24.10.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 43

  

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 43 

கோவிந்தப் பெருமாள், பெரிய திருமலை நம்பியை அடைந்து, அவரது சிஷ்யராக ஆகி, அவருக்குக் கைங்கர்யங்கள் செய்துகொண்டு, திருவாய்மொழி மற்றும் பிரபந்தங்களின் ஆழ்ந்த பொருளை அவரிடம் கற்றுக்கொண்டு வந்தார் என்று சென்ற வாரம் பார்த்தோம். 

இவர் பிற்பாடு இராமானுஜரை அடைகிறார். இதற்கிடையில் நாம் இராமானுஜர் வரலாற்றைத் தொடர்வோம். 

திருமலையில் நடந்தவைகளை அந்த ஸ்ரீவைஷ்ணவர் சொல்லக்கேட்டு (அதாவது உள்ளங்கை குளிர்ந்த நாயனார் பெரிய திருமலை நம்பியைச் சேர்ந்து, அவரிடம் சிஷ்யனாக ஆனதை) மிகவும் மனம் மகிழ்ந்த இராமானுஜர், அவருக்கு விடைகொடுத்தார். 

அதன் மறுநாள், பெரிய நம்பி திருமாளிகைக்குச் சென்று அவரிடம் பணிந்து தனக்கு த்வயத்தின் அர்த்தத்தை விளக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பஞ்சசம்ஸ்காரம் மதுராந்தகத்தில் செய்தபோதே த்வய மந்திரத்தைச் சொல்லியிருந்தாலும் இராமானுஜர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதன் அர்த்தத்தை விளக்கினார். அது மட்டுமல்லாது, த்வயம், நாராயணனது திருவடிகளை உபாயமாகக் கொள்ளவேண்டும் என்று சொல்வதை ஆழ்வார்களது பிரபந்தத்தில் எங்கெங்கு வருகிறது என்று விளக்கமாகச் சொன்னார். இங்கு அந்தப் பாசுரங்களை எழுத ஆரம்பித்தால் பதிவு நீண்டுவிடும் என்றாலும், நாராயணனது திருவடிகளைச் சரணாகப் பற்றுவதே நாம் உய்வதற்கு உள்ள வழி என்பதால் சிவலவற்றை இங்கு எழுதுகிறேன். முழுப்பாசுரமும், அதன் அர்த்தமும் பிற்பாடு பதிவுகளில் எழுதுகிறேன். 

நாளும் நம் திருவுடை அடிகள்தம் நலங்கழல் வணங்கி – 1-3-8

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம் – 3-3-6

வேங்கடத்து உறைவார்க்கு நம – 3-3-6

திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ – 4-1-1

அலர்மேல் மங்கை உறை மார்பா—உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே 6-10-10

முகில்வண்ணன் அடியை அடைந்தருள் சூடி உய்ந்தவன் – 7-2-11

அடிமை செய்வார் திருமாலுக்கே – 7-2-11

நானுடைத் தவத்தால் திருவடி அடைந்தேன் – பெரிய திருமொழி 1-6-9 

என்று பல்வேறு பிரபந்த வரிகளைச் சுட்டிக்காட்டியும், ஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்நத்தின் வரிகளைக் கொண்டும் த்வய மந்திர அர்த்தத்தை விளக்கினார் பெரிய நம்பி. (இப்படியெல்லாம் பெரிய நம்பி உபதேசித்த தை யார் எழுதிவைத்தார்கள் என்று கேட்டால் அதற்கு பதில் கிடையாது. குரு பரம்பரையில் பெரிய நம்பி, திவ்யப்பிரபந்தங்களைப் பிரமாணமாகக் கொண்டு விளக்கினார் என்று மட்டும்தான் வரும். அவை என்ன என்னவாக இருக்கும் என்பதைப் பெரியோர்கள் அனுமானமாக எழுதியிருக்கின்றனர்) 

த்வய மந்திரத்தை இன்னொரு முறை பார்த்துவிடுவோம். 

ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நமஹ 

பொருள்: திருமகளுடன் கூடிய ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளையே நான் சரணடைகிறேன். பெரிய பிராட்டியிடன் கூடிய நாராயணனை நான் முழுமையாகப் பணிகிறேன். (அதாவது திருமகளுடன் கூடிய நாராயணனுக்கு கைங்கர்யம் செய்யும் பேற்றை நான் வேண்டுகிறேன் என்று ஸ்ரீமதே நாராயணாய நமஹ என்பதற்கு அர்த்தம் சொல்வர்) 

இதன் இன்னும் அதிகமான ரகசிய அர்த்தங்களை நீர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் கேட்டுக்கொள்ளும் என்று பெரிய நம்பி, இராமானுஜரிடம் சொன்னார். 

உடையவர், பெரிய நம்பி கூறியதை மனதில் வைத்து உடனேயே திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு, திருக்கோஷ்டியூர் நோக்கிச் சென்றார். திருக்கோஷ்டியூர் நம்பி திருமாளிகைக்குச் சென்று நம்பியைக் கண்டு வணங்கி அடக்கத்துடன் நின்றார். 

இங்கு நான் ‘திருமாளிகை’ என்று குறிப்பிடுவதைப் பார்த்து படிப்பவர்கள், எல்லா ஆச்சார்யார்களும் மாளிகையில் வாழ்ந்துவந்தார்கள் என்று நினைத்துக்கொள்வர். வைணவத்தில், பெரியோர்களுடைய, ஆச்சார்யார்கள் வசிக்கும் இல்லத்தை ‘திருமாளிகை’ என்றும், தாம் வசிக்கும் இல்லத்தைக் குறிப்பிடும்போது ‘குடிசை’ என்றும் குறிப்பிடுவர். பிற பெரியவர்களிடம் அவர்களுடைய இல்லம் எங்கு இருக்கிறது என்று கேட்க, ‘தேவரீர் திருமாளிகை எங்கே இருக்கிறது?’ என்பர். அதே சமயம், “ஸ்வாமி, நம் குடிசைக்கு எழுந்தருள முடியுமா?” என்று கேட்பர்.  ‘எழுந்தருள முடியுமா?” என்பதை விட, ‘பொன்னடி சாத்த முடியுமா?’ என்றே கேட்பர். அதாவது தங்களது பாதங்கள் அடியேனுடைய குடிசையில் படவேண்டும் என்ற அர்த்தத்தில். வைணவத்தில் எப்படி ஒருவர் பேச வேண்டுமென்பதைக் கூட வழக்கப்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். ஆனால் பலரும் தற்போது, சாறை விட்டுவிட்டு சக்கையைப் பிடித்துக்கொள்வதைப் போல, பேச்சில் மாத்திரம் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் கடைபிடிக்கின்றனர் என்பது உண்மைதான். 

திருக்கோஷ்டியூர் நம்பி, வந்த காரியம் யாது என்று வினவ, உடையவரும், திருமந்திர அர்த்த த்தை தங்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள பெரிய நம்பி அனுப்பினார் என்று சொன்னார். அதைக் கேட்டு, திருக்கோஷ்டியூர் நம்பியும், திருமந்திர அர்த்த த்தை மிகவும் விளக்கமாக உடையவருக்கு உபதேசித்து அருளினார். இதனை எப்போதும் அர்த்த அநுஸந்தானம் செய்துகொண்டிரும் என்று சொன்னார் (அதாவது மந்திரத்தை, அதன் அர்த்தம் மனதில் ஓடும்படி சொல்லிக்கொண்டிரும்). 

திருப்தி இல்லாமல், மேலும் அர்த்த விசேஷங்களைக் கேட்கவேணும் என்று மனதில் எண்ணம் ஓடுவது போல இருக்கின்றீரே என்று கேட்க, உடையவரும், ஆமாம், சரமஸ்லோகம் தங்களிடமிருந்து கேட்கவேண்டும் என்று பெருவிருப்பம் என்றார். சரம ஸ்லோகத்தினுடைய கௌரவத்திற்காகவும், உடையவரின் ஆசையைப் பரீட்சிப்பதற்காகவும், இந்த அளவில் திருவரங்கம் போம் என்று விடை கொடுத்தார்.

திருக்கோஷ்டி நம்பிகளின் திருமாளிகை, இதுவும் இதற்கு வலப்புறம் உள்ளதும். திருக்கோஷ்டியூர் கோயில் கிழக்கு நோக்கி இருக்கிறது. தெற்குப் பக்க வாசலுக்கு எதிரே திருக்கோஷ்டி நம்பிகளின் திருமாளிகை அமைந்துள்ள தெரு இருக்கிறது.

திருக்கோஷ்டி நம்பிகளின் திருமாளிகை. இடது புறம் உள்ளது ஒருவரிட த்திலும் வலது புறம் உள்ளது இன்னொருவரிடத்திலும் உள்ளது. வலது புறம் உள்ள திருமாளிகைக்குள் சென்று இறைவன் சன்னிதியையும் தரிசித்தேன்.

பெருமாள் சன்னிதி, திருக்கோஷ்டியூர் திருமாளிகை. வீட்டின் சுவர்களில் கல் தூண்கள், மேல் தளம் கல் தூண்கள் என்று பழைமை தெரிந்தது. இந்தத் திருமாளிகை சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழைமையானது. நான் பல முறைகள் திருக்கோஷ்டியூருக்கு யாத்திரை மூலம் சென்றிருந்தாலும், கடந்த நவம்பரில் என் அண்ணனுடன் சென்றிருந்தோம். அப்போதுதான் இந்த மாதிரி முக்கிய இடங்களை நாங்கள் சென்று பார்த்துவந்தோம். (யாத்திரைக் குழுவில் வந்தால் அவர்கள் இதற்கெல்லாம் நேரம் தர மாட்டார்கள். உடனே இரவு 9 மணிக்குள் திருப்புல்லாணி சென்று சேர வேண்டும் என்பதால் அவசர அவசரமாக திருக்கோஷ்டியூரை விட்டுச் செல்வோம்) அந்தப் பயணம் பற்றி எப்போது எழுதுவேன் என்று தெரியவில்லை. இந்தப் பதிவின் முக்கியத்துவம் கருதி அந்தப் படங்களை இங்கு பகிர்கிறேன். 

இப்படி உடையவர் திருவரங்கத்திலிருந்து, பதினேழு முறை திரும்பத் திரும்ப திருக்கோஷ்டியூருக்கு நடந்து வந்து திருக்கோஷ்டியூர் நம்பியைச் சந்திக்க, திருக்கோஷ்டியூர் நம்பி பிறகு பார்ப்போம் என்று சொல்ல, ஏமாற்றத்துடன் திரும்பினார். திருவரங்கத்தில் உடையவர் இப்படி சரமச்லோகத்தின் அர்த்த த்தை திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் கேட்க முடியவில்லையே என்ற ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் இருப்பதை திருக்கோஷ்டியூரிலிருந்து போன ஸ்ரீவைஷ்ணவர் அறிந்து வந்து திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் தெரிவித்தார். நம்பியும் அதுகேட்டு மனம் இரங்கி, சரி, அவரை தண்ட பவித்திரத்துடன் வந்து போகச் சொல்லுவீர் என்று சொன்னார். (அதாவது சன்னியாசி கொண்டிருக்கும் முக்கோலுடன் வரச்சொன்னார். முக்கோலில் ஒரு வெள்ளைத் துணி/பை கட்டப்பட்டிருக்கும். அதன் பெயர் ஜலபவித்திரம்) இரகஸ்ய அர்த்தங்கள் என்பதால் வேறு யாரும் கூட வரக் கூடாது என்றும் சொன்னார்.

திரிதண்டமும் ஜலபவித்திரமும். (முக்கோல் மற்றும் அதில் கட்டப்பட்டிருக்கும் வெண்ணிறத் துணியால் ஆன பை).  எங்கள் ஆண்டவன் ஆச்ரமத்தின் முந்தைய ஆச்சார்யார், மற்றும் தற்போதுள்ள ஆச்சார்யார்.

ஸ்ரீவைஷ்ணவர், திருவரங்கம் வந்து இதனைச் சொன்னதும்,   ஆனந்தக் கண்ணீர் பெருக, உடனேயே திருக்கோஷ்டியூரை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார் இராமானுஜர். கோயிலிலிருந்து அவர் வசிக்கும் திருமாளிகையை நோக்கி ஒவ்வொரு அடிக்கும் தரையில் விழுந்து வணங்கிக்கொண்டே சென்றார். அப்படிச் செல்லும்போது, திருப்பாவையைச் சேவித்துக்கொண்டே சென்றார். 

திருக்கோஷ்டியூர் திருமாளிகையை அடைந்து வாசலில் திருப்பாவை சேவித்துக்கொண்டிருக்கும்போது, திருப்பாவையில் 18ம் பாசுரம் சேவித்துக்கொண்டிருக்கையில் ‘செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப, வந்து திறவாய் மகிழ்ந்து” என்று சொன்னதும், நம்பியின் குமாரத்தியான தேவகிப் பிராட்டியார் கதவைத் திறந்தார். இராமானுஜரும் மிகுந்த வியப்புற்று, அவரை விழுந்து வணங்கினார். இதனைக் கவனித்த திருக்கோஷ்டியூர் நம்பி, இராமானுஜரின் உள்ளம் முழுமையாகக் கனிந்துவிட்டது, இப்போது சரம ச்லோகத்தின் அர்த்தத்தை அவருக்கு வெளியிடலாம் என்று மனம் உகுந்தார். 

சரம ச்லோகத்தின் அர்த்தத்தையும், சரணாகதி தத்துவத்தையும் விளக்கமாக ஆழ்வார்களின் பாசுரங்களையும், புராண வசனங்களையும், ஶ்ருதி வாக்கியங்களையும், இதிஹாஸங்களின் வசனங்களையும் பிரமாணமாக வைத்து விளக்கிச் சொன்னார். 

இன்றைய பகுதிக்குப் பொருத்தமாக, நாம் திருப்பாவையின் 18வது பாசுரத்தைப் பார்ப்போம். இதனைச் சேவிக்கும்போதுதான் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகை திருக்கதவுகள் திறந்தன என்பதால் இந்தப் பாசுரத்தை இருமுறை சேவிக்கும் வழக்கம் வந்தது. 

உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்*

நந்தகோபன் மருமகளே நப்பின்னாய்*

கந்தம் கமழும் குழலி கடை திறவாய்*

வந்து எங்கும் கோழி அழைத்தன காண்* மாதவிப்-

பந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்*

பந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்*

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப*

வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய் 

பொருள்: மதம் பிடித்த யானைகளை அடக்கும் ஆற்றல் உடையவரும், போர்க்களத்தில் பின்வாங்காத தோள் வலிமை உடையவருமாகிய நந்தகோபனின் மருமகள் நப்பின்னைப் பிராட்டியே, நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே, உன் திருமாளிகையின் கதவைத் திறப்பாயாக. விடிந்துவிட்டது என்பதால் கோழிகள் கூவுகின்றன. மாதவிப் பந்தலின் மீது குயில்கள் கீதம் பாடுகின்றன. பூப்பந்தைக் கையில் ஏந்தி விளையாடும் மென்மையான விரல்களைக் கொண்டவளே, உன்னுடைய கணவனான கண்ணனின் திருநாமங்களைப் பாட நாங்கள் வந்துள்ளோம். அதனால், தாமரை போன்ற சிவந்த கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலியெழுப்பும்படியாக நீயே வந்து மகிழ்ச்சியோடு கதவைத் திறப்பாயாக 

விளக்கம்: உந்து மத களிற்றன் – எதிர்த்து வரும் மதம் கொண்ட யானைகளையும் வெல்லும் ஆற்றல் மிக்கவன்.  ஓடாத தோள் – பின்வாங்காத தோள் வலிமை, கந்தம் கமழும் குழலி – இயற்கையான மணம் வீசும் கூந்தலை உடையவள், கோழி அழைத்தன – கோழிகள் கூவுகின்றன, பந்து ஆர் விரலி – பூப்பந்தை ஏந்தி விளையாடும் மென்மையான விரல்களை உடையவள், மைத்துனன் – இங்கு மைத்துனன் என்றது கணவனான கண்ணனை 

தாயார் பரிந்துரைத்தால், பெருமாள் உடனே அருள் புரிவான் என்று நம்பிக்கை. இதனை புருஷகாரம் என்பர். அதனால் இங்கு ஆண்டாள், நப்பின்னைப் பிராட்டியை அவளுடைய கைவளை ஓசை எழுப்புமாறு கதவைத் திறக்கச் சொல்கிறாள். அது கேட்டு கண்ணன் எழுந்து உடனே அருள் செய்வான் என்று. 

மார்கழி மாதத்தில் திருப்பாவை உபந்நியாசம் (விளக்கப் பேருரை) நடக்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாசுரத்தை ஒரு மணித்தியாலம் விளக்குவார்கள். இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா இந்தப் பாசுரத்தில் என்று ஆச்சர்யமாக இருக்கும். வியாக்கியான சக்கரவர்த்திகள் 900 ஆண்டுகளுக்கு முன்னரே இவற்றை எழுதிவைத்திருக்கிறார்கள்.

குருக்கத்திப் பூக்கள்

குருக்கத்திப் பூ மற்றும் குருக்கத்தி மலர்க்கொடி. இதனை மாதவிக்கொடி என்றும் சொல்வர்.

மாதவிக்கொடியைப் பார்த்தபோது, இதுபோல வேறே எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று என் புகைப்படக் கடலைத் தேடியபோது, செப்டம்பர் 2025ல் கடம்ப வனம்/மரம் (Ter Kadamb) என்ற இடத்திற்குச் சென்றிருந்தோம். மதுரா, விருந்தாவன் சுற்றுவட்டாரத்தில் இருக்கிறது (40 கிமீ, மதுராவிலிருந்து). இந்த கடம்ப வனத்துப் பகுதியில்தான் கண்ணன் ஆநிரை மேய்த்தானாம். அங்கு ஒரு பெரிய வளாகத்தில் கடம்ப மரங்களைப் பாதுகாத்து கோயில் வைத்திருக்கிறார்கள். இது மாதவிக் கொடி அல்ல.

இனி, அடுத்த வாரம் தொடரலாமா?...

==========================================================================


மனசாட்சியம்  - 23 
KGY Raman

"நல்ல மனம் வாழ்க"

தவறான விஷயங்களைச் செய்யாதே, தவறான விஷயங்களைப் பேசாதே என்பதையும் தாண்டி மனத்தளவில் கூட தவறு செய்யாதே என்று நமது  புராதனமான நூல்கள் உபதேசிக்கின்றன. 

" நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கெடுதல் (அல்லது இழப்பு ) " என்று எளிதாகச் சொல்லி விடுகிறோம்.  நினைப்பில் மட்டும் செய்தால் போதும் என்றால் வானத்தைச் சுருட்டலாம் மண்ணைத் திரிக்கலாம்,  கடலைக் குடிக்கலாம்.  மனதில் கட்டும் கோட்டைக்கு "ஆகாயக் கோட்டை " என்று ஏன் பெயர் வந்தது என்று சற்றுப் புரிகிறது அல்லவா ? மனத்தளவில் எதுவுமே அசாத்தியம் இல்லை என்று சொல்வதற்குக் காரணம், மனதளவில் மட்டும் செய்வதற்கு  எதுவானாலும் - அது நல்லதோ கெட்டதோ -  சுலபம்தான் என்பதை உணர்த்துவதற்காக இருக்கலாம். 

கட்டுப்பாடு இல்லாத மனம் ஒழுங்கானவைகளை மட்டும் தான் சிந்தித்தவாறு இருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா ? 

இதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட பிரயோகங்களைப் படிக்கும் போது அவற்றின் சுவை பன்மடங்கு கூடுகிறது.

ஆண்டாள்:

"வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க"

பன்னிரெண்டாம் வாய்ப்பாடு ஒப்பிப்பது போல் இறைவனின் பெருமைகளை வாயினால் பாடுவது மட்டும் போதாது. அவற்றை மனதினால் ஆழமாக சிந்தித்து உள்வாங்கிக் கொள்ளவும் வேண்டும். 

" மனத்துக்கு இனியானை பாடவும் வாய் திறவாய் " 

இறைவனின் திருக்கோயிலோ, கடவுளர்களின் சித்திரமோ, ஆண்டவனின் திருவுருவமோ, இவை யாவும் கண்ணுக்கு மட்டும் மகிழ்ச்சி ஊட்டுவன அல்ல. சிந்தித்தால் மனமும் இனிக்கும். 

நான் மிகவும் ரசித்த வரிகள் இவை. 

திருக்குறள்:

" உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை கள்ளத்தால் கள்வேன் எனல். "

விளக்கம் தேவையில்லை. 

தாயுமானவர் 

என் உளம் நிற்றி நீ ஆதலால் நான் பூசை செய்யல் முறையோ.

இதற்கு விளக்கம் கொடுத்தாக வேண்டும்.

இறைவனே. கோடானு கோடி வடிவங்களிலும் இருக்கின்ற உன்னை ஒரு வடிவினில் நிறுத்தி நான் பூசை பண்ண முடியவில்லை. ஏனென்றால் நான் பார்க்கின்ற மலர்களிலும் நீ இருப்பதால் அந்த மலர்களை எடுக்க எனக்கு மனம் வரவில்லை. சரி, கையை குவித்து ஒரு கும்பிடு போடலாம் என்றால் என் உள்ளம் வெட்கம் அடைகிறது. என் உள்ளே குடி கொண்டிருக்கும் உன்னை கை குவித்து வெளியே நிறுத்தி வணங்குவது எப்படி முறையாகும் ? எனவே நான் பூசை செய்யல் முறையோ ? (இல்லை என்பது குறிப்பு).

பாடலை நினைவிலிருந்து தருகிறேன்.  ஏதேனும் தவறுகள் இருக்கக் கூடும். பொருள் சொன்னதில் மாற்றம் இல்லை.

பண்ணேன் உனக்கான பூசை ஒரு வடிவிலே 

பாவித்திறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற 
மலரூடு நீயே இருத்தி ஆதலால் 

அப்பனி மலர் எடுக்க மனமும் நண்ணேன் 
அலாமல் இரு கைதான் குவிக்க எனில் 

நாணும் என் உளம் நிற்றி நீ !

நான் கும்பிடும் போது அரைக் கும்பிடு 
ஆதலால், நான் பூசை செய்யல் முறையோ?

விண்ணே ! விணாதியாம் பூதமே ! 
நாதமே ! வேதமே ! வேதாந்தமே !

மேதக்க கேள்வியே ! கேள்வியாம் 
பூமிக்குள் வித்தே ! அவித்தின் முளையே !

கண்ணே ! கருத்தே ! என் எண்ணே ! 
எழுத்தே ! கதிக்கான மோன வடிவே ! 

கருதரிய சிற்சபையில் 
ஆனந்த நர்த்தமிடும் 
கருணாகரக் கடவுளே!

இவ்வளவு சிறப்பான தாயுமானவர் பாடலை என் பத்தாம் வகுப்புத் தமிழ் புத்தகத்தில் இணைத்த ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றி ! 

அந்தத் தமிழ்ப் புத்தகத்தின் பெயர் " செந்தமிழ் இலக்கிய மணிமாலை " . அது பாட நூல்களை அரசு வெளியிடாத காலம்.‌ (1952)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!