7.6.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - கங்கைகொண்ட சோழபுரம் –நெல்லைத்தமிழன்

 

 நாதமுனிகள் குருகைக்காவலப்பர் – பகுதி -1

சோழர்கள் காலக் கலைச் செல்வங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி ஒரு பயணத்தில் நாங்கள், நாதமுனிகள் பிறந்த ஊரான காட்டுமன்னார் கோயில், பிறகு அவரது திருவரசு, அதனுடன் தொடர்புடைய குருகைக்காவலப்பர் திருவரசு ஆகியவற்றையும் அந்தப் பயணத்தில் பார்த்தோம். அதனை இந்தத் தொடரில் எழுதவில்லை என்றால் பிறகு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று தோன்றவில்லை. அதனால் இந்தப் பகுதியிலேயே எழுதிவிடுகிறேன்.

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் அருகிலேயே நாதமுனிகள் பரமபதித்த இடம் இருக்கிறது என்று படித்த உடன், கும்பகோணம் செல்லும்போது மீண்டும் கங்கைகொண்ட சோழபுரமும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள இடங்களையும் காணவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டோம்.

முதலில் காட்டுமன்னார் கோயிலுக்குச் சென்றுவிட்டு, பிறகு கங்கைகொண்ட சோழபுரமும் நாதமுனிகள் திருவரசும் பார்க்கலாம் என நினைத்தோம். குருகைக்காவலப்பர் கோயிலையும் தேடவேண்டும் என்று நினைத்தோம். பொதுவாக கோயில்கள் எல்லாம் வெகு சீக்கிரம் நடை சாத்திவிடுவார்கள் என்பதால் (மதியம் 12 மணி), அரை நாள் மாத்திரம் கார் எடுத்துக்கொள்வோம் என்று நினைத்து காலை 6 ½ மணிக்கு கும்பகோணத்திலிருந்து கிளம்பினோம். வழியில் எங்கு சாப்பிடுவது என்ற குழப்பம் இருக்கக் கூடாது என்பதால், நாங்கள் வெங்கட்ரமணா ஹோட்டலில் 6 ½ க்கு இட்லி மற்றும் சுடச் சுட உளுந்த வடைகளும் சாப்பிட்டுவிட்டு காரில் ஏறினோம். (சும்மா சொல்லக் கூடாது. தமிழக சாம்பார், தமிழக உளுந்துவடை. காலையில் டிராபிக் பிரச்சனை எதுவும் இல்லை. காலை 7 மணிக்கெல்லாம் காட்டுமன்னார் கோயில் வந்துவிட்டோம்.

இணையத்தில் கோயில் காலை 7 மணிக்கு திறப்பார்கள் என்று போட்டிருந்தாலும், நடை திறந்தது காலை 8 ¼ க்குத்தான். அதுவரை சில பல புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். கோயில் தாமதமாகத் திறக்கிறார்களே என்று நினைக்கக் கூடாது. அந்த ஊரிலெல்லாம் பக்தர்கள் வர நேரமாகும். அதிகமான உள்ளூர் பக்தர்கள் கிடையாது. விடுமுறை நாட்களில்தான் கூட்டம் வரும்.

நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று சொன்னாலே நாதமுனிகள் நினைவுதான் வரும். அவருடைய வரலாறைப் பார்த்துவிடுவோம்.

பொதிய மலையில் வாழும் கும்பசம்பவர் மற்றும் ஆங்கீரசாதி ரிஷிகளும் திருமலைக்கு எழுந்தருளி, வெங்கடாசலபதியிடம் விண்ணப்பம் செய்துகொள்ள, திருவேங்கடமலையானும், அவர்களிடம், வீரநாராயண புரத்தில் மன்னனார் சன்னிதியில் நித்தியவாசம் செய்து அவருக்கு கைங்கர்யங்கள் செய்துவருகின்ற ஈஸ்வரபட்டருக்கு விரைவில் நாதமுனிகள் என்ற பெயரில் ஒரு மகன் பிறப்பான். அவர் மூலம் திராவிட வேதங்களை மீண்டும் உலகிற்கு வெளிவரச்செய்வோம் என்று சொன்னார். அவர்கள் திரும்ப வீரநாராயணபுரத்திற்கு வந்து ஈஸ்வரபட்டாழ்வானிடம் இதனைச் சொன்னார்கள்.  அவருக்கு குழந்தை பிறந்ததும், ஈஸ்வரபட்டர் கும்பசம்பவருக்கு தகவல் சொல்ல, அவர் வந்து குழந்தைக்கு ஆசி கூறி நாதமுனிகள் (இயற்பெயர் ரங்கநாதமுனி) என்ற பெயரைச் சூட்டினார்.  கும்பசம்பவரே, உரிய காலத்தில் நாதமுனிகளுக்கு அஷ்டமா சித்திகளையும், சகல சாஸ்திரங்களையும், அஷ்டயோகங்களையும் கற்பித்து அவரை நிபுணராக்கினார்.

ஆமாம்.. அஷ்டமா சித்திகள் மற்றும் அஷ்டயோகங்கள் என்றால் என்ன?

அஷ்டமாசித்திகள்அணிமா – மிகச் சிறிய உருவுடையதாதல்.  மஹிமா – மிகப் பெரிய உருவுடையதாதல், கரிமா-மிகவும் கனமானதாக ஆகுதல், லஹிமா-துரும்பைப் போன்று கனமில்லாமல் ஆவது, பிராப்தி-விரும்பியதை விரும்பியதைப் போல அடைதல் – எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்,  பிராகாம்யம்-உயிரை பிற உடலுக்குள் செல்லச் செய்வது, பரகாயப் பிரவேசம் என்பர், தனது உடல் ஒளியால் பொருள்களைக் காணுதல், திரிகாலம் அறிதல்,  ஈசத்வம் – எல்லாருக்கும் மேம்பட்டிருத்தல், வசித்வம் – உலகில் உள்ள பொருட்கள் எல்லாவற்றையும் தன் வசமாக்குதல்

அஷ்டாங்கயோகங்கள் -  இயமம் – கொல்லாமை, உண்மை பேசுதல், திருடாமை, பிறர் பொருள்களின் மீது ஆசையின்மை, இந்திரியங்களை அடக்கும் தன்மை.  நியமம் – தவம், உடலை நீரினாலும் மனத்தாலும் சத்தியத்தினாலும் பரிசுத்தமாக்குதல், தெய்வ வழிபாடு,  ஆதனம் – இருப்பு – இது நான்கு வகைப்படும். எப்படி அமர்ந்திருப்பது என்பது. இரண்டு கால்களையும் குறுக்காக வைத்து கைகள் கால்முட்டியைப் பிடித்தவாறு அமர்ந்திருக்கும் சிங்கப்பிரானை நினைவுகூறுங்கள். அதுபோல பத்மாசனம், சுகாசனம். பிராணாயாமம் – மூக்கின் இடது துவாரம் வழியாக சுவாசித்து வலது துவாரம் வழியாக விடுதல்,  பிரத்யாஹாரம் – சகல இந்திரியங்களையும் கட்டுப்படுத்தி மனதை உள்நோக்கி வைப்பது, தாரணை – தைல தாரை போன்று மனதை ஒருநிலைப்படுத்துதல், தியானம் – இறைவனிடத்தில் மனதை ஒருமுகப்படுத்துவது, சமாதி – எல்லா நினைவும் ஒழிந்து ஒன்றியிருத்தல்.  அஷ்டாங்க யோகம் என்பது பெரிய விஷயம். நாம் எடுத்துக்கொண்ட பகுதிக்கு இது போதும்.

இதற்கிடையில், நாதமுனிகளுக்கு திருமணம் ஆகி ஈஸ்வரமுனி என்ற திருக்குமாரர் அவதரித்தார். சில வருடங்களில் ஈஸ்வரபட்டரும், நாதமுனிகளும் ஈஸ்வரமுனிகளும், வீரநாராயண புரத்தின் மன்னனாருடைய அனுமதி பெற்று (அதாவது அந்தக் கோயிலின் இறைவனின் அனுமதி பெற்று என்று அர்த்தம்), வட இந்தியாவில் உள்ள திருத்தலங்களை தரிசனம் செய்ய தீர்த்த யாத்திரை செய்யப் புகுந்தனர். அதன்படி வடமதுரை,, கோகுலம், கோவர்த்தமனம், அயோத்தி, விருந்தாவனம் போன்றவற்றை தரிசனம் செய்து யமுனை தீரத்தில் விருந்தாவனத்தில் தங்கியிருந்தபோது மன்ன னார், நாதமுனிகள் கனவில் வந்து, மீண்டும் வீரநாராயணபுரத்திற்கே வருக என்று சொன்னார்.

அதன்படி பல தலங்களைத் தரிசித்து, தென்னகம் வந்தனர். வந்த மூவரையும் வீரநாராயணபுரத்து மக்கள் வரவேற்று, வீரநாராயணபுரத்திலேயே அவர்கள் எப்போதும் இருக்கவேண்டும் என்று சொல்லி, அவர்களுக்கு ஒரு இடம் கொடுத்து நந்தவனம் அமைத்துக்கொள்ள உதவி செய்து, அங்கிருந்து அவர்களை கோயில் கைங்கர்யங்கள் செய்ய உதவி செய்தனர். அப்படி நாதமுனிகள், கோயில் கைங்கர்யங்கள் செய்துகொண்டு வரும் காலம், ஒரு நாள், திருநாராயணபுரத்தைச் சேர்ந்த இரண்டு வைணவர்கள் வீரநாராயணபுரம் கோயிலுக்கு வந்து பெருமாள் முன்பு, திருவாய்மொழியின் ஆராவமுதே பாசுரத்தைச் சேவித்தனர்.  அதன் அர்த்தத்தில் மயங்கிய நாதமுனிகள், அவர்களிடம், பாசுரத்தில் ஆயிரத்துள் இப்பத்து என்று வருகிறதே.. மற்ற பாசுரங்களும் தெரியுமா என்று கேட்க, அவர்கள் தங்களுக்கு பத்துப் பாசுரங்களே தெரியும் என்றார்கள். நாதமுனிகள் இது பற்றிச் சிந்தித்து சடகோபர் அவதரித்த திருக்குருகூர் பிரதேசத்துக்குச் சென்று பார்ப்போம் என்று நினைத்தார். திருக்குருகூர் சென்று அங்கு ஆழ்வாரையும் பொலிந்து நின்ற பிரானையும் சேவித்தார். பிறகு மதுரகவியாழ்வார் பரம்பரையில் வந்த பராங்குசதாசர் என்பாரைக் கண்டு வணங்கி, இங்கு திருவாய்மொழியை ஓதியவர்கள் உண்டோ, ஸ்ரீகோசம் கிடைக்குமா என்று கேட்க, அந்த ஸ்ரீகோசம் இல்லாமல் போய் நெடுங்காலமாகிவிட்டது. எம்மிடம் எங்கள்  பரமாச்சார்யாரான மதுரகவி ஆழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பிரபந்தம் மாத்திரமே இருக்கிறது. இதனை நீங்கள் நம்மாழ்வார் சன்னிதி முன்பு ஒரே சிந்தனையுடன் நியமத்துடன் ஆழ்வார் திருவடிகளை தியானித்துக்கொண்டு, பன்னீராயிரம் தடவை அநுசந்தித்தால், ஆழ்வார் பிரசன்னமாவார் என்று எமது ஆச்சார்யார் அருளிச்செய்துள்ளார் என்றார். பராங்குசதாசரைப் பணிந்து அவரிடம் கண்ணிநுண் சிறுத்தாம்பு பிரபந்தத்தைக் கற்றுக்கொண்டு, திருப்புளியமர அடியில் ஏகசிந்தனையோடு பன்னீராயிரம் தடவை பாசுரத்தை அநுசந்தித்தார் நாதமுனிகள். (இந்தப் புளிய மரத்தடியில் ஆழ்வார் இருந்ததால், இதனை திருப்புளியாழ்வார் என்றே குறிப்பிடுவார்கள்)

நாதமுனிகள் போன்ற ஒரு சிஷ்யரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்த நம்மாழ்வார், அசரீரியாக நாதமுனிகளிடம், எதற்காக தம்மைப் பற்றி தியானம் செய்தது எனக் கேட்க, அதற்கு நாதமுனிகள், தமக்கு திருவாய்மொழி திவ்யப் பிரபந்தத்தை அடியனேனுக்கு இரங்கி அருளவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஒரு திரையிடச் சொல்லி, திரைக்கு அந்தப் பக்கத்தில் இருந்து நம்மாழ்வார், திவ்யப் பிரபந்தங்களை இவருக்கு அருளிச்செய்துகொண்டுவர, நாதமுனிகள் அவற்றை பட்டோலைப்படுத்தினார்.  பொலிக பொலிக பாசுரத்தை அருளிச்செய்தபோது, நாதமுனிகள், அந்தப் பாசுரங்கள் அர்த்தம் அறிந்து, இப்படி எதிர்காலத்தில் அவதாரம் பண்ணப்போகிறவர் இன்னாரென காண்பித்துக்கொடுக்க வேண்டும் என்று வேண்ட, அதற்கு சடகோபர், எதிர்காலத்தில் இராமானுஜர் என்ற பெயரில் அந்த ஆச்சார்யார் அவதரிப்பார் என்று சொன்னார். அன்று இரவு, இராமானுஜர் போலவே பன்னிரு திருநாமங்களுடன் நாதமுனிகளுக்குக் காட்சிகொடுத்தார் சடகோபர்.  நாதமுனிகள் அதுகண்டு அடிபணிந்து, பிற்காலத்தில் அவதரிக்கப்போகும் அந்த ஆச்சார்யரை நாளும் தொழுது வணங்க ஒரு விக்ரஹம் பிரசாதித்து அருளவேண்டும் என்று வேண்டினார்.  ஆழ்வார்திருநகரியில் இருந்த சிற்பிகளிடத்தில் அன்று இரவு நம்மாழ்வார் கனவில் வந்து, எப்படி விக்ரஹம் அமைக்கவேண்டும் என்று காட்டிக்கொடுக்க, அவர்களும் திருப்புளியமரத்தின் அடியில் அமர்ந்து நம்மாழ்வாரை வணங்கி பிறகு அவர் காட்டிக்கொடுத்த மாதிரியே ஒரு விக்ரஹம் உண்டாக்கினர்.

நம்மாழ்வார், அந்த விக்ரஹத்தை நாதமுனிகளுக்குக் கொடுத்து உம்முடைய குலத்தில் ஒருவர் அவதரித்து இந்த ஆச்சார்யரை நம் தரிசனத்தில் கொண்டுவரப் போகிறார் என்று சொல்லி, இதனையே நம்முடைய அவயவமாக நினைந்து வணங்கிக்கொண்டிரும் என்று சொன்னார். நாதமுனிகளும் மிகுந்த பவ்யத்துடன் அந்த பவிஷ்ய ஆச்சார்யாரின் விக்ரஹத்தை வாங்கிக்கொண்டார். ஆழ்வார்திருநகரியிலேயே இருந்துகொண்டு, நம்மாழ்வார் தமக்குத் தந்த நாலாயிர திவ்யப்பிரபந்தங்களைச் சேவித்துக்கொண்டிருந்தார் நாதமுனிகள்.

இப்படி இருக்கையிலே வீரநாராயணபுரத்து மன்னனார் (அந்தப் பெருமாளை இப்படித்தான் சொல்வர்), நாதமுனிகள் கனவில் வந்து, நம்முடைய சன்னிதியில் திவ்யப்பிரபந்தங்களைச் சேவிக்கலாகாதோ என்று கேட்டார். இதனை நம்மாழ்வார் சன்னிதியில் வந்து நாதமுனிகள் விண்ணப்பம் செய்து, தமக்கு விடைதர வேண்டினார். ஆழ்வாரும், இனி இந்த திவ்யப்பிரபந்தங்களை மற்றவர்களுக்கும் கற்பித்துக்கொடுத்து பரவலாக்கும் என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார்.

நம்மாழ்வார் திருவாய்மொழியை திரைக்கு அந்தப் பக்கம் இருந்து சொல்லும்போது, பொலிக பொலிக பாசுரம் வரும்போது எதிர்காலத்தில் ஆச்சார்யராக வருபவரைப் பற்றிச் சொன்னார் என்று பார்த்தோம். அது என்ன திருவாய்மொழி?  ஐந்தாம் பத்தில் இரண்டாவது திருவாய்மொழி அது. முதல் பாசுரம், ஆழ்வார், திருமால் அடியார்கள் பூமியில் மிக அதிகமாகி, இசைபாடி, ஆடுவதைக் கண்டு, உலகில் தீமை நீங்கி, நரகம் ஒழிந்து பூமியே வைகுண்டமாக ஆவதைக் கண்டு மகிழ்ந்து பாடுகிறார்

பொலிக பொலிக பொலிக!* போயிற்று வல்லுயிர்ச் சாபம்*

நலியும் நரகமும் நைந்த* நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை**

கலியும் கெடும் கண்டு கொண்மின்* கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்*

மலியப் புகுந்து இசைபாடி* ஆடி உழிதரக் கண்டோம்

பொருள்:. திருமால் அடியார்கள் நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க, நீடூழி வாழ்க. நம்மைப் பற்றியிருந்த தீவினைகள் அத்தனையும் நீங்கிவிட்டன. நம்மைத் துன்பத்தில் ஆழ்த்தும் நரகங்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. எமதர்மனுக்கு இனி இந்த உலகில் வேலை இல்லை. ஏனென்றால் பாவம் செய்பவர்களே இங்கு இல்லை. கலியுக தோஷங்கள் அழிந்துபடும் (அதாவது கலி புருஷன் அழிந்துவிடுவான்). இதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

விளக்கம்: எதற்காக இந்தத் திருவாய்மொழி எதிர்கால ஆச்சார்யர் இராமானுஜருக்கானது என்று கூறப்பட்டது? அவர் பூமியில் பிறந்து பலரையும் திருமாலின் அடியவர்களாக மாற்றப்போகிறார் என்பதனால் இந்தப் பத்துப் பாசுரங்களையுமே, எதிர்காலத்தில் அவதரிக்கப்போகும் ஆச்சார்யரான இராமானுஜரை எண்ணியே நம்மாழ்வார் இயற்றினார் என்பர்.

திருவாய்மொழியைச் சொல்லிக்கொடுக்க சில நிபந்தனைகள் உண்டு. வைணவராக இருக்கவேண்டும். (பிராமணர் என்ற அளவுகோல் அல்ல) அவர்கள் ஒரு ஆச்சார்யரைப் பணிந்திருக்கவேண்டும், பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்திருக்கவேண்டும்.  திருவாய்மொழி சந்தையை பெரும்பாலும் முதல் பத்து முதல் திருவாய்மொழியிலிருந்து ஆரம்பிப்பவர்கள் மிகக் குறைவு.  சிலர் 7ம் பத்திலிருந்து சொல்லிக்கொடுக்க ஆரம்பிப்பார்கள். காரணம், அந்தப் பத்தில்தான் திருவரங்கம் சம்பந்தமான கோயில் திருவாய்மொழி வருகிறது (கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் என்று ஆரம்பிக்கும் திருவாய்மொழி) சிலர் ஐந்தாம் பத்திலிருந்து ஆரம்பிப்பார்கள். அதில்தான் இந்த ‘பொலிக பொலிக’ பாசுரம் இருப்பதால். நான் சந்தை கற்றுக்கொண்ட மூவரும், இந்த மூன்று விதத்தில்தான் கற்றுக்கொடுத்தனர்.

அடுத்த வாரம் நாதமுனிகள் வரலாற்றைத் தொடர்வோம். இனி காட்டுமன்னார் கோயில் படங்கள்.

வீரநாராயணபுரம் கோயில், காட்டுமன்னார் கோயில்

 

 

 

 

 

கோவில் ராஜகோபுரம் உள்ளும் புறமும். கீதா ரங்கன், நான் சொன்ன சிற்பங்களைத் தேடப்போகிறார். அவை மிகப் பெரிய பிரம்மாண்டமான இராஜகோபுரங்களில்தான் இருக்கும்.

 

 

கோவிலில் நிறைய கல்வெட்டுகள், ஆனால் காலத்தால் பழுதுபட்ட நிலையில்

 

 

 

 

 

கோயிலில் உள்ள கிணறு.

மதங்க மஹரிஷிக்குக் காட்சி கொடுத்த இடம். அவருக்கு சிறிய தனிக் கோயில் உள்ளது.

 

 இந்த மாதிரி கோயில்களைப் பார்க்கும்போது, பழைமை மாறாமல் ஒரு கோவிலை வைத்துக்கொள்ள வேண்டுமா, அதற்கு நிறைய செலவு பிடித்தாலும்? இல்லை, தற்காலத்தைய நடைமுறைப்படி புதிதாக்கினால் பரவாயில்லையா? என்று தோன்றும். உங்கள் எண்ணம் என்ன?

 

கோயில் பிராகாரத்தில் இருந்த பழங்காலப் பெட்டிகள்.

நரசிம்ஹர் சன்னிதி

இனி அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்) 

35 கருத்துகள்:

  1. Sub தலைப்பைப் பார்த்ததும், டக்குனு சனிக்கிழமையோன்னு ஒரு சந்தேகம் வந்துவிட்டது..!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன்... சனி ஞாயிறு பகுதிகள் சில நேரங்களில் ஒன்றுபோல வந்துவிடுகிறதோ, திரும்பவும் வருகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இருப்பதால் இன்னும் மூன்று மாதங்களில் ஞாயிறு சொந்தக் கதைத் தொடர் எழுதப்போகிறேன்.

      நீக்கு
  2. நாலாயிர திவ்யப் பிரபந்தம் என்று சொன்னாலே நாதமுனிகள் நினைவுதான் வரும். //

    அதே. பிரபந்தத்தைத் தொகுத்தது பற்றி சனிக்கிழமை பதிவில்? சொல்லியிருக்கீங்க. வரலாறும் இல்லையா?

    கீதா



    பதிலளிநீக்கு
  3. வீரநாராயணபுரம் கோயில் கோபுரம் வெகு அழகு. அதற்கு அடுத்த படமும் செம க்ளிக்!

    நல்ல பெரிய வளாகம் போல!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. கோவில் ராஜகோபுரம் உள்ளும் புறமும். கீதா ரங்கன், நான் சொன்ன சிற்பங்களைத் தேடப்போகிறார்.//

    ஹாஹாஹா உண்மை ஆனால், படங்களைப் பெரிசு படுத்தவே முடியலையே!

    அவை மிகப் பெரிய பிரம்மாண்டமான இராஜகோபுரங்களில்தான் இருக்கும்.//

    புரிந்தது.

    கோயில் மற்றும் வளாகம் நல்ல சுத்தமாகப் பராமரிக்கப் படுகிறது. கூட்டம் இல்லாததாலோ?

    கோயில் நிர்வாகம் அறநிலையத் துறை இல்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இப்போதைய அமைச்சர் ஃபேமஸ் கோயில்களுக்குப் போய் பட்சணம் எல்லாம் செக் செய்வதை விட, இப்படியான பழமையான கோயில்களுக்குப் போய் என்னென்ன தேவை என்பதைப் பார்த்து செய்தால் நல்லது. அவரின் (முதலில் அப்பையன் என்று எழுதினேன் அப்புறம் ஓ அமைச்சர் அப்படிச் சொல்லக் கூடாதுன்னு.....) பின் புலம் உதவலாம் இதற்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. பெரிய பெரிய அண்டா குண்டா எல்லாம் கவிழ்த்தி வைச்சிருக்காங்க!!

    கல்வெட்டுகளைப் புதுப்பிக்க முடியாதோ?

    கையெழுத்துப் பிரதிகளையே ஜெமினி அழகா transcript செய்யுது. final clean version என்றும் ஒரிஜினல் கையெழுத்தில் தான் கண்டு பிடித்த வெட்டல், இணைத்தல் திருத்தல்கள ஹைலைட் செய்து, அங்கு இந்த வார்த்தைகள் வரிகள் என்று புரிந்து கொள்கிறேன் எனவே அதையும் தருகிறேன் என்றும் தருகிறது இரண்டு வகையும். பெரும்பாலும் ஃபைனல் வெர்ஷன் 99% சரியாக இருக்கிறது.

    துளசி எழுதி அனுப்புபவற்றை தற்போது ஜெமினியிடம் கொடுத்து இப்படிப் போட்டு transcript எடுத்துவிடுகிறேன்.

    அப்படி கலெவெட்டுகளையும் செய்ய முடியும் தானே. அப்படித்தான் சமீபகாலத்தில் விவரங்களை எடுப்பாங்கன்னு நினைக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா ரங்கன்.... கற்றலில் உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. என்னுடைய வேலையே கணிணியாக இருந்த போதும், அதில் ஓய்வுக்குப் பிறகு நானாக தெரிந்துகொள்ள முயல்வதில்லை.

      ஒருவேளை நீங்க எழுதும் கதைகள் உங்களுடையதா இல்லை ஏஐ ஆ என யோசிக்கிறேன். ஹா ஹா ஹா

      நீக்கு
  7. கோவிலில் நிறைய கல்வெட்டுகள், ஆனால் காலத்தால் பழுதுபட்ட நிலையில்//

    இப்படத்திலும் இட்தற்குக் கீழே இருக்கும் படங்களிலும் இருக்கும் சிங்க யாளி? கருவில் இருக்கும் குழந்தை போன்று இருக்கு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருவில் - கருப்பையில் இருக்கும் கரு குழந்தை போன்று

      கீதா

      நீக்கு
  8. கிணத்துக்கு இருபக்கமும் இருக்கும் தூண்கள் ராட்டு கட்ட இருப்பவை கூட கலைவடிவமாக!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. தற்காலத்தைய நடைமுறைப்படி புதிதாக்கினால் பரவாயில்லையா? //

    ம்ஹூம் ...எனக்கு இதில் அத்தனை உடன்பாடு இல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பழங்காலப் பெட்டிகள் ஈர்க்கின்றன.

    சன்னதில கலர் அடிச்சு....ம்ம்ம்ம்ம்ம் ....ஆனா பாருங்க நம்ம மனசுக்குள் சக்தியை வைத்துக் கொண்டு தியானித்துப் பார்த்தால் இந்தக் கலர் விஷயம் எல்லாம் கண்ணில் படுமா என்ன....!!! ஆனா ஒரு ஷணம் அது வருகிறதே ஸோ நாம இன்னும் அந்த நிலையை அடையலைனு என்னை நானே சுய பரீட்சை செய்து கொண்டேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. /இந்த மாதிரி கோயில்களைப் பார்க்கும்போது, பழைமை மாறாமல் ஒரு கோவிலை வைத்துக்கொள்ள வேண்டுமா, அதற்கு நிறைய செலவு பிடித்தாலும்? இல்லை, தற்காலத்தைய நடைமுறைப்படி புதிதாக்கினால் பரவாயில்லையா? என்று தோன்றும். உங்கள் எண்ணம் என்ன?/
    நிச்சயமாகப் பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும். கோபுரங்களுக்கும் சிலைகளுக்கும் கண்ட மேனிக்கு நவீன வர்ணம் பூசுவது எனக்குப் பிடிக்காது. மின்சார வசதிகள் செய்துகொள்வதில் தவறில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழமை மாறாமல் பராமரிக்க வேண்டும் என்பதுதான் என் கருத்தும். மின்சார வசதிகள் கூட அளவாக இருத்தல் வேண்டும். கருவறைக்குள் கட்டாயம் மின்சாரம் கூடாது.

      நீக்கு
    2. என்னுடைய அனுபவத்தில் பழைமை மாறாத இடங்களில் சான்னித்யம் கூடுதலாக இருக்கும். திருப்பதியிலும் சீரியல் லைட்களை கோயிலுக்குள் கொண்டுவந்துவிட்டார்கள். இறைவன் சன்னிதி ஆடம்பரக் கொண்டாட்டங்களுக்கான இடமல்ல.

      மற்ற கோயில்களில் பெயின்ட் வர்ணங்கள் நல்லாவே இல்லை. என்ன பண்ணுவது?

      நீக்கு
    3. ஶ்ரீராம்... இப்போ மூலவருக்கே ஃபோகஸ் லைட் போடுகிறார்கள். என்ன மாதிரியான நவீனமோ

      நீக்கு
  12. படங்கள் எல்லாம் வெகு அழகு நெல்லை! நன்றி.
    நம்மாழ்வார் திருவாய்மொழியை மட்டும்தானே காட்டிக் கொடுத்தார். நாதமுனிகளுக்கு முன்னமே மதுரகவியாழ்வாரின் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" கிடைத்து விட்டது. நாலாயிரத்தில் மீதியுள்ளவை எவ்வாறு நாதமுனிகளுக்குக் கிட்டியது? சனிக்கிழமை பதிவில் பின்பு வருமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சூர்யா சார்.. நாதமுனிகளுக்கு அனைத்தையும் நம்மாழ்வார் அருளுகிறார். இது பின்னர் வரும் (ஏற்கனவே எழுதி அனுப்பிவிட்டேன்)

      நீக்கு
  13. அஷ்டமா சித்திகள், யோகங்கள் விளக்கம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  14. ராமானுஜர் வருகையைச் சொல்லும் பொலிக பொலிக பாசுரம் பொருத்தம்தானென்றாலும் முதலில் சொன்ன திருவாய்மொழியின் ஆராவமுதே பாசுரம் இன்று இடம்பெறும் என்று எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
  15. பொலிக பொலிக பாடலை ஒட்டியே பாரதியார் கும்மியடி பெண்ணே எழுதி இருப்பார் போலும்.  "நம்மைப்பிடித்த பிசாசுகள் போயின " என்று 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'பொலிக பொலிக பொலிக..' பாடல் மட்டுமல்ல, பாரதியார் சிறைச்சாலையில் இருந்த பொழுது நம்மாழ்வாரின் பாசுரங்களைப் படித்தாராம், அதன் பிறகுதான் கண்ணன் பாடல்களை எழுதினாராம். கண்ணன் பாடல்களில் நம்மாழ்வாரின் பாதிப்பு இருக்கும்.

      நீக்கு
  16. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  17. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே.

    இன்றைய கோவில் பதிவு அருமை. கோவில் படங்கள் அனைத்தும் மிக நன்றாக உள்ளது. நாதமுனிகள் வரலாற்றை பற்றி எத்தனை முறை படித்தாலும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும். நன்றாக சொல்லியுள்ளீர்கள்.

    அஷ்டமாசித்திகள், அஷ்டாங்கயோகங்கள் பற்றி சிறப்பாக நன்கு புரியும்படி சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள். நிறைய விஷயங்களையும் விளக்கமாக சொல்லியுள்ளீர்கள். உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  18. படங்கள் கோவிலின் பிரும்மாண்டத்தை உணர்த்துகின்றன. தகவல்களும் சிறப்பு.
    கோவில்களை பழமை மாறாமல்தான் பராமரிக்க வேண்டும். நம் வசதிக்கு இன்றைக்கு ஒரு மாதிரி மாற்றுவோம், பத்து வருடங்கள் கழித்து அவர்கள் வசதிக்கு மாற்றுவார்கள், இப்படி மாற்றிக்கொண்டே போனால் கடைசியில் மூலத்தை தொலைத்து விடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம்... உத்திரகோசமங்கை கோயிலில் பெயின்டிங்கினால் பழைமை தொலைந்துவிட்டது என்று கருதினேன். அதில்தான் அதிக காசு அடிக்கமுடியும் போலிருக்கு

      நீக்கு
  19. பதில்கள்
    1. சரணம் சண்முகா... வாங்க துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  21. கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றிய
    பதிவுகள் கற்றோர்க்கு விருந்து..

    வாழ்க நலம்

    பதிலளிநீக்கு
  22. காட்டுமன்னார்கோயில் படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  23. தகவல்கள் அனைத்தும் சிறப்பு. எத்தனை எத்தனை விஷயங்கள் நம் இடத்தில்! அத்தனையும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டியவை.

    படங்கள் அனைத்தும் அழகு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!