====================================================================
எலியும் நானும்... நானும் எலியும்..
(நேற்றைய பதிவின் தொடர்ச்சி...)
இந்தத் தலைப்பு உங்களில் எத்தனை பேருக்கு சமீபத்திய பாடல் ஒன்றினை நினைவு படுத்தியது?
புத்தகங்கள் உட்பட அவ்வளவு அடைசல் இருக்கும் அந்த எங்கள் வீட்டில் சில சமயங்களில் குஞ்சும் குளுவானுமாக எலிகள் பெருகி விடும். அப்போது இந்தப் பொறியில் வைக்கப்பட்ட வடையை எலிகள் அசைத்ததும் கதவு அறைந்து சாத்திக் கொண்டாலும் கூட, எந்த பாதிப்பும் இல்லாமல் கம்பிகளின் இடுக்கு வழியாக இந்த சின்னஞ்சிறு எலிகள் ஓடி, ஓடித் தப்பித்து விடுவதோடு, மறுபடியும் அந்த இடுக்குகளில் வழியாகவே உள்ளே சென்று ஒன்றையொன்று துரத்தி விளையாடிக்கொண்டு அங்குள்ள வடையைத் தின்னும் பாருங்கள்... அப்பாவுக்குப் பற்றிக் கொண்டு வரும்! அது ஒட்டும் அட்டை வராத காலம், அல்லது நாங்கள் அதை அறியாத காலம்!
அப்புறம் நான் குடும்பத்தலைவன் ஆனதும் எனக்கும் இந்த வேலை வந்து சேர்ந்த விவரங்களை ஓரளவு நான் சுட்டி கொடுத்துள்ள பதிவுகளில் சொல்லியுள்ளேன்.
கொசுவர்த்தி சுற்றி பின்னே சென்று மறைய, நிகழ்காலத்துக்கு வருவோம் - வருகிறேன்!
சென்ற வாரத்தில் ஒருநாள் முதலில் என் பாஸ் கண்ணிலும், பின்னர் பையன் கண்ணிலும் சற்றே பெரிய சைஸில் இந்த எலி கண்ணில் பட்டது. வழக்கமான பயங்கள் மனதை வாட்ட வீட்டுக்குள் பார்த்து விட்ட இந்தப் பெரிய எலியைப் பிடிக்க முதலில் ஒரு மசால்வடை வாங்கப்பட்டது. அதை பொறிக்குள் வைத்து, எங்கள் நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டுக் காலை 11.30 முதல் காத்திருந்தோம். ஊ.. ஹூம்.. வெளியில் எங்காவது முக்கிய வேலையாய்ச் சென்றிருந்ததோ என்னவோ, ஆளையே காணோம்.
எதற்கும் இருக்கட்டும் என்று இந்த ஒட்டும் அட்டையையும் வாங்கி வைத்திருந்தோம். இதில் ஒரு பெரிய பிரச்னை என்னவென்றால் எலி இதில் வந்து ஒட்டிக்கொண்டபின், அதை அதிலிருந்து பிய்த்து எடுக்கும் வேலை. மகா கடுப்ஸான வேலை அது.
ஒருமுறை ஒரு பெரிய எலி, தான் ஒட்டிக்கொண்ட அட்டையோடு நகர்ந்து நகர்ந்து ஓடியதும், அதை பிடிக்க பின்னாலேயே ஓடியது, பிடிக்கப் போனால் முகத்தை என் கைகளை நோக்கி அது திருப்பியதும் நடுக்க அனுபவமாக மனதில் நின்றிருந்தது. சிறு எலிகளாயின் சந்தேகமில்லாமல் இந்த அட்டை மூலம்தான் பிடிக்க வேண்டும். ஆனால் அவற்றை அந்த அட்டையிலிருந்து நீக்குவதற்குள் வெறுப்பாகிவிடும்! ஃபோர்ஸ் அப் கொண்டு அதை அட்டையிலிருந்து தள்ளி விடும்போது அதன் சதைகள் சமயங்களில் கிழிந்து விடும். அட்டையோடு தூக்கிப் போடவும் மனம் வராது. சிறிய அட்டை 45 ரூபாய். பெரிய அட்டை 90 ரூபாய்!
ஏன் இன்னும் எலி வரவில்லை? தெரிந்து கொண்டு விட்டதோ? வடை வாசம் வரவில்லையோ? நேரமானால் வடை ஊசிப்போகுமோ? எவ்வளவு நேரத்தில் வடை ஊசிப்போகும்? ஒருவேளை வடை ஊசினால்தான் எலி வருமோ? கேள்விகள் மனதில் சுற்ற, எலியை மட்டும் காணோம். மாலை வந்தது. இரவும் வந்தது. சாப்பிட்டுப் படுத்தும் விட்டோம். பொறியின் கதவு மூடிக்கொள்ளும் "டப்' சத்தத்துக்காகக் காத்திருந்து தூங்கிப் போனோம்.
காலை எழுந்து வரும்போது ஒரு ஆவல். ''மாட்டியிருக்கும்!"
ஊஹூம். பொறியின் கதவு அலிபாபா குகை போல திறந்தே இருந்தது. சந்தேகப்பட்டு உள்ளே பார்த்தேன். வடை அங்குதான் இருந்தது! சமயங்களில் கதவு மூடாமல், எலி வடையைத் தள்ளிக் கொண்டு போயிருக்கும் அனுபவமும் உண்டே.. மதன் ஜோக் என்று நினைவு... இப்படி வடைப்பொறி வைத்துள்ள கூண்டுக்குள்ளிருந்து வடையை எடுக்க இரண்டு எலிகள் ஒரு நீண்ட கம்பியைக் கொண்டு வரும். அது வேறு நினைவுக்கு வந்தது!
இன்னும் யாரும் எழுந்திருக்காத நிலையில் குளிக்கப் போனேன். பாத்ரூமில் இருக்கும்போது அந்த ஆனந்தச் சத்தம் காதில் விழுந்தது. குளித்து முடித்து, வெளியில் வந்து பார்த்தேன். ஆம்! ! எலி மாட்டி விட்டது.
அதே சமயம் உள்ளே பார்த்தால், கம்பியில் மாட்டியிருந்த அந்த அரை வடையைக் காணோம்! வாழ்வு நிலைக்குமா என்ற கேள்விக்கு நடுவே, மிச்சம் வைக்காமல் அதையும் சாப்பிட்டு முடித்திருந்தது எலி!
நிதானமாக அதை வெளியில் வைத்து, புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். வெளிச்சத்தைக் கண்டு முதலில் மிரண்ட எலியார், முகத்தைத் திருப்பி அமர்ந்து, முதுகைக் காட்டினார். பின்னர், 'இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. நேரத்தை வீணாக்கினால் வாழ்க்கைக் கூண்டிலிருந்தே விடுதலை கொடுத்து விடுவான்' என்று நினைத்ததோ என்னவோ, என் முகமும், கேமிராவும் அருகே இருந்தாலும் கம்பியைக் கடித்து அறுக்கப் பார்த்தது!
ஒரு சிறு வீடியோ கூட எடுத்திருக்கலாம் என்று பின்னர் தோன்றியது.
என்னவென்று எட்டிப் பார்த்தால், பற்களாலும், சிறிய விரல்களாலும் அந்தக் கம்பியைப் பிடித்தபடி தொங்கி கொண்டிருந்தது! என்ன ஒரு ஜாக்கிரதை உணர்ச்சி! பயம் போலும்! அதை புகைப்படம் எடுக்க முடியவில்லையே என்கிற வருத்தத்தோடு ஒரு தட்டுத் தட்டி குலுக்கினேன்.
இந்த முறை கீழே குதித்து புதர்களில் ஓடி மறைந்தது!
அவ்ளோதான்! அப்புறம் இன்னொரு எலிப் பதிவில் சந்திக்கும் வரை, வணக்கம் கூறி விடை பெற்றுக் கொள்வது........
இன்றைய படங்கள் யாவும் நான்..... நான்...... நானே என் செல்லில் எடுத்தது!











