18.8.26

எ போ கதை -  தமிழச்சி -  ஜெயகாந்தன் 

 

தமிழச்சி

ஜெயகாந்தன்

தேவலோகத்தில் சபை கூடியிருக்கிறது. தேவர்களும் அமரநிலை எய்திய மானிடர்களும் அங்கே குழுமி இருக்கின்றனர். தேவேந்திரன் கொலு வீற்றிருக்கிறான்.

சபையில் சிறு சலசலப்பு.....

நாரதனும் இளங்கோவும் வருகிறார்கள்.

இளங்கோவடிகளாரின் முகம் சிவந்து விழிகளில் கொதிநீர் துளிர்க்கிறது. நாரதனின் முகத்தில் கேலிச் சிரிப்பு; கலகத்திற்கு வித்தூன்றிய எக்களிப்பு-சபையினரை நோக்கிச் சிரிக்கிறான்.

இளங்கோவால் யாரையும் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை; தலை குனிந்து நாரதனின் பின்னே வருகிறார். அவமானமும் துயரமும் மனதில் திமிறி பாய்கின்றன. நீண்ட பெருமூச்சு அவர் இதயத்தைச் சாந்தப்படுத்த முயற்சிக்கிறது.

"வருக! திரிலோக சஞ்சாரியே, வருக! அடிகளார் ஏன் வாட்டமுற்றிருக்கிறார்?" என்று வினவுகிறான் தேவேந்திரன்.

"நான் திரிலோக சஞ்சாரியாக இருப்பது அடிகளாருக்குப் பிடிக்கவில்லை!" என்கிறான் நாரதன்.

இளங்கோ பொறுமை இழந்து அவனை விறைத்து நோக்குகிறார்.

"உங்களுக்குள் என்ன சச்சரவு?" என்கிறான் இந்திரன்.

இளங்கோ பற்களை 'நெறு நெறு' வெனக் கடிக்கிறார். கோபத்தால் அவர் நெற்றி நரம்பு புடைத்து நெளிகிறது-பேச முடியவில்லை.

"என்ன நடந்தது?" என்று திடுக்கிட்டு வினவுகிறான் இந்திரன்.

"தேவேந்திரா! சிலம்பொலி சிலம்பிய தாயகத்தை, கண்ணகி உலவிய புண்ணிய பூமியை, தமிழ் நடந்த எந்தை நாட்டை இத் தருக்கன் இகழ்ந்து பேசுகிறான்!


உணர்ச்சிக் கொந்தளிப்பால், அவர் உடல் நடுங்குகிறது.

"நான் கண்ட உண்மையைக் கூறினேன் - மனிதர்களின் நியதிப்படி உண்மை புகல்வது குற்றமாக இருக்கலாம்; ஆனால் தேவ நியதிப்படி குற்றமாகாதே!" என்கிறான் நாரதன்.

"தேவனைவிட மேம்பட்டவன் மனிதன்; அதிலும் தமிழன்! - நாரதன்பொய் உரைக்கிறான்; அவன் நாவை அறுக்க வேண்டும்!" என்கிறார் இளங்கோ.

"சபையோர்களே, நான் பொய் உரைக்க வேண்டிய அவசியமில்லை. ஆதலால் நான் சொல்வதனைத்தும் சத்தியம் என்று முதலில் கூறிக்கொள்கிறேன். திரிலோக சஞ்சாரத்திற்குச் சென்ற போது பூலோகத்துக்கும் வழக்கம்போல் சென்றேன். அங்கு 'பதியெழு அறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் மாநகர்' கண்டேன். ஆனால் அடிகளார் உரைப்பதுபோல் 'கோலின் செம்மை' கண்டிடலேன்; 'குடையின் தன்மை' கண்டிடலேன். பஞ்சமும் நோயும், கொலையும் களவும், வஞ்சமும் பொய்மையும் கண்டேன், தேவா!-அடிகளார் போற்றும் தமிழ் நிலத்தில் ஆண்மையுமில்லை; பெண்மையுமில்லை. கற்புமில்லை; காதலுமில்லை, நேர்மையும் இல்லை; நீதியும் இல்லை. விபசாரம் மலிந்து கிடக்கிறது. புனிதமிழந்து, பொற்பிழந்து, மானமிழந்து, மதியிழந்து, வீரம் இழந்து வெறும் கோழைகளாகத் திரிகின்றனர் தமிழர்.

அவர்கள் மனிதர்கள்கூட அல்லர்; மிருக ஜீவிதம் திரும்பி இருக்கிறது தமிழ் நிலத்தில்! அந்நாட்டில் கண்ணகி பிறந்ததாக என்னால் கனவுகூடக் காணமுடியவில்லை. தாசியென்றோர் தனி வகுப்பில்லை தமிழ் நாட்டில்!-ஆம், அப்படியெல்லாம் தமிழர்களைப் பகுத்துணர முடியாது. பேடியர் - கோழையர் இவரெல்லாம் அங்கு வீரர்கள். நல்லவர்கள் வாழ முடியாத நாடு அது! அங்கே சென்றேன் சீரழிந்து கிடக்கும் தமிழகத்தைக் கண்டேன்! என் இதயம் புண்பட்டது. இளங்கோவடிகளாரிடம் என் புண்பட்ட மனநிலையை உரைத்தேன். தமிழர்களின் வழிகெட்ட வாழ்வைச் சோகக் குரலில் கூறினேன் அடிகளார் அவற்றை ஆட்சேபிக்கிறார்; என் மீது சீற்றம் கொள்கிறார். அறிந்த உண்மையை மறைக்க என் உள்ளம் உடன்படவில்லை - இதிலென்ன குற்றம்? குற்றமிருப்பின் கூறுங்கள், சபையோர்களே!-தண்டனை பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன்!" என்று சண்டப் பிரசண்டம் புரிகிறான் நாரதன்.


இளங்கோவடிகளார் அழுகிறார்.

"தேவேந்திரா, இது வீண் அவதூறு! இதை நான் நம்ப முடியாது. மானமும் வீரமும் உயிரெனக் கொண்டோர் தமிழர்! அப்படிப்பட்ட தமிழர்கள் பேடியராம், கோழையராம்! வீரர்களின் குருதியிலே தமிழ் நிலத்தின் சரிதை வரையப் பட்டிருக்கிறது. செல்வம் கொழிக்கும் தமிழகத்தில் பஞ்சமும், நோயும்-என்னால் நம்ப முடியவில்லை. தேவா! கண்ணகி வாழ்ந்த தமிழ் நாட்டில் கற்புடைய மாதர் இல்லையெனக் கதைக்கிறான் இவன் - அறம் வளர்ந்த தமிழ் நிலத்தில் வள்ளுவரின் குறள் வாழும் தமிழ் நாட்டில் கொலையாம், களவாம், விபசாரமாம்! இந்த அவ மானத்தை, பொய்யுரையை என்னால் பொறுக்க முடியாது. காவிரி பாய்ந்தோடும் தமிழ் நாட்டில், தென்றல் பிறக்கும் தென் பொதிகையில், நற்றமிழ் வளர்த்த நான்மாடக் கூடலில் நான் மீண்டும் பிறப்பேனா?-அப்படி ஒரு பாக்கியம் கிட்டுவோர் தேவரினும் மேலோர்!-நாரதன் தமிழர்மீது பொறாமை கொண்டு வீணாகப் புரளி கிளப்புகிறான். தன் தவற்றை உணர்ந்து அவன் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் அவன் நாவை அறுப்பேன்!" என்று ரெளத்ராகாரமாக மொழிகிறார் இளங்கோவடிகளார்.

சபையிலிருந்து ஒரு பெண்ணின் குரல் எழுகிறது:

"தேவேந்திரா! என் கணவனை அநியாயமாகக் கொலை புரிந்த அன்றே-மதுரை நகரை-அநீதியை எரித்து விட்டேன். ஆம், அன்றோடு பொய்மை ஒழிந்தது; அநீதி அழிந்தது. அன்று நான் மூட்டிய கற்புத் தீ என்றும், தமிழ் மகள் ஒருத்தி உள்ளளவும் கனன்று கொண்டிருக்கும் - இதுதான் உண்மை; நாரதன் புகல்வது பொய். என்னுடைய கற்பையே அவன் அவமதிக்கிறான்; அவனைத் தண்டித்தே ஆக வேண்டும்."

தேவேந்திரனுக்கு என்ன நீதி வழங்குவது என்று புரியவில்லை - குழம்பினான்!

"ஏன், வேண்டுமானால் கண்ணகி தேவியாரும், அடிகளாரும் தங்கள் லட்சிய பூமியை நேரில் கண்டு தரிசித்து வரலாமே! அப்பொழுது அவர்களுக்கே புரியும்-நான் சொல்வது பொய்யா, மெய்யா என்பது!" என்று யோசனை கூறுகிறான் நாரதன்.

அவன் யோசனையை சபை முழுதும் ஆதரிக்கிறது.!


தமிழ் நாட்டில், மதுரை மாநகரைச் சேர்ந்த வைகை நதி வற்றிக் கிடக்கிறது. கரையோரத் தில் முழங்கால் அளவுக்கு அசுத்தம் நிறைந்த தண்ணீர் ஓடுகிறது.

இன்னும் பொழுது விடியவில்லை; இருள் அகலவில்லை. கீழ் வானத்தில் மேகச் சுருள்கள் சூழ்ந்து பரவுகின்றன. கதிரவன் உதயத்திற்கு, வரலிற்கு வழி விடுகின்றன.

அந்த இருளில், மங்கிய ஒளியில் இரு உருவங்கள் வருகின்றன. தமிழ் நிலத்தின் மண்ணை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொள்கின்றன.

ஆற்றுப் பாலத்தின்மீது ரயில் வண்டி 'கடகட'த்து ஓடி மறைகிறது.

கண்ணகி திகைக்கிறாள். எல்லாம் புதுமையாகத் தோன்று கின்றன அவளுக்கு; எதையும் அவளால் ரசிக்க முடியவில்லை. ஆனால் அவையனைத்தும் அவளை மயக்குகின்றன; பிரமிக்க வைக்கின்றன.

"இவையெல்லாம் தமிழர்களின் வளர்ச்சிக்குச் சான்றுகள்!" என்று கூறி மகிழ்வுறுகிறார் இளங்கோ.

திடீரென ஒரு புதுவித சப்தம் கேட்கிறது - போலீஸ்காரனின் விசில் சப்தம்தான்!

"ஏ ஆயி! பொழுது விடிஞ்சப்புறமுமா வியாபாரம்? - சீ! ஊரையே நாறடிக்குங்களே, கழுதைங்க!" என்று சலித்துக் கொண்டே அவர்களுக்கருகே வருகிறான் போலீஸ்காரன்.

"அப்பனே; என்ன சொல்கிறாய்?" என்றார் இளங்கோ.

"அட, ஒன்னெ சொல்லலையய்யா....நீ போ! நட ஆயி, ஸ்டேஷனுக்கு!"

"ஐயா, நாங்க வெளியூர்க் காரங்க - யாத்திரைக்கு வந்தோம்"

"என்னப்பு.... நம்மகிட்டேயே 'ஜீர்' உடர்றே?... இது பஸ் ஸ்டென்ட் கிராக்கி, எனக்குத் தெரியாதா? - யாத்திரைக்கு வந்தவங்க மூஞ்சியெப் பாத்தா தெரியலே.... இந்நேரத்திலே இங்கே என்னாய்யா வேலை? இவ ஒன் வப்பாட்டியா?"

"அட பாவி, அவ கண்ணகிடா!"

"ஆமாங்க, அவருக்குத் தங்கச்சி!"

"அப்படி போட்ரா குண்டுன்னாநாம்! அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் இந்த இருட்டுலே இங்கேன்னாய்யா வேலை?"

"ஐயா, மன்னிக்கணும். எங்களுக்கு ஊர் புதுசு; தெரியாமெ வந்துட்டோம்" என்று கெஞ்சினார் அடிகளார்.

அவன் விடுவானா? அதிகாரம் பண்ணவே பிறந்தவனாயிற்றே அவன்! - இப்பொழுது போலீஸ்கார உத்தியோகத்தை மறந்து விட்டான்.

"ஏய், மடியிலே என்ன?"

"ஒன்றுமில்லை, ஐயா!"

"காட்டு?"

இளங்கோவின் பொறுமை எல்லை கடந்தது.

"ஏய், நீ யார்? ஏன் எங்களைத் தொந்தரவு செய்கிறாய்? விலகி நில், வழி விடு!" என்று மேலே நடக்கலானார்.

"நில்லுடி அம்மா!" என்று கண்ணகியின் கரத்தைப் பற்றி இழுத்தான் போலீஸ்காரன்.

"மூடனே, உன் உடம்பில் தமிழ் ரத்தமா ஓடுகிறது?" என்றவாறு அவன்மீது பாய்கிறார் இளங்கோ.

"தேவடியாளைக் கூட்டிக் கிட்டுச் சுற்றறதுமில்லாமெ...."

"அடேய், அவ கண்ணகிடா, கண்ணகி!"

அவ்வளவுதான்; தமிழனின் உடலில் வீரம் ஓடிக் கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த மனிதரல்லவா இளங்கோ? - ஒரே அடி! - அந்தச் சொத்தை மகன் கீழே உருண்டான். அடிகளார் வெறி கொண்டு தாக்கினார். அதைத் தவிர வேறு வழியில்லை-அப்புறம் அவனுக்குப் பேச்சுமில்லை, மூச்சுமில்லை!

கண்ணகியும், இளங்கோவும் நகரத்திற்குள் நுழைந்தனர்.

❖ ❖ ❖

இரவு மணி ஏழு. அடிகளாரும் கண்ணகியும் கோயிற் கோபுரங்களையும் சிற்ப சித்திரங்களையும் கண்டு மகிழ்ந்தனர்

கலைகள் ஆதரிப்பாரின்றிக்கும் நிலை இளங்கோவுக்குத் தெரிந்தது. நகர் முழுவதும் சுற்றிப் பார்க்கவே அவருக்கு நேரமில்லை.

கண்ணகியும் இளங்கோவும் கடை வீதி வழியே வந்து கொண்டிருந்தனர். அதோ ஒரு தமிழச்சி; எச்சிலையிலிருக்கும் சோற்றை வழித்துப் புசிக்கிறாள். அவளருகே ஒரு 'தமிழ் நாய்'ம் இருக்கிறது; வற்றிப் போன அவள் மார்புச் சக்கையைச் சுவைத்தவாறு ஒரு 'தமிழ் சிசு!'

கண்ணகி பதறினாள்; இளங்கோ கண்களை மூடிக் கொண்டார்.

சாலையோரத்தில் ஒரு பெரிய திடலில் ஒரே கூட்டம். இருவரும் அங்கே சென்று பார்த்தனர்.

யாரோ ஒரு மனிதர் மேடை ஏறி நின்று பேசிக் கொண்டிருந்தார் - ஆகா, என்ன அழகான தமிழ் விருந்து! பேசுபவர் அசல் தமிழர்!

"என் மகன் முதுகிலே காயம் பட்டுக் கிடப்பானாயின் அவனுக்குப் பாலூட்டிய தனங்களை அறுத்தொறிகிறேன்' என்று சூளுரை செய்த தமிழச்சியின் மரபில் வந்த தமிழர்கள் நாம்! சிலப்பதிகாரமும், திருக்குறளும் படைத்த நமது தமிழ் மக்கள் மூடர்களல்ல; நம் நாடு நமக்கு வேண்டும்.....!"

அவர் பேசிக் கொண்டிருந்தார். தமிழரின் உயர்வும், நாகரிகமும், இலக்கிய நயங்களின் மேன்மையும் அவர் சொற் பிரவாகத்தினூடே அடிபட்டுச் சிதறின.

கண்ணகியின் உள்ளம் கனிந்து நிறைந்து விம்மிற்று; இளங்கோவுக்கும் பெரும் நிம்மதி. 'தமிழ் செத்துவிடவில்லை; கண்ணகியையும், வள்ளுவனையும் மறந்துவிடவில்லை. நாரதன் எங்கேயோ சென்று எதையோ பார்த்து விட்டுக் கதை அளந்து விட்டான்' என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டார்.

கூட்டம் முடிந்தது!

கண்ணகியும், இளங்கோவும் கூட்டத்தில். பேசிய அந்தப் பெரிய மனிதரின் அருகே சென்றனர். "யாராய்யா, என்ன வேண்டும்?" என்று அலட்சியமாகக் கேட்டார் அவர்.

"ஐயா, நான் ஒரு தமிழ்ப் புலவன். யாத்திரைக்குப் புறப்பட்டு வந்திருக்கிறேன். இவள் என் சகோதரி. இன்றிரவு தங்குவதற்குச் சிறிதே இட வசதி வேண்டும்" என்றார் இளங்கோ.

பெரிய மனிதர் கண்ணகியை ஏற இறங்கப் பார்த்தார்.

"ஒன் பேர் என்னாம்மா?"

"கண்ணகி!"

"அட, நல்ல தமிழ்ப் பெயராயிருக்கே?"

"தமிழர்களுக்குத் தமிழ்ப் பெயர் இருப்பதில் என்ன ஆச்சரியம்?" என்றாள் அவள்.

"பரவாயில்லே...நல்லாப் பேசுறியே!" என்று பல்லைக் காட்டினார் அவர். பிறகு, "ஓ! அதற்கென்ன, தாராளமாக எங்கள் வீட்டில் தங்கலாமே! இந்த உதவிகூடச் செய்யாவிட்டால் ...ஹிஹி....!" என்று குழைந்தார்.

இளங்கோவும், கண்ணகியும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். பெரிய மனிதர் மேலும் தொடர்ந்தார்.

"நான் உள்ளூர் முனிசிபல் கௌன்சிலர். சுதர்சனம் பிள்ளைன்னா தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள்...ஹிஹி....!" என்று 'சுய அறிமுகம்' செய்து கொண்டார்.

அவர் சொன்ன வார்த்தைகளில் சில இருவருக்கும் புரியவில்லை!

❖ ❖ ❖

இரவு மணி பத்து. சுதர்சனம் பிள்ளையின் பங்களாவின் மேல் மாடியில் கண்ணகி தங்குவதற்கு இட வசதி அளிக்கப்பட்டது.

நல்ல நிலா!

'இந்த நேரத்தில் வைகை நதி தீரத்திற்குச் சென்றால்?'

இந்த எண்ணம் தோன்றியதும் அடிகளாருக்குக் காலையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்து பீதியை அளித்தது. ஆனாலும் தனிமையில் சென்றால் ஒன்றும் ஏற்படாது என்று நினைத்தார்; சென்றார்.

போகும் வழியில் ஒரு சிறிய சந்து!

அவருக்கென்ன, மடியிலும் கனமில்லை; வழியிலும் பயமில்லை.

சந்து முனை!

அங்கே போவோர்க்கு வழிவிட முடியாது என்று சொல்வது போல் மூன்று பெண்கள் அலங்கோலமாக வழिमறித்து நின்றார்கள். அவர்கள்மேல் வியர்வைப் பிடிப்பும், பவுடரின் இறுக்கமும் கலந்த ஏதோ ஒரு நெடி!-மேலே போக முடியாமல் இளங்கோ தயங்கி நின்றார்.

'கலீர்' என்ற சிரிப்பொலி!

"என்னாங்க, பார்க்கிறீங்க?"

"அவசரப் படாதேடி! அவர் நோட்டம் பார்த்துத்தான் வருவாரு!"

"பார்த்தது போதும், வாங்க!"

இளங்கோவுக்கு ஒன்றும் புரியவில்லை; வந்த வழியே திரும்பினார்.

ஒருத்தி ஓடிச் சென்று அவர் கையைப் பற்றினாள்.

"யாரம்மா, நீ?"

"உள்ளே வாங்க, சொல்றேன்!"

அவளுடன் கூண்டு போன்ற ஒரு சிறு வீட்டுக்குள் நுழைந்தார்.

அவருக்கு விஷயம் புரிந்து விட்டது. அவளிடம் கற்பில்லை; அவரிடம் காசில்லை.

வெளியே விரட்டப்பட்ட அடிகளார், குமுறும் நெஞ்சுடன், பொங்கும் கண்ணீருடன் வீதி வழியே நடந்தார்.

"ஐயோ, தமிழ்நாடே!" என்று அவர் நெஞ்சு நைந்து புலம்பிற்று.

கண்ணகி தங்கியிருந்த சுதர்சனம் பிள்ளையின் மாளிகைக்கு அவசர அவசரமாக ஓடினார் அடிகளார்.

இருள், தமிழகத்திலே கவிந்து கிடக்கும் இருள்! - அடிகளாருக்கு அது சாதாரண இருளாகத் தோன்றவில்லை; அதைக் கண்டு அவர் மருண்டு மருண்டு ஓடினார்....



அந்த மாளிகையிலும் அதே இருள் - வாசற் கதவுகள் மூடிக்கிடந்தன.

"ஐயா, ஐயா....!"

அடிகளார் கதவைத் தட்டினார்; திறக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக உள்ளே இருந்து இடி இடித்தாற்போல் பெரும் சிரிப்பொலி கேட்டது.

புதிய சிரிப்பல்ல; பழைய சிரிப்பு!

ஆம், மதுரை நகரைக் கருக வைத்தபோது வெறி கொண்டு நகைத்த கண்ணகியின் அதே சிரிப்பு!

அமைதியான அந்த இருளில் கண்ணகியின் கோரச் சிரிப்பு ஹாலோகார மீட்டது!

இளங்கோவடிகளார் கதவை இடித்தார்; மூட்டினார்; மோதினார்-கதவு திறந்தது!

அங்கே.....

ரத்தக் கறை படிந்த கைகளுடன், கூந்தல் அலைய, விழிகள் பிதுங்க வெறி பிடித்துச் சிரித்து நின்றாள் கண்ணகி!

அவள் காலடியில் கண்கள் பிதுங்க ரத்த வெள்ளத்தில் ஆழ்ந்து கிடந்தார் அவளுக்கு இடமளித்த தமிழ் வள்ளல்.

"தேவி!"

அவருக்கு அவள் பதில் சொல்லவில்லை. சிரித்தாள்; மேலும் மேலும் சிரித்தாள்.

அடிகளார் தேவியாரை அழைத்துக் கொண்டு ஓடினார்.

❖ ❖ ❖

வைகை நதி தீரம்! கன்னங்கனிந்த இருள். அடிகளார் தேம்பித் தேம்பி அழுகிறார். "நாரதரே! என்னை மன்னித்து விடும்; நீர் சொன்னது உண்மை! தமிழ் நிலத்தின் சீர்கேட்டை நேரில் பார்த்தேன்-என் கண்களை மறைத்திருந்த மாய வலையை நீக்கி நேரில் பார்த்தேன் - நீர் சொன்னது உண்மை; என்னை மன்னித் தருளும்!" என்று கதறினார்; புலம்பினார்.

"அடிகளாரே, நீர் குற்றமற்றவர். பழைய உண்மையை நீர் கூறினீர்; புதிய உண்மையை நான் கூறினேன். பழையன கழியுமாம்; புதியன புகுமாம் - தமிழ்நாட்டில் இன்று புதுமை புகுந்திருக்கிறது. நாளை இதுவும் பழமை ஆகிவிடும். வாரும் போவோம்!" என்றார் நாரதர்.

அடிகளாரின் கால்கள் சொர்க்க பூமியை நோக்கி நடந்தன. ஆனால் அவர் மனமோ, நரகத்தில் கிடந்து நைந்து உழன்றது.

கண்ணகி, நின்ற இடத்திலேயே நிற்கிறாள். அவள் கண்களில் கண்ணீர்! அல்ல, உதிரமே வழிகிறது!

"தேவியாரே, வாருங்கள் போவோம்!" என்று அவளையும் அழைக்கிறார் நாரதர்.

சூன்ய வெளியில் நிலைத்த அவள் பார்வை திரும்பவில்லை. உயிரற்ற பிணம்போல் நிற்கும் அவள் வாயிலிருந்து பின்வரும் வார்த்தைகள் உதிர்கின்றன.

"நாரதரே, நான் தேவ மகள் அல்ல, தமிழ் பெற்ற புதல்வி - தமிழச்சி! இங்கே ஆயிரமாயிரம் தமிழச்சிகள் விபச்சாரிகளாக வாழும்போது நான் மட்டும் தேவ உலகத்தின் கற்புக்கரசி என்று பெயர் பண்ணிக்கொண்டு வாழ முடியாது - நீர் போய் வாரும்! - என் வேலை முடிந்து விடவில்லை; இன்னுமிருக்கிறது. என் கற்புத்தீ இந்தத் தமிழ் நாட்டை எரிக்கட்டும்; இல்லாவிட்டால் இங்கு புழுத்து நெளியும் விபசாரக் கிருமிகள் என்னையும் அரிக்கட்டும்!" என்று கூறிவிட்டு நகரை நோக்கி நடந்தாள் கண்ணகி.

❖ ❖ ❖

ஐயா தமிழரே! 'எங்கே அந்தக் கண்ணகி?' என்று கேட்கிறீரா?

அதோ பஸ் ஸ்டாண்டுக்கருகில், சினிமா கொட்டகையில், கோயில் வாயிலில் நின்று உங்களைச் சைகை காட்டி அழைக்கிறாளே, அவள்தான் கண்ணகி! - தமிழ் பெற்ற புதல்வி - தமிழச்சி!

- செப்டம்பர் 1955- மனிதன்

==============================================================================================

கசடதபற 1971 - 37 வது இதழிலிருந்து..

அக்கம் பக்கம்

சாகித்ய அகாதமி சென்ற மாதம் இரண்டு கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.

முதல் கூட்டம்: 'தமிழ் இலக்கியத்திற்கு மு. வரதராசன்-அ. சீனிவாசராகவன் ஆகியோர்களின் பங்கு'

கூட்டத்தில் பேசியவர்கள் சொன்னவை—

அகிலன்:

"மு. வ. துணைவேந்தர் ஆனதும் நிறைய ஃபோன் கால்கள் வந்தது. அதில் சலிப்புற்ற அவர் தம் குடும்பத்தாரிடம் சொன்னார்—யாரிடமிருந்து ஃபோன் வந்தாலும் என்னிடம் தராதீர்கள், அகிலனைத் தவிர."

சென்னை பல்கலைக் கழகத்து தமிழ்ப் பேராசிரியர் திரு சி பாலசுப்பிரமணியம்:

'ஒரு மாணவர் எப்போதும் தாமதமாகக் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார். டாக்டர் மு. வ. அந்த மாணவரை அழைத்துக் காரணம் கேட்டார். வேலை பார்த்துவிட்டு நடந்து வருவதால் தாமதமாகி விடுகிறது என்றார் மாணவர். மாலையில் தன்னை வந்து பார்க்கும் படி மு. வ. சொன்னார். நானும் அந்த மாணவரும் மாலையில் மு. வ. வைப் பார்த்தோம். நூறு ரூபாய்க்கு செக் கொடுத்து சைக்கிள் வாங்கிக் கொள்ளச் சொன்னார் அந்த மாணவர் இப்போது அண்ணா நகர்புரத்தில் லட்ச ரூபாய்க்கு வீடு கட்டிக் கொண்டு சுகமாக இருக்கிறார்.

நீதிபதி மகராஜன்:

"புகையிலைப் பெட்டியை அ. சீனிவாசராகவன் மறந்து வந்துவிட்டால் மாடி ஏறிப் போய் கொண்டுவந்து கொடுக்கும் சிஷ்யர். 

மகராஜன் மேடை ஏறினால் மட்டும் ஆசிரியர் சொல்வதையெல்லாம் அடியோடு மறுக்கிறாரே என்று என்னை குறை சொன்னார் நண்பர் ஒருவர்.”

மு. வரதராசன், அ. சீனிவாசராகவன் ஆகியோரின் இலக்கியப் பங்கு மேலே கண்டதுபோலதான் என்று அவர்களின் சிஷ்யர்களும் கருதுகிறார்கள் போலும்.

இதே கூட்டத்தில் திரு. டாட்சுவோ மோரி மோட்டா (Prof. Tatsuo Morimoto) எனும் ஜப்பான் மீஜி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டார்.

திரு மோரி மோட்டா, "தமிழ் மொழிக்கென்று உள்ள காரக்டர் என்ன?" என்று கேட்டதும் திரு. எஸ். மகராஜன், "தமிழகத்தில் உள்ள கோயில்களையெல்லாம் சுற்றிப் பாருங்கள். தமிழ் மொழியின் குணம் நன்றாகப் புலப்படும்" என்றார்.

இரண்டாவது கூட்டம் இரு பிரஞ்சு எழுத்தாளர் சந்திப்பு: திரு ரோஜர் கைலோயி (Roger Caillois), திரு. கிளாட் சைமன் (Claude Simon). இவர்கள் பிரஞ்சு மொழி மட்டுமே அறிந்தவர்கள். கேள்விகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கேட்கப்பட்டன. பதில்கள் பிரஞ்சு மொழியில். அவைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சூழ்நிலை கெடாதவாறு சொன்னார் ஸ்ரீராம்.

கூட்டத்தில் அவர்கள் சொன்னவைகளைத் தொகுத்துப் பார்ப்பதால் பிரஞ்சு எழுத்தின் தற்போதைய நிலைமையை ஓரளவு அறிய முடியும்.

பிரான்சில் நியூவேவ் எழுத்திற்கு இளைஞர்களைவிட்டால் பிரமாதமான ஆதரவு ஒன்றும் இல்லை. ஆனாலும் அந்தவகை எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். பிரஞ்சு இளைஞர்களைவிட-ஜப்பான் ஸ்காண்டிநேவியா இளைஞர்கள் முற்போக்கான மனப்பான்மை கொண்டு இருக்கிறார்கள் என்று இரண்டு எழுத்தாளர்களும் கருதுகிறார்கள்.

எதற்காக எழுதுகிறோம் என்று அவர்கள் தங்களைக் கேட்டுக் கொள்வது இல்லை. எது இலக்கியம் என்று சார்த்ர் போலவும் அவர்கள் கேட்பது இல்லை. இலக்கியத்தின் மூலம் எந்தச் செய்தியையும் போதிக்கும் நோக்கம் கிடையாது. அவர்கள் எழுதுகிறார்கள். எந்தவிதமான வரையறையும், நோக்கமும் இல்லாமல் எழுதுகிறார்கள். அதில் ஒரு வடிவமும், திட்டமும் அதன் போக்கிலேயே இயல்பாக அமைகிறது.

பிரஞ்சு இலக்கியத்திற்கு உள்ள மரபு - பாரம்பரியம் பற்றி விசேஷ அக்கறை காட்டாது அவர்கள் எழுத்து இருக்கவேண்டுமென விரும்புகிறார்களாம்.

எழுத்தாளன் என்ற முறையில் மேடை நாடகங்களில் எவ்வித அக்கறையும் இல்லையென்றாலும் நாடகங்கள் நடப்பதைக் காட்டிலும் படிப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

ஒரு எழுத்தாளனின் எழுத்து சினிமா, டெலிவிஷன் மூலமாக பிரமாதப் படுத்தப்பட்டு, நிறைய பணத்தைக் கொண்டு வந்தாலும் அதற்கு உண்மையான இலக்கிய அந்தஸ்து இல்லாது போனால் ஒருவித பிரயோசனமும் இல்லை என்று இரண்டு எழுத்தாளர்களும் தெளிவாகக் கூறினார்கள்.

மரபு—ஐதீகம் ஆகியவற்றை காக்க இலக்கியக் குழுக்கள் பிரான்சில் உள்ளன. அதை மீறவும், முரண்படவும் வேறு குழுக்கள் இருக்கின்றன. இரண்டும் தொடர்ந்து பக்கத்தில் பக்கத்தில் செயல்பட்டு வருகின்றன.

புதிதாக எழுதத் தொடங்கியுள்ள எழுத்தாளர்களின் சிறப்பான படைப்புகளை வெளியிடவும், முதிய எழுத்தாளர்களின் சிறப்பான எழுத்துக்களை வெளியிடவும் எழுத்தாளர்களின் குழுக்கள் செயல்படுகின்றன. இரண்டு பேராலும் புத்தகம் வெளியிடும் நிறுவனங்களுக்கு அதிக விற்பனையும், லாபமும் கிடையாது; எனவே அவர்கள் எழுத்துக்களை வெளியிட அவை முன்வருவதில்லை.

சோதனை எழுத்துக்களின் புத்தகங்கள் வெளியாகின்றன. ஆனால் சுமார் 600 பிரதிகளுக்கு மேல் விற்பனையாவதில் இல்லை.

பிரஞ்சு அகாதமி ஒரு சுயேச்சை நிறுவனம். அதில் அரசாங்கத்தின் குறுக்கீடு நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ இல்லை. அரசாங்கம் அகாதமியை ஏற்க முன் வந்தபோது எழுத்தாளர்கள் அதை விரும்பவில்லை. அதற்குப் பண உதவி செய்ய வந்தபோது அதை நிராகரித்திருக்கிறார்கள். அகாதமி சுயேச்சையாக இயங்குவதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்.

—நா. கிருஷ்ணமூர்த்தி

39 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   வஜம்மா,.  எங்கே அவ்வப்போது காணாமல் போய்விடுகிறீர்கள்?!!  நலம்தானே?  கோமதி அக்கா விசரித்தார்.  கீதா அக்கா தேடினார்..  நானும்!

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      சுதந்திர தினத்திற்கு குழந்தைகள் (பேத்திகள்) பயிலும் டான்ஸ் பள்ளியில் அவர்களுக்கு ஒரிடத்தில் ஒரு நடன ஏற்பாடு அதற்கு ஏகப்பட்ட அலைச்சல்கள் அதில் அலைந்தது ஒவ்வொரு நாட்களின் நேரமும் சரியாக இருந்தது. (அதில் அலுப்பு ஒருபுறம் ) அதனால் வலைத்தளத்திற்கு நான்கு நாட்களாக வர இயலவில்லை. மன்னிக்கவும்.என்னைக் காணாமல் தேடிய சகோதரி களுக்கும், உங்களுக்கும் என் பணிவான நன்றிகள். இனிதான் விட்ட பதிவுகளையும், இன்றைய பதிவையும் படிக்க வேண்டும். படித்த பின் வருகிறேன். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. விவரம் அறிந்தோம். சந்தோஷ நிகழ்வுகள்.

      நீக்கு
    4. பேத்திகள் நடனம் சிறப்பாக நடந்து இருக்கும்.
      நீங்கள் நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      நீக்கு
  2. மு.வ.வின் நூல்கள் அந்நாட்களில் கல்லூரி மாணவர்களிடம் பிரசித்த்மானவை.
    அவர் நூல்களை பெரும்பாலும் 'பாரி நிலயம்' பதிப்பகம் தான் பிரசுரிக்கும்.
    கரித்துண்டு, மண்குடிசை, கள்ளோ காவியமோ -- நூல்கள் வாசித்த நினைவில் இருக்கின்றன. மண்குடிசை நாவல் என் மனைவி பி.லிட்., படித்த பொழுது பாடப்புத்தமாக இருந்தது. என் மனைவி பி.லிட்., பி.எட்., படிக்கும் காலத்தில் நானும் ஏதோ பட்டப்படிப்புக்கு படிக்கிற மாதிரி அந்த நூல்களைப் வாசித்துக் கொண்டிருப்பேன். படிப்பதை தனி நோட்டுப்புத்தகங்களளில் நோட்ஸ் குறிப்புகளாய் எழுதி வைப்பது எனக்கு தொன்று தொட்ட பழக்கமாய் இருந்து இந்த வயசில் கூடத் தொடர்வது வேடிக்கை தான். this comes on that I

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வாசிப்பின் மிக ஆரம்ப காலங்களில் நானும் மு வ, காண்டேகர் வாசித்திருக்கிறேன்.  அப்போதும் இப்போதும் மு வவும் காண்டேகரும் என்னைக் கொஞ்சம் குழப்பும்.  லைப்ரரி சென்றால் இவர்கள் புத்தகம் பிரதானமாக இருக்கும்,.  எடுத்து வைத்துக் கொண்டு போட்டியின்றி வாசிக்கலாம்.

      நீக்கு
  3. மறக்கப்பட்ட தமிழறிஞர்கள் என்று ஒரு புத்தகமே போட வேண்டுமென்று எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. பிற்கால ஆட்சியாளர்களால் விளைந்த அநீதி அந்த்ச் அறிஞர்களில் ஒருத்தர் பெயர் கூட இக்கால இளைஞர்களுக்கு தெரியவொட்டாமல் சுத்தமாய் மறைத்து விட்டனர்.
    அவர்களில் சிலரை ஸ்ரீராம் நினைவு கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கைக்கு அவை கிடைக்குமாறு செய்கிறது இயற்கை!  என்னடா இது என்று பார்த்து விட்டு இங்கு கொண்டு வந்து பரிமாறி விடுகிறேன்! எங்கோ எதையோ படித்து எதையோ தேடினால் எதுவோ கிடைக்கும்!

      நீக்கு
  4. தமிழ் அறியாத/ படிக்காத தற்குறிகள் மலிந்து விட்ட இக்காலத்தில் ஜெயகாந்தன் அவர்களது படைப்பைக் கண்டதும்
    பாலைவனச் சோலை போல இருக்கின்றதே...

    பதிலளிநீக்கு
  5. ​ஜெயகாந்தன் என் ஊர்க்காராயினும் (கடலூர்) சோசலிச சித்தாந்தங்களின் மேல் பிடிப்புள்ளவராயினும் அவர் மேல் எனக்குள்ள ஒரே குறை.... கதைகள் நெகடிவ் கருத்துக்கள் உள்ளவை என்பதே. ஆனால் ஒரே ஆசுவாசம் கதையைப்படிக்கும்போது சத்யஜித் ரே படம் பார்ப்பது போல் இருக்கும்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெயகாந்தனின் எல்லா கதைகளையும் ஒரே மாதிரி வாசிக்க முடியாது இல்லையா?

      நீக்கு
  6. //பதில்கள் பிரஞ்சு மொழியில். அவைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சூழ்நிலை கெடாதவாறு சொன்னார் ஸ்ரீராம். //

    நீங்களா? அப்போது உங்கள் வயது 8 ஆக இருந்திருக்குமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி... சட்டுனு எவ்வளவு பெரிய ஆளாயிடறோம் பாருங்க...

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    ஜெயகாந்தன் அவர்களின் கதை, அவரின் ஆழமான சிந்தனையுடன் கூடிய எழுத்துக்கள் அனைத்தும் சிறப்பு. கண்ணகியின் கடைசி முடிவு மனதை வருத்துகிறது./ நெருடுகிறது. சிலப்பதிகாரத்தில் சிறப்புடன் வாழ்ந்த அவள், சுதர்சனங்கள் மலிந்து வாழும் இக்காலத்தில் எங்கு சென்றுதான் தன் கற்புத்தீயைக் கொண்டு எரிப்பாள். ஆனாலும், புனிதமான தீப்பிழம்பு தன் புனிதம் கொண்டு அவளுடன் எக்காலத்திலும் இணைப்பிரியாதிருக்கும் என நம்புவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  8. /// கோலின் செம்மை' கண்டிடலேன்; 'குடையின் தன்மை' கண்டிடலேன். பஞ்சமும் நோயும், கொலையும் களவும், வஞ்சமும் பொய்மையும் கண்டேன், ///

    நிதர்சனம்...
    வரவேணும்
    மாதவனின்
    சுதர்சனம்...

    பதிலளிநீக்கு
  9. தமிழச்சி கதையை மட்டும் வாசிக்க முடிந்தது...

    கதை சிறப்பு...

    பதிலளிநீக்கு
  10. திருவள்ளுவர் வந்து செருப்பெடுத்து
    அடித்தாலும் திருந்தப் போவது இல்லை...

    பதிலளிநீக்கு
  11. ஜெயகாந்தனை பதின்ம வயதிலேயே மிகவிரும்பிப் படித்தவன். இந்தக் கதையைப்பற்றிக் கேள்வியும் பட்டதில்லை. இங்கே இதனை இறக்கிவிட்டதற்கு நன்றி..

    அழுகின்ற இளங்கோக்கள் அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்; அவர்கள்பாட்டுக்கு ஒரு மூலையில் கிடக்கிறார்கள்தான் தமிழ்நாட்டில்.

    பதிலளிநீக்கு
  12. படிக்கும் காலத்தில் ஜெயகாந்தன் கதைகள் படித்ததுண்டு. கண்ணகியின் வித்தியாசமான கதை .
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. - செப்டம்பர் 1955- மனிதன்

    தமிழச்சி கதை படித்தது இல்லை. 1955 ஆம் ஆண்டு தமிழகம் நிலை இப்படி என்றால் !

    கதை படித்தவுடன் மனது கனத்து விட்டது.
    "மனிதன் மனிதன்" பாடலும், "யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே" பாடல்தான் நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  15. கசடதபற 1971 - 37 வது இதழில். பகிர்
    —நா. கிருஷ்ணமூர்த்திவு படித்தேன்.

    பதிலளிநீக்கு
  16. இது நிஜமாகவே ஜெயகாந்தன் எழுதியதுதானா? நேற்று ஆர்.சூடாமணியின் கதை என்று ஒன்றைப் படித்தேன், ஆர்.சூடாமணியின் பாணியை உணரமுடியவில்லை. இப்போதுதான் சுஜாதா என்ற பெயரில் யார் யாரோ எழுதுகிறார்களே, அதைப்போண்ற ஒன்றோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!