21.11.26

வாரம் ஒரு பாசுரம் தொடர் பகுதி 47

  

நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்

நெல்லைத் தமிழன்

குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 47 

கொங்கில் பிராட்டிக்குத் தன் திருவடிநிலைகளை (பாதுகைகளை) கொடுத்த நிகழ்வைச் சென்ற வாரம் பார்த்தோம். பொதுவாக தங்களின் ஆச்சார்யரின் பாதுகைகளை வேண்டி விரும்பிப் பெற்றுக்கொண்டு தங்கள் இல்லத்தில் வைத்திருந்து அதற்கு பூசை செய்வதும், அதனை நீராட்டி, அந்த நீரைப் பருகுவதும் வழக்கத்தில் உண்டு. அல்லது அந்தப் பாதுகைகளைத் தங்கள் தலையில் தரிக்கும் வழக்கமும் உண்டு. 

எல்லோருக்கும் இந்த திருவடிகள்/பாதுகைகள் கிடைக்காது. (பாதுகைகள் என்றால் என்ன? நாம் தற்போது உபயோகிக்கும் செருப்பு போன்று மிகப் பழைய காலத்தில் மரத்தினால் செய்த பாதுகைகளை உபயோகப்படுத்தினர். பாதுகைகள் இல்லாமல் செல்லும் வழக்கமும் உண்டு.) தம்முடைய சிஷ்யர்கள் ஆசையுடன் கேட்டு, கொடுக்கலாம் என்ற எண்ணம் தோன்றினால், மரத்தினால் செய்த பாதுகைகளின் மீது மஞ்சள் நீரில் நனைத்த தம் கால்களை வைத்து, அதனைப் பாதுகையாக பிரசாதிப்பர். சமீபத்தில் திருவரங்கம் சென்றிருந்தபோது, ஸ்வாமி மணவாள மாமுனிகளின் பாதுகைகளை என் சிரஸில் வைக்கும் பேற்றினைப் பெற்றேன். (பாதுகைகளை தங்கத் தகடு வேய்ந்து அந்த மடத்தில் வைத்திருக்கிறார்கள். அந்த மடத்தில்தான் மணவாள மாமுனிகள் சுமார் 12 வருட காலம் தாம் உலகை விட்டு நீங்கும் வரை எழுந்தருளியிருந்தார்) இதுபோல பரமாச்சார்யாரின் பாதுகைகளை வெள்ளித் தகடிட்டு நம் திருச்சி மூத்த பதிவர் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்களின் உறவினர் வைத்திருந்து அதற்கு பூசைகள் செய்வதை எழுதியிருந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது.

பாதுகைகள். இரண்டாவது இராகவேந்திரருடைய பாதுகைகள். மூன்றாவது பரமாச்சார்யாருடையது.

ரிய நம்பி (இராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்தவர்), ஒரு நாள் திருவீதியில் இராமானுஜர் தம்முடைய சீடர்களுடன் வந்துகொண்டிருந்தபோது அவரை சாஷ்டாங்கமாக வணங்கினார் என்ற நிகழ்வைப் பார்த்தோம். (எட்டு அங்கங்களும் தரையில் படும்படி வணங்குவது, நெற்றி, மார்பு, இரண்டு கைகள், இரண்டு முழங்கால்கள், இரண்டு பாதங்கள்). பெரிய நம்பி ஆளவந்தாரின் சீடர் என்பதும் நினைவிருக்கும். 

ஆளவந்தார் (இது அந்தக் கால ஆச்சார்யர்களின் இயல்பு), குலத்தைப் பார்க்காமல் தகுதியைப் பார்த்து பலரைத் தன் சீடர்களாகக் கொண்டிருந்தார். வைசிய குலத்தைச் சேர்ந்த திருக்கச்சி நம்பியும், அவருடைய பசுக்களை மேய்த்து, அவரின் அன்பைப் பெற்று சீடராகச் சேர்ந்ததை இதற்கு முன்னர் பார்த்திருந்தோம். 

மாறநேர் நம்பி பாண்டிய நாட்டைச் சேர்ந்த புராந்தகம் என்ற கிராமத்தில் அவதரித்தவர். பஞ்சமர் குலத்தைச் சேர்ந்தவர். ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வாரின் பிரபந்தங்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கியதாலும் நம்மாழ்வாரின் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்த தாலும் அவருக்கு மாறன் – நேர் – நம்பி என்ற பெயர் வழங்கிற்று.  (பிற்காலத்தில் புராந்தகம் கிராமம் அவருடைய பெயரையே தாங்கி மாறநேரி என்று வழங்கலாயிற்று என்கிறார்கள். மாறநேரி, சிவகாசிக்கு அருகே இருக்கும் ஊர்) 

ஆளவந்தார் ஒரு நாள் தம் சீடர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது, தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் மண்ணை எடுத்து உண்பதைப் பார்த்து, ஏன் மண்ணை உண்கிறீர் என்று கேட்க, சுற்றியுள்ள எல்லாப் பொருட்களும் எம்பெருமான் படைத்தவையே, அவனது பிரசாதங்களே. அதனால் தமக்கு சேறும் சோறாகிறது என்றாராம். பஞ்ச பூதங்களால் ஆன இந்த உடல் மண்ணை ஏற்காதோ என்றாராம். இந்த உயர்ந்த சிந்தனையைக் கண்டு உகந்து அவரைத் தன் சிஷ்யராக அழைத்துச் சென்றார் ஆளவந்தார். 

இராமானுஜர் திருவரங்கம் வீதியில் செல்லும்போது, அங்கு சிறுவர்கள் மணலில் விளையாடிக்கொண்டிருந்தனர். மணலில் கோயில் கட்டி, மணலிலேயே பெருமாளை உருவாக்கி, மண்ணையே தீர்த்தமாகவும் பிரசாதமாகவும் கொண்டனர். இராமானுஜரைப் பார்த்து, ஜீயரே பிரசாதம் பெற்றுகொள்ளுங்கள் என்று சொல்லவும், இராமானுஜர் அந்தப் பெருமாளை வணங்கி, சிறுவர்கள் கொடுத்த மண் பிரசாதத்தை ஸ்வீகரித்துக்கொண்டார்.  பக்தர்கள் தன்னை எந்த வடிவத்தில் வணங்கினாலும், அந்த வடிவத்தில் நான் புகுந்துகொள்கிறேன் என்பது இறைவனின் வாக்கு. 

இராமானுஜர் தினமும் காவிரியில் தீர்த்தமாடச் செல்லும்போது, தன் முதன்மைச் சீடர்களான ஆழ்வான் அல்லது முதலியாண்டான் தோள்களில் கையைப் போட்டுக்கொண்டு செல்வார்,  வரும்போது, பிள்ளை உறங்காவில்லி தாசர் தோள்களைப் பிடித்துக்கொண்டு வருவார்.  இதைக் கண்ட மற்ற அந்தணச் சீடர்கள் ஆட்சேபம் தெரிவித்தபோது, குலச் செருக்கு எப்போதும் வரக்கூடாது, பக்தியை மாத்திரமே பார்க்கவேண்டும் என்றவர் எம்பெருமானார். இதை முன்னமே பார்த்திருக்கிறோம். 

மாறநேரி நம்பி தாம் தாழ்ந்த குலம் என்பதால் ஆச்சார்யரான ஆளவந்தார் காலக்ஷேபம் (பேருரைகள்) நிகழ்த்தும்போது வெளியில் நின்றுகொண்டுதான் கேட்பாராம். இதனாலேயே ஆளவந்தார் கொஞ்சம் சப்தமாக காலக்ஷேபம் செய்வாராம். (ஆச்சார்யார் சொல்லியும் உள்ளே மற்ற குலத்தாரோடு அமரமாட்டாராம்) 

ஆளவந்தார் தம் மடத்தினைச் சீர் செய்து நல்ல நாளில் கிரகப் பிரவேசம் ஏற்பாடு செய்திருந்தார். மாறநேரி நம்பிக்கு ஆச்சார்யன் திருமாளிகைக்குள் செல்ல ஆசை. தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் கிரகப்பிரவேசம் ஆன பிறகு திருமாளிகைக்குள் செல்லத் தகுதியற்றவன் என்று நினைத்துக்கொண்டு, கிரகப் பிரவேசத்துக்கு முந்தைய நாளிலேயே பணிகள் முடியாத நிலையில், திருமாளிகைக்குள் நுழைந்து பார்த்து வந்தார். இதைக் கண்ட சில அந்தணச் சீடர்கள், ஆளவந்தாரிடம், மாறநேரி நம்பி, புதிய மாளிகைக்குள் நுழைந்து அபச்சாரம் செய்துவிட்டார் என்று புகார் கூறினர். இதைக் கேட்ட ஆளவந்தார், மிகவும் மகிழ்ந்து, பரம பாகவதரான மாறநேரி நம்பி, தம்முடைய திருவடிகளை திருமாளிகையில் பதித்ததே உயர்ந்த கிரகப் பிரவேசம் என்று சொல்லி, மறுநாள் நடக்கவிருந்த கிரகப் பிரவேசச் சடங்குகளை நிறுத்திவிட்டாராம். கிரகப் பிரவேசம் ஏற்கனவே ஆகிவிட்டது என்று எல்லோருக்கும் அறிவிக்கச் செய்தாராம். 

தம்முடைய குடிசையிலேயே மண்ணால் ஆளவந்தாரின் திருவுருவம் செய்து அதனையே தினமும் ஆராதித்து வந்தார் மாறநேரி நம்பிகள். 

ஆளவந்தாருக்கு முன் வினையால் இராஜபிளவை என்ற நோய் வந்த து. இது அவரை மிகவும் வருத்தியது. அவரது சீடர்கள் ஆச்சார்யன் வேதனையைப் பார்க்க முடியாமல் கண்ணீர் சிந்தினார்கள். அப்போது மாறநேரி நம்பிகள் ஆச்சார்யரைப் பார்த்து தனக்கு ஒரு பிரசாதம் அருளவேண்டும் என்று வேண்டினார். ஆளவந்தாரும், என்ன வேண்டும் என்று கேட்க, தங்களது நோயை எனக்குப் பிரசாதமாகத் தரவேண்டும் என்று கேட்டார். அருகிலிருந்த சீடர்கள் இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்றனர். ஆளவந்தாரோ, இது மிகவும் கொடுமையானது, தாங்கிக்கொள்வது கடினம் எனச் சொல்ல, மாறநேரி நம்பியோ, இதுவே தனக்கு மகாப் பிரசாதம் என்று பிடிவாதமாகக் கேட்டார். ஆளவந்தாரும் ‘தந்தேன்’ என்று சொல்ல, மாறநேரி நம்பிக்கு இராஜபிளவை நோய் வந்தது. ஆளவந்தார் குணமானார். 

வரலாற்றில் இது போன்று பல நிகழ்வுகள் இருக்கின்றன. 

பாபர் முகலாயச் சக்ரவர்த்தியாக இருக்கிறார். அது 1530ம் வருடம் மே-ஜூன் மாதம். ஆக்ரா கோட்டை. திடுமென்று அவரது குமாரன் ஹுமாயூன் கடும் நோய்வாய்ப்படுகிறார். அப்போது ஹுமாயூனுக்கு வயது 22. ஹுமாயூன் பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்கள் சொல்லிவிடுகின்றனர். பாபருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது அவரது அமைச்சரவையில் இருந்த மூத்த சகாக்கள், கோஹினூர் போன்று விலை உயர்ந்த வயிரத்தை இறைவனுக்குக் காணிக்கையாகச் செலுத்தி, அதற்குப் பதிலாக ஹுமாயூனின் உடல் நலம்பெற வேண்டும் என்று கேளுங்கள் என ஆலோசனை சொன்னார்கள். 

அதைக் கேட்ட பாபர், என்னுடைய உயிரைவிட ஹுமாயூன் உயிருக்கு விலை உயர்ந்தது எது இருக்கிறது? அதனையே காணிக்கையாகத் தருவேன் என்று உறுதி பூண்டு, தன் மகன் ஹுமாயூனின் படுக்கையை மூன்று முறை சுற்றி வந்து, இறைவா, என் உயிரை எடுத்துக்கொள், அதற்குப் பதிலாக ஹுமாயூனின் உயிரைத் தந்துவிடு என்று மனமுருகி வேண்ட, மறு நாளே பாபரின் கருநிற முடி வெளுக்க ஆரம்பித்துவிட்டதாம். பாபரின் உடல் நலம் குன்றக் குன்ற ஹுமாயூன் நலம் பெற்று  உயிர் பிழைத்தார். பாபர் உடல் நலமில்லாமல் சில மாதங்களிலேயே மறைந்தார். பாபர் இறந்தது டிசம்பர் 26ம் தேதி 1530ம் வருடம். இறக்கும்போது பாபரின் வயது 47.

பாபர், ஹுமாயூன், பாபர் 

மாறநேரி நம்பி, தன் வயதான காலத்தில், நோயினால் மிகவும் கஷ்டப்பட்டார். தம்முடைய தேவைகளுக்குப் பிறரை அண்டி வாழ வேண்டிய நிலை. ஆனால் அவருடைய குலம் காரணமாக பலரும் அவருக்கு உதவவில்லை. ஒரு நாள் பெரிய நம்பி அவரது வீட்டுக்கு வந்து பார்த்து மனம் கலங்கிவிட்டார். 

மாறநேரி நம்பிக்கு எல்லாவித கைங்கர்யங்களையும் செய்தார் பெரிய நம்பி. அவரைக் குளிப்பாட்டுவது முதல், நோய்க்கு மருந்திட்டு, அத்துழாய் மூலம் உணவு கொடுத்து அவரைப் பார்த்துக்கொண்டார். 

ஒரு நாள் இராமானுஜர், மாறநேரி நம்பிகளின் குடிசைக்கு வந்து இந்த நிகழ்வைப் பார்த்தவுடன், பெருமாளிடம் வேண்டிக்கொள்ள மாறநேரி நம்பியின் நோய் அவரை விட்டு நீங்கியது. பெரிய நம்பியின் கைங்கர்யத்தால்தான் ஆளவந்தாரின் பிரசாதம் தன்னை விட்டு நீங்கிவிட்டது என்று மிகவும் மனம் வருந்திய மாறநேரி நம்பியின் ஆச்சார்ய பக்தியைக் கண்டு இராமானுஜர் மீண்டும் பெருமாளிடம் வேண்டிக்கொள்ள, நோய் மாறநேரி நம்பியை மீண்டும் அடைந்தது என்பார்கள். 

மாறநேரி நம்பி, ஆளவந்தாரின் திருக்கரத்தால் திருவிலச்சினை அணிந்துகொண்ட (சங்கு சக்ரம் வலது இடது தோள்களில்) தம்முடைய சரீரம் விழும்போது, வைணவரல்லாத தம்முடைய உறவினர்களிடம் கொடுத்துவிட வேண்டாம் என்று பெரிய நம்பியிடம் வேண்டிக்கொண்டார். 

சிறிது காலத்தில் மாறநேரி நம்பி பரமபதம் எய்தினார். அவரது சரம உடலுக்குச் செய்யவேண்டிய கிரியைகளை பெரிய நம்பியே செய்தார். சிறந்த வைணவருக்குச் செய்யும் எல்லாக் கிரியைகளையும் செய்து எரியூட்டினார். 

இதனால் திருவரங்கத்தில் இருந்த அந்தணர்கள் முகம் சுளித்தனர். பிராமண குலத்தில் பிறந்து, குலத்தால் தாழ்ந்தவனுக்கு ஈமக் கிரியைகளைச் செய்ததால், அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க எண்ணினார்கள். இராமானுஜரிடம் சென்று அவர்களின் அதிருப்தியையும் கோபத்தையும் தெரிவித்தனர். இராமானுஜர் காலத்தில் அந்தணர்களில் சிலர் எப்படி இருந்தனர் என்பதை இந்த நிகழ்வு தெரிவிக்கும். ஏன், கோயில் நம்பியே இராமானுஜரிடம் திருவரங்கம் கோயிலை ஒப்படைக்க விரும்பாமல் இருந்தார் என்பதைப் பார்த்திருக்கிறோம். இன்னும் பல நிகழ்வுகளையும் பார்ப்போம். 

இராமானுஜர், அவர்களைக் கூட்டிக்கொண்டு பெரிய நம்பியின் இல்லத்துக்குச் சென்று, எதற்காக மாறநேரி நம்பிக்கு அந்திமக் கிரியைகள் செய்தீர்? எந்த சாஸ்திரம் இப்படிச் செய்யச் சொல்லியிருக்கிறது? என்று மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கேட்டார். அதற்கு பெரிய நம்பி,   

“பாகவதர்களுக்குச் செய்யும் கைங்கர்யங்களுக்கு நாம் வேறு ஒருவரை நியமிக்க முடியாது. நாமே செய்ய வேண்டும்”. அடியேன் இராமரை விட உயர்ந்தவன் கிடையாது. இராமர், பறவையான ஜடாயுவிற்கு அந்திமக் கிரியைகள் செய்தார். மாறநேரி நம்பி விதுரரை விட த் தாழ்ந்தவர் இல்லை, அடியேனும் தர்மபுத்திரரைவிட உயர்ந்தவனும் இல்லை. குலத்தால் தாழ்ந்த விதுரருக்கு தர்மபுத்திரர் இறுதிச் சடங்கைச் செய்யவில்லையா? 

நம்மாழ்வார், திருவாய்மொழியில், பயிலும் சுடரொளி மூர்த்தியை, நெடுமாற்கு அடிமை செய்வேன் போல், பாசுரங்களில் பாகவதர்களுக்குச் செய்யும் சேவையைப் பற்றிச் சொல்லவில்லையா?  அவை வெறும் தத்துவங்களா? அவற்றைப் பின்பற்ற வேண்டாமா என்று கேட்டார். 

இராமானுஜர், பெரிய நம்பியின் குணத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திய மகிழ்ச்சியில் அவரை விழுந்து வணங்கினார். 

எந்த நல்ல தத்துவங்களையும் கற்றுக்கொண்டால், பாராட்டினால் மாத்திரம் போதாது, அவற்றை உண்மையாகக் கடைபிடிக்க வேண்டும். ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் வெற்று கடலோசை அல்ல. அவைகளை ஒரு ஸ்ரீவைணவன் உண்மையாக க் கடைபிடிக்கவேண்டும் என்பதைத் தன் செயலால் பெரிய நம்பி காண்பித்துக்கொடுத்தார். எவ்வளவு பெரிய உதாரண புருஷர் அவர். பெரிய நம்பியின் வரலாற்றை இன்னும் காணப் போகிறோம். 

அதற்கு முன்பு, இந்த வாரத்திற்கான பாசுரம், திருவாய்மொழி 8ம் பத்தில் பத்தாவது திருவாய்மொழியில் முதல் பாசுரம். 

 ##நெடுமாற்கடிமை செய்வேன்போல்*  அவனை கருத வஞ்சித்து*

தடுமாற்றற்ற தீக்கதிகள்*  முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்*

கொடுமாவினையேன் அவனடியார் அடியே* கூடும் இதுவல்லால்*

விடுமாறென்பதென்? அந்தோ!* வியன் மூவுலகு பெறினுமே? 

இந்தப் பாசுரம், பகவானுக்குச் செய்யும் தொண்டைவிட அவனது அடியார்களான பாகவதர்களுக்குச் செய்யும் தொண்டே மிக உயர்ந்த பேறு என்று விளக்குகிறது. 

பொருள்:  திருமாலுக்கு அடிமை செய்கிறவனைப் போல நான் நினைத்த மாத்திரத்திலேயே என்னுடைய தடுமாற்றங்கள் நீங்கின. என் நல்வினை, தீவினை முழுவதுமே என்னை விட்டு நீங்கிவிட்டன.  கொடிய தீவினைகள் உள்ள நான், திருமாலின் அடியார்களின் திருவடிகளைத் தவிர (அவர்களுக்கு அடிமையாக இருப்பதைத் தவிர) வேறு என்ன வேண்டும்? மூன்று உலகங்களின் செல்வங்களைப் பெற்றாலும், அடியார்களுக்குச் செய்யும் கைங்கர்யங்களை விடுவேனோ? 

விளக்கம்: எம்பெருமானிடத்தில் உண்மையாக அடிமை செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றாலும், அந்த Bபாவனை வந்த மாத்திர த்திலேயே என்னுடைய பாவங்களெல்லாம் உருக்குலைந்து போயின.  பகவானுக்கு அடிமைப்படுவதனாலேயே இத்தகைய நன்மை விளையும் என்றால், அவனது பாகவதர்களுக்கு அடிமைப் படிவது இதனினும் சிறந்த நன்மைகளை விளைவிக்கும் அன்றோ?   பாகவதர்களுக்கு அடிமை செய்வது வேண்டுமா இல்லை மூவுலகின் நிதி வேண்டுமா என்று கேட்டால்,  மூவுலகின் ஐஸ்வர்யங்களும், எம்பெருமானின் பாகவதர்களுக்கு அடிமை செய்வதை விட உயர்ந்ததாகிவிடாது என்கிறார். 

பதம்: நெடுமால்-சர்வேச்வரன், தீக்கதிகள் முற்றும் – என்னிடம் இருந்த தீவினைகள் எல்லாமே முழுமையாக, தடுமாற்றற்ற – நிச்சயமாக, சந்தேகமே இல்லாமல், தவிர்ந்த சதிர் நினைந்தால் – என்னைவிட்டுப் போன வழியை நினைத்தால், வியன் மூவுலகு – விரிவான மூன்று உலகங்களையும், கொடுமா வினையேன் – பெரும் பாவியாகிய நான்,  விடுமாறு என்பதென் – இதனை விடும் ஆறு என்பது என் என்று பிரிக்க வேண்டும்.  பாகவத அடிமைத்தனத்தை விடுவது என்பது உண்டா? 

வெறும்ன எம்பெருமானை நினைத்தால் மாத்திரம் போகாது. என்னுடைய தீவினைகள் முற்றிலும் என்னை விட்டு அகல வேண்டும் என்றால், எம்பெருமானின் அடியார்களுக்குத் தொண்டு செய்து வாழ்வதே சரியான வழி. 

பெரிய நம்பியின் செயல் இந்தப் பாசுரத்திற்கு உரையாக அமைந்திருந்ததைப் பார்த்தீர்களா? 


இனி அடுத்த வாரம் தொடர்வோம்...

========================================================================


மனசாட்சியம் - 

KGY Raman


" அது அந்தக் காலம் " 


" மனிதனை மனிதன் ஏச்சுப் பிழைத்தது அந்தக் காலம் 

மடமை நீங்கி நாம் உரிமை பெறுவது இந்தக் காலம் "

இது நகைச்சுவை நடிகர் என் எஸ் கிருஷ்ணன் அவர்களுடைய ஒரு காமெடிப் பாட்டு. இந்தப் பாட்டில் இதற்கு அப்புறம் சாத்திரம் படித்தது அந்தக் காலம் சரித்திரம் படிப்பது இந்தக் காலம் என்று வரும். சாத்திரம் என்றால் பல்லி சொல்லுக்கு பலன் பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது போல் கற்பனை செய்து கொண்டு எழுதப்பட்ட வரிகள் இவை என்று நினைக்கிறேன். கணிதம் வானவியல் மருத்துவம் எல்லாமே சாஸ்திரங்களாக சொல்லிக் கொடுக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது அல்லவா. ஏதோ ஒன்றுக்கு எதிர்ப்பு என்று வந்துவிட்டால் கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக வெறுப்பது என்பது சாதாரணமாக மனித இயல்பு. 

இப்போது எதற்கு இந்த விசாரம் என்று கேட்கிறீர்களா ? வெள்ளி நாணயங்களை என் பாட்டி சேமித்து வைத்து தங்கம் வாங்கியதைப் பற்றி ஒரு பதிவில் நான் குறிப்பிட்டு இருந்தேன். அதைப் படித்துவிட்டு நண்பர் ஜீவி " நான் ஒரு பக்கம் சிங்கம் போட்ட ஸ்டீல் நாணயங்களைத் தான் பார்த்திருக்கிறேன். வெள்ளி நாணயம் என்று சொல்கிறீர்களே " என்று ஒரு கருத்துக் கொடுத்திருந்தார். அதற்கு விடை சொல்லும் முயற்சியோடு இந்த பதிவைத் தொடங்குகிறேன். 

வெள்ளி ஒரு ரூபாய் நாணயம் மட்டுமல்ல,  அரை ரூபாய்,  கால் ரூபாய் நாணயங்கள் கூட,  கிட்டத்தட்ட சுத்தமான வெள்ளியிலேயே கிடைத்த காலத்தில் எனக்கு ரொம்ப சின்ன வயது.‌ கால் ரூபாய்க்குக் கீழே இரண்டணா ஓரணா எல்லாம் நிக்கலில் வார்க்கப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல ஒரு ரூபாய் நாணயத்தில் மட்டும் என்றில்லை காலணா செப்பு நாணயத்தில் கூட " மொட்டைத் தலை ராஜா " என்று அறியப்பட்ட எட்டாவது எட்வர்ட் முகம் பதிக்கப்பட்ட நாணயங்கள் வழக்கத்தை விட சற்று எடை கூடி இருக்கும்.  அந்த நாட்களிலேயே அந்த மொட்டை தலை ரூபாய் நாணயத்திற்கு ஒன்றரை ரூபாய் மதிப்பு இருந்தது. 

தங்க நகைகள் செய்யும் ஆசாரிகளிடம் 8 முதல் 10 வரை வெள்ளி நாணயங்களை கொடுத்து அவற்றைக் கொண்டு வெள்ளி குங்குமச்சிமிழ் தயாரிக்கச் சொல்லுவதும் உண்டு .  லண்டனில் தங்கத்தில் வார்த்த நாணயங்கள் வழக்கில்  இருந்த காலம் உண்டு என்று சொல்கிறார்கள். அதனால்தான் பவுனுக்கு சவரன் என்ற பெயர் வந்தது என்றும் சொல்வார்கள். ( Souvereign ) .  நமக்கு இது பற்றி சரியாகத் தெரியாது.

எனவே வெள்ளி ரூபாய் நாணயங்கள் என்பது கற்பனை அல்ல என்பதை மீண்டும் உறுதி செய்கிறேன். தாமிரம், தாமிரம் கலந்த நிக்கல், என்று படிப்படியாக மதிப்பு இழந்து அலுமினியத்தில் வந்து நின்றது நமது நாணயம். இப்போது நாணயங்கள் என்பதே காணப்படுவதில்லை என்பதே உண்மை. 

என் அம்மாவின் அப்பா அரசு உத்தியோகத்தில் இருந்தாராம். சம்பளம் வாங்கும் போது ஒரு பைசா நாணயங்கள் பேப்பரில் ரோல் செய்து வருமாம். அதில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு ரோல் சம்பளத்தின்போது வாங்கி அவர்களது செலவுக்குத் தருவார் என்று எங்கள் அம்மா சொன்னது நினைவுக்கு  வருகிறது.

அந்தக் காலத்தில் பத்து ரூபாய் நோட்டு என்பது குமுதம் சைஸை விட சற்று சிறிதாக இருக்கும். பத்து ரூபாய்க்கு அவ்வளவு மதிப்பு.‌ நூறு ரூபாய் நோட்டு எல்லாம் நாங்கள் பார்த்ததே இல்லை. ரூபாய் நோட்டு என்றாலே ஒன்று இரண்டு ஐந்து பத்து அவ்வளவுதான். இதில் இரண்டு ரூபாய் நோட்டு என்னை மிகவும் கவர்ந்த விஷயம். அழகான சிவப்பு ஜாதி நிறத்தில் இருக்கும். 

இன்றைய நிலவரப்படி சில நாடுகளில் 500 தான் மிகச்சிறிய பண நோட்டு என்று சொல்கிறார்கள். நாமும் அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன். பிச்சைக்காரர்களுக்கு பத்து ரூபாய் போடும் நாட்கள் அல்லவா இவை. 

மொட்டைத் தலை ராஜா காலணா எடை அதிகமாக இருந்தது என்பது ஒரு பக்கம் என்றால் மறுபக்கத்தில் உலோகத்தை சேமிக்க வேண்டும் என்ற கொள்கை காரணமாக ஓட்டைக் காலணாக்கள் வந்தன.‌ 

பிரிட்டிஷ் இந்திய அரசின் நாணயங்கள் ஒரு புறம் புழக்கத்தில் இருக்க,  திடீரென்று சில சமயம் நம்மை ஏமாற்றுபவர்கள் யாராவது ஹைதராபாத் நிஜாம் காசு, புதுக்கோட்டை அம்மன் காசு, திருவாங்கூர் சமஸ்தானத்து சங்கு என்று நினைக்கிறேன் அந்த காசின் பெயர் சரியாக நினைவில்லை, இவையெல்லாம் திருவிழா இருட்டில் நமக்கு வந்து சேர்ந்த காலம் உண்டு. அதிக மின்சார வசதி இல்லாத அந்த நாட்களில் பெரிய பெரிய காடா விளக்குகளை வைத்துக்கொண்டு பட்டாணி கடலை இலந்தப் பழம் என்று வியாபாரம் செய்பவர்கள் சர்வ சாதாரணமாக இந்த மாதிரி வேறு சமஸ்தானத்துக் காசுகளைக் கொடுத்து விடுவார்கள்.‌ இதில் இன்னொரு வேடிக்கை. அம்மை நோய் வந்தால் வேப்பிலையை குழைத்து அரைத்து அதை தடவுவதுடன் புதுக்கோட்டை அம்மன் காசால் ஒற்றி எடுப்பதும் உண்டு. புதுக்கோட்டை சமஸ்தானத்து அம்மன் காசுகளில் புவனேஸ்வரி அம்மன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். 

ஐந்து கிராம் எடை கொண்ட மொட்டை ராஜா காலணா நம்மிடம் 200 இருக்குமானால், (அதாவது மூன்றேயரைக்கால் ரூ) ஒரு கிலோ தாமிரம் இருப்பதாகப் பொருள். வெள்ளி நாணயங்கள் படிப்படியாகப் புழக்கத்திலிருந்து குறைக்கப்பட்ட போது,  பலர் அவற்றைச் சேமித்து வைத்திருப்பார்கள் என்று திடமாக நம்புகிறேன்.

வெள்ளி நாணயங்கள் பற்றிய விபரங்கள் நண்பர் ஜி வி க்கும் தெரிந்திருக்கும் என்று தான் நான் நினைத்தேன். அவர் பதிவிட்ட கருத்துக்கள் எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!