17.10.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 42

  

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 42 

இராமானுஜரின் சித்தி ஸ்ரீதேவி அம்மாளுக்கும், கமலநயன பட்டருக்கும் திருக்குமாரராக அவதரித்தவர் கோவிந்தப் பெருமாள். இவரும் யாதவப் பிரகாசரிடம் இளையாழ்வாரோடு கல்வி கற்றவர். காசிக்குச் சென்றிருந்தபோது இராமானுஜரைக் காப்பாற்றிய பிறகு, கங்கையில் நீராடும்போது சிவலிங்கம் இவருடைய கையில் அகப்பட, உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்ற பெயர் பெற்று, பிறகு காளஹஸ்தியில் பொறுப்பு வகித்துக்கொண்டிருந்தார். 

இப்படி இருக்கும்போது அவரது தாய்மாமாவான பெரிய திருமலை நம்பி, இராமானுஜர் தம்மை கோவிந்த பட்டரை வைணவத்திற்குத் திருப்ப வேண்டும் என்ற வேண்டுகோளை அவருக்கு அனுப்ப, தாமும் அவ்வாறே சிந்தித்திருந்ததால், காளஹஸ்தி நோக்கிப் பயணமானார் பெரிய திருமலை நம்பி. 

தம்முடன், இராமானுஜர் அனுப்பியிருந்த ஸ்ரீவைணவரையும் மற்றும் தம்முடன் இருந்த சில சிஷ்யர்களையும் கூட்டிக்கொண்டு சென்றிருந்தார். காளஹஸ்தி அருகே ஒரு குளக்கரையில் தங்கியிருந்தபோது, உள்ளங்கை கொணர்ந்த (குளிர்ந்த என்றும் குறிப்பிடுகின்றனர். பாணலிங்கத்தால் உள்ளங்கை குளிர்ந்தது என்று எடுத்துக்கொள்ளலாம்) நாயனார், ருத்ரனுக்கு அபிஷேகம் செய்ய குடமெடுத்துக்கொண்டு வந்தார். 

அவரைப் பார்த்த பெரிய திருமலை நம்பி, 

கொன்றைச் சடைமுடியானைக் குளிர நீராட்டினால்

இன்றுனக்கு உண்டாம் பயன் என்? 

என்று சொன்னார். அவரும் அந்தப் பாசுரத்தைக் கேட்டுப் புன்முறுவல் செய்து பெரிய திருமலை நம்பியைப் பார்த்துவிட்டு அகன்றார். 

பிறகு பெரிய திருமலை நம்பி, மீண்டும் திருமலைக்குச் சென்றுவிட்டார்.  (இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் உண்டு. உறவு, நாம் பெரியோம் என்ற எண்ணத்தில் யாரையும் நம்முடைய வழிக்குக் கொண்டு வருவது சரியல்ல. தாய் மாமன் என்பதால் அந்த உரிமையில், என்னுடன் வந்துவிடு என்று சொல்லியிருக்கலாம், இல்லை கட்டளை பிறப்பித்திருக்கலாம். அப்படிச் செய்வோரல்ல பெரியோர். தன் மருமகன் மனதில் சிந்தனையைத் தூண்டும் சொல்லைச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டார்) 

இன்னும் சில காலம் கழித்து, தன் சீடர்களுடன், காளஹஸ்தி வந்த பெரிய திருமல நம்பி, அந்தக் குளக்கரையில் இருக்கும் ஒரு ஆலமரத்தின் நிழலில் எழுந்தருளியிருந்தார். அப்போது குடத்துடன் உள்ளங்கை குளிர்ந்த நாயனார் வருவதைக் கண்டு, அவர் வரும் பாதையில் தம்முடைய பரமாச்சார்யரான ஆளவந்தார் அருளிய ஸ்தோத்ர ரத்நத்திலிருந்து 

ஸ்வாபா4விக, அநவதி4க அதிஶய, ஈஶித்ருத்வம் 

என்கிற ச்லோகத்தை ஓலை நறுக்கில் எழுதி அவர் வரும் வழியில் போட்டுவிட்டு ஒதுங்கிக்கொண்டார். அவரும் இந்த ஓலையை எடுத்துப் படித்துப் பார்த்து கீழே போட்டுவிட்டு, தீர்த்தம் எடுத்துவர விரைந்தார். திரும்பி வரும்போது அந்த ஓலை நறுக்கை மீண்டும் எடுத்து, அதன் பொருளை ஆராய்ந்துகொண்டு அருகில் வந்த பெரிய திருமலை நம்பியிடம், தங்கள் கரத்திலிருந்து நழுவிய ஓலை இதுதானா என்று கேட்டார். எங்களிடமிருந்து எதுவும் நழுவுவதில்லை என்று அதற்கு பதில் சொன்னார் நம்பி. நீங்கள் எல்லோரும் எதற்காக இங்கு சேர்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்க, இங்கிருக்கும் எங்கள் சொத்தைக் கொண்டுபோக வந்தோம் என்று பதிலிறுத்தார். அதன் பிறகான கேள்வி பதில்களின்போது, கடைசியில் பரம்பொருளை ஆராய்வது பற்றிய பேச்சு வந்த போது பதில் சொல்ல இயலாது உள்ளங்கை குளிர்ந்த நாயனார் திரும்பத் தன் இருப்பிடத்திற்கே போய்ச் சேர்ந்தார்.. ஆனாலும் அவர் மனதில் சலனம் தோன்ற ஆரம்பித்துவிட்டது. 

மூன்றாவது முறை பெரிய திருமலை நம்பி, திருவேங்கடமுடையானைத் தொழுதுவிட்டு காளஹஸ்திக்கு தன் சிஷ்யர்களுடன் வந்து அருகில் இருந்த சோலையில் தங்கினார். அங்கு தன் சிஷ்யர்களுக்கு திருவாய்மொழியில் வியாக்கியானத்தை அருளிச் செய்துகொண்டிருந்தபோது, பக்கத்திலேயே ஒரு பாதிரி மரத்தில் பூக்களைக் கொய்வதற்காக உள்ளங்கை குளிர்ந்த நாயனார் ஏறியிருந்தார். 

அந்தச் சமயத்தில், திருவாய்மொழி இரண்டாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி ‘திண்ணன் வீடு’ என்று தொடங்கும் பதிகத்திற்கு பொருள் சொல்லிக்கொண்டிருந்தார். நாயனாரும் தமிழறிவு நிரம்பப் பெற்றவர் என்பதால், பூக்கொய்வதை நிறுத்தி பாசுரங்களின் பொருளை மரத்தின் மீதிருந்து கேட்டுக்கொண்டிருந்தார்.  நான்காவது பாசுரத்தில் ‘தேவன் எம்பெருமானுக்கு அல்லால் பூவும் பூசனையும் தகுமே” என்ற வரி வர, நாயனார், மரத்தின் மீதிருந்து குதித்து, பூக்குடலையை எறிந்துவிட்டு, தன் கழுத்திலிருந்த உருத்திராட்ச வடங்களைக் கழற்றிவிட்டு “தகாது தகாது” என்று கூறிக்கொண்டே பெரிய திருமலை நம்பியின் திருவடிகளில் வீழ்ந்தார். 

பெரிய திருமலை நம்பியும், ஆளவந்தாரின் கிருபை படிவதற்குக் குறையில்லை என்று நாயனாரிடம் சொல்லி, இத்தனை நாட்கள் வைணவத்தின் பக்கல் வாராமல் இருந்துவிட்டோமே என்று வருந்தவேண்டாம் என்று ஆறுதல் சொன்னார்.

பாதிரிப் பூக்கள்

இதனைக் கேள்விப்பட்ட காளஹஸ்தி முக்கியஸ்தர்கள் அனைவரும் பெரிய திருமலை நம்பியின் முன் வந்து, எங்கள் கோயிலுக்கு உரியவரை நீங்கள் சொக்குப்பொடி போட்டு மயக்கலாமா? இது நியாயமா என்று கேட்டனர். அதற்கு பெரிய திருமலை நம்பி, நீங்கள் இவரிடமே அதனைக் கேட்டுக்கொள்ளுங்கள் என்று நாயனாரைப் பார்த்தார்.  அவர்கள் “நாயனாரே ஆலயத்துக்கு வாரும்” என்று நிர்பந்தி த்தனர். நாயனார், இனி நான் காளஹஸ்தியை விட்டு நீங்கத் தீர்மானித்துவிட்டேன் என்று சொல்லி கருவுலத் திறவுகோல், மற்றும் இலச்சினை முத்திரை மோதிரம் ஆகியவற்றை அவர்களிடம் திருப்பி கொடுத்தார். 

அப்போது அங்கு வந்த சைவர்களான ஸ்தலத்தார், நீர் நம்பியின் வழியில் திரும்பியதைக் கேள்விப்பட்டு, முன்னர் எங்கள் பிரான் வழிக்கு ஏன் வந்தீர்? இன்று ஏன் திரும்பினீர் என்று கேட்க நிச்சயத்திருந்தோம். ஆனால் காளஹஸ்தியுடையார் எங்கள் கனவுகளிலே வந்து வேத சாஸ்திரங்கள் நலிவுபடும்பொழுது, நாஸ்திகர்களை (வேத த்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை) ஒழிப்பதற்கு யமுனைத்துறைவர் (ஆளவந்தார்), இளையாழ்வார் (இராமானுஜர்) ஆகியோருக்கு உதவியாக கோவிந்தபட்டர் மற்றும் கூரத்தாழ்வான் அவதரித்துள்ளனர். முன்பு கோவிந்த பட்டர், காசியிலேயே வாசம் செய்யலாம் என்று நினைத்திருந்ததால், அதனைத் தவிர்க்க, அவரை நாம் காளஹஸ்திக்கு அழைத்துவந்தோம். அதனால் நீங்கள் அவர் வழியில் குறுக்கிடவேண்டாம் என்று சொன்னார். அதனால் நீங்கள் சென்றுவாருங்கள் என்று உள்ளங்கை குளிர்ந்த நாயனாரிடம் காளஹஸ்தி ஸ்தலத்தார் சொல்லிவிட்டுச் சென்றனர். 

கோவிந்த பட்டரின் (உள்ளங்கை குளிர்ந்த நாயனார்) மனைவியும் நம்பியின் அடிபணிந்து நிற்க, இருவரையும் கூட்டிக்கொண்டு பெரிய திருமலை நம்பி திருப்பதிக்குச் சென்றார். திருமலை அருவிக் குளக்கரையில் கோவிந்தருக்கு செய்யவேண்டிய ஸம்ஸ்காரங்களையும் செய்தருளினார்.

திருக்காளகத்தி, கண்ணப்ப நாயனார் மற்றும் காளஹாஸ்தி நாதர்

கோவிந்த பட்டரும் பெரிய திருமலை நம்பியை ஆச்சார்யராக க் கொண்டு அவருக்கு எல்லாவிதமான கைங்கர்யங்களையும் செய்துவந்தார். ஒருவர் மூலம் தன்னுடைய தம்பியான சிறிய கோவிந்தப் பெருமாளிடம் ‘ஏக ஸ்வாது3, ந பு4ஞ்ஜீத’ என்ற வார்த்தையை அருளினார். அதைக் கேட்டு, சிறிய கோவிந்த ஜீயரும் திருமலைக்கு வந்து, பெரிய திருமலை நம்பியிடம் பணிந்து அவரது சிஷ்யரானார். (எந்த ஒரு சுவையான உணவையும் பொருளையும் ஒருவர் தனித்து அனுபவிக்கக் கூடாது என்று அர்த்தம்) 

இப்படி நடந்த விஷயங்களை ஸ்ரீரங்கத்திற்குச் சென்றிருந்த ஸ்ரீவைஷ்ணவர், இராமானுஜரிடம் விண்ணப்பித்தார். இராமானுஜரும் இது கேட்டு மிக்க சந்தோஷமடைந்தார். 

கோவிந்த பட்டர் பெரிய திருமலை நம்பிக்கு சிஷ்யராக ஆகி திருமலையில் வசிக்க ஆரம்பித்தபோது ஒரு சீடன், தன் குருவிடம் எப்படி நடந்துகொள்வானோ, என்ன என்ன கைங்கர்யங்கள் செய்வானோ, அவை அனைத்தையும் குறைவில்லாமல் செய்தார் கோவிந்த பட்டர். 

இன்று நாம் காணவேண்டிய ஸ்லோகங்கள் பாசுரங்கள், பெரிய திருமலை நம்பி, உள்ளங்கை குளிர்ந்த நாயனாரை வைணவத்திற்குத் திருப்ப உபயோகமானவைகள். 

ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்நத்தில் உள்ள பதினோராவது ஸ்லோகம். ஸ்தோத்ர ரத்நத்தை, வைணவ மதத்திற்கு முக்கியமான பழைமையான வடமொழி கிரந்தமாகக் கொள்வர். 

ஸ்வாபா4விக, அநவதி4க அதிஶய, ஈஶித்ருத்வம்*

நாராயண, த்வயி ந ம்ருஷ்யதி , வைதி3க: க: |
ப்3ரஹ்மா ஶிவஶ், ஶதமக2: (ப்), பரம: ஸ்வராடி3தி*

ஏதே’பி யஸ்ய, மஹிமார்ணவ, விப்ருஷஸ்தே || 

பொருள்:   இயற்கையான, வரம்பில்லாத வியக்கத்தக்க பிரபஞ்சத்தை ஆளும் தன்மை, நாராயணனே.. உன்னிட த்தில் மாத்திரமே உள்ளது. வேதங்களை ஏற்றுக்கொள்ளும் எவரும் இதனை மறுக்கமாட்டார்கள். பெரிய கடல் போன்ற மகிமையை உடையவனே!,  படைப்புக் கடவுளாகிய பிரம்மன், அழிக்கும் கடவுளாகிய சிவன், நூறு அசுவமேத யாகங்களைச் செய்து இந்திர பதவியை அடைந்த தேவேந்திரன், மிகவும் மேலான தேவர்கள் மற்றும் முனிவர்கள் யாவரும், உன்னுடைய கடலில் உள்ள சிறு துளியைப் போன்றவர்கள். 

விளக்கம்: ஸ்வாபாவிக – யாராலும் கொடுக்கப்படாத, இயற்கையான, அநவதிக – எல்லையற்ற, ஈஶித்ருத்வம் – பிரபஞ்சத்தை ஆளும் தன்மை, த்வயி-உன்னிடத்தில், ம்ருஷ்யதி – மறுப்பான். ந ம்ருஷ்யதி – மறுக்க மாட்டான். மஹிமார்ணவ – பெரிய கடல் போன்ற மகிமை, விப்ருஷஸ்தே – சிறு நீர்த்துளிகளைப் போன்றவர்கள் 

இனி, திருவாய்மொழி இரண்டாம் பத்து, இரண்டாம் திருவாய்மொழியில், 4வது மற்றும் 3வது பாசுரங்கள். 

தேவும் எப்பொருளும் படைக்க,*

பூவில் நான் முகனைப் படைத்த,*

தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,*

பூவும் பூசனையும் தகுமே 

பொருள்: பிற தேவதைகளையும், பூவுலகில் மற்ற அனைத்துப் பொருட்களையும் படைப்பதற்காக, தாமரை மலரில் அமர்ந்திருக்கும் பிரமனைத் தன் நாபிக்கமலத்தில் தோற்றுவித்த முழுமுதற் கடவுளான நாராயணனுக்கு மாத்திரமே மலர் கொண்டு அர்ச்சனை செய்வதும் பூசனை செய்வதும் தகுதியானதாகும். 

விளக்கம்: பிரமனையும் படைத்த மூலக் கடவுளைத் தவிர வேறு எவருக்கும் மலர்களிட்டு பூசனை செய்வது தகாது என்று ஆழ்வார் கூறுகிறார். 

இனி இதற்கு முந்தைய 3ம் பாசுரத்தைப் பார்ப்போம். 

ஏறனைப் பூவனைப்* பூமகள் தன்னை,*

வேறின்றி விண் தொழத்* தன்னுள்வைத்து,*

மேல்தன்னை மீதிட* நிமிர்ந்து மண்கொண்ட,*

மால்தனில் மிக்கும் ஓர்* தேவும் உளதே 

பொருள்: இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானையும், தாமரை மலரில் உதித்த பிரமனையும், தன் திருமார்பில் உறையும் திருமகளையும், வேறுபாடுகள் இல்லாமல் தேவர்கள் தொழும்படியாக அவர்களைத் தனது திருமேனிக்குள் அடக்கியிருப்பவன், எல்லா உலகங்களையும் கடந்து வளர்ந்து விண்ணுலகை அளந்து, மகாபலியிடம் மண்ணையும் அளந்துகொண்ட திரிவிக்கிரமன். அளப்பரிய புகழைக் கொண்ட அந்தத் திருமாலைக் காட்டிலும் வேறு உயர்ந்த தெய்வம் உண்டோ? 

விளக்கம்: ஏறனை – ரிஷப வாகனத்தைக் கொண்ட சிவனை,  பூவனை – தாமரைமேல் அமர்ந்திருக்கும் அல்லது தாமரையில் உதித்த பிரமன். ஆழ்வார் சொல்வது, சிவன், நான்முகன், திருமகள் ஆகியோர் அனைவரும் பரந்தாமனான திருமாலின் உடலில் அடங்கியவர்களே. அதனால் திருமாலை விட மேலான தெய்வம் இல்லை என்கிறார்.

இனி நம் பக்கத்தில் கோவிந்த பட்டரைக் கொணர்ந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று இராமானுஜர் நிச்சயித்தார். அது எப்படி நடந்தது என்பதை அதற்குரிய பகுதியில் காண்போம்.

மதுரமங்கலம் ஸ்வாமி எம்பார் (கோவிந்தபட்டர்)

 இனி அடுத்த வாரம் தொடர்வோம்...

= = = = = = = = = = = = =

மனசாட்சியம் - 16 
KGY Raman

செயற்கை நுண்ணறிவு 

விற்றதார் ? கலை பாதியோடு வனத்தில் அழ விட்டதார் ?

வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருக்கும்போது நான் அவ்வப்போது செயற்கை நுண்ணறிவு செயலியுடன் பேசுவது வழக்கம். அப்படித்தான் நேற்று செ நு வுக்கு  ஒரு வினாவை அனுப்பினேன்.

"காய்கள் பெயர் பயன் படுத்திச் செய்த (காளமேகம்) பழம் பாடல். 
"  வெள்ளரிக்காயா விரும்பும் அவரைக் காயா உள்ளமிளகாயா ஒரு பேச்சுரைக்காயா " என்று முடிகிற பாடல் முழுதும் தருக."

இது ஏ ஐ க்கு நான் போட்ட வினா . விடையாக கண்ணதாசன் பாடல் அத்திக்காய் ஆலங்காய் பாடல் முழுமையும் வந்தது. 

செ நு வுக்கு காளமேகம் என்ற சொல் கண்ணதாசன் என்று தவறாக காதில் விழுந்ததா அல்லது கண்ணில் பட்டதா தெரியவில்லை. 

தமிழிலக்கியத்தில் அதிகம் அறியப்படாத , ஆனால் மிகவும் சுவாரஸ்யமான சிலவற்றைப் பற்றி இரண்டு புத்தகங்கள் நான் படித்திருக்கிறேன். இரண்டுமே என் நெருங்கிய நண்பனுக்கு பள்ளியில் பரிசாகக் கொடுத்த புத்தகங்கள். ஒன்று அந்த காலத்தில் எல்லாராலும் நன்கு அறியப்பட்ட தமிழறிஞர்- பேச்சாளர் ரா பி சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய  "தமிழின்பம்". அடுத்தது அதிகம் அறியப்படாத நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை எழுதிய " இலக்கிய இன்பம் ".  தமிழ் அறிஞராக இருந்தாலும் சேதுப்பிள்ளை அவர்கள் இரா. பி என்று இ சேர்த்து தன் பெயரை எழுதியதில்லை. இரா என்ற சொல்லுக்கு இருக்காத என்ற பொருள் வருவது அதற்குக் காரணமாக இருக்கலாம். சரளமான, கேட்பதற்கு இனிய சொல்லோசைமிக்க அவரது தமிழ் எழுத்துக்கள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்ற குறை எனக்கு உண்டு.

இந்த இரண்டில் ஒரு புத்தகத்தில் தான் மேலே நான் குறிப்பிட்டுள்ள " ஒருபேச்சுரைக்காயா" பாடல்வரிகள் சொல்லப்பட்டிருந்தது. எந்த புத்தகம் என்று சரியாக நினைவில் வைத்துக் கொள்ளாதது எனது தவறு. அது பற்றி இப்போது வருந்திப் பயனில்லை.

இதில் இலக்கிய இன்பம் என்கிற நூலில் வேறொரு சுவாரஸ்யம் சொல்லப்பட்டிருந்தது. இதை நான் ஏற்கனவே கூட வேறு எங்காவது உங்களுக்குச் சொல்லி இருக்கக்கூடும். அப்படி உங்களுக்கு ஏற்கனவே நான் சொல்லி இருந்தால் இன்னொரு தடவை சொல்வதற்காக, கூறியது கூறல் என்கிற இலக்கியத் தவறுக்காக மன்னித்துக் கொள்ளுங்கள். இரண்டு முறை கேட்கும் அளவுக்கு இது சுவாரசியமான செய்தி என்றே நான் நினைக்கிறேன்.

ஒரு அரசகுமாரன் வேட்டையாடுவதற்காகக் காட்டிற்குப் போகிறான். இலக்கிய ராஜகுமாரர்களுக்கு நடக்கும் விபத்து அவனுக்கும் நடக்கிறது. காட்டிலே ஒரு வேடுவப் பெண்ணை பார்த்து அவளை மணக்க விரும்புகிறான். தலைநகருக்கு வந்து அரசரிடம் தன் ஆசையைத் தெரிவித்ததும் எதிர்ப்பேதும் சொல்லாத அந்த ஆச்சரியமான அரசர் தன் அமைச்சரை வேடுவர் தலைவனுக்குத் தூது அனுப்புகிறார்.

வேடுவர் தலைவனுக்கும் அமைச்சருக்கும் இடையே நடந்த சம்பாஷணைதான் விசேஷம். 

" ஐயா ! உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. "

"அப்படியா விரைவாகச் சொல்லுங்கள் ! கேட்க மிக ஆவலாக இருக்கிறேன்."

" மிகப்பெரிய இடத்தில் உங்களுக்கு நெருக்கமான சம்பந்தம் கிடைக்க இருக்கிறது." 

" மிகப்பெரிய இடமா? நெருக்கமான சம்பந்தமா ? என்ன சொல்கிறீர் ? சற்று விளக்கமாகச் சொல்லும்." 

" இந்த நாட்டின் அரசகுமாரர் தங்கள் மகளை மணக்க விரும்புகிறார். அதற்கு அரசரும் தன் ஒப்புதலைத் தெரிவித்துவிட்டார். உங்கள் சம்மதத்தைப் பெற வேண்டி என்னை அனுப்பி இருக்கிறார்."  

அமைச்சர் பணிவாக அரசரின் ஓலையை எடுத்துத் தருகிறார். அதைப் படித்த வேடர் தலைவர் கூறிய மறுமொழி தான் கிளைமாக்ஸ். 

"அமைச்சரே! என்ன வார்த்தை பேசினீர் ? அரச குடும்பத்துடன் மகளைக் கொடுத்து சம்பந்தமா ? இதுதான் நல்ல செய்தியா ? யார் அங்கே இந்த ஓலையைக் கிழித்து நெருப்பில் போட்டுக் கொளுத்துங்கள். 

ஓய் அமைச்சரே நன்றாக கேட்டுக் கொள்ளும். கண்ட இடத்தில் பெண்ணைக் கொடுக்க எங்கள் பரம்பரையிலேயே விருப்பம் இருந்ததில்லை. நாங்கள் வெற்றியை வரலாறாகக் கொண்ட வேங்கை மாநகர் வேடவர் குலத்தவர். ஏதோ சிவபெருமான் எங்கள் குலத் தலைவர் காளத்தி வேடரிடம் அவரது எச்சிலை உண்டு கௌரவப்படுத்தினார் என்பதற்காக அவருடைய மகன் முருகப்பெருமானுக்கு எங்கள் வளர்ப்பு மகள் வள்ளியை திருமணம் செய்து கொடுத்தோம். கவனித்துக் கேளும். வளர்ப்பு மகள். அது கூட பெற்ற மகளைக் கொடுக்கவில்லை. 

பெரிய இடம் நல்ல இடம் என்று சொல்லிக்கொள்ள அரசர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? நடுக்காட்டிலே அரைத் துணியுடன் மனைவியை விட்டு நீங்கினான் நள மகராஜன். மனைவியை விற்றான் அரிச்சந்திரன். மனைவியை மாற்றான் துகிலுரிந்த போது பார்த்துக் கொண்டு சும்மா இருந்தார்கள் பாண்டவர்கள். மனைவியைப் பலகாலம் சிறையில் தவிக்க விட்டான் இராமன்.  அரசர்களுடைய சரித்திரம் இப்படி இருக்கும் போது,  எந்தத் துணிச்சலில் எங்கள் பெண்ணைக் கேட்டு உங்கள் அரசர் தூது அனுப்பினார் ? " 

விற்றதார் ? கலை பாதியோடு வனத்தில் அழ விட்டதார் ? வெஞ்சிறை புகவிட்டு விழித்ததார் ? துகிலுரிய விட்டுத் துடித்ததார் ? 

உற்ற தாரமும் வேண்டுமென்றே இனி அரசர் பெண் கொளல் ஒக்குமோ ? 

வெட்டடா மணம் என்ற வாய் கிழித்து ஓலை காற்றில் உருட்டடா.

வெற்றியாகிடும் முக்தி தந்திடும் வெங்கை மாநகர் வேடர்யாம்

விமலரானவர் எமை அடுத்து எங்கள் எச்சில் மிசைந்ததால் 

பெற்ற வேலன் தனக்கொரு பெண் வளர்ப்பினிலே ஈந்தனம்

பெற்ற பெண்ணைக் கொடுப்பமோ இதென் பேய் பிடித்திடும் தூதரே."

சரி பார்க்க வசதி இல்லாமல் நினைவில் இருந்து எழுதியதால் சில பிழைகள் இருக்கலாம் தயவு செய்து பொறுத்துக் கொள்ள வேண்டும்.
= = = =     = = = = = = = = = =

17 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் எப்பொழுதும் சுகம், நலமுடன் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. ராமானுஜ காவியம் அற்புதம். நன்றி முரளி.

    பதிலளிநீக்கு
  3. ஏ ஐ லீலை அதிகமாகி விட்ட காலம்:) மன சாட்சியம் அருமை.

    பதிலளிநீக்கு
  4. அத்திக்காய் பாடல் அப்போது மிகப் பிரபலம். இலக்கியத்தில் இருந்து கண்ணதாசன் வழி வந்ததுதான் பெருமை.

    பதிலளிநீக்கு
  5. ரா சேதுபதி என்றுதான் எங்களுக்கு தெரியும்.

    ''இந்த இரண்டில் ஒரு புத்தகத்தில் தான் மேலே நான் குறிப்பிட்டுள்ள " ஒருபேச்சுரைக்காயா" பாடல்வரிகள் சொல்லப்பட்டிருந்தது. எந்த புத்தகம் என்று சரியாக நினைவில் வைத்துக் கொள்ளாதது எனது தவறு. அது பற்றி இப்போது வருந்திப் பயனில்லை.'' இதை எல்லாம் நீங்கள் எங்களுக்குச் சொல்வதே எங்களுக்குப் பயன். இதில் எந்தப் புத்தகம் என்று அறியாவிட்டால் தவறில்லை. வருந்த வேண்டாம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கேள்விப்பட்டாதெல்லாம் ரா.பி.சேதுப்பிள்ளை என்று தான் ரேவதி. சேதுபதி இல்லை.

      நீக்கு
  6. வேடுவ அரசன் அரசகுமாரனை மறுத்த பாடல் எத்தனை அழகு!! சூடு பறக்கிறது அவன் மறுப்பில். உண்மையும் அதுதானே. தமிழின் வன்மை பெருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. @Nellai, ராமானுஜ காவியத்தின் இந்தப் பகுதி அறியாத ஒன்று. அறியத்தந்தமைக்கும் பாசுரங்களுக்கும் அதன் விளக்கத்துக்கும் மனமார்ந்த நன்றி. அதோடு எம்பார் என்பவரும் இவர் தானா? இவர் குலத்தில்/குடும்பத்தில் வந்தவர்களுக்குத் தான் எம்பார் என்னும் பட்டமா? ஒரு கர்நாடக சங்கீத வயலின் வித்வான் கூட எம்பார் என்னும் பெயரில் இருக்கார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... இந்த வரலாறு பிற்பாடு வரும். இவர்தான் எம்பெருமானார் என்ற பெயரையும் பெற்று பிறகு எம்பார் என அழைக்கப்படுவார்.

      நீக்கு
  8. காளமேகத்தின் இந்தப் பாடல் தனிப்பாடல் திரட்டில் இருந்தது. ஆனால் புத்தகம் இப்போது என்னிடம் இல்லை. திரு ராமன் அவர்களின் நினைவுகளில் இன்னமும் இந்தப் பாடலெலலாம் இருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்து அவர் சொல்லி இருக்கும் வேடுவன் கதை எல்லாம் கேட்டதில்லை. அரசன் பெண் கேட்டதும் வேடுவன் மறுத்ததும் அதிசயம் தான். அந்தக் காலங்களில் அரசன் எனில் அவன் குடிமக்களுக்குக் கட்டுப்பட்டவன் தான். அவர்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவன் என்பதை இந்த நிகழ்ச்சி விளக்குகிறது. அரசனால் சொல்லப்பட்டதாகக் கூறப்படும் பாடலைக் கேட்டதே இல்லை. நல்ல நியாயமான கேள்விகள். மிகவும் அருமையான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. கண்ணதாசன் பெரும்பாலும் சங்கப் பாடல்கள், சிலப்பதிகாரம் போன்றவற்றிலிருந்து பாடல்கள் தனக்குக் கிடைப்பதாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்த நினைவு. ஏஐ யிடம் இப்படி எல்லாம் கேட்கலாமா? எனக்கு இந்தஏஐயை எல்லாம் பயன்படுத்தத் தெரியாது. ஒரு தரம் ஜெமினியை முயன்றேன். சரியா வரலை. பின்னர் விட்டுட்டேன்.

    பதிலளிநீக்கு
  10. குரு பரம்பரை வரலாறும், பாசுர பகிர்வும் அருமை.
    கொலு வைத்து இருப்பதால் இங்கு வர முடியவில்லை உடனே.

    கோவிந்த பட்டர் தான் உணர்ந்து வைணவத்திற்கு வந்தது அதற்கு ஒரு கருவியாக திருமலை நம்பி இயங்கியது அருமை.
    குரு நினைத்தால் யாரையும் தன் பக்கம் இழுக்கலாம்.
    இறைவன் அனுப்பி வைக்கும் ஒரு வழிகாட்டி குரு.

    பதிலளிநீக்கு
  11. இன்றைய பாசுரமும் அதன் பொருள் விளக்கமும் அருமை.
    படங்கள் எல்லாம் அருமை.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!