது. ஆளவந்தார், இளையாழ்வார் எல்லாரும் அப்ப இருந்திருப்பாங்களே...
கீதா
தான் செய்திருந்த அபராதங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டினார். //
பதிலளிநீக்குபாருங்க அந்த புனிதமான மனதை! அவர் என்ன அபராதம் செய்திருப்பார்? ஆனாலும் அந்த மனது. இப்படி இன்று யாருக்கேனும் வருமா? என்னவோ தோணுது ஆனா வேண்டாம் இந்த இடத்தில்!!! ஹாஹாஹா
//பிறகு திருவரங்கப் பெருமாள் அரையர் முதலானவர்களை கோயில் முக்கியஸ்தர்களைடம் காட்டிக்கொடுத்து, 'பெரிய பெருமாளுக்கு ஒரு குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் நடத்திக்கொண்டு போங்கள், எல்லோரையும் அரவணைத்துச் செல்லுங்கள்' என்றார். //
வழிநடத்தல் தனக்குப் பின்னும் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல். உணர்வுபூர்வமான பகுதி. இப்படி எல்லாம் ஆர்கனைஸ்டாக சொல்ல ஒரு குரு அதுவரை இல்லைன்னு மத்தவங்களுக்குப் புதுமையாக இருந்திருக்கு!
கீதா
இளையாழ்வார், ஆளவந்தாரின் சரம திருமேனியை முற்றிலும் சேவித்தபோது, ஆளவந்தாரின் திருக்கரத்தில் மூன்று விரல்கள் மடங்கியிருப்பதைக் கண்டு, இது எதனால் என்று அங்கு இருந்த சீடர்களிடம் கேட்க,//
பதிலளிநீக்குஇது மிகவும் ஆழமாகச் சிலாகித்து, போற்றப்பட்டுச் சொல்லப்படும் ஒரு நிகழ்வு.
கீதா
எப்படியும் மனப்பாடம் ஆகப்போவதில்லை, புத்தகத்தைப் பார்த்துத்தான் சேவிக்கப் போகிறார்கள் என்பதால், ஒரு வருடத்திலேயே படிக்கச் சொல்லிக்கொடுத்துவிடுகிறார்கள். //
பதிலளிநீக்குஓடிக் கொண்டிருக்கும் உலகம், நெல்லை!! வாழ்வியலே மாறிவிட்டதே இல்லையா?
இப்போது பல ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன அதுவும் கொரோனா காலத்திலிருந்து.
நம்ம குடும்பத்திலும் நிறையப்பேர் கற்கிறார்கள். பிரபந்தம் ஸ்லோகங்கள், சமஸ்கிருதம் என்று.
கீதா
நெல்லை, படங்களில் இருக்கும் தற்போதைய காவிரி அப்போது எப்படி இருந்திருக்கும்ல?
பதிலளிநீக்குடாஸ்மாக் அன்பர்கள் அங்கு பாட்டில்களை வீசி எறிவதால், அங்கு இருந்த பலகையை, ஸ்வாமி மணவாள மாமுனிகள் திருவரசு அருகே கொண்டுவந்து வைத்துள்ளார்கள்.//
மிகவும் சோகமான விஷயம். இப்ப கோயில்கள், பள்ளிக்கூடங்கள் அருகில் உள்ளவற்றை எல்லாம் மூடறாங்கன்னு செய்தி அறிந்தேன். இங்கும் மூடியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
வெங்கட்ஜி ய கேட்டால் தெரியும்! நமக்கு ஸ்ரீரங்கம் ரமேஷைத் தெரியுமா என்ன!!!!!!!
கீதா
இந்த வளாகத்தில் நிறைய திருவரசுகள் இருக்கின்றன.//
பதிலளிநீக்குஒரு கேள்வி வருது நெல்லை, இங்கு எபியில் முன்பு கருத்துகளில் சொல்லப்பட்ட ஒன்று....இப்படியான இடங்களுக்குச் சென்று வந்தால் குளிக்கணும்னு, அப்ப இவையும் அந்த வகையில் சேருமா?
கீதா
ஸ்ரீராம், நான்படிச்ச கதைக்குத் தொடக்கம் அட்டகாசம். ரொம்ப அழகான முன்னுரையாக உங்கள் பாணியில் எழுதியிருக்கீங்க வித்தியாசமாக.
பதிலளிநீக்குஉண்மை மனிதர்களின் கதை என்றால் இக்கதையில் "ராமன்" யாரைக் குறிக்கிறது என்ற கேள்வி வருகிறது, நீங்கள் கேட்டிருப்பது போல். கூடவே ஜெமோவின் முன்னுரையில் ஒரு நபரைக் குறிப்பிடுகிறாரே.....அவரைச் சுற்றிய கதையோ?
கீதா
வாங்க கீதா.. நன்றி.
நீக்கு// ஜெமோவின் முன்னுரையில் ஒரு நபரைக் குறிப்பிடுகிறாரே.....அவரைச் சுற்றிய கதையோ? //
இருக்கலாம்.
கதைக்கென்று சம்பிரதாயங்கள் இருந்தால் கதைகள் பிறப்பது மிகவும் சிரமம் ஸ்ரீராம். கதைகள் இயற்கையாக நம் மனதிலிருந்து பிறக்க வேண்டும். சம்பிரதாயத்திற்கு உட்பட்டு என்றால் பல தடங்கல்கள் வந்துவிடும் எழுதுவதற்கு.
பதிலளிநீக்குஉண்மைக் கதை என்பதால் முடிவும் அப்படி ஆனதோ?
//அவர் எழுதியதாகச் சொல்லப்படும் பாட்டி கதை எது, எங்கு வந்தது என்றும் தெரியவில்லை. //
ஸ்ரீராம் அப்புறம் ஜெ மோவும் நான் படிச்ச கதைன்னு எழுதியதாக ஆகிவிடுமே இல்லையோ!!!!!!!!!!!!!!!! இது அவர் அறிந்த கதை!
கீதா
சம்பிரதாயங்கள் என்பதை இன்னும் விளக்கினால், இந்த பகுதியில் பேசும் ராமனும் பாலுவும் யார்? கதையில் அவர்களுக்கு நிகழ்வு இல்லை! பூடகமாக பேசுகிறார்கள். எதற்கு அந்தப் பேச்சு?
நீக்கு// ஜெ மோவும் நான் படிச்ச கதைன்னு எழுதியதாக ஆகிவிடுமே //
அப்படி இல்லை. அந்தக் கதை பற்றிய விவரங்கள் தெரிந்தால் பாட்டியைப் பற்றியோ, இங்கு சொல்லப்படுபவர் யார் என்பது பற்றியோ மேலதிக விவரங்கள் கிடைக்குமே...!!
சிலருக்கு, நல்ல ஆர்வம் இருக்கும் ஆனால் எந்தப் பாடாந்திரமும் கை வராது. ஒரு வேளை அது அவர்களின் திறனைப் பொருத்து இல்லைனா அந்த அளவு ஞானம் வேண்டியிருக்கும். இல்லை சங்கீதம் பற்றிய அறிவு இருந்தாலும் கற்பதற்கான திறன் இல்லாமல் இருக்கலாம். அந்த வகையில் ராமன் கதாபாத்திரம்.
பதிலளிநீக்குகீதா
உதாரணமாக நான்... ஆர்வம் இருந்தும் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை. ஓரளவு கேள்வி ஞானம். அந்த கேள்வி ஞானம் என்னை இசையை ரசிக்க மட்டும் வைத்து பாடாய் படுத்துகிறது!
நீக்குஇக்கதையில் ராமனுக்குத் தாத்தாவின் மேல் ஏதோ ஒரு வருத்தம், வெறுப்பு? ஆழ் மனதுள் இருந்திருக்கிறது. அந்தத் தாத்தா பாட்டியைக் கொடுமைப் படுத்திய நிகழ்வு ராமனின் மனதில் ஆழமாகப் பதிந்து அதனால் தாத்தா என்ன சொல்லிக் கொடுத்தாலும் கற்க முடியாமல் போயிருக்கலாம். நமக்குப் பிடித்தவரிடம் தானே பாடம் கற்க இயலும். பள்ளியிலும் கூட பாத்தீங்கனா, நல்லா, அன்பா பாடம் சொல்லித்தர டீச்சரிடம் கற்றால் பாடம் எளிதில் பதியும் இல்லையா? இல்லைனா புறக்கணிக்கும் மனம் வரும் இல்லையா? அப்படி ராமனின் மனம் ராமனும் அறியாமல் புறக்கணித்திருக்குமாக இருக்கும்
பதிலளிநீக்குகீதா
அதைதான் ராமன் ஒரு வரியில் குறிப்பிடுகிறார். தாத்தா கற்றுக் கொடுக்காமல் வேறு யாராவது கற்றுக் கொடுத்திருந்தால் கற்றுக் கொண்டிருப்பார் என்பது போல..
நீக்குதாத்தாவும் சொல்லிக் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார். அவரிடம் பாடம் பயின்ற மற்ற மாணவர்கள் தங்கமும் வைரமுமாக ஜொலிக்கிறார்கள். //
பதிலளிநீக்குஇங்கேயே பதில் வந்துவிடுகிறது இதற்கு முன்னானதற்கு.
//அவ்வளவு பெரிய வித்துவான் மனைவியை ஏன் அப்படி நடத்தினார்? அப்பாவுக்கு பயந்தா?//
பயம் என்பதை விட, அப்பாவின் மாடலிங் அப்படி! ஆணாதிக்கம் நிறைந்த சமூகம். காலகட்டம்!
பெற்றோரின் மாடலிங் குழந்தைகளுக்கு மிக முக்கியம்.
உளவியல், உணர்வுகள் சார்ந்த கதை இது.
கீதா
நல்வேளை! "ராமன்" அந்த வழக்கத்தை, பழக்கத்தை கைக்கொள்ளவில்லை என்று நினைத்துக் கொள்ளலாம்!
நீக்குஎஸ் தலைமுறையில் மாற்றங்கள் வரும் ஸ்ரீராம். என் அம்மா இருந்ததைப் போல நான் இல்லை...அது போல என் மகன் மருமகள் நம் தலைமுறை போல இல்லை...இதை நான் மிகவும் வரவேற்கிறேன்.
நீக்குகீதா
விவேகானந்தர் பாறைல தபஸ் பண்ணின ஒரு கன்னிப்பொண்ணோட பாதம் பற்றி வருகிறது.//
பதிலளிநீக்குஇதைப் பற்றிய அடுத்த பாராக்கள் அறிவு பூர்வமான சிந்தனைக்கும், நம்பிக்கைகள் சார்ந்த சிந்தனைகளுக்கும் ஆனதைச் சொல்லும் வரிகள். ராமன் நம்பிக்கைகள் சார்ந்த குடும்பத்தில் வளர்ந்த கதாபாத்திரமாக...அதற்கு அப்பாற்பட்டுச் சிந்திக்க மனம் இடம் கொடுக்காத காதாபாத்திரமாக..
ஆனால்...அந்த நம்பிக்கையைச் சொல்லும் இடத்தில் மறைமுகமாக ராமனின் பாட்டி அக்கதாபாத்திரத்தின் மனதுள் விரிகிறது
//ஒரு கன்னிப்பொண்ணு ஒத்தக்காலிலே யுகயுகமா தபஸ் பண்றா... அவளோட தபஸோட சின்னமா அந்த காலடித்தடம் மட்டும் அங்கியே பதிஞ்சிருக்கு. //
கதையில் அப்பாட்டியின் நிலை....
குடும்பத்திற்குள் இருக்கும் மறைமுகமான வன்முறை, ஆணாதிக்கம், அப்பாட்டியின் அமைதியான தியாகம்....
தாத்தா ஊருக்கே குரு...ஆனால் வீட்டில் மிகவும் அடிமட்டமான ஆண். அதைத் தாங்க இயலாத பாட்டி மன அளவில் பாதிக்கப்படுகிறாள். ocd குறிப்பாக. தன்னால் தாத்தாவைச் சமாளிக்க முடியலை ஏற்கவும் குடும்பத்தோடு தொடர்பிலோ இருக்க முடியலை, தாத்தாவின் அப்பா...அவருக்குப் பயந்த அதே சமயம் அவரின் ஆணாதிக்கத்தைப் பெற்ற ராமனின் தாத்தா.....ஒரு பெண்ணிற்கு இதற்கு மேல் என்ன கொடுமைகள் வேண்டும்? மென்மையான மனம் கொண்ட பெண் என்றால் சிதைவுதான்.
அதுதான் ராமனின் வரிகளில் வெளிப்படுகின்றன.
கீதா
தாத்தாவின் அப்பா ஒரு நல்லது செய்தது போலவே ஒரு கெடுதல் செய்திருக்கிறார். பாட்டி வண்டி பின்னால் வந்து நின்றிருக்கவே வேண்டாம் என்று தோன்றுகிறது! ராமன் அந்த கன்னிப்பெண்ணின் தபஸ் பற்றி முதலில் சொல்லும்போது புரியாது. பின்னர் முழுவதும் படித்து முடித்ததும்தான் புரியும்.
நீக்குஅதேதான் இந்தக் கேள்வி என்னுள் எழுந்தது...அதற்கு கீழே ஒரு கருத்ட்தில் கொடுத்திருக்கிறேன்
நீக்குகீதா
தாத்தாவின் கோபம், பிரியம், சோகம், சந்தோஷம் எல்லாமே சங்கீதமாகவே வெளிப்படுத்தியிருந்திருக்கிறார். //
பதிலளிநீக்குஇருக்கலாம்...ஆனால் பாட்டியிடம் அப்படி நடந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம்...தன் இயலாமையையேனும் வெளிப்படுத்தியிருக்கலாம்...அல்லாமல் கொடுமையாக நடந்து கொள்கிறார்...இதுதான் இவரும் அவர் தந்தையால் பாதிப்படைந்த ஒரு நபர்!
//'அவ ஒக்காந்து நான் பாத்ததே கெடையாது. எப்பவும் வீடு முழுக்க அலைஞ்சுகிட்டேதான் இருப்பள். வீட்டை விட்டு வெளியே போகமாட்டா. முற்றத்துக்கும் திண்ணைக்கும் கூட வரமாட்டா. //
ஸ்ரீராம் இதை பாட்டியின் குணநலன் என்பதை விட, அப்படியான சூழலில் இருப்பதால் ஆணாதிக்கம் இருப்பதால் அப்படித்தானே அப்போதைய பெண்கள்? தங்கள் உள்ளுணர்வுகளைக் கூட வெளிப்படுத்த முடியாதே. இயல்பாக இருக்க முடியாதே. அதனால்தானே மனச்சிதைவு வருகிறது.
//பொதுவா பேசறவ இல்ல. எல்லாத்துக்கும் ஒரு மௌனம். "//
மாட்டுப் பெண் (ராமனின் அம்மா) வரும் போது கூட நல்லா என்று சொல்வது...ஜஸ்ட் அது மத்தவங்க நினைச்சிருக்காங்க அப்படி...ஆனா அதற்கும் முன்னரே மனச்சிதைவு தொடங்கியாச்சு...
கீதா
சங்கீதம் தெரிந்து இங்கிதம் தெரியாமல் இருந்திருக்கிறார். இசை மனதை மென்மையாக்கும் என்கிற கருத்து அடிபட்டு போகிறது. ஆனால் பாட்டியின் யுத்தம் மாமனாருக்கு எதிரானதாக இருக்கலாம். ஒரு கடனை அடைக்கும் முனைப்பு, வைராக்கியம். கணவன் மனைவிக்குள் என்ன புரிதல் இருந்திருக்கும் என்று தெரியாது. இல்லாவிட்டால் கட்டுசோறு உவமை தாத்தாவிடமிருந்து வந்திருக்காது!
நீக்குகண்டிப்பாக சங்கீதத்தைத் தாண்டி குரூரம் மனதில் கூடுதல் ஸ்ரீராம். இது பற்றிச் சொல்ல நிறைய இருக்கு ஆனால் நேரமின்மை...ஒற்றைக் கண்.....இப்ப...
நீக்குவைராக்கியம் - இது நல்லதுதான் ஆனால் எல்லை தாண்டும் போது இதுவும் மனச்சிதைவுக்குக் காரணமாகிவிடும் ஸ்ரீராம்.
கண்டிப்பாக அந்தத் தாத்தா பாட்டிக்குள் புரிதல் சுத்தமாக இல்லை...கட்டுச் சோறு உவமை பற்றிக் கீழ சொல்ல வந்தேன் இக்கருத்தைப் பார்த்ததும் இங்கு...
அந்த உவமையில் விரக்தி...ஆனால் அதே சமயம் மனம் ஏன் வக்ரமானது? பிராப்தம் என்று தப்பித்தல்? என்ற கேள்வியும் வருது
கீதா
சமயங்களில் கணவன்மார் மனைவியை சமாதானப்படுத்தி 'அதை மறந்துவிடு, நாம் மறந்து வாழலாம்' என்று சொன்னாலும் சில பெண்கள் பழசை மரக்கத்தயாராக இருப்பதில்லை. வைராக்யம் வைத்து விடுகிறார்கள். கணவன்மார் செய்வதறியாமல் இருந்து விடுவதுண்டு. இது இன்னொரு கோணம்.
நீக்குஅப்ப பாத்தா பின்னாடியே கையிலே ஒரு சின்ன மூட்டையோட பாட்டி வந்து நிக்கிறா. ஒண்ணுமே சொல்லலை, கண்ணு ரெண்டும் வரைஞ்சு வச்சதுமாதிரி இருக்கு. //
பதிலளிநீக்குபாருங்க அந்த சின்ன வயசுலேயே ஓவர் மெச்சூரிட்டி....சிந்தனைகள்....அந்த வயதுக்கும் மீறிய ஒன்று...இது கூடாது தெரியுமோ? குழந்தை குழந்தையாக இருக்க வேண்டும் இருக்க விட வேண்டும்.
அப்பா படும் கஷ்டங்களைப் பார்த்து அக்குழந்தை மூட்டையோடு போகிறது.
//இவரு பாத்தார். 'சரி ஏறுடீ கோந்தே'னு தூக்கி ஒக்கார வச்சு கொண்டாந்துட்டர்.//
அவருக்கென்ன? வீட்டுக்கு ஓர் ஆளாச்சு...வீட்டு வேலை செய்ய...ஆனா பாட விடலியே அக்குழந்தையின் பாட்டைக் கேட்டுத்தானே ஃபிக்ஸ் செய்கிறார். ஆனால் அடுத்த பாராவில் வந்துடுது பாருங்க. விஷயம்...அக்குழந்தை எப்படிப் பாதிக்கப்பட்டிருபபள் என்று..
கொடூரமான மனசு ஆனா சொல்வது "ஏறுடி கோந்தே" இதன் பின் இருக்கும் வக்ரம்!
அந்த வக்ரம் ராமனின் தாத்தாவுக்கும் அவரை அறியாமலேயே தொற்றிக் கொள்கிறது!
கதையின் முடிவில் பாட்டியின் அந்தக் கடைசி தருணம் மனதில் என்னவோ செய்கிறது. ஒரு நல்ல சங்கீதத்துக்கு இழைக்கப் பட்ட கொடுமை...
தாயாரின் பாதம் ஒரு உட்பொருள் பொதிந்த தலைப்பு ஸ்ரீராம்.
நிஜமாக இருந்திருக்க 99 பெர்சன்ட் வாய்ப்பிருக்கு ஏனென்றால் அக்காலகட்டம் அப்படியானது அதுவும் கேரளத்துப் பக்கம் போலத் தெரிகிறது....இச்சமூகத்திலும் இப்படி இருந்ததை நானே என் தலைமுறையிலேயே ஊர்ல...குடும்பத்துல பார்த்திருக்கிறேன், ஸ்ரீராம்.
நெருங்கிய ....வேண்டாம் பொதுவெளியில் சொல்லலை.
கீதா
// பாருங்க அந்த சின்ன வயசுலேயே ஓவர் மெச்சூரிட்டி....சிந்தனைகள்....அந்த வயதுக்கும் மீறிய ஒன்று...இது கூடாது தெரியுமோ? குழந்தை குழந்தையாக இருக்க வேண்டும் இருக்க விட வேண்டும்.அப்பா படும் கஷ்டங்களைப் பார்த்து அக்குழந்தை மூட்டையோடு போகிறது.//
நீக்குஅந்தக் கால வழக்கங்களை ஒட்டி என்னென்ன பேச்சுகளை அப்போது குழந்தைப் பருவத்தில் பாட்டி கேட்டிருப்பாளோ.. அவைதான் இந்த முடிவு எடுக்க வைக்கின்றன.
புத்தரின் மனைவி, லட்சுமணனின் மனைவி போன்றவர்களின் சொல்லப்படாத கஷ்டங்கள் போல அந்த தந்தையின் (பாட்டியின் தந்தை) நிலை.
பத்தூரில் எனக்கொரு தந்தை வழி உறவினர் இருந்தார்.
ஸ்ரீராம் அப்போதெல்லாம் குழந்தைக்குத் தெரியாமல் பேசுவது என்ற வழக்கமே கிடையாதே...ஏன் நம் தலைமுறையிலும் கூட பெரும்பாலான குடும்பங்களில் கிடையாது நான் உட்பட...அதனால் நமக்குச் சுய சிந்தனை இருந்தால் அவர்களின் பேச்சுகளில் இருந்து நாம் கற்க நினைத்து ஒரு மெச்சூரிட்டி வரும் முடிவுகள் பிறக்கும் ....
நீக்குஅதேதான் புத்தரின் மனைவி, லட்சுமணனின் மனைவி...யெஸ்...
ஓ பத்தூரில் உங்களுக்கு உறவினரா!!! அவர் இருந்திருந்தால் இப்படி ஒரு நிகழ்வு இருந்ததான்னு கேட்டிருக்கலாமோ!!!!! வழி வழிக் கதையாக...
கீதா
சங்கீதம் மனதை மென்மையாக்கும் என்பது அடிபட்டு போகிறதா உங்கள் கருத்திற்கு சங்கீதம் என்பது ஆழ்ந்து லயித்து அதன் பொருள் அறிந்து பாட வேண்டும் சும்மா வருமானத்திற்காகவோ இல்லை சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டும் இது நம் வழக்கம் என்று கற்றுக் கொண்டு பாடுவதாலோ மனம் நன்மையடைய சான்ஸ் இல்லை மனம் என்பது நம் கையில் அதை பக்குவப்படுத்தினால் மட்டுமே எந்த ஒரு வெளிப்புற செயல்பாடுகளும் அந்த மனதிற்கு இத அமளிக்கும் . சங்கீதத்தை உணர்ந்து பாட வேண்டுமே அல்லாது மனமும் பக்குவப்பட்டிருந்தால் மட்டுமே அந்த சங்கீதத்தை உள்வாங்கி மனம் பரவச நிலைக்குச் சென்று ஒரு பக்குவப்பட்ட நிலையை அடையும் சங்கீதம் அதற்கு உதவும் ஆனால் அதற்கு முன் நம் மனம் பக்குவப்பட்டிருக்க வேண்டும்கிட்டத்தட்ட இதே போன்ற வேற ஒரு விஷயத்தை சார்ந்து தான் நான் ஒரு கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்
நீக்குகீதா
நீங்கள் இதில் படித்திருப்பீர்கள் கீதா... அவருக்கு சங்கீதம் வருமானமில்லை. உணர்வோடு கலந்தது. உழவர்கள் அவருக்கு சேர வேண்டியதை ஏமாற்றாமல் படியளந்து விடுகிறார்கள் என்று வருகிறது. எனவே இவர் வருமானத்துக்காக இசை பாடவில்லை. இயற்கையோடு இணைந்து குயில் சத்தத்திற்கும், நதியின் சத்தத்துக்கும் ஸ்ருதி சேர்த்திருக்கிறார்.
நீக்குஇன்று இங்கு என் கோட்டா ஓவர் ஸ்ரீராம்...அடுத்து வெங்கட்ஜி தளம் போய்...வீட்டு வேலைகள் நிறைய இன்று
பதிலளிநீக்குகீதா
:))
நீக்குகீதா அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களும். நல்ல ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வை இறைவன் அவருக்கு என்றும் தந்திட வேண்டுமாய் நானும் மனதாற பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். 🙏.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்கு