11.11.26

ஆயுள் பத்து இருபது வருடங்கள்தாம் என்று தெரிந்தும் நாயோ பூனையோ வளர்ப்பது ஏன்? சரோஜாதேவி தொடர்கதை இறுதிப் பகுதி.

 

கேள்வி பதில்கள் : 

நெல்லைத்தமிழன் : 

1. எல்லாக் கோயில்களையும் அரசு ஒரு கூரையின் கீழ் நடத்தும்போது, வருமானமுள்ள கோயில் வருமானமற்ற கோயில், வருமானம் இருந்தால் இந்த இந்த சௌகரியங்கள் என்றெல்லாம் செய்வது சரியா?  தன் குழந்தைகளை, அவர்கள் சம்பளத்தைப் பொறுத்து நடத்துகின்ற மனநிலை அல்லவா இது?    

# இதில் பலவித நியாயங்கள் அடிபடும். வருமானம் நிறைய இருக்கிற கோயிலுக்கு வரும் திரளான பக்தர்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் செய்து கொடுப்பதில் பெரிய தவறு ஏதும் இல்லை.  

என்னைப் பொருத்த வரையில்,  ஊரில் இருக்கும் கோயிலைச் சரியான நிலையில் வைத்திருக்க மக்களுக்கு  ஆர்வம் இருக்க வேண்டும். அது இல்லாதவரை,  ஏழைக் கோயில்கள் ஏழைக் கோயில்களாகவே தொடரும்.

2.  நம் அனுபவங்களை எழுத ஆரம்பித்தால், அந்த காலகட்டத்தில் நடந்த அநீதிகள், அனுபவித்த கஷ்டங்களையும் திரும்பிப் பார்ப்பதாக ஆகிவிடாதா? அதனால் என்ன பிரயோசனம்?  

# தற்புகழ்ச்சியையும்,  தான் அனுபவித்த சிரமங்களையும் அதிகம் பேசாது,  தன் அனுபவங்கள் கற்றுத்தந்த பாடம் என்ன என்ற கண்ணோட்டத்தில் எழுதினால் அது சரியாக அமையும் என்பது என் எண்ணம்.

& ஏதோ ஒரு மன ஆறுதல். அவ்வளவுதான்! 

3.  மிருகங்களைப் பார்க்க, மிருகக்காட்சி சாலைக்குப் போவதில் விருப்பமா இல்லை அதன் வாழ்விடங்களில் சஃபாரி முறையில் பார்ப்பது இஷ்டமா?   

# சஃபாரி நான் போனதில்லை.  வன விலங்குகளை காட்சிச் சாலையில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.‌ என் மாதிரி நபருக்கு சஃபாரி ஒத்து வராது.

& சஃபாரி எல்லாம் பெரிய ரிஸ்க். மிருகக் காட்சி சாலையில் கொஞ்சம் பாப் கார்ன் கொறித்தபடி ஒவ்வொரு மிருகமாகப் பார்த்து ஹலோ சொன்னால் அது போதும்! 

4. நிச்சயம் ஆயுள் பத்து இருபது வருடங்கள்தாம் என்று தெரிந்தும் நாயோ பூனையோ வளர்ப்பது ஏன்? எதற்கு அதீத அன்பு செலுத்தி பிறகு வருத்தப்படுகிறார்கள்?  

# அன்பு செலுத்துவதும், பிறர் நம்மிடம் காட்டும் அன்பினால் மகிழ்ச்சி அடைவதும் மனித இயல்பு.  ஒரு வேளை அது கிடைக்காவிட்டால் அல்லது இன்னும் வேண்டும் என்று நினைத்தால் செல்லப் பிராணிகளை நாடுவோமோ ? 

அவை இனி இல்லை என்று வரும்போது கொஞ்ச காலம் துயரப் படுவதும் புரிந்து கொள்ளக் கூடியதுதான்.

& எனக்கும் அதே ஃபீலிங்க்தான். செல்லப் பிராணிகள் வளர்ப்பது வேண்டாத விவகாரம். 

5. வயதாகும்போது இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவது குறைவதன் காரணங்கள் என்ன? எல்லோரும் தூங்கிக்கொண்டிருக்கும்போது நீங்க கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டிருந்திருக்கிறீர்களா?

# பலமுறை. அடிக்கடி. வேலைச்சுமை அறவே நின்றபின் தூக்கம் குறையத் தானே செய்யும் ?

மீண்டும் உறங்க என்ன செய்ய வேண்டும் என்பது இன்னும் புரியாத புதிராக இருக்கிறது.‌

& எனக்கும் இது நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. யாருக்காவது என்ன remedy என்று தெரிந்தால் சொல்லுங்கள். கவலைப்பட எதுவும் இல்லை என்றாலும் சில இரவுகள் சிவராத்திரிதான்! 

6. படித்தால் மட்டும் போதுமா, பார் மகளே பார் போன்ற பழைய படங்களின் பாடல்களை நினைவில் வைத்திருந்து ரசிக்க முடிந்த நமக்கு, ஜெயிலர் 1, 2ல் வந்த பாடல்கள் போன்ற சமீப படங்களின் பாடல்கள் வேப்பங்காயாக கசப்பதன் காரணம் என்ன?

# இப்போது சினிமா இசை இயந்திரத் தனமாக கோர்க்கப் படுகிறது என்று தோன்றுகிறது. அற்ப ஆயுளுக்கு இதுவும் ஒரு காரணம்.

= = = =  = = = = =====+========= ===== ==== ====== ======= =======   =========   =======   ======

மனசாட்சியம் - 40
KGY Raman

" நான் நினைத்தால் தீபாவளி "

தீபாவளியின் முக்கியத்துவத்தைப் பற்றி நான் விவரமாக சொல்லப் புகுந்தால் , " என்னையா,  இது கூட எங்களுக்கெல்லாம் தெரியாதா ? இதை எல்லாம் கூட நீர் எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா ? " என்று நீங்கள் கேட்கலாம். 

அகில இந்திய அளவில் தீபாவளி போல் மிகவும் விரும்பப்படும் பண்டிகை பேரு உண்டா என்று எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. என்னதான் நவராத்திரி சங்கராந்தி என்று பரவலாக கொண்டாடினாலும் அந்த தீபாவளிக்கு இருக்கிற மகத்துவம் வேறதானே. மிக இளம்பிராயத்திலேயே, பஞ்சாங்கம் அல்லது காலண்டர் வந்தவுடன், தீபாவளி எந்த தேதியில் வருகிறது அன்று என்ன கிழமை என்று அரக்கப் பறக்க தேடிப் பார்ப்போம்.

இன்று போலவே, அன்றும் தீபாவளி என்றால், புதுத் துணி, வாண வேடிக்கை,  பலகாரம் பட்சணம் என்று இருந்தாலும் இன்றைய நிலவரம் வேறு அன்றைய நிலவரம் வேறு. 

என்னுடைய சிறு பிராயத்தில் பிறந்தநாள் கொண்டாடி புது டிரஸ் வாங்குவது என்பது வழக்கத்தில் இல்லை. உண்மையில் என் 13 வது வயது வரை என் சரியான பிறந்தநாள் என்ன என்று எனக்குத் தெரியாமல் தான் இருந்தது. எனவே வருஷத்தில் புதுத் துணி வாங்குவது என்றால் அது தீபாவளிக்குத் தான் என்று எழுதப்படாத நியதி ஒன்று அமலில் இருந்தது. இப்போது போல, ரெடிமேடு கடைக்குப் போனோம்,  வாங்கினோம் வந்தோம் என்று இருக்குமா ? நிச்சயமாக இல்லை. முதலில் துணி வாங்க வேண்டும். " இவனுக்கு அரைக்கை சட்டை தைக்க எவ்வளவு துணி ? " என்று வீதி தையற்காரரைக் கேட்க வேண்டும். அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து,  'ஒன்றரை கஜம் வாங்குங்க' என்று எஸ்டிமேட் கொடுப்பார். அதன்படி குழந்தைகளுக்குத் துணி வாங்கி அவரிடம் தைக்கக் கொடுக்க வேண்டும். அப்பா வேட்டி துண்டு வாங்கிக் கொள்வார். அம்மாவுக்கு ஒரு புடவை - ரவிக்கை ஏற்கனவே தைக்கப்பட்டு இருப்பில் இருக்கும். 

தீபாவளியன்று காலை வெடி வெடிக்க வேண்டிய நேரம் வரையிலும் தையற்காரர் இதோ அதோ என்று போக்கு காட்டுவாரே தவிர , சட்டையை தைத்துக் கொடுக்க மாட்டார். பாவம் அவர் தான் என்ன செய்வார். வருஷத்தில் ஒரு நாள் வருகிற தீபாவளி சமயம் தான் அவருக்கு பெரிய வரும்படி வரக்கூடிய மாதம். எத்தனை பேர் துணி கொண்டு வந்து தைக்கக் கொடுத்தாலும் மறுக்காமல் வாங்கிக் கொள்வார். பெரும்பாலும் சிறுவர்கள் உடைகள் தான் கடைசி ராங்க்.  தையல் கூலி, சிறுவர் உடுப்புகளுக்குக் கம்மியாகத் தானே வரும் ! என் முக்கால் கை சட்டைக்கு நான் கொடுத்த  தையல் கூலி ஒன்றரை ரூபாய் என்று நினைவு. துணியையும் சேர்த்து புது சட்டையின் விலை ஐந்து ரூபாய்க்கும் கீழே வரும். எங்கள் தெரு தையல்காரர் எனக்கு நெருங்கிய நண்பர். அவருக்கு வாடகைக் காமிராவில் படம் எடுத்துக் கொடுத்திருக்கிறேன். பொழுது போகாத போது அவர் கடையில் உட்கார்ந்து அவருடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பேன். தைப்பதிலேயே மும்முரமாகக் கண்ணும் கையும் காலும் வேலை செய்தாலும், காது மட்டும் நான் சொல்வதைக் கேட்கும் - வாய் அதற்கு பதிலும் சொல்லும். 

அதிகாலை வேளையில் விடியும் முன் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதே ஒரு தனி அனுபவம் தான். சீயக்காய்ப் பொடிக் கசப்பு உதடுவழியாக நாக்கிற்குச் சென்று கஷ்டப்படுத்தும். 

என்ன இருக்கிறதோ இல்லையா எங்கள் வீட்டு தீபாவளிப் பலகாரத்தில் வெள்ளை அப்பம் என்பது கட்டாயம் இருந்தே தீரும். அது எங்கள் வீட்டு வழக்கம் என்று பக்தியுடன் சொல்வார்கள். இந்த வழக்கம் என் தலைமுறையிலேயே காணாமல் போய்விட்டது. இப்போது வெள்ளையப்பம் என்றால் என்ன என்று கேட்கும் நிலைக்கு வந்து விட்டோம். பலகாரங்கள் எல்லாம் சாப்பிடும் முன் தீபாவளி மருந்து ஒரு நெல்லிக்காய் அளவு தின்றாக வேண்டும். பல பேருக்கு தீபாவளி மருந்து என்பதே ஒரு பட்சணம் போல. 

அடுத்து , பட்டாசு வெடிப்பது.  எங்கள் பக்கத்து வீட்டில் வசதியான ஒரு குடும்பம் இருந்தது. தீபாவளிக்குப் பத்து நாட்கள் முன்பிருந்தே தினசரி மாலை 7 மணிக்குத் தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் பட்டாசும்  மத்தாப்புமாக வெடித்துத் தீர்ப்பார்கள். அதைப் பார்த்துப் பார்த்து பட்டாசு ஆசையே மிகவும் குன்றிப் போய்விட்டது. இவ்வளவுக்கும் ஒரு காலத்தில் ரோலிங் கேப் துப்பாக்கி வேண்டும் என்று சத்தியாக்கிரகம் செய்து தோற்றவன் நான்.  பட்டாசு மத்தாப்பு கொளுத்தும் போது சிறு சிறு விபத்துகள் ஏற்படும். ஒரே ஒரு முறை ஏரோப்ளேன் செலுத்தப் போய் அது தாறுமாறாக பறக்க ஆரம்பித்து, பட்டாசு வைத்திருந்த கூடையில் விழுந்து எல்லா பட்டாசு மத்தாப்பும் தொடர்ந்து வெடித்து எரிந்து , கோயில் திருவிழா வாணவேடிக்கை போல் ஆகி விட்டது. நடுவில் சித்தப்பாவின் புது வேட்டியில் புகுந்து புறப்பட்டதில் வேட்டியில் பெரிய ஓட்டை. நல்ல காலமாக அவருக்கு ஏதும் காயம் படவில்லை.

சூரிய உதயத்துக்கு முன் எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டும் -  அப்போதுதான் கங்கையில் குளித்த பலன் முழுவதுமாகக் கிடைக்கும் என்று சொல்லி, எங்களை அதிகாலைப் பொழுதிலேயே எழுப்பி விட்டுவிடுவார்கள். இப்போதும் பல வீடுகளில் அந்த பழக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன். மிகுந்த கண் எரிச்சலுடன் தூக்கம் பாதி கலைந்த நிலையில் எழுந்து,  எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது ஒரு தனி அனுபவம். அதன் சிறப்பு அப்போது எங்களுக்குப் புரிந்ததில்லை. 

அன்றாடம் சைக்கிள் வண்டியில் ஸ்வீட் காரம் வைத்து தள்ளிக்கொண்டு ஒரு வட இந்தியர் வருவார். எல்லா பட்சணங்களும் மிகவும் நன்றாக இருக்கும். அவர் பஞ்சகச்சம்  ஜிப்பா தொப்பி என்று அச்சு வட இந்திய ஆடை அணிகளில் வலம் வருவார். அவருக்கு ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்று நாங்கள் பெயர் வைத்திருந்தோம். அக்காவின் தலை தீபாவளி  சமயம் அவரை வீட்டுக்கு வந்து ஸ்வீட் செய்து கொடுப்பீர்களா என்று கேட்டதற்கு நூறு ரூபாய் கொடுத்தால் வருகிறேன் என்று சொன்னார். அந்தக் காலத்தில் நூறு ரூபாய் என்பது மிக மிகப் பெரிய தொகை. சராசரி குடும்பத்தின் மாத வருமானமே 150 ரூபாயாக இருக்கும். அக்கா தலை தீபாவளிக்கு எல்லா பட்டணங்களும் அம்மாவே செய்தார். அதில் அவரையும் அறியாமல் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டு அல்வா மிகச் சிறப்பாக அமைந்துவிட்டது. 

தீபாவளியின் இன்னொரு சிறப்பு அம்சம் நண்பர்களுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்புவது.  தெருவோரத்தில் தீபாவளி வாழ்த்து அட்டைகளை பரப்பி விற்பனை செய்வார்கள் ரூபாய்க்கு 12 முதல் ரூபாய்க்கு நாலு மட்டும் என்று பல வகைகளில் கிடைக்கும். இதுவும் தற்சமயம் மறைந்து போன ஒரு வழக்கம் என்று ஆகிவிட்டது.

இப்போதெல்லாம் தீபாவளிப் பண்டிகை என்றால் அந்த அளவு திரில் இல்லையோ என்று எனக்கு அவ்வப்போது தோன்றும். பேரப்பிள்ளைகள் எல்லாம் தீபாவளி எப்போது வருகிறது என்பதில் எல்லாம் சிறிது அளவு கூட ஆர்வம் காட்டுவதில்லை. புது உடைகள் கூட அவர்களுக்கு எந்த விதமான விசேஷ  சுவாரசியத்தையும் கொடுப்பதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. இது என் கற்பனை என்றாகி விட்டால் என்னை விட சந்தோஷப்படுபவர் யாரும் இருக்க முடியாது.

=== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== ==== === ==== ==== ==== 

படமும் பதமும் : 

நெல்லைத்தமிழன் : 


போன்சாய் மரங்கள் (பெரிய மரத்தை குறுகலாக சிறிய அளவில் வளர்ப்பது) உங்களைக் கவர்ந்திருக்கிறதா? இப்படி ஒரு மரத்தைச் செயற்கை முறையில் போன்சாய் செடியாக வளர்ப்பது சரியா? இதையே மனித இனத்துக்கும் விரிவாக்கினால், உணவு, உடை, இடம் போன்ற அத்தியாவசியத் தேவைகள் மிகவும் குறைந்துவிடும், ஒருவருக்கு இப்போது என்ன ஆகிறதோ அதில் மூன்றில் ஒரு பகுதி கூட தேவையிருக்காது என்று எதிர்காலத்தில் இப்படி மனித இனத்தையும் போன்சாயாக மாற்றுவார்களா? (இந்தப் படம் மைசூரிலிருந்து பெங்களூர் வரும்போது வழியில் இருந்த கோயில் மற்றும் அதன் பூங்காவிற்குச் சென்றிருந்தபோது எடுத்தது)


முந்தைய படத்தில் சரியாகத் தெரியவில்லை என்று நினைத்தால் இதோ ஒரு குட்டி ஆலமரம் விழுதுகளோடு. ஆமாம் இப்படி குட்டியாக ஒரு மரத்தை வளர்க்கும்போது இலைகள் சிறியதாக ஆவதில்லை. பழங்களும் அப்படியே.. இதைக் கவனித்திருக்கிறீர்களா?  (உடனே மனித போன்சாயை மனதில் கொண்டுவராதீர்கள். கற்பனை உருவமே கொடூரமாக இருக்கும்)

படமும் பதமும்  2 - ஸ்ரீராம் 


எந்த ஊர் என்பவரே..  சொல்லவும் வேண்டுமோ.. 



= = = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற பகுதி  - சுட்டி : 21 : " நாநாவின் திட்டம் "

இனி  இறுதிப் பகுதி. 

மீதி நான்கு அல்லது ஐந்து வாரங்கள் எழுத இருந்த கதையை சுருக்கமாக இங்கே கொடுத்துள்ளேன். 

** நாநாவின் திட்டப்படியே எல்லாம் நடந்தது. சுந்தரும் அவனுடைய அப்பாவும் வீணாவின் கல்யாணத்தை நிறுத்த தாங்கள் செய்த சதியை  ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோரினர். அதை வீடியோவாக எடுத்து நாநா ஆனந்துக்கு அனுப்பினான். 

** வீணா ஆனந்த் திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. ஜயராமன் மற்றும் ஆனந்த் குடும்பத்தினருக்கு ரொம்ப சந்தோஷம். விமலா பாபா பற்றிய தன்னுடைய விருப்பத்தை ஜயராமனிடம் தெரிவித்தாள். 

** தன்னுடைய கல்யாணப் பத்திரிக்கையை தோழிகளுக்குக் கொடுக்கச் சென்ற விமலா தன்னுடைய கல்லூரி தோழி நீனாவை சந்தித்து உரையாடுகிறாள். அப்பொழுது பனானா எண்டர்பிரைசஸ்  பற்றி சொல்கிறாள். நாநா பற்றி விவரங்கள் அறிந்துகொள்ளும் நீனா, நாநாவை விரும்புகிறாள். பாபா விமலா கல்யாணத்தில் மாப்பிள்ளைத் தோழன் நாநாவும் மணப்பெண் தோழி நீனாவும் ஒருவரை ஒருவர் பார்த்து லவ்வுகின்றனர். 

இவர்தான் நீனா 

** நாநா & நீனா கல்யாணம் வெகு விமரிசையாக நடந்தது. 

சரோஜாதேவி கதையின் நீதி : 

1) ஒரு செயற்கை நுண்ணறிவு மற்றும் இரண்டு துடிப்பான, திறமை உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்தால் நிறைய சாதிக்கலாம். 

2) வலைப்பதிவுகளில் தொடர்கதை என்பது விஷப்பரிட்சை. எட்டு வாரங்களுக்குள் எழுதிமுடித்துவிட்டால் நல்லது. இல்லையேல் யாரும் தொடர்ந்து படிக்கமாட்டார்கள். 

3) தொடர்கதைகளுக்கு ஒவ்வொரு வாரமும் கவர்ச்சியான படம் ஒன்று தேவை. படம் பார்த்துக் கதை படிப்பவர்கள் அதிகம்! 

சுபம்! 

= = = = = = = = = 

காலை எழுந்தவுடன் தவளை (தொடர்ச்சி) 

ஏன் ‘காலை எழுந்தவுடன் தவளை’?

வாழ்வதற்கான ஓர் அற்புதமான காலகட்டம் இது. நீங்கள் உங்களுடைய பெருவாரியான இலக்குகளை அடைவதற்கான அதிகமான சாத்தியக்கூறுகளும் வாய்ப்புகளும் இன்று போல முன்பு ஒருபோதும் இருந்ததில்லை. மனித வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கான விஷயங்கள் அபரிமிதமாக உள்ளன. நீங்கள் செய்யக்கூடிய நல்ல விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் எவற்றைச் செய்வது என்பதைத் தீர்மானிப்பதற்கான உங்கள் திறன்தான் வாழ்வில் நீங்கள் என்ன சாதிப்பீர்கள் என்பதைத் தீர்மானிக்கின்ற முக்கியக் காரணியாக இருக்கிறது.

நீங்கள் பெரும்பாலான மக்களைப் போன்றவர் என்றால், செய்வதற்கு அளவுக்கதிகமான வேலைகளுடனும் அவற்றைச் செய்து முடிப்பதற்கு மிகக் குறைவான நேரத்துடனும் நீங்கள் திணறிக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் உங்கள் கைவசம் இருக்கும் வேலைகளைச் செய்து முடிக்கப் போராடிக் கொண்டிருக்கும்போதே, புதிய வேலைகளும் பொறுப்புகளும் பெருங்கடல் அலைகளைப் போல அடுத்தடுத்து உருண்டோடி வந்து உங்களை மேலும் திணறடிக்கும். உங்களால் ஒருபோதும் எல்லாவற்றையும் செய்து முடித்திருக்க முடியாது. சில வேலைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதைப் பொருத்தவரை நீங்கள் எப்போதும் பின்தங்கியே இருப்பீர்கள். உண்மையைக் கூறினால், உங்களுடைய பல வேலைகள் நிறைவுறாமல் கிடப்பில் இருக்கும்.

தேர்ந்தெடுப்பதன்மீது கவனம் செலுத்துங்கள். 

ஒவ்வொரு கணமும் எது உங்களுடைய மிக முக்கியமான வேலையோ, அதைத் தேர்ந்தெடுத்து, உடனடியாக அதைச் செய்யத் தொடங்கி, அதை வேகமாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பதற்கான உங்கள் திறன், நீங்கள் வளர்த்துக் கொள்ளக்கூடிய வேறு எந்தவொரு திறமை அல்லது பண்புநலனை விடவும் உங்கள் வெற்றியின் மீது மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தெளிவான முன்னுரிமைகளை நிர்ணயித்துக் கொண்டு, முக்கியமான வேலைகளை வேகமாகச் செய்து முடிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்கின்ற ஒரு சராசரி நபர், அளவுக்கதிகமாகப் பேசுகின்ற, அற்புதமான திட்டங்களை வகுக்கின்ற, ஆனால் செயலில் இறங்காத ஒரு மேதையைவிடவும் வாழ்வில் வெகுதூரம் முன்னேறுவார்.

(அடுத்த வாரம் முடியும்) 

80 கருத்துகள்:

  1. சரோஜா கதையின் நீதி 2, 3 என்னைக் கவர்ந்தது. அதே நேரத்தில் பல வருடங்களாக வந்த தொடர்கதையை, காத்திருந்து காத்திருந்து மாய்ந்து மாய்ந்து படித்த முந்தைய, அதற்கும் முந்தைய தலைமுறையை நினைத்துக்கொள்கிறேன்.

    படம் ஒரு கதைக்கு இன்றியமையாத்து. கதை படிப்பதில் ஆர்வம் இல்லாதவர்களையும் அது இழுக்கும்.

    தொடர்கதை முயற்சிக்குப் பாராட்டுகள். இன்றைய படத்தின் பெண்ணின் கூந்தல் ராமாயண பட கதாநாயகியை நினைவுபடுத்துகிறதே

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாகட்டும்.

    பதிலளிநீக்கு
  3. தீபாவளி பண்டிகை பற்றிய பகுதி சுவாரசியம்.

    இன்று அது மற்றொரு நாளே. இருந்தாலும் வீட்டில் மகனுக்காக பட்சணங்கள் செய்வது நடக்கிறது.

    தீபாவளி புதுத் துணி... ஆசை இருந்தபோது யூனிஃபார்ம். ஆசை இல்லாதபோது எது வாங்க நினைத்தாலும் வாங்க முடிந்த அளவு பணம்.பட்சணம்.....

    இந்த தீபாவளியில் நான் விரும்பிச் சாப்பிட்டு ருசித்தது மனைவியின், மச்சினியின் தீபாவளி மருந்து. டப்பாசெட்டி தீபாவளி மருந்துப் பொடியில் கிளறினதால் மச்சினி வீட்டு தீபாவளி மருந்து ஆஹா ஓஹோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மில் பெரும்பாலோரும் இளவயதில் ஏறக்குறைய ஒரே அந்தஸ்தில் இருந்திருப்பதால் என்னுடைய நினைவுகள் உங்களுடைய நினைவுகளுடன் ஒத்துப் போகிறது என்று நினைக்கிறேன். காலம் கடந்த பின் திரும்பிப் பார்த்தால் கஷ்டங்கள் கூட சுவாரஸ்யமாக தோன்றும் என்பது எழுதப்படாத விதி. அதனால்தான் மிகுந்த சிரமப்படுபவர்களை வைத்து எழுதிய பல கற்பனைக் கதைகள் பெரிதும் மதிக்கப்படுகின்றன.
      என் போலவே பலரும் நினைப்பதால் அது எனக்கு ஒரு விசேஷ மகிழ்ச்சியை கொடுக்கிறது. நன்றி.

      நீக்கு
    2. எனக்கும் தீபாவளி லேகியம் பிடிக்கும்.

      நீக்கு
    3. //ஏறக்குறைய ஒரே அந்தஸ்தில்// தலைமுறை தலைமுறையாக இப்படித்தான் இருக்கும் கேஜிஒய் சார். இப்போதைய ஜென்ஸீ, தங்கள் பெற்றோரிடமிருந்து பைக், கார், போன்ற பல விஷயங்களை எதிர்பார்ப்பாங்க. அவங்க பெற்றோர் தயங்கி தயங்கி மறுப்பாங்க. இன்னும் இருபது வருடங்கள் கழித்து, அவங்களும் (ஜென்ஸீ), அந்தக் காலத்துல என் அப்பா அம்மா ஒரு பைக் ஸ்கூட்டி வாங்கித் தந்ததில்லை. மத்தவங்க ஓட்டும்போது ஏக்கமா இருக்கும் என்றெல்லாம் சொல்வாங்க (வாய்ப்பு இருந்தால்). உங்க பெற்றோர் எழுதியிருந்தாங்கன்னா, அந்தக் காலத்துல காலைல இட்லி டிஃபனே எப்போதோ ஒரு தடவைதான் பண்ணுவாங்க, தினமும் டிஃபன் சாப்பிட ஆசை, ஆனால் என் பெற்றோர் தந்ததில்லைனு எழுதியிருப்பாங்க. பசங்க எதிர்பார்ப்பை பெற்றோர் பூர்த்தி செய்தால், பசங்க கெட்டுப் போயிடுவாங்கன்னு தெரியாதா?

      நீக்கு
    4. மிகவும் சரி

      நீக்கு
  4. சஃபாரி ரிஸ்கா? இது என்ன கதை? சமீபத்தில் இரு சஃபாரி சென்றுவந்தேன். அதில் உள்ள ஒரே ரிஸ்க், மிருகங்களைப் பார்க்க முடியாமல் போவதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஸ்க்கு என்பதை விட ஏமாற்றம் ஒரு சாத்தியக்கூறு என்று சொல்லி இருக்க வேண்டும்.

      நீக்கு
    2. சஃபாரி ஜீப்புக்கு திரும்பவும் காசு செலவழிச்சுப் போனோம் இல்லையா?

      நீக்கு
    3. நாங்க மிருகங்களை அதிகம் பார்த்தது சஃபாரியில் தான். மைசூரில் பார்த்தோம் குழந்தைகளுடன் போனப்போ. பின்னர் மும்பையில் பார்த்தோம். நாங்க முதல் முதலாக மும்பை சென்ற அந்தச் சரித்திரப் பிரசித்தி பெற்ற மும்பைப் பயணத்தின் போது. அப்போது சிங்க ராஜா பெரிசாகச் சத்தம் போட்டுக் கர்ஜிக்க வண்டியில் அமர்ந்து கொண்டு பார்த்துக் கொண்டிருந்த எங்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது. வாயை வேறே திறந்தாரா? பயம்மாத் தான் இருந்தது. என்ன ஒண்ணுனா நாங்க இருபது பேரும் கூண்டுக்குள் இருந்தோம். அவர் வெளியே இருந்தார். அவங்கல்லாம் அப்போப் பார்த்து அந்த இடத்தைக் கடக்க வேறே முயற்சி பண்ணினாங்க. வண்டியை ஓட்டுநர் பின்னால் செலுத்திக் கொண்டு போய் தூரக்க நிறுத்திட்டார். சமயத்தில் கும்பலாக வண்டியின் மேல் பாய்வாங்களாம். :)))))

      நீக்கு
    4. மைசூர் மிருகக்காட்சி சாலையில் மிருகங்களை சஃபாரி மூலம் பார்க்கச் சென்ற பார்வையாளர்களில் ஒருவரின் 2 அல்லது 3 வயதுப் பெண் குழந்தையை ஜன்னல் வழியாகப் புலி ஒன்று (ஆட்கொல்லி வகை என்றார்கள்) தூக்கிச் சென்றதையும் குழந்தையின் அழுகுரலும் அது இழுத்துச் சென்றதையும் பார்த்துக் கொண்டு அனைவருமே செய்வதறியாது தவித்ததையும் இப்போ நினைவு கூர்ந்தாலும் என்னால் மறக்கவே முடியாத ஒன்று. :(

      நீக்கு
    5. இங்கே 5 குடும்பத்துக்கு லேகியம் செய்து கொடுத்தேன்.ஒரே மகிழ்ச்சி.:)

      நீக்கு
  5. செல்லங்களை வளர்ப்பதில் பெரும் பாடம் கற்றுக் கொடுத்தது எங்கள் மீனா என்கிற அரோவானா மீன். பல ஆண்டுகள் தொட்டியில் வளர்ந்து கிட்டத்தட்ட 20'' நீளத்துக்கு வளர்ந்து திடீரென்று மறைந்தவள். அவளா அவனா என்று கூடத் தெரியாது. மிக மிக சிரமம்.

    பதிலளிநீக்கு
  6. தூக்கம் வராமல் தவிக்கும் இரவுகள் அதிகமாகி விட்டன.. இதோ இன்று காலை மணி 3 லிருந்து விழித்திருக்கிறேன். மணி மாலை 6.30:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படுத்தவாறே நாம ஜெபம் செய்யலாம் . அதில் தவறு ஏதுமில்லை .இறைவன் நம்மை மன்னிப்பார் . ஏனென்றால் இறைவன் கருணை மிக்கவர் என்கிற எண்ணத்தோடு தூக்கம் வராத நேரத்தில் உங்களுக்கு பிடித்தமான ஏதோ ஒரு மந்திரத்தை ஜெபியுங்கள் என்பதுதான் நான் தரும் ஆலோசனை. இதை நானும் கடைப்பிடிக்கிறேன் என்றாலும் மனது அமைதி அடைகிறதே தவிர தூக்கம் வருவது அவ்வளவு நிச்சயம் இல்லை.

      நீக்கு
    2. தூக்கம் வராவிட்டால் - கிடக்கட்டும் கழுதை என்று விட்டு விட வேண்டும்.

      நீக்கு
    3. நாம் இப்போது தூங்க வேண்டும் என்று நினைக்கக்கூடாது.    அடுத்த இரண்டு மணிநேரம் எப்படியாவது விழித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று மனதார நினைக்க வேண்டும்.  ஐந்து நிமிடத்தில் தூங்கி விடலாம்!

      நீக்கு
    4. ம்ம்ம்ம்ம் வல்லி, ராமன் சார், கௌதமன் சார், நமக்கெல்லாம் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்பதால் அது உறங்காதுனு எடுத்துக்கோங்க. நானெல்லாம் அப்படித் தான் சொல்லிண்டு இருக்கேன். அநேகமாகப் படுத்த உடன் தூங்கும் வழக்கமே இல்லை. அப்படித் தூங்கினாலும் 12 மணிக்கெல்லாம் முழிப்பு வந்துடும். அப்புறமா எப்படி நேரத்தைக் கடத்துவதுனு புரியாது. என்ன தான் ராம ஜபம் பண்ணினாலும் பல சமயங்கள் அதையும் மீறிக் கொண்டு நினைவுகள் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும். :( எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும் இப்போல்லாம் ஐந்தரை மணிக்கு எழுந்துடுவேன். இந்தியாவில் என்றால் நாலரை எப்போவுமே. இங்கே அப்படி எல்லாம் வேலைஇ இல்லை என்பதால் ஒரு மணி நேரம் சும்மாப் படுத்துக் கிடப்பேன். முகநூல் சிநேகிதி எனக்கு ஜாதிக்காய்ப் பொடி பரிந்துரைத்தார். அதெல்லாம் பலன் தரவில்லை என்பது தனி. :(

      நீக்கு
    5. ஸ்ரீராம் சொன்னாப்போல் எல்லாம் நினைச்சேன்னா நிச்சயமாத் தூங்காமல் "கொட்டுக்கொட்டு"னு தான் முழிச்சுண்டு இருப்பேன். என்னோட மைன்ட் செட்டிங் அப்படி. :)

      நீக்கு
    6. என்னுடைய பெரிய கஷ்டம் நிறைய தூக்கம் வருவது..   கடவுள் பாருங்க... அக்கரையில் உங்களையும் இக்கரையில் என்னையும் வைச்சிருக்கான்.  இக்கரைக்கு அக்கரை பச்சை.. 

      அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை
      அறியாத மானுடர்க்கு அக்கரையில் இச்சை!

      நீக்கு
    7. நம்மைப் போல் பலரும் இருப்பது ஒரு ஆறுதல். :))))

      நீக்கு
    8. மிக நன்றி சார். ராம நாமம் தான் கதி. ''அறியாத மனிதர்க்கு அக்கரையில் '' ஶ்ரீராம். தூங்கும் போது வரும் சில சொப்பனங்களைத் தவிர்க்க விழித்திருப்பதும் உண்டு:)

      நீக்கு
  7. அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா. நல்ல பாட்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறங்கா நகரம் எது? மதுரை?

      நீக்கு
    2. அட? மதுரை இந்த உறங்கா நகர் பட்டத்துக்குப் பேர் போனதாச்சே! அதான் நீ தூங்கறதில்லைனு நம்மவர் சொல்லுவார். ஆனால் எங்க ஊரிலே எல்லோருமா தூங்காமல் இருக்காங்க? எங்க வீட்டிலேயே அப்பா, அம்மா, அண்ணா, தம்பி எல்லாம் விடுமுறை நாட்களில் மத்தியானம், ராத்திரி இரண்டு வேளையும் தூங்குவாங்க. இப்போவும் தூங்கறாங்க. :( புத்தகம் படி தூக்கம் வரும்னு மாமியார், நாத்தனாரெல்லாம் சொல்லுவாங்க. புத்தகம் படிக்க ஆரம்பிச்சால் உள்ள தூக்கமும் போயிடும். :)))

      நீக்கு
    3. பாஸ் கிட்ட ரெண்டு வாரமா சாமி கிட்ட ஒரு ரூவா முடிஞ்சு வை..  படிக்க ஆரம்பிச்சாலே அல்லது படிக்க ஆரம்பிச்சாலும் தூக்கம் வருது..  நான் படிக்க நிறைய இருக்கு...  சாமி கிட்ட வேண்டி என்னைக் காப்பாத்து ன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்.

      நீக்கு
    4. ;))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

      நீக்கு
  8. பொன்சாய் கலை எனக்குப் பிடிக்காத ஒன்று. எனக்கும் கணவருக்கும் பெரிய வாக்குவாதமே நடக்கும். பலவித மரங்கள் வைத்திருந்தார். இரண்டு மூன்று மரங்கள் சில நூறு இப்போ சில ஆயிரம் விலை இருக்கும் தெரிந்தவர்களுக்குக் கொடுத்து விட்டேன். அவர் மறைந்த அதிர்ச்சி விலகாத நிலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் போன்சாய் பிடிக்காது தான்.

      நீக்கு
    2. போன்சாய் என்பது மரங்களை சித்திரவதை செய்வது என்று எனக்குத் தோன்றும். ஆனாலும் அவற்றைப் பார்ப்பதில் எனக்கு ஒரு சுவாரசியம் உண்டு. இது சரியான மனப்போக்கா அல்லது ஒரு முரண் பட்ட மனமா என்று எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை

      நீக்கு
    3. எங்கள் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தால் ஆளுயர தென்னை மரத்தில் ஆறேழு குலை தென்னகாய்கள்..

      நீக்கு
    4. நல்லவேளை... கதவு வழியே பார்த்தால் குலை தென்னங்காய்கள் தெரியலை. தெரிந்திருந்தால்......

      நீக்கு
    5. ஸ்ரீராம் சொல்லுவது யாழ்ப்பாணத்துத் தென்னை மரமோ? ஏனெனில் அங்கே ஆயிரம் காய்ச்சினு ஒரு வகைத் தென்னை மரம் அதிகம் உயரம் இருக்காது, ஆனால் ஆயிரத்துக்குக் குறையாமல் தேங்காய்கள் வரும்னு சொல்லுவாங்க. அப்போ அதாவது அறுபதுகளில் மதுரை டிவிஎஸ் நகர் உருவாகிக் கொண்டிருந்த நேரம் அங்கே வீடு வாங்கியோ/கட்டிக்கொண்டோ சென்ற அனைவர் வீட்டு வாசலிலும் இரண்டு தென்னை மரங்கள் இரண்டு பக்கமும் அந்த டவுன்ஷிப் நிர்வாகம் சார்பாக வைக்கப்பட்டுப் பின்னால் நல்ல பலனும் கொடுத்தது.

      நீக்கு
    6. அடுத்த வாரம் படமெடுத்து போடவா?

      நீக்கு
  9. இசை ஈர்க்காத ஒன்றாகி விட்டது. ராமாயணா படத்தில் ஒன்று கூடப் பிடிக்கவில்லை. அரைத்த மாவாகிவிட்டதோ இசை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சி எஸ் ஜெயராமன் பாடல் - ராகமாலிகை ?

      நீக்கு
    2. புது ராமாயணம்  சாய்பல்லவி ரன்வீர் கபூர்   ஆஸ்காருக்கு கூட அனுப்பப் போகிறார்களாம்.  இதுவரை 670 கோடி சம்பாதித்து விட்டதாம். 

      நீக்கு
    3. புது ராமாயணம் பற்றி ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பதிவுகள் பார்த்தாச்சு. ஆனால் ஓடிடியில் வந்திருப்பதாகத் தெரியலை. சாய் பல்லவி என்றொரு நடிகை இருக்காரா? ரன்பீர் சிங் தெரியும். ஆனால் அவர் மாமிசம் நிறையச் சாப்பிடுவார் எனவும் இவரைப் போய் ராமர் வேஷத்துக்கு எடுத்துட்டாங்க என்பதாகவும் சொல்லிக் கொண்டு இர்நுதார்கள். :( நமக்கெல்லாம் இன்னமும் அருண் கோயல் தான் ராமர்.

      நீக்கு
    4. Grrrrrrrr...படம் ரிலீஸ் ஆகி நாலு நாள்தான் ஆவுது.  670 கோடி ரூவா வசூலிச்சுருக்கு அதுக்குள்ள OTT லையா?  அநியாயமா இல்லே?  ரன்வீர்சிங் வேற..  துறந்தார் ஹீரோ..  இவன் ரன்வீர் கபூர் ரிஷி கபூர் பையன்.  KGF ஹீரோ யஷ் தான் ராவணன்!  சாய் பல்லவின்னு ஒரு நடிகை இருப்பது உங்களுக்குத் தெரியாது?

      நீக்கு
    5. // துறந்தர் ஹீரோ. //

      ** துரந்தர் ஹீரோ.

      நீக்கு
    6. இந்தக் குழப்பம் வேறேயா? ரன் வீர் சிங், ரன்பீர் கபூர்? இதிலே தீபிகா படுகோனேயைக் கல்யாணம் பண்ணிண்டிருப்பது யாரு? இஃகி,இஃகி,இஃகி, தலை போற பிரச்னையாச்சே! மாத்திச் சொல்லிட்டேன்னா என்ன பண்ணுறதாம்? :) அது யாரு அல்லது என்ன கேஜிஎஃப்? யஷ்? இஃகி, இஃகி,இஃகி, வழக்கம் போல் திரு திரு திரு.

      நீக்கு
    7. கௌதமன் ஜி. ''வீணைக்கொடியுடைய வேந்தனே, இன்று போய் நாளை வாராய், திரு டி கே பகவதியின் கம்பீரம் !!!!!!!ஒன்றும் மறக்க முடியாது

      நீக்கு
    8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  10. மிக இளம்பிராயத்திலேயே, பஞ்சாங்கம் அல்லது காலண்டர் வந்தவுடன், தீபாவளி எந்த தேதியில் வருகிறது அன்று என்ன கிழமை என்று அரக்கப் பறக்க தேடிப் பார்ப்போம்.'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''இது மிக மிக உண்மை:) அடுத்தது எப்போதெல்லாம் விடுமுறை வருகிறது என்று பார்ப்போம்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப்போல் ஒருவர்

      நீக்கு
    2. என்னையும் போல.

      நீக்கு
    3. நானெல்லாம் இப்போவும் பார்ப்பேன். அநேகமாக எல்லாப் பண்டிகைகளும்.

      நீக்கு
  11. ''புது உடைகள் கூட அவர்களுக்கு எந்த விதமான விசேஷ சுவாரசியத்தையும் கொடுப்பதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது. இது என் கற்பனை என்றாகி விட்டால் என்னை விட சந்தோஷப்படுபவர் யாரும் இருக்க முடியாது.'''''''''''''''''''''''''''''' இது தான் இப்போது நிஜம். புது உடைகள் எப்பொழுது வேண்டுமானாலும் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர். பட்சணம் எந்தக் காலத்திலும் கிடைக்கிறது. பட்டாஸ் மத்தாப்பு எல்லாம் அலுத்துவிட்டது. என் ஆர்வம் மங்கவில்லை என்பதால் எனக்காக புஸ்வாணம் விட வருகிறார்கள்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்று சவால்களையும் கஷ்டங்களையும் சந்தித்திருப்பது என்பது இளம்பிராயத்தில் நமக்கு நேர்ந்த மிக நல்ல விஷயங்கள் என்று மிகவும் காலம் கடந்து தான் நமக்குத் தெரிகிறது.

      நீக்கு
    2. எதுவுமே அளவாகக் கிடைத்தால்தான் ரசிக்க முடியும்.

      நீக்கு
    3. திரு ராமன் அவர்கள் கூற்று நூற்றுக்கு இருநூறு சதம் சரியானது.

      நீக்கு
  12. உங்கள் தீபாவளியைப் படித்தால் எங்கள் தீபாவளி போல இருக்கிறது. அப்பாவின் சம்பளமும் 1962 63 யில் 150 ரூபாய்தான். ஆளுக்கு 5ருபாய்க் கணக்கு. அதில் எவ்வள்வு மத்தாப்பு வருமோ(நிறைய வரும்_) அவ்வளவுதான். நானும் சின்னத்தம்பியும் இரண்டு நாட்களில் தீர்த்து விடுவோம். நடுத்தம்பி படிப்பதில் மும்முரம் காண்பித்து
    எங்களுக்கே கொடுத்து விடுவான். தீபாவளிக்குத் தைப்பது கூட காக்கி அரை டிரௌசர் தான். வண்ண மத்தாப்பு, மெர்க்குரி மத்தாப்பூ, பாம்பு மத்தாப்பு என்று பலவகை .சிவகாசியிலிருந்து அப்பாவின் ஆபீஸில் இருப்பவர்கள் கூட்டு பணம் போட்டு வாங்கி விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி அலுவலகம் மூலம் பட்டாசு, மத்தாப்பு வாங்கினதெல்லாம் கல்யாணம் ஆனப்புறமாத் தான். என் அப்பாவெல்லாம் அதிகம் போனால் இரண்டு ரூபாய்க்குப் பட்டாசு, மத்தாப்புகள் வாங்குவார். பெரியப்பா வீட்டில் தம்பிக்காகக் கொடுப்பது, தாத்தா வீட்டில் கொடுப்பது எனச் சேர்ந்துடும். அப்பா நாலு பாகங்கள் போட்டு ஒண்ணு தன்க்குனு வைச்சுண்டு மீதி மூணு பாகத்தை எங்க மூணு பேருக்கும் கொடுப்பார். அண்ணா ஜாஸ்தி இதில் நுழைஞ்சுக்க மாட்டார். அதையும் சேர்த்துத் தம்பியே வெடிப்பான்.

      நீக்கு
    2. நாங்கள் ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்த போது இது சாத்தியமானது கீதாமா.

      நீக்கு
  13. சரோஜாதேவி கதையை அவசரப்பட்டு முடித்திருக்க வேண்டாம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. பின் வருவதாக இருந்த நிகழ்ச்சிகளில் பல சுவாரசியங்களை சேர்க்க வழியிருப்பதால் அவற்றை முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். யாருக்கும் சுவாரசியம் இல்லை யாரும் படிக்கவில்லை என்று நாம் நினைப்பதன் காரணம் அது பற்றிய கருத்துக்கள் எதுவும் நிறைய வரவில்லை என்பதால் இருக்கலாம். படிப்பவர்கள் எல்லாரும் கருத்துச் சொல்லுவார்களா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நானும் ஆசிரியர் குழுவில் இருப்பதால் இதை ஒரு சம்பிரதாயமாகச் சொல்கிறேன் என்று நினைக்க வேண்டாம். இது பற்றி பிறர் என்ன கருதுகிறார்கள் என்று தெரிய ஆவலாய் இருக்கிறேன். நீங்களும் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துகள் எல்லோரும் எழுதுவதில்லை. வாசகர் என்ற நிலையில் பெரும்பாலும் எபி ஆசிரியர் குழு பதிவுகளுக்கு கருத்து சொல்வதில்லை. அதற்காக பதிவில் அவர்களுக்கு இன்டெலெஸ்ட் இல்லை, வேறு வழியில்லாமல் வெளியிடுகிறார்கள் என்று நினைக்க இயலுமா? நூறு பேர் படித்தால் ஐந்து பேர்கள் கருத்தெழுதுவாங்க. அவங்களுக்கு கருத்தெழுத நேரம் இருக்கணும், இனி எழுதி யாரு படிப்பான்னு நினைக்கலாம், எழுதினாலும் பதில் வராதுன்னு நினைக்கலாம். அம்புடுதான்.

      நீக்கு
    2. பாராட்டு(?)க்கு நன்றி.

      நீக்கு
    3. // வாசகர் என்ற நிலையில் பெரும்பாலும் எபி ஆசிரியர் குழு பதிவுகளுக்கு கருத்து சொல்வதில்லை. //

      ​உன் நெஞ்சைத் தொட்டுச் சொல்லு.. என் ராசா....!!

      நீக்கு
    4. உண்மை தான், ஸ்ரீராமன் அவர்கள் சொல்லுவது போல் சரோஜா தேவி கொஞ்சம் கதை "சப்பென்று" முடிந்து விட்டது அல்லது முடித்துவிட்டார் எல்லோரும் கேட்டாங்க என்பதாலோ? இனித் தான் விறுவிறுனு நினைச்சேன். கடைசியில் இப்படிப் போய் விட்டது. :(

      அப்புறமா இந்த தீபாவளி வெள்ளையப்பம் எங்க வீட்டிலும் அதாவது பிறந்த வீட்டில் கட்டாயமா உண்டு. காலை குளிச்சுட்டு மருந்து சாப்பிட்டுப் புதுசு கட்டிண்டு சாஸ்திரத்துக்கு வெடிச்சப்புறமாச் சுடச் சுட வெள்ளையப்பம், இட்லி, தேங்காய்ச் சட்னி தான். வெள்ளையப்பம் நல்ல சூடாக மேலே சிவந்து ஓரங்கள் முறுகலாக நடுவில் எல்லாம் ஓட்டை போட்டுக் கொண்டு உள்ளே லேயர் லேயராக வந்திருக்கும். அம்மா உடம்பு நன்றாக இருந்தவரையிலும் அம்மாதான் இதைப் பண்ணுவார். பின்னால் அம்மா போனப்புறமா வந்த தீபாவளிகளில் மன்னியோ, தம்பி மனைவியோ பண்ணினாலும் அம்மாவின் கை மணம் வரலை. எங்க வீட்டில், புகுந்த வீட்டில் முதல் நாள் மாலை பஜ்ஜி, பக்கோடா போட்டே ஆகணும். ராத்திரிக்கு சேமியா பாயசம், வெங்காய சாம்பார். மெல்ல மெல்லப் பின்னர் அதை தீபாவளி அன்னிக்குக் காலம்பர அமாவாசை வரலைனா அப்போப் பண்ணலாம்னு மாத்தினாங்க. ஆனால் தீபாவளிக்கு முதல் நாள் மாலை பஜ்ஜி, பக்கோடா தான். அநேகமாத் தஞ்சை ஜில்லாவில் பஜ்ஜி, பகோடாதான் போடுவாங்கனு சொல்லுவாங்க. எங்க ஊர்ப்பக்கம் (மதுரை) வெள்ளையப்பமும் உக்காரையும் இல்லாமல் தீபாவளியே இல்லை.

      நீக்கு
    5. // ஸ்ரீராமன் அவர்கள் சொல்லுவது போல் //

      space missed = ஸ்ரீ ராமன்

      நீக்கு
    6. வெள்ளையப்பம் நல்ல சுவைதான். எங்கள் வீட்டில் தீபாவளிக்கு செய்தது கிடையாது.

      நீக்கு
  14. சுஜாதாவை கதை சுபமாக முடிந்தது. படங்கள் கதைக்கு அழகு தந்தன.

    சிறுவயது தீபாவளியை என்றும் மறப்பதற்கு இல்லை.
    இங்கு பேரனுக்கு மத்தாப்பு கொழுத்துவது தான் தீபாவளியின் கொண்டாட்டம் என்பது..... அதுவும் சில மத்தாப்புக்களுடன் சரி. சூழல் மாசல் என விட்டுவிடுவார்.

    பதிலளிநீக்கு
  15. கேள்வி பதில்கள் நன்று.

    தீபாவளி நினைவுகள் ரசிக்கும்படி இருந்தது.

    போன்சாய் மரங்கள் பார்க்கும்போது ஏதோ அதன் வளர்ச்சியைத் தடை செய்துவிட்டார்களே என்று தோன்றும் எனக்கு.

    பதிலளிநீக்கு
  16. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  17. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    சாரின் தீபாவளி நினைவுகள் அருமை.
    அந்தக்கால நினைவுகள் என்னை போன்ற வயதனவர்களுக்கு தீபாவளி அன்று கண்டிப்பாய் வரும்.
    இப்போது புது துணிகள், பலகாரங்கள், வெடிகள் எப்போது வேண்டுமென்றாலும் வாங்கி கொள்வதால் தீபாவளி எதிர்ப்பார்ப்பு குறைந்து விட்டது.

    போன்சாய் மரங்கள் படங்கள் நன்றாக இருக்கிறது, ஆனால் அவற்றை பார்க்கும் போது மனது வருத்தபடும் அதன் வளர்ச்சியை முடக்கி போடுவது போல இருக்கும்.

    //எந்த ஊர் என்பவரே.. சொல்லவும் வேண்டுமோ..//

    மதுரையிலிருந்து சென்னைக்கு செல்கிறது .

    பதிலளிநீக்கு
  18. கதை முடிவும் அழகான படமும் அருமை.

    காலை எழுந்தவுடன் தவளை முன்னேற துடிப்பவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் , எப்படி காலை நேரத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று இருக்கிறது.

    வயதானவர்களுக்கு தினம் உற்சாகத்தை வரவழைத்து கொண்டு, நடைபயிற்சி, உடற்பயிற்சி சிறு சிறு வேலைகளை முடிக்க மனதை தயார் செய்வது என்று வைத்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  19. பதிவுகளுக்கு கருத்துக்களுக்கு பதில் பதிலுக்கு பதில் இப்படி போட்டுக் கொண்டே போனால் எத்தனை முறை நாம் இதைப் பார்ப்போம் ? இந்த சந்தேகம் எனக்கு அடிக்கடி வந்துவிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதுதானே சார். நிறைய பேர் நன்மை அடையலாம். நீங்கள் பதில் எழுதவில்லையானாலும் வருத்தம் இல்லை. இரவு ஒன்பதரைக்கு அப்பால் மொபைல் பார்ப்பதில்லை.

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!