29.9.26

எ போ சிறுகதை    - பொழுது  - சிவசங்கரி 

 பொழுது

சிவசங்கரி

அவளுக்கு போர் அடித்தது. கணவன் பேச்சைக் கேட்டிருந் தால் இந்தத் தொல்லை இல்லை.

முதல் நாள் அவன், 'இன்ஸ்பெக்ஷனுக்காக நாளை போக வேண்டும்' என்றபோது, அவள், 'நானும் வருகிறேனே..' என்றாள்.

"யூ வில் பி போர்ட்! நான் உன்னோடு இருக்கமுடியாது.. உன்னை டி.பி.யில் விட்டுட்டுப் போனா, நாலு பாலங்கள் இன்ஸ்பெக்ஷன் முடிந்து திரும்ப நாழியாகும்."

"ஐ டோண்ட் மைன்ட் இங்கே மட்டும் என்ன வாழ்கிறது? ஐ லைக் டு கம்."
அவள் பட்டிணத்தில் பிறந்து, படித்து, வாழ்ந்தவள். அவளுக்கும் அவனுக்கும் திருமணமாகி நான்கு மாசங்கள் ஆகின்றன. பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த கல்யாணம். அவன் ஒரு என்ஜினியர். பட்டிணத்து பிடபுள்யூடி, பிரிவில் வேலையாக இருந்தவனை, ஒரு காரணமுமில்லாமல், முன்பின் அறிக்கை இல்லாமல், இரண்டு மாசங்களுக்குமுன் இந்தச் சின்ன டவுனுக்கு ஏ.ஈ.யாகப் பதவி உயர்வுடன் மாற்றிவிட்டார்கள்.

சின்ன டவுனில் எப்படிக் குடித்தனம் செய்யப்போகிறோம் என்று அவளுக்கு ஒரே மலைப்பு.

"இப்போ போகலாம்.ஆறு மாசம் கழிச்சு மறுபடி டிரான்ஸ் ஃபருக்கு முயற்சிக்கலாம். ப்ரமோஷன் கிடைச்சிருக்கறதை ஊருக்கு பயந்துண்டு வாண்டாம்னா எப்படி?"

முதலில் அவன் வந்து, வளர்ச்சி பெறாத அந்த ஊரில் கிடைத்த விதத்தில் சுமாரான வீட்டை அமர்த்தினதும், அவள் வந்து சேர்ந்துகொண்டாள்.
பட்டிணத்து வேலை மாதிரி இல்லை இங்கு. சதா இன்ஸ்பெக்ஷன், டூர். இரவு தங்கும் ஜோலி இல்லாவிட்டாலும், பல சமயங்களில் அவன் காலையில் புறப்பட்டுப் போனால் இருட்டி விடும் திரும்ப.

அவளுக்கு அந்த ஊரைப் பிடிக்கவில்லை. அந்த ஊர் ஜனங்களைப் பிடிக்கவில்லை. ஒன்றையுமே பிடிக்கவில்லை.

பி.ஏ. இங்கிலீஷ் லிட்டரேச்சர் படித்தவளுக்கு அந்த ஊர் சரிப்பட்டு வராமல் போயிற்று.

அவன் அலுவலக வேலையாய் பட்டிணம் செல்ல நேரும் போது கூடவே போய்விட்டு, திரும்ப வருகையில் நாலு லைப்ரரியிலிருந்து புத்தகங்களைக் கொண்டுவருவாள். அவன் வீட்டில் இல்லாதபோது கதவைத் தாளிட்டுக்கொண்டு புத்தகங்கள், பத்திரிகைகள் படிப்பாள். இல்லாவிட்டால் தூங்குவாள்.

அன்று அவன் இன்ஸ்பெக்ஷனுக்குப் போகப் போவதாய்ச் சொன்னபோது, வீட்டில் படிக்கப் புத்தகங்கள் எதுவும் இல்லாத காரணத்தாலும், காற்று முகத்தில் வீசியடிக்க ஜீப்பில் அவனோடு போவது பிடிக்குமாதலாலும், அவளும் வருவதாகப் பிடிவாதம் செய்து புறப்பட்டுவிட்டாள்.

விடிகாலையில் புறப்பட்டு, வழி ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்துக் கொண்டார்கள்.

நெடுஞ்சாலைப் பாலங்கள் சிலவற்றை அவன் சர்வே செய்ய வேண்டி இருந்ததால், சாலையை அடுத்திருந்த பயணிகள் தங்கு விடுதியில் அவளை இறக்கிவிட்டான். பி.டபிள்யூடிக்குச் சொந்த மான டி.பி. அது.

அவன்கீழ் வேலை பார்க்கும் செக்ஷன் ஆபீஸர், ப்யூன், கண்ட்ராக்டர், டி.பி. வாட்ச்மேன் எல்லோரும், அவர்கள் வருவதற்கு முன்னதாகவே அங்கு காத்திருந்தார்கள்.

"அம்மா தனியா இருக்காங்க...அந்தண்டை இந்தண்டை போகாம வாசல்லியே இருந்து பார்த்துக்க! கூப்பிட்டா என்னான்னு கேளு!"

வாட்ச்மேன் தலையாட்டினான்.

"எங்க வீட்டிலேருந்து ஸ்பெஷலா சாப்பாடு பன்னண்டு மணிக்கு வந்திடும் சார்..அம்மா சாப்பாடு பத்தின கவலை உங்களுக்கு வாணாம் சார்!"

கண்ட்ராக்டர் தன் பங்கு வேலையை செவ்வனே செய்யத் துடித்தார்.
அவன் உள்ளே போனான்.

“கண்ட்ராக்டர் வீட்டுலேருந்து சாப்பாடு வந்துடும்...இங்க வாட்ச்மேன் இருக்கான், ஏதாவது வேணும்னா கேளு. ஐ வில் ட்ரை டு கம் ஆஸ் ஏர்லி ஆஸ் பாஸிபிள்! கதவை வேணா தாள் போட்டுண்டு கொஞ்சம் தூங்கப்பாரு..வரட்டுமா?"

யாரும் பார்க்கவில்லை என்று ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு. மனைவியின் கன்னத்தில் செல்லமாய் முத்தம் கொடுத்துவிட்டு, அவன் வெளியே போனான்.
ஜீப் புறப்பட்டுப் போய்விட்டது.

வேலியோரத்தில் இருந்த கதவைச் சார்த்தின வாட்ச்மேன், தோட்டத்தைக் கூட்டத் தொடங்கினான்.

வராந்தாவில் நின்று அவள் சுற்றிலும் வேடிக்கை பார்த்தாள்.

ஓடு வேய்ந்த கட்டிடம் அது. சுற்றி கன்னாபின்னா என்று பெரிய தோட்டம்! பெரியபெரிய வேப்ப மரங்கள்..அதன் நிழலில் சரியாக வளராத பொணப்பூச் செடிகள். வரிசையாய் ஓரத்தில் பதித்திருந்த செங்கற்கள் புதுசாய் வெள்ளை அடிக்கப்பட்டிருந்தன. எந்த முக்கிய மனிதர் வந்துபோனாரோ!

டி.பி.யின் இடதுபக்கம் ஒரு வாதாம் மரம். அதன் பக்கத்தில் புஸ்ஸென்று மனோரஞ்சிதப் புதர்.

பூ இருக்குமோ? அவள் இறங்கிப் போய் அதை இரண்டு முறை சுற்றி வந்தாள்.

"இப்பப் பூக்காதுங்க...இன்னும் நாள் போவணும்!" வாட்ச் மேனின் அசட்டுச் சிரிப்பு அவளுக்குப் பிடிக்கவில்லை. இவனை யார் கேட்டா

மறுபடி வராந்தாவில் ஏறி, அறையை அடைந்து, கதவைச் சார்த்தித் தாள் போட்டாள்.

அறை பெரிதாய் இருந்தது. ஒரு இரும்புக்கட்டில், மெத்தை, மரமேஜை, நாற்காலி, மூலையில் மணல், அதில் குடிதண்ணீர்ப் பானை. விட்டத்திலிருந்து நீளமான கம்பியில் தொங்கின ஃபேன்..

பின்னால் பாத்ரூம். பைப் இல்லை, தகர ட்ரம்மில் தண்ணீர் இருந்தது. ஒரே பாசி நாற்றம். பாத்ரூமுக்கு இந்தப் பக்கம் சின்ன வராந்தா.

க்ரில் போட்ட சுவர் இடுக்கு வழியாக, பின்தோட்டத்தை அவள் பார்த்தாள்.

தூரத்தில் ஒரு குடிசை தெரிந்தது. வாட்ச்மேன் குடிசையா? ஆள் அரவமே இல்லையே? கல்யாணம் ஆகவில்லையோ? பார்த்தால் வயசானவனாய்த் தெரிகிறானே? ஒருவேளை பெண்டாட்டி செத்துப்போய்விட்டாளோ? அப்படியானால் குழந்தைகள் இருக்குமே?

வாட் நான்ஸென்ஸ்! எவனுக்குக் கல்யாணமானால் என்ன, குழந்தைகள் இருந்தால் என்ன, பெண்டாட்டி செத்தால் என்ன! வொய் ஷுட் ஐ இன்டல்ஜ் இன் ஸச் குட் ஃபார் நத்திங் திங்கிங்?

அவள் பார்வை அங்கிருந்த ஒரு கிணற்றிடம் போயிற்று. கிராமங்களில் காணப்படுவது போன்ற பெரிய கிணறு...குட்டைக் கைப்பிடிச்சுவர். மேல்பூச்சு இல்லாமல் செங்கல் தெரிய நின்றது.

அவள் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே நீலமும், ப்ரவுனும், கறுப்பும் கலந்த பறவை அந்தச் சுவரில் வந்து அமர்ந்தது. மூக்கு நீளமாய். அது என்ன பறவை? ஓ யெஸ், மீன்கொத்தி இல்லை? சின்னவயசில் பாடப்புத்தகங்களில் பார்த்த படம் இப்படித்தானே இருந்தது?

சுவர்மேல் இருந்த பறவை ஒரு க்ஷண காலத்தில் கிணற்றுக்குள் பறந்தது.
குட்னஸ்! விழுந்துடுத்தா என்ன?

இருபது வினாடிகள் கூட நகர்ந்திருக்காது..

'சர்ர்' என்று மேலே வந்து சுவர்மேல் அமர்ந்து, வாயில் கவ்வியிருந்த சின்ன மீனைக் காலில் பிடித்து உண்ணத் தொடங்கியது.

அட எமனே! கிணற்றுக்குள் டைவ் அடித்து மீனைக் கொத்தினதும் சாமர்த்தியமாய் வெளியே வந்துவிட்டதே! கிணறு ரொம்ப ஆழமில்லையோ?

அடுத்து பத்து நிமிஷங்களுக்கு, மறுபடி இரண்டு முறைகள் கிணற்றில் டைவ் அடித்து, தன் இரையைக் கொண்டுவந்த பறவை, மூன்றாம் முறை இரையை உண்ணாமல் கவ்வியவாறே பறந்து போனது. வயிறு ரொம்பிவிட்டதா? இல்லை, குஞ்சுக்காகக் கொண்டு போகிறதா?

திரும்ப அது வரும் என்று கொஞ்ச நேரம் நின்று பார்த்து விட்டு ஏமாற்றத்துடன் அவள் அறைக்குத் திரும்பினாள்.

மணி என்ன என்று மணிக்கட்டைப் பார்த்தபோது கடிகாரம் நின்றிருப்பது புரிந்தது.

டாமிட்! மணி என்ன இருக்கும்? பதினொன்று? கிட்டத்தட்ட பன்னிரெண்டு? வாட்ச்மேனுக்குத் தெரிந்திருக்குமோ? கூப்பிட்டுக் கேட்கலாமா?

மணி என்னவானால் என்ன? தெரிந்துகொண்டு என்ன பண்ணப் போகிறோம்?
அப்போதுதான் அவளுக்கு போர் அடிக்கத் தொடங்கியது.

கணவன் பேச்சைக் கேட்டுக்கொண்டு வீட்டிலேயே இருந்திருக்கலாமோ?
வாட்ச்மேனை அனுப்பி, கிட்டத்தில் ஏதாவது பத்திரிகை கிடைக்குமானால் வாங்கிவரச் சொல்லலாமா? இன்று என்ன கிழமை? செவ்வாய்? ஒரு மாகசின் வரும் நாளும் இல்லை.

வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த தினப்பத்திரிகையைப் பிரித்தாள்.
பிரதமர் படமும், ஜவஹர் நகரில் நடந்த காங்கிரஸ் கூட்டப் பேச்சுக்களும் பிரசுரமாயிருந்தன.

தலைக்குத் தலை பேசுகிறார்களே, இதில் எத்தனை பேர் ஆத்மார்த்தமாய் நடைமுறையில் தாங்கள் பேசும் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறார்கள்? முக்கால்வாசிப் பேர் வேஷதாரிகள்... ஹிப்பாக்ரட்ஸ்!

மணி என்ன இருக்கும்?

கைப்பையிலிருந்து ஒரு சிக்லெட்டைப் பிரித்து வாயில் போட்டு மெதுவாக மென்றவள், நாற்காலியில் அமர்ந்தவாறே ஜன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தாள்.

நேர் எதிரில் வாதாம் மரம் இருந்தது. பெரிய மரம்...இலை ஒவ்வொன்றும் பட்டை பட்டையாய் பச்சென்று இருந்தது.

சின்ன வயசில் சிகப்பு வாதாம் பழத்தைத் தின்று. கொட்டையை உடைத்துப் பருப்பையும் சுவைத்தது நினைவுக்கு வர, எழுந்து ஜன்னலிடம் போய் மரத்தில் பழங்கள் இருக்கின்றனவா என்று அண்ணாந்து பார்த்தாள். ம்ஹூம்...நிறைய வெள்ளைப் பூக்களும், சின்னச்சின்ன பச்சைக் காய்களும்தான் தெரிந்தன.

அருகாமையிலிருந்து மரத்தைப் பார்க்கையில் மேலிருந்து கறுப்புக் கட்டெறும்புகள் சாரிசாரியாய்க் கீழே இறங்குவது தெரிந்தது.  குண்டுகுண்டாய் எறும்புகள் கொழுத்திருந்தன.. கடித்தால் ரத்தம் வருவது நிச்சயம்.

மரத்தின் அடிவாரத்தில் அவலட்சணமான ஓணான் உட்கார்ந்திருந்தது.

நன்றாய்க் குடித்த கிழவன் மாதிரி தலையை ஆட்டி, மார்பைத் தாழ்த்தி, மேலே நிமிர்த்தி, கீழே வரும் கட்டெறும்புகளைக் கிட்ட வரும்போது லபக்கென்று இருந்த இடத்திலிருந்தே அது விழுங்கியது.

மக்கு எறும்புகள்! வலியப்போய் ஓணான் வாயில் விழுகிறதே! மரத்துக்கு அந்தப் பக்கம் போகக்கூடாது? தனக்கு முன்னால் போன எறும்பை ஓணான் விழுங்குவதைப் பார்த்துக் கூடவா பின்னால் வருவதற்குத் தெரியவில்லை?
ஓணான் ஒரு எறும்பை விழுங்க எடுத்துக்கொள்ளும் நாழிகையில், அதைத் தாண்டும் அடுத்த எறும்பு தப்பித்தது. தான் மாட்டிக்கொள்ள இருந்ததோ. குருட்டு அதிருஷ்டத்தில் தப்பிப்பதோ, அந்த மட எறும்புக்குப் புரியவில்லையே!
இருந்த இடத்தை விட்டு அசையாமலேயே தன் வயிறு முட்ட விருந்து உண்ணும் ஓணான்மேல் அவளுக்குக் கோபம் வந்தது. மேஜை மேலிருந்த தினசரியைக் கொஞ்சம் கிழித்து ஒரு உருண்டையாக்கினாள். ஜன்னல் வழியாக ஓணான்மேல் எறிந்தாள்.

காகித உருண்டை குறி தவறி மரத்தை விட்டுத் தள்ளிப்போய் விழுந்தது.

இன்னொரு உருண்டை எறிந்தாள். இது ஜன்னல் கிட்டத்திலேயே விழுந்துவிட்டது. இன்னொன்று.-இன்னொன்று... ஒன்றுகூட ஓணான்மேல் படவில்லை.

எறும்புகளுக்கு அப்படி சாகத் தலையெழுத்து என்றால் வொய் ஷுட் ஐ பாதர்!
அவளுக்குச் சலித்துவிட்டது. ரொம்ப நாழிகையாய் நிற்பதால் கால்கள் வலித்தன. திரும்ப நாற்காலியில் உட்கார நினைத்துத் திரும்பினபோது, வாட்ச்மேன் யாருடனோ பேசுவது கேட்கக் கதவைத் திறந்தாள்.

கண்ட்ராக்டர் வீட்டிலிருந்து அவளுக்குச் சாப்பாடு வந்திருக்கிறதாம்.

"அப்படி மேஜை மேல வெச்சிட்டுப் போகச்சொல்லு"

அவர்கள் போனதும், மறுபடி கதவைத் தாளிட்டுக்கொண்டு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டாள்.

அடடா...மணி என்னன்னு அந்தப் பையனைக் கேட்டிருக்கலாமே! கையில் வாட்ச் இருந்ததே!

இலையை விரித்துத் தண்ணீர் தெளித்துவிட்டு, காரியரைக் கழட்டினாள்.
செக்கச் செவேலென்று குழம்பு, ரசம், கூட்டு, வாழைக்காய்க் கறி, உருளை சிப்ஸ். அது என்ன பாயசமா? தயிர்சாதம். நாட் பேட்!

சாப்பிடத் தொடங்கினதும்தான் எல்லாவற்றிலும் தொண்டையை அறுக்கும் காரமும், பூண்டும் இருப்பது புரிந்தது. அவளுக்குப் பூண்டு பிடிக்காது. தனி சிப்ஸை சாப்பிட்டாள். பிறகு தயிர்சாதம்...ஒரே புளிப்பு! அரைகுறையாய் சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணிவிட்டு எழுந்துவிட்டாள்.

வாட்ச்மேன் வந்து டேபிளை சுத்தம் செய்துவிட்டு, "நான் சாப்பாட்டுக்குப் போயிட்டு நொடியிலே வந்துடறேம்மா...” என்று சொல்லிப் போனான்.
கதவைத் தாளிட்டுக்கொண்டு அவள் படுத்தாள்.

தலையணையிலிருந்து எதோ நாற்றம். மூக்கைச் சிணுங்கிக் கொண்டாள்.
யார் படுத்திருந்ததோ!

கையோடு கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் கூடையிலிருந்து டவல் ஒன்றை எடுத்துத் தலைகாணி, படுக்கை இரண்டிலும் சேர்த்து விரித்தாள்.

மறுபடி படுத்தாள். நௌ இட் ஈஸ் பெட்டர்-நாத்தம் தெரியலை.

கண்களை மூடிக்கொண்டு தூங்க முயற்சி செய்தாள். வீட்டில் மயக்கும் தூக்கம் இங்கு வரமறுத்தது.

வாட்ச்மேன் வந்துவிட்டானோ? ரொம்ப அத்துவானமான இடம்...'ஹோ' என்று நிசப்தமாக இருக்கிறதே! அவர் எப்போது வருவார்?

கண்களை மூடிக்கொண்டாள். நௌ ஐ ஷுட் ஸ்லீப்...

'கக்..கக். கக். கக்'

அரைத் தூக்கத்திலிருந்த அவளை முதலில் அந்த சப்தம் கவரவில்லை.

'கக்...கக்..கக்...கக்

இரண்டாவது தடவை ஒலித்ததும் அவள் திடுக்கிட்டுக் கண்களைத் திறந்தாள்.

'கக்கக் கக் கக்'

வாட் எ ஃபன்னி நாய்ஸ்! எங்கேயிருந்து வரது?

'கக்...கக்..கக்...கக்... இப்போது அமைதியினூடே சப்தம் கொஞ்சம் பெரியதாகவே கேட்டது.

சுற்றுமுற்றும் பார்த்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எழுந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தாள். பாத்ரூம், வராண்டாவில் பார்த்தாள். அவளுக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது.

கக்கக்..கக்கக்...'

ஒரே சீராய் விட்டுவிட்டு என்ன சப்தம் இது? வாட்ச்மேன் வந்துவிட்டானோ?
எட்டிப் பார்த்தவரையில் காணோம். மறுபடியும் படுக்கை யில் உட்கார்ந்தாள்.

'சுக்...கக்...கக்...க...' சப்தம் அருகிலேயே ஒலிப்பது தெளிவானது.

எங்கே எதனால்? தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அறையைச் சுற்றி நிதானமாய்ப் பார்த்தாள்.

சுதவுக்கு மேல் வெள்ளையாய், பெரிசாய் இல்லாமல், சின்னதாய் இல்லாமல், நடுத்தர சைஸில் ஒரு பல்லி இருப்பது தெரிந்தது. இந்தப் பக்கம் லைட்டுக்குப் பக்கத்தில் அதே மாதிரி இன்னொன்று..

'கக்கக் கக்கக்கூ'

சப்தம் லைட்டிடமிருந்துதான் வருகிறதைப்போலத் தெரிந்தது.

லைட் பல்லி வாலை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பாம்பு போல வளைத்துவளைத்து ஆட்டி 'கக்கக்..சுக்..சுக்..." என்று கத்துவது அதன் அசைகிற தாடை மூலம் அவளுக்குப் புரிந்தது.

பல்லி கத்துகிறதா? கொஞ்சம் நிம்மதியாயிற்று.

பட்டிணத்தில் பல்லி கத்திக் கேட்டதுண்டே.ஒரு தடவை சுத்தும்,

அவ்வளவுதானே! இப்படி விடாமல் கத்திக் கேட்ட தில்லையே!

லைட் பல்லி இரண்டு எட்டு முன்னேறியது...மறுபடி வாலைப் பாம்பு போல நெளித்தது...கத்தியது...

பல்லிக்கு உடம்பு சரியில்லையோ? வயிற்றை வலிக்கிறதோ?

கதவுப் பல்லி நகரவேயில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் கதவுப் பல்லியை நோக்கி லைட் பல்லி இதே ராகம், வேகத்துடன் முன்னேறியது.

சண்டைக்குப் போகிறதா? பதுங்கிப் பதுங்கிப் பாய்கிறதா?

அவளுக்கு வேடிக்கையாக இருந்தது. 'கப்'பென்று பாய்ந்து சண்டை போடவேண்டியதுதானே? எதற்காக இந்தக் கத்தல், வாலாட்டல், பதுங்கல்?
நேரம் ஊர்ந்தது.

லைட் பல்லி கதவுப் பல்லியை நெருங்கநெருங்க அவளுக்கு சுவாரஸ்யம் அதிகமாகிப் போனது. ஆயிற்று, இரண்டும் நெருங்கி விட்டன.

கதவுப் பல்லி அசையவில்லையே?

லைட் பல்லி இன்னும் நெருங்கியது...மீண்டும் பாட்டு, வாலாட்டல்.

ரொம்பரொம்ப கிட்டே வந்துவிட்டது. தொடுகிற அளவுக்கு.

திடீரென்று பெரிசாய் லைட் பல்லி கத்தியது. ஒரே தாவல்! ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டன. ராகம் இல்லை. வாலாட்டல் இல்லை. ஒன்றுமில்லை. அமைதி,

ஆணும் பெண்ணுமா? இதையா இத்தனை நாழிகை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்?

அவமான உணர்ச்சியுடன் அவள் தலையைத் திருப்பிக் கொண்டபோது வாசலில் ஜீப் சப்தம் கேட்டது.

- கணையாழி, 1977

============================================================================================

வாட்ஸாப்பில் வந்த சுவாரஸ்யமான அறிவுரைகள் யோசனைகள்!


🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️

_*🪷🦜🪷 வாழ்க்கையில் என்றென்றும்  அமைதி நிலைத்திருக்க எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளுங்கள்.🪷*_

_*🪷🦜🪷 உங்களை யார் வெறுக்கிறார்களோ, உங்களை யார் விமர்சனப்படுத்துகிறார்களோ, உங்களை யார் புறக்கணிக்கிறார்களோ, உங்களை யார் அவமானப்படுத்துகிறார்களோ, அவர்கள் முன்பு வாழ்ந்து காட்டுங்கள், வென்று காட்டுங்கள். அது தான் உண்மையான வாழ்க்கை.🪷*_

_*🪷🦜🪷 நல்லதாக அன்பாக கனிவுடன் சொல்லப்படும் வார்த்தைகள் ஏற்படுத்தும் தாக்கத்தை உலகில் எதைக்கொண்டும் ஈடு செய்ய முடியாது.🪷*_

_*🪷🦜🪷 வெற்றிக்குத்தான் எல்லைகள் உண்டு. முயற்சிக்கு எல்லைகள் கிடையாது.🪷*_

_*🪷🦜🪷 வானம் என்றால் ஆயிரம்  நட்சத்திரங்கள்  வரும். வாழ்க்கை என்றால் ஆயிரம்  துன்பங்கள்  வரும். சூரியன் வந்தால் நட்சத்திரங்கள் மறைவது போல தன்னம்பிக்கை இருந்தால் துன்பங்கள் அனைத்தும் மறந்து போகும்.🪷*_

_*🪷🦜🪷 எப்படி உழைப்பதென்று பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். ஏன்  சேமிக்க வேண்டும் என்று அவர்கள் தானாகவே கற்று கொள்வார்கள்.🪷*_

_*🪷நல்லதே நினை.🪷*_

_*🪷நல்லதே நடக்கும்.🪷*_

_*🪷வாழ்க வளத்துடன்🪷*_

_*🪷🦜🪷 அனைவருக்கும்  காலை வணக்கங்கள்  பல.🪷*_

_*🪷🦜🪷 இன்றைய நாள் இனிய நாளாக அமைய இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.🪷*_

_*🪷🦜🪷  தங்களைச் சார்ந்த  அனைவரும் அவரவர்  குலதெய்வத்தின்   அருளுடன்  கூடிய  சகல சம்பத்தும் பெற்று இன்புற்று வளத்துடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என இறைவனிடம்  பிரார்த்தனை செய்கிறோம்.🪷*_

☘️🪷☘️🪷☘️🪷☘️🪷☘️🪷​

36 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இந்த நாள் இனிதாக அமைய வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

    பதிலளிநீக்கு
  2. சிவசங்கரி அவர்களின் கதையா. சுஜாதா கதையா என்று ஒரு நிமிடம் குழம்பிவிட்டேன்.:) ஏனோ திக் திக் கதையோ என்று தோன்றியது. வெகு இயல்பான ஓட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவசங்கரியேதான்... நிறைய அவர் முத்திரைகள் இருப்பது என்னவோ நிஜம்.. படிக்கும்போது அதை ஒரு தினுசான புரிந்து கொள்ளலாம்!!!

      நீக்கு
  3. ''_*🪷🦜🪷 அனைவருக்கும் புதன் பகவான் அருளுடன் கூடிய இனிய புதன் கிழமை காலை வணக்கங்கள் பல''''''''''' புதனா? இந்தியாவில் செவ்வாய் தானே மா.. ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்றோ வந்தததை அப்படியே எடுத்து வைத்திருந்தேன். அப்படியே வெளியிட்டு விட்டேன்! இப்போது மாற்றி விட்டேன். நன்றி அம்மா.

      நீக்கு
  4. முதலில் அவன் வந்து, வளர்ச்சி பெறாத அந்த ஊரில் கிடைத்த விதத்தில் சுமாரான வீட்டை அமர்த்தினதும், அவள் வந்து சேர்ந்துகொண்டாள்.
    பட்டிணத்து வேலை மாதிரி இல்லை இங்கு. சதா இன்ஸ்பெக்ஷன், டூர். இரவு தங்கும் ஜோலி இல்லாவிட்டாலும், பல சமயங்களில் அவன் காலையில் புறப்பட்டுப் போனால் இருட்டி விடும் திரும்ப.'' எங்கள் இருவரின் ஆரம்பகாலப் புதுக்கோட்டை வாழ்வை அப்படியே நினைவுக்குக் கொண்டுவந்தது.

    பதிலளிநீக்கு
  5. சகஜமான எழுத்தில் ஒரு பெண்ணின் மனதைப் பூரண்மாகக் கொண்டுவந்து விட்டார் சிவசங்கரி. அந்த நாட்களில் பைத்தியமாகத் தான் படித்தோம். இப்பொழுதும் அவரின் பாலங்கள் நாவலை அடிக்கடி படிப்பேன். அருமையாக இருந்தது ஶ்ரீராம். மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா. என் அக்காவுக்கும் சிவசங்கரி மிகவும் பிடிக்கும். உங்கள் பதிலைப் பார்த்து விட்டு அவர் பாலங்கள் கிடைக்குமா என்று கேட்கப்போகிறார்!

      நீக்கு
  6. பொன் மொழிகளும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  7. வாட்ச்மேன் ஒரு வில்லனாக மாறி ஏதோ அக்கிரமம் செய்து விடுவாரோ என்கிற பயம் வருகிறது - அதாவது எனக்கு வந்தது,. இது ஊடகங்கள் நம்மை உருமாற்றி வைத்ததன் வெளிப்பாடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. ஹா... கடைசியில் பார்த்தால் கதையில் ஒன்றுமே இல்லை!

      நீக்கு
  8. சிவசங்கரி என்னவோ சொல்ல வருகின்றார்...

    இயல்பான கதை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்காயம் போல..

      உரித்துப் பார்த்தல் ஒன்றும் இருக்காது!

      நீக்கு
  9. பல்லியின் சத்தம் பிடிபடாமல் பெண்ணொருத்தி இருந்திருப்பாளோ...

    இ. ந. ஆளு படத்தில் பசுவின் குரல் அறியாதது போல...

    பதிலளிநீக்கு
  10. பல்லியின் கூடல் கண்ணில் பட்டால் அவமானமா?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையில் வரும் அந்தப் பெண்ணுக்கு அப்படித் தோன்றியிருக்கிறது!

      நீக்கு
  11. சிவசங்கரியின் எழுத்துக்களைப் படிச்சுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சமீபத்தில் ஆதி வெங்கட்டிடம் இருந்து "பாலங்கள்" வாங்கிப் படிச்சேன். அது இருக்கும் இரண்டு வருஷங்கள் முன்னர். விகடனில் வெளிவந்த பாலங்களில் படித்த ஒரு சில அத்தியாயங்கள் இந்தப் புத்தகத் தொகுப்பில் இல்லை எனத் தோன்றியது. முக்கியமாய்க் கல்யாண பக்ஷணம் செய்யும் போது பெண்களுக்குள் நடைபெறும் பேச்சு வார்த்தைகள், பின்னர் அம்பேரிக்காவில் அறுபதுகளிலேயே போய்க்குடியேறிய மைதிலியின் வாழ்க்கை ஆகியவை இந்தப் புத்தகத் தொகுப்பில் இடம் பெறவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் விட்டு விட்டு பதிப்பித்தால் அது நியாயமே இல்லை.  என் அக்கா பாலங்களும் தரையில் இறங்கும் விமானங்களும் கேட்டாள் என்று பி டி எப் அனுப்பி இருக்கிறேன்.

      நீக்கு
  12. தனிமையில் இருக்கும் ஒரு பெண்ணின் உணர்வுனு எடுத்துக்கலாம். மாமாவோடு அவ்ர் ஆடிட்டுக்குப் போகையிலே நானும் சில சமயங்கள் போவேன். அப்போதெல்லாம் இம்மாதிரிக் கிராமங்கள்னு கிடையாது. சகல வசதிகளும் உள்ள இன்ஸ்பெக்ஷன் பங்களா என்னும் கிட்டத்தட்ட 5 நக்ஷத்திர ஓட்டல் போன்ற ஒன்றின் அறை "சூட்" என்பார்கள். ஆகவே தொலைக்காட்சி எல்லாம் இருக்கும். ஒண்ணும் தெரியாது. மத்தியானம் சாப்பிட மாமா ரூமுக்கு வந்துடுவார். இரண்டு மணிக்கே வருவார் என்பதால் அப்புறமாப் போக மாட்டார். ஏனெனில் ராணுவ வீரர்களுக்குக் காலம்பரவே வேலை ஏழு மணிக்கு ஆரம்பிச்சுடும் மதியம் இரண்டு மணிக்கப்புறமா அவங்களுக்கு நான்கு, ஐந்து வரை ஓய்வு. பின்னர் மாலை பரேட் என இருக்கும். அந்தச் சமயம் ஆடிட் காரங்க அலுவலகத்தில் ஆடிட் போய் வந்த விபரங்களை ரெகார்டாக எழுதணும். அதை எல்லாத்தையும் முடிச்சுட்டு வந்துடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே..  கிட்டத்தட்ட இதே நிகழ்வா இருக்கே...

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. கதை அருமை முன்பு படித்து இருக்கிறேன். சிவசங்கரியின் கதைகள் எல்லாம் முக்காவாசி படித்து இருப்பேன் என்றே நினைக்கிறேன்.
    ஆள் இல்லா இடம் ஆரவாரம் இல்லா ரோடு அக்கம் பக்கம் சத்தம் இல்லாமல் ஊர் அடங்கி விட்டால் தனிமையில் பொழுதை போக்குவது மிகவும் கஷ்டம்.

    திருவெண்காட்டில் இருந்த போது சார் மாயவரத்திற்கு பொருட்கள் வாங்க போனாலும் , கல்லூரி ஆசிரிய சங்க மீட்டிங் என்று சென்னை போனாலும் இப்படித்தான் சின்ன சத்தங்களும் நம் கவனத்தில் வரும்.

    முன் வாசல் லைட் போட்டு இருப்பேன், ஆந்தை படிகளில் ஏறி வந்து பூச்சியை பிடிக்கும் சத்தம் கூட நன்றாக கேட்கும். கடைசி பஸ்ஸில் தான் பெரும்பாலும் வருவார்கள். 7.30 க்கு எல்லாம் ஊரே அடங்கி விடும் அமைதியாக இருக்கும்.

    ஆந்தையின் அலறல், நாயின் குரைப்பு, சுவற்று கோழியின் சத்தம் எல்லாம் துல்லியமாக கேட்கும். ஜன்னல் வழியாக அகோரமூர்த்தி கோயில் பிரகாரம் தெரியும் கோயிலில் கோபுர விளக்குகள் ஒளியில் மழை காலங்களில் மழை பெய்வது காற்றால் அவை அழகாய் கோயிலை வருடி செல்வது எல்லாம் பார்க்க அழகாய் இருக்கும்.

    முன் வாசல் கம்பி கதவு வழியாக பார்த்து கொண்டு இருப்பேன், படிகளில் ஏறி வரும் காலடி சத்தம் கேட்டதும் ஓடி வந்து " கதை திறந்து அப்பாடாவந்து விட்டீர்களா "என்று கேட்பேன்.
    அப்போது தொலைகாட்சி பெட்டி இல்லாத காலம் இரவு உணவை முடித்து எல்லோரும் (மடவிளாக மக்கள்) தூங்கி விடுவார்கள் விரைவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவ்வளவு தனிமையா?  அந்த கோவிலின் ஈஸ்வரர் பெயரே வேறு பயமுறுத்துகிறதே...  

      நீக்கு
    2. பின்னூட்டமே ஒரு சின்னஞ்சிறு கதையைப் படித்ததுபோலிருக்கிறதே..

      நீக்கு
  15. வாட்ஸாப்பில் வந்த சுவாரஸ்யமான யோசனைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  16. சிவசங்கரிக்கு பக்தர்கள் அதிகம்!

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!