23.10.26

சொல்லவா.. கதை சொல்லவா.. நடந்த கதை சொல்லவா...

 

ஆம்புலன்ஸ் கதையைச் சொன்ன கையோடு இன்னொரு கதையும் சொல்லி விடுகிறேன்.  இது ஒருவேளை உங்களுக்கும் உபயோகமாயிருக்கலாம்.  அல்லது நீங்களும் அனுபவித்திருக்கலாம்.

வளைகாப்பு சீமந்தம் முடிந்த கையோடு ( இந்த கூகுளில் kaiyodu என்று அடித்துப் பாருங்களேன்..  கையேடு என்றுதான் முதல் ஆப்ஷன் கொடுக்கும்.  சுந்தர் பிச்சையிடம் சொல்ல வேண்டும்) மாமியார் உடல்நிலை சற்றே சீர்கேடு அடைந்தது.  மூச்சு இறைத்தது.  களைப்பானார்.  எதற்கும் இருக்கட்டும் என்று ஏரியாவில் இருந்த அந்த மல்ட்டிஸ்பெஷாலிட்டி (பெயரே கொடுக்கவில்லை என்பதால் 'பெயர் மாற்றப்பட்டுள்ளது' என்று எச்சரிக்கை கொடுக்கவில்லை!  ஹிஹிஹி) ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம்.  

அங்குதான் மாமியாரின் அன்புக்குரிய ஆஸ்தான (பெண்) மருத்துவர் இருந்தார்.  அவர் எதிர்பார்த்த மாதிரியே அட்மிஷன் போட்டு விட்டார்.  சென்ற செப்டம்பர் மாதம் இவரைப் பார்த்தபோது மாமியாரின் இதயம் 25%தான் வேலை செய்வதால் பத்திரமாக பார்த்துக்  கொள்ளவேண்டும் என்று சொல்லி இருந்தார்.  இப்போது இன்னமும் க்ஷீண நிலையில் இருப்பதாகச் சொன்னார்.

அது என்ன மாயமோ தெரியல, மர்மமோ புரியல...   அதுவரைக்கும் ஒழுங்காய் இருந்த மாமியாரின் ஆக்சிஜன் லெவல் அட்மிஷன் என்று இரண்டாவது மாடியில் இருந்த ஒரு அறைக்கு அவரை அழைத்துச் சென்றதும் டப்பென இறங்கத் தொடங்கியது.  30,89,88,84,85, என்று 70 வரை வந்து ஆட்டம் காட்டியது.  போதாதா?

மாட்டு ஆக்சிஜனை..  

மல்ட்டி என்று ஆரம்பித்தாலே மனம் மல்ட்டிநேஷனல் என்று வார்த்தையை ஃபில் அப் செய்கிறது! 

இந்த மல்ட்டிஸ்பெஷாலிட்டி என்று போட்டுக் கொள்ளும் மருத்துவமனைகளை பயங்கர ரெய்ட் விடவேண்டும்.  கணவன் மனைவியாகவோ, இரண்டு நண்பர்களாகவோ ஒரு இடத்தைப் பிடித்து வாடகைக்கு அமர்ந்து மருத்துவம் பார்க்கத் தொடங்குகிறார்கள்.  கொஞ்ச நாளில் முதலில் உள்ளேயே ஒரு பார்மஸி அமைத்துக் கொள்வார்கள்.  அடுத்ததாக ஒரு சிறு அறை ஒதுக்கி இரண்டு பெண்களை வேலைக்கு அமர்த்தி ஊசி போட ஏற்பாடு செய்வார்கள்.  இதன்பிறகு வருபவர்கள் அனைவருக்கும் ஊசி உண்டு!  அவர்கள் எழுதும் மாத்திரைகள் 70% அவர்கள் பார்மசியில்தான் கிடைக்கும்!

மெல்ல மெல்ல எஸ்டாப்ளிஷ் ஆனவுடன் அந்த இடத்தை விலைக்கு வாங்குவார்கள்.  அல்லது அருகிலேயே ஒரு இடம்!  உள் நோயாளியாக தங்கும் வசதிக்கு மூன்று நான்கு குகைகள் போல டஞ்சன்கள் தயாராகும்.  ரிஸப்ஷன் மேஜை முன்னதாகவே முன்னே வந்திருக்கும்.  அங்கு இரண்டு பேரிளம் பெண்கள் மேக்கப்புடன் காட்சி தருவார்கள்.

இதெல்லாம் நாங்கள் சென்ற மல்ட்டிஸ்பெஷாலிட்டிக்கும் பொருந்தும்.  படிப்படியாக அதன் வளர்ச்சியை நாங்கள் பார்த்து வந்தோம்.  ஆரம்பம் முதல் அங்கு சென்றுகொண்டும் இருந்தோம்.  அங்கு வந்து சென்ற பிசியோதெரபிஸ்ட் அருகிலேயே இடம்பிடித்து பிசியோதெரபி க்ளினிக் தொடங்கினார்.

ஆல் செட்! மேடம் வெற்றிகரமாக உண்மையிலேயே நல்லபடியாக பிரசவம் பார்த்து பேர்வாங்கினார்.

'சரி,,  இதுல என்ன பிரச்சனைன்னு கேக்கற உங்க மைண்ட்வாய்ஸ் எனக்கும் கேட்குது..

சொல்றேன்...

=========================================================================================


மனசாட்சியம் - 22
KGY Raman 

கடல் கடந்த நேசம்

என் சிறு வயதில் கடலூரில் நூலகத்திற்குப் போய்,  பெரும்பாலும் இங்கிலாந்து அமெரிக்க நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகள் நிறைய படித்துப் பார்ப்பேன். 

விரைவில் வேலை கிடைத்து நீலகிரியில் வாழ்க்கை தொடர்ந்தது. அங்கு ஒரு நண்பருக்கு அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பேனா நண்பராக இருந்தார். என் நண்பர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் அமெரிக்காவில் இருந்து பிரபல பத்திரிகைகளை கப்பல் மூலம் இவருக்கு அனுப்புவார். அந்தக் காலத்தில் இது சாத்தியமாக வேண்டும் என்றால் அனுப்புகிறவர் பெரிய பணக்காரராக இருக்க வேண்டும். மாதம் ஒரு முறை சுமார் 3 கிலோ பத்திரிகைகள் வரும். நண்பரோடு சேர்ந்து நானும் சிறந்த வார மாத சஞ்சிகைகளை ஆர்வமாகப் படிப்பேன்.

அந்த சமயம் இந்திய அமெரிக்க நட்புறவுக் கழகம் என்று ஒன்று தொடங்கப்பட்டு இந்திய அமெரிக்கர்கள் இடையே பேனா நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். அவரவர் வயது விருப்பம் இவற்றுக்கிணங்க ஒத்த கருத்து உள்ளவர்களை நண்பர்கள் ஆக்கி வைத்தார்கள்.  எனக்கும் என் வயது உள்ள ஒரு அமெரிக்கப் பெண்மணி நண்பியாகக் கிடைத்தார். அவரோடு வாரம் ஒரு முறை அவரவர் நாட்டு வழக்கங்கள் வாழ்க்கை முறைகள் இலக்கியம் இப்படி எல்லாம் பலவாறாகப் பேசி வந்தோம்.  

என் கடிதத்தைப் பார்த்து " நீங்கள் இவ்வளவு நன்றாக ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. இந்தியா என்றால் நாங்கள் இங்கு அது ஒரு அதிகம் முன்னேறாத நாடு, வீதிகள் முழுதும் பாம்பாட்டிகளும் குரங்காட்டிகளும் நிறைந்து இருப்பார்கள் என்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம் " என்று எழுதி இருந்தார். எனக்கு ஒரே ரோசமாக இருந்தது. நம் பெருமைகளைப் பற்றி அவருக்கு மீண்டும் மீண்டும் வழக்கமாக எழுதிக் கொண்டு வந்தேன். நடுவே நடுவே அமெரிக்காவைப் பற்றி அமெரிக்க அரசியலைப் பற்றி எனக்கு எவ்வளவு நிறையத் தெரியும் என்பதையும் சாமர்த்தியமாக புகுத்திக் கொண்டிருந்தேன். அவரும் எல்லாவற்றையும் மிகவும் ரசித்துப் படித்து பதில் எழுதிக் கொண்டிருந்தார்.

எனக்கு புகைப்பட ஆர்வம் உண்டு என்று நான் சொல்லித் தெரிந்துகொண்ட அவர் திடீரென்று எனக்கு ஒரு எளிய கேமரா , அதோடு பத்து ரோல் பிலிம், சுமார் 60 ஃப்ளாஷ் பல்புகள் என்று அனுப்பி வைத்து என்னைத் திகைக்க வைத்தார். இதற்குத் தகுந்த பதில் மரியாதை செய்யும் அளவுக்கு என்னிடம் பண வசதி இல்லாததால் , அந்த கடிதப் போக்குவரத்தையே நிறுத்திக் கொண்டேன்.

எனது நண்பர் அவருடைய அமெரிக்க நண்பருக்கு அவ்வப்போது பட்டுப்புடவை பித்தளை விக்ரகம் போன்ற பொருத்தமான பரிசுகளை அனுப்பி வந்தார். அவர்கள் நட்பு பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. 

இந்த நண்பரிடம் ஒரு விசித்திரமான வழக்கம் இருந்தது. பவுடர் பேஸ்ட் போன்ற எந்தப் பொருளானாலும் அதை சில நாட்களுக்கு உபயோகித்து விட்டு, " சே !  இதை உபயோகித்து அலுத்துவிட்டது "  என்று வாசலில் எறிந்து விடுவார். அவருடன் இது பற்றி விவாதம் செய்து இப்படி விரயம் செய்யலாமா என்று கேட்டபோது " எனக்கு போர் அடித்தால் நான் என்ன செய்யட்டும் ?  வேண்டுமானால் நீங்கள் அதை எடுத்துக்கொண்டு போங்கள் " என்று என்னிடம் கொடுத்து விடுவார். பல நாட்களுக்கு நான் பேஸ்ட் பவுடர் மாதிரி பொருள்கள் வாங்காமலே இப்படி ஓசியில் சமாளித்து இருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 

பேஸ்புக் வாட்ஸ் அப் மாதிரி வசதிகள் வந்திருக்கும் போது வெளிநாட்டு நண்பர்கள் இருந்தால் மிகவும் சுவாரஸ்யமாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. பத்திரிக்கைகள் படிப்பது இலக்கிய ரசனை எல்லாம் தேய்ந்து போனது போலவே நண்பர்களுக்கு கடிதம் எழுதும் வழக்கமும் தேய்ந்து தான் போயிருக்கிறது. எதுவானாலும் 5 அல்லது 10 நிமிஷங்களுக்கு மேல் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது மிகவும் கஷ்டமாக ஆகிப்போன காலம்.

முடிப்பதற்கு முன்னால் என் அமெரிக்கப் பேனா நண்பி எழுதிய ஒரு செய்தியை சொல்லி முடிக்கிறேன். " நேற்று ஜனாதிபதி கென்னடியின் கொலைக்குக் காரணமான பெரிய பணக்காரர் ஒருவருடன் லிப்டில் பயணித்தேன்.  அந்த சமயத்தில் நான் அனுபவித்த என் மன உணர்வுகளை தெளிவாக சொல்லுவது கஷ்டம். "

=============================================================================================

க நா சுப்ரமணியத்தின் கவிதைகள் பற்றி ஞானக்கூத்தன்.


1938ஆம் ஆண்டிலேயே அவர் கவிதை எழுதத் தொடங்கி யிருந்தாலும் 60-ன் இடையிலும் 70-ன் இடையிலும் மீண்டும் 80-ன் இடையிலும்தான் அதிகமும் எழுதினார் என்று தெரி கிறது. இதற்கிடையில் வளர்ந்து வந்த புதுக்கவிதைக்கு விமர்சகராகவும் மாறத் தொடங்கினார். 

இந்த விமர்சனப் பார்வையில் எழுத்து என்ற பத்திரிகையின் மூலம் தெரியவந்த பல கவிஞர்களை அவர் ஏற்க மறுத்தார், பிச்சமூர்த்தியின் கவிதைகளில் அவருக்குப் பலமான சந்தேகம் தோன்றியது. ஒருசமயம் பிச்சமூர்த்தியின் கவிதையை ஏற்கத் தயக்கமும், ஒருசமயம் அதுவும் ஏற்புடையதுதான் என்ற அரைகுறை யான ஒப்புதலும் அவருக்கு இருந்து வந்தது. புதுக்கவிதை தொடக்ககால இயக்கத்துக்கு (இதை 1960-ன் தொடக்கம் என்றே கொள்ள வேண்டும். தமிழில் புதுக்கவிதைக்கு நூறாண்டுக்கு மேலான வரலாறு காட்ட முடியும். 

ஆனால் 1860இல் இரண்டொருவர், 1910-15இல் பாரதி என்று தனித்தனிக் கவிஞர்களின் ஆதர்சமாக இருந்து 1960இல்தான் பல கவிஞர்கள் கவிஞர்களின் பொதுநோக்காகப் புதுக்கவிதை மலர்ந்தது) உந்துதலாக பிச்சமூர்த்தி இருந்தார் என்ற அளவிலே அவருக்கு இடம் என்று க.நா.சு. முடிவுக்கு வந்தார். எழுத்துக் கவிஞர்களிலே பலரையும் அவர் பொருட்படுத்த வேண்டியவர்கள் அல்லர் என்று தள்ளியது, காலம் சரி என்று ஒப்புக்கொண்டு விட்டது. 

இவர்களுக்குப் பதிலாக ஷண்முக சுப்பையா, சுந்தர ராமசாமி, நகுலன் ஆகியோரைப் புதுக் கவிஞர்களாக அவர் நினைத்தார். இந்த மூன்று பேரில் ஷண்முக சுப்பையா எழுதுவது நின்று போக அவருக்குக் கொடுத்த இடத்தைக் க.நா.சு. குறைத்துவிட்டார். 

அதே போல சுந்தர ராமசாமி பசுவய்யா என்ற பெயரில் எழுதிய கவிதைகளைக் குறித்த கண்ணோட்டமே அவருக்கு மாறி விட்டது. பிரமுகராகும் முயற்சிக்குக் கருவியாக கவிதையை யும், நாவலையும் பயன்படுத்துகிறார் என்றும், அவர் எழுத்து obtuse ஆக இருக்கிறது என்றும் கருதினார். 

எனது கவிதை களில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டென்றாலும் நகுலனையே முக்கியமாகக் குறிப்பிட்டார். முந்தைய சகாப்தங்களில் என்னையும் நகுலனையுமே அவர் எடுத்துக் கொண் டாலும் பின்பு வந்த கவிஞர்களில் பிரம்மராஜன், விக்ரமாதித்யன், சுகி ஆகியோரின் கவிதைகளில் அவர் ஈடுபாடு காட்டினார். ஆனால் அவருக்கு ஆத்மாநாமின் கவிதைகள் பிடிபடவில்லை. நா.காமராசன், மு. மேத்தா மற்றும் வைரமுத்து ஆகியவர்களின் கவிதைகளை அவர் வெறுத்தார் என்றே சொல்லவேண்டும். ஆனால் தற்பொழுது உள்ள கவிஞர்களில் பதினைந்து கவிஞர்களாவது அவருடைய கருத்துப்படி இன்றைய கவிதை இலக்கியத்தைப் படைக்கிறார்கள் என்று சொல்லலாம்.

க.நா.சு.வின் கவிதைகளில் பல, பழைய மற்றும் புதிய இலக்கியக் கோட்பாடுகளுக்கு எடுத்துக்காட்டாக அமையக் கூடும். புதுக்கவிதையின் மூத்த ஆசிரியர்களில் அவருடைய இடம் உறுதியானது. ஆனால் இந்த உறுதியை அவரது விமர்சனத் தோற்றமே பெரிதும் பாதிக்கிறது. சகல தரப்பின ரும் எதிரியாகத் தன்னைப் பாவிக்கும்படி அவர் செய்து கொண்டார். அவரை வெளியிட விரும்பாதவர்களின் தொகையை அவர் கூட்டிக் கொண்டார்.

பிறருக்கு உகக்காததைச் 
சொன்னவருக் கென்று
ஒருதனி நரகம் உண்டென்றால் 
அங்குதான் நான்போவேன் 
அங்குள்ளவருக்கும் 
உகக்காததைச் சொல்ல 
எனக்குத் தெரியும். அங் 
கிருந்து எங்கு போவேனோ 
தெரியாது.


இந்தக் கவிதையில் க.நா.சு. தன்னைப் பற்றிய உண்மை யைத் தெரிவிக்கிறார். அந்த உண்மை உகக்காததைச் சொல்வதில் தன்னையும் மீறிய விதி போன்ற நிர்ப்பந்தம் தனக்கிருந்ததை அவர் உணர்ந்ததுதான். இந்தப் பண்பு அவரை முகஸ்துதி செய்யவோ விட்டுக் கொடுக்கவோ அனு மதிக்கவில்லை. ஆனால் அவர் தனது காலத்தவருக்கு உகக் காததைச் சொன்னவரே தவிர எதிர்காலத்தவருக்கல்ல. எதிர் காலத்தவர்கள் அதாவது அவரால் நேரிலோ மறைவாகவோ பாதிக்கப்பட்ட கருத்து ஊட்டம் இல்லாமல் முதலாவதாகப் படிப்பவர்கள் அவரது கவிதைகளை விரும்புவார்கள். அவரது கவிதையின் எளிமையையும், பட்டுப்போன்ற அதன் சருமத் தையும், கருத்தாழம் என்பதற்கு மாறான உணர்வாழத்தை யும் அவர்கள் உணர்வார்கள்.
க.நா.சு.வின் கவிதைகளைத் தொகுத்து வெளியிடும் ஞானச்சேரி பாராட்டுக்குரியதாகும். ஏனெனில் அவரை வெளியிடுவது வியாபாரம் அல்ல. 


14-3-1989
ஞானக்கூத்தன்

க நா சு கவிதை இரண்டு 

மின்னல் கீற்று

புழுக்கம் தாங்காமல் அன்றையத் தினசரியை விசிறிக்

கொண்டே நடந்தேன்; இந்தப் புழுக்கத்திலே மழை

பெய்தால் நன்றாக இருக்குமே என்று நான் நினைத்தேன்.

தலையுச்சியிலே ஒரு குளிர் தூற்றல் -ஆஹா! இன்பம்!
-ஆஹா! ஆஹா! 

சட்டச்சட! பத்துத் தூற்றல்கள்
பத்தே பத்துத் தூற்றல் தான் பின்னர் புழுதியைக் கிளறிய

காற்று விசிற மழை ஓடி நகர்ந்து விட்டது கரியவானம்
கீற்று என்னைத் தேடிற்று 

பிளந்து கொண்டு கோடை மின்னல்

கையை நான் நீட்டியிருந்தால் அக்கோடைமின் கீற்று 

என்னைத் தொட்டிருக்கும்; உலகை

தினசரிச் செய்திகள் அற்றிருக்கும்; அழித்திருக்கும்; தூற்றல் இன்பம்

மரத்திருக்கும்; புழுக்கம் வெளி நிறைந்திருக்கும்; புழுதி
ஒழிந்திருக்கும். 
நான் 
எழுந்து படர்ந்திருக்கும்; உலகம்

கை நீட்டாதிருந்தேன். 

தனியிருந்து என்ன செய்வதென்று

'சரஸ்வதி
20.9.1958


இரைச்சல்

எங்கேயோ எட்டாத் தொலைவில் 
        உகுண்டு வரும் மீனதுவும் உலகை  
யெலாம் எழுப்புறது, புல் வளரும் 
        வேகம் அது சந்தை இரைச்சலிலும் 
பெரிதாகிக் கேட்கிறது. கிழவன் ஒருவன் 
        பக்கத்த றையிலே குந்தி அழுகிறான்.

யாரோ ஒருத்தி உதடசையாதவாய்  
          வம்பால் பெருந் தீ ஏற்றி வைத்தாள்; 
மூண்ட குருக்ஷேத்திரம் காலத்தின் சந்து 
பொந்துகளிலே ஓடி ஒலிக்கிறது. 
          குழந்தை யொன்று தொட்டிலில் கிடந்து 
மெல்ல உதடசைத்து ஊரை யெழுப்புறது.

மரங்கள் துளிர்க்கும் ஓசை, பூக்கள் 
           பூக்கும் ஓசை, புழுக்கள் காலை உணவு 
அருந்தும் ஓசை-இப் பேரிரைச்சலில் 
            என் சிந்தனைத் தேர் ஓட மறுத்துக் 
கிறீச்சிட்டு அசைந்தாடி தின்று அதிர் 
           வேட்டும் உலுக்குமரமும் கேட்கிறது.

'சரஸ்வதி' 10-10-1958

========================================================================================

மாலைமதியில் வந்த சுஜாதாவின் நாவல் விபரீத கோட்பாடு.  வெளிவந்தவுடன் சுடச்சுட நான் வாங்கிப் படித்த நாவல்.  அதற்கு வந்த வாசகர் கடிதங்கள் அதற்கு அடுத்த மாலைமதியில் வெளியாகின..  அவை..



- 'விபரீதக் கோட்பாடு' படித்தேன். முடிவை முன்ன தாகவே ஊகிக்க முடியாதபடி இவ்வளவு சுவையாக, அருமை யாக ஒரு துப்பறியும் கதையை எழுத சுஜாதாவால் டுமே (மட்டுமே அண்டர்லைன்) முடியும். 
பரப்பாடி பா.து. தனபால்.

- கதையெங்கும் "செக்ஸ்' பரவலாகப் புகுந்து விளையாடியிருக்கிறது. A  சர்டிபி கேட் கொடுத்திருக்க வேண்டிய நாவல்.
திருப்பூர் ஏ. ஈஸ்வரன்

- ஒரே மூச்சில் படித்து முடித்த போதிலும் நினைவில் நிலைக்கவில்லையே, ஏன்?
நெய்வேலி-3. எஸ். கிருஷ்ணமூர்த்தி

- அபத்தமான கற்பனை! ஆனால் என்ன அழகான வருணனை! எழுத்துக்களிலே வீணை மீட்டும் தனித்திறன் சுஜாதாவின் விரல்களுக்கே....
சேலம் பா. சௌந்தர்ராஜன்

- தன்னால் உப்புச் சப்பில்லாத கதையையும் எழுத முடியும் என்று 'விபரீதக் கோட்பாட்டின்' மூலம் நிரூபித்திருக்கிறார் சுஜாதா.
திருப்பூர்-2 மு. நடராஜன்

- சுஜாதாவின் கற்பனை என்று எண்ணத் தோன்றாமல் எங்கோ ஒரு கும்பல் உண்மையாகவே இப்படி இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனக்குள்.
மிலிநேன் கே. நடராஜன்,

- இன்ட்டரஸ்டிங் காகக் கதை ஆரம்பித்து, இருபது அம்ச திட்டத்தில் முடித்திருப் பது சுஜாதாவின் சாமர்த்தியத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு.
குரோம்பேட்டை ஜி. நாகராஜன்

- ப்ரதிமா சம்மதித்தா லும், கையெழுத்துப் போட்டாலும், விவாகரத்து செய்து விட முடியாது. சட்டபூர்வ மாகக் கோர்ட்டில் டிகிரி வாங்கினால்தான் செல்லும். இந்த விஷயம் சுஜாதாவுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் லாயர் கணேஷுக்குக்கூடத் தெரியாமல் போய்விட்டது ஆச்சரியம்தான்.
ஊஞ்சலூர் கு. செங்கோட்டையன்,

- 'நேபாளம் சென்றுவந்தேன்' கட்டுரை பள்ளிக்கூட கடிதங்கள் மாணவனின் கட்டுரைபோல் எழுதப்பட்டிருந்தது.
பெங்களூர் எஸ். பாபு.

- நேபாளப் பயணக் கட் டுரை அழகாக, கச்சிதமாய் அமைந்துள்ளது.
பொள்ளாச்சி எஸ்.கிருஷ்ணசாமி.

- பழமையானயான பயனான செய்திகளைத் தரும் பி.ஸ்ரீ.க்குப் பாராட்டுதல்கள்.
நாகமங்கலம் ஏ.பாலசுப்பிரமணியம்




===========================================================================================

பழைய தினமணி கதிர் இதழிலிருந்து.  அப்போதெல்லாம் தினமணி கதிர் சற்றே பெரிய சைஸில்தான் வரும்.  இந்த சைஸ் புத்தகத்தில்தான் சுஜாதாவின் வானமென்னும் வீதியிலே, ஜேகே போன்ற கதைகள் வந்தன!

 எம். ஜி. ஆர். பதில்!



வி. செல்வராஜ், வேலூர்.

கே: பேரறிஞர் அண்ணாவிற்குப் பிறகு தங்கள் மனத்தைக் கவர்ந்த தலைவர் யார்?

ப: அவரேதான்.

கே: நீங்கள் துன்பம் வரும்போது ஆண்டவனை நினைக்கிறீர்களா? அல்லது அன்னையை நினைக்கிறீர்களா?

ப: ஆண்டவன் என்னைவிட்டுப் பிரிந்திருந்தால்தானே, அந்த நேரத்தில் மட்டும் நினைப்பதற்கு. அவர்தான் என் அன்னையின் உருவத்தில் என் இதயத்தில் எப்போதும் நிறைந்திருக்கிறாரே.

டி. ஜி. இராமமூர்த்தி, கும்பகோணம்.

கே: உங்களைப் பற்றி இதுவரை திட்டிப் பேசாத ஒருவர் திட்டிப் பேசி விட்டால் (அப்படி ஒருவர் பேசிவிட்டார், ஆகையால் கேட்கிறேன்) அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

ப: முதலில் என்னிடம் என்ன குறை புதிதாக உண்டாயிற்று என்று பார்ப்பேன். பிறகுதான் அவர் ஏன் அப்படிப் பேசினார் என்று சிந்திப்பேன்.

கே: நீங்கள் நடிக்கும் படத்திற்குத் தங்களுக்கேற்ற கதை, நீங்கள் விரும்புகின்ற மாற்றம் இவைகளைச் செய்தால்தான் நடிப்பேன் என்று நீங்கள் கூறுவதாகச் சொல்கிறார்களே! இது உண்மையா?

ப: அப்படிச் சொன்னால் அது தவறு என்று நீங்கள் கருதுகிறீர்களா?

டி. அகமத் பாபு, ஊட்டி.

கே: மதுரை மாநகர் - இதுபற்றி ஏதாவது கூறுங்கள்.

ப: தமிழகத்தின் வீறு கொண்ட சமீப காலத்திய வரலாற்றில் நல்ல திருப்பங்களை முன்னோடியாக இருந்து நிறைவேற்றுவது மதுரை மாநகரம்.

கே: மனம் மலையென உயர மார்க்கம் உண்டா?

ப: மலை என்பது இந்த அண்டத்தில் மிகச்சிறிய ஒன்று. அண்டத்தைவிடப் பெரியது மனம். வேண்டுமென்றால் எந்தெந்த அளவுக்குக் குறைத்துக் கொள்ளலாம் என்று கேளுங்கள்.

எம். ஆறுமுகம், பி.எஸ்ஸி., பாளையங்கோட்டை.

கே: அரசியலில் நீங்கள் வெற்றி என்று கருதுவது எது?

ப: எந்த நாட்டு அரசியலில்? 'இது போன்ற கேள்விகளைக் கேட்கும்போது தெளிவாகக் கேட்டால் நல்லது...'

கே: புதிய மாளிகை கட்ட விரும்புகிறவன் ஏற்கனவே அங்குள்ள மண்குடிசையை அகற்றித்தானே ஆக வேண்டும்?

ப: அந்த மாளிகை அந்த மண் குடிசைக்காரனுக்குச் சொந்தமாக இருந்தால், அகற்றினால் என்ன?

கே: விசுவநாதனின் இசையில் மயங்கியவரா தாங்கள்? இல்லை, உங்கள் நடிப்பில் அவர் மயங்கியவரா?

ப: கலையில் நாங்கள் இருவரும் மயங்கியிருக்கிறோம்.

கே: சிலர் தம் காலடிகளில் சிதறிக் கிடக்கும் முத்துக்களை நோக்காது, வானிலுள்ள விண்மீன்களை எண்ணுவதேன்?

ப: முத்துக்கள் தம்மை விலை பேசும் வசதி படைத்தவர்களின் பண மதிப்புக்கேற்பக் கைமாறி விடுகின்றன. விண்மீன்கள் அப்படியல்ல; தூரத்திலிருந்து யாரும் ரசிக்கலாம்; ஆனால் யாருக்கும் சொந்தமல்ல.

கே. பி. வசந்தா பி. ஏ., சிவகாசி.

கே: மக்கள் செல்வம் இல்லாதவர்கள் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் பொங்க வாழ முடியுமா?

ப: மற்றவர்களைவிட அதிகமாக இன்பத்தோடு வாழ முடியும்.

கே: தங்களுக்கு 'பத்மஸ்ரீ' பட்டம் கொடுக்க முன்வந்து, நீங்கள் வாங்க மறுத்தது உண்மையா?

ப: உண்மை.

கேசி, பொள்ளாச்சி.

கே: உங்கள் படத்தைப் பார்க்க வந்து வேண்டுமென்றே குழப்பம் செய்பவர்களுக்குத் உங்கள் பதில் என்ன?

ப: அவர்களை மன்னித்துவிடுங்கள். ஏனெனில் என்னை வைத்துப் படமெடுத்தவர்களுக்கு அவர்களுடைய பணமும் வந்து சேர்கிறது அல்லவா? அதில் ஒரு துளியாவது எனக்கு வந்து சேர்ந்திருக்கும் அல்லவா?

கே: பொன்மனச் செம்மலே! தங்களைக் கலையுலகின் அண்ணா என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?

ப: மாட்டேன். என்னைவிட வயதில் மூத்தவர்கள் கலையுலகில் இருக்கிறார்கள்.

=====================================================================================

ஜெயகாந்தனின் ஆளுமை..  ஆளுமை என்று சொல்லலாமா தெரியவில்லை.  அவர் சொல்வதைப் பார்க்கும்போது அராஜகம் என்று மனதில் தோன்றியது!!  ஆனால் தமிழருவி மணியன் அப்படிச் சொல்கிறார்.  பாராட்டுகிறார்.  சுவாரஸ்யம்தான்.


==========================================================================================

OTT யில் பார்த்த படம்.

ஆஷா - Z5 -  ஒரிஜியினால் மலையாளம் - தமிழில் வசனம் கிடைக்கிறது.
வங்கியில் தன் டர்னுக்காகக் காத்திருக்கும் ஆஷா (ஊர்வசி) அவர் எண் அழைக்கப்படும்போது போனில் பேசிக்கொண்டிருக்க, இன்னொரு பெண் கவுண்ட்டரை அணுகுகிறாள்.  சினம் ஏறுகிறது ஆஷாவுக்கு.  டெலிபோனை நிறுத்தி கவுண்ட்டர் அருகே வந்து அந்தப் பெண்ணையும், கவுண்ட்டரில் இருக்கும் பெண்ணையும் வசைபாடுகிறார்.  வாக்குவாதத்தை இறுதியில் கடுப்பாகி அந்த டோக்கனைக் கிழித்துப் தூரப்போட்டு விட்டு வெளியேறுகிறார்.
இந்தக் காட்சியே போதும் ஆஷாவின் குணம் அறிய.  தன் பெண்ணோடு காரில் வரும்போது ஏடாகூடமாக ஓட்டி, இவள் மீது மோதாமல் இருக்க பின்னால் வந்த டெம்ப்போ ஓட்டுநர் ஜோஜு ஜார்ஜ் வண்டியை ஒடித்து மரத்தில் மோதி, இறங்கி வந்து,  ஊர்வசியைத் திட்ட, ஈகோ ஏறுகிறது ஊர்வசிக்கு. அவன்மேல்தான் தப்பு என்று அநியாயமாகச் சொல்லி போலீசில் புகார் செய்கிறார். 

அவர் பெண்ணுடன் ஏற்பட்ட மனக்கசப்பில் வாக்குவாதத்தில் மகள் அவரை 'பைத்தியம்.. பைத்தியம்' என்று திட்டிவிட்டு வெளியேறிவிட,  இரவு முழுவதும் மகள் திரும்பிவர காத்திருக்கிறார்.  செய்தி வருகிறது விபத்து என்று. ஓடுகிறார்.  தொடர் உரையாடலில் அவளை அங்கு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தது ஜோஜுதான் என்று அறிந்து மருத்துவரிடம் மன்றாடி மகளுக்கு கன்னித்தன்மை சோதனை செய்து பார்த்து, உறவு நடந்திருக்கிறது என்று அறிந்து ஜோஜூவை பழிவாங்க புறப்படுகிறார்.
சாமர்த்தியமாக பேசி இருவரையும் அதாவது ஜோஜுவையும் அவன் உதவியாளனையும் தன் இருப்பிடத்துக்கு அழைத்து வந்து விஷ உணவு கொடுக்க, உதவியாளன் இறந்து விட, ஜோஜு அதிர்ஷ்டவசமாக தப்பித்து விடுகிறான்.  யார் தன்னைக் கடத்தியது என்று அவன் அறிந்து ஊர்வசியிடம் கோபப்படுகிறான்.  தான் அவள் மகளை ஒன்றும் செய்யவில்லை என்றும்,  வழியில் நின்று போன அவள் வண்டியை தான் சரி செய்ய முயலும்போது,  அவள்தான் பயந்து ஓடி விபத்தில் மாட்ட, தான்தான் அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்ததாகக் கூறுகிறான்.  ஊர்வசிக்கும் பின்னர் மகளுடன் பேசும்போது அது உண்மை என்று தெரிகிறது.   மகள் அவள் காதலனுடன் சந்தோஷமாக இருந்ததைச் சொல்கிறாள்.  ஆனாலும் அவள் ஜோஜுவை ரிலீஸ் செய்யாமல் வைத்திருக்கிறாள்.  அவனை அவள் பண்ணை வீடு போன்ற ஓரிடத்தில் கைகால்களை கட்டி அசைய விடாமல் வைத்திருக்கிறாள்.  அப்படியே உணவு கொடுக்கிறாள்.

என்ன ஆகிறது என்பதுதான் 'ஆஷா' வின் கதை.  ஊர்வசி பிரமாதமாக நடித்திருக்கிறார்.  பார்க்கலாம் என்று சிபாரிசு செய்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

குத்துவிளக்கெரிய
கூடமெங்கும் பூமணக்க 
மெத்தை விரிந்திருக்க
மெல்லியலாள் காத்திருக்க 
வாராதிருப்பாரோ..

எனக்கு விஜயகுமாரியைப் பிடிக்காது.  ஓவர் ஆக்ஷன் என்று தோன்றும்.  ஆனால் இந்தப் பாட்டு..  ஆஹா...

படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று குழம்பிக்கொண்டிருந்த M சரவணன் சிக்னலில் நிற்கையில் பெரிய பச்சை விளக்கைக் கண்டு இம்ப்ரெஸ் ஆகி, இயக்குனர் பீம்சிங்கிடம் சொல்லி ,  அதையே தலைப்பாக வைத்தாராம்.  முதலில் எடுக்கப்பட்ட காட்சிகளில் AVM செட்டியாருக்கு அவ்வளவு விருப்பமில்லாமல் இருக்க ரீஷூட் செய்தார்களாம்.  1964 ஆம் ஆண்டு வெளியான 'பச்சைவிளக்கு' படத்தில் கண்ணதாசன் எழுதிய 'வாராதிருப்பாரோ' பாடல்.  விஸ்வநாதன் ராமமூர்த்தி இன்னிசையில் TMS சுசீலாம்மா குரலில் சுகமான பாடல்...

என்ன இனிமையான பாடல்..

4 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். என்றும் வளமுடன் இருக்க இறைவன் அருள்வான்.

    பதிலளிநீக்கு
  2. வாராதிருப்பானோ வண்ண மலர்க்கண்ணன் அவன். எங்கள் சிங்கத்துக்கு மிகப் பிடித்த பாடல். படமும் அருமையான படம்.

    பதிலளிநீக்கு
  3. ஊர்வசியின் படமா. கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். குழப்பங்கள் தீர்ந்து சுபமானால் எல்லாப் படமும் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. தமிழருவி மணியனுக்கு சிவாஜி, எம் ஜி ஆர், ஜயகாந்தன் என்று அவர்களின் நல்லதையே சொல்லுவார். கொஞ்ச நேரம் கழித்துப் போரடிக்கும். ஜயகாந்தன் தன்னை பாரதிக்கு மேல் என்று சொன்னதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன் அவரின் சில கதைகள் மிக மிகப் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!