நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
23.7.26
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே...
மூன்று நாட்கள்தானே ஊசி.. அப்புறம் வீட்டுக்கு போகலாம் என்று ஆர்வமுடன் இருந்தேன்.
டாக்டர் சோமு மூன்று நாளும் வந்து பார்த்துச் சென்றார். மூன்றாம் நாள் மாலைதான் வந்தார். "நாளை ரிசல்ட் பார்ப்போம். சளி குறைந்திருக்கிறதா என்று பார்ப்போம். குறைந்திருந்தால் ஓகே. இல்லாவிட்டால் அடுத்து என்ன செய்வது என்று பார்க்கலாம்" என்று சொல்லிச் சென்றார்.
அடுத்து என்ன செய்வது என்றால் மருந்து மாற்றுவார் என்றுதான் அப்பாவியாய் எண்ணி இருந்தேன். மறுநாள் நான்கு உதவி மருத்துவர்கள் புடைசூழ வந்தவர், நான் சென்றவாரம் வெளியிட்ட அந்த ரிசல்ட்டை கையில் பிடித்து ஆராய்ந்துவிட்டு "அங்கங்கே அப்படியே இருக்கிறது. மருந்துக்கு கட்டுப்படவில்லை. ஸோ ஒரு ஸர்ஜரி பண்ணிடலாம்" என்றார்.
மகன் என்னைத் திரும்பிப் பார்த்தான்.
"என்ன டாக்டர்? ஸர்ஜரியா?" உண்மையிலேயே தூக்கி வாரிப் போட்டது.
"ஆமாம். ஆனால் செய்து கொள்வதும் செய்யாமல் விடுவதும் உங்கள் விருப்பம்" என்றார்.
ஆப்ஷனலா.. என்னடா எனக்கு வந்த சோதனை..
மகன் கேட்டான் "ஏன் டாக்டர்.. ஸர்ஜரி செய்தால் சளியெல்லாம் போயிடுமா? திரும்ப வராதா?"
ஏனோ கேள்விகளே டாக்டர்களுக்கு பிடிப்பதில்லை. அதிலும் இவர் "நான் சொல்வதை மட்டும் நீ கேள்.. உன் கேள்விகள் எரிச்சலூட்டுகின்றன" டைப்பாக இருந்தார்.
"See Lam not God! மனித உடம்பில் எதுவும் அப்படியே சரி செய்துவிட முடியும் என்றெல்லாம் இல்லை. இப்போ உள்ளே சுவர் முழுக்க சளி நீக்க முடியாத அளவுக்கு கெட்டியாய் இருக்கிறது. அதை எடுத்து விடுவோம். அவ்வளவுதான்..."
"மறுபடியும் சளி வராது இல்லே டாக்டர்?" மகனின் ஆர்வம் அவர் பொறுமையை சோதித்தது.
"See மறுபடியும் சொல்றேன் I am not God. வீட்டை சுத்தம் செய்யறோம். மறுபடி அழுக்கு படியாமல் இருக்குமா? அது மாதிரிதான். இப்போ இருக்கற அழுக்கை எடுக்கறோம்.. அதற்கப்புறம் உங்கள் ஜாக்கிரதைதான் உங்கள் உடல் நலன்"
"அப்போ சர்ஜரியால என்ன லாபம் டாக்டர்?" - மகன்.
டாக்டர் சில வினாடிகள் மௌனமாக இருந்தார். பின் சொன்னார்.. "See.. ஸர்ஜரி செய்து கொள்வது முழுக்க முழுக்க ஆப்ஷனல். வேணுமா வேணாமான்னு முடிவு பண்ணிட்டு சொல்லுங்க? போவதற்கு திரும்பினார்.
"ஸர்ஜரி பண்ணாம இருந்தா என்ன ஆகும் டாக்டர்.. கோச்சுக்காதீங்க.. விவரம் தெரிஞ்சுக்கறதுக்குதான் கேட்கறோம்" என்றேன் நான்.
"மறுபடி கொஞ்ச நாட்கள் கழித்து இதே பிரச்னைகள் வரும். மறுபடி ட்ரீட்மெண்ட்டுக்கு வரவேண்டும்" என்றார்.
எனது மனதில் எழுந்த கேள்வியை அவரே படித்திருக்க வேண்டும்... தொடர்ந்து " சர்ஜரி செய்து கொண்டார் வரவே வராது என்று சொல்லவில்லை. நீங்கள் போதுமான ஜாக்கிரதையுடன் இருந்தால் தாக்கு பிடிக்கலாம். இல்லாவிட்டால் மறுபடி சேரும். ஆனால் இப்போது கெட்டியாக ஒட்டிக்கொண்டு தடுப்பது பலவருடங்களாய் நீங்கள் சேர்த்து வைத்தது" என்றார்.
சில வினாடிகள் யோசித்துவிட்டு நான் "சரி. ஸர்ஜரிக்கு தயார்" என்றேன். மகன் ஆச்சர்யத்துடன் பார்த்தான். என் இயல்புக்கு அவன் என்னிடமிருந்து முற்றிலும் இதை எதிர்பார்க்கவில்லை என்று பின்னர் சொன்னான்.
கூடவே "FESS தானே?" என்றேன். பார்த்து வைத்திருந்தேன். "ஆமாம்" என்றார் அவர்.
"உங்களை டயபடிக் டாக்டர் வந்து பார்ப்பார். வேறு சில சோதனைகளும் செய்ய வேண்டும். அநேகமாக நாளை அல்லது புதன் கிழமை ஸர்ஜரி" என்று அறிவித்தார் டாக்டர்.
பாஸ் "டாக்டர்.... நாங்கள் நாள் பார்த்து சொல்லலாமா" என்று ஆரம்பித்ததை நான் இடைவெட்டி "நான் இன்றே தயார்" என்றேன் வீரத்துடன்.
பாஸ் அஷ்டமி, நவமி, மேற்கே வடக்கே சூலம், ஹோரை, நட்சத்திரம் என்று எல்லாம் பார்க்க ஆரம்பிப்பார்.
"முன் சோதனைகள் செய்யாமல் இன்றே எல்லாம் ஸர்ஜரி செய்ய முடியாது. தியேட்டர் கிடைக்க வேண்டும். நான் சொல்கிறேன்" என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் டாக்டர். பாஸ் என்னை முறைத்தார்.
முதல் நாள் முதலே நடந்த இந்த ட்ரீட்மெண்ட் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்..................
OTT யில் பார்த்த படம். - NetFlix - மூலம் ஹிந்தி - தமிழில் வசனம் கிடைக்கிறது.
இக்கா என்றால் துருப்புசீட்டு (Ace) என்று அர்த்தமாம். கோர்ட் குறுக்கு விசாரணைக்கு காட்சிகள் எனக்குப் பிடிக்கும் என்பதால் பானு அக்கா சிபாரிசு செய்தார்.
ஏழை எளிய அப்பாவி மக்களுக்காக, அவர்கள் குறைகளுக்காக நேர்மையாக வாதாடி வெற்றி பெற்று சிங்கம் போல வெற்றிகரமான சீனியர் வக்கீலாக திகழ்பவர் அர்ஜுன் மெஹ்ரா (சன்னி தியோல்). அவர் நேர்மைக்கு அவர் மகளின் கேன்சர் மூலம் சோதனை வருகிறது. மகளின் உயிரா, கொள்கையா என்பதில் அர்ஜுன் முதலாவதை டிக் செய்கிறார். செல்வாக்கும் அதிகாரமும் நிறைந்த ஒரு அரசியல்வாதியின் மகன் - ஒரு கொடூரனுக்காக வாதாடி விடுதலை வாங்கித் தருகிறார்.
அர்ஜுனின் ஸ்பெஷல் கடைசி நொடியில் ஏதாவது ஒரு துருப்புச் சீட்டை எடுத்து வந்து வெற்றி பெற்று விடுவார் என்பதாம். அதைத் தெரிந்தும், அவரே அதை சொல்லிக் காட்டியும், அர்ஜுனோடு ஒப்பிடும்போது ரொம்ப ஜூனியரான அரசு வழக்கறிஞர் மதுரா அவரிடம் ஏமாறுகிறார். ரசிக்கும்படியான ட்விஸ்ட்.
வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட்டு சேர்த்த நல்ல பெயர் நொடியில், ஒரு செயலில் கெட்டு விடும் என்று கொலையான பெண்ணின் தாய் எச்சரிக்கிறார். அப்படியே ஆகிறது. அர்ஜுன் என்ன செய்தார் என்பது கதை. நான் ரொம்ப ரசித்துப் பார்த்தேன்.
டிஷ்யூம் டிஷ்யூம் சண்டைக் காட்சிகள் கிடையாது. வன்முறைக் காட்சிகள் கிடையாது. "ஏய்...." என்று நரம்பு புடைக்கக் கத்தும் காட்சிகள் கிடையாது.
வினோத்கன்னா மகன் அக்ஷய்கன்னா வில்லனாக மிரட்டி இருக்கிறார். அவர் உடல்மொழி, மிரட்டும் பார்வை நன்றாக இருக்கிறது.
1974 ல் வெளியாகி பெருவெற்றி பெற்ற ஹிந்திப் படம் அமானுஷ். ஷாமல் மிஷ்ரா இசையில் கிஷோர் குமார் குரல்.. ஹிந்தி தெரிந்தால் பாடலின் தத்துவ வரிகளை ரசிக்கலாம்."கடல் இவ்வளவு அருகில் இருக்கிறது இருந்தும் என் மனம் தாகத்தில் தவிக்கிறது" போல..
ஜானகிராமனுடைய சிறுகதைகள் நான் என் பதினேழாம் வயதில் முதலில் படித்தேன். கல்கி, தேவன் போன்றவர்கள் எழுத்தால் மிகவும் வசீகரிக்கப் பட்டிருந்த எனக்கு ஜானகிராமனை முதலில் படித்த போது உடனே இது வேறு தினுசு என்று தோன்றி விட்டது. அப்போது அவர் கலைமகள், அமுதசுரபி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். சில தீபாவளி மலர்களிலும் அவர் கதைகள் வரும். ஜானகிராமன் கதை இருந்தால் மட்டும் தீபாவளி மலர் வாங்குவேன் 'ணம்', 'சிலிர்ப்பு'
'கொட்டு மேளம்', 'சிவப்பு ரிக்ஷா' 'பரதேசி வந்தான்', 'தவம்', 'கடன் தீர்ந்தது' போன்ற கதைகள் இன்றைக்கும் எனக்கு ஞாபகம் இருக்கின்றன. மற்றவர்கள் எழுத்தை மறந்து அவரையே தேடத் தூண்டியது அவரது சிறு கதைகள். அவருடைய முதல் நாவலை-அமிர்தம் தேடிப் படித்தேன். கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. நான் எலெக்ட்ரானிக்ஸ் படித்துக் கொண்டிருக்கும்போது இரண்டாவது நாவலான 'மோகமுள்' சுதேசமித்திரனில் தொடர்கதையாக வெளிவந்தது. சுமார் ஒரு வருஷம் வந்திருக்கும் என ஞாபகம். ஒவ்வொரு வாரமும் பாபுவும், யமுனாவும் என்னை ஆக்ரமித்தார்கள். பக்கத்து வீட்டுப் பெண் சூட்டியிருந்த மல்லிகை மணம் இன்னும் என்னிடம் வீசுகிறது. அவள் தற்கொலை பண்ணிக் கொண்டு இறந்தது இப்பவும் எனக்கு ராத்திரி தூக்கத்தைக் கெடுக்கிறது. மோகமுள் போன்ற முழுமையான நாவலை நான் அதன் பின் தமிழில் படிக்கவில்லை!
இருந்தும் ஜானகிராமனுக்கு தமிழ் இலக்கிய சரித்திரத்தில் பிரதானமான இடம் அவரது சிறுகதை களால்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. மிக நுட்பமான பார்வையும் தஞ்சாவூர்த் தமிழின் சரளமும், சிறுகதைக்கு மிக முக்கியமான காலப் பிரமாணமும் அவர் எழுத்தில் இருக்கும். சிக்கனமான வார்த்தை அமைப்பு களில் மிக அதிகமான விஷயங்களைச் சொல்லி விடுவார். அவர் நடையில் இருந்த நளினத்தை இன்னும் யாரும் எட்டிப் பிடித்ததாகத் தெரியவில்லை.
"வாசலோடு ரயிலடியிலிருந்து வாடிக்கையில்லாமல் திரும்பிய ஒற்றை மாட்டுவண்டி மெதுவாக ஊர்ந்து நடந்து கடந்தது. என ஒரு வாக்கியத்தில் கதையின் மூடை ஏற்படுத்தி விடுவார் மெலிதான நகைச்சுவை எப்போதும் அவர் கதைகளில் இருக்கும்.
பழைய பேப்பர்காரன் தராசு, தெய்விகக் கொல்லன் கைவேலை, ஆனையை வைத்தால் ஆறுபலம் காட்டும். ஆறு மாச தினசரிக் காகிதம் எந்த மூலை? கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு இப்பால் அப்பால் திரும்பாமல் தவம் புரிந்து முள்ளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்."
உரையாடலிலும் அவர் ஒரு உண்மையான கலைஞர்.
''சாமி, இந்த தராசைப் பார்த்து இப்படிச் சொல் றீங்களே! எழுதின கார்டுக்கும் எளுதாத கார்டுக்கும் வித்தியாசம் காட்டும் சாமி உங்களுக்கு சந்தேகமா இருந்தா கடையிலே போய் ஒரு தராசை வாங்கிட்டு வாங்க.எதுக்குப் பொல்லாப்பு."
அவர் சிறுகதைகள் தொடர்ந்து வெளிவந்த அந்த அம்பதுகளில் இளைஞர்களாக இருந்த எங்கள் ஒவ்வொருவரையும் ஜானகிராமன் ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கிறார். இன்று எழுதுபவர்கள் பலரின் நடையிலும் கருத்தமைப்பிலும் அவர் வெளிப்படை யாகவோ பொதிந்தோ இருக்கிறார். ஜானகிராமன் டில்லிக்குப் போனாலும் ஜப்பானில் சுற்றினாலும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றாலும் தஞ்சாவூர்க்காரரின் காவிரிநதி ஏக்கமும் குறும்பும் அவரை விட்டுப் போக வில்லை. சில அபாரமான பயணக்கட்டுரைகளை அவர் எழுதியிருப்பது பலருக்குத் தெரியுமோ இல்லையோ (உதய சூரியன்).
ஜானகிராமனை என் இளமைக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் முதன் முறை சந்தித்தேன். அதாவது அவரைத் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன், ஒருமுறை என் பக்கம் திரும்பி அவர் புன்னகைத்தபோது
அதை எடுத்துப் பைக்குள் போட்டுக் கொண்டு திருப்தியுடன் திரும்பினேன்.
அப்புறம் டில்லியில் அவரை ஆகாஷ்வாணி பவனில், அவருடைய கர்ஸான்ரோடு பலமாடி வீட்டில், கணையாழி இலக்கியக் கூட்டங்களில் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன், பேச்சில் முதன்மையாக நகைச்சுவை இருக்கும், மற்ற பேர் எழுத்தைப்பற்றி குறை சொல்லவே மாட்டார். பதிலாக சற்று மிகையாகவே புகழ்வார்: கர்னாடக சங்கீதத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் சில வேளை சன்னமான குரலில் பாடிக்காட்டுவார். தஞ்சாவூர் திட்டுவார்த்தைகளை அவர் உபயோகிக்கும்போது அவைகளின் மதிப்பு உயரும்.
ஜானகிராமன் கதைகளில் சோரம்-அடல்ட்டரி-அதிகம் என்று ஒரு சமீப காலத்து குற்றச்சாட்டு உண்டு. அவர் சிறுகதைகளை முழுமையாகப் படித்தவர்கள் அவர் மற்ற எவ்வளவோ விஷயங்களைத் தொட்டிருக்கிறார் என்பதை சுலபமாக உணர முடியும். அவர் எழுத்தைப் பொதுப்படுத்துதல் அவ்வளவு எளிதல்ல. ஏழ்மையில் உள்ள கவிதை கலந்த அவலங்களைப் பற்றி அவர் எழுதினார். நம்பிக்கைத் துரோகம் பற்றி, வயசாவதில் அழிவில் உள்ள சோகம் பற்றி, சங்கீதம் போன்ற கலையம் சங்களை உபாசிக்க வேண்டியது பற்றி.
இளம் வயதில் நீங்கள் சில கதைகளை ஒஹோ என்று ரசித்துப் படித்திருப்பீர்கள். அதையே கொஞ்சம் வருஷம் கழித்து திருப்பிப் படித்தால் 'சட் இதைப் போயா அப்படிப் புகழ்ந்தோம்' என்று தோன்றும். ஜானகி ராமனின் கதையை முப்பது வருஷம் கழித்துப் படித்த போது கூட அந்தச் சிலிர்ப்பு எனக்கு மறுபடி ஏற்படுகிறது. அவர் இறந்துவிட்டாரா என்ன!
திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்திக்க வேண்டும் என்றால் யாராக இருந்தாலும் நீண்டநாள் காத்திருக்க வேண்டும். அல்லது அவர் பொது வெளியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பார்க்கலாம் என்பதுதான் இன்றைய நிலை. ஆனால் அதே தலாய்லாமா, சிவாஜியை சந்திக்க விரும்பி படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சந்தித்த நிகழ்வு ஒன்று உண்டு.
1957ம் ஆண்டு தலாய்லாமா ஆன்மிக பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அவர் தமிழ்நாட்டில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று விட்டு கடைசியாக அப்போதைய முதல்வர் காமராஜரை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் "நான் சிவாஜியை நேரில் பார்க்க வேண்டும் ஏற்பாடு செய்ய முடியுமா" என்று கேட்கிறார். அப்போது சிவாஜி "உத்தம புத்திரன்" படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
உடனே காமராஜர் சிவாஜியை உடனே அழைத்து வரச் சொல்கிறார். அதற்கு தலாய்லாமா. "அப்படி செய்யக்கூடாது. நான்தான் அவரை சென்று பார்க்க வேண்டும், அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்" என்றார்.
"உத்தம புத்திரன்" படப்பிடிப்பு தளத்தில் சிவாஜியை சந்தித்து பேசினார் தலாய்லாமா. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு வெறும் செய்தியாகவே கடந்து சென்று விட்டது.
சேர்த்து வைத்திருக்கும் ஜோக்ஸை காலி செய்யப்போகிறேன்... வந்தது எது, வராதது எது என்று சொல்லுங்கள். வந்ததை மறுபடியும் படியுங்கள். வராததை புதிதாக படியுங்கள்.
!!!!!!!!!!!!!!!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!